Saturday, 4 September 2021

சிந்தா -ஜீவநதியவள்-21.

 சிந்தா -ஜீவநதியவள்-21.

கருப்பையா. 

கருப்பு சட்டைப் போட்டு

எங்க கருப்பையா காவலுக்கு போனாக!

கருப்பை கண்டவுடனே

எங்க கருப்பையா காவலை மறந்தாக!

சிவப்பு சட்டைப் போட்டு

எங்க கருப்பையா சேவுகத்துக்குப் போனாக!

சிவப்பைக் கண்டவுடனே

சேவுகத்தை மறந்தாக!


காசுக்கு நூறு கரும்பை வாங்கி. 

கிழங்காட்டூர் கம்மா கரையெல்லாம்

நட்டு, பயிராக்கி 

கரும்போட வாய்க்கா,

நம்ம கருப்பையாவுக்கு 

களக்காக்கும்னு சொல்லி, 

காலாங்கரை மடைத் திறந்து

பாலாப் பெருக வேணும்!


பன்னி அது பன்னி சிறு பாரமுள்ள பன்னி

கொடிக்காலுக்குப் போகும் அந்த பன்னி .

கொடுக்கலாங் கிழங்கு  தின்னும் அந்த பன்னி

மாஞ்சோலைக்குப் போகும் அந்த பன்னி

மாஞ்சோலைக் கிழங்கு,  தின்னும் அந்த பன்னி


பூஞ்சோலைக்குப் போகும் அந்த பன்னி

பூஞ்சோலை கிழங்கு திங்கும் அந்த பன்னி

பள்ளத்தைக் கண்டா பதுங்கும் அந்த பன்னி

ஓடையைக் கண்டா ஒதுங்கும் அந்த பன்னி

சில்லாடையை கண்டா சிலிர்க்கும் அந்த பன்னி


அப்படியாபட்ட பன்னியை

நம்ம கருப்பையா 

வெட்டி தோலுருச்சு,

வெயில்ல நிண்டு

வேட்டையாடி வாராக!


மேலப்பூங்கொடி கிராமத்தில் காவல்தெய்வமாகக் காத்து நிற்கும், அதிகார கருப்பனை வேண்டி, அவர் வேட்டையாடும் அழகைக் கிழவிகள் அந்தி சாயும் நேரத்தில் பாடிக் கொண்டிருக்க, அதிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள கிழங்காட்டூர் கருவைக் காட்டில் சிந்தாவின் தகப்பன் அய்யனார் , அருள் வந்து இறங்கியவராக முள்மரத்தை வைத்தே வேட்டையாடிக் கொண்டிருந்தார். முன்னதாக மாலை நான்கரை மணியளவில் தான் அய்யனார், மச்சினனை அரவம் தீண்டியது என வந்து சொன்னார். பதட்டத்தில் யார் சொன்ன செய்தி, எனச் சரிபார்க்காமலே, உணர்ச்சி வயப்பட்ட நிலையில் அப்பாவும் மகளும் கிளம்பி விட்டிருந்தனர். மேலப் பூங்குடியிலிருந்து ஐந்து மைல் தொலைவு தான், அதனால் அய்யனார் வண்டியை முடிந்தவரை ஓட்டிச் செல்ல, ஊருக்கு முன்பே கண்மாய்க் கரை வந்துவிடும். இவர்கள் ஊரு போல் கையாற்றிலிருந்து வாய்க்கால் இல்லாததால் அது காய்ந்தே வறண்டே கிடக்கும். கருவை மரம் வெட்டி வரும் வருமானமே பிரதானம், எனவே அதை வளர விடுவர். மாலை சூரிய வெளிச்சம் இருந்தது, கருவைக் காட்டைப் பார்க்கவும் சுதாரித்த சிந்தா, " அப்பா, ஏதோ சரியில்லை. நீ மாமாவுக்குப் போன் போடு " என்றாள். அவர் வண்டியை நிறுத்தி விட்டு முயன்ற நேரம் சிக்னல் இல்லை. ஆனால் காட்டின் ஆரம்பப் பகுதியில் தான் இவர்கள் இருந்தனர். எனவே எச்சரிக்கையடைந்த சிந்தா, கீழே கடந்த மண்ணை அள்ளி, தன் முந்தியில் கட்டிக் கொண்டாள். தனது மொபைலை எடுத்து வராததும் அப்போது தான் உரைத்தது. வண்டியைக் கிளப்பு, ஊருக்குள்ள போவோம்" என இவர்கள் வண்டியைத் திருப்பிய நேரம் ஐந்தாறு பேர் இவர்களைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அனைவருமே, வடக்கத்தி கூலித் தொழிலாளர்களாகப் பான்பராக் போட்ட வாயோடு இருந்தனர். சோமன், தான் முன்னே வராமல் ஆட்களை மட்டுமே ஏவியிருந்தான். தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல், மேலப்பூங்குடிக்கே சாமி கும்பிட வந்திருந்தவன், தான் இங்கு வந்திருப்பதைச் சொல்லத் தான் கங்காவுக்குப் போன் செய்தான். ஆனால் அதற்கு முந்திக் கொண்டு ஏற்கனவே வேலு,குமரன், சிவநேசன் கிளம்பிவிட்டதைப் போன் போட்டுச் சொல்லியிருந்ததால் ஆவல் மிகுதியில், சட்டெனக் கங்கா கேட்ட வார்த்தைகளைத் தான் முத்து ஒட்டுக் கேட்டாள். ஆனால் அதன் பின்னர், சோமன் இங்கிருப்பதை அறிந்து கங்கா அவனைத் திட்டவும், "நீதான முடிச்சிட்டா சன்மானம் தர்றேன்னு அதுக்குத் தான்" எனக் கேவலமாகச் சிரிக்கவும். " சை வாயை மூடு. எங்கெங்க புரண்டுட்டு வந்தியோ. அங்குட்டே போ. வேணுமுன்னா, ஐஞ்சு வருஷம் முன்னாடி நிறைவேறாததை நிறைவேத்திக்க. இன்னும் ஒரு மணி நேரத்தில தேட ஆரம்பிச்சுடுவாக, அதுக்குள்ள கிளம்பு " என எச்சரிக்கவும் " அதெல்லாம் வடக்கப் போற லாரில தூக்கிப் போட்டு போயிடுவாய்ங்கே. நான் இங்க சீனைப் போட்டுட்டு நானும் கிளம்பிடுவேன். அவளைப் பொறுக்கி எடுக்கக் கூட எதுவும் மிஞ்சாது , தேடிக்கிட்டே இருக்க வேண்டியது தான்" எனவும். " அதெல்லாம் இல்லை, அவள் பிணத்தை இங்கிருக்கவைங்க பார்க்கனும், அப்பத் தான் சின்னவளை, அவ அக்கா புருஷனுக்கே ரெண்டாம்தாரமா கட்டுவாக. எனக்கு அது தான் வேணும்" என்ற கங்காவின் விருப்பத்துக்கு அவனும், " பார்ப்போம்" என அசட்டையாகவே பதில் தந்தான். "பார்ப்போமெல்லாம் இல்லை, இது தான் நடக்கணும், காசு வேணுமுன்னா வங்கிக்க" எனவும், " அய்ய, முன்ன மாதிரி காசுக்குச் செத்த பயன்னு நினைச்சியா, இப்பெல்லாம் அய்யா கையில பண மழைதான், நான் உன்னைத் தான் பார்க்க வந்தேன் " என வழிந்தவனை , "இதில் உன் காரியம் ஒன்னும் இல்லையாகும், உன் காரியத்துக்கு, என்னை யூஸ் பண்ணிக்கிற அம்புட்டு தான், அத்தோட நான் சொன்னதும் நடக்கணும், இதிலே நீ மாட்டினாலும் என் பேர் வெளிய வரக்கூடாது " என்றவள் ,அவன் சரி சரி கொல்லைப்புறம் அவளைப் பார்த்துக் கொண்டே கையாட்டவும் , மற்றவர் பார்க்கிறார்களா என உறுதி செய்து கொண்டவள் ,அவனை முறைத்தபடி உள்ளே வந்தாள் . அய்யனாரையும், சிந்தாவையும் சுற்றியவர்கள், வண்டியை நிறுத்தி அய்யனாரைத் தாக்கவும் அவர் நிலை குலைய, வெகுண்ட சிந்தா மடியில் கட்டியிருந்த மண்ணை அள்ளி, ஒவ்வொருத்தர் முகத்திலும் எரிந்தாள். அவர்கள் தங்களைச் சமாளிக்கும் முன், அப்பா எந்திரி என இவரை எழுப்பவும், " சிந்தா, நீ ஊருக்குள்ள ஓடு. நான் பார்த்துக்குறேன்" எனத் தள்ளாடியவரை விட முடியாமல் சிந்தா எழுப்பிக் கொண்டே இருக்கவும், அந்த ரவுடிகள் கண்ணைத் தேய்த்துக் கொண்டு இவளை நோக்கி வர அவர்கள் கையில் அகப்படாமல் ஊரை நோக்கி ஓடினாள். ஆனால் அவளை இடை மறிக்கும் நேரம் தான் குமரனிடமிருந்து போன் வந்தது. ஐந்து பேர் என்பதால் தன்னால் எடுக்க இயலாது என்பதால் மட்டுமே உதவிக்காகப் போனை எடுத்தார். ஆனால் வேலுவின் பேச்சு அவரை உசுப்பேற்றியது. அதோடு மகனும், மச்சினனும் படையோடு வருகிறார்கள் என்றதே, தைரியத்தைத் தர, பன்றி வேட்டையாடும் கருப்பனைப் போல், தகப்பன் மகளைக் காக்க வீறுகொண்டு எழுந்தார். முட்செடிகளைக் கொண்டு அவர் அடிக்கும் போதே, சிந்தாவின் தாய்மாமன் ஆட்களோடு வரவும் அய்யனாரோடு சேர்ந்து அவர்களும் அடிக்க, சுப்புவும் வந்து சேர்ந்தான். ஒரு பெண்ணும், வயதான ஆணும் மட்டும் தான் சமாளித்துத் தூக்கி விடலாம் என அசட்டையாக வந்தவர்கள் இரண்டு கூட்டத்தைக் காணவும் , இவர்கள் கையில் சிக்கினால் ஆபத்து, அதுவும் வடஇந்தியர்கள் எனில் கரண்டு கம்பத்தில் கட்டி வைத்தே அடிப்பார்கள் என அரண்டனர். அதற்குள் அந்த ரவுடிகளில் ஒருவன் வண்டியைக் கிளப்ப, ஐவரில் இருவர் அதில் தொற்றிக் கொள்ள இருவரைப் பிடித்தனர். ஆனால் அந்த வண்டியையும் கிளம்பவிடாமல் சுப்புவோட வந்தவர்கள் கற்களை விட்டெறிய, எதிரே வேலுவின் கார் வந்து நின்றது. ஒரே பார்வையில் சிந்தா, சுப்புவின் கைகளில் பாதுகாப்பாக இருப்பதைப் பார்த்தவன், லாரி ஓட்டுபவனை நோக்கி ஒரே எட்டில் ஏறி கதவைத் திறந்து வெளியே இழுத்துப் போட்டு தனக்கு இருந்த ஆத்திரத்தை எல்லாம் தீர்த்தான். லாரியில் பின்னால் ஏறியிருந்த இரண்டு ரவுடிகளையும், குமரன், ஒரே பாய்ச்சலில் அதன் மீது ஏறி, நடுமூக்கை சேர்த்து குத்தி தடுமாற வைத்தவன், ஆத்திரம் தாங்காமல் , கங்கா மீதுள்ள கோபத்தையும் இவர்கள் மீதே காட்டி வெளுத்தான் , அவர்களையும் கீழே இழுத்துத் தள்ள, வேலுவும் , குமரனுமாக அவர்களை மிதித்தனர். மற்ற இருவரையும் சிந்தாவின் தாய்மாமன் ஆட்கள் துவைத்து இருந்தனர். " ஏண்டா ஊருக்கெல்லாம் அரவந் தீண்டுறதிலிருந்து காப்பாத்திற என் மருமவளையா தூக்கிறீங்க, அதையும் என் பேர் சொல்லி தூக்கியிருக்கீங்க. எம்புட்டுத் தகிரியம்" எனச் சொல்லிச் சொல்லி அடித்தனர். சிவநேசன், அய்யனாரையும், சிந்தாவையும் நலம் விசாரித்தவன், வேலுவையும், குமரனையும் தடுத்து நிறுத்த முயன்றான். " டேய், செத்துத் தொலையப் போறானுங்க. இரண்டு பேரும் விடுங்க" எனத் தடுக்க, குமரன் நிறுத்தினாலும், வேலு விடுவதாக இல்லை. சிவநேசன் சிந்தாவைப் பார்க்கவும், " மச்சான். எனக்கு மயக்கம் வருது, அவனை விட்டுட்டு வா" எனக் கத்தினாள். மனைவி, மயக்கம் வருகிறது எனவுமே கடைசியாக அடித்துக் கொண்டிருந்தவனை ஓர் பெரிய உதை உதைத்து விட்டு, " சிந்தாமணி" அவளருகில் ஓடிவந்தான். " என்கிட்ட சொல்லாமல் எதுக்குப் புள்ளை வந்த. உனக்கு ஏதாவது ஆயிருந்தா, நான் என்னாப் பண்ணுவேன்" என நிமிட நேரத்திற்கு முன் இருந்த முரடன் வேலு காணாமல் போய், காதல் கணவன் வேலு உயிர்திருந்தான் . " எனக்கு ஒண்ணும் இல்லை மச்சான். மாமா பேரைச் சொல்லவும் பதட்டமா கிளம்பிட்டோம்" என நடந்ததைச் சொன்னவளை அணைத்துக் கொண்டவன், " இதுக்குத் தான் புள்ளை ஒரு மாசமா பயந்து கிடந்தேன். எல்லாம் சோமன் பய வேலையாத் தான் இருக்கும். அவனை விட்டேனாப் பாரு" என ஆக்ரோஷமாகப் பேசவும். " மச்சான், அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீ அவனை எதாவது பண்ணப் போயி, ஜெயிலுக்குப் போயிட்டேனா, என் உசிரே போயிடும்" என அழுதபடி அவனை அணைத்து அழ, அந்தக் கண்ணீர் அவன் கோபத்தைக் குறைத்தது. " இல்லை புள்ளை அப்படியெல்லாம் யோசிக்காம செய்ய மாட்டேன். நீ பயப்படாத" என உறுதி தந்தான். சிவநேசன், அவர்களைப் போலீல் ஒப்படைக்கலாம் எனத் தங்கள் ஊர் பஞ்சாயத்துக்கே , அவர்களது லாரியிலேயே, அவர்களைக் கட்டிப் போட்டு கிழங்காட்டூர் ஆட்கள் பாதுகாப்பில், சுப்புவும் அவன் நண்பர்களுமாக லாரியை ஓட்டி வர, காரை குமரன் ஓட்ட, வேலுவுக்கும், அய்யனாருக்கும் நடுவில் சிந்தா கணவனின் கையணைப்பில் வந்தாள். நேரே ஊர்பஞ்சாயத்து கூடும் இடத்துக்கு, மகாலிங்கம் மற்றும் ஊரின் முக்கியமானவர்களைச் சிவநேசன் வரச் சொன்னான். தலையாரி, பிரசிடென்ட் என விசயம் சோமன் வரை செல்ல, நடந்ததைப் பார்க்க அவன் திண்ணக்கமாக அங்கேயே நின்றான். கங்கா போன் வரவும் காதை தீட்டியவள் பஞ்சாயத்துக் கூடுவதாகச் சொல்லவும் முழித்தாள். கூட்டத்தில் ஐவரையும் நிறுத்தவும் சோமன் அதிர்ந்தான். ஆனால் இந்த ரவுடிகள், உயிர் போனாலும், செய்யச் சொன்னவனைக் காட்டிக் கொடுக்காதவர்கள், அதனாலேயே இவர்களுக்கான கூலியும் அதிகம். அதிலும் மொத்தமாக வாங்கிக் கொண்டு தான் காரியத்தில் இறங்குவார்கள். அதனால் அடித்து விசாரித்த போதும் கூட, அந்தப் பொண்ணைக் கடத்த வந்ததாக மட்டுமே சொன்னார்கள்.


சிந்தா, வேலுவின் கைவளைவில் நின்றாலும், பயந்து நடுங்கி இல்லாமல் தைரியமாகவே நின்றாள். தங்களுக்கு வைத்தியம் பார்க்கும் சிந்தாவையே குறி வைத்தார்கள் எனவும், ஊர் மக்கள் வெகுண்டு அவர்களை அடித்தனர். சிவநேசன், மகாலிங்கம் தடுத்தும் கூட நையப் புடைத்துவிட்டனர். சரியாக அதே நேரம், போலீஸ் வரவும், ஊர் பஞ்சாயத்திலிருந்தே புகார் அளித்தனர். கிழங்காட்டூர் பகுதியில் நடந்ததால் சிந்தாவின் தாய்மாமனும், சிந்தாவுமே என மூன்று புகார்கள் அளித்தனர்.



முத்து, அக்காள் பிள்ளைகளோடும், ராக்காயியும் பின் தொடர ஓடி வந்தாள். சற்று முன் குமரனிடமிருந்து போன் வந்தது. சிந்தாவை பத்திரமாக மீட்டதைச் சொன்னவன், கங்கா பெயரைப் பஞ்சாயத்தில் எடுக்க வேண்டாம் எனவும், அவளைத் தான் வேறு விதமாகக் கவனித்துக் கொள்வதாகவும் சொல்லவும், எதிர் முனையில் பேசுவது யார் என அறிந்த போதும், முத்து வெகுண்டு எழுந்தாள். தீயை விடக் கொடிய சொல்லால் அவனை வாட்டினாள்.

அத்தனையும் கேட்டவன், " இது தெரிஞ்சா பெரியம்மா அந்த இடத்திலையே உயிரை விட்டுருவாங்க. அவுங்களுக்காகத் தான் சொன்னேன். அப்புறம் உன் இஸ்டம்" எனப் போனை வைத்தவனின் மனம் கனத்து தான் போனது.

முத்து அக்காவைக் கட்டிக் கொண்டவள், " உனக்கு எதாவது ஒண்ணு ஆகியிருந்தா, உன் புள்ளைகளோட சேர்த்து, நாங்களும் மறுபடியும் ஆத்தா இல்லாத புள்ளைகளா ஆகியிருப்போம்" எனக் கையில் சத்யாவோட அழவும், அதுவும் அழுதது. என்னவெனத் தெரியாமல் சத்திய மூர்த்தியும் அம்மா இடுப்பைக் கட்டிக் கொண்டு அழவும், சுப்பு, வேலு, அய்யனார் என அவர்கள் குடும்பமே கண்ணீர் விட, பார்த்திருந்த ஊராரும் கண்கலங்கினார்.

" விடுத்தா, அது தான் ஒண்ணும் ஆகலையில " என அவர்களது தாய் மாமன் ஆறுதல் சொல்லவும், "உனக்கும் ஆத்தாளை மாதிரி எதுவும் ஆயிடுமோன்னு தான், அக்கா பதறி ஓடியாந்துச்சு" என முத்துச் சொல்லி அழ, குமரன் கைகளைக் கட்டிக் கொண்டு இறுக்கமாகவே நின்றான்.


" நீ இந்த ஊர் உலகத்துக்கு வைத்தியம் பார்த்ததெல்லாம் போதும், இனி என் மகனையும் பேரன், பேத்திகளையும் பாரு " என ராக்காயி மருமகளைச் சொல்லவும், முத்துவும் கிழவியின் பேச்சுக்கு, முதன் முறையாக ஆம் எனத் தலையாட்டினாள். சிந்தா அழுது அரற்றிய தன் குடும்பத்தைத் தேற்றினாள்.

" ஏம்பா, அதெப்படி இந்தப் பயலுகளைச் சிந்தாவை குறி வச்சு சரியா தூக்குனானுங்க இதில ஏதோ உள்குத்து இருக்குது" என்றார் ஒருவர்.

" நீங்க எப்பிடி சரியான நேரத்துக்குப் போய்ச் சேர்ந்தீக" என ஒருவர் விசாரிக்கவும், " ஒரு போன் வந்திச்சு, அதனால் ஓடி வந்தோம் " எனச் சிவநேசன் பொதுப்படையாகச் சொல்லவும், குமரன் வேறு எதுவும் பேசாமலிருந்ததில் புரிந்த கொண்ட வேலு தான் பதில் சொன்னான்.

