யார் இந்த நிலவு-17
சோலாப்பூர் போஸ்லே மாளிகை, நாளை நடக்கவிருக்கும், போர்ட் மீட்டிங்குக்காக ஜெயந்த் கெய்க்வாட் தலைமையில் அவரது குடும்பம் கூடியிருந்தது.
பவானி இன்றும், வெளிப் பார்வைக்கு அதே பணிவோடு இருந்த போதும் உள்ளே நிமிர்வோடு இருந்தார். வாழ்க்கை, சாதாரணக் குடும்பப் பெண்களுக்கே, மாமியார், நாத்தனார் என உறவுகளிடம், அவர்கள் போக்குக்கு இணங்க வாழ கற்றுக் கொடுக்கும் போது, மாளிகையில் பல சூழ்ச்சிகளைக் கண்ட பவானி பாய் போஸ்லேயையும், திரை மறைவு வேலையைச் செய்யுமளவாவது மாற்றியிருந்தது. மாற்றான் தாய் மகளென்றாளும் தங்கை பைரவி பாய் மீது அவருக்கு அலாதியான பாசம் உண்டு. இன்று வரை அவர்களது பந்தம் தொடர்ந்து வருகிறது.
தனது கணவன், குயுக்தியாகத் தங்கையை மணக்கத் திட்டமிடுவதை, சமயத்தில் சிறிய தாயாரிடம் சொல்லி, கைலாஷ் , பாரு திருமணத்தை நடத்தியதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு.
பைரவி கைலாஷோடு ஓடிவிட்டாள், என ஜெயந்த் கட்டுக்கதை கட்டி விட்ட போதும், மாளிகைக்குள் ரமா பாய்க்குப் பயந்து வம்பு வளர்க்காமலிருந்தனர். ஆனால் ரமாபாய் அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை. மகளை , மருமகனோடு பிபி மில்லின் உரிமையாளராக்கவும், அதில் சிக்கல் வந்தால் தனது சொத்துக்களைக் காசாக்கியாவது மகளைப் பாதுகாக்க, தன் தாய் வீட்டு உறவுகளுடன் கை கோர்த்தார்.
ஏனெனில், அவர் கணவர் உயில் படி, அவரது மகளுக்கு நேரடியாகச் சொத்து சென்று சேராது. அனுபவ பாத்தியதை மட்டுமே. பேரக் குழந்தைகளுக்குத் தான் சொத்து சேரும். எனவே ஜெயந்த் நினைத்தாலும் அதை விற்க இயலாது.
ஆனால், ஜெயந்த், பைரவியைத் தனது வழியிலிருந்து அகற்ற, வேறு முயற்சிகளிலும் ஈடுபடுவான் என யூகித்தவர், பணபலத்தால் மட்டுமே அவனை எதிர்க்க முடியும் என , தனது சொந்த சொத்துக்களைப் பணமாக்கி,மற்ற நாடுகளில் உள்ள தன் உறவினர்களின் தொழில்களில் ரகசியமாக முதலீடு செய்து, அதன் வருவாய் மகளுக்கும், தனக்கும் வரும்படி ஏற்பாடு செய்தார். இந்த வேலைகளை எல்லாம், பைரவி, கைலாஷ், சந்தன் கட்டில் இருந்த சமயத்தில் செய்து முடித்தார்.
கைலாஷ் ஊருக்குச் சென்ற பிறகு, ரமாபாய் பயந்ததைப் போலவே, பைரவியைக் கண்டுபிடித்த ஜெயந்த், ரகசியமாக நடந்த திருமணத்தை மறைத்து, மறுமணம் செய்ய முயன்றான். அதுவும், அபலையாக ஏமாந்து நிற்கும் கொழுந்தியாளுக்கு, வாழ்க்கை கொடுப்பதாகச் சொல்லி, மற்றவரை நம்ப வைத்து, ஏற்பாடுகளைச் செய்ய, ஶ்ரீபத்ராய் மகன்கள், ஆனந்த், முகுந்த் இருவரும், குடும்ப மானம் காப்பற்ற படட்டும் என ஒத்துக் கொண்டனர்.
ரமாபாய், பைரவி பாய் இருவரும் எதிர்த்து நின்ற போதும், அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. ஜெயந்த், சூழ்ச்சியாகக் கைலாஷ் ராஜன் வீட்டிற்குத் தொடர்பு கொண்டு, அவருக்குத் திருமணம் நிச்சயித்து இருப்பதைச் சாட்சிகளோடு நிரூபிக்க, பைரவி ஓய்ந்து போனார்.
அதற்காக, ஜெயந்தை மணக்க இயலாது என முடிவுக்கு வந்தவர், தான் எங்குச் சந்தோஷமாக வாழ்ந்தேனோ, அதே சந்தன் கட்டில் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாக எழுதி வைத்து விட்டு, மாளிகையை விட்டு, பிறர் அறியாமல் வெளியேற, ரமாபாய் மகளைக் கண்டும் காணாதது போல் அவரைப் பின் தொடர்ந்து, மகளைக் காப்பாற்றப் போன தாயும் மடிந்தார் என்ற செய்தியைப் பரவவிட்டார்.
இந்தச் செய்தியைத் தான், விஜயன் அறிந்து கைலாஷிடம் சொன்னது. கைலாஷும் மீண்டும் சோலாப்பூர் வந்தவர், எதிரிகளின் கையில் அடிப்பட்டு , அரை உயிராகவே திரிந்தார். ஆனால் , எவ்வளவு உறுதி படைத்த பெண்மணியாக இருந்தாலும்,கொண்டவன், அடுத்தப் பெண்ணை மணக்க இருக்கிறான் என்ற செய்தி, அவரிருந்த நிலையில் நம்ப வைத்தது. கைலாஷ் கிளம்பிய பின்பே ,தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தவர், கணவனின் அண்மைக்காக ஏங்கினார்.
அது நிராசையாகி , தான் ஏமாற்றப்பட்டோமே என்ற எண்ணமே என உயிரை மாய்க்கத் தூண்டுதலாக இருக்க, சந்தன் கட் செல்லவும், இனிமையான நினைவுகள் அவரைச் சூழ்ந்ததில் , தற்கொலை எண்ணத்தைக் கை விட்டார். தன அம்மாவைக் கட்டிக் கொண்டு கதறிய பைரவி, அவரது ஆயிக்குமே புதிதாகத் தோன்ற, அவரைத் தேற்றும் முன் படாத பாடு பட்டார்.
ரமாபாய், பைரவிக்கு மும்பையில் மறைத்து வைத்துப் பிரசவம் பார்த்தவர், மனமொடிந்து இருந்த மகளை அவரது வாரிசைக் காட்டித் தேற்றினார்.
சில வருடங்களுக்குப் பிறகு, பைரவி , ரமா பாய் உயிரோடு இருப்பது தெரிந்து விட, மீண்டும் ஆபத்துக்கள் தேடி வந்தது. ஆனால் அதையே தனக்குச் சாதகமாக்கி, தாங்கள் உயிரோடு இருப்பதையும், பைரவிக்கு வாரிசு இருப்பதையும், தக்க சமயத்தில் தாங்கள் வந்து அதனை ஏற்றுக் கொள்வோம் என்றும் வக்கீல் நோட்டிஸ் அனுப்பி வைத்தார்.
ஜெயந்த், பைரவியைத் தேடுவதை மட்டும் விடவே இல்லை. துப்பறிந்து, அவர்களை ஓரிடத்தில் தங்க விடாமல் துரத்திக் கொண்டே தான் இருந்தான். இதன் நடுவே கைலாஷ் ராஜன், தமிழகத்தில் பெரிய மில் ஓனராக அசுர வளர்ச்சி அடைய, பைரவி விசயம் அவர் காது வரை சென்றடையாமல் பார்த்துக் கொண்டனர்.
ரமாபாயின் வாரிசு என , கம்பெனியை நிர்வகிக்கும் உரிமை கோரி, பவர் ஆஃப் அட்டார்னியோடு, அது சம்பந்தப்பட்ட காகிதங்களைத் தாக்கல் செய்தவன், உரிமையாக வந்து பிபி மில்லை ஆக்கிரமிக்க, மற்றவர்கள் குழம்பித் தான் போனார்கள். ஏனெனில் எப்போதும் பலத்த பாதுகாப்போடு வலம் வரும் இளவரசன் போலிருந்தான். இருபத்தியோரு வயது நிரம்பாத அந்த வாலிபன் ஆதர்ஷ் ராஜே போஸ்லே , உலக அளவில் அத்தனை கம்பெனிகளில் பங்கு தாரராக, பல கோடி சொத்துக்குச் சொந்தக்காரனாக, பிறந்தது முதல் இதற்காகவே பழக்கப்பட்டவன் போலிருந்தான்.
அவன் எங்கிருந்து வருகிறான், போகிறான் என்பது கூட ரகசியம், ஏனெனில் கறுப்புச் சீருடை பாதுகாவலர்கள் சூழ, பிபி மில் வளாகத்திலேயே ஹெலிகாப்டரில் தான் வந்து இறங்குவான்.
இந்த ஒரு மாதத்தில், அவனோடு வந்த ஆடிட்டர்கள், கம்பெனியின் நிலவரத்தை அக்கு வேறு, ஆணி வேறாக ஆராய்ந்து, நிறையத் தில்லு முள்ளுகளைக் கண்டு பிடித்திருந்தனர். ஜெயந்தின் திருவிளையாடல்களை, விரல் நுணியில் வைத்திருந்தவன், ஜெயந்த் வாயைத் திறக்கும் போதெல்லாம், அஸ்திரமாகப் பயன்படுத்தி , அவரை வாயடைக்க வைத்தது தான்.
நாளை ஒரு போர்ட் மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்திருக்கிறான். அதைப் பற்றிய பேச்சே , போஸ்லே மாளிகையில், ஜெயந் தலைமையில் இப்போது ஓடிக் கொண்டிருந்தது. இதில் முக்கியமான விசயம், அதில் இருபது ஆண்டுகளுக்குப் பின் ரமாபாய் பங்கெடுக்க வருகிறார்.
ஜெயந்தின் மருமகன்களான ஶ்ரீபத்ராய் பேரன் போஸ்லேக்கள், மாளிகையில் கூடியிருக்க, அதில் திருமணமாகாத இளைய மருமகன் மஹந்த்ராய் போஸ்லேவும் இருந்தான், அவன் கையிலிருந்த மொபைலில் ஆதிராவின் போட்டோ இருந்தது. அவளை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
ஜெயந்த், " தாமாத்ஜீ, இன்ஸ்டெண்ட் வாரிசா வந்து நிற்கிற , இந்தப் பொடியன் ஆதர்ஸை எல்லாம் ஒத்துக்க முடியாது, வந்து ஒரு மாசத்தில், கண்ணில் விரலை விட்டு ஆட்டுறானே. " எனச் சலித்துக் கொள்ள,
" மாமாஜி, மடியில் கனம் இல்லைனா எதுக்குப் பயப்படனும், நீங்க நேர்மையா மில்லை நடத்தியிருக்கீங்க, கவலைப் பட என்ன அவசியம்" என மூத்த மருமகன் வினையமாகவே கேள்வி எழுப்பவும்,
" அதெல்லாம் ஒரு குற்றம் கண்டு பிடிக்க முடியாது தாமாத்ஜி. உங்கள் தாத்தா சொத்தை, என் வேர்வை சிந்தி , நிலை நிறுத்தியிருக்கனாக்கும்" எனப் பெருமைப் பட்டுக் கொள்ள, " அது தான் தெரியிதே" என இளக்காரமாகப் பதில் தந்தான் இளையவன்.
" க்யா ஜி" என அவர் சந்தேகமாகக் கேட்க, " இல்லை, இல்லை, நீங்க எவ்வளவு கஷ்டப் படுறீங்கன்னு தெரியுதுன்னு சொல்றேன்" என மழுப்பியவன், " நாளைக்கு, அந்தச் சோட்டூ, என்ன தான் ப்ரூஃ பண்றான்னு பார்ப்போம். நாங்க உங்க பக்கம் தான்" என உறுதி தர, "ஹாங், ஹாங், தாமாத், சசூரை சப்போர்ட் செய்து தானே ஆகனும். அதுக்குத் தான என் முல்கியை கட்டிக் கொடுத்திருக்கு" என அவர் சமாதானமாகச் சொல்லிக் கொள்ள, மருமகன்கள் இரகசிய புன்னகை புரிந்தனர்.
