Tuesday, 25 January 2022

யார் இந்த நிலவு -13

 யார் இந்த நிலவு -13

" ஆயி துல்ஜா பவானி, என்னை எங்கக் கொண்டு வந்து நிறுத்தியிருக்க. எனக்குச் சோதனை வர்றது சரி. என்னை நினைத்த பாவத்துக்கு இவருக்கும் சோதனையைக் கொடுக்காத. அப்பா, அம்மா, தங்கைகள்னு சின்னக் கூட்டில் வசிக்கிறவர். இந்த வம்சத்து வாள் அவர்கள் மேல் பட வேண்டாம்" என மனதில் வேண்டியபடியே, பாதையைக் கூறியவர், வழக்கமாகச் சோலாப்பூரிலிருந்து வெளியேறும் வழியில் இல்லாமல், வேறு வழியாக , இன்று பெல்காம் செல்லும் லோடு வண்டியில் , இவர்களை ஊரை விட்டு வெளியேற்றும் யோசனையில் , பைரவி இருக்க,

" பாரு, இவ்வளவு டென்ஷனாக எதுவுமே இல்லை. அமைதியா வா" எனக் கைலாஷ், ஒரு கையால் காரை ஓட்டியபடி இடது கையால், பாருவின் வலது கரத்தை அழுத்தி தைரியம் தர, மற்றொரு கையால் அவர் கையைப் பற்றிக் கொண்டவர், " பாபா இருக்கும் போதே உங்களைத் துல்ஜா பவானி காட்டியிருந்தால் நல்லா இருந்திருக்கும் ராஜ் " என வருந்தியவர் கண் மூடி கைலாஷின் அருகாமையைத் தன்னுள் பதிய வைத்துக் கொள்ள முயன்றார்.

ஒரு கையாலேயே லாவகமாகக் காரை செலுத்திய கைலாஷ், பாரு கண் அயர்ந்து மோன நிலையிலிருந்த நேரத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, வண்டியை விரட்டிச் சென்று ஒரு மாளிகையின் முன் நிறுத்தினார்.

கண் திறந்த பைரவி, போஸ்லே மாளிகைக்குள் தங்கள் கார் இருப்பதைப் பார்த்து, பதட்டமாக, "இங்க எதுக்கு வந்தீங்க" எனவும், " விஜயா, கீழ இறங்கு" என நண்பனைக் கட்டளையிட, அவரும் இவர்களுக்குத் தனிமை கொடுத்து கீழே இறங்க, அடுத்தக் கணம்,

பாருவை தோளோடு சேர்த்து அணைத்த கைலாஷ். அவர் பக்கம் நன்றாகத் திரும்பி அமர்ந்து கொண்டு, அவர் முகத்தைக் கைகளில் ஏந்தியவர், பதட்டம் நிறைந்து, அலைபாயும் கண்களோடு இருந்தவரை, நேராகப் பார்த்து, தன உறுதியை, தன இணையிடமும் நிறைப்பவர் போல், " இந்தக் கண்ணில், கண்ணீரையோ ,பதட்டத்தையோ பார்க்க எனக்கு விருப்பமில்லை. எப்பவுமே அது வாளின் கூர்மையோடு ,என் நெஞ்சைகிழிச்சு, தன காதலை மட்டும் தான் சொல்லணும்" என அவர் நெற்றியில் இதழொற்றினார்.

பாரு, இது இன்னும் எத்தனை நேரத்துக்கோ, என் தன கண்களை மூடி, கைலாஷை உணர்ந்து கொண்டிருக்க , மூடிய விழிகளின் இமைகளிலும், சாவகாசமாய் இதழ்களை நகர்த்தி, தனது காதலை உணர்த்த, பாருவும் ,அவரை இறுக்கமாகத் தழுவியவர், "நீங்க குடியிருக்க , என் மனசில வேற யாருக்கும் இடமில்லை ராஜ். ஐ லவ் யு. ஆனால் அதுவே உங்களுக்கு ஆபத்தா அமையக்கூடாது, இங்கிருந்து கிளம்புங்க.நான் சமாளிச்சுக்குவேன்" என அவர் மேல் காதல் வழிய , அக்கறையாகச் சொல்லவும்,

நேராகப் பாருவின் கவனத்தைத் தன மேல்குவித்துக் கொண்ட ராஜன் "வாழ்வோ, சாவோ உன்னோட தான். நீயும் அதே உறுதியோட இரு. " என்றவர், தன் கழுத்திலிருந்த, KR என்ற ஆங்கில எழுத்து அடங்கிய தங்கச் சங்கிலியைக் கழட்டி பாருவுக்கு அணிவித்து விட்டவர், வா எனக் கையோடு கை கோர்த்தே இறங்கினார்.

இவர்களுக்கு முன்பே, ஜெயந்த் வீட்டில் வந்து ஒரு ஆட்டம் ஆடியிருக்க, பைரவியின் தாய் ரமாபாய், வாசலையே பார்த்தவாறு, இரண்டாம் கூடத்தில் உலாவி கொண்டிருந்தார்.

போஸ்லே மாளிகை நன்கு நெடிந்துயர்ந்து பல ஏக்கர் பரப்பளவில் கோட்டை போல் கம்பீரமாக நின்றது. முன் வரண்டாவே ஏழு விசாலமான படிகளை ஏறி கடந்து செல்ல வேண்டியிருந்தது. ராஜவம்சம் என்று தங்களை நிரூபித்துக் கொள்வதற்காகவே , அரண்மனை போல் மாளிகையைக் கட்டியிருந்தனர்.

பொதுவாக, கோலாப்பூரில் தான் இவர்களது ஆகி வந்த மாளிகை இருந்தது. சோலாப்பூரில் மில் கட்டும் போதே, இந்த மாளிகையையும் கட்டியிருந்தனர். ஸ்ரீபத்ராய் குடும்பம் இன்னமும் கோலாப்பூரிலிருக்க, கனபத்ராய் குடும்பம் தான் இங்கே வசித்தது. கனபத்ராயின் இரண்டு மனைவிகள், இரண்டு மகள்கள், சகோதரி குடும்பம் எனப் பெண்கள் கூட்டம் தான் அதிகம். ஆனால் மாளிகையை நிர்வகிக்கவே தனியாகக் காரியதரிசி, சமையல்காரர்கள், வேலையாட்கள், தூரத்து உறவினர்கள் என மாளிகை நிறைந்தே இருக்கும்.

கனபத்ராயின் மூத்த மனைவி பிரபா பாய் மராட்டியத்தைச் சேர்ந்தவரெனில், இளையவர் ரமா பாய் தஞ்சையைப் பூர்வீகமாகக் கொண்ட மராத்தியர். அதனால் தான் பைரவியும் நன்கு தமிழ் பேசுவார். பிரபாபாய்க்கு, முதல் பெண்மகள் பவானி பிறந்தவுடன் கர்ப்பப்பை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அதனை அகற்றி விட, ஆண் வாரிசு வேண்டும் என அவரது தூரத்து உறவினரான ரமாபாயை இரண்டாவதாக மணம் முடித்தனர். ஆனால் ரமாபாய்க்கும் ஒரு பெண்குழந்தை மட்டுமே பிறக்க, கனபத்ராய் ஆண்குழந்தை கனவை கை விட்டு, இளைய மகளுக்கே தொழில் கற்றுக் கொடுத்து, தனது மில்லை நடத்தப் பயிற்சி கொடுத்தார்.

மூத்த பெண் பவானியை , வேறு வழியின்றி , சொந்தம் விட்டுப் போகக் கூடாது என அக்காள் மகன் ஜெயந்துக்கே மணமுடித்துக் கொடுத்தார். ஜெயந்த் இளமையில் பணத்தோடும், பகட்டோடும் திரிந்த ஆசாமி. எல்லா விதமான பழக்கங்களும் உண்டு. பவானி , ஜெயந்துக்கு அடங்கிப் போய், இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தாயாகி விட, மாமனின் பாடத்தை மருமகனும் திரும்பப் படித்தான்.ஆண் வாரிசு வேண்டும் எனப் பைரவியை மணமுடிக்கத் துடித்தான்.

ஜெயந்தின் அடாவடித்தனங்களைப் பார்த்த, பைரவிக்கு எப்போதுமே அவனைப் பிடிக்காது. அக்காவுக்காக ரே மாளிகையில் சகித்துக் கொண்டார். தங்கள் மாளிகையிலிருந்தால் தான் அவருக்கான கொடுமைகளாவது கட்டுக்குள் இருக்கும் எனப் பெரிய மகளைக் கனபத்ராய் அங்கேயே வைத்துக் கொள்ள, அக்காள் குடும்பமே வந்து டேரா போட்டது.

இவர்கள் அடாவடித்தனங்களில் மனம் நொந்துபோய், கனபத்ராய் சிக்கலான ஓர் உயிலை எழுதி வைத்து விட்டு, பேரன் பேத்திகள் வரை சொத்தை கொண்டு சேர்க்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டே கண்ணை மூடினார். அதனை அறிந்ததிலிருந்து ஜெயந்த், பைரவியை மணமுடிக்கத் துடித்துக் கொண்டிருந்தான். தந்தை இறந்து ஒரு வருடம் ஆகாமல் மகளுக்குத் திருமணம் முடிக்கக் கூடாது என்ற சம்பிரதாயத்துக்குக் கட்டுப் பட்டுக் காத்திருந்தான்.

ஆனாலும் , ஶ்ரீபத்ராயின் புதல்வர்கள், ஆனந்த், முகுந்த் என இருவரும் ஜெயந்த் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்க, பைரவி அவர்களை ஆதரித்தார். அதில் ஜெயந்தின் பொறுமை எல்லை மீற, பைரவியை வழக்கம் போல மிரட்டவே வந்தான். பைரவி நிமிர்வாக முறைத்து நிற்க, கையைப் பிடித்து இழுத்து அராஜகத்தை அரங்கேற்ற முயன்றான். அந்த நேரம் கைலாஷின் கண்களில் இந்தக் காட்சி பட்டு விட விசயம் வேறு விதமாகத் திசை திரும்பி விட்டது.

கோபத்தோடு மாளிகைக்குச் சென்ற ஜெயந்த், தான் பைரவியிடம் முறை தவறி நடந்ததை மறைத்து, ஒரு தொழிலாளியைக் காதலிக்கிறாள் என மட்டும் பற்ற வைத்து, ஸ்டேட்டஸ் பிரச்சனையைக் கிளப்பி விட்டிருந்தான்.

ரமாபாய்க்கு மூத்த மருமகனின் லீலைகள் அத்தனையும் தெரியும். மகளை இவனிடமிருந்து, எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றே சமயம் பார்த்திருந்தார். தன்னைப் போல் மகளும், இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் படுவதை அவர் விரும்பவில்லை. அதுவும் கனபத்ராயாவது நல்ல மனிதர். ஜெயந்த் எல்லா விதத்திலும் மோசமானவனாக இருக்க, மகளுக்கு ஆதரவாக நின்றார்.

மாளிகை வாசலில் காரை நிறுத்தி விட்டு, தன் மகளைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு, தொழிலாளி சீருடையில் வந்த இளைஞனைப் பார்த்து, ரமாபாய்க்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார். நெடுநெடுவென உயர்ந்து அளவான தேகக் கட்டோடு இருக்கும் இவனெங்கே, ராட்சதன் போல் உடலையும் சேர்த்து வளர்த்து நிற்கும் ஜெயந்த் எங்கே. ஒத்தைக்கு ஒத்தை நின்றாலும் ஓரடி தாங்க மாட்டான். இவ்வளவு படை பலத்துக்கிடையில் என்ன செய்ய இயலும். பைரவி தான் சிக்கியது இல்லாமல் இந்த இளைஞனையும் சிக்க வைத்து விட்டாளே என்ற கோபமே வந்தது. ஆனால் வந்தவன், தான் தனி ரகம் எனக் காண்பித்தான்.

ராஜன் பைரவியோடு படியேறியவர், எதிரில் நிற்பவரை உன் அம்மாவா எனக் கேட்டு, அவர் ஆம் எனத் தலையாட்டவும், நேராக அவரிடம் வந்தவர், பைரவியோடு அவரது கால்களைத் தொட்டு வணங்க, "ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா " எனக் கொங்கு தமிழில் கேட்கவும், " நல்லா இருங்க" எனத் தன்னையறியாமல் தமிழில் வாழ்த்தினார் ரமாபாய்.

ஓர் புன்னகையோடு, நிமிர்ந்து நின்று, அவர் முன் கை கூப்பியவர், " உங்க பொண்ணை நான் விரும்புறேன். இந்த ஜென்மத்தில் எனக்கு மனைவி அவள் மட்டும் தான். உங்களாட்டம் நான் மாளிகையில வசிக்கலைன்னாலும், அவளுக்காக மாளிகை கட்டுவேன். உங்க மகளைச் சந்தோஷமா வச்சுக்குவேன். முறைப்படி கல்யாணம் செய்து கொடுங்க" எனக் கேட்டார். 

ரமாபாய் ஆச்சர்யமாக, அந்த இளைஞனின் பேச்சையும்,அவர் தைரியத்தையும் பார்த்தவர்,மகளை நிமிர்ந்து பார்த்து, "பவி, என்ன இது " எனக் கேட்க, " சரியா தான் கேட்கிறாங்க "எனப் பைரவி தலையைக் குனிந்து, தனக்கும் சம்மதம் என்பது போல் நிற்க , வரிசையாக மாளிகை அங்கத்தினர்கள் அங்கே கூடினர்.

" உனக்கு எவ்வளவு தைரியமிருந்தா, இங்கேயே வந்திருப்ப. எல்லாம் இவள் கொடுக்கிற தைரியம். உன்னைப் போல ஒரு தொழிலாளி ஒரு நாளும் இந்த மாளிகைக்குத் தாமாத் ஆக முடியாது" என ஜெயந்த், ரமாபாயை முந்திக் கொண்டு பேசவும்,

" அதை என் பாருவும், ஐ மீன் பைரவியும், அவ அம்மாவும் சொல்லட்டும்" என்றார் ராஜன். மூத்தவர் பிரபா பாய், இருவரும்,இது என்ன புது வம்பு என்பது போல் பார்க்க, பவானிக்கு, ஒரு ஆசுவாசம் பிறந்தது. ஜெயந்தின் தாய், தந்தை, தம்பி என அங்கே கூடிவிட, ஜெயந்த் குடும்பத்தினர் ஆளுக்கு ஒன்று பேசினர்.

போஸ்லே மில்லில் வேலை செய்யக் கூட அருகதையற்றவனுக்கு அவர்கள் குடும்பத்துப் பெண் கேட்கிறதா. எங்கள் பெருமை தெரியுமா. எங்கள் கழுத்தில் போட்டிருக்கும் ஒரு காந்தானி குடும்ப , பாரம்பரிய நகைக்கு உங்கள் ஊரை விலை பேசுவோம். என இளக்காரமாகப் பேசினர்.

பைரவியும் கைலாஷ்க்கு ஆதரவாக வார்த்தையாட, ரமாபாய் கொஞ்சம் பொறுமையாகப் பேசச் சொன்னார். ஜெயந்தின் தாயும், கனபத்ராயின் சகோதரியுமான அவரது நாத்தனார், " தஞ்சாவூரிலிருந்து ஆளை ஏற்பாடு செஞ்சு தான் கூட்டிட்டு வந்தியா" என ரமாபாயியையும் சேர்த்துக் குற்றம் சுமத்த, " இவ்வளவு நேரம் அந்த யோசனை இல்லை. நீங்க சொன்னதையே நிஜமாக்க வேண்டியது தான்" எனப் பதில் தரவும், ஜெயந் தனது மாமியாரான மூத்தவர் பிரபா பாயிடம், " இந்தக் கேவலம் நடந்தால், உங்கள் மகள் வாழாவெட்டியாவாள்" என மிரட்ட,

" எதுடா கேவலம்" என ராஜன், ஜெயந்தை எதிர்க்க, விஜயன் நண்பனை அடக்கினார். வேலையாட்கள் முன் மற்றொரு தொழிலாளி தன்னை அவமானப் படுத்தியதாக ஆடிய ஜெயந்த், ஆட்களை ஏவி, இவர்களை வெளியேற்ற முயல, சிங்கமெனக் கர்ஜித்த கைலாஷ் ராஜனும் சவால் விட்டார். நிலைமை கை மீறுவதை உணர்ந்த பிரபாபாய், ரமாபாயிடம் மன்றாட , பவானியை நினைவில் கொண்டு, "பைரவி,இது உடனடியா முடிவெடுக்குற விஷயமில்லை, தாவு, தாயியையும் கேட்கணும், இப்போ அவரை அனுப்பி விடு" எனக் கைலாஷை அனுப்பி வைக்கும்படி பைரவியிடம் சொன்னார்கள்.

பைரவி, " ராஜ்,இப்ப கிளம்புங்கள். உங்க பாதுகாப்பு முக்கியம். ப்ளீஸ், பாய்சாப் பார்த்துக்குங்க" என இறைஞ்சவும், " இந்த ஷாதி எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்" என ஜெயந்தும் சவால் விட்டான். அவன் சவாலுக்கு அஞ்சாத கைலாஷ், பாருவின் மன்றாடலுக்குச் செவி சாய்த்து அங்கிருந்து கிளம்பினார். அன்று இரவே, ஜெயந்தின் ஆட்கள் கைலாஷை தாக்க, அதை எதிர் பார்த்தவர், சாட்சி வைத்துக் கொண்டு அவர்களிடம் அடி வாங்கி, கட்டும் போட்டுக் கொண்டார்.

பாரு விசயமறிந்து ஓடி வர, மில்லில் தொழிலாளிகளுக்கு மத்தியில் பாருவை எதிர் கொண்டவர், தன் மீது முதலாளியம்மாவின் உண்மையான அன்பைத் தொழிலாளிகளுக்கும் காட்டி, ஜெயந்துக்கு எதிராகத் தொழிலாளர்களைத் திசை திருப்பினார்.

" சோட்டி குமாரிக்கு என் மேல் இஷ்டம். எங்களை ஆசீர்வதித்து ஒன்றிணைத்தது, ஆயி துல்ஜா பவானி. ஆனால், நான் ஒரு தொழிலாளி என்ற காரணத்துக்காக இவருடைய அக்காள் கணவன் எங்களைப் பிரிக்கப் பார்க்கிறான்" எனக் கைலாஷ், தன்னை அவர்களோடு கூட்டு சேர்த்துப் பேச, அடுத்து வந்த தினங்களில் தொழிலாளர்கள் கைலாஷ்க்கு ஆதரவாக நின்றனர்.

மில் ஸ்ட்ரைக் எனப் பிரச்சனை வரவும், பெரியவர் ஶ்ரீபத்ராய் குடும்பம் உள்ளே புகுந்தது. இதை ஜெயந்த், தொழிலாளர்கள் ஏன் பைரவியே கூட விரும்பவில்லை. ஆனால் ஜெயந்த் படு சாமர்த்தியமாகப் பின் வாங்க, தொழிலாளர் பிரச்சினை சுமூகமாக முடிந்தது.

ஆனால் அவர்களும் பைரவி விசயத்தில், ஒரு சாதாரணக் குடும்பத்து இளைஞனை மணப்பதை ஆட்சேபித்தனர். பைரவி மொத்தமாக எல்லாரையும் எதிர்த்து நின்றார். இந்தக் களேபரத்தில் பத்து , பதினைந்து நாட்கள் ஓடிவிட, அதற்குள் கைலாஷ், சத்தமில்லாமல் ஒரு வேலைப் பார்த்து, பாருவுடனான ரிஜிஸ்டர் மேரேஜை முடித்தார். அவரும் சந்தோஷமாகவே ஏற்றார்.

அப்பா, அம்மாவோடு வந்து முறைப்படி கல்யாணம் செய்து கொள்வதாகக் கைலாஷ் வாக்களிக்க, பைரவி அகம் மகிழ்ந்தார்.

ஆனால் நடுவில் சில நாட்கள் பதுங்கிய ஜெயந் தனது வேலையைக் காட்டத் தயாரானான். பைரவியை ரகசியமாகத் திருமணம் செய்ய ஆட்களை வைத்துக் கடத்தினான். ஆனால் பவானி, இந்த விசயத்தை ரமாபாய் மூலம், கைலாஷிடம் தெரிவிக்க, மாமியார் மருமகன் கூட்டணி அமைத்து, ஜெயந் திட்டத்துக்கு மாற்றாகத் திட்டமிட்டனர்.

ஊருக்கு ஒதுக்குப் புறத்திலிருந்த துர்கா கோவிலில் இரவு திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருக்க, தங்கள் விஷ்வாசிகளோடு, சாதுரியமாக ஜெயந்தை அடித்து, கட்டிப் போட்டு, செஹரா எனப்படும் மல்லிகை மாலைகளால் முகத்தை மறைத்தபடி, கைலாஷ் பாருவை முறைப்படி மணம் முடித்தார். ரமா பாய் மறைந்திருந்து மனமாற ஆசி வழங்கியவர், அவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழவும் ஏற்பாடு செய்தார். விஜயனிடமும், தனது நம்பிக்கைக்கு உகந்த துர்கா ராமிடமும் சந்தன்கட் எனுமிடத்துக்கு இவர்களைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஒப்படைக்க, 

எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என நம்பிக்கை தந்து இங்கேயே எதிர்த்து நின்று சமாளிக்கலாம் என்ற கைலாஷ் ராஜனை, " இப்போ, நிலமை சரியில்லை தாமாத்ஜி. சரியான பிறகு, நானே உங்களை அழைச்சுக்குறேன்" என அனுப்பி வைத்தார்.

ஆனால் அடிப்பட்ட புலியாகச் சினம் கொண்ட ஜெயந்த், கைலாஷை கொல்லத் துணிந்தான். நாலா பக்கமும் ஆட்களை ஏவி, பார்த்த இடத்தில் கைலாஷை சுட்டுவிட்டு, பைரவியைத் தூக்கிவரக் கட்டளையிட, அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி மணமக்களும், விஜயன், துர்கா ராம் காரில் பயணம் மேற்கொள்ள, ஓரிடத்தில் ஜெயந்தின் ஆட்களிடம் மாட்டிக் கொண்டனர்.

துப்பாக்கி பழக்கமில்லாத அடியாள், உத்தேசமாகச் சுட்டதில், குண்டு பாருவை நோக்கி வர, அவரைக் குனியவைத்து, கைலாஷ், தனது வலது தோளில் குண்டை வாங்கிக் கொண்டார். விஜயன் பதட்டமாக வண்டியை நிறுத்த பார்க்க, " காரை நிறுத்தாமல் ஓட்டு விஜயா. எனக்கு ஒன்னுமில்லை" எனச் சோலாப்பூரை கடந்தனர்.

பைரவி, சோலாப்பூர் கடக்கவுமே, பிடிவாதமாக ஒரு மருத்துவ விடுதியில் வண்டியை நிறுத்த சொன்னவர், கைலாஷ்க்கு சிகிச்சையளித்து, மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டே பயணத்தைத் தொடர்ந்தார்.

சந்த்கட் எனும் மலை மேல் அமைந்த, அணைப் பகுதியில், பெரிய ஆடம்பரம் எதுவும் இல்லாத சிறிய ஓட்டு வீட்டில், ராஜனும், ராணியும் அடைக்கலம் புகுந்தனர். ஓரிரு நாட்களில், இவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து , துர்கா ராம் பொறுப்பில் இவர்களை விட்டு விட்டு விஜயன் பெங்களூர் சென்றார். ராஜனும், பாருவும் சந்தன்கட் சென்றடைந்த தினத்தில் ஆரம்பித்த மழை, இரண்டு மாதங்களுக்கு விடாமல் கொட்டி, சந்தன்கட் வரும் வழித்தடத்தையும் துண்டித்தது.

முதல் பத்து நாள், பாருவின் கவனிப்பில், கைலாஷ் தனது குண்டடிக்குச் சிகிச்சை எடுத்துக் கொண்டார். உரிமையான மனைவியாகத் தன் பாரு இருப்பதே பெரும் மகிழ்வு, சொர்க்க வாழ்வு எனத் தாய், தந்தை, சொந்த பந்தம் என அத்தனையும் மறந்து ஒரு தனி உலகில் சஞ்சரித்தார்.

அதிகப்படியான மகிழ்ச்சியும், ஆனந்த வாழ்வும், அடுத்து வரும் காலங்களுக்கு அவர்களுக்கு நினைவுப் பரிசாக மட்டுமே இருந்தது. அந்த இரண்டு மாதங்களின் நிறைவிலேயே தங்கள் வாழ்வைக் கடத்தப் போகிறோம், என அவர்களும் அறிந்தார்கள் இல்லை.

இரண்டு மாதங்களுக்குப் பின், விஜயனிடமிருந்து, கைலாஷ் ராஜனின் அம்மா சௌந்தரிக்கு முடியவில்லை என்ற தகவல் வர, தானும் வீட்டினரோடு பேசி இரண்டு மாதங்களும், அவர்களைப் பிரிந்து ஐந்து மாதங்களும் ஆனதை நினைத்து, பைரவியின் வற்புறுத்தலில் தமிழ்நாட்டுக்குக் கிளம்பினார்.

ஆனால் விதி செய்த சதி, அன்று பருவைப் பிரிந்தது , நிரந்தரப் பிரிவு என்று நினைக்கவில்லை. சொந்த வீட்டில், குடும்பத்தைக் காண மகிழ்ச்சியாக வந்தவருக்கு, பன்னீர் மகள் ராஜியோடு திருமணம் என்ற செய்தி இடியாய் இறங்க, கல்யாணத்தை மறுத்தார். மற்றவர் காரணம் கேட்ட போது சொல்லாதவர், ராஜியை தனியாக அழைத்து, தனக்கும் பாருவுக்குமான திருமணத்தைப் பற்றிச் சொல்ல, அவரிடம் சரி, சரியெனத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விட்டு வந்தவள், தான் மனதில் வடித்தவரை மணக்க இயலாமல் போனதைத் தாங்க இயலாதவராக விபரீதமான முடிவை எடுத்தார்.

கல்யாண வீடு, காரியம் செய்யும் வீடாக மாறியது. பாலநாயகம் மகனை வீட்டை விட்டு வெளியேற்றினார். பித்துப் பிடித்தவராகக் கோவையைச் சுற்றியவருக்கு, விஜயன் மேலும் ஓர் பேரிடியாகப் பைரவி மறைந்த விசயத்தைச் சொன்னார். பதறித் துடித்த ராஜன், சோலாப்பூர் விரைந்தார். பிபி மில்ஸும், போஸ்லே மாளிகையும் சோட்டி ராணி ரமாபாய் மற்றும் சோட்டி குமாரி பைரவி பாய் மறைவை அறிவித்து, துக்கம் கொண்டாடின.

கைலாஷை காணவும், அவர்களது கோபம் அவர் மேல் திரும்ப, எதிர்க்க மனமில்லாமல் அந்த அடியையும் வாங்கிக் கொண்டு மும்பையில் திரிந்தார். சௌந்தரி மகனைக்காணாமல் நிஜமாகவே நோயில் வாட, அம்மா தங்கைகளுக்காக ஊர் திரும்ப முடிவு செய்தார். மும்பையில் ராத்தோட்ஸின் , ஸ்வரனி மில்ஸ் அமரேந்தர் சிங் ராத்தோட், பெங்களூரு பார்டியில் பார்த்த, ரகுவீரின் சித்தப்பா, ராஜனுக்குப் பழக்கமானவர், கோவையில் மில் அமைக்க உதவி செய்ய, கே ஆர் மில்ஸ் உருவானது. சிறிய அளவில் ஆரம்பிக்கப் பட்ட மில்ஸ்,ராஜனின் அசுர உழைப்பால் ,மிகக் குறுகிய காலத்தில், பணம் சம்பாதிப்பதும், தொழில் சாம்ராஜ்யத்தில்,பீபீ மில்ஸ்க்குச் சமமாக வளர்வதும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இன்று பல விழுதுகளைக் கொண்ட ஆலமரமாக நிற்கிறது.

கைலாஷ், தனது அறையிலேயே அமைக்கப்பட்டிருந்த, மதுபான அறையில் மனம் வலிக்க, வலிக்கத் தன் ரணத்தை மீண்டும் கீறிப் பார்த்தவர், பாரு, பாரு என உழலலானார். மது அருந்தி தன்னிலை மறந்த நிலையில் தான், அவரின் பாரு, அவரோடு உறவாடுவதாக, உரையாடுவதாக ஒரு பிரமை. இந்த அற்ப சுகத்துக்காகவே, தான் தொழில் ஆரம்பித்து ஒரு நிலைக்கு வந்த பிறகு, தன் திருமண நாளின் போது , மதுபானத்தைக் காரில் நிறைத்துக் கொண்டு சந்தன்கட் சென்றுவிடுவார். அவர்கள் வாழ்ந்த அதே வீட்டை விலைக்கு வாங்கி, தன் பாருவுக்கான வசந்த மாளிகையாக அதை மாற்றியிருந்தார்.

இவரது இத்தனை ரகசியங்களையும் அறிந்த ஒருவன் உண்டெனில் அது விஜயரங்கன் மட்டுமே. நண்பன் தன்னை ஏமாற்றி, பாருவிடமிருந்து தன்னைப் பிரித்து அழைத்து வந்துவிட்டான் என விஜயரங்கன் மீது தாளாத கோபத்திலிருந்தார் கைலாஷ். எவ்வளவு முயன்றும், பாருவை மறக்க இயலாதது போல், நண்பனையும் மன்னிக்க இயலவில்லை. ஆனால் மதி மயங்கிய நிலையில் கை தானாக விஜயனுக்குத் தான் போன் பறக்கும். அத்தனையும் பொறுமையாகச் சகித்துக் கொள்வார் அவர். ஏனெனில் நண்பனின் காதல் மீது, அவருக்கு அவ்வளவு பெருமை.

கைலாஷ் ராஜன் இன்றும் நண்பனைக் காய்ச்சி, கிளாஸ் டம்ளர்களை விட்டெறியக் கண்ணாடி நொறுங்கும் சத்தம் விஜயனின் தூக்கத்தைக் கெடுத்தது.

" தங்கச்சிமா, ஆள் நிதானத்தில் இல்லை. அவனுக்குப் போன் போடுங்க" எனப் பதினொன்றரை மணிக்கு விஜயன் பைரவிக்குப் போன் அடிக்க, பெருமூச்சோடு, கைலாஷை அழைத்தார் பாரு.

அந்த மதி மயங்கிய நிலையிலும் , அவருக்காகவே காத்திருந்தது போல் " பாரு" என உருக, " என்ன செய்றீங்க ராஜ்" எனக் கோபமாக ஆரம்பித்து, மெல்ல, மெல்லக் கட்டளைகள் இடச் சமத்தாகக் கட்டிலில் படுத்து, " பாட்டுப் பாடு" எனக் குழறினார் கைலாஷ்.

தன் மகளையும் கூடப் பாட்டுப் பாடி தூங்க வைக்காத பைரவி, தன் நினைவில் உருகும் கணவனுக்காகச் சந்தன் கட்டை நினைவில் நிறுத்தி,

" படே அச்சே லக்தேன் ஹை ,

யே தர்த்தி , யே நதியாங் , 

யே ரெய்னா , அவுர் தும்... 

ஹிந்தி பாடலை பாட, தன்னை மறந்த நித்திரையில், சந்தன்கட் அணைக் கட்டின் அருகில், மழையில் நனைந்தபடி ,கனவுலகில் மிதந்தார் கைலாஷ் ராஜ். 

No comments:

Post a Comment