Saturday, 11 September 2021

சிந்தா-ஜீவநதியவள் -25

 சிந்தா-ஜீவநதியவள் -25

குதிரையெடுப்புத் திருவிழாவில் காலையில் மண்குதிரைகளைப் பொட்டலில் கொண்டு சேர்த்திருந்த மக்கள், குதிரை கூத்து பார்க்க வேண்டும் என்ற ஐதீகத்தின் படி அன்றைய இரவு வள்ளி திருமணம் நாடகத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஊரெங்கும் மைக் செட் கட்டியிருந்ததால் நாடக வசனம், ஆர்மோனியம், தபலா, கலைஞர்களின் கணீர் குரல் எல்லாம் எட்டுத்திக்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

சிந்தா , உள்ளுணர்வு தூண்ட வீட்டுக்குப் போகவேண்டும் எனச் சொல்லவும், சந்தேகித்த வேலு , குமரன் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சிகள் வழியே வீட்டைப் பார்க்க, புழக்கடை பக்கம், மாட்டுக் கொட்டகை தீ பிடித்து எரிவது தெரிந்தது. யாரோ செய்த செய்கை என யோசித்தவன், சட்டென முடிவெடுத்து, சிந்தாவை வள்ளி வீட்டில் விட்டு விட்டு, கந்தனை உடன் அழைத்துச் சென்றான்.

வேலுவும் கந்தனும் பறந்த அடுத்தச் சில நிமிடங்களில் குமரனும் சிவநேசனும் வண்டியில் செல்ல, பின்னாடியே வந்த சுப்புவோடு சிந்தா வேகமாக ஏறிச் சென்று இறங்கினாள்.

சிந்தா வள்ளி வீட்டிலிருந்து கிளம்பும் போதே, கதிரருவாளோடு போனவள், ஆண்கள் குடத்திலும் வாளியிலும் தண்ணீரை அள்ளி ஊற்றிக் கொண்டிருந்த மாட்டுக் கொட்டத்தை நோக்கி ஓடினாள்.

"சிந்தாமணி நெருப்பு உள்ள போகாத" என்ற வேலுவின் குரல் அவளுக்குக் கேட்கவே இல்லை, மாறாக வெகு நேரமாகவே அவர்கள் பசு அழைக்கும் "மா " என்ற சத்தமே அவள் காதுகளில் எதிரொலிக்க, தீ தன்னைத் தாக்கும் என்பதைப்பற்றியெல்லாம் கவலையின்றி, பசு, கன்றுகளைக் காக்கவேண்டும் என்ற எண்ணம் ஒன்றே சிந்தையை நிறைக்க, சிந்தா கண்ணீர் மல்க தன் உயிரைப் பற்றியும் கவலைப் படாமல் உள்ளே ஓடியவள், மாடு கட்டப்பட்டிருந்த கயிற்றைக் கையில் வைத்திருந்த அருவாள் கொண்டு ஒரே வெட்டாக வெட்டி ஒரு மாட்டின் கயிற்றை அறுத்து விட்டு ,வெளியே ஓட்டி விட்டாள். அந்தப் பசுச் சிந்தாவின் சமிக்ஞையைப் புரிந்து கொண்டு கொட்டகையை விட்டு வெளியே ஓடியது. வேலு, அவள் கையிலிருந்த அருவாளை வாங்கி மற்ற மூன்று மாடு, கன்றுகளின் கயிறுகளையும் அறுத்து விட்டான். இவ்வளவு நேரம் மருகி தவித்துக் கத்திய மாடுகள் வெளியே வயல் வெளிக்கு ஓடின.

பற்றத் தொடங்கியிருந்த தீ, ஒரு பக்கம் அணையத் தொடங்கியது. மேலும் மேலும் அவர்கள் வீட்டில் தொட்டியிலிருந்த நீரை வார்த்து தீயை முற்றிலுமாக அணைத்த பின்னே ஆசுவாசமடைந்தனர்.

சிந்தா மின் விளக்கின் ஒளியில் தன் மாடுகளை அங்கமங்கமாகத் தடவிக் கொடுக்க அவையும் அவளிடம் பேசின.

