சிந்தா -ஜீவநதியவள் -6
இந்தப் பூவுலகில் சில மனிதர்களின் பிறப்பானது பூர்வ ஜென்ம பயனாக நல்ல குணங்களான தாய்மை, கருணை , மறப்போம், மன்னிப்போம் என்ற தயாளகுணத்தோடே பிறந்து வந்துவிடுவர். குன்றின் மேல் இட்ட விளக்கு தனது பிரகாசத்தைத் தந்தே தீரும் என்பது போல் இவர்களும் தங்களாலான நல்லதைச் செய்தே தீருவர். அதன் பின் விளைவுகளைப் பற்றிய அச்சப்பட மாட்டார்கள்.
சிந்தாவும் அது போன்ற ஒரு ஜீவன் தான், விதி அவளைப் பதின்மவயதில் தம்பி தங்கைகளுக்கே தாயாக்கியது எனில் அவளது பிறவிக்குணம் அதனை மெருகேற்றியது. கணவனிடம் தனது மனதைத் திறந்து அதன் ரணங்களைக் காட்டிய பின் அவனது ஆதரவு அதற்கு மை பூசியது போல் குளிர்ந்து தான் போனது. அதில் ஒரு நிம்மதியும் இருந்ததை உணர்ந்தாள். அன்று இரவு புழக்கடையிலிருந்து வீட்டுக்குள் சென்று, சிணுங்கிய மகளைப் பசியமர்த்தி , மகனை நேராக இழுத்துப் போட்டு, ஒழுங்குபடுத்திப் படுத்த போதும், நித்திரை வசமாகவில்லை.
பௌர்ணமி ஒளி சாளரம் வழியே அவர்களுக்குத் தேவையான வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அவள் ஒருக்களித்துப் படுத்து அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கவும், " என்னா புள்ளை, புதுசா பார்க்கிற மாதிரி பார்க்குற . பார்வையெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு " என்றவனின் முகமும் கனிந்திருந்தது.
" ஒண்ணும் இல்லை மச்சான், இத்தனை நாள் ஏன் இதையெல்லாம் சொல்லி மனசை ஆத்திக்காம போனம்னு நினைச்சேன்" என்றாள்.
" இன்னுமே இருக்குது புள்ளை, நடந்த விசயத்துல சிவநேசன் மேல என்ன தப்பு இருக்குது, நீ அவரைப் பார்த்து ஏன் ஒதுங்கிப் போற. துஷ்டனைப் பார்த்துத் தான் புள்ளை ஒதுங்கிப்போகனும். நல்லவனைப் பார்த்து இல்லை. ஆனால் நீ நல்லவன் குடும்பத்தை ஒதுக்கி வச்சு, துஷ்டன் குடும்பத்துக்கு உதவி பண்ற " என வேலு எடுத்துச் சொல்லவும்,
"அது எப்பிடி மச்சான், நான் எல்லாரோடவும் ஒரே மாதிரி தான் பழகுறேன், யார் மேலையும் எனக்குக் கோபமெல்லாம் கிடையாது." என அவள் வாதாடவும்.
" ஊர்ல இருக்க எல்லாரோடையும் பழகுறிக சரி, பெரிய வீட்டுக்காரவுகளைத் திரும்பியாவது பார்த்திகளா. ஒதுங்கித் தான் இருக்கீக." எனவும்.
"ம், நீ சொல்றதும் நிசந்தான் மச்சான், கங்காவும் அவுக சொந்தக்காரவுகளும் என்னை அவமானப்படுத்தவும், அவுக்க வீட்டு பக்கத்துல இருக்குதுன்னே, சொந்த வீட்டை விட்டு வந்தோம். அப்பவும் பெரியய்யா விசயத்தைப் பெரிசாக்ககூடாதுன்னு நினைச்சாக. பெரியம்மாளும் சின்னையாவும் என் மானத்தைக் காப்பாற்றத் தான் நினைச்சாக, ஆனாலும் அவுகளை அவுகளை முறிச்சுக்கிட்டோம். ஆனால் சோமு பயலோட அக்கா, அம்மாக்கூடப் போக்கு வரத்தா பேச, பிடிக்கத் தானே இருக்கோம். " என யோசித்தாள்.
" அது தான் புள்ளை, அந்தப் பய என்ன செஞ்சான்னு நீயோ, அவரோ வெளியே சொல்லியிருக்க மாட்டீகல்ல. அந்த ஐயாவோட சேர்த்து தான உன்னைப் பேசினாக. ஊர் என்ன சொல்லுமுன்னே நீயும் பேசறதில்லை. ஆனால் இதுவே மனசைக் குத்தி பாரமா தான் இருக்கும். இன்னைக்கு நான் வரும் போது , சிவநேசனை கைப்புள்ளையோட நின்றவரை தெருவில் இல்லை நிறுத்தியிருந்த. இது எனக்குத் தெரிஞ்ச சிந்தா இல்லையே. அவுக நம்ம வீட்டுக்குள்ள வரமாட்டாகச் சரி, ஆனால் வீட்டு வாசலுக்காவது கூப்புடுலாமுல்ல. இதுவே வேற யாரா இருந்தாலும் கட்டாயம் உள்ள கூப்பிட்டு இருப்பியா இல்லையா " என வேலு கேட்கவும்
" ஆமாம் மச்சான், ஒரு பொம்பளைக்கு நாலு பேரு என்ன பேசுவாகங்கிறது தான் பெரிசா தெரியுது ,இத்தனை நாள் இது விளங்கலை பாரேன் ,அப்ப அப்ப நீயும் அறிவாளித்தனமா தான் பேசுற " எனத் தன் செயலை உணர்ந்து கணவனைச் சிலாகித்தவளை அவன் முறைத்தான்.
