யார் இந்த நிலவு-2
கோவையிலிருந்து அவினாசி ரோடில் இருக்கும் கேஆர் மில்ஸ். கைலாஷ் ராஜ் என்ற இளைஞர் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ஆரம்பித்த பஞ்சாலை, இன்று அவருடைய தன்னிகரற்ற உழைப்பாலும், உறுதியாலும் ,கே ஆர் கார்மென்ட்ஸ், டெக்ஸ்டைல்ஸ் எனப் பின்னலாடை, நூலாடை, நெசவு , ஆயத்த ஆடை என எல்லா துறைகளிலும் தடம் பதித்து, பெரிய பிஸ்னஸ் டைக்கூனாக வெற்றிகரமாகத் தொழில் செய்வதோடு, ஒத்தக்கட்டையான இவர் சமூக சேவையாக தன்னிடம் வேலைப் பார்க்கும் தொழிலாளர்களுக்கு, தங்கும் வசதியோடு அவர்கள் மேற்படிப்புக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட பெண்களை வேலைக்கு அமர்த்துவதுடன், அவரவர் தகுதியை மேம்படுத்த, படிப்பு, ஆரோக்கியத்தைப் பேண யோகா, விளையாட்டு, மருத்துவம் என எல்லாமே ஏற்பாடு செய்திருந்தார். பெண்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருந்தது. இங்கிருந்து இதுவரை அரசுப் பணியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல் டிஎன்பிஎஸ்சி வரை பயிற்சி பெற்று அரசு பணியிலமர்ந்தவர்களும் உண்டு.
இங்கு கைலாஷராஜை சேர்மனை, முதலாளியாகப் பார்க்காமல் "அப்பா"வாகவே பார்த்தனர். இதோ ஆறடியில், ஐம்பதைக் கடந்த போதும் அப்பா என அழைத்த போதும், கட்டான உடலோடு, காதோரமும், மீசையிலும் ஓரிரு நரை இருந்த போதும், அதை மறைக்கத் தோன்றாமல் இன்றும் எலிஜிபில் பேச்சலராகவே இருந்தார் கைலாஷ் ராஜன் . இவ்வளவு செல்வாக்கும், வசதியும் எல்லாமும் இருந்த போதும் தனிமரமாக நிற்கும் அவருக்குள்ளும் ஓர் சோகம்.
இதோ, பெங்களூரில் நடக்கும் ஒரு பிஸ்னஸ் மீட், மற்றும் தங்கள் கம்பெனிக்கான ப்ராஜக்ட் ட்ரைனிகளுக்காக ஒரு புகழ்பெற்ற டெக்ஸ்டைல்ஸ் இன்ஸ்டிடியூடிலிருந்து, மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள், அதற்காகவும் கிளம்பி விட்டார். புதிதாகத் திறமையுள்ள இளைஞர்களைக் கண்டெடுத்து, அவர்களையும் மேம்படுத்தி, தனது தொழிலையும் மேம்படுத்துவதில் அவருக்குப் பெரிய ஆர்வம் இருந்தது. தான் சிறுவயதில் வாய்ப்பு கிடைக்காமல் பட்ட கஷ்டத்தையும், அதனால் அவருக்கு ஏற்பட்ட இழுப்புகளையும், வேறு யாரும் அனுபவிக்கக் கூடாது, என நினைப்பவர், திறமையுள்ள இளைஞர்களை எப்போதும் கரம் தூக்கி விடுபவர்.
அவர்கள் வசதி படைத்தவர்களா. இல்லையா என்பதை பற்றியோ, இவர் நமது போட்டியாளர் என்றோ வகைப் பிரிக்காமல் , திறமையானவர்களை ஆதரிப்பவர்.
"நம்ம பையனை, உங்கககிட்ட கொஞ்சநாள் தொழில் பழக அனுப்பட்டுங்களா" என்ற விண்ணப்பத்தோடு , போட்டி கம்பனியினரே தங்கள் வாரிசுகளை இவரிடம் அனுப்ப, குருகுல வாசம் முடிப்பவர்கள் கடைசியில் கே.ஆர் ன் விசிராயாகவே செல்வர்.
அவர் விமானநிலையத்துக்குக் கிளம்பும் நேரம், அவரின் உதவியாளர் சம்பத் வந்து அடுத்து வரும், ஒரு பிஸ்னஸ் டீல் பற்றிக் கேட்டார்.
" யார், யார் காம்படிடர்னு விவரம் சேர்த்து வைங்க, நாளைக்கு காலையில வந்திடுவேன். அப்புறம் முடிவு பண்ணுவோம்" என அவர் மர்மமாகச் சிரிக்கவும்.
" சார் கேக்கிறேனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. அது என்ன ஸார், விஆர் மில்ஸ், ஏ ஆர் மில்ஸ் இரண்டுமே அப்பா, மகனுடையது. ஆனால் நீங்க ஏஆர்க்குனா விட்டுக் குடுக்குறீங்க. விஆர் னா எதிர்க்குறீங்களே. " எனவும்.
" ஆடு பகை, குட்டி உறவான்னு கேட்குறீங்களா" என நமட்டு சிரிப்புச் சிரித்தவர், " சார்" எனச் சம்பத் தயங்கவும், " போட்டியோ, கோபமோ, நட்போ,வெறுப்போ உரிமையுள்ளவங்கட்ட தான் காட்ட முடியும். " என்று விட்டுக் கிளம்ப,
'அப்ப ,வி ஆர் மில்ஸ் ,விஜயன் சார் , இவருக்கு நண்பனா ,எதிரியா , உரிமையுள்ளவர்ன்னு வேற சொல்றாரு, இவிகளை புரிஞ்சுக்க நம்மால ஆகாதுசாமி " என தன் வேலையைப் பார்க்கச் சென்றார் உதவியாளர் சம்பத்.
கைலாஷின் போன் அடித்தது,காரில் ஏறிக் கொண்டே, " அம்மா" என அலைபேசிக்கு செவியும், அம்மாவுக்கு அழைப்பும் விடுத்தார் ராஜ். அந்தக் குரலில் தான் எத்தனை பாசம், சட்டென பதின்மவயது சிறுவனாக மாறி விட்டார்.
" போகுது போ. அம்மான்னு ஒருத்தி இருக்கேன்னு ஞாபகம் வச்சிருக்கியே" என அந்த முனையில் குறைபட்டார் சௌந்தரி பால நாயகம். ஆம் குன்னூரில் வசந்த விலாசத்தில் வசிக்கும் பாலநாயகம், சௌந்தரி தம்பதியின் மூத்த மகன் தான் கைலாஷ் ராஜன். .
" அம்மா" மீண்டும் என்றார் ,ஆனால் இந்தமுறை ஆட்சேபனையாக.
" ஒன்னும் சொல்லலை சாமி. உன்னளவு எனக்குச் சாமர்த்தியம் பத்தலையே, ஆயிரக்கணக்கான புள்ளைங்க தினம் அப்பா ன்னு சொல்றதில உனக்கு வேணா மனசு நிறைஞ்சு போகும். எனக்கு அப்படி இல்லை சாமி. என் மகன் அம்மா னு சொன்னாதான் பொழுது விடியுது. அவனுக்கு அதுக்கும் நேரம் கிடையாது. நான் தான் கூப்புடனும் " என்றவரின் குரல் கம்மவும்,
" என்னம்மா, இன்னைக்கு என்ன இவ்வளவு எமோசனல் , ஹிட்லர் எதாவது சொல்லிட்டாரா" எனச் சிரித்தார் மகன்.
" நீ மட்டும் தான் அவரை ஹிட்லர்னு சொல்ற. " என்றவரை, " என்கிட்ட மட்டும் தானே, அவரும் ,அப்படி நடந்துக்கிட்டாரு. நான் தான சொல்லமுடியும்" என்றவர், மீண்டும் ஓர் சிரிப்போடு, " சரி விடுங்க, காலையிலேயே அவர் முகத்தை ஞாபகப்படுத்தாதீங்க . நீங்க என்ன செய்றீங்க. சாப்பிட்டிங்களா ,எப்படி பொழுது போகுது" என்றார் ராஜ்.
" ஏன் நீ கண்ணாடியே பார்க்கிறது இல்லையாக்கும், நான் தான் உங்கப்பாவை ஞாபகப்படுத்தனுமோ" என வம்பு பேசினார் அம்மா. ஹாஹாவெனச் சிரித்தவர்.
" அது உங்க தப்பு. உங்க வீட்டுக்காரர் பெரிய ரொமான்டிக் ஹீரோன்னு அவரையே நினைச்சுட்டு இருந்து என்னை பெத்து வச்சிருக்கீங்க" எனவும், " நீயும் ராஜியை கட்டியிருந்தா, அவளும் உன்னை மாதிரியே ஒரு மகனை பெத்துக் குடுத்திருந்துப்பா. அது தான் இல்லாமப் போச்சே" என அவர் புலம்பவும், சுவிட்சை அணைத்தார் போல் அவருடைய சிரிப்பு காணாமல் போனது.
" ஏர் போர்ட் போறேன், ப்ளைட் ஏறனும். போனை வைக்கிறேன்" என்ற குரலில் கடுமையும், கசப்பும் கூடியிருக்க, மகன் போனை வைத்து விடுவாரோ எனப் பயந்தவர், " ராஜா, ஒரு நிமிசம். அடுத்த வாரம் அங்க வந்து உன்கூட ஒரு வாரம் தங்கலாம்னு பார்க்கிறேன். நீ வெளிநாடு எங்கயும் போகமாட்டியே, ஊர்ல தான இருப்ப " என வினவினார்.
" இங்க தான் இருப்பேன், வாங்க , நீங்க மட்டுமா வர்றீங்க" என்ற கேள்வியில், அப்பா வரமாட்டாரா என்ற ஏக்கம் இருந்தது, அதனை அறிந்த அவர் தாய்,
" அப்பாவும், மகனும் ஆளுக்கு ஒரு மலையில உட்கார்ந்து இருக்கீங்களே, நான் தான அலையனோம். நீ ஊர்ல இருக்க மாதிரியாவைது வச்சுக்க, அதுக்கு தான் எட்டு நாள் முன்னாடியே சொல்றேன்." என்றவர், "அதென்ன அப்படி அவசரம் , ரெண்டு இட்டிலில எந்திரிச்சிட்டியாம், சாப்பிடக் கூட நேரமில்லாத அப்படி என்ன சம்பாத்தியம் வேண்டிக் கிடக்கு" என அதட்டியவரை பேசியே சமாளித்தார் மகன்.
" சரிமா,நீங்க நேர்ல வந்து திட்டுங்க, வாங்கிக்கிறேன், சாப்பாடு வைங்க , குண்டோதரனாட்டமா சாப்புடுறேன் சரியா." என சிரித்தவர் , "பெங்களூர் போறேன், வேற எதாவது வேணுமா" எனக் கேட்டார்.
" ஒரு மருமகளும், கல்யாண வயசில பேரன் பேத்தியும் வேணும். உன் காசை வச்சு அதெல்லாம் வாங்கிட்டு வரமுடியும்னாச் சொல்லு" எனக் கலங்கியவரை, " அம்மா " என்ற அழைப்பிலேயே சமாளித்தவர், பேச்சை மாற்றும் விதமாகவும் ,அக்கறையாகவும் " நீங்க இல்லாம, ஹிட்லர் சமாளிச்சுக்குவாறா" என வினவினார் கைலாஷ்.
" அதெல்லாம் நான் இல்லைனாலும், அவர் மருமகள் பார்த்துக்கும். " என்ற அம்மாவிடம், " ஏன்மா, நான் சரிபட்டு வரலைனு, ஜோடியா மகன், மருமகளைத் தத்து எடுத்துட்டீங்களா. அப்பச் சரி, இனிமே நான் உங்களுக்குத் தேவையில்லை" என்றார்
" அடி போட்டேன்னாத் தெரியுமா, இவன் தேவையில்லையாம். தேவையில்லாமலே புள்ளையை பெத்து ஐம்பது வருஷமா வளர்த்தேன் பாரு . நேர்ல பார்க்கையில உன்னை வச்சுக்குறேன்" என மிரட்டி போனை வைத்தார் சௌந்தரி. மகனுக்கு எத்தனை வயதானாலும் அவர் எவ்வளவு உயரத்திலிருந்தாலும் அவரை மிரட்டச் சர்வாதிகாரம் படைத்தவர் தாய் ஒருவரே.
குன்னூரில் சௌந்தரி முன்பக்கமிருந்த தோட்டத்திலிமர்ந்து மகனோடு பேசி முடித்து அமர்ந்திருக்க, அவர் எப்போதும் சாப்பிட்டவுடன் அருந்தும் தேநீரை சரியாக கொண்டு வந்து நீட்டினார் பவானி.
" நல்ல வேளை டீயோட வந்த " என வாங்கி அவசரமாக ஒரு மிடறு அருந்தியவர், " என் மகனோட பேசறதுக்கே நான், நாலு கப் டீ குடிக்கனும்" என்று விட்டு மீதியை ருசித்தவர், " உன்னை மருமகள்னு சொல்லவும், அவனுக்கு அப்படி ஒரு பொறாமை. நாங்க ஜோடியா, மகன் மருமகளை தத்தெடுத்திட்டமான்னு கேக்குறான்" என்றார்.
பவானி சிரித்துக் கொண்டவர், "நீங்க எல்லாருமே, அவரவர் மகன், மகளிடம் பேசும் போது, இனிமே என்னைப் பத்தி சொல்லாதீங்க " என்றார்.
" ஏன்மா," என அதிர்ச்சியாகக் கேட்டார் சௌந்தரி, " இவ யாருடா நம்ம அம்மா, அப்பாவை உரிமை கொண்டாடுறான்னு , என்னை வேலையை விட்டு தூக்கிட்டா" என வினவினார் பவானி
" அந்த அதிகாரமெல்லாம், எந்தக் கொம்பனுக்கும் கொடுக்க மாட்டோம். நீ எங்களோடவே ஆயுசுக்கும் இருந்துக்கலாம் " என்றார் ராமசாமியோடு உடன் வந்த பாலநாயகம்.
" ஆமாம், அவ புருஷன், பொண்ணுன்னு வெளிநாட்டிலிருந்து வந்தா, அவ குடும்பம் நடத்தப் போக வேண்டாம். எல்லாரும் உங்க மகனை மாதிரியேவா ஒத்தையா திரியுவாங்க" எனக் கோபித்தார் சௌந்தரி.
பாலநாயகம், ராமசாமியைக் கையில் நறுக்கெனக் கிள்ளினார், அவர்," டேய் " எனக் கத்தவும். " நிஜம் தான். நான் கூட, உன் தங்கச்சி என் கனவுல பேசுறாளோன்னு நினைச்சேன். நிஜமாவே மகனைக் குறை தான் சொல்லிட்டாடா" என அவர் கேலி பேசவும், கணவரை முறைத்தவர்.
" எல்லாம் உங்களால தான். அவன் மனசில என்ன இருக்குனு கேட்டிங்களா. நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்மா, உன்கிட்ட நேர்ல வந்து , ஒரு விஷயம் சொல்றேன்னு சொன்ன பையனை , என்னன்னு கேட்க கூட இல்லாம முடிவெடுத்திட்டிங்க. யாரை நினைச்சிருந்தானோ. யாரையோ நினைக்கப் போயி தான என் மகன் ஒத்தையா நின்னுட்டான்" எனக் கண்ணீர் விட்டவரை, ராமசாமி "தங்கச்சிமா" எனத் தேற்ற, சௌந்தரி கலங்கியதில் பவானிக்கே கண்ணில் நீர் வந்தது. விறைத்து நின்ற பாலா, தூரத்தில் பன்னீர் வருவதைப் பார்த்து விட்டு அவசரமாக,
" இப்ப என்ன சொல்லிட்டேன்னு, கண்ணீர் விடுற. உன் மகன்கிட்ட போகனும்னா போயிட்டு வா, நான் அவன் இருக்கப் பக்கம் கூடத் தலை வைக்க மாட்டேன், அதிகம் படிச்சவன், என்னை எனக்குப் பார்த்துக்குத் தெரியும். அப்படியே இல்லைனாலும் எங்க மருமகள் இருக்கு.
ஆனால் உன் மகன் பிஸ்னஸ் டைக்கூன், ஊர்ல இருப்பாரான்னு கேட்டுக்க. அவரு தான் றெக்கை கட்டி பறக்கிறாரே." எனப் பேச்சை மாற்றவும்.
அருகில் வந்திருந்த பன்னீர், "மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா. தங்கச்சியை வம்பிழுக்கலைனா உனக்குப் பொழுதே விடியாதே. இந்தத் தடவை, ராஜா வீட்டுக்கு நீயும் போற. எத்தனை நாளைக்குடா கோபத்தைக் காட்டுவ. போனதுங்க போயிருச்சு. இருக்கிறவுங்க நிம்மதியா இருப்போம். " என்றவர் அப்படியே மற்றொரு பெஞ்சில் உட்கார்ந்தார்.
" அண்ணேன், நீங்க, டென்ஷன் ஆகாதீங்க, பேசாம உட்காருங்க. நான் மட்டுமே போயிட்டு வர்றேன். அங்க வந்தும் இரண்டும் ஒன்ன ஒன்னு முறைச்சிட்டு திரியுங்க. ஒரு உறையில் இரண்டு கத்தி தாங்காது, மகளுங்க, பேரன் பேத்தி வந்தா தான் இவுங்களைச் சமாளிக்க முடியும் " என்றவர், " பவானி, நான் போகும் போது, ராஜாவுக்குப் பிடிச்ச பலகாரமா கொண்டு போகனும், ஒரு லிஸ்ட் போடுவோம். நான் அவன் டேஸ்டைச் சொல்றேன். உங்க ஊர் பலகாரம் இருந்தாலும் சொல்லு. அதுவும் செஞ்சு எடுத்துட்டுப் போறேன், அதைத் தவிர அவனுக்கு என்னால என்ன குடுக்க முடியும் " எனப் பேசிக் கொண்டே உள்ளே நடந்தார்.
அவரைப் பார்த்துக் கொண்டே நின்ற பாலநாயகத்திடம், " பாலா, அட்லீஸ்ட் நீயாவது ராஜாவோட ஒத்து போகலாம்ல. சௌந்தரிக்கு அந்த டென்ஷனாவது குறையும்" என்றார் பன்னீர்.
" இல்லை சித்தப்பு, நானும் அவனும் சமாதானம் ஆகிட்டா, அவளுக்கு வேலை இல்லாமல் போயிடும். இப்படி யே ஓடுற வரைக்கும் ஓடட்டும். நாமளாவது நாலு பேர் ஒருத்தருக்கு ஒருத்தர் துணை. அவன் விஜயனையுமில்ல ஒதுக்கி வச்சிருக்கான். என்ன செய்யப் போறானோ" எனக் கவலைப் பட்டார் ப்ஸ்னஸ் டைக்கூன் கைலாஷ் ராஜனின் தகப்பனான பாலநாயகம்.
" மாமூ, நீ ராஜனை புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தான். என் மகன் விஜயனும் அவனும் ஒன்னா ஒட்டித் திரிவாங்க தான. இரண்டு பேர்கிட்டையும் ஏதோ ஒரு ரகசியம் இருக்கு. அது உடையற அன்னைக்கு, இரண்டு பேரும் பழையபடி ஒன்னா ஆயிடுவாங்க. அதுவும் போக நம்ம தாண்டா நாலு பேரோட சுயநலமான நட்போட இருக்கோம். ராஜன் ஆயிரமாயிரம் பேருக்கு வழிகாட்டியா, அவங்க அன்பை எல்லாம் சுமந்திட்டு இருக்கான். " எனச் சிலாகித்தார் ராமசாமி.
" இருந்தாலும், குடும்பம் புள்ளைங்கன்னு இல்லாமல் போயிட்டானே" எனப் பாலா வருந்தவும், இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே வந்த சுப்பிரமணி, " எனக்கும் தான் புள்ளை இல்லை, ஆனால் பார்க்க ஆள் இல்லாமலாப் போச்சு விடுப்பா" என்றார்.
" இருடி மாப்பிள்ளை, புள்ளை இல்லைனா சொல்ற, என் மருமகள்கிட்ட போட்டுக் குடுக்குறேன்" என்றார் ராமசாமி,
" ஐய்யயோ, வேணாம்பா, என் மகள் அழுதே நம்மளை வதைக்கும்" எனப் பயந்தார் சுப்பிரமணி.
" அந்தப் பயம் இருக்கட்டும். என் பையன் , உன் மகளை எப்படிச் சமாளிக்கிறான்" எனப் பெருமைப் பட்டுக் கொண்டார் ராமசாமி. ராமசாமியின் மகன் விஜய ரங்கன். அவருக்கு, சுப்பிரமணியின் அண்ணன் மகள் கஸ்தூரியைத் தான் மணம் முடித்திருந்தனர். பிள்ளைகள் இல்லாத சுப்பிரமணி ,சாராதாவுக்குக் கஸ்தூரி தான் சகலமும் பார்ப்பார்.
பெங்களூரின் புகழ் பெற்ற ஓபராய் ஹோட்டலின் ஆடம்பரமான அறையில் , ஜக்கூசி பாத் டப்பில் இதமான வெந்நீரில் முதல் நாள் நினைவுகளோடு,தானும் மிதந்து கொண்டிருந்தான், இருபத்தாறு வயதான அபிராம்.
தனக்கான அடையாளமாக ஒரு அதி நவீன தொழில் நுட்பத்துடனான , ஏ ஆர் மில்ஸ் என்ற டெக்ஸ்டைல்ஸ் மில்லை நடத்திக் கொண்டிருக்கும் இளம் தொழிலதிபன் அபிராம் ரங்கன்,குன்னூரிலிருந்த ராமசாமி, அபரஞ்சியின் பேரன், விஜய ரங்கன், கஸ்தூரியின் மகன். நேற்றே தரை வழிப் பயணமாகக் கோவையிலிருந்து பெங்களூரு வந்துவிட்டான்.
அபிராம், செல்வச் செழிப்பில் வளர்ந்த சாக்லேட் பாய். ராமசாமி மற்றும் அவரது நண்பர்கள் குழுவிலேயே, முதலில் மகள், மகன், பேரன் பேத்தி எனச் செட்டில் ஆனவர். அதனால் அபிராம் எல்லாத் தாத்தாக்களுக்குமே முதல் செல்லப் பேரனாக இருந்தான்.
பள்ளிப் படிப்பை ஊட்டியில் ரெசிடென்சியல் ஸ்கூலில் முடித்தவன், டெக்ஸ்டைல்ஸ் இன்ஜினியரிங்கை அதற்கான ப்ரத்யேக காலேஜில் ஈரோட்டில் முடித்து , எம் பி ஏ படிப்பை லண்டனில் முடித்து வந்தான். பிற்பாடு இவர்களுடைய தொழிலை நடத்தவே இந்தப் படிப்பைப் படித்தவன் ஆதலால் ஆரம்பம் முதலே லீவு நாட்களிலும் கூட இதற்காகப் பழக்கப் படுத்த பட்டவன். அதிலும் தந்தையிடம் தொழில் பயின்றானோ இல்லையோ, குடும்ப நண்பரான கைலாஷ் ராஜிடம் தான், பால பாடம் முதல் பட்டப் படிப்பு வரை. ப்ரெண்டு, பிலாசபர், கைட், மாமன் எல்லாம் அவர் தான்.
அபிராமுக்குத் தனிமையில் காரோட்டி வருவது என்பது மிகவும் பிடித்தமான பொழுது போக்கு, கைலாஷ் கூட , " இதையும் என்னை மாதிரி சிங்கிளா போய்ப் பழகாத மாப்பிள்ளை உனக்குப் பிடிச்சப் பொண்ணா பாரு, யாரா இருந்தாலும் மாமா சப்போர்ட் பண்றேன். கல்யாணம் பண்ணிக்கோ, ஜோடியா கார் ஓட்டிட்டுப் போ" எனக் கிண்டலடிப்பார்.
" அதெல்லாம் சரி மாமா, பொண்ணை முதல்ல பிடிக்கனுமே. நீங்க கதையெல்லாம் சொல்லிச் சொல்லி, என் எக்ஸ்பெக்டேசனும் கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு , எனக்குன்னு ஒரு ராஜகுமாரி வராமலா போயிடுவா " என்பவன், அதே தேடலில், தன் மனம் கவர்பவள் எங்கே இருப்பாள் எனும் யோசனையோடே நேற்று காரை செலுத்திக் கொண்டு வந்தான். சாலைப் பயணத்தை வலைத்தள உதவியோடு பயணிக்க, அது அவனுக்குக் கொஞ்சம் சுற்றலான சாலையைக் காட்டிவிட்டது. பெங்களூருக்கே உரித்தான கூட்டமின்றி வெறிச்சோடியிருந்த அந்தச் சாலையில் பயணித்தவன் முன்னால் , சட்டென ஒரு பெண் காரின் வந்து விழுந்தாள். அவன் சுதாரித்துச் சடன் ப்ரேக் அடிக்காமல் விட்டிருந்தாள் அன்று சம்பவம் உறுதி. "இடியட் , பராக்கு பார்த்துட்டு வந்து, என் வண்டில தான் விழுகணுமா " எனப் பூட்டிய காருக்குள் திட்டியவன், சமாளித்து எழுந்து நின்ற பெண்ணின் முக வடிவில் சுத்தமாகத் தொலைந்து போனான்.
அந்தப் பெண் அதிர்ந்து விழித்ததில் அவளைத் திட்டப் போன அபியின் பார்வை சட்டென மாறியது. லாங் ஸ்காட்ட், ஷார்ட் டாப், தலையில் ஒரு ஸ்டோலைச் சுத்தியிருந்தவள், பௌர்ணமியின் அந்த ஒளியில், தங்கச் சிலையாகவே மிளிர்ந்தாள். நீள் வட்ட முகம், அகன்ற கண்கள், அலையலையாய் கேஷம், சந்தன வண்ணத்தவள், ஆகாய நீல வண்ண உடையில் ஆங்காங்கே மிளிர்ந்த கோட்டா பட்டி வேலைப்பாடு கொண்ட உடையால் குட்டிக் குட்டி நிலாக்களைத் தன் மேனியெங்கும் அள்ளி இறைத்துக் கொண்டு வந்த தேவதையாகத் தெரிந்தாள்.
ராஜ் மாமா சொன்னது போல், அவளை முதல் முறைப் பார்க்கும் முதல் கனத்திலேயே மனதில் ஓர் மின்னல் அடித்தது, அவளது அகன்ற கண்ணில் அவனாகவே தன்னைச் சிறை படுத்திக் கொண்டான் அபிராம் , அவள் கண்ணாடியைத் தாண்டி கூர்ந்து தன்னைக் கவனித்ததில் வயிற்றுக்குள் உருண்டை உருண்டது. அவள் படபடவெனத் தன் காரின் கதவுகளைத் தட்டவும், சிலையானவன், உயிர் பெற்று, நொடி நேரமும் தயங்காமல் சென்டர் லாக்கை ரிலீஸ் செய்து அவளை உள்ளே வரச் சொல்லி சைகை காட்ட, அவசரமாய் உள்ளே ஏறியவள்,
" வில் யூ கோ ஃபாஸ்ட் ப்ளீஸ்" என ஆங்கிலத்தில் அவனை வினவ, அவன் தன் பதிலைச் செயலில் காட்டினான்.
அவளை யாரோ துரத்தி வந்திருக்க வேண்டும், அவளது கண்களும், முகத்தில் துளிர்த்த வியர்வையும் அதைச் சொல்ல, அதனை ஒற்றி எடுத்து, 'கவலப் படாதே நிலவுப் பெண்ணே'என அவள் பயத்தைப் போக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. இது எவ்வகையான உணர்வு என்றே அவனுக்குத் தெரியவில்லை.
ஞாயமாகப் பார்த்தால், ரோட்டில் குறுக்கே வந்தமைக்கு, அவளைக் கடித்துக் குதறியிருக்க வேண்டும். வெளியாட்களிடம், வலிந்து அவ்விதமான மாஸ்கை அணிந்து கொள்வான். இன்று அதுவுமில்லை. அதுவும் போக, சட்டெனக் காரில் ஏறியவள் வழிபறி கூடச் செய்யலாம். ஆனால் அவளை அணைக்கவல்லவா துடிக்கின்றன கைகள். டேஸ் போர்டிலிருந்து டிஸ்யூக்களை எடுத்து நீட்டியவன், " டோன்ட் வொரி" என்றான். டிஸ்யூவை வாங்க அவசரமாக ஒற்றிக் கொண்டவள், " ப்ளீஸ் கோ ஃ பாஸ்ட்" என்பதை மட்டும் கிளிப்பிள்ளையாகத் திருப்பிச் சொன்னாள்.
காரை வேகமாகச் செலுத்தி, தனது காரை துரத்தி வந்தவர்கள் அடையாளம் காண இயலாதது போல் வாகனங்களுக்கு ஊடே செலுத்தினான். அவள் பதட்டமாகவே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு வர, " கவலைப் படாதே, அவங்க உன்னைப் பிடிக்க முடியாது" என ஆங்கிலத்திலேயே அவனும் பதில் தந்தான்.
அபிராமின், நினைவுகளைக் கிழித்துக் கொண்டு அலைபேசி ஒலி அவன் மூளைக்கு எட்ட, தன் நிலவுப் பெண்ணின் முகத்தைச் சட்டெனப் பின் தள்ளி ,பேசிக்குச் செவி கொடுத்தான், ஏனெனில் அழைப்பது கைலாஷ் ராஜ்.
“மாமா, ஏர்போர்ட்டுக்குப் பிக்கப் பண்ண நானே வர்றேன், உங்கள்ட்ட முக்கியமான விஷயம் பேசணும்” என அபிராம் பேசும்போது ,மருமகன் பறப்பதை அறிந்த கைலாஷ் , “என் மகளைப் பார்த்துட்டியா மாப்பிள்ளை “ என்றார். “எஸ் “ எனப் போனை வைத்தவனுக்கு அடுத்தப் போன் கால் அம்மாவிடமிருந்து வந்தது. சற்று கலவரமாகவே அவன் போனை எடுக்க, மாலை பார்ட்டியில் , மாமாவோடு சேர்ந்து ஒரு பெண்ணைப் பார்க்கச் சொன்ன அவன் அம்மாவின் வார்த்தைகள் அவனுக்கு , திராவகமாய் எரிந்தது.
நிலவு வளரும்.
No comments:
Post a Comment