யார் இந்த நிலவு -50
விந்தையாய் பிறந்து ,தாய்மடி விடுத்து
வேறிடம் புகுந்து,அவர் தம் பிள்ளையாய் வளர்ந்து
பதின்ம வயதில் ராஜரீகம் பயின்று
தாய்வழி பகையை வேரறுத்து
தாயையும் தகப்பனும் சேர்த்து வைக்கப்
போராடும் இளங்குருத்து .
"அப்பாவென அவரை அணைத்துக் கொள்ள ஆசை தான்.
பாபாவெனப் பாய்ந்து தழுவி கொள்ள ஆசைதான்
ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்க்கும் எந்தை
என் ஒரு சொல் அழைப்பிற்காய் ஏங்கி நிற்கும் தந்தை!"
"ஓர் முறை என்ன ஓராயிரம் முறை பாபா என அழைக்கிறேன், ஹே ஆயி பவானி, நீண்ட காலம் கழித்துக் கண்ணில் காட்டிய என் பாபாவைப் பறித்துக் கொள்ளாதே ‘ என மனதின் வேண்டுதலோடு ,விபத்து நடந்த இடத்துக்குச் சென்ற ஆதர்ஷ், கார் இருந்த நிலையைப் பார்த்துக் கதறி விட்டான்.
அபிராம் ஓடி வந்து ஆதர்ஷை அணைத்துத் தேற்றியவனுக்கும் கலக்கம் தான், அவனுக்கு அப்பாவும், மாமாவும் இருவரும் இதில் வந்தனரே, என நொடியில் பயணித்த நினைவு, ஏதேதோ கற்பனையைக் கொண்டு வர, இல்லை எனத் தன்னையே உலுக்கிக் கொண்டவன், ப்ளாக் கேட்ஸை விவரம் கேட்க, அவர்கள் கண்டைனர் வேனை கை காட்டினர்.
வேகமாக அங்கே விரைய, கண்டைனர் ட்ரக்கில், பின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த விஜயனையும், அவர் பின்னே, நொண்டியபடியே இறங்கிய கைலாஷையும் பார்க்கவும் , உயிர்த்து வந்தவரைப் பார்ப்பது போல், ஆதர்ஷ் வேகமாக ஓடிச் சென்று, " பாபா" எனக் கைலாஷைக் கட்டிக் கொண்டான்.
மகனின் கதறலிலும், தழுவலையும் அதன் காணத்தையும் ஒரு நொடியில் அறிந்து கொண்ட கைலாஷ், அதே அணைப்பை அவனுக்கும் தந்து, உச்சி முகர்ந்து கண்களிலிருந்து கண்ணீர் வடிய நின்றார். அன்று மகள் பாபாவென அழைத்ததில் பரவசம் இருந்தது எனில் இன்று மகன், பாபாவென அழைத்ததில்,அதே பரவசம் உச்சம் தொட்டு ஓர் நிறைவு தந்தது.
ஆதர்ஷின் பாபா என்ற அழைப்பு, ஆனந்த யாழை மீட்டுவதையும் தாண்டி, அவரின் உயிர் வரை தொட்டது. அவன் அவரின் அம்சம், அவன் பிறந்ததை, வளர்ந்ததை அவர் அறியார், ஆனால் பார்த்த கணத்தில் , எங்களுக்கு ஓர் மகனிருந்தால் என்ற ஏக்கத்தை அவர் மனதில் விதைத்தவன். அதுவே நிஜமென அறிந்த போது மகிழ்ந்தாலும், அருகே நெருங்காமல் எட்ட நின்றவன். வளர்ப்பு முறையில் வித்தியாசம் இருந்த போதும், அவர் தந்த உயிர். அவரின் மனையாள் உயிரோடு இருக்கக் காரணமான உயிர்.
தாயின் வயிற்றில் பிள்ளைகள் இருக்கையில், அவரின் சிந்தையில் நிறைந்ததே, குழந்தையின் சிந்தையிலும் பதியும் என்பது உண்மையானால், அன்றைய பாருவில் நிறைந்தது, இந்த ராஜ் மட்டும் தானே, அது தான், எங்கெங்கோ வளர்ந்த போதும், தகப்பனிடம் வந்து சேர்ந்தது. ஆனால் பாபாவென அழைக்க அழிச்சாட்டியம் செய்தவன், இதோ இன்று கண்ணீர் பீறிட அழைக்கிறான்.
போனமுறை வந்த போது தகப்பனையே கதற விட்டவன், இன்று அவரைக் கட்டிக் கொண்டு சிறு பிள்ளையாய் கதறி நின்றான். " பாபா, பாபா" என்ற வார்த்தையைத் தவிர வேறெதுவும் வரவில்லை. அவர் நலமாயிருப்பதே போதும். தான் யாருக்கும், எந்தப் பதிலும் சொல்லத் தேவையில்லை, என மனம் தேர்ந்தவனை, சோதிக்க விரும்பியவராய் , " என்ன கண்ணு, அப்பன் கைலாசத்துக்கே போயிட்டேன்னு பயந்துட்டியா" எனக் கைலாஷ் ராஜன் வினவவும்,
" அதைச் சொல்லாதீஙக பாபா. எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா. " என அவர் தோளில் சாய்ந்து இறுக்கிக் கொண்டான்.
அபிராம், வேகமாக விஜயனை நெருங்கியவன், " அப்பா, உங்க இரண்டு பேருக்கும் அடி ஒண்ணும் இல்லைங்களே" எனக் கண்களாலே அவரை ஸ்கேனிங் செய்ய, " ஒண்ணுமில்லை கண்ணு. உன்ர மாமனுக்குத் தான் காலில் காயம், அப்படியும், அவனுங்களை விட மாட்டேங்கிறான் பார்" என்றவர், ஆதர்ஷ் கதறி அழுவதைப் பார்க்கவும்,
" நீங்க எப்படிக் கண்ணு வந்தீங்க. மாப்பிள்ளை எதுக்கு அழுவுறாப்ல , யார் தகவல் தந்தது" என விஜயன் ஒன்றும் விளங்காமல் கேள்வி எழுப்ப, அபிராம் விவரம் சொன்னான்.
" கார் ஆக்ஸிடென்ட்டா" என வியந்தவர், " அடக் கிரகம் புடிச்சவனே, உன்ர மாமனுக்கு மூளை குறுக்காலை தான் வேலை செய்யும். " என்ற விஜயன் "அதுக்காக, கோடி ரூபாய் காரையா நொறுக்கிறது" எனக் காரை திரும்பிப் பார்த்து அங்கலாய்க்கவும், மாமனின் தகிடுதத்தம் ஏதோ இருக்கிறது எனப் புரிந்து கொண்ட அபிராம், அந்த அப்பா மகன் ஜோடியைப் பார்க்க, ஆதர்ஷ் பத்து வயது சிறுவனாகத் தன் பாபாவிடம் கொஞ்சிக் கொண்டிருந்தான். கைலாஷ் புன்னகை முகமாக ஆனந்தக் கூத்தாட நின்றார்.
இவர்கள் பார்க்கவும், " டேய் மாப்பிள்ளை, என்ர மகன் பாபான்னு கூப்பிட்டான் பார்" எனப் பெருமையடிக்க, " அதுக்காக , ஆக்சிடெண்ட்டுன்னு பொய் சொல்லணுமாக்கும் ,நாங்க எப்படிப் பதறியடிச்சு ஓடி வர்றோடம் ,இதெல்லாம் டூ மச்ங்க மாமா" எனத் தன் ஆத்திரத்தைக் கோபமாகக் காட்ட,
“அட மாப்பிள்ளை, நெசமாலுமே ,என்ர கார் ஆக்சிடென்டாகித் தான் நிக்கிது , அங்க பார் கண்ணு, “ என்றவரை, “உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சுன்னு பயந்து வர்றோம், ஏனுங்க மாமா “ எனச் சலித்தவனை
" அப்புறம் என்ர, ஆளாளுக்கு என்ரகிட்ட, அவிக லோலாயத்தைக் காட்டுறானுங்க. அதுக்குத் தான், எல்லாருக்கும் வச்சேன் ஆப்பு" எனவும் ஆதர்ஷ் முழித்தபடி, தன் பாபாவையும், தகவல் தந்த ப்ளாக் கேட்ஸையும் பார்க்க, " உங்க பாபாவோட, ஆர்டர் ஸார்" எனத் திரும்பிக் கொண்டனர்.
" பாபா, அப்ப என்னதான் நடந்தது. சத்தியன் எங்கே" என ஆதர்ஷ் வினவவும், அவன் ஆஜராகி, கைலாஷ் மொபைலை " இந்தாங்கப்பா, எல்லாமே புடிச்சிட்டேனுங்க. ஃப்ளாஷ் போட்டு எடுத்திருக்கேனுங்க" எனக் கொடுக்கவும், அதை வாங்கித் திருப்தியாகப் பார்த்துக் கொண்டார் ராஜன்.
விஜயன் ," ராஜா, என்ரா நடக்குது இங்க , நான் உன் கூடவே தான இருக்கேன். எனக்கே விளங்கலை" எனவும், " சின்னவர், அப்பான்னு கூப்பிடுறதை வீடியோ எடுக்கச் சொன்னாருங்க" எனச் சத்தியன் உண்மையைப் போட்டு உடைத்தான்.
" ஐயோ சாமி, எனக்கு ஒண்ணுமே புரியலை. அப்ப எல்லாமே ஃபேக்கா, ஏனுங்க மாமா, இதென்ன சின்னப் புள்ளைத் தனமா விளையாடிட்டு இருக்றீங்க. அங்க அத்தை உங்களுக்காக விரதமிருந்து பூஜையெல்லாம் செய்யறாங்க. நீங்க இங்க , உங்க மகனை வச்சு நாடகமாடுறீங்கலாக்கும் " என எரிச்சலாக மொழிய,
" டேய், ராஸ்கோலு, ஆக்சிடெணட் நிஜம் தாண்டா, ஆனால் நாங்க அந்தக் கார்ல வரலை, ஒரு பங்காளி மகன் பார்த்த வேலை, இன்னொருத்தன் சிக்கிட்டான் " எனப் புதிர் போட, ஆதர்ஷ் " யார் பாபா, மஹந்த் வேலையா. " எனப் பாலாஜி வார்த்தைகளையே திருப்பிப் படிக்க,
" டேய் மச்சி, அவன் எனக்குத் தான் பங்காளி, உனக்கில்லை. இது வேற யாரையோ சொல்றாரு" என அபிராமும், " அவன் ஆக்சிடெணட் பண்ணப்பவும் கார் இத்தனை டேமேஜ் ஆகலையே" என விஜயனே குழம்ப,
" அது இன்ஸ்யூரன்ஸ்காரனுக்கு ஆப்பு வைக்கிறதுக்காகச் செஞ்சது" என்றார் ராஜன்.
" பாபா, இதென்ன விசயம் எதுவுமே புரியல, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க" எனவும்,
" உன்ர பங்குக்கு, அவனை நாலு வெளுத்திட்டுவா, நான் விவரம் சொல்றேன்" எனக் கண்டைனரைக் காட்டி கைலாஷ் கண்டிசன் போட, அபிராமும், ஆதர்ஷும், புதிரை அவிழ்க்கும் சுவாரஸ்யத்துடன் ஏறிப் பார்க்க, உள்ளே, கை கால்கள் கட்டப்பட்டு, ஆங்காங்கே இரத்தக் காயங்களுடன் பத்து பேர் இருக்க, மிகவும் சேதாரமானவனாக நடுவில் பீமன் கிடந்தான்.
அபிராம், “இவனுங்க யாரு புதுசா, அடேய் மச்சி, உன்ர குடும்பத்துக்கு எத்தனை பகையாளி, புதுசு, புதுசா வர்ரானுங்களே” என வியப்பாகக் கேட்கவும், பீமனைப் பார்க்கவுமே, ஆதர்ஷுக்கு அடையாளம் தெரிந்தது. அபிராமுக்கு விவரம் சொல்லவும், “ அப்ப , மாம்ஸ் கைகர்யமா தான் இருக்கும்” எனக் கதவைப் பார்க்க, அங்கே ராஜன் பீமனை முறைத்தபடி நின்றார்.
ஆதர்ஷ் மராத்தியில் திட்டியபடி, அவன் தலை முடியைக் கொத்தாகப் பிடிக்க, "எங்களை விட்டுருங்க, இந்தப் பக்கமே வரமாட்டோம்" என ஆதர்ஷ் காலில் விழுந்தான் பீமன்.
" சோலாப்பூர்ல இருக்கவனுக்கு இங்க என்னடா வேலை" என நையப் புடைத்தவன், அதே நேரம் போஸ்லே மாளிகையிலிருந்து போன் வர, அதை எடுத்தபடி , தன பாபாவிடம் காட்ட, பேசு எனக் கண் காட்டினார்.
" நமஸ்காரம் ஜெயந்த் மகராஜ், நீங்க அடி வாங்கினது பத்தாதுன்னு , உங்க மகனையும் அனுப்பி விட்டுறிக்கீங்களா. கை கால் உடைச்சாச்சு, இப்படியே அனுப்பவா, இல்லை பொட்டலமா அனுப்பவா" என ஆதர்ஷ் மராத்தியில் கேட்க, அந்தப் பக்கம் ஸ்பீக்கர்ல போட்டுக் கேட்டுக் கொண்டிருந்த, ஜெயந்த்,
“எனக்கு ஏதுடா மகன், அவன் என் அடியாள். உங்க ஊர்ல வச்சு தான அடிச்சிருக்கீங்க, சோலாப்பூர் வா பார்த்துக்கலாம்” எனச் சவால் விட, பீமன் தந்தையின் பேச்சில் கடுப்பானான்.
ஆதர்ஷ் வேறு அதில் என்னை வார்ப்பது போல், “பீமா, நீ அப்படியே ஜெயந்த் மகராஜை உரிச்சு வச்சிருக்க, அப்படியும், அவர் மகன் இல்லைங்கிறார். இவருக்காகவா அடி வாங்குற “எனக் கோர்த்து விட,
"டேய், அவனை எனக்கு எதிரா திருப்பலாம்னு பார்க்காதே, அந்தக் கிழவியும், நீயும் சேர்ந்து, அங்க உட்கார்ந்துகிட்டு ஆட்டம் காட்டுறீங்களா. எவனை வேணாலும் கூட்டிட்டு வா சோலாப்பூர்ல நான் வச்சது தான் சட்டம்" என அடிபட்ட வேதனையோடு கர்ஜிக்க,
“படே பாபா, ஒரு திருத்தம், இந்த ஆட்டம் என்னது இல்லை என்னைப் பெத்தவர், என் பாபாவோடது. பைரவி பாய் போஸ்லேவின் கணவர் கைலாஷ் ராஜனிது “எனச் சிரிக்க, “ஒண்ணு கூடிட்டிங்களாக்கும், அங்கயே இருந்துக்குங்க, இங்க வந்தா திருப்பி என் ஆட்டத்தைக் காட்டுவேன்,.உன் ஆயியையும்,பாபாவையம் அன்னைக்கே ஓடவிட்டவன் தான் நான் “ எனவும் ஆதர்ஸக்குக் கோபம் பலியாக வந்தது, “அதுக்கும் சேர்த்து வச்சு தான் உனக்குத் தண்டனை , அனுபவிக்க ரெடியா இருந்துக்கோ” எனக் கர்ஜிக்க,
உள்ளே எட்டிப் பார்த்த கைலாஷ், " ஏன் கண்ணு, பங்காளிக்குப் பட்டதெல்லாம் பத்தாதாமாம். போஸ்லே மாளிகையையும், பீபீ மில்ஸையும் நான் பார்த்துக்கிறேன். சின்ன வூட்டுல போய் ரெஸ்ட் எடுக்கச் சொல்லு" எனக் கைலாஷ் எகத்தாளமாகப் பேச, ஆதர்ஷ் புன்னகையோடு மொழி பெயர்த்தான்.
" நீங்க என்னை வெளியேத்துவீங்களா. மஹந்த் போஸ்லேவை தேடி அவங்க அப்பன் வர்றான். அவனுக்குப் பதில் சொல்லுங்கடா" என ஜெயந்த் எகிற,
"எத்தனை பேர் வந்தாலும், நான் சமாளிச்சுக்குவேன் பங்காளி. நீ பொட்டியை கட்டிட்டு ரெடியா இரு. என்ர பொண்டாட்டியை என்கிட்டிருந்து பிரிச்சயில்ல, உன்னைக் குடும்பத்தை விட்டே ஒதுக்க ஏற்பாடு பண்றேன்" எனச் சிரிக்கவும், குப்பை போல் கிடந்த பீமனே அதிரத்தான் செய்தான்.
ஏனெனில் சில மணி நேரங்களுக்கு முன்பான கைலாஷின் ஆட்டம், அவ்வளவு கடுமையாக இருந்தது. அதுவும் பீமன், ஜெயந்தின் சாயலாக, இருக்கவும், இருபத்தியிரண்டு வருட ஆத்திரம், கோபம் அத்தனையும் அவன் மீது காட்டியிருந்தார்.
முன் மாலைப் பொழுதில், சொத்துக்களைப் பிரித்து, சரிபார்த்துக் கையொப்பமிட்ட கைலாஷ், தனது டிடெக்டிவ் ஏஜென்ட் ரஞ்சனிடமிருந்து போன் வரவும் நண்பனோடு மேட்டுப்பாளையம் ரோட்டில் அவுட்டர் பகுதியிலிருந்து ஒரு தொழிற்சாலையை நோக்கிக் கிளம்பினார், ஏற்கனவே ,கைலாஷின் ஆட்கள் அங்கே பதுங்கியிருந்தனர்.
காலையில் இவர்களைப் பின்தொடர்ந்த வாகனத்தை, அவரின் மற்றொரு க்ரூப் ஃபாலோ செய்து சுற்றி வளைத்தனர். அவர்கள் மூலமே கைலாஷ் கடத்தப்பட்டது போல் நாடகமாடினர்.
பீமன் ஆட்கள்,கைலாஷின் காரை கடத்தி வந்து விட்டதாகத் தங்கள் தலைவனுக்கு அழைக்க, பிறர் கவனம் கவராமல், அவரை உள்ளே அழைத்து வரச் சொன்னான். பீமன் திட்டப்படியே நடப்பதாக அவனை நம்ப வைத்த கைலாஷ்,விஜயன், சத்தியன் மூவரும் கடத்தப் பட்டவர்கள் போல், வந்தனர்.
தன் ஆட்களின் துப்பாக்கி முணையில், கைலாஷை பார்க்கவும் பீமன் நம்பினான். ஆனால் அவனறியாதது, அவன் ஆட்களை மிரட்டி, டம்மி துப்பாக்கியைத் தான் கையில் கொடுத்திருந்தனர். இவர்களை இயக்கியது, கைலாஷின் துப்பறியும் ஏஜெண்டான ரஞ்சன்.
பீமன், கைலாஷை எதிர் கொண்டு அழைத்து வசனமெல்லாம் பேச, ஜெயந்தின் பெயரைக் கேட்கவும், கைலாஷ் வெகுண்டு விட்டார். முதல் அடியே அவன் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டி விட்டு, வாயைச் சேர்த்து ஒரு அடி விட்டார். அடி வாங்கி நிலை குலைந்தவன், சுதாரித்து, தன் ஆட்களுக்குக் கட்டளை இடுவதற்குள், கைலாஷ் கையில் கிடைத்த கட்டையைக் கொண்டே அடித்தார்.
ரஞ்சன் தலைமையில் வந்த பயிற்சி பெற்றவர்கள், ஆதர்ஷின் பூனை படை ஆகியோர் சுற்றி வளைத்து, அடியாட்களிடம் ஆயுதங்களைக் கைப்பற்ற, கைலாஷ் பீமன் மீது தனது ருத்திர தாண்டவத்தைக் காட்டினார். விஜயன் , மற்றவர் பார்த்துக் கொள்ளட்டும் எனக் குரல் கொடுத்ததைக் கேட்கும் நிலையில் இல்லை. அரை மணிக்கும் மேலாக ஆட்டம் தொடர்ந்தது.
நண்பனின் கோபமாவது தணியட்டும் எனத் தங்கள் பங்குக்கு விஜயனும், சத்தியனும் இருவரைத் தாக்க, ஏற்கனவே இவர்களிடம் தப்பி, பிடிபட்டவன், அது தான் சமயமெனத் தப்பித்து, கைலாஷ் காரை எடுத்துக் கொண்டு செல்ல, பீமனின் ப்ளான் பி படி , அந்த ட்ரெக்கை வைத்து, இந்தக் காரை மற்றொருவன் ஆக்சிடெணட் செய்தான்.
சத்தியன் தான், தங்கள் கார் கிளம்பும் ஓசையில் சுதாரித்து வெளியே சென்று பார்க்க, கண்ணுக்கெட்டிய தூரத்தில் கார் ஆக்சிடெணட் ஆகி நின்றது. அவன் பதறி துடித்து வந்து சொல்ல, கைலாஷ், " என்ர காரை வேற டார்கெட் வச்சிருந்திங்களா, இருங்கடா வர்றேன்" என்றவர் ரஞ்சனிடம் கண் காட்டி, தன்னுடைய ப்ளான் படி, மகனை வரவழைக்கவும் நாடகமாடினார்.
பீமன் முதற்கொண்டு அடிப்பட்டவர்களை, கை கால்களைக் கட்டி, கைலாஷின் ஆட்கள் ட்ரக்கில் போட்டனர். ஆதர்ஷ், அபிராம்க்கு போன் பறந்தது. வெளியே நின்றால், தன் திட்டம் சொதப்பி விடும் என விஜயனையும் அழைத்துக் கொண்டு, கண்டைனரில் ஏறியவர், சோலாப்பூர்காரனிடம் விஜயனை வைத்தே விசாரிக்க விட்டு வேடிக்கை பார்த்திருந்தார்.
இதற்கு நடுவில் காரை இரண்டாம் முறை மோத விட்டு, முழுமையான செட்டப்போடு மற்றவர்கள் மறைந்து நின்றபோது தான், கைலாஷ் தங்கைகளின் கார் நின்று பார்த்து விட்டு, கடந்து சென்றிருந்தது.
இவை யாவையும், சத்தியன் தான் விலகினான். கைலாஷின் திருவிளையாடல் தெரியவும், ஆதர்ஷ் நிம்மதியடைந்தவன், மீண்டும் பாபாவைக் கட்டிக் கொண்டு, பெருமையாகவே பார்த்து நிற்க, " டேய், மச்சி, நீ பாபா ன்னு கூப்பிடறதுக்கு, கோடி ரூபா செலவாக்கும்" என மாமனை நேராகத் திட்டமுடியாமல், மச்சினனைக் கேட்க,
" உனக்கு என்ரா பொறாமை" என வம்பிழுத்து பேசியவர், ரஞ்சன் தலைமையிலானவர்களிடம் , பீமன் குழுவை ஒப்படைத்துக் கிளம்பினார்,
இவர்கள் வருவதற்குள் கைலாஷின் தங்கைகள், அந்த இடத்தையே கலவரமாக்கி இருந்தனர். இந்தக் கலகமும் கைலாஷ் க்கு நன்மையாக அமைந்தது. மனைவியின் முகத் தரிசனத்துக்கு ஏங்கியவர், இப்போது தன் கைகளில் தாங்கியிருந்தார்.
ஆதர்ஷும், விஜயனும் நடந்ததை விவரிக்க, பாலாநாயகம் மகனை முறைத்தார். இத்தனை விவரம் தெரியாத போதே கடிந்தவர், இப்போது விடுவாரா, " இதெல்லாம் நல்லா இல்லை தெரிஞ்சிக்க, என்ர மருமகள் கண் முழிக்கட்டும், அதை வச்சு தான் ஒரு முடிவு எடுக்கோணும், இல்லையினா நீயெல்லாம் யாருக்கும் அடங்க மாட்ட" எனத் திட்டவும், சௌந்தரி வழக்கம் போல் மகனுக்குச் சப்போர்ட்டுக்கு வந்தார்.
" ஏனுங்க, இப்ப எல்லாம் நல்ல விதமா தானுங்களே முடிஞ்சிருக்கு. இந்தா பேரன், ஆசையா, ராஜாவைப் பாபா பாபான்னு கூப்பிடுதிலிங்க, " என மகனை மெச்சி பேரனைக் கொஞ்சவும்,
“ஏனுங்க அத்தை அதுக்குன்னு ஒரு வரை முறை இல்லைங்களா, கூடவே இருந்தவனுக்குத் தெரியாத செய்யறானுங்க” எனக் குறைப்பட்ட விஜயன், “மாமா சொன்ன மாதிரி, தங்கச்சிமா எந்திரிகட்டுங்க, அவிகளை வச்சு தான் இவன் வேலைத்தனத்துக்கு எல்லாம் ஒரு முடிவு காட்டோணும்” எனச் சேர்த்துச் சொல்ல,
ரமாபாய் , “பேட்டாஜீ , நீங்க தான் உங்க தங்கச்சியை மெச்சிக்கணும், அவள் ,அவருக்கும் மேல, தாமாத்ஜி மாதிரி அதிரடியான ஆள் தான் அவளைச் சமாளிக்கச் சரி”என மாமியார் புகழவும், ராஜன் உச்சி குளிர்ந்து போனார்.
“இருந்தாலும் , காரை சேதப்படுத்தியிருக்க வேண்டாம், ஆதர்ஷுக்கு என்னைக்குமே பாபா நீங்க தான். நான் வளர்ப்புத் தந்தை தான், அவன் மனசிலையும் அப்படித் தான் பதிஞ்சு இருக்கு, எனப் பாலாஜி ராவ் விளக்கம் சொன்னார்.
" உனக்கு எப்பலிருந்து கண்ணு, ராஜா தான் உன்ர அப்பான்னு தெரியும்" எனப் பாலநாயகம் ஆதர்ஷ் பார்த்துக் கேட்க, அவன் ரமாபாய், பாலாஜி ராவ், ராதா ஆகியோரை பார்த்து விட்டு, " எனக்கு விவரம் தெரிஞ்சதிலிருந்தே, ராதிமாம், பாலாஜி டேட் னு தான் கூப்பிடுறேன், அவங்களைத் தான் பெத்தவங்கன்னு நிச்சிருந்தேன்.. லண்டன்ல இருந்ததால அது எனக்குப் பெரிசா தெரியலை.
ஆனால் நானிமா வந்த பிறகு, ஆயி, பாபா, ஆதிரா போட்டோ காட்டி, உறவையும் சொல்லிக் கொடுத்தாங்க. ஆனால் ராதி மாம் முகம் வாடினதையும், நானிமாக்கிட்ட, இப்ப எதுக்குச் சொல்லித் தர்றீங்க. ஆராதனாவுக்கும், அவனுக்கும் வித்தியாசம் வரக்கூடாதுன்னும், நான் அவங்ககிட்ட இருந்து பிரிஞ்சிருவேன்னு பயந்தாங்க. ராதி மாம் அழறதே என்னால தாங்க முடியலை" என்றவன், ராதாபாய் அருகில் சென்று, அவர் பக்கத்தில் அமர்ந்து கையைப் பற்றிக் கொள்ளவும், அவனைக் கட்டிக் கொண்ட ராதா,
" என் தர்ஷு, அப்பவே வந்து, நீங்க தான், என் மாம், டாட். நான் அவுங்க வந்து கூப்பிட்டாலும் போக மாட்டேன்னு கட்டிட்டு அழுதான். ஆயி சொல்றதையும் விட்டுட்டாங்க. அப்புறம் என் மகனா தான் வளர்ந்தான்னு, நான் நினைச்சேன். ஆனால் அவன் டாட், உங்களைச் சொல்லியே தான் வளர்த்தார். அந்த மனுஷனுக்கு(கைலாஷ்) தனக்கு ஒரு மகன் இருக்கிறதே தெரியாத கொடுமை போதும்னு. நம்ம தர்ஷுக்கு சொல்லிக் கொடுத்தே வளர்ப்போம்னு வளர்த்திருக்கார்" என ராதாபாய் பெருமூச்சு விடவும்,
கைலாஷ், பாலாஜி ராவின் கைகளைப் பற்றிக் கொண்டு, " உங்க பெருந்தன்மை யாருக்குமே வராது, உங்களுக்கும் அவன் தான் மகன், அந்த உரிமையை என்னைக்குமே பறிக்க மாட்டேனுங்க" என உணர்ச்சி வயப்பட,
" அதுக்கும் நீங்க தான் காரணம். இவ்வளவு பேர் தொழிலாளர்களே உங்களை அப்பான்னு சொல்லும் போது, உங்க வாரிசு சொல்லாமல் எப்படி. உங்களைப்பத்தினை எல்லா விஷயங்களையும், சொல்லியே தான் வளர்த்தேன்” என ராவ் வினவவும்.
" அப்புறம் ஏனுங்க தம்பி, என்ர பேரன் அப்பான்னு கூப்பிடாதையே இருந்தான்" எனச் சௌந்தரி கேள்வி எழுப்ப,
" முதல்ல, போஸ்லேக்களைக் குழப்பனும்னு ,அதுவரை ஆதர்ஷுக்கும், கைலாஷுக்கும் இருக்க உறவு வெளியே தெரிய வேண்டாம்னு, நினைச்சோம் . " என விவரிக்க, வழக்கத்துக்கு மாறாக, சற்று சீக்கிரமே, பைரவிக்கு நினைவு திரும்ப, ஆதர்ஷ் பேச ஆரம்பத்திலிருந்து கேட்டிருந்தார்
" அப்ப எப்ப தான், தன் அப்பாவை, பாபான்னு கூப்பிடுவான். மத்தவங்க சொல்ற மாதிரி, ராஜ், அவர் சொத்தை எழுதி வச்சா தான் கூப்பிட விடுவீங்களோ. இதை விட என்னை அசிங்கப்படுத்த, யாராலையும் முடியாது. இப்பவே ராஜோட காசுக்காகத் தான் நாங்க வந்திருக்கோம்னு பேசுறாங்க. நீங்களும் அதை நிரூபிக்கிறீங்க. அப்படிச் சொத்தை எழுதிக் கொடுத்தா தான், அவன் உங்களை அப்பான்னு கூப்பிடுவான்னா , நீங்க அவனுக்குச் சொத்தே எழுதி வைக்காதிங்க ராஜ். அவன் நானியம்மா வாரிசாவே இருந்திட்டுப் போறான்" எனத் திடீரென, பாலாஜி ராவிடம் ஆரம்பித்து, கணவரிடம் பேசிய பைரவி கண்ணீர் வடிக்க,
" பாரு, என்ன அம்மணி இதெல்லாம். நீயா எதையாவது கற்பனை பண்ணாதம்மா " என மனைவியைத் தோளோடு அணைத்துத் தாங்க, ஆதிரா, " ஆயி, பாவு.." என ஆரம்பிக்க,
" நீ ஒண்ணும் சமாதானம் சொல்ல வேண்டாம் ரஜ்ஜும்மா, அன்னைக்கு ஆத்தா எப்படிக் கேட்டாங்க. ஆயி பவானி, இன்னும் என்னவெல்லாம், நான் அனுபவிக்கனும்னு எழுதி வச்சிருக்காளோ" எனத் தலையில் கை வைத்தபடி, அவர் அமர்ந்து விட, பைரவி அடுத்து என்ன செய்வாரோ, என எல்லாருமே பயந்து தான் இருந்தனர்.
ஆதர்ஷ் அவரருகில் வந்து, கீழே அமர்ந்தவன், அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்து, "ஆமாம் ஆயி, சொத்துக் கிடைச்சா தான் உங்க முல்கா, அவன் பாபாவை, பாபான்னு கூப்பிடுவான். எனக்கு இன்னும் என் சொத்து கிடைக்கவே இல்லை ஆயி." எனவும், அவனைக் குனிந்தபடி பார்த்திருந்த பைரவி,
" வேண்டாம் பாபா, உனக்கு ராஜோட சொத்தும் வேண்டாம். என் மடியை நீ அசிங்கப் படுத்தவும் வேண்டாம். எந்த நேரத்தில் இந்த ஆயி பவானி, அவர் கண்ணில காட்டினாளோ, அவர் நிம்மதி போச்சு. அவருக்கு ஆபத்தானவளா இருந்திருக்கேன், ராசியில்லாதவ, ஏமாற்று காரியா இருந்திருக்கேன். இந்தப் பட்டமே போதும், நீ வேற என் மடியை வித்தவங்கிற பேரை வாங்கிக் கொடுத்திடாத" எனக் கண்ணீர் வடிய அவர் பேச,
" மறுபடியும் ஆரம்பிச்சிட்டாடா. எல்லாரும் சாப்பிட்டுப் படுத்து தூங்குங்க. என்ர பொண்டாட்டியை நான் பார்த்துக்குறேன்" எனக் கைலாஷ் சபையைக் கலைக்க முயன்றார்.
" இருங்க பாபா, ஆயி மனசில இருக்கிறதெல்லாம் வெளிய வரட்டும்" என ஆதர்ஷ் சொன்ன போதும், பாபா என்று அழைத்ததையும் பைரவி காதில் வாங்காமல் பேசிக் கொண்டே போக, ரமா பாய், " அவங்க குடும்பம் பேசி தீர்த்துக்கட்டும். நாம போவோம்" மற்றவர்களைக் கிளப்பினார்.
ராதா பாய்," தீதி உங்க பையன், உங்களுக்குத் தான். சும்மா மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க" என்றவர், ஆதர்ஷ் தலையை வாஞ்சையாகத் தடவி விட்டு ரமாபாய் குடும்பம் கிளம்பியது
பலநாயகம், சௌந்தரிக்கும் சேர்த்து ,அபிராம், ரஞ்சி, கஸ்தூரி என இவர்களுக்கான உணவை எடுத்து வந்தனர்.
அப்போதும் ஆதர்ஷ் அப்படியே மண்டியிட்டு அமர்ந்திருக்க, பைரவி அமைதி காத்தார், கைலாஷ், " அட, கால் வலிக்கும் எந்திரி கண்ணு" எனக் கைலாஷ் மகனைத் தாங்க, அபிராமும், ரஞ்சியும் ஆதிராவை என்ன நடக்கிறது எனக் கண்ணால் வினவினர். அவள் வேடிக்கை பார்க்கும் விதத்திலேயே , நீங்களே பாருங்கள்" என மௌன மொழி பேச, கைலாஷ், பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தார். வேற வழி, சாஸும்மாவுக்கு வீராப்பா, நானே பார்த்துக்குவேன்னு வாக்கு தந்திருக்காரே.
"ஆயி,எனக்கு என்ன சொத்து வேணும்னு கேட்க மாட்டிங்களா" என மகன் கேட்கவும், "உன் நானிமா, நல்லா வளர்த்து வச்சிருக்காங்க பாபா. சொத்து, சொத்துன்னு பேசுற. அந்தச் சொத்துனால தான், நான் எனக்கான எல்லாத்தையுமே இழந்தேன். உங்களை என் வயித்தில சுமந்தது கூட நியாபகம் இல்லை, அப்புறம் எந்த உரிமையில நான் உன்கிட்ட இவரைப் பாபான்னு சொல்லித் தருவேன்" என ஆரம்பிக்க,
" ஆயி, அப்பத் தான் ஞாபகம் இல்லை, இப்ப உங்க மடியில தலையை வச்சிக்குறேன். பாபாவை பாபான்னு சொல்லிக் கொடுங்களேன். சரி தானுங்களே பாபா" என அவன் சிரிக்க, பைரவி யோசனையாகப் பார்க்க, "அது தான் பாபான்னு சொல்லிட்டானுல்ல, என்ர மகன் எவ்வளவு நேரம் மண்டி போட்டு நிற்பான், அணைச்சுக்கமா" எனக் கைலாஷ் சொல்லவும், " வா” எனக் கை நீட்டி மகனைப் பைரவி அழைக்க, ஆதர்ஷ் கண்ணீர் மல்க,தன் ஆயியின் மடியில் தலையை வைத்துக் கொண்டவன்,
" இது தான் ஆயி, நான் கேட்ட சொத்து. உங்க மடியில் பிறந்தவன், கைலாஷ் ராஜன் மகன், தப்பானவனா இருப்பனா ஆயி. ஆயிக்கு, முல்காவைத் தெரியாது, முல்காவுக்கு ஆயியைத் தெரியாது. நம்ம மூணு பேரும் இருக்கிறதே பாபாவுக்குத் தெரியாது. இந்த நிலமை , எந்தக் குடும்பத்துக்கும் வரவேண்டாம் ஆயி" என அவன், பைரவியின் மடியைக் கட்டிக் கொண்டு அழ, தாயும், தகப்பனுமாக, கண்ணீர் மல்க, அவனது சிகையில் கை வைத்திருந்தனர். ஆதிராவுக்கும் தாங்கமாட்டாமல், ஆதர்ஷ் அருகில் சென்று அமர்ந்தவள் தந்தையின் மடியில் தலை சாய்த்துக் கொள்ள, பார்த்த கண்கள் அத்தனையிலும் கண்ணீர்.
சௌந்தரி, பாலநாயகமும், அதே மேடைக்கு அருகில் வந்து, மகன் மருமகள் , பேரன் பேத்தி, தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார்கள்.
" அம்மா பைரவி, இது உன் குடும்பம். நீதான் ஆலமரம். நீதான் எங்க எல்லாரையும் பார்த்திக்கோணும். நீயே கலங்கி நின்னா, எப்படிமா. யார் எதுவேணாலும் சொல்லிப் போட்டு போறாங்க. நான் சொல்றேன், என்ர மகனை வழிக்குக் கொண்டு வர்றதுன்னா, உன் ஒருதியால தான் முடியும். பேரனை அப்பான்னு கூப்பிட வைக்க , என்ன வேலைத்தனம் செஞ்சான்னு கேளு. என்ர மருமகளா திரும்பி வா. உன்னை நம்பி நெம்பப் பேர் இருக்கோம்" என மருமகள் தலையில் கை வைத்து ஆசீர்வதிக்க, பைரவி, கணவரைத் திரும்பிப் பார்க்க, “தாய் மாதா , உங்க புருஷன் எங்க கோர்த்து விடுறார் பாருங்க” என அம்மாவிடம் குறை பட,
"சரிங்க மாமா" என்றவர், தானும் எழுந்து, மகன் மகளையும் எழுப்பி விட்டவர், நாயகத்தையும் சௌந்தரியையும் ஒன்று சேர்த்து நிற்க வைத்து, கணவர், மகன் மகள் சகிதமாக அவர்கள் காலில் விழுந்து, " இனிமே, நீங்க சொல்ற மாதிரி தான் மாமா இருப்பேன். ஆதர்ஷை மட்டும், உங்க முன்னாடியே வச்சு, உங்க மகனை பாபான்னு சொல்லச் சொல்லுங்க' எனவும்,
சௌந்தரி, பொறுமை இழந்தவராக, " என்ர பேரன், என்ர மகனை, அவன் அப்பாவை , வந்ததிலிருந்து நூறு தரம் பாபா, பாபான்னு சொல்லியிருப்பான். உன் மண்டையில் தான் ஏறலை. என்ன ராஜ வம்சமோ, இம்புட்டு மக்காவா இருபாங்க' எனச் சௌந்தரி மகனை வினவ,
" என் மகன், உங்க மகனை அப்பான்னு கூப்பிட்டான்னு, நீங்க ஒத்துக்கிட்டா சரி தான். அதுக்குத் தான் இத்தனை பாடு" எனப் பைரவி வினயமாகச் சொல்லவும்.
ரஞ்சி, " அப்ப எல்லாமே நடிப்பா. ஐயோ சாமி, அத்தை நீங்க என்ர மாமனுக்கு மேல இருக்கீங்க. நீங்க தான் அவருக்குப் பர்வெஃக்ட் மேச்" எனவும் சிரித்துக் கொண்டனர்.
கௌரி விரதம் இருப்பதால், அதே அரங்கத்துக்குப் பின்னனிருந்த ஓய்வு அறையிலேயே பைரவி தங்கிக் கொள்வதாக ஏற்பாடாகியிருந்தது. ஆதர்ஷ் , தான் ஆயியுடன் தங்கிக் கொள்வதாக முடிவெடுத்திருக்க, இப்போது கைலாஷ் எல்லா ஆட்டத்தையும் கலைத்தார்.
" என்ர பொண்டாட்டியை விட்டுப் போட்டு, நான் எங்கையும் போறதா இல்லை. ஆதர்ஷ் நீ கெஸ்ட் அவுஸ் போ கண்ணு" என அவர் உத்தரவிட்டுக் கொண்டிருக்க,
" பாபா, நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க. உங்க ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க. ஆயியை நான் பார்த்துக்கிறேன்" என வாக்குவாதம் செய்ய, “பாபா, நம்ம நாலு பேருமே இங்கயே இருந்துக்குவோம், ஏற்பாடு பண்ணுங்க” என மகள் கேட்கவும், கைலாஷிடம் மறுப்பு எது.
கைலாஷின் குடும்பம், கே ஆர் மாளிகையிலும் , பைரவியின் குடும்பம் விருந்தினர் மாளிகையில் இருக்க, ஆதிராவின் ஆசைப்படி , இனி யாரும் எங்களைப் பிரிக்க இயலாது எனச் சொல்லும் விதமாக ஆயி பவானி விக்ரகம் இருந்த அரங்கிலேயே , ஒரு பகுதியில் தங்களுக்கான தற்காலிக குடிலை அமைத்தனர். தங்கள் களைப்பையும் மீறி, கைலாஷின் சொந்தக் குடும்பம், அவர்கள் காதல் கதையை , தந்தையையே சொல்லக் சொல்லி, கைலாஷ் பெருமையோடும், பைரவி முகசிவப்போடும், பிள்ளைகள், நாள் பெற்றோருக்கு முகவாய் பிறந்தோம் என்ற மகிழ்வோடும் நள்ளிரவைத் தாண்டியும் பேசி கழித்திருந்தனர்.
நாளை கொங்கணி நாட்டு முறைப்படி மெஹந்தி, ஹல்தி, அதற்கெடுத்து கொங்கு நாட்டு முறைப்படி நீராட்டு, மாங்கல்யதானம் என நிகழ்வுகள் இருக்க, இரண்டு பக்கமும் என்ன பிரச்னையைக் கூடி வருவார்கள், அதை இந்தக் குடும்பம் எப்படிச் சமாளிப்பார்கள் என்பதைக் காண்போம்.
நிலவு வளரும்…