ஹாசினி சந்திரா-12
மாலைப் பொழுதில் போனில் அத்தை, மாமா என அளவளாவி அவளை அவளின் பெற்றோர் குரல்களையும், அவர்கள் தங்கள் திருமணத்தை அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கையும் விதைத்து, சுஹானா தீவிலேயே அவளைத் தனது மனைவியாக்கிக் கொள்ளத் துடித்தான் சந்திர தேவ். ஏனெனில் பாலைவன நாட்டிற்குச் சென்ற பின் அவளது மனநிலை வீட்டின் சூழ்நிலை எப்படி இருக்கும் என்பதை அவனால் அனுமானிக்க முடியாமல் இருந்தது. ஏதாவது ஒரு வகையில் ஹாசினிக்கு அடுக்கடுக்காய் தளைகளைப் பூட்டி அவளை அவனோடே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவனது குறியாக இருந்தது. இதில் கட்டாயம் ஹாசினியின் மனதைக் காயப்படுத்துவோம் என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் தெரிந்தே தான், இந்த வழியில் செல்கிறான் சந்திரதேவ்.
ஆரம்பத்தில் சில விசயங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு தவறான முடிவுகள் எடுத்ததில் அவர்கள் இருவருக்குமே சம பங்கு இருந்தது. சந்து , ஹாசினியை மேத்யூவுடன் சேர்த்து தவறாக நினைத்தான். இப்போதும் அவனுக்கு மேத்யு மேல் வைத்திருக்கும் அன்பைப் பற்றிய பொறாமை இருந்தது. அதையும் தாண்டி மயக்கத்தில் அவனைத் தான் நினைத்தாள் என்ற ஒன்றையும், தான் அவள் மீது கொண்ட காதலை தன் வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு இத்தனை நாள் மேத்யூவிடம் ஒப்படைக்க நினைத்தவன், தனது நினைவை மாற்றிக் கொண்டான். தனது தாயை எப்படியாவது சரிக்கட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தைத் தன் மனதில் ஆழமாக விதைத்துக் கொண்டான். அது தான் எதையும் நினைத்ததை நடத்தி முடிப்பவன் ஆயிற்றே.
ஹாசினியின் தவறு என்பது, அவளறியாமல் நஞ்சப்பா வலையில் விழுந்தது. அப்பாவின் பெயருக்குக் களங்கம், அவர் சிறை செல்லும் அபாயம் இருப்பதை , மிரட்டலாக இல்லாமல், அவள் வந்தால் தான் காக்கமுடியும் என முதலில் சொல்லி வைத்தவர், படிப்படியாக மிரட்டலில் இறங்கினார்.
ஹாசினிக்கு அரசியல் சூட்சமம் தெரியாது. அதே போல் நஞ்சப்பா காட்டிய பத்திரங்களின் விவரமும் புரியவில்லை. யாரைக் கேட்டு விளங்கிக் கொள்வது. யாரிடமாவது கேட்டால் அவர்கள் தந்தையை அந்த வழக்கில் சிக்க வைத்து விடுவார்களோ என அஞ்சினாள். பசவைய்யா கொஞ்சம் நம்பிக்கை வாய்ந்தவராக இருந்தார். ஆனால் இந்த விசயத்தை ஆராய்ந்து சொல்வதாகச் சொல்லி விட்டார்.
இன்று அதிபன் நஞ்சப்பா மிரட்டியதைச் சொல்லவும், சந்திரதேவ்க்குக் கோபம் பலியாக வந்தது. ஹாசினியை கொலை செய்ய மகன் ஆள் அனுப்பினால் அப்பன் கட்சியைக் கைப்பற்றத் திட்டமிடுகிறானா என்ற கோபம். இவள் இந்த நஞ்சப்பாவுக்கு வளைந்து கொடுத்ததில் அதன் பிறகு அந்த ஆள் செய்த பேரம் எல்லாம் சந்திரதேவ்க்கு அத்துப்படி.
அதிபனோடு பேசி போனை வைக்கவும் கடுகடு என முகத்தை வைத்துக் கொண்டவன், " நீ கீழே இறங்கி, வந்த பாதையிலேயே காட்டேஜ்குப் போ" எனக் கட்டளையிட்டான்.
அவ்வளவு நேரம் தனது பெற்றோருடன் வார்த்தையாடியவன், திடீரென என்ன வந்தது என யோசித்தவள், அத்தனையும் நடிப்பு என முடிவுக்கு வந்தாள். அதை அவனிடம் காட்டவும் செய்தாள்.
" உன் வேலை ஆகிறவரைக்கும் நடிச்சியாக்கும். இது நடிப்பா, இல்லை அப்பா அம்மாவோட பேசுனியே அது நடிப்பா" என நாவினால் சுட்டாள். அவள் தாடையை இறுகப் பற்றியவன், "இரண்டுமே நடிப்பு இல்லடி அறிவு கெட்டவளே. " என வார்த்தையைக் கடித்துத் துப்பியவன்.
" இடியட் மாதிரி நீ செஞ்ச வேலை, அந்த நாய், உன்னைப் பலி வாங்கினது பத்தாதுன்னு உங்க" என ஆரம்பித்தவன் பாதியில் நிறுத்தி விட்டு, அவளையும் விடுத்து மறு புறம் திரும்பி, மரத்தில் முஷ்டியைக் குத்தினான்.
" சந்திரா, என்ன செய்யற " எனப் பதறி அவன் கையைப் பற்றியவள், கண்ணீர் மல்க தன் துப்பட்டாவால் அவன் கையைத் துடைத்தாள்.
" ஏன் இப்படிப் பண்ற. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு. பலி வாங்குனதுன்னு ஏதோ சொன்னியே. என்ன எனக்குப் பயம்மா இருக்கு, அப்பா, அம்மாவை எதுவும் செய்ய மாட்டாங்கல்ல " எனக் கேட்கும் போதே , அவன் கையைப் பற்றியிருந்த அவளது கை நடுங்கியது. அவளது நிலையைப் பார்த்தவன் தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து, அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
" பயப்படாதடி. அவன் ஒன்னும் செய்ய முடியாது. நான் பார்த்துக்குறேன். என்னை நம்பு" என அதே வார்த்தைகளை மந்திரம் போல் திருப்பிச் சொன்னான்.
" என்னையும், அங்கிருந்து கடத்திட்ட. நீயும் இங்க உட்கார்ந்துகிட்டு என்ன செய்யமுடியும். அந்த ஆள் மோசமானவன், கட்சி அவன் கைக்கு வரனும்னா அப்பாவை எதுவும் செய்யவும் கூடத் தயங்க மாட்டான்" எனப் பதறினாள்.
" ஹசி நீ பயப்படாத. உன் பயம் தாண்டி அவன் பலமே. நீயும் உங்கம்மாவும் பயந்ததைத் தான் அவன் சாதகமா யூஸ் பண்ணிக்கிட்டான். உன் அண்ணன் இரண்டு பேர், அம்மா இரண்டு பேரைத் தாண்டி எமன் கூட உங்கப்பாவை நெருங்க முடியாது. அதுவும் இல்லாமல் கட்சி அவன் கைக்கு வர்றதுக்கும் உங்கப்பா இதே மாதிரி இருக்கிறது தான் அந்த நஞ்சப்பாக்கு நல்லது. அதனால் ஒன்னும் செய்ய மாட்டான். செய்யவும் முடியாது, விடமாட்டேன். என் மேல நம்பிக்கை வை" என அவளைச் சமாதானம் செய்தவன்.
" நீ கீழ இறங்கு. அவனுக்குச் சமாதி கட்டிட்டு வர்றேன்" என்றாள். " ஐயோ சந்திரா, ப்ளீஸ் மர்டர் எல்லாம் வேண்டாம்" எனப் பயந்தாள்.
" ம்ப்ச், அதுக்கு அந்த அர்த்தம் இல்லை. அவன் சாகிறதில் நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. நான் எனக்கு வேணும்கிறதை கடத்திக்கிட்டக் கடத்தல்காரன் மட்டும் தான். கொலைகாரன் இல்லை. நீ போ. " என்றான். அவள் சந்தேகமாக அவனையே பார்க்கவும், " ட்ரெஸ்ட் மீ கொலை மட்டும் பண்ணமாட்டேன். மத்தபடி எப்படி அடிக்கனுமோ அப்படி அடிப்பேன்" என அலட்சியமாகச் சொல்லவும்,
" நீ ப்ஸ்னஸ் தானே பண்ற. அண்டர் வேல்ட் டான் மாதிரி பேசுற" எனக் குறைப் பட்டாள். " ஏன் உங்க அப்பா பேசி பார்த்தது இல்லையா" எனவும், " ஹோய், எங்கப்பா ஜென்டில் மேன்" எனச் சீறினாள்.
" அவர் ஒரு சக்ஸஸ் புல் நடிகர், கட்சித் தலைவர், பல தொழிலில் பங்குதாரர். இரண்டு குடும்பம் வச்சிருந்தவர். ஜென்டில்மேனா இருந்திட்டு இதெல்லாம் சாத்தியம் கிடையாது. " என அவன் முகத்தை எகத்தாளமாக வைத்துக் கொண்டு வம்பிழுக்கவும்,
" உன்னை மாதிரி எங்கப்பா யாரையும் கடத்தல, அரக்கன் வேலையும் செய்யலை அவர் ராம்ஜி" என அப்பாவுக்கு ஏற்றுக் கொண்டு வந்தாள்.
அவன் கேலிப் புன்னகையோடு, " ஆமாம் ஆமாம் ராம்ஜி தான். ஒரு பொண்டாட்டியைப் பாலைவனத்துக்கு அனுப்பிட்டு, அடுத்தக் கல்யாணம் பண்ணிக்கிட்ட ராம்ஜி " எனவும்
" எங்கப்பா ஒன்னும் பெத்தம்மாவை அனுப்பலை. அவங்களா தான் போனாங்க. எங்கம்மாவும் எங்கப்பா மேல எவ்வளவு மரியாதை வச்சிருக்காங்க தெரியுமா. தன்னையே கொடுக்கிற அளவுக்கு அவர் மேல லவ் வேற " என அன்று மேனகா தன்னிடம் சொன்ன அந்தரங்கத்தை நினைத்தபடி அப்பா ஜென்டில் மேன் என வாதிட்டாள் ஹாசினி.
அவனும் விஷமமாகவே "அப்பச் சரி உங்க அப்பா, அம்மா இரண்டு பேரும் பர்மிஷன் குடுத்துட்டாங்க. அப்புறம் என்ன அவங்களை மாதிரியே , நாமளும் கந்தர்வ முறைப்படி கல்யாணம் பண்ணிக்கலாம்ல" என அவளிடம் திருமணத்துக்குச் சம்மதம் கேட்டான்.
" அப்படின்னா" என அவள் விளக்கம் கேட்டாள். " நீ உங்கப்பா நடிச்ச ராஜாக்காலப் படம் பார்த்தது இல்லை, கதை எங்கப் படிச்சிருக்கப் போற" எனக் குறைப்பட்டவன்.
" இது மாதிரி தீவுல , ஆணும் பெண்ணும் ஒருத்தர், மற்றவருக்காக வாழ்றதா ப்ராமிஸ் பண்ணிக்குவாங்க. காட்டு மலர்களையே மாலையா மாத்திகிட்டு அப்படியே குடும்பம் நடத்த ஆரம்பிச்சிடுவாங்க. அது தான் காந்தர்வ முறை. இதுக்குச் சாஸ்திரம் ஒப்புதல் தருது. " என்றான் அவன்.
அவனை முறைத்தவள், " இதுக்கு நீ ஸ்டைட்டாவே உன் கூட ரிலேசன்சிப்ல இருக்க வரச் சொல்லிக் கூப்பிட்டு இருக்கலாம். நான் ஸ்டேட்ஸ் இருந்தவ, அவங்க கலாச்சாரமும் எனக்குப் புரியும்" என்றாள். அவனுக்குச் சுருக்கென மனதில் தைத்தது. 'நான் என்ன சொல்றேன், இவ என்ன சொல்றா' எனும் கோபம் வந்தது.
" நான் வாழ்க்கை முழுதுக்குமான உறவை பத்தி பேசுறேன். மேத்யூஸ் மாதிரி லிவ்விங் டு கெதருக்கு கூப்பிடலை" என்றான் கோபமாக.
அவனை விடக் கோபமாக அவனது சட்டைப் பிடித்து இழுத்தவள், "அவனைப் பத்தி தப்பா பேசாத. ஐ வில் கில் யு. இவ்வளவு அசிங்கமான நினைப்பை வச்சுக்கிட்டு, எதுக்குடா என்னைக் கல்யாணம் பண்ணனும்னு அவசரப்படுத்துற " என முகம் தீயாகத் தகிக்க உச்சஸ்தாயில் கேள்வி கேட்டாள்.
" ஹேய், நீங்க ஒரே வீட்டில் இருந்ததைத் தான் மீன் பண்ணேன்" எனத் தனது பேச்சை நியாயப்படுத்தும் விதமாகவும், அவனைச் சொன்னவுடன் கோபம் வருகிறதோ என்ற பாவமும் அதிலிருந்து.
"எல்லா ஆம்பளைக்கும் இருக்கிற சந்தேகப் புத்தி தான். நீ மட்டும் என்ன விதிவிலக்கா என்ன. தயவு செஞ்சு என்னைக் கல்யாணம் பண்ணனும்கிற நினைப்பை மட்டும் விட்டுடு. இப்படிக் குத்திப் பேசினேனா, உயிரோடையே செத்துடுவேன்" என அதே வெறுத்த உணர்வோடு சொன்னாள். அவள் முகத்திலிருந்த வேதனை அவனைப் பாதித்தது,
" சரிடி, நான் அப்படி எதுவும் நினைக்கலை. அது சாதாரணமா வந்தது. மேத்யுவும் நீயும் ஒரே வீட்டிலிருந்ததைத் தான் அப்படிச் சொன்னேன். வார்த்தைக்கு வார்த்தை குத்தம் கண்டு பிடிக்காத" எனக் கத்தினான் சந்திர தேவ்.
" ஆமாம் சத்தமா பேசிட்டா, நீ பேசினது ஞாயம் ஆயிடும். யு ஆர் சாடிஸ்ட். குப்பை மாதிரி புத்தியை வச்சிருக்க " எனப் பொரிந்து விட்டு கீழே இறங்கப் போனாள். " ஹசி கோவிச்சிட்டு போகாதடி. நான் அப்படி மீன் பண்ணலை. ஓகே. ஐயம் சாரி" எனத் தன்னிலை இறங்கி வந்தான்.
" ஆகா , பெரிய மனசு பண்ணி சாரி கேக்குற. நீயே வச்சுக்க உன் சாரியை. உனக்கும் எனக்கும் எப்பவுமே ஒத்து வராது. உங்கம்மா பார்க்கிற பொண்ணைப் போய்க் கட்டிக்கோ. நான் எல்லாம் உனக்குச் செட்டாக மாட்டேன்" எனச் சொல்லிக் கொண்டே இறங்கினாள், அவனுக்கு முக்கியமான விசயம் போனில் பேச வேண்டியது இருந்ததால் பிறகு சமாதானம் செய்து கொள்வோம் என அங்கேயே நின்றான்.
பாதையில் கவனம் இருந்த போதும் பழக்கம் இல்லாததால் கால் இடறியது. "பார்த்துடி" என அவளையே பார்த்திருந்தவன் மேலிருந்து கத்தினான். திரும்பிப் பார்த்தவள் , மண்டையை ஆட்டி முகத்தில் ஐயே என இகழ்ந்த பாவத்தைக் காட்டி, " போடா அரக்கா " எனத் திட்டிவிட்டுச் சென்றாள்.
" நீ பார்த்து போ. அரக்க வேலை செய்ய வர்றேன்" என அவளை அனுப்பியவன், போனில் நம்பரை அழுத்தி, "ஸ்டீஃபன்" என்றான்.
" எஸ் பாஸ் " என இவனது போன் காலுக்காகவே காத்திருந்த இவனது நிழல் வேலைகளைச் செய்யும் விசுவாசியான ஸ்டீபன், வரிசையாக நடந்த வேலைகளை ஒப்பித்தான்.
" ம், ஓகே. எக்ஸ்பெக்டட் . டன்" எனப் பதில் அளித்த சந்திர தேவ்வின் முகத்தில் நகையோடு கூடிய திருப்தி இருந்தது.
" ஐ.பி.எஸ் ஆபீஸர் நம்மளை விட ஷார்ப்புன்னு சொல்லு. ஓகே நீ என்ன கேர்புல்லா செஞ்சாலும், அதெல்லாம் தமிழன் மூளை கண்டுபிடிச்சுடும். இப்ப அவங்க டார்கெட் நஞ்சப்பா தான். ரெட்டியை அவர் முன்னாடி ப்ரட்யூஸ் பண்ணு, ஆள் வேண்டாம், பெயர் மாட்டு தெரியட்டும் . அவனை எப்ப அனுப்பணும்னு நான் சொல்றேன், ரெட்டிக்கு எந்தளவு உண்மை தெரியும்னு செக் பண்ணிட்டியா" எனக் கேட்டான் தேவ்.
" யெஸ் பாஸ், அவன் போக்குலையே விட்டதில் , அவன் தான் பாம் ப்ளாஸ்ட் பண்ணதா நம்பிட்டு இருக்கான்" என லேசாக நகையோடு சொன்னான் ஸ்டீபன்.
" ஹேய், ரெட்டி எவ்வளவு பெரிய ஆளு, அவன் தான் ஹாசினி சந்திரா பாம்ப்ளாஸ்ட் பண்ணது. ஆமாம் யாரிந்த ரெட்டின்னு , இராத்திரி இந்தியத் தொலைக்காட்சிகள் துப்புத் துலக்கனும். துப்புக் குடுத்துடு" என்றவனின் கண்களில் லென்ஸ் வைக்காமலே புலியின் சீற்றம் தெரிந்தது.
' என் ஹசியைக் கட்டனும்னு நினைச்சதே தப்பு. ஹாங் மகன் கட்டனும்னு நினைக்கலை, ஆனால் கொல்லனும்னு நினைச்சேல்லடா. என்ன திமிர். வாடி பங்காளி, ஜெயில்ல வச்சு உரிக்கிறேன். எலெக்சன் முடியட்டும், களி சோறு தான் உனக்கு 'என மனதில் கருவினான்.
" பாஸ், அந்த ஆபிஸர் உங்களை ரீச் பண்ணிட்டார்னா" எனச் சந்தேகம் கேட்டான்.
" எதை வச்சு சொல்ற" எனச் சந்தேகம் கேட்டான். "ஒரு கான்ஸ்டபில்ட்ட இருந்த கேரவன் போட்டோஸை பார்த்துப் புகழ்ந்து பேசிட்டு இருந்தார்" என்றான் ஸ்டிஃபன்.
" சரி, அவர்கிட்ட ரெட்டியைக் காட்டி விடு. கொஞ்சம் பிசியா இருக்கட்டும்" என்றான் தேவ். " பாஸ், ஆனால் நீங்க சீக்கிரம் கிளம்பறது நல்லது" என யோசனை சொன்னான் ஸ்டீபன்.
" ஒரு புயல் வருதுன்னு ரவி சொன்னான். இங்கிருந்து அஸஸ் பண்ணிட்டுப் போறேன். நாளைக்குச் சுஹானா தீவு ப்ராஜெக்ட் ஆரம்பிக்கனும்னா, தங்கறவங்களோட பாதுகாப்பு, சிசுவேஸன் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். இவ்வளவு செலவு, ரிஸ்க் இதையாவது தெரிஞ்சிட்டுப் போவோம். எலக்சன் டேட் என்னைக்கு " என்றான்.
"இன்னும் நாலு நாள் இருக்கு. ஆனால் பாஸ், மேம்க்காக எவ்வளவு சிரமப்பட்டு இருக்கீங்க. முதல்ல வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்திடுங்க" என யோசனை சொன்னான் ஸ்டீபன். பவன் கூட இந்தளவு சந்திர தேவிடம் பேசிவிட முடியாது.
" ஓகே பாஸ்." எனச் சந்திர தேவ் வேண்டுமென்றே சொல்லவும், பின் வாங்கிய ஸ்டீபன் "ஸாரி பாஸ்" என்றான்.
" நோ, நோ இட்ஸ் ஆல் ரைட். உன்னுடைய உழைப்பும் இருக்கே, நீ சொல்றது சரி தான், ஆனால் உங்க மேம் பத்து புயலுக்குச் சமம் . இப்ப தான் ஒன்னு மையம் கொண்டு இருக்கு. நான் சாமாளிச்சிட்டு வர்றேன். சொன்னதைச் செஞ்சிடு. எமெர்ஜென்ஸினா தனியா குடு. நான் உடனே எடுத்துடுவேன்" எனப் பேசிவிட்டு அந்த உபகரணங்களைப் பத்திரப்படுத்தி விட்டு வந்தான்.
காட்டேஜுக்குப் போகாமல் வழியிலிருந்த ஓடைக்கு முன்னே ஒரு பெரிய பாறை கல்லில் அமர்ந்து, பக்கத்திலிருந்த சிறு கற்களை ஒவ்வொன்றாக எடுத்து ஓடையில் எறிந்து கொண்டிருந்தாள் ஹாசினி.
ஒரு லெக்கினும், அனார்கலி குரத்தியுமாக உட்கார்ந்து இருந்தாள். முகம் கவலை படிந்து யோசனையாகத் தன் உதட்டைத் தானே பலமுறை கடிந்து கொண்டவளாக , கண்ணை மூடித் திறந்து அலைப்புறுதலுடன் நான்கு விரல்களும் ஒரு கையால் முகத்தை மறைப்பதும், மறு கையால் கல்லெறிந்து இயலாமையைக் காட்டக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள் ஹாசினி.
அவளைப் பார்க்கவுமே மானை விட நீண்ட விழிகளை உடையவள், அதனைச் சுற்றி லேசாகப் படிந்த கருவளையத்தோடு சோர்ந்து இருக்கிறாள், இவளுக்கும் தான் எவ்வளவு பதட்டம். மூக்கிலிருந்து இரத்தமே அத்தனை தடவை வந்திடுச்சு , எல்லாம் தன்னால் தானே என்ற பச்சாதாபத்தில், வந்தவன், அவளுக்குப் பின்னால் நின்று கொண்டு, அவள் முதுகை தன் மேல் சாய்த்துக் கொண்டு, இரண்டு கைகளாலும் அவள் தலையைப் பிடித்து விட்டான்.
" குண்டு கோஸ் சாரி" என்றான். "ம்ப்ச்" என்றவள் எழப் போனாள். அவள் தோளைப் பிடித்தே அமர்த்தி அமர வைத்தவன், கழுத்து பிடதி என அத்தனையும் அழுத்தி விட்டான். உண்மையாகவே ஸ்ட்ரெஸ் ரிலீபாக இருந்தது. அடங்கி அவனுக்கு வாகாக அமர்ந்தவள், அடங்காத வார்த்தையாக, "நீ என்னை அப்படித் தான் நினைக்கிறாயா" என்றாள் மொட்டையாக. "எப்படித் தான் நினைக்கிறாயா" என்றான்.
" அது தான், லிவ்விங் டூ கெதர் எல்லாம் சொல்றியே. எங்கம்மா நடிகையா இருந்தும் தன்னைத் தற்காத்துக்கிட்ட வங்க. அப்பா அவங்களைப் பாதுகாத்தாங்கன்னு தான், தன்னையே அவங்களுக்குத் தந்தாங்க. நான் அவுங்க மகள்,என் வளர்ப்பு அவ்வளவு மோசமில்லை சந்திரா" எனும் போதே அவளது லேசாகத் தொண்டை கரகத்தது.
" அது ஒரு ப்ளோல வந்துருச்சுடி. தினம் அவனோட பார்த்ததால மனசில பதிஞ்சு இருக்கு. ஒரு பொறாமைனே வையேன்" எனத் தன்னை விளக்க முற்பட்டான்.
" நீ இங்கிருந்து இதே மாதிரி கூட்டிட்டு போனேனா, அங்க போய், வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுத்துக் காட்டுறேன்" என அவள் சொல்லி முடிக்கும் போது அவள் கன்னம் காந்தியது. ஆம் அவளை ஒரு நொடியில் தன்புறம் திருப்பி அவள் கன்னத்தில் பொரி பறக்க அறைந்திருந்தான்.
அவள் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு, அதிர்ச்சியாக உதடுகள் துடிக்க அவனையே பார்க்கவும், "அதுக்குப் பதிலா நான் திங்கிற சோத்துல விசத்தை வை. போய்ச் சேர்ந்திடுறேன் " என்றவன் திரும்பி இங்குமங்கும் அலைந்தான். காலால் அங்கிருந்த மரக்கட்டைகளை எத்தினான். கால் வலி வந்தது தான் மிச்சம்.
மீண்டும் அவளிடம் திரும்பியவன், "அதெப்படிடி அப்படிச் சொன்ன. நீ வெர்ஜினா, இருந்தாலும் இல்லைனாலும் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நீ எப்படி இருந்தாலும் எனக்குச் சம்மதம். நான் தான் சொல்றேன்ல, மேத்யுவோட சேர்ந்து பார்த்ததால வந்த பொறாமை மட்டும் தான்.
நீ அங்க இருக்கேன்னு தெரிஞ்சு அவ்வளவு ஆசையா வந்தேன். ஆனால் மேத்யுவோட அப்பாவே நீங்க ரிலேசன்சிப்ல இருக்கிறதா சொன்னார். அன்னைக்கிலிருந்து நேற்று வரைக்கும் மனசுக்குள்ள அவ்வளவு துடிச்சேன்.
நேத்து தூக்கத்தில என் பேரை சொன்னப்ப தான் எனக்கு நம்பிக்கையே வந்தது. நாம இந்தப் பத்து வருஷத்தில், பார்த்ததோ, பேசினதோ கிடையாது. ஆனால் என் மனசில் நீ தான் இருந்த. பைத்தியக்காரன் மாதிரி ஏதோ ஒரு நப்பாசை என் மனசு ஓரத்திலே இருந்தது. நான் இவ்வளவு ஸ்ட்ராங்கா ன்னை நினைக்கும் போது, நீயும் என்னை நினைப்பேன்னு ஒரு எண்ணம். உனக்கு ஆபத்துங்கவும் ஓடி வந்தேன்,
இவன் சொன்னான், அவன் சொன்னான்னு எனக்கு நானே காரணம் சொல்லிக்கிட்டு உன் பின்னாடி திரிஞ்சேன்" என அவன் மனதின் வார்த்தைகள் வெடித்துச் சிதறின.
"நாலு பேரு உன்னைக் கொல்றதுக்கு அலையிறாங்களா, என்னைத் தாண்டி வந்து தான் உன்னைத் தொட முடியும். இந்த நஞ்சப்பா அப்பா, மகன் மாதிரி எவனும் உன்னை டார்ச்சர் பண்ணும்னு கூட மனசில் நினைக்கக் கூடாது. சந்திரதேவ் பொண்டாட்டியா இருந்தா தான் உன்னை 24×7 காப்பாற்ற முடியும். அதுக்குத் தான் எல்லாம். என்னை நம்புடி" என்றவன் அவளது முன் மண்டியிட்டு அமர்ந்து அவளது முகத்தைக் கையிலேந்தி,
"இந்தக் கன்னத்தில் குழி விழறதை பார்க்கனும்னு சொன்னேன். நானே அறைஞ்சிட்டேன் பாரு. நீ சொல்ற மாதிரி நான் அரக்கன் தான். இங்க பாரு என் கையே எரியுது. உனக்கு ரொம்ப வலிக்குதா" எனத் துடித்தான்.
" எதாவது பச்சிலை இருக்கான்னு பார்க்குறேன். சை" எனத் தன்னைத் தானே நொந்து கொண்டு அலைந்தவனைப் பிடித்து நிறுத்தினாள். " அதெல்லாம் வேணாம் விடு. எனக்கு வலிக்கலை " என்றாள் ஆனால் சொல்லும் போதே கண்ணில் நீர் வழிந்தது.
" வலிக்காமலா கண்ணுல கண்ணீர் வருது. இரு வர்றேன்" என ஓடியவன், அன்று போல் அதே இலையைப் பறித்து வந்தான்.
"இதையே போடுவோம். இது தான் வேற ஒன்னும் பண்ணலை " எனத் தண்ணீரை அள்ளி ஒரு கல்லைச் சுத்தம் செய்து அன்று போலவே இன்றும் அரைத்து உள்ளங்கையில் ஏந்தி வந்தான். " காட்டு" என்றான்.
" வேண்டாம் இருந்துட்டுப் போகுது" என்றாள். " கிறுக்கியா நீ.காட்டு மருந்தைப் போடுவோம் " என அவளது முகத்தைத் திருப்பிக் காயத்தை ஆராய்ந்தவன்.
" அடிச்சவன், சரியான முரடன் தான்" எனத் தன்னையை நொந்து கொண்டான். அவள் இல்லை எனத் தலையாட்டினான். " முரடன் இல்லையா, அப்புறம்" என்றான் " அரக்கன் " என்றாள்.
" ஆமாம் சரியான முரட்டு அரக்கன் சாரி" என முகத்தில் வேதனையோடு சொன்னான். " நீ ஒன்னும் சாரியே சொல்ல வேண்டாம். அது என்னமோ முன் ஜாமீன் வாங்குற மாதிரி, சாரி சொன்னதுக்கு அப்புறம் தான் அதை விடப் பெரிய தப்பு செய்யற" என்றாள்.
கவனமாக மருந்தைப் போட்டவன், "எப்பவும் கோவத்திலையும், வெக்கதிலையும் இரண்டு குண்டு தக்காளி வரும். இன்னைக்கு நாலு ட்ரெம் ஸ்டிக் வந்துருச்சு. ப்ரியு வேற என்னை முறைப்பாளே " எனக் கவலைப் பட்டான் அவன் .
" அது எவ ப்ரியு" எனச் சினந்தாள். " நம்ம ப்ரீத்தி தான். அவ ஒரிஜினல் பேரு ப்ரியங்கா. நம்ம வீட்டில ஹவுஸ்கீப்பிங் பார்க்கிற மணிமேகலை ஆண்டியோடு பொண்ணு. " என விளக்கம் தந்தான். "அப்ப பவன்" எனக் கேட்டாள்.
" ப்ரனவேஷ், அவளுக்கு முறை பையன். அப்பா அம்மா இல்லை. ஆண்டிக்கு டிஸ்டன்ட் ரிலேடிவ். நம்ம தான் படிக்க வச்சு வேலைப் போட்டுக் கொடுத்து எல்லாம் பார்த்துக்குறோம். " என்றான். " ஓஹோ" எனக் கேட்டுக் கொண்டாள்.
" மது, எதுக்குடி அப்படிச் சொன்ன" என்றான். " அப்புறம் மேத்யூஸோட குடும்பம் நடத்தின மாதிரி பேசுற. அவன் எனக்கு ப்ரெண்டுக்கும் மேல. அவன் என் மனசாட்சி. நான் அவனோட மனசாட்சி. " என விளக்கம் சொன்னாள்.
" போதும், நீ ஒன்னும் சொல்ல வேணாம். நீ என்ன வேணும்னாலும் நினைச்சுக்க. எனக்கு அவன் மேல ஜெலசி, புகைச்சல், காண்டு எல்லாமே உண்டு" எனவும் அவள் முறைத்து " எதுக்கு" என்றாள்.
" ஊருக்குப் போன பிறகு சொல்றேன். அப்பச் சண்டை போட எதுவும் இல்லைனா, லைப் போரடிச்சிடும். எனக்குச் சண்டை கோழி ஹசி தான் வேணும் " என்றவன். " நீ சொல்லு, நீ வெர்ஜின்னு நான் ஏன் தெரிஞ்சுக்கனும். எனக்கு ஏன் ப்ரூஃ பண்ணனும்" எனக் கேள்வி எழுப்பினான்.
"நீதானே என்னை அப்யூஸிங்கா பேசின" என்றாள். " சரி நான் தான் பேசினேன். போடா அரக்கான்னு போக வேண்டியது தானே. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. ஒரு ஆணோ, பெண்ணோ இப்படி மெடிக்கல் ரிபோர்ட் கொடுத்து எல்லாம் குடும்பம் நடத்த முடியாது. இவங்க நமக்கானவங்க. அப்படிங்கிற நம்பிக்கை தான் வேணும். எனக்கு உன் மேல இருக்கிற நம்பிக்கையில் தான் கல்யாணம் பண்லாம்னு கேக்குறேன். உன் மேல அந்த நம்பிக்கை எனக்கு இருக்கனும்னு ஏன் எதிர் பார்க்கிற" எனக் கேள்வி கேட்டு நின்றான். அவளைப் பேச்சில் மடக்கி அவனவளாக்குவதற்கான மற்றொரு முயற்சி.
" நீ ரொம்பப் பேசி கன்ப்யூஸ் பண்ற. இருட்டுது. காட்டேஜ்க்குப் போகலாம் வா" எனப் புரிந்தும் புரியாதது போல் அந்தப் பேச்சைத் தவிர்க்க முயன்றாள் ஹாசினி.
" சரியான ஆளுடி நீ. வா, நடந்துட்டே பேசுவோம். " என அவள் கையைக் கோர்த்துக் கொண்டவன் மற்றொரு கையால் அவள் தோளை அணைத்தபடி இருவருக்குமிடையேயான பந்தத்தைப் பற்றிப் பேசியபடியே வந்தான். அவள் ம் கொட்டியவள் பாதியில் தூங்கியே போனாள்.
" அடிப் பாவி, நான் என்ன தாலாட்டா பாடுறேன்" என உலுக்கினான். அவள் அசடு வழிந்து சிரித்தாள். ' இருடி நைட் தூங்க விடாமல் பண்றேன்' என மனதில் கருவியவன்.
" மது சாரிடி, சாரி,சாரி, நிறையச் சாரி" என்றான். " இப்ப எதுக்கு" என அவள் பதறினாள். அவள் காதில் குனிந்து, " இந்தக் கந்தர்வ கல்யாணத்துக்கு, இரண்டு பேரும் மனமொத்து இருந்தா போதுமாம். மாலை கூடத் தேவையில்லை இப்ப தான் நெட்டில் படிச்சேன். அதனால மாலை அப்புறம் கூட மாத்திக்கலாம்" எனக் கண்சிமிட்டவும்.
" சந்திரா, அது மனமொத்துன்னு தான் சொல்லி இருக்காங்க. நான் மாட்டேன். என் மனசெல்லாம் ஒத்துக்கலை. நோ. போ" எனப் பதறினாள்.
"போடி நேத்து மயக்குதுலையே என் பேரைச் சொல்லித் தான் உளறின. உன்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்திக்கவே பெரிய வேலையா போச்சு. அது தான் நடுராத்திரியில் போய் மரவீட்டில் படுத்தேன்" எனவும் ஹாசினிக்கும் பயம் பிடித்தது.
" சந்திரா பொய் சொல்லாத" என்றாள். " உன் மேல சத்தியமா, உன் கன்னக்குழி மேல சத்தியமா, இந்தக் கழுத்தை இறுக்கி பிடிச்சியா. உன் மேலையே மொத்தமா விழுந்துட்டேன்" என முகத்தைச் சீரியஸாக வைத்துக் கொண்டு சொன்னான்.
" நான் நம்ப மாட்டேன். ஆனால் இன்னைக்கு ப்ரீத்தி என் கூடப் படுத்துக்குவா. " என அறிவித்தாள்." ப்ரீத்தி பெரிய சோல்ஜர். அவ தான் உன்னைக் காப்பாத்த போறாலாக்கும் " எனக் கேலி பேசினான்.
" அப்படி நம்பிதான் நஞ்சப்பா அவளை எனக்குப் பாடிகார்டா அப்பாயிண்ட் பண்ணார்" என அவள் சலிக்கவும். " சீரியஸ்லி, அவளைப் பார்த்துத் தான் எனக்கும் இப்ப பயம். உன் கன்னத்தில் இருக்கிறதைப் பார்த்து என்ன நினைப்பாலோன்னு பயம்மா இருக்குடி " என்றான்.
" ஆகாகா, அரக்கன் ஸாருக்கு கூடப் பொண்ணுங்க நினைக்கிறதைப் பத்தி கவலையாம் " எனக் கிண்டலடித்தாள்.
" உன்கிட்ட எனக்குச் சகல உரிமையும் இருக்கு. நீ என்னைப் புரிஞ்சுக்குவ. அவள் என்னை மோசமானவன்னு நினைச்சிட்டானா" என்றான். இதே போன்று அவள் ப்ரீத்தியை , மோசமானவனுக்குத் துணை போகிறாய் எனப் பேசிய போதெல்லாம் அவள் முகம் வாடியதும், சந்திரா கோவப்பட்டதும் நினைவில் வந்தது.
" ஓவரா ஃபீல் பண்ணாத. உன்னைக் காப்பாத்துறேன். ஆனால் ஒரு கண்டிசன் "என்றாள். " என்ன " எனப் புருவத்தை உயர்த்தி வினவினான்.
" இனிமே , நீ சாரி சொல்ற நிலைமை வராதுன்னு ப்ராமிஸ் பண்ணு " என்றாள். அவன் அடக்கமாட்டாமல் சிரித்தவன், " அடேங்கப்பா, சத்தியத்தில் என்னைச் சிக்க வைக்கிறியாக்கும்" என்றவன், அவள் காதருகில் வந்து, " வாழ்க்கை பூரா , தினம் சாரி சொல்லுவேன். அவள்ட்ட சொல்லிக்கோ. நான் சமாளிச்சுக்குவேன்" என்றவன் ஒரு சாரியோடு இலவசமாய் அவளின் மறுகன்னத்தில் இதழொற்றலையும் தந்து சென்றான். அவளுக்குத் தான் வயிற்றில் பட்டாம் பூச்சி படபடத்தது.
காட்டேஜ் வந்திருந்தது. ப்ரீத்தி பவன், ஒருவரில் மற்றொருவர் தொலைந்து சிரித்துப் பேசி மகிழ்ந்து இருந்தனர். இருள் கவ்வியிருந்ததால் கைவிரல் தடம் தெரியவில்லை, ஆனால் என்ன பச்சிலை அப்பியிருக்கே என்ற அவள் கேள்விக்கு , "வண்டு கடிச்சிடுச்சு உன் பாயி தான் மருந்து போட்டார்" என அவனைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் ஹாசினி.
சந்திரதேவ், கண்களில் நன்றியைத் தாங்கி, " தாங்க்ஸ் அண்ட் சாரி" என உதட்டை மட்டும் அசைத்தான்.
பவன் அந்தப் பக்கம் அவர்களைக் கண்டு கொண்டவனாக , "கன்னத்தில் என்னடி காயம், இந்த வன்னக்கிளி செய்த மாயம்" என ஆரம்பித்தான். அன்றைய இரவு பொழுதைப் பாடுகிறேன் எனக் கத்தியே சந்திர தேவை இம்சை செய்தான்.
சந்திரதேவ் ஸ்டிபன் மூலமாகப் பற்ற வைத்த நெருப்பு பற்றி எரிந்தது. ஹாசினியின் காரை ஃபாலோ செய்யும் ரெட்டியின் காரையும். இரண்டு முறை அவன் கொலைக்கு முயன்றதையும் மட்டும் தக்க ஆதாரங்களோடு புகைப்படமாக , குற்றவாளியை விசாரணை அதிகாரி கைது செய்துவிட்டார். ரகசிய இடத்தில் வைத்திருக்கின்றனர், என்ற வதந்தியையும் ஊடகங்களுக்கு லீக் செய்திருந்தான் ஸ்டிபன்.
இதனை அறிந்த தங்கப்பாண்டியன் ஐபிஎஸ். " க்ளவர் மூவ்." என மெச்சிக் கொண்டவர், ரெட்டி தன் கைகளில் அகப்பட வேண்டிய தருணத்துக்காகக் காத்திருந்தார். அதற்குள் அவர் மனைவி தான்வி ஐஏஎஸ் மூலமாக , பெங்களூரில் முக்கியமான கோப்புகள் கிடைத்தன. ரெட்டிக்கான வலையை மங்களூரில் விரித்து விட்டு, பெங்களூரு விரைந்தார். அவர் தலைநகருக்கு வரவுமே ரெட்டி அரஸ்ட் எனச் செய்தி தீயாகப் பரவியது. தேர்தல் செய்திகளும் அதிக அளவில் இடம் பெற்றதால், இந்தச் செய்தி தலைவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுள் ஒன்றாக இருந்தது.
இது இவ்வாறு இருக்க, ரெட்டி அரெஸ்ட் என்ற வார்த்தையில் யுவராஜ் ஆடிப் போனான். வேறு வழியின்றித் தந்தை சிவராஜிடம் தனது ஏற்பாட்டின் பெயரில் தான் ஹாசினி படுகொலை நடந்தது, என்ற உண்மையைச் சொல்லவும் இடி விழுந்தது போல் அமர்ந்தார்.
பிறகு சுதாரித்து மகனை அடித்து நொறுக்கி விட்டு, காவல்துறையில் தனது விசுவாசிகள் மூலமாக ரெட்டியைக் காவல் வைத்திருக்கும் இடத்தை அறிய முயன்றார். ஆனால் அவர்களுக்கும் விவரம் தெரியவில்லை.
" அந்த மதராசி எங்க வச்சிருக்கான்னு தெரியலை சார்" என்று விட்டனர். தேர்தல் களம், பிரச்சாரம் வேறு ஒரு பக்கம் சூடு பிடிக்க மேனகா,எஸ். ஆர்.சந்திரா , கேஜேபார்ட்டி தலைமை பதவி, கையெழுத்து இவைகளை மறந்து தன்னில் உழன்றார் சிவராஜ் நஞ்சப்பா.
சந்திர தேவ் தனது ஆட்டத்தைச் சுஹானா தீவிலிருந்தபடி ஆடிக் கொண்டிருந்தான். தலைநகர் அரசியலும், ஹாசினி தலை எழுத்தும் அவன் கையில் தான் இருந்தது.
No comments:
Post a Comment