Thursday, 10 June 2021

ஹாசினி சந்திரா-14

 ஹாசினி சந்திரா-14

         அன்றைய நாளின் விடியலே சற்று மிரட்டலாகத் தான் இருந்தது. கரையில் இருக்கும் போது புயல் வந்தாலே கதிகலங்கும். அதுவும் கடலின் நடுவே சிறிய தீவில் புயல் எப்படி இருக்கும் எனப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும், ஹாசினியை அவனை மணக்கச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற பிடிவாதமுமாகச் சந்திரதேவ், இந்த ஆபத்தை விலைக்கு வாங்கினான்.

        அரபிக்கடலில் புயலும் அதைத் தொடர்ந்த மழையுமாக மேற்கு கடற்கரையையே புரட்டிப் போடும். மும்பை வருடந்தோறும் அடாத மழையால் மிதக்கும் கதை எல்லாம் உண்டு.

        அன்றைய காலைப் பொழுது கம்மென ஒரு அழுத்தம் , மரம் செடி கொடி என அசையாமல் சிலை போலப் பிடிவாதமாக நின்றன. அந்த நேரத்திலேயே மர வீட்டுக்குச் சென்று பேச வேண்டியவர்களிடம் பேசிவிட்டு, விஷயங்களை அறிந்து தான் வந்திருந்தான். ஐபிஎஸ் ஆபீஸரின் அடுத்த நடவடிக்கை, நஞ்சப்பாக்களின் செயல்பாடுகள், மருத்துவமனை, ஸ்டிபன், பிரதிபன், அதிபன் என எல்லோரிடமும் பேசி விட்டான். 

        அதி அனுப்பியிருந்த கோப்புகளில் மேனகா கையெழுத்து இடவும் சம்மதித்தான். அவை தேவையானால் மேனகா, எஸ்ஆர்சி யை இந்தியா வராமல் கேஸை நடத்த ஏதுவாகச் சிலவை. அதே போல் சிவராஜ் மிரட்டியதாக ஒரு கம்ப்ளைண்ட். கட்சியைக் கைப்பற்ற முயன்றது , சந்திராவின் மெடிக்கல் ட்ரீட்மென்ட் பற்றி என அவர்களுக்குச் சாதகமான விசயங்களே இருந்தது. ஆபீஸர் எஸ்ஆர்சி யின் வக்கீலாக மாறினாரோ என்ற சந்தேகம் கூடச் சந்திர தேவ்க்கு வந்தது.

      ஆனால் அதை வைத்து நஞ்சப்பாவுக்குச் சிக்கலை வரவழைக்கவே இந்த ஏற்பாடு என்பதை அறிந்து கொண்டான். தனது உயர்மட்ட அளவிலான வேலையும் நன்றாகவே வேலை செய்கிறது என மெச்சி கொண்டான். ஆனாலும் நேர்மை நியாயம் பார்க்கும் ஆபீஸர்களால் தொல்லை தான். தங்கப்பாண்டியன் நேர்மையான ஆபீஸர் தான், ஆனால் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை உடையவர். சட்டத்தின் ஓட்டைகளை வைத்துத் தப்பும் அரசியல்வாதிகளையும், வன்முறையைப் பயன்படுத்தும் தீவிரவாதிகளையும் வேறு விதமாகத் தண்டனை கொடுப்பதிலும் வல்லவர். சந்திரதேவையும் கட்டாயம் தேடி வருவார். ஹாசினி உயிரோடு இருப்பதையும் அறிந்து கொள்வார் என்றே சந்திரதேவின் மனம் அடித்துச் சொன்னது. வருவதைப் பார்த்துக் கொள்வோம் என்ற தைரியத்தோடு பயணித்தான் சந்திர தேவ்.

         காட்டேஜை நோக்கி வந்தவன், பவனை இரண்டு கேன்களில் தண்ணீர் நிரப்பி இரண்டு அறைகளிலும் வைக்கச் சொன்னான். ஹாசினியிடம் காய்ந்த சுள்ளிகளைக் காட்டேஜ்க்குள் பத்திரப் படுத்தச் சொன்னான்.

        கனமான போர்வைகளோடு, தார்ப்பாய்களையும் அறையில் தயாராக வைக்கச் சொன்னான். ப்ரீத்தியுடன் சேர்ந்து நான்கு வேளைகளுக்கு ஆகும்படியான ரொட்டிகளைத் தயாரிக்க ஆரம்பித்தவன் ஹாசினியை அவளுக்கு உதவச் சொன்னான். பவனுடன் சேர்ந்து காட்டேஜ் கூரைக்கு ஆபத்தாக இருந்த மரக்கிளைகளை மட்டும் மடமடவென மரத்தின் மேலேறி வெட்டினான். அது கூரை மேல் விழாமல் பவன் பிடித்துத் தூக்கிப் போட்டான்.

       மரம் விட்டு இறங்கியவனை, "எப்படி இவ்வளவு வேகமா ஏறின" என ஆச்சரியப்பட்டாள் ஹாசினி. அவன் சிரித்து விட்டு, " ஹேய் என் வேலையே அது தான்" என்றான். " எது மரம் ஏற்றதா. நீ சிவில் இன்ஜினியர் தானே" எனக் கேட்டாள்.

       " சிவில் இன்ஜினியருக்குத் தான், மரம் ஏறுவது, தாவுறது, தவ்வுறது எல்லாம் தெரிஞ்சிருக்கனும் . அப்புறம் எப்படி ஓர்க் ஸ்பாட்க்கு போறது " என்றான்.

        "எனக்கு உயரம்னாலே பயம்" என்றாள். " இனிமே பயப்பட வேண்டாம் , நான் தான் இருக்கேன்ல " என அவளைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டுச் சென்றான். ப்ரீத்தி சிரித்துக் கொண்டாள். வேலைகளை முடித்துப் புயலை எதிர்கொள்ளத் தயாரானார்கள்.

       காற்று வீசத் தொடங்கவும், ப்ரீத்தி பவனோடு ஹாசினியையும் அங்கே நிறுத்தி விட்டுத் தான் மட்டும் மற்றொரு ஓவர் கோட்டை தலை முதல் மாட்டிக்கொண்டு கிளம்பினான்.

      ஹாசினி ," இந்தக் காற்றடிக்கிற நேரத்தில உனக்கு வெளியே என்ன வேலை. ஸ்டே ஹியர் " என அமட்டினாள். "ஹேய் " என அவளை ஒரு பார்வைப் பார்த்தவன், " இது ஒரு நல்ல சந்தர்ப்பம். நேரடியா பார்த்துட்டா , அதுக்கேற்ற மாதிரி இந்த இடத்தை ப்ளான் பண்ணிடுவேன் " என்றவன் பேசிக் கொண்டே லெதர் ஷூ, க்ளவுஸையும் போட்டான். வாட்டர் ப்ரூவ் கேமராவை அங்கிக்குள் சொருகிக் கொண்டான்.

        " பவன் டே கேர். ஐ வில் பீ பேக்" என வெளியே கிளம்ப முயன்றவனை , " நாங்க எது சொன்னாலும் நீ கேக்க மாட்ட. ஆனால் நீ சொல்றதை மட்டும் நாங்க கேக்கனும். இது எந்த ஊர் ஞாயம்" என அவளின் கோபத்தில் அவன் மீதான அக்கறை இருந்தது.

        " ஹேய், இந்த நேரம் தான் இந்தப் புயல் மழையைப் பார்க்க முடியும். அப்ப தான் அஸஸ் பண்ணவும் முடியும். இது என்னோட வேலையில் ஒன்னு. இதுக்கு எதுக்குக் கோபம். இங்கே உங்களுக்குப் பாதுகாப்புக்குப் பவன் இருப்பான். காட்டேஜ் பாதுகாப்பானது தான். இந்த இடத்துக்கு ஏற்ற மாதிரி ஸ்ட்ராங்கா கட்டியிருக்கோம். சுற்றி இருக்கிற மரக்கிளையையும் வெட்டிட்டேன். பயப்படாமல் இருங்க. இப்ப வந்துடுவேன் " என அவள் மறுக்கும் முன் கிளம்பிவிட்டான்.

        ஹாசினி கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கவும், "மேம் , பாயி உங்களுக்காவது இவ்வளவு நேரம் நின்னு பதில் சொன்னாங்க. வீட்டில எல்லாம் கேள்வியே கேட்க முடியாது" என்றாள்.

      " ஏன் வீட்டில நிரூபனைத் தவிர எல்லாருமே இவருக்குப் பெரியவங்க தானே சொல்றதுக்கு என்ன "என்றாள் ஹாசினி.

        " எல்லாருமே சொல்லுவாங்க, மிரட்டுவாங்க, சண்டை போடுவாங்க. ஆனால் அதையெல்லாம் கேட்கிறதுக்குப் பாஸ் அங்க இருக்கனுமே. அதெல்லாம் எல்லார் கண்ணுலையும் மண்ணைத் தூவிட்டு தான் நினைக்கிறதை செஞ்சு முடிக்கிறதில கில்லாடி" எனப் பவன் புகழ்ந்தான்.

     " நீ தான், உன் பாஸை மெச்சிக்கோ. எல்லாம் திமிர். தான்கிற அகம்பாவம்" என ஹாசினி திட்டவும்

       " மேம், அப்படியும் சொல்லிட முடியாது. யாரும் இது முடியாது ,ரிஸ்க்குன்னு எடுக்க யோசிக்கிற ப்ராஜக்ட்டை தான், பாஸ் கையில் எடுப்பார். அதுக்கு முன்னாடி அந்த இடத்தைத் தானே போய் நேரில் பார்த்து , அஸஸ் பண்ணி , அதுக்கான ப்ளான், பிரச்சனை, தீர்வு எல்லாம் கம்யூட்டரை விட வேகமா, தன் மண்டைக்குள்ள கணக்குப் பண்ணிடுவார். அது தான் இவ்வளவு குறுகின காலத்தில் அவர் இந்தக் கம்பெனியை இவ்வளவு பெரிய உயரத்துக்குக் கொண்டு போனதுக்கான காரணம் " எனச் சந்திரதேவின் திறமைகளைப் புகழ்ந்து கொண்டிருந்தான் பவன்.

      " காசுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கனுமா" எனக் கேட்டாள் ஹாசினி

" இல்லை மேம், இதில காசை விட, அவருக்கு அட்வன்சரஸா ஏதோ செய்யறோம்கிற திருப்தி இருக்கனும். அதனால் தான் செய்யறார். அது தான் சி.பி.தேவ் சக்ஸஸ்க்கு காரணமும்." எனத் தொடர்ந்து சொன்னான் பவன்.

      " பாயி சொல்லிட்டா. அடுத்த வார்த்தையே கிடையாது. ப்ரதிண்ணா, அதிண்ணா கூடக் கேட்டுக்குவாங்க. " என ப்ரீத்தி வீட்டில் அவனுடைய முக்கியத்துவத்தையும், பவன் தொழில் வட்டாரத்தில் எப்படி என்றும் மாற்றி மாற்றிச் சந்திரதேவ் புராணம் பாடினர்.

      வெளியே ஊழிக்காற்று சுழன்று அடித்து மழையை அழைத்து வந்திருந்தது. சுஹானா தீவில் சுகமாக வளர்ந்திருந்த செடி கொடிகளும், மரங்களும் வாயுதேவனின் கட்டளையை எதிர் கொண்டு நிற்கத் தயாராகிக் கொண்டிருந்தனர். வருணனும் சேர்ந்து தனது ஆட்டத்தைத் தொடர உள்ளே ஹாசினிக்குத் தான் இருப்புக் கொள்ளவில்லை. ஜன்னல் வழியாக அவன் போன பாதையை வெறித்தவள், " வெளியே பாரு , மதிய நேரமே இருட்டிட்டு காத்தும் மழையுமா இருக்கு. இதில உன் பாஸ் போகலைனா என்னவாம் " எனப் புலம்பினாள்.

      அவளது கவனத்தைத் திசை திருப்பவே பவன், ப்ரீத்தியிடம் , " மேம் மாதிரியே ,அந்தப் பொண்ணும் ஒரு நாள் முழுசும் நம்ம பாஸ் வர்ற வழியைப் பார்த்துட்டே இருந்துச்சு என்ன ப்ரியு" என வேண்டுமென்றே கேள்வி எழுப்பினான்.

      " யாரைச் சொல்ற " என ப்ரீத்தி கேட்கவும் ஹாசினி இவர்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினாள். " பெரிய மேடத்தோட ரிலேடிவ், அத்தை, அத்தைன்னு அவங்களோடவே திரிஞ்சதே. பாஸை கூட மாமனோ, மச்சானோ சொல்லுச்சு. சென்னையிலிருந்து வந்துச்சே. " என அவன் பீடிகை போடவும்.

       " யாரைடா சொல்ற, ரேவதி ரோஹினில ஒன்னைச் சொல்றியா" என ப்ரீத்தியும் விளக்கம் கேட்டாள், ஹாசினிக்கு பொசுபொசுவென வந்தது.

     " அது தான் ரோஹிணி, சந்திர தேவனுக்குப் பிடிச்ச பொண்டாட்டி பேருன்னு பெருமை வேற பீத்துனாங்க " என்றான் பவன்.

     " யாரு" என ஹாசினி கோபமாகக் கேட்கவும், ப்ரீத்தி, " மேம் அது , சந்திரன்- நிலா அதோட கதையைச் சொன்னாங்க " என்றாள்.

     " புரியலை" என்றாள் ஹாசினி. " மேம் இந்த நிலாவைச் சந்திரன்னு சொல்லுவாங்க. அந்தச் சந்திரதேவ்க்கு இருபத்தி ஏழு மனைவிகள்னு புராணம் சொல்லுது" என அவள் விளக்கவும்.

       " போதும், போதும் எனக்கு ஒன்னும் அந்தக் கதை எல்லாம் வேண்டாம் " எனத் திரும்பி உட்காரும் போதே, அவளின் முகம் கோபத்தில் ஜொலித்தது மின்னல் வெளிச்சத்தில் தெரிந்தது. தொடர்ந்து பெரிய இடி சத்தம் கேட்டது. " அம்மா " என அலறியபடி ஹாசினி காதை மூடிக் கொண்டாள்.

        " பவன், எப்படி இடி இடிக்குது. பெரிய உயரமான மரங்கள் மேல தான் இடி விழும்னு சொல்லுவாங்க. இந்த நேரம் உன் பாஸ்க்கு வெளியே என்ன வேலை. மழை நின்னப் பிறகு நாளைக்குப் பார்த்துக்கக் கூடாது. இடியட்" என அதன் பிறகும் வரிசையாக வசை மொழிகளால் அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள். ப்ரீத்தி, பவன் வாயைப் பிளந்து வேடிக்கை பார்த்தனர். சந்திர தேவ் அவர்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு பாசமாக இருக்கிறானோ அதே அளவு கடுமையானவனாகவும் இருப்பான். ஹாசினியுமே அவனது கடுஞ்சொற்களை எதிர்கொண்டவள் தான் ஆனாலும் அவன் மீது இருந்த அக்கறையும் காதலும், அவளறியாமல் அவன் மீது கொண்ட உரிமையும் இப்படிப் பேச வைத்தது. இரண்டு மணி நேரங்கள் கடந்து மழை சற்றே ஓயும் போது சந்திரதேவ் வந்து சேர்ந்தான்.

      அவனையே தலை முதல் கால் வரை ஹாசினி உற்றுப் பார்க்கவும், சிரித்துக் கொண்டவன், " ஐயம் பைன். இடி எல்லாம் என் தலை மேல விழலை " என்றான்.

" உன் மேல விழுந்தா, இடி தான் பாவம். அதுக்கு ஷாக் அடிக்கும் " என ஹாசினி கோபமாகத் திரும்பிக் கொள்ளவும் மற்ற மூவருமே பட்டெனச் சிரித்து விட்டனர்.

     " எங்க பாயி அவ்வளவு பவர் ஃபுல்னு சொல்றீங்களா" என ப்ரீத்தி கேட்கவும், " இல்லை அவ்வளவு டெரர்னு சொல்றாங்க " எனத் திருத்தினான் பவன். அவர்களை முறைத்த ஹாசினி, "சாப்பிட எதாவது குடு ப்ரீத்தி. பசிக்குது " என்றாள்.

        சந்திர தேவ் ஓவர் கோர்ட்டை கழட்டி தாழ்வாரத்தில் மாட்டி விட்டு உள்ளே வந்தவன், "இவ்வளவு நேரம் சாப்பிடாமல் என்ன பண்ணீங்க " என்றான்.

       " உங்களைப் பத்தி புறணி பேசினோம். " என்ற பவனை " வாட்" எனக் கேட்கவும், " இல்லை, இல்லை பரணி பாடினோம். சந்திரபிரகாஷ சிம்மதேவன் பரணி. உங்களுடைய பெருமை எல்லாம் மேம்க்கு எடுத்துச் சொன்னோம்" என்றான்.

     ப்ரீத்தி சப்பாத்தி ரோல்களை ஆளுக்கு ஒரு தட்டில் வைத்து நீட்டினாள். "முடிஞ்சுதா" என்றான் சந்து, " இன்னும் இருக்கு பாய். அது தான் நிறையச் செஞ்சமே " என ப்ரீத்தி சப்பாத்தியைப் பற்றிச் சொல்லவும், "நான் பரணியைப் பத்தி கேட்டேன். ஒன்னும் ரியாக்ஷன் சரியில்லையே " என்றான்.

       "அது இனிமே தான் பாஸ். நீங்களே போகப்போகத் தெரிஞ்சுக்குவீங்க " என இளித்தான் பவன். அவன் சொன்ன தினுசில் ஹாசினியை என்னவெனக் கேட்கவும், அவள் அழகு காட்டிவிட்டுத் திரும்பிக் கொண்டாள். மற்ற இருவரும் ஊமைப் படம் பார்த்துச் சிரித்தனர்.

        " டேய், என்னைப் பத்தி என்னடா வத்தி வச்சீங்க. என் பொண்டாட்டி திரும்பிக்குது" என்றான் சந்திர தேவ்.

      "என்னது பொண்டாட்டியா" என ஹாசினி அவனைப் பார்த்து வேகமாகக் கேள்வி எழுப்பவும் மற்ற இருவரும் அதையே கண்களால் கேட்டனர்.

      "எதுக்கு இவ்வளவு டென்ஷன், நடக்கப்போறதை தானே சொன்னேன். " என்றவன். " உன்கிட்ட என்ன சொன்னான் உன் உடன்பிறப்பு " எனப் பவனைக் காட்டிக் கேட்டான். பவன் கலவரமாகப் பார்க்கும் போதே, "அது எங்களுக்குள்ள உள்ளது. நீ மட்டும் உன் தங்கச்சியோட கூட்டுச் சேர்ந்து கிட்டு என்னை ஏமாத்தின" என்றாள்.

