Friday, 30 July 2021

சிந்தா- ஜீவநதியவள் -7

 சிந்தா- ஜீவநதியவள் -7

மேலப் பூங்குடி கிராமத்தில் சூரியன் சுள்ளெனக் கிளம்பும் முன்னே புறப்பட்ட தண்டோராக்காரன் தனக்கு அளிக்கப்பட்ட வேலையான கிராமசபைக் கூட்டம் கூடும் செய்தியை ஊர் முழுவதும் கூவிக் கூவி செய்தி சொல்லும் வேலையைச் செவ்வனே செய்தான்.

" இதனால , எல்லாருக்கும் தெரிவிக்கிறது என்னானன்னா, நம்ம அய்யன் கோயில் திருவிழா பத்தியும் , குதிரை எடுக்கிறது சம்பந்தமா பேச நாளைக்குக் காலையில கிராம சபை நம்ம மந்தையில் கூடுது. வீட்டுக்கு ஒரு ஆள் தவறாம, கட்டாயம் வரனுமுன்னு, ஊர் தலைவரு, தலையாரியும், பிரசிடென்டும் கேட்டுக்குறாக. " என அந்தத் தெரு முக்கில் நின்று கட்டியம் கூறி விட்டு, தண்டோரா காரர் அடுத்த முக்குக்குச் செல்ல ஊர் பையனும் பிள்ளைகளும் பின்னாடியே சென்றன.

" தண்டோராகாரவுக என்ன சொல்லிட்டு போறாக" என அவசரமாகப் புழக்கடைப் பக்கமிருந்து வந்து, ஆண்டிச்சி கிழவி கேட்கவும்,

"உனக்குத் தான் ஊர் மத்தியில சிலை வைக்கப் போறாகலாம், அதுக்குத் தான் கூட்டம் போடுறாக " என அவர் வயதே ஒத்த இருளி வக்கணை பேசவும்,

" இந்தக் குசும்பு தானே வேணாங்குறது, எனக்குக் கஞ்சி ஊத்தவே ஆளக் காணோம் , இதில் சிலை வக்கிறாகலாம். சேதி என்னன்னு சொல்லுடி" என ஆண்டிச்சி ஆவலாகக் கேட்கவும்.

" நீ தான் கொமரி கணக்கா, நடந்துக்கிட்டு இருப்பியே, பின்னாடியே போய்க் கேக்க வேண்டியதானே" என இருளி விஷயத்தைச் சொல்லாமல் இழுத்தடிக்கவும் ,

" உன் பேரன் பாயில பேழ்றதையே ஒன்றரை நாளைக்கு நீட்டி முழுங்கிச் சொல்லுவ, உன்னைய போய் விவரம் கேட்டேன் பாரு" எனச் சலித்துக் கொண்டு, எதிரே வந்த இளவட்டம் ஒருவனிடம் வாயைப் பிடுங்கி விசயத்தைக் கறந்த ஆண்டிச்சி, " அய்யன் கோயில் குதிரை எடுக்கப் போறாகலா , நல்ல விசயம் தான், எப்படியாச்சும் காஞ்சுகிடக்குற வறண்டபய ஊருக்கு மழை வரட்டும் . கொசவ வீட்டு ஆளுகளுக்கு வரும்படி தான்" என அதிலும் ஒரு பொறாமைப் பேச்சோடு வள்ளி வீட்டைப் பார்த்து நடையைக் கட்டினார்.

" இந்தக் கிழவிக்குக் குசும்பைப் பாத்தியா பெருமாயி , நான் ஒன்றரை நாளைக்குப் பேசுவேனாம். " என டீக்கடை பெருமாயிடம் வந்து புலம்பிய இருளி, " ஏத்தா, நேத்து இரவைக்கு உன் மவன் சோமுவா வந்துட்டு போச்சு, அப்பப்ப வரப் போகத் தான் இருக்குதாக்கும்" என நைசாக விசாரித்தார்.

" அவனே ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா, வாரான். உனக்கு அது பொறுக்கலையா" எனப் பெருமாயி கோபமாகக் கேட்கவும்

" இதுக்கு எதுக்குக் கோவிக்கிறவ, ஏதோ லோடு ஏத்திட்டு வடக்கப் போகும்பாகலே வந்திருகான்னு கேட்டேன். " எனவும், " அது தான் தெரியாது, தெரியாதுன்னு வாய்பரப்பாவே அம்புட்டையும் அறிஞ்சு வச்சிருக்கிகல்ல, நீங்க இரண்டு கிழவியும் போதும், நம்மூருக்கு ரேடியோ போட்டியே தேவையில்லை , நீங்க அறியாமல் ஊருக்குள்ள ஒரு விசயம் நடந்திருமா " எனத் திட்டி விட்டு, தன் வேலையில் கவனமானார் பெருமாயி.

இவரது மகன் சோமன் தான், சிந்தாவிடம் முறை தவறியது, அதன் பிறகு அதிகம் ஊரில் நடமாட்டம் இல்லை. மேலப்பூங்குடியிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஒரு வடக்கத்திக்கார சேட்டின் கரி மூட்டம் போடும் பெரிய கம்பெனி இருந்தது. சுற்று வட்டாரத்திலிருந்து சீமைக்கருவை மரங்களை வெட்டி லோடு லோடாக அங்குத் தான் கொண்டு வருவார்கள். விறகுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, புகை வெளியேறாத மூட்டம் போட்டு கரியாக்கி அதனைப் பொடியாக்கி அதனை வடக்கே அனுப்புவார்கள். புகை மூட்டம் போடுவதற்காக அவர்களிடம் மட்டுமே நிரந்தரமான கலன்கள் உண்டு. மற்றபடி வேறு வரும்படி இல்லாத விவசாயிகள், தாங்களாகச் சிறிய அளவில் கரி மூட்டம் போட்டு, ஹோட்டல்களுக்கு அதனை விற்றுக் காசாக்கி பிழைப்பை ஓட்டுவார்கள்.

ஆனால் வடக்கத்திக்காரன் தங்கள் தொழிலுக்காகவே ஒவ்வொரு ஊரிலும் முக்கியமான ஆட்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு சீமை கருவை மரத்தை வேரோடு வெட்டாமல் வளர வளர அதை வெட்டி அதன் மூலம் ஆதாயம் காண்கிறான். இதில் கிராமத்தின் கன்மாய்கரைகளில் வளரும் மரங்களைக் குத்தகைக்கு எடுப்பவன் விறகு வெட்டுபவன், கம்பெனி, கிராமத்துக்கும் வருமானம் என எல்லாருக்குமே ஆதாயம் இருப்பதால் அதனை ஊக்குவித்து அதையே ஒரு சார்பு தொழிலாகச் செய்கின்றனர்.

தண்டோரா செய்தியைக் கேட்ட குமரன் குதிரை எடுப்பு பற்றிய அதன் விவரத்தை, பெரியப்பாவிடம் கேட்டான்.

" இந்தக் கிராமத்தில் மழை பொய்த்துப் போய்ப் பயிர் விளையலை, பஞ்சம், பட்டினி ,நோய் ,நல்லது கெட்டது அம்புட்டுக்கும் அய்யனார் தான் தீர்வு. அவருக்கு மண் குதிரை செஞ்சு வச்சா, கோவம் குறை இருந்தாலும் பொறுத்துக்கிட்டு அய்யனார் காத்துக் கொடுப்பார்னு நம்பிக்கை" என்றார் மகாலட்சுமி.

" இந்த ஊர்ல இருக்கச் சீமைக்கருவை மரத்தை அழிச்சாளே, நிலத்தடி நீர் உயரும், காற்றில் ஈரப்பதம் இருக்கும், பயிர் பச்சை விளையும், ஊரு நல்லா இருக்கும், அதைச் செய்ய மாட்டேங்கிறாங்க . அதை விட்டுட்டு குதிரை எடுக்கிறேன், தேர் இழுக்குறேன்னு, இதெல்லாம் சொல்லமாட்டிங்களா பெரியப்பா" எனக் குமரன் ஆதங்கப்படவும்.

" தம்பி நீ பாட்டுக்கு நாத்திகனாட்டம் பேசாத. இந்த ஊர்காரவுகளே ஐஞ்சாறு வருசத்துக்கு ஒருக்கா தான், புத்தி வந்து சாமி கும்புடுங்க. நீ அதையும் கெடுக்காத" என ராஜேஸ்வரி கொழுந்தன் மகனைக் கண்டித்தார்.

" உங்க பெரியம்மாளுக்கு, நீ பேசுறதே கூடத் தெய்வகுத்தம் ஆயிடுமோன்னு பயம்" என்ற மகாலிங்கம், " சரி நீ சீக்கிரம் சாப்பிட்டுக் கிளம்பு, மகேஷ் ரெடியாகிடுச்சா. இந்தப் பரிட்சை எழுதி வேலைக் கிடச்சா அவுங்க அப்பா வேலைக்கு அனுப்புவானா என்ன, அதுக்குள்ள மாப்பிள்ளை தேடிட்டு திரியிறானே" எனக் கேள்வி எழுப்பினார் பெரியவர். மகேஷும், முத்துவுமாக, டிஎன் பி எஸ் சி பரிட்ச்சை எழுத இன்று மதுரைக்குச் செல்கிறார்கள்.

மதுரைக்குக் கிளம்ப ரெடியாக வந்த மகேஷ்வரி, " அதெல்லாம் கட்டாயம் வேலைக்குப் போவேன்னு சொல்லியிருக்கேன் பெரியப்பா. கவர்மெண்ட் வேலை கிடைக்கும்னா போகலாமாம். அப்ப மாப்பிள்ளை தேடி வருமாம். நகை குறைச்சுப் போட்டுக்கலாமாம், அதுக்காக , தெரியாத படத்தைக் குமரன் அண்ணன்கிட்ட கேட்டு படிச்சுக்கன்னு நேத்தே அனுப்பி விட்டாக" என அவளும் தனக்கு அனுமதி கிடைத்த விவரத்தை, தனது அப்பாவைக் கேலி செய்து கொண்டே விஷயத்தைச் சொல்லி முடித்தாள்.

" உங்கப்பன், பெரிய ப்ளானாத் தான் போடுறான் போ" என்றவர், " குமரா, சட்டுனு கிளம்பு. சிவகாமி எந்திருச்சிடுச்சா. நீயும் இல்லைனா அதைச் சமாளிக்கச் சிரமம் தான் தூக்கிட்டுப் போயிட்டு வா. அப்பத்தான் அந்திசாயும் முன்ன உங்க அண்ணனையும், அண்ணியும் கூட்டிட்டு வரலாம்" என அறிவுறுத்தினார் பெரியவர். "இதோ சாப்புட்டு கிளம்ப வேண்டியது தான்" என அவனும் உள்ளே சென்றான்.

சிவகாமியைக் குளிப்பாட்டித் தூக்கி வந்து ஹாலில் அமர்ந்த ராஜேஸ்வரி, " மகேஷ், உனக்கும் அண்ணனுக்கும் டிபன் எடுத்து வச்சிருக்கு சாப்பிடுங்க, சமையக்காரக்காட்ட பாப்பாவுக்குப் பால் கலக்கச் சொல்லு" என்றவர் காலை நீட்டி வாசலுக்கு நேராக உள்ளே உட்கார்ந்திருக்க வாசலில் அய்யனார் முத்துவோடு நின்றார். பரீட்சைக்குச் செல்ல முத்துவை அய்யனார் அழைத்து வந்தார், அவர் தான் முதலில் மதுரைக்கும் அழைத்துச் செல்வதாக இருந்தார், குமரன் மகேஷோடு அவளையும் அழைத்துச் செல்வதாகச் சொல்லவும், முதலில் தயங்கினார்கள், மகாலிங்கமும் , ராஜேஸ்வரியும்  பேத்தியையும் அழைத்துச் செல்லவேண்டும் எனவும் ,முத்துவை சிவகாமி பழகி இருப்பதால் தகராறு செய்யாமல் வரும் என வலியுறுத்திச் சொல்லவும், சரி என்று விட்டார். தயங்கியபடியே வெளியே நின்றவர்களை, ராஜி உள்ளே அழைத்தார். அய்யனார் மகளை உள்ளே அனுப்பி விட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டார்.

" முத்து நல்ல நேரத்தில வந்த, சீக்கிரம் வாத்தா, இந்தப் பாப்பாவைக் கிளப்பி விடு, பரீட்சைக்குப் போற புள்ளைகளுக்கு , இவுகளால லேட் ஆக வேணாம் " எனப் பெரியவீட்டம்மா உதவிக்கு அழைக்கவும், வேகமாகப் படியேறி வந்தாள் முத்து. சிவகாமி முத்துவைப் பார்க்கவும் சிவகாமி, சிரித்து மகிழ்ந்தது.

" ஆத்தி, சிட்டுக் குட்டி குளிச்சிட்டீகளா " எனக் கொஞ்சிக் கொண்டே, கீழே அமர்ந்து, சிவகாமியை மடியில் போட்டு உடம்பைத் துடைத்து, பவுடர் அடித்து மையிட்டு என அதற்க்கு அலங்காரம் செய்தாள்.

"முத்து, கிளம்பி வந்திருக்க, மடியில டவளைப் போட்டுக்கோ" என்றவர், " குமரா ஒரு டவள் எடுத்துக் குடுய்யா" என அழைக்கவும், பேண்ட் அணிந்திருந்தவன், சட்டையை ஒரு கையில் எடுத்துக் கொண்டு முத்து இருப்பதை அறியாமல் இயல்பாக வந்து பெரியம்மாவிடம் தரவும், பனியனோடு அவை பார்த்த முத்துவுக்குத் தான் மூச்சடைத்தது. தலையைக் குனிந்து கொண்டாள்.

அடுத்தடுத்து, சிவகாமிக்குத் தேவையானதை அவனையே எடுத்துக் கொடுக்கச் சொல்லி விட்டு, பேத்திக்கு பால் கொண்டுவரச் சென்றார்.

" பெரியம்மா , ஒரு சட்டையைப் போட விடுறீங்களா" எனக் குறைபட்டுக் கொண்டே வந்து முத்துவிடம், ப்ராக், நேபி என ஒவ்வொன்றாய் நீட்டினான். அப்போதும் நிமிராதவள், கீழே வைக்கச் சொல்லிக் கை காட்டினாள். " வாயைத் திறந்து சொன்னா, முத்து உதுந்துடுமோ, நான் மாலை கட்டிப் போட்டுக்குவேன்னு பயம்" என அவன் சீண்டவும் , சுற்றி முற்றிப் பார்த்தவளுக்கு, இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. ஆனால் கை வேகமாகச் சிவகாமியைத் தயார் செய்தது. ராஜேஸ்வரி ,பேத்திக்கு பால் எடுக்கச் சென்றிருந்தார்.

அவளது பதட்டத்தை ரசித்தவன், அண்ணன் மகளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே அங்கேயே நின்றே சட்டையை அணிந்து கொள்ள, சிவகாமிக்குத் தலை சீவி குடுமி போட்டு விட்டவள், " உங்க சித்தப்பாவுக்கு விவஸ்தையே இல்லாமப் போச்சு, வெளி ஆள் உட்கார்ந்திருக்கேனேன்னு கொஞ்சமாவது இருக்காப் பாரு" என முணுமுணுத்தாள்.

தொண்டையைக் கனைத்தவன்," வெளியாள் யாரு இருக்காங்க. என் கண்ணுக்குத் தெரியலை" என்றான். அவனைச் சட்டென நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள், நேசம், ஆசை. காதல், பயம் என அத்தனையையும் காட்டியது. குமரன் ஓர் சிரிப்புச் சிரிக்கவும், மீண்டும் தலையைக் குனிந்துக் கொண்டவள், "நினைப்பு தான் பொழப்பைக் கெடுக்கும்மாம் . இன்னைக்குப் பரீட்சை, அதுல பாஸானாதான் வேலைக்குப் போக முடியும், உன் சித்தப்பாட்டை என் பொழப்பை கெடுக்காம இருக்கச் சொல்லுடா சிட்டுமா " எனக் கொஞ்சி சொல்லவும், 

அதனைக் கொஞ்சுவதாகப் பொக்கை வாய் தெரிய அது சிரித்தது. முத்து சிவகாமிக்கு நேப்பியை மாட்ட சிரமப்படவும், அவளருகில் வந்து குனிந்து அண்ணன் மகளைத் தூக்கி நிறுத்திய குமரன், "டி என் பி எஸ் சி ,எழுதுனா , சிங்கப்பூர்ல எப்படி வேலை கிடைக்கும், அதெல்லாம் சும்மா பார்மாலிட்டிக்கு எழுத்த சொல்லுடா தங்கம்" என அவனும் சிவகாமியிடமே பேசவும். அவனை முறைத்தவள், "எங்களுக்கு எதுக்குச் சிங்கப்பூர் வேலை, சென்ட் அடிச்சிட்டு சுத்தவா, நம்ம, நம்ம ஊர்லயே இருந்துக்குவோம்" எனச் சிவகாமியை முழுவதுமாகத் தயார் செய்து, அவனிடம் தந்து விட்டு தானும் எழுந்தாள் .

அவனும் ஓர் புன்னகையோடு 'பார்ப்போம்" என்றான்,

" அண்ணேன் , என்னத்தைப் பார்க்க, பாஸ் பண்ணுவோமான்னு சேலஞ் பன்றிங்களா, நானாவது கோட்டை விடுவேன், முத்துப் பாஸ் பண்ணிடுவா, அதுவும் சவால் விட்டீங்க சுத்தம் , அவள் தான் கட்டாயம் ஜெயிப்பா " என்றவள் "நாமப் போகலாம் ரெடி ." என்றபடி பேக்கை எடுத்துக் கொண்டாள்.

" அடியே மகேஷ், பாப்பா இன்னும் பால் குடிக்கலை" என ராஜேஸ்வரி ஒரு பையோடு வந்தார்.

" இரண்டு பாட்டில்ல குடுத்துடுங்க பெரியம்மா, சிவகாமி முத்துக்கிட்டையே சமத்தா குடிச்சிக்கும் " என்ற குமரன் ,சிவகாமியை முத்துவிடம் கொடுத்து விட்டு காரை எடுக்கச் சென்றான். சிவகாமி ஒரே உற்சாகமாக,அங்கு வைத்த தாத்தா, அப்பத்தாவுக்கு டாட்டா காட்டி சென்றது. " கார்ல போறாகளாம் ,எம்புட்டு உற்சாகம் பாருங்க" என்ற ராஜேஸ்வரி, மகாலிங்கத்திடம் முத்துவும் மகேஷும் தலையசைப்போடு கிளம்பினர்.

இவர்கள் ஏறும் போதே ஊரிலிருக்கும் சில கண்கள் அதைப் பார்த்தன. அய்யனார் கேட்டை திறந்து விட்டுப் பெண்கள் இருவரும் பின்னாள் ஏறிக் கொள்ளவும், ராஜேஸ்வரியிடம் சொல்லிக் கொண்டு வீட்டுக்குச் செல்ல, வழி நெடுக விசாரித்தவர்களிடம் பதில் தந்தபடி வீட்டுக்குச் சென்றார்.

சிந்தா, முத்து கிளம்புவதற்காகப் பரபரவெனத் திரிந்தவள், அப்போது தான் ஓய்வாக அமர்ந்தாள். அய்யனார் யோசனையாகவே வந்தார். " என்னப்பா, எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போற, இம்புட்டு யோசனை" என்றாள்.

"இல்லை சிட்டு, நீ சொன்னைனு சின்னவளை, அந்த வெளிநாட்டுக்கார ஐயாவோட அனுப்பி விட்டேன், அவுக போறவுகளைப் பார்த்துக் கேள்விக் கேக்கிற சனத்துக்குப் பதில் சொல்லமுடியலை. நானே கூட்டிட்டு போயிருக்கலாமோன்னு தோனுது" என்றார்.

" அப்பா, இவுக நினைப்பாக, அவுக நினைப்பாகன்னு காலத்தை ஓட்டினதெல்லாம் போதும்பா. அவளாவது படிச்சு, நல்ல உத்தியோகத்துக்குப் போயி, இந்தச் சாதியெல்லாம், இல்லாத இடத்தில் இருக்கட்டும்" என எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னவளைப் பார்த்த அய்யனார்.

" சின்னக் குட்டியை விட , நீ இன்னும் வெடிப்பான ஆளு, இந்தப் பண்ணக்காரன் மவளா இல்லாமல், வேற வீட்டில் பிறந்திருந்தா, அரசாண்டுருப்ப. ம்ம் எம்மவளா பிறந்து, எங்களுக்குச் சேவகம் பண்ணியே ஓஞ்சுப் போன" என வருத்தப்பட்டவரிடம்

" என்னப்பா திடீர்னு உனக்கு இப்படி ஒரு கவலை, இப்ப என்ன எனக்குக் குறையா போச்சு. கல்யாணம் பண்ணியும் பொறந்த வீட்டில ராஜிய்யம் பண்ண எத்தனை பேருக்கு கொடுத்து வைக்கும். அதுவும் கண் நிறைஞ்ச புருஷன், புள்ளைகள், தம்பி தங்கச்சியோட உன்கூடவே இருக்கேன். அடுப்படியிலிருந்து, கஜானா வரைக்கும் அம்புட்டுக்கும் நான் தான் ராணி. ஏன்னு இடிச்சு கேக்க, மாமியா, நாத்தனார் இல்லை. நான் இது வேணும்னு கேக்கும் முன்ன வாங்கியாந்து கொடுக்கிற புருஷன். இதை விட வேற என்ன வேணும்" எனச் சிந்தா வரிசையாகக் கேட்கவுமே,

" அதுக்கில்லை சிட்டு, இந்தா இந்தச் சின்னக்குட்டி, நம்ம ஊட்டு புள்ளைத் தான், எம்புட்டுப் பதவிசா துணி போட்டுகிட்டு கார்ல ஏறி போகுது. நாளைக்குப் படிச்சு வேலை பார்த்தா, அதுவே கூடக் கார் வாங்கும். ஆளுங்கள் பழக்க, வழக்கத்துக்குச் சொன்னேன். நம்மூருக்குள்ள சாதி பார்க்குறாக, இதே டவுனுக்குள்ள யாரு பார்க்கிறா. அதைச் சொல்ல வந்தேன்" என்றார் அய்யனார்.

" போப்பா நீ ஒண்ணு விவரமில்லாமல் பேசுற, அதெல்லாம் எல்லா இடத்திலையும் இலைமற காயா சாதியும் இருக்கத் தான் செய்யுது. என்ன இங்கனை பேசற மாதிரி வெளிப்படையா பேச மாட்டாக. இக்கரைக்கு அக்கரைப் பச்சை. ஆளுக பழக்கம், வழக்கம்னா, நம்மூருல இருக்கவுக மனுஷ மக்கள் இல்லையா." எனச் சிந்தா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, நான்கு வயது சத்தி, உள்ளிருந்து வந்து மீதித் தூக்கத்தை அம்மாவின் மடியில் வந்து விழுந்து படுத்துத் தொடர்ந்தான். அவளும் அவன் விழுந்த அதிர்வில் முகம் சுணங்கியவள், வாஞ்சையாகவே மகனின் சிகையை வருடிக் கொடுத்தபடி அப்பாவோடு பேசிக்கொண்டிருந்தாள்

" நான் அதவே சொல்லலத்தா, உனக்கு இருக்க அறிவுக்கும், திறமைக்கும் ஆபீஸரா வந்து, அதிகாரம் செஞ்சிருப்பன்னு சொல்றேன். ஏதோ சின்னைய்யா புண்ணியத்தில பத்தாவதாவது முடிச்ச. உங்க ஆத்தா இருந்திருந்தா நிச்சயமா உன்னைக் காலேஜ் படிக்க வச்சிருப்பேன். அதுக்குள்ள புள்ளைக் குட்டினு, எம்புட்டுப் படுத்துறான் பாரு " என மீண்டும் அதிலேயே உழன்று, பேரனையும் மகள் மீது விழுந்ததற்காகச் செல்லமாக ஓர் அடி வைத்தார்.

" அப்பா, விடுப்பா, உனக்கு உன் மவ நோகக் கூடாது, நான் என் மவனைப் பொறுத்துக்குவேன்" என மகனைத் திருப்பிக் கொண்டவள் தொடர்ந்து "சும்மா, மனசைப் போட்டு அலட்டிக்காதப்பா, நம்மளை மாதிரி அமைதியான வாழ்க்கை இல்லையேனு டவுனுக்காரவுக ஏங்குவாக. எப்பவுமே இருக்கிறதை வச்சு நிறைவா வாழனும்பா. நாளைக்கு முத்துவே கார், வீடுன்னு அந்தஸ்தா வாழ்ந்தாலும், அது எனக்குச் சந்தோஷம் தான், பெருமைப் பட்டுக்குவேன். ஆனால் அதைப் பார்த்து ஏங்க மாட்டேன்" எனத் தகப்பனுக்குப் புரிய வைத்தாள் சிந்தா.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது வேலு, பைக்கில் வந்து இறங்கியவன், "மாமன் சொல்றது சரிதான். வெளியூர்லையோ, வேற ஊர்லையோ பொறந்திருந்தின்னா ஜில்லா கலெக்டரா கூட ஆகியிருப்ப புள்ளை, யாரு கண்டா " எனச் சொல்லிச் சிரித்தான்

" இந்தா உன் மருமவன் லந்தைக் குடுக்கிறதை பார்த்தியாப்பா, நான் கலெக்டர் ஆகியிருந்த , இந்த முரட்டுக் காளையை யாரு அடக்குறதாம்" எனச் சிந்தா பதிலுக்குக் கேலியில் இறங்கவும்,

" ஏ புள்ளை, நீ வேற வுட்டில பிறந்து கலெக்டர் ஆகியிருந்தா, நான் மட்டும் ஏன் சுருட்டுக் கருப்பன் ஊட்டுல பொறக்கப் போறேன். நானும் வேற இடத்துல பொறந்தது, இன்னும் பெரிய ரவுடியா இருந்திருப்பேன்." எனக் கண் அடித்தான்.

" ஆத்தே, அப்பையும் புத்திப் போகுதா பாரு, ரவுடியா இருந்திருப்பாராம், ஏன் வேற என்னமுமே ஆகனும்னு தோனலையா, எம் எல்ஏ , மந்திரின்னு யோசிக்க வேண்டியது தானே" என்ற சிந்தாவின் பேச்சில்,

" மாமா, உன் மவளைப் போயி, சும்மா நினைச்சிட்ட. இங்க பாரு மந்திரி பொண்டாட்டி ஆகனும்கிறா." என அவன் கேலி செய்து சிரிக்கவும். அய்யனாரும் உடன் சிரித்தார்.

" மாமா, எங்க அக்காளுக்கு இருக்கத் திறமைக்கு அதுவே மந்திரியாகும். உன்னை முன்நிறுத்தனும்னு, அந்தப் பதவியை உனக்குத் தருது" என அப்போது தான் எழுந்து வந்த சுப்புப் பேச்சில் புகுந்தான், சத்யா காலையிலேயே எழுந்து ஒரு சுற்று சுற்றிவிட்டுத் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது.

" மாமானுக்கு இம்புட்டு மருவாதி குடுக்கிறீங்களே சந்தோஷம் தாண்டா" என்றவன், " ஏபுள்ளை , மந்திரி பொண்டாட்டி ,நாளைக்குக் கூட்டம் போட்டுருக்காகளே, எத்தனை குதிரைன்னு கணக்கெடுப்பாக, நமக்கு எதுவும் வேண்டுதல் இருக்கா" என வினவினான் .

"வேண்டுதல் இருக்கோ இல்லையோ, எல்லாரும் நல்லா இருக்கனுமுன்னு அய்யனை வேண்டிக்கிட்டே குடுத்துடுவோம் மச்சான். ஒரு குதிரைக்கும், அடுக்கு பானைக்கும் கூட்டத்தில் கணக்கு எடுக்கையிலையை ஆர்டர் சொல்லிடு. நான் வள்ளிக்கிட்ட பேசிக்கிறேன்" என யோசனை சொன்னாள்.

" சிட்டு, ஐஞ்சு பானை அடுக்குக்கே சொல்லு, அது போதும். நிறையவெல்லாம் உன்னால சுமக்க முடியாது" என அய்யனாரும் யோசனைச் சொன்னார்.

" ஏப்பா, நான் என்ன அதைக் கூடத் தூக்கமுடியாம குறுக்கு செத்தவளாவா இருக்கேன்" எனவும்

அய்யனார் பதில் சொல்லும் முன், " ஏ புள்ளை, மகள் கஷ்டப்படக் கூடாதேன்னு, பெரிசு கவலைப் படுது ஒத்துக்குவேன்" என வேலுச் சொல்லவும், வாயைக் கோனை வழித்துத் திரும்பிக் கொண்டாள் சிந்தா.

அந்தி சாய்ந்து இருள் கவ்வும் நேரத்தில் வந்து சேர்ந்த முத்துவின் முகத்தில் பலவித உணர்வுகள் கலந்து கட்டியிருந்தது. வேக வேகமாக அந்தப் பாதையில் நடந்து வந்தவள் , சிந்தாவின் கேள்விக்குச் சுருக்கமாகப் பதில் தந்து விட்டு, " கசகசன்னு வேர்த்து கிடக்குக்கா, குளிச்சிட்டு வந்துடறேன்" எனப் பேகை வைத்துவிட்டு, ஒரு நைட்டியோடு புழக்கடை பக்கம் சென்றாள். பத்து நிமிடத்தில் குமரன் தின்பண்டங்கள் நிறைந்த பையைக் கொண்டு வந்து சிந்தாவிடம் தந்தவன், " முத்து, சக்திக்காக வாங்குச்சு. கார்லையே வச்சிட்டு வந்துடுச்சு" என நீட்டினான்.

" இப்பவே அவசரமா கொண்டு வரனும்னு என்னங்கையா, நாளைக்கு வரும் போது கொண்டு வரலாம்ல" என்றபடி வாங்கிக் கொண்ட சிந்தா, சிவநேசன், மீனாவைப் பற்றியும் கேட்டாள்.

" வந்துட்டாங்க. பெரியம்மாவுக்கு நிம்மதி. அண்ணனுமே இப்ப தெளிவா தெரியுது" என்று மற்றவரை ஆராய்ந்து சொன்னவனின் கண்களில் இன்று ஒரு தவிப்புத் தெரிந்தது. அதை மறைத்தவன், " நாளைக்குக் கிராம சபை கூடுதில்ல, அதில சீமைக் கருவைப் பத்தியும் எடுத்துச் சொல்லலாம்னு இருக்கோம்" என முத்துவையே எதிர்பார்த்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். சிந்தாவுக்கும் ஏதோ சரியில்லை எனப் பட்டது. மதுரை சென்று வருவதற்குள் இவர்களிடையே நடந்தது என்ன, மீனாவின் வருகை, கிராம சபைக்குக் கூட்டம், சிந்தா மீது சிவகாமியின் ஓட்டுதல் என்ன கலகத்தை உருவாக்கும் , பொறுத்திருந்து பார்ப்போம்.

Monday, 26 July 2021

சிந்தா -ஜீவநதியவள் -6

 சிந்தா -ஜீவநதியவள் -6

இந்தப் பூவுலகில் சில மனிதர்களின் பிறப்பானது பூர்வ ஜென்ம பயனாக நல்ல குணங்களான தாய்மை, கருணை , மறப்போம், மன்னிப்போம் என்ற தயாளகுணத்தோடே பிறந்து வந்துவிடுவர். குன்றின் மேல் இட்ட விளக்கு தனது பிரகாசத்தைத் தந்தே தீரும் என்பது போல் இவர்களும் தங்களாலான நல்லதைச் செய்தே தீருவர். அதன் பின் விளைவுகளைப் பற்றிய அச்சப்பட மாட்டார்கள்.

சிந்தாவும் அது போன்ற ஒரு ஜீவன் தான், விதி அவளைப் பதின்மவயதில் தம்பி தங்கைகளுக்கே தாயாக்கியது எனில் அவளது பிறவிக்குணம் அதனை மெருகேற்றியது. கணவனிடம் தனது மனதைத் திறந்து அதன் ரணங்களைக் காட்டிய பின் அவனது ஆதரவு அதற்கு மை பூசியது போல் குளிர்ந்து தான் போனது. அதில் ஒரு நிம்மதியும் இருந்ததை உணர்ந்தாள். அன்று இரவு புழக்கடையிலிருந்து வீட்டுக்குள் சென்று, சிணுங்கிய மகளைப் பசியமர்த்தி , மகனை நேராக இழுத்துப் போட்டு, ஒழுங்குபடுத்திப் படுத்த போதும், நித்திரை வசமாகவில்லை.

பௌர்ணமி ஒளி சாளரம் வழியே அவர்களுக்குத் தேவையான வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அவள் ஒருக்களித்துப் படுத்து அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கவும், " என்னா புள்ளை, புதுசா பார்க்கிற மாதிரி பார்க்குற . பார்வையெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு " என்றவனின் முகமும் கனிந்திருந்தது.

" ஒண்ணும் இல்லை மச்சான், இத்தனை நாள் ஏன் இதையெல்லாம் சொல்லி மனசை ஆத்திக்காம போனம்னு நினைச்சேன்" என்றாள்.

" இன்னுமே இருக்குது புள்ளை, நடந்த விசயத்துல சிவநேசன் மேல என்ன தப்பு இருக்குது, நீ அவரைப் பார்த்து ஏன் ஒதுங்கிப் போற. துஷ்டனைப் பார்த்துத் தான் புள்ளை ஒதுங்கிப்போகனும். நல்லவனைப் பார்த்து இல்லை. ஆனால் நீ நல்லவன் குடும்பத்தை ஒதுக்கி வச்சு, துஷ்டன் குடும்பத்துக்கு உதவி பண்ற " என வேலு எடுத்துச் சொல்லவும்,

"அது எப்பிடி மச்சான், நான் எல்லாரோடவும் ஒரே மாதிரி தான் பழகுறேன், யார் மேலையும் எனக்குக் கோபமெல்லாம் கிடையாது." என அவள் வாதாடவும்.

" ஊர்ல இருக்க எல்லாரோடையும் பழகுறிக சரி, பெரிய வீட்டுக்காரவுகளைத் திரும்பியாவது பார்த்திகளா. ஒதுங்கித் தான் இருக்கீக." எனவும்.

"ம், நீ சொல்றதும் நிசந்தான் மச்சான், கங்காவும் அவுக சொந்தக்காரவுகளும் என்னை அவமானப்படுத்தவும், அவுக்க வீட்டு பக்கத்துல இருக்குதுன்னே, சொந்த வீட்டை விட்டு வந்தோம். அப்பவும் பெரியய்யா விசயத்தைப் பெரிசாக்ககூடாதுன்னு நினைச்சாக. பெரியம்மாளும் சின்னையாவும் என் மானத்தைக் காப்பாற்றத் தான் நினைச்சாக, ஆனாலும் அவுகளை அவுகளை முறிச்சுக்கிட்டோம். ஆனால் சோமு பயலோட அக்கா, அம்மாக்கூடப் போக்கு வரத்தா பேச, பிடிக்கத் தானே இருக்கோம். " என யோசித்தாள்.

" அது தான் புள்ளை, அந்தப் பய என்ன செஞ்சான்னு நீயோ, அவரோ வெளியே சொல்லியிருக்க மாட்டீகல்ல. அந்த ஐயாவோட சேர்த்து தான உன்னைப் பேசினாக. ஊர் என்ன சொல்லுமுன்னே நீயும் பேசறதில்லை. ஆனால் இதுவே மனசைக் குத்தி பாரமா தான் இருக்கும். இன்னைக்கு நான் வரும் போது , சிவநேசனை கைப்புள்ளையோட நின்றவரை தெருவில் இல்லை நிறுத்தியிருந்த. இது எனக்குத் தெரிஞ்ச சிந்தா இல்லையே. அவுக நம்ம வீட்டுக்குள்ள வரமாட்டாகச் சரி, ஆனால் வீட்டு வாசலுக்காவது கூப்புடுலாமுல்ல. இதுவே வேற யாரா இருந்தாலும் கட்டாயம் உள்ள கூப்பிட்டு இருப்பியா இல்லையா " என வேலு கேட்கவும்

" ஆமாம் மச்சான், ஒரு பொம்பளைக்கு நாலு பேரு என்ன பேசுவாகங்கிறது தான் பெரிசா தெரியுது ,இத்தனை நாள் இது விளங்கலை பாரேன் ,அப்ப அப்ப நீயும் அறிவாளித்தனமா தான் பேசுற " எனத் தன் செயலை உணர்ந்து கணவனைச் சிலாகித்தவளை அவன் முறைத்தான்.

" ஏய் புள்ளை, நாங்க பொறப்புலருந்தே அறிவாளி தான். கைலி கட்டி அலைஞ்சா அறிவு இல்லைனு அர்த்தமா ?" என எகிறினான்.

" ஆத்தி , அம்புட்டு அறிவு இருக்கவரு பத்தாவதே ஏன் தாண்டலையாம் " என அவளும் வம்பு பேசவும்.

" அடியே , என் சின்னாத்தா என்னைப் பள்ளியோடத்துக்கே போகவிடலைடி. அப்புறமில்லை, படிக்கப் பாசாக." என அவன் சால்ஜாப்பு சொல்லவும். அவளது முகம் கேலியாக மின்னியதைக் கண்டவன், " அடியே, இப்ப என்னாடி கொனையா போச்சு, நான் சம்பாதிக்கலையா, சம்சாரியாகலையா, உனக்கு என்னைக் குனை வச்சேன், என்னாடி செய்யனும் " என அடுக்கிக் கொண்டே போனான், புள்ளை, அடியே ஆனதிலலேயே அவனைக் கண்டு கொண்டு கண்கள் மின்னச் சிரித்தாள், அதில் கரைந்த வேலு "ஆத்தி மோகினியாயிட்டேளே என் பொன் சாதி, இனி எப்படித் தப்பிக்கப் போறேன் " எனக் கேலி செய்ய நிஜமாகவே மோகினியாய் அழகில் மட்டுமின்றி அன்பான மோகினியாய் மாறி அவனை ஆட்கொண்டாள் அவனின் சிந்தாமணி.

அன்றைய கணவன் மனைவி மனம் திறந்த பேச்சுக்குப் பிறகு சிவநேசனோடு பழகுவதற்கும் அவளுக்குத் தயக்கம் இல்லை . கங்கா வந்த அன்று இரவில் மகாலிங்கம் தங்கையும் சம்பந்தியுமான வேதாவுக்குப் போன் செய்து அடுத்த நாள் தன் மகன் வந்து மருமகளை அழைத்துக் கொள்வான் எனச் சொல்லவும், ஒரு வைத்தியரிடம் காண்பிக்க உள்ளதாகவும், பத்து நாள் தவணைக் கேட்டார். மகாலிங்கம் உறுதியாக நிற்கவும், இல்லண்ணன், கட்டாயம் அனுப்பி வச்சிடுறேன், என வாக்குத் தந்தவர், சிவநேசன் மகளைத் தூக்கி வந்ததற்கும் குறைபட்டார்.

கங்கா வந்ததற்குப் பிறந்த வீட்டிலிருந்து, "நம்ம ஊரு கனமாக் கத்திரிக்காய் அத்தைக்கு ரொம்பப் பிடிக்கும். மிளகாயும்,மல்லியும் மருதையை விட இங்க சல்லிசா இருக்கே. இது மாதிரி நாட்டு மல்லி அந்த ஊரில் இல்லை" என ஏதேதோ பேசி கார் தானே சொமக்குது மூட்டைகளைக் கட்டினாள்.

" மிளகாய், மல்லி, எண்ணெய் இதெல்லாம் சம்பந்த புறத்துக்குச் சும்மா கொடுக்கக் கூடாதடி. காசு குடுத்திட்டு வாங்கிட்டுப் போ" என ராஜேஸ்வரி சொல்லவும் " எனக்கு அது தெரியாதா என்ன, அது தான் சாஸ்திரத்துக்கு இந்தக் காசை வச்சுக்க" எனக் கணவனின் பரசிலிருந்த கத்தை நோட்டுகளை ஆராய்ந்து ஒத்தை ரூபாயை எடுத்து அம்மாவின் கையில் திணித்துச் சென்றாள். ராஜேஸ்வரி அவளை முறைக்கவும், " எனக்குக் கொடுக்காம யாருக்குக் கொடுக்கப் போற, பத்தாத குறைக்கு உன் மகனும், மருமகளும் அங்கதானே இருக்காக" என்றுவிட்டுச் செல்லவும், சமையல்காரம்மா அவரைப் பார்த்துச் சிரித்தார். அவள் சென்ற பிறகு ஒருவாரத்துக்கு இது தான் பேசு பொருளாக இருக்கும். அவள் வந்து சென்ற பிறகு ராஜேஸ்வரி, வீட்டில் இதைக் காணோம் அதைக் காணோம் என நூதனமான அல்லது புதிதாக வாங்கி வைத்திருந்த பொருட்களைக் காணோம் எனப் போனில் மகளிடம் விசாரிப்பார். அத்தனையும் ஔரங்கசீப் படைத் தளபதி மாலிக்காபூர் போல் கங்கா தான் பிறந்த வீட்டிலிருந்து கொள்ளையடித்துச் சென்று இருப்பாள்.

சிவநேசன் மகளை அம்மாவிடம் பழக வைப்பதற்காக மேலும் இரண்டு மூன்று தினங்கள் தங்கவும், சிந்துஜா அப்பத்தாவைப் பழகியதோ இல்லையோ சிந்தா வீட்டைப் பழகிக் கொண்டது. குமரன் வண்டியை எடுத்தாலே போக வேண்டும் என அடம்பிடித்தது.

தென்வயலிலும் சீமைக்கருவையை வெட்டும் வேலையை ஆரம்பித்து இருந்தனர். ஊருக்குள், அதற்குள் தென்வயலை சுத்தம் செய்யறாக, அய்யாவுக மகன் புதுசா ஏதோ செய்யப் போராகலாம் என்ற பேச்சுப் பரவியிருந்தது.

ஒரு நாள் மதிய வேலையில் , ஜேசிபி வரும் என வந்து காத்திருந்தான் சிவநேசன். அய்யனார் வயலில் திரிய, "வண்டி வந்தா, நான் கூப்புடுறேன்ங்கய்யா. வெயில்ல காயாதீக.நீங்க நம்மூட்டு வேப்பமர நிழல்ல போய் உட்காருங்க. உங்களுக்காகப் புதுச் சேரெல்லாம் வாங்கிப் போட்டுருக்காக. மருமகனும் சாப்பாட்டுக்கு வந்திருக்குதுங்கய்யா, சங்கடப்படாம செத்த நேரம் உட்காருங்க. நான் வண்டி வந்தோடன வந்து கூப்புடுறேன் " என அய்யனார் சிவனேசனை அனுப்பி வைத்தார்.

வேலுவும் இருக்கிறான் எனத் தெரிந்த பின்னே தயக்கமின்றிச் சிவநேசன் சிந்தா வீட்டுக்கு வந்தான். வேலு சாப்பிட்டு முடித்து மரத்தடியில் அமர்ந்து மகளைக் கொஞ்சிக் கொண்டிருந்தான். நேசனைப் பார்க்கவும், " வாங்கச் சார். உங்க மக எங்க. தூங்குறாகளா " என விசாரிக்க , " இல்லைனா தனியா வரவிடாதே. " என ப்ளாஸ்டிக் சேரில் வந்து உட்கார்ந்தான். சத்யா தூக்கத்துக்குச் சிணுங்கவும் வேலு குரல் கொடுக்க, சிந்தா இரண்டு பெரிய சில்வர் டம்ளர்களில் நீர் மோரில் உப்பு, கருவப்பில்லை, துளி பெருங்காயம் கலந்து கொண்டு வந்து , " நீர் மோர், எங்க வீட்டில எல்லாம் குடிப்பீகளா," என அவள் சந்தேகமாகச் சிவநேசனைக் கேட்கவும், முதலில் மறுக்கப் போனவன், வாங்கிக் கொண்டான். வேலுவிடமும் ஒரு டம்ளரைத் தந்துவிட்டு, மகளைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.

" நான் சாப்பாட்டுல தயிர் மோர் ஊத்திக்க மாட்டேன். வெயில்லையே திரியறேன்னு சாப்பிட்டவுடனே என் தொண்டையில கவுத்திடுவா. நீங்க இருக்கீகளேன்னு இன்னைக்குக் கைல குடுத்துட்டு போயிருக்குது" என வேலு ரகசியம் சொன்னான்.

" ஏன் சின்ன வயசிலிருந்தே இதெல்லாம் பிடிக்காதா" எனச் சிவநேசன் கேட்கவும், " யார் சார் நமக்குப் பால், மோர் எல்லாம் ஊட்டி வளர்த்தா" எனத் தன் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

சிந்தா வெளியே வரவும், " சார், இந்தப் புள்ளை வரட்டும் தான் உட்கார்ந்து இருந்தேன். நீங்க இருங்க. நான் ஒரு லோடு ஏத்த போகனும். நான் போயிட்டு ஓடியாந்துருறேன் ." எனக் கிளம்பினான். சிவநேசனும் , " அப்ப நானும் கிளம்புறேன். வண்டி வந்திருக்கும் " எனக் கிளம்பவும்.

" ஏ புள்ளை, உன்னை மோகினி பேய்னு சொன்னது நிசந்தான் போல, இங்க பாரு சாரும் பயந்து ஓடுறாரு" என அவன் கேலி பேசவும், சிந்தாவுக்குக் கோபம் வந்தது, ' எப்ப பேசற பேச்சை எப்ப பேசுது, அப்ப இது மனசில் சந்தேகம் இருக்கோ வேவு பார்க்குதோ ' எனப் பலவாறு சிந்தை ஓட சிந்தாமணி வெறிக்கவுமே, ' ஆத்தி தப்பான நேரம் சொல்லிட்டோம் போலிருக்கே ' என மனதில் அரண்டவன்,

" ஏ புள்ளை நான் தப்பா சொல்லலை, உன்னைப் பார்த்து அரண்டு போறாருன்னு சொல்றேன். என்னா சார், நீங்க சிந்தாமணியைப் பார்த்துப் பயந்து போய்த் தானே கிளம்புறீக" என நேசனையும் சப்போர்ட்டுக்கு அழைக்கவும்.

" நான், உங்க சத்யா மாதிரி இருக்கையிலிருந்து சிட்டுவை, ஐ மீன் சிந்தாவை பார்க்கிறேன். சின்ன வயசிலையே தம்பி, தங்கச்சிக்கு அம்மாவான சிந்தாவை நான் பிரமிச்சு தான் பார்க்கிறேன். எனக்கு மோகினியாவெல்லாம் தெரியலை. நல்லா அம்மாவா தான் தெரியுது" என உணர்ச்சி வயப்பட்டு நேசன் சொல்லவும்,

" மோகினியை விட ஆத்தா இன்னும் டேஞ்சரு, உங்களையே மிரட்டுவா " எனச் சிரித்த வேலு, " நீங்க சங்கடப்படாம இருங்க சார், நான் வாரேன்" என மனைவியிடம் நம்பிக்கையான பார்வையையே பதிலாகத் தந்து சென்றான்.

" மச்சான் ஒரு நிமிசம் நில்லு" என உள்ளே ஓடியவள் ஒரு பையோடு வந்தவள், அவனருகே சென்று, வரிசையாக மளிகை சிட்டையை வாசித்து, இதெல்லாம் வாங்கியா எனப் பேச்சுக் கொடுத்தவள், வண்டி மறைவில் சிவநேசன் பார்வையிலிருந்து மறைந்து, வேலுவின் கன்னத்தில் , கணப் பொழுதில் இதழொற்றி அவனை விட்டு விலகி ஓடினாள். வேலு ,அதிர்ச்சியும், மகிழ்ச்சியுமாக ,'வேர்த்து வடியுது, இப்பவே என்னவாம்' எனச் சிலிர்த்து, அவளைப் பார்த்து கண்ணடித்து விட்டே வண்டியை எடுத்துச் சென்றான். இது அவள் மேல் அவன் காட்டிய நம்பிக்கைக்கான அன்புப் பரிசு.

வேலுவை அனுப்பி விட்டு வந்து திண்ணையில் முழுப் புளியை ஒரு சொலகில் வைத்துக் கொண்டு, அருவாள் மனையில் அதனை ஒவ்வொன்றாக அரிந்து, அதன் கொட்டை நார்களைத் தனியாகப் பிரித்து மற்றொரு சொலகில் போடும் வேலையைச் செய்ய அமர்ந்த சிந்தாவிடம், சிநேகமாகப் புன்னகைத்த நேசன், " உன்னை இப்படிச் சந்தோஷமா பார்க்கிறதுக்கு எனக்கு ரொம்பத் திருப்தியா இருக்கு சிட்டு." என்றான்.

" ஆமாங்கைய்யா, என் மச்சான் ரொம்ப நல்ல மனுசன்" என ஒரே வரியில் தன் மகிழ்வின் ரகசியத்தைச் சொன்னாள்.

" நீ அன்னைக்கு நடந்த சம்பவத்தால அவசரப்பட்டு ஒரு முரடனைக் கல்யாணம் பண்ணிகிட்டனு நான் கவலைப்பட்டேன். " என்றான்

" ஏங்கைய்யா, நான் இரண்டு புள்ளைகளைப் பெத்துச் சந்தோஷமாத் தான் இருக்கேன். நீங்க என்னை நேரா பார்க்கலைனாலும் கேள்விப் பட்டு இருப்பீங்கல்ல " என்றாள்.

" நானும் தான் புள்ளை பெத்துட்டேன். அதுக்காகச் சந்தோசமா இருக்கம்னு , வெளி உலகத்துக்கு வேணா சொல்லிக்கலாம்" என அவன் வெற்றுக் குரலில் சொல்லவும் சிந்தா துணுக்குற்றாள்.

" என்ன படக்குனு இப்படிச் சொல்லிப்புட்டீக. நானும் உங்க வீட்டுக்காரம்மாவைச் சின்னதிலே திருவிழாவுக்கு வந்தப்பவும், உங்க கல்யாணம் முடிஞ்சு வந்தீகளே, அப்பவும் பார்த்திருக்கேனே. விளக்கி வைச்ச குத்துவிளக்காட்டமா, திருத்தமா அம்புட்டு அழகா, அமைதியா இருப்பாக" எனச் சிந்தா தன் அனுமானத்தைச் சொல்லவும்.

" அதெல்லாம் அப்படித் தான் அம்சமா இருப்பா. சின்னதிலையே, எனக்கு மட்டும் முகத்தைக் காட்டாமல் மறைஞ்சே திரியும். அதுலையே அப்பவே மீனூ மேல எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. அவளுக்கும் என் மேல ஆசையிருக்குன்னு எங்க அத்தை சொன்னதை நம்பி தான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். " என்ற நேசன், "சரி அதை விடு, அவரவருக்கு விதிச்சது தானே நடக்கும். நீ வேலுவோட நிறைவான வாழ்க்கை வாழுறதே எனக்குச் சந்தோசம்" என எழுந்து போக முயன்றான்.

" சின்னைய்யா" எனக் குரல் கொடுத்த சிந்தா, " சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீக, புருஷனோன அன்பு , எப்படியாபட்ட பொம்பளையையும் மாத்தும் பாக. என்னை அதிலிருந்து மீட்டு இன்னைக்கு வாழவச்சதே என் மச்சானோட அன்பு தான். என் மச்சான் மட்டும் இல்லைனா அடுத்த நாளே ரயில் ரோட்டுல என் பொணம் கிடந்திருக்கும் " எனவும் சிவநேசன் அதிர்ச்சியாய் அப்படியே மீண்டும் அமர்ந்து விட்டான்.

" என்ன சிட்டுச் சொல்ற, அதுக்காகத் தற்கொலை பண்ணிக்கப் போணியா?. இது நீ நம்ம நட்புக்குச் செஞ்ச அநியாயமா தெரியலை. அது மட்டும் நடந்திருந்தா, நீயே என்னை மோசமானவன்னு ருசுபடுத்தின மாதிரியில்ல ஆயிருந்திருக்கும். உன்னைப் பக்குவமான புள்ளைனு அம்புட்டுப் பெருமை பட்டுருக்கேன். நான் உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை" என்ற சிவநேசனின் மடை திறந்தது போல் கொட்டிய வார்த்தைகளும், அவன் உடல் மொழியுமே அவனது பதட்டத்தைக் காட்டியது. சிந்தா தலை குனிந்திருந்தவள், தயக்கமாகவே நிமிர்ந்து,

" அது தான் ஒண்ணும் நடக்கலைல விடுங்க" எனச் சமாதானம் சொன்னவள், அவனது வரிசையான கண்டன பேச்சுகளையும், அறிவுரைகளையும் அமைதியாகக் கேட்டுவிட்டு,

"அதுதாங்கய்யா பொம்பளை மனசு. ஒரு விசயம் மனசில பதிஞ்சிட்டா, அது அம்புட்டு சுளுவுல போயிடுமா. இந்த வீட்டுக்குள்ளையே எத்தனையோ நாள் அடைஞ்சு கிடந்திருக்கேன். நான் என்னமோ எங்க வீட்டு ஆளுகளைத் தாங்கிற மாதிரி பேசுங்க. உண்மையில இவுக எல்லாரும் இல்லையினா. நான் எதுவுமே இல்லை. இப்ப உங்களோட உட்கார்ந்து தயக்கமில்லாமல் பேசறதே, என் மச்சான் சொல்லித் தான். அது தான் நலவுகளைத் தள்ளி வச்சிருக்கேன்னு எடுத்து சொல்லுச்சு" எனச் சிந்தா வேலு பேசியதைச் சொல்லவுமே, சிவநேசனுக்கு ஆச்சரியம் தான்.

மனிதர்களை அவர்கள் உருவத்தை வைத்து எடை போடக்கூடாது என்ற தெளிவு வந்தது. ' மீனாவையுமே இன்னமும் ஆழமாகக் கவனித்திருக்க வேண்டுமோ, அவள் வீட்டினர் பார்த்துக் கொள்வார்கள் என வந்தது தவறோ' என்ற சிந்தனை சிவநேசன் மனதில் ஓட ஆரம்பித்தது. சிந்தா வேலுவை பற்றிப் பெருமை பேசியே , நேசன் தன் மனைவியைப் பற்றிச் சிந்திக்கும்படி தூண்டினாள். ஜேசிபி வந்துவிட்டதாகப் போன் வரவும் வயலுக்குச் சென்றவனும் இதைப் பற்றியே யோசித்தான். உடனே மீனாவைப் பார்க்கும் ஆவல் தோன்ற போன் அடித்தான். அவனது அத்தை தான் போனை எடுத்தார். " அவள் மாத்திரை போட்டுட்டு தூங்குறா. இராத்திரியெல்லாம் எதையோ பறிகொடுத்த மாதிரி உட்கார்ந்திருக்கா தம்பி. உங்களுக்கு எங்க மேல எந்த மனஸ்தாபம் இருந்தாலும் எங்ககிட்ட காமிங்க. அவகிட்ட காட்டாதீக. பாப்பா தொட்டிலைப் பார்த்தும் வெறிக்கிறாளே தவிர வேற எதுவும் கேக்குறா இல்லை" என அவனது அத்தை ஒரு மூச்சு மகளைப் பற்றியே பேசி அழுது தீர்த்தார். " சிவகாமி, அம்மாகிட்ட பழகிடுச்சு, நான் இரண்டு நாள்ல கிளம்பி வர்றேன்" எனப் போனை வைத்தான்.

சிவநேசன், தென்வயல் பொறுப்புகளை அய்யனாரிடம் ஒப்படைத்து விட்டு,மற்ள விசயங்களைக் குமரனைக் கேட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டு, அம்மா தந்த தைரியத்தில் மகளை அவரிடம் ஒப்படைத்துவிட்டு மனைவியைப் பார்க்க மதுரைக்குக் கிளம்பினான். அங்கே வழக்கத்தை விட மீனா அவனிடம் வித்தியாசமாக , அருகே வந்து, வந்து அமர்ந்துக் கொண்டாள். அவனும் அவளை உணர்ந்தவனாக ஆதரவாகவே நடந்து கொண்டான்.

குமரன், அண்ணன் மகளைப் பெரியம்மாவால் சமாளிக்க முடியாத நேரங்களில் சிந்தா வீட்டுக்குத் தூக்கி வந்து விடுவான். முத்துவும் செமஸ்டர் பரிச்சைக்குப் படிக்க, போக வர என இருந்ததால் பெரும்பாலான நேரங்கள் வீட்டில் தான் இருந்தாள். அதனால் இரண்டு குழந்தைகளைப் பார்ப்பது அவர்களுக்குச் சிரமமாக இல்லை. வள்ளியும் வேலை முடிந்து ஓய்வு நேரத்தில் சிந்தாவின் வீட்டுக்கு வந்து விடுவாள். குழந்தைக்காக ஏங்கும் அவளுக்கு, இரண்டு குழந்தைகளை ஒரே நேரத்தில் கவனித்துக் கொள்வது சந்தோஷமான விசயமாக இருந்தது. குமரன் அவர்களிடம் இயல்பாகப் பழகினான்.

இந்தப் பத்து நாளில் சீமை கருவை அவர்களது வாழ்வை எவ்வளவு பாதிக்கிறது என்பதைப் பற்றி எடுத்துச் சொல்லி, அவர்களே அதற்கான பிரச்சாரம் செய்யுமளவு மாற்றி வைத்திருந்தான்.

முற்பகல் நேரத்தில், சிந்தா தன் மகளைக் காலில் போட்டு, வெதுவெதுப்பான நீரில் ,வள்ளி தண்ணீரை மொண்டு ஊற்ற, ஊற்றச் சிந்தா கை கால்களை நன்கு உருவி ஊற்றிக் கொண்டிருந்தாள். சத்தியா தண்ணீர் ஊற்றும் சுகத்தில் கிறங்கிப் போய், சுகமாகக் குளித்துக் கொண்டிருந்தது. அந்த நேரம் குமரன் அண்ணன் மகளைத் தூக்கி வந்தான். முத்து அவனைப் பார்த்து முறுவலித்து விட்டு, சிந்துவை கை நீட்டி அழைத்தாள். அது சித்தப்பாவிடம் ஒட்டிக் கொண்டு, வர மறுத்தது.

" சரி போ, நீ ஒண்ணும் வரவேண்டாம். சித்தப்பாவும் மகளுமே கொஞ்சிக்குங்க" என்றாள்.

" அதில உனக்கென்ன பொறாமை" என அவன் ரகசியமாகக் கேட்கவும், முத்துவுக்கு மூச்சடைத்தது. வேகமாக அக்காவைத் திரும்பிப் பார்த்துவிட்டு, இரண்டு அடி பின்னால் சென்றாள். அவன் ஓர் சிரிப்போடு, " இந்தா புடி" என அவள் கைகளில் அண்ணன் மகளை வைக்க, அவன் அருகாமையிலும், கை உரசலிலும் பயந்து தான் போனாள்.

சிந்து வர மறுத்து அடம் செய்ததைக் கூட வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டு வீட்டைச் சுற்றி, ஆடு மாடுகளைக் காட்டவும், சிந்துஜா அமைதியானது, தூக்கி வைத்திருந்தவள் தான் பதட்டமானாள். குமரன் ,அவள் நகரவும், புழக்கடையில் சிந்தா குரல் கேட்க, முன்புறமாகவே குரல் கொடுத்துக் கொண்டே வரவும்.

" குமரன் சார், இங்க ஒரு குமரி குளிச்சிட்டு இருக்காக. நீங்க அங்கையே இருங்க" எனக் கேலியோடு குரல் கொடுத்தாள் வள்ளி.

" ஓ சாரி, சாரி" என அவன் முன்புறம் சென்றவனை, " ஐயா, அவ வேணும்னு சொல்றா. சத்யாவுக்குத் தான் குளிக்க ஊத்துறேன். நீங்க சும்மா வாங்க" என்றாள் சிந்தா.

" சிந்தா சிஸ், குளிக்க ஊத்தறதிலையும் மேஜிக் பண்றீங்க. இப்ப தான் எங்க சிவகாமிய குளிக்க வச்சாங்க. எம்புட்டு அழுக அழுதுச்சு. இங்க சத்யா சிரிச்சுகிட்டு இருக்குதே" என வியந்தான்.

"சரியா சொன்னீங்க ஸார் நிசமாவே , சிந்தா மாயக்காரி தான். இவ கைப்பட்டா சுளுக்கு, கை வலி, கால் வலி எல்லாம் பறந்து போகும். ஆயில் மசாஜ், தலைக்கு மட்டும் தேச்சுவிட்டாலே அம்புட்டு சுகமா இருக்கும். வேலு அண்ணன் குடுத்து வச்சவரு. சனிக்கிழமையான புல் ஆயில் மசாஜ் தான். கறி என்ன, சூப் என்ன,ஒரே குசாலா தான் இருப்பாக" என வள்ளி கேலி செய்யவும். சிந்தா , தண்ணீர் அள்ளி வள்ளி மீது ஊற்றி ," சும்மா இருடி. அவுககிட்ட போய் எதைப் பேசறதுன்னு விவஸ்தை வேணாம்" எனத் திட்டினாள்.

" எல்லாரும் வேலு ப்ரோ மாதிரி குடுத்துவச்சவங்களா என்ன. சிந்தா சிஸ் , சகலகலாவல்லி , அப்படியே வள்ளி சிஸ், உங்க தங்கச்சி இவங்களுக்கும் இந்த வித்தையைச் சொல்லிக் குடுங்க, இன்னும் இரெண்டு ஆள் சந்தோசமா இருக்கட்டும்" என முத்துவுக்கும் கேட்கும்படி சத்தமாகச் சொல்லவும், சிந்துஜாவை கொஞ்சிக் கொண்டிருந்த முத்து, "நினைப்புதான், பொழப்பைக் கெடுக்கும், போதும் ஒர்ருக்கு ஒரு சிந்தா போதும்" என வெடுக்கெனச் சொன்னாள். குமரன் யோசனையாகப் பார்க்கவும்,

" ஏன் ஐயா, நீங்க வேற, முத்துச் சொல்றதும் சரி தான், வைத்தியத்தைக் கத்துக்கிட்டா, சும்மா உட்கார மனசாட்சி இடம் கொடுக்காது, நேரம் காலம் இல்லாமல் ஓடத் தோணும், எதோ என் மச்சான் பொறுத்துப் போகுது " என்ற சிந்தாகுளித்து முடித்த சத்யாவை தூக்கித் தர, " வாடி என் செல்லக்குட்டி. அத்தை உனக்கு இன்னைக்குச் சிங்காரிக்கிறேன்." எனக் கொஞ்சியபடி வள்ளி ஒரு துண்டில் சுற்றி வாங்கிக் கொண்டு முன்புறமே வந்து . திண்ணையிலிமர்ந்தே சத்யாவுக்கு மேக்கப் நடந்தது. பொட்டாக சிறட்டையிருந்து தொட்டு கறுப்பு பொட்டை,நெற்றியிலும், கன்னத்திலும்  வைத்து விட்டாள் ,அது மினுமினுத்துக் கொண்டிருந்தது. 

 நாட்டுக் கருவக்காய்களைக் கொஞ்சம் நீர் ஊற்றி இடித்து வடித்துத் தேங்காய் உடைத்த கொட்டாங்குச்சிகளில் ஊறவைப்பர். ஊறிய நீரை வெய்யிலில் காயவைப்பர். அதன் சாறு கெட்டியானதும் எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ளும் பொட்டுக்குப் பயன்படுத்துவர். நன்றாக உலர்ந்து கெட்டியான இதன் பாலில் சொட்டு நீர் ஊற்றிக் குழைந்தும் பொட்டாகப் பயன்படுத்துவர்.அதனைப் பார்த்து குமரன் விவரம் கேட்டவன்,

" இந்த நாட்டுகருவேல மரம் நம்ம ஊரில் இருக்கா" எனக் கேட்டான்.

" இது, அங்கனை ஒண்ணு, இங்கனை ஒண்ணு இருக்கும். ஆனால் சீமைக்கருவை தான் ஊர் பூரா பரவி கெடக்கு. " எனச் சிந்தா சொல்லவும்.

" உங்கள் அப்பாகிட்டச் சொல்லி, நாட்டு கருவேலமரத்தோடு விதையைச் சேகரிக்கச் சொல்லனும்" என்றான்.

" நாட்டுக் கருவேல மரத்துக்கும், சீமைகருவைக்கும் என்ன வித்தியாசம்" எனச் சிந்துவைத் தூக்கி ஒரு ரவுண்டு சுற்றி அலைந்து விட்டு. அங்கு வந்த முத்து, அவனிடம் சமாதானமாகப் பேசுவதற்காகக் கேட்டாள்.

" நாட்டுக் கருவேலமரம் , நம்மை நாட்டு மரம். இதில் நிறைய மருத்துவக் குணம் இருக்கு. பெரிய உயரமான மரமா அடி கனமான மரமா வளரும், அது பட்டை, பூவு, காய், பிசினுன்று எல்லாப் பாகமுமே யூஸ்ஃபுல்லானது. அந்த மரத்தை வச்சு, விவசாயக் கருவி கூடச் செய்வாங்க. நல்ல உறுதியானது. ஆழும், வேலும் பல்லுக்கு உறுதின்னு சொல்லுவாங்களே, அந்த வேலமரம் இது தான். ஆடுமாடுக்கு நல்ல தீனி, நிறையப் பொருட்கள் தயாரிக்கலாம்.

ஆனால் சீமைக் கருவை ஜஸ்ட் ஆப்போசிட், பத்தடி உயரம் தான் வரும் விறகு கரி எடுக்க மட்டும் தான் உபயோகம். அது இல்லாமல் சல்லி வேரா பூமில ஊடுருவி தண்ணீரை உறிஞ்சி, இந்தப் பூமியை வறண்ட நிலமா ஆக்குறதே, சீமைக் கருவைத் தான். இதை ஒழிக்கணுமுன்னு தான் நிறைய அமைப்புகள் போராடுறாங்க. " எனக் குமரன் விளக்கவும்.

"ஆத்தி, இம்புட்டு இருக்கா. நம்ம ஊர் பூரா சீமைக் கருவை தான் மண்டிக்கிடக்கு" என்றாள் முத்து.

சத்யா குளித்த அசதியில் கண்ணைத் தேய்க்க, சிந்தா உள்ளே தூக்கிச் சென்றாள்.

" ஸாரே, இந்தப் புள்ளையை இப்படியே தனியா வளர்கிறதா உத்தேசமா. இவுக அம்மா வராதா" என வள்ளிக் கேட்கவும்.

" இல்லை, இல்லை . இன்னும் ஒருவாரத்தில் அண்ணன் அத்தாச்சியைக் கூட்டிட்டு வந்துடுவார். அண்ணன் ஒருவாரம் இங்க வந்துட்டு போனதில அண்ணிக்கிட்ட நிறையச் சேஞ்சாம்." எனக் குமரன் சொல்லிக் கொண்டே, சிந்துவை வாங்கிக் கொண்டான்.

" சரி நான் கிளம்பறேன். பாப்பா அழுதுட்டு இருந்ததேன்னு தூக்கிட்டு வந்தேன்" என்றவன், சிந்து டர்புர் சத்தத்தோடு நேப்பியை நனைக்கவும், " அய்யே, வேலை வச்சிட்டான். நான் கிளம்பறேன்" என்றான்.

சிந்தா வெளியே வந்தவள், தங்கையை மகளின் தொட்டிலை ஆட்டச் சொல்லிவிட்டு, " நல்லா தான். புள்ளையை இப்படியேவா தூக்கிட்டு போவீங்க " என அவனிடமிருந்து வாங்கி அதன் நேபியை கழட்டிப் பார்த்தவள்,

" இதுக்கு எந்தப் பாலைக் குடுக்குறாக, இப்படி வைத்தாளையா போகுது. இப்படி இன்னும் நாலு தரம் போச்சுன்னா புள்ளைக்கு நீர் சத்து இல்லாமல் போயிடும்" என்றவள், உடனடியாக அதனைச் சுத்தம் செய்தவள், " வள்ளி இதைப்புடி. மருந்து எடுத்துட்டு வாரேன்" என 

ஜாதிக்காய், மாசக்காய், பெருங்காயம், வசம்பு ஆகியவற்றை விளக்க எண்ணெய் விளக்கில் சுட்டு எடுத்து வந்தாள். சங்கில் தாய்ப்பாலும் இருந்தது. உரை மருந்தை உரைத்து அதை வழித்துத் தாய்ப்பாலில் கலந்து, வாகாக அமர்ந்து கொண்டு, சிந்துஜாவை மடியில் வைத்து மருந்தை ஊற்றப் போனவள், " ஐயா, நான் பாட்டுக்குக் கரைச்சுட்டேன். குடுக்கலாம்ல" எனக் குமரனிடம் சந்தேகம் கேட்கவும்.

" ஓ தாராளமா குடுங்க. பெரியம்மா என்கிட்ட இதைத் தான் மானா மதுரைப் போனா வாங்கிட்டு வரச் சொன்னாங்க . நீங்களே வச்சிருக்கீங்களே. நல்லதாப் போச்சு. ' எனவும், சிந்துஜாவை மடியில் போட்டு , சங்கில் வைத்திருந்த மருந்தை அதன் நாக்கை அழுத்திக் கொண்டு ஊத்திவிட்டாள். அது ஏற்கனவே உடல் உபாதையிலிருந்து அழ ஆரம்பித்தது. சரியாக அதே நேரம் வேலுவும் வந்து சேர்ந்தான்.

குமரன் தவிப்போடு பார்த்து நின்றான். விசயத்தைக் கேட்ட வேலு. " அட பயப்படாத இருங்க ஸார். நம்ம சிந்தாமணி பாதி டாக்டர். நம்ம பரமக்குடி வைத்தியர்கிட்ட வைத்தியம் பழகினது. சரியாகிடும்" என நம்பிக்கை தந்தான். ஆனால் சிந்துஜா, அழுகையை நிறுத்துவேனா என்றது. மாற்றி, மாற்றித் தூக்கி சமாதானம் செய்தும் முடியவில்லை.

வேலு தான் சட்டென, " ஏ புள்ளை, அதை அமத்துவேன். மருந்து காராம் வாயிலையே இருக்கும். பால்குடிச்சா சரியா போகுது" எனச் சொல்லவும், சிந்தா அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

" நீ யோசனையா தான் சொல்றியா. அவுக யாரு, நம்ம யாரு. பெரியய்யாவுக்குத் தெரிஞ்சா கொன்னு போடுவாக. " எனச் சிந்தா நடுங்கினாள். 

" ஏ புள்ளை, நீயெல்லாம் இரண்டு புள்ளை பெத்தவத் தானே. உனக்கே மனசு கேக்கலை இது அழுகவுமே உன் மார் சேலை நனையுது. இதில போய்ச் சாதிப்பாக்காத" என வள்ளிச் சொல்லவும் தான் குமரனுக்குச் சிந்தாவின் தயக்கம் புரிந்தது.

"சிந்தாசிஸ், நீங்க சாதியை நினைச்சு தான், சிந்துஜாவுக்குப் பால் தர தயங்குறீங்கன்னா. அந்தப் பழியை நான் ஏத்துக்குறேன். தயவு செய்து குடுங்க." எனக் குமரன் கரம் குவிக்கவும், வள்ளி வேலு இருவரும் வலியுறுத்தவும் சிந்தா சிந்துஜாவைத் தூக்கிக் கொண்டு அழுத விழிகளோடு உள்ளே ஓடினாள்.

அம்மாவின் வாசமே அறியாத அந்த ஆறு மாதக் குழந்தை, தாயின் பாலையும் சுவைத்தறியாத அந்தப் பெரிய வீட்டுக் குழந்தைக்கு, சிந்தா அன்று பெறாமலே பெற்ற தாயானாள். அன்று முதல் நேசனின் மகள், சிந்தாவின் வளர்ப்பு மகள் ஆனாள். ஒரு நாள் ருசிக் கண்ட சிந்துஜா, சிந்தாவை விடாமல் பற்றிக் கொண்டது. சிவநேசனுக்கும் தெரியாமல் , அவன் குழந்தை, அவனே தாய்மையின் இலக்கணமாகப் போற்றிய பண்ணைக்காரப் பெண்ணோடு தாய் மகள் உறவை வளர்த்துக் கொண்டது.

பெற்ற குழந்தைக்கு, பால் புகட்ட முடியாதபடி மீனாவின் வியாதி என்ன. எவ்விதம் சிந்துஜா பாதிக்கப்பட்டது. ஒரு வாரத்தில் வரும் அதன் பெற்றோர்கள் இதனை எவ்வாறு எடுத்துக் கொள்வர். பெரிய வீட்டு அய்யாவும், அம்மாவும் எப்படி எதிர்வினை புரிவர். தற்போது தான் சீரான உறவு தொடருமா. அல்லது ஒரேடியாய் அற்றுப் போகுமா. பொறுத்திருந்து பார்ப்போம்.


Saturday, 17 July 2021

சிந்தா-ஜீவா நதியவள் -5

 சிந்தா-ஜீவா நதியவள் -5

சிவநேசன் மகளோடு வீட்டுக்குள் நுழைந்த பொழுது, எப்போதும் தனது அப்பாவுக்காவது மரியாதைத் தந்து அடக்கி வாசிக்கும் அவனது தங்கை கங்கா, இன்று ஓங்கி அவன் மீது குற்றப்பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருந்தாள். ஷோபாவில் அவளது கணவன் கேசவன் அவளது பேச்சுக்கு ஒத்து ஊதுவது போல் அமைதி காக்க, மற்றொரு ஷோபாவில் மாகலிங்கமும், குமரனும் அமர்ந்திருந்தனர். அம்மா ராஜேஸ்வரி சுவறோரம் நின்று கொண்டிருக்க, கங்கா தரையில் சப்பனமிட்டு அமர்ந்து அதிகாரமாகப் பேசிக் கொண்டிருந்தாள். அப்பாவும், மகனும் அடுத்தடுத்து வந்து சேர ஐந்து ,பத்து நிமிட இடைவெளிதான் இருக்கும். அதற்குள் இவ்வளவு பேசுகிறாள் எனில் ஒரு முடிவோடு வந்திருக்கிறாள் எனச் சிவனேசனுக்குத் தெரிந்தது.

சிவநேசன் உள்ளே வரும் போதே அவன் கையிலிருந்த சிந்துஜா, உள்ளே போக வேண்டாம் என அடம்பிடித்தது. இவ்வளவு நேரம் சிந்தா வீட்டில் விளையாடியதில் மகிழ்ந்திருந்ததது, அதையே எதிர்பார்த்தது. அதுவும் போக அத்தை கங்காவின் குரலில் அரண்டு அவள் பக்கம் போகக் கூடாது என்றது. அதைப் பார்த்த குமரன் அண்ணன் மகளை வாங்கிக் கொண்டு அதே சாக்கில் வெளியே சென்றான்.

" அப்பா, நாள் பூரா சிவகாமியைப் பார்க்கிறோம், ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா, அதுக்காக அண்ணன் புள்ளையைத் தூக்கி வந்திடுச்சு. அத்தை என்னை வையிது. நீங்களே கேளுங்கப்பா" என நீலிக் கண்ணீரோடு முறையிட்டாள் கங்கா.

" சரிமா, எங்கயோவா தூக்கிட்டுப் போயிட்டான். நம்ம வீட்டுக்குத் தான் வந்திருக்கான். அம்மா பார்த்துக்கும், இனிமே எங்கப் பேத்தியைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம்" என்றார் மகாலிங்கம்.

" பேத்தியை பார்த்துக்குவீங்கன்னா, என்னப்பா அர்த்தம். அப்ப அத்தாச்சி. அவுகளை ஒத்து வரலையின்னு கழட்டி விடப் பார்க்கிறீகளா" என அவளது பயத்தைக் கேட்கவும்.

" ஏம்மா, நான் எங்க அப்படிச் சொன்னேன், பாப்பாவை இங்கணை அம்மாகிட்ட பழக்கிவிட்டுட்டு, மீனாவை டாக்டர்கிட்ட காட்டச் சென்னைக்குக் கூட்டிட்டுப் போறோம்னு தான் உங்க அண்ணன் சொன்னான். உடம்புக்கு முடியலைனா வைத்தியம் பார்க்கப் போறோம், நீயா எதுக்கு எதையாவது யோசிக்கிற" என மகாலிங்கம் மக்களைக் கடிந்தார்.

" இப்ப உனக்கு என்னடி பிரச்சனை இதுவரைக்கும் எல்லாமே நீயும் உங்க அத்தையும் சொன்னபடி தான் நடந்திருக்கு. சிவாவுக்கு மீனாவை கட்டனுமுன்னீங்க, கட்டி வச்சோம். இங்க கிராமத்தில் வந்து இருக்கமாட்டா, வசதி பத்தாதுன்னு பேசினீங்க. அதுக்கும் ஒத்துக்கிட்டோம். ஏதோ உன் மாமனார் குடும்பத் தொழிலு,என் மவன் தான் வந்து சீர் படுத்தனும்னீங்க, அனுப்பி வச்சோம். அவனும் வீட்டோட மருமகனான தானே வந்து இருந்தான். மீனாவும் மாசமா இருந்தா, புள்ளை பெத்தா, உங்க எல்லார் இஷ்டப்படி தானே நாங்க எல்லாம் செய்யிறோம், இப்ப என்ன செய்யனும்னு சொல்ற" என ராஜி பாயிண்டைப் பிடித்தார்.

" குடும்பத்தையும் , தொழிலையும் இப்படித் தான் பாதில விட்டுட்டு வருவாகளா?. மாமா அத்தானை கம்பெனிக்குப் போகச் சொல்றாரு. அவுங்களுக்கு என்ன தெரியும், ஒத்தையில என்ன செய்வாக, அண்ணன் இருந்து கத்துக்கக் கொடுத்துட்டு வந்திருக்கலாம்ல " எனக் கங்கா புருஷனுக்கு வக்காலத்து வாங்கவும்.

" உன் புருஷன் தானே முதலாளி, என்ன ஏதுன்னு பழகிக்கச் சொல்லு. நான் மட்டும் எல்லாம் காத்துக்கிட்டா தொழில்ல இறங்குனேன், ஒன்னொன்னா பொறுமையா தான் கத்துக்கணும், சலவை துணி கசங்காம ஆபீஸ் வேலை மட்டும் பார்த்தா போதாது, உள்ள இறங்கி தொழிலாளிக்கு சமமா வேலை பார்க்கணும், அப்பத்தான் என்ன ஏதுன்னு புரியும், நட்டத்தில போன கம்பெனியை சரி பண்ணி கொண்டாந்து விட்டுட்டேன். மீனாவை காரணங்காட்டுனதுல தான் இத்தனை நாள் இருந்தேன். இனிமே என் குடும்பம் தொழில்னு பார்க்கப் போறேன். மாமாட்ட சொல்லிட்டு தான் வந்தேன்" எனச் சிவநேசன் கறாராகப் பேசவும்.

" அப்ப அத்தாச்சியை விட்டு வச்சிருக்க" என ஆங்காரமாகக் கேட்டாள். " அவ அம்மா வீட்டில தான இருக்கா, என் அத்தாச்சி என் கூடத் தான் இருக்கனும், சிநிகிதியா பழகிட்டாக, நீ இங்க வான்ணேன்னு அப்ப சீன் போட்ட. இப்ப அவ அங்க இருக்கிறது உனக்குப் பாரமா ஆயிடுச்சோ" எனச் சிவநேசன் கேட்கவும் அதைக் கொஞ்சமும் எதிர்பாராத கங்கா அப்பாவிடம் சலுகைச் சொல்லி ஒப்பாரி வைத்தாள்.

கேசவன் நடுவே புகுந்து" அத்தான் என் தங்கச்சி எங்க வீட்டில இருக்கிறதில் நாங்க ஒண்ணும் சுமையா நினைக்க மாட்டோம். நீங்க தனியா தொழில் பார்க்கப் போறதிலையும் எனக்குப் பிரச்சினை இல்லை. பாப்பாவைத் தனியா தூக்கிட்டு வந்துட்டீங்களேன்னு தான் வந்தேன். நீங்க எப்ப வரனுமோ வாங்க. நாங்க என்கூடப் பிறந்தவளை பார்த்துக்குவேன்" என அவன் சொல்லவும் கங்காவுக்கு முகம் கூம்பிப் போனது.

அவள் ஏதோ ஆரம்பிக்கும் முன் தடுத்து நிறுத்திய மகாலிங்கம், " நேசா, நாளைக்கு நீ போய் மருமகளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திரு. எந்த நோயா இருந்தாலும் நம்ம வச்சு பார்த்துக்குவோம். இனி கிராமம், டவுனுங்கிற பேச்சுக்கெல்லாம் இடமில்லை. தங்கச்சிகிட்டையும், மாப்பிள்ளைகிட்டையும் நான் யோசிக்கிறேன். " என விசயத்தை முடித்தவர் மனைவியிடம் சாப்பாடு எடுத்து வைக்கச் சொன்னார். கூடத்தில் பேச்சை முடித்துக் கொண்ட கங்கா, அடுப்படியில் ஆரம்பித்தாள்.

" ஏம்மா, இப்ப என்னாத்துக்குத் தென்வயலை போயி சுத்தம் பண்ணிக்கிட்டு. இந்த ஊர்ல மழையே பெய்யாது. இங்க போய் விவசாயம் செய்யப் போறாராக்கும் உன் மகன் " என அவள் அம்மாவிடம் வக்கணை பேசவும், " அவன் என்னமோ செய்யிறான். உனக்கென்ன. ஏன் என் மகன் எங்களோட வந்து இருக்கிறதில உனக்கு என்ன சிரமம். நீ உன் வேலையை மட்டும் பாரு" என்றார் ராஜி.

" ம்க்கும், காசக் கொண்டு போய் அதில போட்டு நட்டமாயிட்டு உட்காரப் போகுது. இதுக்கு விவசாயத்தைப் பத்தி என்ன தெரியும். எல்லாம் அந்த ஊர்மேயறவளுக்கு உதவி செய்யத் தான் எனக்கு என்ன தெரியாமலா இருக்கு" எனக் கங்கா, சிந்தாவை குறிப்பிட்டு நொடிக்கவும்.

" அடியே வாயை அளந்து பேசு, அடுத்த வீட்டுக்குக் கல்யாணமாகிப் போனாலும் இன்னும் என் மகள் தான். உன் வாயிலையே போடுவேன். இது தாண்டி உனக்கு எதிரி. உன் வாயாலையே தான் கெடப் போற " என ராஜி திட்டவும்.

" அவளைச் சொன்னா உனக்கு எதுக்கு இம்புட்டுக் கோபம் வருது, கொஞ்சம் விட்டுருந்தா நீயும் உன் மகனும், சாதி வித்தியாசம் பார்க்காமல் அவளை நடு வீட்டில் ஏத்தியிருப்பீங்க. என் சாமர்த்தியத்தால நீ மணம் பெத்துப் போற அதைத் தெரிஞ்சுக்க " என வாய்த்துடுக்காகப் பேசவும்.

" நீயெல்லாம் திருந்தாத ஜென்மம், நீ அவளை அவமான படுத்திட்டதா நினைக்கிற, ஆனால் அவ நல்ல மனசுக்கு அவசரக் கல்யாணமா இருந்தாலும் அவனையும் மனுசனாக்கி கவுரவமா வாழுறாடி. ஒரு பொண்ணுன்னு இருந்தா சிந்தா மாதிரி இருக்கனும்" என ராஜேஸ்வரி பெருமை பேசவும்.

" உனக்குப் பண்ணைக்காரி தானே முக்கியம். ஒருநாளாவது மகள்களையாவது, மருமகளையாவது உசத்தியா பேசியிருப்பியா" எனக் கங்கா சண்டை கட்டவும்.

" எல்லாரும் என்னை விட்டு ஓடுறதில தானடி இருந்தீங்க. என் மருமகளையாவது என்கூட இருக்க விட்டீங்களா. கல்யாணத்தப்ப நல்லாதான இருந்தா. இப்ப வியாதிக்கிறீங்க. நோவுங்குறீங்க. பெத்தபுள்ளைக்குத் தாய்ப்பால் கூடக் கொடுக்க மாட்டாம அப்படி என்ன அவளுக்கு. உன்னால தான் என் மகனும் நொந்து நிக்கிறான்" என ராஜி மகளை ஒரு பிடி பிடித்தார்.

" ஆமாம் நாந்தான் உன் மருமகளை இப்படிச் செஞ்சு வச்சேன். ஏம்மா நீ ஒருத்தி, அத்தாச்சிக்கு சிந்தாவப் பத்தியெல்லாம் சொல்லி, காராட்டியமா இருக்கத் தான் சொன்னேன். அது மண்ணாந்தையா இருந்தா நான் என்ன செய்ய, புருஷன் மேல சந்தேகம் இருந்தா சண்டையாவது போட வேணாம். மனசிலையே வச்சுக்கிட்டு மருகுனா நாங்க என்ன செய்யறது. இதுல இங்க கொண்டு வந்து வச்சு, அதை என்ன செய்யப் போறீகளோ தெரியலை. பொழுதிக்கும் மெனா புடிச்ச மாதிரியே உட்கார்ந்து இருக்கும். வீட்டில் எல்லா வேலையும் நான் தான் செய்வேன் . அப்படியும் பொல்லாப்பு பூரா என்னைத் தான் வந்து சேருது, மாமியாக்காரம்ம மகளைத் தாங்கிட்டு தான் திரியுது. உன்னையாட்டமா பெத்த மகளையே எல்லாரும் திட்டுவாக. " என வரிசையாகக் கங்கா பேசிக் கொண்டே போக, மகளுக்காகப் பாட்டிலில் பால் எடுக்க வந்த சிவநேசன் தங்கையின் பேச்சில் அதிர்ச்சியானான்.

மீனாவுக்குத் தன் மேல் ஈடுபாடு இல்லை என நினைத்தவன், அவள் மனதில் சந்தேகம் எனும் விதை விழுந்து அது விருட்சமாக வளர்ந்து அவனது வாழ்வையே சுவாரஸ்யமில்லாது மாற்றும் என நினைத்தது இல்லை. இப்போது ஒரு நூல் கிடைக்க, மனைவியை மாற்ற வேண்டியது தன் பொறுப்பு என உணர்ந்தான். முரடனாகத் திரிந்த வேலுவையே சிந்தாவின் அன்பு மாற்ற முடியும் எனில், அவனின் நேசம் மனைவியை மாற்றும் என நம்பினான். இனி யாரையும் தங்களுக்கிடையே வர விடக் கூடாது , குறிப்பாகத் தங்கை இருக்கும் இடத்தில் அவளை வைக்கக் கூடாது என முடிவெடுத்தான்.

சிந்தாவின் வீடு, அவளது நாளின் ஆரம்பம் முதல் முடிவு வரை சிவநேசனையே சுற்றி வர, அதைப் பற்றியே நினைத்திருந்தவளுக்கு, கணவன் கங்காவைப் பற்றிச் சொல்லவும், மனதில் தேவையில்லாத நினைவுகள் அவளை அழுத்த ஆரம்பித்தன. வேலையை முடித்துச் சோர்வாக உணர்ந்தவள், சீக்கிரமே படுத்து விட்டாள். ஆனால் நள்ளிரவில் அலறியடித்தபடி எழுந்து வேர்க்க விறுவிறுக்க அமர்ந்தவளை , வேலு தண்ணீர் எடுத்துக் கொடுத்து ஆசுவாசப் படுத்தினான்.

" என்ன புள்ளைக் கனாக் கண்டியா " எனவும், " எனக்கு மூச்சு முட்டுது, புழுக்கமா இருக்கு, காத்தாட உட்காரனும் போல இருக்கு. புழக்கடை பக்கம் உட்காருவோமா. இந்தப் பக்கம் போனா அப்பா முழிச்சிக்கும்" என அழைத்தாள். பிள்ளைகள் இரண்டும் தூங்கிக் கொண்டிருக்க, " வா" என அவளை அழைத்து வந்தான்

புழக்கடைப் பக்கத்திலிருந்த திண்ணையில் இருவரும் அமர்ந்தனர். நேற்றைய சித்திரா பௌர்ணமி இன்றும் மிளிர்ந்து கொண்டு தானிருந்தது. பெரிய வட்ட வடிவ நிலா தங்கத் தகடென ஒளிர்ந்து கொண்டிருக்க, மெல்லிய தென்றல் வீசி, அவள் வளர்த்த பிச்சிப்பூச் செடி அதன் சுகந்தத்தைச் சந்தாவுக்குச் சுகம் தருமெனத் தென்றலோடு அனுப்பிக் கொண்டிருந்தது. வேர்த்த அவளது உடலில் தென்றல் தீண்டவும் உலர்ந்து உடலில் ஓர் சிலிர்ப்பைத் தந்தது. அவள் உடல் ஒரு முறை நடுக்கத்தோடு குலுங்க , கணவனின் கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

" என்ன புள்ளை, எதுக்கு இவ்வளவு நடுங்குற, நான் இருக்கேன்ல, காத்துக் கருப்பு கூட உன்னை அண்டாது. " என அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவன் மீதே சாய்ந்து கொண்டவள், " அது என்னமோ நெசந்தான் மச்சான். உன் பொண்சாதின்னு சொல்லும் போது தானா தகிரியம் வந்து மனசில ஒட்டிக்குது" என நெகிழ்ந்தவள்.

" இன்னைக்கு அய்யனார் சாமியாட்டமா நீ என்னைக் காத்து நிக்கிற மச்சான். அன்னைக்கு அது இல்லாததால தான் நாய் பேயெல்லாம் என்னைப் பெண்டாளனும்னு நினைச்சது, அதை நடக்காம தடுத்து காப்பாத்தின மகராசனோடைய சேர்த்து வச்சு என்னை அசிங்கப்படுத்துச்சுங்க" என ஐந்தாண்டுக்கு முன்பான சம்பவத்தை அவனிடம் மனம் திறந்தாள்.

" உனக்குத் தெரியுமான்னு தெரியாதான்னு எனக்குத் தெரியலை மச்சான். எங்க அம்மா, பாம்பு கடிச்சு, சரியான நேரத்துக்கு வைத்தியம் பார்க்காததால தான் செத்துச்சு. அது சாகையில நான் ஒம்பதாவது படிச்சேன். முத்துவும், சுப்புவும் ரொம்பச் சிரிசுங்க. மூணாவது, நாலாவது படிச்சுதுங்க. சுப்பு அம்மாவைக் காணாம்னு அழுவான், அப்பா தூக்கிட்டே திரியும். முத்து இரைக்கெல்லாம் என்னைக் கட்டிக்கிட்டு, அம்மா இனிமே வரவே வராதா அக்கான்னு அழுவா. அப்பா மன ஒடைஞ்சு போய் உட்கார்ந்திடுச்சு. " என அந்த நாள் நினைவில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, வேலு அவள் சொல்லட்டும் எனத் தோள் கொடுத்து அமைதியாக இருந்தான்.

" சோறாக்க, குழம்பு வைக்கன்னு அம்மா இருக்கும் போதே செய்வேன். அம்மாவுக்கு அப்புறம் என் தம்பி தங்கச்சிக்கு நான் அம்மா இடத்தை நிரப்பனும்னு நினைச்சேன். அதுக உள்ளூர் பள்ளிக்கூடத்தில் தான் படிச்சதுங்க. அதுங்க எப்ப வந்தாலும் ஏன்னு கேட்க அம்மாவாட்டம் நான் இருக்கனும்னு நினைச்சு தான், ஸ்கூலுக்குப் போறதை நிறுத்தினேன். 

ஸ்கூலுக்குப் போகலைனாலும் பாடத்தைப் படிப்பேன். அதைப் பார்த்த சின்னைய்யா தான் பத்தாவது ப்ரைவேட்டா எழுத ஏற்பாடு செஞ்சார். மத்தது எல்லாம் படிச்சிட்டாலும் இங்கிலீஸ் மட்டும் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. பெரிய வீட்டு அம்மா, என் மேல பிரியமா இருப்பாங்க. நான் படிக்கிறதுக்கு அவுகளும் ஊக்கம் குடுத்தாங்க. இங்கிலீஸ் கஷ்டமா இருக்குங்கவும், சின்னைய்யாகிட்டச் சொல்லி, எனக்குத் தனியா எடுத்தா விகற்பமா தெரியுமென்னுட்டு கங்காவுக்கும் எனக்குமா சேர்த்துப் படிப்பு சொல்லிக் கொடுக்கச் சொன்னாக. அதுலையே அவளுக்கு என் மேல எரிச்சல்" என நிறுத்தவும்.

" நீ அந்த அம்மாளை விட நல்லா படிச்சுபிட்டியாக்கும்" எனப் பாயிண்டை பிடித்தான் வேலு. சிந்தா ஆம் எனத் தலையாட்டியவள், " அதுக்கு அம்புட்டுக் கோபம் வரும்" எனச் சிந்தா புன்னகைக்கவும்.

" பண்ணைக்காரன் மகளுக்கு எதுக்குப் படிப்புங்கிற நினைப்பு தான். இது மாதிரி நினைப்பு இருக்கவுகளை என்ன பண்ணாலும் திருத்த முடியாது" என்ற வேலு, " இதை மனசில வச்சுக்கிட்டா உன்னை அசிங்கப்படுத்துனாக. சின்னத்தனமால்ல இருக்கு " எனக் கேட்டான்.

" இதுவும் ஒரு காரணமுன்னு சொல்லலாம். எங்க அம்மா பாம்பு தீண்டி செத்ததால இனிமே இது மாதிரியான நிலைமை யாருக்கும் வரக்கூடாதுன்னு மனசுக்குள்ள ஒரு வைராக்கியம் வந்துச்சு. பெரியம்மாவுக்கு வைத்தியம் பார்க்க பரமக்குடியிலிருந்து வந்த வைத்தியருகிட்ட இதைச் சொல்லியே வைத்தியம் கத்துக்கனும்னு கேட்டேன். அவருக்கும் ரொம்பச் சந்தோஷம். சின்ன வயசுலயே இவ்வளவு நல்ல எண்ணம் னு பாராட்டுனவுக, பரமக்குடிக்கு வரச் சொன்னாக. 

 பத்து நாள் அப்பா கூடப் போயி அவுக கை வைத்திய முறையெல்லாம் அவசர உதவிக்குச் செய்யறதை மட்டும் சொல்லிக் கொடுத்தாகக் கத்துக்கிட்டேன். அடுத்து ஒரு ஆளுக்குக் கருவ வெட்டப் போகும் பாம்பு தீண்டிடுச்சு. எல்லாரும் விசயம் சொல்லி ஓடவும் நானும் ஓடினேன். வலது கையில் தடம் தெரிஞ்சது, துணியை இறுக்கக் கட்டி விசத்தை உறிஞ்சி வெளியே துப்பினேன். கை வைத்தியமா உள்ளுக்குள் மருந்தைக் கொடுத்து மானாமருதைக்கு அனுப்பவும். அந்த ஆள் பொழைச்சுகிட்டாரு. அன்னைக்கிலேருந்து நான் காப்பாத்துன சனம் என்னைக் கையெடுத்து கும்புட்டுச்சு. அதிலையும் கங்காவுக்கு என் மேல பொறாமை " என்றவள் தொடர்ந்து ,

" ஆனால் ,ஒருபக்கம் நன்றி சொல்றவுக இருந்தாலும், மறுபக்கம் அதை நக்கலடிக்கிறவுகளும் இருந்தாக. இளந்தாரிப் பயலுகளுக்கு நான் கண்ணுக்கு விருந்தா தான் தெரிஞ்சேன். சும்மா பாம்பு கடிச்சிடுச்சின்னு கூப்பிட்டு விட்டு ஏமாத்துனவனுங்களும் உண்டு. அதுக்காக அடுத்தத் தடவை அவுக கூப்பிடையில போகாமலிருந்ததும் கிடையாது. நம்மளால ஒரு உசிரு பொழைக்கணுமே ஒழிய போகக்கூடாதுன்னு முடிவுல இருந்தேன் , அதனால அதையும் பொறுத்துக் கிட்டேன்.

இதைப் பார்த்த பெருமாயி மவன் சோமு என் மேல கண்ணு வச்சிட்டான். பொங்கல் விழா சமயம் சின்னப் புள்ளைங்களுக்கு டான்ஸ் ஆட பத்து நாளா பழக்கிவிட்டு எல்லாம் மேக்கப் போட்டு ரெடியா இருந்துச்சுங்க. பாதிப் புள்ளைங்க மேடையில ஆடிட்டு வந்து அம்புட்டு சந்தோஷமா உட்கார்ந்திருக்க, இன்னும் நாலைஞ்சு பாட்டு தான் பாக்கி இருந்துச்சு.

ஒரு பய ஓடி வந்து யாரையோ பாம்பு தீண்டிடுச்சுன்னு அவசரமா கூப்பிட்டான். நான் கூட இருந்த புள்ளைகள்ட்ட சொல்லிட்டு வேகமா போனேன். பெரிய ஐயா வீட்டு மோட்டார் ரூம்பு, மங்கலான வெளிச்சம். இந்தச் சோமன் மல்லாக்க கோணமானாலா கிடந்தான். நான் உசிரு இருக்கோ இல்லையோன்னு நாடியை பிடிச்சு, மூக்கில் கை வச்சு பார்க்குங்குள்ள என் மேல பாஞ்சிட்டான். 

உயிரை காப்பாத்திக்கப் புள்ளிமான் போராடும்பாகளே, அது மாதிரி மானத்தைக் காப்பாத்திக்கப் போராடினேன். மைக் செட் அலறுனதுல யாருக்குமே கேக்கலை. என் தாவணியை உருவி ஜாக்கெட்டெல்லாம் கிழிஞ்சு இருந்தது. தெய்வமாப் பார்த்து சின்னையாவை அந்த நேரம் அங்க அனுப்பி வச்சது" எனச் சொல்லும் போதே உடல் நடுங்கி கண்ணீர் வழிய அழுதாள். 

அந்த நாளின் நினைவில் இப்போதும் உடல் நடுங்க வேலுவோடு ஒண்டிக் கொண்டவள், "ஆட்டம் பாட்டம் நடக்கும் போது ஏற்பாட்டைக் கவனிக்காம நான் எங்கயோ போறேனேன்னு தான் பின் தொடர்ந்து வந்திருக்காக. நடுவில யாரோ ஏதோ கேட்டதில என்னைத் தவற விட்டுடாக, வீடு வரை போய் நான் இல்லைங்கவும் சந்தேகத்தில அவசரமா தேடியிருக்காக. 

அவுக சத்தம் கேட்கவும், அவன் என்னைய விட்டு வெளியேறிட்டான். அவுக உள்ள எட்டிப் பார்க்கும் போதே, வேணாய்யா பார்க்காதீகன்னு கத்தினேன். என் நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டவுக, அவுக சட்டையைக் கழட்டிக் கொடுத்தாக. என் மானத்தை மறைக்க அவுக சட்டையை வாங்கிப் போட்டுக்கிட்டேன். அதுக்குப்புறம் தான் அவுக உள்ள வந்தாக, இவன் வெளிய இருந்து கதவைச் சாத்தி தாழ் போட்டான். ஆட்டம் பாட்டம் முடியற நேரம் கங்கா இருக்க இடமா பார்த்து நின்னு , மோட்டார் ரூம்ல எங்களைப் பார்த்ததா கதை கட்டிட்டான்.

கங்கா சொந்தக்காரவுக ஆளும் பேரோட இருந்தவ, அத்தனை பொம்பளைகளையும் கூட்டிட்டு இந்தப் பயலுகளோட சேர்ந்து அங்க வந்துட்டா. சின்னைய்யா என்னைத் தேத்துறதில இருந்தவுக கதவை மூடினதைப் பெரிசா நினைக்கலை. அவுக என்னைக் கைதாங்கலா கூட்டிட்டு வ்ததைத் தான், கதவை திறந்தவுக பார்த்தாக.

அங்கனையே ஆளாளுக்குப் பேச ஆரம்பிச்சிட்டாக. எனக்குக் குச்சு வீட்டிலிருந்து மச்சு வீட்டுக்கு போகனும்னு ஆசையாம். மகாராணியாகப் பார்க்கிறேன். தளுக்கி, மினிக்கி திரியிறேன்னு சொன்னதெல்லாம் கூடப் பரவாயில்லை மச்சான், பாம்புக்கடிக்கு வைத்தியம் பார்க்கிறதை அசிங்கமா பேசுனாளுங்க. ஆம்பளைய உரசிப் பார்க்கவும் முத்துங் கொஞ்சவும் தான் , வைத்தியம் பார்க்கிற மாதிரி நடிக்கிறேனாம். " எனச் சொல்லும் போதே அவள் தன் சத்தம் பெரிய அழுகையாக மாறி அப்பாவை எழுப்பி விடக் கூடாது என அவன் நெஞ்சில் அந்த அழுகையைப் புதைத்தாள்.

" சிவநேசன் எதுவுமே சொல்லலையா. " என்ற வேலுவின் கேள்விக்கு, " ஐயா ஒவ்வொருத்தர்ட்டையா கத்தி கத்தி உரக்கச் சொன்னாக, ஆனால் பத்து பொம்பளைங்க சத்தில ஒரு ஆம்பளை குரல் எடுபடலை. மகனுக்குச் சப்போர்டா பெரியம்மா ,அதெல்லாம் எதுவுமில்லைனு வாதாடுனாக. 

ஆனால் பெரியய்யா, இந்த விசயத்தையே யாரும் பேசக் கூடாதுன்னு பூட்டுப் போட பார்த்தாகளே ஒழிய, நியாயத்தைப் பேசனுமுன்னு நினைக்கலை. எங்கப்பா அவுக கால்ல விழுந்து கதறுனாரு. ஆனா அவுகளும் காசைக் கொடுத்து, நீ கொஞ்ச நாளைக்கு ஊருக்குள்ள இருக்காத. உன் புள்ளைகளைக் கூட்டிட்டு வெளியூர் போன்னு தான் சொன்னார். 

அதிலையே எங்கப்பா மனசை விட்டுட்டாரு. மானாமருதையில இருக்க, எங்க அப்பா சினேகிதர் வீட்டுக்குப் போனோம். கங்கா சொந்தக்கார பொம்பளைங்க புழக்கடையில் வந்து நின்னு என் காத்து படவே அசிங்கமா பேசுச்சுங்க. அது காதுலையே எதிரொலிக்கவும் தான், ரயில்ல விழப் போனேன்.

நீ என்னை இழுத்துப் பிடிச்சப்ப, அதில தாய் பறவை குஞ்சை அடக்காக்குற உணர்வு வந்துச்சு. நீ வேற, பல உசிரக் காப்பாத்திறவளுக்கு , தான் உயிரை போக்கிக்குற உரிமை இல்லைனு சொன்னியா. உன் பக்கத்தில நிற்கையில் பக்கத்தில வர்றவுக்கக் கூட ஒதுங்கியே போனாக. உன்னைய பார்க்கவும் அவுகளுக்கு அச்சமா தெரிஞ்சது, எனக்கு ஆதரவா தோனுச்சு. என்னை அசிங்கமா பேசினவுக முன்னாடி வாழ்ந்து காட்டணுமுன்னு தான், உன்னைக் கட்டிகிரியான்னு கேட்டேன் " என மீதியெல்லாம் அவனுக்குத் தெரியும் என்பது போல் தன் கதையைச் சொல்லி முடித்தாள்.

“இந்த ஊருக்கு லோடு ஏத்த,இருக்க வரும் போதே உன்னைப் பாத்துருக்கேன் புள்ளை, ஒரு தரம் என் வண்டியை மறிச்சு, உசிருக்கு போராடின ஒரு பொம்பளையை ஏத்தி விட்டு, நீயும் கூடவே வந்த, ஆஸ்பத்திரில சேர்த்து அந்தக்கா புருஷன் வந்த பிறகு, கையில காசு இருக்கோ என்னமோன்னு விசாரிச்சு, உனக்குப் பஸ்சுக்கு போக மத்ததை அவுகளுக்குக் குடுத்துட்டு வந்த. நான் பார்த்துக்கே தானே நின்னேன், அதுக்கப்புறம் தான் உன் மேல ஒரு இது வந்திருச்சு” என வேலு, ஓர் வெக்கச் சிரிப்போடு தான் அவளிடம் மையலயாணத்தைச் சொல்லவும், இவ்வளவு நேரமிருந்த சோகம் மறந்து , அவனிடம் கதைக் கேட்க ஆர்வமானாள்.

“ஆத்தி, விட்டா சினிமா கதாநாயகன் கணக்கா காதல் கதையெல்லாம் சொல்லுவ போலிருக்கு” என அவள் கேலி பேசவும். “ஏன் புள்ளை லோடு ஏத்துறவன், வண்டியோட்டறவனெல்லாம் ஹீரோவா இருக்கக் கூடாதா “ என அவன் பொய்யாய் முறைக்கவும், “யாரு சொன்னது ஹீரோவா இருக்கக் கூடாதுன்னு, நீதான் எனக்கு ஹீரோ” என அவன் குணங்களை நல்லது கேட்டது எனக் கேலி கிண்டலாகவே அடுக்கியவள், அவனை உசத்தி நிறுத்தினாள்.

“போதும், போதும் விடு, இதுக்கு மேல ஐஸ் வச்சையின்னா,இந்த வெயில் காலத்துலையும் எனக்குச் சளி பிடிச்சுக்கும், அப்புறம் அதுக்கு ஒரு கசாயத்தைக் காச்சி கிட்டு என் பின்னாலேயே அலைவ” எனக் கேலி பேசியவன்.

“சிந்தாமணி, யாரு என்ன சொன்னாலும் இனிமே அதையெல்லாம் காதுலையே வங்கிக்காத, காதில் வாங்கினியின்னாத் தான் மனசுக்கு ஏறும், அதுவே வேணாம். நீ பதினாலு வயசில ,அம்மாவாகலை ,ஒரு அம்மாவுக்கு இருக்கப் பொறுமையான குணத்தோடேயே தான் நீ பொறந்து இருக்க, உன் மக்கள்,தம்பி தங்கச்சிக்கு மட்டுமில்லை, உங்க அப்பாவுக்கும், ஏன் எனக்கும் நீதான் ஆத்தா. இந்த ஊருக்கே, வித்தியாசம் பார்க்காம உதவும் நல்லவ. காய்ச்ச மரம் கல்லடி படத்தான் செய்யும், அதுக்கெல்லாம் கவலைப் படாதே” என அவளைத் தேற்றினான். அவனையே பார்த்திருந்தவள், “ இம்புட்டு ரோசனையா எப்ப பேசிக் கத்துகிட்ட” எனக் கேட்டாள்.

“நட்ட நடு ராவுல , இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியம், வந்து படு உன்னைக் காணமுன்னு உன் மவ துழாவ ஆரம்பிச்சுடும், உள்ள போய்ப் படு புள்ளை "என அவளை உள்ளே அனுப்பிக் கதவை அடைத்து விட்டு வந்து படுத்து உறங்கினர்.

இவர்களை உரசிப் பார்க்கக் காலம் தயாராகிக் கொண்டிருந்தது. தெளிவான சிந்தனை உடையவனும் கரைப்பார் கரைத்தால் கரையத்தானே வேண்டும். சிந்தா, தடைகளைத் தாண்டி பாய்ந்து வருவாள்.

Tuesday, 13 July 2021

சிந்தா-ஜீவ நதியவள்-4

 சிந்தா-ஜீவ நதியவள்-4

        ஓடையை ஒட்டிய சிந்தாவின் வீடு, வெயில் காலமாதலால் அது வறண்டு கிடந்தது. மழைக்காலத்தில் மட்டுமே கண்மாயில் நீர் நிறைந்து மடை திறக்கும் போது இதில் தண்ணீர் ஓடும். மற்றபடி பெரும்பாலும் காய்ந்து தான் கிடக்கும். இவர்கள் வீட்டுக்குத் தெருக் குழாயிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்வார்கள். பெரிய சிமெண்ட் தொட்டிகளில் அந்த நீரை நிறைத்து வைத்து அதனைத் தான் புழங்குவார்கள், வேலு போர் போடலாம் என்றதுக்கும் கூடக் குடும்பமே. "வீதி குழாயில் வர்ற தண்ணியே நம்மளுக்குப் போக விவசாயமே பண்ணலாம். எதுக்கு வீணா போர் போட்டுக்கிட்டு" என மறுத்தனர். ஆனால் இவர் தான் தண்ணீர் எடுக்க வேண்டும் என்பது இல்லாமல் ஆண்களும் கௌரவம் பார்க்காது நீரை நிறைத்து விடுவார்கள். அதனால் பெண்களுக்குச் சுலபமாக இருந்தது. நகரத்தைப் போல் குழாயைத் திறந்தால் தண்ணீர் கொட்டும் வாழ்க்கைக்கு இவர்கள் இன்னும் பழக்கப்படவில்லை.

        மதிய உணவுக்குப் பிறகு வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்த அய்யனார், மகளையும், மருமகனையும் அழைத்துப் பெரிய வீட்டுக்குச் சென்று வந்த விசயத்தைச் சொன்னார். முத்துவும், சுப்புவும்  அங்குத் தான் இருந்தனர்.

" இன்னைக்குப் பெரிய வீட்டுக்கு போயிட்டு வந்தேன்" என ஆரம்பிக்கவும்.

" நிசமாவா அப்பா, எங்களை அந்தப் பக்கட்டு விளாடா கூடப் போகக்கூடாதும்ப, நீ மட்டும் போகலாமாக்கும்" என சுப்பு ஆட்சேபம் தெரிவித்தான்.

" ஏலேய், விசயத்தைச் சொல்ல வர்றதுக்குள்ள விவகாரம் பேசறவன். பெரிய அய்யாவே ஆள் விட்டு கூப்பிட்டாரு , மாட்டேன்னா சொல்லமுடியும், மருவாதையா இருக்காதில்ல" எனச் சொல்லும் போதே அய்யனார் மூத்த மகளின் முகத்தைப் பார்த்தார், அவள் முகத்தில் எதையும் காட்டாது அமர்ந்திருக்க, அவரே தொடர்ந்தார்.

" சின்னய்யா, இந்தச் சீமைக் கருவ மண்டிக் கிடக்கிற வயலை சுத்தம் பண்ணித் தரச் சொல்றாக. கருவேலத்தையும் நம்மளையே எடுத்துக்கச் சொல்றாக, அது போக ஜேசிபி வண்டிச் செலவு முழுசும் ஆள் கூலியும் பாதித் தாறோம்கிறாரு. இதில ஏதோ மூலிகைச் செடி வளர்க்கப் போறாகலாம். " எனச் சிவநேசன் பேசிய விசயத்தைத் தன் குடும்பத்துக்குச் சொன்னார்.

" கருவை மரம் கிடச்சாலே நாம மூட்டம் போட்டு கரியாக்கி அதைக் காசாக்கிக்கலாம். மத்தச் செலவுக்கும் தர்றம்னாகன்னா, இது நல்ல விசயம் தானே மாமா, சரின்னு சொல்லுங்க" என்றான் வேலு.

அய்யனார் யோசனையாக, " அதில்லை மாப்பிள்ளை, அவுக வீட்டுப் பண்ணையத்தை விட்டு வந்து ஐஞ்சு வருஷம் ஆச்சு. திரும்ப எதுக்குப் போய் உழப்பனுமுன்னு யோசனை " எனத் தயக்கமாகச் சொன்னார்.

"அவுக வீட்டுக்குள்ள நமக்கென்ன வேலை, இந்த இடத்தை இத்தனை நாளைக்குள்ள சுத்தப்படுத்தித் தந்திடுறோம், இவ்வளவு தந்திடுங்கன்னு பேசிக்குவோம். அவுக தான் இந்தப் பக்கம் வரனும். நாம அங்க போக வேண்டியது இல்லை" என்ற வேலுவின் வார்த்தைக்கு அய்யனார் பெரிய மகளிடம் அபிப்ராயம் கேட்டார்.

" அது மச்சானே சொல்லிடுச்சில்ல, இது பெரிய வேலையா இருந்தா, நாலு காசு பணம் மொத்தமா சேரும். முத்துவுக்கு நகை நட்டு வாங்கிச் சேர்க்கலாம் பா." எனத் தாய் ஸ்தானத்திலிருந்து யோசனை சொன்னாள்.

" காசு என்னத்தா, வரும் போகும், இதே காசுக்காகத் தரமிறங்கி போயிட்டமின்னு நாளைக்கு ஒரு பய பேசிறக் கூடாது. அது தான் எனக்குப் பயம்" என அவர் மானம் மரியாதை பற்றி யோசித்தார்.

" மாமோய், பேசிறவன் பேசிக்கே தான் இருப்பான். நீரு இப்படி மானம் மருவாதின்னு ரொம்ப யோசிச்சதில தான் உம்ம மவ ,அஞ்சு வருசத்துக்கு முன்ன ஒரு விஷயம் நடந்ததும், அன்னைக்குத் தப்பான முடிவெடுத்தா" எனச் சிந்தா ரயிலில் விழப் போனதை எண்ணிச் சொல்ல, அதை அறியாத அவளது தங்கை முத்து வாய் துடுக்காக மாமனைக் கிண்டல் செய்யும் விதமாக,

" மாமா, உமக்கு இருந்தாலும் இம்புட்டு பெரிய மனசு ஆகாது. எங்க அக்கா உன்னைக் கட்டிக்கிட்டதைத் தப்பான முடிவுன்னு ஒத்துகிறீக பார்த்தீங்களா. அங்க தான் மாமா உசந்து நிக்கிறீக " என அவள் வஞ்சப் புகழ்ச்சியாகப் பேசவும், சுப்பு, முத்துவின் கையில் அடித்து ஹை பை கொடுத்தான். அவர்களுக்கு அக்கா எந்த ராணிக்கும் குறைந்தவள் இல்லை என்ற நினைப்பு. சிந்தா மென்னகையோடு கணவனைக் கண்கள் பளபளக்கப் பார்க்க,

அய்யனார், " ஏ புள்ளை அக்கா புருஷன்டு மருவாதை வேணாம், என்ன வாய் நீளுது" எனச் சிறிய மகளைக் கடிந்தார்.

" ஏய் விடு மாமோய், என்னையப் பேசாமல் யாரைப் பேசுங்க. உரிமை இருக்கப் போய்த் தானே மாமன்னு கேலி பேசுதுங்க. ஆனாலும் அதுவும் நிசந்தான், சிந்தாமணி குணத்துக்கும் அறிவுக்கும் நான் மட்டுத் தான்" என அவன் மனதில் எப்போதும் உள்ள குறையை ஒத்துக் கொண்டான் வேலு.

" இந்தா , நான் சிவகங்கை சீமை ராணி, இவரு கூலிக்காரன். சும்மா போவியா. நானும் பண்ணைக்கரர் மவ தானே, உனக்குச் சரியான ஜோடி தான்." எனக் கணவனுக்குச் சமாதானம் பேசவும் வேலுவுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. தலை முடியை கோதிவிட்டு ,புன்னகைத்தான். உண்மையில் வேலு சிந்தாவை விடப் புது நிறத்தில் அம்சமாகவே இருப்பான்.

" யக்கோய், மாமனைப் பாரு, நீ உனக்கு ஏத்த ஜோடின்டு சொல்லவும் மகி(ழ்)ந்து போச்சு. " எனச் சுப்பு அக்காள் கணவனை ஓட்டினான்.

" என் வாயாலைச் சொல்ல வைக்கனும்முன்னு தானே உன் மாமன், மட்டு கிட்டுன்னு டயலாக் அடிக்குது. எனக்கு இது சூழ்ச்சி தெரியாதாக்கும் . காசா பணமா, வாயில இருக்கு வார்த்தை சொல்லி வைப்போம்" எனச் சிந்தா சொல்லவும்.

" வாயில இருக்க வார்த்தை தான் சிட்டு, அது தான நம்மளை உசிரோட கொன்டுச்சி. நமக்கு அது மாதிரி வார்த்தையே வேணாம். நல்லதையே சொல்லுவோம். " என அய்யனார் தனது பெருந்தன்மையைக் காட்டினார்.

" அப்புறம் என்ன கருவையை வேரோட எடுத்துச் சுத்தம் பண்ணித் தாறோம்னு ஒத்துக்க மாமா. நான் பார்த்துக்குறேன். " என வேலு தைரியம் கொடுத்தான். அய்யனாருக்கு வேலு மரு- மகன் என்ற வார்த்தைக்குச் சரியான அர்த்தத்தில் தோள் கொடுத்து நிற்பவன், அவனைக் கணவனாக அடைந்தது சிந்தாவின் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றே அவர் நினைத்தார்.

மாலையில் வெயில் தாழ ஐந்து மணி போல், தனது ஆறு மாதக் குழந்தையையும் தூக்கிக் கொண்டு, சிவநேசன், குமரனோடு வண்டியில் வந்து இறங்கினான். குமரன் சிவநேசனை இறக்கி விட்டு, பெரியப்பாவை அழைக்கச் சென்றான். கால் நடையாகவே வரலாம் எனவே காரை எடுக்காமல் பைக்கில் வந்தனர்.

சிந்தாவின் வீட்டுக்கு அடுத்து வேறு வீடுகள் கிடையாது, அதனால் ஓடை அருகிலேயே தென்வயலை பார்வையிட்டுக் கொண்டும், அய்யனார் வருகிறாரா என இவர்கள் வீட்டுப் பக்கமும் பார்த்துக் கொண்டே நின்றான். சட்டெனச் சிந்தா வீட்டுக்குச் செல்ல தயக்கம். ஏனெனில் அப்படி எல்லாம் அவர்கள் பண்ணைக்காரர் வீட்டுக்குச் சென்றதே இல்லை.

சிந்தா, வீட்டுக்குள் வேலையை முடித்து வெளியே வந்தவள், சிவநேசன் வீட்டுக்கு வெளியே நிற்பதைப் பார்த்தாள். ஐந்து வருடத்திற்கான அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவள் சிவநேசனை நேருக்கு நேர் சந்திக்கவே இல்லை. நேற்று அவள் ஆற்றின் சறுக்கில் ஏறும் போது, அவளைக் கீழே விழாமல் பிடித்த போது பார்த்தது தான்.

சட்டெனச் சிவநேசனை நோக்கி ஓரடி வைத்தவள், அந்தா நாளின் பேச்சுக்கள் நினைவில் வரத் தயங்கி நின்று விட்டாள். " அக்கா, பாப்பா எந்திரிச்சிடுச்சு" எனச் சத்யாவைத் தூக்கி வந்து முத்து அவளிடம் தந்தாள். ஆதரவு கிடைத்தார் போல் மகளை வாங்கிக் கொண்டு, " அந்த அய்யா நிற்கிறாரு பாரு, அப்பாட்ட சொல்லு" என உள்ளே சென்றாள். ஏனெனில் இவர்களை ஆராய ஆண்டிச்சி கிழவி வந்து கொண்டிருந்தது.

கிழவி நேரா சிவநேசனிடமே சென்று, " சின்னையா, என்ன இங்க நிக்கிறிக. இது உங்க மகளா, அம்சமா பெரிய ஆயியைக் கொண்டு பிறந்திருக்காக. இவுக அம்மா வரலையா, பால்குடி மறக்காத புள்ளையை நீங்க மட்டுமா தூக்கியாந்தீக , இங்கனை எங்க வந்தீக, சிந்தாவை பார்க்கவா, நான் வேணா கூப்பிடவா" என வரிசையாகத் தனது சந்தேகத்தை எல்லாம் கேட்டு, தனது குசும்பையும் காட்டியது. சிவநேசன் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் முழிக்கும் போதே, வேலு பைக்கில் மகனோடு வந்து சேர்ந்தான்.

" ஏய் அப்பத்தா, இங்க நின்னு கதையளந்துகிட்டு கிடக்க, உன் மருமவ சூடான கலி கிண்டி வச்சுகிட்டு உன்னைக் காணாமுன்டு தேடிக்கிட்டு இருந்துச்சு" எனச் சும்மா அடித்து விட்டான். நேசன் ஆசுவாசமாக உணர்ந்தான். வேலுவைப் பார்த்துப் புன்னகைத்தான். அவனும் நேசனை ஒரு ஒற்றைக்கை சலாமோடு வரவேற்றான். இருவரும், ஒருவரை ஒருவர் பார்வையால் இதைப் போட்டுக் கொண்டிருந்தனர்.

வண்டியிலிருந்து இறங்கிய சத்திய மூர்த்தி, சிவநேசன் அருகில் சென்று, சிந்துஜாவைக் கொஞ்சி விளையாட்டுக் காட்டினான், அதுவும் இவனைக் கண்டு சிரித்து வைத்தது. சத்தி நிமிடத்தில் " பிடிச்சா" எனச் சிவனேசனைச் சுத்தி, சுத்தி ஒழிந்து மறைந்து விளையாட , அது பொக்கை வாய் தெரியச் சிரித்தது.

" நிசமாவா சொல்ற, சூடான கலியை என் கண்ணுல காட்டா மாட்டாளுகளே, சரி எதுக்கும் போய்ப் பார்க்குறேன். சின்னைய்யா அப்புறம் வந்து உங்களை விசாரிக்கிறேன், இங்க தானே இருப்பீக " எனக் கேள்வியோடு கிளம்பவும், விட்டது தொல்லை என அவனும் தலை ஆடி வைத்தான்.

' சார், என்ன இங்கனையே நிக்கிறீக, உள்ள வாங்க. " என வேலு சிவநேசனை அழைக்க, அய்யனார் புழக்கடை பக்கமிருந்து, கையைத் துண்டில் துடைத்தபடி ஓடிவந்தார்.

" வாங்கையா, பெரியய்யா வாராகலா, அந்தி சாயும் முன்ன நிலத்தைப் பார்த்திட்டு வந்திடலாம். " எனத் தனது சம்மதத்தைச் சூசகமாக அறிவித்தார் அய்யனார்.

" இருக்கட்டும் பரவாயில்லை, தம்பி அப்பாவைக் கூப்பிட போயிருக்காப்ள, இப்ப வந்திருவாங்க." எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மகாலிங்கம் ஐயா குமரனோடு வந்தார். அரியனும் அவர்கள் பின்னாடியே வந்து சேர்ந்தான்.

" கும்புடுறேன்ங்கய்யா" என மகாலிங்கத்தைப் பார்க்கவும் அய்யனார் கையெடுத்துக் கும்பிட்டு, துண்டு கக்கத்துக்குப் போனது. வேலு தலையை அசைத்து ஒரு கையால் வணக்கம் போட்டான்.

மகாலிங்கம், இறங்கி கவனமாக நடந்தவர், " அய்யனார், இன்னும் எதுக்கு, இப்படி வளைஞ்சு கும்புடு போடற. அதெல்லாம் வேண்டாம், மரியாதை மனசில இருந்தா போதுமுன்னு சொல்லியிருக்கேன்ல. " எனக் கடிந்தார். அதில் வேலுக்குப் பெரியவர் மேல் சட்டென மதிப்பு உயர்ந்தது.

" இருக்கட்டும்ங்கயா, அது இரத்தியையே ஊறினது, கட்டை சாயற வரைக்கும் போகாது " என்றவர் வயல் பக்கம் செல்லக் கிளம்பினர்.

சிந்தா உள்ளேயிருந்து கணவனுக்குக் குரல் கொடுத்தாள், " நீங்க முன்ன நடங்க நான் வாரென்" எனச் சொல்லவும்.

" மச்சான், பட்சி பறக்கிற நேரம் வயக்காட்டுக்குள்ள அவுக பாப்பாவைத் தூக்கிட்டுப் போக வேணாம். இங்கனையே விட்டுட்டுப் போகச் சொல்லு, நான் பார்த்துக்கறேன் " எனச் சற்று சத்தமாகவே சிவநேசனுக்கும் கேட்கும்படி சொன்னாள்.

சிந்தாவின் வார்த்தை மகாலிங்கமும் கேட்டார், " தம்பி நானே சொல்லனும்னு நினைச்சேன். பாப்பாவை சிந்தாகிட்ட விட்டுட்டு வயலைப் பார்க்கப் போங்கன்னு உங்க அம்மா சொல்லி விட்டுச்சு. " என்றார்.

ஆனால் சத்தியாவை, வேலு, சுப்பு , முத்து என ஒவ்வொருவராக அழைக்க வர மறுத்தது. சத்திய மூர்த்தியைப் பார்த்து மட்டும் சிரித்தது. வேறு வழியின்றி, தன் மகளைத் தங்கையிடம் கொடுத்து விட்டு, சிந்தா வந்து கொஞ்சி " வாங்கத் தங்கம்" என அழைக்கவும் ஒரு முறை பிகு செய்தது. " சரி சத்தி, நீ வாடாப் போகலாம்" எனத் தன் மகனைக் கைபிடித்து அழைத்துச் சொல்லவும், சிந்துஜா ஒரு சத்தம் போட்டது. "அப்ப நீ வா" என அழைத்தாள், அதற்குள் சுப்புப் பனை ஓலை கிளுகிளுப்பைக் காட்டி சத்தம் எழுப்பவும் சிந்தாவிடம் சென்றது. சிவநேசன் அவளைக் கனிவாகப் பார்த்தபடி, "சுப்பு பாப்பா அழுதா என்னை வந்து கூப்பிடு" என்றுவிட்டு வயலுக்குச் சென்றவர்களைப் பின் தொடர்ந்தான்.

சிந்தாவின் கையில் மற்றொரு பிள்ளையைக் காணவும், சத்தியா துள்ளியது. இரு சிறு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு உடன்பிறப்புகள் மூவரும் சத்தியமூர்த்தியுமாகச் சிரித்துப் பேசி விளையாடினர். சிந்தா சிறிது நல்லெண்ணெய் தொட்டு சிந்துஜாவின் உச்சந் தலையில் வைத்து, ஒரு சிட்டிகை சீனியை வாயில் வைத்து விட்டாள். இது எதுக்குமா எனக் கேட்ட மகனிடம்.

" இந்தப் பாப்பா முதல் முதல்ல நம்ம வீட்டுக்கு வந்திருக்குல்ல , உறவு வளரனும்னு வைப்பாக" என விளக்கம் தந்தாள் சிந்தா.

முக்கால் மணிநேரம் கழித்து வயலை பார்க்கச் சென்றவர்கள், பேசிக் கொண்டே திரும்பினர்.

" சரிங்கையா, இந்தச் சீமைக் கருவைய வச்சே இடத்தை அளந்து வேலி போட்டுருவோம்" என்றார் அய்யனார்.

" அய்யனார், கம்பி வேலி போட்டுக்கலாம். நீங்க அதுக்கெல்லாம் ஸ்டைன் பண்ணாதீங்க" எனக் குமரன் சொல்லவும், " என்னங்கய்யா" எனக் குமரனைக் கூர்மையாகக் கவனித்தார்.

" நீங்க கருவேலமரத்தை வச்சி கஷ்டப் பட்டு வேலி வேண்டாம். கம்பி வேலி போட்டுக்காலாம்னு சொல்றார்." எனச் சிவநேசன் விளக்கவும்,

" இதுக்கு எதுக்குங்கையா செலவு பண்ணிக்கிட்டு" என அய்யனார் செலவைக் குறைப்பதாக நினைத்துச் சொல்லவும்,

" நம்ம மூலிகை பண்ணை போட போறோம். அதுக்கு இந்த மரம் பக்கத்தில் இருக்கக் கூடாது. இது காற்றில் இருக்க ஈரத்தை உறிஞ்சிடும். மூலிகைச் செடிக்கே ஆபத்தா முடியும். அதனால வேண்டாம். என்னைக் கேட்டா இந்த ஊரில எல்லாருமே கருவேலமரத்தை அடியோடு எடுக்குறது நல்லதுன்னு சொல்லுவேன்" எனக் குமரன் மீண்டும் அய்யனாருக்குப் புரியும் படி எடுத்துச் சொன்னான்.

"அது எப்படிங்கய்யா, இங்கனை நிறையப் பேருக்குக் கஞ்சி ஊத்துறதே, இந்தக் கருவையும், கரி மூட்டமும் தான். சிலர் தன்னால மூட்டம் போட்டு கரியை காசாக்கிகுவாக, சிலர் விறகு வெட்டப் போவாக, இளவட்ட பயலுக கரிமூட்டம் போடுற கம்பனிக்கு வேலைக்குப் போராக, எங்களுக்குப் பொழப்பே இது தான் ஐயா " எனத் தங்களது வாழ்வாதாரமாகச் சீமைக்குக் கருவை உள்ளதை அவரும் விளக்கினார்.

" நீங்க பொழப்புன்னு நினைக்கிறது தான், உங்கள் பொழப்பை கெடுக்குது, அதை மாத்த தான் நாங்க முயற்சி செய்யுறோம், இது லாபமான விஷயமா, காசு வருமுன்னு நிரூபிச்சா மத்தவங்களும் கருவேலமரத்தை அளிக்க முன் வருவாங்க, ஒரு நாள் விளக்கமா சொல்றேன்" என்ற குமரன், "அண்ணன் , இங்கே ஒரு அவேர்னெஸ் ப்ரோக்ராமமுக்கு ஏற்பாடு பண்ணனும்" என்றான்.

"நம்மைச் செஞ்சு காட்டிட்டு தான், அதைப் பத்தி சொல்லணும் குமரா, அப்பத்தான் காது கொடுத்தாவது கேப்பாங்க" என்ற நேசன்,

வேலையை ஆரம்பிக்கச் சொல்லி, மாமன் மருமகன் இருவரிடமும் பொறுப்பை ஒப்படைத்தான். முன்பணமாகப் பணத்தையும் நீட்டவும் அய்யனார் யோசித்தார். " காசை வாங்கிக்க அய்யனார், அப்பத் தான் இதுக்குச் சம்மதிச்சு இருக்கன்னு அர்த்தம் " எனப் பெரியவர் சொல்லவும் அய்யனார் வாங்கிக் கொண்டார்.

சிந்துஜா, சிந்தாவின் வீட்டில் நன்றாக ஒட்டி விளையாடிக் கொண்டிருந்தது. சிவநேசன் மகளை உணர்ச்சி வயப்பட்டுப் பார்த்திருந்தான். சிவநேசன் போகலாம் என அழைத்த போது சிந்தாவிடமிருந்து வர மறுத்தது.

அதற்குள், அவர்கள் வீட்டுப் பண்ணைக்காரன் கருப்பன், " அய்யா, சின்னம்மாவும் மாப்பிள்ளையும், மருதையிலிருந்து வந்திக்காக. ஆயி உங்களை வரச் சொன்னாக" எனக் கங்கா வந்ததை அறிவித்தான். சிவநேசனுக்கு உடல் விறைத்தது. அதிலேயே சிந்தாவுக்கு அவனுடைய கோபம் புரிந்தது. அவனுக்கு ஆதரவான பார்வையைக் காட்டினாள். அதைப் புரிந்து கொண்டவன், ஒரு பெருமூச்சோடு,

" அப்பா, நீங்க குமரனோட முன்னப் போங்க. நான் பின்னாடியே நடந்து வாரென்" என அனுப்பி விட்டு, மகளை அழைத்தான். அப்பாவின் மொழி அதுக்குப் புரிந்ததோ என்னவோ, இந்த முறை அடம் பிடிக்காமல் சென்றது. அவன் பொதுவாகச் சொல்லித் தலையாட்டி விட்டு நடையைக் கட்ட, வேலு, " சார் வாங்க, நான் கொண்டு போய் விடுறேன்" என அவன் மறுத்தும் கேட்காமல் வண்டியில் ஏற்றி கொண்டு விட்டு வந்தான்.

சிவநேசனை வாசலில் இறக்கி விடும் போதே உள்ளே கங்காவின் பெரிய சத்தம் கேட்டது. சிவநேசன் வேலுவிடம் சொல்லிக் கொள்ளவும் மறந்து உள்ளே சென்றான். வேலு பணமிருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் பத்தாது. சொந்த பந்தம், மனைவி மக்கள் அனுசரணையாக அமைய வேண்டும் என மனதில் நினைத்தவன், தனக்கு மனைவியாகச் சிந்தா வாய்த்ததை எண்ணி மகிழ்ந்தான். வண்டி தன் போக்கில் வீடு வந்து சேர, யோசனையோடு இருந்த கணவனை என்னவென்று விசாரித்தாள் சிந்தா.

"பெரிய வீட்டுல, பெரியவர் சின்ன மகள் தான் பிரச்சினைக்கு எல்லாம் காரணமோ" என எதார்த்தமாகக் கேட்டான் வேலு. சிந்தா ,"என் மச்சான்,பெரிய வீட்டில எதுவும் ரசாபாசமா ஆயிடுச்சா" என அதிர்ச்சியாகக் கேட்டால் சிந்தா. "இல்லை புள்ளை , அந்தம்மா சத்தம் வீதி வரைக்குக் கேட்டுச்சு" என்றான்.

"பெரிய ஐயா, தங்கச்சி மகனுக்குத் தான், இந்தக் கங்காவ கட்டிக் கொடுத்தாக, அது நாத்தனாரைத் தான் சின்னையா கட்டியிருக்காரு. பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்துருக்காக, சின்னவர் புள்ளையைத் தூக்கிட்டு வந்துட்டாருல்ல அது தான் விஷயமா இருக்கும்" என அப்போதைக்கு விஷயத்தை முடித்தாலும், 

கங்காவைப் பற்றி நினைக்கையிலேயே பழைய நினைவுகள் அவள் கழுத்தைப் பிடித்தது. தூக்கத்தில் அரண்டு எழுந்தவளை வேலு தேற்றினான். அவனின் ஆதரவான செயலில் திருமணம் முடிந்து ஐந்து வருடம் கழித்துத் தன் கணவனிடம் மனம் திறந்தாள் சிந்தா.


Saturday, 10 July 2021

ஹாசினி சந்திரா - முடிவுரை

 ஹாசினி சந்திரா - முடிவுரை 

      மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பெங்களூரு சந்திர பவனத்தில் ப்ரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதனைக் கன்னட ஊடகங்கள் மட்டுமின்றி இந்திய அளவிலும் ஏன் சர்வதேச ஊடகங்கள் கூட மிகுந்த ஆவலோடு எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.

     நீண்ட இடை வேளைக்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், கர்நாடக ஜனாதா பார்ட்டியின் தலைவரும் , முன்னாள் துணை முதல்வருமான ஶ்ரீசுரேந்திர ராமச்சந்திரா என்ற எஸ்ஆர்சி ஊடகத்தைச் சந்திக்க இருக்கிறார். அவர்கள் மாளிகை இருக்கும் அந்தப் பகுதி முழுவதும் தங்கள் தலைவரை வரவேற்கும் சுவரொட்டிகளும், கட்சித் தோரணங்களும் , கட்டவுட்களுமாகக் களை கட்டியது. கட்சியின் மூத்த தலைவர்கள், இந்நாளில் கூட்டணி ஆட்சியில் பங்குபெறும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு புறம் கூடியிருந்தனர்.

      அந்த மாளிகையின் உள்ளும் புறமும் உச்ச பட்ச போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது. ஊடகங்கள் தங்கள் ஊகங்களைச் செய்தியாக வாரி வழங்கிக் கொண்டிருந்தன. எஸ்ஆர்சி யின் பிறப்பு வளர்ப்பு குடும்ப வாழ்க்கை, இரண்டு குடும்பங்கள்,திரைத்துறை வாழ்க்கை, அரசியல் பிரவேசம், கட்சி ஆரம்பித்தது, துணை முதல்வரானது. ஹாசினி சந்திரா படுகொலை, நஞ்சப்பாக்கள் கைது, விசாரணை, தண்டனை என அத்தனையைப் பற்றியும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.

       வீட்டின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் எஸ்ஆர்சி பழைய கம்பீரத்துடன் தனது மனைவிமார் இருவருடன் மேடை ஏறினார். இரத்தின தேவ் எல்லாருக்கும் ஓர் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, சிறு அறிமுக உரை. எஸ்ஆர்சி நான்கு ஆண்டுக்கால வனவாசத்தைப் பற்றி அறிவித்து, ஹாசினி படுகொலை மற்றும் அதனைத் தொடர்ந்த துக்கம் துயரம் எனச் சென்டிமென்டாகப் பேசி, தங்கள் குடும்பத்துக்காகப் பிரார்த்தனை செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துத் தலைவரிடம் மேடையைத் தந்தார்.

     எஸ்ஆர்சி மேடையில் அமர்ந்தபடி முன்னால் போடப்பட்டிருந்த மேஜை மீது கையை வைத்துக் கொண்டு, அவரது வழக்கமான ஸ்டைலில் "ஜெய் கர்நாடகா, ஜெய் கன்னடிகா . எனது அன்பு உடன்பிறப்புகளே" என்றார் வெளியே வைக்கப்பட்டிருந்த திரையில் தலைவரைப் பார்த்த தொண்டர்கள் " ஹோ " என ஒலி எழுப்பினர். கையை உயர்த்தித் தலைவணங்கி ஏற்றவர், " எனது அன்பு உடன்பிறப்புகளாகிய கேஜேபி தொண்டர்களுக்கும் , கர்நாடக மக்களுக்கும் எனது வணக்கத்தையும், நன்றியையும் இந்த ஊடகங்கள் மூலமாகச் சொல்லிக்கிறேன். எனது உடல்நிலைக்காகப் பிரார்த்தனை செய்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். உங்களைக் காணாத இந்த வருடங்கள் நிச்சயமாக எனது வாழ்வின் அஞ்ஞாதவாசம் தான். எனது மனைவிமார்கள் இருவரின் கவனிப்பிலும், மருத்துவர்களின் சிகிச்சை , உறவுகளின் ஆதரவு, எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் பிரார்த்தனைகளால் இதோ நான் மீண்டும் உங்கள் முன்.

       எனது உடல்நிலை சரியில்லாத போது, என் இடத்தை நிரப்ப எனது மகள் ஹாசினி சந்திரா உங்கள் மத்தியில் வந்தாள். சில சதிகாரர்கள், உள்ளிருந்தே பதம் பார்த்த துரோகிகளால் எனது அன்பு மகளை நான் பலி கொடுத்தேன். " என நிறுத்தியவரின் குரல் கம்மி இருந்தது, கண்கள் கலங்கி ஒரு நீர் திவலை உருண்டு கீழே விழாமல் தேங்கி நின்று கேமராவுக்குப் போஸ் தந்தது, தேர்ந்த நடிகரான எஸ்ஆர்சி அதனைச் சுண்டி விட்டு, குரலைச் சீர் செய்து கொண்டு மீண்டும் தனது உரையைத் தொடர்ந்தார்.

" இன்னொரு ஹாசினி சந்திரா நமது கட்சிக்குக் கிடைக்கமாட்டாள். ஆனால் இறைவன் கொடை வள்ளல், அவன் எப்போதும் எனக்கு எல்லாவற்றையும் இரட்டிப்பாகவே அளித்து வந்திருக்கிறான். " எனச் சிரித்தவர் " இதோ அதற்கான சாட்சி எனது மனைவி மார், எனது வாழ்க்கையையும் சரி பாதியாகப் பங்கிட்டுக் கொண்டவர்கள். எனது மகன்கள் பிரதிபன் சந்திரா, அதிபன் சந்திரா " என அவர்களது குடும்பத்தையும் அறிமுகம் செய்தவர் , " கடவுள் எனக்கு எல்லாவற்றையும் இரட்டிப்பாகத் தந்ததாகச் சொன்னேன். ஆம் எனக்குப் பிறந்தது இரட்டை மகள்கள். மேனகாவுக்குப் பிரசவத்தில் இரட்டை மகள் பிறக்க ஒரு மகவு அதன் தாயிடமும் மற்றொன்றை அதன் பெத்தம்மா பானுமதியிடமாக வளர்ந்தது. இங்கு வளர்ந்தவள் ஹாசினி சந்திரா, அங்கு வளர்ந்தவள் சுஹாசினி சந்திரா. இருவருக்கும் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள வித்தியாசம்" என வரிசையாக வர்ணித்துத் தனது மகளைக் கணவன் சந்திரதேவ் மற்றும் மூன்று வயது பெண் குழந்தை மிருதுபாஷினியோடு சேர்த்து அறிமுகம் செய்தார்.

சுஹாசினி சந்திரதேவ், ஹாசினியின் எதிர் பதமாகச் சாதாரணக் குடும்பப் பெண்ணாக அலங்காரமின்றிக் கணவனோடு ஒட்டிக் கொண்டு வந்தாள். பார்த்தவர்கள் வியந்தனர். அடுத்தடுத்துக் கேள்விகள் ராக்கெட் வேகத்தில் வந்து விழ, சீனியர் ஜூனியர் சந்திராக்கள் அதனைச் சமாளித்தனர். வெற்றிகரமாக ஹாசினியை, சுஹாசினியாக இவ்வுலகில் அறிமுகம் செய்தனர். ஒருவாரம் ஊடகங்கள் இதைப் பற்றித் துப்பு துலக்கி, அலசி ஆராய்ந்தன. ஹாசினி சுஹாசினி குறைந்த பட்ச ஆறு வித்தியாசத்தைக் கண்டு பிடித்து ஓய்ந்தன.

எஸ்ஆர்சியைப் பார்க்க முதலமைச்சரே வந்தார். குடும்பத்தாரோடான கலந்துரையாடலுக்குப் பிறகு, தனது அலுவலக அறையில் இருவரும் சந்தித்தனர், சந்திரதேவ் உடனிருந்தான்.

" உங்களுடைய ஒத்துழைப்பு இல்லைனா, மாமாவையோ, கட்சியையோ, ஹாசினியவோ நான் மீட்டிருக்க முடியாது. நன்றி சார்" எனச் சந்திரதேவ் முதலமைச்சருக்கு நன்றி சொன்னான். எஸ்ஆர்சி பார்வையாளராக இருக்க, " எல்லாத்தையும் தொலைநோக்கு பார்வையோடு பார்க்கும் உங்க மாமனாருடைய உத்தி தான்" எனச் சந்திரதேவையும் அதிர விட்ட முதலமைச்சர். தனது அறுவைசிகிச்சைக்கு முன்பு சந்திர தேவை கூப்பிட்டுப் பேசிய போதே தம்மிடமும் பேசியதைச் சொன்னார். இதில் அவர்கள் எதிர் பார்த்ததும், எதிர் பாராதது இரண்டுமே நஞ்சப்பாக்களின் நயவஞ்சகம் தான்.

" கிருஷ்ணாஜி, நஞ்சப்பாட்ட இருந்து எல்லாத்தையும் வாங்கிட்டிங்கல்ல " எனப் பூடகமாகக் கேட்டார் எஸ்ஆர்சி.

அவரும் சிரித்துக் கொண்டே, " உங்களை வச்சிருந்த மருத்துவமனையில் அவனை வச்சு, அதே ட்ரீட்மெண்ட் நடக்குது. மகனை சிறையில் கவனிச்சாச்சு. " என்றவர். " ஆனால் நீங்களும், சிக்கம்மாவும் ரொம்பச் சிரமபட்டுட்டீங்க " என வருந்தினார்.

" இருக்கட்டும் எல்லாம் ஒரு காலம் தான். ஆனால் சரியான நேரத்துக்கு நீங்க மாப்பிள்ளையை வரவழைத்ததும், தங்கப்பாண்டியனை இன்வஸ்டிகேசனுக்கு அப்பாயிண்ட் பண்ணதும் சரியான மூவ்" எனப் பாராட்டியவர், இனி தான் கட்சியை மட்டும் கவனிப்பதாகவும், ஆட்சிப் பொறுப்புகளில் அவரது உடன்பிறப்புகள் இருப்பார்கள் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பு, எஸ்ஆர்சியின் பொது வாழ்விலும் குடும்ப வாழ்விலும் அவருக்குப் பெரிய மரியாதையை வாங்கித் தந்தது.

சந்திர பவனத்தில் இரண்டு மனைவிகளுடன் எஸ்ஆர்சி வாழ ஆரம்பித்தார். அதிபன் சந்திரா மயூரா தம்பதி அவர்களோடு இருந்து தொழிலையும் அப்பா அம்மாக்களையும் பார்த்துக் கொண்டார்கள். ப்ரதிபன் சந்திரா குடும்பத்தை மஸ்கட்டில் வைத்து அவன் உலகம் முழுவதும் பறந்தான்.

சிம்மதேவ் குடும்பம் அண்ணன் ,தம்பி இரண்டு தேவும் மஸ்கட்டில் தங்கள் தொழிலைப் பார்த்தனர். சந்திரதேவ் தனது மனைவி சுஹாசினி சந்திரதேவுக்குத் தனி அடையாளம் ஏற்படுத்தித் தரும் நோக்கில் அவளுக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுக்கச் சொன்னான். எல்லாரும் ஆச்சரியப்படும் வகையில் ஹாசினி பேசன் டிசைனிங்கை ஆரம்பித்தாள். தனக்கே மற்றவர் உடை தேர்ந்தெடுக்கும் நிலையிலிருந்தவள், தனது முழுக் கவனத்தையும் அதில் செலுத்தி பெரிய இடத்துப் பெண்களுக்கான பிரத்தியேக ஆடை வடிவமைப்பு செய்யும் தொழிலை ஆரம்பித்திருந்தாள். ஹாசினி சந்திரா என்ற அடையாளத்தில் உச்சாணிக் கொம்பிலிருந்தவள், சுஹாசினி சந்திரதேவாக அனைவரோடும் பழகினாள். அரபுநாடுகளின் உயர்மட்ட பெண்களின் உடை ஆலோசகரானாள் சுஹாசினி சந்திரதேவ்.

சந்திரா மற்றும் தேவ் குடும்பத்தினர், உல்லாச படகிலும், ஹெலிகாப்டரிலுமாகப் பயணித்துச் சுஹானா தீவை வந்தடைந்தனர். மேத்யு வில்லியம்சன் மற்றும் சந்திரதேவ் ஜோடிகள் அனைவரையும் வரவேற்றனர். பரிதி பவன் முன்னதாக வந்து மலரும் நினைவுகளோடு ஏற்பாட்டைக் கவனித்தனர். அன்றைய தினம் சுஹானா தீவின் " ஹாசினி சந்திரா " ஹாலிடே ரிசார்ட் எஸ்ஆர்சியின் கைகளால் திறந்து வைக்கப்பட்டது.

நான்கு வருடங்களில் சுஹானா தீவு சொர்க்கபுரியாக மாறியிருந்தது. ஆங்காங்கே காட்டேஜ் , நடைபாதைகள், கார்டன், ஏனைய வசதிகள் பெற்று அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்திச் செய்யும் ஆடம்பர விடுதியானது. சந்திரதேவின் கனவுத் திட்டம் ஹாசினிக்காக மேத்யுவின் நிதியுதவியுடன் நிறைவேறியது.

பெரியவர்களுக்குச் சமதளமான இவர் முன்பு தங்கியிருந்த காட்டேஜில் வசதிகளை மேம்படுத்தித் தங்கும் அறை ஒதுக்கிய தேவ், மற்ற ஜோடிகளுக்கு ஆங்காங்கே இருந்த அறைகளை ஒதுக்கினான்.

இரவு நேரம் அருவியை ஒட்டிய காட்டேஜை தங்களுக்கு எடுத்துக் கொண்ட சந்திரதேவ் ஜோடி , மூன்று வயது மகளைத் தூங்க வைத்து விட்டு, அருவி விழும் சத்தத்தையும், ஓடையின் சலசலப்பையும் ரசித்தபடி தங்கள் பழைய நினைவுகளில் மூழ்கி ஒரே ஷோபாவில் அவன் மடியில் அவள் குறுக்காக அவன் கழுத்தை ஒரு கையால் கட்டிக்கொண்டு மறுகையால் அவன் கைகளில் பிணைத்துக் கொண்டு, அவன் அணைப்பில் அமர்ந்து சாளரத்தின் வழியே வானத்துச் சந்திரனை ரசித்துக் கொண்டிருந்தாள். அவன் அவளை ரசித்துக் கொண்டே " ஹசி, நீ ஹேப்பியா" என்றான். “ம்ம்” என்றாள்.

“வாயைத் திறந்து பேசு” என்றான்.

" ம் ஸோ ஹேப்பி, எனக்குப் பிடிச்சது போல எனக்கான அடையாளத்தை நீ கொடுத்திட்டியே, இரண்டு நாள் என் ப்ரெண்ட்ஸ் அண்ட் கஸ்டமர்ஸ் கிட்ட இருந்து பர்மிசன் வாங்கிட்டு வர்ற அளவு , அவ்வளவு அன்புத் தொல்லைகள். ஸோ ஹேப்பி " என்றாள் . அவளை முறைத்தவன், "அதனால தான் ஹேப்பி. என் கூட வாழறதில இல்லையா" எனவும்,குலுங்கிச் சிரித்தவள் அவன் நெற்றியில் முட்டி, " அரக்கன் ஸாருக்குக் கோபம் வருதோ, அப்புறம் என்ன." எனச் சிணுங்கியவள்,

" நானே, உன்னை அடையாளம் தெரிஞ்ச நாளை நினைச்சு அந்த ட்ரீம்ல இருந்தேன்" என்றாள்.

" போடி,போய்ச் சொல்லாத, என் அடையாளம் தெரிஞ்சு, நீ அழுத " என்றான்

" போயா முட்டாள் கூஸ், குழியிலிருந்து தூக்கும் போது கையை விடாமல் பிடிச்சுக்கோடி மது ன்னு சொன்னியே, எப்படி இருந்துச்சுத் தெரியுமா. " எனக் கண்கள் பளபளக்க அவள் விவரித்த விதத்தில் சந்திரதேவ் மயங்கித் தான் போனான். அவர்கள் ஒருவரில் ஒருவர் லயித்து இருந்த போது கதவு தட்டும் ஓசை கேட்டது. சந்திரா எரிச்சலாகச் சென்று கதவைத் திறக்க நிருபன் தேவ் நின்றான்.

"அண்ணா, ஒரு பொண்ணைக் கடத்திட்டு வந்துட்டேன். ஹெல்ப் மீ" என்றான். நிருபன் தேவ் கடைசியாகத் துபாய் மன்னரின் உறவினருக்காக ஒரு மாளிகையைக் கட்டிக் கொண்டிருந்தான். அதை நினைவு கூர்ந்து கலவரமாகி " யார்டா" என்றான்.

“ஸாஹிரா உமர் ரஷித் “ என்றான் நிருபன். சந்திரதேவ் 'மறுபடியும் முதல்ல இருந்தா " என அதிர்ந்தான். "திருந்தவே மாட்டீங்க "என் ஹாசினி சகோதரர்களை முறைத்து நின்றாள்



Thursday, 8 July 2021

ஹாசினி சந்திரா-23

 ஹாசினி சந்திரா-23

      " புட்டிமா, எப்படிடா இருக்க" என்ற எஸ்ஆர்சியின் பாசமான விளிப்பில் உணர்ச்சிவசப்பட்டுப் போனாள் ஹாசினி சந்திரதேவ். "அப்பா"என அதற்கு மேல் அவளுக்கு வார்த்தை வரவில்லை.

       " புட்டிமா, தைரியமா இருக்கனும்டா. யாரு மகள் நீயி, நீயே அழலாமா. நீ உடம்பை தேற்றிக்கோ. அதே பேபி திரும்ப உன்கிட்ட வரும். எனக்கு ஒரு தேவதை மகளா வரலையா. சிம்ம தேவ் குடும்பத்துக்கு ,என் தேவதை அளவுக்கு அழகான தேவதை வர்றது கொஞ்சம் கஷ்டம் தான், இருந்தாலும் நிறம் கம்மியாவாது வந்திடும்" என அருகிலிருந்த பானுமதி மற்றும் அவர்களது வம்சத்தையும் நிறம் குறைவு எனக் கேலி செய்து மகளைத் தேற்றினார் எஸ்ஆர்சி.

        " ஆகா போதுமே இந்தப் பெருமை. மது , மேனகாவைக் கொண்டு பிறந்திருக்கா. உங்களை மாதிரி இல்லை. " எனப் பானுமதி கணவனின் காலை வாரிக் கொண்டிருந்தார்.

     " மதுமா நீயே சொல்லு, நீ அப்பா மாதிரி தானே இருக்க. மேனு நீ சொல்லு" என மகளையும், அருகிலிருந்த மனைவியையும் சேர்த்துக் கேட்டார்.

          " போதும், போதும் நீங்க சூப்பர் ஹீரோ தான், அது இல்லாமலா கன்னடத்தைக் கட்டி ஆண்டிங்க " என்ற மேனகா, அவர் அந்தப் பக்கம் பானுமதியிடம் பெருமையாகக் கேட்டுக்கோ எனச் சொல்லவும், " ராம்ஜி, நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரியே சொல்லிட்டேன் . போதும் தானே" எனத் தன பங்குக்குக் காலை வாரினார் மேனகா. அம்மாக்களோடு சேர்ந்து மகளும் சிரித்தாள்.

     " மதுமா , உங்க அம்மா இரண்டு பேரையும் பாருடா" என அவர் மகளிடம் முறையிடவும், சிரிப்பை மாற்றி, முகம் கூம்பி

     " அப்பா, நீங்க எப்பவுமே சூப்பர் ஹீரோ தான். ஆனால் நான் உங்களை மாதிரி ஸ்ட்ராங் இல்லை பா. ரொம்ப மோசம். அழுமூஞ்சியா போயிட்டேன்" என வருந்தினாள்.

      " புட்டிமா, அழுகறதால மனசில் இருக்கப் பாரம் குறையும். ஆனால் அதுவே பிரச்சனைக்குத் தீர்வு இல்லைடா. நம்ம வாழ்க்கையில் அடுத்து என்னன்னு யோசிக்கனும். போனதைப் பத்தி யோசிக்கக் கூடாது. இந்தப் பேபி இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு உன்கிட்டையே திரும்பி வரும். அதுக்கு ரெடியாகு. நீ அழுமூஞ்சியா இருந்தா மாப்பிள்ளையும் அழுவான்" என்றார்.

" ம், யெஸ் சந்திரா ரொம்ப அழுதான்" என அவள் தன் கணவனைச் சொல்லவும்,

      "சந்திரா அழமாட்டானே. தைரியமான ஆம்பளை. இதோ பார் இரண்டு பொண்டாட்டியை வச்சுச் சமாளிக்கிறான்" என்றார். மகள் இவர் ஞாபக மறதியில் பேசுகிறாரா அல்லது கேலி செய்கிறாரா எனப் புரியாமல்,

      " இரண்டா, அப்பா. என் சந்திரா உங்களை மாதிரி இல்லை. நான் எவ்வளவு கொடுமைப் படுத்தினாலும் என்னை விட்டுக் கொடுக்க மாட்டான்" என அப்பாவையே குற்றம் சுமத்தி கணவனைத் தாங்கிப் பேசினாள் ஹாசினி.

     "நல்லாச் சொல்லு உங்கப்பாவுக்கு அப்பவாவது புரியட்டும்" எனப் பானுமதியும், " அடியே என் புருஷனைச் சொன்னேனா பிச்சுடுவேன் " என மேனகாவும் ஒரே நேரம் எஸ்ஆர்சியை எதிர்த்தும், வக்காலத்து வாங்கியும் பேசவும். " புட்டிமா, அப்பாவை எதுக்குப் பெத்தம்மா திட்டுறா" என அடுத்தக் கேள்வியில் எஸ்ஆர்சி மூவரையுமே அதிர விட்டார்.

     பானுமதி," மதுமா, உங்கப்பாவுக்கு ஞாபக மறதி எல்லாம் இல்லைடா. சும்மா நடிக்கிறார். அது தான் பெரிய நடிகனாச்சே " எனக் கோபப்படவும் , எஸ்ஆர்சி சிரித்துக் கொண்டே, "புட்டிமா, இன்னைக்குத் தான் உங்க பெத்தம்மா, என்னை நல்ல ஆக்டர்னு ஒத்துட்டு இருக்கா. எப்பவுமே சொல்லவே மாட்டா. அதுவும் சூட்டிங் போயிட்டு வந்தா, எல்லாரையும் தொட்டு நடிச்சிட்டு வருவேனாம், புண்ணியா ஜனம் பண்ணித் தான் உள்ளே விடுவா" எனச் சொல்லிக் குலுங்கிச் சிரித்தார்.

     " அக்கா, அப்படியா. அப்ப ராம்ஜி என் கூட நடிச்சிட்டு வந்தப்பவும் இதே தான் செஞ்சிங்களா " என மேனகா ஆட்சேபமாகக் கேட்கவும்,

" மேனுமா, அப்ப அடுத்த லெவல் அக்னி பிரவேசம் செய்யச் சொல்லுவா" என வம்பிழுத்தார் எஸ்ஆர்சி.

பானுமதி " மதுமா, இத்தனை பேசுறார் பார். அவருக்கு ஞாபகம் எல்லாம் நல்லாதான் இருக்கு. " என்றவர் மகளைப் பார்த்துக் கொண்டு இருந்ததில், தன் அம்மாவுடனான அப்பாவின் உறவு அவளுக்கு விகற்பமாகத் தெரியக் கூடாது என்ற பெருந்தன்மையோடு,

" உங்கப்பாவை கட்டி வைக்க என்னால முடியலைனு தான், உங்கம்மாட்ட கொடுத்துட்டு வந்தேன். ஆனால் அதுனால தான், தங்க விக்ரகம் மாதிரி நீ கிடைச்சிருக்க. உடம்பையும் மனசையும் நல்லா பார்த்துக்கடா தங்கம். நீதான் எங்களுக்கு ஒரே மகள். உனக்கு ஒண்ணுனா தாங்கமுடியாது. ஏற்கனவே பட்ட கஷ்டம் போதும்" எனக் கண் கலங்கவும், "பெத்தம்மா ஐ யம் ஃபைன். நீங்க கவலை படாதீங்க" என அவருக்கு ஆறுதல் சொன்னாள். 

      அதற்குள் அவர்கள் இருவரும் டாம் அண்ட் ஜெர்ரியாக அடுத்த விசயத்துக்கு வாக்குவாதம் செய்ய இவள் புன்னகையோடு போனை வைத்தாள். இவர்கள் பேசுவதை நடுவில் கலைக்க மனம் வராமல் மனைவியின் சிரிப்பை அறையின் வாசலிலிருந்தே கவனித்த சந்திரதேவ் உள்ளே வந்தான்.

     “அம்மா, அப்பாவும் பெத்தம்மாவும் எப்பவுமே இப்படித்தான் சண்டை போட்டுக்குவாங்களா “ என மேனகாவை வினவினாள்.

      “அவுங்க , சிறிசிலிருந்து ஒண்ணா வளர்ந்தவங்க, உங்க அப்பாவுக்குப் பெத்தம்மாவை பார்த்தவுடனே, அந்த நாள் ஞாபகத்துக்குப் போயிடுவார், அதனால் அதே மாதிரி வம்பிழுக்கிறார். இரெண்டு சின்னப் பசங்களை வச்சுட்டுச் சமாளிக்கிறேன்” என மேனகா அவர்கள் பஞ்சாயத்துக்களைச் சொல்லிச் சிரித்தார்.மக்களும் அப்பாவின் சேட்டைகளில் மனம் லயித்து இருந்தாள்.

      “உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை அத்தை, பானு அத்தை எல்லாச் சந்தோஷத்தையும் இழந்துட்டாங்கன்னு நினைச்சோம், ஆனால் எல்லாக் கஷ்டம், சவால்களை நீங்க தாங்கிகிட்டு , இப்ப சந்தோசத்தை அத்தைக்குத் திருப்பித் தந்திருக்கீங்க” என உணர்ச்சி வயப் பட்டான் தேவ்.

      “அது என்னோட கடமை தம்பி , எந்தப் பொம்பளையும், தான் புருஷனை இந்தான்னு தூக்கி கொடுத்துட்டு வரமாட்டாள், ஆனால் அக்கா என்னை நம்பி நான் சமாளிப்பேன்னு கொடுத்துட்டு வந்தாங்க. எல்லாம் அனுபவிச்சாச்சு . இந்த மகாராணி நல்ல இருந்தான்னா போதும். நாங்க தான் உங்களுக்குச் சிரமம் தர்றோம்’ என மேனகா சொல்லவும்,

      “அம்மா, அப்ப என்னையும் உன்னோட கூட்டிட்டு போ. நானும் பெத்தம்மா மாதிரி வந்துடுறேன், சந்திராவுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கலாம், நிறையப் பேர் பொண்ணு தர ரெடியா இருக்காங்க “ என ஹாசினி மூக்கை உறிஞ்சினாள். தேவ் அவளை முறைத்தான்.

           “நீ தானே , உன் புருஷனை விட்டுட்டு ரொம்ப வருவ, போடி வேலையத்தவளே. உடம்பை சீக்கிரம் தேத்திக்கிற வழியைப் பாரு. நான் என் புருஷனைப் பார்க்க போகணும்” என மேனகா மகளைத் திட்டிவிட்டு அறையை விட்டு வெளியேறினார். சந்திரதேவ் எதுவும் பேசாமல் தன வேலைகளைத் தொடரவும், அவளுக்கு மனம் பொறுக்காமல், ‘சந்திரா “ என அழைத்தாள் .

       “ஏதாவது வேணுமா” என வந்தவனை, கையைப் பிடித்து அருகே அமர்த்திக் கொண்டாள். “ஏதாவது பேசு , சைலண்டா இருந்தேனா எனக்குக் கஷ்டமா இருக்கு” என்றாள்.

        “நீ தான் பெரிய மனுசியாட்டம், பெரிய பேச்செல்லாம் பேசுற, அப்புறம் எதுக்கு நான் பேசணும்” என்றான். “அம்மாட்ட சொன்னதுக்குக் கோபமா, ஆனால் நீயும் உன் பொண்டாட்டியோட வெளியே பார்ட்டி, பங்க்சனுக்கு எல்லாம் போகணுமே, எத்தனை வருசத்துக்கு இப்படியே இருப்ப “ எனக் கேள்வி எழுப்பினாள் .

      “உன் உடம்பு கொஞ்சம் சரியாகட்டும், வா போயிட்டு வருவோம்.” என்றான். அவள் ஆட்சேபனையாகப் பார்க்கவும், “நான் தான் மேனேஜ் பண்ணிக்குவான்னு சொல்றேன்ல, அது கூட முடியாமலா , இதைப் பிளான் பண்ணியிருப்பேன்” என அவன் கடித்துக் கொள்ளவும். “கோவப படாத சந்திரா, கொஞ்ச நாள் ஆகட்டும், நானே சுஹாசினியா பழகணும் “ என்றாள் .

“நீ ஹாசினியாவே இரு, அப்பாவும் நான் சமாளிப்பேன்” என்றான். “அது எப்படி “ என அவள் கேள்வி எழுப்பவும்.

“அதுக்கு ஒரு கதை சொல்லுவோம், யாரோ உன்னைக் கடத்திட்டு வந்து நம்ம தீவுகிட்ட போட்டுட்டாங்க, நான் உன்னைக் காப்பாற்றினேன், உனக்கு அம்னீஷியானு சொல்லுவோம்” என அவன் ஒரு பதில் தரவும்.

“ரொம்பத் தான், உங்க எல்லாக் கட்டுக் கதையையும் இந்திய போலீஸும், தங்க பாண்டியன் IPS ம் , கேட்டு நம்பிக் கிட்டு இருப்பாங்க “ எனவும்,

“அப்ப உனக்கு அந்த ஆபீசரை பார்த்துத் தான் பயமா “ என்றான், அவள் “நோ கமெண்ட்ஸ் “ எனத் திரும்பிக் கொண்டாள் .

மேனகா கூடவே இருந்ததால் ஹாசினியின் உடல்நிலையும், மனநிலையும் சற்றே தேறியது. வீட்டில் உள்ள பெண்கள் அனைவருமே நல்ல விதமாக அவரவர் அனுபவத்திலிருந்து சீக்கிரம் அடுத்தக் குழந்தை பிறக்கும் எனச் சொன்னதால், தனது கருக் கலைந்த சோகத்திலிருந்து சற்றே மீண்டாள்.

சந்திரதேவ், வீட்டினர் மற்றும் மேத்யுவுடன், ஹாசினி தூங்கும் நேரத்தில் அவளது மனநிலை பற்றி ஆலோசனை நடத்தினான்.

" மதுவுடைய பயமே, அவள் உயிரோட இருப்பது தெரிஞ்சா எனக்கு ஆபத்து வரும்னு நினைக்கிறது தான். இந்தப் பயத்திலிருந்து அவள் வெளியே வரனும்னா, அந்தச் சிசுவேஷனை பேஸ் பண்ணனும். சுஹாசினி சந்திர தேவா அவளை இந்தியாவுக்குக் கூட்டிட்டுப் போவோம்" என அதிரடியாக அவன் சொல்லவும், அனைவருமே அதனை எதிர்த்தனர்.

" ஒரே மாதிரி தப்பை மறுபடியும் பண்ணாத " என மச்சினன்கள், பிரதியும், அதியும் கோபித்தனர். " நோ சந்து, உன்னை ரிஸ்க் எடுக்க விடமாட்டேன்" என அனுசுயா உறுதியாக நின்றார். இரத்தின தேவ் அண்ணியின் பக்கம் நின்றார். அண்ணன் சொல்லை மீறாத நிருபனே அதை எதிர்த்தான்.

    " என்னால அவளுடைய சித்திரவதையைப் பார்க்க முடியலை. இலட்சக் கணக்கான மக்களை இவளோட முகத்தைக் காட்டி, அதை ஓட்டாக மாற்ற முடியும்னு நஞ்சப்பா கணக்குப் போட்டான், அது தான் அவளுக்குப் பெரிய கஷ்டம் தண்டனைனு நினைச்சேன், ஆனால் அவள் முகத்தை யாருக்குமே காட்ட முடியாத தண்டனையை நான் தான் அவளுக்குக் கொடுத்துட்டேன். " என வருந்தியவன்,

 "அது அவ மனசை ரொம்பப் பாதிச்சிருக்கு. இல்லைனா நான் சரண்டராகி, அவளுக்கு அவளுடைய அடையாளத்தையே தர வேண்டியது தான் இதற்குச் சரியான பிராயச்சித்தம்" எனச் சந்திரா சொல்லும் போதே, " நோ" என ஹாசினியின் பெரிய சத்தம் கேட்டது. பேச்சு மும்மரத்தில் அவள் வந்ததை யாரும் கவனிக்கவில்லை.

    வேகமாகச் சந்திரதேவிடம் வந்தவள்,அவனைக் கட்டிக் கொண்டு, " நான் உன்னைச் சரண்டராக விட மாட்டேன். நான் ஹாசினி இல்லை, சுஹாசினி தான். நான் இனிமே பயப்பட மாட்டேன். நீ வேற முடிவு எடுக்காத" என அவள் பதட்டப்படவும். வீட்டினர் செய்வதறியாமல் திகைத்தனர்.

     ஆனால் மேத்யு, " ஹாசினி, தேவ் சரண்டராக வேண்டாம். ஆனால் நீயும் இப்படியே இருக்கக் கூடாது. யூ ஹெவ் டு கம் அவுட்" எனக் கண்டிசன் போட்டான்.

  " நான் என்ன செய்யனும் சொல்லு, சந்திராவுக்காக நான் எதுவேனாலும் செய்வேன்" என அவள் சொல்லவும், தனக்காக உருகும் மனைவியைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் சந்திர தேவ்.

    மேத்யூ, நிருபனை, தங்களது திட்டத்தைச் சொல்லச் சொன்னான். அதன் படி நிருபன் விளக்கினான். " பேபி டால் வேலை இல்லாமல் இருக்கிறதால தான் வெட்டியா யோசிக்குது" என அவன் சொல்லவும் ஹாசினி அவனை முறைத்தாள்.

       " ஹலோ, உண்மை அது தான். " என்றவன் மேத்யு சுஹானா தீவில் உல்லாச விடுதி கட்டும் திட்டத்துக்கு ஸ்பான்ஸர் செய்வதாகவும், அதனை வடிவமைக்கும் பணியை இரண்டு நம்பிக்கையான பெண்கள் செய்ய வருவார்கள் என்றும், அவர்களோடு சேர்ந்து, சுஹானா தீவை நன்கு அறிந்த ஹாசினி உதவி செய்ய வேண்டும். இவர்கள் சந்திதேவ், நிருபன் தேவ்  மேற்பார்வையில் செய்வார்கள் என மேலும் இருவரை ஹாசினியோடு உடன் இருப்பதற்கு நியமித்தனர். சந்திரதேவ் சரண்டர் ஆகாமல் இருப்பதற்காக ஹாசினி இதனை ஒத்துக் கொண்டாள்.

      அதன் படி, வீட்டிலேயே வெளி ஆட்கள் கண்ணில் படாமல் ஒரு அலுவலக அறையை ஏற்படுத்தித் தந்தார்கள். வேலைக்கு வந்த பெண்களில் ஒருத்தி கட்டிடக்கலை படித்தவள், மற்றொருத்தி மனநல மருத்துவம் முடித்த பெண். அவர்கள் ஹாசினியின் மனநிலையைப் பார்த்துக் கொண்டு, அவளுக்குப் பிடித்தமான சுஹானா தீவு வேலையையும் பார்த்தனர். ஹாசினி அவர்கள் வீட்டுப் பெண்கள் அத்தனை பேரையுமே அதற்குள் இழுத்துக் கொண்டாள். அவர்களது இயல்பு வாழ்க்கைத் தொடங்கவும், மேத்யுவோட மேனகா அமெரிக்கா பறத்தார்.

ஹாசினியின் பொழுது நல்லபடியாகக் கழிந்தது. அவளும் மாமியார் சொல்லாமலே வெளியாட்களைப் பார்ப்பதைத் தவிர்த்து மற்ற இரண்டு பெண்களோடு பழகி பொழுதைப் பயனுள்ளதாகக் கழித்தாள். அவளுக்கும் தாம் உபயோகமாக இருப்பதாக எண்ணம் தோன்றியது.

சுஹானா தீவைப் பற்றிய ப்ராஜெக்ட் மற்றொரு நன்மையாகச் சந்திராவோடு கழித்த பொழுதுகளை நினைவு படுத்தவும், கணவன், மனைவி அன்னிநியோன்யமும் அதிகமானது. அதற்கான விளைவும் வெளிப்பட்டது . ஹாசினி மீண்டும் கருவுற்றாள். வீட்டினர் மகிழ்ந்தனர், எனில் சந்திரதேவ் பதட்டமானான்.

        ஹாசினி மற்ற விசயங்களில் எத்தனை மாறியிருந்தாலும் மருத்துவமனைக்குப் பரிசோதிக்க வருவதற்கு மட்டும் மறுத்தாள். அதனால் இரண்டு பெண்களில் ஒருத்தியான மனநலம் பயின்ற மருத்துவரே, மகப்பேறு மருத்துவரை கலந்து கொண்டு, அந்த வேலையையும் சேர்த்துச் செய்தாள். அதனால் சென்ற முறை போல மசக்கையின் அவஸ்தை இல்லை. ஏழாவது மாதம் நடந்து கொண்டிருந்தது. ஹாசினிக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என எஸ்.ஆர்.சி மனைவிகளுடன் அமெரிக்காவிலிருந்து வந்து சேர்ந்தார்.


        மேடிட்ட வயிற்றோடு , தாய்மை பூரிப்பில் கன்னங்கள் மிளிர சதைப்பிடிப்போடு இருந்த மகளைப் பெற்றவர்களே கண் வைக்கும்படி இருந்தாள். " அப்பா" எனக் கட்டிக் கொண்ட மகளை அணைத்து உச்சி முகர்ந்தார் எஸ்ஆர்சி. மகன்கள், மருமகள்கள், சம்பந்திகள் என இரண்டு குடும்பமும் ஒன்று கூடியது. பானுமதி பேரன் பேத்தியை ஆசை தீரக் கொஞ்சி மகிழ்ந்தார். மேனகா, அனுசுயா, நிரஞ்சனாவிடம் தனது மகளைப் பார்த்துக் கொண்டதற்கு நன்றி தெரிவித்தற்கு இருவருமே உரிமையாகக் கோபித்துக் கொண்டனர். மேனகா அனுசுயா இடையே கசப்பு மாறி தங்கள் பிள்ளைகளின் நன்மைக்காக ஒரே போல் சிந்திக்க ஆரம்பித்து இருந்தனர்.

      இன்னும் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதிக்காததைப் பற்றி மூத்த பெண்கள் பேசிக் கொண்டனர். சந்திரதேவ்வுடன் அதைப் பற்றி விவாதித்தனர், "பொண்டாட்டிக்காக ஸ்கேன் மிஷன் வாங்குனியே , லேபர் வார்டும் செட் பண்ணுவியா" என அனுசுயா மகனைக் கேட்கவும்,

    " அம்மா, அவ இந்தளவு பாதிக்கப்பட்ட காரணமே நீங்க தான். அவள் பேசாமல் தான் இருந்தா. நீங்க தான் அவளை யாராவது பார்த்தால் எனக்கு ஆபத்துன்னு அவள் மனசில் பதிய வச்சிங்க" எனக் குற்றம் சொன்னான்.

    " மேனகா, உன் மருமகனை பார்த்தியா, இவன் செஞ்ச வேலை எல்லாம் சரி. நான் பயந்தது தான் தப்பாம்" எனச் சம்பந்தியிடம் மகனைக் குறைச் சொன்னார்.

    " சரி விடுங்க அ… " ஆரம்பித்து அண்ணி என அழைக்காமல் நிறுத்தவும், " சும்மா கூப்பிடு அது தான் எல்லாரும் ஒண்ணு மண்ணா ஆயாச்சே" என அமர்த்தலாகவே அனுசுயா சொல்லவும்.

" அதையும் தான் கொஞ்சம் நல்லா சிரிச்சுகிட்டுச் சொல்லுங்களேன்" என்றார் பானுமதி. " அதெல்லாம் எங்க அக்காவுக்கு வராது. இருக்கிறதை வச்சு இரண்டு பேரும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க " எனக் கேலி செய்த நிரஞ்சனா,

" ஹாசினியை செக்கப்புக்கு கூட்டிட்டுப் போற வழியைச் சொல்லுங்க " என்றார். " அது தான் அண்ணி, இந்தப் பொண்ணு எந்த விசயத்தைச் சீரியசா எடுத்துக்குவா, எதை லேசா எடுத்துக்குவான்னு பெத்தவ எனக்கே தெரியலையே " எனப் புலம்பினார் மேனகா.

சந்திரதேவ், " பத்தாம் மாசம் வரைக்கும் இதே டென்ஷனோட அலைய முடியாது. வளைகாப்புக்கு ஏற்பாடு பண்ணுவோம். ஒரு ஸ்பெஷஸ் கெஸ்ட்டை இன்வைட் பண்றேன். அவர் வந்தா எல்லாம் சரியாகிடும்" என்றான் . ஏழாம் மாதம் முடியும் தறுவாயில், வீட்டிலேயே ஹாசினி சந்திதேவின் வளைகாப்புக்கு ஏற்பாடு செய்தனர்.

வீட்டின் கூடத்தில் இரட்டை ஷோபாவைப் போட்டு, அதில் பிங்க் நிறத்தில் தங்க ஜரிகையிட்ட பட்டுச் சேலை , கட்டும் போது உருத்தக் கூடாது என அவளுக்காகவே ஸ்பேஷலாக இந்தியாவிலிருந்து நெய்து வாங்கினான். அதனை உடுத்தி தலையில் கொண்டையிட்டு பூச்சூடி, தங்கத்தில் கழுத்தை ஒட்டிய ராணிகள் அணியும் சோக்கர் நெக்லஸ் முத்துக்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதற்கு ஏற்ற காதணிகள் அவள் தலையை ஆட்டி பேசும் போது நடனமாட. சேலையை ஒற்றையாய் விட்டு அமர்ந்திருந்தாள். அவ்வப்போது கன்னக்குழியும் விழுந்தது. அதில் சந்திரதேவ் மகிழ்ந்து தான் போனான்.

     வீட்டினர் அனைவரும் கூடியிருக்க, பானுமதி ஒரு ஜோடி தங்க வளையலும் பின்னர்க் கண்ணாடி வளையலும் அணிவித்தார், மேனகா முத்து வளையும் கண்ணாடி வளையல்களும் அடுக்க, அனுசுயா, நிரஞ்சனா, ஆராதனா, மயூரா, மேகலா ப்ரீத்தி சுஹானா தீவு ப்ராஜெக்ட் செய்ய வந்த இரண்டு பெண்களும் கூட வளையலைப் பூட்டினர். 

    கடைசியாகச் சந்திரதேவ் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு ஜோடி வைர வளையலைப் போட்டு விட்டு, அதற்குப் பொருத்தமான நெக்லஸ் தோடுகளையும் மனைவிக்குப் பரிசளித்தான். இது முதல் முறை அவன் வாங்கியது. ஆனால் இதுவரை அவள் அணிந்தது இல்லை. ஆராதனா அவள் அணிந்திருந்த நெக்லஸை கழட்டி விட்டு, அண்ணனை தன் கையால் போட்டுவிடச் சொன்னாள். அவனும் எழுந்து நெக்லஸை போட்டு விட்டு, நெற்றியில் முத்தமிட்டான். அவள் அவன் முகத்தையே பார்க்கச் சந்து நெகிழ்ந்து இருந்தது நன்றாகவே தெரிந்தது.

" சந்திரா, நல்லபடியா புள்ளையைப் பெத்துக்குவேன். பயப்படாத" என்றாள். " சரிங்க மகாராணி. நீங்க சொன்னாச் சரி தான்" என்றவனை மீண்டும் அமர்த்தி, பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்தனர்.

எஸ்ஆர்சி தம்பதி சமேதராக ஆசீர்வாதம் செய்தவர்," புட்டிமா குட்டி தேவதையைப் பெத்துக் கொடு. தாத்தா வெட்டியா இருக்கேன். வளர்த்து விடுறேன்" என்றார்.

" ஆமாம், மகன்கள், மகளை வளர்த்த மாதிரி உங்கப்பா வளர்ப்பார்" எனப் பானுமதி கேலி செய்யவும். " அதுக்குப் பதிலா பேரப்பிள்ளைகளை வளர்க்கிறேன்" என்றார். ஹாசினிக்கு அடுத்து இரத்தினதேவ், அண்ணன்கள் இருவரும் பரிசுப் பொருட்களைத் தந்தனர்.

 எல்லாம் முடித்து ஆராத்திச் சுற்றி அதனை வெளியே கொட்டி விட்டு நிமிர்ந்த ப்ரீத்தி, ஒரு கார் வந்து நின்று அதிலிருந்து இறங்கியவர்களைக் கண்டு விதிர் விதிர்த்து உள்ளே ஓடிவந்தாள்.

ஹாசினிடம் வந்தவள், " பாபி வாங்க உள்ளே போவோம். அந்த ஐபிஎஸ் ஆபிஸர் மனைவியோட வந்திருக்காரு" எனச் சொல்லவும், ஹாசினி விழுந்தடித்து அறைக்குள் ஓட முயன்றாள்.

கார் சத்தம் கேட்டு ப்ரதிபன், அதிபன் சந்திராக்கள் எட்டிப் பார்க்க, நிருபன் தேவ் தங்கப்பாண்டியனன் IPS மற்றும் தான்வி IAS தம்பதிகளை அழைத்து வந்தான். சந்திராக்கள் அதிர்ந்து நோக்க, ஹாசினி உள்ளே ஓட எத்தனித்தவளைக் கைப்பிடியாகப் பிடித்து அதே இடத்தில் நிறுத்தினான் சந்திர தேவ்.

" சந்திரா என்னை விடு. அந்த ஆபீஸர் என்னைப் பார்த்திடுவார்" என அவன் காதில் ரகசியம் பேசியபடி பதட்டமாக அவர்களுக்கு முகத்தை மறைத்துத் திரும்பி நின்றாள்.

அதற்குள், ஹாலுக்கு வந்த ஆபீஸர் ஜோடிகள் எஸ்ஆர்சியை வணங்கினர். மேனகா, இவர் எங்கே எனப் பதட்டமாக வந்த போதும், "வாங்கச் சார், வாங்க மேடம்" என வரவேற்று அமரச் சொன்னவர், "ராம்ஜி, இவங்க" என ஆரம்பிக்கவும்.

" ஐஏஎஸ், ஐபிஎஸ் ஜோடி. எனக்குத் தெரியாதா. மிஸ்டர். அண்ட் மிஸஸ் பாண்டியன் எப்படி இருக்கீங்க " என விசாரித்தார்.

" வீ ஆர் பைன் ஸார். ஆன் டூட்டி மஸ்கட் வரை வந்தோம். நீங்க இச்க இருக்கிறதா, உங்க மருமகன் சொன்னார். அது தான் பார்க்க வந்தோம்" எனத் தங்கப்பாண்டியன் சொல்லவும்

" வெரி ஹேப்பி டு மீட் யு ஸார். உங்களால் தான் தமிழ் நாட்டுக்கு ட்ரேன்ஸர் கிடைச்சது" என்றார் தான்வி.

" அடுத்த என்ன உன் ஹஸ்பன்ட் க்கும் ட்ரேன்ஸர் வேணுமா. நான் சிபாரிசு பண்றேன்" என்றார்.

" உங்க புண்ணியத்தில் அதுவும் ஆகிடுச்சு சார்" எனத் தான்வி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சந்திரதேவ் வலுக்கட்டாயமாக ஹாசினியை அழைத்து வந்தான்.

" வெல்கம் மிஸ்டர். பாண்டியன். நைஸ் டு மீட் யூ. வாங்க மேம். என் அழைப்பை ஏத்துகிட்டு வந்ததுக்கு மிக்க நன்றி" எனக் கைக் குலுக்கி ஹாசினியோடு மற்றொரு ஷோபாவில் அமர்ந்தான்.

தான்வி தான் கொண்டு வந்து ஒரு பார்சலை, " கன்கிராஸ் மிஸஸ் தேவ். இது இந்தியாவிலிருந்து உங்களுக்காக ஸ்பெஷலா வாங்கிட்டு வந்தோம்" எனவும் , ஹாசினி பதட்டமாக அவர்களைப் பார்த்திருந்தாள்.

அவளது பிபி கூடியது, வியர்வை துளிகள் அரும்ப மூக்கிலிருந்து இரத்தம் வருமோ, மயக்கம் வருமோ என அவளே பயந்திருந்த நேரம்

" வெல் மிஸ்டர். தேவ். நீங்க சொல்லும் போது கூட நாங்க நம்பலை. சுஹாசினி சந்திரதேவ் , அச்சு அசல் ஹாசினி சந்திரா தான். நீங்க அவங்க இரட்டைனு சொல்லலேனா, நானே ஹாசினின்னு கூட்டிட்டுப் போயிருப்பேன்" என்றார் தங்கப் பாண்டியன். அவர் வார்த்தைகளில் ஹாசினிக்குத் தடைப்பட்ட சுவாசம் சீரானது. ஆனால் எஸ்ஆர்சி குட்டையைக் குழப்பினார்.

" அது யாரு சுஹாசினி " என்றார். ஹாசினிக்கு மீண்டும் மயக்கம் வரும் போல இருக்க, மேனகா சமாளித்தார்.

" ராம்ஜி , நம்ம பொண்ணு தான், உங்க ப்ரெண்ட் மகனுக்குக் கல்யாணம் செய்து வச்சோமே. " என உளறிக் கொட்டி, கணவரை ஞாபக மறதி என நம்ப வைத்துப் பேச்சை மாற்றிப் பானுமதியோடு அறைக்கு அனுப்பி வைத்தார்.

" மிஸ்டர். பாண்டியன் எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். என் சுஹாவுக்குத் தான் வெளியே வந்தால், தன்னை ஹாசினின்னு நினைச்சுடுவாங்களோன்னு பயம். செக்கப் கூட வரமாட்டேங்கிறா. ஹாசினி விசாரணை அதிகாரி நீங்க சொல்லுங்க. " எனச் சந்திர தேவ் முறையிடவும்.

ஆபிஸர் ஜோடிகள் தேர்ந்த நடிகர்களாகினர், " உங்க சிஸ்டர் கேஸ் நான் தான் ஹேண்டில் பண்ணேன். யுவராஜ் பாம் வச்சதுக்கு , எல்லா ஆதாரமும் ரெட்டியோட வாக்குமூலம் இருக்கு. அதோட போஸ்ட்மார்டம் ரிபோர்டும் கிளியர்" எனச் சந்திதேவைப் பார்த்துக் கொண்டே சொன்னார், அவனும் அவளறியாமல் கண்களால் நயந்தான். " நான் கேஸை முடிச்சுட்டேன். அடுத்த மாசம் தீர்ப்பு வந்துரும். நீங்க பயப்படாதீங்க" என்றார் பாண்டியன்.

" மத்தவா சந்தேகப்படுவானுட்டு பயந்துண்டு உங்க ஹெல்த்தை கேர்லஸ்ஸா விட்டுடாதேள். யாரு கண்டா, உங்க ட்வின் சிஸ்டரே உங்க வயித்தில வந்து பிறப்பா" எனத் தான்வியும் ஒத்து ஊதினார். ஹாசினியின் கண்களில் பயம் விலகியது. ஒரு நம்பிக்கை பிறந்தது.

" என்னைப் பார்த்து யாரும் ஹாசினின்னு சொல்ல மாட்டாங்களா" எனக் கண்களில் அலைப்புறுதலோடு கேட்கவும், சிரித்துக் கொண்டு ஆபிஸர் ஜோடிகள், 

" ஹாசினி சந்திரா, அவங்க அப்பாவை மாதிரி தைரியமான அரசியல்வாதி. ஆறு மாதத்தில் கர்நாடகாவையே தன்னுடைய வசீகரத்தால் கவர்ந்தவங்க. நீங்களே நினைச்சாலும் அவங்களா ஆகமுடியாது" என்றார் பாண்டியன் . 

மதிய உணவான வளைகாப்பு கட்டுச் சாதத்தைச் சந்திரா குடும்பத்தோடு சாப்பிட்டவர்கள், ஹாசினி மனதில் நம்பிக்கை விதைத்துப் பிரியாவிடைப் பெற்றுச் சென்றனர்.வீட்டினர் அதிசயமாகப் பார்க்கவும் நிருபன் தேவ் ஹாசினிக்குத் தெரியாமல் விளக்கினான்.

சந்திரதேவ், இரண்டு வாரத்துக்கு முன் வளைகாப்பு ஏற்பாட்டைச் செய்யச் சொன்னவன், ஒரே நாளில் ஹாசினி அறியாமல் இந்தியாச் சென்று திரும்பினான். அவன் சென்ற இடம் சென்னையில் உள்ள ஆபிஸரின் அடையாறு வீடு. தங்கப்பாண்டியன் அர்த்தம் பொதிந்த புன்னகையோடு மனைவியைப் பார்த்தவர், சந்திர தேவை வீட்டுக்குள் அழைத்தார்.

" வெல் மிஷ்டர். சந்திரதேவ். உங்களுக்கு என்ன உதவி வேணும். கேஸ் முடிஞ்சது. தீர்ப்பு மட்டும் தான் வரனும்" என நேராக விசயத்துக்கு வந்தார்.

" சார், நான் உங்ககிட்ட பாவமன்னிப்பு கேட்கத் தான் வந்தேன். என் மனைவி ஏழு மாசம் கர்ப்பமா இருக்கா அவளைக் காப்பாத்துங்க. அது உங்களால் மட்டும் தான் முடியும். சுஹானா தீவிலிருந்து கிளம்பும் போது சொன்னீங்களே. என் உயிரானவர்களுக்காக உங்களைத் தேடி வருவேன்னு. இதோ வந்துட்டேன். சட்டப்படி நடவடிக்கையினாலும் சரி இல்லை நீங்க கொடுக்கிற தண்டனையா இருந்தாலும் சரி, என் மனைவியைப் பாதிக்காத வகையில் நான் அதை ஏத்துக்குறேன்" எனத் தங்கப்பாண்டியன் முன் சரண்டர் ஆனான்.

" மிஸ்டர். தேவ், நீங்க என்னை ஏமாத்திட்டதா நினைச்சிட்டு இருக்கீங்களா" என ஓர் புன்சிரிப்போடு கேட்டார்.

"நோ சார், நிச்சயமா இல்லை. உங்களுக்கு ஹாசினி தான் சுஹாசினி தான்னு தெரியும். இருந்தாலும் எனக்கு எதிரான ஆதாரம் இல்லாததால் சரின்னு விட்டிங்க " என்றான். ஹாஹாவெனச் சிரித்தவர், " எவிடென்ஸ் இல்லையா. யார் சொன்னது ஆதாரம் இல்லைனு. ஆதாரம் இருக்கு. ஆனால் நான் நினைச்சா மட்டும் தான் இந்தக் கேஸை உடைக்கவும் முடியும், உருவாக்கவும் முடியும். " என்றவர் போஸ்ட் மார்டம் ரிபோர்ட், கேரவன் பதிவு, சுஹானா தீவில் ஹாசினியின் படம், அதோடு சந்திர தேவே எதிர் பார்க்காமல் ஸ்டீபனின் வாக்கு மூலத்தைக் காட்டினார் பாண்டியன். சந்திரதேவ் அதிர்ந்து பார்க்கவும்.

"பிஸ்னஸ் மேன் நீயே ஒரு கேம் விளையாண்டா, போலீஸ்காரன் நான் விளையாட மாட்டனா. இருந்தாலும் உன்னைத் தப்பிக்க விட்டேன்" என அவர் சிரிக்கவும் தான்வி முறைத்தார்.

அவன் இருவரையும் மாற்றி மாற்றிப் பார்க்கவும், " நேர்மையான ஐஏஎஸ், என்கூடப் பயங்கரச் சண்டை. உன்னால என் பொண்டாட்டி என்கூட ஆறு மாசம் பேசலை. அது எனக்குத் தண்டனையாம் " என்றவர்,

" அதை விடு, நீ ஹாசினிக்கு நல்லதுன்னு ஒரு கிறுக்குத்தனம் பண்ண. நாங்க அதை அரசியல் தீவிரவாதியான நஞ்சப்பாவை ஒழிக்க ஒரு ஆயுதமா உபயோகிச்சோம். நீ காதல் கிறுக்கன் தான். அவனுங்க நாட்டுக்கே ஆபத்தான அரசியல்வாதிங்க . இரண்டுத்துல ஒன்று. உனக்கு உன் பொண்டாட்டியே தண்டனை தருவான்னு விட்டுட்டேன். நஞ்சப்பாக்கள் சட்டத்தின் பிடியில் இருக்காங்க " என்றார்.

" தாங்க்யு சார், நிஜமாவே என் மேல கேஸ் போட்டிருந்தால் கூட எதாவது குறுக்கு வழி கண்டுபிடித்துத் தப்பிச்சிருப்பேன். ஆனால் இது தப்பவே முடியாத தண்டனை. என் கர்வமெல்லாம் தவிடு பொடியானது அவகிட்ட தான். அதுவும் என்னைக் காப்பத்தனும்னு நெருப்புக் கோழி மாதிரி அவள் தன் முகத்தை மறைச்சுக்கும் போது, என் நெஞ்சையே அறுக்கிற மாதிரி இருக்கும்" எனக் கண்ணீர் விட்டவன், போன முறை கருக் கலைந்தது முதல் இன்றைய நிலை வரை சொன்னான்.

" அவளுக்கு டெலிவரி பார்க்கனும். ஸ்கேன்ல சின்னக் காம்பிளிகேஷன் தெரியுது. சிசேரியன் பண்ற நிலைமை கூட வரும். அவ ஹாஸ்பிடலுக்கே வரமாட்டேங்குறா. நீங்க வந்து அவளைச் சுஹாசினின்னு சொன்னா தான் நம்புவா. நீங்க வந்து என்னை அரெஸ்ட் பண்ணுவீங்கிறது தான் அவளுக்குப் பயமே" என்றான்.

" எங்க ஊர்ல என்னை மீசை வச்ச பாசக்காரன்னு சொல்லுவாய்ங்க. நீ என்னைப் பூச்சாண்டி ஆக்கிட்ட. எஸ்ஆர்சிக்காக வர்றேன்." என்றவர் " உனக்குத் தண்டனை கேட்டியே, இரு என் பொண்டாட்டி உனக்கு அட்வைஸ் பண்ணுவா" என ரகசியம் பேசிவிட்டு வராத போனை பிடித்துக் கொண்டு அவர் நகரவும், தான்வி சந்திர தேவை ஆயுசுக்குமான அறிவுரை வழங்கி லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார்.

வீட்டில் அடங்காத காளை ஊரில் அடங்கும் என்பார்கள். அப்பா, அம்மா, சித்தப்பா, அத்தான்கள் சொல்லி,அதையெல்லாம் அசட்டை செய்த சந்திரதேவ் தான்வியிடம் மனைவிக்காகத் தலை குனிந்து வசவுகளையும், அறிவுரையும் பெற்றுக் கொண்டான்.

நிருபன் விளக்கிய விதத்தில் சந்திரதேவ் குடும்பமே நிம்மதியாகச் சிரித்தது.

தங்களது அறையில் பட்டுச் சேலையை மாற்றி நைட்டியில் இருந்த ஹாசினியை பெட்டில் சாய்த்து உட்கார வைத்து, கால்களை அமுக்கிக் கொண்டிருந்தான் சந்திரதேவ்.

" சந்திரா, அவுங்க நிஜமாவே என்னைச் சுஹாசினின்னு ஒத்துக்கிட்டாங்களா" எனக் கேட்டாள்.

" நான் வேணும்னா போய் என் ஹாசினியை எப்படிச் சுஹாசினின்னு சொல்லப் போச்சுன்னு சண்டை போட்டு வரவா" என்றான்.

" சீ போடா. நான் எவ்வளவு ஹேப்பியா இருக்கேன் தெரியுமா" என அவள் கன்னக்குழி விழச் சிரித்தாள்.

" தெரியுதுடி மேரி ப்யூட்டி" என அவள் அருகில் நெருங்கியவன் கன்னக்குழியில் இதழ் பதித்து. " இதுவே சொல்லிடுச்சு" என்றான். அதே நேரம் அவள் வயிற்றில் குட்டி ஹாசினியும் துள்ளியது.

" ஹசி, பேபியும் ஹேப்பிடி" என அவள் வயிற்றிலும் சந்திர தேவ் முத்தமிட்டான். அது அவன் கன்னத்தில் ஓர் உதை விட்டது.

" ஹசி உதைகிதுடி. " என்றான். அவள் சிரித்துவிட்டு.

" அரக்கன் ஸார், நாளைக்கு ஹாஸ்பிடலில செக்கப்புக்கு அப்பாயின்மென்ட் வாங்கு " என்றாள். அவன் கண்கள் கலங்கியது,

" சரிங்க ப்யுட்டி குயின்"அவளை அணைத்து சந்தோசமாக மீண்டும் முத்தமிட்டான்.

( அடுத்து ஒரு முடிவுரை மட்டும் வரும்)