Friday, 3 September 2021

சிந்தா -ஜீவநதியவள் -20

 சிந்தா -ஜீவநதியவள் -20

புரவியெடுப்புக்குக் காப்புக்கட்டி மூன்று நாட்கள் முடிந்திருந்தது. ஊரெங்கும் ஆண்டிச்சி அண்ட் கோ கிழவிகளின் பாட்டுச் சத்தமே கேட்டுக் கொண்டிருந்தது. மெல்ல மெல்லப் பெண்கள் கூட்டம் கூடி பெரிய வட்டமாக, ஆளாளுக்கு ஆகி வந்த செவ்வாய் பாடல்களைப் பாட, சொல்லில் தேர்ந்த கிழவிகள் , மனதில் நினைத்த உணர்வுகளை எதுகை, மோனை , பேச்சு வழக்கு, கேலி முறையோடு அவர்கள் வாழ்வைப் போலவே அய்யனையும், கருப்பனையும், முனியனையும், ஆத்தாளையும் இட்டுக் கட்டி பாட ஆரம்பித்தனர். முதல் நாள் ஒரு மணிநேரமாக இருந்த பாட்டுப்படித்தல், கொஞ்சம் கொஞ்சமாக நேரம் நீண்டது. 

அதில் அந்தக் கிழவிகளின் நையாண்டி, நக்கல் , சொலவடை, சொல்லாட்சி அத்தனையும் ஆட்சி செய்தது. சிந்தாவும், முத்துவும் கூடச் சேர்ந்து கும்மிக் கொட்டவும், பாட்டு பழகவும் சென்று விடுவார்கள்.

புத்து புத்து நாகவரே , பூஞ்சை வய காத்தவரே !

உழக்க பொண்ணு போல வாழ வந்த நாகவரே!

பச்சரி போல பல் அழகு நாகவரே !

எந்தன் மகன் அய்யன், தெய்வ தந்த குடும்பன்

கொத்தோட கொலையோட மடை திறக்க வாறான்

படத்தை ஒதுக்கி பாதை விடும் நாகவரே!


என இன்றைய பாடலில் நாகவரே என வயல் வழியில் ஓடித்திரியும் பாம்புகளை வழிபாட்டு பாடல் பாடினர். முத்துச் சிந்தாவிடம், "இப்படியெல்லாம் , இந்த நாகரை கும்பிட்டாலும் தான் அப்பப்ப , படமெடுத்து மனுசர்களைப் போட்டுருறாரு,நீயும் சளைக்காம அவுகளைக் காப்பாத்த ஓடுற " என அக்காளைப் பார்த்துக் கேட்டாள் . "அதுக்கு என்னடி பண்றது, ஆதி முதலா, மனுசருக்கும் முன்ன பிறந்தவுகளே நாகவம்சம் தானாம், அவுக காடு ,அவுக ராசியம் நம்ம தான் ஒண்ட வந்தவுக, காட்டை அழிச்சு நாடா ஆக்குறோம் , அப்புறம் அவுகளும் நம்மோடது தானே இருப்பாக " எனச் சிந்தா விளக்கம் சொன்னவள் ,


