Thursday, 24 June 2021

ஹாசினி சந்திரா -17

 ஹாசினி சந்திரா -17 -part-1

         எஸ்ஆர்சி மகளின் மறைவு குறித்த செய்தியை டிவியில் பார்த்து அடியற்ற மரம் போல் சாய, மேனகா தனது துக்கம், சோகம் எல்லாம் மறந்து தனது ராம்ஜியை காப்பாற்ற வேண்டும் என்ற தாரக மந்திரத்தை மட்டுமே எப்போதும் உரு போட்டுக் கொண்டிருப்பவர், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் போடுவதற்காக மருத்துவர் தந்திருந்த ஊசி மருந்தை விவரம் சொன்னபடி நடுங்கும் கரங்களோடு சிரஞ்சில் ஏற்றியவர், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனது கணவருக்கு ஊசியைப் போட்டார்.

        மருத்துவருக்கு அழைப்பு விடுத்து கீழே இருந்த அறையிலேயே அவரைப் படுக்க வைத்திருக்க, மயக்கத்திலிருந்தார். ரத்தின சிம்ம தேவனும், நிருபன் தேவும் இன்று இன்னும் வீடு திரும்பவில்லை. அவர்களுக்கும் போன் பறந்தது.

       ஆம்புலன்ஸில் வந்த டாக்டர், எஸ்ஆர்சியை பரிசோதித்து விட்டு, "இப்போ மயக்கத்தில் இருக்கார். முழித்த பிறகு தான் மெமரி பற்றிச் சொல்ல முடியும். பல்சஸ் நார்மல். பிபி கொஞ்சம் கூடியதும் இப்ப பரவாயில்லை. ஆனால் அவரோட ஸ்ட்ரெஸ்க்கு என்ன காரணமோ, அதை மட்டும் ரிபீட் ஆகாமல் பார்த்துக்குங்க" என்ற மருத்துவர் பரிசோதித்து விட்டுக் கிளம்பியவரை, ப்ரதிபன் வரவேற்போடு இணைந்த விருந்தினர் அறையில் காத்திருக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டான்.

       எஸ்ஆர்சி ஒரு மணி நேரத்தில் கண் விழித்தவருக்கு முதலில் பார்த்த காட்சி நினைவில் இல்லை. ஆனால் மகளுக்கு ஏதோ ஆபத்து என மட்டும் உணர்வில் பதிந்திருந்தது. கவலையான தன் மனைவி மக்களின் முகத்தை வைத்து, ஏதோ சரியில்லை என யூகித்தவர், "என்ன ஆச்சு. மேனு மது எங்கே. நாம எங்க இருக்கோம்" எனக் கேள்விகளை அடுக்கினார். சுற்று நின்றவர்களுக்கு ஒரு நிம்மதியும் வந்தது. ஹாசினி டிவி செய்தியை மறந்து விட்டாரே, என அவரது மறதியை நினைத்து முதல் முறையாக நல்லது என நினைத்தார்கள்.

       "ஒண்ணுமில்லை ராம்ஜி, நீங்க ரெஸ்ட் எடுங்க. பசிக்கிறதா சாப்பிட எதாவது கொண்டு வரவா" என்றார் மேனகா, ஆனால் முகத்தில் என்றுமில்லாத வெறுமை இன்று இருந்தது. அந்த முகமே அவருக்கு ஏதோ செய்தது. மகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே போகவும், "மதுவைப் பார்க்கனும். போன் போடு" என்றார். 

       மேனகாவுக்கு அடக்கிய அழுகை, மீண்டும் பீரிடும் போலிருந்தது. மகளைப் பறிகொடுத்த நாளிலும் மோசமான நாளாக இன்றைய நாளை உணர்ந்தார். எஸ்ஆர்சி மீண்டும் மீண்டும் கேட்கவும் ," நீங்க இப்படிப் பிடிவாதம் பிடிச்சா, நானும் எங்கையாவது போயிடுவேன்" என மேனகா வெடிக்கவும். மற்றவர் செய்வது அறியாது தவித்தனர். பானுமதி தான் இடை புகுந்தார்.

     " இந்தர், நீங்க சாப்பிட்ட பிறகு மதுவுக்குப் போன் பண்ணுவோம்" எனப் பானுமதி கணவரைச் சமாதானம் செய்தார்.

      " மேனு ஏன் அப்படிப் பேசுறா. நான் உங்களுக்கு எல்லாம் தொல்லையா இருக்கேனா" என எஸ்ஆர்சி ஆரம்பிக்கவும்,

         "அப்பா, இத்தனை வருஷம் , நீங்க எங்க கூட இருக்கனும்னு தான் ஏங்கினோம். அப்படி எல்லாம் சொல்லாதீங்கப்பா " என ப்ரதியும்.

       "நீங்கதான்பா, எங்களுக்கு எல்லாமே" என அவர்களும் ஆளுக்கொரு பக்கம் வந்து அவரைப் பற்றிக் கொள்ளவும், அவர் குழப்பமாக மேனகா முகத்தையே பார்த்தார். அதிபன் ," அம்மா" என மேனகாவைக் கைபிடித்து அப்பாவிடம் அழைத்து வந்தவன், "அப்பா இனிமே ஸ்வீட் கேக்கமாட்டாங்க. நீங்க கோவப்படாதீங்க" என அதற்காகத் தான் அவர் மீது மேனகா கோபமாக இருப்பது போல் ஒரு காட்சியை எஸ்ஆர்சி முன் சித்தரித்தான்.

      ஆராதனா மாமனாருக்கு இரவு உணவை எடுத்து வந்து மாமியார்களிடம் தந்தாள். தங்கள் அறைக்குச் செல்லாமல் ஹாலிலிருந்த ஓய்வறையில் தான் இருந்தனர். மூவருக்கும் இடையிலிருந்த மௌனத்தைப் பானுமதி தான் சகஜமாக்க முயன்றார். பொதுவாகப் பானு தான் அடிக்கடி கோபித்துக் கொள்வார், மேனகா சமாதான தூதுவராக இருப்பார். இன்று எல்லாம் தலைகீழ்.

       மேனகாவின் பொறுமை எல்லை கடந்தது, இத்தனை வருடம் ராம்ஜி, ராம்ஜி என அவருக்காகவே வாழ்ந்து, பெற்ற மகளையும் பலி கொடுத்தவருக்கு , சந்திராவின் "எல்லாத்தையும் மறைச்சு ஏமாத்திட்டியே மேனகா " என்ற வார்த்தையும், அதற்கு முன் அனுசுயாவின் வார்த்தைகளுமாக அழுத்தத்தைத் தர, கணவர் சாப்பிடும் வரை பொறுத்தவர், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, "மதும்மா, நானும் உன்கிட்டயே வந்திடுறேன்டி " எனப் புலம்பியவாறு ஏதோ அவஸ்தையாக அறையின் வாசலைக் கடக்க முயன்றார். பானு எஸ்ஆர்சியைக் கவனித்துக் கொண்டிருந்ததால் இருவருமே மேனகாவைக் கவனிக்கவில்லை.

         மேனகா நெஞ்சைப் பிடித்துச் சரியும் நேரம் சரியாக ,புயல் வேகத்தில் தந்தையைக் காண வந்த மகள் மதுர ஹாசினி சந்திரா, "அம்மா" எனக் கதறியபடி தாயைத் தாங்கினாள். அப்படியே அம்மாவைக் கீழே சரித்து மடியில் போட்டுக் கொண்ட ஹாசினி, " அம்மா , அம்மா" எனக் கதறவும் கண் திறந்து பார்த்த தாயின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

      "மதுமா உன்னைப் பார்க்கச் சொர்கத்துக்கே வந்துட்டேனாடி " எனக் கன்னடத்தில் சொற்களை உதிர்த்து அவள் மடியில் மயங்கினார்.

        ஹாசினிக்கு அவரின் வார்த்தைகள் எதுவும் புரியவில்லை. வந்து இறங்கியவுடன், இமிகிரேஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. சந்திரதேவ் நீட்டிய காகிதங்களில் அவன் சொன்னபடி கையெழுத்துப் போட்டவள் அதற்கான காரணங்களைக் கேட்டு நிற்கும் முன்னர், இடி போல் எஸ்ஆர்சி க்கு முடியவில்லை என்பதை மட்டும் நிருபன் சொல்லவும், சந்திரதேவ், பவன் ப்ரிதியை அவனது பொறுப்பில் விட்டு மற்றதை முடிக்கச் சொல்லிவிட்டு ,ஸ்பெஷல் பர்மிஷனில் சித்தப்பா ரத்தின தேவுடன் . மஸ்கட்டிலிருந்து தொலை தூரம் இருக்கும் தங்கள் மாளிகைக்கு விரைந்தான்.

      “அம்மா, இங்க பாரு உன் மது வந்துட்டேன், நான் நல்லா இருக்கேன். நீ எந்திரிமா. அம்மா இங்க பாரு “ எனக் கண்ணீர் பெருக்கிக்கொண்டே பேச்சுக் கொடுத்தாள் ஹாசினி

         ஹாசினியின் சத்தத்தில் எஸ்ஆர்சி யும் பானுமதியும் ஓடி வர, அவள் பின்னால் வந்த சந்திரதேவ், "அதி ,டாக்டரைக் கூப்பிடு " என இடி முழக்கமாய்க் கத்திவிட்டு, உள்ளே வந்து, ஹாசினியின் மடியிலிருந்த மேனகாவை எஸ்ஆர்சி தூக்க முயல்வதைப் பார்த்து அவரை விலக்கி அவன் தூக்கி எஸ்ஆர்சி இருந்த பெட்டிலேயே படுக்க வைத்தான்.

      ஹாசினி, "அப்பா" என்ற கதறலோடு எஸ்ஆர்சி யின் மார்பில் சாய்ந்தாள். அவரும் "மதும்மா" என மகளை அணைத்துக் கொண்டவர், மகளைத் தேற்றவும் , தான் தேறவும் வழியின்றி மகளோடு மனைவியின் அருகில் நின்று அழுதார். பானுமதி மேனகாவை நெருங்கி, அவர் மயக்கத்தைத் தெளிய வைக்க முயன்றார். ஹாசினியை சந்திரதேவுடன் பார்த்ததில் நிம்மதியாக உணர்ந்தவர், மேனகா மயங்கியதில் குற்ற உணர்வுக்கு ஆளானார்.

        எஸ்ஆர்சியைப் பார்க்க வந்த ஆம்புலன்ஸ், டாக்டர் நர்ஸ் அங்கேயே தங்கியிருந்தவர்கள், எஸ்ஆர்சிக்கு எதுவோ என விரைந்தனர். குடும்பத்தாரும், எஸ்ஆர்சி யை எதிர் நோக்கிய கட்டிலில் மேனகா இருக்கவும் பதறிப் போனார்கள்.

        டாக்டர் எல்லாரையும் வெளியேற்றி மேனகாவுக்குச் சிகிச்சையைத் தொடர்ந்தனர். ஆம்புலன்ஸில் அவசரத் தேவைக்கு இருக்கும் உபகாரங்களைக் கொண்டு மற்ற தேவையான சோதனைகளையும் செய்தனர்.

      ஹாசினியும் எஸ்ஆர்சியும் அறையிலிருந்து வெளியேற மறுக்க, பானுமதி கணவரையும், ஹாசினியை சந்திரதேவுமாகக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

        எஸ்ஆர்சியை அழைத்துச் சென்று ஷோபாவில் அமரவைத்த பானுமதி, மருமகள்களை ஏவி அவரது அறையிலிருந்து மாத்திரையும், தண்ணீரும் கொண்டு வரச் சொன்னார். " பானுமா, மேனுவுக்கு ஒண்ணும் ஆகாதில்லை, நான் எதுவும் திட்டிட்டேனா, அவள் முகமே நல்லா இல்லையே " என ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார். அவரைக் கட்டாயப் படுத்தி மாத்திரையைப் போடவைத்தார்.

   " அம்மாவுக்கு எதுவும் ஆயிடுமோன்னு எனக்குப் பயமா இருக்கு சந்திரா" எனச் சந்திரதேவின் மார்பில் புதைந்து கதறினாள் ஹாசினி.

     " மதும்மா, என் ஹசி இல்ல அழாத. அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது. ட்ரெஸ்ட் மீ. நீ வந்துட்டேல்ல, இனி ஒரு பிரச்சனையும் இல்லை" என அணைத்து ஆறுதல் படுத்தினான். வீட்டில் அனைவரும் இவர்கள் அந்நியோனத்தை அதிசயமாகப் பார்க்க, அனுசுயா தூரத்திலிருந்தே மகனையும், அவனோடு நிற்கும் மாயப் பிசாசையும் எரிச்சலாகப் பார்த்தார். ஆம் அவருக்கு மேனகாவும், ஹாசினியும் அவர்கள் வீட்டு ஆண்களை மயக்க வந்த மோகினிப் பிசாசுகளாகவே எப்போதும் நினைத்திருந்தார். அந்தக் கோபத்தில் மேனகாவின் நிலையை அறிய கூட விருப்பமில்லாமல் தனது அறைக்குச் சென்று விட்டார்.

      இரத்தின தேவன் மனைவியிடம் நடந்த ரகளைகளைக் கேட்டார், எஸ்ஆர் சி விஷயத்தை மட்டும் சொன்ன நிரஞ்சனா, அனுசுயாவின் பேச்சை அந்தச் சமயத்துக்குச் சொல்லாமல் விட்டார். டாக்டர் அழைக்கும் குரலில் அறைக்குச் சென்று மேனகாவை பார்த்தனர். ஹாசினி,சந்திராதேவின் கைப்பிடியில் தான் இருந்தாள். அவளுக்கும் தான் அடுத்து அடுத்து எத்தனை அதிர்ச்சி.

       " ஸ்ட்ரெஸ் தான் சார். மைல்ட் அட்டாக். இன்ஜக்சன் போட்டுருக்கேன். இப்போதைக்கு ஒண்ணும் ஆபத்து இல்லை. நாளைக்கு ஹாஸ்பிடலில் அட்மின் பண்ணுங்க. அப்சர்வேஷன்ல வச்சு ஃபுல் செக்கப் பண்ணிடுவோம்." என்றார். அதிபன் ,”இப்பவே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றதுனாலும் பண்ணலாம். நான் நைட் மேன்காமாவோட இருந்துக்கிறேன் “ என மருத்துவரிடம் ஆலோசனை கேட்டான்.

      “அந்த அளவு சிவியர் இல்லை ,நான் இங்க தானே இருக்கேன், நர்ஸ் கூடவே இருக்கட்டும். ட்ரிப்ஸ் போட்டுருக்கேன், அதுலையே மருந்து ஏத்துறோம் , ஒன்னும் பயப்படற அளவு இல்லை, அவங்க தைரியமா இருக்காங்க, யாரும் டிஸ்டப் பண்ணாதீங்க , ரெஸ்ட் எடுக்கட்டும் ” என்றார் மருத்துவர்.

       ஹாசினி டாக்டர் தந்த தைரியமான வார்த்தைகளுக்குப் பிறகு, சுற்றுப்புறம் உணர்ந்து சந்திர தேவை விடுத்து மீண்டும் அப்பாவிடம் ஒட்டிக் கொண்டாள். அப்பாவும் மக்களும் உணர்ச்சி பிழம்பாக ஒருவரை ஒருவர் அனைத்துக் கொண்டு மேனகாவைப் பார்த்து நின்றனர். மேனகா மயக்கத்திலிருந்து உறக்கத்துக்குச் சென்றிருந்தார். நர்ஸ் அதைச் சொல்லி இவர்களை அறையை விட்டு வெளியேறச் சொன்னார்.

       “புட்டிமா , அம்மாவை பாரு” என அழுத்தவரை, மகள் கண்ணைத் துடைத்து, “நீங்க அழாதீங்கப்பா , நீங்க அழுதா அம்மா ரொம்ப டென்ஷன் ஆவாங்க. அப்புறம் கண்ணே திறக்க மாட்டாங்க” என மகள் அப்பாவுக்கு அம்மாவானாள்.

         “நீ அழுதாலும் ,மேனகாவுக்குப் பிடிக்காது, நர்ஸ் பார்த்துப்பாங்க இரண்டு பெரும் வெளியே வாங்க. இந்தர் மது இன்னும் சாப்பிடலை கூட்டிட்டு வாங்க” எனக் கணவருக்கும் கட்டளையிட்டு இருவரையும் அறையிலிருந்து கூடத்துக்கு அழைத்து வந்தார் பானுமதி. அப்பாவுக்கும் பெத்தம்மாவுக்கும் நடுவில் வந்த ஹாசினியை, ஆசைதீர அணைத்து உச்சிமுகர்ந்து கொஞ்சினார் பானுமதி. 

        அதில் சந்திரா முன்னே செல்லவும், "தங்கம், வைரம், திரும்பி வந்துட்டியே, உன்னைப் பறிகொடுத்துட்டமேன்னு அம்மா பதறிட்டேன்" எனச் சந்திரா காதில் கேட்காமல் ரகசியமாகச் சொன்னார். காசினி தான் கடத்தப் பட்டதைத் தான் சொல்கிறார் என நினைத்தவள் , " பெத்தமா , உங்க சந்துவை நல்லா நாலு போடு போடுங்க." எனப் பெரியம்மாவுக்கு எடுத்துக் கொடுத்தால் ஹாசினி. "நாளைக்கு இருக்கு அவனுக்கு." என அம்மாவும் மகளுமாகப் பேசி சிரிக்கவும், அப்பா திரும்பி பார்த்தார்.

       ஹாசினி சந்திரா -17 -part-2

       சந்திரதேவ், வீட்டினரிடம் நடந்ததை விசாரித்துக் கொண்டிருந்தான். மற்றவர் அவனைக் கோபத்தோடு குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தனர். ஆனால் எஸ் ஆர்சியும், ஹாசினியும் வரவும் அனைவரும் அமைதி ஆனார்கள்.

           எஸ்ஆர்சி மகன் மருமகள் எல்லாரையும் ஹாலில் அழைத்து, மகளை அறிமுகம் செய்தார், “அப்பா எங்களுக்கு மதுவைத் தெரியாதா , என்ன அப்பக் குண்டு கன்னமெல்லாம் வச்சு குண்டு கோஸா இருந்தா, இப்போ நீட்டக் குச்சியா இருக்கா” என அதிபன் அவளது அருகில் வந்து தோளோடு அணைத்து உச்சி முகர்ந்து தன் சகோதர பாசத்தைக் காட்டவும் ,ஹாசினி "அண்ணா" எனக் கட்டிக் கொண்டாள்.

        "இந்த அண்ணன்களை எல்லாம் மறந்தே போயிட்ட, நீ கூப்பிட்டாலும் வரமாட்டோம்னு முடிவு பண்ணிட்டியா" என உரிமையாகக் கேட்கவும், " அப்படி எல்லாம் இல்லைணா, சிசுவேஷன் அப்படி ஆயிடுச்சு. எதையும் யோசிக்கவே முடியலை" என்றாள்.

      அவளின் மறுபுறம் வந்து தலையில் கை வைத்து தனது வாஞ்ஞையையும் அளவோடே காட்டும் ப்ரதிபன் ," அவள் என்னடா பண்ணுவா, பெரியவங்க சொன்னதைச் செஞ்சிருப்பா. சின்னப் பொண்ணு தானே " எனத் தங்கைக்கு ஆதரவாகப் பேசினான்.

       ப்ரதிபனின் கோபம் மேனகா மீது இருக்குமே ஒழிய ஹாசினியிடம் இருக்காது. இன்றும் அவள் அவனுக்கு ஒன்று மறியாத குழந்தை தான்.

     " இந்தச் சின்னப் பொண்ணுக்கு ஸ்டேட்ஸ் வரைக்கும் போகத் தெரியும், இங்க இருக்க மஸ்கட் வரத் தெரியாது. அவள் என் கூட எல்லாம் பேசக்கூடாது. நான் அவளோட சண்டை” என முறைத்து நின்றாள் ஆராதனா. அண்ணன்களை விடுத்து ஆராதனாவிடம் ஓடியவள்,

        “ சாரி அண்ணி, நீங்க எதுக்குச் சண்டைனு எனக்குத் தெரியும், உங்க கல்யாணத்தப்ப எனக்கு உடம்பு சரியில்லை. இல்லைனா அப்பா கூட வந்திருப்பேன். எல்லாப் பங்சனுக்கும் ட்ரெஸ் எல்லாம் ரெடி பண்ணி வச்சிருந்தேன் தெரியுமா " என ஆராதனாவிடம் காதைப் பிடித்து மன்னிப்பு கேட்டாள் ஹாசினி. ஆனால் அண்ணன் திருமணம் என அவள் ஆர்வமாகக் கிளம்பியது நிஜம், சந்திராவையும் பார்க்கும் ஆவலும் இருந்தது. ஆனால் அனுசுயா தேவியின் வார்த்தைகள் வடுவாக அவள் மனதைத் தைத்திருந்தது, இந்த மன உளைச்சலே காய்ச்சல் வரை கொண்டு வந்து விட்டது. ஆனால் விதி வலியது. அனுசுயா வார்த்தையை அது இன்று மெய்ப்பித்தே காட்டி உள்ளது.

       “மயூ , பார்த்துக்கோ இவ தான் நம்ம நாத்தனார், என் கல்யாணத்துக்கு வராததுக்கே இப்ப தான் சாரி கேக்குறா, உன்கிட்ட இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு சாரி கேட்பாள்” எனக் கேலி கிண்டல் பேசி சூழலை ஆராதனா சகஜமாக்கினாள், அந்தக் குரலில் மீண்டவள், அதிபன் மனைவி மயூராவிடம், " க்ளாட் டூ மீட் யூ அண்ணி. நீங்க அண்ணாவோட இருக்கப் போட்டோவை அப்பா அனுப்புனாங்க. நீங்க அதி அண்ணாவுக்கு ப்ர்பெக்ட் மேட்ச் " என அவளையும் கட்டிக் கொண்டவள் , அண்ணன் பிள்ளைகளைக் கேட்கவும், இங்கு நடந்த களேபரத்தில் அவர்களைச் சாப்பிட வைத்துத் தூங்க வைத்திருந்தனர்.

      " வீரு, சுபா இரண்டும் தூங்கிடுச்சுங்க. காலையில் பார்த்துக்கோ. உனக்கு நல்லா பொழுது போயிடும்" என்ற பானுமதி அவளைச் சாப்பிட அழைத்தார்.

       ரத்னதேவ், நிரஞ்சனாவிடம் தன்மகளை எஸ் எஸ்ஆர்சி அறிமுகம் செய்து வைத்தார், ஹாசினி வணக்கம் எனக் கரம் கூப்பினாள். " தீர்க்க ஆயுசோட நல்லா இருக்கனும்" என ரத்தன் வாழ்த்த, நிரஞ்சனா, " உன்னை நேரில் சந்திக்காமலே போயிட்டனேன்னு வருத்தப்பட்டேன். இனிமே எங்கயும் விடுறதா இல்லை. " என எஸ்ஆர்சிக்குத் தெரியாமல் மெல்லச் சொன்னவர், " ரதன், இத்தனை நாள் சந்திரா அண்ணா , இந்த அழகு பதுமையை நம்ம கண்ணுளையே காட்டாமல் வச்சிருந்தாங்களே, இனிமே இந்தத் தங்கச்சிலையை நம்ம வீட்டிலையே வச்சுக்குவோம். எங்கையும் அனுப்ப முடியாது " என ஹாசினியை அணைத்து உச்சி முகர்ந்து கொள்ளவும், நிரஞ்சனா மேல் அவளுக்கு ஒரு பிடிப்பு வந்தது.

      "அது தான் கடத்திட்டு வந்துட்டாரே அரக்கன் சார். வேற எங்கப் போறது" எனத் தன்னை மறந்து சொன்னவளின் கண்கள் சந்திர தேவையும் அனுசுயாவையும் தேடியது.

       " அரக்கன் ஸாரா, அது யாரு" என வியந்து கேட்ட நிரஞ்சனாவிடம், பேச்சை மாற்றும் விதமாக, " பெரிய மாமியைக் காணோம். நாங்க வந்தது அவங்களுக்குப் பிடிக்கலையா, நான் சந்திராட்ட சொன்னேன். அவன் தான் பிடிவாதமா அப்பா, அம்மா இங்க இருக்காங்கன்னு கூட்டிட்டு வந்துட்டார்" எனக் கண்களில் கலக்கத்தோடு அவள் கேட்கவும் , மூத்த பெண்கள் இருவரும் உருகித் தான் போனார்கள். அவள் கழுத்தில் கிடந்த சந்திரதேவின் செயினும், அவர்களது உடல் மொழியுமே இருவருக்குமிடையே உள்ள உறவை தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருக்க, இனி வரும் நாட்களைப் பற்றிய கவலை அவர்களிடமும் இருந்தது.

     " மதும்மா, இது உன்னோட வீடு. பெத்தம்மா இங்க தானே இருக்கேன். இந்த மாமிக்கு எல்லாம் உன்னைப் பிடிக்குதா, பிடிக்கலையான்னு நாம கவலைப்பட வேண்டாம். இது நம்ம வீடு. சரிதானே ரஞ்சி" எனப் பானுமதி மகளைத் தேற்றுவதற்காகக் கேட்கவும். ஆம் எனத் தலையாட்டினார் நிரஞ்சனா.

       நிருபன், ப்ரணேஷ், பிரியங்காவோடு (பவன் ப்ரீத்தி) உள்ளே வந்தான். "இதுங்க இரண்டும் எங்க போச்சு " என ஆரம்பித்தார் பானுமதி. "அத்தை, அவங்க ஆண்டியை பார்த்திட்டு வரட்டும்" என நிருபன் இடை புகுந்தான். அவர்கள் வீட்டினருக்கு ஒரு தலையசைப்போடு மேகலாவைப் பார்க்கச் சென்றனர்.

       சந்திரதேவ் இவர்கள் பேசி ஆரம்பிக்கும் போதே தன் அம்மா அனுசுயா தேவியைப் பார்க்கப் போனான். அம்மா மகனுக்கு இடையே நீண்ட நேரம் பெரிய வாக்குவாதமே நடந்தது. சந்திரதேவ் நாளைக்குப் பேசலாம் எனக் கீழே வந்துவிட்டான்.

       எஸ்ஆர்சி ஓய்வெடுக்க எப்போது செல்வார், சந்திர தேவை கேள்வி கேட்கலாம் எனக் குடும்பமே காத்திருந்தது. மேனகா இருந்த அறையையும் அடைத்து விட்டு எல்லோரும் இரவு உணவுக்குப் பின் கூடினர்.

       எஸ் ஆர்சி , முன் மாலைப் பொழுதில்( இந்திய நேரத்துக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாகும் ) டீவியைப் போட்டுப் பார்த்த பொழுது ,முதலமைச்சருடனான உயர்மட்ட ஆலோசனை முடிந்து, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு காவல்துறை தலைமை இயக்குநர்(டிஜிபி), விசாரணை அதிகாரி தங்கப் பாண்டியன் ஐபிஎஸ் , மற்றும் சில துறை சார்ந்த உயரதிகாரிகள் ஒன்றாக ஊடகங்களைச் சந்தித்தனர்.

      “ஹாசினி சந்திரா படுகொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப் பட்டனர். நேரடியாகக் கொலையை நிகழ்த்திய குற்றவாளி சங்கரா ரெட்டியும் , அவரைக் கொலை செய்யத் தூண்டிய முதல் குற்றவாளி யுவராஜ் நஞ்சப்பாவும் கைது செய்யப் பட்டு, நீதிபதி முன் நிறுத்த பட்டு மேல் விசாரணைக்காகச் சிறையில் அடைக்கப் பட்டனர்.“ என டிஜிபி அறிவித்ததும் சரமாரியாகக் கேள்விகள் பறந்தன.

    “எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு, நீதிமன்றத்தில் சமர்பிப்போம்.சட்டம் தன கடமையைச் செய்யுது. கட்சி தொண்டர்கள் , பொது மக்கள் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.“ எனச் செய்தியாளர் சந்திப்பை முடித்தனர்.

        சிவராஜ் நஞ்சப்பாவுக்கே சற்று முன்னர்த் தான் விஷயம் தெரியும், மாலையில் மகனோடு தொலைப்பேசியில் பேசினார். அவன் பாதுகாப்பை உறுதி செய்து கொண்ட பிறகே மற்ற வேலைகளைக் கவனித்தார். ஆனால் தங்கப் பாண்டியன் மங்களூரில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தவருக்கு இது அதிர்ச்சி தான். சிவராஜ் பேசிய பிறகு, யுவராஜை கைது செய்தவர்கள், நீதிபதி முன் நிறுத்தப் படுவதற்கு முன்பு தான் சிவராஜிற்குத் தகவல் தந்தனர். அவரது வக்கீல் குழு வந்தது, ஆனால் முதல் தகவல் அறிக்கை பக்காவாக இருந்தது, வக்கீல்களாலும் எதுவும் செய்ய இயலாத நிலை. குற்றவாளிகள் இருவரையும் வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர். அதன் பிறகே காவல் துறை சார்பாக ஊடகத்துக்குப் பேட்டி தந்தனர்.

     பெங்களூரு கொந்தளித்துக் கொண்டிருந்தது, சிவராஜ் வீட்டையும் , எஸ்ஆர் சி வீட்டையும் , கட்சி அலுவலகத்திலும் தொண்டர்கள் சூழ்ந்தனர். காவல்துறை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பைப் பல படுத்தினர்.

      சந்திரதேவின் கையாள் ஸ்டீபன், ஏற்கனவே போட்ட திட்டத்தின் படி , யுவராஜ், ரெட்டி பேசிய ஆடியோவை , திறமையாகப் பரவச் செய்தான். அது மக்களிடையே நஞ்சப்பாக்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது. "கல்யாணம் பண்ண இருந்த பொண்ணையே கொல்ல ஏற்பாடு செஞ்சிருக்கானே " என மக்கள் யுவராஜை காரி உமிழ்ந்தனர்.

              எஸ்ஆர்சி குடும்பத்தை ஊடகம் தொடர்பு கொள்ள முயன்றது. ஆனால் எஸ்ஆர்சி இரண்டு நாள் முன்பே குடும்பத்தோடு வெளிநாடு சென்றது அப்போது தான் வெளியானது. கட்சியின் முக்கியமானவர்கள் மேனகாவைத் தொடர்பு கொள்ள முயன்றனர். அவர்கள் வீடு கலாட்டாவில் தொலைப்பேசிகள் அலறிக்கொண்டு இருந்தனவே ஒழிய யாரும் எடுக்கவில்லை. 

பசவய்யா இரத்தின தேவை அழைத்து விவரம் கேட்கவும், அவர் கட்சியினரை ஒரு வாங்கு வாங்கினார். எஸ்ஆர்,சிக்கு விஷயம் தெரிந்து விட்டது எனவும், தான் வீட்டிற்கு விரைந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு கட்சி கூட்டம் அவசரமாகக் கூடியது . அனைவரும் தலைவருக்கு எதுவும் ஆகக் கூடாது, அவர் முகத்தில் எப்படி முழிப்போம் , நமக்காக வந்த சிக்கமாவை நஞ்சப்பாக்கள் கொன்றார்களே என ஆத்திரம் பொங்கியது. 

கட்சி அலுவலகத்தில், யுவராஜை கட்சியை விட்டு நீக்கியும், சிவராஜ் நஞ்ப்பாவிடம் விளக்கம் கேட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிவராஜ் தனது புதிய நண்பர்களான  மத்திய கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்த முனைந்தபோது, அவர்களும் கையை விரித்தனர். வேறு வழியின்றிக் காபந்து முதலமைச்சரிடம் பேரம் பேச ஆட்களை அனுப்பினார். ஆனால் அங்கு அவருக்கு மிகப் பெரிய நெருக்கடி காத்திருந்தது. வரிசையாக ஊழல் புகார்கள், எஸ்.ஆர்.சி சிகிச்சை குளறுபடி, மேனகாவை மிரட்டியது என அத்தனையும் அடுத்தடுத்து ஆதாரங்களோடு அவர் முன் கடைப் பரப்பப் பட்டது. நஞ்சப்பா நடுங்கித்தான் போனார். 

கர்நாடக அரசியல் களம் சூடு பிடித்தது. சந்திர தேவை கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கப் பந்தங்கள் தயாராக இருந்தது. தான்வி தனது கணவரும் விசாரணை அதிகாரியுமான தங்கப் பாண்டியன் வருகைக்காகக் காத்திருந்தார். ஹாசினிக்கு தனது படுகொலை பற்றிய செய்தி தெரியவருமா, அவளது அடையாளம் அழிக்கப் பட்டத்தை அவள் எப்படி எதிர் கொள்வாள். பொறுத்திருந்தது பார்ப்போம். 



    



ஹாசினி சந்திரா - 17 பார்ட்-3

  சாந்த்தேவ் மாளிகையில் அன்று அத்தனை சந்திராக்களுமே கூடியிருந்தன. ஆனால் அத்தனை பேரும் சந்திர பிரகாஷ் சிம்ம தேவனின் விளக்கத்துக்காகக் கவலையோடும், ஒருவித பதட்டத்தோடும் காத்திருந்தனர். எப் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என அறியாமல் தவிக்கும் போது , ரத்தின தேவ் தான் விசயத்தைப் பட்டெனப் போட்டு உடைத்தார்.

       " யுவராஜ் நஞ்சப்பாவை ஹாசினி கேஸ்ல அரஸ்ட் பண்ணிட்டோம்னு காவல்துறை பிரஸ்க்கு பேட்டிக் கொடுத்த நியுசை பார்த்திட்டு தான் மச்சான் மயங்கி விழுந்தார் " எனச் சந்திர தேவைப் பார்த்து ரத்தன் கோபக்கனையைத் தொடுக்கவும், சந்திரா நெற்றியைத் தேய்த்தான். சந்திரதேவ் தனக்காகத் திட்டு வாங்குவதாக நினைத்த ஹாசினி அவனுக்குப் பரிந்து ,

       " என்னை யுவராஜ் கிட்னாப் பண்ணதா நினைச்சிட்டாங்களா. ஆனால் அவனெல்லாம் ஜெயிலுக்குப் போகவேண்டியவன் தான் அங்கிள். மூணு தடவை என்னைக் கொல்ல ட்ரை பண்ணியிருக்கான். பவன் ப்ரீத்தியை வச்சுச் சந்திரா தான் என்னைக் காப்பாற்றினார்." என ஹாசினி விளக்கம் தரவும், குடும்பமே அவளைப் பாவமாகப் பார்த்தது. யாருக்குமே அவள் படுகொலை செய்யப்பட்டதாக வந்த தகவலைச் சொல்ல மனம் வரவில்லை.

      சந்திரதேவ் , ஹாசினி அருகிலிருந்ததால் அந்தப் பகுதியை மட்டும் மறைத்தவன் , தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தான். " நம்ம கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் பிஸ்னஸை யுஎஸ்லையும் விடிவுபடுத்த ஆரம்பிச்ச நேரம் ,ஒன்றறை வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. ,சந்திரா மாமா ஆபரேஷனுக்கு முன்னாடி, என்னை இந்தியாவுக்கு வரச்சொன்னார். மதுவோட பேர்ல இன்வெஸ்ட்மென்ட் பண்றதை டிஸ்கஸ் பண்ணனும்னு கூப்டாங்க. " எனவும் ஹாசினி ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.

         "மச்சான் விவரம் தான். அவருகிட்ட இல்லாத ஆட்களா, உன்னை நோட்டம் விட்டுருப்பார்" என்றார் ரத்தன தேவ். "நானும் அப்படித்தான் கேட்டேன். அதுக்கு, மாமா சொன்னார்" என அன்று இவர்கள் இருவருக்குமிடையே நடந்த உரையாடலைச் சொன்னான்.

         " வீரா போனதே எனக்கு மனசளவுல பெரிய பாதிப்பு தான். ஹெல்த் இஸ்யூஸ்ம் இருக்கு. பானுவையும் ப்ரதி, அதியையும் உங்க அப்பா பார்த்துக்கிட்டான். அவங்க செட்டில் ஆகிட்டாங்க. நான் இருக்கிறதோ , இல்லாததோ அவங்க வாழ்க்கையில பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. " என அவர் சொல்லவும் " அத்தையும், அத்தான் இரண்டு பேரும் இன்னைக்கும் உங்களை மிஸ் பண்றாங்க. நீங்க இப்படிச் சொல்லக் கூடாது"என்றான் தேவ். அவர் சிரித்து விட்டு,

       "நான் அப்படிச் சொல்லலை மாப்பிள்ளை, பைனான்ஸியலாவோ, பிசிக்கலாவோ அவங்க என்னைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லைனு சொல்றேன். ஆனால் மேனகா, மது இரண்டு பேருக்கும் என்னைத் தவிர வேற உலகமே தெரியாது. வெளி உலகம் தெரிஞ்சுக்கட்டும்னு தான் மதுவை யூ எஸ் அனுப்பியிருக்கேன். அவளையும் செட்டில் பண்ணனும்.

         இதுக்கு என் மகனுங்களை விட்டுட்டு உன்னை ஏன் கூப்பிட்டேன்னு தோணும். " என அவர் கேள்வி எழுப்பவும், " பேஸ் ரீடிங் படிச்சிருக்கீங்களா மாமா" எனத் தேவ் வியந்தான்.

        " மாப்பிள்ளை, உன் வயசை விட என் அனுபவம் ஜாஸ்தி. எவ்வளவு ஜனங்களைச் சந்திச்சு இருப்பேன்" என விளக்கியவர்

       " நேராவே சொல்லிடுறேன் மாப்பிள்ளை, மதுவை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு எனக்கு ஆசை. எனக்குப் பின்னாடி அவளுக்கு இங்க பாதுகாப்புக் கிடையாது. இப்ப செய்யப் போற சர்ஜரி பத்தி எனக்கு ஒண்ணும் நல்லதா தோணலை. ஆனால் செஞ்சு தான் ஆகனும். அது எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும் அதைப் பற்றிக் கவலை இல்லை.

        நீ மதுவை சின்னவயசில பார்த்தது தானே மாப்பிள்ளை, இப்ப யு எஸ் ல இருக்கா. நீ போய்ப் பாரு. இரண்டு பேருக்கும் பிடிச்சா ஒத்துப் போகும்னா நான் உங்க வீட்டில் பேசுறேன். உங்க அப்பா இருந்திருந்தா உரிமையாவே கேட்டிருப்பேன். மதுவுக்கு எனக்குத் தெரிஞ்சு வேற அபேர்ஸ் கிடையாது." என்றவர் அவன் பார்வையில், சிரித்துக் கொண்டே ,

       "நாங்க அப்பா மகள் எல்லாமே ஓபனா பேசுவோம், இன்னும் சொல்லப் போனால், உன் மேல அவளுக்கு ஒரு க்ரஷ் இருக்கு. உங்கம்மாவுக்காகப் பயப்படுறா. நான் கோடு போடுறேன். நீ ரொடு போட்டுக்கோ " என்றவர் தொடர்ந்து,

       " அடுத்த முக்கியமான விசயம் பிஸ்னஸ் பேசுவோம், உங்க பிஸ்னஸ் யு எஸ்ல எக்ஸ்பேண்ட் பண்றீங்கன்னு கேள்வி பட்டேன். எனக்குத் தெரிஞ்ச மில்லினர் ரிச்சர்ட் வில்லியம்சன் நியுயார்க்ல இருக்கார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.ஆனால் அவங்க தாத்தா காலத்துலையே அமெரிக்காலச் செட்டில் ஆகிட்டாங்க. எனக்கு நல்லா பழக்கம்.

       நாங்க இரண்டு பேரும் உங்க ப்ராஜெக்டல இன்வெஸ்ட் பண்ண ரெடி. ஆனால் மது பேர்ல போடுறது வெளியே தெரியக்கூடாது. உன்னால சமாளிக்க முடியுமான்னு சொல்லு." என அவன் பதிலுக்காகக் காத்திருந்தார்.

      " மாமா, பொண்ணையும் கொடுத்து, பிஸ்னஸும் தரேங்கிறீங்க. பத்து வருஷம் முன்னாடி சொன்ன ஜாக்பாட் இது தானா " என இவன் கேட்கவும்,

       " கண்டுபிடிச்சிட்டியா. நம்மகிட்ட இருக்க மிகச்சிறந்த பொக்கிசத்தை, நமக்குப் பிடிச்சவங்களுக்குத் தானே தருவோம். என்னோட பொக்கிசம் என் மகள். எனக்குப் பிடிச்சவன் வீரா, நீ அவனோட மகன். அது தான் இந்த ஜாக்பாட் . நீ மதுவை இப்ப பார்க்கலையே , பார்த்திருந்த இவ்வளவு கேள்வியே கேட்க மாட்ட " என அவர் விஷமமாகச் சிரிக்கவும், " மாமா" என இவன் ஆட்சேபனை செய்யவும், மகளின் போட்டோவை காட்டினார். சந்திரதேவ் அதையே பார்த்திருந்தவன்,

    "மாமா ,. நீங்க இந்தப் படத்தைக் காட்ட வேண்டிய அவசியமே இல்லை, அவள் என் மனசில இருக்கா. ஆனால் நான் மதுவைப் பார்த்த பிறகு தான் அவளைக் கல்யாணம் செய்கிறதைப் பத்தி உறுதி தர முடியும், அவள் மனசில யும் நான் இருந்தா , இந்த உலகமே எதிர்த்தாலும் நான் அவளைக் கல்யாணம் செஞ்சுக்குவேன். ஒரு வேளை அவளுக்கு வேற நோக்கம் இருந்தால், அவள் என்னோட பொறுப்பு. நீங்க அவளைப் பத்தி கவலைப்படாமல் இருங்க. நான் அவளைப் பார்த்துக்குறேன்னு, நான் ஓகே சொல்லித் தான் ஸ்டேட்ஸ் போனேன்" எனச் சந்திரதேவ் எஸ்ஆர்சியுடனான சந்திப்பிலிருந்து தங்களது கதையை ஆரம்பித்தான்.

      " அதுனால தான் நீ அமெரிக்கன் இன்வெஸ்டர் யாருன்னு சொல்லலையா. இருந்தாலும், அப்பா எங்களை நம்பளை பாரு" என ப்ரதிபன் வருத்தப்படவும். ஆராதனா இடைப்புகுந்தாள்,

     " ப்ரதி , மாமா தன் சொத்தை காப்பாற்ற ஆள் தேடலை. மகளைப் புரொக்ட் பண்ண மருமகன் தேடியிருக்கார். அதுக்குத் தான் இந்தத் தூண்டில்" என அவள் சொல்லவும்.

      " மச்சானுக்கு, யாரை எப்படிப் பிடிக்கனும்னு தெரியும். சந்துவை பத்தி வீரா அண்ணன் நிச்சயம் புலம்பி இருப்பார். அதுனால தான் பழைய காலத்து ராஜாக்கள், மகளைக் கட்டிக் கொடுத்து நாட்டையும் கொடுப்பாங்களே , அப்படி ஆசை காட்டியிருக்கார். இவனுக்கு எல்லாமே பிஸ்னஸ் தானே" என ரத்தின தேவ் சந்துவின் குணாதிசயத்தை உடைத்துப் பேசவும்.

       " அப்ப பிஸ்னஸ் மோடிவ்ல தான் யு எஸ் க்கு ,என்னைத் தேடி வந்தியா. பெரிசா லவ் கிவ்வுனு பீலா விட்ட" என ஹாசினி தன்னை மறந்து சநாதிரதேவிடம் அனைவர் முன்னும் சண்டைக் கட்டினாள். சந்து அவளை ஆட்சேபனையாகப் பார்த்தான்.

          " என்னது லவ்வா, டேய் கேட்க ஆள் இல்லைனு எங்க தங்கச்சி வாழ்க்கையில் விளையாடுறியா, அப்படின்னா அப்பவே கல்யாணம் பண்ணியிருக்கலாம்ல " என அதிபன் கோபத்தைக் காட்டினான். ஹாசினி படுகொலை என நாடகமாடியதன் கோபம் இருந்தது.

       "அத்தான், ரொம்பப் பாசமலரா பொங்காதீங்க. உங்க தங்கச்சி, இந்தப் பேபிடால்க்காக எங்க அண்ணன், என்ன என்ன செஞ்சார் தெரியுமா" என நிருபன் எடுத்துச் சொல்லச் சாட்சியாக ப்ரீத்தியும் பவனும் அந்தக் கூட்டத்தில் இணைந்தனர்.

       " அதியண்ணா, நாங்க இரண்டு பேரும் ஆறுமாசமா மேடம் கூடத் தான் இருக்கோம்" என ப்ரீத்தி சந்திரதேவ் ஹாசினியை பாதுகாகக்கவே தங்களைப் பணித்ததைச் சொன்னாள். நர்ஸ் வந்து மேனகா முழித்து விட்டதாகவும், மகளை அழைப்பதாகவும் சொல்லவும், ஹாசினி அழைத்துக் கொண்டு சந்திர தேவ் மட்டும் உள்ளே சென்றான்.

      "மது" எனக் கண்ணீர் மல்கியவரிடம் சந்திரதேவ் , "அத்தை, என்னை மீறித் தான் யாரா இருந்தாலும் உங்க மகளை நெருங்க முடியும். நீங்க மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க. உங்களுக்கு ஒண்ணுன்னா, பெரிய அரசியல்வாதிங்க பில்டப் குடுத்த அப்பாவும் மகளும் சின்னப் பிள்ளையாட்டம் அழறாங்க" எனக் கேலியோடு மேலும் இரண்டு வார்த்தை பேசியவன்.

       ஹாசினியிடம், " உணர்ச்சி வசப்படாம உங்க அம்மாட்ட செல்லம் கொஞ்சிக்கோ. ஆனால் அத்தையைப் பேச வைக்கக் கூடாது" என அவளுக்கும் உரிமையாகக் கட்டளையிட்டுச் சென்றான். அறைக் கதவைச் சாத்திவிட்டே ஹாலுக்கு வந்தான். சந்திரதேவ் இப்போது சுதந்திரமாக வீட்டினரின் கேள்விகளுக்கு விடையளிக்கத் தயாரானான்.

      " சந்துண்ணா, யூ எஸ் போனீங்களே , அந்தக் கதையைக் கன்டினியு பண்ணுங்க " என்றாள் மயூரா " ஏண்டி எங்க மகன் என்ன படமா ஓட்டுறான். கதை கேட்கிற' என நிரஞ்சனா அக்காள் மகளைத் திட்டவும்.

       " அவன் தான்,ட்ராஜிட்டியா ஒரு சஸ்பென்ஸ் நாடகத்தை நடத்திட்டு இருக்கான. இதில பாதிக்கபட்டவங்களுக்கு, நீ என்ன நியாயம் செய்யப் போற சந்து " எனச் சரியான பாயிண்டை பிடித்தான் பிரதிபன்.

    " என் மேல நம்பிக்கை இல்லையா அத்தான், நான் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிடுவேன். ட்ரெஸ்ட் மீ" என்றான் சந்திரதேவ்.

       " சந்து இத்தனை நாள் நீ ரிஸ்க் எடுத்து ஆடினது எல்லாம் பிஸ்னஸ்ல. அதுல லாபமோ நட்ஷடம்னாலும் பணம் தான் . இப்ப நீ என்ன செஞ்ச காரியத்தில் என்ன என்ன இழக்கப் போறமோ. " என ப்ரதிபன் கோபத்தோடு சொல்லவும்

        " அத்தான், ஆறு மாசமா ஹாசினி சந்திராவை காப்பாத்துற வேலையைத் தான் பார்த்தோம். கடைசி நாள் அன் எக்ஸ்பெக்டட். யுவராஜ் மூணு தடவை அவளைக் கொல்ல ட்ரை பண்ணான். ஒவ்வொரு தடவையும் மயிரிழையில் உயிர் தப்பிச்சா. அதனால தான், அதிரடியா மதுவோட சேஃப்டி ஆஸ்பெக்ட் யோசிச்சு, என் கஷ்டடியில் எடுத்துக்கிட்டேன். வேற யாரை நம்பியும் அவளை அங்க விட்டு வைக்க முடியலை. அந்த நேரம் அவளோட உயிரை விட எதுவுமே எனக்குப் பெரிசா தெரியலை. எது வந்தாலும் நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன். இனி அவள் என்னோட பொறுப்பு " என்றான் சந்திரதேவ். அதன் பின்னர் மேத்யு வில்லியம்சன் பற்றி, ஹாசினியின் நண்பன், சந்திராவுக்கும் குடும்ப நண்பர் எனச் சொன்னவன், தான் சந்தேகப்பட்டதை மறைத்து விட்டான்.

    ஹாசினி இந்தியா சென்றது. இவன் பின் தொடர்ந்தது எல்லாம் சொன்னவன், " பாம் ப்ளாஸ்ட் ஆன அன்னைக்கு மேத்யு ,மதுவை தன்கிட்ட ஒப்படைக்கனும்னும், அவள் அப்பா அம்மாவையும் அமெரிக்க வரவழைச்சு தான் பார்த்துகிறதா சொன்னான். எனக்கும் இவள் ஏன் அரசியலுக்குப் போனா, நஞ்சப்பா எதை வச்சு மிரட்டுறான்னு தெரியலை. சந்திரா மாமாவை இந்தியாவிலிருந்து வெளியேற்ற, நஞ்சப்பாவுக்குக் குழி தோண்டனும்னு முடிவு பண்ணித் தான் மதுவை மாறுவேடத்தில் கிட்னாப் பண்ணேன்" என்றவன்.

       " சுஹானா தீவில் ஏதேச்சியா , அரை மயக்கத்தில் என் பெயரைத் தான் சொன்னா. அதுவும் , என்கிட்ட வராதா சந்திரா, நீயாவது நல்லா இருன்னு புலம்பினா. அப்போ தான், என்னை மாதிரியே அவளும் என்னை நினைக்கிறான்னு தெரிஞ்சது. அதுக்கப்புறம் மேத்யூகிட்ட ஒப்படைக்கிற யோசனையை மாத்திக்கிட்டேன்" என்றான்.

      " இந்திய போலீஸ், அவ்வளவு ஏமாளி இல்லை. தங்கப்பாண்டியனை நேரில் பார்த்ததை வச்சு சொல்றேன். அவர் உன்னைத் தேடி வருவார் " என்றான் அதிபன்.

      " பாஸ் , அதெல்லாம் வந்துட்டார். நம்ம பாஸ் கண்ணுளையே விரலை விட்டு ஆட்டிட்டு தான் போனார்" என்ற பவன், அந்த விவரத்தையும் சொன்னான்.

" எல்லாம் சரி. இப்ப மதுவோட ஐடென்டிடி " என அதிபன் கேள்வி எழுப்பினான்.

    " யாரோட சம்மதம் இருந்தாலும், இல்லைனாலும். மதுரஹாசினி சந்திரா இனிமே திருமதி சுஹாசினி சந்திர சிம்ம தேவா என்கூடத் தான் இருப்பா. சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் அவள் என் மனைவியாகிட்டா. உங்க எல்லாருக்காகவும் வேணும்னா வீட்டில சிம்பிளா மேரேஜ் அரேஞ்ச் பண்ணுங்க. எல்லார் முன்னாடியும் அவள் கழுத்தில் தாலி கட்டுறேன்" எனப் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான் சந்திரதேவ்.

         " அண்ணா, ஆனா அம்மா சம்மதிக்கனுமே" என ஆராதனா கேள்வி எழுப்பவும், " அவங்க மறுத்தால், அவங்க மகன் ஜெயில்ல கலி திங்கனும் .அவங்களுக்கு எது சம்மதமோ, அது எனக்கும் சம்மதம் " என்றான்.

         " சந்து உன் அட்டகாசம் தாங்கலைடா . நீ எப்போ தான் மாறப் போற. நீ செஞ்ச எல்லாத்திலும் பெரிய விசயம் , ஹாசினியோட படுகொலை ட்ராமா. " என ரத்தின சிம்மன் புலம்பவும்.

     " அவள் இன்னும் உன்னை நம்புறா. உலகத்தைப் பொறுத்தவரை ஹாசினி சந்திரா இறந்திட்டாங்கிறதே அவளுக்குத் தெரியலையே.இதை எப்படிச் சமாளிப்ப " என அதிபன் கேள்வி எழுப்பினான்.

 " நானே சொல்லிக்கிறேன். வேற யாரும் சொல்ல வேண்டாம்" என்றவன், அதோடு விளக்கவுரை முடிந்தது என்பது போல், மேனகா இருந்த அறைக்குள் சென்றான்.

      ஹாசினி  அம்மாவின் கையைப் பிடித்தபடி அருகிலிருந்த சேரில் அமர்ந்து பெட்டில் தலை வைத்துத் தூங்கியிருந்தவளை, பார்த்தவன் , அங்கிருந்த நர்சிடம் அவசர தேவையெனில் இன்டர்காமில் காட்டி ஒன்றாம் எண் நம்பரில் அழைக்கச் சொன்னவன், அவளை எழுப்பித் தன்னுடன் வருமாறு அழைத்தான். 

        சைகையில் அவள் அம்மாவைக் காட்டவும், அவனும் சைகையில் பதில் தந்து அவளை வெளியே அழைத்துச் சென்றவன், எல்லாரும் பார்க்கவே தங்களது அறைக்குச் செல்லும் லிப்டை நோக்கிச் சென்றான்.

   ரத்தின சிம்மன், நிரஞ்சனாவைப் பார்க்கவும், மற்றவர் ஆட்சேபிக்கும் முன், "சந்து, மது என் கூடத் தங்கிக்கட்டும்" என்றார் நிரஞ்சனா. அவர்களை நோக்கித் திரும்பியவன்,

      " ஏன் சித்தி, இப்ப தானே சொன்னேன், சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் மது என்னோட மனைவி . அவள் என்கூடத் தான் இருப்பா" என்றான்.

     " அதுசரிப்பா, ஆனால் அக்கா இருக்காங்க, அண்ணேன் அண்ணிகள் இருக்காங்க " என அவர் இழுக்கும் போதே, ஹாசினி அவனிடமிருந்து விலக முயன்று. " நான் அம்மா ரூம்லையே இருந்துக்குறேன். எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை" என  சொல்லவும், அவளை முறைத்தவன், முகத்தை இன்னும் கடுமையாக வைத்துக் கொண்டு, மற்றவர்களை நோக்கி,

      " உங்கள் எல்லார் முன்னாடியும் நான் தாலி கட்டளைனா, இவள் என் மனைவி இல்லைனு ஆயிடுமா. நிரு அந்தச் சர்டிவிகேட் காட்டு" என்றான் தேவ். நிருபன் அதனைத் தேடி எடுக்கும் போதே, ரத்தன தேவ்,

           " போங்கடா, பெரிசா சர்டிபிகேட் காட்ட வர்றானுங்க. நீ உன் பொண்டாட்டியைக் கூட்டிட்டு போ" என அவரே அண்ணன் மகனைப் பார்த்துச் சொன்னவர். " நல்லா சேனைத் தொட்டு வச்சாரு. அவர் போகாம வந்திருக்கான்" என மச்சினனையும் மகனையும் இரண்டு சந்திரர் பெயரில் இருக்கும் சூரிய ஆளுமைகளையும் ஒரு சேரத் திட்டிவிட்டு, மற்றவரை அவரவர் அறைக்குச் செல்லப் பணித்தார்.

 சந்திரதேவ் தனது மனைவியான சுஹாசினி சந்திரதேவை ,அவளது அண்ணன்கள் ,அண்ணிகள் ,தனது சித்தப்பா குடும்பம் தங்களையே பார்ப்பதை உணர்ந்து , வேண்டுமென்றே அவளை இடையோடு இறுக்கமாக அணைத்து தனது அறைக்கு அழைத்து சென்றான். 



No comments:

Post a Comment