Thursday, 14 October 2021

யார் இந்த நிலவு- 4

யார் இந்த நிலவு- 4 

" ஹேய் ஆயி துல்ஜா பவானி, துராஜா, த்வரிதா, அம்பே, ஜகதம்பே ஆயி பவானி, மேரி ப்ரயத்னோ பர் ,அப்னே க்ருபா திருஷ்டி பணாயி ரக்" என்ற முணுமுணுப்பான பிரார்த்தனை ஒலிகள் கைலாஷ் ராஜின் செவிகளில் விழவும், எழுந்து செல்ல இருந்தவர் காணொளியில் கண்களைப் பதித்து, அந்தச் சொற்களை உதிர்த்தவளை ஆர்வமாகப் பார்த்தார். அந்த வேண்டுதலும் , குரலும் இத்தனை வருடங்களில் இறுகியிருந்த இதயத்தின் உணர்வுகளை உரசிச் சென்றன.

பார்மலான கல்லூரி உடையில், ஓர் நிமிர்வோடு, மென்னகையா புரிந்தாலா இல்லையா எனப் பிரிக்க இயலாமல் நீள் வடிவான முகமும் அகன்ற கண்களும், அதரங்களும் அவரைக் கட்டியிழுத்தன. ' இதெப்படி சாத்தியம் என் பாரு மறைந்து இருபது வருடங்களுக்கும் மேலாகிறதே' இவள் அவளின் மறுபிறப்போ என உன்னிப்பாக நோக்க, அவளது 'பாரு' விலிருந்து இவளது நாசியும், கன்னமும் இவள் வேறு எனப் பறைசாற்றின. ஆனால் குரல் அவரது 'பாரு' தான்.

கண்கள் கசிந்துருக, அதரங்கள் "பாரு" என உச்சிரிக்கத் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு மீண்டும் அவளில் கவனம் பதித்தார்.

" ஐயம் ஆதிரா பிகே." எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு , அவளைப் பற்றிய சிறிய அறிமுகத்தில் "ஆயி, பாபாவின் நிழலாக இல்லாமல் எனக்கான ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளத் துடிக்கும் ஓர் பெண். மற்றபடி, என்னைப் பற்றி நான் சொல்வதை விட எனது திறமையால் அதை வெளிப்படுத்தவே விரும்புகிறேன்" எனத் தெளிவான ஆங்கிலத்தில் ஆரம்பித்தவள் ,நேர்முகத் தேர்வு நடத்தியவரின் கேள்விக்குத் தெரிந்ததைத் தெளிவாகவும், தெரியாததை, தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் என்றும் தைரியமான நேர்மையான பதிலைத் தர, கைலாஷுக்குப் பிடித்துப் போனது.

ஆனால் நேர்முகத் தேர்வு நடத்தியவர்களுக்குத் திருப்தி இல்லை. ஏனெனில் அவள் நிறையக் கேள்விக்கு, இரண்டாவது பதிலைத் தான் சொன்னாள். உங்களுக்கான பதில் மெயில் செய்கிறோம் என்றதில் ஏமாந்து போனவள், அடுத்தக் கம்பெனி இன்டர்வ்யுவுக்காக வெளியே சென்றாள்.

ஆதிரா முகம் வாடியதில் இங்கு , கைலாஷ்க்கு மனம் அடித்துக் கொண்டது. அவளை அரவணைத்துத் தேற்ற வேண்டும் என்ற உணர்வு தோன்றியது. உடனடியாகப் பணியாளர்களுக்குப் போன் அடித்தவர். அடுத்தக் கட்ட இன்டர்வ்யூவுக்கு அந்தப் பெண்ணைத் தன்னிடம் அனுப்பி வைக்கச் சொன்னார். கைலாஷ் இது போல் செய்பவர் தான் என்பதால், ஆந்திராவை எம்ஜி ரோட்டிலிருக்கும் அவர்களது கம்பெனி அலுவலகத்திற்குச் சென்று சேர்மனை பார்க்கச் சொன்னார்கள்.

ஆதிரா, சேர்மனைப் பார்க்கச் சொல்லவுமே மிகவும் உற்சாகமானாள். ஏனெனில் இந்தக் கம்பெனியில் சேரவேண்டும் என எண்ணியதே, அவருடைய உயர்ந்த குணத்திற்காகவும், அங்குத் தான் பாதுகாப்பாக இருப்பதோடு கேரியரும் செட்டில் ஆகும் என்பதாலும் தான். அந்தக் கம்பெனியைப் பற்றி அவ்வளவு விசாரித்து வைத்திருந்தாள். அதனால் ஆர்வமாகவே கிளம்பினாள்.

போனில் மாஸியிடம், கிட்டத்தட்ட வேலை கிடைத்தது போல் தான் எனத் தனது சந்தோஷத்தையும் பகிர்ந்து கொண்டு மதிய உணவை கேன்டினில் முடித்துக் கொண்டு, மூன்று மணிக்கு சேர்மன் அப்பாயின்மென்ட் இருக்க, பெங்களூர் ட்ராபிக்குக்குப் பயந்து நேரமாகவே கிளம்பினாள். ஆனால் அவள் விதி அந்த மராட்டியர்கள் கல்லூரி வரை அவளைத் தேடி வந்து விட்டனர்.

அவர்களைக் காணவுமே, மீண்டும் கௌரிக்கு அழைத்தவள், " மாஸி, நீங்களும் அங்கிருந்து கிளம்புங்க. எனக்கு வேலை கிடைச்சிடும். நான் அந்தச் சேர்மனை பார்க்கத் தான் போறேன், நைட் கிளம்பிடுவோம்" என்றவள், கௌரி பதில் சொல்லும் முன் அணைத்து விட்டு, வேறு ஒரு வாயில் வழியாகக் கிளம்பினாள்.

அபிராம் காலையில் கைலாசை சந்தித்து விட்டுக் கிளம்பியவனுக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. 'மாமா வேற, கல்யாணம் ஆகாத பொண்ணு தானேன்னு கேட்டுட்டாரே, ஓ மை பியூட்டி , நீ யாரு, இங்கிருக்க, உனக்காக ஒருத்தன் உன்கிட்ட இருக்கேன்னு உனக்குத் தெரியுமா ' என மனதில் அவளோடு பேசிக் கொண்டிருந்தவன் ,வாடிக்கையாளரைப் பார்க்கச் சென்று பார்த்து வேலையை முடித்தான். நேற்று அவளைப் பார்த்ததை மனதில் ஓட்டியவன், ஏதாவது துப்பு கிடைக்குமா எனக் காரில் , ஸ்டியரிங்க் வீலைப் பற்றிக் கொண்டு யோசித்துக் கொண்டே இருந்தான். அவளைக் காரில் ஏற்றிய இடத்தில் தேடுவதா, இறக்கி விட்ட இடத்தில் தேடுவதா, என்ற குழப்பம், ஆனால் இரண்டுமே அவளது இருப்பிடமாக இருக்காது என நினைத்தான்.

மீண்டும் அந்தப் புகைப்படத்தையே பார்த்தான், லேசாகக் கழுத்தை மட்டும் திருப்பிப் பக்கவாட்டில் பார்த்துக் கொண்டிருந்தாள். முகமும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் எதற்காக இப்படிப் பயந்து ஓடுகிறாள், என்ற கேள்வி அவன் மனதில் எழாமல் இல்லை. ஒளிந்து திரிபவளையும், தேடுபவர்களையும் பற்றிச் சிந்தித்தவன், மாமாவிடம் இதைப்பற்றிப் பேச வேண்டும் என நினைத்தான்.

இவன் யோசனையின் குறுக்கே நினைவூட்டும் அழைப்பாகக் கஸ்தூரி போன் செய்தார், " அபிக் கண்ணு சாப்பிட்டுயியா. " என்ற பாசமான அம்மாவின் விளிப்பில் , "சாப்பிட்டேன் மா. இதோ அடுத்த வேலையைப் பார்க்க போறேன்." எனப் பதில் தந்தவனை,

" பார்ட்டி சாய்ந்திரமா, நைட்டா, முடிச்சு எப்ப கண்ணு கிளம்புவ. கார்லையேவா வரப் போற, ஒரு ட்ரைவர் போட்டுட்டாவது வா கண்ணு" எனக் கேள்வியும், பதிலும் தானே என்பது போல் கஸ்தூரி கேட்கவும்.

" இன்னும் வந்த வேலை முடியலிங்க மா. அது முடிச்சு போட்டுத் தான் வரணும். " எனப் பதில் தந்தான்.

" சரி கண்ணு, உன் வேலையைப் பார்த்திட்டு வா. அதோட இன்னைக்கு மறக்காமல் " என அவர் ஆரம்பிக்கவுமே, " பொண்ணு பார்த்திட்டு வரோணோம் அது தானே. உங்களுக்கு மருமகள் வர்றது கன்போர்ம், நான் வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கேன். ட்ராபிக் மூவ் ஆகுது, போனை வைங்கமா" எனச் சலிப்பாகப் போனை வைத்தவன்,

தலையைப் பிடித்துக் கொண்டு, "அடங்கப்பா சாமி, கடவுளே" என ஸ்டியரிங் வீலில் தலையை முட்டி யோசித்தவன், " மருதமலை முருகா, உன் மலைக்குக் கார்ல போகாத, படி ஏறியேயும் கூட வர்றேன், அந்தப் பொண்ணு யாருன்னு மட்டும் காட்டிக்குடுத்துடு, அந்தப் பொண்ணையும் கூட்டிட்டு ஜோடியாகவே உன் சன்னதிக்கு வரேன் " எனக் கண்ணை மூடி வேண்ட, மருத மலை மாமணி , இந்த அபிராமை காலாறப் படி ஏற வைக்க முடிவு செய்தவராக, அதுவும் ஜோடியாக வருகிறேன் எனச் சொன்னதில், பின்னாளில் அவனுக்கு ஒரு சோதனையைக் கொடுத்து அவன் அன்பைப் பரிசோதித்துக் கொள்வோம் என அவன் கண்ணில் ஓர் அடையாள அட்டையைக் காட்டினார்.

குனிந்து அமர்ந்திருந்தவன் கண் திறக்க, பக்கத்துச் சீட்டின் கீழே ஒரு ஐடி அட்டை திரும்பிக் கிடந்தது. யோசனையோடே அதை எடுத்தவன் திருப்பிப் பார்த்த நேரத்தில் அவன் கண்ணில் மத்தாப்பின் ஒளி.

ஆம் அவன் யாரை நினைத்து உருகி நின்றானோ, யாரை எப்படிக் கண்டு பிடிப்போம் எனத் தவித்து நின்றானோ, யாருடை பெயரும் தெரியாதே எனப் புலம்பி நின்றானோ, அதே மதிமுகத்தவளின் அடையாள அட்டை தான். ஆதிரா பிகே என அவள் போட்டோவுடன் கல்லூரியின் ஐடி கார்டு . "ஹூர்ரே" எனத் துள்ளிக் குதித்தவன் , " ஓ தாங்க்ஸ் லார்ட் முருகா. ஐ லவ் யூ" என ஆர்வக் கோளாற்றில் கடவுளுக்கும் ஓர் முத்தத்தைத் தந்தவன், அந்த அட்டையில் தன் கவனத்தைப் பதித்தான்.

அந்த முகவரியைப் பார்க்கவும், மற்ற அத்தனை வேலைகளையும் ஒத்தி வைத்து விட்டு அங்கே பறக்க நினைத்தான். ஆனால் வாகன நெரிசல் மெல்ல ஊர்ந்தே சென்றது வாகனம். அபிராம், ஆதிராவின் கல்லூரிக்குப் படையெடுத்த அதே நேரம் , அவள் அங்கிருந்து தன்னைத் தொடரும் ஆட்களிடம் அகப்படாமல் கிளம்பி கைலாஷின் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தாள்.

கைலாஷ் ராஜன், தனது மதிய உணவை அலுவலகத்திலேயே முடித்துக் கொண்டவர், அவருடைய அறையிலிருக்கும் ஓய்வு அறையில் கண்ணை மூடி ஷோபாவில் சாய்ந்திருந்தார். அவருடைய நினைவுகள் இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின் சென்றது.

கைலாஷின் தந்தை பாலநாயகம் அவர் தந்தை ஆரம்பித்த பவர் லூம் டெக்ஸ்டைல் , அடுத்தக் கட்டத்திற்குச் சற்று பெரிய மில்லாக மாற்றியிருந்தார். கைலாஷ் சிறு வயதிலேயே அதனை இன்னும் மேம்படுத்தும் கனவைக் கண்டவர், தென்னிந்தியாவின் மான்ஷெஸ்டர் என அறியப்பட்ட கோவையில், தங்களது கம்பெனி முன்னிலை வகிக்க வேண்டும் என டெக்ஸ்டைல் டிகிரி முடிக்கவுமே, மேல் நாட்டுக்கெல்லாம் சென்று, அது சம்பந்தமாகத் தொழில் பயின்றார். அதனைச் செயல்படுத்தும் மில்கள் இந்தியாவிலிருந்தால் இரண்டாம் யோசனையே இன்றி அங்குச் சில மாதம் பணியாளராகக் கூடச் சேர்ந்து விடுவார். அது போல் மகாராஷ்டிரா சோலாப்பூரில் மூன்று மாத காலம் பணியிலிருந்த போது தான். தனது மனம் கவர்ந்த பருவைச் சந்தித்தார்.

ஓரிடத்தில் பணிபுரியும் போதே, அதனைச் சுற்றியுள்ள பிரசித்திப் பெற்ற இடங்களுக்கும் ஓய்வு நாட்களில் சென்று வருவது அவரது வழக்கம். அது போல் துல்ஜாபூர் பவானி அம்மன் கோவிலுக்குச் சென்ற போது தான் , பருவைச் சந்தித்தார்.

"ஹேய் ஆயி துல்ஜா பவானி, துராஜா, த்வரிதா, அம்பே, ஜகதம்பே ஆயி பவானி,மேரி ப்ரயத்னோ பர் ,அப்னே க்ருபா திருஷ்டி பணாயி ரக்" எனப் பவானி அம்மன் சன்னதியில் ஓர் ஓரமாக நின்று மனமுருகி வேண்டிக் கொண்டிருந்தாள் ஓர் இளம் பெண். அவள், இதைக் கொடு, அதைக் கொடு என அன்னையை வேண்டாமல், தனது முயற்சிகளுக்கு மட்டுமே கருணை பார்வையை அருளச் சொன்னது, வியப்பாக இருக்கவும், அந்தப் பெண்ணை ஊன்றி கவனிக்க, நீள் வட்ட முகமும் அகன்ற கண்களும், சந்திரப் பிறை பொட்டும் , இந்த ஊர் பெண் எனப் பறை சாற்றினாலும், சேலைக் கட்டு, நாகரீகமாகத் தான் இருந்தது. அவளது கையிலும் ஓர் பூஜை தட்டு. கைலாஷ் கையிலும் ஓர் பூஜை தட்டு இருந்தது. அதில் பச்சையில், மஞ்சள் புள்ளியிட்ட கண்ணாடி வளையலும் இருந்தது. பூஜை தட்டில் அந்த வளையலையும் வைத்த கடைக்காரர், வீட்டில் யாருக்காவது ஷாதி நடக்கனும்னு வேண்டிக்கிட்டு, ஆயி பவானிக்குச் சமர்ப்பிக்கச் சீக்கிரம் திருமணம் கை கூடும் என்றார்.

கைலாஷும் தங்கைகளை மனதில் நினைத்துக் கொண்டு, வளையலை வாங்கி வந்தவர் கூட்டம் முண்டியடித்ததில் அந்தப் பெண்ணின் பக்கம் ஒதுங்கினார். அதில் அவருடைய பூஜை தட்டிலிருந்த வளையல் அவளின் தட்டில் விழ, தடுமாறிய கைலாஷையும் ஒரு கையால் பிடித்துச் சமாளித்தாள் அந்தப் பெண். இருவரின் கண்களும் சந்திக்க, அந்தப் பெண்ணின் கண்களில் ஓர் ஆச்சரிய பாவனை இருந்தது. அவளின் பிரச்சனைக்கான தீர்வாக ஆயி துல்ஜா பவானி அவரைக் கை காட்டினார், எனப் பிறிதொரு நாளில் அவரது பாரு, அவரிடம் சொன்னார். 

அன்றைய நாளை நினைத்தவர், "உன்னையும் கையோடு கூட்டிட்டு வந்திருக்கனும் பாரு. நான் உன்கிட்ட உடனே வந்திருந்தா, அந்தக் காட்டுமிராண்டி கூட்டத்துக்குப் பலியாகி இருக்க மாட்டியே" என வாய் விட்டுப் புலம்பியவர், " வாழவும் முடியாமல், சாகவும் முடியாத இந்த வாழ்க்கை எப்ப முடியும். இன்னைக்கு உன்னை மாதிரியே ஒரு பொண்ணைப் பார்த்தேன்மா. அவளைப் பார்க்கத் தான் காத்திருக்கேன். நீயும் உயிரோடு இருந்து, நமக்கும் ஒரு பொண்ணு இருந்திருந்தா, அந்தப் பொண்ணு மாதிரி இருக்கும். " என ஏக்கமாப் பேசியவர்,

" எனக்கும் தான் எவ்வளவு பேராசை பாரு. சும்மா கற்பனையாவது பண்ணிக்கிறேன். ஒரு பொண்ணும், பையனும் இருந்திருந்தா எப்படி இருக்கும் .நீ தான் இதுக்கெல்லாம் அலட்டிக்காத ஸ்ட்ராங்கான ஆளு. நான் எப்பவும் போலக் கற்பனையிலேயே உன் கூட வாழ்த்துக்குறேன் " எனத் தனது பர்சிலிருக்கும் தன் பாருவுடன் பேசிக் கொண்டிருந்தவர், நேரத்தைப் பார்த்து விட்டு, ஆதிரா பிகேவை சந்திக்கத் தயாரானார்.

அபிராம், அந்தக் கல்லூரிக்குச் சென்றவன், அவளைப் பற்றி விசாரித்தான். ஆனால் பெரிதாக ஒன்றும் விவரம் தெரியவில்லை. ஆனால் நேற்று அவளைத் துரத்திய மராட்டியர்களைக் கண்டவன், அவர்கள் அவசரமாகக் கிளம்பவும், இவனும் அவர்களைப் பின் தொடர்ந்தான். ஆந்திராவை நேற்று இருவர் பின் தொடர்ந்தனர், ஆனால் இன்று இன்னும் இரண்டு பேர் தெரிந்தனர். அவர்கள் யாருடனோ தொலைப் பேசியில் பேசிக் கொண்டே செல்லவும், அபிராம் அவளைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தைப் புரிந்து கொண்டான். ஆனால் எதற்கு என்பது தான் விளங்கவில்லை. அவர்களைத் தொடர்ந்தவன் எம் ஜி ரோடுவரை வந்து விட்டான். ஆதிராவும் அங்குத் தான் இருக்க வேண்டும் என முடிவெடுத்தான்.

கைலாஷ் ராஜன், மூன்று மணி முதல் ஆந்திராவுக்காகக் காத்திருந்தவர், ' எல்லாப் பொண்ணுங்களும், என் பாரு ஆகிடுமா என்ன, இப்ப இருக்கப் பிள்ளைகள்ட்ட பஞ்சுவாலிட்டியே இல்லையே ' என மனதில் நொந்தவர் ஏமாற்றத் தோடு, ஹோட்டலுக்குக் கிளம்ப வாசலில் இரண்டு மராட்டியர்கள் நின்றனர், அவர்களது உடையிலேயே அவர்களை யாரென அறிந்தவர், அந்தப் பெரிய மகராஜ் எங்கும் தென்படுகிறானா எனத் தேடினார்.' நானும் செல்வ வளத்தில் ,தொழிலில் உன்னை விடக் குறைந்தவனில்லை. பாரம்பரிய குடும்ப நகைகள் இல்லாமல் இருக்கலாம். உலகின் மதிப்பு மிக்க வைர, வைடூரியங்கள் இருக்கின்றன என் பாருவைத் தவிர ' என நினைத்தவர், 'இன்றைய பார்ட்டிக்குக் கட்டாயம் வருவான் பார்ப்போம்' எனச் சட்டெனக் காரில் ஏறிக் கிளம்பி விட்டார்.

ஆதிரா, ஒளிந்து மறைந்து வந்தவளுக்கு, கைலாஷ் கிளம்பிச் சென்றது ஏமாற்றமாக இருந்தது. தன்னை இன்டர்வ்யு செய்த ஒரு பணியாளர் ,தனது ரிபோர்டுகளைச் சமர்ப்பித்து விட்டு வெளியே வந்ததைப் பார்த்தவள், அவரைப் பின் தொடர்ந்து விவரம் கேட்க, அந்தப் பணியாள் சிறிது நேர யோசனைக்குப் பிறகு , " ஓபராய் ஹோட்டல்ல தங்கியிருக்கார். உங்கள் விவரத்தைச் சொல்லி ரிசப்ஸனில் கேளுங்க. கட்டாயம் உங்களைச் சந்திப்பார். ஆனால் நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க" என்று விட்டுச் சென்றான்.

' மாஸி கிட்ட கிளம்பலாம்னு சொல்லிட்டேனே, அவரைக் கட்டாயம் பார்த்தே ஆகணும்' எனச் சங்கல்பமெடுத்துக் கொண்டு கிளம்பினாள். அவள் ரோட்டைக் கடந்து செல்லும் போது அபிராம் அவளைப் பார்த்து விட்டான். அவன் கார் கண்ணாடியை இறக்கி அவள் பெயர் சொல்லி அழைக்க, அவள் தன் பெயர் அழைக்கப் பட்டதிலேயே வேகமாக ஒரு காபி ஷாப்புக்குள் மறைந்தாள்.

அந்திசாயும் பொழுதில் ஆதிராவை தேட ,ஆரம்பித்த தேடுதல் வேட்டை, இருள் சூழ்ந்து இரவே வந்துவிட்டது. பெங்களூர் எம்ஜி ரோட்டில் வாகனத்தை நிறுத்த மாட்டாமல் பத்தாவது முறையாக மெல்ல ஓட்டி வருகிறான் ,இளம் வயதிலேயே தொழில் வட்டாரத்தில் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட யங் பிஸ்னஸ் மேன் அபிராம், ஒரு பெண்ணுக்காக இப்படி அலைகிறோமே என எண்ணிய போதும், கண்கள் நான்கு திசைகளிலும் தேடிக் கொண்டே தான் வந்தது.

மின்னல் போல் வந்து அவன் கண்ணைப் பறித்து அவனின் மனதில் பதிந்த மதி முகத்தவளை, மீண்டும் காணும் ஆவல். இவன் பத்தாவது முறை எம்ஜி ரோட்டை சுற்றினால், அவன் அம்மா கஸ்தூரி பதினைந்தாம் முறை அவனுக்கு அழைத்து விட்டார்.

ஒவ்வொரு முறையும் , " ஐயம் இன் ட்ராவல்" என்பதை மட்டும் தவறாமல் அனுப்பி விட்டான். ஆனால் பெற்ற மனம் கேட்கவில்லை, இவனுக்காக அவரது உடன் பிறவா அண்ணனையும் அல்லவா ஹோட்டலில் காக்க வைத்திருக்கிறார். இன்று எப்படியும் மகனை அந்தப் பெண்ணைப் பார்க்க வைத்து, கூடிய விரைவில் அவன் திருமணத்தையும் முடிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு வேலையில் இறங்கி விட்டார் கஸ்தூரி.

மகனுக்கு அழைத்துச் சோர்ந்து போன கஸ்தூரி மீண்டும் உடன் பிறவா அண்ணனுக்கு அழைத்தார். " அண்ணா, உங்க மருமகன் இன்னும் ட்ராபிக்ல இருக்கிறதா மெஸேஜ் அனுப்புறானுங்க , அந்தப் பொண்ணு வீட்டுக்காறங்கக் கிளம்பிட்டாங்களா" ,என அழமாட்டாமல் கேட்டார் கஸ்தூரி.

அந்த முனையில் ஓர் நகைப்போடு ஆரம்பித்த , கைலாஷ் ராஜ், " மாப்பிள்ளை கழுவுற மீன்ல நழுவுற மீனு. நீ அவனைச் சிக்க வைக்கனுமுன்ன நினைச்சா முடியுமா. பார்ட்டி நடந்திட்டு தான்மா இருக்கு. அந்தப் பொண்ணும் இங்க தான் இருக்கு. ஒருவேளை நீ அனுப்பின பேட்டாவைப் பார்த்துப் பயந்தே , ரோட்டை சுத்துறானோ என்னமோ" எனக் கேலி செய்தவரை " அண்ணா " எனச் சலுகையாய் கடிந்தவர்,

" நீங்க தான் அவனுக்கு ரோல்மாடல், குரு, காட் பாதர் எல்லாமே. ஒரு வார்த்தை சொன்னீங்கனா, தட்டாமல் ஓடி வந்து நிற்பானுங்க. இந்தக் கல்யாண விசயத்தில் மட்டும் அவனை ஒண்ணும் சொல்லமாட்டேங்கிறீங்களே அண்ணா " எனக் கஸ்தூரி குறைபடவும். விரக்தியாகப் புன்னகைத்தவர்,

" அதைச் சொல்றதுக்கு எனக்கு என்னமா தகுதியிருக்கு. பிஸ்னஸ்ல பெரிய டைக்கூனா இருக்கலாம். ஆனா பர்சனல் லைப்ல நான் பாப்பர் தானம்மா " எனக் குரல் கம்மச் சொன்னவர், "என்ன அண்ணா, எவ்வளவு பேர் வாழ்க்கையில் ஒளி ஏத்தி வச்சிருக்கீங்க. அதுக்கான பலன் நிச்சயம் இருக்கும்ங்க அண்ணா " என்ற ஆறுதலான வார்த்தையில்,

" அப்படி நான் புண்ணியம் சேர்த்திருந்தா, அது பூரா என் மாப்பிள்ளையைச் சேரட்டும். அவனுக்குப் பிடிச்சப் பொண்ணை அவன் கண்ணில் காட்டட்டும் " என மனதார ஆசீர்வதித்தார் கைலாஷராஜன் என்ற தன் பெயரை, ஸ்டைலாகக் கைலாஷ் ராஜ் என மாற்றிக் கொண்ட பிஸ்னஸ் டைக்கூன். இது ஒன்று தான் அவர் விரும்பி செய்து கொண்ட மாற்றம், ஏனெனில் அவர் மனம் கவர்ந்தவர் அவரை முதன் முதலாக அழைத்தது அப்படித் தான். பார்ட்டி நடை பெற்ற ஹாலிலிருந்து தனியே வந்து பேசியவர் ஓர் குலுக்கலோடு தன்னை மீட்டு மீண்டும் வரவழைத்துக் கொண்ட கம்பீரத்தோடு பார்ட்டி ஹாலுக்குள் சென்றார்.

ஆதிரா கைலாஷைத் தேடி ஹோட்டலுக்கும் வந்து விட்டாள். ஆனால் அவளது துரதிஷ்டம் அவர் பார்ட்டியில் சீக்கிரம் தலையைக் காட்டி விட்டுக் கிளம்பலாம் எனச் சென்றுவிட்டார். ஆதிராவையும், அந்த மராட்டியர்களையும் பார்த்த பிறகு , அவரது கடந்த கால நினைவுகள் முட்டி மோத, இன்று நள்ளிரவு வரை நடக்கும் பார்ட்டியில் தன்னால் முழுமையாகப் பங்கெடுக்க முடியுமெனத் தோன்றவில்லை. போதாத குறைக்குப் பாருவின் உறவினர்களும் வருவார்களே என மனது குடைய பெயருக்குத் தலை காட்டச் சென்று விட்டார்.

ஆதிரா, ஹோட்டலின் ரிசப்ஸனில் காத்திருப்பது சரியானதில்லை என வெளியேறப் போனவள், பார்ட்டிக்கு வந்த மற்றொருவரைப் பார்த்து, ஹோட்டலின் உணவகத்துக்குள் சென்றாள். அங்கேயே மணி நேரங்களைக் கடத்தியவள், கைலாஷை பார்க்காவிட்டாலும் சரி , கௌரி மாஸியையும் அழைத்துக் கொண்டு கோவை சென்றுவிடுவது என முடிவு செய்தாள்.

அவள் எச்சரிக்கையாக வெளியேறச் சென்ற போது வாசலில் நின்றவர்களைக் கண்டு, " எங்கப் போனாலும் மோப்பம் பிடிச்சு வந்துடுறானுங்களே " என மனதில் நினைத்தவள், தனது கைப்பையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு செடிகளுக்கு ஊடே மறைந்து மறைந்து அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிக்க எண்ணியவளாகப் பாதையில் கவனமின்றிக் குனிந்தே முன்னேறியதில் ஒரு காரின் பின் பக்க பாணட்டில் இடித்துக் கொள்ள, அவளுக்கு மயக்கம் வரும் போல் வானமும், பூமியும் , மின் விளக்குகளும், நிலவும் சுழன்று ஒன்றாய் தெரிந்தன.

அந்தக் கார் கிளம்பத் தயாராக இருந்தது. அப்போது தான் ஓட்டுநர் டிக்கியில் சில பொருட்களை வைத்துச் சென்று, முதலாளி வருகைக்காகக் காத்திருந்தார். மேலும் சில நிமிடம் நின்றால் தான் மயக்கம் போட்டு விழுவது உறுதி என நம்பியவள் அந்தக் காரின் டிக்கியைத் திறந்து உள்ளே படுத்து மூடிக் கொள்ள, கீழே ஓட்டுநர் வைத்துச் சென்றிருந்த பழைய காலத்து ரஜாயில் (மெல்லிய மெத்தை விரிப்பு) மயங்கிச் சரிந்த அவள்,மயக்கத்திலேயே உறங்கியும் போனாள். யாருடைய கார் இது, அவள், காண வந்தவருடையதா, கண்டு மறைந்தவருடையதா, அபிராமுடையதா, வேறு யாருடையதுமா. பொறுத்திருந்து பார்ப்போம்.




No comments:

Post a Comment