Thursday, 13 January 2022

யார் இந்த நிலவு-11

 

 யார் இந்த நிலவு-11

கைலாஷ், இத்தனை வருடங்களாக யோசிக்கவும் நேரமின்றி வேலை வேலையெனப் பறந்தவர், ஆதிராவை வீட்டிற்கு அழைத்து வரவும் தனது வழக்கமான நடைமுறைகளை மாற்றியமைத்திருந்தார்.

காலை முதல் மாலை வரை பேக்டரி, ஆபீஸ் எனச் சுற்றியலைபவர், தொழில் சார்ந்த கூட்டம், பார்ட்டி என இரவு நேரங்களைப் பொழுது போக்குபவர், எதுவுமே இல்லையெனில் இவரைப் போன்றே இருக்கும் எலைட் க்ரூப் மக்களோடு, தனது கவலையை மறக்க, மதுவும் அருந்தி விட்டு வருவார். சத்தியன் கூடவே இருப்பதால், அவருக்கு டாக்டர்கள் பரிந்துரைத்த லிமிட் தாண்டும் முன் ஏதாவது ஒரு வழி தேடி அவரை அழைத்து வந்து விடுவான். இந்த ஊரில் அவரது மறுபக்கமாக மற்றொரு கடந்த கால வரலாறு ஒன்றிருப்பது யாருக்காவது தெரியுமெனில் அது சத்தியனுக்கும், விஜய ரங்கனுக்கும் மட்டும் தான். எதுவுமே முடியாமல் அவர் எழு மறுத்தால், சத்தியன் விஜயனுக்குத் தான் போன் அடிப்பான். 

அவர் அடுத்த அரைமணியில் வந்து சேர, விஜயனைப் பார்த்த நொடியிலிருந்து அவரைத் திட்ட ஆரம்பிப்பார் கைலாஷ். " சரி வா, கார்ல போயிக்கிட்டே, என்னைப் பேசலாம்" என்றபடி அவரது பங்களாவுக்கு அழைத்து வருபவர், நண்பன் ஆழ்ந்த நித்திரைக்குப் போகும் வரை கிளம்ப மாட்டார். மற்ற நேரத்தில் இருவருக்குமான பேச்சு வார்த்தை கூட இருக்காது, அதிலும் முகத்தைத் திருப்பிச் செல்பவர் கைலாஷ் தான்.

இந்த ஒருவாரத்தில் அதையெல்லாம் ஒத்தி வைத்து , ஆதிராவுடன் நேரம் செலவழித்தார். மாலை நேரங்களில், அலுவல் முடிந்து வரவும், மாலைச் சிற்றுண்டியோடு, அன்று அவள் அபிராமிடம் கற்ற விசயங்களைப் பற்றி அவரோடு பகிர்ந்து கொண்டு சந்தேகங்களைக் கேட்பாள். அவரும் அதற்கான விளக்கங்களைச் சொல்ல, அவர்களது பொழுது சுவாரஸ்யமாகவே கழிந்தது. அந்த நேரத்தில் அபிராம் பற்றியும் பேச்சுக் கொடுத்து , அவள் வாயிலாகவே அவனைப் பற்றிய கருத்தையும் அறிந்து கொண்டார்.

ஒரு நாள் தயங்கி, தயங்கி கௌரி மாஸியிடமும் சொல்லாத உண்மையை , இரண்டு ஆட்கள் தன்னைத் துரத்தியதையும், தான் அபிராம் வண்டி முன் விழுந்ததையும் ஆனால் அவனுக்குத் தன்னை அடையாளம் தெரியவில்லை போலும் என்ற தனது அனுமானத்தையும் ஒளிவு மறைவின்றி அவரிடம் ஒப்பித்தவள்,

 " நான் அவருக்கு நன்றி சொல்லனும், ஆனால் வாலண்டைரா போய் அவரே மறந்ததை ஞாபகப் படுத்தவும், அன் ஈசியா இருக்கு, க்யா கரூங்" என அவரையே யோசனைக் கேட்கவும்,' அவனுக்கா ஞாபகமில்லை, மாமனை மாதிரியே திருடனா இருக்கான்' என மனதில் சிரித்தவர்,

"அவனே மறந்ததை நீ எதுக்கு ஞாபகப்படுத்துற, அப்புறம் உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டான்னா, அப்படி எல்லாம் யாரையும் உடனே நம்பக் கூடாது" என அவர் அறிவுரை வழங்கினார்.

" ஆனால், ராம் சாப் பார்த்தா அப்படித் தெரியலை பாபாசாப்" என அவன் சார்பாகப் பேசியவள்," இவ்வளவு சொல்றீங்க, நீங்க எப்படி என்னை உடனே நம்புனீங்க" என எதிர்க்கேள்வி கேட்கவும், சிரித்தவர், 

"என் வயசுக்கான அனுபவம் இல்லையா, மனுசங்களை எடை போட தெரியாமலா, இவ்வளவு பெரிய பிஸ்னஸ் நடத்துவேன்" எனச் சிரித்தவர், " அதை விட, இப்படி ஒரு தங்கப் பொண்ணைத் தனியா போராட விட்டுட்டு உன் அப்பா என்ன பண்றான். " எனக் கடுமையான வார்த்தைகளால் அவள் தந்தையைச் சாடவும்,

" ஒரு வேளை அவருக்கு, இப்படி ஒரு மகள் இருக்கிறதே தெரியாமல் இருக்கும். " எனக் கண் கலங்கியவளை, " என்னடா சொல்ற, அப்படி எப்படி ஒரு அப்பன் இருப்பான். என்னால இதை ஒத்துக்கவே முடியாது" என்றார்.

சோகமாகப் பார்த்தவள், " அப்படித் தான் பாபாசாப் இருக்கனும், என் ஆயி, பாபாவைக் குறை சொன்னதே இல்லை. எங்க லிபி ன்னு தான் சொல்லுவாங்க "என நெற்றியைக் கோடிட்டுக் காட்டியவள்,

" சரி விடுங்க, ஔர் சே மஹினே, பாபா கிட்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருக்காங்க. அது வரைக்கும் பாபாசா ப்யார்ல நனைஞ்சுக்குறேன் " என்றவளை, வாஞ்சையாக அணைத்துக் கொண்டார்.

நான்கு நாட்களிலேயே ஒரு பெண் பிள்ளை வீட்டிலிருப்பதற்கான தாக்கத்தை ஆதிரா, கைலாஷிடம் ஏற்படுத்தியிருந்தாள். எங்கெங்கு காணினும் சக்தியடா, என்பது போல் வீட்டில் வளைய வந்தவள், அந்த வீட்டின் ஒவ்வொரு விசயத்தையும் ரசித்தாள். 

பித்தளை குவளையில் கடனுக்கு நிரப்பப்பட்ட மலர்கள் கலையழகோடு அடுக்கப்பட்டன. உணவில் உப்புக் காரம் ருசியைத் திருத்தியவள், அவருக்கும் அது பிடித்திருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டாள். பூஜையறையில் விளக்கேற்றி காலை மாலை துல்ஜா பவானி துதி பாடப்பட்ட போது, கைலாஷ் பழைய நினைவில் உணர்ச்சி வயப்பட்டுப் போனார்.

இரவு உணவுக்குப் போனில் பேசிக் கொண்டு, கணினியில் மும்மரமாக இருந்தாரெனில் அவருக்காகச் சாப்பிடாமல் காத்திருப்பாள். அவர் சாப்பிடச் சொல்லி சைகை காட்டினாலும் மறுத்து விடுவாள். அதனால் அவசரமாகப் பேச்சை முடித்துக் கொண்டு வந்து, இருவருமாகப் பேசியபடி சாப்பிட, இருவருமே நன்றாகச் சாப்பிட்டார்கள்.

அன்று சாப்பிட்ட பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்கையில், "பாபாசாப் நான் ஒன்னு கேட்கட்டா" என்றாள், அலுவலகச் சம்பந்தப்பட்டதோ என , "என்னடா" என்றவரிடம், " நீங்க ஏன் ஸாதி செஞ்சுக்கலை. இப்பவே இவ்வளவு ஹேண்ட்சம்மா இருக்கீங்க. அப்ப இன்னும் சார்மிங்கா இருந்திருப்பீங்களே, உங்களை யாரும் லவ் பண்ணலையா" எனவும் சட்டெனச் சிரித்தவர்,

" தாங்க்யூ ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட் ரஜ்ஜும்மா. நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் வரமே! அந்த இரண்டு வரமும் எனக்குக் கிடைச்சது " என்றவர்,

 " நீ கேட்டியே, உன்னை எப்படி நம்பினேன்னு, ஏன்னா முதல் முறை நீ இன்டர்வ்யு தரும் போது, துல்ஜா பவானி துதி சொன்னதிலிருந்து, ஒவ்வொரு அசைவிலையும் நீ என் பாருவை ஞாபகப்படுத்துற. பாரு என் உயிரில் கலந்தவள், அந்த முகத்தை நம்பாமல் எப்படி இருக்க முடியும். பாருவை தான் தொலைச்சிட்டேன். அவள் ஜாடையிலிருக்க உன்னை என் பக்கத்தில் வச்சக்கனும்னு ஆசை வந்தது. நேரில் பார்க்கத் தான், ஆபீஸ்க்கு வரச் சொன்னேன். அப்பவே உனக்கான அப்பாயிண்மெண்ட் ஆர்டர் ரெடி " என்றவர், தானாக யாரிடமும் சொல்லாத தன் வாழ்க்கை புத்தகத்தின் பழைய பக்கங்களைப் புரட்டி, பாருவின் அம்சமாகப் பார்க்கும் ஆதிராவிடம் பகிர ஆரம்பித்தார்.

ஆதிராவும் ஷோபாவில் அவர் பக்கம் திரும்பி அமர்ந்து, குசனை மடியில் வைத்து , அவர் கையைப் பற்றியவாறு, அவர் முகத்தை ரசனையோடு பார்க்க, " என்னடா படம் பார்க்கிறமாதிரி உட்கார்ந்து இருக்க" என ஓர் சிரிப்பை உதிர்த்தார். , " பாபாசாப், கஹியே னா, பாரு' ன்னு சொல்லவுமே, யூ லுக் ஸோ ரொமாண்டிக் " என மகள் சொல்லவும், இந்த வயதிலும் , இத்தனை வருடங்கள் கழித்தும் ஒருவர் தன் இணையை நினைக்கவும் இவ்வளவு உருக முடியுமா என ஆதிராவுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

அதிலும் அவர் தான் பாருவின் சாயல் என்ற பொழுது, இவருடைய இந்தக் காதலைப் பெற, அந்த ' பாரு' எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும், என்றும் ஒரு பெண்ணாக லேசான பொறாமையும், தன்னையும் இப்படி யாராவது உருகிக் காதலிப்பார்களா என்ற ஏக்கமும், அப்படி நினைத்தவுடன் " என் வைஃபை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போறேன் " என அந்த ஆட்களை மிரட்டிய ராமின் முகமும் நினைவில் வந்தது. ஒரு நிமிடத்தில் தறி கெட்டு ஓடிய நினைவை கைலாஷின் வார்த்தைகள் வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது.

" ஆயி துல்ஜா பவானி, நீ வணங்குற அம்மன், அந்த ஆயி தான் என் பாருவையும் என்கிட்ட கொண்டு வந்து சேர்த்தது" என்றவர், அன்னையின் சன்னதியில் பாருவைப் பார்த்ததை வர்ணித்தார். 

"பூரண நிலவை ஒத்த பிரகாசமான அந்த முகத்தில் பிறை நுதல் னு எங்க மொழியில் நெற்றியை சொல்லுவாங்க, அந்தப் பிறைநுதலில் , அரைச் சந்திரனைத் திலகமாக வச்சிருந்தா. கூர்நாசி, அதிலே ஒரு மூக்குத்தி- நத் . அழுத்தமான அதரங்களில் அவளது முத்துப் புன்னகையை மறைச்சு வச்சிருந்தா,அவளது கண்கள், ஆயி பவானியின் வாளின் கூர்மை, அந்த வீச்சுலையே இந்த இதயத்தைக் கொள்ளையடிச்சிட்டா. " எனப் பாருவின் நினைவில் தன்னை மறந்து இருந்தவர், 

" முதல் பார்வையிலையே ஓர் பிரம்மிப்பு , எனக்காக இறங்கி வந்த ராஜகுமாரியோன்னு ஆச்சரியம். இத்தனைக்கும் அந்த நாளில் அவள் வேதனையைச் சுமந்து ஒரு கோரிக்கையோடு தான் அங்க இருந்திருக்கா. அதற்கான தீர்வு நான் தான்னு, ஆயி பவானி காட்டினாளாம்" என முதல் சந்திப்பிலேயே அவர் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.

" இரண்டாவது முறை எங்க சந்திச்சிங்க பாபாசாப்" என அவள் தூண்டவும்,

" அது தான்டா ஆச்சரியம். நானும், என் ப்ரெண்டும், அப்ப சோலாப்பூர்ல ஒரு மில்ஸ் ல புதுவகைப் பவர் லூமை பற்றித் தெரிஞ்சுக்கிறதுக்காக வேலைக்குச் சேர்ந்து இருந்தோம். அங்க தான் அவளை அடுத்த முறை பார்த்தேன்" என மலரும் நினைவுகளுக்குச் சென்றார்

கைலாஷ் தனது தந்தையுடன் தொழிலைப் பார்த்து வந்தவருக்கு, படிப்பின் ஆர்வத்தால் , புதிய டெக்னாலஜிகளைப் பயன்படுத்தி இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற பேராவல் இருந்தது. அவரது தேடலும் அதைத் தொடர்ந்தே இருக்க, அதனைப் பற்றி அறியப் பணமோ, காலமோ, உழைப்போ போட தயங்க மாட்டார். அதன் படி இருபத்தியோரு வருடங்களுக்கு முன், அபிராமின் தந்தை விஜய ரங்கனோடு சோலாப்பூர் சென்றார்

அப்போதே நாற்பதாண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக நடத்தப்பட்ட பிரசித்திப் பெற்றது பிபி மில்ஸ். இப்போது போல் அல்லாமல் இந்தியாவில் டெக்னாலஜி முதலில் வந்து அறிமுகமாவதும், உபயோகிப்பதும் பாம்பே காரர்களாகவே இருக்க, அதனருகில் உள்ள மில்களே அசுர வளர்ச்சியும் கண்டு நின்றது. அப்படி நின்ற மில்களில் ஒன்று தான் "பிபி மில்ஸ் "

பிபி மில்லில் வளாகத்தில் தான், கைலாஷ் தான் கோவிலில் சந்தித்த பாருவை இரண்டாம் முறையாகப் பார்த்தார். அதுவும் தனக்கு மேலதிகாரியாக, தொழிலாளர் நலன் காக்கும் ஹெச், ஆர் மேனஜராகப் பார்க்கவும், தானாகப் போய்ப் பேசக் கிளம்பிய ஆர்வத்தை, விஜயன் அருகிருக்கவும் குறைத்துக் கொண்டார். ஆனால் பாருவின் பார்வையில் ஓர் ஆச்சரியம். ஆனாலும் அவளும் வேறு எதுவும் பேசாமல் தன் வேலையைப் பார்க்கச் சென்று விட அடுத்தச் சந்திப்புக்கான காரணத்தைத் தேடினார் கைலாஷ். அதுவும் அடுத்தத் தினமே நடந்தேறியது.

" கோவில்ல பார்த்தப் பொண்ணுன்னு ,இங்கையான்னு எனக்கு ஒரே ஆச்சரியம். அதுலையும் அன்னைக்குப் பார்த்ததை விட இன்னைக்கு இன்னும் மிடுக்கா, ராணி மாதிரி இருந்தா. வொர்க்கர்ஸ்க்கு ஏதாவது குறை இருக்கான்னு விசாரிக்க வந்தாலாம். கண்ணில் ஒரு ஆளுமையோட, சிநேகமும் இருந்தது. வரிசையா ஒவ்வொருத்தர்கிட்டையா பேசிட்டே வந்த அம்மணி , நானும் என் ப்ரெண்டும் இருந்த இடத்துக்கும் வந்துச்சு. சரி நம்மளை எங்க ஞாபகம் இருக்கப் போகுதுன்னு, நான் கட்டுப்படுத்திக்கிட்டு நின்னேன்." என்றவர் கண்களில் ஓர் ரசனையோடு அதே காட்சியைக் காண்பது போல், பாவனை.

" பாருவோட அந்தப் பார்வை, நேரா ஹார்ட் டச்சிங் தான். ரொம்ப நாள் பழகினது போல, நீ இங்க தான் இருக்கியாங்கிற மாதிரி, என்னோட பேசினது. அதுக்கப்புறம் என்னை ஆராயும் பார்வை. அம்மணியும் ஆர்வமா பார்க்குதேன்னு எனக்கு மனசுக்குள்ள ஒரே பரபரப்பு தான். யூனிபார்ம் ல இருக்கமே, ட்ரெஸ் கசங்கி இருக்கோ, தலை கலைஞ்சு இருக்கோன்னு , இன்னைக்கு ஷேவ் பண்ணலையே தாடி இருக்குமோ, நம்ம அவ கண்ணுக்கு எப்படித் தெரியுறமோன்னு ஒரே பரபரப்பு. " என டீன் ஏஜ் பையன் போல் அவர் சொல்லவும் , ஆதிரா சிரித்து விட்டாள்.

 " ஜெண்ட்ஸும் இப்படி எல்லாம் யோசிப்பீங்களா " என ஆச்சர்யமாகக் கேட்டவள் ,'அபிராமும் இதே போலச் செய்வானோ " என இரண்டாம் முறையாக அவரோடு ஓப்பிட்டது, பாபாசாப் பார்வை தன்னைத் துளைப்பதை கண்டு,

" சும்மா கேட்டேன், உங்களுக்கென்ன பாபாசாப், அவுங்க ராஜகுமாரின்னா, நீங்க ப்ரின்ஸ் மாதிரி சார்மிங்கா தான் இருந்திருப்பிங்க" என்றாள் . அவர் ஹாஹாவெனச் சிரித்தவர், 

" பாருவுக்கு நான் அப்படி எல்லாம் தெரிஞ்சனோ இல்லையோ, அவளுக்குச் சில நம்பிக்கைகள் உண்டு. அதைப் பிடிச்சிக்கிட்டு தான் என்னை ஏத்துக்கிட்டா. " என்றவர் மனதில்

 ' அவளோட அந்த நம்பிக்கை ஏன் அவளைக் காப்பாற்றலை. ஆயி துல்ஜா பவானி உன்னைத் தானே நம்பினாள். இன்னைக்கும் அவள் இருந்திருந்தா, இந்த ரஜ்ஜும்மா மாதிரி நமக்கும் ஒரு பொண்ணு இருந்திருக்குமே. உரிமையா என்னை அப்பான்னு கூப்பிட்டு இருக்குமே ' எனப் பவானி அம்மனை கேள்வியால் துளைத்துக் கொண்டுருக்க, இரண்டு மூன்று முறை பாபாசாப் என அழைத்தும் அவர் நினைவுகளில் தொலைந்திருக்க ,

 " அப்பா, உங்க ரஜ்ஜும்மா எதிர்த்தார் போல உட்கார்ந்து இருக்கேன்" எனக் கைலாஷை உலுக்கினாள். அவர் வார்த்தைகளில் மீண்டவர், அவளை வாஞ்சையாகப் பார்க்கவும்,

" பாருவை சொல்லிட்டு இருந்தீங்க. அவுங்களோடவே காயப் ஹோ கயி(காணாமல் போயிட்டிங்க). அவங்களைப் பற்றிப் பேசும் போது, உங்க கண்ணில் கித்னா ப்யார் , ஷீ இஸ் கிப்ட்டட். " என்றவள், " உங்களைப் பார்த்து என்ன சொன்னாங்க" என ஒரு காதல் கதை பார்ப்பது போல் அவள் ஆர்வமாகக் கேட்டாள்.

நகைத்த கண்களோடு ,கன்னங்கள் பளபளக்க கைலாஷ் , " அவள் எங்க என்கிட்ட பேசினா, பக்கத்திலிருந்த விஜயனைத் தான் விசாரிச்சா. எனக்கு ஒன்லி லுக் தான்" எனவும், " போங்க பாபாசாப், அதுக்கே நீங்க இவ்வளவு பில்டப் குடுக்குறீங்க" என அவள் ஏமாற்றமாகச் சொல்லவும்,

" அப்படி இல்லடா ரஜ்ஜும்மா, இரண்டு பேர் மனசால நெருங்கி இருக்கும் போது, நீ முன்னப் பின்ன பேசலைனாலும், ஒரு பீல் இருக்கும். அங்க பேச்சுக்கே அவசியமில்லைடா." என விளக்கவும்,

" மஸ்து, படியா மஸ்து, நீங்களாவது பேசுனீங்களா" எனக் கேட்டாள் ஆதிரா.

" இப்ப தான் நீயே சொன்னியேடா, அப்பா ப்ரின்ஸ் சார்மிங்க்னு, அதே கெத்தோட தான் நின்னனாக்கும். " என அவர் தற்பெருமை பேசவும், அடுத்து என்பது போல் அவள் பார்க்க, " வெளியில தான் கெத்துக் காட்டினேன். உள்ளுக்குள்ள ஒரு பயம் தான். அம்மணி வேற மிடுக்கான ஆளு. பார்த்தாளே பெரிய இடம்னு தெரிஞ்சது. அப்படியே மெயின்டைன் பண்ணிட்டேன். " என்றவர் .

" பேசலை, பழகலை ஒன்னும் பண்ணலை. இப்படியே ஒரு மாசம் ஓடிச்சு. தினமும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்குவோம். போகும் போது இலேசா தலையைத் திருப்பி ஒரு ஸ்மைல், அதுலையே அப்பா அவுட்டாகிட்டேன் " என அவர் இதயத்தைத் தொட்டுக் காட்டவும், ஆதிராவும் அவரது காதலை உணர்ந்தாள்.

"ஆனால் என் பாருவை , ஒருத்தன் மிரட்டினதைப் பார்க்கவும் வந்துச்சுக் கோபம், போய் அவன் சட்டை பிடிச்சுட்டேன். " எனவும் " ஓ காட், யாரது " என விவரம் கேட்டாள் ஆதிரா.

" அங்க தான் பிரச்சனையும் ஆரம்பிச்சது. ஏன்னா நான் சட்டையைப் பிடிச்சது, பாருவோட அக்கா புருஷனை. நீ யாருடா அதைக் கேட்கிறதுக்குன்னு அவன் மராட்டியில் கத்தினான். திரும்பி நானும் கத்தினேன், எல்லாரும் ஸ்டன் ஆயிட்டாங்க. " என்றார் கைலாஷ்.

" அப்படி என்ன பாபா சொன்னீங்க" என ஆதிரா ஆவலாகக் கேட்டாள்.

" நான் அவள் புருஷன், துல்ஜா பவானி கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு சொன்னேன்" எனச் சாவகாசமாகச் சொன்னார்.

" பாரு , என்ன சொன்னாங்க." எனவும் " அமைதியா தலையைக் குனிந்து நின்னவ, கையை நீட்டி கண்ணாடி வளையலை காண்பிச்சா. அது அன்னைக்கு என் பூஜை தட்டிலிருந்து, அவளோட பூஜை தட்டில விழுந்தது. அந்த ஆள் ஏதோ கத்திட்டுப் போயிட்டான். பாரு என்னைப் பார்த்தவ, வாங்கன்னு கூட்டிட்டுப் போனா. அவள் கூடப் போன பிறகு தான் தெரிஞ்சது. நான் சூடான தோசை கல்லுல நட்ட நடுவில் கை விட்டுருக்கேன்னு. " என்றார்.

கைலாஷ்க்கே அதிர்ச்சி தந்த இந்தப் பாரு யார்.

நிலவு வளரும்.


No comments:

Post a Comment