அலை பேசியையே பார்த்திருந்த, மஹந்தின் தலையில் தட்டிய, சகோதரர்கள், " மொபைலை திண்ணுடாத" எனக் கேலி செய்ய, அசடு வழிந்தவன், " முல்கி தோ படியா ஹை பாயி. தூக்குங்க. எனக்கும் டபுள் ஷேர் வேணும்" எனக் கண்ணடிக்க, " அது தான , பக்கா பிஸ்னெஸ் மேன், ப்யார்ல விழுந்துட்டானோன்னு பார்த்தேன்" எனப் பேசிக் கொண்டே சென்றனர்.
சொத்து வெளியே போகக் கூடாது, என்பதற்காகவே பவானி புவாவின் மகள்களைக் கல்யாணம் செய்தவர்களுக்கு, ஜெயந்த் மீது எப்போதுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. அதுவும் கிளை குடும்பத்தை மெயின்டைன் செய்யும் மாமனாரை எந்த மருமகன் மதிப்பான். இவர் கொள்ளையடிக்கும் பணம், அங்குத் தான் விழலாகப் போகிறது, என அறிந்தவர்கள், அதைத் தடுக்க வழி தேடிய போது, ஆதர்ஷ் வந்து சேர, முதலில் ஜெயந்த் மாட்டட்டும், பின்னர்,ஆதர்ஸையும் பிடித்துப் போடுவோம், எனச் சுலபமான , மற்றும் கௌரவமான வழியையே தேடினர்.
இருபது வருடத்தில், தன் மகள்களில் ஒருத்தியை, ஆனந்த் மகனுக்கும், மற்றொரு பெண்ணை முகுந்த் மகனுக்கும் மணமுடித்து, சொத்து வெளியே போகாமல் பார்த்துக் கொண்டனர்.
இதில் ஆனந்தராய் போஸ்லேக்கு மற்றொரு மகன் இருக்க, பைரவி மகளைக் கடத்தி , அவனுக்காவது மணமுடித்து வைத்து விட வேண்டும் என அவர்கள் முயற்சி செய்ய, ஜெயந் தன் மகள்களுக்குப் போட்டியாகப் பைரவி வாரிசு வரக் கூடாது, என, அவளைத் தீர்த்துக் கட்டவே முயன்றான். இவர்கள் ஆளுக்கு ஒரு காரணத்தோடு பைரவியின் பெண் குழந்தையைத் தேட, அவர்களுக்குப் புதுத் தலைவலியாகச் சொத்துக்கு வாரிசு என ஒருவன் வந்து நின்றான்.
சத்தாரா, சோலாப்பூரிலிருந்து இருநூற்றைம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர். முன்னொரு காலத்தில் மராத்தியர்களின் தலை நகராக இருந்த ஊர். சிப்பாய்களின் நகரம், ஏழு கோட்டைகளின் நகரம், என இயற்கை எழில் கொஞ்சும், மலைகள், கோட்டைகள்,நீர்வீழ்ச்சி, சிவ்சாகர் லேக், காஸ் பீடபூமி என நிறைந்த நகரம்.
அதில் இயற்கை அரண் சூழ்ந்த இடத்தில் பாம்தோலி கிராமத்துக்கு அருகில், பல ஏக்கர் பரப்பளவில், கோட்டை போல் மதில் சுற்றிவர, போல்லே மாளிகை போல் ஆடம்பரமாக இல்லாமல், ஆனால் சகலவித பாதுகாப்பு ஏற்பாடுகளோடு, ஹெலிபேட் முதற்கொண்டு அமைக்கப்பட்ட ஒரு மாளிகை இருந்தது.
மெயின் ரோட்டிலிருந்து, சில கிலோ மீட்டர் தொலைவிலிருந்த அந்த மாளிகை யார் கண்ணிலும் அவ்வளவு எளிதாகப் படாதவாறு கட்டப்பட்டிருந்தது. கறுப்பு உடையணிந்த பாதுகாவலர்கள், மாளிகையில் வேலை பார்க்கும் அனைவருமே, பாதுகாப்பு ஏற்பாட்டைக் கடந்து, பிங்கர் ப்ரிண்ட் வைத்தே வர வேண்டும்.
ஏனெனில் இந்த மாளிகையின் சொந்தக்காரரே, பல முக்கியப் புள்ளிகளுக்கு, பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்யும் ஏஜென்சி வைத்திருப்பவர் தான். அது மட்டுமின்றிச் சில முக்கியமான விழாக்களும் கூட இவர்கள் கட்டுப்பாட்டில் வரும். ஈ, எறும்பும் இவர்கள் காவலைத் தாண்டி வர இயலாது என்ற நம்பிக்கையைப் பெற்றவர்கள்.
ஹாலில் நடுவே போடப்பட்டிருந்த, ஷோபாவில் நடுநாயகமாகப் போடப்பட்டிருந்த, ஷோபாவில் சோட்டி ராணி என்று அழைக்கப்பட்ட, ரமா பாய் பழுத்தப் பழமாக அமர்ந்திருக்க, அவருக்கு அருகிலேயே ஐம்பதுகளின் ஆரம்பத்திலிருந்த ஒரு ஆணும், அவர் மனைவியும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
" படி ஆயி, நாளைக்கு நீங்க சோலாப்பூர் போயே ஆகனுமா, இன்னும் ஆறு மாசம் அவகாசம் இருக்கே, தீதியும் வரட்டும்,அப்புறம் போகக் கூடாதா" எனக் கவலை படிந்த முகத்தோடு, ரமாபாயின் தங்கை மகள், ராதா பாயி வினவ, அவர் கணவரான பாலாஜி ராவ், " ஷேர் மாதிரி ஒரு பேரனை வச்சுக்கிட்டு, மாமி இன்னும் மறைஞ்சு வாழனும்னு என்ன அவசியம். போஸ்லே மாளிகையையே கை பற்றலாம்" என அவர் யோசனை தெரிவித்தார்.
" அதுக்கான நேரம் இன்னும் வரலை தாமாத்ஜி. எதுக்கா இருந்தாலும் இவள் தீதி ஒத்து வரனுமே. பைரவி எங்க என் பேச்சை கேட்கிறா. தாமாத்ஜியை பிரிந்து இருந்த சில வருஷம் கேட்டவள் தான். " என ரமா பாயி நொந்து கொள்ள,
" ஜீஜாஜி பத்தி உண்மை தெரிஞ்ச பிறகாவது, அவர்கிட்ட போயிருக்கலாம்ல ஆயி , தீதிக்கு அதுக்கும் பயம் தான்" என மூவருக்குமாகச் சமோசாக்களைக் கொண்டு வந்து கொடுத்தார் கௌரி.
" கௌரி, இந்த வேலை செய்ய, ஆள் இருக்காங்க. நீ எதுக்கு இதெல்லாம் செய்யிற" என ரமாபாய் கோவிக்க,
" எனக்கும் பொழுது போக வேண்டாமா ஆயி. ஆதிரா முல்கி கூடவே, அவளைக் கவனிக்கிறதே வேலையா, ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம் பத்தாமல் இருந்தது. அந்த வேலைக்கும் ஓய்வு கொடுத்துட்டிங்க" எனக் கௌரி குறைபடவும்.
" நான் எங்க பறிச்சேன், விதி அவளை அவங்க பாபாகிட்ட சேர்த்திடுச்சு. இந்தப் பைருவைப் பாரு, சரி இத்தனை நாள் புருஷனைத் தேடிப் போகலை. மகள் அங்கே இருக்காலே, இப்பவாவது உன் தீதி அங்க போகலாம்ல, மாட்டாளே. தலையைச் சுத்தி மூக்கை தொடுறா" என ரமாபாயும் தன் பங்குக்குப் பைரவியைப் பற்றி அங்கலாய்த்தார்.
" படி ஆயி, தீதிக்கு உண்மையான நேசம் கிடைச்சும், அதை அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை பாருங்களேன். அவங்க இரண்டு பேரும் சேர்ந்து இருந்தா, நமக்கெல்லாம் இப்போ வேலையே இல்லை" என ராதா அக்கா குடும்பத்துக்காக வருந்தவும்,
" எல்லாம் லிபி, என்ன செய்ய. தாமாத்ஜியோட தைரியத்தைப் பார்த்துத் தான் பைரவியை அவருக்குக் கொடுக்கனுமுன்னு முடிவு பண்ணேன். சியா, ராம் மாதிரி பிரிஞ்சே இருக்காங்களே. எப்ப அவங்களுக்கு நல்ல காலம் வருமோ" என ரமாபாய் பெருமூச்சு விட்ட நேரம்,
" நாநிமா, சுப கடி ஆகய்" என இரண்டே எட்டில் துள்ளிக் குதித்து ஓடி வந்தான் ஆதர்ஷ் ராஜே போஸ்லே, ஜெயந்த் முதல், எல்லாப் போஸ்லேக்கள் கண்களிலும் விரல் விட்டு ஆட்டும் இருபது வயதே நிரம்பிய, பயமறியாத ராஜா வீட்டு கன்றுக்குட்டி, கைலாஷ் ராஜின் பார்வையில், பால்வடியும் முகத்துக்குச் சொந்தக்காரன், ஆனால் அவ அறியாத ஒன்று, இந்த இளம் சிங்கத்தின் பாய்ச்சல், அவரையும் விடப் பன் மடங்கு வேகமானது,
ஆதர்ஷ், நாநிமா கால்களில் பணிந்து எழுந்து, தன் மாம், டாட் கால்களையும் தொட, " ஜீத்தே ரஹோ, நாநாஜி " என ஆசீர்வதித்தனர். அவர்களுக்கு நடுவில் அமர்ந்தவன்,
" இன்னைக்குக் காலையில் , யார் கூப்பிட்டாங்கன்னு சொல்லுங்க" எனப் புதிர் போட்டவன், " உங்க தாமாத்ஜி, தி கிரேட் பிஸ்னஸ் ஐகான், கே. ஆர் .மில்ஸ், கைலாஷ் ராஜ் , பிஸ்னஸ் டீல் வச்சுக்கலாம்னு கூப்பிட்டார்" எனவுமே, ரமாபாய் ஆச்சரியமாகப் பார்க்க, ராதாபாய் முகம் வாடியது, பாலாஜி அவர் தோளில் தட்டியவர், மகனிடம், " தமிழ்நாட்டுக்கு, எப்ப போற பேட்டா" என நேராக விசயத்துக்கு வந்தார்.
" அது தான் டாட் யோசனையா இருக்கு, போஸ்லே மாளிகைக்குள்ள ஸ்டெப் இன் செஞ்சா, உங்களைத் தனியா விட்டுட்டு, நான் அங்க போக முடியாது. மஹந்த் கையில் ஆதிரா போட்டோ கிடைச்சிருக்கு. அவளைத் தூக்க ப்ளான் பண்றான். அவனுக்கு முன்ன, நான் அவளைத் தூக்கனும்" என அவன் சீரியஸாக யோசிக்கவும்,
" நீங்க ஆதிராவை கடத்துறதுக்கு என்ன அவசியம் சோட்டே சாப்" என ஆட்சேபித்தார் கௌரி. ஆனால் ரமாவாய், முகத்தில் ஓர் புன்னகை அரும்பியது, " தூக்கிட்டு வா நாநாஜி, அப்போ தான் நிறைய விசயம் முடிவுக்கு வரும்" என அர்த்தமாகச் சொல்லவும்,
" நாநிமா, யூ ஆர் அல்டிமேட். அது இல்லாமலா, ட்வண்டி இயர்ஸா, போஸ்லேக்களைச் சமாளிக்கிறீங்க" எனப் புகழ்ந்து அவரைக் கட்டிக் கொள்ளவும்.
" நாநாஜி, இப்ப இருக்கவுங்களுக்கே, நான் இராஜ மாதா அதை மறந்திடக் கூடாது" என்றார் ரமாபாய்.
கௌரி மனதில், ' நல்ல குடும்பம், நல்ல வாரிசுங்க. ஆயி துல்ஜா பவானி, எல்லாரையும் காப்பாற்று' என வேண்டிக் கொள்ள,
" கௌரி மாஸி, நீங்களும் என் கூட வர்றீங்க. நீங்க தான் என் ட்ரம்ப் கார்ட்" என அடுத்தக் குண்டை வீசினான் ஆதர்ஷ்.
" நானா" என அதிர்ந்து நின்றார் கௌரி.
ஆதர்ஷ், ராமாபாயின் வாரிசானது எப்படி, ஆதர்ஸின் கோவை பயணம், என்ன விளைவுகளை ஏற்படுத்தும். பாப்போம்.
நிலவு வளரும்.