Tuesday, 25 January 2022

யார் இந்த நிலவு-15

 யார் இந்த நிலவு-15

ஆதிரா அவளது அறையில் உணர்வு குவியலாக அமர்ந்திருக்க, விஜய ரங்கன் அவளுக்கு அருகிலமர்ந்து அவளைத் தேற்றிக் கொண்டிருந்தார். அபிராம் அதே அறையின் வாசலில் நின்று, கையைக் கட்டிக் கொண்டு வெளியே ஒரு பார்வையும், தன் ஆராவுடன் பாசமாகப் பேசிக்கொண்டிருக்கும் அப்பாவை அனல் பார்வையுமாகப் பார்த்து, உள்ளே பொசுங்கிக் கொண்டிருந்தான்.

' இரண்டு பெரிசுகளும் சேர்ந்து, என் ஆராக்கிட்ட என்னை நெருங்கவே விடமாட்டிங்கிறாங்களே. இவிக தான் சண்டைக்காரங்களாச்சே, அப்படியே இருக்க வேண்டியது, ஓவர் செண்டிமெண்டால்ல இருக்கு. ' எனப் பொருமியவன்,

' அதுவும் எவ்வளவு ஹேப்பியா இருக்க வேண்டிய மூமெண்ட். இனி ஆராவோட சேர, எந்தத் தடையும் இருக்காதுன்னு சந்தோஷப்பட்டா, மாமாவுக்குப் பதிலா, அப்பா வந்து ப்ளேடு போடுறாரு' என மனதில் புலம்பிக் கொண்டிருந்தான்.

ஆதிரா சற்று முன்னர், காலை உணவை அவசரமாக முடித்துக் கொண்டு, தனது அலைப்பேசியைத் தேடியவள், பாபாசாப் அறையிலேயே விட்டுவிட்டு வந்தது நினைவில் வர, அதனை எடுக்கச் சென்றாள். அந்த நேரம் தான், கைலாஷும், விஜயரங்கனுமாக, போல்ஸே எனப் பேசிக் கொண்டிருக்க, ஊன்றி கவனித்தவளுக்கு,

 கைலாஷின் "பாரு" வேறு யாருமில்லை ,பைரவி பாய் போஸ்லே தான் என்பதும், தனது ஆயியின் நெற்றிக் குங்குமத்துக்குச் சொந்தக்காரர் கைலாஷ் ராஜன் தான் என்பதும், தன்னுடைய பெயரிலிருக்கும், கே என்பது கைலாஷை குறிப்பதும் , யாரை பாபாசாப் என அழைத்து, தான் அடைக்கலமாக வந்தாளோ, அவரே தன் தகப்பன் தான் என்பதும் புரிந்தது.

" பாபா. மேரே பாபா. என் அப்பா" என மெல்லச் சொல்லிக் கொண்டவளுக்கு மகிழ்ச்சியும், அழுகையும் போட்டிப் போட்டுக் கொண்டு வர, அடுத்து எப்படி எதிர்வினையாற்றுவது எனபது புரியாமல், வாயைப் பொத்தி வாசலிலேயே நின்று அழவும், அவள் பின்னாடியே வந்த அபிராம், " ஆரா, என்னடா" எனப் பதறினான். அவள் ஒன்றுமில்லை எனத் தலையை மறுப்பாக ஆட்டவும், " மாமாவுக்கு ஒன்னும் ஆகாது பயப்படாத" என அவன் தேற்றவும், தன் உணர்வு நிலையைத் தாங்க இயலாதவளாக, திரும்பி தனது அறைக்குள் ஓடிவிட்டாள்.

" ஆயி, பாபாசாப் தான், என் பாபாவா" என வாய்விட்டுக் கத்த வேண்டும் போலிருந்தது, ஆனால் சத்தம் வெளியே வரவில்லை. ஆனந்தக் கண்ணீர் என்றும் வரையறுக்க இயலாத, உணர்வு நிலையில் அவளிருக்க, பின்னோடு வந்த அபிராம், " ஆரா" என அவள் கையைப் பற்றவும், குலுங்கி அழுதவள், தன் உணர்வு நிலை தாங்க இயலாமல் தவிப்பதைப் பார்த்து, அபிராம் அவளை அணைத்துக் கொள்ள, அவளுக்கும் தன்நிலையைப் பகிர்ந்து கொள்ளத் தேவைப்பட்ட நண்பனின் அணைப்பாய், அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

அவள் அழுகையிலேயே, மாமாவின் உடல்நிலைக்காக மட்டும் அவள் அப்படி அழ வில்லை என உணர்ந்தவன், அவள் முதுகைத் தடவிக் கொடுத்தும் , தன் தாடையை அவள் சிகையின் மீதி வைத்தும்,

" ஆரா பேபி, காம் டவுன். சில்டா . எதுவா இருந்தாலும், ஐயம் வித் யு" என அவளைத் தேற்ற, எவ்வளவு நேரம் அப்படி இருந்தார்களோ, மெல்ல தன்னிலையடைந்தவள், அவனை நிமிர்ந்து பார்த்து, " ராம், ராம் சார், பாபாசாப், பாபாசாப் தான்.." எனத் திக்கித் திணற, " ம் சொல்லு" என அவள் முகத்தில் விழுந்த கத்தை முடியை விலக்கியவாறே அவன் ஊக்குவிக்க, விஜயரங்கன் நாசூக்காகத் திறந்திருந்த கதவைத் தட்டினார்.

சட்டென இருவரும் விலக, " அப்பா, உள்ளே என்ன பேசுனீங்க. மொபைல் எடுக்க வந்தவ, வெளியே நின்னு அழகுறா " என அவரையே குற்றம் சுமத்தி அபிராம் கேட்கவும் , விஜயன் விசயத்தை யூகித்தவர் , ஆதிராவை நோக்கி, கண்களால் சிரித்து " உண்மை தெரிஞ்சிடுச்சா. அதுக்குப் போய் அழுவாங்களா. ஆயி பேசனுமாம். பேசிட்டு வா " எனபோனை நீட்டவும், தலையை மட்டும் அசைத்து அதை வாங்கியவள், தனது ஆயியிடம் படபடவெனப் பேசலானாள்.

மராத்தியில் "ஆயி, இவ்வளவு பெரிய உண்மையை மறைக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது. அதுவும் நான் பாபாக்கிட்ட தான் இருக்கேன்னு தெரிஞ்சும், ஏன் மறைச்சீங்க. பாபாசாப் மாதிரி என் பாபா இருக்க மாட்டாங்களான்னு எவ்வளவு ஏங்கியிருப்பேன் மாஸி சொல்ற மாதிரி உங்களுக்குப் பத்தர் தில் தான். ஊரில் இருக்கவங்க எல்லாம் என் பாபாவை, உரிமையா அப்பான்னு கூப்பிடுறாங்க. நீங்கள் அதுலை கூட ஒரு கண்டிசன் போட்டிங்க. அப்படி உயிரைக் காப்பாற்றி, என்ன ஆயி பண்ணப் போறோம். ஒரு நாள்னாலும், என் பாபாவோட உரிமையோட வாழ்ந்துட்டு போகலாமே. உங்கள் மேல எவ்வளவு அன்பு வச்சிருக்காங்க. அதைக் கூட அனுபவிக்காமல் இருக்கீங்களே ஆயி. இப்பவும் எனக்கு அதே கட்டு தானா. பாபாட்ட சொல்லக் கூடாதுன்னு சொல்லப் போறீங்களா" என அவள் பொரிந்து தள்ளிவிட்டுத் தேம்பி அழவும் ,மறுபுறம், பைரவி பேச்சற்றுப் போனார். விஜய ரங்கனுக்கு விசயம் புரிந்தது. அபிராமுக்கு, அவள் தனது அம்மாவிடம் பேசுகிறாள் என்பது வரை மட்டுமே புரிந்தது.

ஆதிரா, வெடித்து அழவும், விஜயரங்கன் உள்ளே வந்தவர், அவள் கையிலிருந்து போனை வாங்கியவர், " தங்கச்சிம்மா, சின்னப் பொண்ணு பேசறதை பெரிசா எடுத்துக்காதீங்க. அது இடத்திலிருந்தா, நாமளும் இப்படித் தான் இருப்போம்" எனச் சமாதானம் பேசவும்,

" இல்லை பாய்சாப், என் பொண்ணு பேசறதில எனக்குக் கோபமே வரலை. எங்களுடைய துரதிர்ஷ்டமான விதியை நினைத்துத் தான் நொந்துக்குறேன். இனி ரஜ்ஜும்மாவை தடுக்கப் போறதில்லை. அவளே முடிவெடுக்கட்டும்.. இன்னைக்கு எனக்குப் பேச்சுக் கேட்கிற நாள். முதல்ல ராஜ் இப்ப அவர் மகள். இன்னும் என்னன்ன பார்க்கப் போறனோ.நான் அப்புறம் பேசுறேன். அவளைக் கொஞ்சம் பார்த்துக்குங்க. ராஜ் மாதிரியே பயங்கர எமோசனல். இனி நீங்க தான் சமாளிக்கனும் " எனப் பொறுப்பை விஜயனிடம் தந்துவிட்டுப் போனை வைத்து விட, விஜயன் ஆதிராவை ஒரு ஷோபாவில் அமர வைத்து, மகனை அவளுக்குத் தண்ணீர் தரச் சொன்னார்.

அவள் சிகையை வாஞ்சையாகத் தடவியவர், " பொண்ணு மயிலு, அப்படியே, என் ராஜன் போகாமல் வந்திருக்கடா" என்றார். அபிராம் வற்புறுத்தலில் இரண்டு மடக்கு தண்ணீரைக் குடித்தவள், "பாபாசாப் என்ன பண்றாங்க. உங்களுக்கு நான் யாருன்னு முதவே தெரியுமா" என வினவினாள். ஆம் எனத் தலையை ஆட்டியவர்,

" உன் அப்பா, ஒரு ஆட்டம் காட்டிட்டு இப்பத் தான் தூங்குறான். அடுத்து மகள். எல்லாரும் சேர்ந்து என் தங்கச்சிமாவை இப்படிப் படுத்துறீங்களேடா" எனச் சிரித்தார். மூக்கை உறிஞ்சியவள், " போங்க அங்கிள் ஆயி தான் எங்களைப் பிரிச்சு வச்சு டார்ச்சர் பண்றாங்க" எனக் குற்றம் சுமத்தியவள்

" நீங்களே சொல்லுங்க அங்கிள். நான் என் பாபாவுக்காக எவ்வளவு ஏங்கியிருப்பேன், அவர் கூடவே இருந்தும் அவர் தான் என் அப்பான்னு எனக்குத் தெரியாததை விட என்ன கொடுமை இருக்கும். இன்னும் பாபா சாப் ரொம்பப் பாவம்,இப்படியொரு முல்கி இருக்கிறதே அவ்ருக்குத் தெரியாது, இதுக்கெல்லாம் காரணம் ஆயி தானே " என ஞாயம் கேட்கவும்,

" நீ சொல்றதிலையும் ஞாயம் இருக்கு. நான் இல்லைனு சொல்லலைக் கண்ணு. ஆனால் உங்க ஆயி நிலைமையிலிருந்தும் யோசிக்கனுமா இல்லையா. உன் பாபா மேல வச்ச காதலுக்காக, வாழ்க்கை பூரா போராடிட்டுத் திரியிறாங்களே" என எடுத்துச் சொல்லவும், ஆதிரா தலையைக் குனிந்து மௌனமாக, அபிராம் பொறுமை இழந்தான்.

" டாட், ஆரா நம்மகிட்ட அழுகுறா, அவங்க அம்மாட்ட கோவப்படுறா, நீங்க சமாதானம் செய்யறீங்க. என்னனாவது வெளிப்படையா சொல்லுங்க. எனக்குத் தலையும் புரியலை, காலும் புரியலைங்க" என அபிராம் புலம்பவும்,

" இவனுக்குச் சொல்லிடுவோமா. பாவம் பொழைச்சு போகட்டும். ஆனால் கொஞ்சம் அட்வாண்டேஜ் எடுத்துக்குவான். நீ சமாளிச்சுக்குவேன்னா, நான் சொல்றேன் " என விஜயன் கேலி பேச, ஆதிராவின் அழுத முகத்தில் புன்னகை அரும்பியது.

" மாமனும், மருமகனும் இவ்வளவு க்ளோசா இருக்கீங்களே, உன் மாமன், என்னைக்காவது தனக்குக் கல்யாணமான விசயத்தைச் சொல்லியிருக்கானா?" என மகனைச் சவாலாகவே கேட்டார் விஜயன்.

அபி, " கல்யாணத்தைப் பத்திச் சொன்னதில்லை, ஆனால் அவர் மனசிலிருக்கவிகளைப் பத்தி சொல்லியிருக்கார், பாரு ஆன்டி " எனவும்,

" அவிக தான், உன் மாமன் மனசிலருக்கவிகளைத் தான் கல்யாணம் கட்டிக்கிட்டார். உன்ற மாமன் மகள் தான் ஆதிரா. " எனக் காதில் தேன் வந்து பாய்வது போல் ஒரு விசயத்தைச் சொல்லவும், " என்னது" எனக் கண்களை அகற்றி ஆச்சரியமாகக் கேட்டவன், தன்னை மறந்து, இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்து விட்டு, துள்ளிக் குதித்தான்.

'வாவ், சூப்பர், மருதமலை முருகன், இவ்வளவு சீக்கிரம் வேலையைக் காட்டுவான்னு நினைக்கலையே. ' என அகம் மகிந்தவன்,

" சூப்பரு, அதுதானுங்களா, மாமா வர்ணிச்ச மாதிரியே ஒரு பொண்ணைப் பார்க்கவும் ஷாக்காயிட்டேன். ஆரா , மாமா சொன்ன மாதிரி பொண்ணுன்னு நினைச்சேன். மாமா மகளேவா. சூப்பர், சூப்பர். " என அவளருகில், வந்து மீண்டும், மீண்டும் அவளைப் பார்த்தவன், கட்டியணைத்து தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க முடியாமல் விஜயன் நிற்பதை அவஸ்தையாகப் பார்க்க, ஆதிராவுக்குச் சிரிப்பு வந்தது.

அவள் கைகளை மட்டும் பற்றி, " ஐ யம் ஸோ ஹேப்பி, இது குறைச்சலான வார்த்தை. எப்படிச் சொல்றது" என அவளைத் தோளோடு அணைத்து "ஹேப்பி டியர் " எனப் பரபரத்தவன், மேலும் அவளை நெருங்க,

" அபி " என்றார் விஜயன். " ஓகே பா. மாமா வந்திடப் போறார். போய்ப் பாருங்க " என அவரை அங்கிருந்து அகற்றும் வழியை அவன் தேடவும்,

" அப்படியெல்லாம் வரமாட்டான். அவன் தூங்குறான்" என்றவர் முன்னெச்சரிக்கையாக," ஆனால் நம்பவும் முடியாது, பூனையாட்டமா வந்து நிற்பான்" என அறை வாசல்வரை சென்று வராண்டாவில் எட்டிப் பார்க்க, அந்தக் கேப்பிலேயே,

"ஐயம் ஸோ ஹேப்பிடா என் ரசகுல்லா, ப்யூட்டி ப்யூலா " என்ற அபிராம் சட்டென அவள் கன்னத்தில் அவசரமான இதழொற்றலையும் தந்தவன்,

" இனி எப்படி என் மாமா குறுக்க நிற்கிறாருன்னு பார்க்கிறேன். இனி ரைட் ராயலா உன்னை லவ் பண்ணுவேன்" என அவள் காதில் கிசுகிசுக்க, ஆதிரா கன்னங்கள் சிவந்து, மயிர்க்கூச்செறிய அவன் அதிரடியில் அதிர்ந்து நின்றாள்.

" அபி, நீ இந்தப்பக்கம் வந்து நில்லு, மாமா வர்றானான்னு பார்த்துக்க, நான் ஆதிராக்கிட்ட முக்கியமான விசயம் பேசணும் " என விஜயன் அழைக்கவும், தகப்பனை முறைத்துக் கொண்டே, " அவர் போகவுட்டி உன்கிட்ட நிறையப் பேசனும்" என்று விட்டு, அறை வாசலுக்குச் சென்று நிற்க, இத்தனை நாள் ஜென்டில்மேன் வேசம் போட்டவன், இன்று இப்படி ஒரேதாக உருகுவதிலேயே, கண்ட நாள் முதலாய் அவன் மனதில் தானிருப்பதை உணர்ந்துக் கொண்டாள் ஆதிரா.

விஜயன் ஆதிராவின் அருகில் வந்து அமர்ந்தவர், " நான் சொல்றதை , பொறுமையா கேட்டுட்டு முடிவெடுடா கண்ணு" என்ற பீடிகையோடு ஆரம்பித்தார்.

கைலாஷ், பாருவை நேசித்தது, அவரே பைரவி பாய் எனப் பின்னர் அறிந்தது. அவருக்காகச் செல்வாக்கான பெரிய குடும்பத்தை எதிர்த்து நின்றது. ஜெயந்துடனான பைரவியின் திருமணத்தைத் தடுத்து, சாகசமாகக் கைலாஷ், பாருவை மணமுடித்தது. அவர்களுடைய சந்தன் கட்டில் இரண்டு மாத கால வாழ்க்கை , பின்னர்க் கைலாஷ் பிரிந்து சென்றது, பைரவிக்கு நேர்ந்தது , ராஜியுடனான திருமண ஏற்பாடு, கைலாஷ் மறுத்தது இங்கு நடந்தது என விஜய ரங்கன் அவர்கள் இருவரும் அறிய வேண்டிய விசயங்களை மட்டும் சொன்னவர்.

" உன் ஆயி, உண்மையை மறைச்சு வாழறதுக்கு, அவுங்க குடும்பப் பின்னணியும், காரணமும் இருக்கு. அதில நம்ம தலையிட முடியாது. ஆனால் ராஜாக்கிட்ட இப்ப நீதான் அவன் பொண்ணுன்னு சொல்றது, திடீர் அதிர்ச்சி தரும். அவனுடைய ஹெல்த்துக்கு நல்லதில்ல. அவனுக்கும் சந்தேகம் வந்திடுச்சு, இனி சும்மா இருக்க மாட்டான். இப்பவே ஏதோ வேலையை ஆரம்பிச்சுட்டான். போற போக்குலையே போகட்டும் கண்ணு. தெரியும் போது தெரியட்டும். விளைவுகளைச் சமாளிச்சுக்குவோம்" என அவர் அறிவுரை வழங்கவும்

" சரிங்க அங்கிள்" என அவள் அரைகுறையாகத் தலையை ஆட்ட, அபிராம் மாமனின் கதையைக் கேட்பதில் மெய்மறந்து நிற்க, டிப் டாப்பாகத் தயாராகி வந்த ராஜனைக் கவனிக்கவில்லை.

" ஏனுங்க மாப்பிள்ளை, என் மகள் ரூம்பு வாசல்ல உங்களுக்கு என்னங்க வேலை" எனத் திரும்பி நின்ற அபிராம் முதுகில் ஓங்கித் தட்ட, அதை எதிர்பாராதவன், " ம்ப்ச்" எனக் கோபமாகத் திரும்பியவன் , மாமனைப் பார்க்கவும் அசடு வழிந்து நிற்க, உள்ளே விஜயனையும் பார்க்கவும், " என்னங்கடா" என அபியைத் தாண்டிக் கொண்டு உள்ளே வந்தார் ராஜன்.

ஆதிரா அவரைப் பார்க்கவுமே, இத்தனை நேரம் விஜயன் ஓதிய அறிவுரை எல்லாம் காற்றில் பறக்க, " பாபா" என அழுகையோடு ஓடி வந்து அவரைக் கட்டிக் கொண்டாள். இத்தனை நாள் இல்லாமல் ஆதிராவின் அழைப்பிலும், அணைப்பிலும் வித்தியாசத்தை உணர்ந்தவர், தனது உடல்நிலை குறித்துத் தான் அவள் கலங்கியிருக்கிறாள் என நினைத்தவராக, " என்னடா ரஜ்ஜும்மா, அப்பா நல்லா இருக்கேன். எனக்கு ஒன்னுமில்லை. " எனக் கட்டியணைத்துக் கொள்ள, அவர்களைப் பார்த்து நின்ற அப்பா, மகன் ஜோடிக்குத் தான், ஆதிரா அதிரடியாக உண்மையைச் சொல்லிவிடுவாளோ என டென்ஷன்.

ஆதிரா உதிர்த்த கண்ணீர்த் துளிகள், அவர் சட்டையை நனைக்க, " என்னடா, ஒன்னுமில்லை கண்ணு . அழக்கூடாது" எனக் கைலாஷ் அவளைத் தேற்ற முயல,

" போங்க, நான் பாபான்னு கூப்புடுறதால தான் உங்களுக்கு முடியாமல் போச்சு. நான் அன் லக்கி கேர்ள். நான் என் ஆயிக்கிட்டையே போறேன்" எனக் குலுங்கி அழவும். பதறிப்போன கைலாஷ்,

" ரஜ்ஜும்மா, இல்லைடா, இல்லைடா. நீ பாபாக்கு ராசியான பொண்ணு தான். நீ வரவும் தான், இத்தனை வருஷம் என் வூட்டில வந்து தங்காத, என் அப்பாவே வந்து தங்குறேன்னு வர்றாரு. நீ அவரையும் அமுக்கிப் போடு. அப்பத் தான் ஆத்தாளை கூட்டிட்டு எங்கையும் போக மாட்டார். என் வைரமில்ல, பாபாவை விட்டுட்டுப் போகாதடா" என மகளை நயந்து பேசவும்.

ஆதிராவை முந்திக் கொண்டு பதில் சொன்ன விஜய ரங்கன், " ஹேங், மகள் வூட்டை விட்டுப் போகக் கூடாதுன்னு நினைச்சியாக்கும், கண்ட கருமத்தைக் குடிக்கிறதை நிறுத்து. அத்தையும், மாமாவும் வர்றாங்க. உன் வாலை சுருட்டிக் கிட்டு, ஒழுக்கமான பையனா நடந்துக்க" எனவும், அபிராம் கக்கவெனச் சிரிக்க, ராஜ் அவனை முறைத்தவர்,

" ஏன்டா, அப்பனுக்கும், மவனுக்கும் பொழைப்பு, தழைப்பு ஒன்னும் இல்லையாக்கும். இங்க உட்கார்ந்து பஞ்சாயம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. இந்தச் சந்தில சிந்து பாடுற வேலையெல்லாம் வேணாம். ஆமாம் சொல்லிப் போட்டேன். ரஜ்ஜும்மா , நீ இவிக பேச்சைக் கேட்காத கண்ணு." எனவும்

" உன் மாமனுக்கு லொள்ளைப் பார்த்தியா. இனிமே நீயோ, சத்தியனோ, இவன் எங்கையாவது மயங்கி கிடக்குறான்னு போன் போட்டிங்க. பிச்சுப் போடுவேன்" என்றார் விஜயன்.

" இப்படித் தான் ஒவ்வொருவாட்டியும் சொல்லிட்டுப் போற. அப்புறமும் நீ தான் வந்து நிற்கிற. போடா போ" என நண்பனைத் திட்டிய கைலாஷ், ஆதிராவிடம், " பாபா எப்பவும் ஒழுக்கமாத் தான்டா கண்ணு இருப்பேன். இவிக தான் சும்மா பில்டப் விடுறாங்க . ஆனால் என்னை விட மதியத்துக்கு உன் தாத்தன் தான், வருவார் பார், ம்ம்… சரியான ஹிட்லர். நம்ம ஆத்தா தங்கமான மனுசி. உனக்கு நல்லா பொழுது போகும்" என மகளைக் கை வளைவில் அழைத்துக் கொண்டே வெளியே நடக்க, அப்பா மகன் ஜோடியும் பின் தொடர்ந்தனர்.

" ஏனுங்க மாமா, அப்பா, நீங்க தூங்குறீங்கன்னு சொன்னாரு, அதெப்படி அரை மணி நேரத்தில் ரெடியாகி வந்துட்டிங்க." என அபி வினவவும்.

" எங்கிருந்து தூங்கிறது. இங்கிட்டு இவன் வரவுமே,என் தாய் மாதா போன் அடிச்சிடுச்சு. அதென்ன மதியத்துக்கு மேல வரச்சொன்னியாமாம். ஏன் மதியத்துக்குச் சோறு போட மாட்டியான்னு, ஒரே பேச்சு. அவிக பேச்சிலையே என் ம.. " எனச் சொல்ல வந்தவர், ஆதிராவை ஓரப் பார்வை பார்த்து விட்டு, மப்புவை முழுங்கி விட்டு, " எல்லாம் இறங்கிடுச்சு" என்று மட்டும் சொன்னார்.

விஜயனுக்கு , கைலாஷின் இந்த மாற்றமே திருப்தியைத் தர, " கிளம்புறேன்டா" என்றார்.

" அங்கிள் , சாப்பிட்டுப் போகலாம்" என ஆதிரா உரிமையாக அழைக்க, " இருக்கட்டும் கண்ணு, இன்னும் நேரமிருக்குது. சாய்ந்திரம், அத்தையையும், ரஞ்சியையும் கூட்டிட்டு வர்றேன். " என்றவரை, ஜூஸாவது குடித்துச் செல்ல வேண்டும் என வற்புறுத்தி, செல்லியிடம் சொல்லி, எல்லாருக்குமாக ஆப்பிள் ஜுஸைக் கொண்டு வந்தாள்.

வயிறும், மனமும் குளிர்ந்து, நண்பன் வாழ்வு இனிமேலாவது சீராகட்டும் என விஜய ரங்கன் கிளம்ப, அபிராம், ஆதிராவிடம் கண்ணாலே விடை பெற்று தனது வேலையைப் பார்க்கச் சென்றான்.

கைலாஷ் கிளம்பியவரை, " அஜோபா ,ஆபா வரும்போது, நம்ம இங்க தான் இருக்கனும். நீங்க அவுங்களுக்குப் போன் போடுங்க. பக்கத்தில் வந்திட்டாங்கன்னா, சேர்ந்து சாப்பிட்ட பிறகு ஆபீஸ் போகலாம்" என ஆதிரா கட்டளைப் பிறப்பித்து விட, " ஓகே, ப்ரின்ஸஸ் கட்டளைக்கு ராஜா அடி பணிகிறார்" என வீட்டோடு இருந்த ஆபீஸ் அறைக்குக் கோப்புகளைக் கொண்டு வரச் சொல்லி பார்த்துக் கொண்டிருந்தார் கைலாஷ்.

ஆதிரா, தனது தந்தை வழி தாத்தா, ஆத்தாவைப் பார்க்க ஆவலோடு காத்திருந்தாள்.

நிலவு வளரும்.

No comments:

Post a Comment