Saturday, 5 June 2021

ஹாசினி சந்திரா- 11

 ஹாசினி சந்திரா- 11

         "நீ இங்கிருந்து மிஸஸ் சந்திர பிகாஷ் சிம்ம தேவ் ஆக மட்டும் தான் வெளியேற முடியும். இன் ஆல் மீன்ஸ்" என அவள் கண்களை ஊடுருவிச் சொன்னவன், "அது கட்டாயம் நடக்கும் நடத்திக் காட்டுவேன்" என்றான். அவனை முறைத்துக் கொண்டிருந்தவள், அவன் இதைச் சொல்லவும், வேறு பெரிய எதிர்வினை எதுவும் காட்டாது, அவன் முகத்திலிருந்து விழியைத் திருப்பி வேறு புறம் இலக்கின்றி வெறித்தாள்.

        " ஐ யம் வெரி சீரியஸ் அபௌட் இட்" என்றான். சந்திர தேவ். அவள் மௌனம், அவனுக்குப் பிடித்தம் இல்லை. மறுப்பாவது கட்டாயம் சொல்லட்டும் என நினைத்தான்.

        ஒரு பெருமூச்சு விட்டவள், "சந்திரா, நீ விசயத்தை ரொம்பக் காம்ப்லிகேட் பண்ற. ப்ளீஸ் ஐஸ்ட் லிசன். நான் பெங்களூரில் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம். அங்க இருந்து, அப்பாவைக் கூடக் கூட்டிட்டு போங்க. நானும் அம்மாவும், அங்க இருக்கனும். அது தான் எல்லாருக்கும் நல்லது. உங்க குடும்பத்துக்கு ஏத்த மாதிரி , இந்தப் பிரச்சனை எல்லாம் இல்லாத குடும்பத்துப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோ. உங்க பேமலிக்கும், எங்க பழக்கத்துக்கும் செட் ஆகாது. இந்த மீடியா ப்ளாஷ் , ப்ரஸ்ஸர் தாங்க முடியாமல் தான் பெத்தம்மாவே, அப்பாவை விட்டு விலகுனாங்க. புரிஞ்சுக்க, " எனப் பொறுமையாக அவனுக்கு எடுத்துச் சொன்னாள்.

       பவனும், ப்ரீத்தியும், அலைகடலும் பூகம்பம், இவ்வளவு அமைதியாகப் பேசிக் கொள்கின்றனவே. எப்போது பொங்கும் எனப் பார்த்திருந்தனர். அதிலும் அவனுடைய பாஸ், கல்யாணம் என அறிவித்ததும், இதைத் தானே ஆரம்பத்திலேயே எதிர்பார்த்தோம். இருந்தாலும் எதுக்குப் பாம் ப்ளாஸ்ட் என யோசித்தவர்கள், சரி அதை அடுத்து யோசிப்போம். முதலில் வேடிக்கை பார்ப்போம் எனக் கவனத்தைப் பாஸிடம் பதித்தனர்.

       ஹாசினி பேசி முடியவும், " ஆர் யூ ஃபினிஸ்ட். ஓகே பேபி போய் ரெஸ்ட் எடுத்துக்கோ. இங்கிருந்து கிளம்பும் முன்ன இங்கிருக்கிற கடல், மலை, காற்று, ஆகாயம், இன்னொன்னு என்ன, ஹாங் அக்னி, இது எல்லாத்தையும் சாட்சியா வச்சுக் கல்யாணம் பண்ணிக்குவோம். " எனச் சாதாரணமாகப் பேசிய சந்திர தேவ் அவளின் களைந்த கேசத்தைக் கோதிவிட்டு. "போய் ரெஸ்ட் எடு" என அவளது நெற்றியில் முத்தமிட முனைந்தான்.

        அதற்கு முன், தன் வலுவெல்லாம் கூட்டி அவன் நெஞ்சில் உள்ளங்கை வைத்துத் தடுத்தவளின் பொறுமை மீற ஆரம்பித்து இருந்தது.

        " எதுவுமே புரியாதவன், தெரியாதவனுக்குச் சொல்லி, புரிய வைக்கலாம். எல்லாமே தெரிஞ்சிருக்கவனுக்கு, என்னத்தைச் சொல்றது. ஸ்டே ஆன் யுவர் லிமிட்" எனத் தன் குரலின் ஸ்மிருதியைக் கூட்டி அவனை நிறுத்தினாள்.

   அவன் அப்போதும், மிகுந்த அமைதியாக, "மதுமா, கத்தாத, டென்ஷனாகாத. நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன். நான் சரி பண்ணிடுவேன். என்னை நம்பு" என்றான்.

      " எதைச் சரி பண்ணுவ, என்னத்தைச் சரி பண்ணுவ. இப்ப என்னைய கிட்னாப் பண்ணிட்டு வந்ததுக்கே , அங்கே கட்சியில் பெரிய பிரச்சினை ஆகியிருக்கும். சிவராஜ் சும்மா இருக்கா மாட்டார். தன் பவரை யூஸ் பண்ணி என்னைத் தேடுவார். நீ என்னைக் கடத்தினதை யாராவது பார்த்திருந்தா உனக்குத் தான் பெரிய பிரச்சனை. இத்தனை வருஷம் உங்க அப்பா வளர்த்த தொழில் , குடும்பப் பெயர் எல்லாமே ஸ்பாயில் ஆகும். நான் சொல்றதைக் கேளு, என்னைக் கொண்டு போய் மேங்களூர் கடற்கரையிலேயே இறக்கி விட்டுடு. நான் எதையாவது சொல்லிக்கிறேன். ஐ ஸ்வேர், என் உயிர் போனாலும் உன்னைப் பற்றிச் சொல்லமாட்டேன். " என அவனிடம் ,அவனைப் பற்றியே பேசி ,அவனுக்கு நன்மை செய்வதாகப் பேரத்தில் இறங்கினாள் ஹாசினி.

      அப்போதும் சமைந்த சிற்பமாகச் சிறு நகையோடு அவளைப் பார்த்திருந்த சந்திரதேவ், " உனக்கு மச்சான் மேல எவ்வளவு லவ் இருக்கு பாரு, அப்புறம் ஏன் கல்யாணம் வேண்டாங்கிற" என அவளது வார்த்தைகளை அலட்சியப்படுத்தித் தன் பேச்சிலேயே நின்றான்.

   " தேவுடா, எனக்கு இவன்ட்ட பேசுற பொறுமையைக் கொடு. " எனச் சத்தமாகவே புலம்பியவள், " நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன சம்மந்தமே இல்லாம பேசுற. இந்த அரக்கன் வேலை எல்லாம் பார்த்தாலே உனக்கு மண்டையில தான் அடிபட்டிருக்குன்னு நல்லாத் தெரியுது. மச்சானாம், மாமனாம். நீ முழு அரக்கன். அதுல மாற்றமே இல்லை" என ஹாசினி பல்லைக் கடித்துத் தன் கோபத்தை அடக்கி சந்திர தேவை திட்டிக் கொண்டிருந்தாள்.

       பவன் தான் சிரிப்பை அடக்கப் படாத பாடு பட்டான், வழக்கம் போல் ப்ரீத்தி அவனை முறைத்தாள். ஆனால் கருங்கல் சிற்பம் குலுங்கிச் சிரித்தது, ஆம் சந்திரதேவ் ஹா, ஹா வெனச் சிரித்தவன், ஹாசினியின் முறைப்புக்கும் அடங்கினான் இல்லை. இந்த விசயத்தில் ப்ரீத்தி, ஹாசினியை விட சக்தி வாய்ந்தவள்.

      ஹாசினிக்குத் தேவ் சிரிப்புக் கோபத்தைத் தூண்டியது. சுற்றும் முற்றும் தேடியவள் , நல்ல கனமான குச்சியைத் தேடி எடுத்து, அவனை அடிக்க வந்தாள்.

       " ஹேய், ஹாசினி என்ன பண்ற, மச்சானை அடிக்கக் கூடாது" என அரக்கன் தேவ், சந்துவாக மாறி காட்டேஜை சுற்றி ஓடினான். ஹாசினி காலை இலேசாகத் தாங்கியபடியே அவனைத் துரத்தினாள்.

   " ப்ரேனே , நேத்திக்கும், இன்னைக்கும் இடையில என்ன நடந்தது. பாயி நைட் மேடம் ரூம்ல தங்கினவர், காலையில் அங்க இல்லாம வேற எங்கயோ இருந்து வந்தார். ஆனால் ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரி பழைய சந்திரதேவ் ஆக இருக்கார். நிஜமாவே இந்த மேம் அவரை ஆட்டி தான் படைக்கிறாங்க" என உருக்கமாகப் பேசி பார்த்திருந்தாள் ப்ரீத்தி.

     " போடி உன் பாயி எப்ப எப்படி மாறுவார்னே தெரியலை. நிமிஷத்துக்கு ஒரு பேச்சு" எனச் சலித்துக் கொண்டவன்.ஃ பிஸ் ப்ரையை ருசி பார்த்தான். " ஸ்ஸ் ஆஆ சூப்பர் " என மீனிலும் முள்ளிலும் அதன் ருசியிலும் கவனமானான்.

       ஹாசினிக்கு போக்குக் காட்டிய சந்திரதேவ், சற்று அவளோடு விளையாடி விட்டு,ஒரு மரத்தின் மறைவில் அவளுக்குச் சிறைப் படுவது போல், தான் அவளைச் சிறை செய்தான். ஆனால் அப்போதும் அவனை விடாமல் அவனை நன்றாக ஆத்திரம் தீர அடி வெளுத்தாள் ஹாசினி , அத்தனையும் அதே புன்னகையோடு பெற்றுக் கொண்டவன், " அடிச்சிட்டேளே, ஹாசினி கோபமெல்லாம் போச்சு, இனிமே சமாதானம் தான், ஓகே " என, சிறு வயது ஹாசினியை சமாதானம் செய்வது போலச் சொன்னான் .

      அவனோடு ஓடியதிலும் அடித்ததிலுமாக மூச்சு வாங்க ஏறி இறங்கிய அவளது நெஞ்சம் தன் பெயரைத் தான் சொல்கிறது என்பதை உறுதி செய்து கொள்ள அவளது கண்ணில் ஊடுருவிக் கனிந்த பார்வையாக அவளையே பார்த்திருக்க, அவனின் கைகள் அவள் இடையைச் சிறை செய்திருந்தன. அவனோடு உரசிக் கொண்டிருந்த நிலை, அவனை மீதான கோபத்தைத் தனித்திருந்து. அவளது ஏறி இறங்கிய நெஞ்சமும் அவன் மீது வைத்த நேசத்தை அவளுக்கே சத்தமாக உரைக்க, அவனை ஆலிங்கனம் செய்ய, அவன் தோளைப் பற்றத் துடித்த தன் கரங்களைக் கட்டுப் படுத்தினாள். அதைக் கண்டு கொண்டவன், அவள் இடை சுற்றிய தன் கையைப் பிரித்து அவள் கைகளைத் தனக்கு மாலையாக மாற்றிக் கொண்டான். இன்னும் அவளோடு நெருங்கி, இடது கையால் அவளை அணைத்து, மறு கையால் அவள் கன்னக்குழி விழும் இடத்தில் விரல் பதித்தவன்.

        " இங்க ஒரு குழி விழுமே. அது உன் முகத்திலிருந்து மறையவே கூடாதுடி ஹசி , உன்னைப் பஸ்ட் டைம் சந்திரா மாமாவோட பார்த்த நாள்லருந்து இதை ரசிக்கிறேன். நீ யார் கூடச் சிரிச்சாலும் சரி தான், ஆனால் அது மறையக் கூடாதுடி மை ப்யூட்டி" என அவள் முகத்தில் விரல் கோலம் போட்டு, அவளிடத்தும் தனக்கான உணர்வுகளைத் தூண்டி, விழியோடு விழியோட்டி காதல் வசனம் பேசி நின்றான் சந்திரதேவ். அவனின் ஆளுமையை விட அன்பு அவளை அசைத்தது, அவன் எதிர் பார்த்த பாவத்தைத் தன் விழிகளில் காட்டியவள், நெகிழ்ந்து இருந்தாள். சற்று முன் அவள் நெற்றியில் முத்தமிட முனைந்த போது அவள் தடுத்ததை இப்போது செய்து முடித்தான்.

       முதன் முறையாக அவளின் விழிப்பு நிலையில் அவளின் முன் வகிட்டில், அவன் பெயர் கொண்ட குங்குமமாக அவன் செங்குருதியையே தாங்கப் போகும் அந்தப் பிறை நுதலில் தனது, அன்பு, ஆசை, நேசம் எல்லாம் கூட்டி அந்த ஒரு இதழொற்றலிலேயே தன்னை அவளுக்கு உணர்த்திவிடும் உத்வேகத்தோடு, உள்ளார்ந்து தன் இதழை அவள் நெற்றியில் பதித்து அணைத்து நின்றான்.

       ஹாசினியும், இத்தனை நேரமிருந்த மனப் போராட்டம் சற்றே மட்டுப்பட்டு அவன் விழிகள் தந்த காதல் போதையில் மயங்கி கட்டுண்டவளாக அவனிடம் இயைந்து நின்றாள். அதையே தனக்குச் சம்மதமாகப் பெற்றவன், அணைப்பும் அரவணைப்பும், அவளை எக்காரணம் கொண்டும் விடக் கூடாது என்ற உறுதியும் ஆழமானது.

       அவன் தோள் சேர்ந்திருந்த அவள் பூமாலை கை விரல்கள் கோர்த்தபடி, அவளின் கண்கள் இமை மூடி அவனைத் தன்னுள் உணர்ந்துக் கொண்டிருந்தாள். பட்சிகளின் ஒலியும், மரத்திலிருந்து உதிர்ந்த இலைகளும் கீதமாகவும், அட்சதையாகவுமே தோன்றியது.

     ஆயினும் பெண்ணுக்கே உரியப் பாதுகாப்பு உணர்வு, உயிர் பெற்று, அவன் தோள் சேர்ந்த கரங்களை விடுத்து, முகத்தில் வாட்டத்தைக் கொண்டு வந்து கண்மணிகளில் நீர் துளிர்த்தது. ஆனால் அதையும் அரக்கன் அனுமதிக்கவில்லை.

     " ம்" என்ற சொல்லோடு, இதழை இமைகளுக்கு இடம் மாற்றினான். மாற்றி மாற்றி விழி நீரை ஒற்றி எடுத்தவன், தன் அணைப்பை விடுத்து முகத்தைக் கைகளில் ஏந்தி , "ஹசி, நீ எனக்கானவள் தான். எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன். ட்ரெஸ்ட் மீ" என்றான் அமர்த்தலாக.

     அவள் சிணுங்கியபடி மறுபடியும் ஏதோ ஆரம்பிக்கப் போகவும், ஒரு விரலை அவள் இதழ் மேல் வைத்தவன். " எதுவும் பேசாத. வேண்டாம். மீறிப் பேசினேனா, வேற விதமா அடக்குவேன்" எனக் கண்சிமிட்டியபடி, அவள் இதழை தன் விரலால் அளக்கவும். சற்று முன் வரை கோபத்தில் சிவந்த ஹாசினியின் கன்னங்கள் முதல் முறையாக வெட்கத்தில் சிவந்தது.

      " போடா அரக்கா" எனத் தள்ளி விட்டு அவன் பிடியிலிருந்து நழுவவும். ஓடப் போனவளின் கையைப் பிடித்து நிறுத்தியவன். " எத்தனை தடவை அரக்கன்னு சொல்றேன்னு கணக்கு வச்சிருக்கேன். அத்தனை தடவை உன் வார்த்தையை உண்மையாக்குவேன். ரெடியா இருந்துக்கோ " என்றான்.

      " நீ என்ன வேணா பண்ணிக்கோ. ஆனால் நான் எதுக்குமே சம்மதிக்க மாட்டேன். என் கூடக் குழியில விழ உன்னை அனுமதிக்க மாட்டேன்." என்றாள் தீர்க்கமாக.

     " ஹசி, குழிக்குள்ள கிடந்தவளை நான் ஏற்கனவே தூக்கிட்டேன். அன்னைக்கு மாதிரி என் கையை விடாமல் இருந்தால் போதும். . ட்ரெஸ்ட் மீ" என்றான். "ம்ப்ச் " எனச் சலித்துக் கொண்டே காட்டேஜுக்கு வந்தாள். அவனும் கூடவே நடந்து வர, ப்ரீத்தி விருந்தை தயாராக வைத்திருந்தாள். ப்ரீத்தியும், பவனும் அவர்கள் முகத்திலிருந்து விசயத்தை அறிய முயன்றனர். ஆனால் தோல்வியே மிஞ்சியது. ஆனாலும் சந்திர தேவின் முகம் பீரீத்திக்கு நிம்மதியைத் தந்தது.

         பெங்களூருவில் ஹாசினியின் படுகொலைக்குப் பிறகு மங்களூருவில் மட்டும் ஓரிரு தொகுதிகளில் தேர்தலைத் தள்ளி வைத்த தேர்தல் ஆணையம், மீதமிருந்த இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்க வேண்டிய இடங்களில் தேர்தல் பணிகளை முடிக்கி விட்டது. இரண்டு நாட்கள் கேஜே பார்ட்டியினர் ஹாசினி சந்திராவின் படுகொலையால் ,பிரச்சாரங்களைத் தள்ளி வைத்து விட்டுச் சோகமாகத் திரிந்தவர்கள், சிவராஜ் நஞ்சப்பா, பசவய்யா போன்றவர்களின் உணர்ச்சி மிகுந்த பேச்சில் ஹாசினி தியாகத்துக்குத் தங்கள் கட்சியின் வெற்றியைக் கொண்டு ஞாயம் செய்வோம் என ஒவ்வொரு மேடைகளிலும் முழங்கினர்.

        அதிபனும், ஆராதனாவும் மஸ்கட் கிளம்புவதாகச் சொன்ன போது பானுமதி முற்றாக மறுத்து விட்டார். தனது கணவனோடு குடும்பமாகச் சேர்ந்து தான் பயணிக்க வேண்டும் என உறுதியாகச் சொல்லி விட்டார். இந்த அரசியல்வாதிகளோடு பேச்சு வார்த்தை நடத்த இரத்தின தேவையும் தன்னோடு நிறுத்திக் கொண்டார். பானுமதி பெரும்பாலான நேரங்கள் எஸ்.ஆர்.சந்திராவுடன் இருக்க, மேனகா தான் முடிக்க வேண்டிய வேலைகளைச் செய்தார்.

      ஆராதனாவை அழைத்தவர், தன்னுடைய மற்றும் ஹாசினிக்கான நகைகளைக் காட்டி அவளுக்குப் பிடித்ததை எடுத்துக் கொள்ளச் சொன்னார். ஆராதனா வேண்டாம் என மறுத்தாள். ஹாசினி கல்லறை ஈரம் கூடக் காய்ந்திருக்காது. வேண்டாம் என மறுத்தவள், ஒவ்வொரு விடுமுறையிலும் பார்த்த சிறு பெண்ணைத் தன்னோடு ஒரு தங்கையைப் போல் சகோதர பாசத்தைப் பகிர்ந்தவளை பற்றி மேனகாவிடம் பகிர்ந்தாள்.

       " நீங்க, தயக்கம் இல்லாமல் நம்ம வீட்டில் வந்து தங்கலாம் ஆண்டி. ராமன் இருக்கிற இடம் சீதைக்கு அயோத்தின்னு சொல்லுவாங்களே. உங்க ராம்ஜியோட , உங்க பசங்களோட, பேரப்பிள்ளைகளோடு அங்க வந்து சந்தோஷமா இருங்க" என அழைத்தாள். மேனகா கண்ணீர் விட்டவர், "மகளைப் பறி கொடுத்தவளுக்கு, மகளா நீ இருக்கேன்கிற இதை விட என்னமா வேணும். வர்றேன். நானும் வர்றேன். ஆனால் என்னால உங்க குடும்பத்தில் எதாவது பிரச்சனை வரும்னு தெரிஞ்சா, நான் இங்க திரும்பி வந்துடுவேன். நீ அப்போ என்னைக் கட்டாயப் படுத்தக் கூடாது" என்றார்.

     " நீங்க மாமாவை விட்டுட்டு இருந்துடுவீங்களா. எதுக்கு இந்தக் கண்டிஷன் போடுறீங்க" எனக் கோவித்தாள் மருமகள்.

      " காலம் ஒரே மாதிரி இருக்காதும்மா. சரி அதை விடு , உன் மகனை, என் பேரனைப் பத்தி சொல்லு. இத்தனை நாள் உன்னை விட்டுட்டு இருந்துக்குவானா" எனப் பேச்சை மாற்றினார்.

       ஆண்கள் இல்லாத நேரமாகச் சிவராஜ் மேனகாவைச் சந்திக்க வந்தார். ஆபீஸ் ரூமுக்கு அழைத்துச் சென்றவர், " மேனகாம்மா, என்ன மூத்த தாரத்தோடு சமாதானம் ஆகி எங்களைப் பகைச்சுக்கலாம்னு முடிவெடுத்துட்டிங்களா. ஹாசினி இருந்தாலும், இல்லைனாலும் மத்த விசயம் எல்லாம் அப்படியே தான் இருக்கு " என மிரட்டினார் சிவராஜ்.

      " சிவராஜ்ஜி, என் மகளையே காவு கொடுத்துட்டேன். என்கிட்ட இருந்து வேற என்ன எதிர் பார்க்குறீங்க" என அழுதார் மேனகா.

         " உங்க மகளை வச்சு தான், தலைமுறைக்கே ப்ளான் போட்டேன். அது தான் இல்லாமல் போச்சே. இந்த ஃபைலை பிடிங்க. இதுல கட்சியோட பைலா(சட்ட திட்டம் ) இருக்கு. எஸ்.ஆர்.சி ஆப்பரேஷனுக்கு முன்னாடியே இதில் சில மாற்றங்கள் செஞ்சு. என்னை அடுத்தத் தலைவரா நியமிச்சதா எழுதி இருக்கு. இதில் அவர் கையெழுத்து மட்டும் வாங்கிக் கொடுத்துருங்க. மற்ற எந்த ஊழல் வழக்கு எதிலையும் எஸ்.ஆர்.சி பெயர் வராது. கறை படியாத கரங்களுக்குச் சொந்தக் காரரா அவரை எங்க வேணும்னாலும் கூட்டிட்டுப் போங்க" என வில்லத்தனமாகப் பேசினார்.

       " இதையே தானே ஹாசினியை அரசியல்ல கொண்டு வரும் முன்ன நான் சொன்னேன். அப்ப சரின்னு சொல்லியிருந்தா, என் மகளாவது பிழைச்சு இருப்பா. ராம்ஜி செய்யாத ஊழலுக்கு அவரைப் பொறுப்பாக்குவேன். ஜெயில்ல வைப்பேன். அவர் பேரை டேமேஜாக்குவேன்னு மிரட்டுனீங்களே. இப்ப மட்டும் உங்களை நான் எப்படி நம்பறது" எனக் கேள்வி எழுப்பினார் மேனகா.

        " வேற வழியில்லை. நீங்க என்னை நம்பி தான் ஆகனும். நேற்று தான் ஒரு விசயம் வக்கீல் சொன்னார். கட்சியை ஆரம்பிச்சவங்க முதல் உறுப்பினர்கள் இருந்தால், அவங்க தலைவர் இல்லாத நேரத்தில் மாதிரியே அதிகாரம் படைச்சவங்கலாம். இது எனக்கு ஒத்து வராதே. நான் நடுவில் வந்து சேர்ந்தவன். இந்தப் பாயிண்டை வச்சு எனக்கு முன்ன பத்து பேரு இந்தப் பைலாவுக்குத் தகுதியானவங்களா இருக்காங்க. எல்லாம் பழம் தின்னு கொட்டை போட்டவனுங்க. அதனால் இதை மட்டும் செஞ்சு குடுங்க. என் மகன் மேல சத்தியமா, நான் உங்களைச் சகல மரியாதையோட அனுப்பி விடுறேன்" என நயவஞ்சகமாய்ப் பேசினார் நஞ்சப்பா. மேனகா வேறு வழி இல்லாமல் அந்த ஃபைலை வாங்கிக் கொண்டார்.

         அவர் கிளம்பவும், மறைவிடத்திலிருந்து அதிபன் சந்திரா வரவும் சரியாக இருந்தது. மேனகா கையிலிருந்த கோப்பை வாங்கிப் பார்த்தவனுக்கு இரத்தம் கொதித்தது. " அம்மா , அந்தாள் உங்களை இவ்வளவு மிரட்டுற அளவுக்கு என்ன நடந்தது" எனக் கேட்கவும். கதவை அடைத்து விட்டு மேனகா விவரம் சொன்னார்.

         நிலக்கரி பேரம் சம்மந்தப்பட்ட கான்ட்ரேக்டில் கட்சி நிதிக்காக என ஒரு பெரும் பகுதி லஞ்சப் பணத்தைச் சிவராஜ் பேசி முடித்ததாகவும், அதற்கான சில மாநில உரிமைக்கு உட்பட்ட சட்டங்களைத் திருத்தி இரகசியமாகச் சட்ட துறையை வைத்திருந்த துணை முதல்வர் எஸ். ஆர். சந்திராவிடம் கையெழுத்து வாங்கி. அதன் மூலம் கட்சிக்கு ஒரு பகுதியைத் தந்து விட்டு, சிவராஜ் மீதியை வாயில் போட்டதைச் சொன்னார்.

       "இதில் சிலது எனக்குப் புரியலைத் தம்பி. உங்கப்பாவுக்கும் உடம்பு சரியில்லை. இது சரியா, தப்பான்னு யாரைக் கேக்குறதுன்னு எதுவுமே தெரியலை. எனக்குத் தெரிச்சது இருபத்தைஞ்சு வருஷமா உங்கப்பா கட்டிக் காப்பாற்றின பெயருக்குக் கலங்கம் வரக் கூடாது. அது மட்டும் தான். ஏன்னா ராம்ஜி அடிக்கடி சொல்லுவாங்க. எதை வேணும்னாலும் தாங்கிக்குவேன். என் மேல ஊழல்னு ஒரு குற்றம் வரக்கூடாதுன்னு சொல்லுவாங்க. இதுலை எல்லாம் எப்ப கையெழுத்து போட்டாங்கன்னு கூட எனக்குத் தெரியாது" எனத் தானும் ஹாசினியும் நஞ்சப்பாவிடம் மாட்டிய கதையைச் சொன்னார்.

      " ஏம்மா, அந்த ஆள் சொன்னா, அது உடனே உண்மை ஆகிடுமா. நாம கேஸ் நடத்தி வாதாடி அப்பா மேல குற்றம் இல்லைனு நிருபிக்கலாமே" என்றான் அதிபன்.

       " உங்கப்பா காதுக்கு எந்த விசயம் போனாலும் அது ஆபத்து தம்பி. கேஸ் போட்டா, அவரைக் கோர்ட்டுக்கு இழுக்க மாட்டாங்களா" எனக் கேள்வி எழுப்பினார் மேனகா.

      " அம்மா, எங்களை மன்னிச்சிருங்க. அப்பாவோட சொத்தை அனுபவிச்ச நாங்க, அவரோட பிரச்சனைக்குத் தோள் கொடுக்கவே இல்லை. உங்களைத் தனியா போராட விட்டுட்டோம்" என வருந்தினான் அதிபன் சந்திரா.

      " நடக்கிறது நடந்தது தானே ஆகும். மதுவை இழந்திருக்க வேணாம்" என நெஞ்சில் அடித்துக் கொண்டு அழவும் அதிபன் அவரைத் தாங்கினான். "அம்மா அழாதீங்க. ஹாசினி நம்மளை விட்டு எங்கையும் போகலை. நம்ம கூடத் தான் உயிரோட இருக்கா , அப்டின்னு மனசை தேற்றிக்குங்க" என அதிபன் ஆறுதல் சொன்னான்.

       ஆனால் மேனகாவோடு நஞ்சப்பா பேசியது, அதிபன் பேசியது என அத்தனையும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு , யாருக்கு வேண்டுமோ அவர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

       மஸ்கட்டில் மாலையில் நிருபன் தேவ் ரகசியமாகக் கதவை அடைத்து விட்டு தனது அண்ணனிடம் போனில் பேசிக் கொண்டிருந்தான்.

      " அப்ப உன் சாயம் வெளுத்துடிச்சின்னு சொல்லு. இனி நீ என்ன டெரர் வேஷம் போட்டாலும் பேபிடால் பயப்படாதே. ஏன் உன்னையவே தூக்கிப் போட்டு மிதிக்கும்" என்றான்

        " டேய் அண்ணின்னு சொல்றா. என்ன மரியாதை இல்லாமல் பேபிடால்ங்கிற. இப்ப ஆங்கிரி வுமனாக்கும்" என்றான் சந்திர தேவ்.

        " நீ வேணும்னா பயந்துக்கோ. எனக்கு அது பேபி டால் தான். நீ தாலி கட்டின பிறகு வேணா உன் திருப்திக்காக அண்ணின்னு கூப்புடுறேன். " என்றான்.

      " அப்ப நீ அவளைப் பார்க்கும் போது, உனக்கு அண்ணி ஆகியிருப்பா" என்றான் பெரிய தேவ்.

          " ஹேங், ஹேங் என்ன சொன்ன சரியா கேக்கலை. கடத்தினப்ப யார்கிட்டையோ ஒப்படைக்கனும்னு சொன்ன. யாரோடையோ, லிவ்விங் ரிலேசன்சிப்ல இருந்தாங்கன்னு சொன்ன. இதைச் சொல்லியே ஒன்றறை வருஷமா என்னைச் சாகடிச்சியே, இப்ப என்ன ஒரே நாள்ல மாறிடுச்சா " எனக் கேட்டான் நிருபன்.

        " இப்பவும், அவங்களுக்குள்ள என்ன ரிலேசன்சிப்லாம் தெரியாது. ஆனால் அவ மனசில நான் தான். சுயநினைவு இல்லாத போது கூடக் குண்டு கோஸ் என் பேரைத் தான் சொல்லுது. அதனால அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்கிறதா இல்லை" என்றான் சந்திதேவ்.

          " அண்ணா, பெரியம்மா" என இழுத்தான். " அம்மா கூட ஒரு தடவை எரிச்சலா, அவளையாவது கல்யாணம் பண்ணி வைக்கவான்னு கேட்டுச்சு. அந்தத் தைரியம் தான். அதுவும் இல்லாமல் மதுவை அம்மா நேரில் பார்த்ததே இல்லை. நேர்ல பார்த்துச்சுன்னா ப்ளாட் ஆகிடும். சந்திரா மாமாவும் அங்க தானே வர்றார். அங்க வந்துட்டா சமாளிச்சிருவேன். இங்க இந்த லங்கினியைத் தான் என்ன பண்றதுன்னு தெரியலை. " என்றான்.

" அது என்ன லங்கினி" என்றான் தம்பி ." அரக்கன் பொண்டாட்டி. அவ எனக்கு அரக்கன்னு பெயர் வச்சிருக்காடா" எனத் தம்பியிடம் குற்றப் பத்திரிக்கை வாசித்தான்.

      " நல்ல மேட்சான பேர் தான். எடுத்த காரியத்தை முடிக்காமல் விட மாட்டார்ல இந்த அரக்கன்" எனக் கேலி செய்தவன். விசயத்துக்கு வந்தான்.

         " சந்துண்ணா, ஹெலிகாப்டர் மூணு தேதியில் அவைலபிள். நீ கேட்ட டாக்குமெண்ட்ஸ் எல்லாம் பக்காவா ரெடி. நீ சொல்ற அன்னைக்கு அனுப்பிடுறேன்" என்றவன். "அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம். நீ இருக்க ஏரியா சைக்குலோன் ஃபார்ம் ஆகும் போல. பத்திரமா இருந்துக்கோ. " என்றான் சின்னவன்.

         " ரவி சப்போஸ் கம்யுனிகேஸன் மிஸ் ஆனதுன்னா. இன்னையிலிருந்து நாலாவது நாள் ஹெலிகாப்டரை அங்க அனுப்பி விட்டுடு . ப்ளாட்பார்ம் மோஸ்ட்லி ரெடி" என்றான்.

        " அண்ணா சுஹானா தீவைக் கொஞ்சம் போட்டோ கிராப்ஸ் எடுத்துட்டு வா. லேண்ட் ஸ்கேப் ரெடி பண்ணலாம். உன் கிட்ட அட்வைஸ் வாங்கிட்டு  யாரையாவது கடத்திட்டு போய், என் லவ்வையும் டெவலப் பண்ணலாம்னு நினைக்கிறேன். அதுக்கும் முன்ன ,நமக்குன்னு சொந்தமா ஒரு சாப்பர் வாங்கணும், அப்புறம் பொன்னைப் பார்க்கணும்" என அவன் திட்டமிடவும், "அடேய் போதும் நிறுத்து" என்றான் சந்திர தேவ்.

        " அந்தக் கிறுக்கன் ப்ரணவ்ஸ் என்ன பண்றான், ப்ரியூவோட என்ஜாய் பண்றானா. கொடுத்து வச்சவன்" என ரவி தேவ் பொறாமைப் படவும் சந்திர தேவ் சிரித்தான். "அவன் மேலயும் உனக்குப் பொறாமையா" எனவும், 

      "இருக்காதா பின்ன, நம்ம செலவுல அவன், தன் முறைப் பொண்ணோட என்ஜாய்ப் பண்றான். நீயும் முறைப் பொண்ணோட என்ஜாய் பண்ற, இதெல்லாம் ரொம்ப தப்பு , ஒரு பிரமச்சாரி சாபம், உங்களை சும்மா விடாது " எனப் புகைந்தான் ரவி தேவ். "டேய், சும்மாவே சாபம் விட்ட கதை தான், நீ வேற வாய் வைக்காதே" எனத் தம்பியிடம் சோகக்கதையைப் பகிர்ந்தான். 

      " அப்ப சரி, சீக்கிரம் வீட்டுக்கு வா, லைவ் டெலிகாஸ்ட் பார்த்துக்கறேன். ரொம்ப ஆர்வமா இருக்கத் தம்பியை காக்கா வைக்காத ப்ரோ" என்றவன், "அதி அத்தான், ஏதோ முக்கியமா பேசனும்னுச்சு. பேசிடு " எனப் போனை வைத்தான் நிருபன்  தேவ்.

          அந்த உயர்ந்த இடத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தவன், ஹாசினி பெற்றோரின் குரலைக் கேட்டால் , சற்றே ஆறுதல் அடைவாள் என இறங்கி வந்து ஹாசினியை அழைத்துக் கொண்டு மீண்டும் மரவீட்டுக்கு வந்தான்.

        " ஹசி, மாமா, அத்தை வாய்ஸ் மட்டும் கேட்டுக்கோ. நான் பேசுவேன். ஆனால் நீ பேசக் கூடாது. அதிக்கு போன் பண்றேன்" என அவளோடு டீலிங் போட்டான். அவளும் அரை மனதாகச் சம்மதித்தாள்.

   " சத்தம் வெளியே வந்துச்சு. லிப்டு லிட் தான். " என மிரட்டினான்." ஓவராப் பண்ணாத, டம்மி அரக்கன் சும்மா மிரட்டிக்கிட்டே இருக்காத " என்றாள்.

    " குண்டு கோஸ், அப்ப மச்சான்கிட்ட இருந்து ரொம்ப எதிர் பார்க்குறியோ " எனப் பேசியபடியே ஏறியவன். அவளுக்கும் கைக் கொடுத்துத் தூக்கிக் கொண்டான். மரத்தின் உச்சியில் அழகான மரவீடு இருந்தது. ஹாசினிக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடியது.

       "இது தான் உன் தகவல் கட்டுப்பாட்டு அறையாக்கும். எனக்குக் காட்டி குடுத்துட்ட. நான் யாருக்காவது போன் செஞ்சு, உதவிக் கேட்டேனா" எனக் கேள்வி எழுப்பினாள்.

        "இவ்வளவு தானே ஆசை, செஞ்சுக்க. என்ன உனக்காக இந்தியன் கவர்மெண்ட் கடற்படை அனுப்புமா இல்லை விமானப்படை அனுப்பு வாங்கலா. வரட்டும் நீ என்னோட சேர்ந்து செஞ்ச கூட்டு சதின்னு சொல்லிடுவேன்" என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.

      " இந்த உலகமே நம்பாது.யாராவது தன்னைக் கிட்னாப் பண்ண ஒத்துகுவாங்களா" எனக் கேள்வி எழுப்பினாள்.

      " உன்னை யாரு கிட்னாப் பண்ணா. நீ என்கூட ஓடி வந்திருக்க. உங்க அம்மா உனக்குப் பிடிக்காத அரசியல்ல இறக்கி விட்டாங்க. நீ ட்ராமா பண்ணி என் கூட ஓடி வந்துட்ட' என்றான். அவனது கைகளில் , தன் கை முஷ்டியை வைத்து நங். னங் கெனக் குத்தினாள். " பேச்சைப் பாரு, நான் ஓடிவந்தனாம். நான் யாருத் தெரியும்ல" எனச் சவால் விட்டாள்.

 " தெரியும், இந்த அரக்கனுக்கு ஏற்ற லங்கினி" என்றான்." ஹேன் " என அவள் முழித்தாள்.

         "இலங்கை தீவைப் பாதுகாத்த அரக்கி பேரு. அனுமார் சண்டை போட்டு அடக்குவாரே " என்றான் . அவள் தெரியாது என உதட்டைப் பிதுக்கவும்.

" ஏன் உங்க அப்பா நடிச்ச படமே இருக்கு. பார்த்ததில்லையா" என்றான். அவள் இல்லை எனத் தலை ஆட்டவும். " உங்கம்மா கூட நடிச்ச ரொமான்டிக் பிச்சரும் பார்த்ததில்லையா" என விசமமாகக் கேட்டான்.

      " இல்லை, ஒன் ஆர் டூ பார்த்திருக்கேன். அம்மா போட விடாது. ஆனால் அப்பா அம்மாவை வம்பிழுத்துகிட்டே ரசிச்சு பார்ப்பாங்க " என அவர்கள் நினைவில் இவள் கனிந்து பார்க்க, அவன் உடல் குலுங்கி சத்தமின்றிச் சிரித்தான். அவள் முறைப்பிலேயே என்னவெனக் கேட்கவும்," உன் முன்னாடி பார்க்கச் சங்கடப்பட்டு இருப்பாங்க" எனக் கண்ணடித்தான் .

       " போடா அரக்கா. நீயெல்லாம் "என வாயில் வந்தபடி திட்டினாள். " இப்ப போன் போடவா, வேண்டாமா" என்றான். "போடு " எனப் பரபரப்பானாள். அவளுக்குச் சைகை காட்டி அமைதிப்படுத்தி விட்டு, அதிபனுக்குப் போன் அடித்தான்.

        ஹாஸ்பிடலில் அவன் அப்பாவின் அறையில் தான் இருந்தான். ஶ்ரீதேவி பூதேவி சமேதராய் ராமச்சந்திரருடன் பேசிக் கொண்டிருந்தவன், சந்து என எடுத்தான். மேனகாவுமே பரபரப்பானார். மகள் அவனிடம் தான் பத்திரமாக இருப்பாள் எனத் தாய் மனம் நம்பத் தொடங்கியிருந்தது. இங்கிருந்து பேசுவதில் சந்திரதேவ்க்கும் ஓர் வசதி. யாரும் ஹாசினி பாம்ப்ளாஸ்ட் பற்றிப் பேசமாட்டார்கள்.

       "சந்து, மஸ்கட் வந்திட்டியா" என ஆர்வமாகக் கேட்டான் அதிபன். "இன்னும் இல்லை அதி. இங்க கன்பஃர்மேசனுக்காக வெயிட்டிங்க். அது கன்பாஃர்ம் ஆனால் தான் ஊருக்குப் போக முடியும்" என அவளைப் பார்த்துக் கொண்டே சொன்னான். அவள் அது ஆகாது என மறுப்பாகத் தலையாட்டினாள். பார்ப்போம் என அவனும் கண்களால் சவால் விட்டான்.

    " சந்து, இதோ அம்மா பேசனுமாம்" என ஸ்பீக்கரில் போட்டான் அதிபன். "சந்து நீ உங்க மாமாவையும், மேனகா அத்தையையும் மஸ்கட் வரச் சொல்லி அழைக்கவே இல்லையே. பாரு உங்க மாமா கோவிச்சுக்குறார்" என்றார் பானுமதி.

        " அத்தை அது மாமாவோட வீடு. நாம தான் ஓசியில் தங்கியிருக்கோம்னு அப்பா அடிக்கடி சொல்லுவாங்களே. அவங்க வீட்டுக்கு வர அவங்க எதுக்குக் கௌரவம் பார்க்கனும். இன்னும் சொல்லப் போனா எல்லாச் சிம்ம தேவன்களும் கெட் அவுட்ன்னு சொன்னார்னா, நாங்க வீட்டை விட்டு போறதைத் தவிர வேற வழியே கிடையாது. ஏன்னா இந்த வீடு, தொழில் எல்லாத்துக்கும் மூலதனம் சந்திரா மாமாவோட உழைப்பு " என்றான் சந்திரதேவ்.

      " மாப்பிள்ளை, உங்கப்பனை விட நல்லா பேசுற. எங்க இரண்டு பேர்ல நான் தான் வசனம் பேசுவேன். அவன் என்னை ரசிச்சுக்கிட்டே இருப்பான். இந்தத் தலைமுறையில் நீ வசனம் பேசுற , அதி கேட்டுக்கிட்டு இருக்கான். " என ஹாஹாவெனச் சிரித்தார் மூத்த சந்திரா.

      " எல்லாம் உங்கக்கிட்ட கத்துக்கிட்டது தான் மாமா. நீங்க அத்தை இரண்டு பேரோடையும் மஸ்கட் கிளம்பி வாங்க, அடுத்த நிமிசம் நான் பறந்து வந்து அங்க குதிச்சிடுவேன் " என்றான் சந்திர தேவ்.

       " தெரியும், தெரியும் நீ எப்படின்னு. இப்ப தான் ஏதோ வேலையிருக்குன்னு சொன்னியே, அது முடிக்காமல், நீ நினைச்சதை சாதிக்காம வந்துடுவியாக்கும் " என்றார் பானுமதி.

   " அத்தை அதுக்கும், உங்க ஆசீர்வாதம் இருந்தால் சீக்கிரம் முடியும் " என்றான் பூடகமாக.

     " எங்க ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவுமே உண்டு தம்பி. நீங்க நினைச்ச மாதிரியே எல்லாம் நல்லதா நடக்கட்டும்" என்றார் மேனகா.

        " தாங்க்ஸ் அத்தை. அப்படியே உன் மனசுக்குப் பிடிச்ச நல்ல பொண்ணு உங்களுக்கு மனைவியாக அமைய வாழ்த்துக்கள் , இப்படி எல்லாம் சொல்லமாட்டீங்களா" எனச் சந்திரதேவ் கேலியாகக் கேட்கவும், மேனகா சிரித்தார். பானுமதி பொரிந்தார்.

     " ஏய் சந்து எத்தனை தடவை உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கேட்டுருப்பேன். இப்ப மேனகாட்ட ஆசீர்வாதம் கேக்குறியா படவா" எனத் திட்டினார். எஸ்.ஆர்.சந்திரா " பொண்ணு வச்சிருக்கவகிட்டத் தானே ஆசீர்வாதம் வாங்கனும். மாப்பிள்ளை விவரம் தான். " எனக் கேலி பேசினார்.

  " ஆமாம் மாமா" என்றான் சந்திர தேவ். " சந்து கோபத்தைக் கிளப்பாதே. ஹாசினியை கட்டிக்கச் சொல்லி எத்தன தடவை கேட்டுருப்பேன். இப்ப வந்து நடிக்காத" எனப் பானுமதி நிஜமாகவே கோபத்தை வெளிபடுத்தினார். அவருக்கு இவன் ஹாசினை மணந்திருந்தால், இன்று அவள் உயிரோடு இருந்திருப்பாளே என்ற ஆதங்கம் இருந்தது.

    " அத்தை " எனச் சந்திர தேவ் இழுக்கவும், " அம்மா விடுங்க " என அடக்கினான் அதிபன், அவனுக்கு அப்பா முன்னிலையில் அம்மா எதுவும் பேசி விடுவாரோ என்று பயம்.

     " பானுமா, மாப்பிள்ளையா வீரா மகன் தானே. " எனச் சந்தேகம் கேட்டார் எஸ். ஆர்.சி. அதற்குள் மறதி வந்திருந்தது.

     " ஆமாம் இந்தர். நம்ம மதுவைக் கல்யாணம் செஞ்சுக்குச் சொன்னதுக்கு ரொம்பப் பிகு பண்ணான். "எனப் பானுமதி அவரறியாமலே வேறு ஒரு இடத்தில் பற்ற வைத்துக் கொண்டிருந்தார். அங்கு அதைக் கேட்ட ஹாசினி அவனை முறைத்தாள். அவன் கண்களால் நயந்து , பிறகு விளக்குவதாக அபிநயம் பிடித்தான்.

       " நான் வீராவோட சம்பந்தம் பேசிட்டேனே. அவனும் தன மகனுக்கு நம்ம மதுவை செஞ்சுக்குறோம்னு, சரின்னு சொல்லிட்டான்" என்றார் சந்திரா. இங்குச் சந்திரதேவ்க்குப் புல்லரித்தது. ஹாசினி எந்த உணர்வையும் காட்டாமல் நின்றாள். " ராம்ஜி என்ன சொல்றீங்க" என்றார் மேனகா.

        " நான் உன்னைக் கல்யாணம் பண்ணிட்டேன்னு வீரா ரொம்பக் கோபமா இருந்தான். நம்ம மதுவை மூணு வயசில் தங்க விக்கிரகமாட்டம் பார்த்தானா. ஐயா என் கூடச் சமாதானம் ஆகிறேன்கிற பேர்ல , மதுவை மூணு வயசிலையே பொண்ணுக் கேட்டான். நானும் சரின்னுட்டேன். என்ன மாப்பிள்ளை, நீ சொல்லு, லைப்ல ஜாக்பாட் ஒருதடவை தான் கிடைக்கும்" எனச் சந்திரதேவிடம் வினவினார்.

       " மாமா ஜாக்பாட் எனக்கு வேணும். பத்து வருஷம் முன்னாடியே குடுத்துட்டிங்க. வார்த்தை மாறக் கூடாது" என்றான் சந்திரதேவ்.

         ஹாஹாவெனச் சிரித்த சந்திரா, " என் மகள் உனக்குத் தான். மேனு மது எங்க இருக்கா" என மனைவியிடம் வினவி விட்டு, " ஹாங் அமெரிக்கால இருக்கா. தூக்கிட்டுப் போய்க் கட்டிக்கோ. உனக்கு எல்லா உரிமையும் இருக்கு" என்றார்.

       ஹாசினி அப்பாவின் பேச்சில் கொஞ்சம் கொஞ்சமாக நெகிழ்ந்து கொண்டிருந்தாள். அவள் அழுகை வெடிக்கும் முன் ஸ்பீக்கரை ஆப் செய்த சந்திர தேவ், அதிபனிடம் பேசினான்.

       அதிபன் அறைக்கு வெளியே வந்து,யாருமற்ற தனிமைக்குச் சென்றவன், "சந்து முக்கியமான விசயம் " என ஆரம்பித்துச் சிவராஜ் வந்தது மேனகாவிடம் பேசியது என அத்தனையையும் சொன்னான்.

        ஹாசினி உணர்ச்சி பிழம்பாக இருந்தவளை ஒரு கையால் அணைத்துக் கொண்டே, மற்றொரு கையில் போனை பிடித்திருந்தான் தேவ். அதிபன் பேசப் பேச ஹாசினியைப் பிடித்திருந்த கையில் அழுத்தம் கூடியது.

      " ஓகே நீ எதிலையும் சைன் பண்ண விடாத. அவனுக்கு நான் ஆப்பு வைக்கிறேன். நான் பார்த்துக்குறேன். நீ வேற எதாவதுன்னா டெக்ஸ்ட் பண்ணு" எனப் போனை வைத்தவன். ஹாசினியின் புறம் இவ்வளவு நேரம் இருந்த இனிமை மாறிக் கோபமாகத் திரும்பினான். ஹாசினி எதுவும் புரியாமல் நின்றாள் .

சந்திரதேவ் கோபம் யார் மீது, ஹாசினியிடம் அதைக் காட்டுவானா, பொறுத்திருந்து பாப்போம்.

No comments:

Post a Comment