Wednesday, 19 August 2020

கலைகளும் அதன் வகைகளும்-2

கலைகளும் அதன் வகைகளும்-2


கலைகளும் அதன் வகைகளும் என்ற இந்தப் பகுதியில் கலைகளின் பகுப்பைக் கவின் கலைகள், நுண் கலைகள் எனப் பகுத்துப் பார்த்தோம். ஆயக் கலைகள் என்பது எண்ணிலடங்காதது. இதில் இங்கு நாம் உடுத்தும் ஆடைகளில் பயன்படுத்தப் படும் பல வகையான எம்பிராய்டரியைப் பற்றி இந்த அத்தியாயத்தில் காண இருக்கிறோம்.

நுட்பக் கலைகளின் கீழ் ஆடைகளைக் கொண்டு வரும் போது அது மிகச் சிறப்பான ஒரு பரிமாணத்தில் பரிமளிக்கிறது.நூல் நூற்புகளிலும் , நெசவு நெய்தலிலும்,பின்னலாடைகளிலும் நாளும் புதுமையும், வளர்ச்சியும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.தொழில் நுட்பப் புரட்சியில் இன்று கிடைக்கும் துணி வகைகள், நமக்குக் கற்பனைக்கும் எட்டாத வகையில் விரிந்து உள்ளது. மெலிதான ஆர்கண்டி, நெட் துணிகள் முதல் கனமான கார்பெட் வகைகள் வரை துணிகளும், அதில் சிறப்பாகச் செய்யப் படும் வேலைப் பாடுகளும் மனதைக் கொள்ளை கொள்வதாக உள்ளது. அது போல் செய்யப்படும் எம்பிராய்டரிகளைப் பற்றிக் காண்போம்.

எம்பிராய்டரி ;

நெசவு செய்த ஆடைகளிலோ அல்லது பின்னலாடைகளிலோ அதனை அடித்தளமாக வைத்துப் போடப்படும் அலங்காரத் தையல்களைச் சித்திரப்பூத் தையல் அல்லது, எம்பிராய்டரி எனச் சொல்லுகிறோம். இந்தக் கலை உலகம் முழுதும் வியாபித்து உள்ளது, அந்த அந்தப் பகுதிகளுக்கான பிரத்தியேக வேலைப்பாடாகப் பல வகைகளில் உள்ளது. இந்தியாவில் உள்ள எம்பிராய்டரி வகைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

பெண்களும் எம்பிராய்டரியும்.

ஆதிகாலம் தொட்டு ஆடைகளில் செய்யப்படும் கலை என்பதால் இயற்கையாகவே பெண்களின் கலையாக இது இருந்து வந்துள்ளது. பெண்கள் தங்கள் தேவை, கற்பனை, எண்ணத்திற்கு ஏற்ப தங்கள் கைத் திறமையையும் கற்பனை வளத்தையும் இதில் காட்டினர்.

ஒரு பெண் சிறப்பாகச் சித்திரப் பூவேலை செய்கிறாள் எனில் அவளைச் சகலகலாவள்ளியாகவே சமுதாயம் நோக்கியது. பெண்களின் இந்தக் கலையை ஊக்குவிக்கும் வண்ணம், திருமணச் சீர் வரிசைப் பொருட்களில் எம்பிராய்டரி செய்யப்பட்ட ருமால், சுவர் அலங்காரம், சேலைப் பைகள், தலையணை உறைகள், மற்றும் அவர்களது ஆடைகள் என அத்தனையும் வைக்கப்படும்.

எம்பிராய்டரியில் அடிப்படைத் தையல்கள்.

கைகளினால் போடப்படும் எம்பிராய்டரி என்பது சாதாரணக் கை ஊசி பல வகையான நூல் கொண்டு போட படுவது.இதில் சிறு வயதில் நாம் ஏதாவது ஒரு தையல் வகுப்பில் ஆசிரியை சொல்லிக் கொடுத்த ஓட்டுத் தையல், காம்புத் தையல்,சங்கிலித் தையல், அடைப்புத் தையல், முடிச்சு வகைகள் ஆகியவையே பெரும்பாலும் உபயோகப் படுத்த பட்டு இருக்கும். ஆனால் அதனை அவர்கள் பிரயோகிக்கும் முறையில் பிரத்தியேகமான எம்பிராய்டரியாக உருவெடுக்கிறது.

இந்திய எம்பிராய்டரி வகைகள்;

இமயம் முதல் குமாரி வரையிலான இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரத்தியேக எம்பிராய்டரி வகை உள்ளது. இதனை ஐந்து வகைகளாக வகைப் படுத்தி எளிமையாகப் புரியும் வண்ணம் இங்குத் தருகிறேன்.

  • காஷ்மீர் பஞ்சாப் ஹிமாசல் எம்பிராய்டரி வகைகள்.
  • கட்ச் குஜராத் ராஜஸ்தான் ஹரியானா எம்பிராய்டரி வகைகள்.
  • உத்தரப் பிரதேஷ் மற்றும் முகலாயர் எம்பிராய்டரி வகைகள்.
  • வங்காளம் ஒரிசா எம்பிராய்டரி வகைகள்.
  • தென்னகத்து எம்பிராய்டரி வகைகள்.


காஷ்மீர்-பஞ்சாப் - ஹமாசல் எம்பிராய்டரி வகைகள்.

காஷ்மீரி அல்லது கஷிதா எம்பிராய்டரி

இமயமலையின் அடி தொட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடமாகக் காஷ்மீர் இருப்பதால், இங்குப் போடப்படும் எம்ராய்டரியிலும், பூக்கள், இலை, காய் கனிகள் இவையே பிரதானமாக இடம் பிடிக்கின்றன. சல்வார் கமீஸ், சேலைகள், செர்வானி, ஓவர் கோட்கள் முதல் சுவர் அலங்காரங்கள், மெத்தை விரிப்புகள் மற்றும் மிதியடிகள் வரை அனைத்திலும் இவ்வகையான கஷிதா வேலைப் பாடுகள் செய்யப்படுகின்றன.

காஷ்மீரி வேலைப்பாடுகள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருக்கும், மேற்புறம் மற்றும் அடிப்புறம் பிரித்து வகைக் காண இயலாதவாறு, ஒரே போல் சீராக வேலைப்பாடு செய்து இருப்பார்கள்.

துணி-நூல்-தையல்கள்;

காஷ்மீரி எம்பிராய்டரியில் ஒற்றைத் தையல்கள் அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன, சங்கிலித் தையல், காம்புத் தையல், சாய்வுத் தையல், பொத்தான் துளைத் தையல் ,ஹெரிங்போன் தையல் மற்றும் முடிச்சுத் தையல்கள் மிக நேர்த்தியாகப் பயன் படுத்தப் படுகிறது. இந்தத் தையல்களைக் கொண்டு போடப்படும் கைவேலை மிகவும் அடர்வானதாகவும் , கெட்டியாகவும், உறுதித் தன்மையுடனும் இருக்கும். ஒரு சிறிய மோடிஃப் எனப்படும் உருவத்தைக் கொண்டு வரவே சிறு சிறு தையல்களைக் கொண்டு வடிவமைக்கப் படுகிறது. இந்த வேலைப்பாடு செய்வதற்கான காலமும் அதிகம் தேவைப்படுகிறது.

பருத்தி நூல் மற்றும் பட்டு நூல்கள் கொண்டு அதன் தேவைக்கு ஏற்ப காஷ்மீரி எம்பிராய்டரி செய்யப்படுகிறது.

காஷ்மீர் குளிர் பிரதேசமானதால் சால்வைகள், மேலாடைகள், ஓவர் கோர்ட் போன்ற கனமான துணிகளில் இதனைச் செய்கின்றனர். தற்போது ஆடை வடிவமைப்பு தொழிலும், இணையதள வசதிகளும் பெருகி இருப்பதால், அவரவர் வசதிக்கேற்ற துணிகளில் இந்த வேலைப்பாடை செய்து கொள்கின்றனர்.

அடர் வண்ணத் துணிகளில், வெளிர் நிற நூல்கள் கொண்டு இந்த வேலைப்பாடு செய்யப்படுகிறது.

டிசைன்;

காஷ்மீரி எம்பிராய்டரியில் பூக்கள் அதிகம் காணப்படும், கொடிகள் இலைகள், தாமரை, ரோஜா,டூலிப் ,செர்ரி , அல்மோன்ட் ஆகிய வடிவங்களும், சிறப்பு உபயோகமாகப் பிஸ்டலே எனப்படும் மாங்காய் டிசைன் அதிகம் காணப்படும், பறவைகள் விலங்குகள் குறைவாகவே பயன்படுத்தப் படுகின்றன.

காஷ்மீரத்து எம்பிராய்டரி என்றவுடன் நினைவில் வருவது பாரம்பரியமிக்கப் பாஷ்மினா சால்வைகள் தான். இவை பட்டு நூல் கொண்டு உயர் தரமாகத் தயாரிக்கப் படுகின்றன. காஸ்மீரி , கக்ஷிதா எம்பிராயடரி செய்யப் பட்ட ஆடைகளை அணிதல் என்பதே பெருமைக்குரிய விஷயமாகும். அதன் நேர்த்திக் கை தேர்ந்த ஓவியனின் ஓவியம் போல் கண்ணனைக் கொள்ளைக் கொள்ளும்.

பஞ்சாபின் புல்காரி எம்பிராய்டரி

புல்காரி எம்பிராய்டரி பஞ்சாபிகளின் இதயத்தில் இடத்தைப் பிடித்த ஓர் வேலைப் பாடு. இது மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த கலை ஆகும். அதன் வரலாறு வட இந்தியாவில் சீக்கிய மற்றும் இந்து வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது.இது பல நூற்றாண்டுகளாகப் பஞ்சாப் (இந்தியாவிலும் பாகிஸ்தானிலும்) பெண்களால் நடைமுறையிலிருந்தது, இந்தியாவின் பிரிவினை வரை செழித்து வளர்ந்தது. பொருளாதார ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்த இந்தக் கலையானது, ஆடை வடிவமைப்பாளர்கள் கை வண்ணத்தில் புத்துயிர் பெற்று உள்ளது.

பயன்பாடு;

அனைத்து வகையான ஆடைகளையும், வீட்டு அலங்கார துணிகளையும் அலங்கரிக்க மற்றும் அழகுபடுத்த ஃபுல்காரி வேலை பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் பாரம்பரிய இந்திய உடைகளான குர்திகள், துப்பட்டாக்கள் ஆகியவற்றை அலங்கரிக்கப் பயன்படுத்துகின்றனர்.

துணி- நூல்-தையல்

முதலில் பருத்தி ஆடைகளில் செய்யப்பட்ட இந்தவேலைப் பாடானது, இப்போது ஜார்ஜெட், பட்டு போன்ற துணிகளிலும் செய்யப் படுகிறது.

பருத்தி நூல்களில் விதவிதமான கண்ணைக் கவரும் முதன்மை வண்ணங்களான, சிவப்பு, மஞ்சள், நீலம் பச்சை நிறங்களில் இந்த வேலைப்பாடு செய்யப்படுகிறது.

இதில் பயன்படுத்தப்படும் தையலை டார்னிங் வகை எனச் சொல்லுவோம். அடைப்புத் தையல்களாக , அடுத்தடுத்து ஜியாமென்டிரிக் வடிவங்களால் நிரப்பப் படுகிறது. இந்த வேலைப்பாடு செய்ய ஆகும் காலத் தாமதத்தைக் குறைப்பதற்கும், விலையைக் குறைத்துத் தருவதற்காகவும், தற்போது இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

ஹிமாசல் பிரதேஷ்- சம்பா ருமால்.

இமாச்சல் பிரதேஷின் ராவி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சிறிய ஊர் சம்பா . அங்குள்ள மக்களின் நுட்பமான கலை வடிவமே இந்த வகை எம்பிராய்டரி. இதில் இதிகாச புராணச் சித்திரங்கள், தினச்சரிய வாழ்க்கை ஆகியவற்றை ஒரு சித்திரம் போல் பூத்தையல் கொண்டு வடிவமைக்கிறார்கள். ருமால் என்ற பெர்சிய வார்த்தைக்குக் கைக்குட்டை என்பது பொருள்.

சம்பா பகுதியில் அதன் ராஜா, அவரது காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை மினியேச்சர் ஓவியமாக வரையச் செய்ததாகவும், அதனைக் கண்ட பெண்கள், சித்திரப் பூத்தையல்களைக் கொண்டு அதே ஓவியத்தைத் திறம்படத் தையல்களில் கொண்டு வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இதில் புராண , இதிகாசக் கதைகளும் முக்கியமானதாக இடம் பெற்றன.

துணி- நூல்- தையல்

பருத்தி அல்லது ப்ளீச் செய்யப்படாத மஸ்லீன் (மல்மல்)துணிகளில் இந்த வகை எம்பிராய்டரி போடப்படுகிறது. முதலில் ' 'பஹாரி ஓவியர்களோ' அல்லது பூத்தையல் செய்பவர்களே கூட அவுட்லைன் எனச் சொல்லப்படும் வரிவடிவங்களை வெளிர் நிறங்களைக் கொண்டு வரைந்து விடுகின்றனர். இலகுவான பட்டு நூல்களை இந்த வகையான எம்பிராய்டரி செய்யப் பயன்படுத்துகின்றனர்.

வடிவங்களுக்கு ஏற்றார் போல் டபுள் டார்னிங் எனச் சொல்லப்படும் அடைப்புத் தையல்களைக் கொண்டு நிரப்புகின்றனர். அதில் விசேசமாக வடிவங்களைப் பகுத்துக் காண்பிக்கவும், சிறப்பாகக் காண்பிக்கவும் இரட்டை ஓட்டுத் தையலைப் பயன்படுத்துகின்றனர்.

அடர் வண்ண நீலம், சிவப்பு, மஞ்சள் பர்சியன் நீலம், இளஞ்சிவப்பு, பழுப்பு எலுமிச்சை நிறம், கறுப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்கள் எம்பிராய்டரி செய்யப் பயன்படுத்தப் படுகின்றன.

டிசைன்;

புராணங்களில் சொல்லப்படும் சம்பவங்களைச் சித்திரவேலைப்பாடக செய்கின்றனர். சிவன், பார்வதி, விநாயகர், கிருஷ்ணன், ராதை ஆகிய கடவுளர் வடிவங்களும், பறவைகள், விலங்குகள் மற்றும் போர் ஆயுதங்கள், இயற்கைக் காட்சிகள் ஆகியவற்றைப் பயன்படுத்திச் சிறிய காட்சி ஓவியம் போல் எம்பிராய்டரி செய்கின்றனர். இந்த வகை எம்பிராய்டரியில் ராதா கிருஷ்ணாவின் கோபிகைகளுடன் ஆடிய நடனங்களின் பல்வேறு சித்திரப்பூத் தையலாகக் காட்சி தருகின்றன.

இந்திய எம்பிராய்டரி வகைகள் பற்றிய இந்தக் கட்டுரையில் இமயமலைச் சாரலில் உள்ள மாநிலங்களில் போடப்படும் சித்திரப் பூத் தையல்களைப் பற்றிப் பார்த்தோம். இனி வரும் அடுத்தப் பதிவுகளில் இந்தியாவின் இன்ன பிற மாநிலங்களில் செய்யப்படும் வேலைப்பாடுகளைப் பற்றி அறிவோம்.