Friday, 2 July 2021

ஹாசினி சந்திரா-20

 ஹாசினி சந்திரா-20

        பாலைவனத்தில் அன்று புதுமலரென ஒரு சிவப்பு ரோஜா பூத்திருந்தது. மயூராவின் தேர்ந்த அழகுக் கலையில் அழகுக்கு அழகு சேர்க்கப்பட்டிருந்தது. கன்னட மண்ணைத் தனது தேஜஸால் ஆண்ட சுரேந்திர ராமசந்திராவின் மகள் அவரைப் போன்ற வசீகரமும் மங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட கன்னடத் தாரகை மேனகையின் மஞ்சள் அழகும் கலந்து உருவான பொற்சித்திரம் மதுரஹாசினி சந்திரா. இயற்கையாக அவளது அன்பிற்குரிய அழகிய அரக்கனை நினைத்து, அவனோடான அருமையான தருணங்களை உணர்ந்து அதிலேயே சிவந்து விகசித்து இருந்தாள். 

        அவளைக் கண்ணாடி மின்தூக்கியில் அண்ணிகள் இருவரும் அழைத்து வர அழகுப்பதுமையாய் அரசாலும் கம்பீரத்தோடு பார்த்த அனுசுயா தேவியே அதிசயித்துத் தான் போனார். தன் மகன் தலை கால் புரியாமல் அவளிடம் வீழ்ந்து, அவளின் சுய அடையாளம் துறக்க வைத்து, தனது உரிமையாய் ஆக்கிக் கொண்டதன் சூட்சமம் இப்போது தான் புரிபட்டது. அழகு தேவதைகளால் ஆயிரமாயிரம் காலமாய் இதிகாச காலம் தொட்டு வந்த இன்னல்களை நினைத்தவர், தன் மகன் என்ன பாடுபடப் போகிறானோ எனப் பெருமூச்சு விட்டார்.

         சாந்த்தேவ் மாளிகையில் சந்திரதேவ் எனும் மாயக்காரனது விரல் சொடுக்களில் மாளிகையும், மாளிகைவாசிகளும் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல் அல்லவா ஆடிக் கொண்டிருந்தார்கள்.

        தன் வார்த்தைகளால் நெஞ்சுரத்தோடு நிமிர்ந்து நின்ற மேனகாவையும் நிலைகுலையச் செய்தவர், மகன் மாய மோகினியான ஹாசினியோடு வந்த போது கோபா கிரகம் புகுந்தவரை சந்திரதேவ் தான் வாழ்வதும், சிறைக்குச் செல்வதும் அம்மாவின் முடிவே எனச் சினத்தோடு வார்த்தைகளை உமிழ்ந்து விட்டு வந்திருந்தான். பிள்ளை மனம் கல்லாக இருந்தாலும் பெற்ற மனம் கசிந்துருகியது. முதல் நாள் பேசிய தான் மேனகாவைப் பேசிய வார்த்தைகள் மெய்யாவதாகவே நினைத்தவர், அதனையும் புறந்தள்ளி, மகனுக்காக இறங்கி வந்தார்.

        எஸ்ஆர்சி, ஹாசினியைத் தவிர மற்றவர்களை ஹாலில் கூட்டி வைத்துப் பேசியவர், " நேற்று நான் பேசினது மேனகா உன் மனசை நோகடிச்சிருக்கும், ஆனாலும் என் மனசில் அதே தான் இருக்கு. இதோ அதை உறுதி பண்ற மாதிரி அடுத்ததும் நடக்குது" என அனுசுயா காட்டமாகவே ஆரம்பிக்கவும் , பானுமதி குறுக்கே பேச வந்தார். சந்திரதேவ் அம்மாவின் பேச்சுக்காக அவரை முறைத்தான். ஆனால் பானுமதியையும் தன் பேசி முடித்து விடுவதாக அடக்கி தொடர்ந்தார் அனுசுயா.

     ஆனால் மேனகா, " நீங்க பயப்படுற அளவுக்கு எதுவும் நடக்காது. நான் என் மகளைக் கூட்டிட்டு யுஎஸ் போயிடுறேன். " என முந்திக் கொண்டு சொல்லவும்.

         " இப்படி எல்லாம் ரோசப்பட்டு , பிள்ளைகளை நம்பி எந்த வாக்கும் கொடுக்காத. நீயும் சரி, நானும் சரி சொல் பேச்சு கேக்குற பிள்ளைகளைப் பெத்துக்கலை" என அனுசுயா கடும் வார்த்தைகளைப் பேசவும், மற்றவர் மன இருக்கத்தோடு அமைதி காத்தனர். ஆனால் மேனகா, தனது மகளை அப்படி விட்டுக் கொடுப்பதாக இல்லை.

    "உங்களுக்கு என் மகளைத் தெரியாது மேடம். மது அவளுடைய அப்பாவுக்காகத் தன் கேரியரையே விட்டுட்டு வந்தவ. என் சுயநலம் அவளை இக்கட்டில் மாட்டிவிட்டுட்டேன்" என மேனகா தன்னைத் தானே நொந்து கொண்டார்.

      " மேனகா, இதில உன் சுயநலம் எங்க இருக்கு, இந்தர் மேல வச்ச அன்பில் அவருக்குக் கெட்டப் பேரு வரக்கூடாதுன்னு நினைச்ச. அவள் அப்பா மேல உள்ள பாசத்தில் சம்மதிச்சா" எனப் பானுமதி மேனகாவைத் தேற்றவும்.

" நேற்று, ராம்ஜி என்னை ஏமாத்திட்டியேன்னு கேட்டாங்க அக்கா " என அழுதார் மேனகா. மற்றவர் யாரும் தேற்றும் முன் சந்திரதேவ் அவரை நெருங்கி பக்கத்தில் அமர்ந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டவன்,

"அத்தை , நம்ம உயிருக்கும் மேல நேசிக்கிறவங்களுக்காகச் சில நேரத்தில் இப்படிப் பட்ட முடிவுகளைத் தான் எடுக்க வேண்டியது இருக்கு. அதுக்காக அவுங்களே நம்மளை வெறுத்தாலும் நம்ம அவங்க மேல வச்சிருக்க அன்போ, காதலோ கொஞ்சமும் குறையப் போறதில்லை. மாமா சொன்னதைப் பெரிசா எடுத்துக்காதீங்க. நீங்க செஞ்சது சரிதான்" எனத் தனக்கும் சேர்த்துச் சொல்லிக் கொண்டான் சந்திரதேவ்.

" நல்ல மாமியார், நல்ல மருமகன்" என அனுசுயா முணுமுணுத்தவர் மேனகா மேடம் என்று சொன்னதையும் மனதில் குறித்துக் கொண்டார்.

     " சந்து, மேனகாம்மா மதுவை அரசியல்ல தான் இறக்குனாங்க. நீ உலகத்துப் பார்வையிலிருந்து அவளை இல்லாமல் செஞ்சுட்ட. இதையும், அதையும் ஒரே கோட்டில் கொண்டு வராத" அதிபன் சந்திரா கண்டித்தான். பின் அதற்கான விவரங்களையும் ஹாசினியின் நிலையையும் சந்திரதேவ் மேனகா, பானுமதியிடம் விளக்கினான்.

மேனகா, " தம்பி நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனால் உங்க மனைவின்னு ஏன் காட்டுனீங்க. எங்க மகளாவே இருந்திட்டு போயிருக்கலாமே " எனக் கேட்கவும் அனுசுயா இடை புகுந்தார்,

     " ஏன்னா , உன் மகள் இப்போ என் மருமகள் ஆகிட்டா. இனி போனதைப் பத்தி பேசி பிரயோஜனம் இல்லை. நாளைக்கு நல்ல நாள், நம்ம திருப்திக்காக விட்டிலையே கல்யாணத்தை முடிச்சு விடுவோம். அண்ணி நீங்க என்ன சொல்றீங்க " எனப் பானுமதியிடம் கேட்டார் அனுசுயா.

    " நான் ரொம்பக் காலமா இதைத் தான் சொல்றேன். எனக்குச் சம்மதம் தான் அண்ணி" என மகிழ்ச்சியாகவே பானுமதி சம்மதம் தெரிவித்தார்.

     ஆனால் மேனகா, மருமகனை, இது உண்மையா என்பது போல் திரும்பிப் பார்த்தார். உண்மையில் யாருக்கும் அஞ்சாத சந்திரதேவ், மேனகாவின் பார்வையைச் சந்திக்கத் தயங்கியபடி, "அத்தை , அவளும் மனப்பூர்வமா சம்மதிச்சு , அக்னி சாட்சியா தான் அவளை மனைவியா ஏத்துக்கிட்டேன் " என்றான்.

     தன் மகள், தன்னைப் போலவே முடிவெடுத்தாளோ என இப்போது தான் யோசித்தவர், அனுசுயாவின் பேச்சுக்குப் பயந்தார். மகளிடமும் இதே போல் பேசிவிட்டால் அவள் மோட்சம் குழையும் அனிச்ச மலர் ஆயிற்றே.

   " தம்பி , நீங்க தப்பா நினைக்காதீங்க. அவளோட அடையாளம் மாறினதை, அவளால அவ்வளவு சுலபமா தாங்கிக்க முடியாது. அரசியல் வாதியா அந்த மாற்றத்துக்கே ரொம்பச் சிரமப்பட்டா. நான் தான் அவுங்க அப்பாவுக்காகன்னு சொல்லிச் சொல்லி சமாளிச்சேன். கொஞ்சக் காலம் போகட்டும். நான் மதுவை என்னோட கூட்டிட்டு போறேன். " என அனுசுயாவே எதிர்பாராத பதிலை மேனகா தந்தார்.

     " ஏன் உன் மகளுக்கு, என் மகன் ஏத்தவன் இல்லையா, இல்லை நான் கொடுமை படுத்துவேனென்று நினைச்சியா" என அப்போதும் அதிகாரமாகவே கேட்டார் அனுசுயா. " நான் என் மகளைப் பத்தி மட்டும் தான் பேசுறேன்' என்றார் மேனகா.

    " அதெல்லாம் உன் மகளை இவன் கடத்தும் முன்னாடி . இனி உன் மகளோட அடையாளம் இந்த வீட்டு மருமகளா மட்டும் தான். மீறி உன் மகளைக் கூட்டிட்டுப் போனா , உங்களுக்கு உதவி பண்ணப் பாவத்துக்கு அவனை ஜெயில்ல தள்ளிட்டு போ. அது தான் நடக்குமாம்" என அனுசுயா சந்திரதேவ் தன்னைச் சம்மதிக்க வைத்தற்கான காரணத்தைச் சொல்லவும், எல்லாருமே அவனை முறைத்தனர். மேனகா செய்வதறியாது முழிக்கப் பானுமதி அவரைத் தேற்றினார்.

     " மேனகா, மதுவை இனிமே அவள் புருஷன் சந்து பாத்துக்குவான். நம்ம நம்ம புருஷனைப் பார்ப்போம். இதுங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டு நாம அமெரிக்கப் போகலாம். " எனப் பானுமதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அப்பாவும் மகளுமாக இறங்கி வந்தனர்.

" பானு யாருக்குக் கல்யாணம்" என்றார் எஸ். ஆர். சந்திரா.

" எல்லாம் உங்க மகளுக்குத் தான். சந்துக்குக் கல்யாணம் செய்யலாம்னு பேசுறோம்" எனப் பானுமதி சொல்லவும். ஹாசினியின் முகத்தில் ஓர் நிம்மதி பரவியது. அவளையே பார்த்திருந்தவன் , 'இவளை லீகலா என் மனைவியா காட்ட எத்தனை வேலை செய்யறேன். இரத்தத்தை எல்லாம் வச்சு பொட்டு வச்சு விட்டேன். அங்க சந்தோஷமா தானே இருந்தா. ஆனாலும் மஞ்சள் கயிறு பவர் தனித் தான் போல" என மனதில் நினைத்தவன்

" என்ன மாப்பிள்ளை, உனக்கு ஜாக்பாட் வேணுமா" என அவருக்கு மனப்பாடமான வரியை மட்டும் விடாமல் கேட்டார். அதில் நடப்புக்கு வந்து நெஞ்சில் கை வைத்து தலை வணங்கி, " அதுக்குத் தான் காத்திருக்கேன்" என்றான்.

" மச்சான், உங்ககிட்ட இருந்த ஜாக்பாட்டை அவன் எப்பாவோ அடிச்சிட்டான்" என ரத்தின தேவும் கேலி பேசி வீட்டினர் அனைவருமாகக் கூடி, அண்ணன்கள் இருவரின் சம்மதத்தை ஒப்புக்கு வாங்கி இதோ மணமேடை வரை வந்து விட்டது.

வீட்டின் நடுவே மண்டபம் அமைத்து வீட்டு ஆட்கள் மட்டும் கலந்து கொள்ள, ஐயர் வைத்து மந்திரம் ஓதி திருமணச் சடங்குகள் நடந்தன. மேனகாவோடு அமர்ந்து எஸ்ஆர்சி மகளைத் தாரை வார்க்க, மணமகன் பெற்றோர் ஸ்தானத்திலிருந்து இரத்தின சிம்ம தேவனும், நிரஞ்சனாவும் பெற்றுக் கொண்டனர்.

மீண்டும் ஒரு முறை அக்னி வலம் வந்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து அவளைக் கைத்தளம் பற்றி, பொன் மஞ்சள் சரடு தாலியைப் பெற்றவர்கள் முன்னிலையில் கட்டினான் சந்திரதேவ்.

எஸ்ஆர்சியின் அருமை மகள், சாந் தேவ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர், உலகம் முழுவதும் வியாபாரம் செய்யும் பிஸ்னஸ் மேகனட், எனப் பணப் பலத்திற்கும், படை பலத்திற்கும் குறைவில்லாத இருவரின் திருமணம், சீரும் சிறப்புமாக ஆடம்பரமாக நடக்க வேண்டியது. இன்று வீட்டினர் முன்னிலையில் மிகவும் எளிமையாக வெளி உலகுக்குத் தெரியாமல் நடந்தது.

மணமக்களாக வீட்டுப் பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். எஸ்ஆர்சி மகளை அணைத்துக் கொண்டு ஆனந்தத்தில் உணர்ச்சிப் பெருக்கில் தவித்தார். சந்திரதேவின் கைகளைப் பற்றிக் கொண்டவர், "ஒரு மனுசனோட வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள், நெகிழ்ச்சியான தருணங்கள் நிறைய இருக்கும். ஆனால் ஒரு பெண்குழந்தை பிறக்கும் தருணம், ஒருத்தனுக்குப் புதுசா நிறைய விசயத்தைக் கற்றுத் தரும். ப்ரதி, அதியை விட மது என் கூடவே இருந்தவ. என் கோசம்மா. பத்திரமா பார்த்துக்க மாப்பிள்ளை" எனக் கண் கலங்கினார். மேனகா ஒரு பக்கம் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தார். பானுமதி தான் இருவரையும் தேற்றினார்.

" மது எங்கையோவா போறா. நம்ம வீட்டில, இன்னும் சொல்லப் போனா, ஒத்தப் புள்ளையா தனியா இருந்தவ அண்ணன், அண்ணிகளோட சேர்ந்து இருக்கப் போற. இரண்டு பேரும் கண்ணைத் துடைங்க " என்றார்.

" பானுமா, இது அழுகை இல்லை. ஆனந்தக் கண்ணீர். நம்ம மகளைச் சரியான இடத்தில் அதுவும் நம்ம வீரா மகனுக்கே கொடுத்துட்டோம்கிற திருப்தி. இனிமே எமனே வந்தாலும் கவலைப் படமாட்டேன்" என அவர் சிரிக்கவும்.

" அப்பா" என மகன்களும் மகளும், அவரவர் அவரை அழைக்கும் முறைச் சொல்லிக் கூவினர்.

ஹாசினி, அவரிடம் சலுகையாகத் தோளில் சாய்ந்தபடி குறைபடவும், " சும்மா சொன்னேன்டா. என் குட்டி ஹாசினியை பார்க்காமல் போயிடுவேனா" என உச்சி முகர்ந்தார். அவளுக்குக் கன்னத்தில் ரோஜாக்கள் பூத்தது.

" மாமா, அதுக்கு நீங்க என் பொண்டாட்டியை என்கிட்ட தரனும் " எனச் சந்திரதேவ் பொறாமையோடு சொல்லவும்.

" வச்சுக்கடா மாப்பிள்ளை, உன் ஜாக்பாட்டை" என அவனிடம் ஹாசினியைத் தந்தார்.

" ஜாக்பாட்டை என்கிட்ட கொடுத்திட்டு நீங்க என்ன செய்வீங்க " எனச் சந்திரதேவ் மனைவியைக் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு கேட்கவும்,

" இதிலே எல்லாம் எவனுமே என் கூடப் போட்டியே போட முடியாது" என இரு மனைவிகளையும் அருகில் அழைத்தவர், இரண்டு பேரையும் இருபுறமும் அணைத்து, "டபுள் ஜாக்பாட் வச்சிருக்கேன்" என்றார். மகன்கள், மருகள்கள் , நிருபன், ப்ரீத்தி பவன் உட்பட ஹே எனக் கைத்தட்டி கரகோஷம் செய்தனர்.

சந்திர தேவ் இஸ்லாமிய பாணியில் மாமனாருக்குச் சலாம் வைத்தான். "அது" எனத் தன் படத்தில் செய்த ஸ்டைலை செய்தார். அவன் மாமியார் இருவருக்கும் மகளைப் போலவே முகம் செவ்வண்ணம் பூசியது.

அனுசுயா விடம் இருவரும் ஆசி வாங்கும் போது, " உன் மாங்கல்ய பலம், என் மகனை காப்பாத்தட்டும் " என ஆசி வழங்கியவர். " நான் சொன்ன மாதிரி அவனை மயக்கி கைக்குள்ள போட்டுகிட்ட இல்ல " என்றார் அனுசுயா. ஆராதனா, " அம்மா" என அதட்டவும், " அண்ணி, இது எங்க மாமியார், மருமகள் பிரச்சனை, நடுவில் யாரும் வரக் கூடாது. " எனப் பொதுவாகச் சொன்னவள், சந்திர தேவை ஒரு முறை பார்த்து விட்டு, " மாமிக்கு என்னைப் பிடிக்காது வேண்டாம்னு சொன்னேன். உங்க பையன் தான், அவருக்காக நான் உங்களோட சண்டை போடனும்னு சொன்னார். நான் சண்டை எல்லாம் போட மாட்டேன். நீங்க சொல்ற மாதிரி கேட்டுக்குறேன். " என மாமியாருக்குப் பெரிய ஐஸ்கட்டியை தூக்கி வைத்தாள் ஹாசினி சந்திரா.

" இதெல்லாம் கதை. நான் சொல்லியா இவனைக் கட்டிக்கிட்ட " எனக் கேள்வி எழுப்பினார் அனுசுயா.

" ஆமாம் மாமி, நீங்க தானே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிங்க " என அவள் கன்னக்குழி விழச் சிரிக்கவும்,

" இப்படி எல்லாம் சிரிச்சு மயக்கலாம்னு பார்க்காத. நான் மயங்க மாட்டேன்" என அவர் முகத்தைச் சீரியராகவே வைத்துக் கொண்டே சொன்னார். ஆனால் கண்கள் அவர் நெகிழ்வை காட்டிக் கொடுத்தது.

" அம்மா , உன்னை மயக்கி அவள் என்ன செய்யப் போறா. அது தான் உன் மகன் மயங்கி கிடக்குது. சும்மா பில்டப் விடாத" என ஆராதனா சூழலைச் சகஜமாக்கி கல்யாணத்துக்குப் பிறகான விளையாட்டுகளை விளையாட இழுத்துச் சென்றாள்.

இளைய தலைமுறை பெண்கள் மூவரும், சந்திரதேவ் பக்கமும் நிருபன், பவன் ஹாசினி பக்கமும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கோஷமிட்டனர். "என்னை ப்ரதர்னு சொல்லியிருக்காங்க. அதனால் நானும் மேடம் கட்சி" என்றான் பவன்.

" நான் பேபிடால் கட்சி" என ஹாசினி அருகில் அமர்ந்தான் நிருபன். சந்திரதேவ் முறைத்தான்." பேபிடால், உன்னை அண்ணின்னு தான் சொல்லனும்னு அண்ணன் கண்டிசன் போடுறான், அதுக்குத் தான் பாரு எப்படி முறைக்கிறான்" என நிருபன் ஹாசினியின் காதைக் கடிக்கவும் " அப்படியா" எனச் சந்திர தேவை பார்த்துக் கொண்டே "இந்த வீட்ல இருக்கிற ஒரே டேய் டோய் ப்ரெண்ட் நீ தான். எப்பவும் போலயே கூப்பிடு. அரக்கன் ஸார் எதாவது சொன்னா நான் பார்த்துக்குறேன் " என நிருபன் காதில் ரகசியம் பேசி கண்ணால் சந்திரதேவ் க்கு சவால் விட்டாள் . " அப்படிச் சொல்லு" என நிருபன் ஹாசினிக்கு ஹை பை கொடுத்தான்.

       உள்ளுக்குள் கருவி கொண்டிருந்த சந்திரதேவ். குடத்தில் மஞ்சள் நீரில் மோதிரம் போட்டு எடுக்கச் சொன்ன போது, அவள் கையை வேண்டும் மென்றே பிடித்து வைத்துக் கொண்டு மோதிரத்தைத் தேடாமல் அவள் விரல்களோடு யுத்தம் புரிந்தான். முதலில் போராடியவள், பின்பு அவனிடமே சரணடையவும், வெற்றிப் புன்னகையோடு அவள் கையை விடுவிக்க, அவள் மோதிரத்தைக் கைப்பற்றினாள். சந்திதேவுக்கு ஆதரவு தெரிவித்துக் கூச்சலிட்ட பெண்ள், ஹாசினி கையில் மோதிரமிருக்கவும், " சீட்டிங், சீட்டிங். அண்ணா விட்டுக் கொடுத்துட்டார்" என்றனர் .

" போகுது போ, இதுலையாவது பிடிவாதத்தைக் காட்டலைன்னு சந்தோசப்படு" என அதிபன் தங்கைக்கு ஆதரவாக அங்கே வந்தான். மேடையை நெருங்கிய ப்ரதிபனிடம் நகைப் பெட்டிகள் இருந்தன.

மச்சினன்கள் இருவருமாகச் சந்திரதேவ்க்கு செயின் மோதிரம் ப்ரேஸ்லெட் என அணிவித்தவர்கள், "இது பொண்ணோட அண்ணனுங்க செய்யறது. இதுக்கும் மேலையும் உன் அடாவடித்தனத்தால் ஏதாவது தொல்லை வந்துச்சு, பிச்சுபுடுவோம்" என ஹாசினிக்குத் தெரியாமல் மிரட்டினர்.

" ஐயோ பயமாயிருக்கே" என நடித்தவன், " சரிங்கத்தான்ஸ் பயப்படாதீங்க. அவளை என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குவேன்" என்றவன்.

ஹாசினி வழக்குச் சம்மந்தமாக, எஸ்ஆர்சி, மேனகா உடல்நிலைக் குறித்தும், தங்களுக்காக அமைதி காக்குமாறும் ப்ரதிபன், அதிபனை ஒரு காணொளிப் பதிவு செய்து கட்சியினருக்கு அனுப்பச் சொன்னான். அவர்களும் அதன்படி கேட்டுக் கொண்டனர்.

மதியம் தடபுடலான கல்யாண விருந்து தயாராகிக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டனர். அனுசுயாவுக்கும், மேனகாவுக்குமே தங்களின் பிள்ளைகள் திருமணம் இவ்வளவு எளிமையாக நடந்ததே என வருத்தம் இருந்தது. அதைச் சொல்லவும் செய்தார்கள்.

" இந்தக் கல்யாணம் முதவே நடந்திருந்தா, பெங்களூரையே கலக்கி இருக்கலாம். மது புதுசா நகை நட்டு எதுவுமே எடுக்கலை. பானுக்கா , நம்ம கிளம்பும் முன்னாடி இங்க இருக்க நகைக் கடைக்குப் போய்ப் புதுசா கொஞ்சம் எடுத்துட்டு வந்துடுவோம்" என்றார் மேனகா.

" மேனு, நீ ஷாப்பிங் போறதுக்கு, என் மகளைக் காரணம் காட்டாத. அவளுக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாது" என்றார் எஸ்ஆர்சி.

" ஆமாம் உன் மகள் இதெல்லாம் போட்டுட்டு எங்கப் போகப் போறா. இருக்கிறது போதும் போ " என்றார் அனுசுயா. மேனகாவுக்குச் சுறுக்கென்றது. நடப்பு நிலை உரைக்கவும், சாப்பாடும் இறங்க மறுத்தது.

" உலக வரலாற்றுலையே முதல் தடவையா கல்யாணப் பொண்ணோட அம்மா நகை எடுக்கனும்னு சொல்லி, மாமியார் வேண்டாம்னு சொல்லியிருக்காங்க. " என நிருபன் தேவ் பெருமை பேசவும்.

" அதுக்குப் பதிலா பிஸ்னஸ்ல இன்வெஸ்ட் பண்ணட்டும்" எனச் செக் வைத்தார் அனுசுயா. " அண்ணி, அதெல்லாம் ஏற்கனவே செஞ்சாச்சு. அமெரிக்கன் ப்ராஜெக்ட் நம்ம மருமகள் காசு தான் " என விவரம் சொன்னார் இரத்தின தேவ்.

" அம்மா, இந்த ஜ்வல்ஸ், காஸ்ட்யூம் எல்லாம் ஹெவியா இருக்கு. மாத்திக்கவா" எனச் சின்னஞ் சிறுமியாக வந்து மேனகாவைக் கேட்டாள் ஹாசினி.

" எனக்குத் தெரியாதுப்பா. நீ தான் இந்த வீட்டு மருமகளா ஆகிட்டியே, உன் மாமியார் இரண்டு பேர்ட்டையும் கேட்டுக்கோ" எனப் பதில் சொல்லிவிட்டு கணவரோடு அறைக்குக் கிளம்பினார் மேனகா.

மற்றவர்களும், அவரவர் அறைக்குக் கிளம்ப, " இதுக்குக் கேள்வி வேறையா. அன்கம்ஃபர்டபிலா இருந்தா சேஞ்ச் பண்ணிக்கோ" என்றான் சந்திர தேவ்.

" நீ சும்மா இரு" எனக் கணவனைத் திட்டியவள், ஓய்வெடுக்கத் தனது அறைக்குக் கிளம்பிய அனுசுயாவிடம் போய் நின்றாள். " மாமி, இதெல்லாம் கழட்டிடவா" எனக் கேட்டவளை, அதிசயமாகப் பார்த்த அனுசுயா.

" இத்தனை நாள் யாரைக் கேட்ட" என்றார்."அம்மா, இன்ஸ்ட்ரக்ஸன் குடுத்துட்டே இருக்கும். இப்ப இந்த வீட்டு மருமகளாகிட்டேனாம், அம்மா சொல்லாதாம். நீங்க சொல்லுங்க " எனத் தன் முன் நின்ற மருமகளைப் பார்த்தவர்,

" உன் புருஷன், யாருக்குமே எதுவுமே சொல்லத் தேவையில்லையின்னு நினைப்பான். அவனுக்கு இப்படி ஒரு பொண்டாட்டியா. சரி மாத்திட்டு இன்னைக்கு மட்டும் ஒரு சேலையவே கட்டிக்க. " என அவர் சொல்லவும் தலையை ஆட்டிக் கொண்டவள், "சேலை" என அவரிடமே கேட்டாள்.

சந்திரதேவ் ஷோபாவில் அமர்ந்து அவளையே பார்த்திருந்தவன், " சாய்ந்திரம் உனக்குப் புது ட்ரெஸ் எல்லாம் வந்துடும். அது வரைக்கும் வா, என் ட்ரஸ்ஸை போட்டுக்க" என அவன் சொல்லவும் ஹாசினி மண்டையை ஆட்டிக் கொண்டவள் , " ஓகே தானே மாமி" என மாமியாரிடம் யோசனைக் கேட்டாள்.

" இவளை எங்க இருந்திடா புடிச்சிட்டு வந்த. கடத்தி வச்சிருந்தியே , அப்ப என்ன செஞ்ச" என அனுசுயா கேட்கவும், சந்திரதேவ் தெரியாது எனத் தோளைக் குலுக்கினான் "ப்ரீத்தி இருந்தாலே, அவள் கரெக்ட்டா எடுத்துக் கொடுத்திட்டா. இல்லைனா டெய்லி ஒவ்வொரு நேரத்துக்கும ட்ரெஸ் சூஸ் பண்றதே பெரிய தொல்லை" எனப் பதில் தந்தாள் ஹாசினி .

" யூ எஸ் ல இருந்தியே அங்க" எனச் சந்திரதேவ் கலவரமாகி கேள்வி கேட்கவும், " மேத்யு கிட்ட கேப்பேன். அதுக்கு முன்னாடி என் ரூம் மெட். அதுவும் இல்லைனா, அம்மாவுக்கு வீடியோ கால் போட்டுருவேன்" எனப் பெருமையாகச் சொன்னவளை பார்த்து அம்மா மகன் இருவருமே, "சுத்தம்" என அதிர்ந்தனர்.

அதற்குள் மேனகா ஒரு பெட்டியை எடுத்து வந்து அவள் முன் வைத்தவர். " பத்து நாளைக்குத் தனித் தனியா கவர்ல வச்சிருக்கேன். இதை இப்ப மாத்திக்கோ" என நீட்டவும், " ஸ்வீட் மம்மி" என முத்தமிட்டு விட்டு சந்திராவோடு மாடி ஏறினாள்.

அனுசுயா, மேனகாவைப் பார்த்து ,"பெரிய அரசியல்வாதியா கூட்டத்திலே எல்லாம் பேசினா. இப்படித் தான் வளர்த்து வச்சிருக்கியா" என்றார்.

" அவளுக்கு நாங்க தான் உலகம், அவள் மேடையில் பேசினதெல்லாம் நிறையத் தடவை ஒத்திகை பார்த்தது. அவள் சின்னப் பொண்ணு தான். நீங்க வழிகாட்டுனா, அதே மாதிரி நடந்துக்குவா. " என மேனகா நயந்து பேசவும் அனுசுயா ஒரு பார்வையோடு சென்றுவிட்டார்.

சந்திரதேவ் பெட்டியை உருட்டி வர அவனோடு நடந்து வந்தவள், தங்களது அறைக்கு வந்த பிறகு, கண்ணாடி முன் சென்று அமர்ந்து "சந்திரா இதெல்லாம் ரிமூவ் பண்ணி விடேன்" என்றாள்.

" வாட், நானா" என அதிர்ச்சியாகக் கேட்கவும், " ம்ப்ச் நீதானே பக்கத்தில் இருக்க. ப்ளீஸ்" எனக் கொஞ்சலாகக் கேட்கவுமே, அவள் சொன்னதைச் செய்ய மனம் பரபரத்தது. ஆனாலும் ஒரு தயக்கம் வந்தது, " மது, இதெல்லாம் எனக்குப் பழக்கமே இல்லை. தெரியாதே" என்றான்.

" மேத்யூக்கு மட்டும் பழக்கமா என்ன. ஒரு ப்ரோக்ராம்காக நான் செஞ்சுகிட்ட ஹேர் ஸ்டைலைஓன் அவர் பொறுமையா உட்கார்ந்து எடுத்து விட்டான்" எனவும் , " நிஜமாவா" என்றவனுக்கு அவன் மேல் பொறாமை வந்தது.

ஆனாலும் சட்டென இறங்க மனம் வராமல், " ப்ரியுவை வரச்சொல்லவா" எனவும் " போ, உன் வேலை ஆயிடுச்சுல்ல, இனிமே எங்கப் போகப் போறேன்னு உனக்கு ஒரு இது வந்துடுச்சு, நானே செஞ்சுக்குறேன்" என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அவளே காது மாட்டலை எடுக்கிறேன் என மேலும் சிக்காக்கிக் கொண்டாள்.

" ஹேய், ஹசி என்னடி பண்ற,எனக்கு எடுக்கத் தெரியாமை எடுத்து உனக்கு வலிக்குமேன்னு பார்த்தேன்" எனத் தன் ஷெர்வானியை மாற்றுவதற்காகக் கழட்டிக் கொண்டிருந்தவன், அதனைப் பெட்டில் உதறிவிட்டு அவசரமாக வந்தான். மெல்ல ஒவ்வொரு நகையும் கழட்டி சிகையைச் சரி செய்வதற்குள் , அவளுக்கு வலிக்கக் கூடாதே எனக் கவனமாகச் செய்தவன், அவளுக்கு மிக அருகிலேயே உரசிச் செய்ய அவளது முகம் மென்மையைத் தத்தெடுத்தது. இருந்தாலும் 'மேத்யுவும் இப்படித்தான் செய்வானா ' என்ற பொறாமை தீண்ட, " நிஜமாவே இவ்வளவு பொறுமையா அவன் செய்வானா" என்றான்.

ஹாசினி அவனின் தொடுகையில் தன்னைத் தொலைத்திருந்தவள், இந்தக் கேள்வியில் எரிச்சல் ஆனவள், " நிஜமாவே செய்வான். இது மட்டும் இல்லை, என் நெயில்ஸ் எல்லாம் ஸே பண்ணி விட்டு, சூப்பரா நெயில் ஆர்ட் வரைவான். அன்னைக்கே உனக்குத் தலைக்கு மசாஜ் பண்ணது, அவன் தான் சொல்லிக் குடுத்தான். எனக்கு விதவிதமா சமைச்சுத் தருவான். அந்த டைம்ல கால் வலிச்சா ஷோபால படுத்துட்டு அவன் மடியில் கால் வச்சுக்குவேன், அவன் தான் காலை பிடிச்சு விடுவான். மேத்யூ எனக்குச் செகண்ட் அம்மா. நான் ரொம்ப மிஸ் பண்றேன்" என முகத்தில் அவள் பேச்சுக்கேற்ற முகபாவனைகளைக் காட்டவும்,சந்திரதேவ்க்கு பொறாமையும் எரிச்சலும் போட்டிப் போட்டுக் கொண்டு வந்தது. ஒரு நேரம் வேகமாக முடியை இழுத்து விட்டான். " ஆ வலிக்குது" என அவள் கத்தவும் சாரி, சாரி சாரி என்றான்.

"சாத்தானை நினை அது உன் முன் தோன்றும்" என்பார்கள், ஒரு வழியாகச் சந்திரதேவ் தன் மனைவிக்குச் சேவைகள் செய்து முடித்து அவள் ஓய்வாகப் பெட்டில் சாயும் நேரம் மேத்யுவிடமிருந்து, சந்திரதேவ்க்கு போன் வந்தது. தான் மஸ்கட்டில் லேண்ட் ஆகிவிட்டதாகவும், ஹாசினியை எப்போது சந்திக்கலாம் எனக் கேட்டான். அவன் தங்கியுள்ள ஹோட்டலைக் கேட்டுக் கொண்டவன், மாலையில் கார் அனுப்பி அழைத்துக் கொள்வதாகச் சொல்லி போனை வைத்தான். ஹாசினி அவன் பேசியதைக் கவனிக்கவில்லை. ஏதோ பிஸ்னஸ் கால் என அசட்டையாக இருந்தாள்.

" சாத்தான் வந்திடுச்சு" என்றான் ஆங்கிலத்தில் , அவள் புரியாமல் பார்க்கவும். " உன் ப்ரண்டு வந்திட்டான். மேத்யூ" எனவும் அவள் தேவ் மீது தலையணையைத் தூக்கி எறிந்து, "அவன் சாத்தான் இல்லை, தேவன்" எனக் கன்னக்குழி விழச் சிரித்தாள்.

" குண்டு கோஸ், என்னைப் பார்த்தவுடனே , இவ்வளவு சந்தோஷப் பட்டியா. அழுகத் தான் செஞ்ச" என அவளை நெருங்கி அமர்ந்து இடையோடு சேர்த்து அணைத்து, தன்னைப் பார்க்கும் படி அவளை வைத்துக் கொண்டு கேட்டான்.

" அவன், உன்னை மாதிரி ஃப்ராடு வேலை பார்க்கலை. அவனைப் போலீஸ் தேடிட்டு வராது" எனத் தன் பேலன்ஸ்காக அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு சொன்னாள்.

" ஃப்ராடு, கடத்தல்காரன், அரக்கன். எதுக்கு என்னை மேரேஜ் பண்ணிகிட்ட" எனவும். அவன் மார்பிலிருந்த அரைசந்திர வடிவ தழும்பைத் தொட்டுக் காட்டி, " எனக்கு வரவேண்டிய தழும்பை எல்லாம் அவன் தானே வாங்கிக்கிறான். " என முத்தமிட்டு அவனோடு ஒண்டிக் கொள்ள, மேத்யு மீதிருந்த பொறாமை எல்லாம் சென்ற இடம் தெரியாமல் அவளில் தொலைந்தான் சந்திரதேவ்.


No comments:

Post a Comment