" இந்த வாயில்லா ஜீவனைக் கொல்றதுக்கு, இவங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு" என அவள் கண்ணீர் விடும் போது, விசயமறிந்து பேரனோடு வந்த அய்யனாரும் மாடு கன்றுகளைத் தான் முதலில் தடவிப் பார்த்தார்.

வேலு அலைபேசி செயலியில் பார்த்த போது, யாரோ தீப்பந்தத்தை வைத்து விட்டுக் கிளம்பி ஓடுவது தெரிந்தது. அவன் பார்க்கும் போது கொல்லைப்புறம் மாட்டுக் கொட்டகையில் இரண்டு புறம் தீயை வைத்திருந்தனர். வேலு வேறு ஆட்களும் இருக்கக்கூடும் என்று தான் சிந்தாவை வள்ளி வீட்டில் விட்டு வந்தான். முன் கூரையில் மட்டும் மண்ணென்னையை ஊற்றிப் பற்ற வைத்திருப்பார்கள் போலும் அவை மடமடவெனக் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து இருந்தது. கந்தன் ஒரு பக்கத்தையும், வேலு மறு பக்கத்தையும் தண்ணீர் ஊற்றி அணைத்துக் கொண்டிருக்க, குமரனும், சிவநேசனும் வந்து சேர்ந்தனர். அப்போது தான் சிந்தா உள்ளே புகுந்து மாடுகளை அவிழ்த்து விட்டாள்.

"இன்னும் என்னென்ன சோதனையை அனுபவிக்கனுமோ" என அய்யனார் அழுது புலம்ப, சிந்தா அப்பாவைத் தேற்றினாள். குமரன் சிசிடிவி போட்டேஜை ஓட விட்டுப் பார்க்க, அந்த ஆட்களைத் தங்கள் ஊரில் பார்த்ததே இல்லை, என மற்றவர் உறுதிப் படுத்தினர்.

இது யாரோட வேலையாக இருக்கும் என அண்ணன் தம்பிகளே கங்காவையும், சோமனையும் யோசிக்க, சிந்தா, " இல்லை இது அவுங்க இரண்டு பேருமே இல்லை. புதுசா யாரோ விளையாடுறாக. " எனத் தீர்க்கமாகச் சொன்னாள் சிந்தா.

எதற்கும் இருக்கட்டும் எனச் சுப்புவும், கந்தனும் பெருமாயி வீட்டை நோட்டமிட, ஊரே கூத்துக் கொட்டகையிலிருக்க, அங்கே சோமன் புத்தி பேதலித்தது போல் ஏதோ பிணாத்திக் கொண்டிருந்தான்.பெருமாயி ," இரவைக்கெல்லாம், இப்படிப் புலம்பறதுக்கு, செஞ்ச தப்புக்கு மனசு திருந்தி, சிந்தா கிட்ட மன்னிப்பு கேட்டு திருநீரு வாங்கிக்க. எல்லாம் சரியா போயிடும்" என மகனுக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார்.

குமரனும், சிவநேசனும் வந்து கங்காவைப் பார்க்கும் போது அவள் வயிற்று வலியில் சுருண்டு படுத்திருந்தாள். ராஜியம்மாள் பக்கத்திலிருந்தார். " மூணு மணி நேரமா சுருண்டு கிடக்கா. நானும் கை வைத்தியமெல்லாம் செஞ்சுட்டேன். சிந்தாவைக் கூட்டிட்டு வரலாம்னு சொன்னா. வேண்டாம்னு கத்துறா" எனவும்.

" அப்ப டாக்கர்கிட்டையாவது கூட்டிட்டுப் போகலாம். " எனக் குமரன் தூக்க வரவும் அதற்கும் மறுத்தாள்.

திரும்பக் குமரன் மட்டும் சிந்தா வீட்டுக்கு வந்து விவரம் சொன்னவன், திருவிழா நடப்பதால் ரோந்துக்கு வந்த போலீஸை அழைத்து வந்து கம்ப்ளைண்ட் செய்தான்.

விடிய விடிய மேலப்புங்குடி கிராமமே வள்ளித் திருணத்தில் லயித்திருந்து விட்டு வீடுகளுக்குக் கிளம்பிய நேரம் சிந்தா வீட்டில் பற்றிய தீ வதந்தீயாக ஊரிலும் பரவியிருந்தது. ஆளாளுக்கு அதனைப் பார்வையிட வரவும், போலீஸ் கம்ப்ளைன்ட் போட்டோக்கள் எடுத்து விட்டு, முற்பகல் வேலையிலேயே , குமரனும், வேலுவுமாக அந்தச் செட்டையே அடையாளம் தெரியாதபடி மாற்றி அமைத்திருந்தனர் . ஏனெனில் அதற்குள் இதைப் பற்றி ஊருக்குள் ஒரு விதமாகப் பேச ஆரம்பித்திருந்தனர்.

சிந்தா, அன்று பஞ்சாயத்தில் சோமனிடம் சவால் விடும் போது, தான் சொல்வது சத்தியமெனில் அவனுக்குத் தண்டனை வரட்டும், நான் தப்பெனில் எனக்குப் பிரச்சனை வரட்டும், எனச் சொல்லியிருந்தாள். அதனை வைத்தே சிந்தாவுக்குக் கடவுள் தந்த தண்டனை எனச் சித்தரிக்கும் விதமாகவே தீயை வைத்திருந்தனர். அதுவும் எல்லாரும் கூத்துக் கொட்டகையில் இருக்கும் போது, இதனைச் செய்து உள்ளனர்.

ஊர் மக்கள், ஆட்டு மந்தை போல் ஒரே பக்கம் சாய்பவர்கள், இங்கும் கண்டதே காட்சி கொண்டதே கோலம் எனச் சிந்தாவைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர். அதனை நிறுத்துவதற்காகவே, தீ பிடித்துக் கருகிய கூரையின் தோற்றத்தையே உடனே மாற்ற வேண்டும் என முடிவெடுத்து கூரை செட், நீல வண்ண சீட் போட்டு முன்னைக்கும் நன்றாக மாறியிருந்தது.

இது முடிந்து குமரனுக்கு அவன் தந்தையிடமிருந்து, தான் கிளம்பி வருவதாகப் போன் வந்தது. சிந்தா அவசரமாக முத்துவை தயார் செய்தாள். முத்து, " அக்கா, இந்த நேரத்தில் இது அவசியமா" எனக் கேள்வி எழுப்பவும், அவளை அடக்கி, " இது அவசியம் தான். எங்க வீட்டு சின்னக்குட்டியை, சிங்கப்பூர்லருந்து வந்து, பெரிய வீட்டு ஆளுங்க பொண்ணுக் கேக்குறாக, இதை விட என்ன சந்தோஷம் வேணும்" எனச் சிந்தா முகம் கொள்ளாத மகிழ்வோடு பேசவும், அது தொற்றாக முத்துவையும் பற்றியது.

" முத்து, இன்னைக்கு உன் மாப்பிள்ளை உன்னைப் பார்த்தவுடனே அசந்து போகனும். அது மாதிரி தயாராகனும்" எனச் சொல்லவும். சிந்தா குமரனை மாப்பிள்ளை என்று சொன்னதிலேயே, முத்துவுக்கு வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறந்தது.

வேலு , குமரனைக் கட்டாயப்படுத்தி, "மாப்பிள்ளை மாதிரி கிளம்பி வா. நான் எல்லா ஏற்பாட்டையும் செஞ்சு வைக்கிறேன்" என அனுப்பி வைத்தான்.

சிந்தா வீட்டு மாட்டுக் கொட்டகை பற்றி எரிந்த விசயம் கேட்டு, கிழங்காட்டூரிலிருந்து அவர்கள் மாமா வீட்டு ஆட்கள் விசாரிக்க வர, தன்னைச் சமாளித்துக் கொண்டு வள்ளியும் சிந்தா வீட்டுக்கு வர, ஆண்டிச்சி கிழவியும் வந்து டேரா போட்டது. 

எல்லாருமே கருகிய மாட்டுக் கொட்டகையைப் பார்க்க வந்த இடத்தில் விழாக் கோலம் பூண்ட வீட்டைத் தான் பார்த்தனர். அய்யனார் மட்டும் தன் மாடு கன்றுகளைத் தென்வயலில் ஒரு மூலையில் கட்டத் தேவையான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, சுப்பு ஆனந்த அதிர்ச்சியோடு வேலையைச் செய்தான். சத்தியமூர்த்திக் கூட அம்மா ஏவிய வேலைகளைச் சமத்தாய்ச் செய்ய, ராக்காயி கிழவி வீட்டு வாசலை அடைத்துக் கோலம் வரைந்து தள்ளியது. 

இப்போதெல்லாம் மருமகள்கள் மீதிருந்த வெறுப்பு மாறி அவள் மீது தனி அக்கறை வந்திருந்தது. மகனும் அவ்வப்போது அம்மாவைக் கவனித்துக் கொண்டு தங்கைகளுக்கும் வேண்டியதைச் செய்ய, ராக்காயி மிச்ச காலத்தைச் சிந்தாவிடம் ஓட்டலாமா எனக் கணக்குப் போட ஆரம்பித்திருந்தது. பெரிய வீட்டிலிருந்து சம்பந்தமே பேச வரப் போகிறார்கள் என வாயைப் பிளந்து நின்றது.

குமரனின் தந்தை, சித்தி, தங்கையோடு, சிவநேசனும், மீனாளும், மகள் சிந்துஜாவைத் தூக்கிக் கொண்டு, தாம்பூலத் தட்டோடு சிந்தா வீடு நோக்கி வர ஊரே அதிசயமாகப் பார்த்தது.

சிவநேசன் தந்தையிடம் சென்று குமரனுக்குப் பெண் கேட்க மீனாவை அழைத்துக் கொண்டு அய்யனார் வீட்டுக்கு சித்தப்பாவோடு செல்ல இருப்பதாகச் சொல்லவும் மகாலிங்கம் மௌனமாக இருந்தார். கங்கா வெறுப்பாகப் பார்க்க, இந்த முறை வேதா குதித்தார். ஏண்டி நீயுமா போற" என மகளைக் கேட்கவும்.

" எங்க அத்தை எப்படி மாமா பேச்சுக்குக் கட்டுப் படுறாகளோ, அதே மாதிரி நான் என் அத்தான் பேச்சுக்குக் கட்டு படுறேன். அதோட எனக்கும் அவுகளை எல்லாம் பிடிக்கும். ரொம்ப நல்லவுக. என் கொழுந்தன், எங்களுக்காக எவ்வளவு செய்யுது. நாங்களும் அதுக்குக் கூட நிக்கினமுல்ல" என மீனாள் பெரிதாக வசனம் பேசவும், மகாலிங்கமே அசந்து தான் போனார்.

" இனி வர்ற காலம் உங்களுது. நீயே முடிவெடுத்துப் பழகு. " என மகனிடம் சொல்லி விட, ராஜியம்மாள், " நேசா கிளம்பு கிளம்பு. எனக்குப் போட்டோ புடிச்சிட்டு வந்து காட்டு" என அனுப்பி வைத்திருந்தார். இதோ சிவநேசன் சித்தப்பாவுக்குப் போன் செய்து, அவர் வரும் நேரம், அவனும் அவரோடு முறையாகக் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டான். அவருக்கும் பெருமையாகவே இருந்தது.

சிந்தா வீட்டு வாசலுக்கு வந்தவர்களை, அங்கேயே, சிந்தாவும், வேலுவுமாக வரவேற்றனர். " வாங்கய்யா, வாங்கம்மா நேற்று கூட்டத்தில் சரியா பார்க்க முடியலை" என்றவள், சிவநேசன், மீனாளிடம் திரும்பி, " நீங்க இரண்டு பேரும் வந்திருக்கிறதே, எனக்கு அய்யாவும், அம்மாவும் வந்த மாதிரி இருக்கு" என அவர்கள் வராத குறையை நிறையாக மாற்றினாள்.

சோம சுந்தரமும் மரியமும் தலையசைத்துச் சிரித்தவர்கள், தங்கள் மகள் அமுதாவையும் அறிமுகப் படுத்த, " நான் அண்ணியைப் பார்க்கலாமா" எனச் சுவாதீனமாகச் சிந்தாவின் வீட்டுக்குள் சென்றது.

சிந்தா அங்கிருந்த தாய் மாமனை சோமசுந்தரத்திற்கு அறிமுகம் செய்து வைத்தாள். " ஆமாம், உங்க அப்பா எங்கம்மா " எனக் கேட்கவும். நாக்கைக் கடித்த சிந்தா, வேலுவின் அருகே சென்று, " நேத்து நடந்த கலாட்டால, அப்பாட்ட சொல்லவே இல்லை" எனவும். முழித்த வேலு, " ஆமாம் புள்ளை. சரி விடு, பி எஸ். வீரப்பா, என்ன சொல்லுவார்னு பார்த்திடுவோம். " என்றவன் சுப்புவை மாமனாரை அழைத்து வரச் சொன்னான்.

தென் வயலிலிருந்து அய்யனாரும், குமரனுமாக வந்து கொண்டிருந்தனர். குமரன், வழக்கமான ஜீன்ஸ் டி சர்டில் இல்லாமல், நேற்று குதிரையெடுப்பின் போது அணிந்திருந்ததையும் விடவே அந்தஸ்தாக மரியம் தந்திருந்த பட்டு வேஷ்டி, வண்ணச் சட்டையில் புது மாப்பிள்ளையாகவே வந்தான்.

மாடு கன்றுகளை, தென்வயலின் ஒரு மூலையில் கட்டி அதன் தேவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அய்யனாரிடம் வந்த குமரன், அவரை,"மாமா " என அழைக்கவும், வேலு தான் என நினைத்தவர், " என்ன மாப்பிள்ளை" எனத் திரும்பியவர், குமரன் நிற்பதைக் கண்டு அதிர்ந்தவர், தன் காதில் தவறாக விழுந்திருக்கும் என எண்ணி " ஐயா" என வந்தார்.

“இனிமே , ஐயா ன்னு இல்லை, என்னையும் மாப்பிளைனே உரிமையா சொல்லலாம் நீங்க. எனக்கும் அது தான் வேணும்” என அவன் பூடகமாகச் சொல்லவும், அதிர்ந்த அய்யனார், “ஐயா , நீங்க என்ன சொல்ல வாரீகனு விளங்களையே “ என்றார்.


எங்க அப்பா, உங்க சின்ன மகள் முத்துவை , எனக்கு பொண்ணு கேட்டு  உங்க வீட்டுக்கு வந்திருக்கார், வந்து சம்மதம் சொல்லுங்க” என அவன் தீர்மானமாகவே சொல்லவும், “ஐயா , ஊர் உலக நடப்பு எல்லாம் புரிஞ்சு தான் பேசுறிகளா, இது சரியா வராதுங்கய்யா “ என அவர் அஞ்சவும், குமரன் தன் பாணியில் பேசியே அவரை ஒரு வகையில் தயார் செய்து அழைத்து வந்தான். 

வீட்டில் கூட்டத்தைப் பார்க்கவும் வேக நடையோடு வந்தவர், " ஐயா வாங்க, வாங்க" எனத் துண்டை கக்கத்தில் வைத்துக் கொண்டு, குனிந்தபடி வந்து சோமசுந்தரத்தை வரவேற்கவும், அவர் கும்பிட்ட கையை வலக் கையால் பற்றி இடது கையால் அவர் தோளில் கை போட்டவராகப் பேசிய குமரனின் தந்தை , "நீ இன்னும் மாறவே இல்லை. அப்படியே தான் இருக்க" என அருகிலிருந்த சேரில் அய்யனாரை அமர்த்திக் கொண்டவர், மகனை தனக்கும் மனைவிக்கு மிடையில் அமர்த்திக் கொண்டார்.

அய்யனாரோடு பழங்கதை எல்லாம் பேசி, " ஒரு தடவை கண்மாயில் டைவ் அடிக்கையில் காலை உடைச்சுக்கிட்டேன். அங்கருந்து எங்க வீடு வரைக்கும் என்னை முதுகில் தூக்கிட்டு வந்தாப்ல" எனச் சிந்தாவிடம் கதை பேசிக் கொண்டிருக்கவும்.

" அய்யா, கதை பேசவே சிங்கப்பூர்லருந்து வந்தீகளோ" என ஆண்டிச்சி குசும்பாகக் கேட்கவும், அவரை முறைத்தவர். " ஆக்சுவலா, வர்ற ப்ளானே இல்லை. என் மருமகள் தான், ஊரைப் பத்தி பேசிப் பேசி எனக்கு இங்க வர்ற ஆசையைத் தூண்டி விட்டுருச்சு. வீடியோ கால்ல பார்த்தது தான். நேத்தும் சரியா பார்க்கலை. மருமகளைக் கூட்டிட்டு வாம்மா" எனச் சிந்தாவைப் பார்த்துச் சொல்லவும், அவள் உள்ளே சென்று அலங்காரமாக முத்துவைக் கூட்டிட்டு வர அய்யனார் நடப்பதைக் கவலையாகவே பார்த்தார்.

" என்னம்மா இது" எனக் கேட்கவும், சிந்தா வேலுவைப் பார்க்க, வேலு, " மாமா, குமரன் நம்ம முத்துவை கல்யாணம் கட்டிக்கனும்னு ஆசை படுறாப்ல. நேத்தே சொல்லிட்டாப்ல. உங்கள்ட்ட சொல்லத் தான் நேரம் சரியா வாய்க்கலை" எனவும். அவர் குமரனின் தந்தையைப் பார்த்தவர், " ஐயா, சின்னப் புள்ளைங்க, புரியாமல் பேசுது. நீங்களும் அதைக் கேட்டுட்டு வாரீகளே, பெரியய்யாவுக்குத் தான் சங்கடம். அவுகளைச் சங்கடப்படுத்திட்டு இந்தக் கல்யாணம் நடக்கனுமா" எனக் கேட்டார். அய்யனாரின் கேள்வியிலிருந்தே, குமரன் விசயத்தைச் சொல்லி அழைத்து வந்திருப்பது அவர் குடும்பத்துக்குத் தெரிந்தது.

" ஐயா, நான் நிறைய விதத்தில் இவுக இரண்டு பேரையும் சோதிச்சு பார்த்திட்டு, நிறைய யோசனைக்குப் பிறகு தான் சரின்னு முடிவுக்கு வந்தேன். இந்த ஜென்மத்துக்கு என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை, உங்க மகன் தான். அதில எந்த மாத்தமும் இல்லை. பொம்பளைப் புள்ளை பேரு கெட்டுப் போகக் கூடாதுன்னு, குமரன் தம்பி யோசிச்சு , உங்களை வரவழைச்சது எல்லாமே சரி தான். முத்து உங்க வீட்டு மருமகள் தான். நாங்க வாக்கு குடுக்குறோம். நீங்க அச்சாரம் போட்டுருங்க. ஆனால் " எனச் சிந்தா இழுக்கவும். சிவநேசன் முந்திக் கொண்டு, " சிந்தா, அ னா, ஆவன்னா எல்லாம் கிடையாது. சரின்னு வந்தாச்சு. இன்னைக்குப் பரிசம் போட்டுச் சீக்கிரம் ஆவணிலையே கல்யாணத்தை வச்சிருவோம்" என அவசரப் படவும்.

" ஐயா, நீங்க எதுக்கு முந்திக்கிட்டு பேசுறீகன்னு தெரியுது. நான் உங்க வீட்டு ஆளுகளைப் பத்தியே பேசலை. என் கல்யாணம் தான், எங்க அம்மா இல்லாமல் நடந்துச்சு. என் தங்கச்சி கல்யாணமாவது அவுக ஆசிர்வாதத்தோட , அவுக கையால தாலி எடுத்துக் கொடுத்துத் தான் நடக்கனும்" எனவும். ராக்காயி, " செத்தவளை, உசிரோட கொண்டார வித்தையும் உனக்குத் தெரியுமா " என இடக்காகக் கேள்வி எழுப்பினார். மாமியாரை ஒரு பார்வை பார்த்த சிந்தா .

" பத்து மாசம் சுமந்தா தான் அம்மாங்கிறது இல்லை. பசியறிஞ்சு சோறு போடறவுகளும், பாசமா அரவணைச்சவுகளும் அம்மா தான். எங்க ஆத்தா போன நாளிலிருந்து, நானா சமாளிக்கும் வரைக்கும், எங்களை அரவணைச்சு ஆதரிச்சது எங்க பெரியம்மா. ராஜேஸ்வரி அம்மா தான். குமரன் தம்பியும் அவுகளை வச்சு தான் கல்யாணம் கட்டிக்கனுமின்னு நினைப்பாக. இப்ப பரிசம் மட்டும் போடுங்க. பெரியவுக மனசார ஆசீர்வாதம் செய்யும் போது கல்யாணத்தை வச்சுக்கலாம்" என்று சொல்லவும்.

" நானும் இதே முடிவில் தான் சிந்தாக்கா இருந்தேன். பெரியம்மா, பெரியப்பா சம்மதிக்கிற வரை காத்துட்டு இருக்க நான் ரெடி, ஆனால் முத்துவை கோவை கூட்டிட்டுப் போறது, வர்றது இதுக்கெல்லாம் நீங்க அப்ஜக்சன் சொல்லக் கூடாது. " எனக் குமரன் கண்டிசன் போடவும்.

" நீ சரியான ஆளுதான். கல்யாணத்துக்கு முன்னாடியே, பரிசம் போட்ட புள்ளையோட சுத்துறதுக்குச் சபையிலையே அனுமதி கேக்குற பாரு" என வேலு கிண்டல் செய்யவும்.

" ப்ரோ, எனக்குச் சொந்தமானதை நான் பாதுகாப்பா வச்சுக்குறேன், அவ்வளவு தான். எங்க, நீங்க சிந்தாக்காவை தனியா விட்டுடுவீங்களா " என வேலுவை பேச்சில் மடக்கினான் குமரன்.

எளிய முறையில் தனது பெற்றோர் மூலமாகவே முத்துக்குச் சேலையைக் கொடுக்க வைத்து, அவள் உடுத்தி வரவும், மரியம் தந்த அவனது தாய் வடிவழகியின் முகப்பு வைத்த தாலிக் கொடி செயினை மட்டும் தன் முத்தழகியின் கழுத்தில் போட்டுப் பாதி மனைவியாக ஆக்கிக் கொண்டான். ராஜியம்மாள் இந்த நிகழ்வுகளை எல்லாம் அடுப்படியில் வைத்து மகேஷின் போனில் ரகசியமாக நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். கூடவே நின்று எட்டி, எட்டிப் பார்த்த சாமந்தியம்மாளிடம், " ஏண்டி, இந்த முத்து இப்ப என் மகளா, மருமகளா " எனச் சந்தேகம் கேட்டார்.

மகேஷ், " எங்கம்மா வாய்க்கு சக்கரை தான் போடனும். சித்திரைத் திருவிழாவிலேயே இப்படித் தான் ஆகும்னு சொல்லுச்சு. ஆனால் முத்து எனக்கு அண்ணியா வர்றது,எனக்குச் சந்தோஷம் தான்" என குதூகலித்தாள் .

"உன் அண்ணன் தான் நினைச்சதை நடத்திக் காட்டுறானே,   சிந்தாவுக்கு  செஞ்சஅநியாயத்துக்குச்  சின்னவளுக்கு நல்லது செஞ்சாவது , அந்த பெண்பாவத்தை கழுவிக்குவோம்.   உங்க பெரியப்பா எப்ப மனசு மாறுவார்னு பார்ப்போம்." என மகேஷிடம் தனது மனதைப் பகிர்ந்த  ராஜியம்மாள் அந்த நாளுக்காகக் காத்திருந்தார்.

No comments:

Post a Comment