ஹாசினி சந்திரா -19
பெங்களூர் மாநகரம் சட்டசபைத் தேர்தல் நடந்து, வாக்கு எண்ணிக்கைக்குக் காத்திருக்கும் நேரத்தில் ஒரு கட்சித் தலைவரின் மகளைப் பிரச்சாரம் முடிந்து வரும் போதே, அதன் துணைத் தலைவர் மகனே , ஒரு திமிரில், கோபத்தில் ஒரு பெண்ணைக் கொல்லத் துணிந்தது, பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. தற்போது நகரம் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், கட்சி வித்தியாசம் பார்க்காமல் குண்டர்களை அடித்து நொறுக்கி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர்.
தங்கப் பாண்டியன், யுவராஜ் கைது, ரிமேண்ட், ப்ரெஸ்மீட் மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை முடித்து வர நள்ளிரவு ஆனது. அது வரை அவரது மனைவியும் அவருக்காகக் காத்திருந்தார். சிரம பரிகாரம் செய்த பின்பு, கணவருக்கும் தனக்குமாகப் பால் எடுத்து வந்த தான்வி கதை கேட்கத் தயாரானார். மனைவி கையால் தண்ணீர் அருந்தினாலும் சுகமே என்றிருந்தவர் பாலை ருசித்தும், மனைவியை ரசித்தும் பருகினார்.
“ இன்னைக்கு ரொம்ப அலைச்சலோ” எனத் தனது மடியில் கணவரைச் சாய்த்துக் கொண்டு அவர் முடியைக் கோதியபடியும் , தோள்பட்டையை அழுத்தி விட்ட படியும் தான்வி கேட்கவும்,
" நீ இருக்கிறதால சீக்கிரம் வந்துட்டேன். இல்லைனா இன்னைக்கு இருக்க டென்ஷனுக்கு இராத்திரி பூரா ரோந்து போயிட்டு தான் இருந்திருப்பேன் " என மனைவியின் அருகாமையை அனுபவித்தபடி சொன்னார்.
" லவ் ஸ்டோரி சொல்றேன்னு சொன்னேளே" எனத் தனது பதவியும் மறந்து, கணவனின் பேச்சை ரசிக்கும் மனைவியானார் இஆபெ பட்டம் பெற்ற ஆணையர் தான்வி தங்கப்பாண்டியன்.
“ உனக்கு உன் கவலை" என அவர் சொல்லவும். " சொல்லாட்டி போங்கோ. எங்க டிபார்ட்மெண்ட்ல கதைக்கா பஞ்சம், போனா போறது , டென்ஷனா இருப்பேளே, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாரே மனுஷன்ட்டுக் கேட்டேன். புள்ளைக் குட்டிய விட்டுன்டு அறக்கப்பறக்க ஓடி வந்தேன் பாருங்கோ. நேக்கு நன்னா வேணும். " என அவள் அவர் சிகையைக் கோதுவதை நிறுத்தி கையைக் கட்டிக் கொண்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார் தான்வி.
" அப்பாடி, இப்ப தான் தங்கம் ரிலேக்ஸ் ஆயிருக்கான். ரெட்சில்லி இப்படிக் கோபப்பட்டாத் தான் நல்லா இருக்கும். அதை விட்டுட்டு கொடமொளகாய் மாதிரி சவசவன்னு இருந்தா நல்லாவா இருக்கும். " என வம்பிழுத்து, லஞ்சம் கொடுத்து, திரும்ப வாங்கிக் கணக்கை நேர் செய்த பிறகு விசயத்துக்கு வந்தார்.
" இந்தக் கேஸ்ல , ஜஸ்டிஸ் இல்லை ஆனால் பொயட்டிக் ஜஸ்டிஸ் உண்டு, நானே நியாமா, தர்மமா,மனசா, புத்தியான்னு நிறையத் தடுமாறின ஒரு கேஸ் தனுமா ” என்றார் பாண்டியன்.
“சுத்தமா குழப்பறேள் , புரியும்படி சொல்லுங்கோ” எனத் தான்வி கேட்கவும்.
“ இந்த நஞ்சப்பா, அப்பா மகனுங்க, எஸ்ஆர்சிக்கும், அவர் குடும்பத்துக்கும் நிறையத் துரோகம் செஞ்சுருக்காங்க. அவங்களைச் சும்மா விடலாமா” எனக் கேள்வி எழுப்பினார் பாண்டியன்.
“நீங்க எங்க சும்மாவிடேள், அது தான் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்திட்டேளே “ எனத் தான்வி சமாதானம் சொல்லவும், “ஹாசினி சந்திரா படுகொலை வழக்குல தான், இப்ப அரெஸ்ட் பண்ணியிருக்கேன். யுவராஜ் சதி செஞ்சது நிஜம், ரெட்டி பாம் வச்சது நிஜம், பாம் ப்ளாஸ்ட் ஆனதும் நிஜம், இதுக்குப் பக்கவா ஆதாரம் இருக்கு. அதை வச்சு தான் அரெஸ்ட் பண்ணி கேஸ் பைல் பண்ணியிருக்கோம். ஆனால் “ என எழுந்து உட்கார்ந்தார்.
தான்வியில் க்யூரியாசிட்டி அதிகமானது, கணவரின் முகத்தில் விழிகளைப் பதித்திருந்தவர், அவர் சிறு நகையுடன், “ஆனால் ஹாசினி சந்திரா உயிரோட இருக்கா “ எனக் குண்டை தூக்கிப் போட்டார்.
“என்ன சொல்றேள்” எனத் தான்வி அதிர்ச்சியாகக் கேட்கவும், “ஆமாம்மா, நானே என் கண்ணால் பார்த்தேன், ஆனால் நான் பார்த்தேன்னு மத்தவங்களுக்குத் தெரியாது” என்றவர் ,
ஹாசினி கார் பாம் பிளாஸ்செய்யப் பட்ட அன்று, மங்களூரில் ஹாசினியின் தொண்டர்கள் வண்டி இல்லாமல், இரண்டு வண்டிகள் தொடர்ந்ததிலிருந்து தனது விசாரணை விவரத்தைச் சொன்னார். இரண்டு வண்டிகளில் ஒன்று ரெட்டியுடையது, மற்றொன்று அவனைக் கடத்தி வைத்திருந்தவனுடையது. அந்தக் கார் எண் வைத்து விசாரித்ததில், கோவா அரசியல்வாதி ஒருவருக்காக அந்தப் பெரிய வண்டியும், ஒரு கேரவேனும் தயாரித்து அன்று தான் டெலிவரி கொடுத்தது தெரிய வந்தது. எல்லாச் செக் போஸ்டுகளிலும் விசாரணை செய்த போது, கேரவேனை புகைப்படம் எடுத்த காவலர்கள் அதனைக் காட்டினார். காவலர்களிடமிருந்து தனது மொபைலுக்கு மாற்றி வைத்திருந்தவர், அதனை உற்று நோக்கும் போது மேலும் சிலவை கண்ணில் பட்டது.
அதோடு காவலர்கள் ஓட்டுநரோடு புகைப்படம் எடுத்திருந்தனர், அதனைப் போட்டு வலைத்தளத்தில் தேடிய போது தேவ் குடும்பத்தின் கடைக் குட்டி நிருபன் தேவ் மாறுவேடத்தில் அதில் சிக்கினான். ரத்தனதேவின் மகன் எனத் தெரிய வரவும், அவர்கள் நிறுவனத்தைப் பற்றி விசாரித்தார்.
உலகம் முழுவதுமான அவர்களது தொழில் மற்றும் கட்டுமானங்களைப் பற்றிப் பெருமை பேசிய வலைத்தளம் சுஹானா தீவு பற்றியும் பேசியது. ஏற்கனவே எஸ்.ஆர்.சந்திரா சம்மந்தப்பட்டவர்கள் போன் கால்களை ஆராய்ந்த போது, சில போன் அழைப்புகள், அரபிக்கடலிலிருந்து வந்ததைப் போலீஸ் தொலைத் தொடர்புத் துறை காட்டிக் கொடுத்தது. அந்த லொகேசனை ட்ராக் செய்து, விசாரிக்கத் தீவின் முழு விவரமும் வந்தது. உபரித் தகவலாக ஹெலிக்காப்டர் இறங்கு தளம் அமைந்ததும், அடுத்த இரண்டு நாட்களில் அங்கு வர ஓமன் நாட்டு ஹெலிகாப்டர் அனுமதி பெற்றிருப்பதும் தெரிய வந்தது.
அதோடு லாஞ்சர் வைத்திருக்கும் மீனவர்கள் இருவர், கடத்தலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப் பட்டனர். அவர்களைக் கவனித்ததில் சுஹானா தீவைப் பற்றியும் , ஹாசினி சந்திரா போன்ற அமைப்பு உடையவரை இறக்கி விட்டதாகச் சொன்னார்கள். புயல் மலை காரணமாக இரண்டு நாள் கழித்தே கடற்படை உதவியுடன் அங்கே இறக்கியதையும், சி.பி,தேவ் எனும் சந்திர பிரகாஷ் தேவை சந்தித்ததையும் சொன்னார்.
சந்திர தேவ், சுத்தி வளைத்து காட்டேஜ்க்கு தங்கப் பாண்டியன் மற்றும் கடற்படை வீரர்களை அழைத்துச் சென்றான். அவனது நம்பிக்கை பவன் தான். இந்தத் தாமதத்தைக் கணித்து ஏதேனும் செய்திருப்பான், என நம்பியே ஆபீசரை அழைத்துச் சென்றான்.
அதே போல், ஹாசினி வந்து சொல்லும் போதே அவனும் ஹெலிகாப்டர் சத்தத்தைக் கவனித்து இருந்தான், ஆனால் அது தேவைக்கு அதிகமான முறை வட்டமிட்டதாக அவனுக்குப் பட்டது , எனவே பெண்களைத் தயாராகச் சொல்லிவிட்டு, அவன் ஹெலிபேட் இருக்குமிடம் விரைந்தான். ஆனால் அங்குத் தரையிறங்கியது இந்தியக் கடற்படை ஹெலிகாப்டர், இறங்கியவர்கள் தலை முடி வெட்டில் காவல் துறை என முடிவு செய்தவன், காட்டேஜுக்கு விரைந்து வந்தவன்,
" ப்ரியூ, மேம் " என அலறியபடியே வந்தான். லக்கேஜ்களை ஏற்கனவே பேக்கிங் செய்து வைத்திருக்க, சில சாமான்களை மட்டும் இருவரும் வேகமாக ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தனர். இவன் அலறலில் அவர்கள் திரும்பிப் பார்க்கவும்,
" இந்தியன் நேவி ஹெலிகாப்டர், ஐபிஎஸ் ஆபீஸர், நம்மளை தேடி வந்திருக்காங்க. மாட்டுனா பாஸை அரெஸ்ட் பண்ணுவாங்க" என்ற அவனின் தந்தி மொழியில்,
"இப்ப என்ன செய்யறது" என இருவரும் பதட்டமாகக் கேட்கவும், லக்கேஜ்களை மறைத்து விட்டு, காட்டேஜை பூட்டாமல் சாத்தி வைத்துவிட்டு அவர்கள் இருவரையும் லாஞ்சரில் வந்து தரை இறங்கிய பகுதிக்கு அவர்களை அழைத்துச் சென்றான். பவன் பத்து நாளில் தீவை ஓரளவு பழகி இருந்ததால், லாஞ்சர் இறங்கிய இடத்துக்கு அருகில் ஓர் மறைவிடத்தில் மூவருமாக மறைந்தனர். இவர்கள் காட்டேஜிலிருந்து மறைந்த பத்து நிமிடங்களுக்குப் பிறகே தங்கப் பாண்டியன் காட்டேஜை வந்து அடைந்தார்.
அங்கு யாரும் இல்லாததைக் கண்டு நிம்மதியடைந்தான் தேவ். ஆனால் ஆபீஸரின் கண்களில் பலர் தங்கியதற்கான பாத தடங்கள் பட்டது. அதுவும் மழையும் சகதியுமாக இருந்த பகுதியில் கால் தடங்கள் தெளிவாகவே காட்டிக் கொடுத்தன. ஆனால் அவர் விசாரிக்கவில்லை.
காட்டேஜையும், சுற்றுப் புறத்தையும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டார். சி.பி.தேவுடனும் போட்டோ எடுத்துக் கொண்டவர், தான் அங்கு வந்ததற்கான ஆதாரங்களைப் பதிவு செய்தார்.
" சார் நான் தான் சொன்னேனே, இங்க வேற யாரும் இல்லைனு. இப்ப நம்புறீங்களா" என அவன் எரிச்சலாகக் கேட்கவும்,
" இருந்தா நல்லாருக்குமேங்கிற நப்பாசையில் வந்தேன் சார். மேனகாம்மாவுக்கு இது ஒரே பொண்ணு. உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லப் போறேன். நான் எஸ்ஆர்சி செக்யுரிட்டி இன்சார்ஜா இருந்தவன். எஸ்ஆர்சிக்கு மகள்னா உயிர். பாவம் அந்தப் பொண்ணு இல்லைங்கிறதைக் கூட அந்தம்மா கணவர்ட்ட சொல்ல முடியாமல் தவிக்கிறாங்க ." என்றவர்.
" சப்போஸ், இங்க இருந்திருந்தால், நான் கேஸை வேற மாதிரி கொண்டு போவேன்" எனத் தூண்டில் போட்டார் பாண்டியன்.
" என்ன ஸார் செய்வீங்க. ஹாசினியை கொலை செய்ய மூன்றுதரம் ட்ரை பண்ணான் , அப்பல்லாம் கூடப் போலீஸ் கூடவா இருந்தது. பாம் வெடிச்ச பிறகு தானே வர்றீங்க" எனத் தேவ் காட்டமாகவே கேட்டான்.
"மூணு தடவை கொலை செய்ய முயற்சி செய்ததா எப்படி அவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க" எனப் பாண்டியனின் கேள்விக்கு, அவ்வை சண்முகி கமல் பாணியில், "நீங்க தானே, சேர்ச் வாரண்டுக்கு விளக்கம் சொல்லும் போது சொன்னீங்க, அதோட நீங்க மேனகா ஆண்டி கிட்ட நீங்க சொன்னதா, அதிபன் சந்திராவும் சொன்னார்" எனவும், "எல்லா இன்பார்மேஷனும் இங்கிருந்தே கேட்டுக்குறீங்களோ " என வினையமாகவே கேட்டார் பாண்டியன்.
"வேற என்ன செய்யமுடியும், ஹாசினி என் சிறுவயது தோழி, சந்திரா மாமா லீவுக்கு வரும் போதெல்லாம் கூட்டிட்டு வருவார், என் மனைவியுடைய ட்வின் சிஸ்டர் " என ஒரு பிட்டையும் தேவ் போட்டு வைத்தான் ,
"வாட் " எனப் பாண்டியன் அதிர்ச்சியாகக் கேட்கவும், "எஸ் சார், இது குடும்ப ரகசியம் , தயவு செய்து வேற யார்கிட்டையும் சொல்லாதீங்க. நீங்க விசாரணை அதிகாரி அதனால் சொல்றேன்.இந்த விஷயம் இப்ப வெளிய தெரிஞ்சா அவள் நிம்மதியும் போகும், ஒரு அரசியல்வாதிக்கே பாதுகாப்பு இல்லாத நாட்டில் , என் மனைவிக்கும் ஆபத்து வரலாம் அதனால் சொல்றேன் " எனச் சுஹாசினி சந்திர பிரகாஷ் தேவ் கதாபாத்திரத்தை அதிகாரியிடம் அவிழ்த்து விட்டான். பாண்டியன் சந்திரா தேவின் சாமர்த்தியத்தை நினைத்து மனதில் புன்னகைத்துக் கொண்டவர்.
" பாதுகாப்பு கொடுக்கவேண்டியவர்கள் பட்டியல் இந்தியால ரொம்ப நீளம் மிஸ்டர்.தேவ் . இந்தப் பொண்ணு இப்ப தான் அரசியலுக்கு வந்துச்சு. எந்தப் போஸ்ட்லையும் இல்லை. தேர்தல் நேரம் நாங்க எத்தனை பேரைப் பாதுகாக்கிறது " எனப் பாண்டியன் பேச்சோடே தீவை நடையில் சுற்றிக் கொண்டு தான் இருந்தார்.
" இது பொறுப்பில்லாத பேச்சு. செத்தபிறகு எதுக்கு விசாரணை" எனத் தேவ் மடக்கவும்.
" இவ்வளவு கோபப் படுறவரு, ஹாசினி உங்களுக்கு, அத்தை மகளா, மாமா மகளா, உங்க மனைவியுடைய இரட்டைனு வேற புதுசா ஒரு கதை சொல்றீங்க ,அவங்களைப் பாதுகாத்து இருக்கலாமே. அட்லீஸ்ட் மாமா குடும்பத்து மேல அக்கறையாவது இருந்திருக்கலாம். அவர் பணம் வேணும், அவர் வேண்டாமா. விட்டுட்டீங்க" என நன்றாகவே கேட்டார் பாண்டியன்.
" யூ ஆர் க்ராஸிங் யுவர் லிமிட்" எனத் தேவ் நெற்றிக் கண்ணைத் திறக்கவும்.
“கூல் மிஸ்டர் .தேவ், எஸ்ஆர்சி மேல உள்ள நல்ல அபிப்ராயத்தில் தான் கேட்டேன். ஆமாம் இங்க ஒரு அருவி இருக்கிறதா உங்க வெப்சைட் சொல்லுதே பார்க்கலாமா” என இவர்களது வெப்சைட் சொன்ன இடத்துக்கு எல்லாம் , மர வீடு முதல் அனைத்துக்கும் அலைந்தவர் , கடைசியாக நினைவு வந்தவராக , லாஞ்சர் வந்து நிற்குமிடத்தையும் கேட்டு அங்கு வந்தார்.
இன்று தங்கப்பாண்டியன் தான்வியிடம், “ஒவ்வொரு இடமா , நான் கேட்கக் கேட்க, தேவுடைய முகத்தைப் பார்க்கணுமே, உள்ளுக்குள்ள என்னைக் கொல்லணும்னு வெறியோட இருந்தான் , ஆனால் வெளியே அவ்வளவு அமைதி. “ எனச் சிரித்தார் பாண்டியன்.
“ஹாசினியை எங்க பார்த்தேள், இது என்ன ட்வின் சிஸ்டர் புதுசா இருக்கே“ எனக் கேள்வி எழுப்பவும், “சொல்றேன் பொறு, நான் அவ்வளவு நேரம் தங்கினதுக்குக் காரணமே, சந்திரதேவ் மேல கோபம் இருந்தால், மத்த இரெண்டு பேரையும் தாக்கிட்டு, ஹாசினி எங்கிட்ட வருவான்னு எதிர் பார்த்தேன். ஆனாலும் மறைவிடத்திலிருந்த அவளை நான் பார்த்துட்டேன், தேவ் என்னை மிரட்ட ஆரம்பிச்சான். ஹெலிபேட் வரைக்கும் திரும்பி அனுப்பி விட்டவன், மான நஷ்ட வழக்குப் போடுவேன் சொன்னதை எல்லாம் மறந்து எங்களை அனுப்புறதில் தான் குறியா இருந்தான்." என்றார்.
சந்திரதேவ் ஹாசினியிடம், அவளைத் தன் கை வளைவுக்குள் வைத்துக் கொண்டு, "அந்த நாள் மறக்கவே முடியாதுடி ஹசி. அந்த மீசைக்காரன் கூட ஒவ்வொரு இடமா வரவர எனக்குப் பக்பக்குனு இருந்தது. கடைசியா, நீங்க மறைஞ்சிருந்த இடம் வரைக்கும் வந்ததுமே, உனக்கு வேற டென்ஷன் ஆனால் மயக்கம் வரும், மூக்கிலிருந்து இரத்தம் வருமேன்னு ஒரே டென்ஷன் " என்றான் .
" அதுவும் வந்துச்சு சந்திரா. பவனும் ப்ரீத்தியும் தான் என்னைக் காப்பாத்துச்சுங்க . எந்த ஜென்மத்துச் சொந்தமோ தெரியலை. அதுங்க பாஸ்போர்ட் ல பிரச்சனை இல்லையா" எனக் கேட்கவும்.
" அதுங்க உங்க கிட்டச் சொன்ன அடையாளம் மட்டும் தான் வேற. மத்தபடி இங்கிருந்து போனது, வந்தது எல்லாம் ஒரிஜினல் ஐடி தான்" என்றான் தேவ்.
ஆபீஸர், தன் மனைவியிடம், "புருசனும் பொண்டாட்டியும் ஒன்னை ஒன்னு காப்பாத்துறதில் தான் குறியா இருந்ததுங்க " எனவும் தான்வி அவர் முகத்தைப் பார்த்தாள். "ஹாசினி சந்திர தேவை கல்யாணம் பண்ணிக்கிட்டா ” என அடுத்தக் குண்டை தங்கப் பாண்டியன் வீசவும், “அவள் எப்போ கல்யாணம் பண்ணிண்டா” என்ற தான்வி சஸ்பென்ஸ் நாவல் படிப்பது போல் ஆர்வமானார்.
“சந்திரதேவின் மனைவி , சுஹாசினி சந்திரா, ஹாசினியின் இரட்டை. எஸ்ஆர் சி மகள்னு, தேவ் சொன்னது ஹாசினியைத்தான். ஒரு வேளை ,ஹாசினியை நான் தீவில் பார்த்துட்டா என்ன செய்யறதுன்னு இந்தக் கதையைச் சொல்லியிருப்பான். ஆனால் பவன் ப்ரீத்தி அதுங்களுக்கு ஒரு கதை வச்சிருப்பான். எல்லாத் தப்பையும் அறிவியல் பூர்வமா செய்யறான். இப்ப பாரு சுஹாசினி சந்திரா பேருக்கு பெர்த் சர்டிபிகேட்ல இருந்து, ஸ்கூல்,காலேஜ், மேரேஜ் சர்டிபிகேட் வரை , அண்ணன் சந்திர தேவும், தம்பி நிருபன் தேவுமா பக்காவா ரெடி பண்ணிட்டானுங்க .” என்றார்.
"இந்தப் போர்ஜெரி வேலையெல்லாம் புகழா தீங்கோ கோல்ட், நேக்கு கெட்ட கோபம் வர்றது, ஏன் இதை உங்களால உடைக்க முடியாதா, போஸ்மாட்டம் ரிப்போர்ட் எல்லா உண்மையும் சொல்லிடும்" எனத் தான்வி கோபப்படவும்.
"அதைத் தான் சொல்றேன், இவனோட கையாள் இங்க இருக்கான், ப்ரபஸனல் கொலைகாரனுங்க. போஸ்ட்மாடம்ல இருந்து எல்லாமே பக்கா. தேவ் திட்டப்படி நஞ்சப்பாவுக்கு எதிரா எல்லா ஆதாரமும் எனக்குப் பக்காவா கிடைச்சுடுச்சு. கேஸ் கிளியர். கேராவேன் பெரிய சாட்சி இல்லை சுலபமா உடைக்கலாம், அதே மாதிரி கடத்தல்காரன் சாட்சியையும் உடைக்கலாம் " எனத் தங்கப் பாண்டியன் வரிசையாகச் சொல்லவும்.
"நேக்கு நீங்க தேவை பாதுகாக்கிற மாதிரி தோண்றது " எனத் தான்வி கோபப்பட்டார். "நான் உன்கிட்ட பேச ஆரம்பிக்கையிலேயே என்ன சொன்னேன், தர்மம், நியாயம் ,மனசு ,புத்தின்னு நானே தடுமாறின கேஸ்னு சொன்னேனா இல்லையா " என்றவர்
“நானும் ,கிளம்பும் முன்ன, ஐபிஎஸ் படிச்சவன் முட்டாள் இல்லைனு , சொல்லிட்டு தான் வைத்தேன்” என்றார் பாண்டியன்.
சந்திரதேவ் , ஹாசினியை தன் மார்பில் தாங்கியவாறு படுத்திருந்தவன், விளக்கை அணைத்த பின்பும் அன்றைய தங்கப்பாண்டியனின் பேச்சை நினைத்தவாறே படுத்திருந்தான்.
" மிஸ்டர். தேவ், நியுட்டனோட லா சொல்லுவாங்க, ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை அவசியம் உண்டு. அதே மாதிரி வினை விதைத்தவன் வினை அறுப்பான். உப்பை தின்றவன் தண்ணீருக்காக அலைவான். எவ்வளவு தான் பவர் பதவி எல்லாம் இருக்கட்டுமே ,நீங்களும் ஒரு நாள் உங்க உயிரானவங்களுக்காக என்னைத் தேடி வருவீங்க. அன்னைக்கு மீதியை சொல்றேன். போலீஸ்காரன் அவ்வளவு முட்டாள் இல்லை. காட் இஸ் தேர்" என்று விட்டுக் கிளம்பினார். அவர் வார்த்தை அவன் மனதில் உறுத்திக் கொண்டே தான் இருந்தது.
தான்வி பொறுப்புள்ள அதிகாரியாக “நன்னா கைக்குக் கிடைச்சவளை விட்டுட்டு வந்திருக்கேள் , தேவ் சட்டத்தை ஏமாத்துறான், அத்தனையும் தெரிஞ்சுண்டே, விட்டுட்டு வந்து இதுல உங்களுக்குப் பெருமை வேற” எனத் தங்கப்பாண்டியனை நொடித்தார். .
“ புறாவைக் கொல்ல நினைப்பவனை விடக் காப்பாற்றுபவனுக்கே அது சொந்தம்னு, நீதிக் கதை படிச்சது இல்லையா தனுமா , நானும் சுத்தோதன மகாராஜாவா இருந்து தான், அந்த முடிவை எடுத்தேன்.” எனத் தங்கப் பாண்டியன் சொல்லவும்.
“ஆஹா, அந்தத் தேவ் என்ன புத்தனா, ஒரு பொண்ணைப் படுகொலைன்னு நாடகமாடி உலகத்தை நம்பவைச்சு ,கடத்திண்டு போன அரக்கனா இல்ல இருக்கான் “ எனத் தான்வி திட்டவும்.
“கூடிய சீக்கிரம் புத்தனா மாறிடுவான், அது தான் , நான் அவனுக்குக் குடுக்குற தண்டனை “ எனப் பாண்டியன் சிரித்தார், “அது எப்படியாம்,ஓமன் நாட்டுல போதி மரம் இருக்கா “ எனத் தான்வி குதர்க்கமாகக் கேட்கவும், “ இல்லைடி, சுய அடையாளம் தொலைச்ச அவன் பொண்ண்டாட்டி இருக்கா , அவளை விடப் பெரிய ஜெயிலரோ, அவனுக்கான தண்டனையோ எதுவுமே இல்லை “ எனப் பாண்டியன் கூறிவிட்டு, “போலீஸ் காரனே ஆயுள் கைதியா இருக்கான், அவன் எம்மாத்திரம்” எனச் சொல்லி தான்வியிடம் தண்டனை வாங்கிக் கொண்டு அதிலிருந்து தப்பிக்க லஞ்சமும் கொடுத்தார்.
தங்கப்பாண்டியனின் ஆரூடத்தை மெய்யாக்கக் காலம் காய்களை நகர்த்த ஆரம்பித்தது. இன்னமும் தேவின் விருப்பப்படியே எல்லாம் நடக்க, ஹாசினி படுகொலை விசயத்தைப் போட்டு உடைத்து, சந்திரதேவ்க்குப் பாம் வைக்க வந்து கொண்டிருந்தான், ஹாசினியின் உயிர் நண்பன் மேத்யூ ஆர் வில்லியம்சன்.
ஹாசினியை அமெரிக்கா அனுப்புவதற்கு மேனகா பயந்தார். ஆனால் எஸ்ஆர்சி, பட்டமேற்கும் இளவரசன் நாடு நகரங்களைச் சுற்றி அறிய வேண்டும் என்பது போல், தான் இல்லாவிட்டாலும் மகள் உலகத்தைச் சமாளித்து, தாயையும் பாதுகாக்க வேண்டும் என எண்ணினார். ஊர் உலகைச் சுற்றுவதில் ஒருவருக்குக் கிடைக்கும் அனுபவம் போல் வாழ்வின் சூட்சமங்களைச் சொல்லாமல் சொல்லி ஆசான் வேறு எதுவுமில்லை. எத்தனை புது இடங்கள், மனிதர்கள், வாழ்வியல் சூழல்கள். சிறுவயது முதலே அப்பாவோடு உலகம் சுற்றிய ஹாசினி, அவர் அரசியலில் பிசியாக இருந்த போதும் இந்தியாவின் பல பகுதிகளையும் சுற்றிக் காண்பித்து உள்ளார். அதனால் ஹாசினி தயக்கமின்றி நியூயார்க்கில் மேற்கல்விக்காகக் கிளம்பினாள்.
தனது நண்பரும், பிஸ்னஸ் பார்ட்னருமான ரிச்சர்ட் வில்லியம்சனுக்கு மகள் தங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்து தரச் சொன்னார். அவர் தனது வீட்டிலேயே ஹாசினி தங்கட்டும் என யோசனை சொன்ன போது, எஸ்ஆர்சி வேண்டாமென மறுத்து, பேயிங் கெஸ்டாகக் கல்லூரிக்கு அருகில் உள்ள பகுதியில் சேர்த்துவிடச் சொன்னார்.
அதன்படி ஹாசினி நியூயார்க்கில் எந்த வித நட்சத்திர அந்தஸ்துமின்றிச் சுதந்திரமாக வலைய வந்தாள். இங்குத் தாய் தந்தையர் அதே ஊரிலிருந்தாலும் பதின்ம வயதிலேயே தங்களது தேவைக்காகத் தாங்களே சம்பாதித்துப் பிஜிக்களில் தங்கும் மாணவ மாணவியர் நிறைய இருந்தனர். பாலின பாகுபாடு இன்றிச் சுற்றித் திரிந்தார்கள். ஹாசினி அவர்களோடு சோசியலாகப் பழக வேண்டும் என்பதற்காகப் போவாளே ஒழிய ஒரு எல்லையில் எல்லோரையும் தள்ளி நிறுத்தி விடுவாள்.
ஒரு நாள் தோழிகளுடன் சென்ற ஒரு பார்ட்டியில் மூச்சு முட்டக் குடித்து விட்டு மேத்யூ அங்கே தகராறு செய்து கொண்டிருந்தான். பிடரி வரை வழிந்த முடியும் சிவப்பேரிய கண்களும், நலுங்கிய ஆடைகளுமாகச் சைக்கோ போல் தெரிந்தவனை அணுக அனைவருமே பயந்தனர். மது அருந்திய கண்ணாடி டம்ளரை கைகளால் நொறுக்கி இரத்தம் வழிந்தது. ஹாசினிக்கு அவனை ரிச்சர்ட் வில்லியம்சன் வீட்டில் பார்த்து அறிமுகம் இருந்தது. அவனைப் பற்றி அறிந்திருந்ததால், ஹாசினி தைரியமாகவே அவனிடம் சென்றாள்.
மேத்யூவின் அம்மா, ஓரிடத்தில் நிலை கொள்ளாதவள், ஆரம்பத்தில் ரிச்சர்டை காதலித்து மணந்தாலும், அவரும் அவளுக்குச் சிறிது காலத்தில் சலிப்பு தட்டி விட்டார். ஆனால் அந்தச் சமயம் மேத்யூ வயிற்றிலிருந்ததால் அவனைப் பெற்றெடுக்கும் வரை மேத்யூவின் தகப்பனோடு வசித்தவள், பிள்ளை பெற்றதுமே குழந்தை அரவணைக்கவுமின்றிப் புறக்கணித்துச் சென்றாள். செவிலியர்களிடம் வளர்ந்த மேத்யுவுக்கு அளவுக்கு மீறிய செல்வம் கிடைத்து , ஆனால் பாசம் கிட்டவில்லை. ரிச்சர்ட் காதலித்த மனைவி விட்டுச் சென்ற வெறுப்பில் தடம் மாறியவர் தன்னை , வியாபாரத்துக்குள் மூழ்கடித்துக் கொண்டு , எந்தப் பெண்ணோடும் கல்யாணம் எனும் கட்டு இன்றி லிவ்விங் டு கெதராகவே இருந்தார். அதிலும் பெண்கள் மாறிக் கொண்டே இருப்பார். இதில் மேத்யு முற்றிலும் பாதிக்கப்பட்டான்.
ரிச்சர்டின் ஐம்பதாவது வயதில் ஏஞ்சலினா என்றொரு பெண்ணை அவளது குணநலனுக்காக மணம் புரிந்தார். ஆனால் மேத்யு அவரை அப்பாவின் மற்றொரு கேர்ல் ப்ரெண்டாகவே நினைத்தான். அவனது அடல்ட் ஏஜ் வந்த நாளிலிருந்து, அவனோடும் சல்லாபித்தே வந்திருந்தனர். அதே போல் ஏஞ்சலினாவிடமும் நடக்க முயல, ரிசர்ச்ட் வெகுண்டு மேத்யூவை மாட்டை அடிப்பது போல் அடித்தார். அதிலிருந்து அவரையும் வீட்டையும் விட்டு வெளியேறியவன் அமெரிக்க மண்ணின் மற்றொரு அநாதை ஆனான்.
ரிச்சர்ட் திரும்ப வந்து அழைத்த போதும் அந்த வீட்டுக்குச் செல்ல மறுத்தவன் எப்போதாவது விருந்தினன் போல் சென்று வருவான். அது போல் ஒரு முறை சென்ற போது ஹாசினியை அவனும் பார்த்திருக்கிறான். அவளின் தோற்றமே மூதாதையரான தமது தந்தை வழி பாட்டிகளை இந்திய வம்சத்தை நினைவுறுத்தியது. அதனால் அவள் முகத்தை மறந்தான் இல்லை.
ஹாசினி அன்றைய இரவு அவனை மிகுந்த சிரமப்பட்டுத் தான் தங்கியுள்ள அறைக்கு அவனை இழுத்து வந்தாள். அடுத்த நாள் போதை தெளிந்து பார்க்கையில் ஒற்றை ஷோபாவில் குறுகிப் படுத்துத் தூங்கும் குழந்தை முகத்தைத் தான் கண்டான். ஆனாலும் தன் நெகிழ்வைக் காட்டாமல் அவளிடம் எரிந்து விழுந்தான். சராசரி பெண் என அவளையும் தரமிறக்கினான்.
அத்தனையும் பொறுமையாகக் கேட்ட ஹாசினி, புன்னகை மாறாமல், "முடிச்சிட்டியா. இஸ் இட் ஓவர். நீ இப்ப சொன்ன எதுவுமே நான் இல்லை. அதனால உன் வார்த்தை, எனர்ஜி எல்லாமே வேஸ்ட். சரி உன் ரூம்க்குக் கிளம்பு " என விரட்டி விட்டாள். அவளின் செய்கையே அவனுக்கு வியப்பாக இருந்தது. அதன் பின்னும் அவன் எங்காவது அரக்கத்தனமாகச் செய்கை செய்து கொண்டிருந்தால் மிகவும் கூலாக அவனைக் காலி செய்து விட்டு, அது ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல் வருவாள். அவளின் கன்னக்குழி சிரிப்பில் விழுந்தவன் மேத்யூவும் தான்.
ஹாசினிக்காகப் பாதியில் விட்ட தனது படிப்பை அவளது கல்லூரியிலேயே தொடர்ந்தான். இவனோடு அவள் பழகுவதைப் பார்த்து மேலும் சிலர் அவர்களோடும் டேட்டிங் வரச் சொல்லி அழைக்க, அவள் முறைத்து விட்டு வந்தாள். அவர்கள் இவளை அனுபவித்தே தீருவது என ஒருநாள் துரத்த மேத்யு ஆபத்பாந்தவனாக அவளைக் காத்தான். அன்றே அவளைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான். ரிச்சர்ட் தன் மகனின் மாற்றத்தை பார்த்து தன் வீட்டுக்கு அழைக்க, பெண்கள் மீதான அவனது பார்வை மாறியதில் அம்மா ஸ்தானத்தில் இருக்கும் ஏஞ்சலினாவைச் சந்திக்கக் குற்ற உணர்ச்சியால் மனம் வரவில்லை.
ஹாசினியோடு பழகிய சிறிது நாட்களில் அவள் தன்னோடு பழகுவதில் ஒரு எல்லை இருப்பதை உணர்ந்தவன், அதைப் பற்றிக் கேட்க, இதுவரை யாருக்கும் தெரியாத பெட்டகத்தை அவனுக்குத் திறந்து காட்டினாள். அதில் நிறைந்த சந்திராவைப் பற்றியும் சொன்னாள். ஆனால் இது அவர்களுக்குள்ளான ரகசியம் மட்டுமே. அவனும் எல்லா விசயங்களையும் அவளிடம் பகிர்ந்து கொள்வான்.
சந்திரதேவ் ரிச்சர்ட் வில்லியம்சனுடன் மட்டுமே பிஸ்னஸ் செய்து கொண்டிருந்தான். அதுவும் தொழில் உலகில் அவன் சி.பி.தேவ் மட்டுமே. எனவே மேத்யூவுடன் எந்தப் பழக்கமும் இல்லை. மேத்யு ஹாசினி ஒரே வீட்டில் வசித்ததை ரிச்சர்ட் காதல் எனவே நினைத்தார். எஸ்ஆர்சி யிடம் பேசி இவளை மருமகளாக்கிக் கொள்ளவும் நினைத்தவருக்கு அதைப்பற்றிப் பேச எஸ்ஆர்சி உடல்நிலை இடம் கொடுக்கவில்லை.
மேனகாவிடமிருந்து ஹாசினியை இந்தியா வரச் சொன்ன அழைப்பு அவள் வாழ்வை மாற்றிப் போட்டது. முதலில் ஹாசினி திரும்பி விடுவாள் என நினைத்த மேத்யு அவளது அரசியல் பிரவேசத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். ஹாசினி கூறிய இந்திய அரசியல் சிக்கல் அவனுக்குப் புரியவில்லை. அப்பாவிடம் யோசனைக் கேட்க, அவர் சி.பி.தேவை கை காட்டினார்.
அவனிடம் வந்து நின்றவன், " அட் எனி காஸ்ட், என் ப்யூட்டியை எனக்கு வேண்டும்" என்ற அவனது வார்த்தைகள் சந்திரதேவுக்குக் கூர் ஊசியாகத் துளைத்தாலும், தன் மனம் கவர்ந்தவளைக் காக்க இந்தியா பறந்தான்.
ஹாசினி பாம் ப்ளாஸ்ட் நாடகத்தை முடிவெடுத்த சந்திரதேவ் ,மேத்யு குட்டையைக் குழப்பாமலிருக்க அவனுக்கு மட்டும் திட்டத்தைச் சொல்லவும். " ஓகே டன். நான் ஐலேண்ட் வந்து ஹாசினியை பிக்கப் பண்ணிக்கிறேன்" என எடுத்த முதல் முடிவின் படியே சந்திரதேவ், "உன்னை ஒருத்தனிடம் ஒப்படைக்கனும்" என ஹாசினியிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.
மேத்யுவுக்குமே சி.பி.தேவ்.தான் ஹாசினியின் சந்திரா என்பது தெரியாது. சி.பி.தேவ் ஹாசினியின் உறவினன் , ஆகச் சிறந்த தொழிலதிபன். எப்படியாகினும் தான் நினைத்த காரியத்தைச் சாதித்து விடுவான் எனத் தந்தை சொல்லிக் கேட்டவன், ஹாசினியை காப்பாற்றித் தந்தால் தான் சிபி தேவின் கனவு ப்ராஜெக்ட்டில் இன்வெஸ்ட் செய்வதாக வாக்குத் தந்திருக்கிறான். எதிலுமே ஆதாயம் தேடும் சந்திர தேவ், தன் பிரியமானவளைக் காக்க , தனது கடமைக்கே தனக்குச் சன்மானம் தருகிறேன் எனச் சொல்லும் அந்த ஒப்பந்தத்தை , ஹாசினி அருகில் இருக்கலாம் என்பதற்காக ஒப்புக்கொண்டு, பிரியங்கா, ப்ரணவேஸை இதில் பயன்படுத்திக் கொண்டான். இதில் எதிர்பார்த்து ஹாசினியின் காதல் மனம் , அதனை அறிந்த நொடியே உலகத்தை எதிர்த்து அவளைத் தன்னவள் ஆக்கிக் கொண்டான் சந்திர தேவ்.
அடுத்த நாள் விடியலில் மேனகா, அனுசுயா எனும் இரண்டு தாய்மார்களும் என்ன முடிவெடுப்பார்கள். சந்திரதேவ் அவர்களை எப்படிச் சரிக்கட்டுவான். உண்மை அறியும் காசினி சந்திராவின் நிலை என்ன பொறுத்திருந்துப் பார்ப்போம்.