யார் இந்த நிலவு -41
கேஆர் மில்ஸின் சேர்மன் கைலாஷ் ராஜன், பீபீ மில்ஸின் உரிமையாளர் பைரவி பாய் கைலாஷ் ராஜ் போஸ்லேவின், இருபத்திரண்டாம் ஆண்டுத் திருமணக் கொண்டாட்டம்.என்ற அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வந்ததை , கைலாஷின் உதவியாளர் சம்பத், கைலாஷ், பைரவி,இருவருக்கும் காட்டிக் கொண்டிருந்தார்.
முன்னதாகக் கைலாஷ், ஆதிரா , அபிராம் இருவரிடமும், நேற்றைய நிகழ்வில், கோவிலுக்குச் சென்றதைத் தவறு என்று சொல்லாமல், பெரியவர்களுக்கு மறைத்து,போதிய பாதுகாப்பு இல்லாமல் சென்றது, அதன் விளைவான, கடத்தல், சரியான நேரத்தில் ஆதிரா மீட்கப் பட வில்லையெனில்,அதன் பின் விளைவு, ஆகியவற்றை உத்தேசித்து, அவர்கள் இருவரும் அதனை உணர வேண்டும் என ஒருவரை ஒருவர், மூன்று நாட்களுக்குத் தனியாகச் சந்தித்துப் பேசிக் கூடாது எனக் கட்டளையிட்டார்.
அதில் மற்ற நால்வருமே அதிர்ந்து கைலாசை பார்க்க, “என்ர முடிவு இது தான், அப்பன்,மாமன் ன்னு என்னை மதிக்கிறதா இருந்தா,முடிவுக்குக் கட்டுப்படுங்க, இல்லையினா உங்க இஷ்டம்.” என முடித்து விட, ஆதிரா , “உங்களை நான் ரொம்ப மதிக்கிறேன் பாபா, நீங்களா பெர்மிசன் தர்ற வரைக்கும் நான் அவரைத் தனியா சந்திக்க முயற்சி செய்ய மாட்டேன்” என்றவள், வீட்டுக்குச் செல்வதாகப் பொதுவாகச் சொல்லி விட்டு அங்கிருந்து சட்டென வெளியேற, சத்தியனை அழைத்த கைலாஷ், மகளை வீட்டில் கொண்டு போய் இறக்கி விடச் சொன்னார்.
அபிராம், “மாமா, இதெல்லாம் ஞாயமே இல்லைங்க, அவன் கடத்திட்டு போன பிறகு, நான் இன்னும் ஆராக்கிட்ட பேசவே இல்லைங்க” என அவன் ஆட்சேபிக்க, “உன்ர இஷ்டம்” என்றவர், “சம்பத், ஒரு பத்து நிமிஷம் கழிச்சு, இன்விடேஷன் கார்டை கொண்டு வாங்க” எனப் போனில் சொல்ல, விஜயன் மகனிடம், “அது தான் உன்ர மாமன் சொல்லிட்டானுல்ல கிளம்பு” எனவும்,
“மாமா,ஒரு தரம் பேசிக்கிறேனுங்க, அப்புறம் உங்க தண்டனையை ஏத்துக்குறேனுங்க “ என அபிராம் இறைஞ்சியும் ,கைலாஷ் கண்டு கொள்ளாமல் இருக்க, பைரவி, “பேட்டாஜீ , நீங்க போய், ராஜூம்மாட்ட பேசுங்க , உங்க மாமா ஒண்ணும் சொல்லமாட்டார் “ என அனுப்பி விட,”தாங்க்ஸ் அத்தை” என்றவன், ஆதிரா கிளம்புவதற்குள் அவளைப் பிடிக்கச் சென்றான்.
அபிராம் சத்தியனுக்குப் போன் அடித்து விட்டதால், அவள் ஏறிய பின்னும் வண்டியை ஸ்டார்ட் செய்து நிறுத்தி வைத்திருந்தான். அபிராம் வருவதைப் பார்த்தவள், " பாபா, ராமோட மூணு நாள் பார்க்கக் கூடாது, பேசக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க சத்யா அண்ணா . நீங்களே சொல்லிடுங்க" எனத் தனது பக்க கார் கண்ணாடிகளை அவள் ஏற்றி விட, அருகில் வந்தவனுக்கு இவள் சொன்னது நன்றாகவே கேட்டது.
