ஹாசினி சந்திரா-15
அரபிக்கடலின் நடுவே
அழகிய சுஹானா தீவு.
அதிகாலை கடந்தது
அடைமழை தொடர்ந்தது.
ஆழியிலிருந்த ஆதவனை
மேகங்கள் மறைத்தன.
இருள் பிரியாமல்
இரவு போலவே இருந்தது.
ஒற்றைக் கட்டிலில்
அவனோடு அவனவளாகவே
ஒன்றியிருந்தாள் பேதை .
அரக்கனவன் வேலையோ
அடக்கி ஆண்டானா?
காதலர்களாய்
நாம் அவர்களைப் பிரிய
கந்தர்வர்களாகி கலவி முடித்து
தம்பதியராகியிருந்தனர்.
நேற்றைய முன்னிரவில்
சந்திரப்ரகாஷ தேவின்
நல்லவன் போல் பேச்சென்ன !
நள்ளிரவில் நடந்ததென்ன ?
சிறையெடுத்த தேவதையை
வாய்ப்பேச்சில் வளைத்தானோ
வலிமையால் அணைத்தானோ
காதலால் கசிந்துருகினானோ
கருத்தொருமிக்கக் கூடினானோ
களவாடி அவளைக் கன்னமிட்டானோ
கயல்விழியால் கண்ணசைத்தாளோ.
கற்பியல் பிறவாமல் நடந்தாரோ
கலவி மட்டும் போதுமென்றிருந்தாரோ
அவனணைப்பில் அசந்துறங்கும்
அணங்கு அவளைக் காண்போம்.
வலிமையான அவன் கரங்களில்
வசதியாகவே உறங்கினாள் கோதை .
நித்திரையிலும் செம்மை பூக்க
முதலிரவு கொண்டாடிய புதுமலராய்
களைந்த கேசத்தின் நடுவே
நெற்றி வகிட்டில் அவன் செங்குருதி.
சங்கு போன்ற பால்வண்ணக் கழுத்தில்
தவழ்ந்தது சந்திரனின் பிறை சங்கிலி !
அடப்பாவி அரக்கா!
நினைத்ததைச் சாதித்தானே.
நிகழ்ந்தது என்னவோ.
நித்திரை கலைந்தவள்
உதிர்க்கும் வார்த்தையே
உண்மை உரைக்கும்.
உற்று நோக்குவோம்
நடப்பது யாதென !
விழிப்பும், மயக்கமுமான மந்காசமான நிலையில் அவன் தோளில் துயின்றவளை, மெல்ல வருடி நோகாமல் அசைத்தான் சந்திரதேவ். "சுஹி " என அவள் முகத்தைக் கையில் ஏந்தியவன், தானும் அவளைப் போலவே ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு, "ஏஞ்சல் திடீர்னு எப்படி வரம் தந்தது " என்றான். அவன் எதைக் கேட்கிறான் எனப் புரிந்து அவனின் தேவதையின் கன்னத்தில் இரண்டு சிவப்பு ரோஜாக்கள் பூத்து, அவனை மயக்கும் கன்னக் குழியும் விழுந்தது.
இதழ்கள் விரிந்து அதன் ரகசியத்தை முத்துக்களாக உதிர்க்கும் என அவன் அவளையே பார்த்திருக்கப் புன்னகையே பதிலாய், அவன் நெஞ்சில் புதைந்து , அரைசந்திர தழும்புக்கு இதழொற்றலைத் தந்தாள். அவன் மீண்டும் வலியுறுத்தவும், அவன் முகத்தைப் பார்த்துக் கண் கலங்கியவளாக,
" நீ , அன்னைக்குக் கிட்னாப் பண்ணலைனா, நான் பீஸ் பீஸா தானே போயிருப்பேன். அடுத்த செகண்ட் என்ன நடக்கும்னு நமக்குத் தெரியாது. நீ பேசப்பேச என்னைப் பார்த்தது, நினைச்சதைப் பத்தியெல்லாம் சொல்லச் சொல்ல, எனக்காக இவ்வளவு ஏங்கின என் சந்திராவுக்கு, இந்த நிமிஷத்தை தரனும்னு முடிவு பண்ணேன். என் அம்மா ,அன்னைக்குச் சொன்னது தான். தன் மானத்தைக் காப்பாற்றின அப்பாவுக்குத் தன்னையே கொடுத்தேன்னு சொன்னாங்க. அப்ப அதோட அர்த்தம் சரியா புரியலை. ஆனால் இப்ப எங்கம்மா மாதிரியே, நானும் என் சந்திராவுக்காக, எனக்காக எல்லாம் செய்யும் என் சந்திராவுக்காக இந்த நிமிஷத்தில் வாழனும்னு தோணிச்சு
நீ இன்னும் எதையோ என்கிட்ட சொல்ல முடியாமல் மறைக்கிற. அந்த விசயம் எனக்குத் தெரிய வரும் போது, நான் உன்னை விட்டு பிரிஞ்சுடுவேனோன்னு நீ பயப்படுற. உன் பேச்சில அந்தப் பயம் எப்பவுமே இருக்கு.
இந்தத் தாம்பத்தியம் , காந்தர்வ கல்யாணம் ஏதேதோ சொல்றது எல்லாமே, என்னை உன்னோட பிணைச்சு வைக்க நீ செய்யற முயற்சி. இதெல்லாம் நடக்கிறதால், நான் உன்னை விட்டு பிரியமாட்டேன்னா, ஓகே. சரிதான்னு முடிவெடுத்தேன். இப்போ என் மனசில் முழுசா உன் மேல காதல் இருக்கு. நான் அதோட, என் சந்திராவை எனக்குத் தந்த, இந்தச் சுஹானா தீவுலையே என்னை உனக்குத் தரனும்னும் தோணிச்சு .
ஆனால் இது எல்லாமே, நீ என்னை விட்டு விலகி கண்ணியமா அடுத்தக் கட்டிலுக்குப் போன நிமிஷம் தான் தோணிச்சு. அக்னியைச் சாட்சியா வச்சு, இதோ பில்மியா உன் இரத்தில குங்குமம் எல்லாம் வச்சுகிட்டு, உன் செயினை உன் கையாள போட்டுக்கிட்டு இதோ உன் மனைவி ஆகிட்டேன்.
ஹாசினி சந்திரா, ஹாசினி சந்திர தேவ் ஆகிட்டா. எனக்கு அது போதும். இனி வாழ்க்கை எப்படி இழுத்துட்டு போகுதோ, அப்படிப் போவோம் " என உணர்ச்சி மயமாகப் பேசவும், அவளை இறுக்க அணைத்துக் கொண்டவன்,
" தாங்க்ஸ்டி. நீ சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் நிஜம். ஊருக்கு போகவும் நீயே தெரிஞ்சுக்குவ. அப்போ என்னைப் பிரியறதை தவிர நீ என்ன தண்டனை கொடுத்தாலும் , எது சொன்னாலும் நான் ஒத்துக்குறேன். " என அவளுக்கு வாக்குத் தந்தான் சந்தி தேவ்.
" லெட்ஸ் ஸீ, அரக்கன் என்ன வேலை செஞ்சு வச்சிருக்கார்னு, ஊருக்குப் போனால் தானே தெரியும் பார்ப்போம்" என அவளும் யோசனையாகவே அவன் நெற்றியில் முட்டியபடி கூறினாள்.
" அது தான் சிக்கம்மா கட்டளையை ஒத்துக்குறேன்னு சொல்லிட்டேனே. இந்தச் சத்தியமே எனக்கு நிறையச் சேதாரத்தைத் தான் தரும். ஆனாலும் பரவாயில்லை " என்றவன். " இந்த ஜாக்பாட் கிடைச்ச பிறகு வேற என்ன வேணும்." என அவளைத் தன்னுள் மீண்டும் புதைத்துக் கொண்டான்.
மழை சற்றே ஓய்ந்து ,வெளிச்சம் பரவுகையில் ஹாசினி நீராட வேண்டும் என்றாள் . அவனும் அவள் நிலை புரிந்தவனாக, அன்றொரு நாள் அவள் கேட்ட அருவி குளியலைத் தர விரும்பினான். பக்கத்து அறையில் ப்ரீத்தி மட்டும் எழுந்து காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தாள் .
சந்திர தேவ்,அவளிடம் அருவிக்குக் கரை வரை இருவரும் போய் வருவதாகச் சொல்லவும், "நான் மேடத்தோட போகவா பாயி " என அவள் கேட்டாள். அவசரமாக மறுத்த சந்திராவின் குரலிலும் , ஹாசினியின் நலுங்கிய தோற்றத்திலும் அவளுக்குப் புரிந்து விட்டது.
சந்திரா திரும்பி முன்னால் நடக்க, பின்னோடு சென்ற ஹாசினியை நொடியில் நெருங்கியவள், அவளைக் கட்டிக்கொண்டு ரகசியமாக, "மேடம், பாபியாகிட்டீங்க கங்கிராட்ஸ்" என மொழிந்துவிட்டுச் சந்திரா திரும்புவதற்குள் பழைய இடத்துக்குச் சென்று விட்டாள் .
ஹாசினிக்குத் தான் அதிர்ச்சியாக இருந்தது, இந்தப் பெண்கள் எப்படிச் சட்டெனப் புரிந்து கொள்கிறார்கள் என ஆச்சரியம் வேறு. அதையே சந்திர தேவிடம் சொல்லவும், அடக்கமாட்டாமல் சிரித்தவன், நீரோடையில் அவள் முகத்தைக் காட்டினான். தன்னைத்தானே பார்க்க லாட்ஜையுற்றவளாகக் ஹாசினி முகத்தை மூடிக் கொண்டாள்.
மழை பொழிவின் காரணமாக அருவியில் நீர் வழக்கத்து மாறாக ஆர்ப்பரித்து விழுந்தது. ஓடையே கரை புரண்டு ஓடியது. ஹாசினிக்கு அதைப் பார்க்கவும் குதூகலமானது. அவனே அவளை உடும்பாகப் பிடித்துக் கொண்டு ஆயிரம் அறிவுரைகளோடு அருவி கொட்டுமிடம் அழைத்துச் சென்றான்.
சில்லென்ற அருவிநீர், தொம்மென்று தலையில் மத்தளம் வாசிக்க, நீரின் அழுத்தத்தில் மூச்சு முட்டியது. சிறு வயது ஹாசினியானவள் , ஒவ்வொரு முறை அருவியில் தலை காட்டுவதும், பின் மூச்சு திணறி "ஹா" என விலகுவதுமாக அனுபவித்தாள். அவளையே ரசித்திருந்தவன், கன்னி விளையாட்டுப் போதும் என அவளோடு காதல் விளையாடும் சொல்லித் தந்தான். அவளும் நல்ல மாணவியாக, மனைவியாக அவனிடம் பயின்றாள் .
வருண தேவன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன், இந்தக் காதல் ஜோடிகள் அவ்வளவு சாதாரணமாகக் கிளம்ப மாட்டார்கள் என, தனது சகாக்களான மேகக் கூட்டத்தை அழைத்து வந்து இருள் கூட்டி, இடியும் மின்னலையும் இழுத்து வந்து மிரட்டல் விட்டு , வாயு பகவானை அவர்கள் மேனியில் பாணம் விடச் சொன்னான், ஆனாலும் மன்மதனின் ஆதிக்கத்தில் கட்டுண்டு இருந்தவர்கள் இவர்களையெல்லாம் அலட்சியப் படுத்த, வருணன் நேரடி களத்தில் இறங்கி அவர்கள் மேல் ஆக்ரோஷமாய் வருஷித்தான். சந்திர தேவ் அப்போது தான் வருணன் கோபம் புரிந்தவனாக, தன் ஹாசினியை அழைத்துக் கொண்டு நனைந்தபடியே அறைக்கு வந்து .சேர்ந்தனர்.
இயற்கையை மிஞ்சிய விசயம் எதுவுமில்லை. புயலும் மழையும் ஓரிரு நாளில் முடியுமென்ற விஞ்ஞானத்தின் ஆய்வையும், சந்திரதேவின் எதிர்பார்ப்பையும் ஒரு சேர பொய்யாக்கியது. மூன்று நாட்கள் புயலும், மழையும், காற்றுமாக மோசமான வானிலை.
