Saturday, 26 July 2014

திருவிளையாடற் புராணம் பகுதி-3

திருநாட்டுச்சிறப்பு 

திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர், கடவுள் வாழ்த்து பகுதியை அமைத்த பின்னே நூற் செய்த காரணம் மற்றும் அவையடக்கம் ஆகிய பகுதிகளை அமைத்துள்ளார்.

நூற் செய்த காரணம்.
அண்ணல் பால் தெளிந்த நந்தி அடிகள் பால்    சனற்குமாரன் 
உள் நிறை அன்பின் ஆய்ந்து வியாதனுக்கு உணர்த்த    வந்தப் 

புண்ணிய முனிவன் சூதற்கு ஒதிய புராணம் மூ ஆறு 

எண்ணிய இவற்றுள் காந்தத் தீச சங்கிதையின்       மாதோ
அண்ணல் பால் தெளிந்த-என்பது சிவபெருமானிடம் உபதேசம் பெற்று தெளிந்த நந்திஎம்பெருமான்  அதனை சனகர் குமாரர் நால்வர்க்கு உணர்த்த,அவர் உள்நிறை அன்பின் ஆய்ந்து வியாசனுக்கு உணர்த்த,அதை பெற்ற அப்புண்ணிய முனிவன் சூத முனிவர்க்கு எடுத்துரைத்தது மூஆரு -பதினெட்டு புராணங்கள்.சிறந்திடும் இவ்வடநூல் தன்னை தென் சொல்லால் சொல்ல ,பெரியோர் வேண்டுகோளும் விடுத்திட தளம்,மூர்த்தி,தீர்த்த சிறப்புகளையும் ,அவற்றுள் இறைவனின் அருள் விளையாடல் எட்டெட்டு .அத்துடன் அருச்சனை,வினை ஆகா அறுபத்து எட்டு என்று படலமாக பரஞ்சோதி மாமுனி வகுத்த அருள்நிறை திருவிளையாடற் புராணம் கேட்பீர்.
அவையடக்கம்.
நாயகன் கவிக்கும் குற்ற நாட்டிய கழக மாந்தர் 

மேய அத் தலத்தினோர்க்கு என் வெள்ளறி உரையில்            குற்றம் 

ஆயுமாறு அரிது அன்றேனு நீர் பிரித்து அன்னம்       உண்ணும் 
தூய தீம் பால் போல் கொள்க சுந்தரன் சரிதம்         தன்னை.
நாயகன் -நம் புராண நாயகனார் ஆகிய சிவபெருமானார் கவிக்காக,தருமி என்ற புலவனுக்காக பாடல் புனைந்த புனித தலம் ,அதையும் குற்றம் நாட்டிய மாந்தர் வாழ்ந்த தலம் ,அத்தகைய தலப்புரானமாய் அமைந்த இந்த நூல் பரஞ்சோதி மாமுனிவன் ,அங்கயற்கண் அம்மை ஆசியோடு உரைத்த நூல் .இதில் குற்றம்,குறை இருப்பினும்,பால் மட்டும் பிரித்து அருந்தும் அன்னம் போல் ,சுந்தரன் சரிதம் அதன் நல்லனவற்றை மட்டும் அகம் கொள்வீர்.
திருநாட்டு சிறப்பு.

புராணம் என்றும் அமையுங்கால் நாட்டுசிறப்பு ,நகரசிறப்பு ,தலம் ,மூர்த்தி,கோவில் தீர்த்தம் மற்றும் இதில் கைலாய சிறப்பினையும் இதில் செப்புகிறார் முனிவர்.
 திருநாட்டு சிறப்பு எனும் இப்பகுதியில் 
வான்சிறப்பு,
ஆற்று  சிறப்பு,
மலைசிறப்பு ,
திணை மயக்கம்,
உழவர் செயல்கள் மற்றும் 
தமிழ் சிறப்பையும் உரைக்கின்றார்.
கறை நிறுத்திய கந்தர சுந்தரக் கடவுள் 

உறை நிறுத்திய வாளினால் பகை இருள் ஒதுக்கி 

மறை நிறுத்திய வழியினால் வழுதியாய்ச் செங்கோன் 
முறை நிறுத்திய பாண்டிய நாட்டு அணி அது             மொழிவாம்.
             நஞ்சுதனை தன கண்டத்தில் தாங்கிய சுந்தரக் கடவுள் பாண்டியன் மருகனாகி வாளினை பகை இருள் ஒதுக்கி,செங்கோலோச்சி,தம் வகுத்த மறையை தானே ஓதி நீதி நிறை வழுவாமல் முறை நிறுத்திய பாண்டிநாட்டு அணி மொழிவோம் என்கிறார்.
வான்சிறப்பு 
தெய்வ நாயகன் நீறு அணி மேனி போல் சென்று 
                     பௌவம் ஏய்ந்து உமை மேனி போல் பசந்து பல்     உயிர்க்கும்
எவ்வம் ஆற்றுவான் சுரந்திடும் இன் அருள் என்னக்
கௌவை நீர் சுரந்து எழுந்தன கனைகுரல் மேகம்.
                   தெய்வநாயகன் மேனிபோல் வெண்மையாய்  இருந்த ஒலிகுரல் மேகம் கடல் நீரை பருகி உமையவள் மேனிபோல் பசியநிறம் கொண்டது.
பின்னர் பல்வகை உயிர்களுக்கும் துன்பம் தணிப்பான் போல இறைவன் அருளாய் நீரை சுரந்து ஒல் என இடித்து எல் எனும் சூரியனை பகைத்து மின்னல் எனும் வாள்படை கொண்டு வானவில்லை வளைத்து அம்பென நீரை பாய்ச்சி கொடையாகிய பகைவன் மீது வெம்போர் புரிந்தது என மழை வளம் மிக்க பாண்டிநாடு என்றும் அவை அகத்திய முனிவன் வாழ் இருப்பிடமாம் பொதிகை மலை மீது பொழிந்தது என்றும் உரைக்கிறார்.
ஆற்றுசிறப்பு 
கரு நிற மேகம் என்னும் கச்சு அணி சிகரக் கொங்கை 
அருவி ஆம் தீம்பால் சோர அகன் சுனை என்னும்    கொப்பூழ்ப் 
பொருவில் வேய் எனும் மென் தோள் பொதியம் ஆம்    சைலப் பாவை 
பெருகு தண் பொருநை என்னும் பெண் மகப் பெற்றுள்   அன்றெ.
    இங்கு பொதிய  மலையின் திருமகளாய் பொருணை நதியை உருவகம் செய்கிறார்.அகன்சுனை என்ற கொப்பூழினையும் ,மெல்லிய மூங்கிலை தோளாக கொண்டவளான போதியம்மலை பாவை,கரும் மேகம் எனும் கச்சை அணிந்து ,சிகரமாகிய கொங்கையில் இருந்து மதுரம் பொருந்திய தீம்பால் பெருக அதுவே பொருநையாம்  அவள் மகவு ஆனது என்றார்.கல் என ஒலித்து வீழ்ந்த கடிய வேகத்தினை உடைய பொருநை நீராகிய குழந்தை முல்லை நிலத்தினில் தவழ்ந்து உழவர்களின் பண்ணை தோறும்  விளையாடுகிறாள் என்றார்.


ஈறி லாதவ ளொருத்தியே யைந்தொழி லியற்ற

வேறு வேறுபேர் பெற்றென வேலைந ரொன்றே
ஆறு கால்குளங் கூவல்குண் டகழ்கிடங் கெனப்பேர்
மாறி யீறில்வான் பயிரெலாம் வளர்ப்பது மாதோ.
    அழிவு இலாவதளாகிய சிவசக்தி ஒருத்தியே படைப்பு முதல் ஐந்தொழில் புரிய வெவ்வேறு பெயர்பெற்றார்போல,நதி,கால்வாய்,குளம்,
கிணறு ஊற்று எனப்பெயர் கொண்டு பொருநை நல்லாறு எண்ணிறைந்த உயர்ந்த பயிர்களை வளர்கிறது என்றார்.

உழவர் செயல்கள் 
களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்
குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க
வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
அளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார்
.
               உழவர்கள் பொன்னேரை பூட்ட எருதுகளும்,எருமைகடாக்களும் மகிழ்ச்சியுடன் வர, அவை அன்னையரின் வாயினின்று வரும் பாடலுக்கு மனம் மகிழ்கின்ற சிறுவர்களை போல் மருதப்பண்  பாட்டுக்கு மகிழ்ந்து உழவர் சொல்லுக்கு இணங்க உளவு தொழில் செய்தன என்பார்.பல வண்ண எருதுகளை பூட்டி வழிய கால்களை உடைய உழவர்,பூமியில் உழவு செய்ய பூமியின் அங்கம் கிழித்து செந்நெல் பயிர்கள் செழித்து அசைந்து ஆடின என்பார்.
கற்றவை களைந்து தூற்றிக் கூப்பியூர்க் காணித் தெய்வம்
அற்றவர்க் கற்ற வாறீந் தளவைகண்* டாறி லொன்று
கொற்றவர் கடமை கொள்ளப் பண்டியிற் கொடுபோய்த் தென்னா
                    டுற்றவர் சுற்றந் தெய்வம் விருந்தினர்க் கூட்டி யுண்பார்.
                                 செழித்து வளர்ந்த  பயிர்களை வைகோல் களைந்து தூற்றி நெல்மணிகளை பொலிகலாய்  குவித்து,அதில் கிராம தேவதை,வளியவர் ,ஆறில் ஒரு பகுதி வரியை மன்னவர்க்கு என அளவை அளந்து கொடுத்து பின்னர் விருந்தினர் உபசாரம் செய்து,தாமும் உண்பர் என உழவர் தம் புகழ் செப்புகிறார். 
திணை மயக்கம்.
இன் தடம் புனல் வேலி சூழ் இந் நில வரைப் பில் 

குன்ற முல்லை தண் பணை நெய்தல் குலத்திணை   நான்கும்
மன்ற உள்ள மற்று அவை நிற்க மயங்கிய மரபின்
ஒன்றொடு ஒன்று போய் மயங்கிய திணைவகை       உரைப்பாம்.
                       இனிய பாண்டிய நாடானது அகன்ற நீர் வேலியால் சூழப்பட்ட பகுதி ஆகும்.இங்கு உறர்ந்த நாள் வகைதிணைகளும்,குறிஞ்சி,முல்லை,

மருதம்,நெய்தல் ஆகியன ஒருதலையாக,ஒன்றோடு ஒன்று நெருங்கி உள்ளது அதன் சிறப்பினை உரைப்போம் என்றார்.
               முல்லை நிலத்தில் பசுக்களை மேய்க்கும்,இடையவர்கள்,குறுந்த மரத்தின் மீது,விரைந்து ஏறி ,அதன் பால் படர்ந்த மிளகு கொடிகளை உகுப்பர் ,அதனை வேட்டுவ  சிறுமிகள் பொன்பதித்த சிறு கிண்ணியில் முல்லை சோறென கொண்டு அதில்,தேன் விரவி விளையாடுவர்.
            மருத  நிலத்தில் எருமை,தன் கன்றோடு குளிர் கரும்புகளை உண்டு பொன் போல் பூக்களை உதிர்க்கும் வேங்கை மர  நிழலில் உறங்கும்.
முறம் போன்ற செவிகளை உடைய களிறுகள்,குறுஞ்சி நிலத்தின் முதிரா தினை பயிர் உண்டு, மறுத்த மாற நிழலின் கீழே,தான் துயுலுமிடம் அதுவென கருதி தலை சாய்த்து உறங்கும்.
             நெய்தல் நிலத்தில் வேட சிறுமியர் கட்டிய மண் வீடுகளை அலைகள் விரைந்தோடி வந்து, அழிக்கும் ,அதன் பால் சினந்த சிறுமியர் பற்றட்டார்  போல் மணிகளை வீச,அதை பரதவர் சிறுமியர் பொருக்கி யெடுத்து சங்குடன் சேர்த்து கோர்ப்பார் என்றார்.
மலை சிறப்பு 
அவம் மிகும் புலப் பகை கடந்து உயிர்க்கு எலாம்       அன்பாம்
நவமிகும் குடை நிழற்றி மெய்ச் செய்ய கோல் நடத்தி
சிவ மிகும் பரஞான மெய்த் திருவொடும் பொலிந்து
தவம் இருந்து அரசு ஆள்வது தண் தமிழ்ப் பொதியம்.
உயிர்கள் அனைத்திற்கும் கேடு மிகுந்த புலன்களின் பகையை வென்று,அருள் எனும்,புதுமை குடையை நிழலாக செய்து,வாய்மை எனும் செங்கோல் நடத்தி சிவ ஞானமாகிய அழியா செல்வத்துடன் ,சிவபேறு அடைய காரணமாய் தவமாய் தவமிருக்கும் செந்தமிழை உடைய பொதியமலை என்பார் முனிவர்.
மாயவன் வடிவாய் அது வைய மால் உந்திச்
சேய பங்கயமாய் அது தென்னன் ஆடலர் மேல்
போய மெல் பொகுட்டு ஆயது பொதியம் அப்     பொகுட்டின்
மேய நான்முகன் அகத்தியன் முத்தமிழ் வேதம்.
மாயவன் வடிவு போன்றது பாண்டிய நாடு ,அதில் தொற்றிய தாமரை போன்றது பொதிய  மலை,அதில் தோன்றிய நான்முகன் போன்றவர் அகத்தியன்,நான்முகன் வேதம் போன்றது,அகத்தியன் திருவாய் உத்தித்த செந்தமிழ்.
பொதியிலே விளைகின்றன சந்தனம் பொதியின் 
நதியிலே விளைகின்றன முத்தம் அந் நதி சூழ் 
பதியிலே விளைகின்றன தருமப் அப் பதியோர் 
மதியிலே விளைகின்றன மறை முதல் பத்தி
பொதிகை மலையினில் விளைகின்றன சந்தனம்.அதன் மகளாம் பொருநை நதியில் விளைகின்றன  முத்துக்கள்.அப்பொருநையாற்றின் சூழ் நகரில் உண்டாகின்றன இறைவனை துதிக்கும் அடிபத்திகள்,அதனால் அந்நகர் வாழ் மனிதர் மத்தியில் விளைகின்றன மறைகள்.
இவ்வாறு மலையின் சிறப்பை எடுத்துரைத்தார் மாமுனிகள்.

Wednesday, 23 July 2014

திருவிளையாடற் புராணம் பகுதி-2

கடவுள் வாழ்த்து 
பரஞ்சோதி முனிவர் தனது திருவிளையாடற் புராணம் என்ற இந்த நூலில் கடவுள் வாழ்த்து பகுதியில் 
சிவம்-சக்தி, 
பரசிவம்-சிற்சக்தி,
சொக்கநாதர்-அங்கயற்கண்ணம்மை ,
சோமசுந்தரர்-தடாதகை பிராட்டி , என அம்மையப்பனை பல்வேறு வகைபிரித்து சொல்லாடல் செய்து துதி செய்துள்ளார்.
அதன் பின்னே 
வெள்ளி அம்பலவாணர் 
தட்சிணாமூர்த்தி 
சித்திவிநாயக கடவுள் 
முருகக்கடவுள் 
நாமகள் 
திருநந்தி தேவர்  எனும் வரிசையில் சிவகுடும்பத்தை போற்றியுள்ளார்.
ஆளுடைய பிள்ளை 
ஆளுடைய அரசுகள் 
ஆளுடைய நம்பிகள் 
ஆளுடைய அடிகள் 
சண்டேசுரர்  என திருத்தொண்டர்களை வணங்கி கடவுள் வாழ்த்து பகுதியை நிறைவு செய்கிறார்.

சிவம்-சக்தி.
வென்று உளே புலன் களைந்தார் மெய் உணர் உள்ளம்                                     தோறும் 

சென்று உளே அமுதம் ஊற்றும் திரு அருள் போற்றி                                     ஏற்றுக் 
குன்று உளே இருந்து காட்சி கொடுத்து அருள் கோலம்                                     போற்றி 
மன்று உளே மாறி ஆடும் மறைச் சிலம்பு அடிகள்     

மலை போன்ற   இடபம் தனில் ஏறி காட்சி தரும்,தன பக்தனாம் பாண்டியன் வேண்டுகோளின் படி கால்மாற்றி ஆடும்,ஐம்புலம் தனை உயிர்க்குள்ளே பொய் களைந்து ,மெய் உள்ளம் அதை அன்பருக்கு அருளும் திருவருள் போற்றி.
சுரும்பு முரல் கடி மலர்ப்பூம் குழல் போற்றி உத்தரியத்                          தொடித் தோள் போற்றி 

கரும் புருவச் சிலை போற்றி கவுணியர்க்குப் பால்                          சுரந்த கலசம் போற்றி 
இரும்பு மனம் குழைத்து என்னை எடுத்து ஆண்ட அம்                          கயல் கண் எம் பிராட்டி 
அரும்பும் இள நகை போற்றி ஆரண நூபுரம் சிலம்பும்                          அடிகள் போற்றி.

வண்டார்குழலும் ,வளை தோலும், வில் புருவமும்,இளநகையும் ,சம்பந்தனுக்கு பால் சுரந்த கலசமுமாக,வேதமாகிய சிற்சிலம்பும் உடைய அன்னையே ,என்னை எடுத்தாண்ட அங்கையர்கன் அம்மையே போற்றி.
சிவமும் -சக்தியும் உலகின் பொதுவில் வைத்து வணங்குகிறார்.

பரசிவம்-சிற்சக்தி

பூ வண்ணம் பூவின் மணம் போல மெய்ப் போத             இன்பம் 
ஆ வண்ண மெய் கொண்டவன் தன் வலி ஆணை          தாங்கி 
மூ வண்ணன் தன் சந்நிதி முத் தொழில் செய்ய                 வாளா
மே வண்ணல் அன்னான் விளை யாட்டின் வினையை     வெல்வாம்.

பூவும்,நிறமும்,மணமும் ,போன்ற திருமேனி கொண்ட படைத்தல்,காத்தல்,அழித்தல் எனும் முத்தொழில் புரிகின்ற மூ வண்ணல் மூவர்க்கும் மேலாம் பரசிவம் அருளை பெற்று வினையை வெல்வோம்.

அண்டங்கள் எல்லாம் அணு ஆக அணுக்கள்                   எல்லாம் 
அண்டங்கள் ஆகப் பெரிது ஆய்ச் சிறிது ஆயின்             ஆனும் 
அண்டங்கள் உள்ளும் புறம் புங்கரி ஆயின் ஆனும் 
அண்டங்கள் ஈன்றாள் துணை என்பர் றிந்த நல்லோர்

அண்டத்தினுள்ளே அனுவைக்காட்டி ,அனுவிற்குள்ளே அண்டம் காட்டி,ஆறாறு தத்துவம்[36 தத்துவங்கள் ] ஈன்ற சிற்சக்தி அவளை துணையாய் கொள்வோம்.
பரசிவம்-சிற்சக்தி இரண்டும் சைவ சித்தாந்தம் வழி நின்று துதிக்கிண்றார்.
சொக்கநாதர்-அங்கயற்கண்ணம்மை 
மதுரை மானரில் கோவில் கொண்டு கொலு வீற்றிருக்கும் அம்மைக்கும்,அப்பனுக்கும் இப்பெயர் கொண்டு நாம் வழிபடுகிறோம்.
எனவே பரஞ்சோதி முனிவர் சொக்கநாதர்-அங்கயற் கண்ணம்மை வாழ்த்து துதி செய்கின்றார் அவர் பாடல் வரிகள் இவ்வாறு அமைகின்றன.

பூவின் நாயகன் பூமகள் நாயகன் 
காவின் நாயகன் ஆதிக் கடவுளர்க்கு 
ஆவி நாயகன் அம் கயல் கண்ணிமா 
தேவி நாயகன் சே அடி ஏத்துவாம்


பூவின் நாயகன்-பிரம்மன்,பூமகள் நாயகன்-நாராயணன்,காவின் நாயகன்-இந்திரன் ஆகியோரெல்லாம் வணங்கும் ஆதி நாயகனாம்-சிவபெருமான், மலையத்துவசன் மகளாக அவதரித்து,மீனாட்சி என்ற பட்டபெயர் கொண்ட பட்டத்தரசி மணமுடிக்க,இறங்கி வந்த ஈசனின் அழகு கண்டு மதுரை நகர் மக்கள் சொக்கி நின்றமையால் சொக்கன் என்று பெயர் பெற்ற மாதேவி நாயகன் அடி போற்றி வணங்குவோம் .

பங்கயல் கண் அரிய பரம் பரன் உருவே தனக்கு                             உரிய படிவம் ஆகி
இங்கயல் கண் உலகம் எண் இறந்த சரா சரங்கள்                                ஈன்றும் தாழாக்
கொங் கயல் கண் மலர்க் கூந்தல் குமரி பாண்டியன்                   மகள் போல் கோலம் கொண்ட
அம் கயல் கண் அம்மை இரு பாதம் போது                   எப்போதும் அகத்துள் வைப்பாம்.
பங்கயன் ஆகிய பிரமனும் நெருங்க இயலாத பரம் பரனாம் பர சிவனை தன் பாதியை உடைய அம்பிகை,அவன் புறம் விடுத்து வேறு உலகம் புகுந்தால். நிற்பனவும்,நடப்பனவும் ஆகிய உயிர்கள் நிறைந்த சராசரம் ஈன்றவள்,பாண்டியன் மகளாய் கோலம் கொண்டால் அவள் தன பங்கய பாதம் பணிவோம்.

சோமசுந்தரர்-தடாதகை பிராட்டி 
திருவிளையாடற் புராணம் என்ற பெயர் கொண்ட இப்புராணத்தின்,தலைவன்,தலைவியாக வந்தருளி அப்பனும்,அம்மையும் கொண்ட நாமங்கள் சோமசுந்தரர்-தடாதகை பிராட்டி.

சடை மறைத்துக் கதிர் மகுடம் தரித்து நறும் கொன்றை                     அம் தார் தணந்து வேப்பம் 
தொடை முடித்து விட நாகக் கலன் அகற்றி மாணிக்கச்                     சுடர்ப் பூண் ஏந்தி 
விடை நிறுத்திக் கயல் எடுத்து வழுதி மரு மகன் ஆகி                                மீன நோக்கின் 
மடவரலை மணந்து உலக முழுது ஆண்ட சுந்தரனை                            வணக்கம் செய்வாம்.

தன்  புரிசடை மறைத்து கதிர்மகுடம் தரித்து,நறுங்கொன்றை மாலை தவிர்த்து,வேம்பு மாலை முடித்து,விடநாக காலன் அகற்றி,மனிசுடர் பூண் எனது,விடை வாகனம் நிறுத்தி,கயல் எடுத்து,பாண்டியன் மருகனாய்,மீனாட்சியை மணந்து,உலகம் முழுமையும் ஆண்ட சுந்தரனை வணங்குவோம்.

செழியர் பிரான் திரு மகளாய்க் கலை பயின்று முடி                    புனைந்து செம் கோல் ஓச்சி 
முழுது உலகும் சயம் கொண்டு திறைகொண்டு நந்தி                  கணம் முனைப் போர் சாய்த்துத் 
தொழு கணவற்கு அணி மண மாலிகை சூட்டித் தன்                    மகுடம் சூட்டிச் செல்வம் 
தழை உறு தன் அரசு அளித்த பெண் அரசி அடிக்                   கமலம் தலை மேல் வைப்பாம்.
செழியர் பிரான் மகளாய் அவதரித்து,கலை யாவும் பயின்று,திருமுடி புனைந்து செங்கோல் செலுத்தி மூவுலகும் செயம் கொண்டு,திறை கொண்டு ,பூதகனத்தை முனைப்போரில் சாய்த்து,ஈசனார்க்கு மணமாலை சூட்டி,தன் மகுடமும் சூடி,செல்வம் முதலான அரசும் அளித்த பென்னரை அவள் அடிக்கமலம் தலை மேல் வைப்போம்.
இதனோடு வெள்ளி அம்பலவானரை -மாறன் -பாண்டியன் ,இறைவன் கால் தூக்கி  ஆடும் நடம் கண்டு,மனதில் ஒருபாதம் தனில் நிக்கும் இறைவனே உன் திருப்பதம் நோகாதோ  என மனம் வாட,அவன் துயர் களைய கால் மாற்றி நடம் ஆடி பவக்கடல் தனில் உழலும் மக்கள் நற்கதி அடைய அருளிய அண்ணலை வணங்குவோம் என்றும்.

கல் ஆலமரம் கீழே அமர்ந்து ஆறு அங்கங்கள் ஆகிய 
சிக்க்ஷை -உச்சரிப்பு,
வியாகரணம்-இலக்கணம்,
சந்தஸ் -சந்தம்,அடிமுறை 
மந்திரம்-நிறுத்தம்,வேர் சொல் 
ஜோதீஸ் -வான சாஸ்திரம் 
நிகண்ட் -சமய சொல்கள்-ஆகிய ஆறு அங்கங்களையும்,நன்கு மறைகள் ரிக்,யஜுர்,சாமம்,அதர்வணம்-ஆகிய வேதங்களை,சகாதி குமாரர்களுக்கு நல உபதேசம் தனை சொல்லாமல் சொல்லியவ போற்றி என உரைக்கிறார்.


Monday, 14 July 2014

திருவிளையாடற் புராணம் பகுதி-1

தென்னாடுடைய சிவனே போற்றி 
என்னாட்டவர்க்கும் இறைவா  போற்றி.

திருவிளையாடற் புராணம்  பகுதி-1

                   திருவிளையாடற் புராணம் மதுரை காண்டம்  என்பதை முதற் பகுதியாக கொண்டு தொடங்குகிறது.எம்பெருமான்  மதுரையெம்பதியில் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இதில் இடம் பெறுகின்றன.இந்த காண்டமானது.புராணத்தின் உள்ளே செல்லும் முன்னே காப்பு செய்யுள் மற்றும் வாழ்த்து துதி செய்யப்பட்டு பயணப்படுகிறது.

படலங்கள் 
காப்பு 
வாழ்த்து.
நூற்பயன் கடவுள் வாழ்த்து.
திரு நாட்டு சிறப்பு.
திரு நகர சிறப்பு 
திருக்கைலாய சிறப்பு 
தலச்  சிறப்பு 
தீர்த்தச் சிறப்பு 
மூர்த்திச் சிறப்பு 
                   
                   என எல்லா சிறப்புகளையும் அழகாக பாடல் செய்த பின்னரே புராணம் நோக்கி பயணிக்கிறது.இவை அனைத்தையும் சிவஞான பரஞ்சோதி முனிவர் வர்ணிக்கும் விதம் படிக்க படிக்க இன்பம் தரும். இறைவனின் நாமாம் கேட்க புண்ணியம் கோடி பெரும்.
                      
                        அத்தனை பாடல்களையும் சொல்லி அர்த்தம் தர நான் தமிழ் ஆசான் அல்ல.எம்பெருமான் பாகத்தில் திளைக்க எண்ணி அவரை பற்றிய சிறு செய்திகளை பகிர்ந்து நான் பெற்ற இன்பத்தை ஒரு சிலருடன் பகிர அவன் தந்த அருள் என்றே சிலவற்றை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.


                       காப்பு 
சத்தி ஆய்ச் சிவம் ஆகித் தனிப் பர 

முத்தி ஆன முதலைத் துதி செயச் 

சுத்தி ஆகிய சொல் பொருள் நல்குவ 
சித்தி யானை தன் செய்ய பொன் பாதமே

                           மதுரை மாநகரில் கோவில் கொண்டிருக்கும் விநாயகருக்கு சித்திவிநாயகர் என்பது திருப்பெயர் ஆகும்.அவர் தம் பாதம் பணிந்து ,பரமுக்க்தி தரும் மேலான வீடு பேரை அளிக்க வல்ல அவர் தம் தந்தை தாயாகிய  சிவத்தையும்,சக்தியையும் வணங்க நல பொருள் மிகு சொல் அருள செய்ய  பரஞ்சோதி முனிவர் வேண்டுகிறார்.
                           எச்செயல் தொடங்கும் முன்னும் முதற் பரம்பொருளாகிய மூஷிக வாகனனை வணங்கி தொடங்குதல் நம் மரபு.இவர் மங்களம் தரும் வள்ளல்.இவரின் துணை வேண்ட அவரே நம் தடம் வந்து துணை தந்து வேண்டிய செயலை தவறாது முடித்து தருவார்.இங்கும் என் இந்த கன்னி முயற்சியை வெற்றி பெறச்செய்ய விக்ன விநாயகன் பாதம் பணிந்து நூல் ஆசிரியர் பின் செல்கிறேன்.

வாழ்த்து  

மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம் 
பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம் 
நல்குக உயிர் கட்கு எல்லாம் நால் மறைச் சைவம் ஓங்கிப் 
புல்குக உலகம் எல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.
                              புராணங்கள் தொடங்கப்படும் முன் காப்பு செய்யுள் பாடப்பட்ட பிறகு அந்த நாடும் மக்களும் எல்லா வளங்களும் பெற வாழ்த்தி பாடல் புனைவார்கள்.
இங்கும் வேதங்களும்,வேள்விகளும் பெருகி ,வானம் நீர் சுரந்து,வளங்கள் பெருகி,அறங்கள் எங்கும் பெருகி ,உயிகட்ட்கு இன்பம் தந்து,நான் மறை வேதங்கள் ஓதப்பட்டு,சைவத்தை வளர்த்து ஒழுக்கம் தந்த வழியில் உலகம் செழித்து செங்கோல் சிறக்க முனிவர் வாழ்த்துகிறார்.
வாழ்த்து பாடல் தந்தானது.இந்த நூல் படிப்பதனால் ஆன  பயன் யாது.அதை அடுத்து தருகிறார்.
                                                                      நூற் பயன் 
திங்கள் அணி திரு ஆலவாய் எம் அண்ணல் திரு 
           விளையாட்டு இவை அன்பு செய்து கேட்போர் 
சங்க நிதி பதுமநிதிச் செல்வம் ஓங்கித் தகைமை தரு 
           மகப் பெறுவர் பகையை வெல்வர் 
மங்கல நல் மணம் பெறுவர் பிணி வந்து எய்தார் வாழ் 
           நாளும் நனி பெறுவர் வான் நாடு எய்திப் 
புங்கவர் ஆய் அங்கு உள்ள போக மூழ்கிப் புண்ணியர் 
           ஆய்ச் சிவன் அடிக்கீழ் நண்ணி வாழ்வர்.
                                          பிறை சூடிய பெம்மான் இந்த ஆலவாய் நகரினில் திருவிளையாட்டு  படிப்போர்,கேட்போர் -சங்கநிதி,பதுமநிதி,செல்வம் ஆகிய செல்வம் பெறுவார்.பெருமை தரும் பிள்ளை பெறுவர் ,பகையை வெல்வர்,அனைவர்க்கும் மங்களம் செய்யும் மனம் பெறுவார்.எந்த பிணியும் இவரை வந்து அடையா.ஒவ்வரு நாளும் மிகுந்த நன்மை அடைவர். சிவா புண்ணியம் பெறுவார்.அதன் பயனாய் அமரர் உலகம் சென்று அதன் இன்பமும் அடைவர்.என பரம்ஜோதி முனிவர் இயம்புகிறார்.
கடவுள் வாழ்த்து பகுதி அடுத்து வருகிறது அதில் அத்தனை அழகாக சிவகுடும்பம் அனைத்தையும்  செய்யுட் படுத்தியுள்ளார் பரஞ்சோதி மாமுனிவர்.அவை அடுத்த பகுதியில் காண்போம்.




Thursday, 10 July 2014

திருவிளையாடற் புராணம் முகவுரை.

