Sunday, 24 October 2021

யார் இந்த நிலவு- 7

யார் இந்த நிலவு-7

கைலாஷ் ராஜனுக்கு, இன்றைய தினம் ஆரம்பித்ததிலிருந்து அதிர்ச்சிக்குக் குறைவில்லாமல் இருந்தது. முதலில் அம்மாவின் பாசமான அழைப்பு, உடன்பிறவா தங்கையின் வேண்டுகோள், மருமகனின் சந்தோஷம் என ஆரம்பித்த நாள், ஆதிரா பிகே வின் மதி முகம் கண்டதிலேயே அதிர்ந்து உணர்ச்சிவயப் பட்டிருந்தவர், அவளே தன் வளர்ப்பும், மருமகனுமான அபிராமின் மனம் கவர்ந்தவள் என அறிந்ததில் மனம் நிறைந்தார். அடுத்து தன் பாருவின் நினைவைப் புதுப்பிக்க வந்த ராஜா வீட்டுக் குட்டிச் சிங்கம் ஆதர்ஷ் சவாலோடு அவரை அனுப்பி வைக்க, அன்றைய தினத்தின் உச்சமாக, காருக்குள் நிலவும், அதன் மாஸி எனப் பேசியவரும் அவருக்கு மேலும் குழப்பமான யோசனையில் ஆழ்த்தியிருக்க, கடைசியாக மதிமுகத்தவள், நினைவு திரும்பி அவரை "பாபா" எனத் திருவாய் மலர்ந்ததில் நெகிழ்ந்து போனார்.

தானாய்ப் பெற்றது எதுவும் இல்லையெனினும், ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் அவரை 'அப்பா' வென அழைத்த போதும், இவளுடைய பாபா என்ற அழைப்பு அவர் உயிர் வரை தொட்டது.

அவள் அருகிலேயே அமர்ந்தவர், வாஞ்சையாகத் தலையைத் தடவி, " இந்தப் பாபா வை எப்படித் தெரியும்" எனக் கேட்டார். அவர் கையைப் பிடித்துக் கொண்டே எழுந்தமர்ந்தவள், 

" நான் உங்களை, இது தான் பஹலி பார் நேரில் பார்க்கிறேன். பட் ரொம்ப நாளாத் தெரியும். உங்களை, உங்க கம்பெனி வீடியோ, உங்க இன்டர்வ்யூ பார்த்திருக்கேன். உங்களை உங்க கம்பெனில வேலை செய்யறவங்க, "அப்பா" னு தானக் கூப்பிடுவாங்க. அது தான் நானும் எங்க லேங்க்வேஜ்ல உங்களைப் பாபான்னு கூப்பிட்டேன். இனிமே நீங்க எனக்கு வேலை இல்லைனு சொல்ல முடியாது, கைஸா ஹை, மஸ்து ஹை னா " என உரிமையாக அவள் மராத்தி, ஹிந்தி, தமிழ் எல்லாம் கலந்து புன்னகைத்துக் கேட்கவும் , 

புன்னகையோடு கண்ணீர் பளபளக்க, " மஸ்து. படியா மஸ்து. முல்கிக்கு பாபா வேலை கொடுக்கிறது என்ன, கம்பெனியே கொடுப்பார்" என்றார் ராஜ்.

" ஓ, நோ கம்பெனி எல்லாம் வேண்டாம். வேலை மட்டும் கொடுங்கோ. சொத்து, ஜாயிதாத், நாம் சப்குச் படா ஆஃபத்(அபாயம்) தான். ஐ மீன் ப்ராப்ளம். ஐ வான்ட் பீஸ்ஃபுல் லைப்" என்றாள்.

" எல்லா லேங்க்வேஜையும் கலந்து கட்டிப் பேசுறியே" என வியந்தார். "அத்தனை ஊர் தண்ணீர் குடிச்சிருக்கேன்" என்றவள், " ஓ நோ, மாஸி கவலைபடுவாங்க. என் போன் எங்கே" எனக் கேட்டாள்.

" உன் மாஸி, என்கிட்ட பேசிட்டாங்க. நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டேன். போகலாம்ல" எனக் கைலாஷ் கேட்கவும், " லட்டு சாப்பிட யாராவது வேண்டாம்னு சொல்வாங்களா. ஆனால் மாஸிட்ட பேசிடுறேன்" எனப் போனை எடுத்தவள், கௌரியை அழைக்க முதல் ரிங்கிலேயே எடுத்தார். பேசி முடித்து, ஆயிரம் பத்திரம் சொல்லி, "ஆயி கிட்டையும் பேசிடு முலே. அவங்க தான் எனக்குத் தகவல் சொன்னாங்க" என்றார் கௌரி.

அடுத்து பைரவிக்கும் போன் போட்டவள் ஹலோ எனும் முன், " ரஜ்ஜும்மா நீ நல்லா இருக்கேல்ல. மயக்கம்னு சொன்னாங்களே என்ன ஆச்சு "எனக் கேட்கவும் நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னவள், " ஆயி, இந்தப் பாபா'கூடப் போகட்டா " என ஆதிரா கேட்கவும், " க்யா, க்யா கஹி" என்றார் பைரவி.

" எனக்குத் தெரியும் ஆயி, யாரையுமே நீங்க பேச்சுக்குக் கூடப் பாபா ன்னு சொல்ல விட மாட்டிங்க. ஆனால் இந்தக் கே ஆர் சாப் வீடியோ, அனுப்பி விடுறேன் பாருங்களேன். நீங்களே பாபா ன்னு கூப்பிட பர்மிஷன் தருவீங்க" என்றாள். 

பைரவி மெல்லப் புன்னகைத்தவர், " ஆல்ரெடி பார்த்துட்டேன். பர்மிஷன் கிராண்டட், ஆனால் லிமிட்ல இருந்துக்கோ. நீ இருக்க இடத்துக்கு உன் திங்க்ஸ் எல்லாம் நான் அனுப்புறேன். கௌரி வேண்டாம். இப்பவும் அதே கட்டுப்பாடு தான் வெளியில் சுத்தக் கூடாது. அந்தக் கம்பெனி விட்டு வெளியே வரக்கூடாது. யார்கிட்டையும், அந்த " பாபா சாப்" கிட்ட கூட நீ யாருங்கிறதைச் சொல்ல வேண்டாம். உன் நன்மைக்காகத் தான் சொல்றேன் " என வரிசையாகக் கண்டிசன் போடவும் சரி, சரி என நல்ல பொண்ணாக " ஓகே ஆயி" எனப் பேசி முடித்து வந்தாள்.

கைலாஷிடம், " பாபாசாப் போகலாம்" எனச் சிரித்தாள் , " அதென்ன ஒரு சாப் சேர்ந்திருக்கு" என்றார் கைலாஷ்.

" ஆயி, இந்தளவு, " பாபாசாப்" சொல்றதுக்குப் பர்மிஷன் குடுத்ததே பெரிய விஷயம். அவுங்களுக்கும் உங்களைப் பற்றித் தெரிஞ்சிருக்கு. மஸ்து, மஸ்து ஹைனா" என அவள் ஆச்சரியமாகச் சிரிக்கவும், அவள் சிரிக்கையில் கன்னக் குமடுகள் உயர்ந்து அகன்ற கண்களும் சிரிக்க, மெய் மறந்து நின்றவர்," மஸ்து ஹை, வா போகலாம் " என அழைத்து வந்தார்.

காரில் வரும் போது , " மதியமே வரேன்னு சொன்னவள் ஏன் வரலை. சொன்ன நேரத்துக்குச் சேர்மனைப் பார்க்க வேணாமா. அப்புறம் எப்படி வேலைக் கிடைக்கும். ஒரு ப்ரபொசனலிசம் வேண்டாமா" என அவர் கேட்கவும், " சாரி" எனக் குனிந்து கொண்டவள், " குறிப்பிட்ட நேரத்துக்கு உங்களை மீட் பண்ண முடியாத சூழ்நிலை. நான் வந்த போது நீங்க அங்கிருந்து கிளம்பிட்டீங்க. ஆனால் இவினிங்கிலிருந்து, ஹோட்டல் ல உங்களுக்காகத் தான் வெயிட்டிங்க்" என்றாள்.

" என்னை மீட் பண்றதுக்காகத் தான் இந்த டிக்கில ஏறுனியா" என அவர் குறுஞ்சிரிப்போடு கேட்கவும், 

" நாஹி தோ, உங்க காடின்னே தெரியாது. தலையில இடிச்சுக்கிட்டேன். மயக்கம் வர்ற மாதிரி இருந்தது, மயங்கி இதில் விழுந்துட்டேன்" என அவள் சமாளிக்கவும். அவளையே கண்ணெடுக்காமல் பார்த்தவர்

"மயங்கி கீழே விழுவாங்க. யாரும் கார் டிக்கில விழமாட்டாங்க" என்றார்.

அவர் மேலும் விசாரிக்கவும், " நீங்க வேலைக் கொடுக்கிற சேர்மன். நான் எல்லாத்தையும் ப்ராங்கா உங்கள்ட்ட சொல்லனும். ஆனால் நான் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவ. என் முழு அடையாளம் உங்களுக்குச் சொல்ல முடியாது. பட் நான் தப்பான காரியம் எல்லாம் செய்ய மாட்டேன். யூ கேன் ட்ரஸ்ட் மீ. இதுக்கும் மேலையும் உங்களுக்கு விருப்பமிருந்தா, நீங்க வேலைக் கொடுக்கலாம். நீங்க வேலை இல்லைனு சொன்னாலும், நான் ஏத்துகிறேன். நான் இப்பவே கீழே இறங்கிக்கிறேன்" எனும் போதே அவள் முகம் கூம்பிப் போகவும்,

அவள் தலையை வாஞ்சையாகத் தடவியவர், " இவ்வளவு வெளிப்படையா பேசுறு முலே எங்கக் கிடைக்கும். அதுக்கும் மேல, இந்த நடுராத்திரியில் எந்த அப்பாவும், மகளைத் தனியா விடமாட்டான்" என்றவர்.

" உன் சத்தியம் தகர்ந்து போற ஒரு நாள், நீ யாருன்னு சொல்லு தெரிஞ்சுக்குறேன். ஆனால் யாருக்கோ பயந்து ஓடி ஒளியிறியே அதுவும் வேண்டாம். நம்ம கம்பெனிக்குள்ள எனக்குத் தெரியாமல் யாரும் உள்ள வரமுடியாது. அதுவரைக்கும் இந்த ரஜ்ஜும்மாவை எதுவுமே கேட்கவும் மாட்டேன்" என்றார்.

ஆதிரா அதிர்ந்தவளாக, " உங்களுக்கு எப்படி என் செல்லப் பெயர் தெரியும். " எனக் கேட்டாள்.

" உன் கௌரி மாஸி அப்படித் தான் கூப்பிட்டாங்க" என்றார்.

" மாஸியாச் சொன்னாங்க, என் ஆயி மட்டும் தான் இப்படிக் கூப்பிடுவாங்க நீங்க என் ஆயிட்ட பேசுனீங்களா, மாஸிகிட்டையா" எனக் குழம்பிக் கொண்டு போனை பார்த்தாள்.

கார் கோவையில் பல ஏக்கர் பரபரப்பில் அமைந்திருக்கும் கே ஆர் மில்ஸ் வளாகத்தில் உள்ளே உள்ள அவரது ப்ரத்யேக பங்களாவிற்குச் சென்றது. இதைத் தவிர ஆர் எஸ் புறம் பகுதியில் பாலநாயகத்தின் வீடும் உள்ளது. மகன் அப்பாவின் வீட்டில் தங்க மாட்டார்.அப்பா மகனின் வீட்டில் தங்க மாட்டார். அதற்காகவே சௌந்தரி தான் மட்டுமே மகனோடு தங்க வருவார்.

ஆதிரா விழிகள் விரித்து அவரது வீட்டைப் பார்த்து வந்தாள். வீட்டின் ஒவ்வொரு அங்கத்திலும் அதன் செல்வ வளம் இருந்தது. இதுவும் யாருக்கோ காட்ட கட்டியது போல் தான் வீம்புக்குக் கட்டினார்.

அந்த நேரத்திலும் வேலைக்காரர்கள் அவர் பணிவிடைக்குத் தயாராக இருக்க, ஆதிராவை மாடியிலிருந்த அறைக்கு அழைத்துச் சென்றவர், பக்கத்து அறையையைக் காட்டி, "இது என்னோட ரூம், எனி டைம் யூ கேன் கால் மீ " என்றவர். " நைட் எதாவது சாப்பிட்டியா" எனக் கேட்டார்.

" ஓ, ஓபராய் ஹோட்டல் டின்னர். " என்றவளோடே அறைக்குள் சென்றவர், பணியாளைப் பால் கொண்டு வரச் சொன்னார். " பாபாசாப், தூத் நஹி, தூத் நஹி. ஒரு கட்டா சாய்" என்றாள். அவளையே பார்த்திருந்தவர், இரண்டு கட்டா சாய்க் கொண்டு வரச் சொன்னார். அதோடு அவளுக்கு மாற்றுடையும் வந்தது. இருவருமாகக் கட்டாசாயை ருசித்தனர். ஆதிரா "மஸ்து, மஸ்து " என வரடீயையும் சிலாகிக்க, " இதிலென்ன பெரிய மஸ்து இருக்கு" என்றார் வேண்டுமென்றே கேட்டார்.

" கட்டாசாய், அளவா தூள் போடனும்" என ஆரம்பித்தவள் அது போடும் முறையை விவரித்ததில் , தனக்கும் இதே போல் விவரித்தவரை நினைத்துக் கொண்டவர், " இது யார் சொல்லிக் கொடுத்தா" எனக் கேட்டார். " மாஸி போடும் போது பார்த்திருக்கேன். " என்றவள், "உங்களுக்கு முல்கி இருக்கா, என் சைஸ் ட்ரெஸ் வச்சிருக்கீங்களே, உங்க வீட்டு ஆண்டியை இன்ட்ரடியூஸ் பண்ணலை, தூங்குறாங்களோ. காலையில பார்த்துக்குவோம். என்னைக் கூட்டிட்டு வந்ததுக்குத் திட்ட மாட்டாங்கல்ல, என்னை ஹாஸ்டலுக்கு ஷிப்ட் பண்ணிடுங்க. நான் அங்கேயே தங்கிக்குவேன்" எனக் கேள்வியும் கேட்டு, பதிலும் அவளே சொல்லிக் கொள்ள , அவள் தலையை மீண்டும் வாஞ்சையாகத் தடவினார்.

அவளது மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டவர், தனது பர்சனல் நம்பரை அவளுக்குப் பதிந்து கொடுத்து விட்டு , " நல்லா தூங்கி எந்திரி. அப்புறம் பேசுவோம்" எனத் தனது அறைக்குக் கிளம்ப, " பாபாசாப்" என அழைத்தவளை நோக்கி அவர் திரும்பவும், உணர்ச்சி வயப்பட்டு நின்றவள், கேட்கத் தயங்கி நிற்கவும், "என்னடா முலே" என்றார். " உங்களைப் பார்த்ததிலிருந்து, கண்ணில தண்ணியா வருது. ஏன்" எனக் கேட்டு நின்றாள். அவருக்கும் அப்படித் தான் வருகிறது என்று எப்படிச் சொல்வார்,

இரு கைகளையும் விரித்து " வா" என்றார். பசு மடித் தேடும் கன்றாக ஓடி வந்து அவரைக் கட்டிக் கொண்டவள், " என் பாபா ரொம்ப நல்லவங்களாம். ஆனால் நான் பிறந்ததிலிருந்து பார்த்ததே இல்லை. அவுங்களும் உங்களை மாதிரி இருந்தா நல்லா இருக்குமில்ல" எனக் கண்ணீர் விடவும், அவளை வாரியணைத்துக் கொண்டவரும் உணர்ச்சிப் பெருக்கில் தத்தளித்தார். வாஞ்சையான தலை வருடலுக்கே உணர்ச்சி வசப்பட்டவளுக்கு, இந்த அரவணைப்பு ஓர் பாசத்தையும் பாதுகாப்பையும் தந்தது. இதுவரை தன் ஆயியோடு இருக்கும் போது மட்டுமே எச்சரிக்கை உணர்வையெல்லாம் விடுத்து இயல்பாக இருப்பாள். இன்று இந்தக் கைலாஷ் ராஜனிடமும் அதே உணர்வை உணர்ந்தாள் ஆதிரா ராஜ் போஸ்லே. இதில் போஸ்லே குடும்பப் பெயர் எனில், ராஜ் யாரைக் குறிக்கும். அதையும் விடுத்து அவள் ஆதிரா பிகே வில் பி யார், கே யார். ஆதிராவின் ஆயியும், காலமுமே பதில் தரவேண்டும்.

குன்னூர் வசந்த விலாசம், காலை பனியில் நண்பர்கள் காலாற நடக்க வாக்கிங் ஸ்டிக்கோடு கிளம்பி விட்டனர். அவர்களுக்கு முன்னே எழுந்து பவானி ஒரு நடை சென்ற வந்து விடுவார். இவர்கள் கிளம்பும் நேரம் குளிருக்குச் சூடான தேநீர் தயாராக இருக்கும். இன்று தேநீர் மட்டும் வந்தது, பவானியைக் காணவில்லை.

பாலநாயகம், வேலையாளிடம் கேட்டார். " சின்னம்மா இன்னும் எந்திரிக்கலைங்கய்யா. " எனத் தகவல் சொல்லிச் செல்ல, " எதுவும் முடியலையோ" எனப் பாலா பதறினார்.

ராமு தான், " அதெல்லாம் ஒண்ணுமில்லை, நைட் டைம் தான, அது புருஷன், பொண்ணுக்கிட்ட பேச முடியும். நேத்து ரொம்ப நேரம் பேசிட்டு இருந்துச்சு. காலையில் தூங்கியிருக்கும் . வா" என அழைத்துச் சென்றார். ஆனாலும் பாலா சமாதானம் ஆகாமல் பேசிக் கொண்டே வர,

" நீ வாக்கிங் போக டிமிக்கிக் குடுக்கலாம்னு பார்க்காத " என்றார் பன்னீர்.

" டேய், யாரைப் பார்த்து, டிமிக்கிக் குடுக்குறேன்னு சொல்ற, வாங்கடா போட்டி வச்சுக்குவோம்" எனப் பாலா வீரமாக அழைக்க

" ரொம்ப உணர்ச்சி வசப்படாதடா, கீழ விழுந்து அடிபட்டைனாக்கும், உன் மகன் குண்டுக்கட்டா தூக்கிட்டுப் போயி, மில்லு பங்களால சிறை வச்சிடுவாப்ல" எனச் சுப்பு எச்சரித்தார்.

" ரொம்பச் செய்வானுல்ல, அவன் தூக்கிட்டுப் போக நான் விட்டுருவேனாக்கும். அவனுக்கு அவ்வளவு தைரியம் இருக்காக்கும், எத்தனை வருசமா இங்கே இருக்கோம், இடத்தை வாங்கின புதுசுல ஒரு தரம் அவுங்க அம்மாவுக்காக வந்ததோட சரி, கல்லு மனசுக் காரன், அவன் கூடவெல்லாம் போயி என்னால இருக்க முடியாது, அவன் பகுமானத்தைக் காட்ட கட்டி வச்சிருக்கப் பங்களாவுக்கு நான் போகமாட்டேன்" என வீம்பு பேசினார் பாலா.

" இது தான் உன் வீம்பு, அவனவன் மகன் சம்பாதிக்கிறதுக்கு , சாதிக்கிறதுக்குப் பெருமை படுவாங்க. நீயும் தான் இருக்கியே" எனச் சுப்புச் சத்தம் போட்டார்.

" அவன், அத்தனை சம்பாதிக்கிறது, எதுக்குன்னு கேக்கிறேன். ராஜியைத் தான் கடிக்க மாட்டேன்னு சொல்லிட்டான் , ஏதேதோ நடந்து போச்சு. அத்தனைக்கும் பிறகு பன்னீர் அவன்கிட்ட போய், உனக்கு மனசுக்கு பிடிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டு, நீயாவது சந்தோஷமா இருன்னு, சொன்னானா இல்லையா கேளு. அந்த மனசெல்லாம் என் நண்பனைத் தவிர வேற யாருக்குடா வரும். அவன் தான் திமிரெடுத்தவன் பதிலே சொல்லாமல் எந்திரிச்சுப் போனான்" எனப் பாலா கோபப் படவும்,

" விடுறா, ராஜா மனசில் என்ன இருந்ததோ, அதைத் தான சௌந்தரியும் சொல்லுது" என ராமு நண்பனைச் சமாதானம் செய்தார்.பன்னீர் தான் பாலாவின் வீம்பான போக்கைக் கடிந்து கொண்டே வந்தார். "இன்னும் எத்தனை காலத்துக்குடா வாழப் போறோம். இந்தத் தரம் சௌந்தரி போகும் போது, நீயும் கூடப் போற, ராஜாவோட இருக்க மனஸ்தாபத்தை விட்டுட்டு வா. இழந்தவனுக்குத் தான்டா வலி தெரியும். ராஜாவோட சமாதானமா போ. உனக்காக இல்லைனாலும், எனக்காக இதைச் செய். நீங்க அப்பா, மகன் பேசாமல் இருக்கிறதுக்கு , என் குடும்பம் காரணமாயிடிச்சேன்னு எனக்கு மனசில குத்திக்கிட்டே இருக்கு" என அவர் சொல்லவும், பாலாவும் உள்ளே உருகித் தான் போனார்.

ராமசாமி நடந்து கொண்டிருக்கும் போதே, பேரன் அபிராமிடமிருந்து போன் வந்தது. "ஹலோ ஓல்ட் மேன் ஹவ் ஆர் யூ" என்றான்.

" ஆரைப் பார்த்துடா ஓல்ட் மேன்னு சொன்ன. இந்தா ஓட்டப் பந்தயம் வச்சிக்கிட்டு இருக்கமாக்கும். ஒத்தைக்கு ஒத்தை போட்டிக்கு வாரியா" எனச் சவால் விட்டார் ராமு. அபிராம் ஹாஹாவெனச் சிரித்தவன், " ஓகே யங் மேன், உங்க பையன் பார்த்து வச்சிருக்கப் பொண்ணை வேணும்னா கல்யாணம் கட்டிக்குங்க. " என்றான்.

" இந்த லொள்ளு லோலாயம்தான வேணாங்கிறது, என்கிட்ட இப்படி ஆசை காட்டிப் போட்டு, உங்க ஆத்தாள்ட்ட போயி, இந்த வயசில எனக்குக் கல்யாணத்துக்குப் பொண்ணு கேக்குதுன்னு போட்டு விடுவ. வேணாம் சாமி" என்றார்.

போனை ஸ்பீக்கரில் போட்ட பாலா, " பேராண்டி நீ போட்டுக் குடுத்துடுவேன்னு தான் வேணாங்குறான். இல்லைனா பொண்ணு கட்ட ,உன் தாத்தன் ரெடியாத் தான் இருக்கான்" என வம்பிழுத்து விட்டார்.

" தாத்தூஸ், நீங்க எல்லாருமே யங் மென் தான், ஆளுக்கு ஒரு பொண்ணு பார்க்கவா" என அபிராம் கேட்கவும், " எங்களுக்குப் பொண்ணு பார்க்கிறது இருக்கட்டும், கூடவே திரியிறியே, உன் மாமனுக்கு ஒரு அத்தையைப் பாரு" என்றார் பாலா.

" அது ரொம்பக் கஷ்டமான ஜாப், எங்க மாமா ரேஞ்சுக்கெல்லாம், உலகத்தில பொண்ணே கிடையாது. அதுனால தான் மாம்ஸ் பேச்சிலராவே இருக்கார்" என்றவனிடம் ,

" உன் மாமனுக்குக் கொடி புடிச்சது போதும், நேத்து ஒரு பொண்ணைப் பார்க்கப் போனியே பார்த்தியா" எனக் கேட்டார் சுப்பு.

"அதுக்குள்ள அங்க வந்திருச்சா நியுஸ். அந்தப் பொண்ணு போட்டோவை அனுப்புறேன், ஆத்தா, அம்மத்தால்லாம் சரின்னு சொல்லட்டும் , அப்புறம் பார்ப்போம்" என ஏற்ற இறக்கமாகச் சொல்லவும்,

" ஏதோ வில்லங்கம் இருக்குமாட்டத்துக்கு, அனுப்பு பார்ப்போம்" என ராமசாமி பேசி முடித்துப் போனை வைத்தார்.

" இவன் ஒருத்தன் தான்டா, நம்ம எல்லாருக்கும் பக்கத்தில இருக்கப் பேரன். அவனுக்குக் கல்யாணம் பண்ணும் போது, நாலு தரம் விசாரிச்சு ,அவன் மனசுக்கு புடிச்சப் பொண்ணா பார்த்துத் தான் செய்யணும்" எனத் தீவிரமாகச் சொன்னார் பன்னீர். ஆம் என ஆமோதித்தனர் மற்றவர்.

No comments:

Post a Comment