"இதுக்குமே ஒரு கணக்கு இருக்குடி, அரவம் தீண்டின அம்புட்டுப் பேருமா செத்து போறாக, இல்லையே, வைத்தியம் பார்த்துக் குணமாகாத தானே செய்யிறாக . போன ஜென்மத்தில் நாம ஏதாவது தீங்கு செஞ்சுருப்போம், இது அதுல கழியுதுன்னு நினைச்சுக்க வேண்டியது தான். அது இல்லாமலா நாகவரேன்னு சாமியா கும்புடுறோம், சிவன் கழுத்திலையும், பெருமாள் படுக்கையும் அவுக தான். இதுக்குப் பெரிய பெரிய கதையெல்லாம் இருக்கு, பரமக்குடி வைத்தியர் அதைச் சொல்லி, ஒரு வகையில நாம, நாகவருக்குச் சேவகம் பார்குறவுக, தப்பு செஞ்ச புள்ளையை அப்பன் அடிக்கவும் செஞ்சு, அரவணைக்கவும் செய்வாரே , அது மாதிரி நாகராசா தீண்டிட்டு, அவன் பாவத்துக்கு ஏத்த மாதிரி காப்பாத்தவும் ஆள் அனுப்புவாராம் " எனவும் , முத்து அக்காளைப் பார்த்து, "அப்புறம் என் அவர் பேரைச் சொல்லி உன் மானத்தை வாங்குனாகலாம் , நீ எல்லாருக்கும் நல்லது தானே செய்யிற" எனக் கேள்வி எழுப்பினாள் . "ஏண்டி நான் மட்டும் என்ன தெய்வப் பிறவியா, போன சென்மத்தில் நான் என்ன குத்தம் செஞ்சனோ ,அதுக்குத் தண்டனை. அதுவும் இல்லாம எம்புட்டுச் சங்கடம் வந்தாலும் சேவகம் செய்யிறமான்னு சோதனையும் செய்வாக " எனச் சிரிக்கவும், "இத்தனை நாள் கழிச்சு , உன் மாமியா கிழவி வந்துருக்கே அது, சோதனையா , தண்டனையா " என அவள் இடக்கு பேசவும், மேலும் சிரித்தவளாக " உன் மாமன் சம்பாத்தியம் வேணும், அது பாவம் புண்ணியம் வேணாமுன்னு சொல்ல முடியுமா, அதுக்கும் நமக்கு ஏதாவது விட்ட குறை தொட்ட குறை இருக்கும். இருந்துட்டு போகுது விடு. " எனப் பெருந்தன்மையாகப் பேசியவளை முறைத்தாள் முத்து. "நீ இப்படி, பொறுத்து போகறதால தான் , உன்னை எல்லாரும் ஏய்க்கிறாக, மாமனே உன்னைப் போட்டு பார்த்துருச்சு, நான் உன்னை மாதிரியெல்லாம் பொறுத்துப் போகமாட்டேன் , வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான் " என முத்து எகிறினாள். " பார்ப்போம், பார்ப்போம் , அங்கனை ஆள் வந்தாப்லையினா ,இங்கனை குச்சுக்குள்ள ஒளிஞ்சுக்குற " எனச் சிந்தா குமரனை வைத்து கேலி பேசவும் , முகம் சிவந்து போன முத்து, "போக்கா, அவுக பார்வையிலேயே , இதைச் செய்யிங்கிற அதிகாரம் தான். என் மனசுக்குள்ளேயும் வந்து கட்டளை போடுவாக . அன்னைக்கு அப்படிதான், அவுக அப்பாவுக்குப் போனை போட்டு, என்னை மருமகனு அறிமுகப் படுத்தனமுன்னு ஒரே பிடிவாதம். நான் அரண்டு ,அடம்பிடிக்கவும் போனா போகுதுன்னு விட்டாக. அந்த அய்யாவும் திருவிழாவுக்கு வரமுன்னு சொல்லியிருக்காக , இந்த அமிர்தக்கா வேற பயமுறுத்தி விட்டுட்டுப் போயிருக்கு, எனக்குப் பயந்து வருது " என அக்காவின் தோள் சாய்ந்த தங்கையை வாஞ்சையாக அணைத்தாள் சிந்தா.


பின் ஓர் உறுதியுடன் எதையோ யோசித்தவளாக "முத்து, ஊர் உலகம் பேசுது, நாங்க விசனப்படுவோமுன்னு எல்லாம் நினைக்காம , நாங்களா , குமரனான்னு முடிவெடுக்குற சூழ்நிலை உனக்கு வந்தா, நீ அவர் பின்னாடி போ. அது தான் உனக்கு நல்லது" எனச் சொல்லவும், விழுக்கென நிமிர்ந்த முத்துக் கண்ணில் நீரோடு , "என்னக்கா இப்பிடி சொல்லிட்ட, நான் அம்புட்டு சுயநலக்காரின்னு நினைச்சிட்டியா " என அழுதவளிடம்


" நீ பாசமானவை தான் இல்லைனு சொல்லலை, ஆனால் கங்கா மாதிரி ஆளுங்க இருக்கிற ஊர்ல, அமிர்தா மாதிரி சில நேரம் உறுதியான முடிவை நீயும் எடுக்கணும் " என்ற சிந்தாவின் வார்த்தைகள் , அக்காவைத் தவிர உலகமறியாத அந்தச் சின்னவள் மனதில் மேலும் பயத்தைத் தான் உண்டாக்கியது.