திருவிளையாடற் புராணம் முகவுரை.

"தென்னாடுடைய சிவனே போற்றி.
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி."

நம்மை எல்லாம் ஆட்டிவைக்கும் அந்த ஆடவல்லானின் திருவிளையாடல்கள் எண்ணற்றவை.ஒவ்வரு நொடிப் பொழுதும் அவன் கருணையினால் தன கழிகிறது.அவன் மதுரை மாநகரில் நிகழ்த்தி காட்டிய அற்புதங்கள் பல,அவற்றுள் 64 திருவிளையாடல்களை ,தொகுத்து 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவா ஞான ஞானி பரஞ்சோதி முனிவர் நூல் செய்தார்.

இந்த நூல் அன்றிருந்த ஆன்றோர்கள் விருப்பபடி,அன்னை மீனாட்சியின் ஆணைப்படி உருவானது.எளிய தமிழில்,வாசிக்க இனிமையாக நூலை செய்து வைத்துள்ளார்.அவர் வழி  நின்று நான் வாசித்தவற்றை உரைநடையாக தரவும்,அதன் சுவையை அனைவருடனும் பகிரவும் ஆசை பட்டே இந்த பகுதி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழர் மரபில்,நம் தமிழ் மொழியில் எம்பெருமானின் மூன்று கண்களையும் சூரியன்,சந்திரன்,அக்னி என செப்புகிறது.
அதில் வலது கண் -சூரியன் ,சோழர்கள்  ,அவர்கள் காலத்தில் தோன்றியது பெரிய புராணம்,. இடது கண் -சந்திரன் -பாண்டியர்கள்  அவர்கள் காலம் தோன்றியது திருவிளையாடற் புராணம், நடுக் கண் அக்னி-அக்னி வழி தோன்றியது கந்த புராணம்.இவை மூன்றும் தமிழ் மொழியின் முப்புரானங்கள் என வழங்கப்படுகிறது.
இவற்றுள்-
பெரிய புராணம் -அருளாளர்களின்,இறைவனின் அருள் பெற்றவர்களின் புராணம்.
கந்த புராணம்-இறைவனை துதித்தவர்கள் ,மற்றும் நிந்தனை செய்தவர்கள் பற்றிய புராணம்.
திருவிளையாடற் புராணம்-இறைவன் நிகழ்த்திக் காட்டிய புராணம்.

புராணம் என்ற சொல்லுக்கு நிறைவு தருவது,தொன்மை வாய்ந்தது என்று பொருள் படும்.இது சிறப்பும்,பெருமையும் இணைந்தது.

திருவிளையாடற் புராணம்.
நூல் குறிப்பு
3 காண்டங்களை உடையது-மதுரை காண்டம்,கூடல் காண்டம்,ஆலவாய் காண்டம்.
மொத்தம் 3363 பாடல்களை கொண்டது.
16 ஆம் நூற்றாண்டில் வேபத்தூராரால் எழுதப்பட்டது.பின்னர் 
17 ஆம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவரால் விவரித்து  எழுதப்பட்டது.

ஆசிரியர் குறிப்பு.
பரஞ்சோதி முனிவர் 17 ஆம் நூற்றாண்டில் திருமறைக்காடு என்ற தலத்தில்,தற்போது வேதாரண்யம் சைவம் போற்றும் குளத்தில் அபிதேகத்தர்,மரபில்,மீனாட்சி தேசிகர் என்பவர்க்கு மகனாய் பிறந்தார்.இவர் தமிழ் மற்றும் வடமொழியில் புலமை பெற்றிருந்தார்.பல நூல்களை கற்றறிந்து பண்டிதராய் இருந்தார்.இவர் துறவறம் பூண்டவர்.இவர் மதுரையம்பதிக்கு அம்மை,அப்பனை வணங்கி வாழ்ந்து வந்த போது ,இவரது பக்தியையும்,புலமையும் கண்ணுற சான்றோர்கள் இப்புராணத்தை பாடுமாறு வேண்டிக்கொண்டனர்.அங்கையர் கண் அம்மையும்,ஓர் நாள் இவர் கனவில் எழுந்தருளி இப்புராணத்தை பாடுவாயாக என பணித்தார்.அன்னை இட்ட கட்டளைக்கு அடிபணிந்து அவர் பக்தியுடன் படித்த சுந்தர புராணம் இது.இதுவே மதுரையின் தல புராணமாகவும் உள்ளது.

இந்த நூல் கடவுள் வாழ்த்து,நட்டு,நகர சிறப்பு என பல வற்றை உணர்த்தி புரானத்தினுள் செல்கிறது .அவற்றை இனி வரும் பதிவுகளில் காண்போம்.