யார் இந்த நிலவு -3
ஆதிரா ராஜ் போஸ்லே, அன்று காலையில் எழுந்து இன்டர்வ்யூவுக்குத் தயாரானவள், தனது அம்மாவிற்கு அழைத்தாள்.
" குட்மார்னிங் ஆயி .இன்னைக்கு நாள் எனக்கு லக்கியா அமைய ப்ளஸ் பண்ணுங்க" என்றாள்.
" ரஜ்ஜூமா, நீயே எனக்கு லக்கி தாண்டா. உனக்கு எல்லாமே நாளுமே லக்கி தான். " என வாழ்த்தினார் அவளது ஆயி.
" ஆயி, நீங்க எனக்காகச் சொல்றீங்க. ஸச் மே, ஆயி ,பாபா கூட ஒன்னா சேர்ந்து இருக்க முடியாத அன்லக்கி முல்கி நான் தான். கேரியராவது செட்டிலாகட்டும் ப்ளஸ் பண்ணுங்க" எனத் தன் நாடோடி வாழ்க்கையில் சலித்துப் போன மகள் கேட்கவும், கலங்கிப் போன தாய்,
" அப்படிச் சொல்லாதடா ரஜ்ஜூமா, விலைமதிப்பில்லாத வைரம் நீ. ஒரு ஆறு மாசம் பொறு, உன் பாபா கிட்ட கூட்டிட்டுப் போறேன். " என்றவர்,
"இந்த நாள், உன் வாழ்க்கையோட நல்ல நாளாக இருக்கட்டும். என் மகள் நினைச்சதெல்லாம் கிடைக்கட்டும்" என வாழ்த்தியவர், வழக்கமான பாதுகாப்பு எச்சரிக்கை களைச் செய்தார்.
" ஆயி, உங்க தைரியத்தில பத்தில் ஒரு பங்காவது என்கிட்ட இருக்காதா. எவ்வளவு சொல்லிக் குடுத்திருக்கீங்க. உங்க மகள் எந்தச் சிசுவேஷனையும் சமாளிக்கத் தயாரா இருக்கா. நீங்க பயப்படாதீங்க. நாம சேர்ந்து இருக்கிற நாளும் சீக்கிரமே வரட்டும். " எனத் தன் ஆயிக்கும் தைரியம் சொல்லி போனை வைத்தாள் ஆதிரா.
காலை உணவைக் கொண்டு வந்து வைத்த கௌரி , ஏதோ சொல்ல வருவதும் தயங்குவதுமாக இருக்க, "மாஸி, என்ன சொல்ல வந்தீங்க. சொல்லுங்க" என்றாள் ஆதிரா.
" நேத்து, மார்க்கெட் போயிருந்தப்போ, அந்த ஆளுங்களைப் பார்த்தேன். நீ எதுக்கும் எச்சரிக்கையா இரு. ஒரு வேளை இன்னைக்கு , இந்த வீட்டை கண்டுபிடிச்சிட்டா, நான் மெஸேஜ் பண்றேன். நீ ஆயி சொன்ன இடத்துக்குப் போயிடு. " என்றார் கௌரி.
" மாஸி, அந்தச் சந்தேகம் வந்துடிச்சுனா, நாம இரண்டு பேருமே கிளம்பிடுவோம். உங்களை ரிஸ்க் எடுக்க விட்டுட்டு நான் தனியா தப்பிச்சு போக மாட்டேன்" எனத் தான் இன்டர்வ்யூவுக்குச் செல்லும் உத்தேசத்தையும் மாற்றினாள் ஆதிரா.
" நஹி முலே, தூ ஜா. இன்னும் நம்மளை கண்டுபிடிக்கலை. இந்த வீடு அவுங்களுக்குத் தெரியாது. அப்படி நிலைமை வந்தா, அவங்களைத் திசை திருப்பவாவது நான் இங்க இருக்கனும். இது நமக்குப் புதுசா என்ன. நீ தைரியமா இன்டர்வ்யு அட்டன் பண்ணு. உனக்கு வேலை கிடைச்சா, நானும் அங்க வந்து ஒரு ஆயா வேலைலையாவது சேர்ந்துக்குவேன் " என்றார் கௌரி.
