Monday, 6 September 2021

சிந்தா-ஜீவநதியவள் -23

 சிந்தா-ஜீவநதியவள் -23

சித்திரை கரை தண்ணியில

சிறுமழை கொழிக்கும் பண்ணையிலே

உங்க அம்மான் மகனோ

உங்க அயித்த மகனோ

கண்டு சிரிச்சு போறாக.


கண்டு சிரிச்சு போறவுகளை

காம்பு இல்லா வெத்தலை

காம்பு இல்லா பாக்கும்

முள்ளு இல்லா சித்தாடை

மொழி இல்லாத கரும்பு

கொண்டு வரச் சொல்லுங்க.


இத்தனையும் கொண்டு வந்த

அம்மான் மகனுக்கு

பின் கையால் சோறாக்கி

முன்கையால் போட்டுப்

பக்குவமா பந்தி பரிமாறுங்க.

தென்வயலில் புதிதாய் முளை விட்டிருந்த பயிர் குழிகள், துளிர்த்திருந்த மூலிகைச் செடிகளைத் தாண்டி, புதிதாக ஒரு டெண்டும் இறங்கியிருந்தது. வேலி அமைக்கப்பட்டு, ரோட்டிலிருந்து, ட்ராட்டர் முதலான வண்டிகள் வந்து செல்ல ஏதுவாகப் போடப்பட்டிருந்த கேட் வழியாக வந்த அவனது வாகனமும் அதனருகில் சமத்தாக நிற்க, அதனை ஓட்டி வந்தவன் தான் யார் சொல்லுக்கும் அடங்காத காளையாய் கட்டுக்கடங்காத கோபத்தோடு திரிந்தான்.

ஆம் குமரன் அன்று இரவில் பெரிய வீட்டை விட்டு வெளியேறியவன், சண்டமாறுதம் போல் தன் வேலையைக் காட்டத் தொடங்கியிருந்தான். முதல் அடி கங்காவுக்குத் தான் என்பதில் தெளிவாக இருந்தவன், அவர்கள் நண்பர்கள் வந்த போது தங்கிய ஹோட்டலில் தங்கியபடி அலைபேசியில் சிங்கப்பூரிலிருக்கும் அப்பாவோடு பேசி , அவரையும் சம்மதிக்க வைத்து, கேசவனின் தொழிலில் தாங்கள் செய்திருக்கும் முதலீட்டை வாபஸ் பெறுவதாகவும், அதன் பங்குகளைக் கம்பெனி வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம், இல்லையேல் வெளியே விற்கப்படும் என்பதை அறிவித்தான். இதில் அடுத்த நாள் மாலையே வேதாவின் குடும்பம் அலறிக் கொண்டு மேலப்பூங்குடி வந்து சேர்ந்தது.

அண்ணன் சிவநேசன் சமாதானம் பேச வரும் முன் , வேலுவையும், சுப்புவையும் போனில் அழைத்தவன் தனது காரில் கொண்டு வந்த பொருட்களை அவர்கள் உதவியுடன் ஒரு டென்ட்டைப் போட்டவன், அதற்குள் அவன் தங்குவதற்கான வசதிகளைச் செய்து கொண்டான்.

வேலையைச் செய்து கொண்டே, குமரனை நோட்டம் விட்ட வேலு, " அது சரி, அண்ணனும், தம்பியும் சேர்ந்தே வருவீக. இப்ப என்ன தனிக்குடித்தனம். நேத்து எதுவும் பஞ்சாயத்து ஆயிடுச்சா" என விசாரிக்கவும், திரும்பிக் கொண்டு சென்றவனை, ஓரிடத்தில் நிறுத்தி வலுக்கட்டாயமாக விசாரிக்கவும், அவன் சுப்புவைப் பார்க்க, "அடேய் சுப்பு, உங்க அக்காகிட்ட குடிக்க மோர் வாங்கியா" என அனுப்பி விட்டான்.


" இப்பச் சொல்லும்" என வசதியாக மண்ணில் அமர்ந்து வேலு கேட்கவும், கங்கா பேசியதை ஓட விட, அதைக் கேட்டிருந்த வேலு, " அடிச் சண்டாளப் பாவி, " எனக் கங்காவை திட்டியவன், "யோவ் குமரா, முத விசயம், என் பொண்டாட்டியை, அம்புட்டு சீக்கிரமா எவனாலையும் டச் பண்ண முடியாது. அதை நான் அனுபவத்தில தெரிஞ்சிக்கிட்டேன். அதுவும் அவள் இன்னைக்கு உட்கார்ந்து இருக்கிற திணுசுல நானே தெறிச்சு ஓடியாந்துட்டேன். அடுத்து, அசம்பாவிதமா எது நடந்தாலும், நான் சின்னக்குட்டியை என்ன யாரையுமே கட்ட மாட்டேன். நீ தைரியமா இரு. எங்க அப்பன் ரெண்டாம்தாரம் கட்டி நான் பட்ட அவதி பத்தாதா, என் மாமனை மாதிரி தான் இருப்பேன்" என்றவன்.

" அது சரி, உங்க அக்கா சொன்னதுக்கு, அந்தப் பொம்பளையை முறைக்காம என்னைய முறைக்கிறீக" என்றவன் ஏதோ புரிந்தவனாக, " அப்ப உன் மேட்டர் அவுட்டா. அதுக்குத் தான் தனிக்குடித்தனமா. துரத்தி விட்டாகளா, நீயா வந்தியா" என அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பவும்.

" நானா தான் வந்தேன், ஆனால் " என வார்த்தைகளை முழுங்கவும் வேலு உன்னிப்பாய் கவனிக்க, " இப்போதைக்கு வீட்டில தெரிஞ்சிடுச்சு. ஆனால் கங்காவே வெளிய சொல்ல மாட்டா. ஏன்னா வெளியே தெரிஞ்ச அடுத்த நிமிஷம், நான் முத்துக் கழுத்தில் தாலியைக் கட்டிடுவேன்னு தெரியும். அதுனால சொல்ல மாட்டா' என்ற பின்னும் அவன் முகம் மிகவும் வாடியிருந்தது.

" பெரியய்யா, மகளுக்குத் தண்டனை கொடுக்கலைனு யோசிக்கிறீகளா. அதெல்லாம் செய்ய மாட்டாக. சிந்தா சொன்ன மாதிரி சாமி கையில விட்டுடுவோம்" என உடன் பிறந்தவன் போல் வேலு, குமரனைத் தேற்றவும்.

" அது இல்லை ப்ரோ. பெரியப்பா எதுவும் செய்யமாட்டார்ங்கிறது தான் தெரிஞ்ச விசயமாச்சே. கங்காவை நான் பார்த்துக்குவேன். பஞ்சாயத்தில அவ பேரை எடுக்காதன்ன சொன்னதுக்கு ,இவள் என்னை, அப்படிப் பேசுறா" என முகம் கூம்பிப் போய்ச் சொன்னவனைப் பார்த்த  வேலு சிரித்தான். 

" யாரு சின்னக்குட்டியா. பின்னே அது கொஞ்சவா செய்யும், என்கிட்டையே சண்டை கட்டுச்சு, அது பொல்லாதது தான் . பார்க்கத் தான் ஆள் இத்துனுண்டு ஆனால் விவகாரமா பேசும்" எனவும் குமரன் வேலுவை முறைத்தான்.

" என்னா லுக்கு, என் மச்சினியை எனக்குத் தான நல்லாத் தெரியும். இத்தனை காலம் ஒத்த பயலையும் அந்தப் புள்ளைக்கிட்ட வாலாட்ட விடாம ,எம்புட்டுச் சூதானமா பார்த்துக்கிட்டேன். நீ தான் என்கிட்ட இருந்து தப்பிச்ச ஒரே ஆளு " எனத் தாடையைத் தேய்க்கவும். தன்னை மறந்து சிரித்த குமரன், " இவ்வளவு நாள் என் பொண்டாட்டியை பார்த்துக்கிட்டதுக்குத் தாங்க்ஸ் ப்ரோ. இன்னும் கொஞ்ச நாள், நான் கடத்திட்டு போயிடுவேன் " எனவும்

" அதை முதல்ல செய், உன் தாங்க்ஸ் எல்லாம் வேண்டாம், வீட்டுல ஒரு தொல்லையாவது குறையட்டும்" என இவர்கள் பேசும் போதே வந்த சிவநேசனுக்கு ,அங்கிருந்த ஏற்பாடுகளைப் பார்த்து விட்டு முறைப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாமல் போனது.

" ஏண்டா, இது தான் உன் முடிவா" எனவும். " இது ஆரம்பம், முடிவுக்கு இன்னும் நிறைய இருக்கு. ஆனால் நீ ஒதுங்கி நின்னு வேடிக்கைப் பாரு. எதிலையும் தலையிடாத" என்றவனைச் சிவநேசன் ஆட்சேபனையாய் பார்த்தபடி இருக்க

" நாங்க எல்லாம் ஒரு காலத்தில ஹீரோவா இருந்தோம். திடீரென்று நீ வந்து, எங்களை டம்மியாக்கி விட்டுட்ட" என வேலு குமரனைப் பார்த்துக் குறைச் சொல்லவும். சிவநேசன் வேலுவை நோக்கி, " யாரு நீ டம்மி ஆயிட்ட, பேசாம போ. நேற்று வடக்கத்திக்காரனுங்களை இரண்டு பேரும் கொன்னே போட்டுருப்பீங்கடா . எதுக்கு அம்புட்டுக் கோபம். " எனத் திட்டியவன், கோபத்தைக் கட்டுக்குள் வைக்க அட்வைஸ் செய்து விட்டு , குமரனுக்கு நிஜமாகவே முத்து மீது விருப்பமா என வேலுவையும் வைத்துக் கொண்டே அவர்களுக்கிடையேயான ஏற்றத் தாழ்வு பற்றிய விசயங்களை விளக்கிக் கேட்டும் குமரன் உறுதியாகவே நிற்கவும், வேலுவிடமும் கருத்துக் கேட்டான் நேசன்.

" எனக்கும் கேட்டவுடனே, அதிர்ச்சி தான் சார் ,கோபம் தான். கோவிச்சுக்கிட்டு சிந்தாவோடையே பேசாம இருந்தேன். ஆனால் காதல் கண்ணராவி ,எப்ப எப்படி வருதுன்னே தெரியாது. முரட்டுப் பயலா இருந்த எனக்குள்ளேயே, என் சிந்தாமணி உள்ளப் போயிட்டா. அப்புறம் இவர்லாம் என்ன பெரிய ஆளான்னு விட்டுட்டேன்" என வேலு சொன்ன திணுசில் நேசனே சிரித்து விட்டு, " இதுக்கு மேல உன்னைக் கேவலப்படுத்தவே வேண்டியதில்லை" எனத் தம்பியைப் பார்த்துச் சொல்லவும்,

" இன்னும் இருக்கு சார்" என நேசனிடம் சொன்ன வேலு, " ஆமாம், என் பொண்டாட்டியாவது இலட்சனமா இருந்தா, நானும் அவளை விடக் கலரா, உங்க தம்பிய விடப் பர்சினாலிட்டி,நம்ப உசிரை வேற காப்பாத்துனாலேன்னு, அவ உசிரையும் காப்பாத்தி சரினு கட்டிக்கிட்டேன் " எனவும் அண்ணன் ,தம்பி இருவருமே வேலுவை முறைத்தனர். " என்ன ,நிசத்த தானே சொல்றேன்" என்றவன் குமாரனிடம், " ஆனா உனக்கும் சின்னக்குட்டிக்கும் பொருத்தமே இல்லையேபு . நீ சிக்ஸ் பேக் எல்லாம் வச்சிட்டு அய்யனார் கணக்கா நிக்கிற . அது அவர் கையில இருக்கக் குச்சியாட்டம் இருக்கு. சரியா வந்திடுமா" எனச் சந்தேகம் கேட்கவும்.

"ஏய் வேலு, நான் ரெண்டு பேரும் வளர்ந்த விதம், பழக்க வழக்கம், பேச்சு வார்த்தைன்னு முக்கியமான பிரச்சனைகளைக் கேட்டா , நீ என்ன கேக்குற " என வேலு விஷயத்தைத் தீவிரமாக எடுக்கவில்லை என நினைத்து, அவன் மீது கோபம் சிவநேசனுக்கு வந்தது,

"சார், நீங்க ஒரு கோணத்துல சொன்னிங்க, நான் ஒரு கோணத்துல சொன்னேன், இதுல சரியானாலே, மத்ததெல்லாம் சரியாகிடாதா" என வேலு, ஒரு கிராமத்தானாக , தாம்பத்திய வாழ்வின் தத்துவத்தை மிக எளிமையாக உணர்த்தி, நேசனை பார்த்து எரிச்சலாகக் கேட்கவும், குமரன் குலுங்கி சிரிக்க ,நெற்றியில் அடித்துக் கொண்ட சிவநேசன், "போங்கடா, உங்களையெல்லாம் வச்சுக்கிட்டு " என அந்தப் பக்கம் திரும்பி சங்கடமாகச் சிரித்தான்.

"இது தான் சார் முக்கியமான பிரச்சனை , லுங்கி கட்டிக்கிட்டு வண்டி ஒட்டுறவன் தானே , இவனுக்கெல்லாம் என்னத்த தெரிய போகுதுன்னு உங்களுக்கெல்லாம் நினைப்பு, ஆனால் நான் தான் இங்கே சீனியர், ரெண்டு பிள்ளை பெத்துருக்கேன், சாமியாடி பொண்டாட்டியாவே சமாளிக்கிறேன்" என வேலு அடுக்கவும், குமரன், சிரித்துக் கொண்டே, கையை விரித்து நீட்டியபடி ,

" அய்யா சீனியர், நீங்க சொல்றதை, அப்படியே ஒத்துக்குறேன், நீங்க கவலை படாதீங்க , கல்யாணத்துக்கு முன்னாடியே , உங்க சின்னக் குட்டியை கோவைக்குக் கூட்டிட்டுப் போயி நான் தேத்திக்குவேன். நீங்க இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க. இன்னும் இங்க இருக்க நாலு நாள் காப்பாத்திக் குடுங்க போதும் " எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுப்பு மோரோடு வந்தான். அதோடு இந்தப் பேச்சை நிறுத்திக் கொண்டனர்.

சுப்பு, மாஞ்சால் மாரியாத்தா போல் , குளித்து மெழுகி உட்கார்ந்திருக்கும் சிந்தாவையம், ஊர் மக்கள் அவளைப் பற்றி , அருள் வந்து இறங்கியிருப்பதாய் பேசுவதைப் பற்றியம் சொன்னான்.

" ஆனால் எனக்கே பார்த்தா பயமாத் தான் இருக்கு" என.வேலு தன்னையறியாமல் உளறிவிட, குமரன் உளவியல் ரீதியான சிந்தாவின் பிரச்சனையை வேலுவுக்குப் புரிய வைத்தவன். அதை வைத்தே சோமனுக்கான திட்டத்தையும் தீட்டினான் .

வேலு கிளம்பவும், குமரன் கேசவன் கம்பெனி விசயத்தைப் பற்றிச் சிவநேசனிடம் விவாதித்தான்.

" போட்டு விடு, அது தான் நல்லது. இல்லைனா அவளுக்குப் புத்தியே வராது. " எனச் சிவநேசனும் பச்சைக் கொடியே காட்டிச் சென்றான்.

கேசவனும், அவன் தந்தையும் வந்து குமரனைப் பார்த்ததற்கும் ," சீக்கிரம் பணத்தை ரெடி பண்ற வேலையைப் பாருங்க. அது தான் உங்களுக்கு நல்லது , அப்பா குதிரையெடுப்பு அன்னைக்கு வருவார் , மீதியை அவர்ட்ட பேசிக்கிங்க " என்றான்.

குமரனோடாவது பேசலாம், சோமசுந்தரம் இன்னும் கிறுக்குப் பிடித்தவன் என மச்சினனை அறிந்த கேசவனின் தந்தை, மருமகள், மனைவி நகைகளைத் தாலிக் கொடியை மட்டும் விட்டு விட்டு மற்றவற்றை உருவினார். கங்காவுக்கு இது மிகப்பெரிய அவமானமாக இருந்தது.

சிந்தாவின் வீட்டுக்கு முன்னால் திடீரெனத் தோன்றிய ஆட்கள் மின்விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் என வழி நெடுக , வீட்டை சுற்றிச் சுற்றிப் பொருத்தினர். அதனுடைய கட்டுப்பாடு குமரனது டென்டிலும், அவனது மொபைலிலும் இருந்தது. வேலுவின் மொபைலிலும் அதனைப் பார்க்க கற்றுத் தந்தவன் , சிந்தா , முத்துவின் பாதுகாப்பை இதன் மூலம் பாத்துக் காக்கலாம், ஆனால் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கவும் அறிவுறித்தினான். இது அவர்களது பாதுகாப்புக்கு என்பதை விட எதிராளியைப் பயமுறுத்த ஓர் அஸ்திரமாகவே செயல்படுத்தினான்.

அதே நேரம் ஊருக்குள்ளும், ஒலி ஒளி அமைப்புகள் , தோரணங்கள் என வீதிகள் பளிச்சிட ஆரம்பித்திருக்க, அதற்கான செலவையும் தன் சார்பில் ஏற்றிருந்தான். அதனால் சிங்கப்பூர் ஐயாவின் செல்வாக்கும் உயர்ந்தே இருந்தது.

குமரனை ஆளாளுக்கு வந்து பார்த்தாலும், முத்து மட்டும் அவனை நாடி வரவே இல்லை. அவள் கோபமும் குறையவே இல்லை. அதில் ' இவளுக்காகத் தானே எல்லாமே செய்கிறேன்' எனக் கோபம் கொண்டவன் , தனக்கு மிகவும் பிடித்த விவசாயத்துக்குள் தன்னை முழுதும் ஈடுபடுத்திக் கொண்டான்.

பதினாலு ஏக்கர் பரப்பளவில் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் விவசாயத்துக்குக் கொண்டு வந்தனர். அது போன்ற ஓரிடத்தில் வரிசையாகப் பாத்தி கட்டி பிரிப்பதை, நான்கு ஆட்கள் சேர்ந்து பார்க்கும் வேலையை அவன் ஒருவனே தன் கோபத்தை எல்லாம் அதன் மீது கொட்டி ஏதோ ஆட்கொண்டவன் போல் பார்க்கவும், அய்யனாரே பயந்து ஓடிவந்தார்.

" ஐயா, நானும் கருக்கல்லருந்து பார்க்கிறேன். இது என்னத்துக்கு இம்புட்டு ஆவேசம். " எனத் தன்மையாகவே கேட்ட போதும், மறுத்துவிட்டு தன் வேலையில் கவனத்தைச் செலுத்தினான்.

அய்யனார் வீட்டுக்கு வந்து மருமகனிடம் புலம்பவும், " விடு மாமா. ஆள் கூலி மிச்சம்" எனவும்.

" செஞ்சுட்டே இருக்கவுகளுக்கு ஒண்ணும் தெரியாது. இது ஏதோ, வம்பா உடல் நோவை வாங்கிற மாதிரி தெரியுது" என அவர் கவலைப் படவும், முத்து அக்காவிடம் சென்று நின்றாள்.

இரண்டு நாட்களாகப் பெரிய வீட்டிலிருந்து வரும் சாப்பாட்டையும் அவன் திருப்பியனுப்ப ராஜியம்மாள் நேராகவே வந்து விட்டார். அவர் நடக்க இயலாது என்பதால் ஊர் சுற்றி காரிலேயே அழைத்து வந்திருந்தான் சிவநேசன். அவர் இறங்கி நடக்க மாட்டாமல் வருவதைப் பார்க்கவும், வேலையை நிறுத்தி விட்டு ஓடி வந்த குமரன், " ஏன் பெரியம்மா, இப்படிக் கஷ்டப்பட்டு நடந்து வர்றீங்க" எனக் கைதாங்கலாக அழைத்துக் கொண்டு வந்து தனது டென்டில் உட்காரவைத்து ஃபேனை போட்டு விடவும்.

" நேசா, நீ கிளம்பு. நான் இவனோடவே இங்கயே தங்கிக்கிறேன். " எனப் பெரிய மகனிடம் பேசவும் சிரித்த குமரன், " ஏன் நான் பார்த்துக்க மாட்டனா. இங்கயே இருங்க. உங்களுக்கு வேணுங்கிற வசதி எல்லாம் செஞ்சு தாறேன்" எனப் புன்னகையோடு சொல்லவும்.

" நீ தான் சகலகலா வல்லவன், எல்லாம் தெரிஞ்சவன்னு நிரூபிச்சிட்டியே. உன் அக்காளை எதுக்கு இப்ப மூலி ஆக்கி வீட்டுகுள்ள உட்கார வச்சிருக்க. காரணத்தைச் சொல்லு. ஏதோ பெரிசா நடந்திருக்கு, அது இல்லாமல் நீ இதைச் செய்ய மாட்ட " என விடாப்பிடியாக நின்றார்.

" நீங்க சொல்றது புரியலைப் பெரியம்மா" என்றவனை முறைத்தவர், " அவள் எதாவது தப்புச் செஞ்சிருந்தாலும். நான் உன்கிட்ட " எனக் கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்புக் கேட்கப் போனவரின் கையையும் பற்றி, வாயைப் பொற்றினான் குமரன்.

" அவளுக்குப் பசிச்சா, அவள் தான் சாப்பிடனும். அதே மாதிரி மற்றதையும் விடுங்க. நீங்களும் பெரியப்பாவும் அவளைப் பாதுகாக்கிற முயற்சியைச் செய்யாதீங்க. " எனக் கடுமையாகக் கூறவும் அதிர்ந்த ராஜியம்மாள்.

" மன்னிக்க முடியாத பாவத்தைச் செஞ்சிட்டாளாப்பா. அதுக்கு விமோசனம் உண்டா " என அழுதவர் கண்களைத் துடைத்தவன், " எனக்குப் பதில் சொல்லத் தெரியலைப் பெரியம்மா. இன்னுமே தொடராகக் கூடாதுன்னு பார்க்கிறேன்." என்றவன். சூழலைச் சகஜமாக்க நினைத்து, " பெரியம்மா டீ குடிக்கிறீங்களா" எனக் கேட்டு , குமரன் இன்டெக்ஸன் அடுப்பில் தேநீர் தயாரிக்க முனைந்தான்.

" ஏன் உன் மாமனார் வீட்டிலிருந்து, உன் மச்சினி ஒண்ணும் கொடுத்து விட மாட்டாளா" என ராஜியம்மாள் , இவர் இங்கிருப்பதை அறிந்து வந்து கொண்டிருந்த சிந்தாவையும், அவள் மறைவில் சத்தியாவோடு வந்த முத்துவையும் பார்த்தபடி இடக்காகக் கேட்கவும். அவனும் அந்தப் பக்கம் பார்வையைச் செலுத்தி.

" என்னை மாதிரி நாடோடியா திரியிற அநாதையை யார் கட்டிக்கிறேன்னு சொல்றாங்க. யார் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அதுக்கப்புறமுல்ல மாமனார் மச்சினி எல்லாம் வரும். விடுங்க, எங்க அம்மா போன அன்னைக்கே எல்லாம் போயிடுச்சு" என்றவனை ராஜியம்மாள் கன்னத்திலே அறைந்தார் எனில் முத்து கண்ணீரோடு நின்றாள். சிவநேசன் வேடிக்கை பார்த்தபடி இருக்க, குமரன் மௌனமானான்.

சிந்தா குறுநகையோடு , குமரனைப் பார்த்தவள் " நீங்க சொல்றது சரி தான் தம்பி. இரத்த பந்தம் இருக்கவுகளுக்காகத் தான் மத்தவுக துடிப்பாக. நீங்க எம்புட்டு தான் நல்லது பண்ணாலும் அதெல்லாம் தெரியாது. நம்ம வாங்கி வந்த வரம் அப்படி" என்றபடி ,

அவன் போட முனைந்த டீயை அவனிடம் கேட்டு கேட்டு தயாரித்தவள், ஒரு சின்னக் கப்பில் ஊற்றிக் குடித்துப் பார்த்து விட்டு, " அய்யே, இது என்ன இப்படிக் கசக்குது. இதைத் தான் குடிப்பீகளா. டின் டின்னா இருக்கிறதெல்லாம் இது தானாக்கும்" எனப் பேசியபடி ஒவ்வொன்றாய் சிந்தா ஆராய , மற்ற இரு பெண்களுமே அவளை முறைத்து நின்றனர். சிந்தாவுக்கு விளக்குவது தான் தலையாயக் கடமை என்பது போல், குமரன் விளக்கிக் கொண்டிருந்தான்.

" அடியே, அருள் வந்த இறங்கின சாமியாடி இங்க எதுக்கு வந்தியாம். அது தான் அன்னைக்கே ஆடியாச்சில்ல" எனக் குமரன் மீதிருந்த கோபத்தையும் சிந்தா மீது காட்டவும்.

" சாமியாடுனவுகளுக்கு எப்படித் தெரியும், வேடிக்கைப் பார்த்தவுக தான், ஆத்தா என்ன சொல்லுச்சுன்னு விவரம் சொல்லனும்" எனச் சிந்தாச் சொல்லவும்

"எல்லாரும் சேர்ந்து என்னைய பைத்தியக்காரியா ஆக்குங்க. யாரும் என்கிட்ட உண்மை வார்த்தை பேசறதில்ல. " என்றவர் சிந்தாவிடம், " என்ன நடந்தாலும், மறுபடியும் என்கிட்ட முறைச்சுக்கிட்டுத் திரியாத. முன்னை மாதிரி வலு இல்லை. உங்களை எல்லாம் நம்பி தான் இருக்கேன், நேசா போகலாமா " என்ற ராஜியம்மாவை நிறுத்தி.

" இவளுக்கு ஒண்ணுமே சொல்லாத போறீங்க. நீங்க சொல்லாமல் அவள், உங்க மகனுக்குப் பார்க்கவும் மாட்டா " எனச் சிந்தா உறுதியாகச் சொல்லவும் , கண்கலங்க நின்றவர்.

" நீ தான் அருள் வந்து இறங்கினவச் சொல்லு. நான் குத்தம் குறை உள்ள மனுசி என்னத்தைச் சொல்லுவேன். சிங்கப்பூர் ஐயா தான், அவுகளுக்கு ஆத்தா இல்லை, அநாதையின்னு சொல்லிக் கிட்டாகளே. பிறகு நான் எந்த உரிமையிலச் சொல்லுவேன் " என்றாலும் முந்தியில் முடிந்திருந்த முடிச்சை அவிழ்த்து, குங்குமத்தை முத்துவுக்கு வைத்து விட்டவர், " மனசுக்கு புடிச்சவன் கையால தொங்கத் தொங்கத் தாலியைக் கட்டி, புள்ளைக் குட்டியோட நல்லா இரு " எனச் சத்தியாவோடே சேர்ந்து அவர் காலில் விழ, குமரனும் அன்று போலவே சேர்ந்து விழுந்தான். இருவருக்கும் குங்குமத்தை வைத்து விட்டு, சத்தியாவுக்கும் வைத்தவர்.

" இந்தக் குதிரையெடுப்பு எல்லார் மனசுலையும் நிம்மதியைத் தரட்டும், இந்தத் தங்கங்க வளரும் காலத்துலையாவது , இது எல்லாம் இல்லாம வளர்த்து விடுங்க " எனச் சத்தியவை கொஞ்சி விட்டு சிவ நேசனோடு கிளம்பிப் போனார்.

சிந்தா, சத்தியாவை வாங்கிக் கொண்டவள், " அவுக கூழைக் குடிக்கவும், கூஜாவை வாங்கிட்டு சட்டு புட்டுனு, அப்பா வர்றதுக்குள்ள வா. " எனக் கிளம்பவும்.

" அக்கா, நீயும் இரு" எனச் சிந்தாவின் கையைப் பிடித்தாள் முத்து.

" சிந்தாக்கா, எனக்கு எதுவும் வேணாம். உங்க தங்கச்சியைக் கூட்டிட்டு கிளம்புங்க. எனக்கு நிறைய வேலையிருக்கு" எனத் தான் விட்ட வேலையைத் தொடரப் போனான் குமரன்.

அவன் கோபம் புரிந்து அக்காவை அனுப்பி விட்டு, அவன் பின்னாடியே சென்ற முத்து, " கூழ் குடிச்சிட்டு வந்து வேலையைப் பாருங்க" என்றாள். அவளை மேலும் பத்து நிமிடம் கெஞ்ச விட்டு தனது டென்ட்டுக்குள் வந்தவனை , பின் தொடர்ந்து வந்த முத்து, " நான் இருக்கும் போது, எப்பிடி, அப்படிச் சொல்லுவிங்க " என அவனைப் பின்னோடு கட்டிக் கொண்டு கண்ணீர் விட, அவளை முன் இழுத்தவன் அவள் முகமெல்லாம் இதழொற்றி, அவளைத் தன்னில் புதைத்துக் கொண்டான். அதில் காமமோ, தாபமோ இன்றி, தனக்கான பொக்கிசத்தைப் பாதுகாக்கும் ஓர் உணர்வு மட்டுமே மேலோங்கியிருந்தது. அது கங்காவின் வார்த்தைகளின் பாதிப்பு என்பதை , அவளிடமுமே அவனுக்குப் பகிர மனமில்லை.

அவளை விடுவித்தவன் அவள் ஊற்றித் தந்த கூழை ருசித்துப் பருகினான். வயிறும் மனதும் குளிர்ந்தது. அவளை அருகில் அமர்த்திக் கொண்டு, " மோதி பெல், அன்னைக்கு என்ன அப்படிப் பேசிட்ட. உன்னை விட்டுட்டு நான் எப்படி இருப்பேன். கங்காவுக்குத் தண்டனை குடுக்க ஆரம்பிச்சாச்சு " என விவரங்களைச் சொல்லவும்.

" நீங்க எதுவுமே சொல்ல வேணாங்க. நான் தான் அன்னைக்குக் கோவத்தில பேசிட்டேன். நீங்க செஞ்சவரைக்கும் போதும். அக்கா சொல்ற மாதிரி அந்தச் சாமியே பார்த்துக்கட்டும்" என்றவள். 

" குதிரையெடுப்புக்கு உங்கப்பா வாரேன்னாகளே, எப்ப வாராக" எனக் கேட்கவும். " இங்கயே குத்த வச்சிருக்கேன் , என்னைத் தேட மாட்டேன்கிற, சிங்கப்பூர்லருந்து வர்ற , மாமனார், மாமியாரைக் கேளு . மூனு நாள் தான் அவருக்குக் கேப். அதில வர்றார்" எனவும், 

" அவுகளை மட்டும் தான் நான் , புரவியெடுப்புக்கு அழைச்சேன் , அவுகளும் வாரேன்னு சொன்னாக " எனப் பேச்சில் குழைந்தவளை , "அதெல்லாம் விவரம் தான் " என நொடித்தவன், " சரி சொல்லு, மேரேஜ் எப்ப வச்சுக்கலாம். நான் அதுக்கு ஏற்றமாதிரி அப்பாட்ட பேசுறேன்" எனவும் , அவளது முகம் சூடாகி, " இப்பவே என்ன அவசரம். நான் படிக்கனும்" என்றவளை, தன் கைவளைவில் கொண்டு வந்தவன்,

"படிப்புக்கும், கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம். கல்யாணத்தைப் பண்ணிட்டு போயிட்டம்னா, நானே உனக்குப் படிப்புச் சொல்லிக் கொடுப்பேன்" என அவளைச் சீண்டவும்.

"நீங்க எப்படிச் சொல்லிக் குடுப்பீகன்னு எனக்குத் தெரியும் , காப்பு வேறக் கட்டியிருக்கு, நீங்கள் உங்க வேலையைப் பாருங்க, நான் கிளம்புறேன் " என அவள் எழவும், அவளை விடாமல் பிடித்தவன்.

"இப்ப வீட்டுக்குத் தெரிய வந்தது, நாளைக்கு ஊருக்குத் தெரிய வரும். அதுக்குள்ள நாலு பேர் நாலு விதமா பேசினா, நீ உங்க அக்காளுக்கு மேல சாமியாடுவ. " எனக் குமரன் யோசிக்கவும்,

" ரொம்பப் பயந்தவுக மாதிரி பேசாதீக. இங்க வந்து உட்கார்ந்து கிட்டு, பெரியம்மா வரைக்கும் உங்களைத் தேடி வரவழைச்சு இருக்கீகளே. உங்களுக்காத் தெரியாது. " என்றவள் அவன் கையைப் பிடித்துக் கொண்டு,

" சும்மா உடம்பைப் போட்டு வருத்திக்காதீக. எங்க அப்பாவே வந்து புலம்புற அளவு செய்றீக. நேரமாச்சு  வையும் நான் கிளம்பறேன் , மதியத்துக்கு சாப்பாடு கொண்டு வாரேன்" என வெளியே வந்தவளின் எதிரே வந்து ரௌத்திரமான முகத்தோடு நின்றாள் கங்கா. 

உடல் சிலிர்க்க முத்துப் பயத்தில் குமரன் பின்னே மறைய, கங்கா மூச்சு வாங்க முறைத்து நின்றாள். கையில் கண்ணாடி வளையல், கழுத்தில் மஞ்சள் கயிறு, காதில் சின்னத் தோடு எனக் குமரன் பறித்த நகைகள் இல்லாமல் தான் நிற்கும் கோலத்தைக் காட்டவே முன்னே வந்து நின்றாள்.

அவளைச் சற்றும் லட்சியப்படுத்தாத குமரன் முத்துவிடம் " நீ கிளம்புமா. இந்தக் கூழே சாய்ந்திரம் வரைக்கும் தாங்கும்" என மனைவிடம் சொல்வது போல் உரிமையாகச் சொல்லி முத்துவை அனுப்பி வைத்து விட்டு. சாவகாசமாகக் கங்காவை எதிர் கொண்டான்.

" டேய், நீ நினைச்சதை சாதிச்சிட்டோம்னு துள்ளிக்கிட்டு இருக்கியா. எல்லாத்துக்கும் உனக்குச் சரியான பதில் தரலை, நான் கங்கா இல்லை" என உருமவும்.

" நீ என்னவேனாலும் செய், நான் எல்லாத்துக்கும் ரெடியாத் தான் இருக்கேன். " என்ற குமரன் வயல் வேலையைப் பார்க்கச் செல்லவும்.

'நீ எப்படி அவளைக் கட்டுறேன்னு பார்க்கிறேன். இந்தச் சின்னவளையும் அசிங்கப்படுத்தாம விடுறது இல்லை.' என மனதில் கருவியவள், தனது கோபத்தைக் காட்ட சிந்தாவின் வீட்டின் முன் வந்து நின்றாள்.

கங்கா தென்வயலுக்குப் போகும் போதே சிந்தா பார்த்து விட்டாள். முத்து அங்கு இருக்கிறாளே என நினைத்தவள், குமரன் சமாளித்துக் கொள்வான் எனத் திண்ணையிலேயே அமர்ந்திருந்தாள். சற்று நேரத்தில் முத்துச் சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு வந்துவிட, கங்காவின் ரௌத்திரத்தை எதிர் கொள்ளத் தயாராகக் காத்திருந்தாள்.

அதே போல் வந்து நின்றவள், "ஏண்டி , நீ எங்கண்ணனை மயக்கி பெரிய வீட்டு மருமகளாகனும்னு பார்த்த, அதை நான் ஆகவிடாமல் செஞ்சுட்டேன். இப்ப உன் தங்கச்சியைச் சிங்கப்பூர் சீமாட்டியாக்கனும்னு அனுப்பி விடுறிய. " என்றவள் அசிங்கமாக வார்த்தையை விடவும், சிந்தா அவளை ஓங்கி கன்னத்தில் அறைந்தாள். 

அவள் திமிறிக் கொண்டு சிந்தாவை திரும்ப அடிக்க வரவும், சட்டென அவள் கையை முறுக்கி பின்னால் வளைத்துப் பிடித்தவள், அவள் காதருகில் " மயக்குறது, மயங்குறதெல்லாம் உன் வேலைடி. அன்னைக்கே சொன்னது ஞாபகம் இல்லையா. மறுபடியும் ஒரு வாய்ப்புத் தர்றேன். திருந்திடு. இல்லை திரும்ப முடியாத இடத்துக்குத் தான் போவ. நீ எத்தனை முறை என்னைக் கொல்ல முயற்சி பண்ணாலும், முடியாது. ராஜியம்மாள் வயித்தில பிறந்த புண்ணியம் கொஞ்சம் இருந்தாலும். திருந்தி வாழ முயற்சி பண்ணு" எனக் கையை இறுக்கிக் கொண்டே போனவள், சட்டென விலக்கி விடவும், கீழே விழுந்தாள் கங்கா. சிந்தா நிமிர்ந்து துணிந்து நிற்க, கங்காவே ஒரு நிமிடம் ஆடித் தான் போனாள். ஆனால் அப்படியே விட்டுச் சென்றாள் அவள் கங்கா அல்லவே, " இதுக்கும் சேர்த்து அனுபவிப்ப " என்று விட்டுச் சென்றாள்.

இவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்த ராக்காயி, " இவ யாருடி என்னைய விடக் கொடு சூரியா இருக்கா. ஆனாலும், இன்னைக்குத் தான் உருப்படியா பதில் கொடுத்திருக்க " என நொடித்து விட்டுச் சென்றது. முத்து ஓடிவந்து, சிந்தாவைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டவள், " ஐயோ, இப்பவே அவுகள்ட்ட சொல்லிட்டு வாறேன்" எனக் குமரனிடம் சொல்ல ஆர்வம் காட்டவும், " ஏய், உள்ள போடி. திருவிழா முடியறவரைக்கும் அந்தப் பக்கம் திரும்பக் கூடாது" எனத் தங்கையை மிரட்டினாள் சிந்தா.

பெருமாயி டீக்கடையில் ஊரில் மக்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கவும் வேலையும் வருமானமும் அதிகமிருந்த போதும், மனசுக்குள் சிந்தாக் கூறிய விசயங்கள் அறுத்துக் கொண்டே இருந்தது. அதுவும் சனங்கள் வக்கணையாக அவள் கடையிலேயே வாங்கித் தின்னு விட்டு, சோமனுக்கு இரக்கப் படுவது போல் பயமுறுத்தி விட்டோ, சாபமிட்டோ தான் செல்வார்கள்.

பெருமாயி மகனிடம் கெஞ்சிப் பார்த்து விட்டார், அவன் கேட்பதாக இல்லை. அதோடு சேட்டு வேறு அவன் மீது ஏகப்பட்ட கோபத்திலிருக்க. தலையாரி, பிரசிடென்ட் இருவரும் சாமிக்குப் பயந்து கட்சி மாறியிருந்தனர்.

வேலு பார்த்திபனூரில் ஒட்டுக் கேட்டபோது இருந்த சோமனது கூட்டாளிகள் மட்டுமே அவனுக்குத் தைரியம் சொன்னார்கள். ஆனால் ஆண்டிச்சி கிழவி போன்றவர்கள் இட்டுக் கட்டிய கதை, எங்குத் திரும்பினாலும் பேசப்பட்டு , இவனையும் உன்னிப்பாகவே கவனித்தனர். அதிலும் சிலர், இவனுக்குத் தண்டனை எப்படிக் கிடைக்கும், என ஆளாளுக்குப் பார்த்த அம்மன், அய்யன், கருப்பன் வரும் தமிழ்ப் படங்களில் வரும் காட்சிகளை எல்லாம் கற்பனை செய்து பேச, சுப்பிரமணியின் நண்பர்களான இளவட்டங்கள், அம்மன் முகத்தைச் சிந்தாவாகவும், வில்லன் முகத்தை, சோமனாகவும் போட்டு, அவன் இரத்தம் கக்குவது போல் மீம்ஸ் களை சோமனுக்கே அனுப்பியும் வைத்தனர். முதலில் அசட்டையாகவும், கேலியாகவும் பார்க்க ஆரம்பித்தவனுக்கு அதன் பாதிப்பும் மெல்ல படர ஆரம்பித்தது.

இதன் விளைவாக ஒரு நாள், அரண்டு ஓடியவன், கங்காவை கொல்லைப் புறம் வரவழைத்து, அவளைக் கட்டிக் கொண்டு கதறவும், கங்கா சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவனைத் தள்ளி விட்டாள். அதன் பின் அவனையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என அவனுக்குத் தைரியமும் சொல்லி அனுப்ப, கேசவன் அனைத்தையும் பார்த்து விட்டு, கேள்வி எழுப்பவும், குமரனைச் சொல்லி, அவனைச் சமாளித்தாள். நாளும் பொழுதும் கடந்து எட்டாம் நாள் குதிரையெடுப்பும் வந்தது.

என்ன நடக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.




No comments:

Post a Comment