" ஏய் புள்ளை, நாங்க பொறப்புலருந்தே அறிவாளி தான். கைலி கட்டி அலைஞ்சா அறிவு இல்லைனு அர்த்தமா ?" என எகிறினான்.
" ஆத்தி , அம்புட்டு அறிவு இருக்கவரு பத்தாவதே ஏன் தாண்டலையாம் " என அவளும் வம்பு பேசவும்.
" அடியே , என் சின்னாத்தா என்னைப் பள்ளியோடத்துக்கே போகவிடலைடி. அப்புறமில்லை, படிக்கப் பாசாக." என அவன் சால்ஜாப்பு சொல்லவும். அவளது முகம் கேலியாக மின்னியதைக் கண்டவன், " அடியே, இப்ப என்னாடி கொனையா போச்சு, நான் சம்பாதிக்கலையா, சம்சாரியாகலையா, உனக்கு என்னைக் குனை வச்சேன், என்னாடி செய்யனும் " என அடுக்கிக் கொண்டே போனான், புள்ளை, அடியே ஆனதிலலேயே அவனைக் கண்டு கொண்டு கண்கள் மின்னச் சிரித்தாள், அதில் கரைந்த வேலு "ஆத்தி மோகினியாயிட்டேளே என் பொன் சாதி, இனி எப்படித் தப்பிக்கப் போறேன் " எனக் கேலி செய்ய நிஜமாகவே மோகினியாய் அழகில் மட்டுமின்றி அன்பான மோகினியாய் மாறி அவனை ஆட்கொண்டாள் அவனின் சிந்தாமணி.
அன்றைய கணவன் மனைவி மனம் திறந்த பேச்சுக்குப் பிறகு சிவநேசனோடு பழகுவதற்கும் அவளுக்குத் தயக்கம் இல்லை . கங்கா வந்த அன்று இரவில் மகாலிங்கம் தங்கையும் சம்பந்தியுமான வேதாவுக்குப் போன் செய்து அடுத்த நாள் தன் மகன் வந்து மருமகளை அழைத்துக் கொள்வான் எனச் சொல்லவும், ஒரு வைத்தியரிடம் காண்பிக்க உள்ளதாகவும், பத்து நாள் தவணைக் கேட்டார். மகாலிங்கம் உறுதியாக நிற்கவும், இல்லண்ணன், கட்டாயம் அனுப்பி வச்சிடுறேன், என வாக்குத் தந்தவர், சிவநேசன் மகளைத் தூக்கி வந்ததற்கும் குறைபட்டார்.
கங்கா வந்ததற்குப் பிறந்த வீட்டிலிருந்து, "நம்ம ஊரு கனமாக் கத்திரிக்காய் அத்தைக்கு ரொம்பப் பிடிக்கும். மிளகாயும்,மல்லியும் மருதையை விட இங்க சல்லிசா இருக்கே. இது மாதிரி நாட்டு மல்லி அந்த ஊரில் இல்லை" என ஏதேதோ பேசி கார் தானே சொமக்குது மூட்டைகளைக் கட்டினாள்.
" மிளகாய், மல்லி, எண்ணெய் இதெல்லாம் சம்பந்த புறத்துக்குச் சும்மா கொடுக்கக் கூடாதடி. காசு குடுத்திட்டு வாங்கிட்டுப் போ" என ராஜேஸ்வரி சொல்லவும் " எனக்கு அது தெரியாதா என்ன, அது தான் சாஸ்திரத்துக்கு இந்தக் காசை வச்சுக்க" எனக் கணவனின் பரசிலிருந்த கத்தை நோட்டுகளை ஆராய்ந்து ஒத்தை ரூபாயை எடுத்து அம்மாவின் கையில் திணித்துச் சென்றாள். ராஜேஸ்வரி அவளை முறைக்கவும், " எனக்குக் கொடுக்காம யாருக்குக் கொடுக்கப் போற, பத்தாத குறைக்கு உன் மகனும், மருமகளும் அங்கதானே இருக்காக" என்றுவிட்டுச் செல்லவும், சமையல்காரம்மா அவரைப் பார்த்துச் சிரித்தார். அவள் சென்ற பிறகு ஒருவாரத்துக்கு இது தான் பேசு பொருளாக இருக்கும். அவள் வந்து சென்ற பிறகு ராஜேஸ்வரி, வீட்டில் இதைக் காணோம் அதைக் காணோம் என நூதனமான அல்லது புதிதாக வாங்கி வைத்திருந்த பொருட்களைக் காணோம் எனப் போனில் மகளிடம் விசாரிப்பார். அத்தனையும் ஔரங்கசீப் படைத் தளபதி மாலிக்காபூர் போல் கங்கா தான் பிறந்த வீட்டிலிருந்து கொள்ளையடித்துச் சென்று இருப்பாள்.
சிவநேசன் மகளை அம்மாவிடம் பழக வைப்பதற்காக மேலும் இரண்டு மூன்று தினங்கள் தங்கவும், சிந்துஜா அப்பத்தாவைப் பழகியதோ இல்லையோ சிந்தா வீட்டைப் பழகிக் கொண்டது. குமரன் வண்டியை எடுத்தாலே போக வேண்டும் என அடம்பிடித்தது.
தென்வயலிலும் சீமைக்கருவையை வெட்டும் வேலையை ஆரம்பித்து இருந்தனர். ஊருக்குள், அதற்குள் தென்வயலை சுத்தம் செய்யறாக, அய்யாவுக மகன் புதுசா ஏதோ செய்யப் போராகலாம் என்ற பேச்சுப் பரவியிருந்தது.
ஒரு நாள் மதிய வேலையில் , ஜேசிபி வரும் என வந்து காத்திருந்தான் சிவநேசன். அய்யனார் வயலில் திரிய, "வண்டி வந்தா, நான் கூப்புடுறேன்ங்கய்யா. வெயில்ல காயாதீக.நீங்க நம்மூட்டு வேப்பமர நிழல்ல போய் உட்காருங்க. உங்களுக்காகப் புதுச் சேரெல்லாம் வாங்கிப் போட்டுருக்காக. மருமகனும் சாப்பாட்டுக்கு வந்திருக்குதுங்கய்யா, சங்கடப்படாம செத்த நேரம் உட்காருங்க. நான் வண்டி வந்தோடன வந்து கூப்புடுறேன் " என அய்யனார் சிவனேசனை அனுப்பி வைத்தார்.
வேலுவும் இருக்கிறான் எனத் தெரிந்த பின்னே தயக்கமின்றிச் சிவநேசன் சிந்தா வீட்டுக்கு வந்தான். வேலு சாப்பிட்டு முடித்து மரத்தடியில் அமர்ந்து மகளைக் கொஞ்சிக் கொண்டிருந்தான். நேசனைப் பார்க்கவும், " வாங்கச் சார். உங்க மக எங்க. தூங்குறாகளா " என விசாரிக்க , " இல்லைனா தனியா வரவிடாதே. " என ப்ளாஸ்டிக் சேரில் வந்து உட்கார்ந்தான். சத்யா தூக்கத்துக்குச் சிணுங்கவும் வேலு குரல் கொடுக்க, சிந்தா இரண்டு பெரிய சில்வர் டம்ளர்களில் நீர் மோரில் உப்பு, கருவப்பில்லை, துளி பெருங்காயம் கலந்து கொண்டு வந்து , " நீர் மோர், எங்க வீட்டில எல்லாம் குடிப்பீகளா," என அவள் சந்தேகமாகச் சிவநேசனைக் கேட்கவும், முதலில் மறுக்கப் போனவன், வாங்கிக் கொண்டான். வேலுவிடமும் ஒரு டம்ளரைத் தந்துவிட்டு, மகளைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.
" நான் சாப்பாட்டுல தயிர் மோர் ஊத்திக்க மாட்டேன். வெயில்லையே திரியறேன்னு சாப்பிட்டவுடனே என் தொண்டையில கவுத்திடுவா. நீங்க இருக்கீகளேன்னு இன்னைக்குக் கைல குடுத்துட்டு போயிருக்குது" என வேலு ரகசியம் சொன்னான்.
" ஏன் சின்ன வயசிலிருந்தே இதெல்லாம் பிடிக்காதா" எனச் சிவநேசன் கேட்கவும், " யார் சார் நமக்குப் பால், மோர் எல்லாம் ஊட்டி வளர்த்தா" எனத் தன் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான்.
சிந்தா வெளியே வரவும், " சார், இந்தப் புள்ளை வரட்டும் தான் உட்கார்ந்து இருந்தேன். நீங்க இருங்க. நான் ஒரு லோடு ஏத்த போகனும். நான் போயிட்டு ஓடியாந்துருறேன் ." எனக் கிளம்பினான். சிவநேசனும் , " அப்ப நானும் கிளம்புறேன். வண்டி வந்திருக்கும் " எனக் கிளம்பவும்.
" ஏ புள்ளை, உன்னை மோகினி பேய்னு சொன்னது நிசந்தான் போல, இங்க பாரு சாரும் பயந்து ஓடுறாரு" என அவன் கேலி பேசவும், சிந்தாவுக்குக் கோபம் வந்தது, ' எப்ப பேசற பேச்சை எப்ப பேசுது, அப்ப இது மனசில் சந்தேகம் இருக்கோ வேவு பார்க்குதோ ' எனப் பலவாறு சிந்தை ஓட சிந்தாமணி வெறிக்கவுமே, ' ஆத்தி தப்பான நேரம் சொல்லிட்டோம் போலிருக்கே ' என மனதில் அரண்டவன்,
" ஏ புள்ளை நான் தப்பா சொல்லலை, உன்னைப் பார்த்து அரண்டு போறாருன்னு சொல்றேன். என்னா சார், நீங்க சிந்தாமணியைப் பார்த்துப் பயந்து போய்த் தானே கிளம்புறீக" என நேசனையும் சப்போர்ட்டுக்கு அழைக்கவும்.
" நான், உங்க சத்யா மாதிரி இருக்கையிலிருந்து சிட்டுவை, ஐ மீன் சிந்தாவை பார்க்கிறேன். சின்ன வயசிலையே தம்பி, தங்கச்சிக்கு அம்மாவான சிந்தாவை நான் பிரமிச்சு தான் பார்க்கிறேன். எனக்கு மோகினியாவெல்லாம் தெரியலை. நல்லா அம்மாவா தான் தெரியுது" என உணர்ச்சி வயப்பட்டு நேசன் சொல்லவும்,
" மோகினியை விட ஆத்தா இன்னும் டேஞ்சரு, உங்களையே மிரட்டுவா " எனச் சிரித்த வேலு, " நீங்க சங்கடப்படாம இருங்க சார், நான் வாரேன்" என மனைவியிடம் நம்பிக்கையான பார்வையையே பதிலாகத் தந்து சென்றான்.
" மச்சான் ஒரு நிமிசம் நில்லு" என உள்ளே ஓடியவள் ஒரு பையோடு வந்தவள், அவனருகே சென்று, வரிசையாக மளிகை சிட்டையை வாசித்து, இதெல்லாம் வாங்கியா எனப் பேச்சுக் கொடுத்தவள், வண்டி மறைவில் சிவநேசன் பார்வையிலிருந்து மறைந்து, வேலுவின் கன்னத்தில் , கணப் பொழுதில் இதழொற்றி அவனை விட்டு விலகி ஓடினாள். வேலு ,அதிர்ச்சியும், மகிழ்ச்சியுமாக ,'வேர்த்து வடியுது, இப்பவே என்னவாம்' எனச் சிலிர்த்து, அவளைப் பார்த்து கண்ணடித்து விட்டே வண்டியை எடுத்துச் சென்றான். இது அவள் மேல் அவன் காட்டிய நம்பிக்கைக்கான அன்புப் பரிசு.
வேலுவை அனுப்பி விட்டு வந்து திண்ணையில் முழுப் புளியை ஒரு சொலகில் வைத்துக் கொண்டு, அருவாள் மனையில் அதனை ஒவ்வொன்றாக அரிந்து, அதன் கொட்டை நார்களைத் தனியாகப் பிரித்து மற்றொரு சொலகில் போடும் வேலையைச் செய்ய அமர்ந்த சிந்தாவிடம், சிநேகமாகப் புன்னகைத்த நேசன், " உன்னை இப்படிச் சந்தோஷமா பார்க்கிறதுக்கு எனக்கு ரொம்பத் திருப்தியா இருக்கு சிட்டு." என்றான்.
" ஆமாங்கைய்யா, என் மச்சான் ரொம்ப நல்ல மனுசன்" என ஒரே வரியில் தன் மகிழ்வின் ரகசியத்தைச் சொன்னாள்.
" நீ அன்னைக்கு நடந்த சம்பவத்தால அவசரப்பட்டு ஒரு முரடனைக் கல்யாணம் பண்ணிகிட்டனு நான் கவலைப்பட்டேன். " என்றான்
" ஏங்கைய்யா, நான் இரண்டு புள்ளைகளைப் பெத்துச் சந்தோஷமாத் தான் இருக்கேன். நீங்க என்னை நேரா பார்க்கலைனாலும் கேள்விப் பட்டு இருப்பீங்கல்ல " என்றாள்.
" நானும் தான் புள்ளை பெத்துட்டேன். அதுக்காகச் சந்தோசமா இருக்கம்னு , வெளி உலகத்துக்கு வேணா சொல்லிக்கலாம்" என அவன் வெற்றுக் குரலில் சொல்லவும் சிந்தா துணுக்குற்றாள்.
" என்ன படக்குனு இப்படிச் சொல்லிப்புட்டீக. நானும் உங்க வீட்டுக்காரம்மாவைச் சின்னதிலே திருவிழாவுக்கு வந்தப்பவும், உங்க கல்யாணம் முடிஞ்சு வந்தீகளே, அப்பவும் பார்த்திருக்கேனே. விளக்கி வைச்ச குத்துவிளக்காட்டமா, திருத்தமா அம்புட்டு அழகா, அமைதியா இருப்பாக" எனச் சிந்தா தன் அனுமானத்தைச் சொல்லவும்.
" அதெல்லாம் அப்படித் தான் அம்சமா இருப்பா. சின்னதிலையே, எனக்கு மட்டும் முகத்தைக் காட்டாமல் மறைஞ்சே திரியும். அதுலையே அப்பவே மீனூ மேல எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. அவளுக்கும் என் மேல ஆசையிருக்குன்னு எங்க அத்தை சொன்னதை நம்பி தான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். " என்ற நேசன், "சரி அதை விடு, அவரவருக்கு விதிச்சது தானே நடக்கும். நீ வேலுவோட நிறைவான வாழ்க்கை வாழுறதே எனக்குச் சந்தோசம்" என எழுந்து போக முயன்றான்.
" சின்னைய்யா" எனக் குரல் கொடுத்த சிந்தா, " சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீக, புருஷனோன அன்பு , எப்படியாபட்ட பொம்பளையையும் மாத்தும் பாக. என்னை அதிலிருந்து மீட்டு இன்னைக்கு வாழவச்சதே என் மச்சானோட அன்பு தான். என் மச்சான் மட்டும் இல்லைனா அடுத்த நாளே ரயில் ரோட்டுல என் பொணம் கிடந்திருக்கும் " எனவும் சிவநேசன் அதிர்ச்சியாய் அப்படியே மீண்டும் அமர்ந்து விட்டான்.
" என்ன சிட்டுச் சொல்ற, அதுக்காகத் தற்கொலை பண்ணிக்கப் போணியா?. இது நீ நம்ம நட்புக்குச் செஞ்ச அநியாயமா தெரியலை. அது மட்டும் நடந்திருந்தா, நீயே என்னை மோசமானவன்னு ருசுபடுத்தின மாதிரியில்ல ஆயிருந்திருக்கும். உன்னைப் பக்குவமான புள்ளைனு அம்புட்டுப் பெருமை பட்டுருக்கேன். நான் உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை" என்ற சிவநேசனின் மடை திறந்தது போல் கொட்டிய வார்த்தைகளும், அவன் உடல் மொழியுமே அவனது பதட்டத்தைக் காட்டியது. சிந்தா தலை குனிந்திருந்தவள், தயக்கமாகவே நிமிர்ந்து,
" அது தான் ஒண்ணும் நடக்கலைல விடுங்க" எனச் சமாதானம் சொன்னவள், அவனது வரிசையான கண்டன பேச்சுகளையும், அறிவுரைகளையும் அமைதியாகக் கேட்டுவிட்டு,
"அதுதாங்கய்யா பொம்பளை மனசு. ஒரு விசயம் மனசில பதிஞ்சிட்டா, அது அம்புட்டு சுளுவுல போயிடுமா. இந்த வீட்டுக்குள்ளையே எத்தனையோ நாள் அடைஞ்சு கிடந்திருக்கேன். நான் என்னமோ எங்க வீட்டு ஆளுகளைத் தாங்கிற மாதிரி பேசுங்க. உண்மையில இவுக எல்லாரும் இல்லையினா. நான் எதுவுமே இல்லை. இப்ப உங்களோட உட்கார்ந்து தயக்கமில்லாமல் பேசறதே, என் மச்சான் சொல்லித் தான். அது தான் நலவுகளைத் தள்ளி வச்சிருக்கேன்னு எடுத்து சொல்லுச்சு" எனச் சிந்தா வேலு பேசியதைச் சொல்லவுமே, சிவநேசனுக்கு ஆச்சரியம் தான்.
மனிதர்களை அவர்கள் உருவத்தை வைத்து எடை போடக்கூடாது என்ற தெளிவு வந்தது. ' மீனாவையுமே இன்னமும் ஆழமாகக் கவனித்திருக்க வேண்டுமோ, அவள் வீட்டினர் பார்த்துக் கொள்வார்கள் என வந்தது தவறோ' என்ற சிந்தனை சிவநேசன் மனதில் ஓட ஆரம்பித்தது. சிந்தா வேலுவை பற்றிப் பெருமை பேசியே , நேசன் தன் மனைவியைப் பற்றிச் சிந்திக்கும்படி தூண்டினாள். ஜேசிபி வந்துவிட்டதாகப் போன் வரவும் வயலுக்குச் சென்றவனும் இதைப் பற்றியே யோசித்தான். உடனே மீனாவைப் பார்க்கும் ஆவல் தோன்ற போன் அடித்தான். அவனது அத்தை தான் போனை எடுத்தார். " அவள் மாத்திரை போட்டுட்டு தூங்குறா. இராத்திரியெல்லாம் எதையோ பறிகொடுத்த மாதிரி உட்கார்ந்திருக்கா தம்பி. உங்களுக்கு எங்க மேல எந்த மனஸ்தாபம் இருந்தாலும் எங்ககிட்ட காமிங்க. அவகிட்ட காட்டாதீக. பாப்பா தொட்டிலைப் பார்த்தும் வெறிக்கிறாளே தவிர வேற எதுவும் கேக்குறா இல்லை" என அவனது அத்தை ஒரு மூச்சு மகளைப் பற்றியே பேசி அழுது தீர்த்தார். " சிவகாமி, அம்மாகிட்ட பழகிடுச்சு, நான் இரண்டு நாள்ல கிளம்பி வர்றேன்" எனப் போனை வைத்தான்.
சிவநேசன், தென்வயல் பொறுப்புகளை அய்யனாரிடம் ஒப்படைத்து விட்டு,மற்ள விசயங்களைக் குமரனைக் கேட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டு, அம்மா தந்த தைரியத்தில் மகளை அவரிடம் ஒப்படைத்துவிட்டு மனைவியைப் பார்க்க மதுரைக்குக் கிளம்பினான். அங்கே வழக்கத்தை விட மீனா அவனிடம் வித்தியாசமாக , அருகே வந்து, வந்து அமர்ந்துக் கொண்டாள். அவனும் அவளை உணர்ந்தவனாக ஆதரவாகவே நடந்து கொண்டான்.
குமரன், அண்ணன் மகளைப் பெரியம்மாவால் சமாளிக்க முடியாத நேரங்களில் சிந்தா வீட்டுக்குத் தூக்கி வந்து விடுவான். முத்துவும் செமஸ்டர் பரிச்சைக்குப் படிக்க, போக வர என இருந்ததால் பெரும்பாலான நேரங்கள் வீட்டில் தான் இருந்தாள். அதனால் இரண்டு குழந்தைகளைப் பார்ப்பது அவர்களுக்குச் சிரமமாக இல்லை. வள்ளியும் வேலை முடிந்து ஓய்வு நேரத்தில் சிந்தாவின் வீட்டுக்கு வந்து விடுவாள். குழந்தைக்காக ஏங்கும் அவளுக்கு, இரண்டு குழந்தைகளை ஒரே நேரத்தில் கவனித்துக் கொள்வது சந்தோஷமான விசயமாக இருந்தது. குமரன் அவர்களிடம் இயல்பாகப் பழகினான்.
இந்தப் பத்து நாளில் சீமை கருவை அவர்களது வாழ்வை எவ்வளவு பாதிக்கிறது என்பதைப் பற்றி எடுத்துச் சொல்லி, அவர்களே அதற்கான பிரச்சாரம் செய்யுமளவு மாற்றி வைத்திருந்தான்.
முற்பகல் நேரத்தில், சிந்தா தன் மகளைக் காலில் போட்டு, வெதுவெதுப்பான நீரில் ,வள்ளி தண்ணீரை மொண்டு ஊற்ற, ஊற்றச் சிந்தா கை கால்களை நன்கு உருவி ஊற்றிக் கொண்டிருந்தாள். சத்தியா தண்ணீர் ஊற்றும் சுகத்தில் கிறங்கிப் போய், சுகமாகக் குளித்துக் கொண்டிருந்தது. அந்த நேரம் குமரன் அண்ணன் மகளைத் தூக்கி வந்தான். முத்து அவனைப் பார்த்து முறுவலித்து விட்டு, சிந்துவை கை நீட்டி அழைத்தாள். அது சித்தப்பாவிடம் ஒட்டிக் கொண்டு, வர மறுத்தது.
" சரி போ, நீ ஒண்ணும் வரவேண்டாம். சித்தப்பாவும் மகளுமே கொஞ்சிக்குங்க" என்றாள்.
" அதில உனக்கென்ன பொறாமை" என அவன் ரகசியமாகக் கேட்கவும், முத்துவுக்கு மூச்சடைத்தது. வேகமாக அக்காவைத் திரும்பிப் பார்த்துவிட்டு, இரண்டு அடி பின்னால் சென்றாள். அவன் ஓர் சிரிப்போடு, " இந்தா புடி" என அவள் கைகளில் அண்ணன் மகளை வைக்க, அவன் அருகாமையிலும், கை உரசலிலும் பயந்து தான் போனாள்.
சிந்து வர மறுத்து அடம் செய்ததைக் கூட வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டு வீட்டைச் சுற்றி, ஆடு மாடுகளைக் காட்டவும், சிந்துஜா அமைதியானது, தூக்கி வைத்திருந்தவள் தான் பதட்டமானாள். குமரன் ,அவள் நகரவும், புழக்கடையில் சிந்தா குரல் கேட்க, முன்புறமாகவே குரல் கொடுத்துக் கொண்டே வரவும்.
" குமரன் சார், இங்க ஒரு குமரி குளிச்சிட்டு இருக்காக. நீங்க அங்கையே இருங்க" எனக் கேலியோடு குரல் கொடுத்தாள் வள்ளி.
" ஓ சாரி, சாரி" என அவன் முன்புறம் சென்றவனை, " ஐயா, அவ வேணும்னு சொல்றா. சத்யாவுக்குத் தான் குளிக்க ஊத்துறேன். நீங்க சும்மா வாங்க" என்றாள் சிந்தா.
" சிந்தா சிஸ், குளிக்க ஊத்தறதிலையும் மேஜிக் பண்றீங்க. இப்ப தான் எங்க சிவகாமிய குளிக்க வச்சாங்க. எம்புட்டு அழுக அழுதுச்சு. இங்க சத்யா சிரிச்சுகிட்டு இருக்குதே" என வியந்தான்.
"சரியா சொன்னீங்க ஸார் நிசமாவே , சிந்தா மாயக்காரி தான். இவ கைப்பட்டா சுளுக்கு, கை வலி, கால் வலி எல்லாம் பறந்து போகும். ஆயில் மசாஜ், தலைக்கு மட்டும் தேச்சுவிட்டாலே அம்புட்டு சுகமா இருக்கும். வேலு அண்ணன் குடுத்து வச்சவரு. சனிக்கிழமையான புல் ஆயில் மசாஜ் தான். கறி என்ன, சூப் என்ன,ஒரே குசாலா தான் இருப்பாக" என வள்ளி கேலி செய்யவும். சிந்தா , தண்ணீர் அள்ளி வள்ளி மீது ஊற்றி ," சும்மா இருடி. அவுககிட்ட போய் எதைப் பேசறதுன்னு விவஸ்தை வேணாம்" எனத் திட்டினாள்.
" எல்லாரும் வேலு ப்ரோ மாதிரி குடுத்துவச்சவங்களா என்ன. சிந்தா சிஸ் , சகலகலாவல்லி , அப்படியே வள்ளி சிஸ், உங்க தங்கச்சி இவங்களுக்கும் இந்த வித்தையைச் சொல்லிக் குடுங்க, இன்னும் இரெண்டு ஆள் சந்தோசமா இருக்கட்டும்" என முத்துவுக்கும் கேட்கும்படி சத்தமாகச் சொல்லவும், சிந்துஜாவை கொஞ்சிக் கொண்டிருந்த முத்து, "நினைப்புதான், பொழப்பைக் கெடுக்கும், போதும் ஒர்ருக்கு ஒரு சிந்தா போதும்" என வெடுக்கெனச் சொன்னாள். குமரன் யோசனையாகப் பார்க்கவும்,
" ஏன் ஐயா, நீங்க வேற, முத்துச் சொல்றதும் சரி தான், வைத்தியத்தைக் கத்துக்கிட்டா, சும்மா உட்கார மனசாட்சி இடம் கொடுக்காது, நேரம் காலம் இல்லாமல் ஓடத் தோணும், எதோ என் மச்சான் பொறுத்துப் போகுது " என்ற சிந்தாகுளித்து முடித்த சத்யாவை தூக்கித் தர, " வாடி என் செல்லக்குட்டி. அத்தை உனக்கு இன்னைக்குச் சிங்காரிக்கிறேன்." எனக் கொஞ்சியபடி வள்ளி ஒரு துண்டில் சுற்றி வாங்கிக் கொண்டு முன்புறமே வந்து . திண்ணையிலிமர்ந்தே சத்யாவுக்கு மேக்கப் நடந்தது. பொட்டாக சிறட்டையிருந்து தொட்டு கறுப்பு பொட்டை,நெற்றியிலும், கன்னத்திலும் வைத்து விட்டாள் ,அது மினுமினுத்துக் கொண்டிருந்தது.
நாட்டுக் கருவக்காய்களைக் கொஞ்சம் நீர் ஊற்றி இடித்து வடித்துத் தேங்காய் உடைத்த கொட்டாங்குச்சிகளில் ஊறவைப்பர். ஊறிய நீரை வெய்யிலில் காயவைப்பர். அதன் சாறு கெட்டியானதும் எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ளும் பொட்டுக்குப் பயன்படுத்துவர். நன்றாக உலர்ந்து கெட்டியான இதன் பாலில் சொட்டு நீர் ஊற்றிக் குழைந்தும் பொட்டாகப் பயன்படுத்துவர்.அதனைப் பார்த்து குமரன் விவரம் கேட்டவன்,
" இந்த நாட்டுகருவேல மரம் நம்ம ஊரில் இருக்கா" எனக் கேட்டான்.
" இது, அங்கனை ஒண்ணு, இங்கனை ஒண்ணு இருக்கும். ஆனால் சீமைக்கருவை தான் ஊர் பூரா பரவி கெடக்கு. " எனச் சிந்தா சொல்லவும்.
" உங்கள் அப்பாகிட்டச் சொல்லி, நாட்டு கருவேலமரத்தோடு விதையைச் சேகரிக்கச் சொல்லனும்" என்றான்.
" நாட்டுக் கருவேல மரத்துக்கும், சீமைகருவைக்கும் என்ன வித்தியாசம்" எனச் சிந்துவைத் தூக்கி ஒரு ரவுண்டு சுற்றி அலைந்து விட்டு. அங்கு வந்த முத்து, அவனிடம் சமாதானமாகப் பேசுவதற்காகக் கேட்டாள்.
" நாட்டுக் கருவேலமரம் , நம்மை நாட்டு மரம். இதில் நிறைய மருத்துவக் குணம் இருக்கு. பெரிய உயரமான மரமா அடி கனமான மரமா வளரும், அது பட்டை, பூவு, காய், பிசினுன்று எல்லாப் பாகமுமே யூஸ்ஃபுல்லானது. அந்த மரத்தை வச்சு, விவசாயக் கருவி கூடச் செய்வாங்க. நல்ல உறுதியானது. ஆழும், வேலும் பல்லுக்கு உறுதின்னு சொல்லுவாங்களே, அந்த வேலமரம் இது தான். ஆடுமாடுக்கு நல்ல தீனி, நிறையப் பொருட்கள் தயாரிக்கலாம்.
ஆனால் சீமைக் கருவை ஜஸ்ட் ஆப்போசிட், பத்தடி உயரம் தான் வரும் விறகு கரி எடுக்க மட்டும் தான் உபயோகம். அது இல்லாமல் சல்லி வேரா பூமில ஊடுருவி தண்ணீரை உறிஞ்சி, இந்தப் பூமியை வறண்ட நிலமா ஆக்குறதே, சீமைக் கருவைத் தான். இதை ஒழிக்கணுமுன்னு தான் நிறைய அமைப்புகள் போராடுறாங்க. " எனக் குமரன் விளக்கவும்.
"ஆத்தி, இம்புட்டு இருக்கா. நம்ம ஊர் பூரா சீமைக் கருவை தான் மண்டிக்கிடக்கு" என்றாள் முத்து.
சத்யா குளித்த அசதியில் கண்ணைத் தேய்க்க, சிந்தா உள்ளே தூக்கிச் சென்றாள்.
" ஸாரே, இந்தப் புள்ளையை இப்படியே தனியா வளர்கிறதா உத்தேசமா. இவுக அம்மா வராதா" என வள்ளிக் கேட்கவும்.
" இல்லை, இல்லை . இன்னும் ஒருவாரத்தில் அண்ணன் அத்தாச்சியைக் கூட்டிட்டு வந்துடுவார். அண்ணன் ஒருவாரம் இங்க வந்துட்டு போனதில அண்ணிக்கிட்ட நிறையச் சேஞ்சாம்." எனக் குமரன் சொல்லிக் கொண்டே, சிந்துவை வாங்கிக் கொண்டான்.
" சரி நான் கிளம்பறேன். பாப்பா அழுதுட்டு இருந்ததேன்னு தூக்கிட்டு வந்தேன்" என்றவன், சிந்து டர்புர் சத்தத்தோடு நேப்பியை நனைக்கவும், " அய்யே, வேலை வச்சிட்டான். நான் கிளம்பறேன்" என்றான்.
சிந்தா வெளியே வந்தவள், தங்கையை மகளின் தொட்டிலை ஆட்டச் சொல்லிவிட்டு, " நல்லா தான். புள்ளையை இப்படியேவா தூக்கிட்டு போவீங்க " என அவனிடமிருந்து வாங்கி அதன் நேபியை கழட்டிப் பார்த்தவள்,
" இதுக்கு எந்தப் பாலைக் குடுக்குறாக, இப்படி வைத்தாளையா போகுது. இப்படி இன்னும் நாலு தரம் போச்சுன்னா புள்ளைக்கு நீர் சத்து இல்லாமல் போயிடும்" என்றவள், உடனடியாக அதனைச் சுத்தம் செய்தவள், " வள்ளி இதைப்புடி. மருந்து எடுத்துட்டு வாரேன்" என
ஜாதிக்காய், மாசக்காய், பெருங்காயம், வசம்பு ஆகியவற்றை விளக்க எண்ணெய் விளக்கில் சுட்டு எடுத்து வந்தாள். சங்கில் தாய்ப்பாலும் இருந்தது. உரை மருந்தை உரைத்து அதை வழித்துத் தாய்ப்பாலில் கலந்து, வாகாக அமர்ந்து கொண்டு, சிந்துஜாவை மடியில் வைத்து மருந்தை ஊற்றப் போனவள், " ஐயா, நான் பாட்டுக்குக் கரைச்சுட்டேன். குடுக்கலாம்ல" எனக் குமரனிடம் சந்தேகம் கேட்கவும்.
" ஓ தாராளமா குடுங்க. பெரியம்மா என்கிட்ட இதைத் தான் மானா மதுரைப் போனா வாங்கிட்டு வரச் சொன்னாங்க . நீங்களே வச்சிருக்கீங்களே. நல்லதாப் போச்சு. ' எனவும், சிந்துஜாவை மடியில் போட்டு , சங்கில் வைத்திருந்த மருந்தை அதன் நாக்கை அழுத்திக் கொண்டு ஊத்திவிட்டாள். அது ஏற்கனவே உடல் உபாதையிலிருந்து அழ ஆரம்பித்தது. சரியாக அதே நேரம் வேலுவும் வந்து சேர்ந்தான்.
குமரன் தவிப்போடு பார்த்து நின்றான். விசயத்தைக் கேட்ட வேலு. " அட பயப்படாத இருங்க ஸார். நம்ம சிந்தாமணி பாதி டாக்டர். நம்ம பரமக்குடி வைத்தியர்கிட்ட வைத்தியம் பழகினது. சரியாகிடும்" என நம்பிக்கை தந்தான். ஆனால் சிந்துஜா, அழுகையை நிறுத்துவேனா என்றது. மாற்றி, மாற்றித் தூக்கி சமாதானம் செய்தும் முடியவில்லை.
வேலு தான் சட்டென, " ஏ புள்ளை, அதை அமத்துவேன். மருந்து காராம் வாயிலையே இருக்கும். பால்குடிச்சா சரியா போகுது" எனச் சொல்லவும், சிந்தா அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
" நீ யோசனையா தான் சொல்றியா. அவுக யாரு, நம்ம யாரு. பெரியய்யாவுக்குத் தெரிஞ்சா கொன்னு போடுவாக. " எனச் சிந்தா நடுங்கினாள்.
" ஏ புள்ளை, நீயெல்லாம் இரண்டு புள்ளை பெத்தவத் தானே. உனக்கே மனசு கேக்கலை இது அழுகவுமே உன் மார் சேலை நனையுது. இதில போய்ச் சாதிப்பாக்காத" என வள்ளிச் சொல்லவும் தான் குமரனுக்குச் சிந்தாவின் தயக்கம் புரிந்தது.
"சிந்தாசிஸ், நீங்க சாதியை நினைச்சு தான், சிந்துஜாவுக்குப் பால் தர தயங்குறீங்கன்னா. அந்தப் பழியை நான் ஏத்துக்குறேன். தயவு செய்து குடுங்க." எனக் குமரன் கரம் குவிக்கவும், வள்ளி வேலு இருவரும் வலியுறுத்தவும் சிந்தா சிந்துஜாவைத் தூக்கிக் கொண்டு அழுத விழிகளோடு உள்ளே ஓடினாள்.
அம்மாவின் வாசமே அறியாத அந்த ஆறு மாதக் குழந்தை, தாயின் பாலையும் சுவைத்தறியாத அந்தப் பெரிய வீட்டுக் குழந்தைக்கு, சிந்தா அன்று பெறாமலே பெற்ற தாயானாள். அன்று முதல் நேசனின் மகள், சிந்தாவின் வளர்ப்பு மகள் ஆனாள். ஒரு நாள் ருசிக் கண்ட சிந்துஜா, சிந்தாவை விடாமல் பற்றிக் கொண்டது. சிவநேசனுக்கும் தெரியாமல் , அவன் குழந்தை, அவனே தாய்மையின் இலக்கணமாகப் போற்றிய பண்ணைக்காரப் பெண்ணோடு தாய் மகள் உறவை வளர்த்துக் கொண்டது.
பெற்ற குழந்தைக்கு, பால் புகட்ட முடியாதபடி மீனாவின் வியாதி என்ன. எவ்விதம் சிந்துஜா பாதிக்கப்பட்டது. ஒரு வாரத்தில் வரும் அதன் பெற்றோர்கள் இதனை எவ்வாறு எடுத்துக் கொள்வர். பெரிய வீட்டு அய்யாவும், அம்மாவும் எப்படி எதிர்வினை புரிவர். தற்போது தான் சீரான உறவு தொடருமா. அல்லது ஒரேடியாய் அற்றுப் போகுமா. பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment