சிந்தா-ஜீவநதியவள் -26
வாராரு, வாராருங்க, வழிபட்டானுங்க!
வல்லுவழக் கல்லு உரசருனாருங்க.
வாவறி மட்டும் தீட்டுறாருங்க.
பிலிப் பால் கறந்து, கோட்டை கட்டுறாருன்னுங்க.
அந்த படைக்கும், நம்ம முனியாண்டி படைக்கும்,
அஞ்சாத கருப்பன் கொண்டையில வருவாரு!
ஒரு கொசுவை பிடிச்சு ஒன்பது குழி போட்டு.
ஆட்டாலும் காணாமே, மாட்டாலும் காணாமே .
காட்டுப் புல்லைக் கண்டு வந்து சொல்லு.
காவக்காரவுகளுக்கு காக்கறியை போட்டு.
குறும்பனுக்குக் காஞ்ச எலும்பைப் போட்டு.
மூணையா வீட்டுக்கு மொட்டை எலும்பு போட்டு.
நாலையா வீட்டுக்கு நடு எலும்பைப் போட்டு.
அடுத்த வீட்டுக்கு ஆப்பச்சாரைக் கொடுத்து
மிச்ச எலும்பை நம்ம முனியாண்டிக்குத்
தோரணம், தோரணமா காயப் போடனும்.
குதிரையெடுப்புத் திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழா, இன்று காலையில் , இரண்டு நாள் கூத்து பார்த்தபின்பு அய்யனார் புரவிகளை , அவனிடத்தில் சேர்ப்பிக்க பொட்டலிலிருந்து இன்று மீண்டும் சுமந்து சென்று அய்யனார் கோவிலில் காணிக்கை செலுத்துகின்றனர். இன்று முழுவதும் உண்ணாமல் விரதமிருந்து, மாலையில் அடுக்குப்பானைகளில் பலகாரம், கோழிக்கறி, மாவிளக்கு, தேங்காய் பழம், விளக்கு மேலே அடுக்கில் வைத்து மூன்று, ஐந்து என அடுக்கு பானைகளில் அவரவர் வீட்டிலிருந்து எடுத்துச் சென்று அய்யனுக்குப் படைத்து விட்டு வீட்டுக்கு வந்து இரவில் தான் உணவு உண்பார்கள்
இதோ அன்று தூக்கிய அதே குழுவினர் இன்றும் பொட்டலிலிருந்து தூக்கி,
அய்யன் அழகு மண்குதிரையை
ஆச்சாரம் குறையாமல்
இன்னல்களைக் கலைந்து
ஈரேழு உலகைக் காக்கும்
உரகசயனன் மகனை
ஊர்காக்கும் தெய்வத்தை
எட்டுத் திக்கும் கண்ணசைவில்
ஏற்றம் பெற வைப்பவனை
ஐயனே, அப்பனே என விளித்து
ஒன்பது நாள் நோன்பிருந்து
ஓரணியில் ஒற்றுமையாய் திரண்டு
ஔவியம் கலைந்து அவன் வாகனத்தைக்
காணிக்கையாகச் செலுத்தினர்.
நோய் நொடிகள் தீண்டாமல் , மாமழைப் பொழிந்து, விவசாயம் சிறந்து, மக்கள் வாழ்வாதாரம் உயர்ந்து,ஊர் வளம் பெறவும் , மக்கள் உய்யவும், அய்யன் அகமகிழ்ந்து , தன் வாகனத்தைக் காணிக்கையாக ஏற்று அருள் புரிந்தான்.
கிராமத்து மக்கள், கண் கண்டதை, காது கேட்டதை அப்படியே கிரகித்து அவரவர் புரிதல், கற்பனை சேர்த்து இட்டுக் கட்டி கதையளந்துவிடுபவர்கள். வினை விதைத்தவன், வினையறுப்பான் எனத் தெய்வங்கள், குற்றம் செய்தவரைத் தண்டிக்கும் என்ற கோட்பாட்டின் மேல் நம்பிக்கை வைத்தவர்கள்.
சிந்தா, அன்று சோமனை நேரடியாகவே குற்றம் சுமத்தி சவால் விட்ட பின்னர், ஒரு பக்கம் திருவிழாவில் கலந்து கொண்ட போதும், இந்தக் குடும்பங்களைக் கவனித்தே வந்தனர். நேற்று காலையில் சிந்தா வீட்டு மாட்டுக் கொட்டகை தீ பற்றிய நிகழ்வைப் பேசியவர்கள், மதியம் குமரனுக்கு முத்துவை பரிசம் போட்டதை, ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், "பெரிய வீட்டு ஐயாவுக்குச் சம்மதம் இல்லையாமில்ல, ஆனால் சின்னவுக ,அவுக சிங்கப்பூர் சித்தப்பாவோட வந்து நின்னு தான் பொண்ணு கேட்டுப் பரிசம் போட்டாக, " எனச் சிவநேசன் வந்ததையும், மகாலிங்கத்துக்கு விருப்பம் இல்லாததையும் , குமரன் குடும்பம் பற்றியும் பலவிதமாகப் பேசினர்.
குமரனின் பெற்றவர்கள், பரிசம் போட்டுவிட்டு மதியமே தங்கள் அறைக்குக் கிளம்பப் போனவர்களை, ராஜியம்மாள் வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்தார். உறவினர்கள் பலர் முறைத்தாலும், நேரடியாக எதுவும் சொல்லவில்லை.
ஆனால் கங்கா மட்டும், குமரனிடம்," நினைச்சதைச் சாதிக்கிற. இது எப்படிச் சரியா வரும்னு பார்ப்போம்டா. இந்த உங்கப்பா வந்து அந்த வீட்டில சம்பந்தம் பேசினாரே, வீட்டுக்கு வெளில உட்கார்ந்து தான் பேசினாரு, வீட்டுக்குள்ள வரலைல அதைத் தான் சொல்றேன். நீயும் நாளைக்கு மாமனார் வீடுன்னு போக வர இருக்க முடியாது. என்னத்தைத் தான் புரட்சி புடலங்காய்னு பேசுங்க. ஆனாலும் சிலது மாறாது" எனச் சவால் விட்டவள், வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்காரவும், பதறிய குமரன்.
" நீ சொல்றதெல்லாம் சரி தான். அவளை என் உயரத்துக்கு உசத்திக்கிறேன். இப்படி வயித்து வலியில் அவஸ்தை படுறதுக்கு , பிடிவாதத்தை விட்டுட்டு வா, டாக்டர்கிட்ட போகலாம்" என அழைத்தான் குமரன்.
" இப்படி அவதிபடுவேன்னு தானே அவ சாபம் கொடுத்தா. நீயும் அதுக்குத் தான ஆசைப்பட்ட. நான் அனுபவிச்சுக்குறேன் விடு" என அதிலும் அவளது பிடிவாதத்தைக் காட்டியவள் அவளுடைய, அப்பா, கணவன், அண்ணன் என யாரழைத்த போதும் மருத்துவமனைக்கு வர மறுத்து விட்டாள் கங்கா.
"அது அப்படித் தான் , எப்பவுமே அவள் நினைச்சதைத் தான் சாதிக்கணும், விடு அவளை மாத்த முடியாது" எனச் சிவநேசன் குமாரனை சமாதானம் செய்தான்.
மாலை நேரத்தில் , குமரன் தென்வயல் டென்டில் யோசனையோடு தலையைப் பிடித்துக் கொண்டே அமர்ந்திருக்க, முத்து காபியோடு வந்தாள். பட்டுச் சேலைக்குப் பதில் அன்று போல் பாவாடை தாவணியிலிருந்தவள் கோவிலுக்குச் செல்ல தாயாரணபடி, தனி விதமான மேக்கப் இல்லாமல், அவனுக்காக இருவீட்டாராலும் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் எனும் சந்தோஷத்தில் இயல்பான ஒரு பூரிப்போடே இருந்தாள்.
தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவனைக் காணவும், அவளுக்கு மனதுக்குச் சங்கடமாக இருக்க, காபி ப்ளாஸ்கை ஓரமாக வைத்தவள், அவன் முன்னே வந்து அவன் சிகையை வருடி, "நான் வந்தது கூடத் தெரியாமல் என்ன யோசனை, எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறீக " என முத்துக் கேட்கவும், அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் , அவளின் வயிற்றில் தலைவைத்து இடையோடு கைகளைக் கட்டிக் கொண்டு, " என் யோசனையிலையும் நீ தான் இருக்க. நீ தான் என்னை மயக்கி வச்சிருக்கியே" எனவும், அவன் மீசை பட்ட இடம் குறுகுறுக்க,
" ரொம்ப மயங்கிறவர் தான் நீங்க. அது தான் என்னை எதுக்கு ஆசைப்பட்டிங்கன்னு தெரிஞ்சு போச்சே. நான், உங்கம்மா சாயல்ல இருக்க, டியுபிலிகேட் காப்பி" என அவள் குறைபட்டுக் கொள்ளவும். அவன் சிரித்தபடி தன் முகத்தை நிமிர்த்தி,
"அப்படிச் சொல்லக் கூடாது பேபி, அந்தக் கொடை ராட்டினத்தில் பார்த்தப்ப, ஃபஸ்ட் லுக் வேணும்னா, எங்கம்மா மாதிரி, பயத்தில சில்லிட்ட கை, வேர்த்து விறுவிறுத்த முகம், ஒரு பதட்டம்னு அந்த ஃபீலை தந்த, ஆனால் உன்கிட்ட பேசவரும் போது எல்லாம் , நினைப்பு தான் பொழைப்பை கெடுக்கும்னு சொல்லுவியே, அப்பவே தெரிஞ்சுக்கிட்டேன், என் நினைப்பு உன் பொழைப்பைக் கெடுக்குதுன்னு, அப்புறம் எப்படி விடுறது, என் பொழைப்பு கெடக் கூடாதேன்னு, இதோ பரிசம் போட்டுட்டேன் " எனச் சொல்லி, கண்ணடித்துச் சிரித்தவன் முகம் அவள் நெஞ்சத்தில் பதியுமளவு அருகிலிருக்க, அவன் மயக்கும் சிரிப்பிலும், விசமமான செய்கையிலும் சுதாரித்தவள்,
அவனை விட்டு விலகி, " நீங்க ரொம்ப மோசம். மனுசன் கவலையா உட்கார்ந்து இருக்கீகளேன்னு பக்கத்தில் வந்தது தப்பா போச்சு" என நொடித்தவள், காபியை ஊற்றி அவனிடம் தந்து விட்டு, எதிரே இருந்த சேரில் அமர்ந்து கொண்டாள்.
காபியை மிடறு மிடறாக ரசித்து அருந்தியவன், " நைஸ், என் டேஸ்ட் உனக்கு வந்திடுச்சே" என்றவன் " உனக்கு" எனத் தன்னதை நீட்டவும். அவன் புகழ் மொழியில் மகிழ்ந்திருந்தவள், " நீங்க குடிச்சிட்டு குடுங்க. அதிலையே குடிச்சுக்குவேன்" எனக் குழையவும்.
" கஞ்சாம் பட்டி, இனிமே இரண்டு டம்ளர் எடுத்துட்டு வா. இதுல எல்லாம் லவ்வை காமிச்சா நான் ஒத்துக்க மாட்டேன். என் எக்ஸ்பெக்டேசனே வேற" என அவன் வம்பிழுக்கவும்.
அவனை முறைத்து விட்டு, " பரிசம் தான் போட்டிருக்கீக. தாலி கட்டலை. எங்க அக்காவோட சேர்ந்து பெரிசா உங்க பெரியம்மா கையாளத் தாலி எடுத்துக் குடுத்தா தான் கட்டுவோம்னு டயலாக் எல்லாம் அடிச்சீக . எனக்கென்னவோ பெரியய்யா மனசு மாறுவாகன்னு தோணலை. கடைசி வரைக்கும் நீங்க குமரனாத் தான் இருக்கப் போறீக. நான் என்ன ஆகப்போறனோ" என ஏற்ற இறக்கத்தோடு பேசி அவள் குறைபடவும்,
" தாலி மட்டும் தான் பெரியம்மா சம்மதத்தோட கட்டுறேன் சொன்னேன். மத்ததெல்லாம் என் மூடைப் பொறுத்து" என்றவனை, அருகிலிருந்த செய்தித்தாளைச் சுருட்டி, மாற்றி, மாற்றி அடித்தாள். " ஹேய் அடிக்காதடி, அரைப் பொண்டாட்டியா இருக்கையிலேயே, இந்த அடி, அடிக்கிறாளே" எனப் பயந்தவனைப் போல் நடித்தவனை , " போயா, என் கை தான் வலிக்குது. " என அமர்ந்தவள், கேலிக் கிண்டலை விடுத்து, அவன் கவலையைப் பற்றி அக்கறையாகக் கேட்கவும், கங்காவைப் பற்றிச் சொன்னான்.
" அக்காவைப் போய்ப் பார்க்கச் சொல்லவா" என்ற முத்துவிடம். " வேணாம், அவுங்களைப் பார்த்தா பிசாசா கத்தும்" என்றான் குமரன்.
அந்த நேரம் காவல்துறை ஆய்வாளரிடமிருந்து தகவல் வந்தது. சிந்தா வீட்டு மாட்டுக் கொட்டகைக்குத் தீ வைத்ததாகச் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட நபர், பரமகுடிகாரன் என்றும், அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் பலியானான் எனவும் செய்தி வந்தது. அவனைப் பற்றிய விவரங்களைக் காவல்துறை விசாரிப்பதாகவும் தெரியவந்தது.
குமரன் விசயத்தை முத்துவிடம் பகிர்ந்தவன்" இவன் யார் ஏவின ஆளுன்னு தெரியலை. வேற எதுவும் செய்யாமலும் இருக்கனும்" எனக் கவலைப் பட்டான்.
இந்தத் தகவலும் ஊருக்குள் பரவவும் சிந்தாவின் வார்த்தைகள் சத்தியமானவை , அவளுக்குக் கேடு நினைப்பவர்கள் கெடுவார்கள் எனப் பேசியவர்கள், " பெருமாயி , உன் மகன் என்ன ஆகப்போறானோ" எனப் பயமுறுத்தவும் செய்தனர். ஏற்கனவே மனதளவில் தாக்கப்பட்ட சோமன், அரண்டு போனான்.
சத்தியாவுக்குத் தாய்ப்பால் புகட்டி விட்டு, அது வாயைத் துடைத்து, சிங்காரித்து, சுப்புவிடம் தந்த சிந்தா, " கொஞ்சம் நேரம், வெளில வச்சுக்கச் சுப்பு, நான் சீலை மாத்திட்டு வர்றேன். இந்தச் சின்னக் குட்டிப் போனது வந்திடுச்சான்னு பாரு. இல்லையினா பாப்பாவைத் தூக்கிட்டு அவுக டென்ட் வரைக்கும் போயிட்டு வா" எனக் கண்டிப்பும் , கேலியும் கலந்த குரலில் தம்பிக்குக் கட்டளையிட,
" ஏக்கா, நீயே அதை அங்க அனுப்பி விட்டுட்டு, இப்ப பின்னாடியே என்னையும் அனுப்பி விடுற. " எனச் சுப்பு , அவர்கள் தனிமையில் குறுக்கிட விரும்பாமல் சங்கடமாகக் கேட்கவும்.
" சும்மா போயிட்டு வா. அவுக கல்யாணம் ஆகிற தட்டியும் இப்படித் தான். " எனத் தென் வயல் பக்கம் மகளோடு தம்பியை அனுப்பி விட்டு, இவள் தயாராகிக் கொண்டிருக்க, அவள் பேச்சைக் கேட்டபடி வந்த, வேலு, " நீ பெரிய ஆளு புள்ளை. அதுக்குச் சுப்புகிட்டையே காபி பலகாரத்தைக் குடுத்து விட்டிருக்க வேண்டியது தான" எனக் கேள்வி எழுப்பவும்.
கணவனை முறைத்த சிந்தா, " காலையில தான் பரிசம் போட்டிருக்காக. இரண்டு பேருக்கும் தனியா சந்திச்சிகனுமுன்ன ஆசைப் படுவாகல்லை. உன் கொழுந்தியா எப்படா நாலு மணியாகுமுன்னு மதியத்திலிருந்து காபி கலக்க ஆரம்பிச்சிட்டா " எனத் தங்கையைக் கேலி செய்த சிந்தா,
" ஏன் மச்சான், திடுதிப்புன்னு பரிசமெல்லாம் போட்டுடாக , பெரியய்யா என்ன சொல்லுவாகளோ. என்னத்தைச் சொல்லு, நம்மோடா ஒண்ணு மண்ணா பழக முடியுமா. திண்ணையிலேயே நிக்கிற சம்பந்தமா தானே இருக்கு. " எனக் கவலைப் படவும்.
" அதுக்கென்ன செய்யறது. அவுக வர்ற அளவுக்கு நம்ம வாசலை உசத்த வேண்டியது தான். " என்ற வேலுவிடம் " புரியலையே மச்சான்" என்றாள்.
" சுப்பு கோயமுத்தூர் போயிட்டு வந்து சொன்னான். குமரன் இருக்க இடத்தை அவ்வளவு வசதி செஞ்சு வச்சிருக்காப்லையின்னு. இந்த டென்டே எப்படி இருக்கு பார்த்தியில்ல. பக்கத்தில கிடக்கிற இடத்தில, இவர் தங்குறாப்ல ஒரு வீட்டைக் கட்டுவோம். நாளை பின்னப் பெரிய வீட்டில சமாதானம் ஆனாலும், சின்னக்குட்டிக்கும் அங்க போய்த் தங்கிறது சிரமம் தானே. இங்க அவுக பாட்டுக்கு இருப்பாக. எப்படியும் சுப்புவுக்குக் கல்யாணம் காட்சி செஞ்சா, நம்ம வேற வீட்டைப் பார்க்கனும். அதுக்கு நம்மளுக்கு ஒரு வீட்டை கட்டிபுட்டு, மாடியில குமரன் தங்கிற மாதிரி, ஒரு ரூம்பை கட்டிடுவோம். " என வேலு யோசனைச் சொல்லவும். கணவனின் முகத்தை வழித்துக் கொஞ்சியவள்,
" மச்சான், எம்புட்டு யோசிச்சு வச்சிருக்க. எம் புருஷனும் அறிவாளி தான்" என நெட்டி முறித்தாள். அவளைப் பார்த்து முறைத்தவன் ," அடியே , உன் புருஷன் இந்த ஜில்லாவுக்கே யோசனை சொல்றவன், என்னா நினைச்சிட்டு இருக்க என்ன பத்தி" என அவன் வம்பு பேசவும், சிந்தா முகத்தில் குறும்பு கூத்தாட அவன் சட்டையைப் பற்றித் தன் உயரத்துக்கு இழுத்துக் கொண்டு, தன் கையை அவன் கழுத்தில் கழுத்தில் மாலையாகப் போட்டவள், நான்கு கண்களின் உதவியால் அவன் இதயத்துக்கு மன்மத அம்புகளைத் தொடுத்து " உன்னைப் பத்தி, என்ன நினைக்கப் போறேன். ஒரு மாசமா நாடகமாடி முறைச்சுகிட்டே திரியிற. திருவிழா முடிஞ்சு மஞ்சள் நீர் ஊத்திட்டு உன்னை என் வழிக்குக் கொண்டு வரனுமின்னு நினைச்சிட்டு இருக்கேன்" எனக் குழையவும்,
அவள் கைகளை, பற்றிக் கழுத்திலிருந்து எடுத்து அரையடி தள்ளி நிறுத்தி " அடியே என் சீனிக் கருப்பட்டி, அய்யன் குதிரையை ஆச்சாரமா, தூக்கி நாளைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கனும். அதுவரைக்கும் அழகாயி ஆத்தாளாவே இரு, சிந்தாமணியை இரண்டு நாளைக்குப் பிறகு எழுப்பிக்கடலாம்." என வலுக்கட்டாயமாக முறைத்தவன்,
" மனுசன் அவஸ்தை புரியாம வந்து உரசருரா." எனப் புலம்பியபடியே வெளியே வந்தவன், வேகமாக உள்ளே சேதி சொல்ல வந்து முத்து மீது மோதப் போனான். சட்டெனச் சுதாரித்தவன்,
" ஏய் சின்னக் குட்டி, பரிசம் போட்டுருக்கு, அதுக்கு முன்ன, கண்மண்ணு தெரியாத பறக்கிற" எனத் திட்டவும். அவனை முறைத்தவள்,
" ஐயே, நான் ஒண்ணும் பறக்கலை போ மாமா, ஒரு முக்கியமான சேதி சொல்லத் தான் வந்தேன்." என்றவள், " அக்கா, நம்ம மாட்டுக் கொட்டகைக்குத் தீ வச்சவன் , ஆக்சிடென்ட்ல செத்துப் போயிட்டானாம். இப்பத் தான் அவுகளுக்குச் சேதி வந்துச்சு " என முத்துச் சொல்லவும்.
" ஆத்தி, எம்புட்டு பெரிய சோதனை. ஒரு உசிருல்ல போச்சு" எனச் சிந்தா புலம்பவும், அதைக் கேட்ட ராக்காயி, " இவளுக்குக் கெடுதி செஞ்சவனுக்கும் உருகுறா பாரு. இது மாதிரி பைத்தியகாரிச்சி உண்டா" என்றது.
" தண்டனையின்னா, ஒரு கை, காலு போச்சுனாலும் பரவாயில்லை. அவனை நம்பியிருந்த குடும்பம் என்ன ஆகும்" என்று சிந்தா ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்க, வேலு குமரனைச் சந்திக்கச் சென்றான்.
" ஆமாம் ப்ரோ, இவனுங்களுக்கு, பின்னாடி யாருன்னு கண்டுபிடிக்கனும்" என்ற குமரனிடம், " வேற யாரு, சேட்டோட ஆளுகளாத் தான் இருக்கும்" என்ற வேலுவின் முகத்தில் கவலை சூழ, " எல்லாத்தையும் சமாளிக்கலாம்.ப்ரோ சிந்தாக்காவை எவனும் தொட்டுக்க முடியாது. அவுகளுக்குச் சாமியே பாதுகாப்பு தர்றாரு. கவலைப் படாதீங்க" எனக் குமரன் வேலுவைத் தேற்றினான்.
" நானும் அந்த நம்பிக்கையில தான் தம்பி இருக்கேன்" என்றான் வேலு.
முத்துமணி, சிந்தாவிடம், கங்காவைப் பற்றிச் சொல்லவும், ஒரு பெருமூச்சோடு ஐந்து ஆண்டுகளுக்கு முன், கங்காவின் உடல்நிலை குறித்து ஒரு டாக்டர் சொன்னது நினைவில் வந்தது. அதில் தவறான முரட்டுச் சிகிச்சை முறையால் கங்காவின் கருப்பை மோசமாகப் பாதிக்கப்பட்டு இருப்பதும், மேலும் கருத்தரிக்க வாய்ப்பு இல்லாததையும் சொன்னவர், சில மருந்துகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும் எனவும், பின்னால் கர்ப்பப்பை சம்மந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது எனவும் அறிவுறுத்தியிருந்தார். அது தான் தற்போது வேலையைக் காட்டுகிறது என உணர்ந்த சிந்தா,
'பெரியம்மா, இதை எப்படித் தாங்குவாகன்னு தெரியலை. ஆத்தா நீ தான் அவுகளுக்கு சக்தி கொடுக்கனும்'என வேண்டிக் கொண்டாள்.
இரவு, இரண்டாம் நாள் கூத்தில் இன்னிசை, ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். குமரனின் குடும்பமும் அன்று அங்குத் தங்கி திருவிழாவில் கலந்து கொண்டனர். குமரனையும், முத்துவையும் சேர்த்து வைத்துப் பார்க்க, ஊர் மக்கள் சுவாரஸ்யம் காட்ட, முத்து சிந்தாவின் பின் மறைந்து கொண்டாள். குமரன் பெற்றவர்களோடு அமர்ந்து பார்க்க, ரகசிய பார்வை பரிமாற்றங்களும், மற்றவர் கேலியும் கிண்டலுமாகவே பொழுது கழிந்தது.
கச்சேரி ஆரம்பித்த ஒருமணி நேரத்தில் பெருமாயி சிந்தாவை நோக்கி ஓடிவந்தார். " சிந்தா என் மகனை காப்பாத்து, நீ விட்ட சாபமும் பலிச்சிடுச்சு. அவன் பயமும் நிசமாயிடுச்சு . வேடிக்கை வினையில கொண்டாந்து விட்டுருச்சு" என வரிசையாக அடுக்கவும், " அத்தை என்ன ஆச்சுன்னு சொல்லு" எனச் சிந்தா நிதானமாககேட்டாள். தன் மகனைப் பாம்பு தீண்டிய விவரத்தைச் சொல்லவும், நொடியும் தாமதிக்காது, வீட்டுக்குக் காவலாக இருந்த அப்பா அய்யனாரை அழைத்து மூலிகை மருந்துகளை எடுத்து வரச் சொல்லி விட்டு , கணவனோடு பெருமாயி வீட்டுக்கு விரைந்தாள் சிந்தா.
இன்றும், சோமன் அதே போல் மல்லாக்க கிடக்க, அவனைக் கண்ட நொடியில் அன்றைய தினத்தின் ஞாபகத்தில் அவளின் உடல் விறைத்தது. வேலு ,சிந்தாவை தேற்றி இயல்புக்குக் கொண்டு வர, அதற்குள் அய்யனாரும் மூலிகையோடு வர, சிந்தா தெய்வங்களை வேண்டிக் கொண்டு, பாம்புக் கடிக்கான முதலுதவி சிகிச்சைகளைச் செய்தாள். இவளைப் பார்த்த சோமன், கையெடுத்துக் கும்பிட்டு , கண்ணீர் விட்டான்.
"உனக்கு ஒன்னும் ஆகாது, தைரியமா இரு" என அவனுக்கு நம்பிக்கை தந்தவள், "மச்சான், அந்தக் கம்போண்டருக்கு போன் போடு, அத்தை இவுகளோட மானாமதுரைக்குக் கூட்டிட்டு போ, உசிருக்கு ஆபத்து இருக்காது, இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் வச்சு பார்த்துட்டு வா" எனச் சொல்லி அனுப்பிவிட்டாள் . பின்னர் வேலுவே தனது டாட்டா ஏஸ் வண்டியை எடுத்துவர, சோமனை அவன் உறவினரோடு வண்டியில் பின்னால் ஏற்றி , மானாமதுரை மருத்துவமனையில் சேர்த்து விட்டு வந்தான்.
சிந்தாவின் முதலுதவியில் சோமன் பிழைத்தாலும், பாம்புக் கடி சதை வரை பரவியிருக்க, காலின் செயல் திறன் பாதிக்கப் படும் எனச் சிந்தா கணித்தாள் . மருத்துவரும் அதையே சொல்ல மூன்று நாள் அங்கேயே இருந்து மருத்துவம் பார்ப்பது எனப் பெருமாயி முடிவெடுத்தார். விஷய மறிந்த சோமனின் கூட்டாளிகள் வருவதும் போவதுமாக இருந்தது. தான் எத்தனை கெடுதல் செய்தும், தன் உயிரைக் காத்த சிந்தாவை மனதில் நன்றியோடு நினைத்தவன், சேட்டு அவளை வேறெதுவும் செய்துவிடக் கூடாதே எனக் கவலைப் பட்டு , தன ஆட்களிடம் விசாரிக்கவும் செய்தான்.
இன்று காலைப் பொழுது, முதல் ஊருக்குள் சோமனைப் பாம்பு கடித்ததும், சிந்தா அவனைக் காப்பாற்றியதுமே பேச்சாக இருந்தது. மண்குதிரைகளை அய்யனாரிடம் காணிக்கையாக அர்ப்பணித்தவர்கள், தப்பு செய்தவருக்கு அவன் தந்த தண்டனையை எண்ணி பயபக்தியோடே வணங்கினர்.
அன்று மாலைப் பொழுதிலிருந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள், காலை முதல் ஆச்சாரமாகத் தலை முழுகி விரதமிருந்து , காவல் தெய்வங்களை நினைத்து கோழியடித்து, உணவு சமைத்து, இட்லி, பணியாரம்,எனப் புதிதாக வாங்கிய மண் அடுக்குச் சட்டிகளில் நிறைத்து, மேலிருக்கும் சட்டியில், தேங்காய் பழமும், அதற்கும் மேல் விளக்கும் வைத்துச் சுமந்து சென்றனர். சிந்தா வீட்டில் அக்காளும் தங்கையுமாக, மூன்று, மூன்று பானை அடுக்குகளைச் சுமந்து வந்தனர்.
கந்தனின் குடும்பம் அய்யன் கோவிலுக்கு அருகிலும், ஊருக்குள்ளும் கடை விரித்திருந்தனர். மக்கள் அடுக்குப் பானையையும், குழந்தை பொம்மை, ஆடு, மாடு , அய்யனார் வேட்டைக்குப் போகும் போது உடன் வரும் நாய் ஆகியவற்றை மண்ணால் உருவங்களாகச் செய்து வைத்திருந்தனர். கிராம மக்கள் அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ற உருவங்களை வாங்கி அய்யனார் காணிக்கையாகச் செலுத்தினர்.
பெரிய வீட்டில் கங்கா சமாளித்துக் கொண்டு நடமாடித் திரிய, அவர்கள் வீட்டிலிருந்தும் புதிய மண்சட்டிகளில் அய்யனாருக்குப் படைக்கவென மூன்று சட்டிகளில் ராஜியம்மாள் நிரப்பியிருந்தார். ஆனால் மீனாளுக்கும் சரி, அவருக்கும் சரி அவ்வளவு தூரம் மண் சட்டிகளைச் சுமந்து செல்வது இயலாத காரியம். அதனால் தன் மகள்கள் இருவரையும் மீனாவுக்குத் துணைக்குச் செல்லச் சொன்னார். ராஜியம்மாளின் மற்றொரு ஓரகத்தி, மகேஷின் அம்மா ஆகியோரையும் சேர்ந்து செல்லச் சொன்னவர், தான் சிவநேசனோடு பின்னால் காரில் வருவதாகச் சொல்லியிருந்தார்.
கங்காவுக்கு முதலில் இந்தத் திருவிழாவில் கலந்து கொள்ள விருப்பமில்லாமல் இருந்தது. " ஆத்தா இல்லை, நான் சாமிக்கு நேந்துருக்கேன். நீயும் மாப்பிள்ளையுமா போயி ஒரு குழந்தை பொம்மை வாங்கி வச்சிட்டு வாங்க. அடுத்த வருஷம் உங்க வீட்டுக்கு வாரிசு வந்துரும்" என ராஜியம்மாள் வற்புறுத்த, எரிச்சலாக மறுத்தவள், தன் மாமியார் வேதாவும் சேர்ந்து சொல்லவும் மறுக்க இயலாமல் போனது.
வரிசையாகப் பெண்கள் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு, அவர்கள் வீட்டுக்கு வந்த உறவினர் பெண்களோடு சேர்ந்து மண் சட்டி சுமந்தபடி அய்யனார் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
சிந்தாவும், முத்துவும் ராக்காயியோடு நடந்து வந்து கொண்டிருக்க, அய்யனார் பேரன் பேத்திகளை வைத்துக் கொண்டார். இவர்கள் நடந்து பெரிய வீட்டின் அருகில் வரவும், மீனாளோடு மற்றவர் வீட்டை விட்டு வரவும் சரியாக இருந்தது. பெரிய வீட்டுப் பெண்கள், அக்காள் தங்கையை முறைக்க, மீனாளும், மகேஷும் மட்டுமே ரகசியமாக இவர்களோடு கண்ணால் பேசிக் கொண்டனர்.
மரியமும், அமுதாவும் சோமசுந்தரத்தோடு வந்து இணைந்தவர்கள், மருமகள் சட்டி சுமந்து வருவதைப் பார்க்கவும் மகிழ்ச்சியடைந்தனர். இரண்டு வீட்டுக்கும் நடக்கும் போது இருந்த இடை வெளியை இவர்கள் நிரப்பினர். எனவே பார்வைக்கு ஒரே குடும்பம் போல் தெரிந்தது. எல்லாருமாகச் சூரியன் இன்னும் மறையாத அந்தப் பொன்மாலைப் பொழுதில் அய்யனார் கோவிலைச் சென்றடைந்தனர்.
அய்யனார் கோவில் ஊருக்கு ஒதுக்குப்புறமாய்க் கண்மாய்க்கு அருகில் இருக்கும், கோவிலில் காணிக்கை வரும் குதிரைகளை நிறுத்த வசதியாக மருதமரம், அரசமரம் என மரங்கள் கோவிலுக்குப் பின்னால் நிற்கும், அதில் தான் அய்யன் குதிரையை நிறுத்தி வைத்திருந்தனர். மற்ற உருவங்களையும் அங்குத் தான் கொண்டு வந்து வைப்பார்கள்.
நாளை மாட்டை அவிழ்த்து விட்டுப் பிடிக்கும் மஞ்சுவிரட்டு எனும் வீர விளையாட்டுகளும், முறைப் பையன், பெண்கள் ஊற்றி விளையாடும் மஞ்சள் நீராடும் விளையாட்டும் உள்ளது. அதோடு திருவிழாவை முடிப்பார்கள். அதற்காக, பக்கத்து ஊர்களிலிருந்து காளை மாடுகள் சிலவை வந்து இறங்கியிருந்தன.
இரண்டு குடும்பங்களும் அய்யனார் கோவிலில் வந்து சேர்ந்திருக்க, வேலுவும் குமரனும் மட்டும் மானாமதுரை காவல் நிலையம் வரை சென்றிருந்தனர். சற்று முன் காவல்நிலையத்திலிருந்து மாட்டுக் கொட்டகை தீ வைத்த சம்பவத்தில் ஒரு துப்புக் கிடைத்ததாகத் தெரியவும் இருவரும் யார் அந்த எதிரி எனத் தெரிந்து கொள்ளச் சென்றிருந்தனர். இருவரும் மானாமதுரை போலீஸ் ஸ்டசனில் போலீஸ் பிடித்து வைத்திருந்தவனைப் பார்க்கச் செல்ல, முதல் நாள் இரவில் செத்துப் பிழைத்திருந்த சோமன் வேலுவுக்குப் போன் செய்தான்.
" வேலு அண்ணன், சிந்தா உசிருக்கு ஆபத்து. மஞ்சு விரட்டு மாட்டில ஒன்றை ரேக்கி விட்டு சிந்தாவை கொல்ல திட்டம் போட்டாருக்காகச் சீக்கிரம் போயி காப்பாத்து" எனக் கதறிக் கொண்டு போன் செய்ய, வேலு விக்கித்து நின்றான்.
அய்யனார் கோவில் வளாகத்திலேயே சிந்தாவுக்கு ஆபத்து வருமா , அவளைக் காக்காய் போவது யார். பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment