Monday, 31 January 2022

யார் இந்த நிலவு - 16

யார் இந்த நிலவு - 16 

குன்னூரில் வசந்த மாளிகையில் , முதல் நாளே, பலகாரங்கள் மட்டுமின்றி, அந்த எஸ்டேட்டில் விளைந்த, காய், கனி வகைகளையும், பேக்கிங் செய்து தயாராக இருந்தார் சௌந்தரி. இரவில் மணிக்கு ஒருமுறை நேரமாகிவிட்டதோ எனக் கடிகாரத்தைப் பார்க்கவும் தவறவில்லை. பாலநாயகம் கூட, " புதுசா கட்டிக்கொடுத்த புள்ளையைப் பார்க்கப் போற மாதிரி , எதுக்கு முழிச்சு, முழிச்சு பார்க்கிற. மகன் வூட்டுக்குத் தானே போறோம், லேட்டாப் போனாலும், ஒன்னும் பிரச்சனை இல்லை தூங்கு" எனக் கடிந்து கொண்டார்.

" நான் என்ன வேணும்னா முழிச்சுக்கிட்டுக் கிடக்கிறேன், தூக்கம் வரலை, என்ன செய்யச் சொல்றீங்க" எனச் சலித்துக் கொண்டவர், எழுந்து, பாத்ரூம் சென்று வருகையில், நிசப்தமான அந்த வேளையில் மெல்லிய குரலில் யாரோ பாடுவது கேட்டது.

'இந்த மகராசிக்கு எப்ப விடியப்போகுதோ' என மனதில் நினைத்தவர் மீதி தூக்கத்தை, விழிப்பும் முழிப்புமாகக் கடந்தார்.

பாலநாயகம், நண்பர்களோடு வழக்கமான நடைப்பயிற்சி , கேலி கிண்டல் என அரட்டையடித்துக் கொண்டு சாவகாசமாக வர, சௌந்தரி, குளித்துக் கிளம்பி உட்கார்ந்திருந்தவருக்குக் கணவனைக் கண்டு எரிச்சல் மண்டியது.

" ஏனுங்க அண்ணி, அது என்னத்துக்குங்க , எங்க அண்ணனை முறைச்சுக்கிட்டே கோர்ந்துருக்கீங்க, எப்படினாலும் டிபன் முடிச்சு தான கிளம்புவீங்க. அதுங்காட்டியும் , ஞாயம் பேசிப்போட்டு வந்து கிளம்பிடுவாங்கங்க " என அபரஞ்சி கேள்வியும், சமாதானமுமாகச் சொல்ல,

" உங்க அண்ணன், நான் முறைச்சவுடனே, அவரு அப்படியே பயந்திருவாராக்கும், வேணும்மின்னே கூடக் கொஞ்சம் நேரமாக்குவார்" எனச் சௌந்தரி குறைபட்டார்.

" அது தான் தெரிஞ்ச கதையாச்சுங்களே, அப்படினாலும் நீங்க மாமாவை முறைக்கிற மாதிரியே , சைட் அடிக்கிறதை மட்டும் விடமாட்டீங்கிறிங்க . அவிகளும் உங்களை ரவுசு பண்றதை விடமாட்டாங்க, இரண்டு பேரும் ஜாடிக்கேத்த மூடிதானுங்க அக்கா " எனச் சாரதாவும் பேச்சில் கேலியோடு இணைந்தார்.

" ம்க்கூம், உங்க மாமனை, சைட் அடிச்சிட்டாலும், நீ தான், அவரை மெச்சிக்கோனும். தான் புடிச்ச முசலுக்கு மூணே காலுனு சாதிக்கிற மனுசன். என் மகன் சரியாத்தான் ஹிட்லர் னு பேர் வச்சிருக்கான்" எனச் சௌந்தரி கணவனின் குணாதிசயத்தைச் சொன்னவர்,

"இவிக பின்னாடி ஓடியே என் காலம் போயிடுச்சு. என் கவலையெல்லாம், ராஜாவைப் பத்தி தான். காசு பணம் சேர்த்து வச்சு என்ன செய்ய, நானும் போய்ச் சேர்ந்துட்டேனாக்கும், என் மகனை நேரத்துக்குச் சாப்பிட்டியான்னு கேட்க கூட நாதியில்லாத போயிடும்" என முந்தானையில் முகத்தைத் துடைத்தார்.

"மனசை விடாதீங்க அண்ணி, மருத மலை ஆண்டவன் அதுக்கும் ஏதாவது வழியைக் காட்டுவான்" என அபரஞ்சி, சௌந்தரியைத் தேற்ற, பூஜைத் தட்டோடு வந்த பவானி, " சரியா சொன்னீங்கம்மா. கவலைபடாதீங்க அத்தை, நல்லதே நடக்கும். அடுத்துக் கிரகங்கள் மாறும் போது, பிரிஞ்சவங்க எல்லாம் ஒன்னு கூடுவாங்களாம். " என ஆரத்தி தட்டை அவர்களிடம் நீட்டினார்.

" உன் ஆயி பவானி உத்தரவு கொடுத்துட்டாலாக்கும். " எனச் சாரதா, கேள்வி எழுப்ப, பவானி ஆம் எனத் தலையாட்டினார்.

" உன் வாக்கு , அப்படியே பலிக்கட்டும். நீயம் உன் புருஷனோட சேர்ந்து, தீர்க்க சுமங்கலியா வாழனும். " என, சௌந்தரி பவானிக்கும் குங்குமம் வைத்து விட்டு , தானும் வைத்துக்கொள்ள, மற்றவர்களும் அதே போல் செய்தவர்கள், "உன் புண்ணியத்துல நாங்களும், பூஜை பலனை அனுபவிச்சுகிறோம்."எனச் சாரதா சொல்லவும், "உங்க வாழ்த்து தான் அத்தை, என்னையும் என் புருசனோட சேர்த்து வைக்கும்" என்றார் பவானி.

" என்ன ஒன்னு, அதுக்கப்புறம் எங்களுக்கு, காலை, மாலை பஜனை பாட்டு, இராத்திரியில் பாடுற தாலாட்டுப் பாட்டெல்லாம் கேட்காது" எனக் கேலி பேசினார் சௌந்தரி.

" பஜனை பாடுறது தெரியும். இது வேறயா" என மற்ற இருவரும் பவானியைக் கேலி செய்ய , குங்குமச் சிவப்பாகச் சிவந்த முகத்தோடு, அதெல்லாம் இல்லை எனப் பவானி மழுப்பவும், "தூரத்தில் இருக்கப் புருஷனுக்கு, இது கூடச் செய்யலைனா எப்படி" என மூத்த தலைமுறையினர் மூவரும் பேசியே, பவானியை உள்ளே ஓடவிட்டனர்.

காலை உணவு முடித்து, இவர்கள் கிளம்ப ஆயத்தம் செய்யும் நேரத்தில் ராமு , " பாலா மதியம் சாப்பிட்டு வெயில் தாழ கிளம்பலாமுல்ல" எனப் பேச்சை ஆரம்பித்தார்.

" நீ தான் ஊருக்கு போ, போன்ன. இப்ப என்ன. ஏன் மருமகன், எங்கையும் போறேன்னு. உனக்குப் போன் போட்டானாக்கும்" எனப் பாலநாயகம் குதர்க்கமாகக் கேள்வி எழுப்ப , சௌந்தரி ஆட்சேபிக்க , பன்னீரும், சுப்புவும் சமாதானம் பேச எனப் பேச்சு வளர்ந்தது.

வழக்கமாக இவர்கள் பேச்சுக் குரல் உயரவுமே அங்கே ஆஜராகி விடும் பவானி, வெகு நேரமாகக் காணவில்லை. " இவிக சண்டையை நம்மாள தீர்க்க முடியாது. அவிக மருமகளைக் கூப்புடுங்க. " எனச் சாரதா சொல்லவும்,

" சத்தம் கேட்கவுமே வந்திருமே, இன்னைக்கு என்ன ஆளைக் காணோம்" எனச் சுப்பிரமணியும், தேட ஆரம்பிக்க மற்றவர் கவனமும் பவானி எங்கே என்பதில் சென்றது.

" அம்மா பவானி" என ராமு குரல் கொடுக்க, முகத்தைத் துடைத்தபடி, வருவிக்கப்பட்ட புன்னகையுடன், "சாரிப்பா, பொண்ணு போன் பண்ணா" எனக் காரணத்தைச் சொல்லிக் கொண்டு வந்து, ஹாலில் மூத்தவர்களைப் பார்க்க எதிரும், புதிருமாக உட்கார்ந்திருந்தனர். ஆளாளுக்கு அவரிடம் புகார் பட்டியல் வாசிக்க,

" இப்ப கிளம்பி வராத, அப்புறம் வான்னா என்ன அர்த்தம், இவ மகனுக்கு, நான் அங்க வர்றது பிடிக்கலையின்னு தானே அர்த்தம்" எனப் பாலநாயகம் முறுக்கவும் ,

" நீங்களா ஒரு முடிவுக்கு வராதீங்க. அவனுக்கு என்ன வேலையோ, நீங்கள் வர்ற நேரம், ராஜா முன்னாடி வந்து வா ன்னு கேட்கோனும்பிங்க. அதுக்காகத் தான் அப்படிச் சொல்லியிருப்பான்" எனச் சௌந்தரி மகனுக்கு வக்காலத்து வாங்கினார். மீண்டும் போர் முரசு கொட்டி சண்டை சூடு பிடித்தது.

" மாமா, அது உங்க மகன் வீடு, உங்களுக்கு இல்லாத உரிமையா. நீங்களே சொல்றீங்க இவ்வளவு வேலையை இழுத்துப் போட்டுகிறார்னு. அப்புறம் அங்க போறதுக்கு எதுக்கு இவ்வளவு யோசிக்கிறீங்க" எனப் பாவானியும் கேட்கவும்.

" உனக்கு அவனைத் தெரியாதும்மா, உன்னால தான், நான் தனியா இருக்கேன் பாருன்னு, வேணும்னே காட்டுவான். அவன் நல்லா வாழனும்னு நான் நினைக்கலையா" எனப் பழைய பல்லவியை ஆரம்பிக்க,

" இதையே மறுக்கா, மறுக்காச் சொல்லாதடா, மாப்பிள்ளையே மறந்தாலும், நீ இந்தப் பேச்சை மறக்க மாட்ட. நான் உன்கூட இருக்கிறதால தான , இந்தப் பேச்சை பேசுற, நான் என் மகன்கிட்ட போறேன். நீயும் உன் மகன்கிட்டப் போ" எனப் பன்னீர் கோபமாகச் சொல்லவும்.

" அப்பா, நீங்க அமைதியா உட்காருங்க. மாமாட்ட நான் பேசிக்கிறேன்" என்ற பவானி,

" ஒரு சூழ்நிலையில பெத்தவங்க எடுக்கிற முடிவால, அவங்க வாரிசுகள் ரொம்பப் பாதிக்கப் படுறாங்க. அந்தக் கோபத்தை நம்மட்ட காட்டும் போது, பொறுத்துக்கத் தான் வேணும் மாமா" எனப் பவானி உருண்ட கண்ணீரைச் சுண்டி விட,

" உன்னை யாரு என்ன சொன்னாங்க" என வெகுண்டார் பாலா. அதில் சிரித்த பவானி, " உங்களுக்கு ஒரு மகன் இருந்தா, அதே மாதிரி எனக்கு ஒரு மகள் இருக்க மாட்டாளா. என் குடும்பம் பிரிஞ்சு இருக்க நான் தான் காரணம்னு திட்டுறா" என்றவர்,

" இதை விடுங்க மாமா, நான் போட்ட முடிச்சு, நானே அவிழ்த்துக்குறேன். நீங்க உங்க மகன் வீட்டில் போய்த் தங்குங்க , உங்களுக்காகவே அவரும் வீட்டுக்குச் சீக்கிரம் வருவார். அவர் மனசில ஆற்றிக்க முடியாத ரணம் இருக்கு, பேசி வெளியே கொண்டு வாங்க. அவர் இப்படி இருக்கிறதுக்கு என்ன காரணம்னாவது தெரிஞ்சுக்குங்க" என முகத்தில் வேதனையோடு பவானிச் சொல்லவும்,

" நான் கேட்காமல் இருப்பேன்னு நினைச்சியாமா" என்றார் பாலா.

" கேட்டுருப்பீங்க, ஆனால் உங்க மகன், உங்களை மாதிரி தான இருப்பார். கல்லைக் கரைக்கிறது அவ்வளவு சுலபமா என்ன. இருபது வருஷமா, தன் வாழ்க்கையை விட்டுக் கொடுக்கிற அளவுக்கு, அவர் மனசில இருக்கிறவ யாருன்னாவது தெரிஞ்சுக்கிட்டு வாங்க." எனப் பாலநாயகம் தம்பதி மகன் வீட்டுக்குச் செல்ல வேண்டிய மற்றொரு காரணத்தையும் பவானி எடுத்துக் கொடுத்தார்.

" நல்லாச் சொல்லு, நானும் இதையே தான், இவருக்குப் புரிய வைக்கிறதுக்குள்ள ஓய்ஞ்சு போறேன்" என்ற சௌந்தரி, தனது அலைப்பேசியை எடுத்து,

" இப்பவே ராஜாவுக்குப் போன் போடுறேன். இவனூட்டுக்கு, நாங்க என்ன கஞ்சிக்கு இல்லாமலா போறோம்" எனப் போன் அடிக்க, ராமு பதறினார்.

" சௌந்தரி, மாப்பிள்ளை மீட்டிங்கில இருப்பாரும்மா" என அவசரமாகத் தடுக்க,

" அவன் எங்க வேணுமின்னாலும் இருக்கட்டும் அண்ணேன். அரை மயக்கத்தில இருந்தாலும் பெத்தவளுக்குப் பதில் சொல்லித் தான் ஆவோனும். நானும் கேக்கலையின்னா, வேற யாரு தான் கேட்பாங்க. " எனக் கணவருக்கும் ஓர் அம்பை விட்டு விட்டு போன் அடிக்க, நான்கைந்து முறை அடித்து, கடைசி நொடியில் போனை எடுத்த கைலாஷ், " அம்மா, வந்துட்டீங்ஙளா, கிளம்பிட்டிங்களா " எனவும்.

" எங்களை இப்ப வராதேன்னு சொன்னியாமாம். ஏன் மதிய சோத்துக்கு வந்தோம்னா, உன் ஆஸ்தி குறைஞ்சிடுமோ" எனச் சிடுசிடுக்கவும், மயக்கத்திலேயே சிரித்தவர், " தாய் மாதா, நீங்க தான் அன்னபூரணி ஆச்சே, வந்து உங்க கையால அள்ளிக் கொடுத்தீங்கன்னா, என் கம்பெனிக்கே வயிறு நிறையும் வாங்க மா. " என்றவர், "இப்ப தான் உங்க பேத்தி ஊட்டி விட்டுச்சு. மதியத்துக்கு நீங்க வந்து ஊட்டி விடுங்க" என ராஜன் உளறினார்.

அவரின் குழறிய பேச்சில் " ராஜா, ஏன் ஒரு மாதிரி பேசுற, உடம்புக்கு முடியலையா என்ன" எனப் பதறினார் சௌந்தரி.

" ஹேய் தாய் மாதா, பதறாதீங்க. மாத்திரை போட்டது, இல்லை தூக்கம் கெட்டது. அதை விடுங்க. அப்பா வர்றார்ல, இரண்டு பேருமா வந்து இங்கயே இருங்க. உன் கையால சாப்பிடனும் வாங்கமா" என அரை மயக்கத்திலிருந்தவர், அம்மாவிற்கு அழைப்பு விடுக்க, "இந்தா கிளம்பிட்டேன் கண்ணு, இரண்டு மணி நேரத்தில வந்துடுவேன்" எனக் கண்ணீர் வழியப் பேசிய சௌந்தரி," போதுமா உங்களுக்கு, என் மகன் உங்களைக் கூப்பிட்டான்" என்றவர், கண்ணைத் துடைத்துக் கொண்டு அடுத்து சத்தியனுக்குப் போன் அடித்தார்.

" டேய் சத்தியா, என்னடா நடக்குது அங்க. அப்பா, ஏன் ஒரு மாதிரி பேசுறான்" என மிரட்டவும், " ஒண்ணுமில்லைங்களே" எனச் சத்தியன் சமாளித்து விட,

" அவன்கிட்ட விசயத்தைக் கரக்க முடியாதுங்கக்கா , நீங்க செல்லிக்கு போடுங்க, அவள் தான் ஓட்ட வாயிற் சொல்லிப்vபோடுவா " என யோசனை தந்தார் சாரதா.

அடுத்து செல்லிக்கு போன் போட்ட சௌந்தரி " ஏண்டி செல்லி, உனக்கு நேரத்துக்கு டிபன் செஞ்சு போட முடியாதாக்கும், என் மகன் லேட்டாகுதுன்னு சாப்பிடாம போயிட்டானாமாம் " எனப் படபடக்க,

" ஏனுங்க ஆத்தா, ஐயா ரூம்பில தானுங்க இருக்காரு, அவர் எங்கிங்க வெளிய போனாரு, நான் நேரமே டிபன் செஞ்சு போட்டு, காத்துக் கெடக்க ஐயா தான் காபிக்கே கதவையே திறக்கலைங்க, ஆதிரா பொண்ணு இல்லைங்க ஆத்தா, அது தான் " எனப் பதில் தந்தவள், தன் மேல் குற்றமில்லை என நிரூபிக்கும் விதமாகச் சௌந்தரிக்குத் தேவையான விசயத்தை அவள் அறிந்தவரைத் தந்து விட, சுற்றியிருந்த ஆண்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

" அண்ணி, விஜயன் தான் போன் அடிச்சது. ராஜா பேசறதும் சரியில்லை, நீங்க கிளம்புங்க. இவிகளுக்குப் பெரிய தங்கமலை ரகசியத்தை, மறைக்கிறதா நினைப்பு" எனத் தன் கணவர் ராமுவையும் காலை வாரி விட்டு, நடந்ததை யூகித்த அபரஞ்சி, சௌந்தரியைக் கிளப்பினார்.

பவானிக்குப் பேசவும் இடம் தராமல் சாதுரியமாக விசயத்தைக் கறந்த இந்தப் பெரியவர்களிடமிருந்து எந்த விசயத்தையும் மறைப்பது கடினம் என உணர்ந்தவர், தன் குட்டு எப்போது உடையுமோ, அதன் பின் விளைவுகள் என்ன ஆகுமோ என யேசித்தார்.

" அப்ப, ராஜாவுக்கு முடியலைங்கிறியா" எனப் பாலா, முகத்தில் கவலையோடு கேட்க,

"ஆமாண்டா, இல்லையினா உன்னைய எதுக்கு விசாரிக்கப் போறான், ஹிட்லருன்னுல சொல்லுவான், நீ கிளம்பு." எனச் சுப்புவும், 

"முடியாம கிடக்கையில், மாப்பிள்ளை அப்பன் , உன்னைய  தேடுறாப்பலைல , அது தான்  பாசம், சும்மா முறுக்கமா, கம்முனு  கிளம்பு, பயப்படுற அளவு ஒன்னுமிருக்காது " எனப் பன்னீரும், பாலாவை தேற்றினர்.

ராமு நண்பனை அழைத்துச் சென்று ரகசியமாக "வயசு கோளாறு, வயசான பிறகும் விடுதில்லை. புரிஞ்சுக்கிட்டியா. திரும்பப் போய், உன் ஹிட்லர் வேலையைக் காட்டு, இல்லை அவனுக்குக் கம்பெனி கொடுத்து, அவன் மனசில இருக்கிறதை வாங்கு. அது தான் உனக்கு டாஸ்க்" எனச் சொல்லவும், அவரை முறைத்தவர்,

 " போடா இவனே, நல்லா வாயில வந்திடும்" என்று விட்டு, தயாராக இருந்த காரில் கிளம்பினர் பால நாயகம் தம்பதியினர்.

அவர்கள் செல்வதையே பார்த்து நின்ற பவானியிடம், " ஒரு வழியா தேரை நகர்த்திட்ட. நம்ம எப்பமா மலை இறங்குகிறது" என்றார் ராமு. " அப்பா" என அதிர்ந்தார் பவானி.

கைலாஷ் ராஜனின் போனிலிருந்து, அதற்குள் இரண்டு முறை பால நாயகத்துக்குப் போன் அடித்து விட்டாள் ஆதிரா. முதல் முறை " பாபா, அஜோபா, ஐ மீன், தாத்தா நம்பர் கொடுங்க" என அலுவலக அறையில் வந்து நின்றவளிடம்,

 " புது நம்பரா இருந்தா, ட்ராவல்ல எடுக்க மாட்டார் கண்ணு " என்றவர், தனது அலைப்பேசியிலிருந்தே டயல் செய்து ஆதிரா கையில் கொடுக்க, 'ஹிட்லர்' எனச் சேவ் பண்ணியிருந்த பெயரைப் பார்த்து, பாபாவைச் செல்லமாக முறைத்தாள் ஆதிரா.

அதற்குள் அழைப்பை ஏற்றிருந்த, பாலா குரலை செருமிக் கொண்டு, " ஹலோ" எனவும்,

" அஜோபா, தாத்தா, நமஸ்தே. நான் ஆதிரா, பாபா போன்லிருந்து பேசுறேன். நீங்கள் கிளம்பிட்டிங்களா. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும். உங்களைப் பார்க்க ஈகர்லி வெயிட்டிங்" என அவள் படபடவெனப் பேசவும், பால நாயகத்துக்குப் பதிலே வரவில்லை.

" ஹலோ, நீ யாரும்மா. " எனக் குழப்பமாகவே கேள்வி எழுப்பினார். " நான் உங்க போதி, ஐ மீன் பாபா சாப் வீட்டில் இருக்கேன். நீங்க இன்னைக்கு வருவீங்கன்னு சொன்னாங்க, ஆபா ஐமீன் ஆத்தா பக்கத்தில் இருந்தா போனை கொடுங்க" என அவள் வழவழக்கவும்.

" போன் ஸ்பீக்கர்ல தான் மா இருக்கு, வண்டி சத்ததில கிழவிக்குக் காதில விழுகாது" எனச் சௌந்தரியை வம்பிழுத்தபடி பாலாச் சொல்ல, ஆதிரா சிரித்தாள்.

"ஆரைப் பார்த்து, கிழவி, காது கேட்காதுன்னு சொன்னீங்க. உங்களுக்குத் தான், போனை எடுக்கிறதுகுள்ள கை நடுங்குது" எனக் கணவரிடம் வம்பு பேசியவர்,

" ஆதிரா கண்ணு, நல்லா இருக்கியாடா " என விசாரிக்கவும், " நமஸ்தே ஆபா " என்றவள் பேச்சு, சரியாக விழாத போதும், செல்லி சொன்னது நினைவில் வந்து, " கண்ணு, இன்னைக்கு நீ தான் என் மகனுக்கு இட்லி ஊட்டி விட்டியாம்ல. என் மகனைக் கவனிக்க, எனக்கப்புறம், நீ ஒருத்தி இருக்கேன்னு எனக்குச் சந்தோஷம்டா" என முதல் பேச்சிலேயே, பேத்திக்கு, ஆத்தா நன்றியைச் சொல்ல, ஆதிராவின் கண்களில் கண்ணீர்.

" பாபாக்கு, பொண்ணு செய்யாமல் யார் செய்வா" என்றவள், கைலாஷ் தன்னையே பார்ப்பதை உணர்ந்து,

"நான் மட்டும் இல்லை, ஆபா, இந்தக் கம்பெனியே, பாபாக்கு பார்க்கும். அத்தனை பேருக்கு அவர் அப்பா. என் ஒருத்திக்குத் தான், அவருக்குத் திரும்பிச் செய்யச் சான்ஸ் கிடைச்சிருக்கு, அவ்வளவு தான்" என ஆனந்தக் கண்ணீரோடு சொல்ல,

" ரஜ்ஜும்மா, என்னடா இது" என ஆட்சேபித்தவர், " அம்மா, நீங்க என் மகளை அழ வைக்கிறீங்க. நேரா வாங்க பேசிக்கலாம்" எனப் போனை அணைத்தார். இவர்கள் பேச்சில், பெரியவர்கள் இருவருக்குமே ஆதிராவை பார்க்கும் ஆவல் வர, சௌந்தரி கணவரிடம், ஆதிரா பற்றித் தான் திரட்டி வைத்திருந்த தகவல்களைச் சொன்னார்.

கைலாஷ், ஆதிராவைப் பார்த்து, " இன்னும் ஒரு மணி நேரம் வந்துடுவாங்க. " என்றவர், " ஓ, நோ, " என அதிர்ந்து, " உன் ஆத்தா, சொன்னதைக் கேட்டியா. ஏதோ கருப்பு ஆடு போட்டுக் கொடுத்திருச்சுடா. ஆத்தா ஸ்மெல் பண்ணிடுச்சு டோய், இந்நேரம் எல்லாத்தையும் விசாரிச்சு இருப்பாங்க. போச்சு" எனப் பதறவும்.

" இவ்வளவு பயம் இருக்கவங்க, எதுக்கு அப்படிச் செய்யணும். நைட் நல்லாத் தான பேசிட்டு இருந்தீங்க" எனக் குறைபட்டாள்.

" நைட் பாருவை பத்தி பேசினமா கண்ணு, அதிலையே அங்க போயிட்டேன். சாரிடா" எனக் காதை இழுத்து அவர் மன்னிப்பு கேட்க,

" பாரு உங்களை ஏமாத்திட்டாங்களா பாபா. அவங்களும் உங்க கூட இல்லை. நீங்களும் வேற கல்யாணம் பண்ணிக்கலையே" என அவள் தூண்டில் போடவும்,

" பாரு, என் மனசில தாண்டா இருக்கா " எனப் பெருமூச்சு விட்டவர், " அது ஒரு பெரிய கதை டா. பாரு ஒருத்தி தான், இந்த ஜென்மத்தில் என் மனைவின்னு வாக்குக் கொடுத்திருக்கும் போது, அவளே இல்லைனாலும், அவளுக்குக் கொடுத்த வாக்கு இருக்கே, நான் எப்படி மறுகல்யாணம் பண்ணிப்பேன். " என அவர் எதிர் கேள்வி கேட்டார்.

அவள் தன்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு, " அவங்க தான் இல்லைனு சொன்னீங்களே, அப்புறம் என்ன " என்றாள்.

" அது தான் சொன்னேனே வாக்கு கொடுத்திருக்கேன்னு, அது நான் அவளுக்குக் கொடுத்தது மட்டும் இல்லை. எனக்கு நானே கொடுத்தது. நான் இப்படி இருக்கிறது மட்டும் தான், எங்க காதலுக்கான சாட்சி" என அவர் சொல்லவும், அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவர் கன்னத்தில் முத்தமிட்டவள், " மஸ்து, படியா மஸ்து ஹை பாபா. உங்க லவ் தான் வேல்ட்'ஸ் பெஸ்ட். ஆனால் அந்தப் பாருவுக்குத் தான் கொடுத்து வைக்கலை" என உணர்ச்சி வயப்படவும்,

" ரஜ்ஜும்மா, இந்த டாப்பிக்கை இப்படியே விட்டுருவோமே" எனக் கெஞ்சலாகக் கேட்டார்.

" கடைசியா ஒரு கேள்வி, அதுக்கப்புறம் உங்கள்ட்ட எதுவுமே கேட்க மாட்டேன் " என்றவள், " ஒரு வேளை பாரு உயிரோட இருந்து உங்களைத் தேடி வந்தாங்கன்னா, ஏத்துக்குவீங்களா" எனக் கேட்கவும், விரிந்த கண்களோடு அவளைப் பார்த்தவர்,

" பாரு, உயிரோட இருந்திருந்தா, ஏன் என்கிட்ட வராமல் போகனும். அப்படி இருந்தா, அவள் என்னை நம்பலைனு தானே அர்த்தம். வேண்டாம், அப்படி ஒரு நாளை நான் பார்க்கவே வேண்டாம்" என நெற்றியில் கை வைத்து அழுத்திக் கொண்டவர்,

அவஸ்தையாக மூச்சு விடச் சிரமப்படுவது போல், செய்யவும், " பாபா, பாபா" எனப் பதறியவள், தண்ணீர் எடுத்துக் கொடுத்து, துளிர்த்த வியர்வைகளை, தன் துப்பட்டாவால் துடைத்து, " டாக்டரை கூப்பிடவா பாபா, நான் ஒருத்தி, இந்தப் பேச்சே எடுத்திருக்கக் கூடாது" எனக் கலங்கினாள்.

" ஒண்ணுமில்லைடா. ஐயம் ஓகே. " என எழுந்து நின்றவர், " பாரு இல்லைனாலும், அவளை நினைவு படுத்துற மாதிரி, நீ வந்திருக்கியே, அதுவே போதும். சீரியஸா, உங்க ஆயிட்ட பர்மிஷன் வாங்கு, நான் உன்னை அடாப்ட் பண்ணிக்கிறேன்" என அவள் தோள் மீது கைபோட்ட படிச் சொல்லவும்,

" அவுங்க என்ன பர்மிசன் கொடுக்கிறது, எனக்கு உங்களை விட்டு போறதா ஐடியாவே இல்லை. " எனக் கொஞ்சிப் பேசியபடி ஹாலுக்கு வந்தனர்.

" ஹிட்லர், வரும் போது, கார் வரைக்கும் போய் வாங்கன்னு கும்பிடு போட்டு கூப்பிடனும், இல்லையினாக்கும், அவரை மதிக்கலையின்னு பேசிப் போட்டு, ஆத்தாவையும் கூட்டிக்கிட்டு , அவர் வீட்டுக்கு போயிடுவார்" என அவளோடு பேசிக் கொண்டிருக்க, வாசலில் கார் வந்து நின்றது.

" சத்தியா" எனக் கைலாஷ் குரல் கொடுக்க, " வெளியே தானுங்க நிக்கிறேன்" என அவன் குரல் கொடுக்க,

" பாபா, இப்பச் சொன்னீங்களே, சலியே ,அவுங்களை ரிசீவ் பண்ணுவோம்" எனவும், " போலாம் வா" என இருவரும் வாசலுக்கு விரைந்தனர். சத்தியன் , பெரியவர்களுக்கு ஓர் வணக்கத்தோடு டிக்கியிலிருந்து லக்கேஜை இறக்க, மற்ற வேலைக்காரர்களும், பெரியவர்களை வணங்கி விட்டு வேலையைத் தொடர்ந்தனர்.

கைலாஷ் அம்மாவுக்கு, அவர் பக்க கார் கதவைத் திறந்து கைகொடுத்து இறங்க உதவி செய்ய, ஆதிரா, பாலநாயகம் பக்கம் சென்றாள்.

" வாங்கமா, பார்த்து இறங்குங்க" எனக் கை கொடுக்க, " ராஜா, உனக்கு ஒண்ணுமில்லையே" என மகனின் கையை, மார்பை, முகத்தைத் தொட்டுப் பார்த்து, கண் கலங்கினார்.

" அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க மா, சும்மா வாங்க" என்ற மகனிடம் அப்பாவைக் கண் காட்டி அழைக்கச் சொல்ல, அந்தப் பக்கம் இறங்கிய பால நாயகம், ஆதிராவை ஆச்சரியமாகப் பார்த்து நின்றார்.

" நமஸ்தே, அஜோபா" என அவர் கால்களில் பணிந்து எழு, " நல்லா இரும்மா" எனத் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தவர், ஆதிராவின் கைகளை உறுதியாக பற்றிக் கொண்டு,

" சௌந்தி, இந்தப் பொண்ணைப் பாரு, சாயல் நம்ம பவானி மாதிரியே இல்லை" என உரக்கச் சொல்லவும்,

ஆதிராவை சரியாகக் கவனிக்காத சௌந்தரி, " உங்களுக்கு உங்க மருமகள் தான் கண்ணுக்குள்ளேயே நிற்கும். யாரைப் பார்த்தாலும் அதே மாதிரி தான் தெரியும்" எனச் சலித்துக் கொண்டவர் முன், பேத்தியை அழைத்துக் கொண்டு வந்து, நின்றார் பாலா .

" வாங்கப்பா" என்றார் ராஜன். ஆனால் அவரைப் பொருட்படுத்தாமல், " நான் ஒன்னும் பொய் சொல்லலை, இங்க பாரு" என நிறுத்த, ஏற்கனவே ஆதிராவை காணும் ஆவலிலிருந்த சௌந்தரி, " என் கண்ணு" என அவள் கண்ணத்தை வழித்துக் கொஞ்சியவர், " ஆமாங்க, நீங்க சொல்றதும் சரி தான். ஆனால் ஒரு சாயலுக்குப் பவானி மாதிரி இருந்தாலும், இன்னொரு பக்கம் நம்ம சங்கீதாளு மாதிரியும் தெரியுது" என ஆதிராவை ஆராய்ச்சி பார்வை பார்க்க, அவரின் காலிலும் விழுந்து எழுந்த ஆதிரா,

" ஆபா, உங்களுக்கு எப்படித் தோணுதோ, அப்படி வச்சுக்குங்க. நீங்க எனக்கு ஆபா , அஜோபா தான்" என முறைக் கொண்டாட, அவள் கையைப் பற்றிக் கொண்டே உள்ளே நடந்தவர்கள் " அதென்ன கண்ணு , ஆப்பா, அஜப்பான்னு சொல்ற" எனச் சௌந்தரி சந்தேகம் கேட்கவும்,

" அம்மா, ஆத்தா , தாத்தான்னு மராத்தியில் முறை சொல்லுது " என விளக்கம் தந்தபடி அழைத்துச் சென்றார் கைலாஷ்.

" நீ தமிழ்லையே கூப்பிடு கண்ணு. அப்பத் தான் மனசு நிறையும்" என ஷோபாவில் அமர்ந்தவர்கள், நடுவில் ஆதிராவை அமர்த்திக் கொண்டு கதைத்ததில் மகனையும் மறந்தார்கள்.

கைலாஷ், " சாப்பிட்டுப் போட்டு, வந்து உட்கார்ந்து பேசுங்க" என அழைக்கவும்,

" ஏன் கடமையை முடிச்சு, கை கழுவி கிளம்பனுமாக்கும். நீ போறதுன்னா போ. " எனப் பாலநாயகம், இதுவரை மகனிடம் காட்ட மறந்த தோரணையைக் காட்ட, கைலாஷ் அம்மாவைப் பார்த்தார். சௌந்தரி கண்களால் நயந்து அமைதியாக இருக்கும்படி கெஞ்ச

" தாத்தா, பாபா நீங்க வர்றீங்கன்னு, அவங்க ஷெட்யுலை மாத்திக்கிட்டாங்க. இது சாப்பிடுற டைம், சரியான நேரத்துக்குச் சாப்பிடனும். அதுக்குத் தான் சொல்றாங்க. வாங்கச் சேர்ந்து சாப்பிடுவோம். நான் இப்படி ஃபேமலியா உட்கார்ந்து சாப்பிட்டதே இல்லை" என ஆதிரா சலுகையாகக் கேட்கவும்,

" வா கண்ணு, சாப்பிடுவோம்" எனச் சௌந்தரி டைனிங்கை நோக்கி நடந்தவர், " செல்லி, இன்னைக்கு என்ன சமையல்" என அதிகாரம் செய்தபடி சமைத்த பதார்த்தங்களைப் பார்வையிட்டார்.

" ஏன், கிளம்பும் முன்ன போன் போட்டிங்களே, அப்ப மெனு என்னன்னு சொல்லலையாக்கும், உங்களுக்குத் தெரியாத இந்த வீட்டில் எதுவும் நடந்துரும்" எனக் கைலாஷ் கேள்வி எழுப்பவும், செல்லி விழுந்து அடித்துக் கொண்டு உள்ளே ஓடி, பரிமாற மற்றொருத்தியை அனுப்பினாள்.

" அந்தப் பேச்சை அப்புறம் வச்சுக்குவோம், இப்ப கம்முனு வந்து சாப்பிடு" என மகனை அடக்கிவிட்டு, சௌந்தரி மேஜையைக் கவனிக்க, ஆதிரா தாத்தாவோடு ப்ரண்ட் ஆகியிருந்தாள்.

இவர்கள் டைனிங்கில் அமர்ந்த நேரம், " அப்புச்சி, அம்மாயி, புதுசா பேத்தியைப் பார்க்கவும், என்னை மறந்திட்டீங்க பார்த்துங்களா" என உள்ளே நுழைந்தான் அபிராம்.

" அபு கண்ணு, ஓடியா, ஓடியா. அது எப்படி உன்னை மறப்போம். " என மூத்த ஜோடியினர் அவனையும் உணவு மேஜைக்கு அழைக்க, பேச்சுப் பெரியவர்களிடமிருந்தாலும், கவனம் ஆதிராவிடம் இருந்ததைக் கண்டு கொண்டனர்.

நிலவு வளரும்.


No comments:

Post a Comment