 வள்ளி வீட்டிலும் அய்யனுக்குக் காணிக்கையாகும், மண் உருவங்கள் சுட்டு தயாராக இருக்க , வர்ண பூச்சு நடந்து கொண்டிருந்தது. அக்காளும், தங்கையும் காலையிலேயே வேலையை முடித்து விட்டு சத்தியாவையும் தூக்கிக் கொண்டு வள்ளி உதவுவதை மூன்று நாட்களாகச் செய்து வருகின்றனர். வேலுவும் வெளியே அலையாமல் வீட்டுக்குள் தானே இருக்கிறாள் என விட்டுவிட்டான்.

அன்று வேலு, சிந்தாவை கன்னத்தில் அறைந்த தினம், பார்த்திபனூர் சந்தையில் சரக்கு இறக்கச் சென்று விட்டு, வண்டியை நிழலில் போட்டுவிட்டு, சிந்தா மேலிருந்த கோபத்தில் மதிய உணவை ஒரு உணவகத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, அந்தக்கடைக்குப் பின் புறம் ஒரு தட்டி சுவரைத் தாண்டிய பகுதி குடிமகன்களின் பாராக இருந்தது. இதன் முகப்புப் பக்கம் அடுத்தத் தெருவில் இருக்கும். 

வேலு சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு யாரோ சீமைக்கருவை, மேலப்பூங்கொடி எனப் பேசுவதைக் கேட்கவும், காதைத் தீட்டிக் கேட்க, இவர்கள் முயற்சி வென்றால், சீமை கருவை உற்பத்தி குறைந்து விடும். நமது வருமானமும் குறையும் எனப் பேசிய மூவர், இந்த இரண்டு குடும்பத்தில் யார் மேலாவது கை வைக்க வேண்டும் எனப் பேசினர். ஒருவன் சிந்தாவை அசிங்கமாகத் திட்டி " அவளைப் போட்டமுன்னா, எல்லாப் பயலும் அடங்குவாய்ங்கே" எனவும். " முந்தியே, நாம வேலைத் தனத்தைக் காட்டுனவைங்க தானே, அதில தான் வேலுப்பயலைக் கட்டிக்கிட்டா. " என ஒருவனும்.

" பொம்பளைனா, அவ பொம்பளை, எம்புட்டுத் திருத்தம், இரண்டு புள்ளை பெத்தும் சிக்குண்டு இருக்கா. அவளைத் தூக்குவோம், இரண்டு நாள் அனுபவிச்சிட்டு, கழுத்தறுப்போம்" எனப் பேசப் பேச வேலுவுக்கு இரத்தம் கொதித்தது. மேஜையைக் குத்தியவன், யார் இவர்கள் எனப் பார்க்க, அந்தத் தட்டிச் சுவரை, தன் கோபத்தைக் காட்டி எட்டி உதைக்க அது கீழே விழுந்தது. ஆனால் இவன் யார் என அடையாளம் காணும் முன், ஹோட்டல் காரன் சண்டைக்கு வர, அந்தக் கேப்பில் அவர்கள் தப்பி விட்டனர். ஆனால் அதில் ஒருவன் சோமன் தான் என மனதில் உறுதிப்படுத்திக் கொண்டவன், அவனைத் தேட ஆள் பிடிபட வில்லை.

அதே கோபத்தில் வீட்டுக்கு வந்தவன், சிந்தாவுக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்த, தனது சின்னாத்தாளைக் கேடயமாகப் பயன்படுத்துவது எனும் முடிவுக்கு வந்தான். தகவல் உடனுக்குடன் பெறுவதற்காக, ராக்காயிக்கு பட்டன் போனும் வாங்கி வந்தான். 

ஆனால் அதையும் " இந்தக் கிழவி கெட்ட கேட்டுக்கு செல்போன் வேற, மாமன் நம்மளை வெறுப்பேத்துறதுக்கே இப்படிச் செய்யுதுக்கா" என முத்து பொருமும் போது, " குடுத்தா, குத்துட்டு போகுது. எனக்கு அதைப் பத்தி ஒண்ணும் குறையில்லை. நம்ம அம்மா இருந்தாலும் வாங்கித் தான குடுப்போம். ஆனால் அதை என்னத்துக்குப் பெரிய ராணுவ ரகசியம் மாதிரி செய்யறது, அது தான் எனக்குக் கஷ்டமா இருக்கு" என்றாள் சிந்தா.

வீட்டுக்கு வரும் போது சிந்தா அவனது சின்னம்மாவை அடிக்கக் கை ஓங்கியதைக் கண்டு , அம்மா வீட்டை விட்டுப் போகாமல் தடுக்கவே மன்னிப்பு கேட்கச் சொன்னான். அவள் உயிருக்கு முன் ராக்காயி கிழவியின் வார்த்தைகள் அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. கொக்குக்கு இரை ஒன்றே மதி எனும் சொலவடைக்கு ஏற்ப, சிந்தாவின் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கைக் கொண்டவன், அவளைப் போற்றிப் பாதுகாக்கவே முனைந்தான் . 

ஆனால் சிந்தா, " நான் செத்தாலும்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தவும் அவளை அறைந்து விட்டான். அதைச் சாக்காக வைத்தே, வாசலில் காவலுக்குப் படுத்தான். மூன்று ஆண்களில் ஒருவர் கட்டாயம் வீட்டுக்கு அருகில் இருப்பது போல் பார்த்துக் கொண்டனர். இதை எதையும் அறியாத சிந்தா மனம் நொந்தவளாக வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்க , ஒரு முறை சிறுவயது பெண்ணை அரவம் தீண்டியது எனச் செய்தி வந்த போதும் வேலுவே முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு அழைத்துச் சென்று வந்தான்.

இப்போது அவன் நாடகம் தெரிய வரவும், முன்னைக்கும் அதிகமாகவே கணவனிடம் வம்பிழுத்த சிந்தா, " இங்க பாரு மச்சான், குதிரையெடுப்பு முடியவும் மருவாதியா உன் சின்னம்மா கிழவியை ஊரைப் பார்த்து பத்திவிடு" என வேண்டுமென்றே வம்பிழுத்தாள் 

" ஊருக்குள்ள, எம்புட்டுச் சோதனை வந்தாலும் பொறுத்துப் போற ஒரே ஒரு நல்லவ இருந்தா. இந்த மாமியா மருமகள் சண்டை அவளையும் சுயநலம் பிடிச்சவளா மாத்திடுச்சே" என வேலு புலம்பவும்.

" இப்பவும் நான் நல்லவ தான். என் புருஷன் பேச்சைத் தட்டாமல் , அவுக சின்னாத்தாளை ஊருக்கு அனுப்பி வைக்கிறேன்" என நமட்டு சிரிப்போடு சொன்னவளை சீண்டும் ஆவல் வேலுவுக்கும் வந்தது.

" நான் சொல்ற எல்லாத்தையும் கேட்ப அப்படித்தான. எங்க உன் தங்கச்சி விசயத்தில நான் சொல்றதைக் கேளு பார்ப்போம்" என அவள் சவால் விடவும். கண்கலங்கிய சிந்தா, " இந்தப் புள்ளையை நினைச்சு நானே பயந்து கிடக்கேன். நீ வேற ஏன் மச்சான். அவுக உசரம் தெரியாம, மனசை பரிகொடுத்துட்டு நிக்கிறா. இது எதில கொண்டு போய் விடுமோ தெரியலை" என, தங்கைக்குத் தைரியம் சொன்னவள், தன் கவலையைக் கணவனிடம் பகிர்ந்தாள். அவன் துணை இருந்தால் இதையும் சேர்ந்தே சமாளிக்க முடியும், அப்பாவையும் சம்மதிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு.

" ஏய் புள்ளை இதுக்கு எதுக்குக் கலங்குற, அய்யன் மேல பாரத்தைப் போடு. எப்படியும் குமரன் விட மாட்டாப்ல, அதிகப் பட்சம் பெரிய வீட்டோட திரும்பப் பகைமை வரும், பேசாம போவாக. தென்வயல் வேலை, உங்க அப்பா வேர்வையைச் சிந்தி உருவாக்குறதை வேற ஆள் பண்ணையம் பார்ப்பாக, அவ்வளவு தானே. சமாளிச்சிக்கலாம். சின்னக்குட்டிக்கு நல்ல வாழ்க்கை அமையுது, வேலுப்பய மாதிரியே இன்னொரு அடிமை கிடைக்குதுண்டா, சரிசரின்னு போக வேண்டியது தானே" என வேலுச் சொல்லவும்.

" இது தான் மச்சான். அன்னைக்கு, எங்க அப்பாவுக்குத் தகிரியம் சொல்ல , உன்னை மாதிரி ஒரு மகன் இருந்திருந்தா, நாங்களும் எதிர்த்து நிண்டிருப்போம்" என அவள் சொல்லவும்.

" அடியே சிந்தாமணி, இப்பவும் நீ நிமிர்ந்து தான் நிக்கிற. அதைப் புரிஞ்சுக்க" என்றவன் மணியைப் பார்த்து விட்டு, " உன் கூடப் பேச ஆரம்பிச்சா நேரம்காலம் போறதே தெரியாது. பெரிய வீட்டு அண்ணனும், தம்பியும் கமுதிக்கு கூட்டிட்டுப் போகச் சொன்னாக. வடநாட்டுச் சிங் ஆளுங்க விவசாயம் பண்றாகல்ல, அவுகளைப் பார்க்கனுமாம். அப்படி உங்க அண்ணன் கந்தனுக்கு மண் ப்ரிட்ஜ் ஆர்டர் எடுத்துட்டு வர்றேன். குதிரை வேலை முடிஞ்சிடுச்சு. அடுத்த வேலை வேணுமுல்ல" என்றவன், " தனியாக எங்கையும் போகாத " என எச்சரித்து விட்டுச் செல்லவும், தூங்கி எழுந்த மகளைத் தூக்கிக் கொண்டு அவனோடே சென்று, வள்ளியின் வீட்டில் இறங்கிக் கொண்டாள். ஏற்கனவே முத்து அங்கு உதவிக் கொண்டிருந்தாள்.

பதினோறு குதிரைகள் ஒரு ஆள் உயரத்தில் விதவிதமான வண்ணக் கலவைகளின் சேர்க்கையில் கிராமத்துக்கே உரிய பளிச்சென்று தோற்றத்தோடு கண் மட்டும் திறக்கப்படாமல் தயாராக இருந்தது. அவற்றைத் தட்டி மறைத்த கொட்டகையில் வைத்துப் பாதுகாத்து வந்தனர். வேளாளர்கள் மண்ணால் ஆண பொம்மைகளைப் படைக்கும் தொழிலைச் செய்வதால், பிராமணர்களைப் போல் பூணூல் அணிந்து, பூஜை செய்வார்கள்.

அந்தப் பதினோரு குதிரைகள் மட்டுமின்றி, குழந்தை பொம்மை, அய்யன் வேட்டைக்குத் துணை போகும் நாய் பொம்மை, ஆடு, ஆண் பெண் உருவ பொம்மைகள், காளியம்மன், அய்யனார் எனச் சாமி உருவ பொம்மைகளையும் நேர்த்திக் கடனாகச் செலுத்துவார்கள்.

மேலப்பூங்கொடியில் திருவிழா எனில் சுற்று வட்டார பகுதி மக்கள் அனைவருமே வந்து கலந்து கொள்வார்கள். இவர்கள் அய்யன் கோவில் எதிரே அகல்விளக்கு முதல் இந்தப் பொம்மைகளையும் கடை பரப்ப, அந்த நேரம் அப்படியே வாங்கி வேண்டுதல் நிறை வேற்ளுபவர்களும் உண்டு.

