சிந்தா-ஜீவநதியவள் -24
மேலப்பூங்கொடி கிராமம் குதிரை எடுப்பு, புரவியெடுப்பு, உருவாரமெடுத்தல் என பலவகையாக வழங்கப்படும் அய்யனார் கோவில் திருவிழா.
சந்திரரே சூரியரே சாதி பகவானே!
இந்திரரை நோக்கி நானறிய வள்ளி ,
எடுத்தேன் இளமுருகன்.
இளமுருகன் சோம்பாம நம்ம அய்யனார்
மழையை வரவழைச்சார்.
பகவானே பவசூரியரே
பாடி வளம் காத்தவரே!
நெல்லை படைச்சவரே,
நெல்லுக்கெல்லாம் நாயகரே!
குருவை படைச்சவரே ,
குருவுக்கெல்லாம் நாயகரே!
மன்னவரை படைச்சவரே,
மன்னவருக்கெல்லாம் நாயகரே !
அந்த படைக்கும், நம்ம அதிகாரி படைக்கும் ,
அஞ்சாத கருப்பையா,
பொண்டுக மையல்ல மலையாடி வருதே!
அம்மா இருப்பாக அழகாயி கோயில்ல,
ஐயா இருப்பாக , நீருத்தா பொட்டல்ல.
நம்ம ஐயாவும், அம்மாளும்
தலையாட்டி கொள்ளயில ,
ஏழு சமுத்திரமும் பாலா பெருக வேணும். !
வாராரு, வாராருங்க, வழிபட்டானுங்க!
வட்ட வழு கல்லு உரசருனாருங்க.
வாவறி மட்டும் தீட்டுறாருங்க.
பிலிப் பால் கறந்து,
கோட்டை கட்டுறாருன்னு சொல்லுங்க.
அந்த படைக்கும், நம்ம அய்யனார் படைக்கும்,
அஞ்சாத கருப்பன் கொண்டையில வருவார்.
காசுக்கு நூறு கரும்பை வாங்கி.
பூங்குடி கண்மாய் , கரையெல்லாம் நட்டு, பயிராக்கி
கரும்போட வாய்க்கா,
நம்ம அய்யனாருக்கு களக்காக்கும்னு சொல்லி,
காலாங்கரை மடைத் திறந்து
பாலாப் பெருக வேணும்.
இன்று காப்புக் கட்டி எட்டாம் நாள், ஊர்மக்கள் கூடி மேளதாளத்தோடு பதினோரு குதிரை எடுத்து வேளாளர் வீட்டுக்கு வந்து அய்யனை வணங்கி அவன் தன் வாகனமாம் குதிரைக்குக் கண் திறந்து , சந்தனம், குங்குமம் பொட்டிட்டு வேட்டியும் துண்டும் அணிவித்து, பூமாலைச் சாற்றி , வணங்கித் தூக்கி வந்து கூத்து பார்க்கவென பொட்டலில் வைப்பார்கள். இங்குக் கோவில் விழா கமிட்டி சார்பில், இரண்டு நாட்களுக்கு அய்யனார் வாகனம் முன்பு தெருக்கூத்து நடக்கும். ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள், வள்ளி திருமணம் நாடகம் என அவரவர் வசதிக்கு ஏற்ப நிகழ்ச்சி களை நடத்தி அதிலிருந்து மூன்றாம் நாள் மாலையில் அய்யன் கோவிலில் கொண்டு போய் சேர்ப்பார்கள்.
இதோ மேலப்பூங்குடி ஊரே விழாக்கோலம் பூண்டு, வீதிகளை , வண்ணக் கோலங்களும், தோரணங்களும், அலங்கரிக்கத் தெருவெங்கும் மைக்செட் அலற, அய்யனையும், கருப்பனையும், முனியனையும் நாட்டுப்புறப் பாடல் ஒலி நாடாக்கள் அழைக்க, ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
பச்சைக் குழந்தை முதல் பல் போன கிழவி வரை புதுசு கட்டி, பொன்னகை பூட்டி தயாராக ஆங்காங்கே காத்திருக்க, வீடுகளில் திருவிழாவுக்கென்று உறவுமுறை கூட்டம் நிறைத்தது. ஆண்கள் வெள்ளை வேஷ்டி , பட்டு வேஷ்டி சிலர் காவி வேஷ்டி என அவரவர் வேண்டுதல், அந்தஸ்துக்குத் தக்கணக் கட்டியிருந்தார்கள். பெரிய வீட்டிலும் இன்று ஆட்கள் நிறைந்து இருந்தனர். நேற்றே வந்திறங்கிய பெரிய மகள் சுந்தரியின் குடும்பம், கங்காவின் குடும்பம் , ராஜியின் தங்கை குடும்பம், மகாலிங்கத்தின் மதுரையிலிருக்கும் தம்பியும் ஆஜராகியிருந்தார். கங்கா ஒரு முடிவோடு சாதிசனத்தைக் கூட்டியிருக்க, புரவியெடுத்துப் பொட்டலில் உள்ள மேடையில் அதனை ஏற்றிய பிறகு வீட்டுப் பஞ்சாயத்தை வைத்துக் கொள்ளலாம் எனத் தயாராக இருந்தனர்.
குமரனின் தந்தை காலையில் தான் வந்து சேர்ந்தார். பெரியவர் மகாலிங்கமே சென்று தம்பி மகன் குமரனை,, குதிரையெடுப்புக்கு மேளதாளத்தோடு ஊர் மக்கள் அழைக்க வரும் போது , அவன் வீட்டிலிருக்க வேண்டும் என்றும் சிவநேசனோடு சேர்ந்து நிற்கவேண்டும் எனவும் கட்டளையிட்டு வரவும், அதற்குச் சம்மதித்திருந்தான். இவர்கள் விசயம் இன்னும் ஊருக்குள் பரவியிருக்கவில்லை. தென்வயலில் இது போல் ஏதாவது புதுமை நடந்து கொண்டே இருந்ததால் அதைப் பற்றிப் பெரிதாக மக்கள் எடுத்துக் கொள்ளவும் இல்லை. அவர்களுக்குத் தான் இப்போது வேடிக்கை பார்க்கத் திருவிழா இருக்கிறதே.
ஊர் பெரியவர்கள், இளையவர்கள், இளவட்டங்கள், சிறுவர்கள் என ஆண்கள் கூட்டம் அய்யனார் கோவிலிலிருந்து மேளதாளமாக முதலில் பெரிய வீட்டுக்கு முன் வந்து நின்றனர். அவர்கள் வீட்டு முன் வந்து சாமியாடி இவர்களும் மரியாதை செய்து தேங்காய் பழம் தட்டு, குதிரைக்கு மாலை வஸ்திரங்களோடு, இரண்டு பெரிய மூங்கில் கம்புகளை வெள்ளை, காவிப் பட்டை அடித்துத் தயாராக வைத்திருந்ததையும் தூக்கிக் கொண்டு கிளம்பினர். பெரியவர் மகாலிங்கம் இரண்டு தம்பிகள், மகன்கள், இரண்டு மருமகன்கள், மச்சினன், சகலை உற்றார் உறவினரோடு பெருமையாகவே திருவிழாவில் கலந்து கொண்டார். தெருக்கள் வழியாக ஒவ்வொருவராய் கூட்டிக் கொண்டு, வேளாளர் தெருவில் கந்தனின் வீட்டுக்கு வந்தனர்.
அவர்களுக்கும் மாலை மரியாதை செய்ய, நல்ல நேரம் பார்த்து, வேளாளர் குலா ஆண்கள் ஆளுக்கு ஒரு குதிரைக்குக் கண் வரைந்தனர். சாதாரணமாகச் சிலைகளுக்குக் கண் திறக்கும் போது தான் அதன் வேலைப்பாடு முழுமைப் பெற்று உயிர் பெறுகிறது. அது போல் அய்யன் குதிரைகள் பதினொன்றும் ஒவ்வொரு உணர்வை வெளிக்காட்டி , அதன் அமைவைப் பெற்றன. அதன் பிறகு குதிரைகளுக்குபூமாலைகள் அணிவிக்கப்பட்டு வெற்றித் திலகமிட்டு சூட தீபாரதனை காட்டப்பட்டது.
குதிரையின் பக்கவாட்டில் வைக்கோல் வைத்துக் கட்டி அவற்றைச் சேதமாகாமல் பக்குவமாக இந்த மூங்கில் கம்போடு சேர்த்துத் தூக்க வசதியாகக் கட்டினார்கள் . அது போல் குதிரைகள் , தூக்கவும், கை மாற்றவும் ,ஆட்களையும் ஆயத்தம் செய்து உடன் அழைத்துச் சென்றனர். . உணர்வுப் பெருக்கில் ஊர்சனமே நின்றது. பெண்கள் குலவையிட , அரோகரா சொல்லி அய்யன் மேல் சத்தியம் செய்து குதிரைகளைத் தூக்கினர்.
முதல் குதிரையை, பெரிய வீட்டு இளவட்டங்கள் தூக்க, குமரனைத் தவிர மற்றவர்களுக்கு கனமான உடல் உழைத்த வேலை செய்து, பழக்கம் இல்லாததால், பத்தடி எடுத்து வைக்கவுமே தோள் வலி, கை வலி எனத் தடுமாறவும் பேலன்ஸ் தவறி குதிரை ஆட்டம் கண்டது. டேய் பத்திரம் என ஆளாளுக்கு குரல் கொடுக்க, குமரனுக்கு எதிரே இருந்தவன் சற்றே குட்டையாக வலிமையின்றி இருந்ததில் வலி தாங்காமல் அதனைக் கீழே இறக்கப் போனான். மற்றவர், கீழே வைப்பது கெட்ட சகுனமெனப் பதறக் குதிரை நிலத்தில் பாவ விடாமல் வேலு மறு பக்கம் குமரனுக்கு ஈடாகத் தோள் கொடுத்தான். குதிரை மேலேறி கம்பீரமாக வந்தது. சிவநேசனும், நல்ல நேரத்தில் குதிரைக்குச் சேதமின்றி தோள் கொடுத்ததுக்கு நன்றி தெரிவித்தான்
கண்மாய் மண்ணெடுத்து
கருத்தா செஞ்ச குதிரை !
வேளாளர் வீடு விட்டு
வீதியுலா வந்த குதிரை !
வேண்டுதலைச் சுமந்து வரும்
நம்ம அய்யன் அவன் குதிரை!
தத்தித் தாவி வரும்
தங்க மணிக் குதிரை!
துன்பம் தீர்க்க வந்த
நம்ம அய்யன் அவன் குதிரை.
வெள்ளை மேனியான
வெண்பட்டு வீர குதிரை
வீதியில் வலம் வருது
நம்ம அய்யன் அவன் குதிரை.
ஆடிப்பாடி வரும் அரசகுதிரை!
அழகாய் சிலிர்க்கும் அந்த அம்பலக்குதிரை!
கனலாய் கனைத்து வரும்
காவல் குதிரை !
கண்டவர் மனம் கொள்ளும்
அய்யனார் குதிரை!
ஆவேசமாய் அடி வைக்கும்
கருப்பன் குதிரை !
கன்னியரை காத்து நிற்கும்
அழகர் குதிரை!
காளையர்க்கு வீரம் தரும்
வீரன் குதிரை!
பாலகரை பரவசிக்கும்
பார்த்தன் குதிரை!
பத்தோடு ஒன்றாக
பாய்ந்தோடி வந்த குதிரையைப்
பொட்டலில் தங்க வச்சு
ஆச்சாரமா ஆடைக்கட்டி
அழகாக அலங்கரிச்சு
மருவாதி மாலை போட்டு
மூணு நாள் கூத்துக் காட்டி
குதிரையை மகிழ்விச்சு
அய்யன் அவன் சேவுகத்துக்குச்
சிறப்பாக சேர்த்திடுவோம் !
என முன்னால் வேட்டும், வான வேடிக்கையையும் இளவட்டங்கள் கையில் பிடித்துத் தூக்கிப் போட்டு அதிர விடத் தாரைத் தப்பட்டை,கொம்பு முழங்க. மேள தாளமும் மத்தளமும் ஒலிக்க அய்யன் வாகனம் அது சில நேரம் அசைந்தாடியும் , சில நேரம் துள்ளிக் குதித்தும், சில நேரம் ஆடிப்பாடியும் என ஊரிலிருக்கும் எல்லா வீதிகளிலும் வரிசைக் கட்டி ஊர்வலமாக வந்தது.
ஒவ்வொரு இடத்திலும் மக்கள், குதிரை சுமப்பவர்களுக்கு , ஜூஸ், சர்பத் எனக் கொடுத்து, குதிரைகளுக்கு மாலையிட்டும் மரியாதை செய்தனர். சிந்தாவின் வீடு உள்ளடங்கி இருந்ததால், அந்தத் தெருவுக்கு ஊர்வலம் வராது, எனவே அதற்கடுத்த தெருவில் அக்காளும் தங்கையுமாகச் சர்பத்தைக் கலக்கி வைத்துக் கொண்டு தயாராகக் காத்திருந்து, சுமந்து வந்தவர்கள் தாகம் தனித்தனர்.
ஊர்சுற்றிய குதிரைகள் பெரிய வீட்டு வழியாகவே பொட்டலுக்குச் சென்றது, அதில் வேலு தூக்கி வருவதைப் பார்த்துப் பெண்கள் சலசலக்க, " அது என்ன வெயிட் தெரியுமா. அவர் வந்தாரோ நார்கள் தப்பிச்சோம்" என்றனர் சிவநேசனின் மற்றொரு சித்தப்பா மகன்கள்.
குதிரைகள் வரிசையாக அதற்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் நாடக அரங்கத்திற்கு எதிரான மேடையில், பெருமாள் கோவில் அருகில் இறக்கி வைக்கப்பட்டது. இங்கிருந்து நாளை மறுநாள், காலையில் இதே போல் மீண்டும் தூக்கிச் சென்று அய்யன் கோவிலில் இறக்குவார்கள். அன்று முழுதும் விரதமிருந்து மாலை சட்டியெடுத்து அய்யனுக்குப் படைத்துவிட்டு வந்து இரவில் சாப்பிடுவர். அடுத்த நாள் காலையில் மஞ்சு விரட்டு, மஞ்சள் நீராடுதலோடு திருவிழா முடியும்.
குதிரைகளை முதல் நிலையில் கொண்டு வந்து சேர்த்த உணர்வுப் பெருக்கில் மக்கள் மகிழ்ந்து, அவற்றிடம் தங்கள் வேண்டுதலைச் சொல்லிக் கொண்டிருந்தனர். இந்த அய்யன் குதிரைகள் , அவரிடம் சென்று நம் குறையைச் சொல்லி அதனைத் தீர்த்து வைக்கும் என்ற ஒரு நம்பிக்கை.
திருவிழா எனவும், பல புதிய கடைகள் ஆங்காங்கே முளைத்திருந்தன. சிந்தாவின் மகன் சத்தியமூர்த்தி, தாத்தாவைப் பற்றிக் கொண்டவன், பஞ்சுமிட்டாய், குச்சி ஐஸ், அப்பளம், பணியாரம், கலர் கண்ணாடி, பலூன், பம்பரம் என நோக்கத்துக்கு அவரை வாங்கித் தரச் சொல்லி திருவிழாவின் ஒவ்வொரு கனத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தான்.
பெரிய வீட்டில் மதியம் ஆள் வைத்து தடபுடலாக விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. குதிரையை நல்லபடியாகத் தூக்கி, அரங்கத்தில் இறக்கிப் பாதி வழி கொண்டு சேர்த்த திருப்தியோடு இருந்தனர். குமரனை மற்ற உறவினர் கண்கள் கொஞ்சம் முறைத்துக் கொண்டு தான் இருந்தது. மதிய உணவுக்குப் பிறகு கங்காவின் மாமனார் கூடத்தில் மச்சினன்களைக் கூட்டினார்.
குமரனின் தாய் அவன் சிறுவயதாக இருக்கும் போதே நோயில் விழ, அவரைக் கவனிக்க வந்த மலேயப் பெண் தான், மரியம். அவரின் அன்பான கவனிப்பில், புற்றுநோய் கண்டிருந்த குமரனின் தாய் அதிகச் சிரமப்படாமல் போய்ச் சேர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். தாயையும், தாரத்தையும் இழந்து நின்ற மகனையும் தகப்பனையும் அன்போடு கவனித்துக் கொள்ள, அவரையே மணந்தார் சோமசுந்தரம். குமரனுக்கு அந்த வயதிலேயே தந்தையைப் புரிந்து கொள்ளும் தெளிவு இருந்தது. மரியத்தை அவனும் தாயாக ஏற்றான்.
ஆனாலும் பத்து வருடமாகப் பதிந்த தாயின் முகத்தை நிறைக்க யாராலும் முடியவில்லை. படுத்தே கிடக்கும் அவன் தாயின் கைகளைத் தன் கையால் வருடிக் கொடுத்துக் கொண்டே மணி நேரங்கள் அமர்ந்திருக்கும் குமரன் பல நேரங்களில் ஒரு சிலிர்ப்பையும், நடுக்கத்தையும் அதில் உணர்வான். முத்து முதல் முறை ராட்டினத்தில் அவனோடு பயணித்த நேரம் அதே நடுக்கத்தையும், சிலிர்ப்பையும் பதட்டமாக வெளியிட்டாள். அதோடு அவளது தோற்றமும் அவனின் தாயை ஒத்திருந்தது, அதுவே குமரனின் மனதில் அவனறியாமல் அவளை நாடக் காரணமாக இருந்துள்ளது. எந்தக் கூட்டத்தில் போனாலும், தன்னால் அம்மாவைப் போன்ற உருவத்தைத் தேடும் தாயில்லாப் பிள்ளையின் விழிகளில் , தையை ஒத்த தோற்றமே பேரின்பத்தைத் தரும். இங்குக் குமரன் தேடிய நிறைவும் அவளிடத்தில் கிடைத்தது போன்ற திருப்தி. எனவே அவளை மணம் முடிக்க விடாப்பிடியாக நின்றான்.
மரியத்தையே , இவர்கள் உறவினர்கள் ஏற்க மாட்டார்கள், ராஜியம்மாள் மட்டுமே முகம் கொடுத்தாவது பேசுவார். எனவே அவர்கள் இந்தியா வருவதும் கிடையாது. இந்த முறை மகனின் விருப்பத்துக்காக, மருமகள் அழைக்கவும் ஊரைக் காணும் ஆவலில் சோமசுந்தரம் வந்து விட்டார். ஆனால் தங்குவது மட்டும் விடுதியில் தான்.
கங்காவின் மாமனார், தங்கள் தொழிலிலிருந்து, திடீரென முதலீட்டைத் திரும்பப் பெற்றதைப் பற்றிக் கேள்வி எழுப்பவும், " மகனுக்குத் தேவை அதனால் திரும்பிக் கேட்டோம். நீங்களுமே , சில வருடங்களில் நீங்களே வாங்கிக்கிறேன்னு தானே சொன்னீங்க" எனச் சோமசுந்தரம் அவர் வாயை அடைக்கவும்,
கங்கா, " குமரன் என்னைப் பழிவாங்குகிறதுக்காகச் செஞ்சிருக்கான்" என உறவினர் முன் சொல்லவும்.
" ஆமாம் பழி வாங்கத் தான் செஞ்சேன். நானும் எங்க அண்ணனும் செய்யிற விவசாயத்தைத் தடுக்க , இந்த ஊரில் நிறையப் பேர் முயற்சி செய்யிறாங்க. நாங்க சீமை கருவை அழிக்கிறதால் நிறையப் பேருக்கு வருமானம் போகுது, அதனால அவன் எங்களை எதிர்க்கிறான். அதெல்லாம் சரி. எங்க பிரச்சனை.
நேசன் அண்ணன், ஊரில வந்து விவசாயம் பார்க்கிறது பிடிக்காமல் , தங்கள் குடும்ப ஃபேக்டரியை பார்த்திட்டு இவுகளுக்கு அடிமையா இருக்கனும்னு , இவளும் இந்த ஊர்க்காரங்களோட சேர்ந்து சூழ்ச்சி பண்றா, அதுக்காகத் தான் செஞ்சேன். அதுவும், விவசாயாத தொழிலுக்கான முதலீடு தேவைப் பட்டது, அதுக்காகத் தான் கேட்டோம் " எனச் சிவநேசனே யோசிக்காத ஒரு கோணத்தில் குமரன் கங்காவின் மீது பழியைப் போடவும் , கேசவன் முதல் நாள் தான் சோமனோடு அவனைப் பார்த்திருந்ததில்,
" நேற்று வந்தானே அவனா" எனக் கங்காவை நேராகச் சந்தேகம் கேட்கவும், இல்லை எனப் பதறியவள், தான் , அண்ணனுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை எனச் சத்தியம் செய்து, முத்துவை குமரன் காதலிக்கும் விசயத்தை உறவினர்கள் முன் உடைத்து, சாதிப் பிரச்சனையை முன் வைத்தாள்.
அதனைப் பிடித்துக் கொண்டு ஆளாளுக்கு ஒவ்வொன்று பேசவும், குமரனின் தந்தை சோமசுந்தரம், "எல்லாரும் அமைதியா இருக்கீங்களா, இந்தத் தேவையில்லாத பேச்சு எதுவுமே வேண்டாம். என் மகனுக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கு, நான் கல்யாணம் செஞ்சு வைக்கிறேன். அவ்வளவு தான் விசயம்" என முடித்தார்.
"அது எப்படி, இந்த ஊரில் இருக்கிறது பெரிய அண்ணன் தானே, நீயும் உன் மகனும், அவர் மானத்தை வாங்குறீங்க. இனி உனக்கும் எங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லைனு பேப்பர்ல அறிவிப்பு கொடுப்போம்" என அவரது அக்காள் வேதா தங்கள் முதலீட்டைத் திரும்பப் பெற்ற கோபத்தில் சொல்லவும்
" அதெப்படிக்கா, காசு பணம் வேணுங்கும் போது நான் தம்பி , அது இல்லைங்கும் போது, எனக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லையா. சுலபமா என்னைத் தூக்கிப் போடுறீங்க. செய்ங்க. மரியத்தைக் கல்யாணம் பண்ணும் போதே சொன்னது தானே " என்றவர் , பெரிய அண்ணனையும், அண்ணியையும் பார்த்து,
" இத்தனை வருஷத்தில இந்த ஊர்ல எதாவது மாற்றம் வந்திருக்கும்னு நம்பி தான் வந்தேன். எதுவுமே மாறலை. உங்களைத் திருப்தி படுத்துறதுக்காக என் மகன் விருப்பத்துக்கு எதிரா எதுவும் செய்ய முடியாது. அக்கா சொல்ற மாதிரி எங்களால உங்களுக்குக் கௌரவக் குறைச்சல்னா மன்னிச்சுக்குங்க. ஆனால் நாளைக்கு அந்தப் பொண்ணை, என் மருமகளை உறுதிபடுத்திட்டு தான் நான் இங்கிருந்து கிளம்புவேன்" என ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போடவும், ஆளாளுக்குக் குதித்தனர்.
குமரனின் தந்தை ராஜியம்மாளிடம் வந்தவர், " அத்தாச்சி நீங்க எப்பவுமே, எல்லாருடைய யோசனையிலிருந்தும் ஒரு அடி முன்னை நிக்கிறவுக தான். என் மகனுக்காக நான் எடுத்த முடிவு தப்புனா சொல்லுங்க " எனக் கேட்கவும் ,ராஜி ஓர் பெருமூச்சு விட்டவர்,
" பண்ணைக்காரன் மக்களை, என் மக்களாட்டம் வளர்த்தேன்கிறது தான் என் மேல உள்ளக் குறையே. ஆனால் அந்தப் புள்ளைகளுக்கு ஒரு அவப்பெயர் வந்தப்பவே , என்னால ஒண்ணும் செய்ய முடியலை. இப்பவும் நல்லா இருக்கட்டும்னு மனசார வாழ்த்திறதை தவிர, உங்க அண்ணனை மீறி வேற ஒண்ணும் செய்ய முடியாது. அவளும் நல்ல பொண்ணு தான். உன் மனசுக்கு ஒப்புச்சினா தாராளமா செஞ்சு வை. " என்ற ராஜியம்மாளை மற்றவர் முறைத்தனர்.
அண்ணனிடம் வந்தவர், " உங்களை மீறியோ, அவமானப்படுத்தியோ எதையும் சாதிக்கனும்னு நினைப்பெல்லாம் எனக்கில்லை. அவன் ஆசைப் பட்டுட்டான் அவ்வளவு தான்" என மனைவி மக்களோடு கிளம்பியவரிடம் கார்வரை வந்து வழியனுப்ப வந்த சிவநேசன், "சித்தப்பா, ஒரே நேரம், அப்பா இவ்வளவு அதிர்ச்சி எல்லாம் தாங்க மாட்டார். நான் மெல்ல மெல்லப் பேசி வைக்கிறேன். " எனவும்
" நீயே , அப்படித் தான் இருக்க. சொந்த கிராமத்தில இருந்து விவசாயம் பண்றதெல்லாம் எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா , உனக்குக் கொடுத்து வச்சிருக்கு. இன்னும் உன் கைகளையும், மனசையும் விசாலப்படுத்து, பெரியவீட்டு வாரிசுன்னா, மனசும் பெரிசா இருக்கணும், எல்லாரையும் அரவணைச்சு போகணும் , நீ வீட்டுக்கு மூத்தவனும் கூட, எல்லாமே உன்ன கையில தான் இருக்கு. துணிஞ்சு முடிவெடு, நியாமானதுனா மக்கள் உன் பின்னாடி நிற்பாங்க. பெரிய ஆளா வரனும்" என அண்ணன் மகனை வாழ்த்தி விட்டு மகனையும் அழைத்துக் கொண்டு விடுதிக்குச் சென்றார் சோமசுந்தரம்.
புயலடித்து ஓய்ந்தது போல் நிசப்தம் நிலவ, ஆங்காங்கே சிங்கப்பூர் அப்பா மகன் திமிரைப் பற்றிப் பேச்சும் ஓடியது. வேதா பெரிய அண்ணனும், சம்பந்தியுமான மகாலிங்கத்திடம் பேச வந்தார். " நீயும், நானும் பேசி எதுவும் நடக்கப் போறதில்லை. நடக்கிறது நடக்கட்டும் விடு" என முடித்துக் கொண்டார்.
ஆனால் கங்கா அவ்வாறு விடுவதாக இல்லை, அக்காள் கணவன், சித்தப்பா இவர்களைத் தூண்டி விடச் சரி சரியெனத் தலையாட்டியவர்களை,அவரவர் மனைவிகள் ஒரு பிடி பிடித்தனர். அதற்குப் பின் மாலையில் திருவிழா, இரவில் உணவுக்குப் பின் வள்ளி திருமணம் நாடகம் என மும்மரமானார்கள்.
குமரன் தன் குடும்பத்தை விடுதியில் விட்டு விட்டு, மாலையில் சிந்தாவின் வீட்டுக்கு வந்தான். திண்ணையில் உட்கார்ந்து மகளுக்குக் குடுமி போட்டு , அலங்கரித்துத் திருவிழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சிந்தாவின் அருகில் வந்து அமர்ந்தவனை, தலையசைத்து வரவேற்று விட்டு, " புரவியெடுத்தது, கை எதுவும் வலிக்கிதா. " என விசாரித்தாள்.
" ஆமாம்னு சொன்னா என்ன செய்வீங்க. உங்க தங்கச்சி எனக்கு ஆயில் மசாஜ் செய்வாளா" எனக் கேட்டவனை, அதிர்ந்து பார்த்த சிந்தா, " என்ன , என்கிட்டையே இப்படிப் பேசுறீக. நான் சிந்தா, முத்து இல்லை" எனவும்.
" தெரியுதுக்கா, நான் வந்திருக்கேன்ல, நீங்க கேக்குற மாதிரி ஒரு வார்த்தை கேக்குறாளா பாருங்க. ஒரு கிலோ மீட்டர் தள்ளி நிக்கிறா" எனப் பேசியபடி சத்தியாவைக் கொஞ்சினான்.
அங்கிருந்தே முறைத்த முத்து, "பக்கத்தில வந்தா என்ன செய்வாங்கன்னு தெரியாது, யாரும் இருக்கான்னு கூடப் பார்க்கிறதில்ல, ஏதாவது வம்பிழுக்கிறதே வேலை" என முணுமுணுத்தவள், ஒரு டம்ளர் டீயைக் கொண்டு வந்து நீட்டினாள். காய் நீட்டித்துத் தொட்டு வாங்கியவன், "ஆ சுடுது, சுடுது ' என முத்துவின் முந்தியைப் பற்றி அதில் டம்ளரைப் பற்றிக் கொள்ள, முத்துத் தப்பித்துச் செல்லும் வழியின்றி அங்கேயே நின்றாள் .
"ஏண்டி , டீத் தண்ணிய பொறுக்குற சூடுல ஆத்தி கொண்டு வர்றதில்ல " எனச் சிந்தா திட்டவும், "அக்கா, அவுக வேணுமின்னே கேலிபண்றாக, டி ஆறிப் போயிக் கிடக்காம்" என உண்மையைச் சொல்லவும், குமரனும் ஒரே மடக்கில் உள்ளே ஊற்றி விட்டு அவளிடம் டம்ளரை நீட்டினான்.
"அடியே, இனிமே அவுகளுக்கு எதாவுது குடுத்தியினா, அவுக பக்குவம் பார்த்துக் குடு " எனச் சிந்தா சொல்லவும், நொடி பொழுதில், சிந்தாவும் வேலுவும் பார்க்காத பொழுது, வாயை குவித்துக் காட்டி ,அவன் கண் சிமிட்ட , முத்து அவஸ்தையாகக் கிண்ணத்தையும், அவன் கையிலிருந்த டம்ளரையும் பறித்துக் கொண்டு ஓடினாள்.
குமரன் சிரிப்போடு, "ஆமாம்க்கா, உங்க நெளிவு ,சுழிவெல்லாம் சொல்லிக் குடுத்து அவளைத் தேத்தி விடுங்க " என்றபடி ,சிந்தா மகளுக்கு உடை மாற்ற ஏதுவாக , முன்பொரு நாள் சிந்துஜாவைப் பிடித்தது போல் தூக்கிப் பிடித்துக் கொள்ளவும், வியந்த சிந்தா, கணவனை அழைத்து, " இங்க பாரு, சிங்கப்பூர்காரவுக அனைசரனைய, நீ புள்ளை அழுதவுடனே கொண்டாந்து என்கிட்ட தள்ளிட்டுப் போறதில தான் இருப்ப" எனக் குறைபடவும் , அவளை முறைத்த வேலு,
" எல்லாம் இக்கரைக்கு, அக்கரைப் பச்சை தான் " என்றவன். " மதியானம் பொதுக்குழுவுல என்ன முடிவாச்சு" எனச் சூசகமாகக் குமாரனைக் கேட்கவும்.
" எதிர்க்கட்சியினர் வெளி நடப்பு, சுயேச்சையாகப் போட்டியிடுவதாக முடிவு. " எனக் குமரனும் பதிலுக்குச் சொல்லவும் சிந்தா புரியாமல் பார்த்தாள்.
" நாளைக்கு என் அப்பா, அம்மா , உங்க தங்கச்சியை எனக்குப் பொண்ணு கேட்டு வர்றாங்க. இப்ப பரிசம் மட்டும் போடறதா, இல்லை கல்யாணமே பண்ணிடலாமா" எனத் திருவிழாவுக்குப் போவது எப்போது எனக் கேட்பது போல் குமரன் பட்டெனக் கேட்கவும் , சிந்தா ," நெசமாவா" என அவனைப் பார்க்க, முத்து அதிர்ச்சியில் கையிலிருந்த பாத்திரத்தைக் கீழே போட்டாள்.
வேலு, " எது இந்தத் தாலி கட்டி கல்யாணம் பண்ணுவோமே, அது தானே தம்பி" எனக் கேட்டான்.
" நீங்களும் அப்படித் தான கல்யாணம் பண்ணுவீங்க. இல்லை மோதிரம் மாத்துவீங்கன்னா, மோதிரம் வாங்கிடலாம்" எனக் குமரன் சீரியஸாகக் கேட்கவும். மற்றவர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, " என்ன" என்றான்.
" நாங்க இன்னும் எங்கப்பாட்ட சொல்லவே இல்லை" எனச் சகோதரிகள் சொல்லவும். வேலு, " ஆமாம் , இவுக அப்பா, பெரிய பி எஸ் வீரப்பா, ஏம்புள்ளை என்னையவே பட்டுனு ஒத்துக்கிட்டாரு. குமரனை ஒத்துக்கிறதுக்கு என்ன" எனச் சிந்தாவைப் பார்த்துக் கேட்கவும்
" ஏய் மச்சான், புரியாமல் பேசாத, நீ ஒரே சாதி. அதுனால பிரச்சனை இல்லை" என்றாள் சிந்தா.
" ஏன் புள்ளை, நீங்களும் சாதி பார்பிங்களா. இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே . ஏண்டி, உன்னைக் காப்பாத்தினேன்னு என்னைக் கட்டிக்கிடலையா, ஒரே சாதின்னு தான் கட்டிக்கிட்டியா. எதெல்லாம் பார்த்திருக்கா பாரு தம்பி , சரியான வில்லங்கம் புடிச்சவ தான்" என வேலு ஆச்சரியமாகக் கேட்கவும்.
" மாமா,நீ கொஞ்ச நேரம் பேசாத இரு " என நகத்தைக் கடித்த முத்து, " அக்கா, இப்ப என்ன செய்யறது. நான் படிச்சு முடிச்சப் பிறகு தான் எல்லாம்னு சொல்லிட்டு, இப்ப பேச்சை மாத்துறாகளே. அக்கா எனக்குப் பயமா இருக்கு " எனச் சிந்தாவை முத்துப் படுத்திய பாட்டில், குமரன் அவளை முறைத்து விட்டு,
" எங்கப்பா, எங்க வீட்டு ஆளுங்க முன்னாடி, என் மருமகள் தான் என்னைத் திருவிழாவுக்கு வர சொல்லுச்சு. அதுக்காகத் தான் இத்தனை வருஷம் கழிச்சு வந்தேன்னு , பெருமையடிச்சிட்டு இருக்கார். இவளுக்குப் பயமா இருக்காம். இதெல்லாம் சரிப்பட்டு வராது, வேலு ப்ரோ, காலையில எடுத்தமே அந்தக் குதிரையிலேயே வச்சு இவளைக் கடத்திடவா" எனக் குமரன் கேட்கவும்.
" ஏன் நீ தான் கார் வச்சிருக்கேல்ல. மண் குதிரை தூக்கவே நான் தோள் கொடுக்க வேண்டியிருந்துச்சு. அதுக்கும் நீ என்ன தான் கூப்புடுவ. நீ கார்லைய போ சாமி" எனப் பேசி சகலைகள் இருவரும் சிரித்துக் கொண்டு இருக்கவும், கடுப்பான சிந்தா, " இந்தா இரண்டு பேரும் இளிச்சுகிட்டு இருந்தீகன்னா பாருங்க. விசயத்தை எங்கப்பாட்ட யாரு சொல்றது. அவரு பயப்படுவார்" எனச் சிந்தா கவலைப்படவும்,
" பொண்ணு தரமாட்டேன் னு சொல்ல மாட்டார்ல" எனக் குமரன் சந்தேகமாகக் கேட்கவும்.
"சந்தேகமே வேணாம். கட்டாயம் மாட்டேன் தான் சொல்லுவார்" என்றாள் சிந்தா.
" மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா" எனக் குமரன் கேட்கவும். " அதென்ன மறுபடியும்னு சொல்றீக, முதல்ல எங்க அப்பாட்ட எப்பச் சொன்னீக " எனச் சிந்தா மடக்கவும், " நீங்க கொஞ்சம் முத்துவை கண்டிசன் பண்ணாம இருந்திருந்தீங்கன்னா, விஷயத்தை அவருக்கே புரிய வச்சிருப்பேன்,. இப்ப இந்தச் சங்கடம் இல்லை " என இடக்கு பேசியவனைச் சகோதரிகள் இருவருமே முறைத்தனர்.
" ஏம்புள்ளை ,இரவைக்கு வள்ளி திருமணம் பார்க்க, நீயும் அவசியம் வந்தாகனுமா. இங்க இருவேன்" என வேலு, சிந்தாவை வம்பிழுக்கவும்.
" நீ மட்டும் எதுக்குப் போறியாம், பக்தி முத்திடுச்சோ" எனத் திட்டினாள்.
" ஏய் சாமியாடி, அச்சானியமா பேசாத. நிசமாவே பக்தியோட தான் போறேன். " எனப் பேசியவர்களை முத்துவும் குமரனும் புரியாமல் பார்த்து, விசயம் என்னவெனக் கேட்கவும், சிந்தா தங்கையையும் வேலை இருப்பது போல் உள்ளே கூட்டிச் சென்றாள். வேலு குமாரனிடம் " நெசமாவே பார்த்தது இல்லையா" என வியந்து விட்டு , " முதல் ஒரு மணி நேரம் பக்தி பூர்வமா பாட்டா படிச்சு, முருகனே இறங்கி வர்ற மாதிரி பாடுவாக. அப்புறம், சினிமா பாட்டு, ஜோக்கு அப்படி, இப்படின்னு ஓடும், ஆம்பளையும், பொம்பளையும் மாத்தி, மாத்தி கணீர்னு பாடுவாக, ஆர்மோனிய பொட்டி , தபலா, பின்பாட்டுன்னு கச்சேரி களைக் கட்டும்,
வள்ளியை சைட்டடிக்க முருகன் வரவுமே மேயாத மான் னு ஆரம்பிப்பாகப் பாரு, அப்புறம் இராத்திரி முச்சூடும் இரட்டை அர்த்த்தில தான் பேசுவாக. பொம்பளைங்க முகத்தைச் சுழுச்சுட்டு கிளம்பிடுவாக" எனச் சொல்லிச் சிரித்தவன். " நீ வந்து பாரு, குமரனுக்குத் தெரியாம என்ன நடக்கப் போகுது" என்றான் வேலு.
" எப்பவுமே , வள்ளித் திருமணம் இப்படித் தானா " எனக் குமரன் சந்தேகம் கேட்கவும், " முந்தி காலத்தில அசலா நடந்திருக்கும், இப்ப எவன் கதாகாலாட்சேபம் கேப்பான், இந்த மக்களுக்கு இதுல ஒரு கிளுகிளுப்பு, கூத்து புக் பண்ணும் போதே , எப்படின்னு கேட்டு குவாக , மக்களோட ரசனைக்கு ஏத்த மாதிரி கூத்து. அவனுங்களும் காசு பார்க்கணுமே, வயித்துப் பாட்டுக்குத் தான் " என அவர்கள் வாழ்க்கை முறையைப் பற்றியும் பேசினார்.
அய்யனார் வீட்டுக்கு வருவார் என எதிர் பார்க்க, குதிரையெடுப்புத் திருவிழாவில் வெகு உற்சாகமாகப் பங்கு கொண்ட மூவர், தாத்தா அய்யனார், மாமன் சுப்பு, பேரன் சத்தியமூர்த்தித் தான். சாப்பிட கூட வீட்டுக்கு வராமல் கோவில் காளையாகவே சுற்றித் திரிந்தனர்.
மேலப்பூங்குடி ஊர்சனமே இரவு உணவை ஏதோ பெயருக்குச் சாப்பிட்டுவிட்டு, குதிரைகள் வைத்திருக்கும் பொட்டலில் அரங்கத்தின் முன் கூடியது. குதிரை கூத்துப் பார்ப்பதாக ஐதீகம், ஆனால் ஊர் மக்கள் தான் வள்ளி திருமணம் நாடகம் பார்க்க ஒன்று கூடினர்.
இரண்டு நாள் ஆட்டம் பாட்டம் எனவுமே வருத்தப்படாத வாலிபர்கள் திண்டுக்கல் ரீடாவை அழைத்து வரச் சொல்ல, பெரிசுகள் வள்ளி திருமணம் எனப் பெரிய பக்திமான் வேஷமிட்டதுகள். ஆனால் இன்றைய வள்ளித் திருமண நாடகத்தை முதல் ஒரு மணி நேரத்தை மட்டுமே பெண்கள், குழந்தைகள் சேர்ந்து அமர்ந்து பார்க்கலாம். அதனால் முதல் நாள் வள்ளித் திருமணமும், அடுத்த நாள் இன்னிசைக் கச்சேரிக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.
அக்காளும் தங்கையுமாக ராக்காயியையும் அழைத்துக் கொண்டு மாலையில் ஒரு முறைச் சென்று குதிரை இருக்குமிடம் கிழவிகள் அணியோடு, பெரிய வட்டமாகச் சேர்ந்து கும்மிக் கொட்டி அய்யனை வழிபட்டு வந்து விட்டனர். ராக்காயி சும்மா அலைய முடியாது என ஊர்கிழவிகளோடு சமரசம் செய்து கொண்டு அங்கேயே இருந்துவிட, அதுகளும் சிந்தாவைப் பற்றிக் கேட்க, இந்தக் கிழவியும் இட்டுக் கட்டி நிறையச் சிந்தா லீலைகளைச் சொன்னது. ஏதும் அசம்பாவிதம் நேருமோ , யாருக்கு நேரும் என உன்னிப்பாக ஊர் மக்கள் இளையவர் ஆர்வத்தோடும் முதியவர்கள் திகிலாகவும் பார்த்து வந்தனர்.
இரவு நேரம் , வேலு சிந்தா , முத்து , குமரன் நால்வருமாகக் கூத்துப் பார்க்கச் சென்றனர். அங்குச் சிவநேசனும் மீனாள் அவர்கள் உறவினர்கள் எல்லாருமே வந்திருந்தனர். கங்காவை சிந்தா தேடினாள். மீனா அவள் வரவில்லை எனச் சொல்லவும் சற்றே நிம்மதியாக மூச்சு விட்டனர். அதோ, இதோ என ஊர் பெரியவர்களுக்குச் சால்வை மரியாதை என ஒருமணி நேரத்தைக் கடத்தி விட்டு நாடகக்காரர்களிடம் மேடையைத் தந்தனர். அவர்களும் அரை மணிக்கும் மேலாக ஒவ்வொரு வராக அறிமுகப்படுத்திப் பாட்டுப் பாடி துவக்க நேரமானது.
இன்று குதிரை கந்தன் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டதால், ஒரு பெரும் பொறுப்பை முடித்த திருப்தியோடு வள்ளியும், கந்தனும் கூத்து பார்க்க வரவும் இவர்களது தோழிகள் கூட்டமே கூடிச் சிரித்து மகிழ்ந்திருந்தனர். இரவு முழுவதும் விடிய விடியக் கூத்து நடக்கும் ஆதலால் தார்ப்பாய்கள் , கோரைப் பாய் என ஒவ்வொரு குடும்பமும் எதையாவது விரித்து அதில் அமர்ந்திருந்தனர்.
ஆனால் சற்றே நேரத்திலேயே சிந்தாவுக்கு, அங்கே உட்கார முடியாமல் எதோ ஒரு சக்தி வீட்டுக்குப் போகச் சொல்வது போல் இருந்தது. வள்ளி அதே நேரத்தில் குமட்டுவது போல் எழுந்து கூட்டத்தை விட்டு வெளியே ஓடவும், தூங்கும் மகளை முத்துவிடம் கொடுத்து விட்டு, இவளும் பின்னாடியே செல்ல, குமரனிடம் முத்துவை கண் காட்டி விட்டு வேலுவும், வள்ளிக்குப் பின் கந்தனுமாக வந்தனர். குமரன் முத்துவின் அருகில் அமராமல் அவளுக்குப் பின்னால் ஒரு சேரில் அமர்ந்து கொண்டான்.
வாந்தி எடுத்த வள்ளியை முகத்தைத் துடைத்து ஆசுவாசப்படுத்திய சிந்தா அவளை அணைத்துத் தாங்கியபடி நிற்க. மேலும் உட்கார இயலாமல் வீட்டுக்குப் போகலாம் என்றாள். அதே போல் கந்தன் வண்டியில் அவள் ஏற, சிந்தாவும் வள்ளி வீடு வரை சென்று வரலாம் என வேலுவை அழைத்துக் கொண்டு சென்று அவளுக்குக் கைவைத்தியம் பார்த்துவிட்டு வெளியே வந்தவள், " மச்சான், வீட்டுக்குப் போவோம். எனக்கு என்னமோ சரியா தோணலை" எனவும் சந்தேகப்பட்ட வேலு, குமரன் பொருத்தித் தந்த சிசி டிவி போட்டேஜை பார்த்து விட்டு, அவசரமாகக் குமரன், சுப்புவுக்கும் தகவல் தந்துவிட்டு, சிந்தாவை வள்ளி வீட்டில் நிறுத்தி விட்டுக் கந்தனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் பறந்தான். வீட்டில் அவன் கண்ட காட்சியில் உறைந்து நின்றான்.
என்ன நேர்ந்தது சிந்தாவின் வீட்டில் பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment