Tuesday, 19 October 2021

யார் இந்த நிலவு-6

யார் அந்த நிலவு -6

கைலாஷ்  ராஜின் வாகனம் பெங்களூர் மாநகரை விட்டு வெளியேறியது, அவர் மோனநிலையில் அமர்ந்திருக்க, ஓட்டுநர் சத்தியன் அவர் உணர்வு புரிந்து காரை ஒரு குலுக்கல் , அதிர்வு இல்லாமல் செலுத்தினான். அதுவே டிக்கியில் படுத்திருந்த ஆதிராவுக்கும் வசதியாகப் போனது.

"ஏய் மேரே, ஹம்ஸபர் , ஏக் ஜரா இன்தஜார். ஸுன் ஸதாயேங், தே ரஹி ஹைம். மன்ஜில் ப்யார் கி."

என்ற பாடலின் வரிகள் அல்லாத இன்ஸ்ட்ருமென்ட் இசை ஒலிக்க, தன் மனதில் தான் " பாரு" வை நினைத்த மாத்திரத்தில் இசைக்கிறது எனக் கைலாஷ் நினைத்திருக்க, ஓட்டுநர் சத்தியனுக்கும் அது கேட்டது. அவன் முதலாளியின் மோன நிலையைக் கலைக்க விரும்பாதவனாகக் காரை செலுத்திக் கொண்டு வந்தவன், தருமபுரி தாண்டவுமே வெளிச்சமான ஒதுக்குப்புறத்தில் காரை நிறுத்தினான். அதில் மோன நிலை கலைந்த கைலாஷ் ," என்ன சத்யா. டீ குடுக்கலாமா. ஆனால் நடுவில் நிறுத்தியிருக்க" என வேறு தேவையோ எனச் சிரித்தார்.

" இல்லிங்க அப்பா, ஏதோ மொபைல் அடிக்கிற சத்தம் , ஹிந்தி பாட்டுங்கப்பா, விடாத கேட்டுட்டு இருக்குதுங்க. அது தான் என்னான்னு பார்க்காலமுன்னு " என அவன் சொல்லவும்,

" டேய் அது உனக்கும் கேட்டுச்சா. நான் எனக்கு மட்டும் ட்ரீம்ல கேட்டதுன்னு நினைச்சேன்" என அதிசயித்தவர் தானும் குனிந்து பார்க்க, ஓட்டுநரும் குனிந்து தேடினான். மீண்டும் ஹம்சபர் பாடல் ஒலிக்க, இருவருமே கூர்ந்து கவனித்தனர். " டிக்கியிலிருந்து" என ஒரு சேர கத்தியவர்கள் கீழே இறங்க.

" அப்பா, நீங்க இங்கேயே இருங்க. எவனாவது திருடனா இருக்கப் போறானுங்க" எனச் சத்தியன் அவரை நிறுத்தவும்.

" நீ பெரிய வீரன், நான் தான் முதல்ல திருடனைப் பார்ப்பனாக்கும். ஆனால் திருடன் ஹிந்திக்காரன் போல " என்றபடி இருவருமாக இறங்கி வந்து, கைலாஷை தள்ளியே நிற்க வைத்து சத்தியன் கவனமாக டிக்கியைத் திறக்க, உள்ளே அவரது ரஜாயில் சுகமாக ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான்.

" இவனுக்குத் திமிரப் பாருங்கப்பா, உங்க படுக்கையில் தூங்குறான்" என அலைப்பேசியை எடுத்து டார்ச் அடிக்க, பேண்ட் சர்ட்டுக்குள் இருப்பது பெண் எனத் தெரிந்தது.


" அப்பா, திருடன் இல்ல திருடி" எனக் கூவினான் சத்தியன். " நீ சின்னப் பய நவுந்துக்க, நான் பார்க்கிறேன்" என்ற கைலாஷ், முழங் கையால் முகத்தை மறைத்திருந்தவள் கையை விலக்கிப் பார்க்கவும், அதிர்ந்து போனார். அலைப்பேசியும் அடித்து ஓய்ந்திருந்தது.

யாருக்காகக் காலையிலிருந்து காத்திருந்தாரோ, ஆயி பாவானியை அழைத்த ஆதிரா பிகே. அவரது முகம் கனிந்து போனது. தானே குனிந்து அவளைக் குழந்தையாய் அள்ளித் தூக்கினார்.

" அப்பா, நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க. நான் தூக்குறேன்" என்றான் சத்தியன்.

" இல்லடா, இது என் மகள்" எனக் கைலாஷ் ஆதிரா கைகளில் உணர்ச்சி வயப்பட்டே தூக்கியிருந்தார், " அப்பா" என அவன் ஆச்சரியமாகக் கேட்க, " அபி இந்தப் பொண்ணைத் தான் தேடிக்கிட்டு இருக்கான்" என்றவர், கார் கதவைத் திறக்கச் சொல்லி ஆதிராவை அமர்த்தி, தானும் பக்கத்திலமர்ந்து, அவள் மயக்கத்தைத் தெளிய வைக்க முயன்றார். 

அதற்குள் அவளது போன் மீண்டும் ஒலிக்க, சத்தியன் வேகமாக எடுத்துப் பேசியவன், " இந்த ஐயாட்டக் குடுக்குறேன் மா" என்றவனை அவர் ஆச்சரியமாக விழி உயர்த்திக் கேட்கவும், " அந்தப் பொண்ணோட அம்மா தமிழ்காரவுங்க தான் போல" என நீட்டினான்.

ஆதிராவை தன் மேல் சாய்த்துக் கொண்டே குரலைச் செருமிக் கொண்டே , " வணக்கம்மா, நான் கே ஆர் மில்ஸ் சேர்மன் கைலாஷ் ராஜ். உங்க பொண்ணை இப்ப தான் எங்க கார்ல பார்த்தோம்.மயக்கத்தல இருக்கு. " எனும் போதே அந்தப் பக்கம் " ஆயி பவானி" என்ற சத்தம் பதட்டமாகக் கேட்கவும்,

"நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க. நான் பக்கத்தில் இருக்கிற ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போறேன். உங்க மகள் என்கிட்ட பாதுகாப்பா இருப்பா. காலையில நம்ம கம்பெனிக்கு தான் இன்டர்வ்யு க்கு வந்தது. என்ன ஏதுன்னு தெரியலை. அதுக்கு முழிப்பு வரவும் பேசச் சொல்றேன்" எனவும் , சிறிது நேரம் மௌனம், லேசாக விசும்பும் சத்தமோ,அல்லது அந்தப் பெண்மணி  தன் உணர்வை அடக்கிய தருணமோ , எதிர்முனை குரல் பேச வரமால் தடைப் பட்டது.

“ அம்மா, லைனில் இருக்கீங்களா, பதட்டப்படாதீங்க ,பயப்பட ஒண்ணுமில்லை “ என ஆறுதல் சொல்லவும், எதற்குமே கலங்காத பைரவி , அன்று மிகவும்  உணர்ச்சி வசப்பட்டவராக ,குரல் கம்ம , " ஆயி துல்ஜா பவானி தான் , ரஜ்ஜும்மாவை உங்க கிட்டச் சேர்த்திருக்கா. உங்க பொண்ணா நினைச்சு உங்களோட கூட்டிட்டுப் போங்க. நானே வந்து அவளை அழைச்சுக்குறேன். தன்யவாத் ஜி  " என்றவரின் குரலில் சிலையாகப் போன கைலாஷ்," சாப்" என மூன்றாம் முறையாக  அழைத்த ,அதே  குரலில் மீண்டவர்.

" நீங்கச் சொல்லவே வேண்டாம்மா, ஆதிரா இனிமே என் மகள். நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா" எனக் கேட்டார் கைலாஷ். " ஆதிராவோட மாஸி, கௌரி. மயக்கமா இருந்தாலே நீங்க, அவளைப் பாருங்க. மறுபடியும் கூப்புடுறேன்" எனக் கைலாஷ்க்கு ஆதிராவின் சிகிச்சையை நினைவூட்ட, சத்தியன் வண்டியைக் கிளப்பியிருந்தான். 

பெங்களூரில் கௌரி, காலையிலிருந்தே தான் கண்காணிக்கப்படுகிறோம் என்று உணர்ந்தவர், ஆந்திராவுக்கு  அடித்தும், மெசேஜ் செய்தும் பார்த்தார், ஆனால் அதிரா எதற்குமே பதில் தராமல் மெஜெஸ்டிக் பஸ்  ஸ்டென்ட் வந்து விடுமாறு அழைப்பு விடுத்திருந்ததைப் பார்த்தவர், இனியும் தாமதித்து பயனில்லை , என்ன ஆனாலும் ஆகட்டும் என , தன்னைப் பின் தொடர்ந்த ஆட்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு பஸ்  ஸ்டாண்டுக்கு வந்தார். 

அதே நேரம், பைரவியிடமிருந்து போன் வந்தது, ஆதிரா பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாள் என்றும், கௌரியைப் பழைய இடத்துக்குச் சென்று பத்திரமாக இருக்கச் சொன்னார்.

குன்னூர் , பன்னீர் இரவு நேரம் உறக்கம் வராமல், ஹாலில் நடை பயின்று கொண்டிருந்தார். எப்போதுமே இரவு சரியாகச் சேமிக்காமல் சிலஉபாதைகள் இருக்கும்,அதற்காகவே ,பவானி பார்த்து,பார்த்துப் பரிமாறுவார். இன்று கொஞ்சம் பதட்டத்திலிருந்ததால், இவரைக் கவனிக்காமல் விட,கூட ஒரு தோசையைச் சாப்பிட்டு விட்டார். 


பவானி அறையில் இன்னும் விளக்கு எரிவதைப் பார்த்து, எழுப்பலாமா, வேண்டாமா என அரைமணி  நேர ஆலோசனைக்குப் பிறகு, சொல்லாமல் விட்டதற்கும், சேர்த்து, “உங்கப் பொண்ணு ராஜியா இருந்தா எழுப்பாமல் இருப்பீர்களா, அப்போ மகள்னு சொல்றது பேச்சுக்குத் தான். என்னை ஒரு கேர் டேக்கரா மட்டும் தான் பார்க்கறீங்க “ என இந்த மகள் திட்டுவார், எனப் பயந்தே சென்று அழைத்தார். 

போனை மேஜைமீது வைத்து விட்டு, அதையே வெறித்துக் கொண்டு,  அமர்ந்திருந்தவரைப் பார்க்கவும்,”பவானி,எதுவும் பிரச்சனையா “ என்றார். 

பன்னீர் அழைத்ததில் உயிர் பெற்ற பவானி,”அதெல்லாமில்லை பா . என் மகள் போன் பண்ணுவான்னு உட்கார்ந்திருக்கேன்,உங்களுக்குத் தூக்கம் வரலையா என்ன செய்யுது “ எனச் சரியாக அனுமானித்து எழுந்து வந்தவர், அவர் கையைப் பற்றி கொண்டு கேட்கவும்,

“ஒண்ணுமில்லை, கூட ஒரு தோசை சாப்பிட்டுட்டேன்  போலாமா,நெஞ்சை கரிக்குது “என்றார். “வாங்கப்பா” என போனை  எடுத்துக் கொண்டு , அவரோடு கூடத்துக்கு நடந்தவர், டைனிங்கில் பன்னீரை அமர்த்தி விட்டு, பேச்சுக் கொடுத்துக் கொண்டே, சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து, அதில் தண்ணீர் ஊற்றி, பாதியாக வற்ற வைத்து, வடிகட்டி எடுத்து வந்தார். அதனைப் பதமாக, ஆற வைத்துக் கொண்டிருக்கும்போதே, “பேத்தி,என்ன படிக்கிறா “என விசாரித்தார். “டெக்ஸ்டைல்ஸ் பத்திதான் பா படிக்கிறா “ எனவும்,

“அப்பப் படிப்பு முடிச்சுட்டு வந்தா ,நம்ம ராஜன் கம்பெனியில கூட வேலைக்குச் சேர்த்து விடு, நல்லா பழகிக்கலாம் . மருமகன் நல்லா வச்சுக்குவாப்ல “ என கைலாஷ் ராஜன் கம்பெனியையும், அவரையும் பற்றி புகழ்ச்சியாகப் பேசவும், 

“அதெப்படி அப்பா, உங்க மகள் இறப்புக்குக் காரணமானவராய் இவ்வளவு புகழ்ந்து பேசுறீங்க” என பவானி வினையமாகவே கேட்கவும்,

“யார்மா , சொன்னது ராஜி சாவுக்கு ராஜன்  காரணமுன்னு “ என கோபமாகவே கேட்கவும், “சரிப்பா, நான் எதுவும் தப்பா கேட்டுடேனா “ என பின் வாங்கினார் பவானி. 

“ தப்பா தான்மா,கேட்டுட்டே.  ஆனால் ,நீயும் காதில் , விழுந்ததை  வச்சுதான கேட்ப, எல்லாம் இந்த பாலாவால வந்தது” என்றார். அதே நேரம், ராமசாமியும் ,” ளையிட் எரியுதேன்னு பார்க்க வந்தேன் “ என அவர்களிருந்த இடத்துக்கு வந்தவர், பன்னீர் கையிலிருந்த  ஜீரக கசாயத்தைப் பார்த்து விட்டு, அவர்கள்பேச்சில்கலந்தார். அன்று நடந்ததை இருவருமாகச்  சொல்ல ஆரம்பித்தனர்.

“நாங்க நாலு பேரும் , நண்பர்களா இருந்தவுங்க, இந்த நட்பும்,பந்தமும் எப்பவும் தொடரணும்னா  அதையும் தாண்டி உறவுகாரங்களா மாறணும்னு ஆசைப் பட்டோம். அதில தான்,ஒருத்தருக்கொருத்தர் முறை சொல்லி, தான் கூப்பிடுவோம்,பிள்ளைகளும் அப்படிதான் வளர்ந்ததுங்க.” என்றார் பன்னீர் 

“பாலாவுக்கு, ஒரு பையன், ரெண்டு பொண்ணு. இவனுக்கு ஒரு பொண்ணு, ரெண்டு பையனுங்க, எனக்கு ஒரே பையன், சுப்பிரமணிக்கு அதுவும் இல்லை. அதுனால தான், சுப்பிரமணி அண்ணன் மகள் கஸ்தூரியை ,என் மகனுக்குக் கட்டி வச்சோம். அதே போல, பாலா மகனுக்கு, இவன் மகள் ராஜியை கல்யாணம் கட்டி வைக்கணும்ன்னு எங்களுக்குள்ள பேச்சு. அதன் படி கல்யாண  தேதியும் நிச்சயம் பண்ணிட்டோம், திடிர்னு ராஜன், வடக்க போயி தொழில்  பழகிட்டு வர்றேன்னு கிளம்பிட்டான் . சௌந்தரி, ராசியைக் கல்யாணம் கூட கூட்டிட்டு போன்னு சொல்ல, எனக்கு அப்படி நினைப்பே இல்லை, ராஜிக்கு  வேற இடம் பாருங்கன்னு சொல்லிட்டு கிளம்பியிருக்கான்.ஆனால்  சௌந்தரி,மகன் தொழில் தொடங்கிற ஆர்வத்தில், அதுக்கு தடை வந்திருமோன்னு கோபத்தில் தான் இப்படி சொல்றன்னு நினைச்க்கிடுச்சு. பாலாவும் அப்படித் தான் நினைச்சு இருந்திருக்கான். ஆறு மாசம் ஆளையே காணோம், விஜயனையும் அனுப்பி வச்சோம்.  திரும்ப இரண்டு மாசத்தில் விஜயன் மட்டும் வந்தான்.ஏதோ பிரச்சனை, ராஜன் வர லேட்டாகும், ராஜிக்கு வேற இடம் பார்க்கலாம்னு அவனும் சொல்லவும், எல்லாருக்கும் ஒரே கோபம். 

 

பாலா, அதிரடியா முடிவெடுத்து, அடுத்து ராஜன்,எப்ப போன் பேசினாலும், உடனே வரச்  சொல்லணும்னு திட்டம் போட்டு, அவன் வர்ற அன்னைக்கு ராஜிக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும், அப்பத் தான் வேற எங்கையும் போக மாட்டான்னு முடிவெடுத்தான்.அதே போல, ராஜன் மூணு மாசம் கழிச்சு போன் பண்ணும்போது, சௌந்தரிக்கு முடியலைன்னு வரவழைச்சோம்.

ராஜன் வரவும், இரண்டு நாளில் கல்யாணம்னு  சொல்லவுமே அவனுக்குக் கோபம், முறிச்சுக்கிட்டு கிளம்பப் போனான். அந்த நேரம்,ராஜி  அங்கப் போனவளை , ராஜன் தனியா கூப்பிட்டு  பேசியிருக்கான்.  அவன் கிட்டச் சரி, சரின்னு தலையை ஆட்டிட்டு வந்தவ, தன ஆசை நிறைவேறாத துக்கத்தில் , தப்பான முடிவு எடுத்துட்டா. பாலா,ராஜனை வீட்டை விட்டு வெளியேத்திட்டான். அதிலிருந்து அப்பாவும் மகனும் ஒட்டவே இல்லை. நட்புக்குள்ள திருமண பந்தம் குறுக்க வர வேண்டாம்னு, மற்ற பிள்ளைகளுக்கு வெளிய செஞ்சிட்டாங்க. மகளை பறிகொடுத்த தூக்கத்திலே, இவன் வீட்டுக்காரம்மா, உடம்பை கவனிக்காமல் விட்டு, சீக்கிரமே போயி சேர்ந்துடுச்சு , இவன் தனி ஆளா ஆகவும், இங்க வந்துட்டோம் “என இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில்,பவானிக்கு போன் வந்தது

“சரிம்மா,நீ  பேசிட்டு படு “ எனப் பவானியை அனுப்பியவர்கள், தங்களுக்குள் மீதிக்கதையை பேசிக்கொண்டனர். “ நண்பனுக்காக, மகனையே தள்ளி வச்சான் பாலா. ஆனால் ராஜனுக்கு எல்லாருமா அநியாயம் தான்டா செஞ்சிருக்கோம். ராஜி இல்லைங்கிறதை  தவிர, என் மகனுங்களோ, பாலா மகளுங்க, எல்லாரும் அவரவர் வாழ்க்கையை வாழுறாங்க. ராஜன் மட்டும்தான் தனி மரமா நிக்கிறான் “ எனக் கவலைப்பட்டார் பன்னீர் . 

“சரி,விடு,எல்லாம் அவரவர் தலை விதிப் படி தான் நடக்கும் “ எனச் சமாதானம் சொல்லிக் கொண்டே, அவரவர் அறைக்குச் சென்றனர்.பன்னீர் படுத்தவருக்கு தான், தன்  மனைவி, சந்திரிகாவின் வயிற்றெரிச்சல், சாபம் தான் ராஜனைத் துரத்துகிறதோ என நினைத்தவர், மானசீகமாக,மனைவியின் ஆத்மாவிடம், ராஜனை மன்னிக்கச் சொல்லி வேண்டுகோளும் விடுத்தார்.

கைலாஷ் ராஜ், சேலத்தில் ஓர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆதிராவைச் சேர்த்தவர், அவள் நினைவு திரும்பும் வரை, மருத்துவமனை லாபியில் இருப்புக்கு கொள்ளாமல் நடந்தார். ஆதிரா பிறந்த சமயத்தில்கூட, அவளது தந்தை இப்படி மருத்துவ மனை வராண்டாவில் அலைந்து இருந்திருக்க மாட்டார். அவளைப் பரிசோதித்த மருத்துவர், " அந்தப் பொண்ணு கண் முழிச்சிடுச்சு" எனக் கைலாஷை அழைத்தார்.

கைலாஷ்க்கு என்னவென்றே புரியாத நிலையில்,மனம்  படபடப்பாக, ஆதிரா இருந்த அறைக்குள் நுழைந்தார். " பாபா, உங்க கார்ல தான் மயங்கி விழுந்தனா" எனப் புன்னகைக்க, அவளருகில் சென்று தலையை வாஞ்சையாகத் தடவியவர், " என்னை யாருன்னு தெரியுமாம்மா" எனக் கேட்டார் ஆம் எனத் தலையாட்டியவள், " பாபா(அப்பா) " என்றாள்.

ஆதிரா, அவரைப் பாபாவென அழைக்கக் காரணம் என்ன இவர்கள் உண்மையில் அப்பா, மகளா, அதை ஆதிரா அறிவாளா. பொறுத்திருந்து பார்ப்போம்.


No comments:

Post a Comment