ஹாசினி சந்திரா -13
பெங்களூரு, சந்திர பவனத்தில் பானுமதி சந்திராவின் தம்பி ரத்தின சிம்ம தேவன், இரண்டு மருமகன்களோடும் அண்ணன் மகள் ஆராதனாவோடும் பேசிக் கொண்டிருந்தார்.மேனகா, பானுமதி இருவருமே மருத்துவ மனையில் எஸ்.ஆர்.சியோடு இருந்தனர்.
“ இப்படி ஒரு வீட்டை கட்டணும்னு ,அண்ணனும், மச்சானும் தான் சின்ன வயசிலிருந்து ஆசைப் பட்டாங்க , இரண்டு பேரும் சேர்ந்தா, கட்டடம் கட்டுறது,இந்த காலை, அந்தப் பாணின்னு, அந்தப் பேச்சே தான் ஓடும். மச்சான் இந்த இடத்தை வாங்கிப் போட்டு, நீங்க சின்னப் பசங்களா இருக்கேல, வீடு பின் பாகம் மட்டும் தான் இருந்தது. அதுக்கப்புறம், நிறைய மாத்தி கட்டுனாரு .உங்களுக்கு ஞாபகம் இருக்கா” என ரத்தன் கேட்கவும்,
“எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு மாமா, கேட்டுலேருந்து ரொம்பத் தூரம் உள்ள வரனும், அப்பா எப்பவும் பிசி தான். கேட் மட்டும் அப்பவே ,கோட்டை கதவு மாதிரி இவ்வளவு பெரிசா இருக்கும்.” என நினைவு கூர்ந்தான் பிரதிபன்.
“ எல்லாத்தையும் விட்டுட்டு, அப்பாவை மட்டும் கூட்டிட்டு போகணும்னா மனசுக்குக் கஷ்டமா இருக்கு, இது அவரோட வாழ்க்கையோட வளர்ச்சி, நினைவுகளைச் சுமந்த வீடு” என்றான் அதிபன்.
“விடுடா, அவரே நினைவு மாறாட்டமா இருக்கார், இந்த வீட்டிலிருந்து என்ன ஆகப் போகுது. சந்து அமெரிக்கா கூட்டிட்டு போயி, அப்பாவுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்கலாம்னு சொன்னான். அதைச் செய்வோம்.” என ப்ரதிபன் சொல்லவும்
“அவர் உடம்பு குணமான பிறகு இங்கே வந்து தங்குகிறதைப் பத்தி யோசிக்கலாம்பா. ஆனால் உங்க இரண்டு பேரில் ஒருத்தர் அப்பா கூடக் கட்டாயம் இருக்கணும். இனிமே இந்த அரசியல் கூட்டத்தை அண்டவிடக் கூடாது. “ என மாமனும் யோசனை சொன்னார்.
“நீங்க சொல்றது சரி தான் மாமா, பிஸ்னஸ் இங்கே செட் பண்ணிக்கிட்டு, அரசியல்ல இருந்து ஒதுங்கி இருப்போம். அது தான் அம்மாக்கும் நிம்மதி” என அதிபன் யோசனை சொன்னான்.
“நம்ம சொல்றோம், அப்பாவுக்குக் குணமானாலும், மதுவைப் பத்தி தெரிய வந்தா ,என்ன ஆவார்னு தெரியலையே. எனக்கு அதை நினைச்சாலே பயமா இருக்கு. அந்தம்மா நம்மக்கிட்ட முதவே பிரச்சனையைச் சொல்லியிருந்தா, இந்நேரம் அவுக மகளாவது உயிரோட இருந்திருக்கும் “ என ப்ரதிபன் விட்டேற்றியாகச் சொல்லவும்.
“பிரதி, இன்னும் என்ன உங்களுக்கு அவுங்க மேல கோபம், அந்தம்மா, இந்தம்மானு.மேனகாமான்னு சொல்லுங்க, இல்லை சின்னமான்னாவது சொல்லுங்க. பானு அத்தை இருந்து மாமாவுக்கு வேண்டியதை ,அவுங்க தான் செஞ்சிருக்காங்க நியாபகம் வச்சிக்குங்க “ எனக் கண்டித்தாள் ஆராதனா.
“அப்படியே சொல்லி பழக்கம் ஆயிடுச்சு, நீ ஒரேதா ஆரம்பிக்காதே, அது தான் அவுங்களையும் நம்மளோட தானே கூட்டிட்டு போறோம் “ எனச் சிடுசிடுத்தான் பிரதிபன்
“பிரதி, அம்மாவே மேனகாமாட்ட , பகைமை பாராட்டல, உனக்கு ஏன் இவ்வளவு சலிப்பு , கோபம் “ என அதிபன் கேட்கவும்,
“ பிரதிக்கு சின்ன வயசில் அப்பாவை பிரிஞ்ச ஏக்கம் தான், விடு போகப் போகச் சரியாகிடும், இப்ப அந்தப் பொண்ணுக்கு அவன் தானே கடைசிக் காரியமெல்லாம் செஞ்சான். இரண்டு பேரும் பிரதிக்குக் கொஞ்சம் ஸ்பேஸ் கொடுங்க” என மூத்த மருமகனுக்கு வக்காலத்து வாங்கினார் ரத்தன்.
“நீங்களும் அம்மாவும் தான் சித்தப்பா இவரை ஏத்தி வித்திட்டது. மேனகா ஆண்டிக்கு , பார்க்க வேண்டியது நம்ம கடமை, நீங்க பாட்டுக்கு அவுங்கள்ட்ட முகத்தைக் காட்டாதீங்க, மகளை இழந்துட்டு , மாமாவுக்ககா அத்தனையும் தாங்கிட்டு இருக்காங்க, நான் அவ்வளவுதான் சொல்லுவேன்” என ஆராதனா, சித்தப்பாவிடம் ஆரம்பித்துக் கணவனிடம் முடித்தாள்.
அலைகடல் நடுவே சுஹானா தீவில், அடுத்து வந்த நாட்களில் இரண்டு ஜோடிகளும் , ஜோடி ஜோடியாகச் சுற்றினர். காலையில் எதையாவது சமைத்து எடுத்துக் கொண்டு கடற்கரைக்குக் கூட்டிச் சென்றான் சந்திரதேவ். சில நேரம் அவளது கேள்வி, அவனது விளக்கம், அதில் அவளின் சந்தேகம் ,அவனின் கோபம், முறைத்தல் , வார்த்தை அம்புகள், வன்சொற்கள், சமாதானம், கேலி கிண்டல் எனச் சகலமும் கலந்ததாக அவர்களது பொழுது நகர்ந்தது. பவன் ப்ரீத்திக்குப் பொழுது போகவில்லை என்ற குறை இல்லாமல் நேரடி ஒளிபரப்பாகத் தங்களது. சண்டை சச்சரவு, ஊடல், கூடல்களால் ஹாசினி சந்திரா இருவருமே இளையவர்களைப் பிசியாக வைத்திருந்தனர்.
அங்கே அலைகடலிலிருந்து சற்று மேட்டுப்பாங்கான இடத்தில் முப்பது அடி அகலம் கொண்ட வட்ட நிலம் செடி கொடிகள் அகற்றப்பட்டுச் சமதளமாகச் சற்றே சாய்வாக இருந்தது. அதன் நடுவே H என்ற அடையாளம் வெகு நாட்களுக்கு முன் போடப்பட்டு மங்கி இருந்தது. ஹாசினிக்கு அதைப் பார்க்கவும் ஒரே ஆச்சரியம்.
சந்திரதேவிடம் இந்தத் தீவைப் பற்றி வினவினாள். " இது அப்பா, மாமா இரண்டு பேருமா ப்ளான் பண்ணி 99 வருஷ லீஸ்க்கு வாங்கினது. இந்திய ரேஞ்சில தான் வருது. சர்ப்ரைஸான ஒரு விசயம் சொல்லட்டா " என அவன் மர்மமாகச் சிரிக்கவும், அவளுக்கு ஆர்வம் மேலிட்டது.
" இது நம்ம இரண்டு பேர் பெயரிலும் முதல் உரிமையும் மத்தவங்க பெயர் கூடுதலாகவும் சேரும். அதாவது இந்தச் சுஹானா தீவே உன்னோடது தான் " என அவன் விளக்கம் சொல்லவும் பவன் வேகமாக ஹாசினிக்குச் சலாம் வைத்தான்.
" இதெல்லாம் கொஞ்சம் ஓவர் பாஸ். இந்தத் தீவோட ஓனரையே கிட்னாப் பண்ணி இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க. கொஞ்சம் நாள் முன்னாடி விவரம் சொல்லியிருந்தா, இவ்வளவு கஷ்டம் இல்லாமல் அவங்களை மரியாதையா கூட்டிட்டு வந்திருக்கலாம்" என அங்கலாய்த்தான்.
" ஆமாம் உங்க மேடம் தான் கேஜே பார்ட்டியையும், நஞ்சப்பாவையும் கட்டிட்டு அழுதாளே" எனவும், "அடுத்தக் கம்ப்ளைன்ட், யுவராஜ்ஜை கல்யாணம் பண்ண இருந்தேன்னு சொல்லுவீங்களே" என்றாள் ஹாசினி
சந்திர தேவ் சிரித்தவன், " பவன் நீ சொல்லு, ஊருக்குள்ள உன் மேடத்தையும் நஞ்சப்பாவையும் பத்தி என்ன பேசிக்கிட்டாங்க " எனக் கேள்வி எழுப்பினான்.
" பாஸ், நீங்களே அடி வாங்கிக்குங்க. என்னைக் கோர்த்து விடாதீங்க " என்றான் பவன்.
" ஓகே ரைட் எனக்கே தெரியும். அன்னைக்குப் பெங்களூர்லருந்து மங்களூர் கிளம்பும் போது, அதுக்குத் தான் அவனுக்கு நல்லா குடுத்தேன்" என அசட்டையாகச் சொன்னாள்.
" உன் கால்ல வந்து விழச் சொன்ன, யுவராஜ் அவுங்க அப்பன் மாதிரி இல்லை, கொஞ்சம் மானஸ்தன், அதனால தான் உன்னைப் போட்டுத் தள்ள ஏற்பாடு செஞ்சான்" எனப் பாதி உண்மையை மட்டும் சொன்னான் தேவ். தனது பெரிய கண்களை மேலும் விரித்து " நிஜமாவா" என்றாள்.
" மேம் ரெட்டி'ன்னு ஒருத்தனை வச்சு. மங்களூர்ல மூணு இடத்தில் உங்களை டார்கெட் பண்ணாங்க. ஒரு ஆக்சிடென்ட், ஒரு சூட்டிங், ஒரு பாம் ப்ளாஸ்ட்" என அசராமல் குண்டைத் தூக்கிப் போட்டான் பவன்.
" என்ன சொல்ற பவன், நம்ம மூணு பேர் தானே இருந்தோம். எப்படிச் சமாளிச்ச. நீ என்கிட்ட சொல்லவே இல்லையே. " என அதிர்ச்சியில் அப்படியே கீழே உட்கார்ந்தாள் ஹாசினி.
" எனக்கு மட்டும் எதாவது ஆயிருந்தா, அம்மா, அப்பா நிலைமை" என நினைக்கையிலேயே அவளுக்கு உடல் நடுங்கியது. சந்திர தேவ் பவனுக்கு வேறு எதுவும் சொல்லாதே எனக் கண்ணால் எச்சரித்தான். அவளருகில் அமர்ந்தவன், " அது தான் எதுவும் ஆகலைல விடு " என்றான் . ஏற்கனவே அந்த வேதனையைத் தன தாய் அனுபவித்து விட்டார் என்பது அவளுக்குத் தெரியாது.
" அப்புறம் எப்படித் தப்பிச்சோம்" எனப் பவனைப் பார்த்துக் கேள்வி எழுப்பினாள் ஹாசினி.
" என் காதில் ப்ளூ டூத் இருந்ததே. பாஸ் இன்ஸ்ட்ரெக்சன் கொடுத்துட்டே வந்தார். எத்தனை கிலோ மீட்டர் ஸ்பீட்ல போகனும், எந்த ரூட் எல்லா இன்ஸ்ட்ரெக்ஷனும் அவருது தான். இப்படி அவனுங்களை டைவர்ட் பண்ணித் தான் தப்பிச்சோம்" என விளக்கினான் பவன்.
" சந்திரா, நீ தான் என்னைக் கடத்துனன்னு நினைச்சேன். கடைசியில் நீதான் காப்பாத்தினியா" எனக் கலங்கினாள்.
" மேம் கடைசில இல்லை. ஒவ்வொரு நாளும். உங்க ஸ்பீச்ல இருந்து எல்லாமே பாயிக்கு போயிடும். நஞ்சப்பாவுக்கே தெரியாமல் நீங்க அமெரிக்க அக்சன்ட்ல பேசுற மாதிரி சின்னச் சின்னதா நிறைய மாற்றி இருக்கோம். லாஸ்ட் டே தான் எதுவும் பண்ண முடியலை" என்றாள். மூவரையும் மாற்றி, மாற்றிப் பார்த்தவள், உணர்ச்சி வயப்பட்டுப் போனாள்.
"நான் இப்போ எந்த வார்த்தை சொன்னாலும் அது குறைவு தான். பவன் உனக்கு யாரும் இல்லைனு நினைக்காத , என்னை உன் சிஸ்டரா நினைச்சுக்கோ. " என அவன் கையைப் பிடித்தவள் , ப்ரீத்தியையும் அணைத்துக் கொண்டாள் நால்வருமே உணர்வு பிழம்பாக இருந்தனர்.
பவன் தான் சட்டெனச் சூழலை மாற்றினான். " உங்களைச் சிஸ்டர்னு நினைக்கச் சொல்லி இருக்கீங்க. அப்ப இந்தச் சுஹானா தீவு எனக்கும் சொந்தம்" என்றான்.
" வச்சுக்கோ என்ன மோசமா போச்சு. " என்றவள் அந்தச் சமதளத்தைப் பற்றிக் கேட்டாள்.
"இது ஹெலி பேட், இரண்டு வருஷம் முன்னாடி இந்த ப்ராஜெக்ட் தான் ஆரம்பிச்சோம். இந்தியால இருக்கப் பணக்காரங்க, வளைகுடா நாடுகளில் இருக்கிறவங்களும் இது மாதிரி தனிமையான தீவை ரொம்ப விரும்புவாங்க. கோவாவிலிருந்து பதினைஞ்சு நிமிஷத்தில் வந்திடலாம். மஸ்கட்டே ஒரு மணி நேரத்துக்குள்ள தான். அதனால் இந்தத் தீவை உல்லாச விடுதியா கன்வர்ட் பண்றோம். அப்ப காட்டேஜ், ஹெலி பேட் போட்டோம். நம்ம அன்னைக்குப் போட்ல வந்து இறங்கினோமே அந்தப் பகுதி ஆழம் அதிகம், அதனால் லாஞ்சரே வந்து நின்னது. ஸ்பான்ஸர்ஸ் கிடைச்சா, மறுபடியும் ப்ராஜெக்ட் ஆரம்பிக்கலாம். அருவி இருக்கிறது பெரிய அட்வான்டேஜ். " என அந்த ப்ராஜெக்ட் பத்தியும் விளக்கினான்.
அவன் பேசப் பேசவே அரக்கன், அவள் இதயத்தில் அழகனாக அமரத் தொடங்கி இருந்தான். அவனது திறமையைப் பிரமித்துத் தான் பார்த்தாள்.
" ஆனாலும் இந்தத் தீவில் வந்த தான் ஹாலிடே கொண்டாடுனுமா. ரொம்ப அலோனா இருக்கு. ஆனால் உன்னோட கடத்தல் வேலைக்குச் சரியான இடம்" எனக் கேள்வியும் பதிலுமாக அவளே பேசவும், அதற்கும் விளக்கம் தந்தான்.
" இந்த ஆறு மாசம் கட்சித் தலைமை பொறுப்பில் இருந்தியே, முந்தி மாதிரி எங்கையாவது போக முடிஞ்சுதா" என்றான். அவள் இல்லை என இட வலமாக மண்டையை ஆட்டவும்.
" அதுக்குத் தான், அரசியல் வாதிகள், சினி ஆக்டர்ஸ், பிஸ்னஸ் பீபுள் இவங்களுக்கு எல்லாம், அவங்க அவங்களா இருக்க ஒரு இடம் வேணும். நாம அதைத் தான் செஞ்சு தரப் போறோம். இது ஒரு ரிலாக்ஸ் பண்ற இடம். பெரிய ப்ராஜெக்ட். உன் ப்ரெண்ட் பைனான்ஸ் பண்ணான்னா சீக்கிரம் ஆரம்பிக்கலாம்" என்றான்.
" மேத்யூவை சொல்றியா. ஆனால் உன்கிட்டையே நிறையப் பணம் இருக்குமே. எவ்வளவு காலமா பிஸ்னஸ் பண்றீங்க." எனக் கேட்கவும்.
" பெருமைக்குச் சொல்லலை, கிட்டத்தட்ட நாலு கான்டினெட்ல பத்து கன்ட்ரில இருபது ப்ராஜெக்ட் நம்மது ஓடுது. எல்லாரும் பறந்துக்கிட்டே தான் இருப்போம். எல்லா ப்ராஜெக்ட்டும் நம்மளே செலவு பண்ண முடியாது, அதுக்குத் தான் ஸ்பான்சர்ஸ். அவங்களும் இந்த இடத்தை நினைச்ச பொழுது வந்து ரிலாக்ஸ் பண்ணிட்டு போவாங்க. இந்து போல எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டு தான், சித்தப்பா அதி, பிரதி இந்தியாவில் உங்கள் அப்பாக்காக உட்கார்ந்து இருக்காங்க." என்றான்.
" புரியுது." என்றாள். " மேம், நான் சொன்ன மாதிரி, எங்க பாஸ் ஆறு மாசமா எல்லாத்தையும் சமாளிச்சுக்கிட்டு உங்க பின்னாடியும் திரியிறார். அதையும் புரிஞ்சுக்குங்க. நீங்க சீக்கிரம் புரிஞ்சிக்கிட்டிங்கனாத் தான் எங்களுக்கு, இந்தக் காலாப்பாணிலருந்து விடுதலை" எனச் சோகமாகச் சொன்னான் பவன்.
" காலா பாணியா" என ஹாசினி கேட்கவும், "போச்சுடா. இந்தா ப்ரியு சொல்லுவா. போய்க் கேட்டுக்கோ" என ப்ரீத்தியோடு ஹாசினியை அனுப்பி வைத்தான் சந்திர தேவ்.
சுற்றி, மலையும் காடும் அருவியுமாக ஏதோ மலைப்பிரதேசத்தில் இருப்பதைப் போல் உணர்ந்திருந்தவள், இன்று கடலைப் பார்க்கவும் உற்சாகமாகி இருந்தாள். ஆண்கள் இருவரும் ஹெலிபேட் நிற்கும் இடத்தில் பெரிய செடிகளை மட்டும் அகற்றி தயார் செய்யும் வேலையில் இருக்க, பெண்கள் அலைகடலில் விளையாடச் சென்றனர்.
" ப்ரீத்தி, வா கடலில் நின்னுட்டு வருவோம்" என அழைத்துச் சென்றாள் ஹாசினி. ப்ரீத்தியை அழைத்துக் கொண்டு சிறுமியாக மாறி, கடலலையில் விளையாடினாள். காலை நனைத்துக் கொண்டு, இங்கும் அங்கும் ஓடினாள். சிப்பிப் பொறுக்க, நண்டு வரும் போது பயந்து அலற. அலையில் கால் மாட்டினால் கூச்சலிட என விடுமுறையைக் கழிக்க வந்த சிறுமியாக மாறி இருந்தாள் ஹாசினி சந்திரா.
அவளைப் பார்த்த பவனுக்கே பாவமாகப் போனது. " மேம், சின்ன பிள்ளையாட்டம் எப்படி விளையாடுறாங்க பாருங்க பாஸ். இவங்க தான் ஒருவாரத்துக்கு முன்னாடி அவ்வளவு மிடுக்கா ஸ்டேஜ்ல பேசுனாங்கன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க " என்றான்.
" சின்ன வயசில் இருந்தே அவளுக்குத் தனிமை தான். எங்க கூட வந்து தங்குற ஒரு மாசம் தான் அவளுக்குச் சொர்க்கம்" எனப் பால்ய வயது நினைவுகளில் மூழ்கினான் சந்திர தேவ். ஹாசினின் பெரிய சத்தம் அவனை நடப்புலகுக்கு அழைத்து வந்தது.
ஒரு பெரிய கடலலை ஹாசினியை புரட்டிப் போட்டது. அலையில் உருண்டு பிரண்டாள். ப்ரீத்தியால் ஹாசினியைப் பிடிக்க முடியவில்லை. சந்திர தேவை அழைத்தாள். அவன் வேகமாக ஓடி வந்தான். அதட்டலோடு வந்து, ஹாசினியைத் தூக்கினான். அவள் அவனையும் சேர்த்து இழுத்து கீழே தள்ளினாள். ப்ரீத்தி அவர்களுக்குத் தனிமை கொடுத்து தன்னவனோடு பொழுதைக் கழிக்கப் பவனை நோக்கிச் சென்றாள்.
" ஹேய், இடியட்டா நீ. என்னையும் சேர்த்து இழுத்துப் போடுற" எனத் திட்டினான் சந்திரா. " ஏன் நீ தான் நீச்சல் சேம்பியன் ஆச்சே. என் அண்ணா இரண்டு பேரையும் தோற்க்கடிச்ச. ஓஹோ ஸ்விம்மிங் பூலில் மட்டும் தான் உன் வீரமாக்கும்" என அவனைச் சீண்டினாள்.
" இன்னைக்கு வா, நீ ஓய்ஞ்சு போற அளவு ஸ்விம் பண்ண வைக்கிறேன்" எனக் கடலுக்குள் இழுத்துச் சென்றான். " சந்திரா, கடலுக்குள்ள எனக்கு ஸ்விம் பண்ண முடியாது. எனக்குப் பயமா இருக்கும். மூச்சு முட்டும்" எனக் கத்தினாள்.
அவளைச் சேர்த்து இடையோடு அணைத்துக் கொண்டு நீந்தியவன் , அவள் காதில், "மது ட்ரெஸ்ட் மீ. நீ என் கூடப் பாதுகாப்பா இருப்ப" என இருவர் தலையும் கடல் நீருக்கு மேலே வெளியே விட்டு அவளையும் நீந்த வைத்தான். அவளின் இடுப்பைப் பிடித்திருந்த பிடி இரும்பாக இருந்தது. அவளும் இயல்பாகத் தன் கையை அவன் மீது போட்டு ஒட்டிக் கொண்டாள். வெயில் அடித்த போதும் கடலுக்குள் மிகவும் குளுமையாகவே இருந்தது. இருவரும் சுற்றம் அனைத்தும் மறந்து, உலகில் வந்த முதல் ஆதாம் ஏவாள் ஜோடி போல் மகிழ்ந்து இருந்தனர்.
" மது, ஹாசினி, ஹசி" என அவளை விதவிதமாக அழைத்தான் சந்திரதேவ். " ம் ,கேக்குது சொல்லு" என அவளும் குழைந்தாள். அலைகடலின் நடுவே அவளை நிறுத்தி, இறுக்க அணைத்துக் கொண்டவன் " ஐ லவ் யூ டி .ஹசி. ஐ லவ் யூ. ஐ லவ் மை ப்யுட்டி. மை மது டார்லிங்க்" எனக் காதலைச் சுமந்து சொன்னவன், அவளது இதழ்களை அரக்கத்தனமாகவே சிறை எடுத்தான். முற்றிலும் அவன் ஆதிக்கத்தில் தன்னை இழந்தவள், அவனுக்குத் தாராளமாகவே ஒத்துழைத்தாள். அதில் மகிழ்ந்தவன் பிறந்த பயனை அடைந்தவனாக மகிழ்ச்சியோடு அரபிக்கடலில் நீந்திக் கொண்டிருந்தான். ஹாசினியை தன்னை விட்டு நொடிப்பொழுதும் விலக அனுமதிக்கக் கூடாது, எனும் பிடிவாதமும், அவள் தன்னவள் மட்டும் தான் என்ற எண்ணமும் மேலும் அதிகமானது.
மஸ்கட்டில் தேவ்சந்த் மஹால், அனுசுயாதேவி போனில் நாத்தனார் பானுமதியுடன் பேசிக் கொண்டிருந்தார்." அண்ணி, உங்க ரூம்லையே அண்ணனுக்கும் வசதி பண்ணி கொடுத்துடுவோம். அவங்க அங்க தங்கிக்கட்டும். அந்தப் பொம்பளைக்கு வேற ரூம் ரெடி பண்றேன்" என்றார். இங்குக் கேட்டுக் கொண்டிருந்த நிரஞ்சனா , மயூராவிற்கே அவரது பேச்சு அதிர்ச்சியைத் தந்தது.
" அண்ணி, இது என்ன பேச்சு பேசுறீங்க. உங்களுக்கு மேனகா அங்க வர்றது பிடிக்கலைனா, பிரதிபன்கிட்டச் சொல்லி வேற வீடு பார்க்கிறேன் " என மொட்டையாகச் சொன்னார் பானு.
" அந்தப் பொம்பளையை அப்படிக் கூடத் தனியா வைங்க அண்ணி. நீங்க இத்தனை வருஷம் கழிச்சாவது அண்ணனோட சந்தோஷமா இருங்க " என்றார் அனுசுயா.
" அண்ணி, நான் சொல்றதை முழுசா கேளுங்க. நான் அப்படி வேற வீடு பார்த்தால், மேனகாவை மட்டும் அங்க வைக்க மாட்டோம். நான் என் புருஷன், புள்ளைங்க எல்லாருமே அங்க போயிக்கிறோம் " எனக் கண்டிப்பாகப் பேசினார் பானு.
அனுசுயா பதறினார், "அண்ணி என்ன சொல்றீங்க. இந்த வீடு உங்களுதும் தான். உங்க அண்ணன் மட்டும் இந்த வார்த்தையைக் கேட்க இருந்திருந்தாங்கன்னா, என்னைக் கொன்றே போட்டுருப்பாங்க. ஏன் சந்து கேட்டாலும் தொலைச்சுட்டான். இப்படி எல்லாம் பேசாதீங்க அண்ணி. நான் உங்க மேல இருக்க அக்கறையில் தான் அப்படிச் சொன்னேன் " என்றார்.
" அண்ணி, சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க என் மேல வச்சிருக்கப் பாசம் புரியுது. ஆனால் எனக்கு நம்ம வீட்டில் எனக்குக் கிடைக்கிற மரியாதை மேனகாவுக்கும் கிடைக்கனும். நான் அனுபவிக்க வேண்டிய கஷ்டத்தையும் இழப்பையும் அவள் தான் தாங்கிட்டு இருக்கா. இனி அப்படிப் பேசாதீங்க அண்ணி " என்றவர் நிரஞ்சனாவிடம் போனைத் தரச் சொன்னார்.
" அண்ணி, அக்கா சொன்னதைத் தப்பா எடுத்துக்காதீங்க " என ஆரம்பித்தார் நிரஞ்சனா.
" புரியுது ரஞ்சி. ஆனால் மேனகா ரொம்ப நொந்துபோயிருக்கா. இப்போ அவளுக்கு நம்ம ஆதரவு வேணும். அதுவும் போக, உங்க அண்ணனை அவள் தான் முழுசா கவனிக்கிறா. நான் கூட அப்பப்ப ஏதாவது பண்ணிடுறேன். அவள் தான் சமாளிக்கிற." என்றவர் தனது அறைக்குப் பக்கத்தில் அவர்கள் இருவருக்குமாக அறையைத் தயார் செய்யச் சொன்னார் .
" நீங்க இதைப் பத்தியெல்லாம் கவலை படாதீங்க. நான் பார்த்துக்குறேன் " என்றவரிடமிருந்து மயூரியும் வாங்கிப் பேசினாள்.
" அத்தை , நான் என் ரூமை ஷிப்ட் பண்ண ஆரம்பிச்சுட்டேன். உங்க மகன் ஏற்கனவே சொல்லிட்டாங்க. அவங்க அப்பாவுக்குப் பக்கத்திலையே , அம்மா இரண்டு பேரும் இருக்கனும்னு அதனால மிடில் டோரை ஓப்பன் பண்ணி சில சேஞ்சஸ் பண்ணிட்டேன். உங்களுக்குச் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சோம். பெரியம்மாவுக்கும் இதெல்லாம் தெரியாது. நீங்க கவலைப் படாதீங்க" எனச் சின்ன மருமகளும் மாமியார் கவலையைப் போக்கும் விதமாகச் சொன்னாள். அதன் பிறகே பானுமதி சமாதானம் ஆனார்.
நிரஞ்சனா மீண்டும் வாங்கி, "ஏன் அண்ணி, அங்க கிளம்பறதுல எதுவும் பிரச்சனை இருக்காதே " எனக் கேட்டார். " எனக்கு அதெல்லாம் எதுவுமே தெரியாதும்மா. ரதன், பசங்க மேனகா தான் எல்லாத்தையும் பார்க்குறாங்க. தேர்தல் முடிஞ்ச அடுத்த நாள் கிளம்புறோம். உங்க அண்ணனையே முதல் நாள் தான் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகனும்னு மேனகா சொல்லுது. அவர் ஆசையா கட்டின வீட்டில் கூட இருக்க முடியாம, இப்படி ஒரு நோவு" எனக் குறைபட்டார் பானு.
" அண்ணி, நீங்க வேணாப் பாருங்க, இங்க வந்த பிறகு அண்ணனுக்குச் சீக்கிரம் குணமாகிடும் " எனத் தைரியம் சொன்னார்.
" ஹாசினி விசயம் தான் , இந்தர்கிட்ட மேனகா எப்படிச் சொல்லப் போகுதுன்னு தெரியலை. வீட்டில் மகள் படத்தையே பார்த்து அழுதிட்டு இருக்கிற பொம்பளை, இந்திரை பார்க்க ஹாஸ்பிடல் வந்தா எதையுமே காட்டிக்காம அப்படி இருக்கும். அதுவும் இந்தர் வார்த்தைக்கு வார்த்தை மகளைச் சொல்லும் போது, எனக்கே தாங்க முடியாது. இதெல்லாம் ரொம்பக் கொடுமை ரஞ்சி" எனப் புலம்பினார் பானு.
" ரஞ்சி நீ கேட்டால் ஆச்சரியப் படுவ. சந்திரபவன்ல , இப்ப நான் உட்கார்ந்திருக்க என்னோட ரூம் அப்படியே இருக்கு. இந்தர் வாரத்தில் இரண்டு நாள் இந்த ரூம்ல தான் தங்குவாராம். நான் தான் அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் வந்துட்டேன் " எனத் தம்பி மனைவியிடம் தனது அறையில் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார் பானு.
அதே நேரம் மேனகா மருத்துவமனையில் எஸ்.ஆர். சந்திராவுடன் இருந்தார். இன்னும் இரண்டு நாள் தான், இந்தப் பெங்களூருவை விட்டுக் கிளம்ப வேண்டும். தெரியாத ஊர், மூத்தவர் குடும்பத்தோடு தங்க வேண்டும். கணவர் கூடவே இருப்பார். என்ன இருந்தாலும் பெங்களூர் அவரது கோட்டை. நினைக்கையில் மலைப்பாக இருந்தது. ஆனால் இறந்து விட்டதாக ஊர் பேசும், தன் மகள் ஏசுநாதர் போல் உயிர்தெழுந்து அங்குத் தான் வருவாள் என உறுதியாக நம்பினார்.
சந்திரதேவின் சங்கேதமான வார்த்தைகள், அதற்கு அதிபன் தந்த நம்பிக்கை எல்லாமுமாக மஸ்கட் செல்லத் தயாரானார். இதில் மிக முக்கியமாகக் கணவர் பெயருக்குக் களங்கம் ஏற்படாமல் காப்பாற்றி அழைத்துச் செல்கிறோம் என்ற திருப்தி இருந்தது. அவருக்காகத் தானே தன் வாழ்க்கையே என எண்ணியவர், பானுமதி குடும்பத்துக்குத் தன்னைப் பிடிக்காவிட்டாலும் அனுசரித்துக் கொள்வோம் என முடிவெடுத்தார்.
மேனகா, ஷோபாவில் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருப்பதைப் பார்த்த சந்திரா, " ஏனம்மா என்ன ஆச்சு " என அருகில் வந்து அமர்ந்தார். அவர் தோள் சாய்ந்த மேனகா, " ராம்ஜி, அக்கா ஆசைக்காத்தான் மஸ்கட் போறோம். இங்க கட்சி, வீடு எல்லாத்தையும் விட்டுட்டுப் போறோம். உங்களுக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே " எனக் கேட்டார்.
" நம்ம மஸ்கட் போறமா" என அவர் குழந்தையாக வினவவும், ஆம் எனத் தலை ஆட்டினார்.
" எனக்கு என்னம்மா எல்லா ஆசையும் விட்டுப் போச்சு. நல்லா வாழ்ந்தாச்சு. இனி என்ன, நீ மட்டும் கடைசி வரைக்கும் என் கூட இரு போதும். பானு வந்துட்டாளேன்னு நீ என்னை விட்டுட்டுப் போயிடாதே " என உணர்ச்சி வயப்பட்டார். அவர் கண்களிலிருந்து இரண்டு முத்துக்கள் உதிர்ந்து அவரைப் பற்றியிருந்த மேனகாவின் கைகளில் பட்டது. அதன் பிறகு தான் அவர் அழுதார் என உணர்ந்தவர் பதறிப்போனார்.
" ராம்ஜி, உங்க கண்ணிலிருந்து கண்ணீர் வரலாமா. நான் உங்களை விட்டு எங்கயும் போக மாட்டேன். நீங்களே கோபமா திட்டினாலும் உங்க காலைத் தான் நாய் மாதிரி சுத்தி வருவேன்" எனச் சொல்லவும்,
" மேனு தப்பாச் சொல்ற, சந்திரா தான், மேனகா வளர்த்த நாக்குட்டியாட்டம் ஆகிட்டான்" என அவர் மடியில் படுத்துக் கொண்டார். மேனகா கலகலவெனச் சிரித்தவர், "உங்களுக்கா சமாளிக்கத் தெரியாது." என இலகுவாகப் பேசி தன் பாரத்தையும் குறைத்துக் கொண்டார்.
அடுத்த நாள் தங்கப்பாண்டியன் ஐபிஎஸ், மேனகாவைச் சந்திக்க அனுமதி வாங்கிக் கொண்டு யாரும் அறியாமல் மருத்துவமனைக்கே , எலக்ட்ரிசியன் போல் மாறுவேடத்தில் யார் கவனத்தையும் கவராமல் வந்தார். மேனகாவின் அனுமதி இருந்ததால் எஸ்.ஆர்.சி உறங்கும் நேரம் அவர் இருந்த அறைக்கு அடுத்த அறையிலேயே சந்தித்தார்.
தங்கப்பாண்டியன், ஹாசினி படுகொலைச் செய்யப்பட்ட அன்றைய தினத்தை அவளுடைய ஒவ்வொரு நிகழ்வையும் எடுத்துச் சொன்னார். ஊடகங்களில் ரெட்டி என்பவரைப் பற்றிப் பேசப்படுவதை மேனகா கேட்டார்.
" ஒரு இடத்தில் இல்லை மேடம் மூன்று இடத்தில் ஹாசினியை கொல்ல முயற்சி செய்திருக்காங்க. இரண்டில் தப்பிச்சவங்க மூன்றாவது ஸ்பாட்ல மாட்டிட்டாங்க. ஐ யம் சாரி. " என்றவர்
"இன்னைக்கு மீடியால வெளி வந்த புகைப்படங்கள் இல்லாமல், இன்னும் நிறைய எவிடென்ஸ் எங்ககிட்ட இருக்கு. ஒரு சாட்சி கிடைச்சா போதும், அக்யூஸ்ட்டை தூக்கிடுவேன்" என்றார் பாண்டியன்.
" ஹாசினி மேல யாருக்கு அவ்வளவு வன்மம். என் பொண்ணு என்ன செஞ்சா. எல்லா இடத்திலையும் அரசியல் வாரிசுகள் வரத்தானே செய்யறாங்க " என ஆதங்கமாகக் கேள்வி எழுப்பினார்.
" எதிர் கட்சி தான்னு இல்லை மேடம், கூட இருக்கவங்களையே நம்ப முடியாது. தேர்தல் முடியட்டும் , ஐ ப்ராமிஸ் யூ . உங்களுக்கு நியாயம் கிடைக்கும். எனக்கு நிறைய விசயத்தில் உங்க கோவாபரேசன் வேணும். நீங்க என்னை நம்பலாம். உங்க குடும்பத்துக்கு என்னால எந்தக் கெடுதலும் வராது.
நானும் பெரிய குடும்பத்தில் பிறந்தவன் தான். எங்க பெரியப்பாவும் தமிழ்நாட்டில் மந்திரியா தான் இருக்கார். உங்க கஷ்டம் எல்லாமே எனக்குப் புரியும். எல்லாத்தையும் தாண்டி நாங்க சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவோம். உங்க கணவருடைய பாதுகாப்பை கவனிச்சவன்கிற முறையில் சொல்றேன். அவருக்குச் சொந்த கட்சியில் சில ஆட்களைத் தவிர, வேற எந்தக் கட்சிக்காரங்களோடையும் பகைமை கிடையாது. எதிர்கட்சிகாரனா இருந்தாலும், வாலண்டையரா அவங்க நல்லது கெட்டதை விசாரிக்கிறவர். நீங்கள் உங்களுக்கு ஒரு தம்பி இருந்தா எப்படி நம்பி சொல்லுவீங்களோ. அப்படி நம்பி சொல்லலாம்" என மேனகாவைப் பேசியே கரைத்தார் தங்கப் பாண்டியன்.
தங்கப்பாண்டியன் பேச்சில் உண்மை இருப்பதாகத் தெரியவும், நஞ்சப்பாவைப் பற்றிய தகவல்களையும், ஹாசினி அரசியலுக்கு வந்த சூழல் எல்லாவற்றையும் சொன்னார்.
"தம்பி, ராம்ஜியை எந்தக் கேஸ்லையும் இழுத்து விட்டுடாதீங்க. அவர் பெயர் எதிலும் அடிபடுறது கூட வேண்டாம். அதுக்குத் தான் நானும் என் மகளும் இத்தனை அனுபவிச்சோம் " எனவும்.
" மேம், நஞ்சப்பா உங்களை ஏமாற்றி இருக்கார்னு தான் சொல்லனும். சந்திரா சார் கையெழுத்துப் போட்டது, சட்டத் திருத்த மசோதா. அதுல அவர் தன்னிச்சையா எல்லாம் கையெழுத்துப் போட முடியாது. சட்டசபையில் நிறைவேற்றி சாருடைய கையெழுத்து, முதலமைச்சர், ஆளுநர் எல்லாரும் போடனும். அப்படிச் சரியான முறையில் நிறைவேறிய மசோதா. இதில சந்திரா சாரை குற்றம் சுமத்துனா, அதில கையெழுத்துப் போட்ட அத்தனை பேரையும் கேள்வி கேட்கனும். " எனத் தங்கப் பாண்டியன் விளக்கம் தரவும்.
" அப்புறம் ஏன் சிவராஜ் எங்களை மிரட்டனும்" எனக் கேட்டார் மேனகா. "அது தான் அவருடைய தந்திரம். ஆனால் நிலக்கரி காண்ட்ரேக்ட்ல விளையாடினது அவர் தான். கட்சிக்குப் பணம் சம்பாரிச்சு தந்த மாதிரி ஒரு மாயத் தோற்றம். அதை வச்சு தான் , கட்சியிலுமே முன்ன வந்திருக்கார். நீங்க கவலைப் படாமல் இருங்க. சார் கிட்ட எந்த விசாரணையும் வராது. நான் அவர் ஹெல்த் கண்டிசனை வச்சு அவர்கிட்ட விசாரணை வராமல் பார்த்துக்குறேன் " என நம்பிக்கை தந்தவர்,
" உங்க கணவருடைய மெடிக்கல் ரிப்போர்ட் வேணும். அவருக்குக் கொடுக்கிற மருந்தில் எனக்குச் சந்தேகம் இருக்கு " எனவும் மேனகா கலவரமானார்.
" ஆனால் இரண்டு மூணு டாக்டர் செக் பண்ணாங்களே. சர்ஜரி பண்ணதே வெளிநாட்டு டாக்டர் தான்" என்றார்.
" அதிலையும் நிறைய இருக்கு. உங்கக்கிட்ட இருக்கிற மெடிக்கல் ரிபோர் எல்லாமே எனக்கு ஒரு செட் வேணும். நீங்களும் பத்திரமா வச்சுக்குங்க. தேர்தல் முடியவும் எல்லாத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவோம்" என்றார்.
" பாண்டியன், அடுத்த நாளே அவங்களை மஸ்கட் கூட்டிட்டுப் போகலாம்னு பார்க்கிறோம். அதுக்கப்புறம் நான் அமெரிக்கா கூட்டிட்டுப் போய் அவருக்கு வைத்தியம் பார்த்துக்குறேன். வேற எதுக்காகவாது வரனும்னா, நான் வர்றேன். ராம்ஜியை உள்ளே இழுக்க வேண்டாம்" என மீண்டும் கேட்டுக் கண்டார் மேனகா.
"ஓகே மேடம் நான் சில டாக்குமெண்ட்ஸ் தர்றேன். நீங்க கொஞ்சம் ரகசியமா, உங்க வெல் விஸ்ஸர்ஸ் இருந்தால் அவங்கள்ட்ட மட்டும் கன்சல்ட் பண்ணிட்டு கையெழுத்து போடுங்க. நானே வந்து வாங்கிக்கிறேன். ரொம்பக் கவனமா இருங்க. இங்க இருக்கிற லாயர்ஸ் , கட்சி காரங்களுக்கு எந்தச் சந்தேகமும் வரக்கூடாது. " எனத் தனது கைப்பெட்டியிலிருந்து சில கோப்புகளை எடுத்துத் தந்தார்.
" இதுவே, நீங்க வெளிநாடு கிளம்பறதா அன்னைக்குச் சொன்னதால ரெடி பண்ணேன். முதலமைச்சரும் கேஸ்ல ரொம்ப ஆர்வமா இருக்கார். அநேகமா நாளைக்குச் சந்திரா சாரை பார்க்க வருவார். நீங்க எதுக்கும் கவலை படாதீங்க. " என நம்பிக்கை தெரிவித்தவர்.
" மேடம் ஹாசினிக்கு டிவின்ஸ் யாரும் இருக்காங்களா " எனப் பூடகமாகக் கேட்டார் தங்கப்பாண்டியன். மேனகா அதிர்ச்சியாகப் பார்க்கவும், " அது மாதிரி இன்னொரு பொண்ணு இருந்தால் உங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்குமே. அதுக்காகக் கேட்டேன். " என்றவர்.
" சாரைப் பார்க்க முடியுமா. நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஒரு வெல்விஸ்ஸரா பார்க்கனும்னு ஆசை. நீங்கள் தான் அவரை வெளிநாட்டுக்குக் கடத்துறீங்களே " என்றார்.
மேனகா, அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல், " இதோ பார்த்திட்டு வர்றேன் " எனப் போனவர், தங்கப் பாண்டியனை வரச் சொன்னார்.
தங்கப்பாண்டியன் உள்ள நுழைந்து சல்யூட் அடிக்கவும், மேனகாவே அவர் யாரென எடுத்துக் கொடுத்தார். " ராம்ஜி, ஐபிஎஸ் ஆபீஸர், உங்க பாதுகாப்பை கவனிச்சாரே.அவர் வைப் கூட ஐஏஎஸ் ஆபீஸர். ஐயரூட்டு பொண்ணு, ஆபீஸருக்கு கறி மீனு வச்சுப் போடுன்னு கிண்டல் பண்ணுவீங்களே " என நினைவு படுத்தினார்.
" நைஸ் டூ மீட் யூ சார்" என்றார் பாண்டியன். " தெரியுது. என் தொண்டர்களைக் கூடப் பக்கத்தில் வரவிடமாட்டார். உங்க குடும்பமும் அரசியல்ல இருக்காங்கல்ல" என்றார்.
" எஸ் ஸார், தாத்தா எக்ஸ் எம்எல்ஏ. பெரியப்பா இப்ப தமிழ்நாடு ஸ்டேட் மினிஸ்டர். அடுத்த வாரிசா அண்ணன் இருக்கார்" என்றான்.
" நமக்குத் தான் அரசியல் வாரிசு இல்லை. பசங்க எதுவும் அரசியலுக்கு வரமாட்டேன்னு சொல்லிடுச்சுங்க. சரி சினிமாவும், அரசியலும் எங்களோட போகட்டும்" என்றவர் , அவரது குடும்பத்தைப் பற்றி விசாரித்து வாழ்த்துக்களைச் சொன்னார். தங்கப் பாண்டியனும் நேரத்தை வீணாக்காமல் அவரிடம் விடை பெற்றுக் கிளம்பினான். ஆனால் சந்திராவையும் வீடியோ எடுத்துக் கொண்டான். அந்த அறையிலிருந்த மாத்திரைகளையும் மனதில் குறித்துக் கொண்டான்.
மீண்டும் எலக்ட்ரிசியன் வேஷத்தில் இவனை வழியனுப்ப வந்த மேனகாவிடம். " நான் உங்க போன் காலுக்காக வெயிட் பண்ணுவேன் மேடம்" என நினைவு படுத்திச் சென்றான்.
மேனகா அன்றிரவு அங்கேயே தங்கியவர், அதிபனிடம் தங்கப்பாண்டியன் தந்த கோப்புகளைக் காட்டினார். அவற்றைப் படித்துப் பார்த்தவன் ," இருக்கட்டும் மா. நாளைக்குப் பதில் சொல்றேன்" என அதனை ஸ்கேன் செய்தவன் சந்திதேவ்க்கு அனுப்பி வைத்தான். அடுத்த நாள் காலையில் அதனைப் பார்வையிட்ட சந்திர தேவ் பச்சைக் கொடிக் காட்டினான். அதனை அனுசரித்து ஸ்டீபன் மூலம் அடுத்தக் காயை நகர்த்தினான்.
உண்மையில் தங்கப்பாண்டியன் ஐபிஎஸ் ம், சந்திராவும் தான் நஞ்சப்பா மற்ற அனைவரையும் வைத்து இந்த விளையாட்டை விளையாடினர். ஒருவருடைய நகர்வை அடுத்தவர் கண்காணித்து நஞ்சப்பாக்களை நசுக்கத் தான் திட்டம் போட்டனர்.
ஆனால் சந்திரதேவ், ஸ்டீபன் சொன்னது போல் கிளம்பி இருந்தால் பிரச்சனை இல்லை. சுஹானா தீவைப் புயல் மையம் கொண்டது. சந்திரதேவ் ஹாசினி சந்திராவை மையம் கொண்டான். விசாரணை அதிகாரியின் கவனமும் இவர்கள் மேல் மையம் கொண்டது. ஹாசினி உயிரோடிருப்பது தெரிய வருமா, சிறை செல்ல இருப்பது யுவராஜா, சந்திரா தேவா. பொறுத்திருந்து பாப்போம்.
No comments:
Post a Comment