ஹாசினி சந்திரா-22
" த்தை, த்தை " என ஹாசினியை அழைக்கப் பழகியிருந்த அதிபன் சந்திராவின் பத்துமாதக் குழந்தை சுபாஷினி சந்திராவைத் தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்தாள் சுஹாசினி சந்திரதேவ். ஆம் அவளது அடையாளம் இதுதான் எனக் கணவனால் பிரகடனப் படுத்தப் பட்ட போதும் கூட , அதற்கான உபயோகம் இல்லாத மதுர ஹாசியானகவே தான் அவள் இருந்தாள். இந்த மாற்றமில்லாத மாற்றம் அவளது வாழ்க்கையில் மெல்ல அதன் விளைவுகளை ஏற்படுத்துத் தொடங்கியிருந்தது.
பெற்றவர்கள் அமெரிக்காச் சென்ற பிறகு, அண்ணன் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழித்தாள் ஹாசினி. அதுவும் ஆண்கள் வேலைக்குச் சென்ற பிறகு, அதிபன் மகள் சுபாஷினி முழித்திருக்கும் நேரமெல்லாம் அத்தையோடு ஒட்டிக் கொண்டது. மயூராவோடு சேர்ந்து சுப்பிக்குக் குளிக்க ஊற்ற, அலங்கரிக்க ,சாப்பாடு ஊட்ட என அவர்களோடே சுற்றித் திரிந்தாள். அதனைப் பெற்றவரோடு சொல்லி மகிழ்வதிலும், இரவில் சந்திராவோடு அன்றைய நாளை பற்றிக் கதைப்பதிலும் சில நாட்கள் சென்றது.
ப்ரதிபன் மனைவி ஆராதனாவோடு சிறுவயதிலேயே பழகி இருந்ததால் " அண்ணி, இன்னைக்கு ப்ளுவா, கிரினா. இந்த ஸ்கர்ட்டுக்கு எதைப் போட" என அவள் அன்றாடம் உடுத்தும் உடைகளுக்கே ஆலோசனைக்காக அவள் முன்,தன உடைகளைக் கடைப் பரப்புவாள். ஆராதனா அவளையே திருப்பி அதே கேள்வியைக் கேட்டு, " நீ இந்த ட்ரெஸ் போடும் போது, அண்ணா என்ன சொல்லுவாங்க, எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க" என யோசிக்க வைக்கவும், "என்ன சொல்லுவான்" என யோசித்தவள், அவன் விஷமமாகச் சொல்லும் வார்த்தைகளை நினைத்துச் சிரித்துக் கொண்டவள், அதை மறைத்து " ஒன்னுமே சொல்ல மாட்டான்" என்றாள்.
" சொல்ல மாட்டானா ? எங்க அண்ணா ன்னா , நாங்க ஒரு மரியாதையோட பார்ப்போம். நீ எப்படிப் பேசற பாரு." எனச் செல்லமாகக் கோபித்தவள், " அடுத்தத் தடவை கவனி. அப்புறம் நீயே ட்ரெஸ் சூஸ் பண்ணுவ" எனச் சில யோசனைகளைச் சொல்லித் தந்தாள். அதன்படி இரண்டு மூன்று முறை ஏனோ தானோவென உடைகளை எடுத்துப் போட, அவளைப் பார்த்தவுடன், " க்ளேவுன் மாதிரி இருக்க." எனச் சிரித்து, " என்னடி காம்பினேஷன்" என்ன ஆட்சேபித்து, கமெண்ட் அடிக்கவும் மீண்டும் ஆராதனாவிடம் வந்து நின்றாள். பேஷன் மேகசின்களைக் கொடுத்து அதிலிருந்து கற்றுக் கொள்ளச் சொல்லவும், படு தீவிரமாக அதற்குள் சில நாள் உழன்றாள்.
அதன் பின் அந்தக் கலையும் அவள் கைவந்தது, அம்மாவிடம் பெருமையாகவே சொல்லிக் கொண்டாள். அவர்கள் சம்பாஷணையைக் கேட்ட அனுசுயா, "அவார்டு கொடு உன் மகளுக்கு" என மேனகாவுக்கு கேட்குமாறு கமெண்ட் அடித்துச் சென்றார். மேனகா சிரித்துக் கொண்டார். ஆனால் நிரஞ்சனா அவளை வெகுவாகப் பாராட்டவும், " மாமி, ரஞ்சி மாமியே அவார்டு குடுத்துட்டாங்க " எனச் சிரித்தாள். இவ்வாறு மெல்ல வீட்டினரோடு பழக ஆரம்பித்தாள்.
இரத்தின தேவும் கூட, " உங்கப்பா ஊருக்கே ரோல் மாடலா இருந்தாரே, நீ என்ன கத்துகிட்ட " என மருமகளை விசாரிக்கவும், அவள் தந்தையோடு கழித்த பொழுதுகளைச் சொன்ன விதத்தில் மகளை மிகவும் செல்லமாக மட்டுமே வளர்த்ததையும், சந்தர்பவசத்தால் இவள் அரசியல்வாதியானதையும் புரிந்து கொண்டார். வீட்டினரோடு இயல்பாகப் பொருந்திப் போனாள் ஹாசினி. ஆனால் பிரச்சனை வேறு விதமாக வந்தது.
அண்ணன் மகன் வீருவோடு ஒரு நாள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். பத்திரிக்கை வைக்க அதே ஊரிலிருக்கும் மற்றொரு தமிழ் குடும்பம் வந்தது. இவர்களை நன்கு அறிந்த அந்தக் குடும்பத்துப் பெண்மணி ஹாசினியின் முகத்தைப் பார்க்க இயலாத போதும் யாரு என்ன எனத் தோண்டித் துருவினார். அதனால் யாராவது வீட்டுக்கு வருகிறார்கள் எனில் ஹாசினியை ஏதாவது ஒரு அறையில் மறைத்து அவள் வெளியே வராதபடி வேலைக் கொடுத்தார் அனுசுயா.
ஒரு நாள் சுபியோடு ஹாலில் இருந்தவளைப் பக்கத்து அறைக்குச் செல்லச் சொல்லிவிட்டு ஹாலில் அனுசுயா பேசிக் கொண்டிருந்தார். பேச்சோடு பேச்சாகச் சந்திரதேவ்க்கு அவர்களுக்குத் தெரிந்த வீட்டுப் பெண்ணை மணமுடிக்க விரும்புவதாக வந்தவர்கள் சொல்லவும், அனுசுயா இப்போதைக்குச் சந்துவின் திருமணம் பற்றிய யோசனை இல்லை என மறுமொழி தந்தார். அப்போது தான் ஹாசினிக்கு முதல் முறையாகத் தங்களது திருமணம் ஊரறிய நடக்கவில்லை. தான் வீட்டுக்குள் மட்டுமே சந்திரதேவ் மனைவியாகச் சுற்றித் திரிகிறோம் என்பது புரிந்தது. அவர்கள் சென்ற பிறகு ஹாசினி மாமியாரிடம் கேள்வி கேட்டாள்.
" என்னன்னு சொல்ல, உனக்கு அந்தச் சர்டிவிகேட் எல்லாம் ஒரு கை காவலுக்கு வாங்கி வச்சிருக்கான். நம்மகிட்ட பிரச்சனை வந்தால் அதைக் காட்டலாம். நாமளே வழியக்க போய் எதுக்குச் சொல்லனும். இன்னும் உன் கேஸ் ஆரம்பக் கட்டத்தில் தான் இருக்கு. என்னைக்கினாலும் சந்து தலைமேல் தொங்குற கத்தி தான். நீ உன் முகத்தை யாருக்கும் காட்டாமல் இருந்தா தான், அவன் மேல அந்தக் கத்தி விழாமல் இருக்கும்" என்றார். அது அவளை முதல் முறையாகப் பாதித்தது.
மற்றொரு நாள் ஹாசினி, சுபிக் குட்டியோடு ஓடுவது, சிரிப்பது என ஒவ்வொன்றையும் பார்த்த நிருபன் தேவ் , " பேபிடால் உனக்குப் பேபிஸ்னா ரொம்ப இஷ்டமா. வரவர குட்டிப் பாப்பா, நீயா, சுபியான்னு தெரியலை அவ்வளவு செயில்டிஸ்ஷா இருக்க " எனக் கேலி செய்தவன், தனது மொபைலில் எடுத்த சுபியோடு எடுத்த புகைப்படங்களைக் காட்டிக் கொண்டிருந்தான்.
அவளும் அதைப் பார்த்து மகிழ்ந்திருந்த வேளையில் அனுசுயா அங்கே வந்தவர், நிரு ஹாசினியோட போட்டோவை டெலிட் பண்ணு , உனக்குத் தெரியாமல் கூட எங்கையாவது அப்லோட் ஆகிட்டா, சந்துவுக்குத் தான் பிரச்சனை " எனவும் , " பெரியம்மா, நெட்ல எல்லாம் போட மாட்டேன். இது பர்சனல் போட்டோ தானே என் மொபைல்ல தான் இருக்கப் போகுது" என அவன் சொன்ன போதும் வலுக்கட்டாயமாக அதனை டெலிட் செய்ய வைத்தார். ஹாசினிக்கு முகம் வாடிப் போனது.
ஆனால் சிறிது நேரத்தில் பெற்றவர்களிடமிருந்து போன் வரவும் உற்சாகமாகப் பேசினாள். அனுசுயாவும் அவளது முகம் வெளி ஆட்களுக்குத் தெரியக்கூடாது என்பதில் மட்டுமே கெடுபிடியாக இருந்தார். மற்றபடி அவளிடம் நல்லவிதமாகவே பேசினார். ஆனால் அடிக்கடிச் சொல்லப்பட்ட அவளின் அடையாளம் அவள் மனதில் ஆழமாகப் பதிந்தது.
சந்திர தேவ் தனக்காக வரும் பிஸ்னஸ் பார்ட்டிகளுக்கு , அதுவும் துணையோடு வரச் சொல்லும் பார்ட்டிகளுக்கு ப்ரதிபன், அதிபன் மற்றும் இரத்தின தேவ் இவர்களையே அனுப்பினான் சந்து. அதையும் பார்த்துக் கொண்டே இருந்தவள், இரவில், " என்னால உனக்கு ரொம்பச் சிரமம் சந்திரா" என முகத்தை வாட்டமாக வைத்துக் கொண்டு இந்தக் காரணத்தைச் சொல்லவும்,
" ஹேய் குண்டு கோஸ், இதைக் காரணமா வச்சே, நான் அந்தப் பார்ட்டில இருந்து தப்பிக்கிறேன். நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா, மச்சான் ஹேப்பிடி " என அவளை நெற்றியில் முட்டவும், . " இல்லை நீ சும்மா சொல்ற " எனத் தன் கண்டுபிடிப்புகளை அவனிடம் சொன்னாள்.
அவன் சிரித்துவிட்டு, " உனக்கு வீட்டுக்குள்ளையே இருந்து போராடிக்குதுன்னு சொல்லு நான் ஒத்துக்குறேன். எனக்கு வீட்டுக்கு வந்தால் தான் சந்தோஷம். அதுவும் இந்த ரூம்குள்ள வந்துட்டா பரம சந்தோஷம்" என விஷமமாகச் சொல்லவும் ஹாசினி சிணுங்கினாள்.
மேனகா மகளிடம் பேச வேண்டும் என்றால் ஆராதனா, மயூரா, நிரஞ்சனா என யாருக்காவது போன் போட்டு அவர்கள் தான் ஹாசினியிடம் போனைத் தந்தனர். சில சமயம் ஒவ்வொருவரும் வெளியே இருக்க, லேண்ட் லைன் போனுக்கு அடித்தார், அதுவும் அடித்துக் கொண்டே இருந்தது. வீட்டைப் பராமரிக்கும் மேகலா எடுத்து, யாரென அறிந்த பின்னரே, ஹாசினிக்குத் தொடர்பை தருவார்.
அனுசுயாவின் கட்டுபாடுகளில் ஒன்று ஹாசினி உள்ளே வரும் போன்களை எடுக்கக் கூடாது என்பதும் ஆகும். மேனகா பானுமதியிடம் இதனைச் சொல்லி வருத்தப்படவும், பானுமதி சந்திர தேவிடம் பேசினார். " சாரி அத்தை" என்றவன், அன்றே விலையுயர்ந்த ஒரு போனை மனைவிக்கு வாங்கி வந்தான். வண்ணக் காகிதங்களால் சுற்றப்பட்ட அந்தப் பெட்டியைப் பிரித்தவள், அது தன்னை வெளிப்படுத்தும் பூதக்கண்ணாடி போல் பாவித்து, "வேண்டாம் " அவனிடமே திருப்பித் தந்தாள்.
" ஏண்டி வேணாங்கிற, மாமா, அத்தைகிட்ட மட்டுமாவது பேசிக்கோ. நானே உன்னைக் கூப்பிடனும்னாலும் எத்தனை கை மாறிப் பேசவேண்டியது இருக்கு. " என வற்புறுத்தித் தந்தான்.
"இல்லை சந்திரா வேண்டாம். போன் பேசறதுக்குன்னு ஆரம்பிப்பேன், பொழுது போகாமல் சோசியல் மீடியா பழக்கம் ஆகிடுச்சுன்னா, எங்கையாவது நான் உயிரோட இருக்கிற விசயம் தெரிஞ்சிடும் வேண்டாம்." என அவள் மறுத்த போது முதல் முறையாகச் சந்திரதேவ் மனதில் அடி வாங்கினான்.
" அதெல்லாம் தெரியாது, தெரிஞ்சாலும் நான் சமாளிச்சுக்குவேன். நீ போனை யூஸ் பண்ணிக்கோ " என வலியுறுத்திய போதும் மறுத்துவிட்டாள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அவளுக்குள் ஏதோ மாற்றம் வந்தது. பிள்ளைகளோடு விளையாடும் நேரத்தைக் குறைத்து, அடிக்கடிச் சோர்ந்து படுத்தாள்.
அவளைச் சந்தோஷப்படுத்துவதற்காக விலை உயர்ந்த டிசைனர் ஃப்ராக், சேலை என வாங்கி வந்தான் எனில், " இதைப் போட்டுட்டு எங்கப் போகப் போறேன். அதுக்குக் காட்டன் டாப் வாங்கிக் கொடு போதும்" என்று விட்டாள். சந்திரதேவ் எங்குத் தவறியது என யோசிக்க ஆரம்பித்தான். அப்போது தான் மனைவியை இத்தனை நாள் வெளியே அழைத்துச் செல்லாதது உரைத்தது.
ஹாசினியை வெளியே சென்று வர அழைத்த பொது மறுத்தாள். ஆனால் அவன் ஆசையாகக் கூப்பிட்டு அவள் மறுத்தற்கு வருத்தம் தெரிவிக்கவும், அவன் வருத்தம் தாளாமல் அரைமனதாகப் பர்தாவோடு வர சம்மதித்தாள். அந்த ஊரில் பர்தா அணிந்து செல்வது இயல்பான ஒன்று ஆதலால் ,அவளது திருப்திக்காக அதனை அணிவித்து அழைத்துச் சென்றான்.
மஸ்கட்டில் முக்கியமான இடங்களைக் காட்டியவன், முதல் முதலில் அவளை வெளியே அழைத்து வந்திருப்பதால் ஒரு நகைக் கடைக்கு அழைத்துச் சென்றான், இருவர்க்கும் பிடித்தது போல் ஒரு வைர நெக்லஸை தேர்ந்தெடுத்து விட்டு, அதனைப் பில் போட சொன்னான், அதனை அப்போதே அவளுக்குப் பூட்டிப் பார்க்க ஆசைப் பட்டவன் , அவளைக் கடியின் ஓரத்திலிருந்து கண்ணாடி முன் நிறுத்தி பர்தாவை மேலே தூக்கி விட்டு அந்த நெக்லஸை போட்டு விட ஹாசினிக்கும் சந்தோசம் பொறுக்க வில்லை, ஆனால் “ஹாசினி, நீ இங்கே இருக்கியா” என்ற குரலில் அதிர்ந்தவள், நெக்லஸை கழட்டி அவனிடம் தந்து விட்டு,” சந்திரா போகலாம்“என்றாள் .
சந்திரதேவ் அந்தக் குரலைக் கேட்கவில்லை, யாரோ ஒரு பெண்மணி, தன் மூன்று வயது மகளை அப்படி அழைத்தது, ஆனால் ஹாசினி அது தன்னை யாரோ அடையாளம் தெரிந்து கொள்கிறார்கள் எனப் பயந்து , அவனை அவசரப் படுத்தினாள் .
அவன் நகைக்குப் பணத்தை ட்ரென்சர் செய்து கையெழுத்துப் போடும் முன் , அவளுக்கு வேர்த்து விறுவிறுத்தது, பர்தாவிலிருந்ததால் அவனுக்கும் அவளது மாற்றம் தெரியவில்லை. ஆனால் அவனை ஒட்டி அமர்ந்திருந்தவள், அவன் மீதே சரியவும், அவசரமாகப் பர்தாவை நீக்கி அவள் முகத்தைப் பார்க்க அவள் மயங்கி இருந்தாள் . மூக்கிலிருந்து ரத்தம் வருகிறதா என ஆராய்ந்தான் ஆனால் அதுவும் இல்லை, இப்போது பதட்டப்படுவது அவனது முறையானது,
‘ஹசி, ஹசி, கண்ணைத் திறந்து பாரு. ஹசிமா பாருடா’ என அவன் பதறவும் , நகைக் கடை சிப்பந்தி தண்ணீர் எடுத்து வந்தார், ஆனால் அதற்குள் அருகே நகை எடுத்துக் கொண்டிருந்த வயதான பெண்மணி, “ புதுசா கல்யாணம் ஆனவங்களா “ என விசாரித்துக் கொண்டே ஹாசினியின் நாடியைப் பிடித்துப் பார்த்தவர், “ முபாரக் ஹை பேட்டா , தூ பாப் பண்ணே வாளே “ என அவன் தகப்பன் ஆகப் போகும் விஷயத்தைத் தன் அனுபவம் கொண்டு நாடி பிடித்துப் பார்த்த சொன்னார். சந்திரா தேவ மகிழ்ச்சிக்கு அளவில்லை, மயக்கத்தோடே அவளை அனைத்து முத்தமிட்டவன், “சுக்ரியா ஆன்டி “ என அவருக்கு நன்றி தெரிவித்தான்.
ஹாசினியை மயக்கம் தெளிவித்துக் காருக்கு அழைத்து வந்து முன் சீட்டில் அமர்த்தித் தானும் வந்து அமர்ந்தவன், ஏசியை ஆன் செய்து விட்டு, அவளை இழுத்து அணைத்து அவள் முகமெங்கும் முத்தமிட்டவன், “ஹசி ,ஐ லவ் யு டி , இருபத்தில் ஒன்னு ரெடி” என முகம் மலர்ந்து அவளது அடி வயிற்றைத் தொட்டுக் காட்டினான்.
அவளுக்கும் மகிழ்ச்சி பிடிபடவில்லை, அவன் தந்தது இரட்டிப்பாக அவனுக்குத் தந்தவள், “ உனக்கு எப்படித் தெரியும்” என்றாள். அவன் நடந்ததைச் சொல்லி விட்டு, போகும் பொது லேடி டாக்டரை பார்த்துட்டு போவமா “ என ஆசையாகக் கேட்டான். “வேண்டாம், டெஸ்ட் கிட வாங்கிட்டு வா போதும் “ எனச் சிறிது கலவரமாகவே சொன்னாள் . ஆனால் அவளின் கலவரமான முகத்தைக் கவனிக்கத் தவறியவன், அவள் சொன்னபடி செய்தான்.
வீட்டுக்குப் போகும் வரை பொறுக்க முடியவில்லை, வேகமாகவும் காரை செலுத்த முடியாமல் ஒரு வழியாக வந்து சேர்ந்தவன், ஹாசினியை கீழிருக்கும் அறைக்குள் அனுப்பி விட்டு அனுசுயாவை அழைத்து விவரம் சொன்னான். ஆனால் இவ்வளவு பேச்சு பேசுபவர், நிரஞ்சனாவை அழைத்தார். அதற்குள் ஆராதனா, மயூரா இவர்கள் வருவதைப் பார்த்திருந்தவர்கள் ஹாசினியை பின் தொடர்ந்து, அவளுக்கு விவரம் சொல்லி விஷயத்தைக் கன்பார்ம் செய்தனர்.
ஹாசினி தாய்மையுற்றாள். அண்ணன்கள் இனிப்போடு வந்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர். அமெரிக்காவில் அவளது பெற்றோர்களிடம் வீடியோ காலில் செய்தியைப் பகிர்ந்தனர். எஸ்ஆர்சி யும் மேனகா ஆனந்தக் கண்ணீர் விட்டனர். பானுமதி மகிழ்ச்சியை வெளிப்படுத்திப் பலவிதமான அறிவுரைகளைத் தந்தார்.
தங்களது அறைக்குள் வரவும் , அவனை இறுக்கக் கட்டிக் கொண்டவள், " சந்திரா, ஐயம் ஸோ ஹேப்பி. நம்ம சுபிக்குட்டி மாதிரி ஒரு பேபி என் டம்மில இருக்கு. " எனச் சிறுபிள்ளையாக மகிழ்ந்தவளின் நெற்றியில் முத்தமிட்டவன், அவளை நடத்திக் கொண்டு வந்து கட்டிலில் அமர்த்தி, " பானு அத்தை ஏதோ இன்ஸ்ட்ரக்சன் எல்லாம் சொன்னாங்க, கேட்டுகிட்டியாடி ஹசி, பேபி உன் வயித்துக்குள்ள இருக்கிறதால இனிமே நீ இரண்டு பேருக்குச் சாப்பிடனும். இது மாதிரி டைம்ல வாமிட்டிச்க்லாம் நிறைய வரும், ஆனாலும் சாப்பிடுறதை நிறுத்தக் கூடாது" என்றான்.
" உனக்கு எப்படித் தெரியும்" எனக் கேள்வி எழுப்பியவளிடம், " நான் ஆருவையும், மயுவையும் பார்த்திருக்கேனே. " என அவர்கள் செய்த மசக்கை அலப்பறைகளை எல்லாம் அவன் கொஞ்சம் கூடச் சேர்த்துச் சொல்லவும், அதில் குலுங்கிச் சிரித்தாள். பின்னர்த் தான் பேபி பிறந்தவுடன் அதுக்கு என்னவெல்லாம் செய்வேன் எனச் சுபிக்கு மயூரா செய்வதைப் பார்த்திருந்தவள் ஒரு பட்டியலிட்டாள்.
" அது சரி பேபிக்கு அடிக்கடி டிரெஸ் சேஞ்ச் பண்ணனுமே, அதுக்கு யாரைக் கேட்ப. உனக்கே வேற யாராவது தான் செய்யறாங்க" என அவன் கேலியாகக் கேட்கவும்,
" ஓ, நோ. இப்பெல்லாம் நான் யாரையுமே கேக்கிறதில்லை . எங்க அம்மா எனக்குச் செஞ்ச மாதிரி, என் பேபிக்கு எல்லாமே நானே செய்வேன் மம்மி ஆகிட்டா எல்லாமே தெரிஞ்சுக்கனும். சந்திரா, நான் கத்துக்குவேன்" என அவனுக்குச் சொல்லிப் புரிய வைப்பது போல் தனக்குத் தானே சொல்லிக் கொண்ட ஹாசினியையே பார்த்திருந்தவன், பூரித்துத் தான் போனான்.
" ஹசிமா, நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேண்டா. மாசமா இருக்கும் போது ஏதேதோ ஆசை வருமாமே, உனக்கு என்ன வேணும் சொல்லு" என அவளைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டு கேட்டான். அவனோடு ஒண்டிக் கொண்டவள்
" எனக்கு என்ன வேணும்" என யோசித்து " எனக்கு என்ன வேணுமோ எல்லாமே நான் கேட்கும் முன்னாடியே வாங்கிக் கொடுத்துடுற. வேற என்ன வேணும். நீ மட்டும் போதும் சந்திரா. உனக்கு என்னால எந்த ஆபத்தும் இல்லைனு தெரிஞ்சா அதுவே போதும்" என்றாள்.
" முட்டாள் கூஸ் மாதிரி பேசக் கூடாது. என் ஹசியால எனக்கு எப்பவுமே சந்தோஷம் தான். என்னை ப்ர்ஸ்ட் ஹஸ்பன்ட் ஆக்கின. இப்ப அப்பாவாக்கிட்ட. இதை விட வேறென்ன வேணும். நீ எனக்குக் காட்ஸ் கிப்ட்டி ஹசி டார்லிங் " என அன்பை பொழிந்தான்.
" நீ எனக்காகச் சொல்ற, நான் உன் தலைக்கு மேல தொங்குற கத்தி" என அவள் அனுசுயா சொன்னதை நினைவுபடுத்தவும் அவனுக்கு மிகவும் சங்கடமாகிப் போனது. அவள் பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்தவன், மானே தேனேவென கொஞ்சி அவளை தூங்க வைத்தான். அவன் மனதில் அந்தப் பேச்சின் தாக்கம் மட்டும் இருந்தது.
இந்தியாவில் கேஜே பார்ட்டி அதிக இடங்களில் வென்றிருக்க, நஞ்சப்பா ஓரம் கட்டப்பட்டுப் பசவைய்யா தலைவரானார். மீண்டும் தற்போதைய முதலமைச்சர் தலைமையில் கூட்டணி ஆட்சி நடை பெற்றது. மேனகா போன் வழியாகவே தற்போது பசவய்யாவிடம் விசயங்களை அறிந்து கொண்டார். எஸ்ஆர்சி யின் விசுவாசியான அவர், தலைவரிடம் சொல்லுங்கள் எனச் சில விசயங்களைச் சொல்லுவார். நஞ்சப்பா அப்பா மகன்களின் மீதான கேஸ்கள் வேகமெடுத்தது. தனது கேஸ் விசயமான விவரங்களை வரும் செய்திகளை மட்டும் ஹாசினி நாளுக்கு நாள் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தாள். எனவே தன் அடையாளம் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதில் கூடுதல் கவனத்தைச் செலுத்தினாள். அதுவே மனம் பாதிக்குமளவு வந்தது.
அதோடு இப்போதெல்லாம் பகல் பொழுதில் அவளுக்கு மசக்கை உபத்திரவம் அதிகமாக இருந்தது. தனது அறையிலேயே வாந்தி எடுப்பதும், அதில் மயங்கிக் கிடப்பதுமாக இருந்தாள். அம்மாவைக் காணும் ஆசை வந்தது ஆனால் அப்பாவுக்குப் புதிய சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகச் சொல்லவும் தனது ஆசையையும் அடக்கிக் கொண்டாள்.
மேகலா , சந்திர தேவின் உத்தரவின் படி , ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஹாசினியின் நலம் பற்றி அவனுக்குத் தகவல் தெரிவிப்பார். ப்ரிதியின் அம்மா எனவும் அவர் மீது ஹாசினிக்குத் தனிப் பாசம் வந்தது, அவளைப் பற்றிப் பெருமையாகப் பேசுவாள். அனுசுயா, நிரஞ்சனா, ஆராதனா, மயூராவென மாற்றி மாற்றி அவளுக்குச் சாப்பிட ஏதாவது தந்து கொண்டு தான் இருந்தார்கள், அத்தனையும் மறுக்காமல் சாப்பிட்டு மறக்காமல் வாந்தியும் எடுத்து விடுவாள்.
நிரஞ்சனா, சந்திரதேவிடம், ஹாசினியை டாக்டரிடம் அழைத்துச் செல்ல வலியுறுத்தினார். ஆனால் அவனின் சாம பேத தண்டம் எதுவும் இந்த விசயத்தில் மட்டும் பலிக்கவில்லை. வரமாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்தாள்.
" ஹசிமா, எவ்வளவு கஷ்டப்படுற பாரு, ஒரு தடவை செக்கப் போவோம். அவங்க டேப்லட்ஸ் தந்தா இது சரியாயிடும். பேபியும் நல்லா இருக்கும்" எனத் தன்மையாக எடுத்துச் சொன்னான்.
" ம்கூம், அந்த லேடி என் முகத்தைப் பார்த்துடுச்சினா, உனக்குத் தான் ரிஸ்க். நான் உன்னை இழக்க முடியாது சந்திரா. வேண்டாம்" என அவனைக் கட்டிக் கொண்டாள்.
" நான் ஃபேமலி டாக்டரை இங்க வரச் சொல்றேன். அவுங்க யார்கிட்டையும் சொல்லமாட்டாங்க. உன்னை யாரும் பார்த்தாலும், எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை" என எடுத்துச் சொன்னான்.
" இல்லை, நீ எனக்காகச் சொல்ற. நான் யாரையும் பார்க்க மாட்டேன். வேண்டாம்" எனக் கத்தியவளின் மூக்கிலிருந்து இரத்தம் வரவும் சந்திர தேவ் பயந்து போனான். இந்த மூன்று மாதத்தில் இது இல்லாமலிருந்தது. உடனே அவளிடம் சரண்டராகி " போக வேண்டாம்" என அவளைக் கட்டிக் கொண்டு சிகிச்சை செய்தான். நாளுக்கு நாள் அவள் படும் கஷ்டத்தைப் பார்த்து மனம் நொந்தான்.
ஒரு நாள் துபாயில் நடக்கும் ஒப்பந்தக் கூட்டத்தில் நிர்வாக இயக்குநர் என்ற முறையில் அவன் கலந்து கொள்வதும், கையெழுத்து இடுவதும் கட்டாயத் தேவையாக இருக்க, மனைவியைப் பிரியவும் மனமின்றி அவளுக்குப் பலவிதமாக எடுத்துச் சொல்லி அவள் சம்மதித்த பிறகே கிளம்பினான். இப்போதெல்லாம் வெளிநாடுகளுக்கு பிரதீபன், அதிபன் , நிருபன் தான் அலைந்தார்கள் .
அடுத்த நாள் விடியலில் தாண்டிய நேரம் இரவு தாமதமாக உறங்கி எட்டு மணிக்கு அலறியடித்துக் கொண்டு எழுந்தாள். அவளை யாரோ அடையாளம் கண்டு கொள்வதாகவும், சந்திர தேவை கைது செய்யத் தங்கப்பாண்டியன் வருவதாகவும் கனவு கண்டவள் முன்பொரு நாள் தீவில் அலறி எழுந்தவள் போல் எழுந்தாள். அறையிலிருந்து ' சந்திரா" என அவனைத் தேடிக் கொண்டே , சத்தமிட்டு வந்தவள் , லிப்டை விடுத்து மாடிப்படியில் இறங்க, சரியான சாப்பாடு இன்றி இருந்த உடல் தழன்று கால்கள் துவண்டன. இவள் கத்தியதில் அண்ணன்கள் இருவரும் வெளியே வந்து பார்க்க அவர்கள் கண் முன்னே மாடிப்படியில் உருண்டாள் தங்கை ஹாசினி சந்திரா.
" மது" என அலறியபடி இருவரும் ஓடி வர மூர்ச்சையுற்று இரத்த வெள்ளத்திலிருந்தாள் ஹாசினி. வீட்டில் உள்ள அனைவரும் பதறித் துடிக்க , அதிபன் அவளை அள்ளிக் கொண்டான், பிரதீபன் வேகமாக வண்டியை எடுத்தான். ஆராதனா அவளோடு முதல் காரில் மருத்துவமனை செல்ல, பெரியவர்கள் மற்றொரு காரில் சென்றனர். ஹாசினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். குடும்பமே கண்ணீர் மல்க ஐசியுவுக்கு வெளியே காத்திருந்தது. அதிக இரத்த போக்கு இருக்கவும், இரத்தம் ஏற்ற வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தலின் அண்ணன்கள் இருவரும்,அவளுக்கு இரத்தம் தந்தனர்.
சந்திரதேவ் தன் வாழ்க்கையில் இதுவரை அனுபவிக்காத நரக வேதனையோடு ஓடிவந்தான். ஹாசினி இன்னும் மயக்க நிலையில் தான் இருந்தாள். ஓரிரு முறை நினைவு வந்த போது புதிய சூழலில் மருத்துவமனையில் தானிருப்பதை உணர்ந்தவள் வீட்டுக்குப் போக வேண்டும் எனக் கத்தினாள். அதனால் தூக்க ஊசி போட்டுத் தூங்க வைத்திருந்தனர்.
ஐசியுவில் இருந்தவளைக் கண்ணாடி வழியே பார்த்தவன், மூன்று மாதத்திற்கு முன்பான அவளின் அடையாளமே முற்றியும் உருமாறி இருப்பதை உணர்ந்தான். கண்ணாடி வழியே கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தவனை டாக்டர் உள்ளே அழைத்தார்.
மாடிப்படியில் உருண்டதால் நெற்றி, கை காலில் அடி பட்டிருக்கு, அதோட கருக் கலைந்து இருப்பதால் இரத்த போக்கு அதிகமிருப்பதாகவும் அறிவித்தவர். இதை விடப் பெரிய பிரச்சனையாக அவளது மனநிலைப் பாதிப்பைச் சொன்னார். தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திச் சென்றார்.
மருத்துவமனை உடையில் அந்தக் கட்டிலில் தேய்ந்த தேகத்தோடு, கண்களில் கருவளையத்தோடும் மயக்க நிலையிலும் கூடக் கவலை அப்பிய முகத்தோடும் படுத்திருந்தவளைக் காணப் பொறுக்கவில்லை அவனுக்கு. இடது கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. வலதுபுறம் அவளை ஒட்டி அமர்ந்தவன்,அவளது கையைப் பிடித்துக் கொண்டு, "ஹசிமா, என்னால தாண்டி உனக்கு இந்த நிலைமை. உன்னை நிம்மதியா சந்தோஷமா வைக்கிறதா நினைச்சுகிட்டு நானே எல்லாத்தையும் பறிச்சிட்டேனே" என அழுதவன், " நினைவு வந்து பேபியை கேட்பியேடி நான் என்ன செய்வேன்" எனக் கதறினான். கண்ணீர் வடித்தபடியே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தான் என்பது தெரியவில்லை, ஹாசினியின் உணர்வு திரும்பும் போது, கண்ணீரோடு கணவனே தென்பட்டான்.
" சந்திரா, பேபி " எனத் தீனமான குரலில் அவள் சொல்லிக் கண்ணீர் விடவும், " அதனால என்னடா. உனக்கு இவ்வளவு இரத்தம் போயிருக்கே, நெற்றியில எல்லாம் பார் " என அவள் முகத்தைத் திருப்பித் தொட்டுக் காட்டவும், " அது பரவாயில்லை, பேபி போயிடுச்சு பாரு " என அழுதவளைக் கட்டிக் கொண்டவன், " இப்ப இல்லைனா என்ன அடுத்துப் பெத்துக்கலாம். இருபதில் ஒன்னு தான இல்லை, இன்னும் பத்தொன்பது இருக்கே " என அவன் அவளைத் தேற்றவும் ," போடா" என அவனை அடித்தவள், " சந்திரா எங்க இருக்கோம். ஹாஸ்பிடலா. என்னை யாராவது பார்த்திடுவாங்க. வீட்டுக்குப் போகலாம் " என அனத்த ஆரம்பித்தாள்.
" போகலாம்டா. இங்க உன்னை என் மனைவியா தான் தெரியும். காசினி சந்திராவை தெரியாது பயப்படாத. என் மேல நம்பிக்கை இருக்குல்ல " என்றான்.
" இல்லை சந்திரா, கேஸ் இப்ப சென்சேசன்ல இருக்கு. ரிஸ்க் எடுக்கக் கூடாது.வீட்டுக்குப் போகலாம் " என்றாள். எப்போதும் குழந்தையாகக் கொஞ்சும் குமரி இப்போது சட்டெனச் சந்திரதேவின் மனைவியாக அவனுக்காகப் பேசினாள். சந்திரதேவ் சமாதானம் சொல்லச் சொல்ல அவளது பிடிவாதம் அதிகரித்துக் குரலில் கடுமையும் கூடியது. இவள் சத்தத்தில் அனுசுயா உள்ளே வந்தார். மற்றவர்களை அவளது நிலை ஆபத்தைத் தாண்டவுமே வீட்டுக்கு அனுப்பியிருந்தனர். அண்ணன்கள் இருவரும் அனுசுயாவும் மட்டுமே அங்கேயே இருந்தனர்.
" மாமி, வீட்டுக்குப் போகலாம். என்னை யாராவது பார்த்திட்டா சந்திராவுக்குத் தான் பிரச்சனை. " என அரற்றியவளை அணைத்த அனுசுயா " போகலாம், நான் மட்டும் என் மகனுக்கு எதுவும் வர விட்டுடுவேனா. அவனை விட நீயும் முக்கியம். நான் டாக்டர்ட்ட பேசிட்டேன். நீ யாருன்னு இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. நீ இப்படிக் கத்தினா தான் எல்லாருக்கும் தெரியும். கொஞ்சம் நேரம் பேசாம இரு. " என அனுசுயா மிரட்டவும் ஹாசினி அமைதியானாள்.
சந்திரதேவ்க்குத் தன்னிடம் இவ்வளவு நேரம் அரற்றியவள், தன் அம்மாவிடம் அடங்கியதே அதிசயமாக இருந்தது. எதையும் தன்னால் சாதிக்க முடியும் என்ற அவனது இருமாப்பில் ஒரு அடியும் விழுந்தது.
டாக்டர், நர்ஸ் என ஒவ்வொருவரும் அவளது அறைக்குள் வர வர மிரண்டு தன் முகத்தை மறைக்கப் பார்த்தவளை அனுசுயா தனது பார்வையால் அடக்கினார். அழுது சிவந்த கண்களோடு நின்ற மகனுக்கும் ஆறுதல் தந்தவர், மூன்றாம் நாள் மருமகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
ஹாசினியின் உடல் நிலை குறித்து அறிந்த மேனகா, மகளை உடனே பார்க்க வேண்டும் எனத் துடித்தார்.
" மேனகா, இந்தக்கிட்ட நான் எதாவது சொல்லி சமாளிச்சுகிறேன் நீ கிளம்பு " என்றார் பானுமதி.
" இல்லைகா, இனிமே எதையும் மறைக்க வேண்டாம். ராம்ஜிக்கும் எல்லாமே தெரியட்டும்" என இருவருமாக எஸ்ஆர்சியிடம் சொல்லவும், மகளுக்காகக் கலங்கியவர் மேனகாவை மஸ்கட் கிளம்பச் சொன்னார். விசய மறிந்த மேத்யு மேனகாவை அழைத்துக் கொண்டு மஸ்கட் வந்து சேர்ந்தான்.
ஹாசினி, மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்து ஒருவாரம் ஆகியிருந்தது. மேனகாவும், மேத்யுவும் வந்து சேரவும், அவர்களிடம் அழுது புலம்பினாள். மேனகா மகளை நிறைய ஆறுதல் மொழிகள் சொல்லித் தேற்றினார்.
மேத்யு, இது அவன் பழைய க்ரானி இல்லை, எனக் கேலி கிண்டலோடு சொன்னவன், சந்திரதேவிடம் சொல்லுவது போல், ஹாசினி முதன் முதலாகத் தன்னைப் பார்ட்டியிலிருந்து அழைத்து வந்த கதையைச் சொன்னான். மலரும் நினைவுகளாய் அவளது அமெரிக்காவில் இருந்த வாழ்க்கையை நினைவூட்டி அவளைச் சகஜமான நிலைக்குக் கொண்டு வர முயன்றான்.
அதற்குப் பலனும் இருந்தது. இதை எல்லாம் கவனித்த சந்திரதேவ் மேத்யுவிடம், "நாம முதல்ல முடிவு பண்ண மாதிரி, ஹசியை உன்கிட்டையே ஒப்படைச்சிருக்கலாம். நான் தான் போர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி அவளோட வாழ்க்கையை நரகமாக்கிட்டேன்" எனப் புலம்பினான். அவனையே பார்த்திருந்த மேத்யு, "இது நான் யூ எஸ் ல பார்த்த மிஸ்டர். சி.பி.தேவ் இல்லையே, ஹாசினியோட சந்திராவா இருக்க " என்றான்.
" சி.பி.தேவ் பிஸ்னஸ் பண்ணத் தான் லாயக்கானவன், அவன் மனைவியோட மனசைக் கூடப் பாதுகாக்கத் தெரியாதவன். நான் அவளுக்குத் தகுதியானவனே இல்லை. உங்களோட ஸ்டேட்ஸ் கூட்டிட்டுப் போங்க, அத்தைகள் இரண்டு பேர், சந்திரா மாமா இருக்கார். அவள் சரியாகிடுவா" என மேத்யுவிடம் உதவி கோரினான்.
" நீ சொன்னது சரி. நீ நல்ல பிஸ்னஸ் மேன். ஆனால் உன் பைவ் மனசை புரிஞ்சுக்கத் தெரியாத முட்டாள்" என்றவன் தொடர்ந்து, " நான் இப்ப கூப்பிட்டாலும், ஏன் அவளோட அப்பா, அம்மாவே கூப்பிட்டாலும் ஹாசினி எங்களோட வர மாட்டா. ஷீ லவ்ஸ் யு ப்ளைண்ட்லி . அவளுடைய அடையாளம் உனக்கு ஆபத்துன்னு நினைக்கிறா. தன்னை விட்டுக் கொடுக்க முடியாமல் ஹாசினியாவும் இல்லாமல், சுஹாசினாயாகவும் மாறாமல் இந்த வீட்டுக்குள்ளையே இருக்கிறது தான் அவ பிரச்சனை. இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வுன்னு யோசி" என ஹாசினியின் கணவனாக உணர்ச்சி வயப்பட்டுச் சிந்திக்கும் திறனை இழந்திருந்த சந்திர தேவை யோசிக்கச் சொன்னான் மேத்யு வில்லியம்சன்.
சந்திர தேவ் எவ்விதம் தன் மனைவியை இந்த மனப் போராட்டத்திலிருந்து மீட்பான். ஹாசினி சந்திராவின் அடையாளம் திரும்பக் கிடைக்குமா. சந்திரதேவ் தன்னை ஒப்புக் கொடுப்பானா. ஹாசினி அதனை ஏற்பாளா. அடுத்தப் பதிவில் பார்ப்போம்.
No comments:
Post a Comment