இதில் தொலைத் தொடர்பு செயலிழந்தது. ஹெலிகாப்டரை எதிர்பார்த்த சந்திராவும் ஏமாற்றம் அடைந்தான். அவனுக்கு மட்டும் பதட்டமான சூழ்நிலை. ஆனால் மற்ற மூவரும் அந்தத் தீவில் தனிமை, இனிமையை ரசிக்கத் தொடங்கியிருந்தனர். பல நேரங்களில் பதட்டமான மனநிலையிலிருந்த சந்திராவையுமே அணைத்துத் தேற்றியது ஹாசினி சந்திரா தான். அரக்கனிடம் அகப்பட்ட அழகியவள், அழகனான அவனையே ஆளத் தொடங்கியிருந்தாள். அவளோடான நேரங்களில் சகலமும் மறந்த அரும்பு மீசை முளைத்த சிறுவனாகக் காதலில் மூழ்கியிருந்தான்.
தங்கப்பாண்டியன் ஐபிஎஸ், மேனகா கையெழுத்திட்ட கோப்புகளையும் வந்து வாங்கிச் சென்றார். சிவராஜ் நஞ்சப்பாவுக்கு எதிராக நிலக்கரி பேர ஊழல் சம்பந்தப்பட்ட கோப்புகளை அவரது மனைவி தான்வி ஐஏஎஸ் மூலம் ரகசியமாக ஒரு என்ஜிஓ அமைப்பிடமிருந்து பெற்றார். அதனை ஆராய்ந்து, அதற்குத் தேவையான மற்ற ஆதாரங்களையும் திரட்ட ரகசியமாகத் தனது உதவியாளர் கிரிஷ் தலைமையில் காவலர்களை முடிக்கி விட்டார்.
நஞ்சப்பாக்களைக் கண்காணிக்க ஆட்களை ஏவியிருந்ததால், அவருடைய நடவடிக்கை இவரது கை நுணியில் தான் இருந்தது. இரண்டு நாள் முன்பு ரெட்டி விசயம் வெளியானது முதல் மகனை அவர் பாதுகாக்கச் செய்த முயற்சிகளில் ஒன்று முன்ஜாமீன் எடுப்பது, ஆனால் அதனைச் செய்வது அவ்வளவு எளிதாக இல்லை. தேர்தல் சமயம் வேண்டாம் என முடிவு செய்தவர், மகனை மறைத்து வைக்க முயற்சித்தார். அதனையும் கண்டு கொண்ட காவலன், ஆட்களைப் பின்தொடர மட்டும் பணித்திருந்தான். ரெட்டி கையில் கிடைக்க வேண்டும், தேர்தல் நடந்த பின் கைது நடவடிக்கை எடுக்கலாம் என்றும், எஸ்ஆர்சி இந்தியாவிலிருந்து கிளம்பட்டும் எனப் பொறுத்திருந்தார்.
மங்களூரில் அவர் விரித்து வைத்த வலையில் சரியான நேரம் பார்த்து சந்திர தேவின் நிழல் உலக வேலைகளைச் செய்து முடிக்கும் ஸ்டிபன் , ரெட்டியை சிக்க வைத்தான். அதனால் அடுத்த விமானத்தில் அங்கே பறந்தார் ஆபீஸர்.
ரெட்டிக்கு வலது, இடது கரங்களாக இருந்தவர்கள் சிலரை சிறையெடுத்ததிலேயே நஞ்சப்பாவின் மொத்த லீலைகளும் ஆபீஸர் வசமிருந்தது. 'ரெட்டி என் கையில் மாட்டினா தான் உயிராவது மிஞ்சும். நஞ்சப்பா ஆட்கள் கையில் கிடைத்தால் முடிந்தான்' என்ற செய்தியோடு அவர்களை வெளியே விட்ட ஆபீஸர், பின்தொடர ஆட்களை ஏவியிருந்தார்.
ஸ்டிபனுக்கும் இது தெரியும், தனது கடுங்காவலில் இருந்த ரெட்டியை அவன் போனிலிருந்ததைத் தங்களது போனுக்கு ஒரு நகல் எடுத்துக் கொண்டு, தாங்கள் அசட்டையாக இருப்பது போல் ஒரு நாடகத்தை அரங்கேற்ற அவர்கள் அசந்த நேரமாகக் கூட்டாளிகளை அழைத்து ரெட்டி அங்கிருந்து தப்பினான். ஆனால் புலி வாயிலிருந்து தப்பிச் சிங்கத்தின் வயிற்றுக்கு இரையானது போல் தென்பாண்டிச் சிங்கம் தங்கப்பாண்டியன் ஐபிஎஸ் கையில் சிக்கினான்.
ஏற்கனவே சந்திரதேவ் ஆட்கள் செய்த சித்திரவதை போதாது எனப் போலீஸ் அடியைக் காட்டினார் தங்கப்பாண்டியன். ரெட்டியை நன்றாகக் கவனித்ததில் அவன் யுவராஜின் பெயரைச் சொல்லி விட்டான். அடுத்து அதற்கான ஆதாரங்களைத் திரட்டினர். ஏற்கனவே தங்களிடமிருந்த அலைப்பேசி அழைப்புகளை க்ராஸ் செக் செய்யும் போது, ரெட்டியும் யுவராஜும் எத்தனை முறை பேசினார்கள் என்பதை அது காட்டிக் கொடுத்தது. அதிலும் ரெட்டியின் போனில் அவன் பாதுகாப்புக்காக யுவராஜோடு பேசியதை ஒலிப்பதிவு செய்தும் வைத்திருந்தான்.
ரெட்டியை தோண்டித் துருவியதில் ரெட்டிக்கே தெரியாமல் தன்னை அடைத்து வைத்திருந்தது, அவன் ஹாசினியை கொலை செய்ய முயன்ற மற்ற இரு தருணங்களையும் சொல்லும் போது, மற்றொரு வண்டி தங்களைத் திசை திருப்பியதையும் சொன்னான்.
நிறையப் புகைப்படங்களை ஆங்காங்கே சிசிடிவிக்களில் பதிவானவற்றைப் பிரிண்ட் போட்டு வைத்திருந்ததைக் காட்டி விசாரித்ததில் மற்றொரு வண்டி எண்ணும் பிடிபட்டது. அதை நூல் பிடித்துத் தங்கப் பாண்டியன் அந்த விசாரணையைத் துரிதப் படுத்தினார். இதற்கிடையில் கோவாவில் வேறொரு வழக்கில் பிடிப் பட்ட இரண்டு மீனவர்களுக்கு ,ஹாசினி சந்திரா பற்றி ஏதோ தகவல் தெரிகிறது எனவும் , ரெட்டியை பத்திர படுத்தி விட்டு கோவா விரைந்தார்.
கர்நாடகத்தின் இரண்டாம் கட்டத் தேர்தல் மழையோடு நடந்தேறியது. ஒரு நாள் நள்ளிரவில் முதலமைச்சர் பிறரியாமல் வந்து எஸ். ஆர். சியை பார்த்துச் சென்றார். அது மேனகாவுக்குமே ஒரு பெரிய மனோதிடத்தைத் தந்தது. தேர்தலன்று மாலையே ஆறுமாதகால மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு, இருள் கவ்விய நேரத்தில் மருத்துவமனையிலிருந்து, எஸ் ஆர் சந்திராவை சந்திர பவனத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காலையில் கவனமாக மேனகா, பணியாட்கள் முதல் அத்தனை பேருக்கும் அறிவுரை வழங்கியிருந்தார். ஹாசினியின் அரசியல்வாதி புகைப்படங்களை அகற்றியவர், டிவி கணெக்சனையும் அப்புறப்படுத்தியிருந்தார். யாரும் ஹாசினி படுகொலைபற்றிப் பேசக் கூடாது எனக் கடும் உத்தரவும் தரப்பட்டு இருந்தது.
தேர்தல் வாக்குப் பதிவு மும்மரத்திலிருந்ததால் ஊடகங்கள் கவனம் இவர்கள் மீது இல்லை. அதனைப் பயன்படுத்திக் கொண்டு யார் கவனத்தையும் கவராமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். வழிநெடுக மேனகாவுக்கு எங்காவது ஹாசினி பற்றிய செய்தி கணவரின் கண்ணில் பட்டு விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.
மருத்துவமனையிலிருந்து கிளம்பும் போதே வழக்கம் போல முன் சீட்டில் அமரப் போனவரை , இருவருமாகப் பேசி கட்டாயப்படுத்தித் தங்களுக்கு நடுவில் அமர்த்திக் கொண்டனர். முன் சீட்டில் அதிபன் அமர்ந்து கொண்டான்.
தனது வழக்கமான பாணியில் , இரண்டு பேருக்கும் என்னை அரெஸ்ட் பண்ணி உட்கார வைக்கனும்னு எவ்வளவு நாளா ஆசை " எனக் கேலி செய்யவும் முதலில் அதிர்ந்த இருவரும், பின் சுதாரித்துச் சிரித்தனர்.
" இனிமே இப்படித்தான். இரண்டு பேரும் உங்களை விடுறதா இல்லை. என்னக்கா சரி தானே" என மேனகா பானுமதியைக் கேட்கவும்,
பானு, "அவருக்கென்ன கசக்கவா செய்யும், சின்ன வயசில் முடியாதது, இப்ப நிறைவேறுதுன்னு மனசில் சந்தோஷமா இருக்கும்" எனக் கணவரைக் குறை பேசினார் . ஹாஹாவெனச் சிரித்தவர், " பானும்மா, நீ இருக்க வரை நான் இராமன் தான். அதனால் தான் மேனுவே ராம்ஜி ன்னு கூப்பிடுறா" எனவும்.
" ஆகா போதுமே அதுக்கப்புறம் கிருஷ்ணரா மாறிட்டிங்க. இது ரொம்பப் பெருமை தான்" எனக் கோபிக்கவும், மேனகா சிரித்தார்.
" அதி , உங்கம்மா எவ்வளவு பொறாமைபடுறா பாரு. என்னைப் பிடிச்சு வைக்காதது யார் தப்பு" என மகனிடம் பஞ்சாயத்து வைத்தார் சந்திரா.
" உங்களைப் பிடிச்சு வச்சிட்டாலும், நம்ம இரண்டு பேருக்கும் பெத்தவங்க பெயரை மாத்தி வச்சிட்டாங்க. நீங்க சந்திரா இல்லை சூரியன் " எனப் பானுமதி சண்டையிடவும்.
" இப்போ கூடக் குறைஞ்சு போகலை, நான் பானுதாசன்னு பெயரை மாத்திக்கிறேன்" என அவர் வழக்கமான பழைய ஜோக்கை அடிக்கவும், மேனகா ஆட்சேபனையாகத் தொண்டையைக் கனைத்தார்.
" அதி உங்கப்பாவைப் பாரு, நானெல்லாம் எவ்வளவு செஞ்சாலும் பாசமெல்லாம் பானு அக்காமேல் மட்டும் தான். ஒரு நாளாவது என்னைச் சொல்லியிருப்பாரா" என மேனகா கோபித்துக் கொள்ளவும் , சந்திரா முழித்தார்.
" மேனுமா எங்கப் போறோம்" என அவர் கார் கண்ணாடிக்கு வெளியே பார்க்க முயலவும் அவசரமாகப் பேச்சை மாற்றிச் சண்டையிட ஆரம்பித்தார். " நீ இவ்வளவு டென்ஷன் ஆகிறதை மதுகிட்ட சொல்றேன்" என்றவர் பழைய , புதிய விசயங்களை மாற்றி மாற்றிப் பேசி வந்தார்.
கோட்டை போன்ற வீட்டை அடைந்ததுமே, அவருக்கு உணர்வு பெருக்காக இருந்தது. மருமகள் ஆராதனா, இரண்டு மாமியாரோடு சேர்த்து நடுவில் மாமனாரை வைத்து ஆராத்தி எடுக்கவும், மாமிகள் ஆட்சேபனை செய்தாலும், மாமனார் வெகுவாகப் பாராட்டினார்.பெரிய மகனும் ,மச்சினனுமாக உள்ளே அழைத்துச் சென்றனர்.
வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் ரசித்துக் கொண்டு உள்ளே வந்தவர் மகளின் புகைப்படத்தையே மெய்மறந்து பார்த்து நின்றார். மேனகாவும் கலங்கியவர், பானு அவர் தோள் மீது கை வைத்ததில் தன்னைச் சமாளித்துக் கொண்டு, " ராம்ஜி உள்ள வாங்க. அப்புறம் வந்து மகளை ரசிக்கலாம்" என்றார்.
" மேனு , மதுவுக்குப் போன் போடு. அவகிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு. எனக்கு மதுவோட குரலைக் கேக்கனும்னு ஆசையா இருக்கு" எனச் சிறுபிள்ளையாகக் கேட்ட கணவருக்கு மறுமொழி சொல்ல இயலாமல், காதில் விழாதது போலவே உள்ளே சென்றுவிட்டார்.
" மாமா, உங்க பேவரைட் இடியாப்பம் , குழிப்பணியாரம் எல்லாம் செஞ்சிருக்கேன். வந்து சாப்பிட்டுப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க" என ஆராதனா எஸ்ஆர்சியை அழைக்கவும்,
ப்ரதிபன் சூழலைச் சகஜமாக்க, " அப்பா நீங்க தான் தைரியமான ஆளு. உச்க மருமகள் செஞ்சதை சாப்பிட்டு சொல்லுங்க. அப்புறம் நான் சாப்பிடுறேன்" எனக் கேலி செய்தான்.
" மாமா, நான் நல்லா தான் சமைப்பேன். பானு அத்தைக்கிட்ட தான் கத்துக்கிட்டேன். உங்க மகன் எப்படிச் சொல்றார் பாருங்க" என மாமனாரிடம் குற்றப்பத்திரிகை வாசித்தாள்.
" அவன் கிடக்கான். பானுகிட்ட சமையல் பழகினால் நல்லா தான் செஞ்சிருப்ப. வா சாப்பிடுவோம். " என்றவர் மேனகாவுக்குக் கேட்காமல், "கொஞ்சம் இனிப்பு நிறையப் போட்டுக் கொடு" என டீல் பேசினார். ஆராதனா முறைக்கவும், " இந்தர், அவள்கிட்ட இனிப்பு கேக்காதீங்க. எனக்கே தரமாட்டா" எனப் பானு மருமகளைப் பற்றி எடுத்துச் சொன்னார்.
" ரதா, நீயும் இப்படித் தான் சாப்பிடுறியா " என மச்சினனை விசாரித்தார் சந்திரா. "மச்சான், நான் என்ன உங்களை மாதிரி வயசானவனா. ஐயம் எ ஃபிட் மேன்" என்றார் ரத்தன் தேவ். அதற்கும் அவரை வம்பு பேசி குடும்பத்தோடு இரவு உணவைச் சாப்பிட்டார் எஸ்ஆர்சி. இன்று தான் அவருக்கு மனம் நிறைந்தது, மகள் அங்கு இல்லாதது மட்டுமே குறையாக இருந்தது.
இரவு உணவுக்குப் பின்னும், குடும்பத்தோடு பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் பேச்சில் நினைவு தடுமாறி பழைய, புதிய விசயங்களைப் பற்றிப் பேசுவதை இந்தப் பத்து நாளில் குடும்பத்தினர் பழகி இருந்தனர்.
ஆனால் அவருக்குப் பிடித்தமான கட்டிடக்கலை, சினிமா, அரசியல், நண்பன் வீரசிம்மத் தேவன் , சந்திர பவனம் இவை மட்டும் நினைவடுக்கில் நன்றாகப் பதிந்திருந்தது. அதனைப் பற்றி மட்டும் நெடுநேரம் பேசினார். பானுவும், மேனுவுமாக அவரைக் கட்டாயப்படுத்தி ஓய்வெடுக்க அழைத்துச் சென்றனர். மேனகா யோசிக்கவும், "உன் ரூமுக்கே கூட்டிட்டு போ. நாளையிலிருந்து புது இடம். இன்னைக்காவது நிம்மதியா தூங்கி எந்திரி" என அனுப்பி வைத்தார்.
அடுத்த நாள் பானுமதியை எஸ்.ஆர்.சந்திராவிற்குத் துணைக்கு வைத்து விட்டு, காலை பதினோரு மணியளவில் மேனகா, எஸ்.ஆர்.சியின் இரண்டு மகன்கள், ரத்தனதேவ் என ஒரு குழுவாகக் கட்சி அலுவலகத்தில் செயற்குழுவோடு சேர்த்து கணிசமான அளவிலான கட்சி தொண்டர்களைச் சந்தித்தனர். பசவைய்யா தலைமையில் கூட்டம் நடந்தது. தன்னில் உழன்ற சிவராஜ் நஞ்சப்பா மகனைத் தலைமறைவாகப் பத்திரப்படுத்துவதிலும், ரெட்டியைத் தேடுவது, தேர்தல் மும்மரத்திலும் இருந்தவர், கூட்டம் முடியும் நேரம் தான் வந்தார். அதற்குள் மேனகா பேச ஆரம்பித்திருந்தார்.
" என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு . இது ராம்ஜி சொல்லும் வார்த்தை, நம்ம தலைவர் சொல்லும் வார்த்தை. " என அவர் சொல்லும் போதே தொண்டர்கள் சீட்டியடித்து , கைத்தைட்டி , "எஸ் ஆர் சி வாழ்க" கோசத்தோடு ஆரவாரம் செய்தனர். மேனகா ஒரு நிமிடம் கண்கலங்கியவர், " தலைவரோட உடன்பிறப்புக்கள் நீங்க எல்லாரும் நல்லா இருக்கனும், அவர் ஆரம்பித்த கட்சி நல்லா இருக்கனும்னு தான், தலைவருக்கு உடல்நிலை சரியில்லாத போது, தேர்தலைச் சந்திக்க எங்களுடைய மகளை ஹாசினி சந்திராவை, அரசியலுக்குக் கூட்டிட்டு வந்தேன். " என்ற போது கனத்த மௌனம்
" யார் கண்பட்டதோ, கட்சிக்கு உழைத்த என் மகளைப் பலி வாங்கிட்டாங்க. எங்க குடும்பம் என்றைக்குமே வாரிசு அரசியல் செய்ய நினைச்சது இல்லை. தலைவரும் அதுக்கு அனுமதித்தது இல்லை. அவர் மகன்களே அரசியலுக்கு வரலையே. நான் உங்களுக்காகத் தான் ஹாஷினி சந்திராவையே ,தலைவருக்குத் தெரியாமல் அழைச்சுட்டு வந்தேன். போதும் நாங்க இழந்தது போதும். மீதி இருக்கிறது, என்னோட ராம்ஜி தான். அவரையாவது தக்க வச்சிக்கனும். அதுக்கா அவருடைய ட்ரீட்மெண்டுக்கு அமெரிக்கா கூட்டிட்டு போறோம். கட்சியை வழிநடத்தச் செயற்குழு உறுப்பினர்கள் இருக்காங்க. ஆரம்பக் காலத்திலிருந்து நம்மோடு இருக்கத் தலைவர்களும், தொண்டர்களும் இதனைத் தொடரனும்னு கேட்டுக்குறேன். நான் அந்தச் சத்தியவானுக்காகப் போராடிய சாவித்திரி மாதிரி கட்டாயம் நம்ம ராம்ஜியை, தலைவரை மீட்டுட்டு வருவேன். அதுவரை பசவைய்யாஜி தலைவர் ஸ்தானத்திலிருந்து பார்த்துக்குங்க " எனப் பேசியவர் பசவைய்யா பெயரை இரண்டு மூன்று இடங்களில் மறைமுகமாக வலியுறுத்தினார்.
தொண்டர்களும் மிகவும் உணர்ச்சிகரமாக, "அம்மா, நீங்க தான் தலைவரை நல்லபடியா மீட்டுக் கொண்டு வரனும். அவருக்காக நாங்க வேண்டிக்கிறோம். கூடிய சீக்கிரம் நல்லபடியா திரும்பி வாங்க." எனப் பெரியவர்களும், இளைஞரணி கூட்டம்" சிக்கம்மா இல்லைனு நினைக்காதீங்க. நாங்க ஒவ்வொருத்தரும் உங்க பிள்ளைங்க தான். நீங்க கட்டளை போடுங்க. நாங்க நிறைவேற்றுகிறோம்" என்றனர்.
அடுத்து, சில தீர்மானங்களைக் கட்சியில் நிறைவேற்றினர். அதன்படி ஆரம்பக்கால உறுப்பினர்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. மேனகாவும், ஆரம்பக்கால உறுப்பினர், எஸ்ஆர்சி மனைவி என்பதில் கட்சியினரிடையே பெரிய மரியாதை இருந்தது. ப்ரதிபனுக்கே மேனகா மீது நல்ல அபிப்ராயம் வந்தது. தாமதமாக வந்த நஞ்சப்பாவை பொருட்படுத்தாமலே மேனகா அனைவரிடமும் விடை பெற்றுக் கிளம்பினார்.
லக்கேஜ்கள் பேக்கிங் செய்யப்பட்டுத் தயாராக இருந்தன. மேனகா ஏதோ ஓர் உந்துதலில் , ஓர் அசைக்க முடியாத எண்ணத்தில், நப்பாசையில் மகளின் துணிகளையும் ஒரு பெட்டியில் எடுத்து வைத்தார். ஒரு முறைக்கு, பத்துமுறை வீட்டைச் சுற்றிப் பார்த்து, வேலைக்காரர்களுக்கு அறிவுரை தந்து , சில உத்தரவுகளை இட்டு, அவரவர்க்குக் கையில் பணக்கவரும் தந்தார்.
" எதுக்கும்மா இதெல்லாம்" எனக் கண்கலங்கினர் விசுவாசமான அந்த வேலைக்காரர்கள். சந்திராவையும் தயார் செய்து, பிரியாவிடைப் பெற்று, வளைகுடா நாட்டை நோக்கி குடும்பத்தோடு பயணித்தனர், அந்த நட்சத்திர தம்பதியினர்.
சுஹானா தீவில் மழை ஓய்ந்து வானம் வெறித்திருந்தது. சந்திதேவ் தனது மரவீட்டுக்கு ஹாசினியோடு வந்தவன், தொலைத் தொடர்பை ஆராய்ந்தான். இப்போதும் அது உயிரின்றித் தான் இருந்தது. எதுவும் செய்யமுடியாத கையறுநிலை, மூன்று நாட்களாக இப்படிப் போவதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
எஸ்ஆர்சி குடும்பம், மஸ்கட் சென்றார்களா, ஸ்டிபன் என்ன செய்கிறான். ஹெலிகாப்டர் எப்போது வரும் எனத் தெரியாத நிலை. இயலாமையில் காலை உதைத்து, முஷ்டியைக் குத்தி தன் கோபத்தை வெளியேற்ற, அவனையே பார்த்திருந்த ஹாசினி பிடித்து இழுத்துப் படியில் இரண்டு படி இறங்கி உட்கார வைத்தவள், தான் மேற்படியில் அமர்ந்து அவனது தோள்களை அமுக்கி, தலையை மசாஜ் செய்தாள்.
" இப்ப எதுக்குடி இது" எனச் சலித்தவனிடம், " நீ பேசாம இரு. எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகிற. மழை நின்ன உடனே நிருபன் ஹெலிகாப்டரை அனுப்பி வைக்கப் போறான். அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இரு" எனப் பேசிக் கொண்டே அவன் தலைக்குச் சம்பிங்க் செய்தாள்.
அவளுக்கு வாகாகத் தன் தலையை அவள் மடியில் சாய்த்துக் கொண்டவன், " உன் கையில் மேஜிக் இருக்குடி. எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், நீ தொட்டவுடனே, அது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகுது" எனப் பதட்டம் தணிந்தான்.
" இப்படியே ஐஸ் வச்சே உன் காரியத்தைச் சாதிச்சிக்கிற " எனக் குறைபட்டாள் ஹாசினி.
" ஏய், நான் ஒழுக்கமா தான் இருந்தேன். நீ தான் ஏத்தி விட்ட. நான் பேச்சுக்குத் தான் உன்னை லாக் பண்ண காந்தர்வ கல்யாணம்னு சொன்னேன், ஆனால் நீ தாண்டி அதை நிஜமாக்கின" என்றான் அவன்.
" ஒரு ட்ரம்ஸ் எடுத்துக்கோ, ஊர் பூரா அடிச்சிட்டே போய்ச் சொல்லிட்டுவா. மூணு நாள்ல முண்ணூறு தடவை சொல்லிட்ட. " எனத் திட்டியவள், கழுத்தை வளைத்து, தான் அண்ணாந்து அவளை முத்தமிட்டவன்,
"எத்தனை தடவை சொன்னாலும் பத்தலைடி. இந்தக் கடத்திட்டு வரும் போது அரக்கன்னு எவ்வளவு திட்டின, இப்போ என் பொண்டாட்டியாகி கொஞ்சுறேன்னா சும்மாவா. நானும் நீ மேத்யுவை விரும்புறேன்னு தேவதாசா மனசொடிஞ்சு தெரிஞ்சவன், இந்தச் சுஹாசினி மனசிலையும் நான் தான்னு தெரியவும் மச்சான் ஸோ ஹேப்பி. அது மட்டுமா " என்றவன் , பார்வையே வேறு விதமாகி விஷமமாக அவள் காதில் அந்தரங்கமாகக் கிசுகிசுக்க, அவளுக்கு இரட்டை ரோஜாக்கள் கன்னத்தில் பூத்தன. அதோடு குனிந்து அவன் தோளில் கடித்தும் வைத்தாள்.
"ஏய்" எனக் கோபத்தோடு இரண்டு படியை ஒரே எட்டில் கடந்தவன், சமதளமான அந்த மரவீட்டில் அவளைச் சாயத்து, தானும் சாய்ந்து, அவளது செயலை தனதாக்கி கனிரசம் பருகினான். சற்று நேரம் அன்னியோன்னியமாகக் கட்டுண்டு இருந்தனர். அந்த இனிமை முடியும் நேரம், அவனறியாமல் தன் செயலை எண்ணி வருத்தமும் , இயலாமையும் வந்து சேர, "ஐயம் சாரிடி" என நூறாவது முறையாகக் காரணம் சொல்லாமல் மன்னிப்புக் கேட்டான் .
'நீ சாரி ,சொல்ல சொல்ல தான் எனக்குப் பயமே ஜாஸ்தியாகுது, அரக்கன் சார் என்ன வேலை பார்த்தேன்னு இப்பவே சொல்லு, நான் மனசளவுல ரெடியாகிக்குறேன். சண்டையோ, சமாதானமோ இங்கையே முடிச்சிக்குவோம் ' எனவும் , தயங்கியபடியே சொல்ல வந்தவன் , பேச்சை நிறுத்தி விட்டு சட்டென அலார்ட் ஆன சந்திர தேவ்.
காதைத் தீட்டி உற்றுக் கேட்டு விட்டு, " மது ஹெலிகாப்டர்" என்றவன் பரபரவென எழுந்து மேலே நின்று பார்த்தான். இவர்கள் இருந்த தீவைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. சட்டென மகிழ்ந்தவன், "மது நீ காட்டேஜ்க்கு போய், பவனை வரச்சொல்லு, லெண்டிங்க்ல ஏதாவது பிரச்சனைனா அவன் உதவியும் வேணும். நான் பார்த்திட்டு வந்துடுறேன்.ப்ரீத்தியை ரெடியாகச் சொல்லு ஒன் அவர்ல கிளம்பற மாதிரி இருக்கும்" என அவளை அனுப்பிவிட்டு, கடற்கரையை நோக்கி விரைந்தான் .
ஹெலிக்காப்டர் லேண்டிங்க் தளத்தின் அருகே நின்று, உடைந்து கிடந்த பெரிய மரக்கட்டையில் தன் ஜெர்கினை மாட்டி " ஹே" என்ற சத்தத்தோடு அசைத்தான். அதற்குள் இவனைப் பார்த்துவிட்ட பைலெட், ஹெலிபேடையும் பார்வையிட்டவாறே, மெல்ல அதில் லேண்ட் செய்தார். பைலட் மிகவும் தேர்ச்சிபெற்றவராக இருக்கிறாரே என மனதில் மெச்சினான். ஆனால் அருகில் பார்க்கவும் அவனுக்கு அப்பட்டமான அதிர்ச்சி.
இவன் ஓமன் நாட்டு ஹெலிகாப்டரை எதிர்பார்த்திருக்க, இந்தியக் கடற்படையின் ரோந்து ஹெலிகாப்டர் இறங்கியது. அதலிருந்து, படியை இறக்காமலே மேலிருந்து வெகு சுலபமாகக் குதித்து இறங்கினார் ஹாசினி சந்திரா படுகொலையை விசாரிக்கும் விசாரணை அதிகாரி தங்கப்பாண்டியன் ஐபிஎஸ். அவருக்குப் பின்னோடு இரண்டு கப்பற்படை அதிகாரிகளும் இறங்கினர்.
தங்கப்பாண்டியனைப் பார்க்கவுமே அடையாளம் தெரிந்து கொண்ட சந்திரதேவின் முகத்தில் ஒரு நொடி சலனம் வந்தது, அதனையும் சாமர்த்தியமாகச் சமாளித்தவன், "வெல்கம் டூ சுஹானா ஐ லேண்ட் ஆபீஸர்ஸ். மே ஐ நோ , ஹூ ஆர்யூ, வாட் யு வான்ட் " என அசராமல் புன்னகையோடு கேள்வி எழுப்பினான் .
" ஹேப்பி டு மீட்யு மிஸ்டர்.தேவ். தொல்லை கொடுப்பதற்கு மன்னிக்கணும், நீங்க வேற யாரையோ எதிர்பார்த்த மாதிரி இருந்தது. இ ஆம் தங்கப் பாண்டியன் ஐபிஎஸ். கேஜே. பார்ட்டியின் தலைவர் எஸ்.ஆர்.சியோட மகள் ஹாசினி சந்திரா படுகொலை கேஸ், நான் தான் விசாரிக்கிறேன். " என அடையாள அட்டையைக் காட்டியவர்.
"இந்தத் தீவை சேர்ச் பண்ண அனுமதியோட வந்திருக்கேன்" எனக் குண்டைத் தூக்கிப் போட்டார் .
" எஸ்க்யூஸ்மி , நீங்க இடம் மாறி வந்துடீங்கன்னு , வேற யாரோடையோ என்னைக் கன்ப்யூஸ் பண்ணிகிட்டீங்கன்னு நினைக்கிறேன். நான் சி.பி.தேவ் " எனத் தன் அடையாளத்தை அவன் சொல்ல வரும் போதே இடைமறித்த தங்கப் பாண்டியன்.
" நீங்க தானே சி.பி.தேவ், சந்திரப்ரகாஸ் சிம்ம தேவன் சன் ஆப் வீரசிம்ம தேவன் தேவ்சந்த் கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் இன்டர்நேஷனல் கம்பெனியோட எம். டி. எஸ்.ஆர்.சியோட ரிலேடிவ். அப்ப நான் சரியான ஆளைத் தேடித் தான் வந்திருக்கேன். " என அசராமல் சொன்னவரிடம் ,
" நீங்க என்னை எந்த அடிப்படையில் விசாரிக்கரிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா. இந்த ஐலேண்ட் வரைக்கும் வேலை மெனக்கெட்டு ஸேர்ச் வாரண்டோட வந்திருக்கீங்களே" என எரிச்சலோடு தேவ் கேள்வி எழுப்பவும்,
" ஐ வில் எக்ஸ்ப்ளைன் யூ. இது ஒரு ஹை ப்ரொபைல் கேஸ். இந்தத் தீவு உங்களுடைய பெயர்ல தான் லீஸ்க்கு ரிஜிஸ்டர் ஆகியிருக்கு. உங்க கம்பெனியோட ஹாலிடே ரிசார்ட் ப்ராஜெக்ட் போயிட்டிருக்கு. ஐ நோ. உங்களுடைய கான்டேக்ட்ஸ் எதுவரைக்கும் இருக்கும்னு எனக்குத் தெரியும். இவ்வளவு பெரிய இடத்தில் ஆதாரம் இல்லாமல் விசாரிக்க வரமாட்டேன் " எனச் சிரித்தவர் ,தான் இந்தத் தீவைத் தேடி வந்ததற்கான காரணங்களை அவன் செயல்களை வரிசையாக அடுக்கவும் தேவ் ஒரு நிமிடம் பிரமித்துத் தான் நின்றான்.
" ஹாசினி சந்திரா பாம் ப்ளாஸ்ட் நடந்த அன்னைக்கு ,அது மூணாவது அட்டம்ப்ட். " என விவரம் சொன்னவர். "அவங்களைப் பின் தொடர்ந்தது இரண்டு க்ரூப். ஒரு க்ரூப் என் கஸ்டடில இருக்கு. இன்னொரு க்ருப்போட கார் நம்பர் வச்சு ட்ரேக் பண்ணதில , சில சந்தேகங்கள் இருக்கு. கோவால இரண்டு மீனவர்களை வேற ஒரு கேஸ்ல பிடித்ததில் , இங்கே நாலு பேரை இறக்கிவிட்டதா சொன்னாங்க. அவன் சொன்ன அடையாளம் ஹாசினி சந்திரா மாதிரி இருந்தது. அது தான் சேர்ச் வாரண்ட். விளக்கம் போதுமா. ஷேல் ஐ ப்ரசீட்" என்றார்.
" யாரோ ஒரு பிஸ்ஸர்மேன் சொன்னதை வச்சு, நீங்க இவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டாம். நான் ஒன் வீக்கா இங்க தான் இருக்கேன். நீங்க சந்தேகப்படுற மாதிரி இங்க யாரும் இல்லை. " என ஆட்சேபனைத் தெரிவித்தவனிடம்
" இது என் கடமை, ப்ளீஸ் கோவாபரேட் வித் அஸ்" என்றார் பாண்டியன்.
" இங்க உங்களுக்கு எதுவும் கிடைக்கலைனா, நான் மான நஷ்டம் வழக்குப் போட வேண்டியது இருக்கும் " எனத் தேவ் மிரட்டல் விட்டான்.
" தாராளமா செய்ங்க. இப்ப ஷேர்ச் பண்ண விடலையினா நானும், என் கடமையைச் செய்ய விடமாட்டேங்கிறீங்கன்னு , உங்களையும் அரஸ்ட் பண்ண வேண்டியது இருக்கும்" எனத் தங்கப் பாண்டியனும் மிடுக்காகவே மிரட்டினார்.
"சார், இது எங்கள் கம்பனியோட ரெபுட்டேஷன் சம்பந்தப் பட்ட விஷயம் , ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் " என்றான் தேவ்.
"அதை விடப் பெரிய உயிர் சம்பந்தப் பட்ட விஷயம் சார், ஒரு மாநிலமே இந்தக் கொலைக்கு நீதி கேக்குது. தொண்டர்கள் கொந்தளிக்கிறாங்க. இந்தியாவே இந்த வழக்கு விசாரணையை உற்று நோக்குது. சின்னத் துப்பு கிடைச்சாலும் அதை ஆராய வேண்டியது என் கடமை. என்னை விட உங்க ரிலேட்டிவ் ,அவர்களைப் பற்றிய அக்கறை உங்களுக்குத் தான் இருக்கணும்." எனக் காரணங்களை அடுக்கிக்கொண்டே பாண்டியன் தீவுக்கு உள்ளே செல்லும் பாதையில் முன்னேறினார்.
சந்திரதேவ், முடிந்த வரை பேச்சுக் கொடுத்து நேரத்தைக் கடத்தினான். தங்கப்பாண்டியனும் சளைக்காமல் அவனோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே மற்றவருக்குக் கண்ணைக் காட்ட அவர்கள் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர். ஒற்றையடிப் பாதையைப் பிடித்துக் காட்டேஜை அடைந்தனர்.
ஹாசினி சந்திராவைத் தங்கப்பாண்டியன் பார்ப்பாரா. சந்திரதேவ் சட்டத்தின் பிடியில் சிக்குவானா. நஞ்சப்பாக்கள் விடுவிக்கப் படுவார்களா. பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment