Tuesday, 2 November 2021

யார் இந்த நிலவு-9

யார் இந்த நிலவு-9


கைலாஷ் , அபி-ஆதிராவை சற்றே விலக்கி வைக்க முடிவெடுக்க,  வலிமையான விதியை யாரால் மாற்ற இயலும், அது அக்கணமே  ஆதிராவை அபிராம் முன் கொண்டு வந்து நிறுத்தியது. அபிராம், வேகமாக கைலாஷ் அறையிலிருந்து ஏமாற்றத்தோடு வெளியேற, வராண்டாவில் புயல் வேகத்தில் முன்னேறியவனை எதிர் கொண்டாள் ஆதிரா. 


அவ்வளவு வேகமாக ஒருவன் வரக்கூடும் எனும் எதிர் பாராததால் அவன் மீதே மோத, அவள் கையிலிருந்த பேப்பர்கள் சிதற, கீழே விழப் போனவள், " ஓ சாரி" என ஆதாரத்துக்காகக் கையை வீசி அனிச்சையாக அவன் சட்டையைப் பிடிக்க, அவன், உடற்பயிற்சியால்  இரும்பான தன் மேனிக் கொண்டு, அதுவும் கோபமாக விறைத்து வந்தவன், மென்பஞ்சு மேனியாளை இடித்ததில், அவள் மென்வதனம் ,ஏற்கனவே பரிட்சியமானதை நொடியில் மூளைக்கு உணர்த்த, உணர்வால் தன் மதிமுகத்தவளை உணர்ந்து, உள்ளே உருகியவன் அவள் விழுந்து விடாமல் சட்டென வளைந்து அவளின்  இடையில் கை கொடுத்துத் தாங்கினான். 


அவள் பயந்தபடியே கண்ணை மூடியிருந்தவள், விழவில்லை என்ற தைரியத்தில் மெதுவாகக் கண்ணைத் திறக்க, அவளைக் கண்டதிலேயே சிலையாகிப் போயிருந்த அபிராம், அவளின் ஒவ்வொரு அசைவையும் மனதில் படமெடுத்துக் கொண்டான். யாருக்காக அவன் இரவெல்லாம் கார் ஓட்டி பறந்து வந்தானோ, அந்த மதிமுகத்தவளின் தரிசனம் கிடைத்து விட்டது. அதில் அவன் முகத்தில் அத்தனை நேரமிருந்த ஏமாற்றம், வருத்தம், கோபம் எல்லாம் நொடியில் காணாமல் போனது. கனிந்த முகமும் காதலால் கசிந்துருக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். 


" ஆதிரா, என்னாச்சு" என்றபடி சங்கீதா ஓடி வர, அதில் மீண்டவன், மாமன் கூறிய வார்த்தைகள் நினைவில் வர , சட்டென ஒரு நிமிட கண் மூடலில் அத்தனை காதலையும் உள்ளடக்கி , அறிமுகமில்லாதவள் போல் ,அவளை நேராக நிறுத்தி, " ஆர் யூ ஓகே" என சம்பிரதாயமான வார்த்தையைக் கேட்டான். 


" யெஸ், ஐ யம் ஓகே" என்றவள், " சாரி நீங்க" எனப் பெங்களூரில் காப்பாற்றியவன் தானே எனச் சந்தேகமாகக் கேள்வியை எழுப்ப, அதைக் கண்டு கொள்ளாதவனாக, "சாரி, நான் தான் பார்க்கமா வேகமா வந்துட்டேன். " என்றவன்,கீழே சிதறி  கிடந்த காகிதங்களையும்  அவளையும்,  சங்கீதாவையம் பார்க்கவும்,


 " நீங்க கிளம்புங்க அபி சார், நான் எடுத்துக்குறேன்" என்ற சங்கீதாவுக்கு , ஒரு தலையசைப் போடும், ஆதிராவிடம் அதையும் சொல்லாமல் கடந்து போனான் அபிராம்.


ஆதிராவுக்கு, அவனா இவன் என்ற குழப்பம், அவன் தான் எனில் ஏன் என்னைத் தெரியாதது போல் கடந்தான் , ஒருவேளை தன்னை இங்கு எதிர்பார்த்திருக்க மாட்டான், என் முகமும் கூட மறந்து போயிருக்கும் என தனக்குத் தானே எண்ணிக் கொண்டவள் சங்கீதாவை  இவன் யார் என்பது போல் பார்க்க, அவள் அபிராம் என்ற பெயரோடு, அவன் குடும்ப வரலாற்றையும் சொல்லி முடித்தாள். 


இரண்டு நாட்களாக அபிராம் முறுக்கிக் கொண்டு திரிகிறான். சரியான நேரத்துக்கு, சாப்பாடு, தூக்கமின்றி, ராஜா மாமா சொன்ன, " வேலையைப் பார்" என்ற ஒரு சொல்லுக்காக ஓடுகிறான்.  ' இவர் எப்படி என்னை அப்படிச் சொல்லப் போச்சு, நான் என்ன பொண்ணுங்க பின்னாடி திரியிறவனா, இவரு தான், வாழ்க்கைத் துணைனா இப்படி இருக்கனும், அப்படி இருக்கனும்னு ஏத்தி விட்டார். அதே மாதிரி ஒரு பொண்ணைப் பார்க்கவும் ஓடிவந்தேன். இது ஒரு தப்பா" என யோசித்தவன் வேலையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். இதுவும், அவர் பாடம் தான்.


இரண்டு நாட்களாக மகன் சரியாகச் சாப்பிடக் கூட இல்லை, என்ன இவ்வளவு வேலை வாங்குகிறீர்கள் எனக் கஸ்தூரி, கைலாஷ்க்கு போன் அடித்து விட்டார். " விடுமா, இந்த வயசில் வேலைப் பார்க்காமல் எப்ப பார்க்கப் போறான்" என முடித்து விட்டார். ஆனாலும் அன்னை மனம் பொறுக்காமல் குன்னூர் வரை சிபாரிசு பிடிக்க, சௌந்தரி மகனிடம் பேசினார். அதற்க்கு ஒரு பலன் இருந்தது.


அபிராமின் ஒரு  மில் ஆர்டர், குறிப்பிட்ட வகை எம்பாஸ்டு ரகம் துணி தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தோடான தானியங்கி  தறிகள் கே. ஆர் மில்லில் தான் இருந்தது. இங்கு தன் மில்லில் ஓட்டிக் கொள்ள கேஆர் ஸ்பெஷல் பர்மிசன் தந்திருந்த நிலையில், அதுவும் அதே வளாகத்தில் தான்  ஓடிக் கொண்டிருக்கிறது. அதை மேற்பார்வையிடும் வேலையை அபி அங்கு தான் செய்ய வேண்டும். அதற்காக மாமாவையும் பார்க்காமல், ஆனால் உங்களால் தான் இரவு, பகல் பாராமல் வேலை செய்கிறேன் பாருங்கள் எனும் வீம்போடு அவன் வேலையில் பலியாய் கிடந்தான். 


கஸ்தூரி போன் அடிக்கவுமே யோசித்தவர், அம்மாவும் சிபாரிசு செய்யவும், இரண்டு நாட்களில் ஆதிராவை கவனித்ததில் அவள் மேல் நம்பிக்கை கொண்டு, அபி இருந்த இடத்தை, அந்த ப்ராஜெக்டை பார்த்து வரும்படி  சொல்லி அனுப்பி விட்டார். ஆதிரா ஒவ்வொரு இடமாகச் சுற்றி வந்தவள், இந்த வகை மிஷின்கள், அதன் தயாரிப்புகளைப் பற்றி, சென்ற பருவத்தில் லேட்டஸ்டாக படித்திருக்க, அவளுக்கும் அதில் ஆர்வம் இருக்க, கைலாஷ் அனுப்பவும் ஒத்துக் கொண்டு வந்தாள். 


அங்கிருந்த சூப்பரவைசர்களிடம் அதனைப் பற்றி விசாரிக்க, அவர்கள் தொழில் ரகசியத்தைச் சொல்வதா, வேண்டாமா என்பது போல் பார்க்க, சங்கீதா சூப்பரவைசர் காதில், " பெங்களூர்லருந்து அப்பா கூட்டிட்டு வந்திருக்காருங்கண்ணா, எனக்கென்னமோ, ஒரு பக்கம் சாயலைப் பாருங்களேன், அவர் மகளோன்னு தோனுதுங்க. எல்லாத்தையும் கத்துக்குடுக்க வேற சொல்றாருங்க " என ரகசியம் பேச, அதன் பிறகு ஆதிராவை குறுகுறுவெனப் பார்த்து, அவரும் ஆமெனத் தலையாட்டினார். 


" அப்ப, அபிசாருக்கு பொண்ணு ரெடி" எனத் தொழிலாளர்களே இவர்களை ஜோடி சேர்த்தனர். இதே விசயம் தான் மூன்று நாட்களாக பேக்டரி முழுவதும் முக்கியமானவர்களுக்கு மட்டும் தெரியாமல் வதந்தியாக ஓடிக் கொண்டிருக்கிறது. 


ஆனால், அபியும், ஆதிராவும் அறிமுகமில்லாதவர்கள் போல் நடந்து கொள்ள, "நாம சேர்த்து வைப்போம்" எனக் களத்தில் இறங்கியவர்கள், " மேடம், நீங்க கேக்குற விவரமெல்லாம், அபி சாருக்குத் தான் தெரியுமுங்க. நீங்க அவிககிட்டையே கேட்டுக்குங்க" என சூப்பரவைசர், வினையமாகச் சொல்லிவிட  ஆதிரா ஓர் தலையசைப் போடு அபிராமிடம் வந்து நின்றாள். 


" ஹலோ மிஸ்டர். ராம், ஐயம் ஆதிரா.பிகே , ப்ரம்" என தன் கல்லூரியையே தனது அறிமுகமாகச் சொன்னவள், " இங்க ட்ரைனியா வந்திருக்கேன். பாபாசாப் , பீல்டு சூஸ் பண்ணச் சொன்னாங்க. கேன் யூ ப்ளீஸ் கைட்மீ" எனக் கொங்குத் தமிழ் பேசுபவனிடம், கொங்கணி உச்சரிப்போடான, கொஞ்சு தமிழில் அவள் கேட்கவும்,  அபிராம்க்கு உள்ளே பட்டாம் பூச்சி பறக்க, ஆனால் மாமன் விரித்து வைத்திருந்த வலையில் பறக்க இயலாமல் சிக்கியிருந்தான்.


"மின்னல் ஒருகோடி சேர்த்து


மின்னும் வெள்ளித் தகடாய்


என் மதி நிறைக்க வந்தவள்


நின் மதிமுகம் கண்ட நாள் முதலாய்


ஆர்ப்பரிக்கும் ஆழி பேரலையாய்


என் மனம் அதிருதடி -ஆதிரா "

                     

அதுவும் அவளது ராம் என்ற அழைப்பே அவனுக்கு ஸ்பெசலாகத் தோன்றியது. நிமிடத்தில் உள்ளே உருகிய காதல் ரசம் கசிந்த உள்ளத்தை அடக்கியவன், வெளியே, " ஹாய், ஐ ஹேவ் நோ, அப்ஜக்சன். ஆனால் நீங்க சேர்மன் சார்ட்ட பர்மிஷன் வாங்கிக்குங்க" என பிரயத்தனப்பட்டு சாதாரணமாகச் சொன்னான். 


" ஓ, தாங்க்யு வெரி மச், நீங்க சரின்னு சொல்லிட்டிங்க, அதுவே போதும். பாபா' ட்ட ஈசியா பர்மிஷன் வாங்கிடுவேன்" என அவள் அகன்ற கண்களை மேலும் அகற்றி, ஆர்வம் தொனிக்க நன்றி சொன்னவள், " ஏக் மினிட், பாபா'ட்ட கேட்டு வந்திடுறேன்"  எனக் கண்களால் நயந்து அவள் அனுமதி கேட்க, அவனுள் மேலும் மகிழ்ச்சி பிரவாகம். 


'மாம்ஸ், என்னை இவள் பின்னாடி அலையாதன்னு சொன்னீங்கல்ல, இப்ப என்னச் செய்வீங்க பார்ப்போம், ஆனால் ப்ளீஸ் ஆப்பு வச்சிறாதீங்க " என கேஆரை எண்ணி உள்ளே கலவரமாகவும், வெளிப் பார்வைக்கு மெஷின் மேல் பார்வை பதித்தவாறு அசட்டையாகவும்  நின்றான் . 


ஆதிரா, கைலாஷின் பர்சனல் நம்பருக்குப் பேசி விட்டு, " ஓகே பாபாசாப், மஸ்து ஹை னா, படியா மஹ்து. ஹாங் தேதி ஹூம்" ,என முகத்தில் மகிழ்ச்சி பொங்க, அலைப் பேசியை அவனிடம் கொண்டு வந்து நீட்டினாள். அவன் கேள்வியோடு நோக்கவும், " பாபாசாப்" என்றாள், அப்பாவைத் தான் இப்படி அழைக்கிறாள் என்பதைப் புரிந்துக் கொண்டவன்,  சம்பிரதாயமாக , " யெஸ் ஸார்" என்றான். 


அடுத்த முனையில், "மாப்பிள்ளைங்க, ஓவாரா நடிக்காதீங்க. இரண்டு நாளா நீ வீட்டில் காட்டுற கூத்தெல்லாம் எனக்கு லைவா அப்டேட் ஆகிட்டுத் தான் இருக்கு. என்ன என் தங்கச்சிக்கிட்ட முறைக்கிறியாமாம். தொலைச்சு போடுவேன். கொஞ்சம் அடங்கு" என்றவர், " ஆதிராவை அனுப்பியிருக்கேன். பார்த்து தொழிலைக் கத்துக் கொடு" என்றார், அவனுக்கும் முகத்தில் புன்னகை அரும்ப, " இப்ப எப்படிங்க மாமா, மருமகன் மேல நம்பிக்கை வந்திருச்சுங்களா" என அவன் குசும்பாக வினவவும், 


" நம்பிக்கை மருமகன் மேலே இல்லை கண்ணு, மகள் மேல வந்திடுச்சாக்கும். அது வந்து பாருங்குது. " என ஆதிராவை புகழ்ந்து விட்டு போனை வைத்தார் கைலாஷ்.


அது முதல் ஒரு வாரமாக இருவரிடமும் ஒரு நல்ல நட்பு உருவாகியிருந்தது. அன்று அவளைக் காப்பாற்றியது, தான் தான் என அபியும் சொல்லவில்லை, ஆதிராவும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. பெரும் நகரங்களில் படித்தவளான ஆதிராவிற்கு அந்த மாணவர்கள், தொட்டுப் பேசுவதும், லேசான அணைப்பு, சிலர் வக்கிரமாக அணைப்பது போன்ற பல்வேறு வகைப்பட்டவர்களைக் கையாண்டு எச்சரிக்கையோடே இருக்க வேண்டிய சூழல் இல்லாமல், அபியின்  இயல்பான மரியாதையான பேச்சும், கண்ணியமான பார்வை, நடவடிக்கையுமே அவளை, அவன் பால் ஈர்த்திருந்தது. 


சில நாட்களில் ஆதிராவின் குணம் பற்றியும் ஓரளவு புரிந்திருந்தவன், இவளுக்குப் பின் உள்ள மர்மத்தையறிய , அங்கு இங்கு என அவள் கல்லூரியில் ஓர் ஆளைப் பிடித்து,அவள் பின்புலத்தை  விசாரிக்கச் சொன்னான். ஆதிராவைத் தேடும் மராட்டியர்களைப் பிடித்து விசாரிக்கவும் ஆளை ஏற்பாடு செய்திருந்தான். ஆதிராவைப் பற்றி நேர்மறையான கருத்துகள் வரவேண்டும் என எதிர் பார்த்துக் காத்திருந்தான். மாமாவை ஆதாரத்தோடு மட்டுமே எதிர் கொள்ள இயலும் என்பது அவனது கணக்கு. 


பெங்களூரு சென்று வந்ததிலிருந்து முதல் இரண்டு நாட்கள், இருந்த மகனின் போக்குக்கும், அடுத்து வந்த நாட்களில் அவன் நடந்து கொள்ளும் விதம் என அத்தனையையும் குறிப்பெடுத்த விஜய ரங்கன், சத்தியனிடம்  கேட்டு விசய மறிந்து சிரித்துக் கொண்டார். 


'மாமனும், மருமகனும் துப்பறிஞ்சு வந்து சேருங்க. நானும் காத்திருக்கேன்' என மனதில் நினைத்துக் கொண்டவர், கதவை அடைத்து விட்டு போனில்  பேசினார். 


" தங்கச்சிமா, நீங்க நினைக்கிற மாதிரி , அவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கிறது கஷ்டம். சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டுங்கம்மா. உண்மை தெரிஞ்ச பிறகு உன் புருஷன், என்ன ஆட்டம் ஆடப் போறானோ , எனக்குக் கதி கலங்குது. சமீபமா இரண்டு வருசமா தான் உன்னைப் பார்த்தேன்னு சொன்னாலும் நம்ப மாட்டான். " எனப் புலம்பிக் கொண்டிருந்தவர், அந்தப் பக்கம் சொன்ன மறுமொழிக்குப் பின் தயங்கியபடியே, "நான் ஒரு யோசனை சொல்றேன். என் மகன் அபி இருக்கான், அவனுக்கு உங்க  மகளைக் கல்யாணம் செஞ்சு வச்சிருவோம். உங்கப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வா இருக்குமில்ல" என்றவர். 


" இது தியாகமெல்லாம் இல்லைமா,என் சுய நலம், பிராயச்சித்தம் எல்லாமும் தான். விதியும் அவுங்களை சந்திக்க வச்சிருக்கே , அபிக்கும் உன் மகள் மேல நோக்கமிருக்கு , அவன் காட்பாதர் மாமா கேஆரை எதிர்த்துக்கிட்டு நிற்கிறான். இவ்வளவு பேர் இருக்கோம். இருபத்திரண்டு வருஷம் முன்னாடி இருந்த நிலைமை இப்போ இல்லை. ராஜனே எல்லாத்தையும் சமாளிச்சிடுவான்" என நம்பிக்கை தந்தவர் மேலும் சில வார்த்தைகள் பேச, யாரோ அலைக்கும் சத்தம் கேட்டு  " சரி, நீங்கப் போங்க, உங்க அத்தையம்மா கூப்பிடுறாங்க" எனச் சிரித்தபடி போனை வைத்தார். இங்கும்,  கதவைத் தட்டும் ஓசையில் அவர் திறக்கவும் , " ஏனுங்க, அதென்ன ரூம்பை அடைச்சிக்கிட்டு யார்க் கிட்ட ரகசியமா போன் பேசுறீங்க. " எனக் காபியோடு வந்தார் கஸ்தூரி. 


" ஏனுங்க அம்மணி, ஊன்றப் புருஷன் மேல நம்பிக்கை இல்லையாக்கும்" என்றபடி விஜயன் காபியை எடுத்துக் கொள்ளவும், 


" சின்ன வயசில அபி பிறந்த வீட்டுலையே , என்னைத் தனியா விட்டுப் போட்டு, அண்ணனோட வேலை பழகுறோம்னு வடக்க போனீங்க. அப்பையே சந்தேகப்படலை, இப்பத்  தான் சந்தேகப் படப் போறானாக்கும். இந்த வயசானகாலத்தில வயசுக்கு வந்த புள்ளைகளை வச்சுகிட்டு, அப்படி என்ன பெரிசா செஞ்சு போடுவீங்க" எனக் கணவன் மேலுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில் கேட்டார் கஸ்தூரி . ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டவர், "அப்ப, என்னை கிழவன்கிறியா,  சோதிச்சு பாத்திருவோமா " எனக் கஸ்தூரியின் தோள் மீது, விஜயன்  இரண்டு கையையும் போடவும், ஒரு கையால் அவர் வாயை அடித்தவர் " ஐயோ, மாமா பேசாத கிடங்க, பையன் வர்ற நேரமாச்சு, உங்க மகள் ஹால்ல தான் உட்கோர்ந்து இருக்கிறா" என மெல்லப் பேசி அவர் கையை விலக்கி விட, 


" அப்ப இது தான் பிரச்சனை, குன்னூர் வரைக்கும் போயிட்டு வருவமா" என விஜயன் கண் சிமிட்டவும். 


" அது என்னாத்துக்கு, பெரியவிகளுக்கு பணிவிடை பண்றதுக்கா.நம்ம போனாலும் அவிக, பவானி, பவானின்னு அந்த மேடத்தைத் தான் கூப்பிடுவாங்க " என அவர் வசந்த விலாசவைத்தவர்களைக் குறிப்பிட்டுச் சொன்னார் கஸ்தூரி. 


" பெரியவிகளும் வேணாம், சின்னவிகளும் வேணாம்னா, பெங்களூர் போவோம்" என விஜயன் விடாப்பிடியாக நிற்க, 


" எதுக்கு, உங்க சினேகிதர் மகளைச் சம்பந்தம் பேசவா, பிச்சுப் போடுவேன் பிச்சு . நல்லாப் பொண்ணு  பார்த்திங்க. " என வகையாக கஸ்தூரி கணவனைத் திட்டிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டுப்  பெற்றவர்கள் படுக்கையறையை எட்டிப் பார்த்த இளைய மகள் ரஞ்சனி , " அம்மா, அந்தப் பொண்ணு ஒண்ணும் கேவலமா எல்லாம் ட்ரெஸ் பண்ணலை. பெங்களூர்ல, அது மாதிரி பார்ட்டிஸ்க்கு அப்படித் தான் வருவாங்க. முட்டி வரைக்கும் போட்டு நல்லா தான் இருந்தது" எனச் சப்பைக் கட்டுக் கட்டி வந்தாள். இவள்  கல்லூரியில் பேசன் டெக்னாலஜி இளங்கலை இரண்டாமாண்டு படிக்கும் மாணவி. 


மகளைத் திட்டுவதற்கு இந்தக் கூற்று பத்தாதாக் கணவனை விடுத்து , மகளைப் பற்றிக் கொண்டார் கஸ்தூரி. உல்லாசமாகச் சீட்டியடித்தபடி அபிராம் வீட்டுக்கு வரும் வரை வளர்ந்தது அந்த மண்டகப்படி. 


" இந்த உன் மகன், ரொமாண்டிக் ஹீரோவட்டமா , ஒரு வாரமா வானத்துலையே மிதக்கிறார். அவரையெல்லாம் கவனிக்க மாட்டீங்க , எதார்த்தமா, ஒரு வார்த்தை சொல்லிப் போட்டேன்னு, என்னை இப்படி வதைக்கிறியே , இது உனக்கே நல்லா இருக்கா கஸ்தூரி" என ரஞ்சனி , அபிராமை மாட்டி விட, 


" ஏய் ரஞ்சி, நீ தப்பிக்க, என்னைக் கோர்த்துவிடாதடி " என அபிராமும் வரப் பேச்சு களைக்கட்டியது. 


" எம்பட பையன்  சந்தோஷமா இருக்கிறது, உன் கண்ணுக்கு பத்தலையாக்கும். நீ சொன்னாலும், சொல்லலைனாலும் அவன் ஹீரோ தான்" என கஸ்தூரி மகனுக்கு கொடிப் பிடிக்க, பார்த்துக்கிட்டேயில்லை, என காலரைத் தூக்கி விட்டு, கர்வமாகப் பார்தான் அபி. 


" ஏங்கண்ணு, உங்க அம்மா , அண்ணனுக்கு வைக்கிற ஐஸ் வைக்கிறதை பார்த்தா, போட்டு வாங்கிடுவாளாட்டத்துக்கு " என விஜயன் மகளகடம் ரகசியம் பேச. 

" க்க்கூம், எனக்கும் அப்படி தானுங்கப்பா தோனுது. இருங்க வேடிக்கை மட்டும் பார்க்கலாம். " என ரஞ்சனியும் அம்மா மகன் பேச்சுக்கு செவி கொடுக்க, கஸ்தூரி , சொன்னது போலவே, 


" அபிக்கண்ணு, அண்ணன் பெங்களூர்லிருந்து, ஆரா ஒரு பொண்ணை கூட்டியாந்திருக்காராம். ஹாஸ்டல்லையும் கூட தங்க வைக்காம, தான் வூட்டுலையே வச்சிருக்காராம், ஆத்தா சொன்னாங்க. நிஜமா " என இழுக்கவும். " ஆமாம் மா" என ஆதிரா புராணத்தை ஆரம்பித்து  விட்டான் அபிராம். 


" அட, விட்டா , மருமகளாக்கி வூட்டுக்கே  கூட்டிட்டு வந்திருவியாட்டத்துக்கு " என கஸ்தூரி நூல் விடவும், 

" நீங்க நேர்ல வந்து பாருங்க. இது தான் என் மருமகன்னு, கையோட  கூட்டிட்டு வந்திடுவீங்க. என்ன ஒன்னு, உங்க அண்ணன் தான் நந்தியாட்டமா குறுக்க நிப்பாரு" என சலித்துக் கொண்டவன்,  விஜய ரங்கனின் வெடிச்  சிரிப்பிலும், கஸ்தூரியின் முறைப்பிலும், " இரு மாமாட்ட போட்டுக் குடுக்குறேன்" என்ற தங்கையின் மிரட்டலிலுமாக ,  ஆதிராவுக்காக, கைலாஷ் ராஜனையே குறை சொல்லியிருக்கிறோம் என்பதை உணர்ந்தவனாக,  அசடு வழிந்து விட்டு வேலை  இருப்பதாக, அவசரமாக ஓடிவிட்டான். 


இவர்கள் மகிழ்ச்சி நிலைக்குமா, அபிராம் காதல் கை கூடுமா. பொறுத்திருந்து பார்ப்போம். 

நிலவு வளரும்.