ஹாசினி சந்திரா -16
மஸ்கட் சாந்தேவ் மாளிகை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இரவில் விளக்குகளை ஒளிர விட்டு சிம்மதேவன் வம்சத்து மருமகள்கள் வீரசிம்ம தேவன், ரத்தின சிம்ம தேவன் மனைவிகள் , அனுசுயா தேவி, நிரஞ்சனா தேவி ,ஓரகத்திகள் இருவரும், நாத்தனார் குடும்பத்தை வரவேற்கக் காத்திருந்தனர். இன்று இவர்கள் இந்த மண்ணில் வேரூன்றி நிற்பதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததே, அவர்களது நாத்தனார் கணவரான எஸ்.ஆர். சந்திரா தான். அந்த நன்றியை அவர்கள் என்றும் மறந்தது இல்லை.
கால் நூற்றாண்டு காலமாக இரண்டு குடும்பங்களும் ஒன்றாகிப் போனது. நடுவில் வீரசிம்மன் மறைவு, எஸ்ஆர்சி அரசியலில் மும்மரமானது, அதைத் தொடர்ந்து அவரது உடல் நிலை பாதிப்பு ஆகிய காரணங்களால் சற்றே தொடர்பு அற்று போயிருந்தது. இதற்கும் அனுசுயா, ரத்தின சிம்மன் இருவரும் மேனகாவையே குற்றம் சுமத்தினர். ஆனால் ரத்தின சிம்மனுக்கு இந்த பத்து நாளில் அருகிலிருந்துப் பார்த்ததில் மேனகாவின் மேல் நல்ல அபிப்பிராயம் வந்திருந்தது. ஆனால் பானுமதி , மேனகாவின் மகள் ஹாசினி சந்திரா படுகொலை எனவுமே ஒரு பக்கம் அதிர்ச்சி இருந்தாலும் மறு பக்கம் மகன் தப்பினான் என்ற உணர்வும் இருந்தது. அதன் காரணமாக மேனகாவின் மேல் அனுதாபம் கூட வந்தது. ஆனால் மேனகாவையும் பானுமதி அழைத்து வருவது தான்நெருடலாக இருந்தது. அதுவும் போக பானுமதி மேனகாவை தனக்குச் சமமாக நடத்த வேண்டும் எனச் சொன்னதில் பெரிய வருத்தம் இருந்தது. இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்பு பானுமதி எஸ்ஆர்சி யை பிரிந்ததன் காரணம் மேனகா தான் என்பதை உறுதியாக நம்பினார். ஆனாலும் குடும்ப ஒற்றுமைக்காக மேனகாவையும் சகிப்பது என முடிவு செய்தார்.
நிருபன் தனது பெரியம்மாவிடம் எஸ்ஆர்சியும் மேனகாவும் அதிகப் பட்சம் பத்து பதினைந்து நாட்கள் தான் இங்கிருப்பார்கள், அமெரிக்காவில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பதால் அங்குச் சென்று விடுவார்கள். இந்தப் பத்து நாள் இங்கு மேனகா நடத்தப்படுவதைப் பொறுத்தே பானுமதியும் தான் தங்க வேண்டிய இடத்தை முடிவு செய்வார் . பானுமதியோடு மகன்கள் இருவரும் மருமகளும் போவது உறுதி. ஆராதனாவும் வேறு வழியின்றிப் பிறத்த வீட்டை விட்டு வெளியேறி விடுவாள் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டான். அதனால் அனுசுயாவும் அவர்களை வரவேற்கத் தயாராகத் தான் இருந்தார்.
நிரஞ்சனா ஆரத்தி தட்டோடு ரிசப்சன் அறையிலேயே இருக்க, மயூராவுக்கும் மாமனாரைப் பார்க்கும் பரபரப்போடு மகளையும் மச்சினன் மகனையும் வைத்துக் கொண்டு அதே ஹாலில் இருந்தாள் . மேனகாவைப் பற்றி அதிபன் சொல்லி வைத்திருந்ததில் அவரைக் காணவும் ஆவலாகவே இருந்தாள். வீரு பத்து நாள் கழித்து வரும் பெற்றோரைக் காணத் தூக்கக்கலக்கத்தோடு அமர்ந்திருந்தான். அதிபன் மகள் சுபாஷினி தூங்கி எழுந்து புத்துணர்வோடுஷ விளையாடிக் கொண்டிருந்தது.
இரண்டு கார்களில் எஸ்ஆர்சி குடும்பம் சாந்த்தேவ் மாளிகையை வந்தடைந்தது. " மேனு, நாம எங்க வந்திருக்கோம்" என்ற இதே கேள்வியை இரு மனைவிகளிடமும் மாற்றி மாற்றிப் பத்து நிமிடத்துக்கொரு முறை கேட்டு விடுவார் சந்திரா. மேனகா சளைக்காமல் முதல் முறை சொன்னது போலவே குரல் மாறாமல் சொல்வார். அவரைப் பார்த்தே, இந்தப் பத்துநாளில் பானுவும் பழகியிருந்தார்.
"இதுவும் நம்ம வீடுதான்பா. நீங்களும் வீரா மாமாவுமா கட்டினது" என ப்ரதிபன் நினைவுபடுத்தவும், "ஓஹோ" எனக் கேட்டுக் கொண்டார். பெண்கள் மூவரும் வந்து முறைப்படி வரவேற்றனர். மயூரா காலில் விழுந்து ஆசி வாங்கினாள். அதிபன் தத்தி நடந்து வந்த மகளைத் தாவி அணைத்துக் கொண்டான். வீரு அம்மாவிடம் ஓடினான். எஸ்ஆர்சந்திரா குடும்பம் ஒன்று கூடியது.
" அண்ணா, அண்ணி வாங்க" என எஸ் ஆர் சி, பானுமதியை வரவேற்ற அனுசுயா மேனகாவைப் பார்த்துச் சம்பிரதாயமாகத் தலையை மட்டும் அசைத்தார். நிரஞ்சனா கலகலப்பாகப் பேசியபடி மகள்கள் இருவரோடு சேர்ந்து, எஸ்ஆர்சி தம்பதிக்கு ஆராத்தி எடுக்கப் பானுமதி, " ரஞ்சி இதெல்லாம் எதுக்கு" என ஆட்சேபிக்கவும்.
" நீ சும்மா இருக்கா. மச்சான் வள்ளி தெய்வானையோட முருகன் மாதிரி வந்திருக்காரு" என ரத்தின சிம்மன் கேலி செய்தார். " அது தானா அமையறது மாப்பிள்ளை, பொறாமைப் படாத. அம்மா உன் புருஷனை என்னன்னு கேளு" என ரஞ்சனாவிடம் மச்சினனை மாட்டிவிட்டார்.
" மாம்ஸ், நீங்க தான் ஸூப்பர் ஹீரோ. உங்க ரேஞ்சே வேற " என்ற நிருபன் தன்னை மேனகாவிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டான். ஹாலில் வட்ட ஷோபாவில் சுற்றி அமர்ந்தனர். மேனகா ஆவலாகச் சந்திர தேவைப் பற்றி விசாரித்தார். சந்திரா வந்திருந்தால் ஹாசினியும் உயிரோடு இருப்பாள் என்ற நம்பிக்கையில் கேட்டார். ஆனால்அனுசுயா அதனைத் தப்பாகவே கணித்தார்.
சந்திரா, பேரனையும், பேத்தியையும் மடியில் அமர்த்திக் கொண்டு கொஞ்சினார். பானுமதி அவர்களுக்குத் தாத்தாவை அறிமுகம் செய்து வைத்தார். எஸ்ஆர்சி முகத்தில் அளவுகடந்த சந்தோஷத்தைக் காணவும் மேனகாவுக்கும் அங்கு வந்த முடிவு சரியே எனத் தோன்றியது.
வீட்டைப் பராமரிக்கும் மேகலா அனைவருக்கும் பனங்கற்கண்டு பால் கொண்டு வந்து தந்தார். மேகலாவுக்கு மேனகாவிடம் பேச ஆவலாக இருந்தது. ஆனால் சந்திர தேவின் கட்டளையால் ஆவலை அடக்கிக் கொண்டார்.
பானுமதி, கணவரையும், மேனகாவையும் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றார். மயூராவின் ஏற்பாட்டைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த இளையவர்களுக்குத் திருப்தியாகவே இருந்தது. அதிபன் மனைவியை மெச்சி கொண்டான்.
நடுவிலிருந்த பெரிய அறையில் எஸ்ஆர்சிக்கு கட்டிலும், இரண்டு பெரிய ஹோபாக்கள், மேஜை, நாற்காலி எனச் சகல வசதிகளோடு. அவர் குடும்பத்தோடு பேசிக் கொண்டிருக்கும் படியாகவும் அமைத்திருந்தாள். இரண்டு புறமும் இருந்த கதவுகளில் ஒன்றின் வழியே பானுமதியின் அறைக்கும், மறுபுறம் இருந்த அறை மேனகாவின் பயன்பாட்டிற்கும் ஒதுக்கி இருந்தாள். மாமியார்கள் மருமகளை மெச்சிக் கொண்டனர்.
அடுத்த இரண்டு தினங்கள் கடந்த நிலையில் , எஸ்ஆர்சி மனைவி மக்கள், பேரன் பேத்தி எனச் சந்தோஷமாகவே இருந்தார். காலை உணவை அவரது அறைக்கே கொண்டு சென்றாலும் , மதிய உணவுக்கு டைனிங்கில் எல்லோருடனும் சேர்ந்தே சாப்பிட்டார். அதுவும் வீட்டுத் தலைவராக நடுவில் அமர்த்தி மனைவிமார் இரு புறமும் அமர , மகன்கள் மச்சினன் குடும்பம் என மருகள்கள் கவனிப்பில் பெரிய குடும்பியாகவே நிறைவாக இருந்தார்.
பேரன், பேத்தியின் மழலையில் லயிப்பவருக்கு ஹாசினியின் நினைவு வரும், பேத்தியையே மது என அழைப்பார். மேனகா பெரும்பாலும் எஸ்ஆர் யோடு தான் இருப்பார். அதற்கும் அனுசுயா மகளிடம் குறை பேசினார். மகளும் அம்மாவை முறைத்து விட்டுப் போனாள்.
ப்ரதிபன், அதிபன்,ரத்தன் மூவருமே அலுவலகம் சென்று விட எஸ்ஆர்சி ஓய்வெடுக்கும் நேரத்தில் மேனகாவோடு நிரஞ்சனாவும், மயூராவும் ஹாசினி பற்றித் தங்களது துக்கத்தைப் பதிவு செய்தனர். "கவலை இல்லாமல் சிறகடிச்சு பறந்திட்டு இருந்த என் மகளை, என் சுயநலத்துக்காகப் பலி கொடுத்துட்டேன் " என அவர் அழவும், "மாமாவுக்காகத் தானே வர சொன்னீங்க. அதில உங்க சுயநலம் எங்க அத்தை இருக்கு " என மயூரா மேனகாவைத் தேற்றினாள்.
பானுமதி எப்போதாவது தான் எஸ்ஆர்சியைப் பற்றிப் பேசுவார், ஆனால் மேனகாவின் பேச்சே எஸ்ஆர்சியாக மட்டுமே இருந்தது. காலையில் எழுந்ததிலிருந்து நான்கு வயது சிறுவனுக்குச் சொல்வது போல் குளிப்பாட்டுவதிலிருந்து எல்லாம் செய்யும் மேனாகாவின் மேல் அனுசுயாதேவியைத் தவிர அந்த வீட்டுப் பெண்களுக்கு மதிப்பு உயரத்தான் செய்தது.
பானுமதியோடு எஸ்ஆர்சி பேசிக் கொண்டு இருக்கும் போது அவர்களுக்குத் தனிமைக் கொடுத்து ஒதுங்கி வீட்டைச் சுற்றிய தோட்டத்தில் சுற்றி வருவார். அந்த நேரம் கையில் போனோடு பெங்களூரு நடப்பையும் அறிந்து கொள்வார். அங்கிருந்தும் தலைவரைக் கேட்டு போன் வந்தபடி தான் இருக்கும். கணவருக்குச் சேவை செய்த நேரம் போகவே மற்ற நேரம் பேசுவார்.
அன்று மதிய நேரத்தில் ஹாசினி கேஸ் விசயமாக விசாரிக்கத் தங்க பாண்டியன் ஐபிஎஸ்க்கு போன் அடித்தார். அவர் குற்றவாளியைக் கைது செய்து விட்டதாகவும், மேலிடத்தில் அறிக்கை சமர்ப்பித்த பின்னர் ஊடகத்துக்குத் தகவல் தெரிவிப்போம், அதுவரை விவரம் வெளியே சொல்ல இயலாது என நாசூக்காக மறுத்து விட்டார்.
பெங்களூரில் தனது குடியிருப்பில் தான் சேகரித்த அத்தனை ஆவணங்கள், தடையங்கள் நிறைந்த அறிக்கையை, நான்கு வகையாகப் பிரித்துக் கேஸ் போடுவதற்கு வசதியாக அடுக்கிக் கொண்டிருந்தார் தங்கப் பாண்டியன், ஒவ்வொன்றையும் குறிப்புகள் எழுதி, தனது உதவியாளர் கிரிஷுடன் ஆலோசனையிலிருந்தவர், முதலமைச்சர் , தலைமைச் செயலர் மற்றும் டிஜிபியோடு சேர்ந்த உயர்மட்ட சந்திப்புக்கு அப்பாயின்மென்ட் வாங்கியிருந்தார்.
இந்தக் கேசில் பலவிதமான பிரிவுகள் சேர்ந்து இருக்கிறது. அது மட்டுமின்றி வெளிப்படையாகக் கைது நடவடிக்கை பற்றிய விஷயம், ஊடகம், பொது மக்களுக்குத் தெரிய வரும் போது, கேஜே பார்ட்டியின் தொண்டர்கள் கொந்தளிப்பார்கள். அந்தச் சமயம் சட்டம் ஒழுங்கு சாம்பந்தமான பிரச்சினையும் வரும், தேர்தல் முடிந்து ஒட்டு எண்ணிக்கை இன்னும் நடக்காத சூழலில் எந்த நடவடிக்கைகளை மட்டும் முதலில் எடுப்பது என்பது பற்றிய ஆலோசனையும், அந்தந்த காவல் துறை பிரிவுகளின் தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். எனவே அறிக்கை தெளிவானதாக இருக்க வேண்டும். தானே முழுக் கோப்புகளையும் ஆராய்ந்து கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் மனைவியின் அருகாமையை அவர் மனம் மிகவும் நாடியது, தான்வி இருந்தால், அவருக்குச் சலிப்புத் தட்டும் இந்த அறிக்கைகளை ஆராயும் பணியைச் சுலபமாகப் போகும், மனைவி கேட்கும் லஞ்சமும், கணவருக்கு இனிக்கும், எனவே இரட்டிப்பு வசதியாக இருக்கும்.
இந்தக் கேஸ் ஆரம்பித்த நாளிலிருந்து ஓய்வே இல்லை, மனைவி மக்களைப் பார்த்தும் பத்து நாள் ஒடியிருந்தது. அதே நினைவிலிருந்தவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகவே அவரது மனைவி தான்வி தங்கப்பாண்டியன் ஐ ஏ எஸ் வந்து சேர்ந்தார். வெகு தீவிரமாக வீட்டுப் பாடம் செய்யச் சுணங்கும் சிறுவன் போல் அமர்ந்திருந்தவர், அம்மாவைப் பார்த்ததும் மகிழ்வது போல் முரட்டு மீசைக்குள்ளிருந்த சிறுவனும், காவலன் காணாமல் சென்று தான்வியின் கணவனும் விழித்தெழுந்தனர்.
தான்வி ஐஏஎஸ், ஆட்சியருக்கு ஏற்ற மிடுக்கும், நேர்மைக்கே உரிய நிமிர்வும், தங்கபாண்டியன் மனைவி என்ற கர்வமும் ஒருங்கே பெற்று ,சற்றே பூசிய உடலமைப்போடு காட்டன் சேலையில் தீர்க்கமாக இருந்தார்.
“ஹேய் தனுமா , வாட் எச் சர்ப்ரைஸ் “ என அணைத்துக் கொண்டவர், ஆபீஸ் ரூம் கதவை அடைத்து விட்டு மனைவியைத் தூக்கி தட்டாமாலை சுற்றி, நெற்றியில் முத்தமிட்டு , ஹாலில் இருந்த சோபாவில் அவரை அமர்த்தித் தானும் அருகில் அமர்ந்து கொண்டார். தான்விக்கு அவரது உற்சாகமான வரவேற்பில் நிலைக்குக் கொள்ளவில்லை , "ஐ மிஸ் யு சோனு" என மெல்ல கிசுகிசுத்தவர் அவர் தோளில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.
“கோல்டு, இன்னைக்கு என்ன, உற்சாகம் புரண்டு ஓடறது, ரொம்ப மிஸ் பண்ணேளா “ எனத் தான்வி கேட்கவும்.
“ஆமாம்டி, என்ன திடீர் விசிட் புள்ளைங்க வரலையா “ என்றார் பாண்டியன்.
“நாளைக்கு மார்னிங் ஒரு மீட்டிங். முடிச்சுட்டு மதியம் கிளம்பிடுவேன். நீங்க மங்களூர்லேருந்து வந்திருப்பேளேனுட்டு இன்னைக்கு வந்தேன். உங்க பிள்ளைகள் இருக்காளே, உங்களுக்கு மேல குறுக்கு விசாரணை பண்றா, அப்பாவை பார்ப்பியா, அவருடையே சாப்பிடுவியா, படுப்பியான்னுட்டு ஒரே ரோதனை “ என்றார் தான்வி.
“அதுக்குதான் போறேன்னு சொல்லவேண்டியது தானடி மிர்ச்சி” என அவர் காதில் ரகசியம் பேசவும், “ கடுப்பை கிளப்பாதேள் , இப்படித் தேடி ஓடி வர்றது நேக்கே அசிங்கமா இருக்கு “ என முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளவும்.
“ புருஷன் பொண்ணாடிக்குள்ள என்ன அசிங்கம். நம்ம பொழப்பு அப்படி. சீரியஸா உன்னைத் தான் நினைச்சிட்டு இருந்தேன், அந்த ஃபைல்ஸ் எல்லாம் பார்த்து குடுடி. சாயந்திரம் , சிஎம் மீட்டிங் இருக்கு “ எனப் பாண்டியன் சொல்லவும்.
“இதுக்குத் தான் தேடுவேள்ன்னு நேக்குத் தெரியும் “ என்றவர், ஆபீஸ் ரூமுக்குள் சென்றனர். கிரிஷ் சல்யூட் அடித்தார்.
“ கிரிஷ் மேடத்துட்ட குடுங்க , நம்ம ஒரு மணி நேரம் பார்க்கிற வேலையை, அவங்க பத்து நிமிஷத்தில் பார்த்துடுவாங்க” என மனைவியின் சாமர்த்தியமாக வேலை வாங்கினார் பாண்டியன்.
“கோல்டு, என்ன என்ன கேஸ், கிளாசை சொல்லுங்கோ” என்றவர். அவர் சொல்லச் சொல்ல வேகமாகக் குறித்துக் கொண்டு , கோப்புகளை வரிசைப் படுத்தினார். ஒரு மணி நேரத்தில் சகலமும் தயாரானது.
“இதோட இன்னொரு காபி இருக்குல்ல “ என்றாள் தான்வி.
“பேபர்ஸ்லையும் இருக்கு, இக் காபியும் இருக்கு மேம் “ என்றார் கிரிஷ்.
தான்வியைக் குடியிருப்பில் விட்டு விட்டு, “நைட் கொஞ்சம் லேட் ஆகும்மா, எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிட்டுட்டு. சுஹானா தீவில் , செம இன்டெர்ஸ்ட்டிங் ஒரு லவ் ஸ்டோரி வேற இருக்கு . வந்து சொல்றேன்’ என மனைவியிடம் விடை பெற்றுச் சென்றார், கடமை தவறாத அந்தக் காவல் அதிகாரி.
முதலமைச்சருடனான மேல்மட்ட அதிகாரிகள் கொண்ட கூட்டம் இரண்டு மணி நேரங்களுக்கு மேல் நடந்தது. அதன் முடிவில் ஒரு சில அவசரமான கைது நடவடிக்கையை மட்டும் ஊடகத்துக்குத் தற்போது சொல்வது என முடிவெடுத்து, டிஜிபி , தங்கப்பாண்டியன் மற்றும் இன்னும் இரண்டு காவல் தலைவர்கள் மட்டும் ப்ரஸ்ஸை சந்தித்தனர்.
ஹாசினி சந்திரா படுகொலை சம்பந்தமாகக் குற்றவாளி கைது. பல முக்கிய அதிர்ச்சி தரும் விஷயங்கள் ...என்ற பீடிகையுடன் காவல் துறை அதிகாரிகள் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்குச் செய்தியை அறிவித்தனர்.
சாந் தேவ் மாளிகை, தங்கப் பாண்டியனோடு பேசிய மேனகா, குற்றவாளியைக் கைது செய்து விட்டதாகவும், மாலையில் உயர்மட்ட ஆலோசனைக்குப் பிறகு அறிவிப்போம் என்று சொன்னதிலிருந்து அமைதியின்றியே தவித்தார்.
குற்றவாளி கைது என்றால் அப்போ ஹாசினி நிஜமாகவே இல்லையா. அந்த எஸ் எம் எஸ் செய்தி பொய்யா. மதும்மா உன்னைத் திரும்பப் பார்ப்போம்னு ஒரு ஆசையில் வந்தனே. எனத் தன் மனம் போன போக்கில் உழன்றவர் , தோட்டத்தின் ஓரத்தில் போட்டிருந்த கல் பென்சில் உட்கார்ந்திருந்தவர், அப்படியே சாய்ந்து அசந்து விட்டார். எவ்வளவு நேரம் இருந்தாரோ அவருக்குத் தெரியாது.
சந்திரா மதிய உறங்கி எழுந்தவர் மேனகாவைத் தான் முதலில் தேடினார். ஆனால் அவர் புழங்கும் சத்தம் கேட்டு, பானுமதி வந்து அவர் தேவைகளைக் கவனித்தார்.
" மேனகா எங்கம்மா காணோம்" எனச் சந்திரா கேட்கவும், " நான் தான் உங்களுக்குப் பார்க்கிறேன்ல, அப்புறம் என்ன மேனகா. அவள் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்" எனக் கணவனை அதட்டினார் பானுமதி.
சந்திரா ஹாசியம் கேட்டது போல் சிரித்தவர், " பெத்தம்மாவுக்குப் பொறாமை எட்டிப் பார்க்குது " எனக் கேலி செய்தார். " எனக்கு ஒண்ணும் பொறாமை இல்லை. மேனகா இருபத்தி நாலு மணிநேரமும் உங்களுக்கே வேலை செய்யறா , அவள் பாவம்னு தான் சொன்னேன்" என்றார் பானு.
" வெயில் இறங்கிடுச்சு. கீழே தோட்டத்தில் நடக்குறீங்களா. வீரா அண்ணன் நிறையச் செலவழிச்சு, பாலைவன பூமிலையும் புல் வளர்த்தாங்க" என அண்ணனின் பெருமை பேசினார் பானு. எஸ்ஆர்சி யும் மிகவும் ஆர்வமாகவே அந்தப் பேச்சில் ஈடுபட்டார். ஆனால் நடுநடுவே, மேனகாவைக் கேட்க மட்டும் மறந்தாரில்லை.
லிப்டில் இறங்கி மருமகள்கள், நிரஞ்சனாவிடம் மேனகாவைப் பற்றி விசாரிக்க அவர்களுக்கும் தெரியவில்லை. வீட்டில் மேற்பார்வை பார்க்கும் மேகலா தான், தோட்டத்தில் போன் பேசிக் கொண்டிருந்தார் எனவும், கணவரை அங்கு அழைத்துச் சென்றார் பானு.
வீட்டைச் சுற்றி பழங்கதை பேசியபடி நடந்து இந்த மூத்த ஜோடி, ஒரு ஸ்டோன் பெஞ்சில் கண்ணீர் கோடு கரையாகத் தெரிய, அசந்து சாய்ந்திருந்த மேனகாவைக் காணவும் பதறித்தான் போனார்கள்.
" மேனு, மேனும்மா " என எழுப்பிய எஸ்ஆர்சி கண் கலங்கி விட்டது. பானுமதிக்கு அவர் அழுத காரணம் தெறியுமாதலால் மிகுந்த வேதனை அடைந்தார். இருவருமாக எழுப்பவும் முழித்தார் " மது, மது வந்துட்டாளா" எனப் பரபரத்தார் மேனகா.
" மேனுமா, பயமுறுத்திட்டியே. மது மேல இவ்வளவு பாசம் இருக்குல்ல, போன் போட்டு வரச்சொல்லு. எனக்கும் என் புட்டிமாவை பார்க்கனும்" எனச் சிறுவனாக அடம்பிடித்தார் சந்திரா. மேனகா சுய நினைவு அடைந்தவராக. " சொல்லிட்டேன் ராம்ஜி. வருவா" என எழுந்தவர். வேறு எதாவது வேண்டுமா என விசாரித்தார்.
" மேனகா, நான் உன் ராம்ஜியை பார்த்துக்குறேன். முகத்தைக் கழுவிட்டு பூஜை ரூமுக்கு வா. கொஞ்சம் நேரம் சாமி கும்பிடுவோம். மனசு அமைதியாகும்" எனவும் தலையாட்டிவிட்டு மாடி ஏறினார்.
எஸ்ஆர்சியும், பானுமதியும் பேரன், பேத்தி மருமகள்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இன்னும் மகன்கள் அலுவலகத்திலிருந்து வரவில்லை. மாமனாரிடம் அவருக்கு நினைவடுக்கில் மறக்காத சிலவற்றை அவர் பேசப் பேசக் கேட்டு மகிழ்ந்தனர்.
" அத்தை, நிஜமா சொல்லுங்க. மாமாவோட இந்தச் சுவாரஸ்யமான பேச்சை நீங்க மிஸ் பண்ணீங்கல்ல" எனச் சின்ன மருமகள் மயூரா கேட்கவும், சந்திரா பானுவைப் பார்த்தார்.
" ஆமாம் பானு, நீ எதுக்கு என்னை விட்டுட்டு வந்த" எனப் புதிதாகக் கேள்வி எழுப்பினார். கணவரை முறைத்த பானு, " அம்மாடி ,இப்பத் தான் ஒரு வருஷமா உங்க மாமனார் அடங்கி வீட்டில இருக்கார். இந்தச் சுவாரஸ்யமான பேச்சு எல்லாம், தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் தான். வீட்டுக்கு வர்றதே தூங்குகிறதுக்கு மட்டும் தான். அதுவும் நடிக்கும் போது பத்து நாள் பதினைந்து நாள் அவுட்டோர் போயிடுவார். இந்தப் பேச்சுக்காக நாங்க ஏங்குனது தான் மிச்சம் " எனப் பானுமதி எடுத்துச் சொல்லவும்,
" பானுமா உன்னை ரொம்பக் கொடுமை படுத்திட்டேன். என்னை மன்னிச்சுக்கோ" எனச் சந்திரா சொல்லவும் பானு உருகித்தான் போனார்.
" அத்தை, மாமா டவுன் டு த எர்த், எவ்வளவு சிம்பிள். ஆனால் உங்க மகன் இரண்டு பேரும் உங்களை மாதிரி தான்" என மயூரா குறை படவும், ஆராதனா ," மயு, அதி கூடப் பரவாயில்லை, ப்ரதி தான், அப்படியே அவங்க அம்மாவோட டிட்டோ" என இடைச் சொருகவும்,
" மாமனார் இருக்கிற தைரியத்தில், இரண்டு பேரும் என்னைக் குறை சொல்றீங்களா" எனப் பானு கோபித்தார். மேனகாவும் வந்து சேர்ந்தார்.
" ஹாசினி யார் மாதிரி அத்தை " என மயூரா கேட்கவும், மற்ற மூவருமே சந்திராவைத் தான் கை காட்டினர்.
" கோபம் வந்தாலும் பலியா வரும். ஆனால் கொஞ்ச நேரத்தில் மறந்திட்டு வந்திடுவா. யார்கிட்டையும் பகைமை பாராட்டத் தெரியாது. உங்க மாமாவே, எதிர்க்கட்சி காரன் இவரை முதல் நாள், கிழிகிழின்னு கிழிச்சிறுப்பான். அடுத்த நாள் அவன் வீட்டு விசேசத்துக்குப் போயிட்டு வருவார். அதே மாதிரி தான் மதுவும்" எனச் சொல்லும் போது மேனகாவுக்குக் கண்கள் கலங்கியது.
" இந்தர், நானும் மேனுவும் சாமி கும்பிடப் போறோம். நீங்க கொஞ்ச நேரம் பேரன் பேத்தியோட இருங்க " என்று பானுமதி மேனகாவை அழைத்துக் கொண்டு பூஜையறைக்குச் சென்றார்.
நிரஞ்சனா வெளியே சென்றிருந்தார். அனுசுயா இன்னும் இறங்கியே வரவில்லை. வீரு விளையாட்டுக் கார் வைத்து ஓட்டிக் கொண்டிருந்தான்.
பூஜையறையில் முருகன் சிலை நடுநாயகமாக இருக்க , எல்லாத் தெய்வங்களும் அங்குக் கொலு வீற்றிருந்தது. " மேனு, இந்தப் பூஜையறை அண்ணன் இருக்கும் போதே வாஸ்து படி கட்டுனாங்க. இங்க வந்து வேண்டினா அது நடக்கும். மனசுக்கு அமைதி கிடைக்கும்" என இருவருமாக அமர்ந்து கண் மூடி பிரார்த்திக்கக் கண்களில் கண்ணீர் நீர்வீழ்ச்சியாகக் கொட்டியது மேனகைக்கு. பானுமதி அணைத்து ஆறுதல் சொல்ல, மேனகா அவரிடம் மனம் திறந்தார்.
"அக்கா, பெங்களூருல இருக்கையிலேயே உங்கள்ட்ட கூட இந்த விசயத்தைச் சொல்லலை. " என ஆரம்பித்தவர் ஹாசினி படுகொலையன்று பானுமதி பேசிய பிறகு வந்த மெசேஜை பற்றிச் சொன்னார். அதே போல் அன்று சந்திரதேவ் தைரியம் சொன்னதையும். இந்த விசயங்களை அதியிடம் பகிர்ந்ததையும் சொன்னவர். " பெங்களூரு வீட்டுச் சுவருக்கும் காது இருக்கும்னு தான் இதைச் சொல்லவில்லை" என்றார்.
" உங்களோட மஸ்கட் வர ஒத்துக்கிட்டக் காரணமே, மது இங்க வருவாங்கிற நப்பாசை தான். அது தான் உங்க அண்ணன் மகன், அந்தப் பெரிய தம்பியைக் காணோமேன்னு கேட்டேன். நீங்க கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கக்கா. மது உயிரோடு இல்லைனா, அந்த விசயத்தையாவது நான் ராம்ஜிட்ட சொல்லனும். என்னால நெஞ்சிலையே அடக்க முடியலை" என மேனகா சொல்லிக் கொண்டு அழவும், பானுமதி அவரைத் தேற்றினார்.
" இங்க பாரு, சந்து சொன்னான்னா, ஏதாவது அர்த்தம் இருக்கும். அவனும் இன்னும் வரலைல. அப்ப மது உயிரோடு தான் இருப்பா. நீ கவலைப் படாத" எனச் சக்காளத்தியை தேற்றிக் கொண்டிருந்தார் பானுமதி
ஆனால் இதனை முழுவதுமாகக் கேட்ட அனுசுயா தேவி, "அண்ணி, இந்தச் சினிமாகாரியை நம்பாதிங்கன்னு சொன்னேனே கேட்டிங்களா. இப்ப என்ன நாடகம் ஆடுறா பாருங்க. மகள் செத்துட்டான்னு உங்களை அங்க வரவழைச்சு, அண்ணனோட இங்க வந்து, மகளை வச்சு நம்ம சந்துவையும் பிடிக்கிற ஐடியா. இது தெரியாமல் இவள் பாவம்னு நம்புறீங்க" எனத் தீயாக வார்த்தையால் சுடவும். மேனகா அதிர்ச்சியில் வாய் மூடி மௌனியானார்.
பானுமதி , அனுசுயாவின் பேச்சைக் கண்டித்தார், " அண்ணி நீங்களும், ஒரு மகளைப் பெத்தவங்க தான். இப்படி எல்லாம் அச்சானியமா பேசாதீங்க" எனச் சத்தம் போடவும், இருவருக்குள்ளும் வாக்குவாதம் அதிகமானது. மயூரா சத்தம் கேட்டு ஓடி வந்தவள், சந்திரா காதில் விழக்கூடும் என எச்சரிகையாக, ஹாலுக்குச் செல்லும் கதவை அடைத்தனர்.
" அப்படி எல்லாம் சொல்லாதீங்க அண்ணி . என் மகள் வந்தான்னா, அடுத்த நிமிஷமே அவளைக் கூட்டிட்டு இங்கிருந்து வெளியேறிடுவேன். ஏற்கனவே தேர்தல் முடியவும் அமெரிக்கப் போற முடிவில் தான் இருந்தோம். என் மகளால உங்க மகன் வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் வராது" என மேனகா கண்ணீரோடு வாக்குத் தந்து கொண்டிருந்தார்.
"யாருக்கு ,யார் அண்ணி, எங்க அண்ணி இடத்துக்கு நீ வந்துட்டா, அவங்க சொந்தமெல்லாம் உன்னது ஆகிடுமா. சந்திரா அண்ணனுக்காகத் தான் உன்னைச் சகிச்சுகிறோம்" என அனுசுயா பானுமதி தடுத்தும் கேளாமல் வார்த்தைகளைத் திராவகமாகக் கொட்டினார். மயூராவும் வந்து தடுத்தும் , சொல்ல வேண்டியதை சொல்லியே தீருவேன் என இருபத்து மூன்று ஆண்டுக் காலப் பகைமையையும் ஒன்று சேர்த்துக் காட்டினார் அனுசுயா.
அந்த நேரத்து விதி எஸ்ஆர்சந்திரா குடும்பத்தை ஆட்டத்தான் செய்தது. படிப்பதற்குச் சந்திரா புத்தகம் கேட்கவும், ஆராதனா கொத்தாகச் சில பத்திரிக்கைகளைக் கொண்டு வந்து தந்துவிட்டு, நிரஞ்சனா ஷாப்பிங் செய்து வந்த பொருட்களை அடுக்குவதில் உதவிக்குப் போனாள். மயூராவை காணவில்லை எனவும் அவள் மகள் சுபாஷினியையும் தூக்கிச் சென்றாள். ஆனால் பூஜையறையிலிருந்து சத்தம் கேட்கவும், பெண்கள் இருவருமே அங்கே விரைந்தனர்.
பேரன் விளையாடிக் கொண்டிருக்க, சந்திரா பத்திரிக்கை புரட்டினார். அதில் ஹாசினியின் அரசியல்வாதி அவதாரத்தோடு புகைப்படம் இருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தவருக்கு மேனகா மேல் கோபம் வந்தது. ஆனால் செய்தியை உறுதி செய்யாமல் கோபத்தைக் காட்டக் கூடாது எனப் பேரனிடம் சொல்லி டிவியைப் போட சொன்னார்.
அவன் தாத்தா சொல் தட்டாத பேரனாகத் தொலைக்காட்சியை ஆன் செய்து ரிமோட்டை அவரிடம் கொடுத்து விட்டுப் போக, சரியாகக் கன்னட சேனல்கள் ஹாசினி சந்திரா கதையை ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.
" ஹாசினி சந்திரா, படுகொலை " எனப் பார்க்கவுமே எஸ்ஆர்சி க்கு குலை நடுங்கியது. சட்டென எழுந்தவர் டீவி அருகில் சென்று மகளின் முகத்தை வருடியவர், " மது" என வீரிட்டார். " மேனகா" என்ற அவரின் கர்ஜனைக் குரலில் சகலமும் மறந்து மேனகா, அழுத முகத்தோடு ஹாலுக்கு வந்தார்.
அதிர்ந்து நின்ற எஸ்ஆர்சியையும், டீவியில் ஓடிய செய்தியையும், பார்த்தவர், "ராம்ஜி, நான் பாவி என் மகளை நானே கொண்ணுட்டேன்" தலையில் அடித்துக் கொண்டே சிலையாக நின்ற அவரின் காலில் விழுந்து கதறினார் மேனகா.
"எல்லாத்தையும் மறைச்சு ஏமாத்திட்டியே மேனகா" என்றார் சந்திரா.
" இல்லை ராம்ஜி, இல்லை அப்படிச் சொல்லாதீங்க " எனக் கதறிய மேனகா சந்திராவின் அந்த வார்த்தையில் மடிந்து போனார்.
பின்னோடு வந்த பானுமதி முதலான பெண்களும், அலுவலகத்திலிருந்து வந்த ஆண்களும் ஒரே நேரத்தில் இந்தக் காட்சியைக் கண்டு சந்திராவிடம் ஓடி வந்தனர்.
கர்நாடக டிஜிபி, தங்கப்பாண்டியன் உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகள் ஹாசினி சந்திரா படுகொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார் . என அறிவித்து அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து குடும்பமே அதிர்ந்தது.
எஸ்ஆர்சி, அடியற்ற மரம் போல் சாய்ந்தார். ப்ரதிபனும், அதிபனும் அப்பாவைத் தாங்கி, டாக்டருக்கு அழைக்கச் சொன்னார்கள். அந்த நேரத்திலும் மேனகா , உயிர் பெற்ற சிலை போல் வேகமாக மாடிக்குப் பறந்தவர், பெங்களூரு டாக்டர் இது போன்ற அவசரக்காலமான நேரத்துக்குக் கொடுக்கச் சொன்ன ஊசியை எடுத்து வந்தவர் பானுவிடம் விவரத்தைச் சொல்லி விட்டு, கை நடுங்க, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அதனைச் செலுத்தினார்.
எஸ்.ஆர். சந்திரா உயிர் பிழைப்பாரா, நினைவு திரும்புமா. தங்கப்பாண்டியன் கைது செய்த குற்றவாளி யார். ஹாசினி சந்திரா எங்கே. அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.
No comments:
Post a Comment