        " ஓஹோ அப்படிச் சொல்றியா, உன் உடன்பிறப்பும் தான் அந்தக் கூட்டணில இருந்தான் " எனச் சந்திர தேவ் ஞாபகப் படுத்தவும்

        " இப்ப பவன் என் கட்சி " என்றாள் ஹாசினி. " என்னத்தைச் சொல்லு அரசியல்வாதிங்கிறதை நிரூபிக்கிற" எனக் கேலி செய்தான்.

       " அவரவர் எப்படி வளர்ந்தமோ, அப்படித் தான். " என்றவள், " என்னை மட்டும் மேத்யுவோட இருந்தேன்னு பேசுறியே, உனக்கு முறைப் பொண்ணு வேற யாரும் இல்லையா. மாமி இவ்வளவு நாள் உன்னைச் சும்மாவா விட்டாங்க. " எனத் தூண்டில் போட்டாள். அவனும் அவளை வம்பிழுக்கும் மூடில் இருந்தவன் "ஏன் இல்லாமல், தினம் ஒரு பொண்ணோட போட்டோவை வச்சிட்டு உட்கார்ந்து இருக்கும். தமிழ் பேசற பணக்கார வீட்டுப் பொண்ணுங்களாத் தேடும்" என வேண்டுமென்றே சொன்னான்.

        " ஏன் கன்னடம் பேசுற மருமகள் வரக்கூடாதுக்கும். " என அவள் படக்கெனக் கேட்கவும்,

       " பேசலாம், அதே நேரம் கன்னடத்துப் பைங்கிளி கொஞ்சும் தமிழும் பேசனும் உன்னை மாதிரி" என்றவன். " நீ சொல்லு, எங்களோட சேர்ந்து தானே தமிழ் பேச கத்துகிட்ட" என்றான்.

 " அப்பா, அம்மா இரண்டு பேருமே தமிழ், கன்னடம், தெலுங்கு , ஹிந்தி நாலுமே நல்லா பேசுவாங்க." என்றாள். "அந்தப் போட்டோ பொண்ணுங்கள் எல்லாம் உனக்குப் பிடிக்கலையாக்கும்" என மீண்டும் அதே பேச்சைப் பிடித்தாள்.

      " பார்த்தால் தானே, பிடிக்கும், பிடிக்காதுங்கிற பேச்சு. நான் பார்க்கவே மாட்டேன் " என்றான் அதில் கொஞ்சம் நிம்மதியடைந்தாள்.

" அப்ப ரோஹினி, ரேவதி " என்றாள்.

      " அதுங்களுக்கு என்ன, எங்க அம்மாவோடா அண்ணன் பொண்ணுங்க. சீர் செஞ்சு கல்யாணம் பண்ணி வச்சோம்" என்றான்.

         " ஏன் அவுங்களை நீ கல்யாணம் பண்ணிக்கலையா" என அடுத்தக் கேள்வி , கைக்கட்டி அவளை வேடிக்கை பார்த்தவன் அவள் பொறாமையை ரசித்தபடி , " அதுங்க இரண்டு பேரும் என்னை விட நாலு வயசு மூத்ததுங்க " என்றவன்.

    " பவன் , இந்தப் பரணி தான் பாடினியா " எனக் கேட்டான்.

       " யெஸ் பாஸ், வெளில புயல் மழை , உங்களைக் காணோம், மேம்க்கு வேற டென்ஷன் ஏறிச்சு , அதனால தான் கொஞ்சம் பரணி பாடினோம்" என வழிந்தான் பவன். "உன் தங்கச்சியும் சேர்ந்து தான் பரணி பாடுனா" என ஹாசினி மூவருமே ஏமாற்றியதாகப் பொய் கோபம் கொண்டாள். அவர்களும் காதை பிடித்துச் சாரி கேட்டனர்.

      " பாயி போட்டோஸ் எடுத்திங்களா. அலை பயங்கரமா எழும்புதா. நம்ம இடம் வரைக்கும் வருமா" என அவன் சென்று வந்ததைப் பற்றி வரிசையாகக் கேள்வி எழுப்பினாள் ப்ரீத்தி.

       " நாம நேற்று நின்ன இடத்தைப் பாரு. அலை சுழன்று அடிக்குது. வழி நெடுக மரம் உடைஞ்சு விழுந்து கிடக்கு. நம்ம ஓடையில் தண்ணீர் எவ்வளவு ஓடுது தெரியுமா" என ஒவ்வொரு இடத்தையும் பற்றி விவரித்துச் சொன்னான். 

     " இடி எங்க விழுந்துச்சுன்னு கேளு" என்றாள் ஹாசினி. " ஓஹோ இன்டைரக்ட் ஸ்பீச். மேடம் கோபமா இருக்காங்களா" எனச் சிரித்தவன். " நம்ம இருக்க இடத்துக்குப் பின்னாடி பெரிய மலை இருக்கு. அதில தான் விழுந்து இருக்கும். இங்க மர வீட்டில மேல இடிதாங்கி இருக்கு. அது சேஃப் தான். நம்ம இடமும் சேஃப் தான். " என்றவன்.

      " நேற்று எவ்வளவு பூச்சிகள் வெளியே திரிஞ்சது. இன்னைக்கு எதுவுமே காணோம். அதுங்களும் உணவோட மண்ணுக்குள் பதுங்கி இருக்கும். நாம இயற்கையிலிருந்து நிறையக் கத்துக்கலாம்" என நிறைய விசயங்களைப் பற்றிச் சொன்னான். வெளியே இரண்டாவது சீசன் மழை ஓய்ந்திருந்தது. மாலை என்பது ஒரு அனுமானமாகத் தான் தெரிந்தது.

        லாந்தர் விளக்கில் திரியைத் தூண்டி எண்ணெய்யை நிரப்பினர். மற்ற நாட்களில் சூரிய மின்சாரத்தில் நான்கு பல்புகள் எரியும். மழை பொழிவதும் விடுவதுமாக , காற்று சுழன்று அடித்தது. இயற்கையே சுற்றி ஆட்சி செய்யும் அவ்விடத்தில் மனிதர்கள் சற்று பொருந்தாதது போல் ஆனார்கள். இடியும் மின்னலும் அவ்வப்போது இலவசமாக மிரட்ட ப்ரீத்தியும் நடுங்கிப் போய்ப் பவனோடு ஒன்றிக் கொண்டாள். ஹாசினி அவ்வப்போது கண்களை மூடுவதும், காதை பொத்துவதுமாகச் சமாளித்துக் கொண்டாள்.

       " பாஸ், நைட் தாண்டிடுவோம்ல. ஒன்னும் ஆகாதே , குளிரு வேற ஆட்டுது பாஸ் " என ரகசியமாகச் சந்திராவிடம் அடி போட்டான் பவன்.

       "நீ எதுக்கு அடப் போடுறன்னு தெரியுது. நோ , என்னை நம்பி தான் மேகி ஆண்டி அனுப்பி இருக்காங்க. கொன்றுவேன் " என்றான். " போங்க பாஸ், எப்படினாலும் காலையில குளிர்ல விறைக்கத் தான் போறோம். கொஞ்சம் கருணை காட்டுங்களேன் " எனக் கெஞ்சவும்.

      " ஸ்டோர் ரூம்ல இருக்குடா. இரு வர்றேன்" எனச் சந்திரா நகரவும். இவ்வளவு நேரம் அவனிடம் முறைத்துக் கொண்டிருந்த ஹாசினி

     " இப்ப எங்கப் போற" என முகத்தைக் கடுமையாக வைத்துக் கேட்டாள் . அவனுக்குக் கேஜி பையனை மிரட்டும் நர்சரி டீச்சர் போல் தெரிந்தாள். சுண்டு விரலைக் காட்டினான் சந்திர தேவ். பவன் குலுங்கிச் சிரித்தான்.

      அதற்கும் ஓர் முறைப்பைத் தந்தவள், "நானும் வர்றேன்" என்றாள். " ஹேங்" என அவன் அதிர்ச்சியாகவும், அவன் அருகில் வந்து நின்றவள், " ஒரே இருட்டா இருக்கு. ப்ரீத்தியே பயந்த மாதிரி இருக்கா." என மட்டும் சொல்லித் திரும்பிக் கொண்டாள். தன் பயத்தைச் சொல்லக் கூடாதாம். அவளைக் கண்டு கொண்டவன், ஒரு சிறிய டார்ச்சை ஒரு கையிலும் அவளை ஒரு கையிலும் பற்றிக் கொண்டான்.

      அவளைத் தாழ்வாரத்தில் நிறுத்தி விட்டு, தான் முதலில் சென்று பக்கத்து இடத்தை ஆராய்ந்து விட்டு வந்து அவளை அழைத்துச் சென்றான். அந்த நேரத்தில் கேலி கிண்டல் இல்லாமல் கண்ணியமான அவனது தோழமை அவளுக்குப் பிடித்தது. லேசான சாரல் இருந்தது. அவளுக்குப் போக்கு காட்டிவிட்டு வரும் போதே இரண்டு டானிக்கை எடுத்துக் கொண்டான்.

       தாழ்வாரத்தில் அவளை நிறுத்தி விட்டு, பவனிடம் சென்று பண்ட மாற்றுச் செய்து வந்தான். அவள் சந்தேகமாகப் பார்க்கவும், " சப்பாத்தி, நைட் பசிச்சிதுன்னா " என அடுத்த அறைக்கு அழைத்து வந்தான்.

      " என் கூடவா தங்கப்போற " எனச் சந்தேகமாகக் கேட்டாள். அவனுக்குக் கோபம் வந்தது. அவளை உள்ளே அனுப்பி விட்டு, லைட், தண்ணீர், உணவு என விவரங்களைச் சொல்லி விட்டு வெளியேறினான்.

      படபடவென அவன் இருளில் இறங்கவும், "சந்திரா நில்லு" எனப் பின்னாடியே வந்தாள். அதற்குள் கொஞ்ச தூரம் கோபத்தில் நடந்திருந்தான்.

      " சந்திரா, நில்லு. இந்த நேரம் எங்கப் போற" என அவன் கையைப் பிடித்துக் கொண்டே அவன் நடைக்கு ஈடுகொடுத்துக் கேட்கவும், திருப்பி நின்றவன்.

     " உன்னை யார் இந்த மழையில் வரச் சொன்னது. திரும்பிப் போ. " என உருமினான்.

    " நான் ப்ரீத்தி என் கூடப் படுக்க வருவாளேன்னு தான் கேட்டேன்" என அவள் விளக்க முற்படவும். " உனக்குத் தான் நான் அரக்கன். என் மேல நம்பிக்கையே கிடையாது. நான் எப்படிப் போனா உனக்கென்ன போடி, காட்டேஜுக்கு போ" என அவளை விரட்டினான்.

       " சாரி, நீ அப்ப வெளியே போகும் போதும் போதும் வேண்டாம்னு சொன்னேன்ல. உன் மேல அக்கறை இல்லாமலா சொல்லுவேன். ப்ளீஸ் சந்திரா. காட்டேஜ்க்குப் போகலாம் வா" என அழைத்தாள்.

      " ஆகா பெரிய மனசு பண்ணி கூப்பிட்ட போடி. யாருன்னே தெரியாதவனை எல்லாம் நம்புவ. உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு உன் பின்னாடி அலையிறேன் பாரு. உனக்கு என்னைப் பார்த்தா அப்படித் தாண்டி இருக்கும். நீ போ. நாளைக்கே எல்லாத்தையும் சால்வ் பண்றேன். நான் ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லை. அந்த நரகத்திலேயே கொண்டு போய்த் தள்ளுறேன். அந்த யுவராஜ் பொண்டாட்டியா, கேஜே பார்ட்டி தலைவியா, உன் வாழ்க்கையை வாழ்ந்துக்கோ" என அவளை உதறினான்.

      கண்ணீர் கரை புரண்டு ஓட, கொட்டும் மழையில், " உனக்கு எதுக்கு இப்படிக் கோபம் வருது. நான் என்ன கேட்டுட்டேன். " என அவள் அழவும்

      " அழுகாதடி, டென்ஷன் ஆனா, மூக்கில் இருந்து இரத்தம் வேற வரும். எனக்கு டென்ஷனை ஏத்தாத. காட்டேஜ்க்கு போ. நான் மரவீட்டுக்குத் தான் போறேன். காலையில் வர்றேன்" என்றான்.

        " ம்கூம் வேண்டாம். நீயும் காட்டேஜ்க்கு வா, இல்லைனா நானும் மரவீட்டுக்கே வர்றேன்" எனக் கட்டிக் கொண்டாள். அவளைக் கூட்டிக் கொண்டு திரும்பக் காட்டேஜுக்கு நடக்கத் தொடங்கி இருந்தவன்,

          "அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.என் மேல உனக்கு எந்தக் காலத்திலையும் நம்பிக்கை வராது. எங்க அம்மாவைக் காரணம் சொல்றது எல்லாம் வெறும் பேச்சு. அது ஒரு சாக்கு தான். என் மேல அன்பு இருந்தா, எனக்காக அவங்களோட போராடுவ. நான் தான் கிறுக்கன், உன் மேல வச்ச காதலுக்காக இந்த உலகத்தையே எதிர்த்து போராடுறேன் " எனத் தன்னையே நொந்துக் கொண்டவன், காட்டேஜ் வாசலில் அவளை விடுத்துத் திரும்ப நடக்கப் போனான்.

       " என்னை விட்டுட்டுப் போகாத சந்திரா" எனத் திரும்பவும் அவன் மார்பில் வந்து ஒண்டிக் கொண்டவள், " நீ எப்டிடா அப்படிச் சொன்ன, என் கஷ்டம் என்னோட போகட்டும். உனக்குப் பிரச்சனை வேண்டாம்னு தான் ஒதுங்குறேன். என்னை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிற " என அழுகையோடு அவள் கேட்கவும். அவளை விலக்கி அவள் கண்ணைத் துடைத்தவன், "மழையில் நனையாத. உள்ள ஏறு" என்றான்.

        " நீயும் வா" என அவனையும் தன்னோடு இழுத்தாள். தாழ்வாரம் வரை ஏறியவன். " நீ உள்ள போ. நான் இங்க இருந்துக்குறேன் " எனப் பிடிவாதம் பிடித்தான். " நான் அப்படிக் கேட்டுருக்கக் கூடாது. சாரி உள்ள வா" என்றாள்.

     " ம்ப்ச். நான் வரமாட்டேன். நீ கேட்ட வார்த்தையே ஜென்மத்துக்கும் போதும். உங்க அப்பா, அம்மா மஸ்கட் வருவாங்க. உங்கப்பா ட்ரீட்மெண்டுக்கு அமெரிக்காலப் பேசி வச்சிருக்கேன். மேத்யுவும் பார்த்துக்குவான். நீ அங்க போய் இருந்துக்கோ." என இருளை வெறித்தபடிச் சொன்னான். உள்ளிருந்த சிம்மினியின் வெளிச்சம் மங்கலாகத் தெரிந்தது. மழை கொட்டித் தீர்த்ததால் வானில் லேசான வெளிச்சம் இருந்தது. அதுவே அவன் கோபத்தின் அளவைச் சொல்லவும், வெகுவாக அவளைப் பாதித்தது.

       அவனோடு அங்கேயே அமர்ந்தவள், "நீ உள்ள வரலைனா, நானும் உள்ளப் போகமாட்டேன். இந்த ஈரத்தோட இங்கேயே உட்கார்ந்துக்குறேன் " என அவனருகே அமர்ந்தாள்.

       " சும்மா, இந்த ஆக்டிங் எல்லாம் வேண்டாம். உள்ள போ. இன்னும் இரண்டு நாள் என்னைச் சகிச்சுக்கோ. அப்புறம் என் முகத்தையே பார்க்க வேண்டாம்." எனத் திரும்பிக் கொண்டான்.

      " சந்திரா, கோவிக்காத. நீதான் இந்தத் தீவிலிருந்து போகமுன்ன மிஸஸ் சிம்மதேவ்வா போவேன் , இன் ஆல் மீன்ஸ்ன்னுல்லாம் சொல்லி மிரட்டி வச்சிருக்க. எனக்குப் பயம்மா இருக்காதா. " எனக் கேள்வி எழுப்பி அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.

      " என்னடி பயம் அப்படியா உன் மேல பாஞ்சிருவேன். நீ இலேச முகம் சுனங்குனாலே , என் பாழாய்ப் போன மனசு கேக்கமாட்டேங்குது. இதில என்ன செஞ்சிடுவேன்" என அவன் எகிறவும் அவளும் உருகித்தான் போனாள் அவள் பயம் அவளுக்குத் தானே தெரியும்.

        " சந்திரா, நீ நினைச்ச உடனே எல்லாத்தையும் சாதிக்கனும்னு பார்க்காதே . கொஞ்சம் ஸ்பேஸ் குடுவேன். " எனவும் அவளை விட்டு தள்ளி உட்கார்ந்தான். அவளும் சேர்ந்து அவனோடு நகர்ந்து ஒண்டிக் கொள்ளவும்.

       " இந்த விளையாட்டே வேணாம். தள்ளிப் போடி. அப்படியாடி உன்னை ரே பண்ணிடுவேன். அறிவு கெட்டவளே. போ நீ ஒன்னும் வேண்டாம். நான் இப்படியே இருந்துக்குறேன்" என்றவன் கோபத்தை அடக்க மாட்டாமல்

         " மேத்யூவோட ஒரே வீட்டில தங்குறதுக்கு எல்லாம் உனக்குப் பயமா இருக்காது. இந்த நஞ்சப்பா ஊர் பூரா சொன்னதெல்லாம் உனக்குப் பிரச்சனை இல்லை. என் கூட இருக்கத் தான் உனக்குப் பயம். போடி பேசாத" என அந்தக் கையை உருவி விட்டு மீண்டும் தள்ளி அமர்ந்தான்.

           " நீ பேசாதன்னு சொன்னா, நான் பேசாம இருந்திடுவேனா. ஆமாண்டா நீதான் எனக்குப் பிரச்சனை. உன் கூட இருக்கத்தான் எனக்குப் பயம். ஏன் தெரியுமா, அந்த யுவராஜை நான் முறைக்கிறதிலையே அவன் என் பக்கமே திரும்ப மாட்டான். மேத்யுவுக்கும் எனக்கும் நடுவில இருக்கிறது நட்பு, அதையும் தாண்டிய சகோதரப் பாசம். ஆனால் நீ அப்படியா, ஒரு பார்வையிலையே உள்ள வரைக்கும் அசைச்சிடுவ. உன்னைப் பார்க்காமலே உன் பேரை ஜெபம் பண்ணவ நான். அதுவே எனக்கு எல்லாத்தையும் ஃபேஸ் பண்ற தைரியம் தந்தது. 

         எந்த ஒரு பொண்ணுக்குமே கல்யாணம்கிறது பெரிய விசயம். நஞ்சப்பா என் பேரைச் சேர்த்து வச்சுச் சம்மந்தம் பேசும் போது கூட , அரும்பு மீசையோட என் கழுத்தில மாலை போட்ட சந்திரா தான் மனசில் வந்தான். அவங்க அம்மா அசிங்கமா பேசின போதும் கூட வெளியே எதுவும் இல்லைனு சொல்லிட்டு மனசுக்குள்ளேயே அவனை நினைச்சிட்டு இருந்தவ. நிச்சயமா நான் உன்னைத் தேடி வந்திருக்க மாட்டேன். ஆனால் வேற யாரையும் கல்யாணம் பண்ணியிருக்கவும் மாட்டேன்." என அவள் சொல்லச் சொல்ல அவளையே பார்த்திருந்தான்.

        அவன் பார்வையில் அத்தனை மாற்றம் இருந்தது. அவன் பார்வை உணர்ந்து அவனைத் திரும்பிப் பார்த்தவள், முகத்தைச் சுருக்கி, " இப்படிப் பார்த்தேனா, நான் என்ன செய்வேன். இங்க பாரு ஹார்ட் பீட் எப்படி எகிறுது" என அவன் கையைத் தூக்கி அவள் இடது பக்கம் இதயத்தில் வைத்துக் காட்டினாள். அதன் துடிப்பு அவனுக்கே கேட்டது.

       " ஆயிரக்கணக்கான ஆம்பளைங்க இருக்க மீட்டிங்கிலக் கூட அசராமல் பேசிடுவேன். ஆனால் உன் கூட இருக்கப்ப தான், என் மேலையே எனக்கு நம்பிக்கை கிடையாது. உன் கூடத் தங்க பயப்படது, உன் மேல நம்பிக்கை இல்லாமல் இல்லை. என் மேல நம்பிக்கை இல்லாமல் தான் " என அவள் குனிந்து கொண்டாள். 

       சந்திராவுக்கு வானில் பறப்பது போல் இருந்தது. அதே பார்வையோடே அவளைத் தொடர்ந்தான். அவனது கரம் இதயத்தைத் தொட்டிருந்த இடத்திலிருந்து உயர்ந்து அவள் முகத்தைத் தாங்கியது. ஆனாலும் அவள் கண்களை நிமிர்த்தினாள் இல்லை.

          " அப்படி என்ன செஞ்சுடுவேன்" எனக் கிசுகிசுப்பாகக் கேட்டான். கன்னத்தில் இரண்டு குண்டு தக்காளியும் அதனை அடுத்து இரண்டு கன்னக்குழியும் சந்திராவை , சிம்மதேவனை அதன் உள்ளே சுருட்டியது. ஒரு மின்னல் வெட்ட அதன் ஒளியில் பெண்ணவளின் கன்னமும் மின்னியது. அதைத் தொடர்ந்த பெரிய இடி சத்தத்தில் அதிர்ந்தவள், கண்ணை மூடிக் கொண்டு அவன் மார்பில் சரண் புகுந்தாள். 

          அவனும் தன்னுள் அவளை அடக்கிக் கொண்டவன், "ஹசி, இவ்வளவு காதலை வச்சுக்கிட்டு ஏண்டி கல்யாணம் வேண்டாங்குற. உன்னைத் தவிர வேற யாரையும் நானும் கட்டமாட்டேன். நீயும் அப்படித் தான். எதுவா இருந்தாலும் சேர்ந்தே சமாளிப்போமே " என்றான். அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், "மாமி" என்றாள், "அது தான் சமாளிச்சுக்கலாம்னு சொல்றேன்ல " என்றான்.

         " அவங்க உன்னைப் பெத்தவங்க. உன் அம்மா. எனக்காகக் கூட நீ அவங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது. நான் எங்க அம்மாவை விட்டுக் கொடுத்துடுவேனா, அதே மாதிரி தான் அவுங்களும். நீ ஒரு சைட் எடுத்தேன்னாலும், இல்லை நடுவில் கிடந்து கஷ்டப் பட்டாலும், எனக்கு மனசு கேக்காது. அப்பவும் நான் ஒதுங்கி தான் போவேன்." என்றாள்.

" இவ்வளவு நல்லவளா உன்னைக் கடவுள் படைச்சிருக்க வேண்டாம். புருஷனுக்காக மாமியாரோட சண்டை போடனும். அப்பத் தான் உரிமையை நிலை நாட்டலாம். எனக்காக அது கூடச் செய்யமாட்டியா. வா வந்து அனுசுயா தேவியோட மல்லுக்கு நில்லு. அந்தம்மாவா, என் ஹாசினியான்னு பார்த்துருவோம்" என்றான். அவள் குலுங்கிச் சிரித்தாள்.

       " நீ சரியான அரக்கன் தான். உன் காரியத்தைச் சாதிச்சுக்க என்ன வேணாலும் செய்வ. இதோ மாமிக்கு எதிரா என்னை ஏத்தி விடுற பாரு." என்றாள்.

      "என்னத்தடி சாதிச்சேன். உன்னைக் கடத்திட்டு வந்து எத்தனை நாள் ஆச்சு. இன்னும் எதுக்குமே வழியைக் காணோம். ஒரு லவ் யு கூட இல்லை. எல்லாத்துக்கும் போராட வேண்டியிருக்கு " என அவளைத் தன் கைவளைவுக்குள் வைத்து அவன் குறைபடவும். சிரிப்போடு , " அரக்கன் கடத்திட்டு வருவாராம், இவருட்ட மயங்கி அழகி லவ் யு சொல்லிடுவாளோ. அதெல்லாம் கதையில் தான் நடக்கும். " என்றாள்.

     " சரி அழகியும், அரக்கனும் வேண்டாம், மாமன் மகனுக்கு, மாலை போட்டவனுக்கு, அவன் அத்தை மகள் சொல்லலாம்ல. உங்கப்பா இதில ஜாக்பாட் ஒரு தடவை தான் கிடைக்கும்னு டயலாக் வேற அடிக்கிறார். " என்றான்.

     " எங்கப்பாவை எதுக்கு நடுவில் இழுக்குற " என்றவள் இரண்டு தும்மல் போட்டு மூக்கை உறிஞ்சி " குளிருது " என ஒண்டினாள் " அம்மா தாயே, முதல்ல எந்திரி. காய்ச்சல் வந்தா உனக்கு நம்மாள வைத்தியம் பார்க்க முடியாது" என எழுப்பி விட்டான். " ஏன் அன்னைக்கு எல்லாம் மாத்திரைக் கொடுத்து , கை கால் எல்லாம் தேய்ச்சு விட்ட " எனவும்,

       " அன்னைக்கே உன்னை விட முடியலை. இன்னைக்கு எல்லாம் ரொம்பக் கஷ்டம். நிஜமாவே அரக்கன் ஆயிடுவேன். வேண்டாம்பா" என்றான். அவன் சொன்ன விதம் அவளை மயக்கியது, " ஐ லவ்யுடா சந்திரா" என அவன் கன்னத்தில் இதழொற்றியவள், அவன் சுதாரிக்கும் முன் உள்ளே ஓடினாள். அவன் பின்னோடு செல்லவும், அவனது உடையை எடுத்துக் கொடுத்து, மாற்றி வரச் சொன்னாள். அவளும் உடையை எடுக்கவும் லாந்தர் விளக்கின் ஒளியைக் குறைத்தான்.

       இருவரும் உடை மாற்றி வந்தனர். தேவ் காலையில் ஹாசினி சேமித்து வைத்த காய்ந்த குச்சிகளைக் கனப்பில் போட்டு தீயைப் பற்ற வைத்தான். அதன் வெப்பத்தில் இருவரும் குளிர் காய்ந்தபடி எதிரெதிரே அமர்ந்தனர்.

      கையை நெருப்பில் காட்டி தேய்த்துக் கன்னத்தில் வைத்துக் கொண்டாள். அவள் கூந்தலை விரித்து விட்டிருக்க, அந்த இளஞ்சிவப்பு பூப் போட்ட ஆடையில் அவள் தேவதையாகவே தெரிந்தாள்.

     அக்னியைச் சாட்சியாக வைத்ததைப் போல் அமர்ந்திருந்தவளின் எதிரே கையை நீட்டி அவளது கரத்தைப் பற்றிக் கொண்டவன் , "மது எனக்கு ப்ராமிஸ் பண்ணிக்குடு" என்றான். "என் மேல நம்பிக்கை இல்லையா" என்றவள், அவன் ஆட்சேபனையாகப் பார்க்கவும், " சரி சொல்லு" என்றாள்.

      " நான், இந்தக் கிட்னாப்பிங்கில இருந்து, எது செஞ்சிருந்தாலும் உன்னோட நன்மைக்காகத் தான் செஞ்சிருப்பேன்னு நீ நம்புறியா " எனக் கேட்டான் , அவளும் ஆம் எனத் தலையாட்டினாள்.

       " ஓகே குட். எந்தச் சூழ்நிலை வந்தாலும், நானே கோபத்தில் எதாவது சொன்னாலுமே, என்னை விட்டு பிரியமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு " என்றான்.

     " சந்திரா, எனக்கு எந்த அவமானம்னாலும் நான் பொறுத்துக்குவேன். எங்க அம்மாக்கு ஒன்னுன்னா என்னால பொறுத்துக்க முடியாது. அதை மட்டும் கவனத்தில் வச்சுக்கோ. மத்தபடி என்னை முழுசாவே உன்கிட்ட தர்றேன் " என அவன் கையைப் பற்றிச் சத்தியம் செய்தாள்.

     " இது போதும்டி. இந்த உலகமே எதிர்த்தாலும் என் ஹசிக்காக நான் போராடுவேன். நீயும் அனுசுயா தேவிட்ட போராட ரெடியா இரு " என்றான்.

    " நீ இப்படிச் சொல்லியே என்னை மிரட்டாத. உங்க அம்மா தானே எதாவது சொன்னாலும் சொல்லிட்டு போறாங்க." என்றாள்.

      " அப்படிச் சொல்ற நேரமெல்லாம் ஒரு சாரி சொல்லிடுறேன் சரியா போயிடும் " என்றவன் இப்போதும் ஒரு "சாரி" சொல்லி அவளைத் தன் புறம் இழுத்துக் கொள்ள, முதலில் தன்னிச்சையாய் மிரண்டவள் , அவனின் ஆட்சேபனைப் பார்வையில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அவளைத் தன் மடியில் இருத்திக் கொண்டவன்,

         " மதும்மா இன்னும் என்னடி பயம். எனக்கு வேண்டியது நீ என்னை விட்டு போகமாட்டேங்கிற ப்ராமிஸ் தான். அது தான் அக்னிய சாட்சியா வச்சு சொல்லிட்டியே. உன் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது" என அவளை அணைத்துக் கொண்டான். அவளுக்குள் அலை அலையாய் ஒரு புதுவித உணர்வு வந்து ஆட்கொண்டது.

       அவன் கழுத்தில் தன் கரத்தை மாலையாகப் போட்டுக் கொண்டவள், "அக்னி , ப்ராமிஸ் எல்லாம் சொல்றியே, ஹாசினி சந்திர தேவ் ஆகிட்டேனா." எனத் தமது முழுச் சம்மதத்தை அவனிடம் கேள்வியாகக் கேட்கவும்.

       " சுஹாசினி சந்திர பிரகாஷ் தேவ் ஆகிட்டடி " என்றான்.அவள் புரியாமல் " அதென்ன சுஹாசினி" என அவள் வினவவும் , " சுஹானா தீவில, என்னவள் ஆன ஹாசினி, அதனால சுஹாசினி. ஐ லவ் மை சுஹாசினி " எனக் காதல் வசனம் பேசியவன், அதோடு தீண்டலும், சீண்டலுமாக அவளை ஆட்கொண்டு அந்த மழை இரவை இருவரின் மனமொத்த இரவாக மாற்றிக் கொண்டான். அவர்களுக்குள் இருந்த பனித் திரையும் தகர்ந்து காதலர்களாக மாறினர்.

    சந்திரா ஹாசினியை தீவிலேயே மணப்பானா. தங்கப்பாண்டியன் இவர்களைத் தேடி வருவாரா. பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment