Thursday, 30 September 2021

யார் இந்த நிலவு -1

 யார் இந்த நிலவு -1

" யார் அந்த நிலவு

ஏன் இந்தக் கனவு

யாரோ சொல்ல யாரோ என்று

யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம்

இங்கு நான் வந்த வரவு"  

 

காதில் மாட்டியிருந்த ஒலிப்பான்கள் ஆயிரமாவது தடவையாக ஒலிக்க, பனிப்புகைக்குப் போட்டியாய், ஓர் புகையை வளையங்களாக வெளியிட்டபடி நடிகர் திலகமாகவே மாறி, முகத்தில் பாடலுக்கேற்ற உணர்வுகளைக் கசிய விட்டபடி , மலைப் பாதையில் நடை பழகிக் கொண்டிருந்தார் அந்த பவள விழா கண்ட நாயகன் பால நாயகம்.

 

" மாலையும் மஞ்சளும் மாறியதே

ஒரு சோதனை

மஞ்சம் நெஞ்சம் வாடுவதே

பெரும் வேதனை

தெய்வமே யாரிடம் யாரை

நீ தந்தாயோ

உன்  கோயில் தீபம் மாறியதை

நீ அறிவாயோ ஹோ.

ஹோ..ஹோஹஓஹோ.. 

 

என மீதி பாடலை தானே வாயசைத்துப் பாடி மெய்மறந்து நின்றவரை,  அவரது ஆருயிர் நண்பரான ராமு தனது கைப்பேசியில் அழகாகப் பதிந்து கொண்டவர், " இன்னைக்கு இது போதும்" எனத் திருப்தியான புன்னகையோடு வசந்த விலாஸ் நோக்கி விரைந்தார். 

மெய் மறந்து நின்ற பலநாயகத்தின்  தோளைத் தட்டிக் கூப்பிட்ட, பன்னீரை, "யார்ரா  இவன் சுத்த ஞான சூனியமா இருக்கான்" என்றபடி திரும்பிப் பார்த்தவர், அதிர்ந்து அவசரமாகப் புகையைக் கீழே போட்டு மிதித்து, அசடு வழிந்தவர், " யோவ் சித்தப்பு , நீ தானா. நான் ராமு  பயலோன்னு பயந்தே போயிட்டேன்" என்றவரை. 

" ரொம்ப வழியாத, உன் சகதர்மினிக்கு ஒலியும், ஒளியும் காட்ட அவன்  ஓடிட்டு இருக்கான். முடிஞ்சா தப்பிச்சுக்கோ" எனவும்,  சற்று பொறுத்தே புரிந்து கொண்ட நாயகம் , " ஐய்யயோ போச்சே. இவனோட தொல்லைத் தாங்க முடியலைடா, சௌந்தரியைக் கூட சமாளிச்சிடலாம். இவன் பவானி கிட்ட போட்டுக் குடுத்துடுவான் " எனப் பயந்தவராக அவரும் வசந்த விலாஸை நோக்கி ஓடுவதாக நினைத்தது, நடையின் வேகத்தைக் கூட்ட, 

"யார் அந்த நிலவு" எனப் பாடியபடி வாக்கிங் ஸ்டைலை கழட்டியபடி அடுத்த சிவாஜி கணேசனாகப் பன்னீர் பலநாயகத்தைத்  தொடர்ந்தார். 

"வசந்த விலாசம்" இது வயதான வாலிப நண்பர்கள்  பால நாயகம், ராமசாமி, பன்னீர், சுப்பிரமணி என நால்வர் இணைந்து தங்களுக்காகச் சிருஷ்டித்துக் கொண்ட கூடு. பால்யகாலம், பள்ளி, கல்லூரி என இணைந்தவர்கள் கோவையில் தங்கள் வேலை, தொழில், பிள்ளைகள், கடமை என முடித்து விட்டு, எழுபதின் பின் வரிசையில் வயதைக் கொண்டிருந்தாலும் நண்பர்களோடே இருப்பதால் இன்றும் மனதளவில் இளைஞர்களாக இருக்கின்றனர். எல்லாருமே வசதி வாய்ப்பில் குறைந்தவர்கள் இல்லை.


இயந்திர கதியான உலகில் காலில் சக்கரம் கட்டி பறக்கும் பிள்ளைகள், பேரன் பேத்திகளுக்கு அவர்களுக்கான இடம் கொடுத்து இங்கே குன்னூரில் ஒரு எஸ்டேட்டை வாங்கி அதன் நடுவே வசந்த மாளிகையையும் கட்டி வசிக்கின்றனர். இங்குக் கேர் டேக்கராக இருப்பவர் தான் பவானி, பார்வைக்கு முப்பதைத் தொட்ட பெண் போல் இருந்தாலும் நாற்பதின் பிந்தைய வயதில் இருப்பவர். மகள் போல் பாசம் வைத்திருக்கும் அவர் பாசத்துக்குக் கட்டுப்பட்டே பயந்து ஓடுகிறார் பால நாயகம் .

அந்தி சாயும் நேரம், மலைப் பிரதேசமான இங்குச் சூரியன் சீக்கிரம் ஓய்வெடுக்கச் சென்று விடுவான், அவன் மறைந்த பிறகு, ஒளியூட்டப்பட்ட வசந்த விலாசத்தின், வட்ட வடிவில் சுற்றி ஓடும் வராண்டாவைத் தவிர, புல்வெளியிலோ, மலைப் பாதையிலோ , ஏதேனும் விசப்பூச்சிகள் உலாவும் அபாயம் இருப்பதால் இந்த வயதான வாலிபர்களுக்கு நடைப்பயிற்சி செய்ய அனுமதிக்க மாட்டார் பவானி. வசந்த விலாசத்தை அந்த டீ எஸ்டேட்டின் நடுவே ,வாசலிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தார் ரோடில் பயணித்து, அழகிய தோட்டத்தை அரை வட்டமடித்தால் அதன் முகப்பை அடையலாம். முகப்பில் வராண்டாவைக் கடந்து, நல்ல அகலமான தலை வாசல். உள்ளே வட்ட வடிவில் பெரிய ஹால் ஷோபாக்களும் போட பட்டிருக்கும். இடது புறத்தில் அடுப்படியும் , டைனிங் அறையும் உண்டு. வலது புறத்தில் மாடிப்படி, அருகிலேயே லிப்ட். வட்டத்தின் மீதி பகுதியில், ஒரு பூஜையறையும் நான்கு சூட்களும் இருந்தன. இதில் ஒரு சூட் என்பது, இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு புறம் பெட்ரூம், அட்டேச்ட் பாத்ரூம் , வாட்ரோப் , மற்றொரு புறம் ஒரு ஷோபா செட்கள், மேஜை நாற்காலியில் போடப்பட்ட ஹாலும் அதிலிருந்து வராண்டாவுக்குச் செல்லும் வழியும் இருக்கும். முதல் மாடியில் இதே போல் ஆறு சூட் இருந்தது. இவர்களுடைய பிள்ளைகள், பேரன் பேத்திகள் ஆசைப்படும் போது வந்து தங்கிச் செல்வார்கள் எனக் கட்டப் பட்டது, ஆனால் அப்படி வந்து செல்லத் தான் ஆள் இல்லை. ஆனால் இவர்களுடைய ஏனைய நண்பர்கள் நாட்கள் கணக்கில் வந்து தங்கிச் செல்வார்கள். அவ்வப்போது ராமுவின் பேரன் மட்டும் வந்து செல்வான். நான்கு ஜோடிகளுக்கும் கூப்பிட்ட குரலுக்குச் சேவை செய்யப் பணியாட்கள், சமையல்காரர், ட்ரைவர் என ஒரு கூட்டமே உண்டு. இதைத் தவிர எஸ்டேடில் வேலை செய்யும் ஆட்களும் வந்து செல்வர். ஓய்வெடுக்க என வந்தவர்கள் பொழுது போக்காகப் பழங்கள், கிழங்கு வகைகள் எனப் பயிரிட்டு அது வளர்வதை , பிள்ளை வளர்ப்பு போல் ஆர்வமாகப் பார்த்துப் பூரித்திருந்தார்கள். பவானியும் இந்த இடத்திற்கு வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. ஆனால் அதற்குள்ளாகவே மூத்த தலைமுறைக்குப் பிடித்தவராகவும், நிறைய விஷயங்களில் இவர்களின் கண்ணோட்டத்தை மாற்றுபவராகவும் இருந்தார். ஹாலில் , பால நாயகம் மனைவி சௌந்தரி, ராமசாமி மனைவி அபரஞ்சி, சுப்பிரமணியம், சாரதா என எல்லாருமே ஆளுக்கு ஒரு வேலையைச் செய்து கொண்டு உட்கார்ந்திருக்க, ராமசாமியைக் காணவில்லை.

'அப்பாடி, அவனைக் காணோம்' என ஆசுவாசமாகப் பாலா மூச்சு விட, பூஜையறையிலிருந்து பவானியோடு வந்தார் ராமு. அதுவும் பக்தி பழமாக, விபூதி பட்டையெல்லாம் பூசி வர, பவானி சாமிக்குக் காட்டிய ஆரத்தித் தட்டோடு, பெரியவர்களிடம் கண்ணில் ஒற்றிக் கொள்ளக் கொண்டு வந்து நீட்ட, தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டவர்கள், குங்குமத்தை எடுத்துத் தாலியில் வைத்துக் கொண்டவர்கள், பவானிக்கும் நெற்றி வகிட்டில் வைத்து விட்டனர். " எங்களோட இன்னும் மூணு மாசமா, ஆறு மாசமா ,எவ்வளவு நாள் இருப்ப, உன் புருஷனும், பொண்ணும் எப்போ வெளிநாட்டிலிருந்து வர்றாங்க" எனக் கேட்டார் அபரஞ்சி. "வரும் போது வரட்டும் மா, அதுவரைக்கும் உங்களைப் பார்த்துக்கிறேன். நான் கிளம்பினாலும், என்னை மாதிரியே ஒரு ஆளை வச்சுட்டு தான் போவேன்" என்றார் பவானி.

" யார் வந்தாலும், உன் இடத்தை நிரப்ப முடியாதும்மா " எனச் சகஜமாகப் பேசியபடி உள்ளே வந்தார் பால நாயகம், சற்றுத் தள்ளியிருந்த இரட்டை சோபாவில் ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டார். பின்னாடியே பன்னீரும் உள்ளே நுழைந்தார். " எல்லாம் , நீங்க பார்க்கிற பார்வையிலையும், உங்க மனநிலையும் தான் மாமா இருக்கு " என்றார் பவானி. " நல்லாச் சொல்லு, உன் மாமாட்ட, நீ சொன்னாலாவது புரிஞ்சுக்கிறாரா பார்ப்போம்" என்றார் சௌந்தரி, அவருக்கு மகனுக்கும், கணவருக்கும் இருக்கும் பிணக்கு எந்த விதத்திலாவது சரியாகாதா என்ற ஏக்கம். இருவருக்கும் முட்டுக்குக் கொடுத்தே, அவர் மூட்டுத் தேய்ந்தது தான் மிச்சம், மகள்களும் வெளிநாட்டிலிருக்க, இவர்கள் இங்கே வந்து விட்டனர். ராமு, பவானியிடம், " ஏம்மா சாம்பிராணி வாசத்தோட, வேற புகை வாசமும் வரலை" என எடுத்துக் கொடுக்க, " என்னப்பா சொல்றீங்க. கேஸ் கூட லீக்காகச் சான்ஸ் இல்லையே" என அவரும் மூக்கை உறிஞ்சி நுகர்ந்து பார்த்துக் கொண்டே , தனிச் சோபாவிலிருந்து பாலவிடமும் நீட்ட, ஆரத்தியைப் பெயருக்கு எடுத்துக் கொண்டவர், பிரசாத லட்டை வாயில் போட்டுக் கொண்டார். பன்னீர் அவரருகில் ஒரு புன்னகையோடு வந்தமர்ந்தார். பாலா தள்ளிச் சென்று தனி ஷோபாவில் உட்காரவுமே சௌந்தரி புரிந்து கொண்டவர். " நீங்க தானா" என மிரட்டவும், மனைவியை முறைத்தார் பாலா. " தங்கச்சிமா, நீ உன் புருஷன் ஸ்டைலைப் பார்க்கிறியா. நடிகர் திலகம் தோத்து போவார்" என , அவரருகில் வந்தமர்ந்து இப்போது தான் குறும்படத்தை வெளியிட்டார் ராமு. " டேய்" எனப் பாலா மிரட்ட, க்ருப்ல போட்டுட்டேன். நீ அங்கயே உட்கார்ந்து பாரு" என இளித்தார் ராமு. பாலா , பவானியை மாட்டிக் கொண்டோமே எனப் பார்க்க, பவானியும் வீடியோவில் பாலா புகை விடுவதைப் பார்த்தவர், அவரை எதுவுமே சொல்லாமல், மருத்துவருக்குப் போன் செய்து, நாளை பெரியவர்களுக்கு முழுப் பரிசோதனை செய்ய வரச் சொன்னார்.

" அண்ணா,உங்களால நாங்களும் மாட்டிக்கிட்டோம்" என அபரஞ்சியும். " ஏனுங்க மாமா இப்படிப் பண்றீங்க" எனச் சாரதாவும் மூக்கால் அழுதார்கள், ஏனெனில் சர்க்கரை நோயாளிகளான அவர்களுக்கும் பரிசோதனை நடக்கும். சாதாரணமாகப் பரிசோதனை தேதி வரும் முன் வாயைக் கட்டும் இருவரும் இடைப்பட்ட நாட்களில், பவானி அறியாமலே இனிப்பை உள்ளே தள்ளுவார்கள். இதில் பன்னீரும் கூட்டு. எனவும் சேர்ந்து பாலாவை முறைத்து நிற்க, பாவானி ஒரு போன்காலில் பேச வராண்டாவிற்குச் சென்றார். இந்தப் பெரியவர்களில், பால நாயகம் மற்றும் சுப்பிரமணி ஜோடியை மாமா, அத்தை எனவும், பன்னீர் மற்றும் ராமசாமி ஜோடியை அப்பா அம்மா என்றும் பவானியை அழைக்கச் சொல்லிக் கொடுத்திருந்தனர். எனவே அவரும் முறைச் சொல்லியே அழைத்தார். பெங்களூர் ஓசூர் ரோட்டில் இருக்கும் புறநகர்ப் பகுதி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் அந்த நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியில் , வெளிப் பார்வைக்குச் சாதாரணமாக இருந்த அந்த வீட்டின் முன்பகுதி வராண்டா அந்தப் பகுதிக்குப் பொருந்திப் போவதாக இருந்த போதும், அதைக் கடந்த பகுதி சகல வசதிகளோடான உயர் தட்டு மக்கள் வாழும் அமைப்பை உடையதாகவே இருந்தது. அதில் யாருடனோ அலைப் பேசியில் பேசிக் கொண்டிருந்த பெண்ணின் தோரணையும் அந்த அந்தஸ்திற்கு ஏற்றதாகவே இருந்தது.


அருகில் நின்று கொண்டு ஒரு நடுத்தர வயது பெண்மணி அவளைக் கொஞ்சம் தணித்துப் பேசச் சொல்லி, கண்ணால் கெஞ்சிக் கொண்டிருந்தார். ஆனால் அவளோ, " ஆயி, மீ நிர்ணய கேதலா, யாவேலீ மஜா நிர்ணய கோடூன் காட்தா நாஹி (அம்மா, நான் முடிவெடுத்துட்டேன். இந்தத் தடவை என் முடிவை மாத்திக்க முடியாது)" என மராத்தி மொழியில் தன் அன்னையிடம் தனது பிடிவாதத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்க,


அந்தப் பக்கத்தில் அவளது ஆயி என்ன சொன்னாரோ, " மஸ்து, தூ நேஹ்மி அஸேச் ம்ஹணத் ஹோதாஸ், மீ முல்கா ம்ஹணூன ஸஹமத் ஆஹே, மீ ஸாம்னா கரேன். தும்ஹி கால்ஜி கரூ நக ( ரொம்ப நல்லது, நீங்க எப்பவும் சொல்றது தான், இதுவே நான் ஒரு பையனா இருந்தா ஒத்துக்குவீங்க தானே. நான் சமாளிச்சுக்குவேன். நீங்க கவலைப் படாதீங்க) என்றவள், மேலே தன் அம்மாவுக்குப் பேச வாய்ப்புத் தராமல். " பைரூ, டென்ஷன் ஆகாத, நான் பார்த்துக்குறேன். டே கேர், பை பை பைரூ" எனப் பேச்சை முடித்தவள், தன் போனையும் அணைத்துப் போட்டாள். அடுத்த நிமிடமே, அவளருகில் நின்ற கௌரிக்கு போன் வர, " மாஸி, போனை எடுக்காதீங்க. நீங்க குடுத்தாலும் நான் பேச மாட்டேன்" எனக் காதைப் பொத்திக் கொண்டாள் அவள். " நல்ல பொண்ணு" எனக் குறைபட்டுக் கொண்டே, கௌரி , பைரவியின் அலைப்பேசிக்குப் பதிலளித்துக் கொண்டே உள்ளே சென்றார். நீள் வட்ட முகமும், நேரான நாசியும் அதில் அமர்ந்த கோபமும் , அகன்ற கண்களும், அதில் மின்னலின் ஒளியும் , பட்டை புருவமும் , சற்றே தடித்த உதடுகளும் அவளின் பிடிவாதத்தைச் சொல்ல, சந்தனம் பூசியது போன்ற கன்னங்களும், அலையலையான கேசமும், அவள் கம்பீரத்தை எடுத்துக் காட்ட, அவள் அமர்ந்திருந்த தோரணையும் அவளின் வாளிப்பான மேனியும், வாட்ட சாட்டமான உயரமுமே அவளது பிறப்பு மேல் குடி வீரப் பரம்பரையில் வந்தது எனப் பறை சாற்றியது. அவள் ஆதிரா பாய் போஸ்லே, மராத்திய வீரப் பரம்பரையில் வந்த துணிச்சல் மிக்கப் பெண். அவளது ஆயி, (அம்மா) சொல்லும் வீரப்பரம்பரை கதையில் வரும் , சிவாஜி மகராஜ் போல், அவர்களும் இப்போது அஞ்ஞாத வாசத்தில் இருக்கின்றனர். இவளுக்கு இருபத்தியோரு வயது ஆகும் வரைப் இதனைப் பொறுத்துக் கொள்ளச் சொல்லி அவளது ஆயி அன்பு கட்டளையிட்டிருக்க, அவளும் தனது முழு அடையாளத்தை மறைத்து ஆதிரா பி கே எனத் தமிழர்களைப் போல் தனது தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்டு இருக்கிறாள். இந்த இளவரசி இப்போது முதுகலைப் பட்டப் படிப்பு, அதுவும் டெக்ஸ்டைல்ஸ் சம்பந்தமான வடிவமைப்புத் துறையில் கடைசிப் பருவத்தில் இருக்கிறாள். இது சம்பந்தமான ஒரு கம்பெனியில் ப்ராஜக்ட் ட்ரைனியாகச் சேருவதற்கு , நேர்முகத் தேர்வு இருக்கிறது. அவர்கள் பயிலும் கல்லூரியே இதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர். இரண்டு மூன்று கம்பெனிகள் கேம்பஸ் இன்டர்வ்யு வருகிறார்கள், அதில் பங்கேற்கவே அவளது 'ஆயி"யிடம், இவ்வளவு போராட்டம். கௌரி பேசி முடித்து வந்தவரைப் பார்த்து, ஆதிரா காதுகளைப் பொத்திக் கொள்ள, " முலே(குழந்தை)" என அவர் அழைக்க, " நான் முலே இல்லை, முல்கி ( குழந்தை இல்லை பொண்ணு) " என அவள் பதில் தரவும். " சரிங்க முல்கி, அது எப்படிக் காதை அடைச்சுக்கிட்டாலும் , இது மட்டும் கேக்குது" என வம்பு பேச,

" அது அப்படித் தான், எனக்குத் தேவையானது மட்டும் கேட்கும்" என மராத்தி உச்சரிப்பில் தமிழ் பேசினாள் ஆதிரா போஸ்லே. கௌரியிடம் வளர்வதால் அவளுக்குத் தமிழ் பேச நன்றாக வரும். " ஆயி, கேம்பஸ் இன்டர்வியுக்கு ஓகே சொல்லிட்டாங்க. ஆனால் செலக்ட் ஆகிற கம்பெனியை அவுங்க வெரிபை பண்ணிட்டு தான் அனுப்புவாங்கலாம்" எனச் சொல்லும். வேகமாக எழுந்து கௌரியைக் கட்டிக் கொண்டு ஆடியவள், " மஸ்த், ஹா மஸ்த். ரொம்பச் சந்தோஷம் மாஸி" என அவரையும் சேர்த்து அவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு தட்டாமாலைச் சுற்றினாள். " முலேயம் இல்லை , நான் முல்கி இல்லை, மோஸி,என்னை விட்டுடு" எனக் கதறினார் கௌரி. சந்தோஷமாகச் சிரித்து அவரை விடுவித்தவள், " மோஸி, நாளைக்குப் போடற ட்ரெஸ் எடுத்து வைக்கனும். இப்ப வர்றதில்ல ஒரு கம்பெனில , பொண்ணுங்களை நல்லா பார்த்துக்குவாங்கலாம். அங்க வேலை செய்யிற நேரம் போக மத்த நேரம் படிக்கலாமாம். சேப்டியானது. ஆயிரம் பேருக்கு மேல வேலை செய்யிறாங்கலாம்" என அவள் அடுக்கிக் கொண்டே போக, " முலே, அங்க எல்லாம் போய் வேலை செய்யனும்னு உனக்குத் தலையெழுத்து, இன்னும் ஒரு ஆறு மாசம். அப்புறம் ராணியா இருக்கலாம்" எனக் கௌரிச் சொல்லவும், " மோஸி, இது காசுக்காகச் செய்யிற வேலை இல்லை. நான் என் சொந்தக் கால்ல நிற்க முடியும்னு நம்பிக்கை தர்றது" என வசனம் பேச, கௌரி குனிந்து அவள் கால்களைப் பார்த்தார். " மாஸி" எனச் சலுகைச் சொல்லிக் கொண்டே, அடுத்த நாள் எடுத்துச் செல்ல வேண்டியதை எடுத்து வைத்தாள். இந்தக் கௌரி, ஆதிரா பிறந்ததிலிருந்து அவர்களோடு இருக்கிறாள். சில காலம் அம்மாவோடு, சேர்ந்தும், பல காலம் அம்மாவைப் பிரிந்தும் தனது வயதைக் கடந்திருந்தாலும், கௌரியை விட்டுப் பிரிந்ததே இல்லை. அதனால் அவரிடம் ஆந்திராவுக்குச் சகல உரிமையும் உண்டு. அடுத்த நாள் கேம்பஸ் இன்டர்வ்யுவுக்கு அவள் தன்னைத் தயார் படுத்திக் கொண்டே ,சில நாட்களாகத் தன்னை ஆங்காங்கே தொடரும் மராட்டியர்களையும், அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி தான் வீடு வந்து சேர்வதையும் இரு பெண்மணிகளிடமும் மறைப்பதையும் , . நேற்றும் இரண்டு பேர் அவளைப் பின் தொடர்ந்ததையும் நினைத்துப் பார்த்த ஆதிரா, " நாம இங்கிருந்தும் கிளம்ப வேண்டிய நேரம் வந்திருச்சு மாஸி" எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள் .

படுத்தவளுக்கு, நேற்று தன் கை வளைவில் மறைத்து, தன்னைக் காத்தவனின் முகமும், அவன் பர்ஃப்யூம் மணமும் நினைவில் வந்து, " நல்லவன் தான்" என நினைத்துக் கொண்டவள், நித்திரைக்குள் புகுந்தாள்.

அதே நேரம் அங்கே அவன் அவளைத்தான், "யார் இந்த நிலவு" என அவளை அவசரமாகக் கடைசி நிமிடத்தில் எடுத்த அவளின் பின்னழகைப் அலைபேசியின் திரையில் பார்த்து , மனத் திரையில் அவன் மதி முகத்தை நினைத்துக் கொண்டிருந்தான்.
அவளது வாழ்வில் நடக்கப் போகும் மாற்றங்கள் என்ன … பொறுத்திருந்து பார்ப்போம்.

Tuesday, 14 September 2021

சிந்தா -ஜீவநதியவள் -28 முடிவுரை

சிந்தா -ஜீவநதியவள் -28 முடிவுரை  

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, மேலப்பூங்குடி கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது. அது அய்யனாருக்கோ, அழகிமீனாளுக்கோ எடுக்கப்படும் திருவிழா அல்ல. ஊர்கூடிக் கொண்டாடினாலும் அது பொங்கல் பண்டிகையும் அல்ல.

இந்த ஊரின் தலையெழுத்தையே மாற்றிய , சீமைக்கருவையை அந்த ஊரின் நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கி எரிந்த ஓர் சாதனையாளனின் திருமணம். அதுவும் சாதி வித்தியாசம் பார்க்காது, தங்கள் நிலத்தில் வேலை செய்யும், பண்ணைக்காரரின் மகளைத் தன் மனையாளாகக் காத்திருந்து கரம் பிடிக்கும் குமரனின் திருமணம்.

ஊர் பொதுவில் விழா நடக்கும் அரங்கத்தையே மேடையாக்கி, பொட்டலில் பந்தல் போட்டு, முன்பு கூத்து நடந்த அதை இடத்தில் இன்று இவர்களது திருமணம். குமரன் தங்கள் இனத்துப் பெண்ணை மணப்பதால் , கிராமத்துக்கே அவன் மருமகன் ஆகியிருந்தான். பெரும்பாலோனோரின் விவசாய நிலங்களைச் சீரமைத்துத் தந்ததில் அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகியிருந்தான்.

திறந்தவெளி கொட்டகையில் ஆயிரக்கணக்கான சேர்கள் போடப்பட்டு, மக்கள் நிறைந்திருந்தனர். உள்ளூர் கிழவிகளுக்கெல்லாம் குமரன் புதுச் சேலை எடுத்துக் கொடுத்து, தன் திருமணத்துக்குத் தெம்மாங்கு பாடல்களைப் பாடவேண்டும் என அழைத்திருக்க, ஆண்டிச்சி கிழவி, இருளி, மூக்கம்மாள், ராக்கு எனப் பலரும் கேலிக் கிண்டலோடு இட்டுக்கட்டி முத்து- குமரன் காதல் கதைகளைப் பாடினார்கள்.

வேர்கள் அமைப்பினர் படக்கருவிகளோடு ஓடியாடி தங்கள் நண்பனின் சந்தோசமான தருணங்களைப் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். சிவநேசன், மீனாள் வந்தவர்களைக் கவனிக்க, மேடையில் சடங்கு சம்பிரதாயங்களை நடத்த எனத் தங்கள் ஒன்றை வயது மகனை மாற்றி, மாற்றித் தூக்கிக் கொண்டு திரிந்தனர்.

மூன்று வயது சத்தியாவும், சிந்துஜாவும் , ஒரே போல் பாவாடைச் சட்டை ஆடை ஆபரணங்கள் அணிந்து கொண்டு அம்மா, சிட்டுமா எனச் சிந்தாவின் முந்தியையே பற்றிக் கொண்டு அலைந்தன. சத்தியமூர்த்திப் பொறுப்பான அண்ணனாக இரண்டு தங்கைகளையும் பார்த்துக் கொண்டான். குமரனின் கட்டாயத்தில் இப்போது அவன் ஆங்கில வழிக் கல்வியில் பயில்கிறான். அதனால் உள்ளூர் சண்டியராகத் திரிந்தவன் சற்றே மாறியிருக்கிறான்.

மணப்பெண் தோழியாகவும், நாத்தனார் முறையாகவும் வந்த மகேஷ் தனது ஒரு வயது மகள் கங்கைப்பிரியாவை ,தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு, ஐந்து மாதம் மேடிட்ட வயிரோடு முத்துவோடு திரிந்தாள். அவளைப் பார்க்கும் போதே சிந்தாவுக்குக் கங்காவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. தான் பெறாவிட்டாலும் தன் குடும்பத்து வாரிசு வரும் என்றாளே. அதுவும் அவளைப் போல இரண்டு பிள்ளைகள் ,அவள் வாக்கு மெய்யானதில் சிந்தாவுக்கும் மகிழ்ச்சி தான். விண்ணுலகத்திலாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

பெண்ணுக்குத் தந்தை அய்யனார் அலைந்தாரோ இல்லையோ, வேலு நிற்க நேரமின்றி அலைந்து திரிந்தான். பெரிய வீட்டு வழக்கப்படி திருமணம் சடங்குகள் நடந்தேற, வேலுவும் சிந்தாவும் தான் பெற்றவர் ஸ்தானத்திலிருந்து சடங்குகளைச் செய்தார்கள் .பாதபூசை, தாரைவார்ப்பது ஆகியவற்றுக்கு வேலுவை மேடையில் தக்கவைப்பதே பெரும் பாடாக இருந்தது. சத்யா,சிந்துஜா இரண்டும் மணமக்கள் அருகிலேயே கொலு பொம்மைகளாக , சித்தப்பா சித்தி கல்யாணத்தை வேடிக்கைப் பார்த்தன. முத்து குமரன் வாழ்வில் ஒன்று சேர பாதை தந்தவர்கள் இந்தக் குட்டி தேவதைகள் தானே, அவர்களோடு சேர்ந்து தான் இவர்கள் நேசமும் வளர்ந்தது. அதனால் அவர்களும் ஆசையாகவே அருகில் இருத்திக் கொண்டனர்.

முத்துமணி , இந்த நாள் அவள் எதிர்பார்த்த ஒன்று தான். இருந்தும் அவளால் அந்தப் பதட்டத்தைச் சமாளிக்க இயலவில்லை. அவளின் வியர்வையை எத்தனை முறை ஒற்றியெடுத்தாலும் மீண்டும் துளிர்த்தது. அருகில் அமர்ந்திருப்பவனின் ஆளுமையில் தன்னைத் தொலைத்திருந்தாலும் இன்றைய பதட்டத்தை, அவன் வலியக் கரங்கள் கூடக் கட்டுப்படுத்த இயலவில்லை.

" மோதி பெல், ரிலாக்ஸ். கல்யாணம் தான் பீ ஹேப்பி" என ரகசியமாகப் பலமுறை சொல்லி உள்ளங்கையால் அழுத்தியும் விட்டான். ஆனால் அவனுக்குச் சில்லிட்ட கரங்களால் அவன் அன்னையைத் தான் நினைவு படுத்தினாள். அதில் கனிவோடு தான் பார்த்திருந்தான்.

இந்தப் பதட்டம் எல்லாம் தேதி நிச்சயித்த பின்னர்த் தான். சிந்தா தங்கை அருகில் குனிந்து, " கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அவுகளோட தான்னு சொன்னேல்ல. இப்ப அந்தச் சந்தோஷமான நேரம். சந்தோஷமா அவுக கையாளத் தாலி வாங்கிக்க " என அக்காள் சொல்லவும் உணர்வு பெருக்கோடு தலையை ஆட்டினாள்.

மகாலிங்கம் ஐயா, ராஜியம்மாள் முன்னிலையில் , மணப்பெண் முத்துமணிக்கு பெற்றோர் ஸ்தானத்தில் சிந்தாவும் வேலுவும் தாரை வார்த்துக் கொடுக்க, மணமகன் பெற்றோர் சோமசுந்தரம் மரியம் பெற்றுக் கொண்டனர்.

ராஜியம்மாள் தாலியைத் தொட்டு ஆசீர்வாதம் செய்து கொடுக்க, குமரன் மங்கள வாத்தியம் முழங்க, தமிழ் முறை மந்திரங்கள் சொல்லப்படப் பசும் மஞ்சள் சரட்டில் பூட்டிய சொக்கர் மீனாட்சி தாலியைக் குமரன் முத்துமணியின் கழுத்தில் கட்டினான். அக்னி வலம் வர மச்சினன் முறைக்குச் சுப்பு அக்காள் கணவனானவன் கையை முன்னே பிடித்து அழைத்துச் செல்ல, பட்டு வேஷ்டி சட்டையில் மாலையோடு கம்பீரமாகக் குமரனும், அவன் கரம் பற்றியவாறு உலகத்தின் மகிழ்ச்சி அத்தனையும் தன் முகத்தில் நிறைத்து குமரனுக்கு ஏற்ற குமரியாய், இரண்டு வருடப் படிப்பும் பதிவிசும் சேர்ந்து அழகோவியமாய்ச் சற்றே பதட்டத்தோடு முத்துவும், அவளை அடுத்து அண்ணன் அண்ணி இருவரும் சேர்ந்தே தனது திருமணத்தை நடத்தித் தரவேண்டும் எனத் தானும் காத்திருந்து, தனக்கான மாப்பிள்ளையையும் காக்க வைத்திருக்கும் அமுதாவுமாக மணமக்களோடு அக்னி வலம் வந்தனர்.

அய்யனார் மேடையின் ஓரத்திலிருந்து கண்ணீர் மல்கப் பார்த்திருந்தார். சிந்தாவும் உணர்வு பெருக்கில் முந்தானையில் தன் கண்ணைத் துடைக்க, ராஜியம்மாள் அவளை அணைத்துக் கொண்டார். குடும்பம் குடும்பமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்ட போதும் கூட, அய்யனார் , பெரிய அய்யாவுக்குச் சமமாகச் சேரில் அமர முடியாது என மறுத்து விட்டார். மகாலிங்கமே அழைத்த போதும் மறுத்து ஓர் ஓரமாக நின்று தான் போஸ் கொடுத்தார்.

ஆனால் சிந்தாவின் குடும்பப் படம் எடுக்கும் பொழுது , அவர் மறுப்பை , மறுத்துக் குடும்பத் தலைவராக அவரை நடுவில் அமர்த்தி வேலு சிந்தா, ராக்காயியை சேரில் அமரவைத்து மணமக்களும், சுப்புவும் பின்னால் நிற்க, சத்திய மூர்த்தி, சத்யாவோடு, சிவநேசன் மகள் சிந்துஜாவும் அவர்கள் குடும்பப் புகைப்படத்தில் நின்று கொண்டது.

மதிய விருந்து தடபுடலாக நடக்க, நல்ல நேரம் பார்த்து, பெரிய வீட்டுக்குள் ஆலம் சுற்றி குமரனோடு பண்ணைக்காரனின் மகளான முத்து, முன்வாசல் வழியே முறையான மருமகளாய் வலது கால் எடுத்து வைத்தாள்.

மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது. இதோ சாதீய கோட்பாடுகளில் ஊறிக்கிடந்த ஓர் கிராமத்தில் நல்ல ஆரோக்கியமான மாற்றமாக, ஏற்றத் தாழ்வைக் கலைந்து, தனக்கானவளை தன் இனமும் ஒத்துக் கொள்ளும் நிலை உயர்த்திக் கரம் பிடித்துள்ளான் குமரன்.

அடுத்து, சிந்தாவின் வீட்டுக்கு அருகிலேயே அவர்கள் முன்னொரு நாள் பேசியது போல் பெருகும் தங்கள் குடும்பத்தின் வசதிக்காகவும், குமரன் முத்துவுக்காகவும் கீழும், மேலுமாகத் தோட்டம் துறவோடு கூடிய இரட்டை வீடுகளைக் கட்டியிருந்தனர். அங்கே ஆலம் கரைத்து அழைக்கப் பெரிய வீட்டு ஐயா மகன், குடியானவரின் மருமகனாய் முழு மகிழ்வோடே வந்தான். குமரனும் கங்காவிடம் , " அவுங்களை என் உசரத்துக்கு உசத்திக்குவேன் " எனச் சொன்ன வார்த்தைகளை நினைவில் கொண்டு வந்தான்.

குமரன் முத்துவுக்காக மாடியில் குளிரூட்டப்பட்ட அறையை அவர்கள் தோட்டத்து மலர்கள் வைத்தே வேலுவின் மேற்பார்வையில் குமரன் யோசனைப்படியே ரசனையாக அலங்கரித்தனர். அதற்கு அடுத்த அறையில் குமரன் தயாராகிக் கொண்டிருக்க, சிவநேசனும் வேலுவுமாக அவனைக் கேலி செய்து கொண்டிருந்தனர். முத்துவை அவன் மணக்கக் கேட்டபோது இந்த இருவரும் கேட்ட ஜோடிப் பொருத்தம், தகுதி என அத்தனையும் அடிபட்டு அவனுக்கு ஏற்ற மனையாளாக அவள் மிளிர்ந்தாள்.

" வேலு, அன்னைக்குக் கேட்டியே, பாரு என் தம்பி அவனுக்குப் பொருத்தமா எப்படி உன் கொழுந்தியாளைத் தேற்றி வச்சிருக்கான் பார்" எனச் சிவநேசன் வினையமாகவே சொல்லவும்.

" எல்லாரையும் தான் அவர் இஷ்டத்துக்கு ஆட்டி படைக்கிறாரு. இந்த ஊருல இரண்டு பேரு ஆட்டி வைக்கிறபடி தான் நாம எல்லாரும் ஆடுறோம்" என வேலு குறைபடவும்.

" இன்னொரு ஆள் யாரு ப்ரோ" என்றான் குமரன்.

" வேற யாரு, என் பொண்டாட்டி தான். அவள் நில்லுனா நிக்கனும், உட்காருன்னா உட்காரனும். வண்டி எடுன்னா எடுக்கனும். " என அடுக்கிக் கொண்டே போகவும். அண்ணனும் தம்பியுமாக வேலுவிடம் சிந்தாவுக்கு ஆதரவாகப் பேசிக் கொண்டிருக்க, அதே நேரம் " மச்சான் இங்க வா" எனக் கீழிருந்து குரல் கொடுத்தாள் சிந்தா , மற்ற இருவரும் சிரிக்க " என்னா புள்ளை" என வீராப்பாகக் கேட்டபடியே இறங்கிச் சென்றவன், ஹாஹாவெனச் சிரித்தபடியே மேலே ஏறி வந்தான்.

" யோவ், சின்னக்குட்டியை என்னய்யா சொல்லிப் பயமுறுத்தி வச்சிருக்க. அது வரமாட்டேன்னு முரண்டு பிடிக்குதாம்" எனச் சொல்லிச் சிரிக்கவும், சிவநேசன் குலுங்கிச் சிரிக்க, குமரன் அதிர்ந்து பார்த்தான்.

" என்னாது, இரண்டு வருஷமா அரும்பாடுபட்டுப் பட்டு காதலை வளர்த்து வச்சிருக்கேன், வரமாட்டாளா , இருங்க நானே வைத்துத் தூக்கிக்கிறேன் " என வேட்டியை மடக்கிக் கொண்டு எழுந்தவனை, சிவநேசன் அமைதிப் படுத்தினான்

" டேய் இதுலையும் அதிரடியா இறங்காத. முத்துக்குக் கொஞ்சம் ஸ்பேஸ் குடு" என்ற அண்ணனை முறைத்த குமரன்,

" அண்ணன் இதெல்லாம் உனக்கே நியாமா இருக்கா. நீங்க இரண்டு பேரும் கிளம்புங்க. என் பிரச்சனையை நான் பார்த்துக்குறேன்" என வலுக்கட்டாயமாக அவர்களை அனுப்பியவன், வேட்டியை மடித்துக் கொண்டு கீழே வர, முத்து சிந்தாவின் பின்னே மறைந்து நின்று கொண்டாள்.

கொடை ராட்டினத்தில் முதல் நாள் பார்த்தது போல் மேக்கப்பைத் தாண்டி வியர்த்துக் கொட்ட நின்றவளைப் பார்த்த மாத்திரத்தில் நிச்சயம் கைகால் சில்லிட்டு நிற்கிறாள் என அறிந்து கொண்டான். இதழில் துளிர்த்த முறுவலை அடக்கி குறைத்தே நின்றான்.

" அக்கா, அக்கா ப்ளீஸ், ப்ளீஸ் நாளைக்கு வச்சுக்கலாம்னு அவுகள்ட்ட சொல்லு " என அவள் காதில் ரகசியம் பேசியவளை, " அடச்சீ பேசாம இருடி " எனக் கடிந்தாள் சிந்தா.

" சிந்தாக்கா, வேலு ப்ரோ உங்களுக்காக வெயிட்டிங் போங்க" என்றான். சிந்தா சங்கடமாகக் குமரனைப் பார்த்தவள், " நான் கூட்டிட்டு வர்றேன் தம்பி. நீங்க மேல போங்க" என்றாள். குமரன் வேலுவை ரகசியமாக அழைத்துச் சைகை காட்டினான்.

" அக்கா போகாத, போகாத" எனக் கண்ணை மூடிக் அக்காவைப் பற்றிக் கொண்டு நின்றவளின் காதில், "அக்கா , உங்க தங்கச்சி ரொம்பத் தான் பண்றா. இவள் ஒண்ணும் வரவே வேண்டாம்" என்ற கோபமான குரலும் அவன் காலடி சத்தமும் மட்டுமே கேட்க, அழுகையோடு உடல் நடுங்க நின்றவளை, அக்காவுக்குப் பதில் அவன் கரங்களே, அவளைத் தழுவ அவளுக்கு உடல் நடுங்கியது. அதையும் பொருட்படுத்தாமல் அவளை அள்ளித் தூக்கியவன் தங்கள் அறைக்கு அவளைத் தூக்கிச் சென்று கட்டிலில் இறக்கி விட்டு விட்டு, கைக் கட்டி அமைதியாக நின்றான். கண்ணைத் திறந்து பார்த்தவள் , மருண்ட விழிகளோட அவனைப் பார்க்க, கோபமாக இருந்தவன் தன்னையும் மீறிச் சிரித்து விட்டான்.

" அடியே பொண்டாட்டி, நான் ஹீரோடி. என்னை வில்லன் ரேஞ்சுக்குப் பார்க்காத. பேசாம தூங்கு போ. வெளியில இருந்து என் மானத்தை வாங்காத. சும்மாவே என்னை உன் மாமனும், என் அண்ணனும் கேலிப் பண்றாங்க. நீயா வர்ற வரைக்கும் நான் தொடமாட்டேன். நிம்மதியா தூங்கு" என்றவன், " நான் இந்த ரூம்ல இருக்கலாமா, இல்லை வெளியே போகவா" எனவும் அவளுக்குக் கண்ணில் நீர் பெருகியது. அதில் பதட்டமான குமரன் " என்னடி" என அவன் முகத்தைக் கையில் ஏந்த, " எனக்குப் பதட்டமா இருக்குன்னா. நான் என்ன செய்வேன்." என அழவும்.

" அடியே அறிவு கெட்டவளே, பயம் என்னான்னு சொன்னா தானே தெளிய வைக்க முடியும். உன்கிட்ட படிச்சவகிட்ட இருக்கப் பக்குவமும் இல்லை. கிராமத்துப் புள்ளைக்கிட்ட இருக்கத் தைரியமும் இல்லை. சுத்த வேஸ்ட். என் தங்கச்சியைப் பாரு, இரண்டாவது ப்ரக்னெட்டா இருக்கா. சரி விடு, நீ சொன்ன மாதிரி தாலி கட்டியும் நான் குமரன் தான்" எனப் பல மாடுலேசன்களில் பேசியவன் தரையில் பெட்சீட்டை விரித்துப் படுத்துக் கண்ணை மூடிக் கொள்ள, சற்று நேரத்தில் முத்து அவனை ஒண்டிக் கொண்டு வந்து படுத்தாள்.

" இரண்டு வருசமா நீங்க சீண்டிக்கிட்டே இருந்ததாலத் தான் எனக்குப் பயமா இருக்கு" என மூக்கை உறிஞ்சியவள், "சரி வாங்க" என்றாள்.

" எங்க வர்றது. போடி " எனத் திரும்பிக் கொண்டவனை, ஒரு மணி நேரம் போராடி முத்து சரி கட்டினாள். அதன் பின்னர் அவன் பயமெல்லாம் தெளிய வைத்து முழுமையாக முத்துவை ஆட்கொண்டான் குமரன்.

குமரனின் கண் அசைவில் வேலு ஏற்கனவே சிந்தாவை கடத்திருந்தான். அங்கே சிந்தா வேலுவோடு, " சின்னக்குட்டி எப்படிப் பயப்புடுறா. நீ பாட்டுக்கு என்னைத் தூக்கிட்டு வந்துட்ட, அவ பயந்து மயக்கம் போட்டுற போறா" எனச் சிந்தா பதறவும்.

" அடச்சீ இருடி, குமரன் பார்த்துகுவான். நீ இங்கே இரு" என்றான்.

" மச்சான் என்ன தான் குமரனைக் கட்டிக்கிட்டாலும், ஒரு தயக்கம் இருக்கு. அதுனால தான் பயப்படறா" எனச் சிந்தா தங்கையின் மனதைச் சொல்லவும்.

" சிந்தாமணி, புருஷன் பொண்டாட்டிக்குள்ள மட்டும் பேசுறதுக்கோ, பழகறதுக்கோ, இல்லை எதுக்கா இருந்தாலும் பயமெல்லாம் இருக்கக் கூடாதுடி. மனசில இருக்கிறதைப் புருஷன், பொன் சாதி தயக்கமில்லாமல் பேசிக்கனும். அதை விடப் பெரிய வரமோ, சந்தோசமோ இல்லை. குமரன் , சின்னக்குட்டிக்கு அதைப் புரிய வச்சிடுவாப்ல, அதுக்குள்ள நீ போகாத. அது அவுக இரண்டு பேருக்குள்ள இருக்க இடம், அம்மாவா இருந்தாலும், அக்காளா இருந்தாலும் அந்த இடத்தில நின்னுடனும். அவுக படுக்கையறைக்குள்ள நம்ம மூக்க நுழைக்கக் கூடாது" என இயல்பாகப் பெரிய விசயத்தைச் சொன்ன கணவனைச் சிந்தா வியந்தே பார்த்தாள். சரியான சமயத்தில் அவள் குழம்பிய மனநிலையில் இருக்கும் போதெல்லாம் அவளுக்கு ஆசானாய் வழி காட்டுபவனும் அவன் தானே.

" மச்சான், நீயும் அறிவாளி தான்" எனக் கொஞ்சினாள். " ஐயே, அரிய கண்டுபிடிப்பு. படுத்து தூங்குடி. காலையிலிருந்து அலைச்சல் உடம்பெல்லாம் நோவுது" எனப் படுத்தவனுக்குச் சிந்தா கைகால் அமுக்கி விட, " உனக்கும் தானே வேலை , பேசாத தூங்கு" என்றான்.

அவள் படுக்கப் போன நேரம் அதே ஊரில் பாம்பு கடித்தது என ஒரு போன் வரத் தூக்கத்தையும், அலுப்பையும் புறந்தள்ளி , தூங்கத் தயாரான கணவனையும் எழுப்பி மூலிகை பையைத் தூக்கிக் கொண்டு ராக்காயியிடம் சொல்லி விட்டு வேலுவோடு பறந்தாள் சிந்தா.

தனி மனித வாழ்வில் திருப்தியுற்ற மனிதர்களால் , பொது வாழ்விலும், சமுதாயத்துக்கும் சிறந்த பல சேவைகளை ஆற்ற முடியும். ஆணோ, பெண்ணோ அவரின் வாழ்க்கைத் துணை, அனுசரணையாக அமைந்து விட்டால் அதனிலும் பெரிய வரம் வாழ்வில் வேறு இல்லை. இங்கு சிந்தாவுக்கு வேலுவும், குமரனுக்கு முத்துவும் சரியான துணையாக இருந்து, வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை பல செய்வார்கள் . இவர்களைப் போன்ற தம்பதிகள் மூலம் நல்லதொரு சமுதாயம் உருவாகட்டும். வாழ்க்கையில் மகிழ்ச்சி ஜீவநதியாய் பெருகட்டும்.

கடவுள் சில ஆத்மாக்களை உலகிற்கு அனுப்பும் போதே தன்னலமற்ற சேவைக்காக , இறை தூதுவனாகவே அனுப்புவான்.

இந்தியாவெங்கும் சக்தி பீடங்களை நிறுவிய ஈசன் அதனைக் காக்கத் தனது அம்சத்தைப் பல்வேறு வீரபத்திரர், பைரவ அம்சங்களாக நியமித்தார்.

அது போல் காக்கும் பணியைச் செய்யும் இந்தச் சிந்தாமணிக்கும், அவளையே காக்கும் கருப்பணசாமியாக அவளுக்குக் கணவன் வடிவில் உறுதுணையாக இருந்தான் வேலு. சிந்தா தன்னால் ஆன உதவிகளைக் காலநேரம் பார்காகாமல் செய்யும் தாயுள்ளம் கொண்டவள். வேலு அவளுக்குத் துணையாய் நிற்கும் தகப்பன் சாமி. இந்த ஜோடி சுற்றுவட்டார மக்களுக்குப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தனர்.

ஜீவநதிகள் உற்பத்தியாகுமிடம் குறுகலானதாக இருக்கும் ஆனால் அவை வாழ்விக்கும் ஜீவன்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது. அது போல் சிந்தாவின் பிறப்பிடம் ஒரு குடியானவரின் மகளாக இருந்தாலும் ஜீவநதி போல் எண்ணிலடங்கா ஜீவன்களைக் காக்கும் பணியைத் தனதாகக் கொண்டே பயணித்தாள். அவளிடம் காக்கும் உயிருக்குத் தான் மதிப்பு. அந்த உயிர் தாங்கிய உடல் யார் என்பதில் அக்கறை கிடையாது. அனைவரும் சமமே.

சிந்தா எனும் ஜீவநதி என்றும் பாய்ந்து தன்னாலான நன்மைகளைச் செய்து கொண்டு தானிருப்பாள். தொடரட்டும் அவளின் பயணம்.


சிந்தா -ஜீவநதியவள் -27

சிந்தா -ஜீவநதியவள் -27 

மோகினி அவதாரமெடுத்த ஹரியின் அம்சமும் சுயம்பாக நிற்கும் ஹரனின் அம்சமும் இணைந்து ஓர் சக்தியே ஹரிஹர சுதனான ஐயப்பன். அவரையே நாட்டார் வழக்கத்தில் அயனை , அய்யனார் எனப் பூரண, புஷ்கலாதேவ சமேதராகப் பல்வேறு பெயர்களைத் தாங்கிய அய்யனாராகத் தமிழகமெங்கும் காவல் தெய்வங்களாக வணங்குகின்றனர். அவர் வலம் வரும் குதிரை வாகனத்தையும், வேட்டைக்குப் போகும் போது துணை வரும் பைரவ சக்தியான நாயையும் இன்றும் கிராமங்களில் மண் உருவாரமாகச் செய்து, அதனையே காணிக்கையாகச் செலுத்தி வழிபடுகின்றனர்.

இதோ மேலப்பூங்குடி கிராமமே கூடி இரண்டு மாதங்களாய் ஆயத்தம் செய்து பத்து நாள் காப்புக் கட்டி செவ்வாய் பாட்டுப் பாடி, மூன்று நாள் திருவிழாவில் குதிரையெடுத்து ஊர் சுற்றி பொட்டலில் வைத்து இரண்டு நாள் கூத்து நாடகம் காட்டி இன்று காலையில் ஐயனிடம் சமர்ப்பித்து, இதோ விருந்து படைக்கவும் ஊர் மக்கள் வந்து விட்டனர்.

அய்யனாரோடு இருபத்தியோரு பந்தி பரிவார தேவதைகளும் அறுபத்துநான்கு குதிரை சேனையும் உண்டு. ஒவ்வொரு வீட்டிலிருந்து கறி சமைத்துப் படைக்க எடுத்து வந்து விட்டார்கள். இன்னும் மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

முதல் பூஜையாகப் பெரிய வீட்டுக்காரர்களின் தேங்காயை உடைத்து அய்யனுக்குப் படைத்து, முதல் பூஜை உரிமையை அவர்களுக்குத் தந்தனர்.

சற்றுமுன் சிவநேசன், அப்பா அம்மாவை காரில் அழைத்து வந்திருந்தான். பானையை இறக்கி வைத்திருந்த சிந்தா, தங்கையை அழைத்துக் கொண்டு வந்து ராஜியம்மாள் காலில் விழவும், அவர் ஓர் அர்த்த புன்னகையோடு இவர்களையும் கணவரையும் பார்த்தவர்.

" தொங்கத் தொங்கத் தாலியைக் கட்டிக்கிட்டு நல்லா இருங்கடி" என வாழ்த்திவிட்டுச் சென்றார்.

கங்காவுக்காக வேண்டுதல் பொம்மையை மகேஷ் வாங்கி வர, கேசவனும் கங்காவுமாக அதனை அய்யனார் கோவிலின் பின்புறம் இருந்த மரத்தடியில் வைக்கச் சென்றனர். அங்குச் செல்லும் போதே கங்காவுக்கு வலி எடுக்க, மகேஷ் தான் அக்காவைத் தாங்கி அங்கு வரை அழைத்துச் சென்று காணிக்கையையும் செலுத்த வைத்தாள். வேதாவுக்கும், ராஜியம்மாளுக்கும் மனம் நிறைந்தது.

வரிசையாகப் பூஜைக்கு ஆட்கள் நிற்க, சிந்தா குடும்பமும் அதில் நின்றனர். வேலுவை காணாமல் சிந்தா தேடிக் கொண்டிருக்க, முத்துவின் கண்கள் குமரனைத் தேடிக் கொண்டிருந்தன. சுப்பு வந்து அவர்கள் மானாமதுரை வரை சென்றிருக்கும் தகவலைச் சொன்னான்.

" சாமி கும்பிட்டுட்டு போறதுக்கு என்ன. அதை விட முக்கியமான சோலியாக்கும்" எனச் சிந்தா கணவனைக் குறைபட்டுக் கொண்டாள்.

வள்ளி திருமணம் நடந்த அன்று , சிந்தாவின் வீட்டு மாட்டுக் கொட்டகைக்குத் தீ வைத்தவர்கள், அதோடு மட்டும் நிறுத்தாமல் சிந்தாவின் சேலை கொடியில் காய்ந்து கொண்டிருந்ததையும் எடுத்துச் சென்றிருந்தனர். அதனை இரண்டு நாட்களாக ஒரு காளை மாட்டை முகர வைத்து, அவளை நேராகப் பார்க்கும் போது அதன் கொம்புகளால் தாக்கவும் திட்டமிட்டிருந்தனர். அந்தத் திட்டத்தின் படி, அவர்கள் பழக்கிய காளை மாட்டையும் மஞ்சு விரட்டு காளைகளோடு சேர்த்து நிறுத்தியிருந்தனர். அந்த மாட்டுக்காரன் சிந்தா தனியாக வரும் நேரத்தைக் கவனித்துக் கொண்டேயிருந்தான்.

கங்கா அந்த மரத்தடியிலேயே வலி தாங்காமல் அமர்ந்து விடவும், மகேஷ் வந்து சிந்தவைத் தான் அழைத்துச் சென்றாள். இவர்கள் பூசைக்கு நேரம் அதிகமிருந்தது. பதினொரு குதிரைகளுக்குச் சொந்தமானவர்கள் பூசை முடித்துத் தான் இவர்களது தேங்காயை உடைப்பார்கள்.

சிந்தாவுக்கும் கங்காவோடு தனியாகப் பேச வேண்டியது இருந்ததால் மகேஷை அங்கேயே நிறுத்தி விட்டுத் தான் மட்டும் அங்கே சென்றாள். கங்கா, கேசவனைத் தன்னால் நடக்க இயலவில்லை என வீட்டுக்குப் போக இரண்டு சக்கர வாகனத்தை எடுத்து வரச் சொல்லி அனுப்பியிருந்தாள். காணிக்கை செலுத்துபவர்கள் மட்டும் அவ்வப்போது வந்து சென்றனர். எனவே இப்போது கங்காவும், சிந்தாவும் மட்டுமே அங்கே சந்தித்துக் கொண்டனர்.

கங்காவின் அருகில் வந்து அவள் கையைப் பற்றிய சிந்தா, " அந்த டாக்டரம்மா சொன்ன மாத்திரை எல்லாம் நீ எடுத்துக்கவே இல்லையா" என அதிரடியாகக் கேட்கவும், அதிர்ந்த கங்கா, " என்னடி உளற, நீ உன் சோலியை மட்டும் பாரு. என்னை நாட்டாமை பண்ற வேலையெல்லாம் வச்சுக்காத. நீ சாதிக்க முடியாததை, உன் தங்கச்சியை வச்சு சாதிச்சிட்டேல்ல. பண்ணக்காரன் மகளை, பெரிய வீட்டு மருமகளாக்கிட்டங்கிற திமிரா " என அந்த வலியிலும் ஆங்காரமாகத் திட்டவும்.

" நான் அன்னைக்குச் சொன்னது தான், எனக்கு உங்க வீட்டுக்கு மருமகளா வரனுமுன்னு ஒரு நாளும் ஆசையிருந்தது இல்லை. ஆனால் முத்துவை நான் தூண்டி விடலை. குமரன் தம்பியோட அன்புக்கு அவளோட பதில் அவ்வளவு தான்" என நிதானமாகச் சொன்னவள்,

" அதையெல்லாம் விட்டுத் தொலை, உன் உடம்பையாவது ஒழுங்கா பாத்துக்கிறதுக்கு என்ன. பெரியம்மாளுக்கு இந்த விசயம் தெரிஞ்சா எம்புட்டு வருத்தப்படுவாக" எனவும்.

" இப்பையும் உனக்கு உங்க பெரியம்மா மேலையும், அவைகளுக்கு இந்தச் சிந்தா மேலையும் தாண்டி அக்கறை. இது தாண்டி என்னை விவரம் தெரிஞ்ச நாள்லருந்து என்னைத் திங்கிது" என வெறுப்பாகப் பேசிய கங்காவை.

" இப்ப எதுக்குத் தேவையில்லாததைப் பேசுற, உன் வியாதியைப் பத்தி வீட்டில இருக்கவுககிட்டச் சொல்லு, இல்லை நான் சொல்றேன். உன்னை உலகத்தில எந்த மூலைக்கும் கூட்டிட்டு வைத்தியம் பார்ப்பாக. உன்னையவே நீ தண்டிச்சிக்கிற" எனச் சிந்தா எடுத்துச் சொல்லவும்.

" உனக்கு அது தான வேணும், இந்தா அனுபவிக்கிறேன். அதைப் பார்த்து சந்தோஷப் பட்டுக்கிட்டே கிளம்பு. இந்த ஆளை இன்னும் வரக் காணோம்" எனக் கணவனைக் கண்களால் தேடினாள்

" கங்கா, நீ கஷ்டபடனுமுன்னு நான் ஒரு நாளும் நினைச்சது இல்லை. நான் உனக்கு எப்பவுமே ஈடு கிடையாது. நீயா அப்படிக் கற்பனை பண்ணிக்கிட்ட. கொஞ்சம் மஞ்சள் தண்ணீர் கலந்து தரவா, வலிக்கு இதமா இருக்கும். உன் கூட வந்து கசாயமாவது வச்சுத் தர்றேன்" என நயமாகவே கேட்டவளை , எரித்து விடுவது போல் பார்த்த கங்கா,

" போடி ரோசமில்லாதவளே, மானங்கெட்ட கழுதை, உன்னால தாண்டி நான் இந்த நிலைமைக்கு வந்தேன். யாரைப் பார்த்தாலும், சிந்தா, சிந்தானுஉன்னை தூக்கி வச்சிட்டு ஆடவும் தான், நாமளும் யாரையாவது வசப்படுத்தனுமுன்னு தான் சோமன் பயலை அடிமையாக்கி வச்சிருந்தேன். செய்யக் கூடாததெல்லாம் செஞ்சு தான் இந்த நிலைமை" என ஆரம்பித்தவள் ஆங்காரமாகத் தன் பிழைக்கெல்லாம் சிந்தாவையே காரணமாக்கிப் பேச, சிந்தா அப்போதும் பொறுமையாகவே அவளைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

மாட்டுக்காரன் இது தான் சரியான நேரமெனச் சிந்தாவின் சேலையைக் கொடுத்து, காளையை அவளை நோக்கி ஏவி விட்டான்.

குமரனும், வேலுவும் மாற்றி மாற்றிச் சிவநேசன், அய்யனார், வேலு, முத்து என ஒவ்வொருவருக்கும் போன் அடித்துக் கொண்டே ஊருக்குப் பறந்து வர, ஸ்பீக்கர் அலறியதில் போன் அடித்தது கேட்கவில்லை. குமரன் சமயோசிதமாகக் கேசவனுக்குப் போன் அடிக்க, அவன் வண்டியை எடுக்கச் சற்று தள்ளிச் சென்று இருந்ததால் அவன் தான் போனை எடுத்தான். குமரன் எனவும் கோபமாகப் பேச ஆரம்பித்தவன், இவனது பதட்டத்தில் விசயத்தைக் கேட்டுவிட்டு, " அப்படி ஒண்ணும் அசம்பாவிதம் நடக்கலை, இரு நான் பார்க்கிறேன்" என வண்டியைக் கோவில் பின்புறம் வரை கொண்டு வந்தவன் சிந்தாவையும் கண்ணால் தேடியபடி வந்தான்.

சிந்தா மனைவியோடு நிற்கிறாள் என இவன் வண்டியை நிறுத்திவிட்டு விரைய, காளையும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்துவிட்ட கேசவனுக்கு, குமரனின் வார்த்தைகளும் காதில் எதிரொலிக்க,

" கங்கா, மாடு" எனக் கத்தியபடி அவன் ஓடிவர, பெண்கள் இருவரும் அதைத் திரும்பிப் பார்க்க, கேசவன் பெண்களை மறைத்தபடி முன்னே வர, சிந்தா, அங்கு வைத்திருந்த மஞ்சள் நீரை மாட்டின் மேல் ஊற்றுவதற்காக எடுத்தாள். கேசவன் மாட்டுக்கு முன் செல்வதைப் பார்த்த கங்கா, கணவனைக் காப்பாற்றும் உத்தேசத்தோடு ," அத்தான் இங்குட்டு வாங்க" எனக் கத்திக் கொண்டே அவனுக்கு முன் தான் பாய்ந்து சென்றாள். சிந்தா மஞ்சள் நீரை வேகமாகக் காளையின் மீது ஊற்ற, அதற்குள் தன் கொம்பால், கங்காவின் வயிற்றில் குத்தி கீறியிருந்தது.

காளை மாடு மஞ்சள் நீரில் நனைந்தது சற்றே குணம் மாற, சிந்தா மாட்டுக்குப் புரிந்த பாஷையில் கட்டளையிட அது பொட்டலை நோக்கி ஓடியது. மாட்டுக்காரன் அசம்பாவிதம் ஆனதை ஒட்டி மற்றவர்கள் கத்தியதில் மாட்டின் பின்னால் ஓடினான். அதற்குள் சிவநேசனும் போனை எடுத்துப் பார்த்து அழைக்க, விசய மறிந்து சிந்தாவைத் தேடி வந்தவன், கங்கா இரத்த வெள்ளத்திலிருந்ததைத் தான் பார்த்தான். " கங்கா" எனக் கதறிக் கொண்டு வர, கேசவனின் மீது சாய்ந்திருந்த கங்காவுக்கு

சிந்தா, தனது சேலையைக் கிழித்து வயிற்றில் இறுக்கி கட்டியவள், " சின்னையா, காரை எடுங்க. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போகனும், நீங்க கங்காவைத் தூக்குங்க" எனக் கேசவனுக்குக் கட்டளையிட்டு, தானும் அவளது தலையைப் பிடித்துக் கொண்டே, பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தாள்.

வேலு ஓட்டி வந்த கார், தொலைவிலேயே இவர்களைப் பார்த்து விட்டு, நேராக அவர்கள் அருகே வர, அதே காரில் கங்கா, சிந்தா, கேசவனை அள்ளிப் போட்டுக் கொண்டு வேலு சைரன் சத்தத்தைப் போட்டு விட்டு அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அந்த ஊர் மருத்துவமனையில் அவசர உதவி சிகிச்சையை எடுத்துக் கொண்டு, அடுத்த அரை மணியில் மதுரைக்குக் கொண்டு சேர்த்தனர்.

கங்காவுக்கு மாடு குத்தியதை விடவும் பெரிய விசயம் அவளது மூன்றாம் நிலைப் புற்றுநோய் என மருத்துவர்கள் அதிர்ச்சியான விசயத்தைச் சொன்னவர்கள், ஒருவாரம் மருத்துவமனையில் வைத்திருந்தனர்.

கங்கா தான் பிழைக்கமாட்டோம் என்பது உறுதியாகவும், மேலப்பூங்குடியில் அம்மாவின் அருகில் பிறந்த வீட்டில் தான் உயிரை விடவேண்டும் என ஆசைப்பட்டாள்.

மருத்துவர்கள், இந்தப் புற்றுநோய் வகை ஓரிரு வாரத்தில் வேகமாக வளர்ந்து ஆளைக் கொல்லவல்லது என அதன் வகையைச் சொல்ல, மீதி நாட்களை அவள் வலி இல்லாமலாவது நாளை கடத்துட்டும் என மருந்துகளைத் தந்தனர்.

பெரிய வீட்டினர், தங்கள் திருப்திக்கு பரமக்குடி வைத்தியரையும் கூட்டி வந்து காட்ட, அவரும் வேதனையைக் குறைக்க மட்டுமே மருந்து தந்து சென்றார்.

சிந்தா பயந்தது போல், ராஜியம்மாள் மகளின் நோயை அறிந்து நிலைக் குழைந்து போனார். மகளுக்குப் பார்க்கவும் இயலாமல் தானும் வேதனையை அனுபவிக்க, கங்கா எவ்வளவு திட்டிய போதும் அத்தனையும் பொறுத்துக் கொண்டு சிந்தா, அவளுக்குப் பணிவிடை செய்தாள்.

" ஏண்டி இப்படிப் பண்ற, சாகும் போது கூட நீ என்னை நிம்மதியா சாகவிடமாட்டாயா" என்ற கங்காவை "அதெப்படி விடுவேன். சின்னதுலருந்து என்னோட போட்டி போட்டையில, இப்பவும் வாழனுமின்னு போட்டிப் போடு" எனச் சவால் விடவும்.

" அது தான் இல்லாமல் பேச்சே. " என்றவள், " ஆனால் பாரு நீ இரண்டு புள்ளை பெத்துக்கிட்டேல்ல, என் வயித்தில இல்லைனாலும். என் குடும்பத்துக்கு வாரிசு வரும். நான் குழந்தை பொம்மை அய்யனாருக்குக் காணிக்கை வச்சிருக்கேன்ல. அதுக்குக் கிடைக்கும்" என்றவள், வீட்டில் உள்ள பெரியவர்களை அழைத்துக் கேசவனுக்கு, தான் இருக்கும் போதே இரண்டாம் திருமணம் நடத்தச் சொன்னாள். " திடீரெனப் பொண்ணுக்கு எங்கடி போறது" என்ற ராஜியம்மாளிடம் மகேசை கை காட்டினாள்.

தன் சித்தி, சித்தப்பாவை அழைத்தவள், " அத்தானுக்கும் எனக்கும் தான் சரி வயசு, மகேஷுக்கு ஆறு வயசு தான் மூத்து இருப்பாக. ஜோடிப் பொருத்தம் சரியா இருக்கும்' என மகேஷையும் பேசியே கரைத்தவள், கணவனிடம் கடைசி ஆசை எனச் சொல்லி திருமணத்தை நடத்தி வைத்தாள்.

அருகே இருந்த சிந்தாவிடம், " என்னடி பார்க்கிற, நீ மட்டும் தான் ரொம்ப நல்லவளோ, நானும் போற வழிக்குக் கொஞ்சம் புண்ணியத்தைச் சேர்த்துக்கிறேன்" எனவும் சிந்தாவுக்கு அடக்கமாட்டாமல் கண்ணீர் வந்தது.

அண்ணன், அத்தாச்சி, தம்பி என அனைவரையும் அழைத்து ,தான் செய்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டவள், அதன் பிறகு வலி வேதனையோடு போராட ஆரம்பித்தாள். கங்காவின் ஜீவமரணப் போராட்டத்தில் சிந்தா தன் மகளை மட்டும் வைத்துக் கொண்டு பெரிய வீட்டில் அவளோடு தான் இருந்தாள்.

முதல் சிலநாட்கள் சிந்தாவிடம் வெறுப்பைக் காட்டிய கங்கா, அவள் அத்தனையும் சகித்துத் தனக்குச் சேவை செய்வதில் வலி மிகுதியில் தன் அம்மாவை அழைப்பது போலவே சிந்தாவையும் அழைத்தாள்.

"உன்னைக் கேவலப்படுத்தனுமுன்னே எல்லாம் செஞ்சேன். கொல்ல கூட ஆள் அனுப்பினேன். அத்தனையும் தெரிஞ்சும் ஏண்டி எனக்குப் பார்க்கிற" எனக் கேள்வி எழுப்பியவளிடம்.

" ஒரு நாளாவது நீ என்னையோ, நான் உன்னையோ நினைக்காமல் இருந்திருப்போமா. வஞ்சுக்கிட்டேனாலும், நீ நினைச்சுக்கிட்டே தான இருந்திருப்ப. அந்தப் பந்தம் தான்" எனச் சிந்தா சொல்லவும். கங்காவிடம் ஓர் கசந்த முறுவல், " ஆனால் நான் செஞ்சதுக்கு உன்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்" என்றவளை , " நீ கேக்கவும் வேணாம். " எனச் சிந்தா அவள் உடலை கைகளால் நீவி, தடவி விடும் நேரம், ரெய்கி சிகிச்சை போல் சற்று நேரம் கங்காவுக்கு இதமாக இருக்கும்.

" நான் சொன்னமாதிரி, நீ மாயக்காரி தாண்டி" எனச் சிலாகிப்பவள் கடைசியில் அரை மயக்கத்திலேயே கிடந்தாள். அன்பிற்கும் வெறுப்பிற்கும் நூல் அளவு இடைவெளி தான் என்பது போல், பிறந்தது முதலான அவளது வெறுப்பும் அன்பாக மாறி அமைதியாகவே அவள் உயிர் பிரிந்தது. 

பெற்றவர்கள் உற்றவர்கள் அவள் மரணத்துக்காகப் பட்ட வேதனையிலும் குறையாது சிந்தாவும் வேதனைப் பட்டாள் .

இதைப் பற்றி வேலு கேட்ட போது ," அவளும் நானும், ஒரே வீட்டில் வளர்ந்தோம், அவளுடைய பொறாமை ,என் மேல வெறுப்பா மாறிடுச்சு, தெரிஞ்சோ தெரியாமலோ நானும் அதுக்குக் காரணமாயிட்டேன். என்ன தான் அவள் மேல வருத்தம் இருந்தாலும், அவள் அவதிப் படும்போது என்னால பார்க்க முடியலை" எனக் கண்ணீர் சிந்தியவளை, "அது தான் என் சிந்தாமணி. என் சின்னாத்தாளையே ஊருக்கு அனுப்ப விடமாட்டேங்கிறியே" என அவன் குறை போலவே அவள் நிறையைச் சொன்னான் .

" அந்தக் கெழவி என்ன செஞ்சாலும் சரி , நம்மக் கூடவே இருக்கட்டும். அப்பத் தான்,நம்ம பொழுதும் கலக்கன்னு இருக்கும் " என்றவளை, "உனக்கு என்னை மண்டி போட வைக்கிறதுக்கு ,என் சின்னாத்தாள் வேணும் அது தானே ." என்றான். அவள் சிரித்து விட்டு, "அப்படியெல்லாம் இல்லை மச்சான், ஏன் உன் சின்னாத்தா வருமுன்ன எப்படி இருந்தியாம், அப்பயும், இப்பயும் ,நீ ஒரே மச்சான் தான் " என அவனைப் புகழ்ந்தாள்

" இதை நினைப்பில் வச்சுக்க, அடுத்தத் தடவை, அந்தக் கிழவி ஏதாவது செஞ்சுதுன்னு பஞ்சாயத்துக்கு வந்தே, அதைக் கொண்டு போயி ஊருல விட்டுட்டு வந்துடுவேன்" என மிரட்டியவனை, "எங்க என் மாமியாளை அனுப்பிடுவியா , பார்ப்போம்" எனச் சிந்தா சவால் விடவும் , அவளை முறைத்த சிங்காரவேலு, "இங்க எல்லாமே உன் ராஜ்ஜியம் தானே, எதோ ஒரு வகையில என்னை அடைக்கிப்புடுறடி" எனக் குறைப்பு பட்டவன் அவள் அன்பில், காதலில் விருப்பமாகவே தன்னை ஒப்புக் கொடுதான். சிந்தாவின் பலமே அவள் கணவன் தான், ஜீவநதியாய் அவளைப் பயணிக்க வைப்பதும் அவன் தரும் இடம் தான்.

சிந்தாவை தாக்கியதில் கரி பேக்டரி முதலாளியான வடக்கத்திக்காரனின் கை இருப்பது தெரிந்தும் அதனைச் சட்டப்படி மெய்ப்பிக்க இயலாமல் அவன் சாமர்த்தியமாகவே காரியத்தைச் செய்தான். ஆனால் நோய் நொடி என அவனே படுக்கவும், அவன் மனைவி சிந்தாவைத் தேடி வந்தாள். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் குமரன், ஊரின் நன்மைக்காக, சில முடிவுகளை எடுத்தான். அதன் படி தன்னால் விளையும் சீமைக்கருவைகளை அவர்களுக்குத் தருவது என்றும், மற்ற நிலங்களில் வலுக்கட்டாயமாகப் பயிரிடத் தூண்டக் கூடாது என்றும் ஒப்பந்தம் போட்டனர்.

முத்துமணி, குமரனுக்குப் பரிசம் போடப்பட்டு உரிமையுள்ளவளாகக் கோவையில் குமரனின் வேர்கள் வளாகத்தில் தான் தங்கிப் படித்தாள். கங்காவின் கடமைகளை முடித்த சிந்தா சொன்னது போலவே அமிர்தாவுக்குப் பிரசவம் பார்க்க, கோவை சென்று வந்தாள். அந்தப் பிரயாணம், சிந்தா, வேலு இருவருக்குமே குமரன் மீதான பிரமிப்பை அதிகப் படுத்திருந்தது.

தென்வயலில் பயிர்கள் அடுத்து வந்த பருவமழையில் செழித்து வளர்ந்தன. புதிய பல ஆராய்ச்சிகளையும் குமரன் செய்து கொண்டிருந்தான். இவர்கள் நிலத்தில் விளைச்சலையும் லாபத்தையும் பார்த்து , மற்ற நிலம் வைத்திருப்பவர்களும் தாங்களாகவே மாற்று விவசாயம் செய்ய முன் வந்தனர். 

சீமைக் கருவை குறையவும் , மண்ணில் நீர் இருப்பு அதிகரித்தது. பனை, நாட்டுக் கருவேலம் மரம், வேம்பு , புங்கை என ஊரெங்கும் மரங்களையும் நட்டு , மழை வளத்தையும் மண் வளத்தையும் காத்தான். சுற்று வட்டாரத்தில் எங்கு மழை பொழியுதோ இல்லையோ, மேலப்பூங்குடியில் மழை வந்து விடும். "வேர்கள் " அமைப்பும் குமரனும் மெல்ல ஓர் விவசாயப் புரட்சியை இந்தக் கிழக்குச் சீமைமையில் செய்து கொண்டிருந்தனர்.

ராஜியம்மாளுக்குக் கங்காவின் இழப்பு மனதளவில் பெரிய பாதிப்பைத் தந்திருந்தது. தான் அவளைச் சரியாக வளர்க்கவில்லை என நொந்து கொண்டார். சிந்தா தான் அவரைத் தேற்றினாள். ராஜியம்மாள் சோர்ந்து போகவுமே மீனாள் மாமியாரைத் தொந்தரவு செய்யாமலே வீட்டுப் பொறுப்புகளைக் கவனிக்க ஆரம்பித்திருந்தாள்.

பரமக்குடி வைத்தியர், சிந்தாவுக்கு இன்னும் சில வைத்திய முறைகளைச் சொல்லிக் கொடுத்து, ஒரு பட்டயப்படிப்பு சான்றிதழும் பெற வைத்து தனது வைத்திய சாலையின் ஒரு கிளையையும் இங்கே ஆரம்பித்துச் சிந்தாவை அதற்குப் பொறுப்பேற்க வைத்திருந்தார். நாட்கள் சீராகச் சென்றது.

சிந்தாவால் காப்பாற்றப் பட்ட சோமன் உயிர் பிழைத்தாலும் பாம்பின் விசம் சதை வரை பாய்ந்திருந்ததால் கால் ஊனமாகப் போனது. அதோடு கங்காவின் மரணம் அவனை வெகுவாகப் பாதித்தது. சோமனின் சிகிச்சையையும் சிந்தாவிடமே அவன் செய்து கொள்ள, வரும் போதெல்லாம் அவளிடம் பாவமன்னிப்பு கேட்பான். நீ திருந்தியதே உனக்கான தண்டனை தான் என்ற சிந்தா, முடிந்தவரை ஊர் மக்களுக்கு நல்லது செய்யச் சொன்னாள்.

வள்ளிக்கு ஆண்குழந்தை பிறந்தது. சிந்தாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகேஷ் , கேசவனோடு மனமொத்து வாழ்ந்து ஓர் மகளைப் பெற்றெடுத்தாள். குமரன் அன்று கங்காவுக்குப் பாடம் புகட்ட எடுத்த நடவடிக்கையால் இன்று தொழில் முழுதும் கேசவனின் தனி உரிமையாக மாறியிருந்தது.

குமரன் முத்துத் திருமணம் மட்டுமே பெரியய்யா சம்மதத்துக்காக, பெரியம்மா தாலி எடுத்துக் கொடுப்பதற்காகக் காத்திருந்தது.

Monday, 13 September 2021

சிந்தா-ஜீவநதியவள் -26

 சிந்தா-ஜீவநதியவள் -26

வாராரு, வாராருங்க, வழிபட்டானுங்க

வல்லுவழக் கல்லு உரசருனாருங்க.

வாவறி மட்டும் தீட்டுறாருங்க


பிலிப் பால் கறந்து, கோட்டை கட்டுறாருன்னுங்க

அந்த படைக்கும், நம்ம முனியாண்டி  படைக்கும், 

அஞ்சாத கருப்பன் கொண்டையில வருவாரு!


ஒரு கொசுவை பிடிச்சு ஒன்பது குழி போட்டு. 

ஆட்டாலும் காணாமே, மாட்டாலும் காணாமே

காட்டுப் புல்லைக் கண்டு வந்து சொல்லு


காவக்காரவுகளுக்கு காக்கறியை போட்டு. 

குறும்பனுக்குக் காஞ்ச எலும்பைப் போட்டு. 

மூணையா வீட்டுக்கு மொட்டை எலும்பு போட்டு. 

நாலையா வீட்டுக்கு நடு எலும்பைப் போட்டு. 

அடுத்த வீட்டுக்கு ஆப்பச்சாரைக் கொடுத்து 

மிச்ச எலும்பை நம்ம முனியாண்டிக்குத் 

தோரணம், தோரணமா காயப் போடனும்


குதிரையெடுப்புத் திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழா, இன்று காலையில் , இரண்டு நாள் கூத்து பார்த்தபின்பு அய்யனார் புரவிகளை , அவனிடத்தில் சேர்ப்பிக்க பொட்டலிலிருந்து இன்று மீண்டும் சுமந்து சென்று அய்யனார் கோவிலில் காணிக்கை செலுத்துகின்றனர். இன்று முழுவதும் உண்ணாமல் விரதமிருந்து, மாலையில் அடுக்குப்பானைகளில் பலகாரம், கோழிக்கறி, மாவிளக்கு, தேங்காய் பழம், விளக்கு மேலே அடுக்கில் வைத்து மூன்று, ஐந்து என அடுக்கு பானைகளில் அவரவர் வீட்டிலிருந்து எடுத்துச் சென்று அய்யனுக்குப் படைத்து விட்டு வீட்டுக்கு வந்து இரவில் தான் உணவு உண்பார்கள்


இதோ அன்று தூக்கிய அதே குழுவினர் இன்றும் பொட்டலிலிருந்து தூக்கி, 

அய்யன் அழகு மண்குதிரையை

ஆச்சாரம் குறையாமல் 

இன்னல்களைக் கலைந்து 

ஈரேழு உலகைக் காக்கும் 

உரகசயனன் மகனை 

ஊர்காக்கும் தெய்வத்தை 

எட்டுத் திக்கும் கண்ணசைவில்

ஏற்றம் பெற வைப்பவனை 

ஐயனே, அப்பனே என விளித்து 

ஒன்பது நாள் நோன்பிருந்து

ஓரணியில் ஒற்றுமையாய் திரண்டு

ஔவியம் கலைந்து அவன் வாகனத்தைக் 

காணிக்கையாகச் செலுத்தினர். 


நோய் நொடிகள் தீண்டாமல் , மாமழைப் பொழிந்து, விவசாயம் சிறந்து, மக்கள் வாழ்வாதாரம் உயர்ந்து,ஊர் வளம் பெறவும் , மக்கள் உய்யவும், அய்யன் அகமகிழ்ந்து , தன் வாகனத்தைக் காணிக்கையாக ஏற்று அருள் புரிந்தான். 

கிராமத்து மக்கள், கண் கண்டதை, காது கேட்டதை அப்படியே கிரகித்து அவரவர் புரிதல், கற்பனை சேர்த்து இட்டுக் கட்டி கதையளந்துவிடுபவர்கள். வினை விதைத்தவன், வினையறுப்பான் எனத் தெய்வங்கள், குற்றம் செய்தவரைத் தண்டிக்கும் என்ற கோட்பாட்டின் மேல் நம்பிக்கை வைத்தவர்கள். சிந்தா, அன்று சோமனை நேரடியாகவே குற்றம் சுமத்தி சவால் விட்ட பின்னர், ஒரு பக்கம் திருவிழாவில் கலந்து கொண்ட போதும், இந்தக் குடும்பங்களைக் கவனித்தே வந்தனர். நேற்று காலையில் சிந்தா வீட்டு மாட்டுக் கொட்டகை தீ பற்றிய நிகழ்வைப் பேசியவர்கள், மதியம் குமரனுக்கு முத்துவை பரிசம் போட்டதை, ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், "பெரிய வீட்டு ஐயாவுக்குச் சம்மதம் இல்லையாமில்ல, ஆனால் சின்னவுக ,அவுக சிங்கப்பூர் சித்தப்பாவோட வந்து நின்னு தான் பொண்ணு கேட்டுப் பரிசம் போட்டாக, " எனச் சிவநேசன் வந்ததையும், மகாலிங்கத்துக்கு விருப்பம் இல்லாததையும் , குமரன் குடும்பம் பற்றியும் பலவிதமாகப் பேசினர். குமரனின் பெற்றவர்கள், பரிசம் போட்டுவிட்டு மதியமே தங்கள் அறைக்குக் கிளம்பப் போனவர்களை, ராஜியம்மாள் வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்தார். உறவினர்கள் பலர் முறைத்தாலும், நேரடியாக எதுவும் சொல்லவில்லை. ஆனால் கங்கா மட்டும், குமரனிடம்," நினைச்சதைச் சாதிக்கிற. இது எப்படிச் சரியா வரும்னு பார்ப்போம்டா. இந்த உங்கப்பா வந்து அந்த வீட்டில சம்பந்தம் பேசினாரே, வீட்டுக்கு வெளில உட்கார்ந்து தான் பேசினாரு, வீட்டுக்குள்ள வரலைல அதைத் தான் சொல்றேன். நீயும் நாளைக்கு மாமனார் வீடுன்னு போக வர இருக்க முடியாது. என்னத்தைத் தான் புரட்சி புடலங்காய்னு பேசுங்க. ஆனாலும் சிலது மாறாது" எனச் சவால் விட்டவள், வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்காரவும், பதறிய குமரன். " நீ சொல்றதெல்லாம் சரி தான். அவளை என் உயரத்துக்கு உசத்திக்கிறேன். இப்படி வயித்து வலியில் அவஸ்தை படுறதுக்கு , பிடிவாதத்தை விட்டுட்டு வா, டாக்டர்கிட்ட போகலாம்" என அழைத்தான் குமரன். " இப்படி அவதிபடுவேன்னு தானே அவ சாபம் கொடுத்தா. நீயும் அதுக்குத் தான ஆசைப்பட்ட. நான் அனுபவிச்சுக்குறேன் விடு" என அதிலும் அவளது பிடிவாதத்தைக் காட்டியவள் அவளுடைய, அப்பா, கணவன், அண்ணன் என யாரழைத்த போதும் மருத்துவமனைக்கு வர மறுத்து விட்டாள் கங்கா. "அது அப்படித் தான் , எப்பவுமே அவள் நினைச்சதைத் தான் சாதிக்கணும், விடு அவளை மாத்த முடியாது" எனச் சிவநேசன் குமாரனை சமாதானம் செய்தான். மாலை நேரத்தில் , குமரன் தென்வயல் டென்டில் யோசனையோடு தலையைப் பிடித்துக் கொண்டே அமர்ந்திருக்க, முத்து காபியோடு வந்தாள். பட்டுச் சேலைக்குப் பதில் அன்று போல் பாவாடை தாவணியிலிருந்தவள் கோவிலுக்குச் செல்ல தாயாரணபடி, தனி விதமான மேக்கப் இல்லாமல், அவனுக்காக இருவீட்டாராலும் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் எனும் சந்தோஷத்தில் இயல்பான ஒரு பூரிப்போடே இருந்தாள். தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவனைக் காணவும், அவளுக்கு மனதுக்குச் சங்கடமாக இருக்க, காபி ப்ளாஸ்கை ஓரமாக வைத்தவள், அவன் முன்னே வந்து அவன் சிகையை வருடி, "நான் வந்தது கூடத் தெரியாமல் என்ன யோசனை, எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறீக " என முத்துக் கேட்கவும், அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் , அவளின் வயிற்றில் தலைவைத்து இடையோடு கைகளைக் கட்டிக் கொண்டு, " என் யோசனையிலையும் நீ தான் இருக்க. நீ தான் என்னை மயக்கி வச்சிருக்கியே" எனவும், அவன் மீசை பட்ட இடம் குறுகுறுக்க, " ரொம்ப மயங்கிறவர் தான் நீங்க. அது தான் என்னை எதுக்கு ஆசைப்பட்டிங்கன்னு தெரிஞ்சு போச்சே. நான், உங்கம்மா சாயல்ல இருக்க, டியுபிலிகேட் காப்பி" என அவள் குறைபட்டுக் கொள்ளவும். அவன் சிரித்தபடி தன் முகத்தை நிமிர்த்தி, "அப்படிச் சொல்லக் கூடாது பேபி, அந்தக் கொடை ராட்டினத்தில் பார்த்தப்ப, ஃபஸ்ட் லுக் வேணும்னா, எங்கம்மா மாதிரி, பயத்தில சில்லிட்ட கை, வேர்த்து விறுவிறுத்த முகம், ஒரு பதட்டம்னு அந்த ஃபீலை தந்த, ஆனால் உன்கிட்ட பேசவரும் போது எல்லாம் , நினைப்பு தான் பொழைப்பை கெடுக்கும்னு சொல்லுவியே, அப்பவே தெரிஞ்சுக்கிட்டேன், என் நினைப்பு உன் பொழைப்பைக் கெடுக்குதுன்னு, அப்புறம் எப்படி விடுறது, என் பொழைப்பு கெடக் கூடாதேன்னு, இதோ பரிசம் போட்டுட்டேன் " எனச் சொல்லி, கண்ணடித்துச் சிரித்தவன் முகம் அவள் நெஞ்சத்தில் பதியுமளவு அருகிலிருக்க, அவன் மயக்கும் சிரிப்பிலும், விசமமான செய்கையிலும் சுதாரித்தவள்,

அவனை விட்டு விலகி, " நீங்க ரொம்ப மோசம். மனுசன் கவலையா உட்கார்ந்து இருக்கீகளேன்னு பக்கத்தில் வந்தது தப்பா போச்சு" என நொடித்தவள், காபியை ஊற்றி அவனிடம் தந்து விட்டு, எதிரே இருந்த சேரில் அமர்ந்து கொண்டாள்.

காபியை மிடறு மிடறாக ரசித்து அருந்தியவன், " நைஸ், என் டேஸ்ட் உனக்கு வந்திடுச்சே" என்றவன் " உனக்கு" எனத் தன்னதை நீட்டவும். அவன் புகழ் மொழியில் மகிழ்ந்திருந்தவள், " நீங்க குடிச்சிட்டு குடுங்க. அதிலையே குடிச்சுக்குவேன்" எனக் குழையவும். " கஞ்சாம் பட்டி, இனிமே இரண்டு டம்ளர் எடுத்துட்டு வா. இதுல எல்லாம் லவ்வை காமிச்சா நான் ஒத்துக்க மாட்டேன். என் எக்ஸ்பெக்டேசனே வேற" என அவன் வம்பிழுக்கவும். அவனை முறைத்து விட்டு, " பரிசம் தான் போட்டிருக்கீக. தாலி கட்டலை. எங்க அக்காவோட சேர்ந்து பெரிசா உங்க பெரியம்மா கையாளத் தாலி எடுத்துக் குடுத்தா தான் கட்டுவோம்னு டயலாக் எல்லாம் அடிச்சீக . எனக்கென்னவோ பெரியய்யா மனசு மாறுவாகன்னு தோணலை. கடைசி வரைக்கும் நீங்க குமரனாத் தான் இருக்கப் போறீக. நான் என்ன ஆகப்போறனோ" என ஏற்ற இறக்கத்தோடு பேசி அவள் குறைபடவும், " தாலி மட்டும் தான் பெரியம்மா சம்மதத்தோட கட்டுறேன் சொன்னேன். மத்ததெல்லாம் என் மூடைப் பொறுத்து" என்றவனை, அருகிலிருந்த செய்தித்தாளைச் சுருட்டி, மாற்றி, மாற்றி அடித்தாள். " ஹேய் அடிக்காதடி, அரைப் பொண்டாட்டியா இருக்கையிலேயே, இந்த அடி, அடிக்கிறாளே" எனப் பயந்தவனைப் போல் நடித்தவனை , " போயா, என் கை தான் வலிக்குது. " என அமர்ந்தவள், கேலிக் கிண்டலை விடுத்து, அவன் கவலையைப் பற்றி அக்கறையாகக் கேட்கவும், கங்காவைப் பற்றிச் சொன்னான். " அக்காவைப் போய்ப் பார்க்கச் சொல்லவா" என்ற முத்துவிடம். " வேணாம், அவுங்களைப் பார்த்தா பிசாசா கத்தும்" என்றான் குமரன். அந்த நேரம் காவல்துறை ஆய்வாளரிடமிருந்து தகவல் வந்தது. சிந்தா வீட்டு மாட்டுக் கொட்டகைக்குத் தீ வைத்ததாகச் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட நபர், பரமகுடிகாரன் என்றும், அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் பலியானான் எனவும் செய்தி வந்தது. அவனைப் பற்றிய விவரங்களைக் காவல்துறை விசாரிப்பதாகவும் தெரியவந்தது. குமரன் விசயத்தை முத்துவிடம் பகிர்ந்தவன்" இவன் யார் ஏவின ஆளுன்னு தெரியலை. வேற எதுவும் செய்யாமலும் இருக்கனும்" எனக் கவலைப் பட்டான். இந்தத் தகவலும் ஊருக்குள் பரவவும் சிந்தாவின் வார்த்தைகள் சத்தியமானவை , அவளுக்குக் கேடு நினைப்பவர்கள் கெடுவார்கள் எனப் பேசியவர்கள், " பெருமாயி , உன் மகன் என்ன ஆகப்போறானோ" எனப் பயமுறுத்தவும் செய்தனர். ஏற்கனவே மனதளவில் தாக்கப்பட்ட சோமன், அரண்டு போனான். சத்தியாவுக்குத் தாய்ப்பால் புகட்டி விட்டு, அது வாயைத் துடைத்து, சிங்காரித்து, சுப்புவிடம் தந்த சிந்தா, " கொஞ்சம் நேரம், வெளில வச்சுக்கச் சுப்பு, நான் சீலை மாத்திட்டு வர்றேன். இந்தச் சின்னக் குட்டிப் போனது வந்திடுச்சான்னு பாரு. இல்லையினா பாப்பாவைத் தூக்கிட்டு அவுக டென்ட் வரைக்கும் போயிட்டு வா" எனக் கண்டிப்பும் , கேலியும் கலந்த குரலில் தம்பிக்குக் கட்டளையிட, " ஏக்கா, நீயே அதை அங்க அனுப்பி விட்டுட்டு, இப்ப பின்னாடியே என்னையும் அனுப்பி விடுற. " எனச் சுப்பு , அவர்கள் தனிமையில் குறுக்கிட விரும்பாமல் சங்கடமாகக் கேட்கவும். " சும்மா போயிட்டு வா. அவுக கல்யாணம் ஆகிற தட்டியும் இப்படித் தான். " எனத் தென் வயல் பக்கம் மகளோடு தம்பியை அனுப்பி விட்டு, இவள் தயாராகிக் கொண்டிருக்க, அவள் பேச்சைக் கேட்டபடி வந்த, வேலு, " நீ பெரிய ஆளு புள்ளை. அதுக்குச் சுப்புகிட்டையே காபி பலகாரத்தைக் குடுத்து விட்டிருக்க வேண்டியது தான" எனக் கேள்வி எழுப்பவும். கணவனை முறைத்த சிந்தா, " காலையில தான் பரிசம் போட்டிருக்காக. இரண்டு பேருக்கும் தனியா சந்திச்சிகனுமுன்ன ஆசைப் படுவாகல்லை. உன் கொழுந்தியா எப்படா நாலு மணியாகுமுன்னு மதியத்திலிருந்து காபி கலக்க ஆரம்பிச்சிட்டா " எனத் தங்கையைக் கேலி செய்த சிந்தா, " ஏன் மச்சான், திடுதிப்புன்னு பரிசமெல்லாம் போட்டுடாக , பெரியய்யா என்ன சொல்லுவாகளோ. என்னத்தைச் சொல்லு, நம்மோடா ஒண்ணு மண்ணா பழக முடியுமா. திண்ணையிலேயே நிக்கிற சம்பந்தமா தானே இருக்கு. " எனக் கவலைப் படவும். " அதுக்கென்ன செய்யறது. அவுக வர்ற அளவுக்கு நம்ம வாசலை உசத்த வேண்டியது தான். " என்ற வேலுவிடம் " புரியலையே மச்சான்" என்றாள்.
" சுப்பு கோயமுத்தூர் போயிட்டு வந்து சொன்னான். குமரன் இருக்க இடத்தை அவ்வளவு வசதி செஞ்சு வச்சிருக்காப்லையின்னு. இந்த டென்டே எப்படி இருக்கு பார்த்தியில்ல. பக்கத்தில கிடக்கிற இடத்தில, இவர் தங்குறாப்ல ஒரு வீட்டைக் கட்டுவோம். நாளை பின்னப் பெரிய வீட்டில சமாதானம் ஆனாலும், சின்னக்குட்டிக்கும் அங்க போய்த் தங்கிறது சிரமம் தானே. இங்க அவுக பாட்டுக்கு இருப்பாக. எப்படியும் சுப்புவுக்குக் கல்யாணம் காட்சி செஞ்சா, நம்ம வேற வீட்டைப் பார்க்கனும். அதுக்கு நம்மளுக்கு ஒரு வீட்டை கட்டிபுட்டு, மாடியில குமரன் தங்கிற மாதிரி, ஒரு ரூம்பை கட்டிடுவோம். " என வேலு யோசனைச் சொல்லவும். கணவனின் முகத்தை வழித்துக் கொஞ்சியவள், " மச்சான், எம்புட்டு யோசிச்சு வச்சிருக்க. எம் புருஷனும் அறிவாளி தான்" என நெட்டி முறித்தாள். அவளைப் பார்த்து முறைத்தவன் ," அடியே , உன் புருஷன் இந்த ஜில்லாவுக்கே யோசனை சொல்றவன், என்னா நினைச்சிட்டு இருக்க என்ன பத்தி" என அவன் வம்பு பேசவும், சிந்தா முகத்தில் குறும்பு கூத்தாட அவன் சட்டையைப் பற்றித் தன் உயரத்துக்கு இழுத்துக் கொண்டு, தன் கையை அவன் கழுத்தில் கழுத்தில் மாலையாகப் போட்டவள், நான்கு கண்களின் உதவியால் அவன் இதயத்துக்கு மன்மத அம்புகளைத் தொடுத்து " உன்னைப் பத்தி, என்ன நினைக்கப் போறேன். ஒரு மாசமா நாடகமாடி முறைச்சுகிட்டே திரியிற. திருவிழா முடிஞ்சு மஞ்சள் நீர் ஊத்திட்டு உன்னை என் வழிக்குக் கொண்டு வரனுமின்னு நினைச்சிட்டு இருக்கேன்" எனக் குழையவும், அவள் கைகளை, பற்றிக் கழுத்திலிருந்து எடுத்து அரையடி தள்ளி நிறுத்தி " அடியே என் சீனிக் கருப்பட்டி, அய்யன் குதிரையை ஆச்சாரமா, தூக்கி நாளைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கனும். அதுவரைக்கும் அழகாயி ஆத்தாளாவே இரு, சிந்தாமணியை இரண்டு நாளைக்குப் பிறகு எழுப்பிக்கடலாம்." என வலுக்கட்டாயமாக முறைத்தவன், " மனுசன் அவஸ்தை புரியாம வந்து உரசருரா." எனப் புலம்பியபடியே வெளியே வந்தவன், வேகமாக உள்ளே சேதி சொல்ல வந்து முத்து மீது மோதப் போனான். சட்டெனச் சுதாரித்தவன், " ஏய் சின்னக் குட்டி, பரிசம் போட்டுருக்கு, அதுக்கு முன்ன, கண்மண்ணு தெரியாத பறக்கிற" எனத் திட்டவும். அவனை முறைத்தவள், " ஐயே, நான் ஒண்ணும் பறக்கலை போ மாமா, ஒரு முக்கியமான சேதி சொல்லத் தான் வந்தேன்." என்றவள், " அக்கா, நம்ம மாட்டுக் கொட்டகைக்குத் தீ வச்சவன் , ஆக்சிடென்ட்ல செத்துப் போயிட்டானாம். இப்பத் தான் அவுகளுக்குச் சேதி வந்துச்சு " என முத்துச் சொல்லவும். " ஆத்தி, எம்புட்டு பெரிய சோதனை. ஒரு உசிருல்ல போச்சு" எனச் சிந்தா புலம்பவும், அதைக் கேட்ட ராக்காயி, " இவளுக்குக் கெடுதி செஞ்சவனுக்கும் உருகுறா பாரு. இது மாதிரி பைத்தியகாரிச்சி உண்டா" என்றது. " தண்டனையின்னா, ஒரு கை, காலு போச்சுனாலும் பரவாயில்லை. அவனை நம்பியிருந்த குடும்பம் என்ன ஆகும்" என்று சிந்தா ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்க, வேலு குமரனைச் சந்திக்கச் சென்றான். " ஆமாம் ப்ரோ, இவனுங்களுக்கு, பின்னாடி யாருன்னு கண்டுபிடிக்கனும்" என்ற குமரனிடம், " வேற யாரு, சேட்டோட ஆளுகளாத் தான் இருக்கும்" என்ற வேலுவின் முகத்தில் கவலை சூழ, " எல்லாத்தையும் சமாளிக்கலாம்.ப்ரோ சிந்தாக்காவை எவனும் தொட்டுக்க முடியாது. அவுகளுக்குச் சாமியே பாதுகாப்பு தர்றாரு. கவலைப் படாதீங்க" எனக் குமரன் வேலுவைத் தேற்றினான். " நானும் அந்த நம்பிக்கையில தான் தம்பி இருக்கேன்" என்றான் வேலு. முத்துமணி, சிந்தாவிடம், கங்காவைப் பற்றிச் சொல்லவும், ஒரு பெருமூச்சோடு ஐந்து ஆண்டுகளுக்கு முன், கங்காவின் உடல்நிலை குறித்து ஒரு டாக்டர் சொன்னது நினைவில் வந்தது. அதில் தவறான முரட்டுச் சிகிச்சை முறையால் கங்காவின் கருப்பை மோசமாகப் பாதிக்கப்பட்டு இருப்பதும், மேலும் கருத்தரிக்க வாய்ப்பு இல்லாததையும் சொன்னவர், சில மருந்துகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும் எனவும், பின்னால் கர்ப்பப்பை சம்மந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது எனவும் அறிவுறுத்தியிருந்தார். அது தான் தற்போது வேலையைக் காட்டுகிறது என உணர்ந்த சிந்தா, 'பெரியம்மா, இதை எப்படித் தாங்குவாகன்னு தெரியலை. ஆத்தா நீ தான் அவுகளுக்கு சக்தி கொடுக்கனும்'என வேண்டிக் கொண்டாள். இரவு, இரண்டாம் நாள் கூத்தில் இன்னிசை, ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். குமரனின் குடும்பமும் அன்று அங்குத் தங்கி திருவிழாவில் கலந்து கொண்டனர். குமரனையும், முத்துவையும் சேர்த்து வைத்துப் பார்க்க, ஊர் மக்கள் சுவாரஸ்யம் காட்ட, முத்து சிந்தாவின் பின் மறைந்து கொண்டாள். குமரன் பெற்றவர்களோடு அமர்ந்து பார்க்க, ரகசிய பார்வை பரிமாற்றங்களும், மற்றவர் கேலியும் கிண்டலுமாகவே பொழுது கழிந்தது. கச்சேரி ஆரம்பித்த ஒருமணி நேரத்தில் பெருமாயி சிந்தாவை நோக்கி ஓடிவந்தார். " சிந்தா என் மகனை காப்பாத்து, நீ விட்ட சாபமும் பலிச்சிடுச்சு. அவன் பயமும் நிசமாயிடுச்சு . வேடிக்கை வினையில கொண்டாந்து விட்டுருச்சு" என வரிசையாக அடுக்கவும், " அத்தை என்ன ஆச்சுன்னு சொல்லு" எனச் சிந்தா நிதானமாககேட்டாள். தன் மகனைப் பாம்பு தீண்டிய விவரத்தைச் சொல்லவும், நொடியும் தாமதிக்காது, வீட்டுக்குக் காவலாக இருந்த அப்பா அய்யனாரை அழைத்து மூலிகை மருந்துகளை எடுத்து வரச் சொல்லி விட்டு , கணவனோடு பெருமாயி வீட்டுக்கு விரைந்தாள் சிந்தா. இன்றும், சோமன் அதே போல் மல்லாக்க கிடக்க, அவனைக் கண்ட நொடியில் அன்றைய தினத்தின் ஞாபகத்தில் அவளின் உடல் விறைத்தது. வேலு ,சிந்தாவை தேற்றி இயல்புக்குக் கொண்டு வர, அதற்குள் அய்யனாரும் மூலிகையோடு வர, சிந்தா தெய்வங்களை வேண்டிக் கொண்டு, பாம்புக் கடிக்கான முதலுதவி சிகிச்சைகளைச் செய்தாள். இவளைப் பார்த்த சோமன், கையெடுத்துக் கும்பிட்டு , கண்ணீர் விட்டான். "உனக்கு ஒன்னும் ஆகாது, தைரியமா இரு" என அவனுக்கு நம்பிக்கை தந்தவள், "மச்சான், அந்தக் கம்போண்டருக்கு போன் போடு, அத்தை இவுகளோட மானாமதுரைக்குக் கூட்டிட்டு போ, உசிருக்கு ஆபத்து இருக்காது, இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் வச்சு பார்த்துட்டு வா" எனச் சொல்லி அனுப்பிவிட்டாள் . பின்னர் வேலுவே தனது டாட்டா ஏஸ் வண்டியை எடுத்துவர, சோமனை அவன் உறவினரோடு வண்டியில் பின்னால் ஏற்றி , மானாமதுரை மருத்துவமனையில் சேர்த்து விட்டு வந்தான். சிந்தாவின் முதலுதவியில் சோமன் பிழைத்தாலும், பாம்புக் கடி சதை வரை பரவியிருக்க, காலின் செயல் திறன் பாதிக்கப் படும் எனச் சிந்தா கணித்தாள் . மருத்துவரும் அதையே சொல்ல மூன்று நாள் அங்கேயே இருந்து மருத்துவம் பார்ப்பது எனப் பெருமாயி முடிவெடுத்தார். விஷய மறிந்த சோமனின் கூட்டாளிகள் வருவதும் போவதுமாக இருந்தது. தான் எத்தனை கெடுதல் செய்தும், தன் உயிரைக் காத்த சிந்தாவை மனதில் நன்றியோடு நினைத்தவன், சேட்டு அவளை வேறெதுவும் செய்துவிடக் கூடாதே எனக் கவலைப் பட்டு , தன ஆட்களிடம் விசாரிக்கவும் செய்தான்.
இன்று காலைப் பொழுது, முதல் ஊருக்குள் சோமனைப் பாம்பு கடித்ததும், சிந்தா அவனைக் காப்பாற்றியதுமே பேச்சாக இருந்தது. மண்குதிரைகளை அய்யனாரிடம் காணிக்கையாக அர்ப்பணித்தவர்கள், தப்பு செய்தவருக்கு அவன் தந்த தண்டனையை எண்ணி பயபக்தியோடே வணங்கினர். அன்று மாலைப் பொழுதிலிருந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள், காலை முதல் ஆச்சாரமாகத் தலை முழுகி விரதமிருந்து , காவல் தெய்வங்களை நினைத்து கோழியடித்து, உணவு சமைத்து, இட்லி, பணியாரம்,எனப் புதிதாக வாங்கிய மண் அடுக்குச் சட்டிகளில் நிறைத்து, மேலிருக்கும் சட்டியில், தேங்காய் பழமும், அதற்கும் மேல் விளக்கும் வைத்துச் சுமந்து சென்றனர். சிந்தா வீட்டில் அக்காளும் தங்கையுமாக, மூன்று, மூன்று பானை அடுக்குகளைச் சுமந்து வந்தனர். கந்தனின் குடும்பம் அய்யன் கோவிலுக்கு அருகிலும், ஊருக்குள்ளும் கடை விரித்திருந்தனர். மக்கள் அடுக்குப் பானையையும், குழந்தை பொம்மை, ஆடு, மாடு , அய்யனார் வேட்டைக்குப் போகும் போது உடன் வரும் நாய் ஆகியவற்றை மண்ணால் உருவங்களாகச் செய்து வைத்திருந்தனர். கிராம மக்கள் அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ற உருவங்களை வாங்கி அய்யனார் காணிக்கையாகச் செலுத்தினர்.

பெரிய வீட்டில் கங்கா சமாளித்துக் கொண்டு நடமாடித் திரிய, அவர்கள் வீட்டிலிருந்தும் புதிய மண்சட்டிகளில் அய்யனாருக்குப் படைக்கவென மூன்று சட்டிகளில் ராஜியம்மாள் நிரப்பியிருந்தார். ஆனால் மீனாளுக்கும் சரி, அவருக்கும் சரி அவ்வளவு தூரம் மண் சட்டிகளைச் சுமந்து செல்வது இயலாத காரியம். அதனால் தன் மகள்கள் இருவரையும் மீனாவுக்குத் துணைக்குச் செல்லச் சொன்னார். ராஜியம்மாளின் மற்றொரு ஓரகத்தி, மகேஷின் அம்மா ஆகியோரையும் சேர்ந்து செல்லச் சொன்னவர், தான் சிவநேசனோடு பின்னால் காரில் வருவதாகச் சொல்லியிருந்தார். கங்காவுக்கு முதலில் இந்தத் திருவிழாவில் கலந்து கொள்ள விருப்பமில்லாமல் இருந்தது. " ஆத்தா இல்லை, நான் சாமிக்கு நேந்துருக்கேன். நீயும் மாப்பிள்ளையுமா போயி ஒரு குழந்தை பொம்மை வாங்கி வச்சிட்டு வாங்க. அடுத்த வருஷம் உங்க வீட்டுக்கு வாரிசு வந்துரும்" என ராஜியம்மாள் வற்புறுத்த, எரிச்சலாக மறுத்தவள், தன் மாமியார் வேதாவும் சேர்ந்து சொல்லவும் மறுக்க இயலாமல் போனது. வரிசையாகப் பெண்கள் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு, அவர்கள் வீட்டுக்கு வந்த உறவினர் பெண்களோடு சேர்ந்து மண் சட்டி சுமந்தபடி அய்யனார் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். சிந்தாவும், முத்துவும் ராக்காயியோடு நடந்து வந்து கொண்டிருக்க, அய்யனார் பேரன் பேத்திகளை வைத்துக் கொண்டார். இவர்கள் நடந்து பெரிய வீட்டின் அருகில் வரவும், மீனாளோடு மற்றவர் வீட்டை விட்டு வரவும் சரியாக இருந்தது. பெரிய வீட்டுப் பெண்கள், அக்காள் தங்கையை முறைக்க, மீனாளும், மகேஷும் மட்டுமே ரகசியமாக இவர்களோடு கண்ணால் பேசிக் கொண்டனர். மரியமும், அமுதாவும் சோமசுந்தரத்தோடு வந்து இணைந்தவர்கள், மருமகள் சட்டி சுமந்து வருவதைப் பார்க்கவும் மகிழ்ச்சியடைந்தனர். இரண்டு வீட்டுக்கும் நடக்கும் போது இருந்த இடை வெளியை இவர்கள் நிரப்பினர். எனவே பார்வைக்கு ஒரே குடும்பம் போல் தெரிந்தது. எல்லாருமாகச் சூரியன் இன்னும் மறையாத அந்தப் பொன்மாலைப் பொழுதில் அய்யனார் கோவிலைச் சென்றடைந்தனர். அய்யனார் கோவில் ஊருக்கு ஒதுக்குப்புறமாய்க் கண்மாய்க்கு அருகில் இருக்கும், கோவிலில் காணிக்கை வரும் குதிரைகளை நிறுத்த வசதியாக மருதமரம், அரசமரம் என மரங்கள் கோவிலுக்குப் பின்னால் நிற்கும், அதில் தான் அய்யன் குதிரையை நிறுத்தி வைத்திருந்தனர். மற்ற உருவங்களையும் அங்குத் தான் கொண்டு வந்து வைப்பார்கள். நாளை மாட்டை அவிழ்த்து விட்டுப் பிடிக்கும் மஞ்சுவிரட்டு எனும் வீர விளையாட்டுகளும், முறைப் பையன், பெண்கள் ஊற்றி விளையாடும் மஞ்சள் நீராடும் விளையாட்டும் உள்ளது. அதோடு திருவிழாவை முடிப்பார்கள். அதற்காக, பக்கத்து ஊர்களிலிருந்து காளை மாடுகள் சிலவை வந்து இறங்கியிருந்தன. இரண்டு குடும்பங்களும் அய்யனார் கோவிலில் வந்து சேர்ந்திருக்க, வேலுவும் குமரனும் மட்டும் மானாமதுரை காவல் நிலையம் வரை சென்றிருந்தனர். சற்று முன் காவல்நிலையத்திலிருந்து மாட்டுக் கொட்டகை தீ வைத்த சம்பவத்தில் ஒரு துப்புக் கிடைத்ததாகத் தெரியவும் இருவரும் யார் அந்த எதிரி எனத் தெரிந்து கொள்ளச் சென்றிருந்தனர். இருவரும் மானாமதுரை போலீஸ் ஸ்டசனில் போலீஸ் பிடித்து வைத்திருந்தவனைப் பார்க்கச் செல்ல, முதல் நாள் இரவில் செத்துப் பிழைத்திருந்த சோமன் வேலுவுக்குப் போன் செய்தான். " வேலு அண்ணன், சிந்தா உசிருக்கு ஆபத்து. மஞ்சு விரட்டு மாட்டில ஒன்றை ரேக்கி விட்டு சிந்தாவை கொல்ல திட்டம் போட்டாருக்காகச் சீக்கிரம் போயி காப்பாத்து" எனக் கதறிக் கொண்டு போன் செய்ய, வேலு விக்கித்து நின்றான். அய்யனார் கோவில் வளாகத்திலேயே சிந்தாவுக்கு ஆபத்து வருமா , அவளைக் காக்காய் போவது யார். பொறுத்திருந்து பார்ப்போம்.