யார் இந்த நிலவு-10
குன்னூர் வசந்த விலாசத்தில் தீபாவளி பண்டிகை போல் இனிப்பு, கார வகைகள் தயாராகிக் கொண்டிருந்தன. சௌந்தரி கோவை செல்கிறார், என ஒரு வாரமாக ஆயத்தம் செய்யப்படுகிறது.
" உன் மகன் ஒருத்தனே இத்தனை இனிப்பையும் சாப்பிடப் போறானா" என டைனிங் டேபிளில் பேக்கிங்குக்காக வைத்திருந்த பலகாரங்களைப் பார்த்துக் கேட்டார் பாலநாயகம்.
" உங்களுக்கு ஏன் பொறாமை, என் மகனோட சேர்ந்து நானும் சாப்பிடுவேன். என் பேரன் அபி வருவான் அவனுக்கு குடுப்பேன். இப்ப ஒரு புது பேத்தி வேற வந்திருக்கா, அவளுக்கும் குடுப்பேன். கண்ணு வைக்காதீங்க. பிள்ளைகளுக்கு சேராமல் போயிடும்" எனக் கணவனைக் கண்டித்த சௌந்தரி,
" அம்மா, பவானி எப்படி பேக் பண்ணனும்னு வந்து சொல்லு" என உரக்க அழைத்தார்.
" இதோ வந்துட்டேன்" எனக் குரல் கொடுத்தவர், போனை அணைத்து விட்டு டையனிங்கிற்கு வந்து சேர்ந்தார்.
தேன் குழல், ஓட்டுப் பக்கோடா, காராபூந்தி, ஓமப் பொடி போன்ற கார வகைகளோடு, கச்சாயம் எனும் அதிரசம், கரன்ஜி எனப்படும் எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட சோமாஸ், பேசன் லட்டு, தேங்காய் பர்பி, ஆகியவை பரப்பப்பட்டு இருந்தது. அபரஞ்சி, சாரதா இருவரும் டைனிங்கில் சுற்றி உட்கார்ந்து இருக்க, ராமுவும், சுப்புவும் அவர்களையே லட்டுவை ருசித்தபடி மனைவிமார் இனிப்பைத் தொடுகிறார்களா எனக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
" ஏம்மா, இவ மகன் மட்டும் என்னச் சின்னப்பயலா, அவனுக்கும் ஏழு கழுதை வயசாச்சு, அவனுக்கு இருக்க டென்சனுக்கு ப்ரஷர், சுகர் எல்லாம் வச்சிருப்பான். அவனுக்கு எதுக்கு இத்தனையை கொடுத்து விடுற" எனப் பாலா, பவானியிடம் கேள்வி எழுப்ப
" ஆமாம் மாமா, நீங்க சொல்றதுலையும் பாயிண்ட் இருக்கு, அவரை நான் சின்னப் பையனாவே நினைச்சிட்டு இருக்கேன். வயசாகியிருக்கும்ல." என பவானி யோசிக்கவும், எங்கே எடுத்துச் செல்ல விடமாட்டார்களோ, எனப் பயந்த சௌந்தரி, பவானியின் பேச்சை சரியாக கவனிக்காமல்
"அதெல்லாம் என் மகன் கட்டுக் குலையாமல் நல்லாத் தான் இருக்கான், நீங்க பேசாம இருங்க. " எனக் கணவனிடம் சண்டை பிடித்தார்.
" ஏடி, அவன் சின்னப்பயலா இருந்தது, இருபது வருஷத்துக்கு முன்னாடி. " என்றவர், " ராமு, அவனை ஒரு புல் செக்கப் செஞ்சு ரிப்போர்ட் அனுப்பச் சொல்லுடா, அப்புறம் ஸ்வீட் அனுப்புவோம் " என நண்பனிடம் சொல்லவும், சௌந்தரிக்குக் கோபம் வந்து விட்டது.
" அவனுக்கு ஒரு நல்லது செஞ்சு பார்க்கத் தான் அப்பா, மகன் இரண்டு பேருமே விடலை. ஒரு ஸ்வீட் செஞ்சிட்டு போறது கூடவா உங்களுக்குப் பொறுக்கலை. எல்லா நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி. நான் எதையுமே எடுத்துட்டுப் போகலை விடுங்க. அவன் என்ன ஒன்னும் இல்லாமலா இருக்கான். நான் அங்கப் போயி பார்த்துக்குறேன்" என எழுந்தவர், காலை ஊன்றி நடக்கச் சிரமமாக இருந்த போதும் வீம்பாக , முந்தியில் கண்ணைத் துடைத்தபடி எழுந்து செல்ல, பாலா விறைத்து நிற்க,
"இதுல கூடவா, ராஜாவோட போட்டிப் போடுவ. எப்படி இருந்தாலும், இந்த ஸ்வீட் எல்லாம் உன்னால சாப்பிட முடியாது. சாப்பிட முடிஞ்சவுங்களைப் பார்த்து பொறாமை படாதடா" என ராமு பாலாவைத் திட்டி சூழலைச் சகஜமாக்க பார்த்தார்.
," அத்தை, வந்து உட்காருங்க. மாமா இப்ப என்னச் சொல்லிட்டாங்க. அவங்களுக்கு சுகர் இருக்கிற மாதிரி, மகனுக்கும் சுகர் வந்திருக்குமோன்னு அக்கறையில் பேசறாங்க. எல்லாத்தையும் தப்பா எடுக்காதீங்க " எனப் பவானி சௌந்தரி கையைப் பிடித்து நிறுத்தினார்.
" நீயும், உன் மாமா கூட சேர்ந்திட்டேயில்லை." எனக் கோவித்தவர், " சரி நீயே சொல்லு, உன் புருஷனுக்கும் என் மகன் வயசுதான இருக்கும். நாளைக்கு வெளிநாட்டிலிருந்து, மகளோட வர்றார்னா, இதெல்லாம் செஞ்சுக் கொடுக்க மாட்ட. " எனச் சௌந்தரி ஞாயம் கேட்கவும்.
" அக்கா சொல்றது ஞாயம் தானுங்களே, செஞ்ச பலகாரமெல்லாம் ராஜா தம்பிக்கு மட்டுமில்லாம , கஸ்தூரி வீட்டுக்குமா பேக் பண்ணத் தான் பவானியைக் கூப்பிட்டாங்க. நீங்க தானுங்க மாமா, அதுக்குள்ள சண்டையை மூட்டி விடுறீங்க" எனச் சாரதா, சௌந்தரிக்குப் பரிந்து கொண்டு வந்தார்.
பன்னீர் போன் பேசி விட்டு, வராண்டாவிலிருந்து உள்ளே வந்தவர், " மறுபடியும் ஆரம்பிச்சிட்டியாடா" என நண்பனைத் திட்டினார்.
" ஏண்டா, ஆளாளுக்கு என்னை பேசறீங்க. எனக்கு மட்டும் அவன் மகன் இல்லையாடா. அவன் இனிப்பு சாப்பிடுறதை விட்டே இருபது வருஷம் ஆச்சு. இவள் வரிசை, வரிசையா செஞ்சுக் கொண்டு போயிட்டு, அவன் ஒன்னு கூட தொடலைனு, திரும்ப அழுதுகிட்டு வருவா. இது என்னாத்துக்கு இந்த பொழப்புன்னு தான் கேக்குறேன்" எனப் பாலா கோபப்படவும், அதிர்ந்து நின்ற பவானி, பாலா உணர்ச்சி வயப்பட்டுப் பேசியதில் இருமல் வரவும் அவரை அமர்த்தி வெந்நீர் எடுத்து வந்து குடிக்கக் கொடுத்தார்.
சௌந்தரியும், கணவனிடம் வந்து, " நீங்க டென்சன் ஆகாதீங்க. நான் இந்த தடவை போகவே இல்லை" என அவரருகிலேயே ஓய்ந்து அமர்ந்தார்.
" இல்லை, இல்லை நீ போயிட்டு வா. அப்புறம் பேச்சுக்குப் பேச்சு குத்திக் காட்டுவ" எனப் பாலாச் சொல்லவும்,
பன்னீர், " இந்த தடவை நீயும் தங்கச்சியோட சேர்ந்து போற. அதுவும் ராஜா விட்டிலையே தங்கி இருந்துட்டு வர்ற" என அன்புக் கட்டளையிட, ராமு, சுப்பு ஜோடிகளும் அதனையே வலியுறுத்தினர்.
