ஹாசினி சந்திரா -10
ஹாசினி ஒரு பாலைவனத்தில் திக்கில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறாள். யாரோ அவளைத் துரத்துகின்றனர். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறாள். வழியில் அவளைக் கொல்ல முயல்கின்றனர். ஒவ்வொரு முறையும் யாரோ காப்பாற்றுகிறார்கள். ஆனால் அடுத்த நொடி காப்பாற்றியவன் மறைய இவள் மீண்டும் ஓடுகிறாள்.
பாதி வழி வந்த பிறகு அவளது அப்பா, அம்மாவை விட்டு வந்தோமே என வந்த பாதையில் திரும்ப அதே ஆபத்தை நோக்கி ஓடுகிறாள். ஆனால் யாரோ அவள் கையை இழுத்துப் பிடிக்கிறார்கள். என்னை விடு நான் போகவேண்டும் என இவள் மன்றாடுகிறாள். அந்தப் பக்கம் புதை குழி என அந்த உருவம் தடுக்கிறது. பரவாயில்லை நான் கவனமாகப் பயணித்துக் கொள்வேன் என அவள் திமிறிக் கொண்டு செல்ல முயல்கிறாள்.
முடியாது என மறுத்த அந்த உருவம் அவளை வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு போய், ஓர் அருவியில் நிறுத்துகிறது. தண்ணீர் சிலுசிலுவெனக் குளுமையாய்க் கொட்டுகிறது. இவ்வளவு நேரம் ஓடியதில் தாகமாக உணர்ந்தவள் அந்த நீரையே அள்ளி பருகிவிட்டு, அதே அருவியை ரசிக்கிறாள். அவள் அருகில் வந்து அணைக்கிறது ஓர் உருவம். " மது என்னை விட்டு எங்க ஓடுற. இங்க வந்துடு. நான் பார்த்துக்குறேன்" என அவளது முகத்தை ஏந்தி பிறை நுதல் முதல் முத்தமிட அதில் உணர்ச்சி வயப்பட்ட வளாக அவனோடு லயித்து இருக்கிறாள்.
" சந்திரா, நீ தானா. ஏன் இவ்வளவு நேரம். நான் தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா" எனக் கண்ணீரோடு கேட்கிறாள் ஹாசினி. அதே நேரம், " சந்து, இவள் நம்ம குடும்பத்துக்கு ஏத்தவ இல்லை. விட்டுட்டு வா" என்கிறது அவனின் தாயின் குரல். சந்திரா அம்மாவை முறைக்கிறான், ஹாசினியை விட்டு வர மறுக்கிறான். இதைப் பார்த்த ஹாசினி, அவன் திரும்பியிருக்கும் நேரம் அருவியிலிருந்து வழுக்கி விழுந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள். சந்திரா மது எனக் கத்தியபடியே கூடவே குதிக்கிறான். " சந்திரா வராதே" என ஹாசினி அலறுகிறாள்.
"சந்திரா" என அலறிக் கொண்டு தான் காலையில் கண்விழித்தாள் ஹாசினி. ப்ரீத்தி அடுத்தக் காட்டேஜில் இருந்தவள் ஓடி வந்து பார்த்தாள். கண்ணை மூடிக் கொண்டு ஹாசினி அலற, அவள் உலுக்கி எழுப்பி விட்டாள். எழுந்து அமர்ந்த ஹாசினி, தன்னைச் சமன் படுத்திக் கொண்டவள், எழு முடியாமல் தடுமாறினாள்.
" மேம், என்னாச்சு. எதாவது கெட்ட கனவா?" என வினவினாள். கண்ணை மூடித் திறந்த ஹாசினி, " ரெஸ்ட் ரூம் போகனும்" என ப்ரீத்தி கையைப் பிடித்துக் கொண்டு சென்று வந்து வெளியே திண்ணையில் முகம் கழுவி அமர்ந்து இருந்தாள்.
ப்ரீத்தி சூடாக லெமன் கீரின் டீ கொண்டு வந்து தந்தாள். ஒவ்வொரு மிடறாக அது அவள் தொண்டையில் இறங்கியது. ப்ரீத்தி ஹாசினியின் நெற்றியில் கை வைத்துப் பார்த்துக் காய்ச்சல் இல்லை என அறிவித்தாள்.
எங்கிருந்தோ ஒற்றைக் குயில் சோக ராகம் இசைத்துக் கொண்டிருந்தது. அதை உன்னிப்பாகக் கேட்ட ஹாசினி, "அந்தக் குயில் தனியா கூவுது கேட்டியா" என ப்ரீத்தியை வினவினாள். அவளும் கேட்டுவிட்டு, "ஆமாம் மேம், அது ஜோடி எங்கப் போச்சோ" என்றாள்.
" எவ்வளவு அதிசயம் பாரு. அது அதுக்குத் தனிப் பாஷை இருக்கு. அதோட இணைக்குப் பக்கத்தில் இல்லைனாலும் தெரியும்ல. மனிதர்கள்ட்ட மனசு இருக்கு. ஆனால் நாம தான் அதைக் கவனிக்கிறதே இல்லை. இயந்திர வாழ்க்கை, நம்ம மனசு சொல்றதை கேட்கிறதே இல்லை" என்றாள் ஹாசினி.
" இந்த டெலிபதின்னு எல்லாம் சொல்றாங்களே மேம் . நம்ம எண்ணம் வலிமையானதா இருந்தால், கட்டாயம் யாரை நினைக்கிறோமோ அவங்க வரைக்கும் போகும் மேம்" என்றாள் ப்ரீத்தி.
" அப்படி ஒன்னு நடந்தால் நிச்சயம் சந்தோஷம் தான். நான் அம்மாவுக்கு மெசேஜ் அனுப்பிடுவேன்" என்றாள் ஹாசினி. " நீங்க யாருக்கிட்ட பேசனுமோ, மனசாரப் பேசுங்க மேம். கட்டாயம் அவங்களுக்குக் கேட்கும்" எனவும்,
கண்ணை மூடிய ஹாசினி, " அம்மா, நான் நல்லா இருக்கேன். நீ என்னை நினைச்சு கவலைப் படாதே. அப்பாவைப் பார்த்துக்கோ" என மனதில் பேசினாள்.
மதுரஹாசினியின் எண்ணங்களைக் கடத்திச் சென்ற தென் மேற்கு பருவக்காற்று தோட்டங்களின் நகரம் வரை இழுத்துச் சென்று மேனகாவின் காதில் சேர்ப்பித்தது. மருத்துவமனையில் சந்திராவோடு இருந்தவர் ஹாசினியை உணர்ந்தார்.
அடுத்துக் கண்ணை மூடிய ஹாசினி, "சந்திரா, எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். ஐ லவ் யூ. ஆனால் நான் உன்கிட்ட இதைச் சொல்ல முடியாது. நான் சொன்னா, உனக்குத் தான் பிரச்சினை. நீ எங்க இருக்கியோ, அங்கேயே நல்லா இரு. மாமி சொல்ற பொண்ணைக் கட்டிக்கோ. " என மனசாரப் பேசிக் கொண்டிருந்தாள். பாழாய்ப் போன காற்று அதையும் அருகே உள்ள அவனிடம் கடத்தியது. அவனுக்கு இயலாமை கோபமாக வந்தது. அதனால் தான் நேற்று இரவே அவளது அறையை விட்டு வெளியேறி இருந்தான். இரவே சென்று மலை மேலிருந்த மரவீட்டிலிருந்தவன், மேலும் அமைதியின்றித் தவித்தான். அவனது மன உளைச்சலை அதிகமாக்க வென்றே சில மெஸேஜ்கள் வந்திருந்தன.
காலையில் சற்று வெளிச்சம் பரவ ஆரம்பித்த பொழுதே, தாங்கள் கொண்டு வந்திருந்த சிறிய போட்டை எடுத்துக் கொண்டு அலைந்தான். அலைகளில் மூழ்கும் சந்திரனும், அதிலிருந்து உதயமாகும் ஆதவனும் அன்றைய பொழுதின் ஆரம்பத்துக்குக் கட்டியங் கூற, சந்திரா மறைந்தாலும் அதனை விட ஒளி பொருந்திய ஆதவன் இந்த உலகிற்கு நன்மை தான் என மனதைத் தேற்றிக் கொண்டவன், இயற்கை விருப்பு வெறுப்பின்றித் தன் கடமையைச் செய்வதை நினைத்தவனாக, போட்டில் கிடந்த சிறிய மீன்பிடி கொக்கியைப் போட்டு , தங்கள் தேவைக்குச் சிலவற்றைப் பிடித்தான்.
மீன் துள்ள துடிக்க வந்து போட்டில் விழுந்தது. சிலவை மீண்டும் கடலுக்குள் துள்ளி தன் உயிரைக் காத்துக் கொண்டது. சிலவை தெரியாமல் மாட்டிக் கொண்டன. மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் கூட இப்படித் தான் என எண்ணியவன், ஒருவர் வீழ்ச்சி மற்றொருவர் வளர்ச்சியாகிறது என ஆயிரம் எண்ணம் அலை மோதலையும் அலைகடல் மேலேயே சிதறவிட்டு மீன்களை அள்ளிக் கொண்டு வந்தான்.
காலையிலிருந்து பாஸை காணாத ப்ரீத்தி, பவனிடம் சென்று பார்த்து வரச் சொன்னாள். " தினமும் யாரையாவது தேடுறது தான் வேலையா. அவரே வந்திடுவார். நீ என்னை அலைய விடாத" எனக் கடிந்தான் பவன். இவர்களையே பார்த்திருந்த ஹாசினி , " பவன் நீ போய்த் தேடிட்டு வா. அரக்கன் பாட்டுக்குச் சொல்லாமல் கொள்ளாமல் இங்க நம்மளை விட்டுட்டு தப்பிச்சிட்டா நாம என்ன பண்றது" என்றாள்.
" மேம், அதெல்லாம் உங்களை விட்டுட்டு போக மாட்டார். வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு மனுசன் ஆறுமாசமா உங்க பின்னாடி அலையிறாரு, அதெப்படி விட்டுட்டு போவார்" என உண்மையைப் போட்டு உடைத்தான் பவன். ஆனால் இவன் வாயைப் பிடுங்கினால் தான் உண்டு ப்ரீத்தி வாயைத் திறக்கமாட்டாள் என அவனோடு வார்த்தையாடினாள்.
" ஹேய், ஒரு கிட்னாப்பருக்கு, கிட்னாபியை ஃபாலோ பண்றதை விடப் பெரிசா வேற என்ன வேலை இருக்கப் போகுது. ஏதோ உன் பாஸ் பெரிய பிஸ்னஸ் மேக்னட் மாதிரி பில்டப் விடாத" என அவனை மட்டம் தட்டினாள்.
" கிட்னாப்பரா, அவருக்கு இந்தப் பேச்செல்லாம் தேவைதான் மேம். நீங்க பேசுங்க. " என்றான் பவன். " இதென்ன பாஸ்க்கு எதிர்த்து என் கூடக் கூட்டு சேருற. அரக்கன்ட்ட அவ்வளவு பேட் எக்ஸ்பீரியன்ஸா" எனக் கேட்டுச் சிரித்தாள்.
"எக்ஸாட்லி மேம், யாரை வேணும்னாலும் காதலிக்கலாம். ஆனால் அண்ணன் தம்பி கூடப் பிறந்த பொண்ணுங்களை மட்டும் காதலிக்கவே கூடாது. அப்புறம் என்னை மாதிரி மாட்டிட்டு அல்லாடனும். " என்றான் பூடகமாக. " நீ சொல்றதே எனக்குப் புரியலை. நீ யாரை லவ் பண்ற" என்றாள் ஹாசினி.
மேம் நிஜமாவே உங்களுக்குத் தெரியலையா. இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா" என அதிசயமாக அவளைக் கேட்டான். ஹாசினி சந்தேகமாக, " ப்ரீத்தியை லவ் பண்றியா. ஆனால் நீங்க இரண்டு பேரும் அதைக் காட்டிக்கிட்டதே இல்லையே" என்றாள். பவன் பெருமூச்சு விட்டு, "அது தான் மேம், எங்க லவ்வுக்கு வந்த சோதனை. உங்களோட சேர்த்துப் பாஸ் எங்களையும் கண்காணிப்பார்" எனச் சோகமாகச் சொன்னான்.
ஹாசினி கலகலவென நகைத்து விட்டாள். " அட அப்பரசென்டுகளா, நிம்மதியா லவ் பண்ண கூட முடியாமல், என் பின்னாடி ஏன் சுத்துறீங்க" என்றாள். பவன் தங்கள் காதல் காவியத்தை ஆரம்பிக்கப் போனான். ப்ரீத்தியின் முறைப்பில் சட்டென அடங்கினான்.
ஹாசினி அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தவள், "பரவாயில்லை , ப்ரீத்தி சாமர்த்தியசாலி தான். ஒரே பார்வையில அடக்கிட்டாளே. என்னைப் பாரு, கடத்திட்டு வந்தாலும் என்னன்னு கேட்க நாதியில்லை" என விளையாட்டாகவே சொன்னாள்.
" மேம் உங்க ரேஞ்சே வேற. உங்க ஆளு உங்களுக்காக உலகத்தையே ஆட்டி வைப்பார். உங்களுக்கு அண்ணன், தம்பி இருந்தாலும், இலட்சக் கணக்கில் தொண்டர்கள் இருந்தாலும், அது எதுவுமே அவரைக் கட்டுப் படுத்தாது" என்றான் பவன். அதைக் கேட்கும் போதே ஹாசினிக்கு வயிற்றில் படபடப்பு தான். ஆனால் உண்மை அறிவதற்காக அதனை மறைத்த படி அவனோடு சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.
" எனக்கே தெரியாமல், எனக்கு ஆள் இருக்கா, யார் எனக்கே தெரியாத ரகசிய காதலன் சொல்லேன்" என்றாள்.
" மேடம் பெருமைக்குச் சொல்லலை, உங்க மேல செம லவ்வு. அதில தான் வழக்கமான குடும்பத் தொழிலை விட்டுட்டு உங்க பின்னாடி மாறு வேசம் எல்லாம் போட்டுத் திரியிறார். உங்கப்பா படத்தில் எத்தனை கெட்டப் போட்டுருப்பார். அவரை விட உங்க ஆள் இன்னும் அதிகமா போட்டுருக்கார்" என ஹாசினியின் காதலனைப் பற்றி ஹாசினியிடமே எடுத்துரைத்தான் பவன்.
"ம்கூம் , கேட்க நல்லாத் தான் இருக்கு, ஆனால் அப்படி ஒருத்தன் இருந்திருந்தால், எனக்கு இன்றைக்கு இந்த நிலைமையே இல்லை. நடிகர்களாக இருந்து நாட்டை ஆண்டவர்கள் வாரிசு நான். நான் விரும்பினாலும், விரும்பலைனாலும் என் அடையாளம் அது தான். நான் மத்தவங்க அனுபவிக்கும் பொருள் மட்டுமே. என் அப்பாவை நீங்க முன்னாடி பார்த்ததில்லையே, சிங்கம் தான். ஒரு வார்த்தை சொன்னார்னா மேஜிக் மாதிரி எல்லாம் நடக்கும். அவர் நல்லா இருந்திருந்தா, கொண்டவனும் என்னைச் சொந்தமாக்கிக்கணும்னு நினைச்சிருக்க மாட்டான். எனக்கான ஒருத்தனை அவரே தேடிக் கொண்டு வந்திருப்பார். நானும் ராணி மாதிரி இருந்திருப்பேன். அந்தச் சிங்கத்தையே சூழ்ச்சியால் சாச்சிட்டாங்க. இப்போ நான் பாதுகாப்பில்லாத பொன் மான் " எனப் பேசிய ஹாசினியின் வார்த்தைகளில் பாசம், ஏக்கம், இயலாமை, பச்சாதாபம் அனைத்தும் போட்டிப் போட்டது.
ப்ரீத்தியும், பவனும் பதில் சொல்லத் தெரியாமல் முழிக்கும் போதே "புலிக்குப் பிறந்தது பூனையாகுமான்னு ஒரு பழமொழி உண்டு. எஸ். ஆர். சந்திராங்கிற சிங்கத்துடைய மகள், நிச்சயமா பெண் சிங்கம் தான். என்ன ஒன்னு அதுக்குத் தான் பெண் சிங்கம்கிறதே மறந்து போச்சு" எனச் சொன்னபடியே வந்தான் சந்திர தேவ். அவன் கையில் ஒரு சாக்குப் பை இருந்தது.
" மறந்து தான் போச்சு. அது குட்டிச் சிங்கம் நடை பழகுறதுக்குள்ளையே சிறு நரிகள் சூழ்ந்திருச்சே. பெற்றவர்களைக் காப்பாற்றுமா, தன்னைக் காப்பாற்றிக்குமா. அது தான் ஏமாந்து மாட்டிக்கிச்சு. " எனத் தன்னை இவர்கள் கடத்தி வந்ததைச் சொன்னாள். " சிங்கத்துக்கு, அது சிங்கம்னு யாரும் ஞாபகப் படுத்த தேவையில்லை" என்றான் தேவ்.
" ஆமாம் போ, நான் அந்தக் கார்டூன் சிம்பா மாதிரி ஆயிட்டேன் ,இந்த நீயே கடத்திட்டு வந்து இங்க வச்சுருக்க, என்னால என்ன செய்ய முடிஞ்சது " எனக் கேள்வி எழுப்பவும்.
"ரொம்பப் புத்திசாலி தான், விட்டா என்கிட்டையே தப்பிக்க ஐடியா கேட்ப " எனக் கேலி பேசியவன். மீன் மூட்டையை இறுக்கப் பற்றிக் கொண்டே கீழே இறக்கி வைத்தான்.
" கேட்டோனே சொல்றதுக்கு நீ எதுக்கு என்னைக் கடத்தணும், இது கூடத் தெரியாத முட்டாள் இல்லை நான்" எனப் பேச்சை முடித்துக் கொண்டாள் ஹாசினி.
சந்திரதேவ், ப்ரீத்தியிடம் உள்ளிருந்து மூங்கில் கூடையை எடுத்து வரச் சொன்னான். " ப்ரீத்தி மீன், இன்னும் உயிரோட துள்ளிட்டு இருக்கு. சாக்கைப் போட்டு மூடிவை. ஒரு மணி நேரம் கழிச்சு இரண்டு பேருமா சேர்ந்து குழம்பு, ப்ரை எல்லாம் செய்வோம்" என்றான்.
" பாஸ், ப்ரஸ்ஸான மீனா. சூப்பர் பாஸ். ஹாசினி மேடத்தைக் கடத்தினதுக்கு இன்னைக்குத் தான் ஒரு பலன்" என அருகில் வந்து பார்த்து, "என்ன வெரைட்டி பாஸ்" எனக் கேட்டான் பவன்.
" பேர் எல்லாம் தெரியலை. கையில் சிக்கினது எல்லாம் புடிச்சுப் போட்டேன்" என்றான் தேவ்.
" மேம் பக்கத்தில் வந்து பாருங்க. உங்களுக்குப் பிடிக்குமா" என ஹாசினியைப் பார்த்துக் கேட்டேன்.
" ம் சாப்பிடுவேன்" என்றவள் சந்திர தேவைப் பார்த்து, " அரக்கன் ஸார், அடுத்து மீன் பிடிக்கப் போனேனா, என்னையும் கூட்டிட்டு போ. சின்னப் பிள்ளையில் அப்பாவோட சேர்ந்து பிடிச்சது" என ஆசையாகக் கேட்டாள் ஹாசினி.
" அரக்கனோட வர்றதுக்கு, உங்க மேடத்துக்குப் பயம் இல்லையானு கேளு பவன்" என்றான் தேவ். பவன் ஹாசினி முகத்தைப் பார்க்கவும்,
"அரக்கனுக்குத் தான் இந்த அழகி மேல இன்ட்ரெஸ்டே இல்லையே. யாருகிட்டையோ தானே ஹாண்ட் ஓவர் பண்ணப் போகுது. ஸோ நீங்க எல்லாம் டம்மி பீஸ் தான்" என்றாள் ஹாசினி, பவன் சிரித்து விட்டான், "ஆமாம், ஆமாம் எங்க பாஸ்க்கு உங்க மேல இன்டெரெஸ்ட்டே கிடையாது,இல்லை பாஸ் " எனத் தன பாஸிடமே கேள்வி எழுப்பி நக்கலாகப் பார்த்தான் பவன். தேவ் குறைக்கவும் அமைதியானான். இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஹாசினி, "அரக்கன் சார் , எதுக்குப் பவனை முறைக்கிற, நீ சொன்னதை நான் சொன்னேன். நான் சொன்னதை ,அவன் திருப்ப்பி ரிப்பீட் பண்ணான். பவன், நீ பயப்படாதே, இந்த அரக்கன் கிட்ட இருந்து, உன்னை நான் காப்பாத்துறேன்" என்றாள் ஹாசினி.
இப்போது ஹாஹா வென நகைத்து அரக்கனின் முறையானது. " ஐ மீன், நாங்க ரெண்டு பெரும் ஒரு கேங். உண்ணலா பாதிக்கப் பட்டவங்க. என்ன பவன் " என அவள் கேள்வி எழுப்பவும், பவன் ஆம் எனச் சோகமாகத் தலையை ஆட்டினான்.
" நீ பீல் பண்ணாத, இ வில்ல சப்போர்ட் யு. " என்றவள் தங்கள் அணிக்கு வலு சேர்க்கும் விதமாக ,"ஹேய் பவன், யாரோ ஒரு பிஸ்னஸ் மேகனெட் எனக்காக உலகத்தையே புரட்டி போடுவான்னு சொன்னியே, போட்டோ இருந்தா காட்டு. என் டேஸ்ட்டுக்கு இருக்கானா. செட் ஆவானான்னு பார்க்கிறேன். கொஞ்சம் சுமாரா இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். எங்கப்பா நல்லா சீர் செய்வார்" என்றாள் ஹாசினி.
தேவ் பவனை மீண்டும் முறைக்கவும், பவன் முழித்தான். " மேம், நான் எப்ப சொன்னேன்" என மழுப்பினான்.
" ஹேய், எங்கப்பாவை விடப் பெரிய ஞாபக மறதிக்காரனா இருக்கியே . இப்ப தானே உன் பாஸ் வரும் முன்ன சொன்ன . ப்ரீத்தி இவன் சொன்னான்ல " என்றாள்.
" யெஸ் மேம், அது மட்டுமா சொன்னார். உங்க உங்க லவ்வர், உங்க அண்ணன்களுக்கெல்லாம், பவன் மாதிரி பயப்பட மாட்டாருன்னும் சொன்னார்" என ஆண்கள் இருவரையும் பார்த்துச் சொன்னாள். ஆனால் இருவருமே மாட்டிக் கொண்டது போல் முழித்தனர். பவன் தேவ் இடம் மாட்டியதாக நினைத்தால், தேவ் ஹாசினியிடம் தன் குட்டு வெளிப்படுமோ எனத் தயங்கினான்.
ஆனால் ப்ரீத்தி, " மேம், நீங்க போட்டோ கேட்டிங்களே. என் பாயியை பார்த்துக்குங்க. இந்தத் தாடியும், கண்ல லென்ஸூம் இல்லைனா, அவர் தான் உங்க லவ்வர்னு கற்பனை பண்ணிக்குங்க, அவர் அப்படித் தான் இருப்பார் " என்றாள். தேவ் ப்ரீத்தியை முறைத்தான். ஆனால் அவள் அதற்குப் பயப்படுவதாக இல்லை.
" ஐயே, ஸோ ஸேட். இன்னொரு அரக்கன் தான் என்னை லவ் பண்றானா. நான் கூட ஒரு பிரின்ஸ் சார்மிங்கா இருப்பார். என்னை லவ் பண்ணுவார்னு நினைச்சனே. போங்கடா, நீங்களும் உங்க ரசனையும். நான் கல்யாணம் ஆகாமலே இருந்துக்குறேன்" என இவர்கள் மூவரையுமே தரம் இறக்கிச் சென்றாள் ஹாசினி.
தேவ்க்குச் சட்டெனக் கோபம் வந்தது, "ப்ரீத்தி, நம்மளை மாதிரி மிடில் க்ளாஸ் எல்லாம் மேடம்க்கு ஒத்து வருமா. அவங்க பழக்கமே அமெரிக்கால மல்டி மில்லினர்ஸ் , இந்தியால பெரிய மினிஸ்டர்ஸ் கூடத் தான்" என அவளது இதயத்தைப் பார்த்து வார்த்தை அம்பை விட்டான்.
ஆனால் அவன் அமெரிக்கா என்றவுடன், தனது நண்பனை நினைத்தாள் ஹாசினி, அவள் முகமே மென்மையாகி, " எஸ், ஐ மிஸ் ஹிம் எ லாட். மேத்யூ இருந்தாலும் கூடப் போதும். என்னைக் கஷ்டப்படவே விட மாட்டான்" என அவன் நினைவில் இவள் முகம் விகசித்தது. ஆனால் சந்திராவின் காதல் கொண்ட மனம், ஹாசினியின் நட்பையும், நேசம் என்றே எண்ணியது.
சந்திர தேவ் இவ்வளவு நேரம் ப்ரீத்தி கொண்டு வந்த மூங்கில் கூடையில் மீன்களைக் கொட்டி சாக்கைப் போட்டு மூடி மேலே பிடித்துக் கொண்டிருந்தவன், தன்னை மறந்து வேகமாக எழவும் மீன்கள் துள்ளின. ஓரிரண்டு லாங்க் அண்ட் ஹை ஜெம்ப்பாகத் துள்ளவும், பவன் ஓடி வந்து சாக்கை அழுத்திக் கொண்டான்.
ஆனால் கண்களில் நண்பனை எண்ணி உணர்ச்சி பெருக்கில் நின்றிருந்த ஹாசினியிடம் போய்த் துள்ளி விழுந்த குறும்புக்கார மீன், அடுத்தத் துள்ளில் அவள் கழுத்து வழியே ட்ரெஸ்ஸூக்குள் போனது. இடையில் ப்ராக்கை ஒரு கயிறு கட்டி இடுப்பில் இறுக்கி இருந்ததால், அவள் மேனியில் சட்டைக்குள்ளாகவே துள்ளியது. மீனை விட அதிகமாய்க் கத்தியபடியே அடுத்து ஹாசினி துள்ளினாள்.
பார்த்தவருக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. பவன் மீன் சட்டி மீது பெரிய கல்லை வைத்து விட்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.
தேவ் ஹாசினியின் கையைப் பிடித்து, " கொஞ்ச நேரம் ஆடாமல் நில்லு" என்றான். ஆனால் அவள் அவன் மீதே இடித்துக் கொண்டு துள்ளினாள். ப்ரீத்தி அவர்கள் கெமிஸ்ட்ரி பார்த்துத் திரும்பிக் கொண்டாள்.
ஹாசினி ஒரு நீண்ட ப்ராக் தான் போட்டிருந்தாள். அது இடையில் கட்டப்பட்டு இருந்ததால் அவளுக்குள் விழுந்த மீனும் இடை வரை மட்டுமே சடுகுடு ஓடியது. "ஹேய், ஹோய், ஊ, ஆ, ஐயே" என எல்லாவித சத்தமும் கொடுத்துக் கொண்டு அவள் நெளிந்து, துள்ளிக் கொண்டிருக்க, தேவ் ப்ராக்கோடு சேர்த்து அவளது வயிற்றுப் பகுதியில் வைத்து மீனைப் பிடித்தான். அதில் ப்ராக் இழுத்துப் பிடிக்கப்பட, போட் நெக் சற்றே இறங்கியது , அனிச்சையாக அவள் நெஞ்சில் கை வைத்துக் கொண்டவள், " என்ன பண்ற" என முறைத்தாள்.
" ஏய், லூசு, கையை எடுத்தேன்னா மீன் துள்ளும். எடுக்கவா. " எனக் காட்டினான். அவன் கைக்குள்ளேயே வழுக்கிக் கொண்டிருந்தது. அவன் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தான். " அந்தக் கயிறை அவிழ்த்து விடு. அப்படியே கீழே விழுந்துடும்" என்றான் தேவ்.
" ஓ, நோ. அது கண்ட பக்கம் போகும்" எனச் சிறு பிள்ளையாக அடம்பிடித்தாள். " இம்சைடி. எனக்கு இம்சையைக் கூட்டவே, எதையாவது இழுத்து விட்டுக்குவ" எனப் பல்லைக் கடித்தான்.
"நானா மீன் பிடிச்சிட்டு வந்தேன். இல்லை அதைத் தூக்கி என் சட்டைக்குள்ள போட்டுக்கிட்டேனா. நீ தான் எனக்கு இம்சையைக் குடுக்குற" எனப் பதிலுக்கு அவஸ்தையாக அசைந்து கொண்டே பேசினாள் ஹாசினி.
" ஏய், ரொம்பப் பேசினேன்னா, அப்படியே விட்டுட்டு போயிடுவேன்" என மிரட்டினான்.
" யோவ் அரக்கா, நான் பாட்டுக்கு மீட்டிங் அட்டென்ட் பண்ணிட்டு கிளம்பினவளைக் கடத்தினவன் நீ. அதை ஞாபகம் வச்சுக்கோ, எனக்கு ஆபத்து வந்தாலும் நீ தான் சேவ் பண்ணனும் " எனச் சண்டையும் போட்டாள்.
ப்ரீத்தி பவன் பார்வையிலிருந்து அவளைத் தள்ளிக் கொண்டு வந்தவன், சட்டென அவளைத் தூக்கி தலைகீழாக உலுக்கினான். மீன் துள்ளிக் கொண்டு கீழே விழுந்தது. ஆனால் பயத்தில் ஹாசினி அவனை இறுக்கப் பற்ற முனைய எசகுபிசகாக அவனது தாடி அவள் கையோடு வந்தது.
முதலில் என்னவோ எனப் பயந்து தூக்கிப் போட்டவள், பின்னர்ச் சுதாரித்து அவன் முகத்தைப் பார்த்தாள்.
அடிக்கடி எங்கோ பார்த்த முகமாக இருந்தது. "மேம் உங்க ரேஞ்சே வேற. உங்க ஆளு உங்களுக்காக உலகத்தையே ஆட்டி வைப்பார். உங்களுக்கு அண்ணன், தம்பி இருந்தாலும், இலட்ச கணக்கில் தொண்டர்கள் இருந்தாலும், அது எதுவுமே அவரைக் கட்டுப் படுத்தாது" என்ற பவனின் வார்த்தைகள் காதில் எதிரொலித்தது.
" அரசியல்வாதிக்கு உணர்வுகளைத் துடைத்த நகை முகம் தான் பலம்" அன்று மங்களூரில் ப்ளைட்டிலிருந்து இறங்கும் போது சொன்னான்.
" இந்தத் தாடி, மீசையும், லென்ஸையும் எடுத்துடுங்க. உங்க லவ்வர் கிடைப்பார்" என்ற ப்ரீத்தியின் வார்த்தைகள்.
" குண்டு கோஸ், முட்டாள் கூஸ், இம்சை, மது" என வரிசையான வார்த்தைகள் , எல்லாமே அவன் தான். அதிர்ந்து நின்றவள், அவன் அவசரமாகத் தாடியை ஒட்ட வைக்க முயலவும், அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிக் கொண்டு போய் ஒரு மரத்தில் ஒட்டி நிறுத்தியவள், தனது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள, அவனது சட்டை பட்டன் மூன்றை வரிசையாகக் கழட்டினாள்.
" ஏய், இடியட். என்ன செய்யற" என்ற அவனின் வார்த்தைகளைக் காதில் வாங்காமல், அவன் சட்டையை விலக்கி இடது மார்பைப் பார்த்தாள். அரைச் சந்திர வடிவிலான தழும்பு இருந்தது. இதுவும் பால்ய காலத்தில் பட்ட தழும்பு தான். அவள் தலையிலிருந்த க்ளிப் , அவன் நெஞ்சில் குத்தியது.ஓடி விளையாடும் போது கால் வழுக்கி தலைக்குக் குப்புற விழ போனவளை எதிரே இருந்த சந்திரா பாய்ந்து பிடித்தான், அவள் தலையிலிருந்த கூரான க்ளிப் அவன் சட்டையைத் தாண்டி நெஞ்சில் கிழித்திருந்தது., அவன் மார்பில் ஆழமாகக் கிழித்து . அதில் பிறைச் சந்திரன் போலவே காயம் பட்டு, இரத்தம் வழிந்து தழும்பானது. அதற்கு அடுத்த முறைகளிலும் அந்தத் தழும்பைப் பார்த்து இருக்கிறாள்.
ஹாசினி அதிர்ச்சியில் வாயைப் பொற்றிக் கொண்டு அவனை விட்டு விலகினாள். கண்களில் கங்கையின் பிரவாகம். அவளையே பார்த்திருந்தவன், தான் யாரெனத் தெரிந்து தன்னிடம் அடைக்கலம் ஆவாள் என எதிர் பார்த்திருந்தான். ஆனால் அவள் சற்று தள்ளிப் போய் ஓர் பாறையில் அமர்ந்து அழவும், எங்கே மயக்கம் போட்டு விடுவாளோ எனப் பின்னே ஓடினான்.
" மது, எதுக்குடி அழற. நீ பாதுகாப்பா என்கிட்ட தான் இருக்க" என்றான் தேவ். அவளுக்குக் கோபம் பலியாக வந்தது.
" என்ன பாதுகாப்பு, என்னடா பாதுகாப்பு. எதுக்கு என்னைக் கடத்துன. எவ்வளவு பெரிய ரிஸ்க் தெரியுமா." என அங்காரமாகப் பேசியவள் , அவனை நேருக்கு நேராக வைத்துக் கொண்டு , "எனக்கு உதவின்னு கேட்டு உங்ககிட்ட வரத் தெரியாமலா இருந்தது. பெத்தம்மாவுக்காகவாவது நீங்க எங்களுக்கு உதவுவீங்கன்னு தெரியும். இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம். அம்மா மகள் எங்களோடையே போகட்டும்னு தானே இருந்தோம். உன்னை யார் பெரிய இவனாட்டம் வரச் சொன்னது." என ஆக்ரோஷமாக அவன் சட்டை பிடித்து இழுத்து அழுதாள்.
" அப்ப எனக்கு எந்த உரிமையும் இல்லை. நீ கஷ்டப்பட்டாலும், பார்த்துட்டுப் பேசாமல் இருந்திருக்கனும் அப்படித்தானே மது" என்றான் தேவ்.
" நான் பழைய மது இல்லை . நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிற. மீடியா, கேமரா என் மேல விழுந்துடிச்சு. நான் அந்த ஒளியில் இருந்து தப்பிக்கவே முடியாது. நீ என்னை இப்படிக் கடத்தி வச்சிருக்கிறது யாருக்காவது தெரிஞ்சா என்ன ஆகும். போலீஸ்கிட்ட மாட்டினா. உன் கேரியரே ஸ்பாயில் ஆயிடுமே சந்திரா" எனப் பதட்டமாகப் பேசினாள். லேசாக அவள் மூக்கிலிருந்து இரத்தம் கசியவும், தேவ் பதட்டமானான். தனது கைக் குட்டையை எடுத்து அவளது நாசியைத் துடைத்தவன், அவளருகில் உட்கார்ந்து கொண்டு, அவளை அணைத்தபடி பேசினான்.
" மது லுக் அட் மீ. என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கில்ல. என்னை நம்பு. இந்தப் பிரச்சனை எல்லாத்தில இருந்தும் நான் உன்னை வெளியே கொண்டு வர்றேன். நீ நினைக்கிற மாதிரி அமைதியான வாழ்க்கை உனக்குக் கிடைக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. என் கூடக் கோவாப்பரேட் பண்ணா போதும். ட்ரெஸ்ட் மீ" என்றான்.
அவனை ஏறெடுத்துப் பார்த்தவள், " அப்பா, அம்மா" எனக் கேள்வி எழுப்பினாள்.
" பானு அத்தை, ப்ரதி, அதி, ரதன் சித்தப்பா எல்லாரும் இந்தியா போயிருக்காங்க. இரண்டு பேரையும் மஸ்கட் கூட்டிட்டு வந்துடுவாங்க. உன்னை அவங்களோட சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. என்னை நம்பு" என்றான். அவளுக்குக் குழப்பமாக இருந்தது. தலையைப் பிடித்துக் கொண்டாள்.
" என்னால யோசிக்கவே முடியலை. " என அவள் சோர்ந்து போகவும், அவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டவன், மூக்கை உயர்த்திப் பிடித்துக் கொண்டான். " மது காம் டவுன். நான் பார்த்துக்குறேன். ட்ரெஸ்ட் மீ" எனத் திரும்பத் திரும்பச் சொன்னான். அவளைத் தூக்கி வந்து காட்டேஜ் கட்டிலில் படுக்க வைத்தான். அவளது கவலை தோய்ந்த முகம் அவனை மிகவும் பாதித்தது.
" மது நேத்து போட்ட மாத்திரைக்கே ட்ரவுசியா இருக்கும். நான் செரியல்ஸ் எடுத்துட்டு வர்றேன். சாப்பிட்டு ரெஸ்ட் எடு. அப்புறம் பேசலாம்" என்றான். அவள் சலிப்பாகக் கண்ணை மூடிக் கொண்டாள்.
தூரத்திலிருந்து ப்ரீத்தி பவன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் வேஷம் களைந்ததையும் கண்டு கொண்டனர். அவன் அடுப்படி நோக்கி வரவும், " பாயி என்ன ஆச்சு" என்றாள் பீரீத்தி.
" தாடி பிஞ்சு , அரக்கன் வேஷம் களைஞ்சு போச்சு" என்றான் பவன். தேவ் அவனைக் கண்டித்து, "ஷெட் அப் " எனவும் " விடுங்க பாஸ். இனிமே அந்த இத்துப் போன தாடியையும், புலி கண்ணையும் ஒட்டிக்க வேண்டாம். நீங்க நீங்களா இருங்க" என்றான்.
" சும்மா இரு" எனப் பவனைக் கடிந்த ப்ரீத்தி, " என்ன பாயி சொன்னாங்க" என்றாள். " முதல்ல அப்பா, அம்மானு கவலைப் பட்டாள். இப்போ என்னை நினைச்சு கவலைப் படுறா" என்றான் தேவ்.
" உண்மையில் மேம்க்கு ரொம்ப நல்ல மனசு பாயி" எனச் சர்டிவிகேட் தந்தாள் ப்ரீத்தி. " அதை மட்டும் நினைக்காத. பிடிவாதமும் ஜாஸ்தி. அம்மாக்குத் தன்னைப் பிடிக்காதுன்னு, ரொம்ப ஸ்ட்ராங்கா நம்புறா. இதுவே பல பிரச்சனைக்கு மூல காரணம். பார்ப்போம். " என்றான் தேவ்.
சற்று நேரம் பொறுத்து ஹாசினியே வெளியே வந்தாள். மூக்கில் லேசான கறை மட்டும் இருந்தது. இவர்களோடு சமைக்கும் இடத்திற்கு அருகில் வந்து அமர்ந்தாள். செரியல்ஸில் பவுடர் பால் கலந்து தந்தான். அதை வாங்கிக் கொண்டவள், அமைதியாகச் சாப்பிட்டாள்.
அவனாக இருக்குமோ என்ற சந்தேகமும், பல வருடங்கள் கழித்து அவனைத் தான் பார்க்கிறோமோ என உறுதிப் படுத்திக் கொள்ள அத்தனை ஆர்வமாக இருந்த அவளது மனது, அரக்கன் சந்திரா தான் எனத் தெரியவுமே ஓய்ந்து போனாள். எவ்வளவு பெரிய பிரச்சனையை இழுத்து வைத்திருக்கிறான். இதற்கான தீர்வு என்ன, என்பதை யோசிக்கவே அவளுக்கு வயிறு நிறைய வேண்டியது இருந்தது. அதனால் அமைதியாகச் சாப்பிட்டாள்.
ப்ரீத்தி, சந்திர பிரகாஷை பாயி என அழைக்கிறாள், எனில் இவள் யார் என யோசித்தாள். ஹாசினி ஒரு போதும் மஸ்கட் சென்றதில்லை. பானுமதி எஸ்.ஆர்.சியிடம் அழைத்து வரச் சொல்வார். ஆனால் சமயம் வாய்த்தது இல்லை. சிம்மதேவ் குடும்பத்தினரும் வெளிநாட்டில் வைத்துத் தான் ஹாசினியை சந்தித்து இருக்கிறார்கள். அதுவும் அனுசுயா தேவியைப் புகைப்படத்திலும், ஓரிரு முறை போனில் மட்டும் தான் பேசி இருக்கிறாள்.
பல விசயங்களை மனதில் அசை போட்ட ஹாசினி, " என்னைக் கடத்திட்டு வந்திருக்கியே, என்ன ப்ளான். யாருகிட்ட ஒப்படைக்கப் போற. ஏன் எதுக்கு. " என நிதானமாகச் சந்திர தேவை பார்த்துக் கேட்டாள்.
தேவ் அவளையே பார்த்திருந்தவன், "இப்போ நீ எதையுமே தெரிஞ்சுக்க வேண்டாம். உனக்கு மண்டை நல்லா சூடாயிருக்கு .பேசாமல் ரெஸ்ட் எடு" என்றான்.
" நீ எதுவுமே சொல்லாம இருக்க, இருக்கத் தான், எனக்கு டென்ஷன் ஜாஸ்தி ஆகுது " என அவன் கடத்தியதற்கான காரணத்தைக் கேட்டு நின்றாள்.
" இந்தச் சுஹானா தீவிலிருந்து, நாம கிளம்பனும்னா, அது உன் கையில் தான் இருக்கு" என்றான்.
"வாட் டூ யூ மீன். என்கிட்ட போன் கூடக் கிடையாது. போட் வர சொல்லனும்னா கூட நீதான் சொல்லனும். நான் எப்படி முடிவெடுப்பேன்" எனக் கேள்வி கேட்டாள் ஹாசினி சந்திரா. ப்ரீத்தியும் , பவனும் கொலு பொம்மைகள் போல் இவர்களைப் பார்த்திருந்தனர்.
ஹாசினி கேள்வியைக் கேட்ட பிறகும் வெகு நேரம் பதில் சொல்லாமல் ப்ரீத்தியோடு சேர்ந்து மீன் குழம்பு, வறுவல் செய்வதில் மும்மரமாக இருந்தான் சந்திர தேவ்.
" உன்கிட்ட கேட்கிறதே வேஸ்ட். ஏய் ப்ரீத்தி, பவன், ஒரு அறிவுள்ளவன் செய்யற வேலையையா உங்க பாஸ் செஞ்சிருக்கான். அவன் கூடச் சேர்ந்துக்கிட்டு நீங்களும் கடத்தலுக்குத் துணை போயிருக்கீங்க. ப்ரீத்தி நீ ஒரு பொண்ணா இருந்துட்டு இதெல்லாம் யோசிக்க மாட்டியா. உன்னைப் பெத்தவங்க எப்படி அலோ பண்ணாங்க. " எனச் சரமாரியாக ப்ரீத்தியைச் சாடவும், சமையல் வேலையை ப்ரீத்தியிடம் கொடுத்து விட்டு வந்த சந்திரதேவ் , அவள் முன் அசட்டையாக வந்து அமர்ந்தவன்,
" ஹேய் லுக், ஹாசினி, பூஷினி , சுஹாசினி நீ எதுவானாலும் இருந்துட்டுப் போ" என ஆரம்பிக்கவுமே அவனை முறைக்க ஆரம்பித்தாள் மதுர ஹாசினி.
" இந்த முறைப்போடையே நில்லு, அப்பத் தான் எனக்கும் சொல்ல வசதி" என்றவன். " நீ இங்கிருந்து மிஸஸ் சந்திர பிகாஷ் சிம்ம தேவ் ஆக மட்டும் தான் வெளியேற முடியும். இன் ஆல் மீன்ஸ்" என அவள் கண்களை ஊடுருவிச் சொன்னவன், "அது கட்டாயம் நடக்கும் நடத்திக் காட்டுவேன்" என்றான்.