" இன்னைக்கின்னு இல்லை, ஒரு மாசமா என் பொண்டாட்டியை அவளுக்கே தெரியாமல், காவல் காத்துக்கிட்டுத் திரியிறேன்" எனத் தான் கேட்ட விசயங்களைச் சொல்லி, " என் சின்னாத்தா, சிந்தா எங்க கிளம்பினாலும் போன் போட்டுரும். அப்படித் தான் இன்னைக்கும் போன் வரவும், சின்னக்குட்டியை விட்டு அவுக மாமனை விசாரிக்கச் சொன்னோம். " என்றவன். " சீமைக்கருவை அழிச்சி, மாற்று விவசாயத்தில் மக்களுக்கு நல்லது செய்யனும்னு எங்க குடும்பம் பாடு படுறதுக்கு, எங்களுக்குக் கிடைச்ச சன்மானம்" என வேலு சூசகமாக வடக்கத்திய சேட்டின் பெயரைச் சொல்லாமல் சொல்லவும், பிடிப்பட்ட வடக்கத்திய ரவுடிகளையும் சேர்த்து ஊர் மக்கள் தாங்களாகவே யூகித்தனர்.

ஊர்மக்கள் கூடிய சந்தர்ப்பத்தில் ஐந்து வருடத்துக்கு முன்பான அவமானத்தையும் துடைக்கும் விதமாகப் பேசினாள் சிந்தா.


" இதே மாதிரி பாம்பு கடிச்சதுன்னு செய்தி சொல்லி என்னை நிறையப் பேர் ஏமாத்தி கேலி செஞ்ச சம்பவமெல்லாம் நடந்திருக்கு. ஆனாலும், அடுத்தத் தடவை எங்கிருந்து தகவல் வந்ததாலும் நான் போய் நிப்பேன், விளையாடுறவுகளுக்கு உசிரோ மதிப்புத் தெரியாது, ஆனால் வைத்தியம் பார்க்கிற எனக்குத் தெரியுமே, ஏன்னா எங்கம்மாளை மாதிரி இன்னொரு உசிரு அரவம் தீண்டிப் போகக்கூடாதுன்னு, என்னால முடிஞ்சவரைக்கும் பார்க்கனுமின்னு எனக்கு நானே எடுத்துக்கிட்டச் சங்கல்பம் அது. இப்ப எல்லாம் என் மச்சானும் என் கூட வர்றதுனால அந்தப் பிரச்சனை இல்லை. ஆனா இன்னைக்கு என் மச்சானையும் இங்கிருந்து கிளப்பி விட்டுட்டு , இவனுங்க இந்த வேலையைப் பார்த்திருக்காக.

ஐஞ்சு வருஷம் முன்னாடி பொங்கல் விழா சமயத்தில் நிகழ்ச்சி நடந்திட்டு இருக்கும் போது, இதே மாதிரி தான் பாம்பு கடிச்சிடிச்சின்னு ஒரு பையன் வந்து கூப்பிட்டான்" எனச் சிந்தா ஆரம்பிக்கவுமே, சோமு நழுவ ஆரம்பித்தான்.

" சோமு, அன்னைக்கு என்னைய சிவநேசன் ஐயாவோட பார்த்தமுன்னு சேதி சொன்னவன் நீதானே, இருந்து முழுசா கேட்டுட்டுப் போ" என அவள் சொல்லவும், அனைவர் கவனமும் அவன் மீது திரும்ப வேறு வழியில்லாமல் வந்து நின்றான்.

" ஆமாம் நான் பார்த்ததைத் தான் சொன்னேன். ஏன் அந்த ஐயா வீட்டு ஆளுங்களும் தான் உங்களைக் கையும் களவுமா பிடிச்சாக" எனவும், வேலு முறைத்த முறைப்பில் உள்ளே நடுங்கினாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் நின்றான். மகாலிங்கம் " சிந்தா , இப்ப எதுக்கு அதெல்லாம் , முடிஞ்ச கதை விடு" எனும் போதே, ராஜியம்மாள், ஒரு பக்கம் மகேஷையும், மறுபக்கம் மருமகள் கையைப் பிடித்துக் கொண்டு , பேத்தியோடு வந்து விட்டார்.

" சிந்தா, உனக்கு ஒண்ணுமில்லையே, உங்க ஐயா சொல்லிட்டு கிளம்பவும் எனக்கு உசிரே போச்சுடி" எனக் கண்ணீர் விட்டார்.

" உங்க ஆசீர்வாதம் இருக்கும் போது, என்னை யாரு என்னம்மா செய்ய முடியும். " என்றவள், விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள்.

" பாம்பு கடிச்சுதுன்னு கூட்டிட்டுப் போனாகல்ல, அங்க இந்தச் சோமன் தான் இருந்தான்" எனச் சிந்தாச் சொல்லவும்.

" இன்னைக்குமா, இந்தப் படுபாவி அதே வேலையைச் செஞ்சான். எடு விளக்கமாத்தை" என்ற ராஜியம்மாள் பேச்சிலேயே, அன்று அப்படிச் செய்ததும் சோமன் தான் என்ற பொருள் இருந்தது.

" இன்னைக்கு அவன் தான் செஞ்சானான்னு தெரியாதும்மா , அதைப் போலிஸ் தான் கண்டு பிடிக்கணும் . ஆனால் ஐஞ்சு வருஷம் முன்னாடி, பாம்பு கடிச்சதுன்னு பார்க்கப் போனப்ப, ஐயா வீட்டு மோட்டார் ரூம்ல இவன் தான் இருந்தான்" என நடந்ததை விவரித்தவள், " இதில் என்னைக் காப்பாத்த வந்த நல்ல மனுசனுக்கும் கெட்டப் பேரு. " எனச் சிவநேசனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டவள், "அன்னைக்கு நீங்க என் மானத்தைக் காப்பாத்தலேன்னா, இன்னைக்கு நான் இல்லை" தனக்காக அவன் சுமந்த பழி சொற்களையும் சொன்னவள், "ஆணோ, பெண்ணோ, கற்பு நடத்தை எல்லாருக்கும் ஒண்ணு தான். இந்தச் சோமனை மாதிரி பொம்பளை பொறுக்கிகள் இருக்கிற ஊர்ல, எந்தப் பொம்பளையும் நிம்மதியா இருக்க முடியாது" எனச் சிந்தா ஆவேசமாகப் பேசவும்.

" இந்தா, இது சொன்னதுக்கெல்லாம் எந்த ஆதாரமும் சாட்சியும் கிடையாது. என்னைப் பிடிக்காததால், இட்டுக் கட்டி பேசுது" எனச் சோமன் கூசாமல் பேசவும். சந்ததம் வந்தவளாக,

" அன்னைக்குத் தப்பான நோக்கத்தோட , இந்தச் சோமன் என்னைப் பம்ப் செட்டுக்கு வரவழைச்சான், என்னைப் பெண்டாள பார்த்தான். சரியான நேரத்தில சின்னையா வந்து காப்பாத்துனாக. என் தாவணி ரவிக்கையெல்லாம் இந்த நாய் குதறியிருக்கவும், அவுக என் மானத்தை மறைக்கச் சட்டையைக் கழட்டிக் கொடுத்தாக. சின்னைய்யா என்னைச் சமாதானம் செய்யற நேரம் இவன் வெளியே கதவைப் பூட்டி விட்டு கதையை மாத்திட்டான். இந்த ஊரே பேசுச்சு, பொம்பளைக்கு மானம் பெரிசு, நான் ரயில்ல விழப் போனேன், இந்தத் தெய்வம் என்னை உசிரே பொழைக்க வைக்கணுமின்னு ,என் மச்சான் மூலமா வந்துச்சு. எவனோ ஒருத்தன் பழிச்சான்னு , சாகக் கிடக்கிறவுகளை விட முடியுமா ,வைராக்கியமா திரும்பி அரவம் தீண்டினதுக்கு வைத்தியத்தைப் பார்க்க ஆரம்பிச்சேன்.

நான் அன்னைக்குச் சொன்னப்ப இந்த ஊரு நம்பலை. இதோ இன்னைக்குத் திரும்பச் சொல்றேன், இவன் செஞ்ச தப்புக்கு ஆதாரம் இல்லாமல் போகலாம், ஆனால் தண்டனையிலிருந்து தப்ப முடியாது." என்றவள் சோமனை நேராகப் பார்த்து, " என்னை நீ பெண்டாள நினைச்சது பொய்யின்னா, நீ உண்மையானவனா இருந்தா. இன்னும் ஏழு நாள் இந்த ஊருக்குள்ள இரு. காவல் தெய்வங்களான அய்யனாரும், அழகி மீனாவும், கருப்பனும் காளியாத்தாளும் , நான் சொல்றது பொய்யினா எனக்குத் தண்டனைத் தரட்டும், நீ சொல்றது பொய்யினா உனக்குத் தண்டனையைத் தருவாக. இது நான் உண்மையா செஞ்சிட்டு வர்ற வைத்தியத்து மேல சத்தியம். அப்படி உனக்குத் தண்டனை கிடைக்கலை, நான் ஊரை விட்டு வெளியேறிக்கிறேன்" என ஆங்காரமாகச் சவால் விடவும், ஊர்மக்கள் அதிர்ந்து தான் போனார்கள். சோமன் ஆப்பசைத்த குரங்கு போல் , வசமாக மாட்டிக் கொண்டான். முகம் ரத்த பசையற்றுப் போனது, ஆனாலும் விடாமல் சிந்தாவின் சவாலை ஏற்றுக் கொண்டான்.

கூட்டத்தில் ஆவேசம் வந்தவளாய் சபதமெடுத்த சிந்தாவின் தோற்றத்தைப் பார்த்து, இரண்டு தாய்மார் வயிற்றில் நெருப்பு பற்றியது, பெருமாயி ஓடி வந்து, மகனின் கைகளைப் பிடித்துக் கொண்டு, " அடேய் , தப்பு செஞ்சிருந்தா ஓத்துக்கிட்டு ஜெயிலுக்குக் கூடப் போயிட்டு வா, ஆனா பெண் பாவம் பொல்லாதது " என மகனிடம் மன்றாடவும், "ஆத்தா , அந்தப் பொம்பளை தான் எதோ சொல்லுதுன்னா , பெத்தவ நீயே என்னை நம்ப மாட்டேன்கிற. இன்னும் ஏழு நாள் இங்கேயே இருக்கேன், என்ன ஆகுதுன்னு பார்ப்போம்" எனச் சவால் விட்டு வீட்டுக்குச் சென்றான்.

மற்றொருவர் ராஜியம்மாள் , மகளின் பிழை  சிந்தாவின் மீது வீண் பழி சுமத்தியது மட்டுமே என்று நினைத்து , அதன் காரணமாகவே மகள் பிள்ளை வரமின்றி இருக்கிறாள், என எண்ணி திருவிழாவில் குழந்தை பொம்மை வாங்கி வைத்து நேந்துக் கொள்ளவே மகளை வரவழைத்திருந்த அப்பாவி. அவளின் மாபாதகம் தெரியாமலே, மகளாக நினைக்கும் சிந்தாவின் கோபத்தீ ,அவள் மீது பாய்ந்து விடக் கூடாதே எனக் கலங்கி நின்றார்.

அன்று முதல் அடுத்து வந்த ஏழு நாட்களுமே, சிந்தா அருள் வந்து பாய்ந்த சோதி பிழம்பாகத்தான் இருந்தாள். வீட்டினர் அவளை நெருங்க அஞ்சியது போல் அவள் பிள்ளைகள் மட்டுமே அவளிடம் இயல்பாய் இருந்தன. முத்து தனது மனக்குறையைக் கொட்ட வந்தவளிடமும் கூட , கையை நீட்டித் தடுத்து, " தெரியும், நீ உன் வேலையைப் பார் " என ஒரு வார்த்தையில் முடித்து விட்டாள்.

சிந்தாவின் சபதம் நிறைவேறுமா, குமரன் கங்காவை எப்படிக் கையாளுவான், புரவிஎடுப்பில் அய்யன் நடத்த இருக்கும் திருவிளையாடல்கள் என்ன பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment