சிந்தா-ஜீவா நதியவள் -5
சிவநேசன் மகளோடு வீட்டுக்குள் நுழைந்த பொழுது, எப்போதும் தனது அப்பாவுக்காவது மரியாதைத் தந்து அடக்கி வாசிக்கும் அவனது தங்கை கங்கா, இன்று ஓங்கி அவன் மீது குற்றப்பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருந்தாள். ஷோபாவில் அவளது கணவன் கேசவன் அவளது பேச்சுக்கு ஒத்து ஊதுவது போல் அமைதி காக்க, மற்றொரு ஷோபாவில் மாகலிங்கமும், குமரனும் அமர்ந்திருந்தனர். அம்மா ராஜேஸ்வரி சுவறோரம் நின்று கொண்டிருக்க, கங்கா தரையில் சப்பனமிட்டு அமர்ந்து அதிகாரமாகப் பேசிக் கொண்டிருந்தாள். அப்பாவும், மகனும் அடுத்தடுத்து வந்து சேர ஐந்து ,பத்து நிமிட இடைவெளிதான் இருக்கும். அதற்குள் இவ்வளவு பேசுகிறாள் எனில் ஒரு முடிவோடு வந்திருக்கிறாள் எனச் சிவனேசனுக்குத் தெரிந்தது.
சிவநேசன் உள்ளே வரும் போதே அவன் கையிலிருந்த சிந்துஜா, உள்ளே போக வேண்டாம் என அடம்பிடித்தது. இவ்வளவு நேரம் சிந்தா வீட்டில் விளையாடியதில் மகிழ்ந்திருந்ததது, அதையே எதிர்பார்த்தது. அதுவும் போக அத்தை கங்காவின் குரலில் அரண்டு அவள் பக்கம் போகக் கூடாது என்றது. அதைப் பார்த்த குமரன் அண்ணன் மகளை வாங்கிக் கொண்டு அதே சாக்கில் வெளியே சென்றான்.
" அப்பா, நாள் பூரா சிவகாமியைப் பார்க்கிறோம், ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா, அதுக்காக அண்ணன் புள்ளையைத் தூக்கி வந்திடுச்சு. அத்தை என்னை வையிது. நீங்களே கேளுங்கப்பா" என நீலிக் கண்ணீரோடு முறையிட்டாள் கங்கா.
" சரிமா, எங்கயோவா தூக்கிட்டுப் போயிட்டான். நம்ம வீட்டுக்குத் தான் வந்திருக்கான். அம்மா பார்த்துக்கும், இனிமே எங்கப் பேத்தியைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம்" என்றார் மகாலிங்கம்.
" பேத்தியை பார்த்துக்குவீங்கன்னா, என்னப்பா அர்த்தம். அப்ப அத்தாச்சி. அவுகளை ஒத்து வரலையின்னு கழட்டி விடப் பார்க்கிறீகளா" என அவளது பயத்தைக் கேட்கவும்.
" ஏம்மா, நான் எங்க அப்படிச் சொன்னேன், பாப்பாவை இங்கணை அம்மாகிட்ட பழக்கிவிட்டுட்டு, மீனாவை டாக்டர்கிட்ட காட்டச் சென்னைக்குக் கூட்டிட்டுப் போறோம்னு தான் உங்க அண்ணன் சொன்னான். உடம்புக்கு முடியலைனா வைத்தியம் பார்க்கப் போறோம், நீயா எதுக்கு எதையாவது யோசிக்கிற" என மகாலிங்கம் மக்களைக் கடிந்தார்.
" இப்ப உனக்கு என்னடி பிரச்சனை இதுவரைக்கும் எல்லாமே நீயும் உங்க அத்தையும் சொன்னபடி தான் நடந்திருக்கு. சிவாவுக்கு மீனாவை கட்டனுமுன்னீங்க, கட்டி வச்சோம். இங்க கிராமத்தில் வந்து இருக்கமாட்டா, வசதி பத்தாதுன்னு பேசினீங்க. அதுக்கும் ஒத்துக்கிட்டோம். ஏதோ உன் மாமனார் குடும்பத் தொழிலு,என் மவன் தான் வந்து சீர் படுத்தனும்னீங்க, அனுப்பி வச்சோம். அவனும் வீட்டோட மருமகனான தானே வந்து இருந்தான். மீனாவும் மாசமா இருந்தா, புள்ளை பெத்தா, உங்க எல்லார் இஷ்டப்படி தானே நாங்க எல்லாம் செய்யிறோம், இப்ப என்ன செய்யனும்னு சொல்ற" என ராஜி பாயிண்டைப் பிடித்தார்.
" குடும்பத்தையும் , தொழிலையும் இப்படித் தான் பாதில விட்டுட்டு வருவாகளா?. மாமா அத்தானை கம்பெனிக்குப் போகச் சொல்றாரு. அவுங்களுக்கு என்ன தெரியும், ஒத்தையில என்ன செய்வாக, அண்ணன் இருந்து கத்துக்கக் கொடுத்துட்டு வந்திருக்கலாம்ல " எனக் கங்கா புருஷனுக்கு வக்காலத்து வாங்கவும்.
" உன் புருஷன் தானே முதலாளி, என்ன ஏதுன்னு பழகிக்கச் சொல்லு. நான் மட்டும் எல்லாம் காத்துக்கிட்டா தொழில்ல இறங்குனேன், ஒன்னொன்னா பொறுமையா தான் கத்துக்கணும், சலவை துணி கசங்காம ஆபீஸ் வேலை மட்டும் பார்த்தா போதாது, உள்ள இறங்கி தொழிலாளிக்கு சமமா வேலை பார்க்கணும், அப்பத்தான் என்ன ஏதுன்னு புரியும், நட்டத்தில போன கம்பெனியை சரி பண்ணி கொண்டாந்து விட்டுட்டேன். மீனாவை காரணங்காட்டுனதுல தான் இத்தனை நாள் இருந்தேன். இனிமே என் குடும்பம் தொழில்னு பார்க்கப் போறேன். மாமாட்ட சொல்லிட்டு தான் வந்தேன்" எனச் சிவநேசன் கறாராகப் பேசவும்.
" அப்ப அத்தாச்சியை விட்டு வச்சிருக்க" என ஆங்காரமாகக் கேட்டாள். " அவ அம்மா வீட்டில தான இருக்கா, என் அத்தாச்சி என் கூடத் தான் இருக்கனும், சிநிகிதியா பழகிட்டாக, நீ இங்க வான்ணேன்னு அப்ப சீன் போட்ட. இப்ப அவ அங்க இருக்கிறது உனக்குப் பாரமா ஆயிடுச்சோ" எனச் சிவநேசன் கேட்கவும் அதைக் கொஞ்சமும் எதிர்பாராத கங்கா அப்பாவிடம் சலுகைச் சொல்லி ஒப்பாரி வைத்தாள்.
கேசவன் நடுவே புகுந்து" அத்தான் என் தங்கச்சி எங்க வீட்டில இருக்கிறதில் நாங்க ஒண்ணும் சுமையா நினைக்க மாட்டோம். நீங்க தனியா தொழில் பார்க்கப் போறதிலையும் எனக்குப் பிரச்சினை இல்லை. பாப்பாவைத் தனியா தூக்கிட்டு வந்துட்டீங்களேன்னு தான் வந்தேன். நீங்க எப்ப வரனுமோ வாங்க. நாங்க என்கூடப் பிறந்தவளை பார்த்துக்குவேன்" என அவன் சொல்லவும் கங்காவுக்கு முகம் கூம்பிப் போனது.
அவள் ஏதோ ஆரம்பிக்கும் முன் தடுத்து நிறுத்திய மகாலிங்கம், " நேசா, நாளைக்கு நீ போய் மருமகளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திரு. எந்த நோயா இருந்தாலும் நம்ம வச்சு பார்த்துக்குவோம். இனி கிராமம், டவுனுங்கிற பேச்சுக்கெல்லாம் இடமில்லை. தங்கச்சிகிட்டையும், மாப்பிள்ளைகிட்டையும் நான் யோசிக்கிறேன். " என விசயத்தை முடித்தவர் மனைவியிடம் சாப்பாடு எடுத்து வைக்கச் சொன்னார். கூடத்தில் பேச்சை முடித்துக் கொண்ட கங்கா, அடுப்படியில் ஆரம்பித்தாள்.
" ஏம்மா, இப்ப என்னாத்துக்குத் தென்வயலை போயி சுத்தம் பண்ணிக்கிட்டு. இந்த ஊர்ல மழையே பெய்யாது. இங்க போய் விவசாயம் செய்யப் போறாராக்கும் உன் மகன் " என அவள் அம்மாவிடம் வக்கணை பேசவும், " அவன் என்னமோ செய்யிறான். உனக்கென்ன. ஏன் என் மகன் எங்களோட வந்து இருக்கிறதில உனக்கு என்ன சிரமம். நீ உன் வேலையை மட்டும் பாரு" என்றார் ராஜி.
" ம்க்கும், காசக் கொண்டு போய் அதில போட்டு நட்டமாயிட்டு உட்காரப் போகுது. இதுக்கு விவசாயத்தைப் பத்தி என்ன தெரியும். எல்லாம் அந்த ஊர்மேயறவளுக்கு உதவி செய்யத் தான் எனக்கு என்ன தெரியாமலா இருக்கு" எனக் கங்கா, சிந்தாவை குறிப்பிட்டு நொடிக்கவும்.
" அடியே வாயை அளந்து பேசு, அடுத்த வீட்டுக்குக் கல்யாணமாகிப் போனாலும் இன்னும் என் மகள் தான். உன் வாயிலையே போடுவேன். இது தாண்டி உனக்கு எதிரி. உன் வாயாலையே தான் கெடப் போற " என ராஜி திட்டவும்.
" அவளைச் சொன்னா உனக்கு எதுக்கு இம்புட்டுக் கோபம் வருது, கொஞ்சம் விட்டுருந்தா நீயும் உன் மகனும், சாதி வித்தியாசம் பார்க்காமல் அவளை நடு வீட்டில் ஏத்தியிருப்பீங்க. என் சாமர்த்தியத்தால நீ மணம் பெத்துப் போற அதைத் தெரிஞ்சுக்க " என வாய்த்துடுக்காகப் பேசவும்.
" நீயெல்லாம் திருந்தாத ஜென்மம், நீ அவளை அவமான படுத்திட்டதா நினைக்கிற, ஆனால் அவ நல்ல மனசுக்கு அவசரக் கல்யாணமா இருந்தாலும் அவனையும் மனுசனாக்கி கவுரவமா வாழுறாடி. ஒரு பொண்ணுன்னு இருந்தா சிந்தா மாதிரி இருக்கனும்" என ராஜேஸ்வரி பெருமை பேசவும்.
" உனக்குப் பண்ணைக்காரி தானே முக்கியம். ஒருநாளாவது மகள்களையாவது, மருமகளையாவது உசத்தியா பேசியிருப்பியா" எனக் கங்கா சண்டை கட்டவும்.
" எல்லாரும் என்னை விட்டு ஓடுறதில தானடி இருந்தீங்க. என் மருமகளையாவது என்கூட இருக்க விட்டீங்களா. கல்யாணத்தப்ப நல்லாதான இருந்தா. இப்ப வியாதிக்கிறீங்க. நோவுங்குறீங்க. பெத்தபுள்ளைக்குத் தாய்ப்பால் கூடக் கொடுக்க மாட்டாம அப்படி என்ன அவளுக்கு. உன்னால தான் என் மகனும் நொந்து நிக்கிறான்" என ராஜி மகளை ஒரு பிடி பிடித்தார்.
" ஆமாம் நாந்தான் உன் மருமகளை இப்படிச் செஞ்சு வச்சேன். ஏம்மா நீ ஒருத்தி, அத்தாச்சிக்கு சிந்தாவப் பத்தியெல்லாம் சொல்லி, காராட்டியமா இருக்கத் தான் சொன்னேன். அது மண்ணாந்தையா இருந்தா நான் என்ன செய்ய, புருஷன் மேல சந்தேகம் இருந்தா சண்டையாவது போட வேணாம். மனசிலையே வச்சுக்கிட்டு மருகுனா நாங்க என்ன செய்யறது. இதுல இங்க கொண்டு வந்து வச்சு, அதை என்ன செய்யப் போறீகளோ தெரியலை. பொழுதிக்கும் மெனா புடிச்ச மாதிரியே உட்கார்ந்து இருக்கும். வீட்டில் எல்லா வேலையும் நான் தான் செய்வேன் . அப்படியும் பொல்லாப்பு பூரா என்னைத் தான் வந்து சேருது, மாமியாக்காரம்ம மகளைத் தாங்கிட்டு தான் திரியுது. உன்னையாட்டமா பெத்த மகளையே எல்லாரும் திட்டுவாக. " என வரிசையாகக் கங்கா பேசிக் கொண்டே போக, மகளுக்காகப் பாட்டிலில் பால் எடுக்க வந்த சிவநேசன் தங்கையின் பேச்சில் அதிர்ச்சியானான்.
மீனாவுக்குத் தன் மேல் ஈடுபாடு இல்லை என நினைத்தவன், அவள் மனதில் சந்தேகம் எனும் விதை விழுந்து அது விருட்சமாக வளர்ந்து அவனது வாழ்வையே சுவாரஸ்யமில்லாது மாற்றும் என நினைத்தது இல்லை. இப்போது ஒரு நூல் கிடைக்க, மனைவியை மாற்ற வேண்டியது தன் பொறுப்பு என உணர்ந்தான். முரடனாகத் திரிந்த வேலுவையே சிந்தாவின் அன்பு மாற்ற முடியும் எனில், அவனின் நேசம் மனைவியை மாற்றும் என நம்பினான். இனி யாரையும் தங்களுக்கிடையே வர விடக் கூடாது , குறிப்பாகத் தங்கை இருக்கும் இடத்தில் அவளை வைக்கக் கூடாது என முடிவெடுத்தான்.
சிந்தாவின் வீடு, அவளது நாளின் ஆரம்பம் முதல் முடிவு வரை சிவநேசனையே சுற்றி வர, அதைப் பற்றியே நினைத்திருந்தவளுக்கு, கணவன் கங்காவைப் பற்றிச் சொல்லவும், மனதில் தேவையில்லாத நினைவுகள் அவளை அழுத்த ஆரம்பித்தன. வேலையை முடித்துச் சோர்வாக உணர்ந்தவள், சீக்கிரமே படுத்து விட்டாள். ஆனால் நள்ளிரவில் அலறியடித்தபடி எழுந்து வேர்க்க விறுவிறுக்க அமர்ந்தவளை , வேலு தண்ணீர் எடுத்துக் கொடுத்து ஆசுவாசப் படுத்தினான்.
" என்ன புள்ளைக் கனாக் கண்டியா " எனவும், " எனக்கு மூச்சு முட்டுது, புழுக்கமா இருக்கு, காத்தாட உட்காரனும் போல இருக்கு. புழக்கடை பக்கம் உட்காருவோமா. இந்தப் பக்கம் போனா அப்பா முழிச்சிக்கும்" என அழைத்தாள். பிள்ளைகள் இரண்டும் தூங்கிக் கொண்டிருக்க, " வா" என அவளை அழைத்து வந்தான்
புழக்கடைப் பக்கத்திலிருந்த திண்ணையில் இருவரும் அமர்ந்தனர். நேற்றைய சித்திரா பௌர்ணமி இன்றும் மிளிர்ந்து கொண்டு தானிருந்தது. பெரிய வட்ட வடிவ நிலா தங்கத் தகடென ஒளிர்ந்து கொண்டிருக்க, மெல்லிய தென்றல் வீசி, அவள் வளர்த்த பிச்சிப்பூச் செடி அதன் சுகந்தத்தைச் சந்தாவுக்குச் சுகம் தருமெனத் தென்றலோடு அனுப்பிக் கொண்டிருந்தது. வேர்த்த அவளது உடலில் தென்றல் தீண்டவும் உலர்ந்து உடலில் ஓர் சிலிர்ப்பைத் தந்தது. அவள் உடல் ஒரு முறை நடுக்கத்தோடு குலுங்க , கணவனின் கரத்தைப் பற்றிக் கொண்டாள்.
" என்ன புள்ளை, எதுக்கு இவ்வளவு நடுங்குற, நான் இருக்கேன்ல, காத்துக் கருப்பு கூட உன்னை அண்டாது. " என அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவன் மீதே சாய்ந்து கொண்டவள், " அது என்னமோ நெசந்தான் மச்சான். உன் பொண்சாதின்னு சொல்லும் போது தானா தகிரியம் வந்து மனசில ஒட்டிக்குது" என நெகிழ்ந்தவள்.
" இன்னைக்கு அய்யனார் சாமியாட்டமா நீ என்னைக் காத்து நிக்கிற மச்சான். அன்னைக்கு அது இல்லாததால தான் நாய் பேயெல்லாம் என்னைப் பெண்டாளனும்னு நினைச்சது, அதை நடக்காம தடுத்து காப்பாத்தின மகராசனோடைய சேர்த்து வச்சு என்னை அசிங்கப்படுத்துச்சுங்க" என ஐந்தாண்டுக்கு முன்பான சம்பவத்தை அவனிடம் மனம் திறந்தாள்.
" உனக்குத் தெரியுமான்னு தெரியாதான்னு எனக்குத் தெரியலை மச்சான். எங்க அம்மா, பாம்பு கடிச்சு, சரியான நேரத்துக்கு வைத்தியம் பார்க்காததால தான் செத்துச்சு. அது சாகையில நான் ஒம்பதாவது படிச்சேன். முத்துவும், சுப்புவும் ரொம்பச் சிரிசுங்க. மூணாவது, நாலாவது படிச்சுதுங்க. சுப்பு அம்மாவைக் காணாம்னு அழுவான், அப்பா தூக்கிட்டே திரியும். முத்து இரைக்கெல்லாம் என்னைக் கட்டிக்கிட்டு, அம்மா இனிமே வரவே வராதா அக்கான்னு அழுவா. அப்பா மன ஒடைஞ்சு போய் உட்கார்ந்திடுச்சு. " என அந்த நாள் நினைவில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, வேலு அவள் சொல்லட்டும் எனத் தோள் கொடுத்து அமைதியாக இருந்தான்.
" சோறாக்க, குழம்பு வைக்கன்னு அம்மா இருக்கும் போதே செய்வேன். அம்மாவுக்கு அப்புறம் என் தம்பி தங்கச்சிக்கு நான் அம்மா இடத்தை நிரப்பனும்னு நினைச்சேன். அதுக உள்ளூர் பள்ளிக்கூடத்தில் தான் படிச்சதுங்க. அதுங்க எப்ப வந்தாலும் ஏன்னு கேட்க அம்மாவாட்டம் நான் இருக்கனும்னு நினைச்சு தான், ஸ்கூலுக்குப் போறதை நிறுத்தினேன்.
ஸ்கூலுக்குப் போகலைனாலும் பாடத்தைப் படிப்பேன். அதைப் பார்த்த சின்னைய்யா தான் பத்தாவது ப்ரைவேட்டா எழுத ஏற்பாடு செஞ்சார். மத்தது எல்லாம் படிச்சிட்டாலும் இங்கிலீஸ் மட்டும் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. பெரிய வீட்டு அம்மா, என் மேல பிரியமா இருப்பாங்க. நான் படிக்கிறதுக்கு அவுகளும் ஊக்கம் குடுத்தாங்க. இங்கிலீஸ் கஷ்டமா இருக்குங்கவும், சின்னைய்யாகிட்டச் சொல்லி, எனக்குத் தனியா எடுத்தா விகற்பமா தெரியுமென்னுட்டு கங்காவுக்கும் எனக்குமா சேர்த்துப் படிப்பு சொல்லிக் கொடுக்கச் சொன்னாக. அதுலையே அவளுக்கு என் மேல எரிச்சல்" என நிறுத்தவும்.
" நீ அந்த அம்மாளை விட நல்லா படிச்சுபிட்டியாக்கும்" எனப் பாயிண்டை பிடித்தான் வேலு. சிந்தா ஆம் எனத் தலையாட்டியவள், " அதுக்கு அம்புட்டுக் கோபம் வரும்" எனச் சிந்தா புன்னகைக்கவும்.
" பண்ணைக்காரன் மகளுக்கு எதுக்குப் படிப்புங்கிற நினைப்பு தான். இது மாதிரி நினைப்பு இருக்கவுகளை என்ன பண்ணாலும் திருத்த முடியாது" என்ற வேலு, " இதை மனசில வச்சுக்கிட்டா உன்னை அசிங்கப்படுத்துனாக. சின்னத்தனமால்ல இருக்கு " எனக் கேட்டான்.
" இதுவும் ஒரு காரணமுன்னு சொல்லலாம். எங்க அம்மா பாம்பு தீண்டி செத்ததால இனிமே இது மாதிரியான நிலைமை யாருக்கும் வரக்கூடாதுன்னு மனசுக்குள்ள ஒரு வைராக்கியம் வந்துச்சு. பெரியம்மாவுக்கு வைத்தியம் பார்க்க பரமக்குடியிலிருந்து வந்த வைத்தியருகிட்ட இதைச் சொல்லியே வைத்தியம் கத்துக்கனும்னு கேட்டேன். அவருக்கும் ரொம்பச் சந்தோஷம். சின்ன வயசுலயே இவ்வளவு நல்ல எண்ணம் னு பாராட்டுனவுக, பரமக்குடிக்கு வரச் சொன்னாக.
பத்து நாள் அப்பா கூடப் போயி அவுக கை வைத்திய முறையெல்லாம் அவசர உதவிக்குச் செய்யறதை மட்டும் சொல்லிக் கொடுத்தாகக் கத்துக்கிட்டேன். அடுத்து ஒரு ஆளுக்குக் கருவ வெட்டப் போகும் பாம்பு தீண்டிடுச்சு. எல்லாரும் விசயம் சொல்லி ஓடவும் நானும் ஓடினேன். வலது கையில் தடம் தெரிஞ்சது, துணியை இறுக்கக் கட்டி விசத்தை உறிஞ்சி வெளியே துப்பினேன். கை வைத்தியமா உள்ளுக்குள் மருந்தைக் கொடுத்து மானாமருதைக்கு அனுப்பவும். அந்த ஆள் பொழைச்சுகிட்டாரு. அன்னைக்கிலேருந்து நான் காப்பாத்துன சனம் என்னைக் கையெடுத்து கும்புட்டுச்சு. அதிலையும் கங்காவுக்கு என் மேல பொறாமை " என்றவள் தொடர்ந்து ,
" ஆனால் ,ஒருபக்கம் நன்றி சொல்றவுக இருந்தாலும், மறுபக்கம் அதை நக்கலடிக்கிறவுகளும் இருந்தாக. இளந்தாரிப் பயலுகளுக்கு நான் கண்ணுக்கு விருந்தா தான் தெரிஞ்சேன். சும்மா பாம்பு கடிச்சிடுச்சின்னு கூப்பிட்டு விட்டு ஏமாத்துனவனுங்களும் உண்டு. அதுக்காக அடுத்தத் தடவை அவுக கூப்பிடையில போகாமலிருந்ததும் கிடையாது. நம்மளால ஒரு உசிரு பொழைக்கணுமே ஒழிய போகக்கூடாதுன்னு முடிவுல இருந்தேன் , அதனால அதையும் பொறுத்துக் கிட்டேன்.
இதைப் பார்த்த பெருமாயி மவன் சோமு என் மேல கண்ணு வச்சிட்டான். பொங்கல் விழா சமயம் சின்னப் புள்ளைங்களுக்கு டான்ஸ் ஆட பத்து நாளா பழக்கிவிட்டு எல்லாம் மேக்கப் போட்டு ரெடியா இருந்துச்சுங்க. பாதிப் புள்ளைங்க மேடையில ஆடிட்டு வந்து அம்புட்டு சந்தோஷமா உட்கார்ந்திருக்க, இன்னும் நாலைஞ்சு பாட்டு தான் பாக்கி இருந்துச்சு.
ஒரு பய ஓடி வந்து யாரையோ பாம்பு தீண்டிடுச்சுன்னு அவசரமா கூப்பிட்டான். நான் கூட இருந்த புள்ளைகள்ட்ட சொல்லிட்டு வேகமா போனேன். பெரிய ஐயா வீட்டு மோட்டார் ரூம்பு, மங்கலான வெளிச்சம். இந்தச் சோமன் மல்லாக்க கோணமானாலா கிடந்தான். நான் உசிரு இருக்கோ இல்லையோன்னு நாடியை பிடிச்சு, மூக்கில் கை வச்சு பார்க்குங்குள்ள என் மேல பாஞ்சிட்டான்.
உயிரை காப்பாத்திக்கப் புள்ளிமான் போராடும்பாகளே, அது மாதிரி மானத்தைக் காப்பாத்திக்கப் போராடினேன். மைக் செட் அலறுனதுல யாருக்குமே கேக்கலை. என் தாவணியை உருவி ஜாக்கெட்டெல்லாம் கிழிஞ்சு இருந்தது. தெய்வமாப் பார்த்து சின்னையாவை அந்த நேரம் அங்க அனுப்பி வச்சது" எனச் சொல்லும் போதே உடல் நடுங்கி கண்ணீர் வழிய அழுதாள்.
அந்த நாளின் நினைவில் இப்போதும் உடல் நடுங்க வேலுவோடு ஒண்டிக் கொண்டவள், "ஆட்டம் பாட்டம் நடக்கும் போது ஏற்பாட்டைக் கவனிக்காம நான் எங்கயோ போறேனேன்னு தான் பின் தொடர்ந்து வந்திருக்காக. நடுவில யாரோ ஏதோ கேட்டதில என்னைத் தவற விட்டுடாக, வீடு வரை போய் நான் இல்லைங்கவும் சந்தேகத்தில அவசரமா தேடியிருக்காக.
அவுக சத்தம் கேட்கவும், அவன் என்னைய விட்டு வெளியேறிட்டான். அவுக உள்ள எட்டிப் பார்க்கும் போதே, வேணாய்யா பார்க்காதீகன்னு கத்தினேன். என் நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டவுக, அவுக சட்டையைக் கழட்டிக் கொடுத்தாக. என் மானத்தை மறைக்க அவுக சட்டையை வாங்கிப் போட்டுக்கிட்டேன். அதுக்குப்புறம் தான் அவுக உள்ள வந்தாக, இவன் வெளிய இருந்து கதவைச் சாத்தி தாழ் போட்டான். ஆட்டம் பாட்டம் முடியற நேரம் கங்கா இருக்க இடமா பார்த்து நின்னு , மோட்டார் ரூம்ல எங்களைப் பார்த்ததா கதை கட்டிட்டான்.
கங்கா சொந்தக்காரவுக ஆளும் பேரோட இருந்தவ, அத்தனை பொம்பளைகளையும் கூட்டிட்டு இந்தப் பயலுகளோட சேர்ந்து அங்க வந்துட்டா. சின்னைய்யா என்னைத் தேத்துறதில இருந்தவுக கதவை மூடினதைப் பெரிசா நினைக்கலை. அவுக என்னைக் கைதாங்கலா கூட்டிட்டு வ்ததைத் தான், கதவை திறந்தவுக பார்த்தாக.
அங்கனையே ஆளாளுக்குப் பேச ஆரம்பிச்சிட்டாக. எனக்குக் குச்சு வீட்டிலிருந்து மச்சு வீட்டுக்கு போகனும்னு ஆசையாம். மகாராணியாகப் பார்க்கிறேன். தளுக்கி, மினிக்கி திரியிறேன்னு சொன்னதெல்லாம் கூடப் பரவாயில்லை மச்சான், பாம்புக்கடிக்கு வைத்தியம் பார்க்கிறதை அசிங்கமா பேசுனாளுங்க. ஆம்பளைய உரசிப் பார்க்கவும் முத்துங் கொஞ்சவும் தான் , வைத்தியம் பார்க்கிற மாதிரி நடிக்கிறேனாம். " எனச் சொல்லும் போதே அவள் தன் சத்தம் பெரிய அழுகையாக மாறி அப்பாவை எழுப்பி விடக் கூடாது என அவன் நெஞ்சில் அந்த அழுகையைப் புதைத்தாள்.
" சிவநேசன் எதுவுமே சொல்லலையா. " என்ற வேலுவின் கேள்விக்கு, " ஐயா ஒவ்வொருத்தர்ட்டையா கத்தி கத்தி உரக்கச் சொன்னாக, ஆனால் பத்து பொம்பளைங்க சத்தில ஒரு ஆம்பளை குரல் எடுபடலை. மகனுக்குச் சப்போர்டா பெரியம்மா ,அதெல்லாம் எதுவுமில்லைனு வாதாடுனாக.
ஆனால் பெரியய்யா, இந்த விசயத்தையே யாரும் பேசக் கூடாதுன்னு பூட்டுப் போட பார்த்தாகளே ஒழிய, நியாயத்தைப் பேசனுமுன்னு நினைக்கலை. எங்கப்பா அவுக கால்ல விழுந்து கதறுனாரு. ஆனா அவுகளும் காசைக் கொடுத்து, நீ கொஞ்ச நாளைக்கு ஊருக்குள்ள இருக்காத. உன் புள்ளைகளைக் கூட்டிட்டு வெளியூர் போன்னு தான் சொன்னார்.
அதிலையே எங்கப்பா மனசை விட்டுட்டாரு. மானாமருதையில இருக்க, எங்க அப்பா சினேகிதர் வீட்டுக்குப் போனோம். கங்கா சொந்தக்கார பொம்பளைங்க புழக்கடையில் வந்து நின்னு என் காத்து படவே அசிங்கமா பேசுச்சுங்க. அது காதுலையே எதிரொலிக்கவும் தான், ரயில்ல விழப் போனேன்.
நீ என்னை இழுத்துப் பிடிச்சப்ப, அதில தாய் பறவை குஞ்சை அடக்காக்குற உணர்வு வந்துச்சு. நீ வேற, பல உசிரக் காப்பாத்திறவளுக்கு , தான் உயிரை போக்கிக்குற உரிமை இல்லைனு சொன்னியா. உன் பக்கத்தில நிற்கையில் பக்கத்தில வர்றவுக்கக் கூட ஒதுங்கியே போனாக. உன்னைய பார்க்கவும் அவுகளுக்கு அச்சமா தெரிஞ்சது, எனக்கு ஆதரவா தோனுச்சு. என்னை அசிங்கமா பேசினவுக முன்னாடி வாழ்ந்து காட்டணுமுன்னு தான், உன்னைக் கட்டிகிரியான்னு கேட்டேன் " என மீதியெல்லாம் அவனுக்குத் தெரியும் என்பது போல் தன் கதையைச் சொல்லி முடித்தாள்.
“இந்த ஊருக்கு லோடு ஏத்த,இருக்க வரும் போதே உன்னைப் பாத்துருக்கேன் புள்ளை, ஒரு தரம் என் வண்டியை மறிச்சு, உசிருக்கு போராடின ஒரு பொம்பளையை ஏத்தி விட்டு, நீயும் கூடவே வந்த, ஆஸ்பத்திரில சேர்த்து அந்தக்கா புருஷன் வந்த பிறகு, கையில காசு இருக்கோ என்னமோன்னு விசாரிச்சு, உனக்குப் பஸ்சுக்கு போக மத்ததை அவுகளுக்குக் குடுத்துட்டு வந்த. நான் பார்த்துக்கே தானே நின்னேன், அதுக்கப்புறம் தான் உன் மேல ஒரு இது வந்திருச்சு” என வேலு, ஓர் வெக்கச் சிரிப்போடு தான் அவளிடம் மையலயாணத்தைச் சொல்லவும், இவ்வளவு நேரமிருந்த சோகம் மறந்து , அவனிடம் கதைக் கேட்க ஆர்வமானாள்.
“ஆத்தி, விட்டா சினிமா கதாநாயகன் கணக்கா காதல் கதையெல்லாம் சொல்லுவ போலிருக்கு” என அவள் கேலி பேசவும். “ஏன் புள்ளை லோடு ஏத்துறவன், வண்டியோட்டறவனெல்லாம் ஹீரோவா இருக்கக் கூடாதா “ என அவன் பொய்யாய் முறைக்கவும், “யாரு சொன்னது ஹீரோவா இருக்கக் கூடாதுன்னு, நீதான் எனக்கு ஹீரோ” என அவன் குணங்களை நல்லது கேட்டது எனக் கேலி கிண்டலாகவே அடுக்கியவள், அவனை உசத்தி நிறுத்தினாள்.
“போதும், போதும் விடு, இதுக்கு மேல ஐஸ் வச்சையின்னா,இந்த வெயில் காலத்துலையும் எனக்குச் சளி பிடிச்சுக்கும், அப்புறம் அதுக்கு ஒரு கசாயத்தைக் காச்சி கிட்டு என் பின்னாலேயே அலைவ” எனக் கேலி பேசியவன்.
“சிந்தாமணி, யாரு என்ன சொன்னாலும் இனிமே அதையெல்லாம் காதுலையே வங்கிக்காத, காதில் வாங்கினியின்னாத் தான் மனசுக்கு ஏறும், அதுவே வேணாம். நீ பதினாலு வயசில ,அம்மாவாகலை ,ஒரு அம்மாவுக்கு இருக்கப் பொறுமையான குணத்தோடேயே தான் நீ பொறந்து இருக்க, உன் மக்கள்,தம்பி தங்கச்சிக்கு மட்டுமில்லை, உங்க அப்பாவுக்கும், ஏன் எனக்கும் நீதான் ஆத்தா. இந்த ஊருக்கே, வித்தியாசம் பார்க்காம உதவும் நல்லவ. காய்ச்ச மரம் கல்லடி படத்தான் செய்யும், அதுக்கெல்லாம் கவலைப் படாதே” என அவளைத் தேற்றினான். அவனையே பார்த்திருந்தவள், “ இம்புட்டு ரோசனையா எப்ப பேசிக் கத்துகிட்ட” எனக் கேட்டாள்.
“நட்ட நடு ராவுல , இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியம், வந்து படு உன்னைக் காணமுன்னு உன் மவ துழாவ ஆரம்பிச்சுடும், உள்ள போய்ப் படு புள்ளை "என அவளை உள்ளே அனுப்பிக் கதவை அடைத்து விட்டு வந்து படுத்து உறங்கினர்.
இவர்களை உரசிப் பார்க்கக் காலம் தயாராகிக் கொண்டிருந்தது. தெளிவான சிந்தனை உடையவனும் கரைப்பார் கரைத்தால் கரையத்தானே வேண்டும். சிந்தா, தடைகளைத் தாண்டி பாய்ந்து வருவாள்.
No comments:
Post a Comment