சுப்பிரமணி , " டேய், நான் சொல்றனேன்னு தப்பா நினைக்காதீங்க. பாலா நீ இந்த தடவை ராஜாட்ட உன் ஆணவமெல்லாம் விட்டுட்டு, கொஞ்சம் உருக்கமாப் பேசு. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை, அவனுக்கேத்த ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடிக் கண்டுபிடிப்போம். வயசான காலத்தில தான் துணை அவசியம் வேணும்டா" என எடுத்துச் சொல்லவும், பன்னீர் அதனை வெகுவாக ஆதரித்தார். எல்லாருமாக எடுத்துச் சொல்லவும் பாலாவும், சௌந்தரியோடு கோவைச் செல்ல ஒத்துக் கொண்டார்.
" அப்புறம், என்னமா. ஸ்வீட்டைப் பேக் பண்ணு. அவனும் தான் போறான்ல, இப்ப ஒண்ணும் சொல்ல மாட்டான்" என ராமு பாலாவை வம்பிழுத்தபடி பவானியிடம் சொல்ல, " இந்த தடவை உங்க மகன் ஸ்வீட் கட்டாயம் சாப்பிடுவார்" எனப் பவானி ஆரூடம் சொல்லி பேக்கிங் வேலையை ஆரம்பித்தார்.
திருப்பூரில் , நடந்த ஒரு விழாவில், கைலாஷ் ராஜன், விஜய ரங்கன் இருவருமே முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கண்டனர். தனியாகக் கிடைத்த சந்தர்ப்பத்தில் , விஜயன் இரண்டு மூன்று முறை, நண்பனோடு பேச்சுக் கொடுக்க முயன்றார். ஆனால் நண்பன், அங்கே, இங்கே சுத்தி பேச்சை எங்குக் கொண்டு வந்து நிறுத்துவான் என அறிந்த, கைலாஷ் அதற்குச் சந்தர்ப்பமே கொடுக்க வில்லை. ஆனால் அப்படியே நண்பனை விடவும் மனமில்லாத விஜயன், சத்தியனோடு சேர்ந்து கூட்டுச் சதி செய்தார். ராஜன், கிளம்பும் முன்னே, தான் கிளம்பியவர், கார் ரிப்பேர் எனப் பாதி வழியில் இறங்கி நின்றார். அதுவும் ஒதுங்குவதற்கு மரம் கூட இல்லாத இடத்தில் வெயிலில் நின்றார். தங்கள் திட்டப்படியே, தூரத்திலேயே , விஜயன் காரை கவனித்த சத்தியன், ராஜனிடம் , " இந்த ஐயா, காரை நடுவழியில் நிறுத்திட்டு, என்னாங்கப்பா பண்றாரு" என ஒன்றுமறியாதவன் போல் சந்தேகம் கேட்கவும், நிமிர்ந்து பார்த்தவர், " மகனுக்குப் பொண்ணு தேடுவானா இருக்கும். நீ நிக்காம போ" என்றார் ராஜன், அவர் பதிலில் ஏமாற்றமடைந்த சத்யன், " ஏனுங்கப்பா , நடுராத்திரியானாலும், உங்களுக்காக அவர் போன் அடிச்சோனே, ஓடி வருவாருங்க, நீங்க என்னடானா, பகல்லையே நிக்காம போ ன்னு சொல்றீங்க, என்னனு தான் கேட்கலாமில்லிங்க. நாம கண்டுக்காமப் போனம்னாக்கும், நாளைக்கு அவிக வீட்டு அம்மா, போன் போட்டு கேட்பாங்க. நம்ம ஆத்தா வேற ஊரலிருந்து வர்றாங்க" என அவன் அடுக்கிக் கொண்டே போகவும்,
" போதும் நிறுத்து, நீயும், அவனும் சேர்ந்து ஆடுற நாடகம்னு எனக்குத் தெரியும். வண்டியை நிறுத்தி, என்னனு கேளு" என்றார். சத்தியன், 'எங்கப்பாவா, சும்மாவா. இதுகூடத் தெரியாதையா, பெரிய தொழில் நடத்துறாரு ' என மனதில் சிலாகித்தவன், வண்டியை ஓரங்கட்டி இறங்கி வந்து, விசாரிக்க, இப்போது விஜயன் திரும்பிக் கொண்டார். ராஜன் கண்ணாடியிலேயே இவர்கள் நாடகத்தைப் பார்த்தவர், சத்யனை அழைத்து, என்ன பிரச்சனையென்று வினவ, அவன் விளக்கினான். " டிரைவரும் இல்லையாக்கும் " என நக்கல் விட்டவர், " அவனை நம்ம வண்டில ஏறச் சொல்லு. நீ அவன் வண்டியை எடுத்துட்டு மில்லுக்கு வந்திடு" எனத் தான் டிரைவர் சீட்டில் மாறி உட்கார்ந்து நண்பனுக்காகக் காத்திருந்தார் ராஜன்.
ஒரு காலத்தில் இவர்கள் சேர்ந்து சுத்தாத இடங்களோ, வாகனங்களோ கிடையாது. சைக்கிளில் டபுள்ஸ் போவது முதல் , பேருந்தில் தொங்கிச் செல்வது வரை எல்லாச் சாகசங்களையும் செய்வார்கள். அப்படிப்பட்ட நண்பனிடம் தான், இருபது வருடங்களாக முகம் திருப்பி இருக்கிறார் ராஜன்.
" சத்தியா, எனக்கு வண்டி வரும். உங்க அப்பாவைக் கூட்டிட்டு நீ கிளம்பு" எனத் திரும்பிக் கொண்டார் விஜயன். ராஜன், தொடர்ந்து ஹாரனை அழுத்திக் கொண்டே இருந்தார். " ஐயா, நீங்க வண்டில ஏறுங்க, அவிகளுக்கு ஏதோ பேசறதுக்கு இருக்கும் போல , ட்ரைவர் சீட்டுல ரெடியா உட்கார்ந்திருக்கார் " எனச் சத்தியன் விஜயனிடம் சமாதானம் பேச, " நான் உங்ககிட்ட லிப்ட் கேட்டனாக்கும், மனுசன் பேச வரும் போது முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போனான். இப்ப என்னவாம்"என இருவரும், அவரவர் பிடிவாதத்தில் நிற்க, சத்தியன் இவர்களுக்கிடையில் மாட்டிக் கொண்டான். கடைசியில், விஜயன் போனில் அழைத்த கஸ்தூரி, " ஏனுங்க, அண்ணன், கூப்பிடுறாங்கலீங்க. பிடிவாதமா வெயில்ல நிற்காத, அவிகளோட சமாதானமா பேசி நேரத்துக்கு வீட்டுக்கு வந்து சேருங்க" எனக் கட்டளையிட,
மனைவியிடமும் வழக்கத்துக்கு மாறாக வாக்குவாதம் செய்ய, கஸ்தூரி, "நீங்களும் முறைச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா, எப்டிங்க மாமா, நமக்குக் காரியம் தான் முக்கியம், அவிகளே ஹாரன் அடிச்சு கூப்புடுறாங்கிலிங்க. அட சும்மா போங்க" என மனைவி, கணவனை மலையிறக்க,
" உங்க அண்ணன் வேலைதனத்தைப் பார்த்தியில்லே, எதிர்தாப்புல நிற்கிறவனைக் கூப்பிட மாட்டாராம், தங்கச்சிக்கு போன் போட்டு, போட்டுக் கொடுக்கிறான்" என அங்கலாய்த்து விட்டு, வேறு வழியில்லாமல் விஜயனும் , ராஜன் காரில் ஏறிக் கொண்டார். ஏசியை நண்பன் முகத்துக்கு நேராக வைத்து, அளவைக் கூட்டி, " ரொம்பச் சூடா இருக்கியாட்டத்துக்கு" என்றார் ராஜன். " உன்னளவு இல்ல சாமி. ஏசியையும் உம்படப் பக்கமே திருப்பிக்க" என விஜய ரங்கன் முகத்தைத் திருப்பிக் கொள்ளவும், ஹாஹாவெனச் சிரித்த ராஜன், " அப்பனும், மகனும் ஒரே மாதிரி மூஞ்சியை வைக்கிறீங்கடா." எனக் கேலி பேசி, இடது கையால் நண்பன் தோளைத் தட்டிக்கொடுக்க, அவர் கையைத் தட்டி விட்ட, விஜயன் " அதுக்கென்ன பண்றது, உனக்கு ஒரு மகன் இருந்தானாக்கும் , அவனும் உன்னையாட்டமாத் தான் , லொல்ளு புடிச்சவனா இருப்பான், " என விஜயன் ஒரு பேச்சுக்குச் சொல்லவும், சட்டென ராஜனுக்கு ஒரு வாரமாகத் தலையைக் குடைந்து கொண்டிருந்த விசயம், மின்னலென வந்து போனது. வண்டியை ப்ரேக்கடித்து ஓரமாக நிறுத்தியவர்,
"அதுக்குள்ள தம் இருக்கும் எடுடா" எனக் காரின் டேஷ் போர்டை காட்டவும், " இப்பவா,கார்குள்ள வேண்டாம்" என விஜயரங்கன் ஆட்சேபித்த போதே, இன்ஜினை ஆப் செய்தவர், " அந்தப் பக்கம் இறங்கு, தோட்டத்துக்குள்ள நடந்துட்டு வருவோம்" என ராஜன் அழைக்கவும், " இந்த மொட்டை வெயில்லையா 'என வினவினார்.
"அடச்சீ வாடா, உன் கூடக் குடும்பமா நடத்தப போறேன், கண்ணிப் புள்ளையாட்டம் பயப்புடுறான், பேசிட்டு வருவோம், இந்தக் கார் போற வேகத்துக்கு, இருபதாவது நிமிஷம்,மில்லுக்குப் போயிடுவோம்." என அழைக்கவும், "ம்க்கும், நினைப்பு தான், நீயும் அரைக்கிழவன் ஆகிட்ட, இன்னும் பழைய கைலாஷ்ன்னு நினைப்புலஇருக்காத." எனப் பதிலுக்குப் பேசிய போதும், நண்பன் சொல்லை மதித்து, ஆறாம் விரலையும் எடுத்துக் கொண்டே வந்தார். இருவரும் ஒன்றும் பேசாமல் நடந்தவர்கள், புகையைப் பற்ற வைத்துக் கொண்டு, "இந்த ரோட்டுலையே, பைக்குல எத்தனை தரம் வந்திருப்போம்." என நினைவுகளை மலர்த்திக் கொண்டார்கள்.
"எல்லாம் போன ஜென்மத்தில் நடந்த மாதிரி இருக்கு. சோலாப்பூர் போகாமலே இருந்திருக்கலாம், பருவைப் பார்க்காமலே இருந்திருக்கலாம், அவள் வாழ்க்கையையுக் கெடுக்காமல் இருந்திருக்கலாம், ராஜியும் சாகாமல் இருந்திருப்பா.எல்லாமே போச்சுடா "எனக் கைலாஷ் ராஜ், வெகு காலம் கழித்துச் சுய நினைவோடு மனம் திறக்கவும், "அப்படிச் சொல்லாத, உன் பாருவை இங்க கூட்டிட்டு வந்திருக்கலாம், அத்தை மாமா,கட்டாயம் ஏத்திட்டு இருந்திருப்பாங்க ,உனக்குப் புள்ளைங்க இருந்திருக்கும், நாமளும்,நட்பைத் தாண்டி சம்பந்தி ஆகியிருக்கலாம் , இப்படிக் கற்பனை செஞ்சு பாருவேன்" எனத் தூண்டவும்,
" என் பாரு இருந்திருந்தா, எனக்கும் மகன் , மகள் எல்லாம் இருந்திருக்கும். நான் உன்னையாட்டம் கஞ்சனில்லை, ஒரு டஜன் புள்ளைங்களாச்சும் பெத்திருப்பேன். " எனச் சிரித்தவர் கண்களில் கண்ணீர் சொரிய, " டேய்" என நண்பனை அணைத்துக் கொண்டார் விஜயன். " நான் சொன்னதே, பொய்யாகி, தங்கச்சிம்மா, எங்கையாவது உயிரோட இருக்கட்டும். அப்படி இருந்தா, கட்டாயம் உன்னைத் தேடி வருவாங்கடா. " என விஜய ரங்கன் ஆறுதல் சொல்லவும். " நீ சொல்றதைப் பார்த்தா, எங்கையோ மறைச்சு வச்சிருப்பியாட்டத்துக்கு. " எனச் சந்தேகமாகப் பார்த்தவர், விஜயன் முறைக்கவும், " சரி விடு, அப்படியே இருந்தாலும், இந்நேரம் கிழவியாயிருப்பா. இனிமே வந்து என்ன செய்ய. எனக்கு இந்தத் தனிமையே பழகிப் போச்சு. " என்ற ராஜனின் கூற்று ,விஜயனுக்கு அதிர்ச்சி தான்.
" அடேய், தேவதாசாட்டமா, பாரு, பாருன்னு, உருகி, உருகி காதலிச்ச, இன்னவரைக்கும், வேற கல்யாணம் பண்ணிக்கலை , இப்ப இப்படிச் சொல்ற. உன்கிட்டியிருந்து நான் இதை எதிர்பார்க்கலை" என ஆட்சேபிக்கவும்,
" அட நிசத்தைத் தான் சொல்றேன், தனியா இருந்தே பழகி போச்சு. இனிமே, குடும்பம் பொண்டாட்டின்னு எல்லாம் அட்ஜஸ்ட் ஆக முடியாது. அப்பா, அம்மா இருக்கிற வரைக்கும் கடவுள், ஆயுசைக் கொடுத்தா போதும். அதை விடு " என்றவர், " விஜயா, ஆதர்ஷ் ராஜே போஸ்லே , யாருடா. உனக்குத் தான், உன் உடன் பிறப்போட முழு ஃபேமலி ஹிஸ்டரியும் தெரியுமே. இவன் எந்தக் கிளை, எத்தனையாவது வம்சம். பெங்களூர் பார்ட்டிக்கு வந்திருந்தான்" என வினவினார். " அது யாரு, எனக்கும் தெரியலை. பேரு புதுசா இருக்கு. விசாரிக்கிறேன்" என்றார் விஜயன். ஒரு பெருமூச்சோடு, " உனக்கே தெரியலையா , அது சரி ,என்னமோ, பேசனும்னு தான நாடகமாடினீங்க, என்ன விசயம்னு சொல்லு" என்றார் ராஜன். " ஆமாம் உன்கிட்ட என்னத்தைச் சொல்றது" என முணுமுணுக்கவும், " அபியை பத்தி பேசனும்னா, நீ அவனைப் பத்தி கவலைப் படாத. நான் பார்த்துக்குவேன்" என நண்பனின் முகத்தைப் பார்க்காமலே சொன்னவர், " அவன் காதலுக்கு, நானே குறுக்க நின்னுக்குறேன். நீ நல்ல அப்பனாவே இருந்துக்க" என்றும் சொல்லவும், " அவன் யாரையாவது காதலிக்கிறானா என்ன. அதுக்கும் நீ தான் ரோல் மாடலாக்கும் " என வினையமாகவே கேட்டார் விஜயன். " குடும்ப வாழ்க்கையில, என்னை மாதிரி துக்கிரிப் பயலா, தனி மரமா அவனும் நிற்க வேண்டாம். அதிலையாவது உன்னை மாதிரி குடும்பஸ்தனா இருக்கட்டும். நீ அரைக் கவுனு போடுற புள்ளையெல்லாம் பார்க்கிறதை விட்டுட்டுப் போட்டு , நம்ம ஊரு பொண்ணா, நல்ல பொண்ணா, கஸ்தூரி வம்சத்திலையே பாரு" எனக் கடுகடுத்தார் ராஜன். " ராஜா, என்னடா, துக்கிரி, கிக்கிரின்னு பேச்சு. நீ தொட்டதெல்லாம் பொன்னு தான்டா. உனக்கென்டா. பேருக்கு ஏத்த மாதிரி ராஜ்ஜியமே நடத்துற" என விஜயன் சொல்லவும், விரக்தியாகச் சிரித்தவர், " ராணியில்லாத ராஜ்ஜியம் தான். நான் செத்தா" என அவர் தொடரும் முன், " அபசகுனமா பேசாத, நீ நூறு ஆயுசுக்கு நல்லா இருப்ப" என விஜயன் கடிந்து கொள்ள,
" நெருப்புனா வாய் வெந்திருமாக்கும். அடப் போடா. " எனக் குறை பட்டவர், வேண்டுமென்றே மீண்டும், " நான் செத்தா கண்ணீர் விட ஆளுங்களைச் சேர்த்துட்டேன். சாங்கியம் செய்யத் தான் ஆள் இல்லை. நீ பார்த்து முடிச்சு விடு" என்றார் ராஜன். " சை, வாயைக் கழுவு, நாளைக்கு, அத்தையும், மாமாவும் வரும் போதும், இப்படியே பேசி வைக்காத. நொந்து போயிருவாங்க" என விஜயன் அறிவுரை வழங்க, " ஹேய் இங்க பார்ரா, உங்க மாமா, வராறா, என்கிட்ட சொல்லவேயில்லை. " என மகிழ்ந்தவர், நொடியில், " ஐயோ சாமி, ஹிட்லர் வந்தா, அம்மா இங்க தங்க மாட்டாங்களே" என வருத்தமானார்.
" ம்ப்ச்" என ஆட்சேபித்த விஜயன், " இதுக்குத் தான், எங்கப்பா போன் போட்டார். இரண்டு பேருக்கும் வயசாகுதாம் , கொஞ்சம் அனுசரிச்சுப் போவியாம். " என விஜயன் எடுத்துச் சொன்னார். " அவிகளுக்கு, நாமெல்லாம் தேவையில்லடா, அந்தக் கேர் டேக்கரும், அவங்க நாலு ப்ரண்ட்ஸே போதும், அவிக சந்தோஷமாத் தான் இருக்காங்க" எனவும், " அப்புறம் எல்லாரும், கே ஆர் மாதிரி, கோபத்தைப் பிடிச்சுக்கிட்டேவா அலைவாங்க. இருபது வருஷம் கழிச்சு, நிதானமா இருக்கும் போது, இன்னைக்குத் தான இவ்வளவு பேச்சுப் பேசியிருக்க" எனக் குறை படவும். " அடச் சரக்கடிச்சா, மனுசன் உண்மையைத் தான் பேசுவான். அப்போ உன்கிட்ட பேசியிருக்கனா இல்லையா. அப்புறம் எப்புடிரா இருபது வருஷம் கணக்கு வரும்" என ராஜன் வினவவும், " இது ஒரு பேச்சுன்னு பேசு. கள்ளக் காதலியாட்டமா, யாருக்கும் தெரியாமல் உன்னைப் பார்க்க வந்துட்டு போறேன். ஆமாம் ஒரு வாரமா, சத்தியன் போன் போட காணோம். திருந்திட்டியா என்ன" என்றார் ரங்கன். " திருந்தவெல்லாமில்லை. வயசு பொண்ணை , வீட்டில வச்சுக்கிட்டு தண்ணி அடிக்க முடியாதில்ல, என் இமேஜ் என்னாகிறது. அது வேற, பாபா, பாபான்னு உசிரை விடுது. " என ஆந்திராவைப் பற்றிச் சொல்லவும்.
" கேள்வி பட்டேன். அதென்ன ஹாஸ்டெல்ல விடாமல், உன் கூடவே தங்க வச்சிருக்க. உன் மருமகன் வேற ஒரு மார்க்கமா திரியிறான்" என விஜயன் கொக்கிப் போடவும்.
" அதுக்குத் தான் காலகாலத்தில ஒரு பொண்ணைப் பாருன்னு சொல்றேன். இந்தப் பொண்ணு அவனுக்கு சரியா வராது. ஏதோ வில்லங்கமான குடும்பம் போல. அபியால சமாளிக்க முடியாது. அப்பனா,முறையா, அவனுக்கு இந்த ஒரு நல்லதையாவது செய்" என்றவர், "சரி வா போகலாம்' எனக் காருக்கு திரும்பி வர,
" என்னமோ, அவன் விசயத்தில நான் தான் எல்லாத்தையும் முடிவு பண்ற மாதிரி பேசுற. அந்தப் பொண்ணு வேண்டாம்னா, அப்புறம் எதுக்குப் பழக விடுற . புள்ளையையும், கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவ" எனக் குறைபட, நண்பனை முறைத்தவர்,
" எல்லாத்துக்கும் , கூடிய சீக்கிரமே முடிவு கட்டுறேன்" என்ற படி காரை எடுத்தவர், அரை மணிக்குள் தன மில்லை அடைய, " அட , பிளையிட் ஓடுறோம்னு நினைப்ப, மெல்ல போ " எண்ணற்ற நண்பனின் வார்த்தைகளை, அமல்படுத்தும் முன், தன் பங்களா முன் வண்டியை நிறுத்தி, நண்பனை உள்ளே அழைத்தார் கைலாஷ் ராஜன் .
இருவரும் உள்ளே இறங்கிச் செல்லும் நேரம், தாய்மடித் தேடி வரும் கன்று போல், ஆதிரா " பாபா சாப், இது நான் டிசைன் பண்ணது, கைசா ஹை, மஸ்து ஹைனா. ராம் சார், ஒரு தடவை தான் சொல்லித் தந்தார். நான் கேட்ச் பண்ணிட்டேன்" என என ஒரு பேப்பரை கைலாஷிடம் காட்டி, கொஞ்சிப் பேசிக் கொண்டிருக்க , விஜய ரங்கன் உணர்வு மிகுதியில் கண் கலங்கினார்.
" மஸ்துஹை டா, ரஜ்ஜும்மா, படியா மஸ்து." என அவளைப் போலவே பேச்சில் பாராட்டிய கைலாஷ்,
" இதோ ராம் சாரோட அப்பா, என் எதிரி விஜய ரங்கன்" என அறிமுகப் படுத்தவும்,
" உங்க முகத்தைப் பார்த்தா, ஹே, தோஸ்தி , பாடுற ப்ரண்ட்ஸ் மாரி இருக்கீங்க" என்றவள் " நமஸ்தே, அங்கிள்ஜி" எனக் கை கூப்பி, அவர் காலில் விழுந்து எழுந்தாள்.
" உங்க ஆயி மாதிரி தைரியமும், பாபா மாதிரி திறமையும் நிறைஞ்சு வாழணும்" என அவர் தன்னை மறந்து விஜய ரங்கன் வாழ்த்த, முடிச்சிட்ட நெற்றியோடு நண்பனைப் பார்க்க, ஆதிரா, " என் ஆயி, பாபாவை உங்களுக்குத் தெரியுமா, ஆயி அனுப்புனாங்களா, இதுக்கு முன்னாடி, உங்களைப் பார்த்த மாதிரியே இருக்கே" எனத் தனது நினைவு எஞ்ஜினில் தேடுதலை ஓட்டி ஆர்வமாக வினவ, மாட்டிக் கொண்டார் ரங்கன்.
" அபி, அபிராம் சொன்னதை வச்சு வாழ்த்தினேன்" எனச் சமாளித்தவர், " ஆக்சுவலா, உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்" என உண்மையைச் சொன்னவர்,
" நாளைக்கு, உன் பாபாசாபோட, அப்பா, அம்மா வர்றாங்க. " எனவும், " ஓ" என்றவள், "நான், ஹாஸ்டலுக்குப் போயிடவா, பெரியவங்களுக்குத் தொல்லையா இருக்குமே " என ராஜனைப் பார்த்துக் கேட்கவும், "ஆமாம் ஆமாம் , நீ குறும்பு செய்யிற பொண்ணு , இந்த வீடும் சின்னது, உன்னை ஹாஸ்டலுக்கு மாத்திடுவோம்" என ராஜன் கோபிக்கவும் ,
"நஹி, பாபா சாப், நான் அப்படிச் சொல்லலை, நீங்க பெர்சனலா ஏதாவது பேசிக்குவீங்க" என அவள் இழுக்கவும், "ஒரு பெர்சனல் கிடையாது, என்னை ஷாதி பண்ணிக்கச் சொல்லி எங்க அம்மா சொல்லுவாங்க, நீயும் வேணும்னா அவங்களோட சேர்ந்து பொண்ணு பாரு"என அவர் கேலியாகச் சொல்லவும்,
அவர்கள் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த விஜயன், சிரித்தபடி " நீதான், உன் பாபா சாப், அவன் பாபா சப்போட்டா சண்டை போடாமல் பார்த்துக்கணும், அதைத் தான் சொல்ல வந்தேன்" என விஜயன், அவளுக்குப் பெரிய பொறுப்பைக் கொடுக்கவும், " நானா" என முழித்தவள், "அஜோபா, ரொம்பக் கோபப்படுவாங்களா" என்றாள் .
" பாபாசாப் விடக் கம்மியா தான் " என விஜயன் சிரிக்க, "ஓகே" என அவள் சம்மதிக்க, பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment