Tuesday, 26 October 2021

யார் இந்த நிலவு -8

யார் இந்த நிலவு -8

பவானி சற்றுத் தாமதமாக எழுந்தவர் மணியைப் பார்த்ததும் விழுந்தடித்து எழுந்து குளித்து உடுத்திக் கொண்டு கீழே ஓடினார்.

" அம்மா, சாரிமா லேட்டாயிடுச்சு, சாரி, சாரி" எனப் பூஜையறையிலிருந்த அபரஞ்சியிடம் இறைஞ்சி விட்டு, கிச்சனுக்கு ஓடினார். அந்தந்த நேரம் தேநீர், மால்ட் எல்லாம் பெரியவர்களுக்குச் சென்று சேர்ந்துவிட்டதா என விசாரித்துக் கொண்டவர், தனக்கான சாயோடு வராண்டாவில் வந்து அமர, அங்கிருந்த ஸ்டோன் பெஞ்சில் சாரதாவும், சௌந்தரியுமாக ஆளுக்கொரு ஸ்பீக்கரில் கைலாஷ் வீட்டு வேலைக்காரர்களிடம் காசிப் கேட்டுக் கொண்டிருந்தனர். தூண்டி துருவும் வேலையைச் சௌந்தரி செய்ய, சராதா சுவாரஸ்யமாகக் கதையை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தார். சட்டென வேலைக்காரர்கள் பேச்சை முடித்துக் கொண்டு போனை வைத்து விட, " அடக் கருமம் புடிச்சவளே, சஸ்பென்ஸோட போனை கட் பண்ணிட்டா. சத்தியனுக்குப் போன் போடுவோம்" எனச் சௌந்தரி , சத்தியனுக்கு அழைக்க,

" ஆத்தா, அப்பா வர்றாருங்க. நீங்க போனை வைங்க. நானே அப்புறம் கூப்பிடுறேனுங்க" என அவனும் போனை வைத்தான். கைலாஷ் அங்குக் காதை தீட்டிக் கேட்டுக் கொண்டிருக்க, பவானி இங்குச் சுவாரஸ்யமாக இரண்டு மாமிகளையும் வேடிக்கை பார்த்தார்.

சௌந்தரி ,"இவனொருத்தேன்" என நொடித்துக் கொண்டவரை, "மகனுக்கே போனைப் போடு சௌந்தி" என்ற சாரதாவின் யோசனையில் அடுத்து டயல் செய்யும் முன், கைலாஷே அம்மாவுக்குப் போன் அடித்து விட்டார்.

"ராஜா, பெங்களூருக்கு போயிட்டு இரண்டு நாள் இருந்துட்டு வருவேன்னு பார்த்தேன். உடனே வந்துட்ட" என வியந்தார்.

" போன வேலை முடிச்சது வந்துட்டேன்" எனத் தான் ரணங்களைப் பெற்று வந்ததை நினைத்துச் சொல்லவும், " புரியுது, புரியுது. பெங்களூர்லருந்து அம்மா கேட்டேன்னு பேத்தியை கூட்டிட்டு வந்துட்ட, மருமகளை எப்பக் கூட்டிட்டு வருவ" எனக் கேட்கவும், சத்தமாகச் சிரித்தவர்,

" அதுக்குள்ள உளவுத்துறை ரிபோர்ட் வந்திருச்சா. ஆனாலும் நீங்க ரொம்பப் பாஃஸ்ட் தான்" என்றவர்,

"ரொம்பக் கற்பனையை வளர்த்துக்காதீங்க. அது வேலைக்கு வந்த பொண்ணு. ஒரு ஆபத்து நேரம் உதவியிருக்கேன், அவ்வளவு தான்" எனச் சொல்லவும்.

"இல்லைனாலும் பரவாயில்லை, ஏதாவது இருக்கிற மாதிரி சொல்லு, கற்பனையிழையாவது சந்தோஷமா இருந்துக்குறேன் " என்றவர், "எனக்கும் வயசாகுது , உன்னை ஒத்தையா விட்டுட்டு போயிடுவேனோன்னு மனசு பதறுது.

" ராசா, நீ மனசில நினைச்சப் பொண்ணு யாருன்னு சொல்லேன். அந்தப் பொண்ணு கைல, கால்ல விழுந்தாவது நான் உன்கூடச் சேர்த்து வைக்கிறேன்" என வழக்கமான கேள்வியையே மறுபடியும் கேட்கவும். சிரிப்பு மாறி, அமைதியானவர், அம்மா விடாபுடியாகக் கேட்கவும், " அவள் உயிரோட இருந்திருந்தா நானே கூட்டிட்டு வந்திருக்க மாட்டேனாம்மா. நான் தான் அவளைத் தேடிப் போகனும். அவள் வரமுடியாத இடத்துக்குப் போயிட்டாமா " எனக் குரல் கம்மியவரை,

" அந்த வார்த்தையைச் சொல்லாத ராசா, அம்மாவைத் தூக்கிப் போட்டுட்டு, அவளைத் தேடிக்கலாம்" எனச் சௌந்தரியும் உடைந்து பேச, " அத்தை" எனப் பவானி முறைத்தார்.

" இல்லமா சொல்லலை." எனப் பவானிக்குப் பதில் தந்தவர், " இங்க பாரு, மருமகள் உன்கிட்ட இப்படிப் பேசறதுக்குத் திட்டுது" என இயல்புக்குத் திரும்பியவர், அவர் அழைத்து வந்த பெண்ணைப் பற்றிக் கேட்கவும், " நீங்களே வந்து பார்த்துக்குங்கம்மா" என அம்மாவை தன்னிடத்தில் வரவழைக்கும் ஆர்வத்தைத் தூண்டினார் கைலாஷ். "வர்றேன், வர்றேன், நேத்து கிளம்புறேன்னு சொன்னதுக்கே உங்கப்பாவுக்குக் கோபம், சமாதானம் பண்ணிட்டு வர்றேன் " என்றவர் அபிராம் க்குப் பார்த்திருக்கும் பெண்ணைப் பற்றியும் துப்பறிஞ்சு விட்டுப் போனை வைத்தார் சௌந்தரி.

கைலாஷ்க்கு அதன் பிறகு தான் மருமகன் நினைவு வர அவனுக்குப் போன் போட்டார், ஆனால் போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. அவன் தாத்தாக்களோடு பேசிய பிறகு போனை சார்ஜில் போட்டிருந்தான்.

கைலாஷ் ராஜன் , தன் அம்மாவிடம் போனில் பேசும் போதே, அங்கிருந்த வேலைக்காரப் பெண் அடுப்படிக்கு ஓடியிருந்தாள். அம்மாவிடம் பேசிவிட்டு வைத்த பின் " இன்னைக்கு எந்த கருப்பு ஆடு" என்பார். ஏனெனில்  மகன் வீட்டை குன்னூரிலிருந்தே ஆட்டிப் படைப்பார் சௌந்தரி. கோவையிலிருந்த இரண்டு வீடுகளுமே அவருடைய ராஜாங்கத்துக்கு உட்பட்டது தான். அவர்களை அதிகாரம் செய்வதில் தான் அவருடைய பொழுதும் போனது. அதனால் கைலாஷ் வேலையாட்களை எதுவும் சொல்ல மாட்டார், ஆனால் அவர்கள் யாரென தனக்குத் தெரியும் என்று மட்டும் தெரியப் படுத்தி விடுவார். 

 

அம்மா கேட்கவும் தான், அபிராம் , ஆதிராவைத் தேடிக் கொண்டிருப்பது நினைவில் வர, அவனுக்கு போன் செய்தார். ஆனால் அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. யோசனையோடு அமர்ந்திருந்தவர் அருகில், " குட்மார்னிங் பாபாசாப்" என்றபடி வந்தாள் ஆதிரா. அந்தக் குரலில் நிமிர்ந்து பார்த்தவர், மாற்று உடையாக அவளுக்கு அளிக்கப்பட்டிருந்த நீளமான நைட் ட்ரெசில் பார்க்கவும், " குட்மார்னிங் டா மா" எனச் சிரித்தவர், "அழகான தேவதைக்குப் பாதிரியார் அங்கியை குடுத்துட்டாங்களே " என குறைபட்டவர், " என் கூட வா. வேணுங்கிற ட்ரெஸ்ஸை எடுத்துக்கோ" எனப் பங்களாவுக்குப் பக்கவாட்டிலிருந்த மற்றொரு கட்டிடத்திற்குக் கூட்டிச் சென்றார்.

 

" புது இடம் தூக்கம் வரலையாக்கும் " என விசாரித்தவரிடம், " ஏற்கனவே, சேர்மன் சாரை சொன்ன நேரத்துக்கு பார்க்கவரலைனு ப்ளாக் மார்க் இருக்கு. இப்பவும் தூங்கினேன். இது தேறாத கேஸ்னு, அவரும்  வெளிய விரட்டி விட்டுட்டா மே க்யா கரூங். " என்றாள். அவர் சிரித்துக் கொண்டவர், " உங்க மாஸி வந்து கூட்டிட்டுப் போற வரைக்கும் நீ என்னுடைய பொறுப்பு " என்றார். 

 

" மஸ்து ஹை, படியா மஸ்து " என்றவள், " ஆனால் ஒரு கண்டிசன், ஆயி எந்த அட்வான்டேஜும் எடுத்துக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. என்னையும் ஹாஸ்டலுக்கு மாத்தி விட்டுடுங்க." எனவும் அவருக்கு வருத்தமானது, ஒன்றும் பேசாமல் அந்த அறைக்குள் ஆதிராவை அழைத்துச் சென்றார்.


அங்கிருந்த துணிகளைப் பார்த்தவள், "யே, சப் க்யா ஹை" என விழி விரித்தாள். " இதெல்லாம் சாம்பில் பீஸ். ஒரு பக்கம் நெசவு துணி, பனியன் துணி, ரெடிமேடுன்னு எல்லாமே உண்டு கண்ணு, இதுல வேணுங்கிறதை எடுத்துக்க" என்றவர், அவள் மலைத்து நின்றவளைப் பார்த்துத் தானே அவளுக்கு அளவாக எடுத்துக் கொடுத்தார். 

 

" ஜ்யாதா நஹி சாஹியே, நாலு செட் போதும். ஆயி என் திங்க்ஸ் அனுப்பி விட்டுருவாங்க. இதோட பில் அனுப்பிட்டா, அதுவும் பே பண்ணிடுவாங்க " என்றாள் ஆதிரா. 

 

அவளை, ஆட்சேபனையாகப் பார்த்தவர், " அப்ப நீ பாபா ன்னு கூப்பிட்டது, வேலை கிடைக்கனும்கிறதுக்காகத் தான். இவன் பாபான்னு சொன்னா, மயங்கி வேலை கொடுத்துவான்னு சொல்லியிருக்க" என கைலாஷ் குற்றம் சுமத்தவுமே , ஆதிராவின் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் உருண்டது. 

 

" உங்களுக்கு நான் ஃபேக்கா தெரியிறேனா, அப்படின்னா எனக்கு எதுவுமே வேணாம். காம் பீ நஹி சாஹியே ,நான் என் ஆயிக்கிட்டையே போறேன். " என அவள் அந்த அறையை விட்டுக் கிளம்பவும். கைலாஷ்க்கு மனம் பொறுக்கவில்லை. அவள் அழுகை அவருக்கு பாருவை நினைவுறுத்த, "ரஜ்ஜும்மா நில்லுடா. நீ மட்டும் பாபாவுக்குக் காசு தர்றேன்னு சொல்லலாமா" என அவளைப் பிடித்து நிறுத்தியும் அவளது கேவல் அடங்கவில்லை. 

 

" நான் அப்படிப் பட்ட பொண்ணு இல்லை. என் ஆயி யார்க்கிட்டையும் நிறைய உரிமை எடுத்துக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. மோர் ஓவர், நான் என் காலில் நிற்க விரும்புறேன். இதுவரைக்கும் நான் யாரையும், மாஸி தவிர வேற யாரையும் ரிலேசன் சொல்லிக் கூப்பிட்டதும் இல்லை. உங்களை பாபான்னு சொன்னதும் வேலைக்காக மட்டும் இல்லை" என்றவளை, அணைத்துக் கொண்டவர், கண்களும் கசிந்து இருந்தது. 


" ரஜ்ஜும்மா, இது எந்த ஜென்ம பந்தம்னு தெரியலை. உன்னைப் பார்த்து அரை நாள் கூட ஆகலை, ஆனால் நீ அழுதா, அப்பாக்கு இங்க துடிக்குது பார்" என தன் நெஞ்சைத் தொட்டுச் சொன்னவர், அவளைக் கொஞ்சி, கெஞ்சி இனி சந்ததி எனச் சொல்லிக் கொள்ள யாருமற்ற தனக்கு , அவளுடைய தாய் அழைத்துச் செல்ல வரும் வரையாவது மகளாக தன்னோடே இருக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். இருவரும் சமாதானம் ஆகி, துணிகளை அள்ளிக் கொண்டு வந்தவர்கள், காலை உணவைச் சாப்பிட்டு உடை மாற்றிக் கொண்டு மில் அலுவலகத்துக்குச் சென்றார்கள். 

 

கைலாஷ் ராஜன், சங்கீதா என்ற பெண்ணை அழைத்து, ஆதிராவுக்கு தொழிற்சாலையைச் சுற்றிக் காண்பிக்கச் சொன்னார். 

" ஆதிரா  பேக்டரி முழுசும் ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டா சுத்திட்டு வா. அதுக்குப் பிறகு,  பேசுவோம்" என்றவர் , அவரது உதவியாளர் சம்பத் கொண்டு வந்த கோப்புகளைப் பார்க்க ஆரம்பித்தார். 

 

பெங்களூருவில், கௌரி தனது உடைமைகளை மட்டும், ஒரு ஹோல்டால் பேகில் எடுத்துக் கொண்டவர், தான் இருந்த இடத்தை விட்டு கிளம்பி பைரவி சொன்ன இடத்துக்கு செல்லத் தயாராகி, விடியும் முன்னரே மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டை அடைந்தார். 

 

முன்னதாக, நேற்றே தாங்கள் தங்கியிருந்த இடத்தை விட்டு கிளம்பியிருந்தவர், தன்னை ஆட்கள் பின் தொடர்வதை உணர்ந்து, அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, தலைமறைவாகியிருந்தார். 

 

ஆதிரா , பாதுகாப்பாக இருப்பதை அறிந்து, இனி தனக்கு இங்கே வேலையில்லை என பைரவி சொன்ன இடத்துக்கு கிளம்பினார். ஆனால் சரியான நேரத்தில் அவர் முன் வந்து நின்ற ஓர் வெளி நாட்டு வாகனம், பெரிதாக மிரட்டவெல்லாம் இல்லாமல், மந்திர வார்த்தையையும், ஒரு மோதிரத்தையும் காட்டவுமே, கௌரி வாயைப் பொத்திக் கொண்டு, பவ்யமாக ஏறினார். உள்ளிருந்தவர் தன் கையை நீட்ட, கௌரி தனது மொபைலை நீட்ட, அதிலிருந்து ஒரு குறுஞ்செய்தியை பைரவிக்கு அனுப்பி விட்டு, " மாஸி, போஸ்லே குடும்பத்துக்கு உங்கள் சேவை போதுமானது. இனி நீங்க எனது விருந்தினர்" என மர்மப் புன்னகையை சிந்திய அந்த வாலிபன், " அம்மாவும், மகளும் எந்தக் கோட்டைக் குள்ள இருந்தாலும், வந்து தூக்குவேன்" என முணு , முணுத்துக் கொண்டான் ஆதர்ஷ். 

 

அபிராம்க்கு இரவு, செய்தி தெரிந்ததிலிருந்தே பெங்களூரில் இருப்புக் கொள்ளவில்லை. கைலாஷ் சேலத்தில் இருக்கும் போதே , கிளம்பும் போது மனம் சரியில்லாமலிருந்த மாமன் என்ன செய்கிறார் என விசாரிப்பதற்காக  சத்தியனுக்கு போன் போட, அவன் ஆதிராவைப் பற்றிச் சொன்னான்.  கைலாஷ் கோடிட்டுக் காட்டியிருந்ததால் சத்தியன் அபிராமிடம் உண்மைச் சொல்லி விட, அடுத்த ஒருமணி நேரத்தில் கிளம்பி விட்டான். காலையில் கைலாஷ் போன் செய்த போது, சார்ஜ் இல்லாமல் செத்துக் கிடந்ததை உயிர்ப்பிக்க, ப்ளக்கில் சொருகியிருந்தான். 


அதிகாலையில் வந்த மகன், இரண்டு மணி நேரக் கோழித் தூக்கத்தை முடித்துக் கொண்டு, வழக்கம் போல் பணிக்குச் செல்லக் கிளம்பி  வந்ததைக்  கண்டு  கஸ்தூரிக்கு, மனம் பொறுக்கவில்லை. 


" அபிக்கண்ணு , காலையில தான வந்த, இன்னும் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கலாமில்லை கண்ணு. அவதி, அவதியா போகாட்டி என்ன. அப்படி ஒன்னும் உடம்பை கெடுத்துக்கிட்டு நீ சம்பாதிக்க வேணாம்" என வருத்தப்படவும் , அபிராம் மனதில், ' எதுக்கு இந்த அவதின்னு தெரிஞ்சுது. அம்மா டின்னு கட்டிப் போடும், அபிக் கண்ணு எஸ்கேப்டா' என மனதில் புலம்பியவன், “வேலை இருக்குமா’ என அம்மா சுவையாகச் செய்திருந்த இட்லியையும், பூரியையும் உள்ளேத் தள்ளிக் கொண்டு, அதிகம் பேச்சுக் கொடுத்து மாட்டாமலே ஓடிச் சென்றான். 


விஜய ரங்கன் சாப்பிட வந்தவர், அவசரமாகச் செல்லும் மகனை விநோதமாகப் பார்த்தார். மனைவியிடம், " நேத்து அந்த பொண்ணை பார்ட்டியில பார்த்தானாம். அவனுக்கு புடிச்சிருக்கா, எதாவது கேட்டியா" என வினவினார். 


" எங்கிங்க கேக்கிறது, விடியகாலைல தான் வந்தான், சரி லேட்டாத் தான போவான்னு பார்த்திட்டு இருக்கிறதுகுள்ளாற திடுதிடுன்னு இறங்கி வந்தான், இரண்டு பூரியைப் பிச்சுப் போட்டு ஓடிப் போயிட்டான்" எனப் பெற்றவர்கள் மகனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையிலேயே அதே போல் மின்னல் வேகத்தில் வந்தவன், மாடியேறி  தனது அறைக்குச் சென்று விட்டு, திரும்ப வரும் போது மொபைலும் கையுமாக வந்தவன்,


" மொபைல் எடுக்க வந்தேன், வர்றேன் மா பை" என அப்பாவைப் பார்க்கக் கூட இல்லாமல் கிளம்பி ஓடினான். இவ்வளவு பரபரப்பாகவும் ,ஆர்வமாகவும், அலைபேசியை மறக்குமளவு பதட்டமாகவும் செல்கிறானெனில்  மகனுக்கு ஏதோ ஆகிவிட்டது என உணர்ந்து கொண்டார் தந்தை. தனக்கு அப்படியான அனுபவம் வாய்க்கா விட்டாலும், நண்பனின் உணர்வுகளை அருகிருந்து பார்த்தவர் ஆயிற்றே. 


கே ஆர் மில்ஸ் வளாகத்தில் அபிராம் கார் உள்ளே நுழையும் போதே கைலாஷ் சிசிடிவியில் பார்த்து விட்டார். அவன் வேகத்தையும் அவசரத்தையும் பார்த்தவர் தனக்குள் சிரித்துக் கொண்டார். அவரும் ஒருகாலத்தில் இப்படி ஓடியவர் தான். நேராக தன்னிடம் வரட்டும் என இருந்தவர், சிந்தையில் தன்னை ஒப்பிட்டே மருமகனுக்காகக் கவலையும் குடி  கொண்டது. 


ஆதிராவை கூட்டிச் சென்ற சங்கீதா விலவரியாக ஒவ்வொரு இடத்தையும் விவரிக்காமல் விட மாட்டாள் என்பதும், ஓரிடத்தில் நிற்க மாட்டார்கள் என்பதும் அவர் அறிந்ததே, எனவே இப்போதைக்கு அபியின் கண்களில் ஆதிரா படமாட்டாள் , அதற்குள் அவனை உரசிப் பார்க்க எண்ணம்  கொண்டார். ஒரே நாளில் ஆதிரா அவரது மனதில் நெருங்கியிருந்தால் எனில் , தன்  வளர்ப்பு மகனின் வாழ்க்கை பற்றிய அக்கறையும் இருந்தது. 


மெயின் பில்டிங் முன் வண்டியை நிறுத்தியவன், அங்கிருந்த காவலாளியிடம் சாவியைத் தூக்கிப் போட்டு காரை பார்க் பண்ணச் சொல்லி விட்டு ஓடி வந்தான். 


கே ஆரை சந்திப்பதற்கு , அபிராம் க்கு மட்டும், எந்த கட்டுப்பாடும் கிடையாது. கிட்டத்தட்ட கே ஆரின் வாரிசாகவே அங்கு வளைய வருவான். எனவே கதவைத் தட்டவும் இல்லாமல், நேராக கைலாஷின் அறைக் கதவைத் திறந்து கொண்டு, " மாமா" என  வந்தவன், அவர் தனது  உதவியாளர் சம்பத்திடம் ஏதோ முக்கியமான விசயம் பேசிக் கொண்டிருக்கவும், "சாரி" என்ற படி எதிரே அமர்ந்தான். 


கைலாஷ் நிதானமாகத் தனது உதவியாளரோடு சேர்ந்து வேலைகளைப் பார்த்தவர், அரை மணியாவது அவன் தன் ஆர்வத்தை அடக்கி அமரட்டும் என தன் வேலையைப் தொடர்ந்தார் . ஆனால் அபிராம் அலைப்பேசியைப் பார்ப்பதும், மேஜையிலிருக்கும், பேப்பர் வெயிட், பேனா பென்சில் என அத்தனையையும் எடுப்பதும், வைப்பதுமாக ஆர்வ மிகுதியிலேயே இருந்தான். 

உதவியாளர் சம்பத் கோப்புக்களோடு வெளியேறவும், அவ்வளவு நேரம் இருந்த பொறுமை எல்லாம் காற்றில் பறக்க, "மாமா" என அழைத்தபடி ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டவன், " ஆதிரா எங்கிங்க மாமா" என்றான். 

 

" ஆதிரா யாரு" என்றார் அவர், " சும்மா விளையாடாதீங்க மாமா, உங்க கார்ல தான், பெங்களூரிலிருந்து டிக்கில மறைஞ்சு வந்தாலுன்னு  சத்தியன் சொல்லிட்டான். மறுபடியும் அதே  ஆளுங்க தான் துரத்தி  இருப்பாங்க. எங்கிங்க மாமா, வீட்டில இருக்குதுங்களா, இல்லை ஹாஸ்டல்லையா" என ஆர்வமாகக் கேட்டவனையே அவர் நிதானமாகப் பார்த்துக் கொண்டிருக்க, " என்னங்க மாமா" என்றான். 

 

" அபி, நான் சொல்றதை கவனமா கேளு. நீ போற வேகம் சரியில்லை. அந்தப் பொண்ணைப் பார்த்து உடனே என்ன செய்யப்போற, கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்கப் போறியா." என அவர் சற்றே கடுமையாகக் கேட்கவும். 

 

" என்னங்க மாமா, நீங்களே இப்படி கேக்குறீங்க " என முகம் கூம்பியவனை, "வேற எப்படிக் கேட்கச் சொல்ற, ஒரு தொழில் நடத்துறவன் மாதிரியா நடந்துக்கிற. டீன்ஏஜ் பையனாட்டமா, ஒரு பொண்ணைப் பார்க்கவும் வேலையை விட்டுட்டு நடுராத்திரில கிளம்பி ஓடி வந்திருக்க. இன்னைக்கு அங்க முடிக்க வேண்டிய வேலை எத்தனை இருக்கு. அந்தப் பொண்ணு என் பாதுகாப்புல இருக்குன்னு தெரியும், அப்புறம் என்ன" என்றவர். 

 

" உனக்கு எப்ப என்னச் செய்யனுமுன்னு எனக்குத் தெரியும். வேலையைப் பார்க்கக் கிளம்பு. அந்தப் பொண்ணு பின்னாடி சுத்துற வேலையெல்லாம் வச்சுக்கக் கூடாது" எனக் கண்டிப்பான மாமனாக திடீர் அவதாரம் எடுக்கவும் அபிராம் அதிர்ந்து போனான். 

 

" ஏன் மாமா, நீங்க தானுங்க, மனசுக்கு புடிச்சப் பொண்ணை சொல்லு, உலகமே எதிர்த்தாலும் கட்டி வைக்கிறேன்னு சொன்னீங்க." என அவன் வார்த்தைகளை முழுங்கவும், 

 

" அந்தப் பொண்ணு பிரச்சனை பெரிசாத் தெரியுது. நீ இதிலிருந்து தள்ளியே இரு. நான் யாரு என்னன்னு விசாரிச்சுக்கிட்டு, எனக்கு சரின்னு பட்டுச்சுனா, கவனமாக் கேளு எனக்கு சரின்னு பட்டுச்சுனா தான் , உங்க அப்பாட்ட பேசுவேன்" எனவும், ஒளி இழந்த மின்விளக்கு  போல் அவன் முகமும் இருண்டதில், அவருக்கும் மனம் சுணங்கியது, ஆனால் செய்து தான் ஆகவேண்டும்.

 

" உங்கக் கிட்டயிருந்து, இதை நான் எதிர்பார்க்கலை மாமா" என்றவனை முறைத்தவர், " இதுக்கப்புறம் உன் இஷ்டம். ஆனால் அந்தப் பொண்ணுக்கு முன்னாடி நான் நிற்பேன்," எனக் கறாராகச் சொல்லவும், 

 

" உங்களை மீறி எதுவும் செய்யமாட்டேன் மாமா. ஆனால் என் காதலுக்கு வலிமையிருக்கு, அது அவளை என்கிட்டே  கொண்டு வந்து சேர்க்கும். நீங்களே அதை நடத்தியும் வைப்பீங்க " என்றவன், வந்ததை விட வேகமாக வெளியேறினான். 

 

கைலாஷ் வேதனையோடு தலையைப் பிடித்துக் கொண்டு, 'இந்தப் பொண்ணு ‘பாரு’ மாதிரி இருக்கலாம். ஆனால் நீ இன்னொரு கைலாஷ் ராஜனா மாற வேண்டாம் மாப்பிள்ளை' என மனதில் புலம்பிக் கொண்டவர், தனது அலைபேசியை எடுத்து ,

 

 தனது வாழ்க்கையையே புரட்டிப்போடும் உண்மைகள் வெளிவரப் போகிறது என்பதை அறியாமல் , தன்  தொழிலுக்கு உதவும் டிடெக்ட்டிவ் ஏஜெண்டை தொடர்பு கொண்டவர், ரஞ்சன், எனக்கு உங்களால் ஒரு வேலையாகணும், இது கொஞ்சம் பெர்சனலும் கூட “ என்றவர், ஆதிராவை பற்றியும், மீண்டும் தன்னோடு மோதத்  துடிக்கும்  சோலாப்பூர்காரர்கள் பற்றியும் விசாரிக்கச் சொன்னார். 

 

அபிராம் மீண்டும் ஒரு கைலாஷாக மாற வேண்டாம் என அவர்கள் சந்திப்பை தவிர்க்க நினைக்க, விதி மருமகன் மூலமாகவே,மாமனுக்கும் வம்பை விலைக்கு கொண்டு வந்தது. 


No comments:

Post a Comment