" ம்கூம், இந்த நிலைமை எப்பத் தான் மாறுமோ. சொத்தும் வேண்டாம், இவங்க பரம்பரை சர்நேமும் வேண்டாம்னு சொன்னாலும் விட மாட்டேங்கிறாங்களே, வெறும் ஆதிரா பிகே வா மட்டும் இருந்திருந்தா , நானும், ஆயியும் என் பாபாவோட சந்தோசமா இருந்திருப்போம்ல மாஸி " என ஆதிரா ஏக்கமாக கேட்கவும் ,
". உன் அஜோபா (தாத்தா) உயில் அப்படி, என்ன செய்யறது, ஆனால் ஆயி வாக்கு கொடுத்தாங்கன்னா கட்டாயம் நிறைவேத்துவாங்க , நீங்க குடும்பமா சேர்ந்திருக்க காலம் சீக்கிரம் வரும் கவலைப் படாத முலே ." என நம்பிக்கைத் தெரிவித்தார் கௌரி.
கௌரி மாஸி சொன்னது போல், அவர்கள் தங்களை நெருங்கி விட்டார்களோ, என யோசித்தாள். ஆதிரா, மீண்டும் நேற்றை நிகழ்வை மனதில் ஓட்டிப் பார்த்தாள்.
சில நாட்களாகவே, பெரிய மீசை வைத்த அந்த மராட்டியர்கள் ஆங்காங்கே தென்பட்டுக் கொண்டே தான் இருந்தார்கள். பொதுவாகவே, ஆதிரா தினமும் வெவ்வேறு பாதைகளில் பயணித்தே வீடு வந்து சேருவாள். எந்த ஊரில் குடியிருந்தாலும், அந்த ஊரின் வழித் தடங்கள் அவர்களுக்கு அத்துப்படி ஆகும். அனைவரையும் சந்தேகக் கண் கொண்டே பார்க்கப் பழகியிருந்தாள். அப்படிக் கவனித்ததில் தான் மராட்டியர்கள் பின் தொடர்ந்ததும் தெரிய வந்தது.
அதுவும் நேற்று இரவு, கிட்டத் தட்ட அவர்கள் இவளை நெருங்கி விட்டனர். சட்டென ஒரு சந்தில் திரும்பியவள், அதன் வழியே ஓடி மீண்டும் மெயின் ரோட்டுக்கு வந்தவள், ஒரு காரின் குறுக்கே விழுந்திருப்பாள். நல்ல வேளையாக அதை ஓட்டி வந்தவன், சுதாரித்துச் சடன் ப்ரேக் போட, இவள் அதிர்ந்து விழித்ததில் அவளைத் திட்டப் போன அந்த இளைஞனின் பார்வை சட்டென மாறியது.
இவளை பின் தொடர்ந்தவர்களும் இவள் வெளி வந்த தெருவிலிருந்து வெளி வர, படபடவென அவன் காரின் கதவுகளைத் தட்டி அவள் உதவிக் கேட்க, நொடி நேரமும் தயங்காமல் சென்டர் லாக்கை ரிலீஸ் செய்து அவளை உள்ளே வரச் சொல்லி சைகை காட்ட, அவசரமாய் உள்ளே ஏறியவள்,
" வில் யூ கோ ஃபாஸ்ட் ப்ளீஸ்" என ஆங்கிலத்தில் அவனை வினவ, அவன் தன் பதிலைச் செயலில் காட்டியவன், காரை வேகமாகச் செலுத்தி, தனது காரை துரத்தி வந்தவர்கள் அடையாளம் காண இயலாதது போல் வாகனங்களுக்கு ஊடே செலுத்தினான்.
அவள் பதட்டமாகவே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு வர, " கவலைப் படாதே, அவங்க உன்னைப் பிடிக்க முடியாது" என ஆங்கிலத்திலேயே அவனும் பதில் தந்தான்.
ஆனால் விதியின் விளையாட்டு, அவர்களது கார், பெங்களூருவின் பிரசித்த பெற்ற போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ள, மராட்டியர் ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் அவளைத் தேடி வந்தனர்.
அவர்களைக் காரின் ரிவர்வ்யூ கண்ணாடியில் கண்டு விட்டவள், அவன் எப்படிப்பட்டவன் என்பதையும் ஆராயாமல், " தப்பா நினைச்சுக்காதீங்க, ப்ளீஸ்" என்றபடி அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் சீட்டின் மேல் கழட்டிப் போட்டிருந்த கோட்டை எடுத்து , குனிந்து மடியில் தலையைக் கவிழ்ந்து கொண்டு, தன் மேல் போட்டுக் கொள்ள, அவன் ஏதேதோ கற்பனை செய்தவன், தன் கோட்டையும் அவளையும் பார்த்தவன், அவள் முக வடிவிலேயே தமிழ் தெரியாதவள் என்ற முடிவெடுத்து " இதுக்குத் தான் இந்தப் பில்டப்பாக்கும்" எனத் தமிழில் வாய் விட்டே கமெண்ட் அடித்தான்.
அவளுக்குக் காதில் விழுந்த போதும், ஒரு வித பதட்டத்திலிருந்தவள், அதை அசட்டை செய்து கவிழ்ந்தே கிடக்க, கார் நகர்ந்தது. அவளும் நிமிர்ந்து பார்க்க, ரிவர்வ்யூ கண்ணாடியில் பின் தொடர்ந்தவர்களைப் பார்த்து விட்டவன் , இடது கையால் அவளை இழுத்து தனது கை வளைவில் வைத்துக் கொண்டே காரைச் செலுத்த, ஆதிரா " விடுறா என்னை " எனத் தமிழில் கத்தியபடி அவனோடு போராட ஆரம்பிக்க, அவள் தமிழில் பேசியதில் அதிர்ந்தவன், பின் சமாளித்து, " உன் மாமாங்க பின்னாடியே துரத்திட்டு வர்றாங்க, கூடப் போறியா" என்றவன்.
" பேசாம இரு, யூ ஆர் சேஃப்" எனத் தன் கோட்டை அவள் மீது போத்திவிட்டு, தன் கை வளைவில் வைத்துக் கொண்டவன், அந்த மராட்டியர்களை முந்த விட்டு தனது காரின் வேகத்தை மட்டுப்படுத்தியவன், தனது பக்க கண்ணாடியை இறக்கி விட்டு, " என் பொண்டாட்டியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு இருக்கேன். என்னை எதுக்கு ஃபாலோ பண்றீங்க. போலீஸை கூப்பிடவா" என ஹிந்தியில் கேட்கவும்.
அவனருகில் இருந்தவர்களை உற்றுப் பார்த்தவர்கள், அவனின் உரிமையான அணைப்பில் ஏமாந்து, " மாஃப் கர்ணா சாப்" என முன்னே கிளம்பினர். அடுத்தப் பத்து நிமிடப் பயணத்துக்குப் பின், " தாங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்" எனத் தனக்குப் பழக்கமான கால் டாக்சியை வரவழைத்து, அவனின் மற்ற கேள்விகளுக்களைப் புறக்கணித்து மீண்டும் ஓர் நன்றியோடு இறங்கி வந்துவிட்டாள் .
ஆதிரா, தன்னை உலுக்கிக் கொண்டவள், " இல்லை மாஸி, அவங்களுக்கு நம்ம இடத்தைத் தெரிய சான்ஸ் இல்லை. ஆனால் கவனமா இருங்க. இந்த ஆயிக்குத் தெரியுமா" என வினவியவள், கௌரியின் மௌனச் சிரிப்பிலேயே, " இந்தக் கேள்வியை உங்க கிட்டப் போய்க் கேக்குறேன் பாருங்க" என்றவள், "ஓகே பத்திரமா இருங்க, சின்னச் சந்தேகம் வந்தாலும் எனக்குக் கால் பண்ணனும் " என அவரிடமும் காலில் விழுந்து வணங்க,
"ஆயி துல்ஜா பவானி துணையிருக்கட்டும் " எனப் பைரவியைப் போலவே வாழ்த்தினார் கௌரி . அவரிடம் விடைப் பெற்று சாம்பல் வண்ணத்தில் பேண்ட், ஓவர் கோட் , வெள்ளை நிற சட்டை எனப் பார்மல் உடையில் கிளம்பினாள் ஆதிரா ராஜ் போஸ்லே.
ஆதிராவின் தாய் பைரவி பாய் மராட்டிய கிளை வம்சத்தில் வந்தவர், நானூறு ஆண்டுகளுக்கு முன் ஆண்ட பரம்பரை, பல கிளை விட்டு இந்தியாவெங்கும், இங்குத் தமிழகத்திலும் வியாபிக்க, அதில் ஒரு கிளை வம்சத்தில், நாங்களும் சத்ரபதி சிவாஜியின் வம்சம் எனப் பெருமை மட்டுமே பீத்திக் கொள்ளும் ஓர் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். போட்டி பொறாமை சொத்து எனக் குடும்ப அரசியலில் அநியாயமாகப் பலியானவர் பைரவி, தனது மனதுக்குப் பிடித்தவரை மணந்தும் , விதிவசத்தால் அவரைப் பிரிந்து வாழ்கின்றனர். இந்த அஞ்ஞாத வாசம் முடிய இன்னும் ஆறு மாத காலம் உள்ளது.
கோவையில் ,ஆர் எஸ் புறத்தில் அமைந்த "ராம் நிவாஸ் " பரபரப்பான நகரின் சந்தடியிலிருந்து, அந்த வீட்டின் மதிற்சுவரே அந்த வீட்டினருக்கு அமைதியைத் தரும் விதமாக உயர்த்திக் கட்டப் பட்டிருந்தது. முன்புறம் புல்வெளி, தோட்டம் அதில் ஊஞ்சல் என அமைத்திருந்தவர்கள் , வீடும் அதற்கேற்றார் போல் விசாலமாகவும் இரண்டடுக்கு மாடியைக் கொண்டதாகவும் இருந்தது.
கணவருக்கு, காலை உணவைப் பரிமாறிய கஸ்தூரி, அலைப் பேசியில் மகனிடம் பேசிக் கொண்டிருந்தார். " அபிக் கண்ணு, ஈவினிங் பார்ட்டிக்கு போற இடத்தில , அப்பாவோட பிஸ்னஸ் பார்ட்னர் குடும்பத்தோட வர்றாங்க . அவிகளும் நம்மவிக தான், பெங்களூர்ல செட்டில் ஆகியிருக்காங்க. ஒரே பொண்ணு.கண்ணனுக்கு லட்சணமா இருக்கு எம் பி ஏ எல்லாம் படிச்சிருக்குதாமாம் . போட்டோ அனுப்புறேன், பார்த்துட்டு வா கண்ணு " எனச் சொல்லவும் , அவரின் மகன் அபிராம் பெங்களூர் ஓபராய் ஹோட்டலில் பாத்டப்பில் குளிருக்கு இதமாக வெந்நீரில் மிதந்தவன் கொதி நிலைக்குச் சென்றான்..
" அம்மா, உங்களுக்கு வேற வேலையே இல்லையா. பிஸ்னஸ் பார்ட்டியை, பொண்ணு பார்க்கிற இடமா மாத்த பார்க்காதீங்க. என்னால பொண்ணு , கின்னுலாம் பார்க்க முடியாது . ஐயம் நாட் இன்ட்ரஸ்டட். " என எரிச்சலாகப் பதில் தந்தான்.
" அபிக் கண்ணு, ராஜா மாமா பெங்களூருக்கு , அதே மீட்டிங்குத்தான் வர்றாரு . நீ அவிகளோட பார்ட்டிக்கு மட்டும் போயி , அந்தப் புள்ளையைப் பாரு, புடிச்சா சொல்லு. மீதியை நான் அண்ணனை வச்சுப் பேசிக்கிறேன். இல்லைனா வேறப் பெண்ணைப் பார்ப்போம். " என மகனிடம் நயந்து பேசிய கஸ்தூரி, அபிராமை சரி என ஒத்துக் கொள்ள வைத்தே போனை வைத்தார்.
கஸ்தூரி, அமரிக்கையாய் உடுத்தியிருந்த கோவைக் காட்டன் சேலையில், கழுத்தில் தாலிக் கொடி மெல்லிய மஞ்சள் கயிறு. நெற்றியில் அளவான பொட்டு, பூசினார் போல் உடல், படர்ந்து சிவந்த முகம் ஐந்தரையடியில் எனக் கொங்கு நாட்டு மங்கையாக இருந்தார். அவரை விட உயரமாக , கட்டான தேகத்தில் ,வெள்ளை சட்டை, அடர் நிற பேண்டில் புன்னகை முகமாக வந்த விஜய ரங்கன், மனைவியிடம், " உன் மகன் சரின்னு சொல்லிட்டானாக்கும் " என வினவினார்.
" எங்கிங்க, ஒப்புக்கு சரின்னு சொல்லியிருக்கானுங்க. பொண்ணு போட்டோல கிளியாட்டமா தெரியுது. நேர்ல பார்த்தா சரின்னு சொல்லிப் போடுவான்னு நம்புறேன்.பார்ப்போம்" என்றவர்" ஏனுங்க அவிகக் கிட்ட அபி வருவான்னு சொல்லிப் போடுங்க . நான் அண்ணன்கிட்டையும், ஒரு வார்த்தை சொல்லிப் போட்டு வந்திடுறேன்" எனக் கஸ்தூரி அலைப் பேசியில் ராஜனுக்கு அழைத்தார்.
" கஸ்தூரி , சொல்லுமா. " என்றார் கைலாஷ். "கிளம்பிட்டிங்களாண்ணா , நீங்க ப்ளைட்ட புடிக்கும் முன்ன, உங்களைப் புடிச்சு போடணுமுன்னு தான் போன் போட்டேனுங்க" என்றவர் அபிராமிற்குப் பெண் பார்க்கச் செய்திருக்கும் ஏற்பாட்டையும், அவர்கள் யாரென்ற விவரத்தையும் சொன்னார்.
" உன் வூட்டுக்காரன் ஏற்பாடாக்கும் " என்றவர், " சரிமா, நான் பார்த்துக்குறேன். ப்ளைட்டுக்கு நேரமாச்சு" எனப் போனை வைத்தவர், அபிராமின் நிலையை எண்ணிச் சிரித்துக் கொண்டார்.
இங்கு விஜயன், ஓர் நமுட்டுச் சிரிப்போடு, " உன் அண்ணன்கிட்டச் சொல்லி போட்டேல்ல ஒரு வழியா முடிச்சுடுவான் கவலைப் படாத" என இரட்டை அர்த்தத்தில் சொல்லவும்,
"உங்களுக்கு, என்ற அண்ணனைக் குறைச் சொல்லலைனா ஆகாதே. அவிக ஒரு வார்த்தைக்கு அவ்வளவு மதிப்பு இருக்கு, அபியும் அவிகச் சொன்னா தட்டாமல் கேட்பான்" என இந்தச் சம்பந்தம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை அவர் அடுக்கிக் கொண்டே போக
" நானும் உன்ற அண்ணன் திறமையைக் குறைச்சு சொல்லலை அம்மணி , அவனைப் பத்தி முழுசா தெரிஞ்சதாலத் தான் சொல்றேன்" என்றவர், " நல்லது நடந்தா சரிதான்." வெளியே கிளம்பிவிட, கஸ்தூரி , குன்னூரிலிருக்கும் மாமியார் அபரஞ்சிக்குப் போனைப் போட்டார்.
கைலாஷ் ராஜ், பெங்களூர் விமானநிலையத்தில் இறங்கி வெளியே வரவுமே லாபியில் வந்து அவரை அழைத்துக் கொண்டான் அபிராம். கேஆர் மில்ஸின் கிளை அலுவலகம் இங்கும் உண்டு. அங்கிருந்தும் அவரை அழைத்துச் செல்ல கார் வந்திருந்தது. அவரது லக்கேஜ்களை மட்டும் எடுத்துக் கொண்டு, அவரது செகரெட்டரி அதில் பயணப்பட இவர் மருமகனோடு அவனது காரில் ஏறிக் கொண்டார்.
ஏர்போர்ட் லாபியிலேயே அவரை ," மாமா" எனக் கட்டியணைத்துக் கொண்டான் அபிராம்,
" உன் உற்சாகத்தைப் பார்த்தா கையோட, பொண்ணைக் கடத்திடுவியாட்டுத்துக்கு. " என அவன் மகிழ்வில் தானும் மகிழ்ந்தவர். ஒரு படி மேலே சென்று " பொண்ணு யாருன்னு சொல்லு, இப்பவே தூக்கிட்டுப் போயிடுவோம்" என்றார்.
அவள் நினைவிலேயே மிதந்தவன், மாமாவின் கேள்வியில் சிகையைக் கோதி, அசட்டுச் சிரிப்பையும் அடக்கி தன் வெட்கத்தை மறைத்து , " அது தான் மாமா தெரியலை" என்றான் சோகமாக. அவனையே பார்த்திருந்தவர், " கல்யாணம் ஆகாத புள்ளைத் தானா , அதுவாவது தெரியுமா. நீ பாட்டுக்கு அடுத்தவன் பொண்டாட்டியை ரூட்டு விடாதா. அந்தப் பாவத்துக்கு எல்லாம் நான் துணைக்கு வரமாட்டேன். கஸ்தூரி அடி பின்னிடும்" என்றார் கைலாஷ்
" போங்க மாமா. அது கூடக் கண்டு பிடிக்கத் தெரியாமலா இருப்பேன்." என்று சொன்னாலும், மாமன் கிளப்பி விட்டதில் , இப்பத்தைய பொண்ணுங்களை நம்பவே முடியாதே, நம்மூரு பொண்ணுங்களே தாலியைக் கழட்டி வச்சுட்டு சுத்துதுங்க உள்ளே கலவரமானான் அபி. ஆனாலும் ஓர் நம்பிக்கை, அவனவள் தான் அவள் என்று.
உதவியாளர் கம்பெனி காரில் வர, மாமனும், மருமகனும் ஒரு காரில் ஏறினர். ஏறியது முதல் தான் பார்த்த மதி முகத்தவளை பற்றிப் பேசியே கைலாஷின் காதை நிறைத்து விட்டான் அபி. அவன் அந்தப் பெண்ணை வர்ணிக்க, வர்ணிக்கக் கைலாஷ் தன் இளமைக் காலத்துக்குப் பயணித்தார்.
கைலாஷின் "பாரு" வும் இப்படித் தான் அறிமுகமானாள். அதில் சில கனங்கள் தொலைந்து மீண்டவர், "எனக்குக் கிட்டியும், எட்டாத தொலைவுக்குச் சென்ற காதல் , தன் மருமகனுக்காவது கிடைக்கட்டும் " என மனதார வாழ்த்தினார்.
ஓபராய் ஹோட்டலுக்கு வந்த மாமனும் மருமகனும், அன்றைய செட்யுல்களையும் , அடுத்தக் கட்ட நடவடிக்கையையும் பற்றிப் பேசினர். "அதெல்லாம் சரி, அந்தப் பொண்ணை எப்படிக் கண்டுபிடிப்ப, ஊர், பேர் ஏதாவது அடையாளம்" என வரிசையாகக் கைலாஷ் கேள்விகளாக அடுக்கவும்,
" தெரியலையே மாமா. அவ பெயர் தெரியாது, ஆனால் அவள் கண்ணுக்குள்ளேயே இருக்கா மாமா. இருங்க அவளைப் போட்டோ எடுத்தேன்." என அவளின் பின்பக்க போட்டோவைக் காட்டவும்,
" ஏன் மாப்பிள்ளை , எடுத்தது தான் எடுத்த, முகத்தை எடுத்திருக்கக் கூடாது" என்றார். " அது வந்து மாமா, அவளையே பாத்திட்டு இருந்தேனுங்களா, போட்டோ புடிக்கனுமுன்னே தோனலை. தோனும் போது இதைத் தான் எடுத்தேன். " என அசடு வழிந்தவன்,
"ஆனால் அவள் தான் எனக்கானவள்னு, என் ஆழ் மனசு ஸ்ட்ராங்காச் சொல்லுது" என்றான் அபிராம். கைலாஷ் சிரித்துக் கொண்டார்.
" அது சரி, உங்க அம்மா ஒரு பொண்ணைப் பார்த்து வச்சிருக்கே. " என்றார்.
" உங்கள்ட்டையும் சொல்லிட்டாங்களா,ஸ்ஷ் அப்பா" என்றான்.
" யெஸ், உங்க அப்பா பார்த்த பொண்ணு தான். பெரிய இடமாத்தாய்யா பார்த்திருக்கான். நீ பார்ட்டிக்கு வந்திடு. இல்லைனா, என் தங்கச்சியைச் சமாளிக்க முடியாது" எனத் தங்கையின் அன்புக் கட்டளையைச் சொன்னவர், " உங்கொப்பன் சரியான ஆளு தான் எப்படிக் கோர்த்து விடுறான் பாரு" என்றவர், தனது கம்பெனி அலுவலகத்துக்குக் கிளம்பினார். அபிராம் தனது வாடிக்கையாளரைப் பார்க்கச் சென்றான்.
ஆதிராவின் கல்லூரியில் மூன்று கம்பெனிகள் இன்டர்வ்யு செய்ய வந்தனர். அதில் கைலாஷின் கம்பெனியும் ஒன்று. கைலாஷ் தனது அலுவலக அறையில் அமர்ந்து கொண்டே, காலேஜில் தங்களது கம்பெனி ஆட்கள் நடத்தும் நேர்முகத் தேர்வை காணொளியில் பார்த்துக் கொண்டிருந்தார். அதற்காகவே காலர் மைக்கெல்லாம் அணிவித்து நேர்மையாக நேர்முகத் தேர்வை நடத்துவதாக முதலிலேயே மிகைப்படுத்தி மிரட்டி விடுவார்கள். கைலாஷ் நேரடியாகப் பார்க்கிறார் என்பதே அந்த மாணவர்களுக்குத் தெரியாது.
நேர்முகத் தேர்வில் பதில் சரியாகத் தராவிட்டாலும், அவர்களது ஆட்டிட்யூட் சேர்மனை கவர்ந்தால் அவர்களுக்கு வாய்ப்புத் தரப்படும்
அனுபவசாலியான கைலாஷ் , இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னிருந்த தன்னை அவர்களில் தேடுவார்.
ஒரு மணிநேரம் கடந்த பிறகும் நுனி நாக்கு ஆங்கிலத்தில் தங்களது மற்றும் கல்லூரியின் சிறப்பைச் சொல்லி நாங்கள் சிறந்தவர்கள் என மார்தட்டிக் கொண்டவர்களையும், இது தங்களுக்கு ஓர் அனுபவம் என்றும் சொல்லிச் சென்றவர்களைக் கேட்டுச் சலித்திருந்தவர், போதுமென எழப் போகும் நேரம்,
நேர்முகத் தேர்வுக்கு வந்தவருக்கு அணிவிக்கப்பட்ட காலர் ஒலிவாங்கி மூலம் துல்லியமான ஓர் வேண்டுதல், அது ஆன் செய்யப் படவில்லை என நம்பி அவள், தனக்குத் தானே நம்பிக்கை வர வைத்துக் கொள்வதற்காக அவளது ஆயி சொல்லித் தந்த மந்திரம் , இறைவன் செவியை அடைந்ததோ இல்லையோ, இந்தக் கைலாஷ் ராஜின் செவியில் வந்தடைந்தது. அவர் கண்கள் இமைக்க மறந்து அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
நிலவு வளரும்
No comments:
Post a Comment