முத்துவோட சேர்ந்து சுய உதவிக் குழு பெண்கள், வர்ணம் தீட்டும் வேலையைப் பார்க்க, வள்ளி சோர்வாக இருந்தாள். சிந்தா அவளருகில் அமர்ந்தவள், சந்தேகமாக நாடியைத் தொட்டுப் பார்க்க இரட்டை நாடி ஓடியது, அவளை அர்த்தமாகப் பார்க்கவும், " இப்ப எதுவும் சொல்லவேணாம். புரவியெடுப்பு முடியவும் சொல்லிக்கலாம் என்றவளைத் திருஷ்டி கழித்தாள் சிந்தா.

சிந்தாவுக்கு அவள் தந்தை அய்யனாரிடமிருந்து போன் வந்தது, " ஆத்தா சிந்தா கிழங்காட்டூர் பக்கத்தில இருக்கக் கருவைக் காட்டுல, உன் மாமனை அரவம் தீண்டி கிடக்காம். போன் வந்துச்சு. உங்க ஆத்தாளை மாதிரியே அவனும் போயிடப் போரான். சீக்கிரம் வா, மருந்தைக் கொண்டுக்கிட்டு போவோம்" எனப் பதறவும், சத்தியாவை முத்துவிடம் தந்துவிட்டு, அப்பாவோடே டிவிஎஸ் வண்டியில் வீட்டுக்குச் சென்றவள், அவசரமாக மூலிகையைக் கொய்யவும், மருமகளிடம் அல்லாது அய்யனாரிடம் விசாரிக்கவும், அவரும் புலம்பியபடியே விவரத்தைச் சொன்னார். அய்யனார் பட்டன் போனை எடுத்தவர்கள் பதட்டத்தில் சிந்தாவின் ஆன்ட்ராய்டு போனை எடுக்கவில்லை.

ராக்காயி கிழவி, மருமகளையும், அவள் குடும்பத்தையும் திட்டிக் கொண்டே இருந்தவர், பத்து நிமிடம் கழித்தே நினைப்பு வந்தவராக மகனிடம் கூப்பிட்டு விவரத்தைச் சொல்லவும். மாமன் கூடத் தான போயிருக்கா. நான் பேசிக்கிறேன்" என்றான். மனைவியின் போனுக்கு அடிக்க அதையும் ராக்காயியே எடுத்து, " உன் பொண்டாட்டி போற அவசரத்தில இதை விட்டுட்டு போயிட்டா" எனவும் , அவனும் சிந்தாவை நொந்து கொண்டே, மாமனாருக்கு போன் போட்டான். அவர் வண்டி ஓட்டும் பதட்டத்தில் போனை எடுக்கவே இல்லை.

கமுதியில் வடநாட்டுப் பஞ்சாபிகளைப் பார்த்துப் பேசியவர்கள், " இந்த ஜனங்க நம்மளை மாதிரி விவசாய ம் பார்க்குறாங்க. ஆனால் குஜராத்தி சேட்டு வியாபாரியா தான் இருக்கான் பாரு" எனப் பேசிக் கொண்டவர்கள். தங்களது முயற்சி பற்றியும் சொல்லி விட்டு, அவர்கள் இடத்தைச் சுற்றிப் பார்த்தார்கள். குமரன் சில விசயங்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டவன், அவர்கள் முறையையும் அறிந்து கொண்டான்.

கோவையிலிருந்து இயற்கை உரங்களை வரவழைக்கும் வண்டிச் செலவுக்கு இவர்களிடமே மண்புழு உரம், பஞ்சகவ்வியம் மற்றும் உயிர் உரங்களை வாங்கலாம் என வந்திருந்தனர். இது போன்ற உயிர் உரம் தயாரிப்பும் அவர்கள் செயல் திட்டத்தில் உள்ளது. ஆனால் அது தயாராக நாள் பிடிக்கும் என்பதால் இவர்களிடம் வாங்க வந்தனர்.

சிந்தா கிளம்பவுமே சிணுங்கிய சத்யாவை வேடிக்கைக் காட்டி அதனைத் திசை திருப்ப முயன்ற முத்து, பெரியவீட்டு ராஜியம்மாள் வரச் சொன்னதாக அல்லி வந்து சொல்லவும், சத்தியாவோடு அங்கே சென்றாள் முத்து. அங்குச் சிந்துஜாவைப் பார்க்கவும் அதோடு விளையாடக் கிளம்பியது சத்தியா.

முத்துவின் தோழி மகேஷ் வந்திருக்கவும், இவளைக் கூப்பிட்டு விட்டார் ராஜி. இருவரும் ஆசையாகச் சந்தித்துக் கொள்ள, கங்கா மகேசை சீண்டினாள். " ஏண்டி பண்ணைக்காரன் மகளை மேலபடிக்கக் கோயமுத்தூர் வரைக்கும் கூட்டிட்டு போயிட்டு வந்த உன் குமரன் அண்ணேன், உன்னைய மேல படிக்கச் சொல்லலையா" எனக் கேட்கவும்.

" அண்ணேன் சொல்லுச்சு, நானே செலவை பார்த்துக்குறேன்னும் சொல்லுச்சு. ஆனால் உங்களை மாதிரி தான உன் சித்தியும் இருப்பாக, மாட்டேன்டாக. சிந்தாக்கா மாதிரி ஒரு அக்கா இருந்தாலும் படிக்கிறதுக்குச் சப்போர்ட் பண்ணியிருப்பாக. நீங்க எல்லாம் பள்ளிக்கூடம் தாண்டாத ஆளுங்க. வேற எப்படி இருப்பீக " எனக் குறை சொல்லவும்.

" ஏன் சிந்தா மட்டும் கலெக்டருக்கு படிச்சவளோ" எனக் காட்டமாகக் கேட்ட கங்காவிடம், " அவுக கலெக்டருக்கு படிக்கலைனாலும், தங்கச்சியைக் கலக்டருக்கு படிக்க வைக்கனுமுன்னு நினைக்கிறவுக" எனப் பதில் தந்தாள் மகேஷ். முத்துவுக்குப் பெருமையாக இருந்தது. 

' பேசுங்கடி, பேசுங்க. அப்புறம் எல்லாம் அலறி ஓடுவீங்க' என மனதில் சிரித்த கங்கா, ஒரு போன் வரவும் பின் பக்கம் சென்றாள். முத்து அவள் பதட்டத்தைப் பார்க்கவும், பிறர் கவனத்தைக் கவராமல் அவளைப் பின் தொடர்ந்து, கங்கா பேச்சை ஒட்டுக் கேட்கவும், அந்த வார்த்தைகளை நம்ப இயலாமல் அவள் காலடியில் பூமி சுழன்றது. ஆனாலும் இது தைரியமாகச் செயல்பட வேண்டிய சமயம் என முடிவெடுத்தவள், அக்காள் மகளைத் தூக்கிக் கொண்டு அவசரமாக வெளியேறியவள், அக்காவுக்குப் போன் அடிக்க, ராக்காயி எடுத்தது. அப்பாவுக்கு அழைக்க நாட் ரீச்சபில் என வந்தது. வேலுவை அழைக்க அவன் மாமனாருக்கு போன் செய்து கொண்டே இருந்ததால் எங்கேஜ்டு சத்தம் வந்தது.

சட்டெனக் குமரனுக்குப் போன் அடித்தவள், அவன் எடுக்கவுமே," என்னங்க மோசம் போயிட்டோம். கங்கா ,அக்காவைக் கொல்ல ஆள் அனுப்பியிருக்கா. அப்பாரும் அது கூடத் தான் இருக்காரு" என அழவும்.

" என்னம்மா சொல்ற " எனப் பதறியவன். " வேலு ப்ரோ வண்டியை எடுங்க. சிந்தா அக்காவுக்கு ஆபத்து" என்ற தந்தி மொழிகளில் சொல்லி, காரை நோக்கி ஓடவும், வேலு நொடியில் புரிந்து கொண்டு, குமரனை முந்திக் கொண்டு செல்ல, சிவநேசனும் இவர்கள் ஓடுவதைப் பார்த்து பின்னாடியே ஓடி வந்தான்.

கங்கா யாரிடமோ, "சிந்தா அங்க வந்துட்டாளா. இன்னைக்கு அவ உயிரோடு திரும்பக் கூடாது, முடிச்சு விடு " என்றதை மட்டுமே கேட்டாள். மீதி விசயத்தைக் கேட்கும் முன் ஓடிவந்து விட்டாள். இதைக் குமரனிடம் சொல்லவும், "கிழங்காட்டூர் கம்மாகரை காட்டுக்கு போகனும்" என்றவன், " முத்து, உங்க தாய்மாமா நம்பர் இருந்தா கூப்பிட்டு ஆளுங்களோட அங்க போகச் சொல்லு' எனக் கட்டளையிட்டவன். வேலு அசாத்திய மௌனத்தோடு பேய் வேகத்தில் காரை ஓட்டுவதைப் பார்க்கவும், " ப்ரோ, சிந்தாக்காவுக்கு ஒண்ணும் ஆகாது" எனத் தைரியம் சொன்னவனை, சிவநேசன் எப்படித் தெரியும் என விசாரித்தான். குமரன் பதில் சொல்லாமல் மழுப்பியவனுக்குக் கோபம் பலியாக வந்தது.

சமயோசிதமாகச் சுப்புவுக்குப் போன் அடித்தவன்," எங்க இருக்க" எனவும் , " திருவிழாவுக்குப் போஸ்டர் ஒட்டக் கூட்டாளி பசங்களோட பக்கத்து ஊருக்கு வந்தோம் " என்றவனின் பதிலில், " அந்தப் பசங்களோட, கிழங்காட்டூர் கண்மாய்க் கரை கருவைக் காட்டுக்கு போ. " என விவரம் சொன்னவன், " எவன் இருந்தாலும் போட்டுத் தள்ளு. நான் பார்த்துக்குறேன்" எனத் தாடை இறுகச் சொன்னவனைச் சிவநேசனே அதிர்ச்சியாகத் தான் பார்த்தான்.

மீண்டும் முத்துவிடமிருந்து போன் வந்தது," மாமா நல்லா தான் இருக்காரு. சொன்னவுடனே கிளம்பிட்டாரு" என அவள் அழவும்.

" ஒண்ணும் ஆகாது, பார்த்திபனூர் தாண்டிட்டோம். இன்னும் பத்து நிமிசம் அங்க போயிடுவோம்" என அவளுக்கு நம்பிக்கை தந்துவிட்டு மீண்டும் அய்யனாருக்கு போன் அடிக்க, " ஐயா ஆளுக அடையாளம் தெரியலை, என்னை அடிச்சுப் போட்டு என் மவளை துரத்துறாய்ங்கே. " என அவர் குரலில் வெகுண்ட வேலு,

 " மாமா, கையில கிடைக்கிறதெல்லாம் எடுத்து விட்டு எறி, இத்தனை வருஷம் மம்புட்டி பிடிச்ச கை, உன் கையில வலு இருக்கு, மனசில தைரியத்தோட அடி. உன்னால முடியும். உன் மவளை துறத்துறாய்ங்கே, நமக்கு ஆதாரமே அவள் தான் , அவளைக் காப்பாத்து, முள்ளு விறகை உடைச்சு அடி. உன் மச்சானும், சுப்புவும் ஆளுகளோட வந்துருவாக. நான் வந்துடுறேன்" எனப் போனிலேயே தைரியம் சொல்லவும் ,

 "டேய் " என அய்யனார் , அய்யன் சாமியாகவே மாறி முள்ளுக் குச்சியைக் கொத்தாக உடைத்துக் கொண்டு முன்னேறினார்.

கங்காவின் சூழ்ச்சி பலிக்குமா , வேலு மனைவியைக் காப்பாற்றுவானா, அய்யனார் அவர்கள் வரும் வரை சமாளிப்பாரா, சிந்தாவின் நிலை என்னவாகும் , பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment