யார் இந்த நிலவு -12
கைலாஷ் ராஜன், பாருவைப் பற்றிப் பேச ஆரம்பித்த நேரம், சோலாப்பூர் மில்காரர்கள் மற்றும் ஆதிரா பிகே பற்றியும் துப்பறியச் சொல்லியிருந்த, டிடெக்டிவ் ரஞ்சனிடமிருந்து " ஷெல் வீ டாக் நௌ" என மெஷேஜ் வரவும். அவசரமாக எழுந்தவர், " ரஜ்ஜும்மா, முக்கியமான போன்கால். மீதிக் கதையை நாளைக்குப் பேசுவோமே" எனக் கண்களால் ஒரு எஸ்க்யூஸுடன் கேட்கவும்,
" பாபாசாப்" என லட்டைப் பறிகொடுத்த குழந்தை போல, அவள் முகம் வாடியபடி ஆட்சேபிக்க, ",இந்த அரைகிழவன் லவ் ஸ்டோரில, அப்படி ஒன்னும் பெரிசா ரொமான்ஸ் இல்லை கண்ணு. ஏன்னா என் பாரி, சரியான ஸ்ட்ரிட் ஆபீஸர். அதுக்கு நீ வெப் சீரிஸே பார்க்கலாம்" என அவர் சிரித்தபடி அவள் தலையை வாஞ்சையாகத் தடவ,
" உங்க பாருவும், என் ஆயி மாதிரி தான் சொல்லுங்க. ஆல்வேஸ் வெரி ஸ்டிரிக்ட், லேகின் ஆப் கே ஃபீலிங்க்ஸ் கோ தேக்னே மே மஸ்து ஹை பாபாசாப் " என , ஆதிராவும் அதை உணர்ந்தவளாகக் கண் மூடி, கைலாஷின் பாருவுக்கான உணர்வுகளை, உணர்ந்து சொல்ல,
" உங்க ஆயி எப்படின்னு எனக்குத் தெரியாதுபா . ஆனால் முல்கி தோ படியா மஸ்து ஹை." எனக் கண்களால் சிரித்து ," ஒரு வேளை உங்க அப்பா, ரொமான்டிக் ஆளோ, ரஜ்ஜும்மா கண்ணுளையே ரசனை தெரியுதே.இல்லை இதுக்கும் மேலஏதாவது இருக்கா.." என மகளின் உணர்வுகளைச் சிலாகித்துச் சந்தேகமாக வினவவும்.
அப்போது தான் ஆந்திராவின் மூடியிருந்த கண்களுக்கும் அபிராம் சிரித்து விட்டுச் சென்றிருக்க, அதில் சிவந்தவள், பாபா சாப்பின் கேள்வியும் அவள் நிலையைத் தெள்ளது தெளிவாக உணர்த்த , சட்டெனத் தன்னிலையடைந்தவள், " நஹி தோ. இது உங்க லவ் ஸ்டோரிக்கான ஃபீலிங் தான். " எனத் தன்னை மறைத்தவள், " ஓகே பாபாசாப் குட் நைட் " என அவசரமாகச் சொல்லவும்.
" அச்சா ஹை ரஜ்ஜும்மா, ஆனால் இந்தக் காதல் நம் மனசைத் தொடும் போதே, கள்ளத்தனத்தையும் சேர்த்து கூட்டிட்டு வரும். அது காதலை மறைக்க ட்ரை பண்ணும்,ஆனால் இந்த முகம், அசடு வழிந்தே ,அதைக் காட்டிக் கொடுத்திடும். அனுபவஸ்தன் சொல்றேன்." என ஒரு நகைப்போடு சொல்லிவந்தவர், கண்கள் எங்கோ நிலைக்குத்தி நின்று , பின்னர் ஓர் பெருமூச்சோடு , " நீ இதில எல்லாம் மாட்டிக்காதடா. கடவுள் உனக்குச் சந்தோஷத்தை மட்டுமே தரட்டும்" எனச் சீரியராகப் பேச்சை நிறுத்தினார்.
அவர் கைகளைப் பற்றிக் கொண்டவள், " பாபாசாப், ப்யார் ஏக் வர்தான் னு (நேசிக்கப்படுவது ஒரு வரம் ) சொன்னிங்க. துல்ஜா பவானி அந்த வரமெல்லாம் எனக்குத் தரமாட்டா. பாபா வோட ப்யார் கிடைக்கவே நான் தகுதியில்லாதவன்னு தானே,அவங்கள்ட்ட இருந்தே என்னைப் பிரிச்சு வச்சிருக்கா" என ஆதிரா கண் கலங்கவும், கைலாஷ் கண்களிலும் அதே உணர்ச்சி பெருக்கு.
அவளைத் தன் கைவளைவுக்குள் அழைத்து , அணைத்து உச்சி முகர்ந்தவர், "இந்த அருமையான மகளோட பாசத்தை அனுபவிக்காம இருக்கும் , உன் அப்பன் தான்டா வரம் கிடைக்காதவன். உனக்கு எல்லா வரமும் கிடைக்கும். இந்தப் பாபாசாபுடைய ஆசீர்வாதம்" என உருகி கைலாஷ் ராஜும் அவள் நெற்றியில் முத்தமிட , தற்போதே கிட்டியது போல் ஆந்திராவுக்கும் ஓர் மனநிறைவு.
அவள் பெருக்கிய கண்ணீர் அவர் சட்டையை நனைக்க, "ரஜ்ஜும்மா, அழக்கூடாது. உன் அப்பா, வரும்போது வரட்டும். இனிமே இந்தச் சாப் சொல்றதை கட் பண்ணிட்டு, பாபான்னே கூப்பிடு. உங்க ஆயிக்கு போன் போடு. இந்த மகளை, எனக்கே தத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்கிறேன்" என அவர் படபடப்பக்கவும்.
அழுகை மாறி சிரித்தவள், " நீங்க சொன்னதே போதும் பாபாசாப், இன்னும் ஒரு ஆறு மாசம் என் பாபாவுக்காக நான் காத்திருக்கேன். " எனப் புன்னகைத்தவள், " நாளைக்குக் கட்டாயம் உங்க லவ் ஸ்டோரியைச் சொல்லனும்" எனக் கன்டிசன் போட, இருவரது அலைபேசிகளும் ஒலி எழுப்பியது. "ஆயி" என வாயசைத்தவள், அவர் கேளு எனச் சைகை காட்ட, ஆயி கொண்ணுடுவாங்க, என அவளும் சைகை செய்து விட்டுச் சிரித்துக் கொண்டே " குட்நைட் பாபாசாப்" எனத் தனது அறைக்கு ஓடிவிட்டாள்.
கைலாஷும் தனது அறைக்குச் சென்று " யெஸ், மிஸ்டர் ரஞ்சன்" என அவரது அறிக்கையின் சாரத்தைக் கேட்கத் தயாராக,
" ஆதர்ஸ் ராஜே போஸ்லே, தனக்கும் பிபி மில்ஸ்ல உரிமை இருக்குன்னு, அதிரடியா உள்ளே நுழைஞ்சு இருக்கார் சார். அவருடைய டீடெய்ல்ஸை, ரொம்பக் கான்பிடென்சியலா வச்சிருக்காங்க. சொல்லப் போனால், பிபி மில்ஸ், உரிமை போராட்டத்தில் புதிசா குதிச்சிருக்கச் சிங்கக் குட்டி. லண்டன்ல தலைமறைவா வளர்த்திருக்காங்க. சோட்டி மகாராணி வாரிசுன்னு சொல்றாங்க. " என்றவர், ஆதிரா பற்றியும் மேலும் சிலவிசயங்களைச் சொல்லி, " மற்ற டீடைல்ஸ், உங்களுக்கு அனுப்புறேன் சார். " எனப் புதிரான விசயங்களில் பாதியை அவிழ்த்து விட, கைலாஷ் அதிலேயே தாக்கப்பட்டவராக, தனது அறைக்குள் நடந்தார்.
" சோட்டி மகாராணி வாரிசுன்னா? சோட்டி ஆயி ரமாபாய். ரமாபாய் வாரிசுன்னா பாரு. பாரு, தான் இல்லையே. வாரிசு எப்படிச் சாத்தியம். ஆனால் அந்த மீசைக்காரன் ஜெயந்த் , சொத்துக்காக எதுவும் செய்வான். பாருக்கிட்ட அத்துமீறியிருப்பானோ. செய்யக் கூடியவன் தான், பாரு வளையலை காண்பித்த பிறகு, அதைப் பொய்யாக்க கட்டாயக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சவனாச்சே. நானும் இல்லாத நேரம் அவளைச் சிதைச்சிட்டானோ, அதுனாலதான் பாரு உயிரை விட்டாளா. " எனப் பலவிதமாக அவர் கற்பனை தறிகெட்டு ஓட, மனம் அதற்கு மேல் பாடாய்ப் படுத்தியது. அதிலிருந்து விடுபட எண்ணியவராக, தனது அறைக் கதவைப் பூட்டிவிட்டு, மதுபான அறைக்குள் சென்றார்.
அது ஒன்றே அவருக்கு ஆறுதல், மனம் உச்சபட்சமாகக் கனக்கும் போதெல்லாம், அதுவும் குறிப்பாகப் பாருவுக்கு, குங்குமமிட்டு, முறையாகத் தன் மனைவியாக ஏற்ற நாட்களின் நினைவில், வருடத்தில் இரண்டு நாள், மகாராஷ்டிராவில் உள்ள சந்தன்கட் சென்று விடுவார். உலகை மறந்து, தன்னை மறந்து மயங்கிக் கிடக்கும் நாட்களில், தன் பாருவே வந்து, தன்னை மடி தாங்குவதாக அவருக்கு நினைப்பு.
இன்றும் அதே போல, தன்னிலை மறக்கும் வரை, மது அருந்தியவர், அதிலேயே உழல, அவரின் நினைவுகளில் பாரு சஞ்சாரிக்க ஆரம்பித்தார்.
சோலாப்பூர் பிபி மில்ஸ்ல், அலுவலகப் பகுதியில் வாட்டசாட்டமான மீசைக்காரன் ஒருவன் வரம்பு மீறி பாருவிடம் வாக்குவாதம் செய்து, கையை இழுக்கப் போக, வழக்கமாக டீ குடிப்பது போல் பாருவை பார்த்து வரச் செல்லும் கைலாஷ்க்கு அந்தக் காட்சியே இரத்தக் கொதிப்பைத் தந்தது. வேகமாக அங்கே விரைந்தவர், மீசைக்காரன் கையைத் தட்டி விட்டு, பாருவை மறைத்து நின்று கொண்டார். பாருவும் முதலில் கோபமாக முறைத்துக் கொண்டிருந்தவர், இப்போது இவருக்குப் பின்னால் பதட்டமாக, " ராஜ் நஹி" என மெல்லிய குரலில் சொல்ல, " ம்ப்ச்" என ஒரே சத்தத்தில் அவரை அடக்கியவர், ஆஜானுபாகுவாக நின்ற மீசைக்காரன் கையை வலுக் கொண்டு பற்றி, " பொண்ணுங்கட்ட பேசற முறை தெரியாதா உனக்கு. " எனக் கடுமையைக் காட்ட, அதில் வெகுண்டவன், " நீ யாருடா, அதைச் சொல்றதுக்கு. எனக்கு உரிமையானவள். நான் அவளைக் கல்யாணம் செய்யப் போறவன்" என அந்த ஆள், தன் பலத்தைக் காட்டி, ராஜனைச் சாய்த்து விட்டு, பாருவை இழுத்துச் செல்ல முயன்றான்.
" நான் அவள் புருஷன்டா பேவகூஃப். சட்டப்படி அவள் என் மனைவி" என ஒரு போடு போட்டார் கைலாஷ். மீசைக்காரன் அதிர்ந்தவனாக, பாருவிடம் மராட்டியில் கத்தி ஏதோ கேட்க… பாருவின் பதட்டமான முகம், கைலாஷின் வார்த்தைகளால் வியப்போடு மென்னகை தத்தெடுத்து. கண்களில் சவாலோடு, ராஜைப் பார்த்துக் கொண்டே,
" ஹாங், யே மேரே பதி ஹை. துல்ஜா பவானி மந்திர் மே, ஷாதி கீ. இஸ்கா சபூத்" என, அம்ம இவர் தன கணவன் என்றும் , தான் தூஜா பவனி கோவிலில் அவரை மணந்து கொண்டதாகவும், அதற்குச் சாட்சியாகத் தனது கண்ணாடி வளையல்களையும் தூக்கிக் காண்பிக்க, மீசைக்காரன் அதிர்ந்து மேலும் வசை பாடி, " சோடூங்கா நஹி. ஆஜ் இஸ்கா, ஃபல்ஸ்வரூப் தேகோகி" எனக் கர்ஜித்து விட்டு வெளியேறினான்.
கைலாஷ் அவள் புறம் திரும்பிப் பார்த்தார். " தமிழ்நாட்டு மருமகளா வர்றதுக்கு, ரெடிங்களா மகாராணி" எனக் கேலியாக வினவ,
" தமிழனுக்கு மனைவின்னா, தமிழ்நாட்டு மருமகள் தானே" எனப் பாருவும் தமிழில் பதில் தர, கைலாஷ்க்கு இன்ப அதிர்ச்சி.
" பாரு, உனக்குத் தமிழ் தெரியுமா. அய்யோ சாமி, இருந்த ஒரு கவலையும் போச்சு" என அவர் சந்தோஷப் படவும்,
" இப்போ அது தான் ரொம்ப முக்கியம், அது யாரு பாரு" என உரிமையாகக் கோபித்தார் பாரு.
" ஏன் , நீ தான். நான் உன்னை அப்படித் தான் ,என் மனசில் வச்சிருக்கேன்" எனவும், " ஹே, ஆயி பவானி, இப்படி ஒருத்தரைத் தான் நீ எனக்குன்னு அனுப்பனுமா" எனப் புலம்பியவர்.
" நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா. இப்ப யாருக்கிட்ட மோதுனீங்கன்ன உங்களுக்குத் தெரியுமா. அவர்கிட்ட மராத்தியில் என்ன சொல்றம்னு புரிஞ்சு தான் சொன்னீங்கன்னு, அடுத்து என்ன பிரச்சனை வரப் போகுதுன்னு உங்களுக்குத் தெரியுமா" என அவர் வரிசையாகக் கேள்வியை அடுக்கினார்.
" நீ யாரு, அந்த ஆள் யாருன்னு எனக்குத் தெரியாது. ஆனால் நான் சொன்னது நிஜம். தெரிஞ்சு தான் சொன்னேன். நீ தான் மனைவி" என நகைத்த கண்களோடு, கைலாஷ் பெருமையாகச் சொன்னார்.
"ஆமாம், ஆமாம் சட்டப்படியான மனைவி , சொன்னீங்களே, ஆமாம் எந்த ஊர் சட்டப்படி என்னை மனைவியாகிக்கிடீங்க " எனப் பாரு சினந்து கேட்கவும், தைரியமாக ,பாருவை நோக்கி முன்னேறியவர், அவர் வளைக்கரங்களைப் பற்ற, பாரு முறைத்தார், கண்களாலேயே நயந்தவர், பச்சை வண்ண கண்ணாடி வளையல்கள் சலசலக்க , தன இடது மார்பில், இதயத்தில் வைத்து அழுத்திக் கொண்டு, " என் சட்டம், என் மனசாட்சி சொன்ன சட்டப்படி ,நீ மட்டும் தான் இந்த ஜென்மத்தில் என் மனைவி" என அமர்த்தலான குரலில் சொல்லவும், பாருவின் கண்களிலிருந்தும் ஆனந்தக் கண்ணீர்.
தன் மற்றொரு கரத்தால், பாருவின் கண்ணீரையும் துடைத்தவர், தலையை மறுப்பாக ஆட்டி, அதுவும் கூடாதென்று கண்ணால் பேசியபடி பாருவை மேலும் நெருங்க, ஆளுமையான பெண்ணும், அவர் காதலில் கட்டுண்டு தான் நின்றார்.
மௌனமே சம்மதமாக, கைலாஷ் ,பாருவை அணைக்கத் துடிக்க, மில்லின் ஷிப்ட் மாற்றும் சங்கு ஊதிய சத்தத்தில் , தன்னிலை உணர்ந்த பாரு, தங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகப் படுத்தி, கைலாஷை முறைத்து, " இப்ப உங்க சாசுமா வீட்டிலிருந்து, மேள தாளத்தோட படையை அனுப்பி ஜமாயீக்கு மரியாதை செய்வாங்க. ரெடியாஇருங்க' எனக் கோபப்பட்டவர். இன்டர்காமில் விஜய ரங்கனையும் அழைத்தார்.
விஜயன் வருவதற்குள், அவசர, அவசரமாக போனில் யூறுடனோ,மராத்தியில் பேசினார். கைலாஷ் கை கட்டி நின்று, பாருவின் ஒவ்வொரு அசைவையும் , ரைட் ராயலாக, தன்னுள் பதித்து, ரசித்துக் கொண்டிருந்தார்.
"ரோம் நகரமே பற்றி எரியும் போது , நீரோ மன்னன் பிடில் வாசிச்ச மாதிரி, இதென்ன சாவகாசமாக பார்வை" என பாரு, கைலாஷை கோபிக்கவும்,
" உவமானம் தப்பு, நான் நீரோ மன்னன் போல சாடிஸ்ட் இல்லை, என் பாருவை ஆராதிக்கும் தேவதாஸ் " எனும் போதே, பாரு வேகமாக வந்து அவர் வாயை பொத்தியவர், " நீங்க தேவதாசாகவும் வேண்டாம், நீரோவாகவும் வேண்டாம், எப்பவுமே என் ராஜ் ஆகா இருங்க போதும். அந்த பாருவோட நிலைமையும் எனக்கு வரவேண்டாம். ஆயி பவானி, தேரி கிருபா திருஷ்டி பனாயி ரக் ' என கை கூப்பி வேண்டியவர், யாரோ வரும் சத்தம் கேட்டு திரும்பினார்.
விஜயன், வரவும் நடந்ததைச் சொல்லி " இவரைக் கூட்டிட்டு முதல்ல ஊருக்கு கிளம்புங்க. இங்கிருந்தா, இவர் உயிருக்கு ஆபத்து" என , பரபரப்பாக ஏற்பாடுகளைச் செய்தார்.
கைலாஷ் , பாருவையே பார்த்தபடி அசால்டாக அமர்ந்திருந்தவர், " நீயும் என் கூட வர்றதுன்னா, போகலாம். உன்னை விட்டுட்டு போக முடியாது. " எனச் சாவகாசமாகச் சொல்ல, விஜயன் தான் முழித்தார்.
" உங்க இரண்டு பேருக்குமே, ஏதோ பிடிச்சிருக்குன்னு தெரியுது. மேடம், அவன் தான் அர்த்தமில்லாமல் பேசுவான், நீங்களும் ஏன் ஒத்துக்கிட்டிங்க. " என விஜயன் பாருவையும் கேள்வி கேட்க,
" நான் அப்படிச் சொன்னதினால் தான், உங்க ப்ரண்ட் இப்ப இங்க நிற்கிறார். இல்லைனா ஜெயந்த் ஜீஜு அப்பவே தன் முழுப் பலத்தையும் காட்டியிருப்பார்" எனப் பாரு பதில் தந்தார்.
" ஜெயந்த் சாரை, ஜீஜுன்னு சொன்னா, நீங்க இந்த மில்ஸோட சின்ன முதலாளியா. ஆனால் ஹெச் ஆர் மேனேஜரா இருக்கீங்களே" என விஜயன் சந்தேகமாகக் கேட்கவும்,
கைலாஷ், " ஓ, நீ அப்ப எனக்கு எப்படியா இருந்தாலும் பாஸ் தான். ஓகே, ஓகே ". என இரு பொருள்படப் பேசி நகைக்கவும், அவருக்கு ஓர் முறைப்பைத் தந்தவர், விஜயனிடம்,
" பாய்சாப், நீங்க இவரைக் கூட்டிட்டு ஊருக்கு கிளம்புங்க. இங்க இருக்க ஒவ்வொரு நிமிசமும் இவர் உயிருக்கு ஆபத்து" எனப் பாரு வலியுறுத்திச் சொன்னார். விஜய ரங்கன் இன்னும் அதிர்ச்சியே நீங்கவில்லை.
பிபி மில்ஸ் உரிமையாளர்களாகிய ஶ்ரீபத்ராய் , கனபத்ராய் போஸ்லேக்கள், கோலாப்பூர், சோலாப்பூர் மில்களைத் தங்களுக்குள் மில்களை நடத்துவதிலும், ஷேர் அடிப்படையிலும் பங்கு பிரித்துக் கொண்டனர். அதனால் பிபி மில்ஸ் என்ற பெயரிலேயே இரண்டும் தொடர்ந்து நடந்தது.
ஶ்ரீபத்ராய் போஸ்லேக்கு, ஆனந்த், முகுந்த என இரு மகன்களும், கனபத்ராய் போஸ்லேக்கு பவானி, பைரவி என இரண்டு பெண்மக்களும் உண்டு. இந்தப் பெண்வழியை எப்படியாவது கழட்டி விட்டால், தானே மில்களை ஆண்டு அனுபவிக்கலாம் என ஶ்ரீபத்ராய் குடும்பம் திட்டம் தீட்டியது.
ஆனால் கணபத்ராய்க்கு மூத்த மருமகனாக வாய்த்தவனும் சாமானியன் இல்லை. அவரது சகோதரி மகனாகிய ஜெயந்த் கெய்க்வாட் போஸ்லே, கனபத்ராய் போஸ்லேவின் மூத்த மகளை மணந்து, வீட்டோடு மருமகனானவன், மெல்ல தன் கைப்பிடிக்குள், சோலாப்பூர் மாளிகை, மில் இரண்டையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தான்.
கணபத்ராய் உடல்நிலை மோசமாகி ஆறு மாதங்களுக்கு முன் மறைந்து விட, ஜெயந்த் மனைவியின் உரிமையை வைத்து உள்ளே வந்தான். ஆனால் ஶ்ரீபத்ராய் குடும்பம், முதலிலேயே பங்கு பிரிக்கும் போது, இரண்டு மில்களையும் , ஷேர் விகிதங்களை மட்டுமே மாற்றி அமைத்து இருந்ததால், மூத்த வாரிசுகளின் அதிகாரமும் இருந்தது. பவானி கையெழுத்துப் போட சொல்லும் இடத்தில் கையெழுத்துப் போட்டு ஒதுங்கிக் கொள்வார்.
ஆனால் அவரது மாற்றான் தாய் மகளான தங்கை பைரவி, பட்டப் படிப்பும் படித்து, எல்லா விசயங்களிலும் சூட்டிகையாக இருப்பார். அதனால் தந்தை இருக்கும் போதே, மில்லுக்குள் நுழைந்து, துறை வாரியாகத் தொழில் பயின்று வந்தார்.
அந்தப் பைரவியைத் தான், கைலாஷ் பாரு' எனப் பெயர் சூட்டி,தனக்கு மனையாளாக வர அழைப்பு விடுத்துள்ளார். அவரைப் பற்றிய முழுப் பரிச்சயம் அறிந்தும் அசராத நம் நாயகன், " நான் தான் உன் புருஷன்னு சொல்லிட்டேயில்லை. நீயும் சேர்ந்து வா. போயிட்டே இருப்போம். இவ்வளவு பெரிய மில்லும், அரண்மனையும் இல்லைனாலும், ஒரு சின்ன மில்லும், வீடும் இருக்கு. நான் உன்னை மகாராணியா வச்சுக்குறேன். " என அழைத்தார்.
கைலாஷ் பேச்சைக் கேட்கவுமே, உருகிப் போன பாரு என்ற பைரவி பாய் போஸ்லே, " துல்ஜா பவானி, எனக்காகச் சரியான வரனைத் தான் அனுப்பியிருக்கா. ஆனால் இப்போ உங்களைக் காக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கு. என் கூட வாங்க" என, கைலாஷை, கைப்பிடியாக இழுத்தவர், " பாய்சாப், நீங்களும் வாங்க" என விஜயனையும் அழைத்தபடி தனது காரை ஓட்டப் போக, பாருவை நகர்த்திவிட்டுக் கைலாஷ் காரை எடுக்க, வேறு வழியில்லாத விஜயனும் பின்னோடு ஏறிக் கொண்டார்.
நிலவு வளரும்.
No comments:
Post a Comment