" சத்தியா, அவளுக்கு விருப்பமில்லைனா, நானும் பேச மாட்டேன். ஒண்ணு மட்டும் கேட்டு சொல்லு, இன்னைக்கு அவிக அப்பா பேசக்கூடாதுன்னா, பேசாத இருக்கவ, நாளைக்கு என்னைக் கல்யாணம் கட்டக் கூடாதுன்னு சொன்னாக்க, அதையும் கேட்பாலாமாம். " எனத் தீ கங்கை வீசியதைப் போல், ஒரு கேள்வியைக் கேட்க, ஆதிரா துடித்துப் போனாள்.
“அபிசார், சும்மாவே அம்மணி நொந்து கிடக்குறாங்கங்க , நீங்களும் ஏனுங்க அவிகளை நோகடிக்கிறீங்க. அப்பா சொன்னதுக்கு, மகள் என்னங்க செய்வாங்க” எனச் சமாதானம் பேச, ஆதிரா, அவனுக்குக் கண்ணீரைக் காட்டக் கூடாது என வைராக்கியமாக எங்கோ வெறித்தபடி அமர்ந்திருக்க, அதைப் பொறுக்க மாட்டாதவனாக , தானே சத்தியனைக் கண்ணசைத்து வண்டியை எடுக்கச் சொன்னான், ஆதிரா அதோடு தன் அறைக்குள் சென்று முடங்க, அபிராம் தனது காரை சீறிக் கொண்டு கிளம்பி, கே ஆர் மில்லை விட்டு வெளியேறினான்.
அபிராமும், கிளம்பிச் செல்லவும், “நீ எதுக்குக் குறுக்காலா பேசுற” எனக் கைலாஷ் மனைவியை முறைக்க, " பசங்க இரண்டுக்கும் முகமே வாடிப் போச்சு, ஏன் ராஜ் இப்படிச் சொன்னீங்க" என்றார் பைரவி. விஜயனுக்கும் அதே கேள்வி தான், ஆனால் நண்பன் ஏதாவது இடக்காகப் பதில் சொல்வார் என வாயை மூடிக் கொண்டு இருந்தார்.
" பிரிவுங்கிறது, எத்தனை கொடுமையான விசயம்னு தெரிஞ்சுக்கட்டும் அம்மணி. நேத்திக்கு, எதாவது விபரீதமா நடந்திருந்தா, அதைத் தாங்கிற சக்தி அவிகள்ட கிடையாது. அவிக என்ன கைலாஷும், பாருவுமா. முந்தியுமே, இதைச் சொல்லித் தான், நான் அபியை எச்சரிச்சேன். அது தெரிஞ்சு தான் ரஜ்ஜும்மா வீட்டை விட்டு போறேன்னு வந்து நின்னா" என வேதனையோடு சொன்னவர், நண்பரை நோக்கி,
" விஜயா, உனக்கு இருக்கிறது கருவப்பிள்ளை கொத்தாட்டமா ஒத்த பையன். என்ர மகளைச் சுத்தி இத்தனை ஆபத்து இருக்குது. நேத்திக்கு ,ஒரு சந்தர்ப்பத்தில் உன்ர மகன் கைல, நான் துப்பாக்கியைக் கொடுத்துப் போட்டேன்.ஒரு மாமன் தொழில் சொல்லிக் கொடுக்கலாம், தப்புச் செய்யச் சொல்லிக் கொடுக்கக் கூடாதுல்ல, மாமனே குடுக்குறாரு, இனி நாம செஞ்சா தப்பில்லைன்னு நினைச்சு போட்டானா, அதுவே எனக்கு மனசு கிடந்தது அடிச்சுக்கிது. நீ மறுக்கா யோசிச்சிக்க, சின்ன வயசு, அபி அப்படித் தான் இருப்பான். ஆனால் நீங்க இரண்டு பேருமா உட்கார்ந்து பேசினா, அவனை வழிக்குக் கொண்டு வந்திடலாம்" என எச்சரிக்கை செய்ய, பைரவியே இவர் என்ன சொல்ல வருகிறார் என யோசித்தார்.
" ராஜா, நீ என்ன எதிர்பார்க்கிற, அபிக்கு, ஆதிரா வேண்டாம்னு முடிவெடுக்கச் சொல்றியா. அடப் போடா கிறுக்கா. உன்னளவு அந்தஸ்து இல்லைனாலும், என்ர மருமகளை, நான் நல்லாவே பார்த்துக்குவேன். சொத்துக்காகத் தானடா நம்மூட்டு பொண்ணு பின்னாடி அலையிறாங்க, சொத்தே வேண்டாம். என்ர மருமகளை மட்டும் அனுப்பி வை. என்ர குடும்பமே சேர்ந்து ராணியாட்டமா பார்த்துக்குவோம்" என அன்று கைலாஷ் பாருவிடம் சொன்ன அதே வரிகளை, இன்று அபி சார்பாக விஜயன் சொல்ல, பைரவி, கணவரை ஒரு பார்வை பார்த்து விட்டு ,
“எங்க மகள் தான் உங்க வீட்டு மருமகள் பாய்ஸாப் , இதை யாரலையும் மாத்த முடியாது. எனக்கு வயசு காலத்தில் கிடைக்காத பாக்கியம் அவளுக்காவது கிடைக்கட்டும். அதுக்கு என்ன செய்யனுமோ. நாங்க செய்வோம்" என வாக்குத் தந்தார் .
கைலாஷ், " என்ர மகளுக்கு, உன்ர மகனே மாப்பிள்ளையா வந்தானாக்கும் , என்னை விடச் சந்தோஷ படுறவன் யாருடா. ஒன்னு என்ர ரத்தம்னா, இன்னொன்னு என்ர வளர்ப்பு. அதையும் மீறி இந்த வார்த்தையைச் சொல்லனும்னா, எனக்கு எவ்வளவு வேதனை இருக்கும்” என வருத்தப் பட்டார்.
“எனக்கும் புரியாது ராஜா, உன்னை விட உன்ர மருமகன், ஆதிராவை தான் கட்டுவேன்னு பத்து பங்கு தீவிரமா இருக்கான், நீ வேண்டாம்னா, போஸ்லே செஞ்ச வேலையை அவன் செய்வான், அப்புறம் நீயாச்சு,, உன்ர மருமகனாச்சு “ என விஜன் பதிலளிக்கவும்,
“ஏது, நீயே பிளான் போட்டு தருவியாட்டத்துக்கு “ என்றவர்,” அப்பனும் மகனுமே , கொஞ்சம் பொறுங்க, அவிக வாழ்க்கையைப் பிரச்சினை இல்லாதா செட்டில் பண்ண வேண்டியது என்ர பொறுப்பு” என மேலும் சில விசயங்களைக் கலந்து ஆலோசித்து விட்டு, " உன்ர மகனைப் போய்ப் பாரு, மாமனாட்டமே எதாவது கிறுக்குத்தனம் பண்ணுவான்" என ராஜன், தன்னைப் போலவே அபி எனக் கிண்டல் செய்ய, " தெரிஞ்சா சரி தான்" என்று விட்டுச் சென்றார் விஜயன்.
பைரவி மஹந்தை பற்றிக் கேட்டார். கைலாஷ் புன்னகையே பதிலாகத் தர, " ராஜ் சொல்லுங்க." என வற்புறுத்தியவரை, " உங்க பொறந்த வூட்டு வாரிசுக்கு என்ன மரியாதை செய்யணுமோ, செஞ்சு தான் வச்சுருக்கேனுங்க அம்மணி, ரொம்ப உருகாதீங்க” என வினயமாகப் பேசியவரிடம், “ராஜ், புதுசா பிரச்சனையை இழுத்துக்க வேணாமேன்னு தான் கேக்குறேன், இப்ப தான பாயிஸாப் கிட்ட, பிரச்சினையை முடிச்சு, மகளைத் தரோம்னு வாக்கு கொடுத்திருக்கோம்” எனப் பைரவி வாதாடினார்.
“ வாக்கு நீ தான் அம்மணி கொடுத்த நானில்லை” என்ற கைலாசை , பாரு முறைக்க, “இந்த லுக் நல்லா இல்லை அம்மணி, நேத்து என்ர மகள் சொல்லிப் போட்டுப் போனாலே, அப்படி ரொமான்டிக்கா பார், வெட்டிங் கார்ட் செலக்ட் பண்ணனுமுல்ல “ என அவர் பேச்சை மாற்றவும்,
“போயா , கிழவா. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லல, நீயே செலக்ட் பண்ணிக்கோ” எனப் பாரு முகம் திருப்பவும், அதிர்ச்சியாய் பார்த்த ராஜன், “ஏனுங்க அம்மணி, ஒரு ராஜ வம்சத்து வாரிசு, ராஜகுமாரி பேசுற பேச்சா இது, நல்ல வேளை , சம்பத் கதவை தட்டிட்டு தான் வருவாப்ல, என்ர இமேஜ் டேமேஜ் பண்ற, எந்த ஆங்கில் ல, நான் கிழவனாட்டமா தெரியுறேன் சொல்லு “ என மனைவி அமர்ந்திருந்த சுழல் நாற்காலியைத் தன்னை நோக்கித் திருப்பிக் கொண்டு , அவர் பொங்கவும்.
பைரவி, புன்சிரிப்போடு, “ ஒரு வார்த்தை கிழவன்னு சொன்னதுக்கு, இவ்வளவு பொங்குறீங்கனா அது தான் அர்த்தம். மறுபடி ஷாதி நடக்கப் போகுது, பருவைச் சந்தோசமா வச்சுக்க முடியுமோ, இல்லயோன்னு உங்களுக்குச் சந்தேகம் “ எனக் கண்கள் நகைக்கச் சொன்ன மனைவியைப் பார்த்து ராஜன் டென்ஷனாகி விட்டார்.
“வேண்டாம் அம்மணி, சிங்கத்தைச் சீண்டாத, நீயே ஹார்ட் பேஷண்ட் , மீதி இருக்கிற காலத்திலையாவது பொண்டாட்டி கூட , ஜாலியா பேசியதாவது பொழுதை போக்கலாம்னு, என்ர மகனும், பேரனும் ஒரே கிளாஸ்ல படிக்கக் கூடாதேன்னு மனசை , கண்ட்ரோல வச்சு கிட்டு இருக்கேன் அம்மணி, சிங்கத்தைச் சீண்டாதே “ எனத் தீவிரமாகப் பதில் சொல்ல,
குலுங்கிச் சிரித்த பைரவி, “ அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்” என்றவர், அடுத்த வார்த்தைக்குச் சட்டெனச் சிரிப்பை நிறுத்தி,
“அதுக்குச் சான்ஸே இல்லை , பிள்ளைகள் பிறந்தது மட்டுமில்லை, என் கர்ப்பப்பை எடுத்ததும் எனக்கு நினைவே இல்லை. அப்பவே எடுத்திட்டாங்க ராஜ். அதுனால தான் ஆயி, இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்ற அவ்வளவு மெனக்கெட்டு இருந்திருக்காங்க “ என்றவரை, எழுந்து நின்று நெஞ்சோடு அனைத்துக் கொண்டார் கைலாஷ்.
“ பாரு, எத்தனை துன்பம் தான் அனுபவிச்சிருக்க” என்றவரின் விழிகள் கலங்கியிருக்க, “விடுங்க பாபா, அது தான் மில்கா, முல்கின்னு ஆயி பவானி கொடுத்திருக்காளே, அதுகளை நல்லபடியா காப்பாற்றினா போதும்” என்றவர்,
கணவரை விலக்கி நிறுத்தி, “இப்படி வந்து கட்டிக்க வேண்டியது, அப்புறம் குங்குமம் கறை ஓட்டிடுச்சுன்னு புலம்ப வேண்டியது “ எனப் பாரு நொடிகவும், “ஓ எஸ்” எனத் தன்னை ஆராய்ந்தவர், சேர்மன் கெத்தா இருக்கனுமில்லை அம்மணி” என்றவர், மற்றொரு புதுச் சட்டையை மாற்றி விட்டே அமர்ந்தார்.
“ மஹந்த் போஸ்லேயை மரியாதையா தான் சிறை வச்சிருக்கேன், உன்ர மகனும், ஆயியும் வரட்டும், அப்புறம் முடிவெடுத்துக்குவோம்" என்று விட்டு, சம்பத்தை உள் வரச்சொல்லி அனுமதி தர, அதற்குள் பைரவி, அவர் இருக்கையில் அவரை அமர்த்தி விட்டு, தான் எதிர்புறம் வந்தமர்ந்தார்.
உதவியாளர் சம்பத் காட்டிய அழைப்பிதழ்களில் இரண்டு தேர்ந்தெடுத்தவர், " இதில் யார் யாருக்குன்னு, லிஸ்ட் எடுத்து இன்னைக்கே அனுப்பிடுங்க. நேரா கொடுக்க வேண்டியவிகளுக்கு, நம்ம கம்பெனி ஸ்டாப்பை அனுப்பி விடுங்க. நான் போன்ல பேசிக்கிறேன்" என்றார்.
கைலாஷ், இந்த விழாவிற்கு, இந்தியாவின் மில் ஓனர்கள் , முக்கியப் புள்ளிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தங்கள் மில்ஸில் வேலை செய்யும் தொழிலாளர்கள், உறவினர்கள் என எல்லாருக்கும் அழைப்பு விடுத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஆனந்த் , முகுந்த் போஸ்லேகளுக்கும் , பவானி பாய்க்கும் கைலாஷ் , பைரவி இருவருமாகப் போனில் அழைத்து, பேசினர். நிர்வாகிகள் மூலமாக அழைப்பிதழை அனுப்பி வைத்தார்.
ஜெயந்துக்கு, சோலாப்பூர் மாளிகைக்கு அழைத்துக் கைலாஷ்- பாரு இருவருமாகப் பேச, பவானி, தங்கைக்கு வாழ்த்துக்களைச் சொல்லி, தன கணவர் ஒரு விபத்தின் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு இருப்பதால், வர இயலாது எனத் தெரிவித்தார்.
ஜெயந்த் கெய்க்வாட் போஸ்லே , ஆக்சிடெணட் ஆகி சில காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்க, வலி தாங்காமல் கத்திக் கொண்டிருந்தவருக்கு உடல் முழுவதும் , ஏதோ ஒரு ஆயிண்மெண்ட் தடவியதில் , அது உபத்திரவமாகி, உடை கூட உடுக்க இயலாமல் ஐசியூவில் , அரையாடையாகக் கிடந்தார்.
அதையறிந்த பைரவி 'அவன் செஞ்ச கொடுமைக்கு, இந்தத் தண்டனை சரிதான்.' என நினைத்தவர், கணவரின் மர்மப் புன்னகையில் இது அவரது கைங்கரியம் எனப் புரிந்து கொண்டு வினையமாகப் பார்த்து, " இது உங்க வேலை தான" என வினவ, " இல்லைமா, துல்ஜா பவானி கொடுத்த தண்டனை" என்றார். பைரவி, ஜெயந்த் செய்த கொடுமையை ராஜ் அறிவாரோ, எப்படி' எனக் குழம்பிப் போனார்.
ஆனந்த், முகுந்த் போஸ்லேக்களிடம், மஹந்த் இங்கு வந்ததாகவே காண்பிக்காமல் பேசி முடிக்க, அவர்களும் தங்கள் மகனைப் பற்றி விசாரித்தார்கள் இல்லை. தங்கை திரும்பி வந்ததில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர்கள், கட்டாயம் விழாவிற்கு வருவதாக ஒப்புக் கொண்டனர்.
நேற்றிலிருந்து மஹந்த்தின் போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. அவனும் , தன இஷ்டப்படி வேலை செய்பவன் ஆதலால் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை, இதுவரை பைரவி மகளை எதுவும் செய்யவில்லை,இல்லையெனில் அவர்கள் விழாவுக்கு அழைக்க மாட்டார்களே என நினைத்தனர்.
ரமாபாய் தடபுடலாகக் கிளம்பிக் கொண்டிருப்பதை அறிந்தவர்கள், தாங்களும் அழைக்கப் பட்ட விழாவுக்குச் சென்று, பீபீ மில்ஸ் விவகாரத்தில் ரமாபாயின் தலையீட்டை , பைரவி-கைலாஷ் உடன் பேசி முடிவுக்குக் கொண்டு வர நினைத்தனர்,
அதிகப் பட்சம்,இவர்களுடைய டிமாண்ட் ஜெயந்தாகத் தான் இருக்கும்,தற்போது அவர் இருக்கும் நிலையில் படுக்கையை விட்டு எழுவதே சிரமம், அதனால் அவரை ஓரம் கட்டி, சிறிய தங்கையோடு கரம் கோர்க்கலாம் என நினைத்தனர்.
ஏனெனில் ஜெயந்தின் மகள்கள் பெயரில் இருக்கும் பங்குகள், இவர்கள் வீட்டு வாரிசுக்குகளுக்கு என ஏற்பாடு செய்திருந்தனர். போஸ்லேக்களுக்கு, மகன் நிலை தெரிய வரும் போது , அவர்களுடைய எதிர்வினை எப்படி இருக்குமென்று தெரியாது, தற்போது வரை இவர்கள் உறவு பைரவியோடு சுமூகமாகவே இருந்தது.
கைலாஷ், பாரு இருவருமாக , அழைக்க வேண்டியவர்களுக்கு அழைத்துப் பேசிவிட்டு, மதிய உணவுக்கு வீட்டுக்கு வர, அங்கே பெரியவர்கள் இவர்களை வைத்து ஒரு பஞ்சாயம் கூட்டி, அபிராம், ஆதிராவுக்காக ஞாயம் கேட்டனர்.
காலையில் கைலாஷ், பெரியவர்களிடம் சுருக்கமாக ஆதிரா கடத்தப் பட்டு மீட்கப் பட்டத்தைச் சொல்லியிருந்தார். பைரவியோடு, ஆதிரா அலுவலகம் சென்றதையே சௌந்தரி, நாயகம் கேள்வி எழுப்ப, உங்க மகன் தான் வரச்சொன்னார் என அழைத்துச் சென்றிருந்தார் பைரவி.
பேத்தி மட்டும் திரும்ப வந்து , அறைக்குள் அடையவும், கௌரியை விட்டு அழைத்து வரச் சொன்னவர்கள் , இப்பொழுது தான், பேசி, பேசி கரைத்து, தங்களோடு அமர்த்தி அவள் கவனத்தைத் திசை திருப்பி இருந்தனர்.
ஆதிரா குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருக்க, " நான் என் முடிவைச் சொல்லிட்டேன். கேட்கிறதும், கேட்காததும் அவிக இஷ்டம்" என்றுவிட, பாலநாயகம் மகனை கடிந்தார்.
" ஏன் கண்ணு, வீட்டில விசேசத்தை வச்சுக்கிட்டு உன்ர மகள் இப்படி முகத்தைத் தூக்கி வச்சிட்டு இருந்தா, நல்லவா இருக்கும்" எனச் சௌந்தரி வக்காலத்து வாங்கவும்,
மகளை ஏறிட்டுப் பார்த்தவர், " என்ர மகளுக்குச் சந்தோஷமில்லையினா, எங்களுக்குக் கல்யாணமும் வேண்டாம். மீட்டிங் போட்டு, அனோன்ஸ்மெண்ட் மட்டும் செஞ்சுக்குறோம்" எனப் பிடிவாதம் பிடிக்க,
" ஆத்தா, மூணு நாள் தான பாபா சொல்லியிருக்காங்க, என் ஆயி,பாபா அனுபவிச்சதை பார்க்கையில், இது ஒண்ணுமே இல்லை. பாபா, நான் செஞ்ச தப்பை நான் ரியலைஸ் பண்ணத் தான் இதைச் சொல்லிருக்காங்க. பெத்தவங்க சொன்ன,பசங்க கேட்டுக்கணும், நான் முழு மனசோட ஒத்துக்கிறேன்." என்றவள், ஆயியையம்,கௌரியும் பார்த்து ,ஓர் நமட்டுச்சிரிப்பையும் உதிர்க்க அதற்கான அர்த்தம் ரமாபாய் வந்த பிறகு தான் புரிந்தது. பைரவி மட்டும், "உன் பாபா அதெல்லாம் ஒத்துக்க மாட்டார் " என்று மட்டும் சொல்லி வைத்தார்.
அன்று மாலையில் , விஜயன் வீட்டிலிருந்து அபிராமை தவிர, மற்ற எல்லாருமே அபியின் சார்பில் வந்து, ராஜனோடு மல்லு கட்டினர்.
“ஏனுங்க மாப்பிள்ளை ,என்ர பேரன் சினிமா ஹீரோ கணக்கா, சண்டையெல்லாம் போட்டு, உங்க மகளைக் காப்பாத்தியிருக்கான் , அவனைப் பாராட்டத்தை வுட்டுப் போட்டு, மூணு நாள் மகளோட பேசாதேன்னு தண்டிக்கிறது , எந்த விதத்தில ஞாயமுங்க”என ராமசாமியே கேட்கவும்,
“நான் , என்ற மகனை ஏதாவது சொன்ன, என்னைப் பேசிவிங்கல்ல , இவன் இப்படித்தான் எதையாவது செய்வான், நீயே கேளு” என்றார் பாலா.
“ஏனுங்க மாமா, உங்க பேரன், என்ர மகளை மலைக்குக் கூட்டிட்டு போகலையின்னா , கடத்தல் நடந்துருக்காதில்லீங்க “ என ராஜன் பதில் பேச, பேச்சு அப்படியே வளர்ந்தது.
ஆதிராவை , உட்கார வைத்து,மகளிரணி தனித் தர்பார் நடத்திக் கொண்டிருக்க, ரஞ்சனி, அண்ணன் , அண்ணிக்கு நடுவில் ,கைலாஷ் தண்டனைக்குப் பங்கம் வராமல் பேச வைக்க முயல,ஆதிரா ஒரேதாக மறுத்து விட்டாள்.
கஸ்தூரி, மருமகளிடம் நடந்ததைக் கேட்டவர், “ஏன் , என்ர வார்த்தை மேல நம்பிக்கை வச்சு தான் மலைக்குப் போனியா, இவ்வளவு ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சிருந்தா, நானே உன்ர மாமாவை கூட்டிட்டு போயி, உன்ர வேண்டுதலை நிறைவேத்தி இருப்பனில்ல கண்ணு ” என உருகினார்.
அன்று ஒருநாள் , ஆதரஷ் ஐம்பது கார்களோடு அதிரடியாய் வந்து , ஒற்றை ஆளாய் இறங்கியது போல், இன்று அதில் பாதி எண்ணிக்கை உள்ள கார்கள் , அதே போல் கேஆர் மில்லின் வாசலை முற்றுகையிட, காவலர்கள் அலறிக் கொண்டு கைலாஷுக்கு போன் அடித்தனர்.
பரபரப்பாக இரண்டு ஆட்கள் நேரில் சொல்ல, இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்து, மூச்சு வாங்கச் செய்தி சொல்ல வந்தனர்.
செனாய் வாசித்து, டோல் அடித்து, நடனமாடியபடி வாசலில் ஒரு கூட்டம் வந்து இறங்கி உள்ளதாகத் தகவல்கள் வந்த வண்ணம் இருக்க, “அது யாரு கண்ணு, இத்தனை அலும்பல வர்றது “ என எல்லோருமே ஓர் எதிர்பார்ப்போடு காத்திருக்க,
பைரவி போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதை மாமியாரிடம் அவர் சொல்ல, சௌந்தரி, “மாப்பிள்ளை வீடுகாரவிக வருவாங்க. பொண்ணு வீட்டுகாரவிக்க வரவேற்கோணும், இங்க எல்லாமே தலைகீழ் தான் “ என வீம்பு பேசியவர், வீட்டு வேலையாட்களை வேலை ஏவி, எதிர் சேவைக்குத் தயாரானார்.
வரும் போதே, சம்மந்தியம்மாளிடம் வம்பிழுத்துக் கொண்டே ஆர்ப்பாட்டமாய் உள்ளே நுழைந்தார் ராஜமாதா ரமாபாய் போஸ்லே.
கைலாஷ்-பாரு திருமணக் கொண்டாட்டம் ஆரம்பம்.