சிந்தா- ஜீவநதியவள் -22
"அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது."
பொறாமை எண்ணம் உள்ளவர்களுக்கு வெளியே இருந்து துன்பம் வரத் தேவையில்லை. அவர்களிடம் இருக்கும் பொறாமை எண்ணமே போதும், என்பது வள்ளுவர் பெருமானார் வாக்கு.
ஜீவநதி என்பது வற்றாத நதி எனப் பொருள் தரும். தன்னால் இயன்ற அளவு, எல்லா ஜீவராசிகளையும் அரவணைத்து, உயிர்ப்பித்துக் காக்கும் உன்னதமானதை ஜீவ நதி என்போம். நமது நாட்டில் புனிதமாகவும், ஜீவதானம் தருவதாகவும் வணங்கக் கூடியது ஜீவநதி கங்கை. அதன் பெயரைச் சூட்டினால் அது போன்ற குணத்தைத் தம் மக்கள் பெருவர் என்றே பெற்றவர் சூட்டுகின்றனர். இங்கும் நல்ல பண்பான தாய் தந்தையரின் மகவாய், நற்பண்புகளைப் போதிக்கும் உயர்குடியில் பிறந்தும், புனிதமான கங்கையின் பெயரைப் பெற்றும் கூட அவளுக்கு நற்பண்பும், புத்தியும் வாய்க்கவில்லை.
குயவன் கையில் கிடைக்கும் மண் ஒன்றே தான். அது என்னவாக உருப்பெறுகிறது, எவ்வாறு சிறக்கிறது என்பதே அதன் நியதி. அதே போல் நல்ல தாய்க்குப் பிறந்த மகள் அழுக்காறு எனும் குணத்தால் பல தவறுகளைச் செய்கிறாள். ஒன்றை மறைக்க மற்றொன்று, அதை மறைக்க இன்னொன்று என அவளது வாழ்வே பொய்மையில் கரைகிறது.
குந்துமணிக் குப்பையில் கிடந்தாலும், அதன் நிறம் மங்காது. பார்ப்பவர், கீழே போட மனமின்றி அதனைப் பத்திரப்படுத்தவே செய்வர். அது போல் ராஜியம்மாள் பத்திரப்படுத்திய குண்டுமணி தான் , ஒலிக் குன்றாத, விரும்பியனைத்தும் தரும் தெய்வமணி பண்ணைக்கார அய்யனாரின் மகள் சிந்தா. சிந்தாமணிக்கு மருந்து என்றும் பொருள் உண்டு. பெயரின் காரணமாகவோ இவளுக்குக் கை வைத்தியமும் கை வந்தது.
இறைவனின் திருவருள் ஓர் ஜீவனை உலகின் எவ்வுடம்பில் யாரிடத்தில் சேர்க்கும் என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம்.
சிந்தாமணி என்ற அற்புதமான ஆத்மாவை இறைவனின் திருவருள் இவ்வுலகில் அனுப்பும் போதே அவளது உடன்பிறப்புகளுக்கு மட்டுமின்றிப் பெற்ற தகப்பனுக்குமே அவளையே தாயாய் தான் அனுப்பியது. தாம் இம்மண்ணுலகில் வரக் காரணமாயிருந்த தாய் மறைந்த பின், இருவகையில் தாயின் இழப்பைத் தனதாக்கிக் கொண்டாள் சிந்தா. ஒன்று தாயற்ற தங்கை தம்பிக்குத் தாயானது. மற்றொன்று அரவம் தீண்டி அரும் உயிரை நீத்த அன்னையின் கதி யாருக்கும் வரக் கூடாது என அதற்கான வைத்தியத்தைப் பயின்றது.
சமூக ஏற்றத் தாழ்வும், பொருளாதார ஏற்றத் தாழ்வும் மனிதன் உருவாக்கியவை, இறைவனுக்கு அது எல்லாமே சமம் தான். குடிசை வீட்டில் வரும் தூக்கம் குளுகுளு அறையில் வராமல் போகலாம். எல்லாம் அவரவர் கண்ணோட்டம்.
இங்குக் கங்காவின் கண்ணோட்டமே, சிந்தாவை தாழ்ந்த குலத்தவள் என்ற நினைப்பு, சிந்தாவின் இயல்பான குணத்தால் அவள் பெற்ற பாராட்டுகளைக் கூடப் பொறுக்க இயலாததாகப் போனது. ஒரே வயது என்பதும் கூடுதல் காரணமாகிப் போனது. அதுவே அழுக்காறு என்ற நிலை தாண்டி துவேஷமாக மாறியது.
சிவநேசனுக்குச் சிந்தாவின் குடும்பத்தின் மேல் அக்கறையும், பாசமும், தனது குடியானவர்கள் என்ற முதலாளித்துவத் தோடு சேர்ந்தே இருந்தது. அதனால் அதைத் தாண்டி சிவநேசன் என்றுமே இறங்கியது இல்லை.
குமரனுக்கு அவன் வளர்ந்த சூழல் , குடும்ப அமைப்பு ஆகியவற்றால் சாதிய, பொருளாதார ஏற்றத் தாழ்வைத் தாண்டி, ஒரு குடியானவனின் மகளை, வாழ்க்கைத் துணையாக ஏற்குமளவு, பக்குவமும், துணிச்சலும் இருந்தது. போன தலைமுறையினருக்கும், இந்தத் தலைமுறையினருக்குமான இடைவெளி , சமுதாய மாற்றங்கள் இதனை முடிவு செய்யும் காரணிகளாக உள்ளன.
ஒருவர், மற்றவரை , சகமனிதனை எவ்வளவு விரும்புகிறார், சகிக்கிறார், வெறுக்கிறார் என்பதைப் பொறுத்தே அவர்களுக்குள்ளான பந்தமும் இருக்கும்.
கங்காவின் பொறாமை குணம், குற்றம், பழி வாங்குதல், பாவச் செயல் எனக் கூடிக் கொண்டே தான் போனது. அது தவறு என அறியும் நிலையிலும் அவள் இல்லை.
பஞ்சாயத்து முடிந்து, சிந்தா குடும்பத்தை வீடு வரை சென்று வேலு, சிந்தாவுக்கு எப்படியும் உண்மைத் தெரியத்தான் போகிறது எனக் குமரன் சபையில் அவளது பெயரை எடுக்காததற்கான தன்னிலை விளக்கம் சொல்லவே வந்தான். முத்து சீற்றத்தோடு நிற்க, சிந்தா தகிக்கும் ஒளியாக இருக்க, வேலுவை அழைத்து விசயத்தைச் சொன்னவன், வேலுவின் பதிலை நோக்கி அவன் முகத்தையே பார்த்து நின்றான்.
" சிந்தா, சோமனுக்குச் சொன்ன பதில் தான் தம்பி. இன்னும் ஏழு நாள் பொறுத்திருந்து பார்ப்போம். இவள் கையால இன்னும் நிறைய உயிர் பிழைக்கனும்னு விதி இருக்கும் போது, சிந்தாவை யாருமே எதுவும் செய்ய முடியாது. இதை இரண்டாவது முறையா, நான் தெரிஞ்சுக்கிட்டேன். பெத்தவுககிட்ட இருந்து எத்தனை நாளைக்குக் குத்தத்தை மறைப்பீக. பிள்ளைகளால பெத்தவுகளும் வேதனையை அனுபவிக்கனுமின்னா, அனுபவிச்சே ஆவாக. நடக்கிறது நடக்கட்டும் " எனக் குமரனைத் தேற்றவும், குமரன் முத்துவை திரும்பித் திரும்பிப் பார்க்கவும், " சின்னக்குட்டி கோபமும் நியாயமானது தானே, விடுங்க தன்னால சரியாகிடும்" என அனுப்பி வைத்தான்.
அவன் போன பிறகு, முத்து வேலுவோடு சண்டைக் கட்டி, கங்காவுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என வாதாட, சிந்தா ஒரே வார்த்தையில், " அவுக தான் சொல்லிட்டாக இல்லை. நீ உன் வேலையைப் பார்" என அனுப்பி விட்டாள்.
குமரன் தாங்க முடியாத கோபத்தோடும், கனத்த மனதோடும் வீட்டுக்கு வந்தவன், சத்தமில்லாமல் கங்காவை கண்காணிக்கத் தீர்மானித்தான். இவளை கையும் களவுமாக ஆதாரத்தோடு பிடிக்க வேண்டும் என நினைத்தபடி வீடெங்கும் அவளை அலச, ஆளைக் காணவில்லை. அவனுக்கு ஆயாசமாக இருந்தது, சிந்தாவுக்குக் கங்கா செய்த மா பாதகம் ஒரு புறம், பெரியம்மாவின் தவிப்பு ஒரு புறம், இதையெல்லாம் தாண்டி , அவனின் முத்தழகி என்னவெல்லாம் கேட்டுவிட்டாள். மாடியறைக்குச் சென்று ஜன்னலைப் பற்றிக் கொண்டு வெளியே வெறித்தவனுக்கு , காற்று செய்தியைக் கடத்தி வந்து தந்தது. ஆம் கங்கா அதற்கும் மேல் மொட்டை மாடியில் நின்று, சோமனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
" உனக்கு எந்த வேலையையும் உருப்படியா செய்யத் தெரியாது. ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே, அவளை உன் அடிமையாக்கச் சொன்னேன், அதுக்குத் துப்பு இல்லாமல், என் அண்ணனையும் சேர்த்து மாட்டி விட்ட. அவளாவது அப்படியே செத்துத் தொலைவாளான்னு பார்த்தா, புதுப் புருஷனோட வந்து நின்னா. அவனும் கருப்புசாமி கணக்கா ஐஞ்சு வருஷமா அவளைக் காவக் காக்கிறான். இன்னைக்கு எவ்வளவு நல்ல சான்ஸ். அக்காகாரி மண்டையைப் போட்ட, தங்கச்சிகாரியை அவள் மாமனுக்கே கட்டி வைப்பாக, இந்தக் குமரன் பயலுக்கும் பதிலடி குடுத்த மாதிரி இருந்திருக்கும். எல்லாத்தையும் கெடுத்தியே. எப்படி அவங்களுக்குத் தெரிஞ்சது" எனக் கங்கா பேசிய வார்த்தைகள், தெள்ளத் தெளிவாய் குமரன் காதில் விழ , ஒரு நொடி ஆடிப் போனான்.
'ஒரு பெண்ணிடம் எப்படி இவ்வளவு குரூரம் இருக்கக் கூடும்' என்ற அப்பட்டமான அதிர்ச்சி. அதுவும் முத்துவை அவள் சொன்ன விதத்தில், இன்று முத்துத் தன்னைக் கேட்டவை எல்லாம் நியாயமே எனப் பட்டது.
மாலையில் சிந்தாவைக் காப்பாற்றி விட்டோம், எனவுமே நன்றி சொல்லி அழுதவள், அவன் கங்காவின் பெயரை எடுக்க வேண்டாம் எனவும், " ஏன் அவள் உங்க இரத்தங்கவும், பாசம் பொத்துக்கிட்டு வருது. இன்னேரம் எங்க அக்காவுக்கு எதாவது ஆகியிருந்தா, அப்பவும் இதே தான் சொல்லுவீகளா.
நான் தான் அவள் பேச்சை ஒட்டுக் கேட்டு உங்க கிட்ட சொன்னேன்னு தெரிஞ்சா, என்னை அசிங்கப்படுத்தவும் ஆள் அனுப்புவா. அப்பவும் பேசாம இருப்பீகளா. நாளைக்கு உங்களைக் கட்டிக்கிட்டா எனக்குச் சாப்பாட்டில விசம் வைக்க மாட்டானு என்ன நிச்சியம். நான் செத்துக் கிடந்தாலும் அப்பவும் உண்மையை மறைக்கத் தான் பார்ப்பீக. பெரிய வீட்டுக் கௌரவம், மானம் மரியாதை போயிடக் கூடாதே. பண்ணைக்காரன் மகள்னா, அசிங்கப்படுத்தலாம், ஆள் வச்சும் கொல்லலாம், யார் கேக்கிறதுக்கு இருக்கா. நீங்க கொடுக்கிற தைரியத்தில தான் அவள் தப்பு செஞ்சுக்கிட்டே போறா " எனப் பொரிந்து தள்ளினாள் முத்து.
அப்போது கங்கா, சீமைக் கருவைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்ட சேட்டின் ஆட்களிடம், தாங்கள் ஊரில் இல்லாததைக் காட்டி மட்டுமே கொடுத்து மட்டுமே இருப்பாள் எனக் குமரன் நினைத்திருக்க இன்று அவளது பேச்சைக் கேட்கவும் அவளது சிந்தனை ஓட்டத்தில் , தன்னையும் பழி தீர்க்கும் அவளது குணத்தில் அதிர்ச்சி அடைந்தான்.
கங்காவின் வாக்குமூலத்தை, கனத்த இதயத்தோடு, தனது மொபைலிலும்பதிவு செய்து கொண்டவன், ' இவளைத் திருத்த, தானும் இவ்வளவு தரமிறங்க வேண்டுமா என யோசித்தவன், இல்லை இது சிந்தாவின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை எனப் பதிவு செய்து கொண்டான்.
சிவநேசன் அறைக் கதவைத் தட்டியவன், அண்ணனுடன் பேச வேண்டும் என்றான். தம்பியின் முகத்திலிருந்தே தனது யூகம் சரியென அறிந்து கொண்டவன், " கங்கா தானா " என்றான். அவன் ஆம் எனத் தலையை ஆட்டவும், " அம்மா தூங்கட்டும், அப்பாவை வச்சு பேசுவோம்" என்றான்.
குமரன் யோசனையாகப் பார்க்கவும், " அம்மாவை விட அப்பா ஸ்ட்ராங்க் தான், அவரும் தெரிஞ்சுக்கட்டும். ஒரு உயிரோட விளையாடுறளவுக்கு அவளுக்குத் தைரியம் வந்திருக்கே. நாளைக்கே இதை நம்மளுக்கும் செய்யமாட்டான்னு என்ன உறுதி. மீனு விசயத்திலேயே எவ்வளவு செஞ்சிருக்கா" என்ற சிவநேசனின் வெறுத்த வார்த்தைகள், குமரனுக்கு மனதில் இன்னும் பாரமேற்றியது.
ராஜியம்மாள், தவிப்போடு அமர்ந்திருந்தவர், சாமந்தி, மீனாளிடம் புலம்பித் தள்ளிவிட்டார். மகேஷ் வந்திருந்ததால் அவள் சிந்துஜாவைப் பார்த்துக் கொள்ள, மூத்த பெண்கள் கங்காவின் செயலைப் பற்றித் தெரியாமலே சிந்தாவுக்காகப் புலம்பினார்கள். கட்டாயப்படுத்தி ராஜியம்மாளை சாப்பிட வைத்து, ஒரு தூக்க மாத்திரை கொடுத்தே தூங்கவைத்தான் சிவநேசன்.
இப்போதும் கங்காவுக்கு, சிந்தா தப்பித்ததில் கோபம் இருந்தது. யார் தப்ப வைத்தது என்ற கேள்வி மண்டையில் குடைந்தது. அவள் யோசனையோடு இருக்கும் போதே, கீழிருந்து மகாலிங்கத்தின் குரலில் கீழே இறங்கி வந்தாள்.
நடுக் கூடத்தில் மற்ற கதவு ஜன்னல்கள் , பின்கட்டுக்கான கதவும் கூட அடைக்கப்பட்டு இருந்த முஸ்தீபுகளிலேயே, தன்னை ரவுண்டு கட்டுகிறார்கள் என எதிர் தாக்குதலுக்கும் தயாரானாள்.
மகாலிங்கம், சிவநேசன், குமரன் மூவருமே கோபமாக அவளை எதிர்கொள்ளத் தயாராக, பெரியவர் மட்டுமே ஷோபாவில் அமர்ந்திருந்தார். எடுத்தவுடன் நேராக விசயத்துக்கு வந்தார் மகாலிங்கம்.
" சிந்தாவை தாக்கினதில் உனக்கும் பங்கு இருக்கா" என நேரடியாகக் கேட்கவும், " இல்லப்பா " என அப்பாவியாகக் கங்கா நடித்தாள்.
" உன் நடிப்பு போதும் நிறுத்து" எனச் சிவநேசன் சீறவும், " அவுகளுக்கு வேண்டிய ஆளுங்கவும் அண்ணேன் பழைய கோபத்தை என் மேலக் காட்டுது" எனத் தன் தவறை மறைக்க அண்ணனை அதில் இழுத்தாள்.
" அப்போ, வீண் பழி போட்டதும் நீதான்னு ஒத்துக்குறியா " எனச் சிவநேசன் உருமவும். " நீ செஞ்சத்தைத் தானே நான் சொன்னேன்" என விடாமல் அவள் வாதாடவும், " நீ செஞ்சதெல்லாம் நான் சொல்லவா" எனச் சிவநேசனின் நேர் பார்வையில் அவளுக்குமே உள்ளே உதறல் தான். ஆனாலும் " எதாவது தப்பா இருந்தாச் சொல்லு" என வீம்பாகவே கேட்டாள்.
" அப்பா, நான் உங்கள்ட்ட சொல்ல வேணாம்னு இத்தனை நான் இருந்தேன், இவ குற்றம் கூடிட்டே போகுதுப்பா" என ஐந்து வருடம் முன்பானதை மேலோட்டமாகச் சொல்லி, மீனாவைத் தூண்டி அவளை மனகாயப்படுத்தி வைத்திருந்த விதத்தையும் சொன்னான்.
" அப்பா, நான் அத்தாச்சியை எச்சரிக்கை செய்யத் தான் அதெல்லாம் சொன்னேன். " எனச் சப்பைக் கட்டு கட்டியவளை ,
" என்ன எச்சரிக்கை, அந்தப் பொண்ணு சிநாதாவை அன்னைக்கே அசிங்கப் படுத்தி அனுப்பியாச்சு, பண்ணைக்காரனா இருந்தாலும் அப்பனும் மகளும் ரோசக்காரக, இந்தப் பக்கம் திரும்பிக் கூடப் பார்த்தது இல்லை. மீனா இப்ப தான் இங்க வந்து வாழுது. அதுக்கு முன்ன நம்ம வீட்டுக்குக் கூட வந்தது இல்லை. அப்படி இருக்கையில இந்த விசயத்தை எல்லாம் எதுக்கு, மருமகள் கிட்ட சொன்ன. " எனப் பல கேள்விகளைக் கேட்டவர்.
" சிந்தா மேல உனக்கு அப்படி என்ன கோவம்." எனப் பெரியவர் கேட்கவும். " அவள் உங்க மருமகளா வந்திடுவாளோன்னு பயம் தான். வேறென்ன. எனக்கு ,அண்ணன் அவள்கிட்ட பழகினது பிடிக்கலை. நம்ம சாதி, அந்தஸ்து கௌவரம் எல்லாத்துளையும் உசந்தவுக. கீழ் சாதியில இருந்து ஒருத்தி உங்களுக்கு மருமகளா வந்தா ஒத்துக்குவீங்களா" என அப்பாவிடமே வாயாடவும்.
" அப்பா, சிந்தா மேல எனக்கு அப்படி ஒரு அபிப்ராயம் இருந்ததே இல்லை. அவள் நம்ம குடியானவரோட மகள். நான் எப்படி , அப்படிப் பார்ப்பேன்" எனச் சிவநேசன் சொல்லவும் கங்காவை விடக் குமரனே இவர்களின் எண்ணப் போக்கை நினைத்து அதிர்ந்தான்.
" அப்ப, உங்க அண்ணனை காதலிச்சா, அந்தப் பொண்ணைக் கொன்னு போடுவீங்களா" எனக் குமரன் நேராகவே கேட்கவும்.
" குமரா, நம்ம அந்தளவுக்கு, கொடூரமானவுக கிடையாது. ஞாயம் தர்மம் பார்க்கிறவுக, அதெல்லாம் செய்ய மாட்டோம் " என்றார் பெரியவர். இப்போதும் கங்கா, குமரன் , முத்துவை விரும்பும் விசயத்தை வெளிப்படுத்தவில்லை. அதுவே குமரனுக்குச் சாதகமாக அமைந்து விட்டால் என்ற நினைவு. ஆனால், குமரன் விடுவதாக இல்லை. தனது அலை பேசியை எடுத்து, கங்காவின் பேச்சை ஒலிக்க விட்டான். அதில் அதிர்ந்தது மற்ற மூவருமே தான்.
" போதுமா, இது உன்னோட வாக்குமூலம் தான். நீயே தான் நாங்க கிளம்புனனதை, யாருக்கோ தகவல் கொடுத்திருக்க. அவன் ஆள் அனுப்பியிருக்கான். அநேகமா அந்தச் சோமன் தான்னு நினைக்கிறன், இதைப் போலீஸ்ல குடித்தா, சரியான எவிடென்ஸ். அட்டம்ப்ட் டூ மர்டர் கேஸ்ல உள்ள போவ" என மிரட்டவும். சில நிமிடங்கள் அதிர்ந்தவள், அடுத்தப் பேச்சை ஆரம்பிக்கும் முன் சிவநேசன் தங்கையை அறைந்திருந்தான். அவளது அலைபேசியைப் பிடுங்கி, கால் ஹிஸ்டரியைப் பார்த்தவன் மிரண்டு தான் போனான். கேசவனை விட அவனுக்குத் தான் அதிக முறை பேசியிருந்தாள்.
" தொலைச்சுபுடுவேன் நாயே, எவ்வளவு திண்ணக்கம் இருந்திருந்தா, அவன் கூடச் சேர்ந்து வேலை காட்டுவ. இப்ப தான தெரியுது, சிந்தனை கலங்கப் படுத்த அப்ப ஆள் அனுப்புவதும் நீ தான், இப்ப கொல்லச் சொல்லி ஆள் அனுப்புவதும் நீ தான். நம்ம வீட்டுல வந்து இப்படி ஒரு கொலைகாரி எப்படிப் பிறந்த .நம்ம வயல் வேலைக்கு எதிரா மக்களைத் திருப்புறத்தே அந்தச் சோமன் தான். அப்ப நீ எங்களையும் சேர்த்து எதிர்கிற, உனக்கு யாருமே நல்லா இருந்தா பிடிக்காதா. " என மேலும் பல வார்த்தையம்புகளை விட்டவன், " அப்பா, என்னப்பா பேசாம இருக்கீங்க" எனச் சிவநேசன் மகாலிங்கத்தை உசுப்பவும்.
" என்னத்தைப்பா பேசச் சொல்ற. நல்ல வேலை உங்க அம்மா இதைக் கேட்கலை. உயிரையே விட்டுக்கும். " என நொந்து போனவர். தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.
" நான் செஞ்சேன் தான், ஆனால் எதுக்குச் செஞ்சேன்னு கேளுங்க. அதுவும் அந்த ஆளுங்க ஏற்கனவே குறி வச்சிருந்தாக. நான் வேற ஒண்ணுமே செய்யலை. இவன் குமரன் மேல இருக்க ஆத்திரத்தில கமுதிக்குப் போன விசயத்தை மட்டும் தான் சொன்னேன். நல்லவனாட்டம் எல்லாம் செய்யறானே, இவன் தான் உங்களைச் சந்தி சிரிக்க வைக்கப் போரான். இந்தக் குமரன், சிந்தாவோட தங்கச்சி முத்துவை லவ் பண்றான். அவளைக் கோயமுத்தூர்ல சேர்த்து விட்டு , பீஸ் முதற்கொண்டு கட்டி. பத்து நாள் கூடவே வச்சிருந்து தான் அனுப்பினான். உண்டா, இல்லையான்னு கேளுங்க" எனக் காயை, சாமர்த்தியமாகக் குமரன் பக்கம் நகர்த்தினாள் கங்கா.
" ஆமாம் நான் முத்துவை லவ் பண்றேன். அவளைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அது என்னோட பர்சனல். அதுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம் " எனக் குமரன் வெகுண்டு எழவும். கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக ஒவ்வொன்றாக வருகிறதே என அப்பாவும், மகனும் பார்த்தார்கள்.
" சம்மந்தம் இருக்குடா, நீ இந்த வீட்டுப் பையன் தானே, நீ ஒரு கீழ்சாதி புள்ளையைக் கல்யாணம் பண்ணா, அது எங்களுக்கு அவமானம் " என்றாள்.
" ஓஹோ, உனக்கு நான் அவளைக் கல்யாணம் பண்றது அவமானம். ஆனால் நீ கொலை பண்ணத் துணியறது கவுரவமா" என இருவரும் மாறி மாறி பேசவும். பொறுக்க இயலாமல் மகாலிங்கம் " இரண்டு பேரும், கொஞ்சம் நேரம் பேசாமல் இருங்க " எனக் கத்தவும் பெரிய சத்தத்தில் ராஜியம்மாள் எழுந்து பதட்டமாக ஓடிவந்தார்.
" என்ன ஆச்சு, என்ன என்ன" எனப் பதறியவரை சிவநேசன் தான் அமைதிபடுத்தினானன். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கங்கா, தன் விசயம் பெரிதாகப் பேசப்படாமல் இருக்க வேண்டும் என , குமரன், முத்து விசயத்தைப் பெரிதாக்கினாள்.
" உங்களுக்குத் தெரியாமலா எதுவும் நடக்கும், அவள் சிந்தாவை பெரிய மருமகளாக்கிக்க முடியலைங்கிற , குறையைத் தீர்க்க சின்னவ முத்துவை சின்ன மருமகளாக்க பார்க்கிறீங்களா" எனக் கங்கா அம்மாவைக் கேட்கவும், ' ஐயோ, இவள் வாயில் விழுந்தால், சின்னப் பெண்ணின் பெயரும் கெடுமே, ஒரு பெண்பாவம் போதாதா எனப் பயந்த ராஜியம்மாள் " இப்படிப் பேசி தான் பெரியவளைச் சந்தி சிரிக்க வச்ச. வேணாமடி, அபாண்டமா பழி போடாத" என மகளை அடக்கினார்.
மனைவி வரவும், மகளைக் கண்டிக்க முடியாமல் போனார் மகாலிங்கம். அவருடைய குணமே தன்னுடைய வீட்டுப் பிரச்சனை யை பெரிதாக்காமல் அமுக்கப் பார்ப்பது தான்.
" நேரமாயிடுச்சு, அவரவர் படுக்கப் போங்க. காலையில பார்த்துக்கலாம். அம்மாவும் தூங்கட்டும்" என மகாலிங்கம் மக்களை அனுப்பப் பார்க்கவும். குமரன் கங்காவை வேறு எதுவும் தண்டிக்காத பெரிய தகப்பனைக் குமரன் வெறுமையாகப் பார்த்தான். சிவநேசன் ," குமரா, அவருக்கும் கொஞ்சம் டைம் குடு" என்றான்.
ஆனால் கங்கா முந்திக் கொண்டு, " அப்பா, இவன் கீழ்சாதில பொண்ணு கட்டுனா, நம்ம சாதிசனம் நம்மளோட புழங்க மாட்டாக. கண்டிசனா அதெல்லாம் கூடாதுன்னு சொல்லிடுங்க" என்றவளைக் குமரன் அசூசையாகப் பார்க்கவும், மற்ற இருவரும் அமைதி காக்க. ராஜியம்மாள் குமரனிடம் , " குமரா, பெண் பாவம் பொல்லாதது. நீயும் அந்தக் குடும்பத்துக்குச் சோதனையை வரவைச்சுடாதடா" எனப் பதறிய படி கேட்டுக் கொண்டார்.
" பெரியம்மா, என்னால அந்தக் குடும்பத்துக்கும், முத்துவுக்கும் நல்லது தான் நடக்கும். யார் என்ன சொன்னாலும், முத்து தான் எனக்கு மனைவியா வருவாள். ஆனால் உங்க மகள், இதில நடுவில் விளையாண்டா பொறுத்துப் போக, நான் சிவநேசன் இல்லை, குமரன் அதை ஞாபகத்தில் வச்சுக்கச் சொல்லுங்க" என்றான்.
" குமரா, கல்யாண விசயத்தை நீயா முடிவு பண்ணினா போதுமா, பெரியவுங்கட்ட கேட்க வேண்டிய அவசியம் இல்லை, அப்படித் தானே" என்றார் மகாலிங்கம். அவரைக் கூர்ந்து பார்த்தவன், " சரி பெரியப்பா, உங்கள்ட்டையே கேக்குறேன். நான் அய்யனார் மகள் முத்துவை விரும்புறேன். எனக்கு முறைப்படி பேசி கல்யாணம் பண்ணி வைங்க" என நேராகவே கேட்டான். இதை எதிர்பாராத மகாலிங்கம், " எனக்குச் சாதி மாறி கல்யாணம் பண்றதுல எல்லாம் உடன்பாடு கிடையாது. உங்கப்பனை வரச் சொல்லுவோம், அவன் முடிவெடுக்கட்டும். அதுக்கு மேல உன் இஷ்டம் " என அவர் விட்டேற்றியாகச் சொல்லவும்.
" இது நான் எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் இல்லை. பெரியம்மா, நீங்க என்ன சொல்றீங்க" எனவும், " குமரா " என அழுதார். குமரன் சிவனேசனைப் பார்க்கவும், " குமரா, கல்யாண விசயத்தில இவ்வளவு அவசரம் வேண்டாம். கொஞ்சம் நிதானமா யோசி" என்றான்.
" அண்ணேன், நான் நல்லா யோசிச்சிட்டேன். நீங்க தான், அவுங்க குடும்பத்தைச் சாதியைத் தாண்டி யோசிக்க மாட்டேங்கிறீங்க. எப்பவும் யோசிக்கவும் மாட்டீங்க. யாரோ ஒரு நீரஜ், அமிர்தாவால இந்தக் குடும்பத்துக்கு நல்லது நடக்குதுங்கும் போது, அவங்களோட சாதி உங்க கண்ணுக்குத் தெரியலை. அதே குமரன், முத்துங்கும் போது, உங்களால ஏற்றுக்க முடியலை. "எனவும் "குமரா" எனச் சிவநேசன் அதிரவும். " அது தான் அண்ணேன் உண்மை யோசிச்சு பாருங்க. " என்றவன்.
" சில விசயங்களில் நீங்க முடிவெடுக்கமாட்டிங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். எங்க அடிச்சா, எது விழும்னு தெரியும். நான் பார்த்துக்குறேன்" எனக் கங்காவை முறைத்தவன், வேகமாக அறைக்குள் சென்று தன் கார் சாவியையும், லேப்டாப், மற்றொரு பேகையும் தூக்கி வரவும் ராஜியம்மாள் பதறினார். " இப்ப எங்கடா போற" எனவும்.
" என்னால முடியலைப் பெரியம்மா, மூச்சடைக்குது. என்னைச் சாக்கா வச்சு, வேற யாருக்கும் எதுவும் நடக்கும் முன்னை அவுங்களைக் காப்பாத்தனும். அதுக்கான வேலையை நான் தான் செய்யனும். அந்தப் பொண்ணு, என்னைப் பார்க்கவே பயந்துச்சு. நான் தான் அவளை விரும்பினேன். விரும்ப வச்சேன். அவள் இன்னொரு சிந்தாவா மாறக் கூடாதில்ல. நான் அவளைக் கட்டினால் உங்களுக்கு அவமானம். சரி நானே உங்களுக்கானவன் இல்லைனு நினைச்சுக்குங்க. அதுவும் உங்களுக்குப் புதுசு இல்லையே. " என நிறுத்தியவன், சிவனேசனைப் பார்த்து, "இதுக்கும் தென்வயல் வேலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது வேர்கள் அமைப்போட போட்ட டீல். அது பாட்டுக்கு நடக்கும். நானே இருந்து நடத்துவேன். " என்றபடி தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
நேற்று வந்த பொழுதிலிருந்து சிந்தாவின் மனநிலை நிமிடத்துக்கு நிமிடம் மாறுவதை உணர்ந்த வேலு, தன் சின்னாத்தாளையும், முத்துவையுமே வேலைகளைப் பார்க்கச் சொல்லியிருந்தான். மகள் அழும் போது தூக்கித் தந்து, பால் குடிக்கும் போது மட்டுமே சற்றே மனநிலை சமன்பட்டு இருக்க, அந்த நேரம் தான் வேலுவுமே பேச்சுக் கொடுத்தான்.
" சிந்தாமணி, நீ உதிர்த்த வார்த்தைக்கும், சத்தியத்துக்கும் பதில் சொல்லவேண்டியது நீ இல்லை உன் சொல்ல வச்சவ தான். நீ மனசைப் போட்டு அலட்டிக்காம அமைதியா இரு. குதிரையெடுப்பு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நல்லபடியா நடக்கனும். அது தான் முக்கியம் " என மனைவியின் தலையைத் தடவ, அவளும் ஆம் எனத் தலையை ஆட்டி, " நான் ஒண்ணும் நினைக்கலை மச்சான்" என அவன் தோளில் சாய்ந்து கொள்பவள், அடுத்த ஒரு மணியில் எங்கோ வெறித்தபடி தான் இருந்தாள்.
அய்யனார், சுப்பு என அவளை ஆளாளுக்குத் தாங்கினாலும் கண்ணை மூடினால் அன்றைய நிகழ்வுகளே கண் முன் படமாய் ஓட, முகம் வேர்க்கப் பட்டென எழுந்து அமர்ந்தாள்.
வேலு மனைவியின் நிலையைப் பார்த்தவன், முன் திண்ணையில் பாயை விரித்துப் பக்கத்தில் கட்டிலையும் இழுத்துப் போட்டு, சுவரில் சாய்ந்து அமர்ந்து அவளையும் மடியில் தலை சாய்க்கச் சொல்லி, தலை முடியை வருடிக் கொடுத்தான். சுப்புவும் சத்தமில்லாமல் வந்து மெல்ல வேலுவிடம் பேச்சுக் கொடுத்து, அவனைத் தூங்கச் சொல்லி, தான் காத்து நின்றான். இன்றைய பொழுதானது அவர்களிடம் ஒரு அச்சத்தை உருவாக்கி இருந்தது.
ஆனால் காலையில் எழுந்த சிந்தா, தலைக்கு ஊற்றி, மஞ்சள் நிறையப் பூசிக் குளித்து வேப்ப மரத்தடியில் அமர்ந்து விட, அவளுக்கு முத்து கூழை கரைத்துக் கொடுத்தாள். வயிறு காய்ந்து உடல் சூடானது போல் உணர்ந்தவள், அதனை ஒரே மடக்கில் குடித்து முடித்தாள்.
இதைப் பார்த்துக் கொண்டே வந்த ஆண்டிச்சி கிழவிக்கு நேற்று முதலே அழகி மீனாள் , சிந்தாவின் மேல் இறங்கி விட்டதாகவே நினைத்து ஆராய வந்தது. அந்த நேரத்தில் சிந்தாவின் தோற்றத்தில் பாதி உறுதியானது.
" சிந்தா, ஆத்தா, காப்புக் கட்டி ஊர் பூரா அய்யனும், ஆத்தாளும் நடந்து திரியும் போதே , இந்த ஊரோட மகளைத் தொடறதுக்கு அவனுங்களுக்கு எம்புட்டு நெஞ்சுரம். ஆத்தா இருக்கா. தக்க சமயத்தில் காட்டிக் குடுத்துட்டா பாரு" எனவும், சிந்தா வாயில் கூழ் இருந்ததால் " ம் " என்றவள், நேற்றைய நினைவில் கண்ணை முழிக்கவும், ஆண்டிச்சி ஆத்தா தான் உறுதிப் படுத்திக் கொண்டது.
ஆண்டிச்சி கிழவியிடம், " அம்மாச்சி, ஆத்தா பாட்டு பாடுவியே பாடு" என அவள் கேட்கவும் , கிழவி அழகி மீனாளே இறங்கி வந்து அதனைப் பாடச் சொல்லுவது போல், மகிழ்ந்து பாடியது. அப்போது பூரித்திருக்கும் சிந்தாவின் அருள் முகத்தைப் பார்த்து மெய் மறந்த கிழவி, தனது சுருக்குப் பையிலிருந்து வெத்தலை சுண்ணாம்பு பாக்கு வைத்து பக்குவமாய் அவளிடம் நீட்ட, " என்னைச் சோதிக்கிறியா" எனச் சிரித்தபடி அவள் வாங்கிப் போட்டுக் கொள்ளவும். " ஆத்தி, தப்பு, தப்பு" எனக் கன்னத்தில் போட்டுக் கொண்டு ஒரே ஓட்டம். ரேடியோ பொட்டி, அழகிமீனாள், சிந்தாவின் மீது வந்து இறங்கியிருக்கிறது என ஊருக்குள் செய்தி பரப்பியது.
" இந்தக் கிழவி, ஏண்டி எதையோ கண்ட மாதிரி ஓடுது" என வந்த ராக்காயி மருமகள் முகத்தைப் பார்க்கவும், " ஆத்தி" என அதுவும் வாயடைத்துச் சென்றது.
அப்போது தான் புதுப் பம்ப் செட்டில் குளித்து வந்த வேலு, " ஏன் புள்ளை, மஞ்சள் குளிப்பாக, அதுக்குனு இப்படியா" எனவும், இவள் முறைத்த முறைப்பில் " ஆத்தி" என அவனே துணுக்குற்றான்.
ஆண்டிச்சிக் கிழவி, ரேடியோ பொட்டியாகி , ஊருக்கு ள் விசயத்தைப் பரப்ப, நம்பியவர், நம்பாதவர் என ஜாடையாக வந்து சிந்தாவைப் பார்த்துச் சென்றனர். அந்த நேரம் கரைத்த கூழோ, மஞ்சள் நீரோ அருந்தினால் எனில் ஆம் என ஒரு கூட்டம் பயபக்தியாய் இருக்க. வம்பு பேசும் கூட்டம் வரும் போது, பிள்ளைகளுக்கு இயல்பாய் பணிவிடை செய்யும் சிந்தாவைப் பார்த்து, அழகி மீனாள், சிந்தா மீது இறங்கியிருக்கா இல்லையா என வாக்கு வாதம் செய்தனர்.
இதில் அரண்டு போனது பெருமாயி தான். தன் மகனுக்கு ஏதாவது ஆகிவிடும் என அவனிடமும் சொல்லிக் கொண்டேயிருக்க, சலங்கை பூச்சி ஒலியும் கூட அழகி மீனாள் பாத கொலுசொலியோ என மனதில் தோன்ற ஆரம்பித்தது.
இதற்கு நேர் மாறாக, வள்ளி, மீனாள், மகேஷ் எனப் போன்ற பெண்களிடம் அமைதியாகவும் நடந்து கொண்ட சிந்தா விளங்க இயலா விந்தையாகிப் போனாள்.
ஆனால் இதனைப் பற்றி அறிந்த வேலு, குமரனிடம் விசயத்தைப் பகிரவும் அவன் தந்த யோசனையில் சிந்தாவைக் காட்டியே சோமனை மனதளவில் பயமுறுத்த ஆரம்பித்தனர்.
No comments:
Post a Comment