Monday, 30 May 2022

யார் இந்த நிலவு- நிறைவு பகுதி.

 யார் இந்த நிலவு- நிறைவு பகுதி. 

"சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்

சுவையெல்லாம் பணிவெல்லாம் கோவையில்தான்

ஏனுங்க என்னங்க ஆமாங்க!

மானுங்க இருக்குங்க வேணுங்களா!

புடுச்சுதுங்க 

மலப்பழமும் இருக்குங்க

எடுத்துக்குங்க தேனுங்க

கையெடுங்க , சாப்பிடுங்க!

திருப்பூர் நெய்யுங்க சுத்தமுங்க!

ஏனுங்க எழுந்தீங்க உட்காருங்க!


ஏபய்யா பாயசம் எடுத்துப்போடு !

அப்பப்பா கோவைக்கு விருந்து வந்தால், 

ஆறுநாள் பசியும் வேண்டும்

வயிறும் வேண்டும்!

தப்பப்பா , கோவைக்கு வரக்கூடாதே

சாப்பாட்டாலே சாகடிப்பார்."

                           - கண்ணதாசன்.


கோவை மக்களின் பேச்சு வழக்கையும், விசாரிப்பையும், விருந்தோம்பலையும், கவிஞர் கண்ணதாசன் , ஓர் முறை மேற் கூறிய கவிதையில் சிலாகித்திருந்தார். கவிஞரின் வாக்குக்கு இணங்க, அன்று கைலாஷ் ராஜன், தன் குடும்பத்தை , ,மகிழ்ச்சியோடும், பெருமையோடும் நட்பு, உறவு, தொழிலாளர் வட்டத்தில், அறிமுகப் படுத்தி, ஆச்சரியம் தந்து, வந்தாரைக் கவனித்து, வயிற்றை நிறைத்து, கனிவோடு அனுப்பிக் கொண்டிருந்தார். கே ஆரின் தொழிலாளர்களுக்கு, சமீபமாகத் தங்கள் முதலாளி வாழ்வில் நடந்த விஷயங்கள் அரசால் புரசலாக்கத் தெரியும், வளாகத்தில் தங்கியிருந்த பெண்கள் மட்டுமே, பைரவியையும் பார்த்திருந்தனர். யூகங்கள் , பேச்சுக்கள் ஓடிக் கொண்டே இருக்க, கே ஆர் குடும்பத்தைப் பார்க்க ஆவலாகவே காத்திருந்தனர். மேடையில் மைக்கோடு ஏறிய கே ஆர், “இந்தக் கே. ஆர் மில்ஸ் ஆரம்பிச்சதிலிருந்து, என்ர கூடத் தோள் கொடுத்து நின்னு வேலை பார்க்கிறவிகளுக்கு வணக்கமுங்க. உங்களோட, உழைப்பும் ஒத்துழைப்பும் இல்லையினா, இந்த மில்ஸ் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்காது, அதுக்காக உங்க எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்” என்றவர், “இன்னைக்கு என்ர வாழ்க்கையில முக்கியமான நாள், என்ர குடும்பத்தை உங்ககிட்ட அறிமுகப் படுத்த வந்திருக்கேனுங்க. என்னடா இத்தனை நாள் , பிரம்மச்சரியா சுத்திகிட்டு திரிஞ்சான், திடுதிப்புன்னு குடும்பம்னு சொல்றானேன்னே , யாரையோ தத்து எடுத்திட்டேனோன்னு கற்பனை எல்லாம் செஞ்சு போடாதீங்க. என்ர அம்மணி தான். என்ர் புள்ளைங்க தான். இத்தனை நாள், என்ர மில்லுல வேலைபார்க்கிற, பசங்க புள்ளைகள் தான் என்னை அன்போட அப்பான்னு கூப்பிட்டு இருந்திங்கல்ல . நீங்க எல்லாரும் என்ர மேல வச்சிருந்த பாசம், அன்பைப் பார்த்த கடவுள் , என்ர வாழ்க்கையில நான் தொலைச்சிட்டேன்னு நினைச்சுகிட்டு இருந்த என்ர மனைவியையும், பிள்ளைகளையும் திருப்பி அனுப்பியிருக்கார். என்னைப் பாபான்னு கூப்பிட இரட்டை புள்ளைங்க “என மனைவி மக்களை அறிமுகப் படுத்தி வைத்தார். “என்ர , வூட்டுக்காரம்மா ராஜ பரம்பரையைச் சேர்ந்தவிக, எனக்கே ஓனரம்மா ”என மனைவியைத் தோளோடு அணைத்து அறிமுகப் படுத்திப் பைரவியைப் பற்றிப் பெருமையாகப் பேசியவர், “உங்களுக்கு, இந்த மில்லில் செஞ்சு கொடுத்திருக்க வசதிகள் எல்லாம் அம்மணியோடது தான். அவிக அப்பாவோட மில்லுல இதெல்லாம் செய்யோனும்னு ஆசை பாட்டாங்க. அவிக வார்த்தையை நான் நிறைவேத்தினேன்” என்றார். மகன், மகளையும் அறிமுகப் படுத்தியவர், ஆதரஸை குறித்து, அவன் லண்டனில் , பாலாஜி ராவிடம் வளர்ந்த முறையை, சிறுவயதிலேயே அவனிடமிருக்கும் திறமையை, குறித்தும் பேசியவர், ஆதிராவையும் அறிமுகப் படுத்தி வைத்தார். அதன் பிறகு, தன் நண்பனை விஜயனைக் குறிப்பிட்டு விட்டு, அபிராமை பற்றிப் பேசினார். தொழிலாளர்கள் , தங்களுக்குள் பேசி, சலசலக்க , அவர்கள் ஆர்வத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டவர், “அடுத்து, அதுக்குத் தான் வர்றேனுங்க, என்ர மகள் ஆதிராவை , என் நண்பன் மகன், என் மாப்பிள்ளை அபிராமுக்கு கொடுத்து, மருமகனான ஆக்கிக்கப் போறேனுங்க. எங்கப்பா காலத்திலிருந்து, ராமசாமி மாமா, விஜயன், அபிராம்னு நட்பா இருந்தது, மூணாவது தலைமுறையில், எங்க நட்பு, உறவா மாறுது” என அபிராமை மகள் பக்கத்தில் நிறுத்தி, ஜோடி சேர்த்துக் கண் குளிர பார்த்துக் கொண்டார்.
அதன் பிறகு, கைலாஷ், பைரவியைச் சேர்த்து நிற்கவைத்து மாலை அணிவித்து, கேக் வெட்டி விழாவைக் கொண்டாட, விழாவுக்கு வந்தவர்கள் வரிசையாக வந்து வாழ்த்து தெரிவித்தனர். பொதுவாக, தொழிலாளர்கள் அனைவருக்குமான விழா எடுத்த , முதல் நாள் இரவே, பாலாஜி ராவின் யோசனைப் படி கே ஆரின் மேல் தட்டு, நட்பு வட்டம், மில்ஸ் ஓனர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு என நட்சத்திர ஹோட்டலில் விருந்துக்கு அழைத்து, அவர்களுக்கும் தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். அதில் ராத்தோட்ஸ் மில்ஸ் சார்பாக, ரகுவீர் சிங் ராத்தோட்டின் சித்தப்பா அமரேந்தர் சிங் ராத்தோட் வந்திருந்தார். இவர்கள் மூலமாகத் தான், கே ஆர் ஜெயந்துக்கு மில் ஓனர்கள் சங்கத்தில், கே ஆர் செக் வைத்திருந்தார். கைலாஷ் ராஜன், தொழில் தொடங்கிய காலத்தில், இவர்கள் மூலமாக, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்பை பெற்றார். அதனைச் சொல்லி, மனைவி மக்களுக்கு, கே ஆர் அறிமுகப்படுத்த, " உங்க மாமனார் காலத்திலிருந்தே , எங்களுக்குப் பழக்கம்" என அமரேந்தர் விசயத்தைப் போட்டு உடைக்க, புன்னகை முகமாக நின்றிருந்த பைரவியிடம்,
" அப்பவே புடிச்சே, என்னைக் கிறுக்கனா வச்சிருக்கீங்க இல்லைங்க அம்மணி" என மனைவியிடம் குறைபட்டவர், "என்ர சம்சாரம் உயிரோட இருக்கிறது, உங்களுக்கும் தெரியுமாக்கும்" என நண்பரிடம் கேட்டார். " பஹன்ஷா இருக்கிறது தெரியாது கைலாஷ் ஷா . ஆனால் சோட்டி ராணிஷா,(ரமாபாய்) கேட்டுக்கிட்டாங்க. நீங்களும் எங்களுக்குப் பழக்கமானவர், உங்களோட உழைப்பையும் பார்த்தமே. " என்றவர் , பைரவியிடம், "ஆரம்பக் காலத்தில் இரண்டு பையரை அறிமுகப்படுத்தினதோடு சரி, பஹன்ஷா,மற்றது எல்லாம் கே ஆரோட சாமர்த்தியம் தான்" என அமரேந்தர் , கேஆரை சிலாகித்துப் பேசினார். " பிஸ்னஸ் பார்ட்டியில பார்க்கையில எல்லாம் பீபீ மில்ஸ் காரவிகளை, கே ஆர் ஏன் முறைச்சுகிட்டே இருந்தார்னு இப்ப தானுங்களே தெரியுது" என ஒரு உள்ளூர் மில் ஓனர் சொன்னார். “ கே ஆர் மில்லே, டாப்ல இருக்குதுங்க, அவிக மில்லும் சேர்ந்தா, இவிக தான் நம்பர்-1 “ “கே ஆர் மகனை பார்த்திங்கிலிங்க, உலகம் பூரா சுத்துவாப்லையாட்டத்துக்கு. மகளைக் கடிக் கொடுத்து, மருமகனையும் வளைச்சு போட்டாருங்க , இனி இரண்டு பேரையும் , தயாராகிடுவார் “ எனப் பேசிக் கொண்டனர், விழா முடிந்த அடுத்த நாள், ரமாபாய் தன இருப்பிடத்துக்குக் கிளம்பினார். ராதா பாய், பாலாஜி ராவ், ஆராதனா ஆகியோர் கே ஆர் மாளிகையில் விடைபெற வந்தனர். அவர்களோடு வந்த படை பரிவாரங்கள் முன்னதாகவே கிளம்பியிருந்தனர்.

முகுந்த் போஸ்லே, சோட்டி ஆயியிடம் , ஆதர்ஷ், ஆருஷி திருமணத்தைப் பற்றிப் பேச, "இனி, அதைப் பத்தி தாமாஜிகிட்ட பேசிக்க. ஆனால் கொஞ்ச நாள் கழிச்சு, பேசு. ஆதர்ஷுக்கும் கல்யாண வயசு வரட்டும். எனக்கும், உன் மகளை , பையு மகனுக்குச் செய்யிறதில இஷ்டம் தான். ஆனால் இனிமேல் என் முடிவு எதுவும் இல்லை." என முடித்து விட,

பைரவி, "பாவு, பசங்க விஷயத்தில் நம்ம குடும்பம் தான் முடிவு எடுத்துருக்கோம். ஒரு வார்த்தை, என்னைக் குத்தம் சொல்லாமல் ராஜ் ஏத்துக்கிட்டார். அவர் முடிவு தான் என் முடிவும்" என்றார். முகுந்த் போஸ்லேவும், ஆனந்த் போஸ்லே போல் எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவெடுக்காமல் , பொறுமையாக யோசித்து மகளோடு சோலாப்பூர் கிளம்பினார். கைலாஷ், பாருவின் அறையில், ஆதர்ஷ் ஷோபாவில் அமர்ந்திருக்க, ஆதிரா ஒரு புறம், அவன் தோளில் சாய்ந்து கொண்டு, “பாவு, அது தான் எல்லாம் சரியாகிடுச்சுல்ல, இப்போ எதுக்கு ஊருக்கு போறீங்க. நான் ஒருவருடம், நம்ம ஹாப்பிப் பேம்லியா சேர்ந்து இருப்போம்னு கேட்டேன், அந்த ஆசையைக் கூட நிறைவேத்த மாட்டிங்களா” எனச் சலுகையாகக் குற்றம் சஷ்டி, இங்கேயே இருக்கச் சொல்லி பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தாள். “ ஆது , ஆயி பாபாவோட தான் ஒண்ணா சேர்ந்திருக்கோம். இன்னும் ஒரு மாசத்தில், நீங்களுமே சோலாப்பூர் வரவேண்டியது இருக்கும். ஆயி கையெழுத்துப் போட வேண்டியது, நிறையப் பார்மாலிட்டி இருக்கு. நான் முன்னாடி போய், முடுச்சு வைக்கிறேன். நீ ஆயி, பாபாவோட வா”என உடன் பிறப்பைச் சமாதானம் செய்து கொண்டிருக்க, “பாபா, அங்க போனாலும், நேர, நேரத்துக்கு, நீ என்ன செய்யிற, எங்க இருக்க, சாப்பிட்டியானு எனக்கு மெசேஜ் பண்ணிடனும். மூணு தடவை பேசணும், ஒரு வீடியோ கால். “எனப் பைரவி அடுக்கிக் கொண்டே போக, “பாவு, உங்க லொகேஷன் ஆன் பண்ணி வைங்க, ஆயி சொல்ற சாப்பாடு தான் சாப்பிடணும், லேசா தும்மினாலும், ஆயி பக்குவத்தில், கசாயம் உங்களுக்கு வந்துரும்”எனத் தன சோகம் விடுத்து ஆதிரா கேலி செய்ய, பைரவி மகளை முறைத்தார்.

“ரஜ்ஜுமா , இப்படித் தான் உன்ர ஆயி உன்னை வளர்த்தாளா கண்ணு” எனக் கைலாஷ் கேட்கவும், “பாவுங்கிறதால, இதோட நிறுத்திக்கிறாங்க, எனக்கு இன்னும் ஸ்ரிக்ட் ரூல்ஸ் உண்டு. காலேஜ்ஜிலிருந்து வீட்டுக்கு, ஒரே ரோட்டில வரக் கூடாது, யார் வீட்டுக்கும் போகக் கூடாது. இன்னும் நிறைய இருக்கு பாபா “என அவள் சலுகை சொல்ல, தற்போது தந்தையைப் பற்றிக் கொண்டவள்,

“நீங்க, ஆயியை விட்டுட்டுப் பிஸ்னஸ் ட்ரிப் போனீங்கன்னா, உங்களுக்கும் இந்த ரூல்ஸ் எல்லாம் உண்டு”என அப்பாவையும் சேர்த்து ஆதிரா பயமுறுத்தினாள், “உன்ர ஆயிக்கிட்டே இருந்து, ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது, எதையும் மறைக்கவும் முடியாதுன்னு சொல்லு கண்ணு” என முழிக்க,ஆதர்ஷ் சிரித்தான். பைரவி , மூவரையும் முறைத்தவர், “இவ்வளவு கஷ்டமா இருந்தா, நான் யாரையும், எதுவுமே சொல்லலை. உங்க இஷ்டத்துக்கு இருங்க.ஆயி வந்திருப்பாங்க கீழ போகலாம் “ என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு எழவும், “ஆயி”எனக் கையைப் பிடித்துத் தன அருகில் அமர்த்திக் கொண்ட ஆதர்ஷ்,

“நீங்க சொன்ன எல்லாமே செய்யிறேன், ஓகே வா, என்னைப் பத்தி இருபத்திநாலு மணிநேரமும், என் ஆயி நினைப்பிங்க , எனக்கு அதுவே போதும் ஆயி” எனப் பைரவியைக் கட்டிக் கொண்டு அவர் கன்னத்தில் முத்தமிட ,

“நீ இருக்கிறதே, இப்ப தானே பாபா எனக்குத் தெரியுது, ரஜ்ஜுமாவாட்டம், நீ போகாதேன்னு எனக்கு அழத் தெரியலை” எனும் போதே, அவர் கண்ணிலிருந்து ஓர் துளி உருண்டு விழ, “ஆயி” என அவர் துடைத்தவன், “இந்த ஒரு மாசம் தான் ஆயி, அப்புறம், நீங்க எங்க சொல்றிங்களோ, அங்க இருப்பேன்” என அவன், தன அம்மாவைக் கொஞ்ச, அவரும் உச்சி முகர்ந்து, அவன் நெற்றியில் முத்தமிட்டார். அப்பாவும், மகளும் அதே உணர்வுகளோடு பார்த்திருந்த போதும் , “ஆயி, முல்கா , ஓவர் கொஞ்சல்ஸ்ல இறங்காதீங்க” என ஆதிரா முறைத்துப் பார்க்க, “ஓஹோ, என் முல்காவை கண்ணு வைக்காத ரஜ்ஜு, நீயும், உன் பாபாவும், இங்க தானே இருப்பிங்க, நான் உங்களை என்னனே கேட்க மாட்டேன். “ என முகம் திருப்ப, “ஐயோ அம்மணி, நான் எங்க அப்படிச் சொன்னேன், நீ நில்லுன்னா நிப்பேன், உட்கார்ன்னா உட்காருவேன், குட்டிக்கரணம் போட சொன்னாலும் போடுறேனுங்க, இப்படியெல்லாம் சொல்லாதீங்க அம்மணி, இப்போ என்ன செய்யோணும் , உக்கி போடணுமா, சொல்லுங்க , ரஜ்ஜுமா எண்ணிக்கடா” என அவர் காதை பிடித்துக் கொண்டு, உக்கி போட , “ போதும் ராஜ் , பசங்க முன்னாடி உங்க நாடகத்தை ஆரம்பிக்காதீங்க” பட்டெனச் சொல்லி பைரவி சிரிக்க, “ஆமாம் பாபா, ஆயிக்கு மட்டும் தனியா போட்டு காமிங்க” என்றாள். “ஆக மொத்தத்தில், உக்கி போடோணும், எப்படி மாப்பிள்ளையும் இதுக்கெல்லாம் ரெடியா இருக்கானா”என மகளையும் ராஜன் கேலியில் இழுக்க. “ அது தான் பாபா, முதல் குவாலிஃபிகேஷனே “என ஆதர்ஷும் சொல்லிச் சிரிக்க, “போங்க பாவு” எனச் சிணுங்கிய ஆதிரா, அபிரமுடன் திருமணப் பேச்சை நினைத்து முகம் சிவந்தாள். அதே நேரம் அபிராம் , கதவைத் தட்டி விட்டு குரல் கொடுக்க, “ வந்துட்டான் பார்” என்ற கைலாஷ், “உள்ளாற வா மாப்பிள்ளை, உனக்கு நூறாயிசுடா “ என்றார். ஆதர்ஷ், சென்று அபிராமெய் உள்ளே அழைத்து வர, “கிளம்பிட்டியா மச்சி” என்ற படி அவன் வர, “ அவர், உங்கள் தாமாத் , பொண்ணைக் கட்டப் போறார், மரியாதை குடித்துப் பேசுங்க” எனப் பைரவி கணவரைக் கண்டிக்க, “மாப்பிளைங்க, வாங்க மாப்பிளைங்க, உங்களுக்கு நூறாயிஸுங்க”என ராஜன் கேலி பேச, ஆதிரா பாபாவின் பின்னே மறைந்து சிரித்தாள். “ஏனுங்க மாமா, புதுசா மரியாதையெல்லாம், யாரையோ கூப்பிடுற மாதிரி இருக்குதுங்க, நீங்க எப்பவும் பாலையே கூப்பிடுங்க” எனப் பேச்சு, ராமனிடம் இருந்தாலும், பார்வை, ஆதிராவை தொட்டு மீண்டது.கைலாஷ் ,

“இருக்கட்டுங்க மாப்பிள்ளைங்க , உங்க அத்தையோட கட்டளைங்க, அதைய என்னால மீற முடியாதுங்க”என வார்த்தைக்கு வார்த்தை "ங்க "போட, பைரவி ஓர் முறைப்படி தந்து விட்டு, அபிராம் , ஆதிராவோடு கீழே இறங்க, ஆதர்ஷ், “நான் முன்னாடி கிளம்பறேன் பாபா, நீங்க பத்து நாளில் அங்க இருக்கிற மாதிரி பார்த்துக்குங்க” என அவர் பாதத்தைத் தொட்டு வணங்க, “இது எதுக்குக் கண்ணு, உன்ர இடம் இங்க தான்” எனத் தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டியவர், மகனை ஆரத் தழுவி கொண்டார். “ உன்ர ஆயியோட உரிமையை மீட்டுக் கொடுத்திட்டா , உன்ர நானிமா, உன்னை என்ரகிட்ட அனுப்பி விடுறேன்னு சொல்லி இருக்காங்க கண்ணு. அதிலிருந்து” என அவர் நிறுத்த , “என் இஷ்டம் தான் பாபா, நான் என்க வேணாலும் போகலாம், வரலாம், என் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம் , சொல்லிட்டீங்க, நானும் பிளான் பண்ணிக்கிறேன்’ என அவன் சிரிக்கவும், “அதுக்கும் பிளானிங்க, உன்னை நெம்ப நல்லவனா வளர்த்துக் கெடுத்து வச்சிருக்காங்க, உன்ர வயசில நான், என் இஷ்டத்துக்கு இருந்தேன் கண்ணு, நீயும் சுயமா முடிவெடு, பிஸ்னெஸ்ஸோ, பொண்ணைக் கட்டுறதோ, நம்ம மனசுக்கு பிடிச்சு செய்யோனும்” என மகனுக்கு ,அவன் வயதில் கிடைக்க வேண்டிய சுதந்திர வாழ்வை வாழ வழிவகைச் செய்தார். சௌந்தரி, நாயகம், பன்னீர், கூடத்தில் கூடியிருக்க, கைலாஷ் குடும்பம், கீழே இறங்கி வந்து சேர, ரமாபாய் மருமகனிடம் வந்தவர், அன்று அவர் தந்த சொத்துப் பத்திரங்களை , திருப்பிக் கொடுத்தார். “ இந்தச் சொத்துக்கள் , இப்போதைக்கு உங்க பேரலையே இருக்கட்டும் தாமாத்ஜி, பைரவிக்குச் சேர வேண்டிய சொத்தையும் வந்து ஏத்துக்குங்க. காலம் வரும் போது, உங்க யோசனைப் படி, யாருக்கானாலும் பிரிச்சு கொடுங்க. நான் இனிமே அதில எல்லாம் தலையிட மாட்டேன். “என ரிஜிஸ்டெரசனுக்காகக் காத்திருக்கும் பத்திரங்களைத் தந்தார். “ என்ர குடும்பத்தை உடைக்கிறதுக்கும், என்ர மகளைப் பிரிகிறதுக்கும் தான், இந்தச் சொத்தை கேட்டிங்களாக்கும்” எனச் சௌந்தரி, சம்பந்தியம்மா மீது பாயா, “சௌந்தரி” என் நாயகம் மனைவியை அதட்டினார். “ அத்தை , அவங்க மனசில இருக்கிறதைக் கேட்கட்டும் மாமா, ஆயி பதில் சொல்லக் கடமை பட்டவங்க தான்”எனப் பைரவி, தன ஆயியைப் பதில் சொல்லக் கேட்டார். “விடு அம்மணி, இத்தனை கஷ்டத்துக்கும் பிறகு , நீ என்ர வீட்டுல பாதுகாப்பா இருக்கோணும்னு நினைச்சிருப்பாங்க, நீக்க எதுவும் சொல்ல வேண்டாம் சாஸுமா” என ராஜனும், மாமியாருக்குச் சப்போர்ட் செய்ய, “என்னைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்பச் சந்தோசம் தாமாத்ஜி, நான் வளர்ந்த சூழ்நிலை வேற, ஆனால் எப்போ இந்தப் போஸ்லே குடும்பத்துக்குள்ள போனேனோ, அப்போதிலிருந்து நிறைய அடி பட்டிருக்கேன், இவளோட படி ஆயி, புவாஜி ,அதுதான் ஜெயேந்த்தோட ஆயி, எல்லார்கிட்டயும் ரொம்பப் போட்டுட்டேன். இவள் பையனா பிறந்திருந்தா , அவ்வளவு கஷ்டம் இருந்திருக்காது என்னமோ, அதுக்கப்புறமும் போராட்டமே வாழ்க்கையா போச்சு. அதே சந்தேகக் குணம், உங்க தங்கையையும் சந்தேகப் பட்டேன் . அதுவும் உறவு உண்மையா ஆகிடுச்சு. உங்க தங்கை மனசில் இருந்ததும் தெரிஞ்சுடுச்சு. இனி பைரவி அவள் நாத்தனாரை சமாளிச்சுக்குவா. அதுக்காகத் தான். “ என்றவர்,

சௌந்தரியிடம், “என் மகள் வாழ்க்கை, இனியாவது நல்லா இருக்கனும்னு நினைச்சேனே தவிர, உங்க பொண்ணு பிறந்த வீட்டில் ஒட்ட கூடாதுன்னு நினைக்கலை. அதுவும் போக , உங்க மனசில் அப்படிப் பட்டதுன்னா, அதுக்குக் காரணம் நான் தான், என்னை மனிச்சுக்குங்க. உங்க மருமகள் சுத்த தங்கம் தான் அவள் மேல காட்டிடாதீங்க” என ரமாபாய் கண் கலங்கவும், ‘என்ர மருமகளைப் பத்தி ,நீங்க ஒன்னும் சர்டிபிகேட் கொடுக்க வேணாமுங்க, அது எப்படின்னு எனக்கே தெரியும். “ எனச் சௌந்தரி சொல்லவும், “அந்த நம்பிக்கையில்லா தான் போறேன்”என்றார் ரமாபாய் . “போறேன்னு எதுக்குங்கம்மா சொல்றிங்க, திரும்ப வாரேன்னு சொல்லுங்க, ராஜா , உங்களுக்கும் மகன் தான், அவனுக்கு உங்களையே பார்க்கிற கடமையும் இருக்கு. அங்கத்த பிரச்சனை எல்லாம் முடிச்சுக்கிட்டு வாங்க” என நாயகம் அழைக்க, “ஆமாங்க அம்மணி, இவனுங்க எல்லாரும் ஜோடி, ஜோடியா இருக்கானுங்க, நான் ஒத்தையில கிடப்பேனுங்க, நீங்க வந்தீங்கனா நாம பேசிகிட்டு இருக்கலாமில்லிங்க, வசந்த விலாசத்துக்கு வாங்க “ எனப் பன்னீர் அழைப்பு விடுக்க, ரமாபாய் கலகவென நகைத்தார். “ஏனுங்க தாத்தா, உங்களுக்கு இந்த வயசில கேர்ள், பிரெண்டு வேணுங்களா”என அபிராம் கிணடல் செய்ய, “வயசான காலத்தில் தான் மாப்பிள்ளை, பேச்சுத் துணைக்காவது ஆள் வேணும். “ என்ற கைலாஷ், “சாஸுமா, உங்க சொத்தெல்லாம் நான் பார்த்துக்குறேனுங்க, நீங்க பொட்டியை கட்டிட்டு நேரா இங்க வந்துருங்க, பேச்சுத் துணைக்கு மாமா இருக்காரு, அண்ணன் முறைக்கு என்ர அப்பா இருக்கார், சண்டை கட்டுறதுக்கு என்ற தாய் மாதா இருக்காங்க, உங்களுக்குப் பொழுது நல்லா போகுங்க “ எனக் கைலாஷ் மாமியாருக்கு எடுத்துச் சொல்ல,

“ஏனுங்க மாப்பிள்ளை, இந்த மாமனை விட்டு போட்டீங்க, பன்னீர் பயலை விட நான், நல்லா ஜோக்கா , பேசுவேணுங்க அம்மணி” என ராமசாமி குடும்பம், விஜயன் கஸ்தூரியோடு வந்து சேர, பேச்சு களை கட்டியது. ரமாபாய், விஜயன் கஸ்தூரிக்கும் நன்றி தெரிவித்தார்.ஆதர்ஷும் ரஞ்சனி வருகிறாளா என ஆவலாகப் பார்த்தான்,

நேற்று முன் தினம் ஆருஷியோடு அவன் போட்டோ எடுத்து விட்டு, ஆயி பாபாவை அங்கிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும் தருணத்தில், ரஞ்சி மட்டும் அங்கே நிற்க, எதையோ மறந்த சாக்கில் அவன் திரும்ப வந்தான். ரஞ்சனி, ஆயி பவானியிடம், “அம்மா தாயே, அவர் யாரோட பேசினா எனக்கென்ன, எனக்கு ஏன் மனசுக்குக் கஷ்டமா இருக்கு, அவிக நினைப்பை, என்ர மனசிலிருந்து எடுத்துட்டு”என மீண்டும், அதே கையை அம்மன் விளக்குக்கு நேரே கையைக் காட்டப் போக,

“ரஞ்சனி”என அதட்டலோடு வந்த ஆதர்ஷ், அவளைப் பிடித்து,அங்கிருந்து இழுத்தான். ‘என்னை விடுங்க”என அவள் அழவும் , “பைத்தியக்காரி மாதிரி செய்யாத, என்னைப் பிடிச்சிருக்கோ, பிடிக்கலையோ, எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா உண்மையைச் சொல்லு. இந்த வயசில், எல்லாருக்கும் ஆசை வரத் தான் செய்யும், அது நடக்குமா, நடக்காதாங்கிறதா காலம் தான் முடிவு செய்யும். உள்ள ஒன்னை வச்சு, வெளியே ஒரு வேஷம் போடாத. இது உனக்கு, எனக்கு மட்டுமில்லை, இரண்டு குடும்பத்துக்கும் நல்லது இல்லை. ஆதுவை, உங்க அண்ணனுக்குக் கல்யாணம் செய்யப் போறோம்,மூணு தலைமுறை நட்பு, உறவாகப் போகுது. உன்னலையோ, என்னலையோ இந்த உறவுக்கு எந்தச் சிக்கலும் வரக் கூடாது. நீ இன்னும் படிப்பையே முடிகலை , முதல்ல அதை முடி, நிறையப் பேரோட பழகு, கேரியர் செட் பண்ணிக்கோ, அதுக்கப்புறமும் என் மேல இஷ்டமிருந்து, எனக்கும் உன் மேல இஷ்டம் வந்தா பார்க்கலாம், கவனி பார்க்கலாம் தான். உறுதி கிடையாது. அதை விட்டுட்டு ஏதாவது கிறுக்குத்தனம் பண்ண, என்ன செய்வேன்னு தெரியாது” என அவன் பேச, பேசச் சற்றே மனம் தெளிந்தவள், “ இவர் பெரிய இவரு, போயா புடலங்கா , ஒரு பொண்ணைப் புடிக்கிதுன்னு சொல்றதுக்கே, ஏகப்பட்ட கண்டிஷன் போடற நீ ஒன்னும், எனக்கு வேண்டாம், எனக்கு என்ர ராஜா மாமாவே, நல்ல பையனா பார்த்துக் காட்டி வைப்பார் “ என முறைத்து விட்டு வெளியே சென்றுவிட, ஆதர்ஷ் சிரித்துக் கொண்டான். ‘என் வளர்ப்பு அப்படி, நான் என்ன செய்ய . ஒரு வேலை, என் பாபாட்ட வளர்ந்திருந்தா, மச்சி மாதிரி வளந்திருப்பேன்’ என மனதில் நினைத்தான். இதோ இன்று, ரஞ்சனி அவனுக்குச் சென்ட் ஆப் கொடுக்க வரவில்லை, தன நினைவே சரி என, தன நானிமாவுடன் சோலாப்பூர் நோக்கிக் கிளம்பி விட்டான். ரமாபாய் கிளம்பும் முன் கௌரியை உடன் அழைக்க, சௌந்தரி , என்ர ஒரு மகளைத் தான், பிரிச்சு போட்டீங்க, இந்த மகளையாவது விட்டுப் போட்டு போங்க” எனக் கௌரியை தன்னோடு நிறுத்திக் கொள்ள, “தாய்மாதா , முறையவே மாத்தறீங்க, என்ர மக்களுக்குச் சித்தியினா, உங்களுக்கு மாஸிமா சின்ன மருமகளாகுது, ஏனுங்க அம்மணி நான் சொன்னது சரிதானுங்களே “எனக் கைலாஷ் மனைவியைக் கேட்க, பைரவி முறைத்தார். கௌரி, “அம்மா, நாம் எப்போ குன்னூர் போகலாம். நான் இங்கிருந்த, என் தீதியவே உங்க மகன் ஆகவிடாமல் பண்ணிடுவாங்க” எனக் கௌரி பதற , “நாம குன்னூர் போகலாம் கண்ணு, அந்தப் பக்கம் இவன் தலை வச்சு கூடப் படுக்க மாட்டான்”என நாயகம் மகனை வம்பிழுக்க, “மாஸிமா , உங்களுக்காகவே வரேனுங்க” என லொள்ளு பேசிய கைலாஷ் ராஜன், ஏகத்துக்கும் மனைவியின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டார். ஆனால் எத்தனை அதிகமாகப் பகலில், மனைவியிடம் வம்பு வளர்கிறாரோ அத்தனை அதிகமாக, இரவில் அவரைச் சமாதானம் செய்ய, தன் திறமையைப் பயன் படுத்துவார். முடிவில், “ ராஜ், உங்க அலம்பலுக்கு அளவே இல்லை”எனச் சலித்துக் கொண்டு கணவரின் மார்பில் சரணடைவார்.

சொன்னதைப் போலவே, ஒரு மாதத்துக்குள் சோலாப்பூர் சென்று, பைரவியின் சொத்துக்களை மீட்டு அவர் கையில் தந்தவர், அதன் ஷேர்களை மட்டும் தற்போது வைத்துக் கொண்டு, நிர்வாகத்தை, போஸ்லேகளிடமே ஒப்படைத்தார். சோலாப்பூர் மாளிகையிலிருந்து ஜெயந்தை ஓட வைக்கும் வேலையை மட்டும் செவ்வனே செய்தார்.

பைரவியின் அக்கா உண்மையான பவானி, தங்கை திருமணத்துக்கெனக் கிளம்பியவர், கணவரின் செய்கையால் கோவை வந்தும் தங்கையைச் சந்திக்காமல், அண்ணனோடு திரும்பினார். ஜெயத்தின் மகள்கள், மருமன்களுக்குமே , மற்றொரு குடும்பம், மஹந்த்தை பேசியது என அவர் மீது வெறுப்பை வரவழைத்து இருந்தது. கே ஆரின் படை, ஜெயந்தை மட்டும் குறி வைத்து, பீமனோடு சேர்த்துத் துரத்திக் கொண்டே இருந்தது. பாலாஜிராவ், ராதாபாய் சத்தாராவிலிருந்தே தங்கள் தொழில்களைக் கவனித்துக் கொண்டனர். சங்கீதாவின் தொழில், ஆதர்சின் தலையீட்டால் முதலில் அடி வாங்கியது. பின்னர், ஆயின் கட்டளையின் பேரில், ஆதர்ஷ் அவர்களைக் கண்டு கொள்ளாமல் விட, அதிலேயே மேலேறி வந்தனர்.

பைரவி, தொடர்ந்து சங்கீதாவிடம் பேசி, தன மேலுள்ள வெறுப்பைப் போக்க முயன்றார். கைலாஷ், "அவள் பிடிவாதம் பிடிச்சவ அம்மணி, தான் செஞ்சது தப்புனாலுமே ஒத்துக்க மாட்டா. விடு தன்னாலா வரட்டும்"என மனைவியிடம் வலியுறுத்த, "இந்த விஷயத்தில நீங்க, தலையிடாதீங்க ராஜ். பெரிசா ஒன்னும் இல்லாதா மாதிரி காட்டிக்கிறது. அன்னைக்கு உங்க தங்கச்சி போனப்ப நீங்க கண்ணீர் விடலை "எனக் கேள்வி எழுப்ப, "அது தூசி விழுந்துச்சு அம்மணி" என வெற்றுப் புன்னகை சிந்தினார். பெரியவர்கள்,குன்னூர், கோவை, ரமாபாய் இருப்பிடமான சத்தாராமாளிகை எனக் குழுவாகப் பயணம் மேற்கொண்டு, தங்கள் பொழுதுகளைக் கழித்தனர். ஆதரஸை , சுதந்திர பறவையாகப் பறக்கச் சொல்லி , அவன் பாபா கூட்டை திறந்து விட, அன்னையின் அன்பான கட்டுக்குள் செய்திகளை மட்டும் அனுப்பிக்கொண்டு , வித்தியாசமான அனுபவங்களைத் தேடி உலகைச் சுற்றினான். கைலாஷ் , அந்த வருட, திருமண நாளுக்குச் சோலாப்பூருக்கு மனைவியை அழைத்துச் சென்றவர், துல்ஜாபூர் செல்ல பவானி அம்மனையும் வணங்கினர். அதன் பிறகு, மனைவியின் கண்ணைக் கட்டி அழைத்துச் சென்றார், ஆனால் பைரவி, “ராஜ், பெரிய சஸ்பெண்ஸ் . உங்களைத் தெரியாதா, கண்ணைத் திறந்து விடுங்க,”எனச் சிணுங்கலோடு வர, “பேசாத, படுத்துத் தூங்கு அம்மணி” எனத் தன் நெஞ்சில் மனைவியைச் சாய்த்துக் கொண்டு காரை தானே ஒட்டி வர, பைரவிக்குச் சந்தோசம் தாழவில்லை. பைரவி எதிர்பார்த்தது போலவே, சந்தன் கட்டுக்குத் தான் அழைத்து வந்திருந்தார். துக்கா ராம் உதவியோடு கூபா கர்’ ரையும் மேலும் சில வசதிகளோடு, வண்டுகள் படுத்தாத வண்ணம் தயார் செய்து வைத்திருந்தார். எப்போதும் மதுவோடு வந்து, தன மனைவியைத் தேடுவார். இன்று மனைவியோடு வந்தவர், மலரும் நினைவுகளாய் ஒவ்வொன்றாய் கேட்க, பல வருடங்களாகத் தான் அந்த ஒரு நாளில் கணவரோடு எப்படிப் பொழுதை கழித்தோமெனப் பைரவி சொல்லச் சொல்ல, “கிறுக்கனா இருந்திருக்கேன்னு சொல்லு அம்மணி” எனக் குறை பட்டுக் கொள்ள, “இல்லை ராஜ், என் மேல அவ்வளவு அன்போட இருந்திருக்கீங்க” என அவர் காட்டிய எல்லை இல்லா அன்பைத் திரும்பக் காட்டினார் கைலாஷின் பாரு. அபிராம், ஆதிராவும், கே ஆர் மில்ஸ் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டு , தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். “ ஆரா பேபி, உன்ர அண்ணன் ஊரைச் சுத்த போயிட்டான், ஆனால் அவனோட ரூல் பேசற குணத்தை உன்ர கிட்ட கொடுத்துப் போட்டு போயிட்டனாட்டத்துக்கு. ஒரு முத்தம் கொடுக்க, என்ன ஆட்டம் காட்டுரடி, உனக்காக என்ன என்ன செஞ்சிருக்கேன்” எனப் பட்டியலிட ஆரம்பிக்க, ஆதிரா, “பேசாம வேலையைப் பாருங்க ராம் . உங்களை எனக்குத் தெரியாது, கொஞ்சம் இடம் குடுத்தா அவ்வளவு தான். ஆயி, பாபா, அத்தை, மாமா என் மேல வச்சிருக்க நம்பிக்கையைப் பொய்யாக்காதீங்க. இந்த மெஷின் நமக்கு எப்ப வரும், அதைச் சொல்லுங்க’ என அவள் மில் விவகாரத்தைப் பேச. “ மாமன், என்னைப் பழி வாங்குறார். இத்தனை வயசில, அவர் அத்தையைக் கூட்டிகிட்டுச் செகண்ட் ஹனி மூன் போயிருக்கார், உன்ர அண்ணன் சோலாவா உலகத்தைச் சுத்தி என்ஜாய்ப் பண்றான், எனக்கு என்ர ஆளு, நிச்சியம் பண்ண பொண்ணு, பக்கத்தில இருந்தும், ஒன்னும் வேலைக்கு ஆகரத்தில்ல , மிசின் எப்போ வருமாம், ரொம்பத் தேவை” என அவன் புலம்ப,

ஆதிராவுக்கு அவன் மீது ஆசையும், காதலும் பெருகியது, எப்போதேனும் செய்யும் கொரில்லா அட்டாக் செய்து அவனை அமைதிப் படுத்தினாள். அபிராம் அதிலேயே மயங்கியவனாக , “ஆரா பேபி மஸ்தூடி, படியா மஸ்து ‘என வால் வார்த்தையைப் படித்தான். அவன் தேடிய நிலவு, அவனுக்கு வளர்பிறையாய் அன்பைத் தந்து கொண்டிருந்தது. நிலவு முழுமையடைந்து.

Sunday, 29 May 2022

யார் இந்த நிலவு- 59 part-2 .

 யார் இந்த நிலவு- 59 part-2 . 


"நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்

அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய

தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்

நம்பிக்கை உண்டே நமக்கு."


பிரம்ம முகூர்த்தம் எனச் சொல்லப் படும் அதிகாலை நான்கு மணி முதலான, ஆறுமணி வரையிலான வேளையில், கணபதியையும், அவர்கள் குலதெய்வத்தையும், அவர்கள் இணையக் காரணமான ஆயி துல்ஜா பவானியையும் , வேண்டி திருமணச் சடங்குகளை ஆரம்பித்தனர். வயது, மூப்பு இதனைப் பொருட்படுத்தாமல், வசந்த மாளிகைக்காரர்கள் மட்டுமின்றி, இளைஞர் கூட்டமும் தயாராகி வந்தது, அதுவும் பெண் பிள்ளைகள், இரண்டு மணிநேர கோழி தூக்கம் தூங்கி, குளித்தார்களோ இல்லையோ, அழகுற அரிதாரம் பூசி வந்து விட்டனர். இன்று பைரவி அடர் சிவப்பு வண்ணத்தில் சேலை உடுத்துவார், அதனால் அவரை எடுத்துக் காட்டும் விதமாக , மற்றவர் வெளிர் சிவப்புப் பட்டில் தயாராகினர், பெரியவர்களுக்குப் பச்சை பட்டில் வளம் வந்தனர். சிவ-பார்வதி திருமணத்தை, புராணங்கள் வெகுவாக வர்ணிக்கும், சடாமுடி தரித்த சிவனாரை , மணமகனாக அலங்கரிக்க, பெருமாளே முன் வருவார், அதே போல், இங்கும் கைலாஷுக்கு, உற்ற நண்பனாக, சிறுபிராயம் முதல், அவர் இன்ப துன்பங்களில் பங்கேற்ற, விஜயன், நண்பனுக்குத் திருமணம் எனவும், இருபது வருட இடைவெளி குறைந்தது போல், சுறுசுறுப்பாகச் சுற்றித் திரிந்து, பெரிய மனித பந்தாக்களையெல்லாம் விட்டு, மாப்பிள்ளை தோழனாக, கைலாஷ் ராஜனுக்குப் பட்டு வேஷ்டியைக் கட்டி விடுவதிலிருந்து சகல உதவிகளையும் செய்ய, மணவறைக்கு அழைத்துச் செல்லும் நேரம் சரியாக முகுந்த் போஸ்லே, கவிதாவின் கணவனும் வந்து விட்டனர். ஆதர்ஷ், பழக்கமில்லாத வேட்டியைக் கட்டிக் கொண்டு வழியில் கவனமாக வந்தவன், “பாபா , கிளம்பலாமா” எனவும், அப்பாவும், மகனையும் மாற்றி, மாற்றிப் பார்த்தனர். “மாப்பிள்ளை, உன்ர அப்பனை சின்னதில பார்த்த மாதிரி இருக்க”என விஜயன் , ஆதர்ஷ் முதுகில் தட்டி சிலாகித்தார். “என்ர மகன், என்னாட்டம் தானடா இருப்பான், உன்ர ஜெராக்ஸ் வாறான் பார்”எனக் காட்ட, இன்று அபிராமும், ஆதர்ஷ் போலவே ஜரிகை கரையிட்ட வேஷ்டியும் , வெளிர் சிவப்பு நிற சட்டையோடும் வந்தான். “என்ர கல்யாணத்துக்கு, நீங்க எல்லாரும் மாப்பிளையாட்டமா ரெடியாகி வந்துருக்கீங்க” எனக் கைலாஷ் குறை பட, “ அவிகளுக்குத் தான் மாப்பிளையாகுற வயசு ” என மகன் தயாராகி விட்டானா எனப் பார்க்க வந்த நாயகம் லொள்ளு பேசி “கிளம்பலாங்களா”எனப் பொதுவாகக் கேட்டார். “உன்ர அப்புச்சிக்கு லொள்ளை பார்த்தியா”எனக் கைலாஷ் அபிராமிடம் கேட்க, “உங்களைய விடக் கம்மி தானுங்க மாமா”என்றவன் , அவர் அடுத்துப் பேசும் முன், "கூப்புட்டிங்களா அப்புச்சி" என முன்னால் சென்றுவிட, "என்ர பாடத்தை, எனக்கே திருப்பிப் படிக்கிற, பார்த்துக்கறேன் போ" எனச் சிரித்தார். முகுந்த் போஸ்லே, முத்தும், பவளமும் பதிக்கப் பட்ட, தலைப்பாகையை ராஜனுக்கு வைத்து விட, பட்டு வேஷ்டி சட்டைக்கே அது பொருந்திப் போனது. ஆதர்ஷ், அபிராம் , விஜயன், சரவணன், முகுந்த் மற்றும் ஆடவர் படை சூழ, கைலாஷ் ராஜன் , தென்னங்கீற்று, மாவிலை, பலவித மலர்கள், வண்ண வண்ண துணிகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப் பட்ட மனப் பந்தலுக்குச் சென்றார். தாய் மாமன் மாலையிட, அசல் ராஜனாகவே கம்பீரமாக அமர்ந்திருந்தார். புற்றுமண்ணில், அடிக் கரும்பு ,மூங்கில், அரசிலைகள், முக்கவர் பந்தற்கால், என இவர்கள் மனை சிறக்க ஊன்றியிருந்தனர். இரண்டு கரைகப் பானைகள், நீர் நெல் தாங்கியிருக்க, நவதானிய முளைப்பாரியும், நிறைநாழியும், தேங்காய், வெற்றிலை பாக்குத் தாம்பூலம், அரிசியில் வீற்றிருந்த மஞ்சள் பிள்ளையாரும், கைலாஷ்-பாரு திருமணம் சிறப்பாக நடந்தேறக் காத்திருந்தன. குத்து விளக்குகள் சுடர் விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்க, கைலாஷின் கண்கள், தன பாருவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தன. தாய்மாமன்,மணமகளை அழைத்து வரும் மரபு இருக்க, ரமாபாயின் தாய் வழி உறவான, பாலாஜி ராவ், ராதாபாய் தம்பதி அந்த முறையில் பைரவியை அழைத்து வர, கவிதா, கஸ்தூரி , மண மாலையைப் பைரவிக்குப் போட்டு ,நாத்தி முறைக்கு உடன் வந்தனர். ஆதிரா, ஆராதனா, ரஞ்சி, ஸ்ரீ சகோதரிகளோடு, விண்ணிலிருந்து தரை இறங்கிய தேவதையாக, முகுந்த் ராய் போஸ்லேவின் மகள் ஆருஷி ராய் போஸ்லேவும், தன புவாஜியின் கையை ஒரு புறம் பற்றி அழைத்து வந்தாள் சற்று நேரம் முன்பே தந்தையோடு வந்திருந்தவள், பிறந்தது முதல் அத்தையம்மாவோடு பழகியது போல் உரிமையாக ஒட்டிக் கொண்டாள். ஆராதனா ,அவளை ஆராதிக்காத குறையாகப் புகழ, ரஞ்சனி, ஸ்ரீ சகோதரிகள் மட்டுமின்றி , ஆதிராவே தங்கையை முறைக்க, ஆருஷி அவளையும் நொடியில் நட்பாக்கிக் கொண்டாள். பைரவி, சிவப்பு வண்ண, ஒன்பது கஜ, காஞ்சிபுரம் பட்டுச் சேலையை, மராத்திய முறைப்படி, நவ்வாரி சேலைக் கட்டாக , பின் கொசுவம் வைத்துக் கட்டியிருந்தார். கழுத்தை ஒட்டிய பிளவுஸ். கொண்டையிட்டு, மல்லிகையை அதில் சூடியிருந்தனர். மூக்கில் வைர மூக்குத்தியும், சலங்கை பில்லாக்கும் ஒளி, ஒலி எழுப்ப, மிதமான ஒப்பனையில், கணவரின் அன்பில் மிளிர்ந்தது முகம், அரைச் சந்திர வடிவ சாந்துப் பொட்டு , நெற்றியில், முத்து மாலையை இரண்டு வரிசையாக மராத்திய முறைப்படி நெற்றிப் பட்டம் போல் , அணிவித்திருந்தனர். காதோரத்தில் கொஞ்சம் தொங்கியது. அடுக்கடுக்காய் வைக்கப்பட்ட மடிப்புகள் கொண்டு சேலையையை எழில் கொஞ்சக் கட்டி விட்டிருந்தனர். வலது பக்கத்தில் மற்றொரு பட்டு சால்வை போர்த்தப் பட்டு, கழுத்தில் வரிசையாக, போஸ்லே குடும்பப் பாரம்பரிய நகைகள் அணிந்து, இடுப்பில் அதற்குத் தோதான ஒட்டியாணம் கனத்த சலங்கை கொண்ட கொலுசுகள் ஜதி சொல்ல, பைரவி பாய் போஸ்லே, மணமகளுக்கே உரிய நாணமும், ராணிக்கே உரிய மிடுக்கும் கொண்டவராக, நாற்பதைக் கடந்த வயதிலும்,தங்கச் சிலை போல் வர, “இந்த அம்மணிக்காக , ராஜன் காத்திருந்தது சரியே “எனக் கூட்டத்தில் பேசிக் கொண்டனர். மனையில் அமர்ந்தபடி ராஜன், பைரவியையே பார்த்திருக்க, சுற்றி இருக்கும் விழிகள் யாவும் தன்னையே நோக்குவதை உணர்ந்த பைரவி, பெருமூச்செடுத்துத் தன்னைச் சமாளிக்கும் முன் நெற்றியில் வியர்வை துளிகள், அவரின் பதட்டத்தையும் சங்கடத்தையும் உணர்ந்த ஆதர்ஷ், சட்டென , தன் ஆயின் முன் வந்து அவர் கரங்களைப் பற்றி அழைத்து வர, மகனின் கைகளை இறுக்கப் பற்றினார் பைரவி. “ஆயி, சில், பாபா உங்களையே கண்ணெடுக்காம பார்த்துட்டு இருக்கார், டென்ஷன் ஆனீங்க , பாதிச் சாஸ்திரத்தை ஸ்கிப் பண்ணிடுவார்”என அவன் ரகசியமாய்ச் சொல்ல, “அவருக்கு மேல, நீ டென்ஷனாகாத பாபா” என்றவரின் மறு பக்கம், ஆதர்சின் கண் அசைவில், ஆதிரா வந்து தன் ஆயியைப் பற்றிக் கொண்டு, “ஆயி, பாபா, பாவம், ஒரு லுக் விடுங்களேன், உங்களையே பார்த்துட்டு இருக்கார்”எனக் கேலி பேச, “சுப்கர்,ரஜ்ஜுமா ‘எனச் சிணுங்கி, மகளைக் கண்டித்து, மகனின் கரம் பற்றி மேடையைச் சுற்றி வந்து, ராஜனின் வலது புறம் அமர்ந்தார் பைரவி. ராஜன், தயாராக இருந்தவர், “பார்த்து அம்மணி, மனையில் உட்கார்ந்துருவேயில்ல, இல்லையின்னா சேர் போட சொல்லட்டுமா, சத்தியா “ எனக் குரல் கொடுக்க, ஒரப் பார்வையால் கணவரை முறைத்தபடி, பைரவி, மகனும், மகளுமாக உதவி செய்ய , சபையோருக்கு வணக்கம் கூறிச் சுலபமாக உட்கார்ந்து விட்டார்.
“அடேய், தங்கச்சிமா, உன்னை விடப் பிட்டா தான் இருக்கிறாங்க , நீ அடங்குடா “என விஜயன், ராஜனைக் கேலி பேச, “அட, உன்ர தங்கச்சி முடியாத இருந்தா இல்ல, கீழ உட்கார்ந்து பழக்கமில்லையில அதனால கேட்டேன், அது சரி, நான் என்ன பிட் இல்லாத போயிட்டேன்”என மணமேடையிலேயே நண்பனோடு மல்லு கட்ட, “நீ, நல்லா ராஜாவை, இளமையோட தான் இருக்க, சண்டை கட்டாத , சாங்கியத்தைச் செய், நேரமாகுது”என நாயகம் மகனை அதட்ட, மற்றவர் சிரித்தனர். அதில் ரோசம் கொண்ட ராஜன்,

“ஏனுங்கப்பா, நீங்க சொல்றது வஞ்சப் புகழ்ச்சிங்களா. நான் நிஜமாவே பிட்டா தான் இருக்கேனுங்க, அதென்ன, நான் கிழவனாகிட்டேன்னு எல்லாரும் சிரிக்கிறீங்களா “என விடாமல் வம்பிழுக்க, “நீ தான் பேசாம இருவேண்டா”என நாயகத்தின் நண்பர்கள் அவரை அமைதிப் படுத்த, சௌந்தரி ராஜனிடம், “சாங்கியத்தைச் செய் கண்ணு”என நயந்து பேசினார். “அது தானுங்க தாய்மாதா, காலகாலத்தில இவருள்ள, என்ர பாருவை தேடிக் கட்டி வச்சிருக்கோணும், இப்ப வந்து, இத்தனை பேச்சு பேசுறாருங்க ” எனச் சண்டை கட்ட, "என்னது" என நாயகம் குரல் கொடுத்தார்.

“தாம்தஜி, அது எங்க தப்பு தான், நாங்க ஒத்துக்குறோம், நீங்க சடங்கை செய்ங்க”என ரமாபாயும் மருமகனைத் தாஜா செய்ய, “மருமகள், இருக்கிறதை தெரியாதுங்க, தங்கச்சிமா, அமுக்கனியாட்டமா , இவன் சொல்லாத இருந்து போட்டு, என்னைக் குத்தம் சொல்லாரானுங்க”என நாயகம் மறுபடியும் , ரமாபாயிடம் ஆரம்பிக்க, “அப்புச்சி, மாமன் தெரியாத சொல்லிப் போட்டாரு விடுங்க”என அபிராம் நாயகத்தைச் சமாதானப் படுத்தினான்.


“நான் என்றா மாப்பிள்ளை தெரியாத சொன்னேன், எல்லாம் தெரிஞ்சு தான் சொன்னேன்”என ராஜன் மறுபடியும் ஆரம்பிக்க, “பார்த்தியா”என நாயகமும், ராஜனும் ஒன்றாக ஆரம்பிக்க,சீர் முறை செய்ய வந்த அருமைக்காரர், சௌந்தரி, பேரன் பேத்திகள் நண்பர்கள் என யாராலும் இருவரையும் அடக்க முடியவில்லை.

பைரவி, பொறுத்துப் பொறுத்து பார்த்தவர், “ராஜ்”என அவர் கைகளைப் பற்றிக் கொண்டு, நாயகத்தைப் பார்த்து, “மாமா, என்னாலா தான் எல்லாமே, எனக்காக ரெண்டு பெரும் வீட்டுக் கொடுங்க” என ஒரு வார்த்தை சொல்ல,

“உனக்காகச் சரின்னு போறேன் அம்மணி”என நாயகமும், ராஜன் மறுபேச்சே இல்லாமல் , "நீ சொன்ன சரிதான் அம்மணி" என , அமைதியாக ,“செய்யறதெல்லாம் செஞ்சு போட்டு , குழந்தை புள்ளையாட்டம் இருக்கிறதை பாரு ‘என விஜயன் நண்பன கேலி பேச, புகைப்படக் கருவிகளும், இளைய தலைமுறையும், இவர்கள் நாடகத்தை மகிழ்வோடு தங்கள் அலைபேசிக்குள் சுருட்டிக் கொண்டனர்.

“சாங்கியத்தை ஆரம்பிக்கலங்களா “எனப் பெரியவர் வினையமாகக் கேட்க, “பெரியவிக, ஆரம்பிங்க”என ராஜன் பதறிக் கொண்டு சொல்ல, கணபதி துதியோடு, குலப் பெருமை, குலதெய்வம், கூட்டம் என வரிசையாகச் சொல்லி, சடங்குகளை ஆரம்பித்தார்.

மணமக்கள் , பெற்றோருக்குப் பாத பூஜை செய்ய வேண்டும் எனச் சொல்ல, “சாங்க்கியத்துக்கு , பாதத்தைத் தொட்டுக்கட்டும், அடுத்த முறையைச் செய்ங்க”என நாயகம், இத்தனை வயதில் இது மகனுக்குச் சங்கடம் என அதனைக் கடத்த பார்க்க,


“அப்பா, அம்மாவோட சேர்ந்து வந்து நில்லுங்க, உங்க மனசை நோகடிச்சதுக்கெல்லாம், பிராயச்சித்தம் தேடிக்கிறேனுங்க, இத்தனை நாள் பாவம், புண்ணியமெல்லாம் பார்க்கலையிங்க , குடும்பஸ்தன் ஆகிறேன், அப்படி இருக்க முடியதில்லைங்க, என்ர அம்மணி வேற இதிலை எல்லாம் ரொம்பச் செண்டிமெண்ட் பார்ப்பாளுங்க, வந்து நில்லுங்க” என அதிகாரமாகவே அழைக்க, முறைத்த நாயகத்தை,

“வாங்கப்பா, உங்க ஆசீர்வாதம் எனக்கு ரொம்ப முக்கியம்”என நயந்து அழைக்கவும், உணர்ச்சி வயப் பட்டவராக வந்து நின்றார். ராஜன் குனிந்து தாய், தந்தையை நிறுத்தி நீர் ஊற்றி , கழுவித் துடைத்து, சந்தானம்.குங்குமம் வைத்து வணங்கி எழவும், நாயகம் உணர்ச்சி பெருக்கில் உடைந்து போனார். மகனின் தலையில் கை வைத்து, “மனைவி , மக்களோட, நூறாயிசுக்கு நல்லா இரு” எனக் கரகரத்த குரலோடு சொல்ல, ராமசாமி, பன்னீர் நண்பனை பின்னிருந்தது தோளில் தட்டிக் கொடுக்க, நாயகம் சமாளித்தார்.

ஆதர்ஷ், தன பாபாவுக்கு, அவர் பெற்றவருக்குப் பாத பூஜை செய்வதில் உதவினான். ராஜன், சௌந்தரிக்குப் பாத பூஜை செய்யும் போது , நாயகத்தைப் போல் சமாளிக்கவெல்லாம் இல்லாமல், கண்ணீர் பெறுக, மகனை உச்சி முகர்ந்து ஆசீர்வதித்தார்.

மணமகள் , பாத பூஜைக்கென, ரமாபையை அழைக்க, அவர் ராமசாமி, அபரஞ்சியை அழைத்தார். “தாரை வார்த்துக் கொடுக்கையில், நாங்க கூட நிக்கிறோமுங்க, பவானி, பாதபூஜை உங்களுக்குத் தான் செய்யோனும்,”என அவர்கள் வற்புறுத்தவும், “வாங்க ஆயி, நீங்க இல்லையினா, நானும், என் பிள்ளைகளும் எப்படிப் பிழைச்சிருப்போம்”எனப் பைரவி, உணர்ச்சி பெறுக தன ஆயியை அழைத்தவர், தாம்பாளத்தில் ரமாபாயை நிற்க வைத்து பாத பூஜை செய்ய, கை கூப்பியபடி நின்றவர், “ஆயி பவானி, என் வேண்டுகோளையும் நிறைவேத்திட்டா” என மகளை ஆசிர்வதிக்க, அடுத்து, தாரை வார்த்துக் கொடுக்கும் சடங்கு நடந்தது. அதிலும் வித்தியாசமாக, பைரவியைக் கே ஆர் குடும்பத்தில் ஒப்படைக்கும் முன், ஆதிரா, ஆதர்ஷ், பைரவி கைகளை வரிசையாகப் பிடித்து, ராஜனின் கையில் ஒப்படைத்த, பைரவி பாய், “இருபத்திரண்டு வருஷம், கட்டிக் காத்து, உங்க மனைவி மக்களை உங்க கிட்ட சேர்த்துட்டேன் தாமாத்ஜி. இனி உங்க படு, பார்த்துக்குங்க. இதில ஏதாவது குத்தம் குறை இருந்தாலும், அது என்னைச் சேர்ந்தது. மன்னிச்சுடுங்க” என யாரிடமும், மடங்காத சோட்டி ராணி, மருமகனிடம் சொல்ல, ராஜன் , “உங்களுக்கு, நான் தான் சாஸுமா கடமை பட்டிருக்கேன், என் வாழ்க்கையவே அர்த்தமாக்கி இருக்கீங்க ”என ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு சம்பிரதாயமான, மணமகளை, மணமகனுக்குத் தாரை வார்க்கும் சடங்கை, அருமைக்காரர் சொல்ல , நாயகம், சௌந்தரி, ராமசாமி, அபரஞ்சி ஜோடிகளைச் சம்பந்தியாக நிறுத்தி, ராஜன் கையில் பைரவியைக் கொடுத்தனர். “மகளைக் கொடுத்தோம் “என ராமசாமி, தம்பதி சொல்ல, “மருமகளாகக் கொண்டோம் “என நாயகம் தம்பதி பெற்றுக் கொண்டனர். திருப்பூட்டு, தாலி வைக்கப்பட்டு இருந்த தட்டில் அருமை பெரியவர் சூடம் ஏற்றி, மணமக்களிடம் காட்டி அவர்கள் ஒற்றிக் கொண்ட பிறகு மேடையிலிருந்தபடியே உயர்த்திக் காட்ட, மற்றவர், அவரவர் இடத்தில் இருந்தபடியே ஆசீர்வதிக்க, மணப்பெண்ணாம் பைரவியைக் கிழக்கு முகமாக நிற் வைத்து, ராஜனை எதிர்புறம் நிறுத்தி, மஞ்சள் சரட்டில் கோர்க்கப்பட்ட பொன் தாலியைக் கொடுக்க, ராஜன் தன் முன்னே நின்ற தன்னில் பாதியான, தன மனம் கவர்ந்தவரை , முதல் முறை, தன் பெயர் பொறித்த தங்கச்சங்கிலி, இரண்டாம் முறை கருகுமணி மங்கள் சூத்திரம் என அக்கினி சாட்சியாக மணம் முடித்தவரை, இன்று தம் குல வழக்கப்படி, மஞ்சள் பொன் தாலி கட்டியும் மனைவியாக ஏற்றார். இன்று மீண்டும், சாஸ்திரப் படி, சம்பிரதாயப் படி, கைலாஷின் மனைவியானார் பைரவி. பைரவி, தலை குனிந்து தன் கழுத்தில் தமிழ் நாட்டு மருமகளாய் தாலி தொங்குவதைப் பார்த்து உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் ததும்ப நிற்க, மஞ்சளில் தோய்த்த அரிசியும், உதிரிப் பூக்களும், அவர்கள் மேல் அட்சதையாய் விழ, மனைவியின் நெற்றி வகிட்டில் குங்குமம் நிறைத்தவர், இருபது வருடங்களுக்கும் மேலாக உடலால் பிரிந்து, மனதில் தாங்கியிருந்த மனைவியைச் சுற்றம் மறந்து எதிர் நின்றவரை வாரியணைத்து உச்சி முகர, ஒரு புறம் ஆதிராவும், மறுபுறம் ஆதர்ஷும் வந்து கட்டிக் கொள்ள,, “ என்ர நேசத்துக்குக் கிடைச்ச சொத்து’ என மூவரையும், தன்னுள் அடக்கிக் கொள்ள, இந்த வித்தியாசமான திருமணத்தையும், அவள் பாசம், நேசத்தையும் பார்த்தவர்கள், அவர்களுக்காக நெகிழ்ந்து தான் போனார்கள். அருமைக்காரர், மணமக்களை , செஞ்சாந்து திலகமிட்டு, விரல் கோர்த்து மணவறையைச் சுற்றி, அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வைத்து, குலம் கோதி , சுண்ணாம்பு , மஞ்சள் கலந்த நீரில், வெற்றிலை, அருகம்புல் கிள்ளி போட்டு, பாதம், தோள் , தலையில் ஏற்றி இறக்கி அருகுமணம் செய்வித்தார். மங்கலன்,
அலைகடல் அமிழ்தம் ஆரணம் பெரியவர் திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திடக் கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன் சந்திர சூரியர் தானவர் வானவர் முந்திய தேவர் மூவருங் காத்திட… வாழ்த்து பாட ஆரம்பித்தார். கைலாஷ் ராஜனும், பைரவி பாயுமாக மாலையும் கழுத்துமாய், கைகள் கூப்பியபடி, நாயகம், சௌந்தரி கால்களில் வணங்கி எழ, அர்ச்சதை தூவி, மகனையும், மருமகளையும் வாழ்த்தி மகிழ, அடுத்து ரமாபாயம், அடுத்தடுத்து வசந்த விலாசப் பெரியவர்களும் ஆசிர்வதித்தனர். விஜயன், நண்பனை கட்டிக் கொண்டு தன மகிழ்ச்சியை வெளிப் படுத்த, பைரவி அவருக்குக் கை எடுத்து நன்றி தெரிவிக்க, “இது என்ர கடமைங்க தங்கச்சிமா. “என அடுத்துச் சொல்ல வார்த்தைகளற்றுப் போனார். கைலாஷ், பைரவி பெரியவர்கள் கால்களில் விழுந்து எழுந்தது போக, சத்தியன் தன் அலுவலகத்தில் பணிபுரியும் சங்கீதாவோடு சேர்ந்து விழுந்து தன் திருமணத்துக்கும் அனுமதி வாங்க, சத்தியனைப் பார்த்து “அடேய் , ராசுக்கோல் “ என்றவர், சங்கீதாவிடம் உனக்கும் சம்மதம் தானே எனக் கேட்டு , ஆசீர்வதிக்க, அபிராமும் அதைப் பிடித்துக் கொண்டான். ஒன்றும் சொல்லாமல், ஆதிரா, கையைப் பிடித்து அழைத்து வந்தவன், அவளோடு சேர்ந்து, மாமன், அத்தை கால்களில் விழுந்து, “ மாமா, எங்களை ஆசீர்வாதம் செஞ்சு, என்ர கல்யாணத்தையும் சீக்கிரம் நடத்தி வைங்க’ எனவும், “மாமனை மாதிரியே திருட்டு பய, உன்ர , திருட்டுத்தனம் தெரியும்டா எந்திரி “ என்றவர் மகளையும் உச்சி முகர்ந்து,

“ரஜூம்மா , என்னடா சொல்ற, இவன் ஓகேயா பார், இல்லையினா வேற சாய்ஸ் பார்க்கலாம்”எனக் குண்டை தூக்கிப் போட, “ஏன்னுங்க மாமா, உங்களுக்கு இந்தக் கொலைவெறி, நானே இப்பத்தான் உங்க மகளை , கையில , கால்ல விழுந்து சரி கட்டி வச்சிருக்கேன்”எனக் கதற ,

ஆதிரா ஆயி, பாபாவுக்கு இடையில் தன்னை மறைத்துக் கொண்டு நின்றவள் "உங்க விருப்பம் தான் பாபா " என ஆகி வந்த பதிலை சொல்ல, “என்ர விருப்பமா, இனி அப்படி ஒன்னு இருக்குதா என்ன? என்ர ஹோம் மினிஸ்டர் முடிவு தான், ஏனுங்க அம்மணி, நீங்க சொல்லுங்க” எனப் பைரவியை அபிப்பிராயம் கேட்க,

“விஜயன் பாயிஸாப்க்கு , என் மகளை மருமகளா அனுப்ப எனக்குப் பூரணச் சம்மதம்”என்றார். “அப்ப, மாப்பிள்ளையைப் பார்த்து நீ சரின்னு சொல்லை, அவிக அப்பனுக்கு மருமகளா அனுப்ப தான்சமத்தம் சொல்லியிருக்க, என்ன அம்மணி, “என மனைவியை வம்பிழுத்தவர்,

“மாப்பிள்ளை, என்ரப் பொண்ணைக் கட்டுறது அத்தனை சுலபம் இல்லை, நீ என்ன செய்யிற, அங்க இருக்க , கிழடு கட்டைங்க்கிட்ட எல்லாம், போய்ச் சம்மதம் வாங்கிட்டு வா, பிறகு ,உன்ர அப்பனை, முறைப் படி, என்ர கிட்ட பொண்ணு கேட்கச் சொல்லு, அப்ப நான் பதில் சொல்றேன் ”எனச் செக் வைக்க, மாமனை முறைத்தவன், “ஆரா பேபி வா’என அப்போதே காரியத்தில் இறங்கினான். பெரியவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு இவர்கள் வந்த போது , பன்னீர், ரமாபாயிடம் , “ஏனுங்க ராணியம்மா, இந்த மெஹந்தி நல்லா சிவக்குதான்னு ஒரு போட்டி வச்சீங்களே, அந்த முடிவு சொல்லவே இல்லிங்க,’ என வம்பிழுத்து விட, “பேசாத இருடா பிச்சுப் போடுவேன்”எனச் சுப்பு நண்பரை முறைத்து நின்றார். நேற்று மனைவியோடு போட்ட சண்டை இன்னும் சமாதானம் ஆன பாடு இல்லை.

ரமாபாய் அதை உணர்ந்தவராக, சாரதாவை அழைத்து வந்தவர், “யார் எவ்வளவு நேரம் கையில மெஹந்தி வச்சிருந்தாங்க, அதுக்குள்ள எவ்வளவு சிவந்திருக்குனு ஏற்கனவே பார்த்து வச்சுட்டோம், சாரதா பாபி, தான் அதில வின்னர். பாயிஸாப், பாபி மேல, அவ்வளவு அன்பு வச்சிருக்கார், நாமெல்லாம், வாரிசுகள் வந்த பிறகு, அவங்களுக்காக ஓட ஆரம்பிச்சுடுறோம், ஆனால் இத்தனை வருசமா, ஒருத்தருக்காக ஒருத்தர் வாழறாங்க, பாயிஸாப் அன்பை பாபியோட கை மெஹந்தி காட்டி கொடுத்துடுச்சு” என எடுத்துச் சொல்ல,

சாரதா கண் கலங்கியவராக, “நான் கொஞ்சம் , அப்படி, இப்படிப் பேசி போடுவேன், ஆனால் , என்ர மாமா , என்னைத் தாங்கத்தான் செய்வாருங்க” எனச் சபை முன்னே பெருமை பேச, சுப்புவும் நெகிழ்ந்து தான் போனார்.

"அது தான், உங்க மருமகள் , வசந்த விலாசத்திலிருந்து பேசும் போதெல்லாம் சொல்லுவாளே"என ரமாபாய் சொல்லவும், "மகளைத் தான், மருமகன் கிட்ட ஒப்படிச்சுட்டீங்களே, ராணியம்மா எங்களோட வசந்த் விலாசத்துக்கு வந்து தங்குங்க"எனப் பன்னீர் அழைப்பு விடுக்க.

"வரேன் ஜிஜு. இன்னும் போஸ்லே குடும்பப் பஞ்சாயத்து எல்லாம் இருக்கே, அதெல்லாம் முடிச்சிட்டு வர்றேன். நீங்களும் எல்லாரும், எங்க கோட்டை சத்தாராவுக்கு வாங்க. அதுவும் ஒரு அற்புதமான இடம் தான்" என ரமா பாய் அழைப்பு விடுக்க,

"வந்துட்டா போச்சு"என ராமசாமியும், பன்னீரும் கோரஸ் பாட, "என்ர, கல்யாணத்தையும் பேசி முடிச்சு போட்டு போங்க தாத்தா"என அபிராம் மாமன் சொன்னதைச் சொல்ல, "இன்னைக்குத் தான் உன்ர மாமன் சரியா சொல்லியிருக்கன், எல்லாம் என்ர மருமகள் வந்த நேரம்"என நாயகம் மகனின் தரப்பில் நிற்க, "என்ர பேரனுக்கு என்ன குறைச்சலுக்கிறேன் " என ராமசாமி , சம்பந்தி சண்டையை ஆரம்பித்தார். விஜயன், பாலாஜி ராவ், முகுந்த் போஸ்லேவோடு, சோலாப்பூர், ஜெயந்த் பிரச்சனை குறித்து ஆலோசித்தனர். கைலாஷின் உதவியாளர் சம்பத், நாளைய விழாவின் ஏற்பாடுகளை, தங்கள் முதலாளியை தொந்தரவு செய்யாமல் இவர்களுடன் கலந்து ஆலோசித்தார். " இன்னைக்கும் மில்லில் கல்யாண சாப்பாடு தானே" என விஜயன் கேட்க, "ஒரு வாரமா, விருந்து தான் சாப்பிடுறாங்க."எனக் கைலாஷின் தாராளத்தைப் புகழ்ந்தார். கைலாஷ், பாரு ஆயி பவானியை வணங்க அந்த அரங்கத்துக்கு வந்து சேர, பண்டிதர் ஆரத்தி காட்டினார். “பாரு, இந்த அம்மனை நம்ம பிள்ளையார் கோவில் பக்கத்திலேயே பிரதிட்டை பண்ணிடுவோம், பண்டிட்ஜி, அதுக்கான முறைகளைப் பாருங்க”எனக் கைலாஷ் சொல்லவும், ‘அப்படியே ஆகட்டும்” எனப் பண்டிட் மகிழ, "அதெப்படி, நான் மனசில நினைக்கிறதை நீங்க சொல்றிங்க "எனப் பைரவி வியக்க, கைலாஷ் நகைத்தார். கௌரி, இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி, பழச்சாறை கொண்டு வந்து கொடுக்க, இளையவர் பட்டாளம் போட்டோ எடுக்க இவர்களைச் சூழ்ந்து கொண்டது. பைரவி, "சேலையை மாற்றி, உடுத்தி வர கௌரியோடு சென்றார். ரஞ்சனி, மாமாவுக்குக் கம்பெனி கொடுத்து, அமைதியாக அமர்ந்திருக்க, ஆயி பாபாவை தேடி வந்த ஆதர்ஷுடன் , ஆராதனை, ஆருஷி போட்டோ சூட் நடத்திக் கொண்டிருந்தனர். ரஞ்சியின் பார்வை தன்னையறியாமல் , ஆதரசிடம் சென்று மீண்டு வர, கைலாஷ் மருமகளிடம் பேச்சுக் கொடுத்தார். "வேட்டி கட்டவும், பால் டப்பா , உன்ர மாமன் அளவுக்குக் கெத்தா இருக்குல்ல "என மகனையே கேலி பேசவும், "உங்களையே விடவும், ஓவர் கெத்து, ராஜ பரம்பரைக்கிற கர்வம். " என்றவள் ', அவன் போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதை , கமெண்ட் அடிக்க, கைலாஷ், அவள் போக்கிலேயே பேசி, அவளின் மனதை அறிந்தார். ஆனால், இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற கவலையும் பிறந்தது. மகனை அவரே கணிக்க முடியாமல் தான் இருந்தார். பைரவி , அரிமணியில், அதே தாளிக்கக் கட்டுச் சேலையில் புடவையை மாற்றிக் கட்டி இன்னும் மிடுக்காக வந்து சேர்ந்தார். ரஞ்சனி, மாமா அத்தைக்கு வாழ்த்துக் கூறி, அவர்கள் கால்களில் விழுந்து வணங்க, ஆதர்ஷும் அவனோடு ஆருஷியும் சேர்ந்து மூவருமாக இவர்கள் கால்களில் விழுந்தனர். “நல்லா இருங்க”எனப் பவானி ஆசீர்வதிக்க, “இதென்ன கண்ணு, கூட்டமா விழுந்து எந்திரிக்கிறீங்க”என ராஜன் ஆராய்ச்சி பார்வையோடு பார்க்க, ரஞ்சனி சற்று விலகி நிற்க, ஆருஷி, “நமஸ்தே மாதாஜி”எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டவள், “எல்லாரும் ஜோடியா ஆசிர்வாதம் வாங்கினாங்களா , தர்ஸுக்கு, தனக்கு மட்டும் ஜோடியில்லைனு பீல் பண்ணான் , அதனால தான் கூட விழுந்தேன், மத்தபடி என் மனசில ஒன்னும் இல்லை”என அவள் கிலுக்கி சிரிக்க, “நான் பீல் பண்ணேன், நீ பார்த்த, பாபா அவள் பொய் சொல்றா, நீங்க நம்பாதீங்க. அவளுக்கு ப்ராங் பண்றது தான் வேலை, ஸ்கூலையே அவளைப் பிராங் குயின்னு தான் சொல்லுவாங்க. “என ஆதர்ஷ் அவள் இயல்பை எடுத்துச் சொல்ல, “உனக்கு, ஆருசியை ஏற்கனவே பழக்கமா பாபா”என்றார் பைரவி. “புவா, அதை என்கிட்டே கேளுங்க, உங்க முல்கா நீங்க நினைக்கிற மாதிரி நல்லவன் கிடையாது, சரியான ச்சீட்டர். நான் யாருன்னு தெரிஞ்சே பழகிட்டு, தெரியாத மாதிரி ஆக்ட் பண்ணன்’என ஆருஷி , குறை சொல்ல, வாயை பொற்றிய ஆதர்ஷ், “அடிப் பாவி , ஆயி, போய்ச் சொல்றா, நீங்க ராதிமாமை வேணும்னா கேட்டு பாருங்க”என அவன் பஞ்சாயம் வைக்க, அங்கு ரஞ்சியும் அவள் மாமனும் தான் குழம்பிப் போனார்கள். மீதி சாங்கியங்களை செய்ய, ஆதர்ஷ், பாபாவை கே ஆர் மாளிகைக்கு அழைத்து சென்றான்.

நல்ல நேரம் பார்த்து கே ஆர் மாளிகைக்குள் தன் மருமகளை அழைத்துக் கொண்டார் சௌந்தரி. தமிழ் நாட்டு மருமகளாக நிறைகுட நீரோடு தன் அடியெடுத்து வைத்த பைரவி, பூஜை அறையில் விளக்கேற்றி, அரிசி பருப்பிலும் கை வைத்து, கைலாஷின் மனைவியாய், நாயகம், சௌந்தரியின் உரிமையான மருமகளாய், அந்த வளாகத்துக்கே ராணியாய் தன மக்களோடு குடி புகுந்தார். சௌந்தரி நான்கு பேரையும் நிற்க வைத்து, திருஷ்டி சுற்றி போட்டார். ஒரு புறம் கல்யாண விருந்து ஓடிக் கொண்டிருக்க, மறு புறம் அடுத்த நாள் விழாவுக்கான ஏற்பாடுகள் பெரிய அளவில் நடந்து கொண்டிருந்தன. அன்றைய இரவில் கைலாஷ்-பாரு, சிறியவர், பெரியவர் எனச் சகலரின் கேலிக்கு இடையில், அந்தச் சாம்ராஜ்யத்தின் ராஜனும், ராணியாக அனைவருக்கும் தங்கும் ஜாகையையும் ஒதுக்கி விட்டுத் தங்கள் அறைக்குள் வந்தனர்.

இருவருமே அந்தக் கணத்துக்கு ஏங்கியவர்களாக ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்து கொண்டு பேச்சுகளற்று ஒருவரை ஒருவர் நிறைத்து பூரணமாகி நின்றனர். அந்த அறையின் ம்யூசிக் சிஸ்டம் , ப்ரோக்ராம் செய்யப் பட்டிருந்தது. பின்னனியில், படே அச்சே லக்த்தே ஹை … எனப் பாடல் ஒலிக்க , இருவரும் இனிமையான நினைவுகளில் சிரிக்க, பைரவி, அந்தச் சிரிப்பிலேயே , நாணத்தையும் காட்ட, அதை உணர்ந்த ராஜாவின் பார்வையும் மாறியது.

பாருவுக்கு நினைவே சங்கீதமாக ஒலிக்கும், இன்று நிஜமாய் அவரின் ராஜும் உடனிருக்க, இனிமைக்குக் கேட்கவா வேண்டும். இருபத்திரண்டு வருடப் பிரிவும் அவர்கள் உடலுக்குத் தானே ஒழிய, மனதுக்கும் உணர்வுகளுக்கும் இல்லை. ராஜனின் அதிரடியான செய்கைகளோடும், பாருவின் செல்ல சிணுங்கல்களோடும் நிறைந்தது அவர்களின் இரவு. அடுத்த நாள் முதல், இன்னும் பெரிய பொறுப்புக்களைச் சுமக்க இருக்கிறார் ராஜன், ஆனாலும் மனைவி அருகிலிருக்க, வாழ்வே வண்ண மயமானதாக மனதில் ஓர் உற்சாகம், இளமை திரும்புதே என ஓட காத்திருக்கிறார். அவர் எடுக்கும் முடிவுகள் என்ன. அடுத்த அத்தியாயம், நிறைவுப் பகுதியில் சந்திப்போம்.

Friday, 27 May 2022

யார் இந்த நிலவு-59-பார்ட்-1

 யார் இந்த நிலவு-59-பார்ட்-1 

அபிராம், ஆதிராவை கண்ட நாள் முதலாய் யாரிந்த நிலவு எனத் தேடி, பெங்களூரின் வீதிகளில் சுற்றி, அவளுக்காகத் தவித்திருந்தவன், ஒரு நாள் தவிப்பென்றாலும் அது சொல்லில் வடிக்க இயலாதது. அதன் பின் தங்களிடத்திலேயே அவள் அடைக்கலமாய் வர, ஆவலுடன், அவளைக் காண வந்தவனை, அவளோடு பழகாதே என மாமனே தடை போட, மனம் நொந்தான். சத்தியாகிரகம் செய்து மாமன் மனதை மாற்றியவனுக்கு, அந்த நிலவு அவன் மாமன் மகளெனத் தெரிந்த வேளையில் உலகை வென்ற மகிழ்ச்சி. அவளிடம் தன் மனதைப் பகிர்ந்து, அவள் மனதிலும் தான் தானென அறிந்த கணம், அவளை மனதில் அள்ளிக் கொண்டான். வரிசையாய் மற்றவர் பிரச்சனைகள் இவர்களை வளம் வந்தது. காதல் விஷயம் பெரியவர்கள் ஒப்புதல் பெற்ற பின்னும் இன்னும் அரேங்கேறாமல் காத்து நின்றது. அபிராமுக்கு, தான் ஆதிராவை விரும்பும் அளவு , அவள் தன்னை நேசிக்கவில்லையோ என்ற குறை, மனதோரத்தில் எப்போதுமிருந்தது. ஆனால் , முன் மாலையில் போலிஷ், அவனைக் கைது செய்து விடுமோ, எனப் பயந்து , அந்த ஆபீசரிடமும், போஸ்லே குடும்பத்தின் முன்னும், தன மனதைத் திறந்து , அவனுக்காக வாதாடிய நொடி முதல், அவன் தயக்கமெல்லாம் தீர்ந்து, அவளை அள்ளி அணைக்கத் தக்க சமயம் பார்த்திருந்தான். வரிசையாகச் சடங்குகள் நடந்தேற, ஆதிரா மும்முரமாகவே திரிந்தாள். இரவு உணவுக்கென, சாப்பிட்டு கூடத்துக்குத் தோழிகளோடு வந்தவளை, சமயம் பார்த்து, ஓர் திரை மறைவுக்குக் கடத்தி சென்றான் அபிராம். “ராம், என்ன செய்றீங்க, அடுத்தடுத்து, ரிதுல்ஸ் இருக்கு, நான் சீக்கிரம் போகணும்” என அவள் பேசிக் கொண்டே போக, கதவை அடைத்து, சட்டென அவளைத் தழுவிக் கொண்டவன், “ஐ லவ் யூ டி, ஆரா பேபி” என என்றும் காட்டாத தீவிரத்தை அணைப்பில் காட்டி, அவளைத் தன்னோடே இறுக்கிக் கொள்ள, முதலில் திகைத்த ஆதிரா, அவன் உணர்வை மதித்து, “ திடிர்னு இன்னைக்கு என்ன வந்துச்சாம், நேத்து நயிட் கூட வேண்டா வெறுப்பா பேசினீங்க” எனச் சலுகையாய் அவள் குறை பட்டாள்.செவி அருகில் கேட்ட அவள் குரலிலிருந்த சோகம், அவன் இதயம் வரை சென்று ஊடுருவியது.
“அது அப்படித்தான், என்ர காதலி, முறைப் பொண்ணு, மாமன் மகளுக்கிட்ட, எனக்கு உரிமை இல்லையாகும். ஆசையோ கோபமோ உன்ரகிட்ட காட்டாத , யார் கிட்டக் காட்டுவேனாம் ” என அணைப்பை விடாது, அவளோடு இழைந்து, அவள் கழுத்து வளைவில் முகம் பதித்திருந்தவன் , அவள் காதில் மொழிய, அவன் மீசை தொட்ட இடங்கள், குறுகுறுத்து ,சிலிர்ப்பை தந்து அவள் உணர்வையும் தூண்டின. ஆனாலும், சட்டென உணர்ச்சி வசப்படுபவனை, எல்லை மீறும் அவன் உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்க நினைத்தவளாக, “ஹோ ஜி,அப்படியா, மஸ்த், படியா மஸ்த், நானும் காட்டுறேன்” அவன் காதை நறுக்கெனக் கடிக்க, “அடியே மறை கழண்டவாள நீயி, என்ர மாமன் , எத்தனை ரொமேன்டிக்கான ஆளு, அவர் மகளா இருந்து போட்டு, ரசனை கெட்டவளா இருக்கியே பாவி, வலிக்குதுடி” எனக் காதை தேய்த்துக் கொண்டே அவன் உணர்வுகள் வடிந்தவனாகப் புலம்ப, “அப்ப உங்க மாமாவையே கட்டிக்குங்க, நான் போறேன்” என அவள் கதவைத் திறக்கப் போக, அவளை இழுத்து மீண்டும் சிறை வைத்தவன், “ராச குடும்பமே, விவகாரம் தான், யாரையிடா கிறுக்காக்கலாம்னு பார்க்கிறது” என அவள் முகம் நோக்கி அவன் குற்றம் சொல்ல, அவள் முறைக்கவும், “எவ்வளவு, ஆசையா வந்தேன் மூடையே மாத்துறியே பேபி ” என வருந்தினான். " நாங்க கிறுக்கு ஆக்ககுறோமா, உங்க தங்கச்சி தான், தனக்கு என்ன வேணும்னே தெரியாத, யாரோ எதோ சொன்னாங்கன்னு , கையைச் சுட்டுகிட்டு, பாவு கூடச் சண்டை போடுறா, நான் எவ்வளவு கவலை பட்டு போன் போட்டேன், நேத்து அப்டி கத்துனீங்க. இப்போ வந்து கட்டிக்கிறீங்க. இப்போ சொல்லுங்க, யாரு, யாரை கிறுக்கு ஆகுறது " என அவன் முகத்துக்கு நேரெதிர் கனல் விழி தெறிக்கப் பேசியவளை , ரசனையோடு பார்த்தவன், "யாரோ கிறுக்கா இருந்துட்டு போறாங்க பேபி, நாம எதுக்குச் சண்டை போடணும் " என அவள் முகத்தில் விழுந்த கற்றை முடியை ஒதுக்கிவிட்டபடி அவன் நெருக்க, " ஆஹா, இப்போ சொல்லுங்க, போலிஷ் அரெஸ்ட் பண்ணும்னு அப்படிப் பயந்திங்களாம். பாவு சொல்லி சொல்லி சிரிக்கிறார்." என அவள் பொரிந்து தள்ள, "உன்னை விட்டுப் போட்டு , ஜெயில்ல போய் உட்கார்ந்து என்ன பேபி செய்யறது. அதுக்குத்தான் " எனக் குழைந்தவன், தொலைந்த உணர்வை மீட்டு , உல்லாசமாய் அவளை நோக்கி முன்னேற, ஆதிரா ,அவன் நெஞ்சில் கையை வைத்து தடுத்து, தங்களுக்குளான இடைவெளியை அதிகப் படுத்தினாள். அதில் கோபமுற்றவன் “ஏன் , அதுக்குள்ள என்னைப் பிடிக்காத போயிடுச்சாக்கும்’ என வார்த்தையை விட, அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தவள், அவன் கண்களை நேராக நோக்கி, “ நான் கைலாஷ்-பைரவி மகள், ஒருத்தனை மனசில நினைச்சா, நினைச்சது தான். சும்மா அடுத்தவங்க பிரச்சினை எல்லாம் நமக்கு இடையில கொண்டு வரக் கூடாது. அப்படிக் கொண்டு வந்தீங்க” என அவள் மிரட்ட, “என்னடி செய்வ, உங்க அண்ணென்கிட்ட சொல்லுவியா, இல்லை அப்பாகிட்ட சொல்லுவியா”என, தன வசமிருந்த அவள் இடையை நெறிக்க, “ஓஹ் , மச்சி, நான் மராட்டா வீர பரம்பரையில் வந்தவ, இதுக்கெல்லாம் கண்ணைக் கசக்கிட்டு எங்க வீட்டில போய் நிற்க மாட்டேன், கொரில்லா அட்டாக் தான், அன் எக்ஸ்பெக்ட்ட மூவ் “ என நொடியில் கோப முகத்தை மாற்றி கண் சிமிட்டியவள், அவனை மையலாகப் பார்த்து, ஓர் புன்னகையோடு அவன் அசந்த நேரம், ஆழ்ந்த இதழொற்றலையும் தந்து , அவன் மயங்கி நிற்கையிலேயே அவனை விடுத்து சிட்டாகப் பறந்தாள் . அபிராமுக்கு நடந்ததை உள்வாங்கவே சில நிமிடம் பிடித்தது. “கொரில்லா அட்டாககா, எனக்கு ஹார்ட் அட்டாக் வரவழைச்சுடுவாலாட்டத்துக்கே , அயோ சாமி ,மாமனை விட நாலு பங்கு இருக்கா. அம்மாடியோவ், இவளை , கல்யாணமும் கட்டாத ,ஒரு வருஷம், பக்கத்திலையே வச்சுக்கிட்டு, அபிக்கண்ணு , உன்ர நிலைமை கஷ்டம் தாண்டா’ எனத் தன்னைப் போல் புலம்பிக் கொண்டவன், இரவு உணவையும் மறந்து ரசகுல்லா சாப்பிட்ட இனிமையோடு மந்திரித்து விட்டவனைப் போல் மணவறையை நோக்கி நடந்தான்.

வழக்கமாக நடக்கும் திருமணம் என்றால், இளைஞர் பட்டாளம், மேடையில் செய்யும் சாங்கியங்கள், பெரியவர்களுக்கானது என ஒதுக்கி, தங்கள் நடை உடையில் கவனம் செலுத்தி, செல்பி எடுத்துக் கதைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், இது ஒரு அப்பா, அம்மாவின் திருமணம், குறிப்பிட்ட சில நூறு மக்களுக்கு , நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு, கலாச்சாரச் சங்கமத் திருமணம், எனப் பலவித வித்தியாசங்களை உள்ளடக்கி இருந்த, கைலாஷ்- பாரு திருமணத்தில், பிள்ளைகள் தான் முன்னின்று ஆவலாக நடத்தினர். ஆதர்ஷ், ஆதிரா, அபிராம், ரஞ்சி, ஆராதனா, ஶ்ரீ சகோதரிகள், கைலாஷின் மகனாகவே வளர்ந்த ஓட்டுனர் சத்தியன், சங்கீதா என மில் தொழிலாளர்களுமாக மேடையைச் சுற்றியே திரிந்தனர். சத்தியன், கைலாஷின் கண்ணசைவில் காரியம் சாதிக்கும் சேவகனாய், நிழலாகவே தொடர்ந்தான். " ஏன்ரா, கல்யாணம், எனக்கா, உனக்கா. என்ர பின்னாடியே திரியிற' எனக் கைலாஷ் கேலி பேச, "நீங்க அம்மாளோட சேர்ந்தா தான், என்ர ரூட் கிளியராகுமுங்க ,அதுக்குத் தான்" என அவன் பதில் சொல்லவும், விஜயனும், " ஆமாம்டா சாமி, இவனைத் தங்கச்சிம்மாட்ட ஒப்படைச்சிட்டா தான், நாம இராத்திரிக்கு நிம்மதியா தூங்கலாம் " என அவரும் நகைப்போடே சொல்ல " அதேய், அசிங்கம் புடிச்ச மாதிரி பேசாத, ஒழுக்கமா பேசுங்கடா. சாங்கியம் செய்யனோமுல்ல" எனக் கைலாஷ் பொறுப்பான மணமகனாகப் பேச, மற்ற இருவரும் ஒரு மார்க்கமாகவே மண்டயயை ஆட்டிக் கொண்டனர். மாலையில் ஹல்தி விழாவை மட்டும் முடித்துக் கொண்டவர்கள், சிறிது நேரம் சிரம பரிகாரம், செய்து கொண்டு இரவு உணவுக்குப் பின் மாரத்தான் தொடராகச் சாங்கியங்களை வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தனர். சௌந்தரி, பொதுவாக விடிய விடிய நடக்கும் சாங்கியத்தைச் சொல்ல, “தாய் மாதா, சாங்கியம் சரியா ,செஞ்சிடுவோம், டைம் நான் சொல்றது தானுங்க” எனப் பெரியவர்களின் உடல் நிலையை மனதில் கொண்டு பதினோரு மணிக்குள் முடிக்கத் துரிதப் படுத்தி, பிரம்ம முகூர்த்தத்தில் காலை சடங்குகளை வைத்துக் கொள்ளலாம் என ராஜன் உறுதியாகச் சொல்லி விட்டார். நல்ல நேரமும் கூடி வரவே, சாங்கியம் செய்யும் பெரியவரும் ஒத்துக் கொள்ள, ஆக்கை சுற்றிப் போடுதல், எனும் சடங்காக, புளியமரத்து விளாரை, இரண்டாய் பிளந்து, சீர் செய்யும் பெண்மணி ராஜனை நடுவில் நிற்க வைத்துச் சாங்கியம் செய்து, மற்றொரு புளியமரத்து விளாரை மிதிக்கச் சொல்ல, “அதெல்லாம் , மாப்பிள்ளை இருபது வருஷம் முன்னையே புளியம் கொம்பைத் தான் பிடிச்சிருக்காப்ளையாட்டுதுங்க” என, அடுத்து தாய் மாமன் முறை செய்ய வந்து நின்ற சௌந்தரி உடன் பிறந்த மாமன் வினயமாகக் கேட்க, நாயகம் மனைவியை முறைத்தார். ஆனால் ராஜன், “சொன்னாலும், சொல்லலைனாலும் அது தானுங்க நிஜம், என்ர பொண்சாதி , ராணியம்மா புளியம் கொம்பு தான்”என அவர் ஒத்துக் கொள்ள, தாய்மாமான் சீருக்குப் பின், தங்கள் முறைப்படி மருமகனுக்குச் சீர் செய்ய நின்ற போஸ்லே குடும்பத்துக்குப் பெருமை பிடிபட வில்லை. “எங்க பாபாவும், ஆயிக்கு குறைஞ்சவங்க இல்லை. பாபாவோட தைரியத்தைப் பார்த்துத் தானே, நானிமாவே எங்க ஆயியை பாபாக்கு கட்டி கொடுத்திருக்காங்க” என ஆதிரா அப்பாவுக்குக் கொடி பிடிக்கவும், “ அப்படிச் சொல்லுடா, என்ர தங்க மயிலு” எனச் சௌந்தரி பேத்தியைத் திருஷ்டி வலித்துக் கொஞ்சினார். “ஏதேது, உன்ர பாபா, பிறந்ததிலிருந்து வளர்த்தியிருந்தான்னா, தலையில தூக்கி வச்சு ஆடுவீங்கலாட்டத்துக்கு”என நாயகமே பேத்தியை வம்பிழுக்க, “அஜ்ஜோ, பாபாவோட பாசத்துக்கு ஏங்கினவங்களுக்குத் தான் அவங்க அருமை தெரியும். எங்க பாபா கோடியில் ஒருத்தர்.” என அவள் உணர்ச்சி மிகுதியில் சொல்ல, “அவருக்குப் பொறாமைடா கண்ணு” என ராஜன், மகளை உச்சிமுகர்ந்து அணைத்துக் கொண்டார். தாய் மாமன் முறை சீரை, சௌந்தரியின் உடன் பிறந்தவர்கள் செய்ய, ரமாபாய் மருமகனுக்குச் சீர் செய்ய, ஆதர்ஷ், பாலாஜி ராவ் இருவரையும் அழைத்து வர, “சம்பந்தியம்மா, மகன் இந்தச் சீர் செய்யிறதில்லைங்க, அவரும் சகலை பாடி, பங்காளி முறை தானுங்களே, மாமன் மச்சான் முறை சீர் எப்படிச் செய்வாங்கங்க “என ஆட்சேபிக்க, நாயகம் மனைவியை முறைத்து விட்டு, “தங்கச்சிமா, உங்க மருமகனுக்கு நீங்களே முறையைச் செய்ங்கங்க”என அழைக்க, ரமாபாய் தயங்கி, விஜயனை அழைக்கச் சென்ற நேரம்,

“போஸ்லே குடும்பத்து வாரிசு பைரவிபாயோட கணவருக்கு, கணபத்ராய் போஸ்லே தாமாதஜிக்கு ,மாப்பிள்ளை முறை செய்ய, முகுந்த் ராய் போஸ்லே வந்திட்டேன். சோட்டி ஆயி, அனுமதி கொடுங்க. எல்லாத் தவறுகளையும் திருத்த விரும்புறேன்” என ரமாபாயை வணங்கி நிற்க,

பாலாஜி ராவ் , கைலாஷ் என இரண்டு மருமகன்களையும் ரமாபாய் யோசனையாய் பார்க்க, அவர்கள் கண்களாலே சம்மதம் தெரிவிக்க, ரமாபாய் , மச்சினன் மகனைச் சீர் செய்ய அனுமதித்தார்.

ஆதர்ஷ், முகுந்த் போஸ்லேயை வரவேற்க, “இனி , எதிரெதிர் பக்கம் இல்லாமல், ஒரே பக்கம் நிற்போம் தாமாத்ஜி”என வினயமாகச் சொல்லவும், “ நான், போஸ்லே வாரிசு தானே ஒழிய, வம்சம் இல்லை மாமாஜி . என் பாபா பக்கத்தில் தான் நான் நிற்பேன்’என அவனும் பவ்யமாகவே பதில் தந்தான். கைலாஷின், தாய் வழி, தந்தை வழி , சமந்தபுரம் உறவு முறைகள், ராஜகுடும்பம் , மருமகனுக்கு என நிறைத்த சீர் வரிசையைப் பார்த்தே பிரமித்தனர். ஆண்களும் இத்தனை வகை, உடைகள், நகைகள் அணியலாம் என்பதே அதனைப் பார்த்துத் தான் தெரிந்து கொண்டனர். வித விதமாய் ராஜா காலத்து ஷேர்வானி , பகடி, நவீனக் காலத்துக் கோட் சூட், பட்டு வேஷ்டி, சட்டை அங்கவஸ்திரம், சால்வைகள், கை செயின், கழுத்துக்கு முத்து மாலை, கோட் பாக்கெட்டில் மாட்டும் சங்கிலி, காதுக்கு வைரக் கடுக்கன், புலிநகம் பதித்த நவரத்தின மாலை, அதற்கெல்லாம் மேலாக, வேலைப்பாடுடைய பரம்பரை கத்தி , இடுப்புப் பட்டை எனச் சீர் தட்டுகளை நிறைக்க, கொங்கு மக்கள், கொங்கணி மக்களின் டாம்பிக்கத்தைப் பார்த்து மலைத்தனர். ரமாபாய் சார்பாக வைக்க, அது இல்லாமல், முகுந்த் ராய் போஸ்லேவும் தனிப் பட்ட முறையில் முத்து மாலையைப் பரிசளித்தார். கைலாஷுக்கு , முழு மரியாதையோடு பட்டு சால்வை, நவரத்தின மாலை, கையில் வேலைப்பாடுடைய கத்தி ஆகியவற்றை அவர் தர, அவற்றை அணிந்து நின்ற ராஜன், மெய்யாகவே ராஜனாகத்தான் இருந்தார். பெற்றவரும், உற்றவரும் பார்த்துப் பூரிக்கத் தான் செய்தனர். அபிராம், மணவறையில் மாமனுக்குச் சடங்குகள் நடந்து கொண்டிருக்க, இன்னும் கொரில்லா அட்டாக்கிலிருந்து வெளி வராதவனாக, மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆசையோடு ஆதிரா அருகில் வந்து நின்று, “ஆரா பேபி, கொரில்லா அட்டாக் ஆனதில , சாப்பிடாத வந்துட்டேண்டி,பசிக்குது ரசகுல்லா கிடைக்குமா” என ரகசியமாய்க் கேட்க, ஆதிரா, அவன் காலை மிதித்தாள் .

அதை எதிர்பார்த்தே இருந்தவன், சட்டெனக் காலை எடுத்து விட, ஆதிராவின் செருப்பு அதற்கடுத்து நின்ற ஆதர்சின் கால்களைப் பதம் பார்த்தது. “ஆதி, என்ன செய்யிற, பார்த்து நில்லு ” என அவன் கடிந்து கொள்ள, "சாரி பாவு" என மன்னிப்பு கேட்க, அபிராம் , தங்கையோடு சேர்ந்து அர்த்தமாகச் சிரித்தான். ‘இருங்கடா பக்கிகளா’ என மனதில் கருவியவள், “பாவு, ஆலியா பட்டை காணோம்”என ஆதர்ஷ் காதை கடிக்க, “வருவா பார். பாபா வீட்டு ஆளுங்களுக்குத் தான், என் அருமை தெரியாது. அவள் அப்படி இல்லை” என ஆதிரா அருகில் நின்ற, ரஞ்சனி, ஸ்ரீ சகோதரிகளைப் பார்த்து அவன் சவாலாகவே சொல்ல, “பாவு, ஸச் , ஆருஷி பாபியா வர்றாங்க , ஹாய், ஹாய் மேம் மர்ஜாவான், ஆனால் மாமா மட்டும் தானே வந்திருக்கார்”என ஆராதனா முகுந்தை சுட்டி கேட்க, “பொண்ணுங்க என்னைக்கு மா சீக்கிரம் வந்துருக்கீங்க , மேக்கப் பண்ணி வருவா” என ஆதர்ஷ் மொத்தமாகப் பெண்ணினத்தையே கலாய்க்க, “ஹோ, ஹோ அவ்வளவு நேரம் மேக்கப் போட வேண்டிய அவசியம், உன் ஆலியா பட் குத்தான், எங்களுக்கு இல்லை”எனச் சங்கீதா மகள், வெளிப்படையாக நொடிக்க, ரஞ்சி அனல் பார்வை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள். அபிராம், ஆதிரா விஷயம் நடந்த அதே நேரம், உணவு கூடத்தில் ஆதர்ஷி வைத்து பெரியவர்களுக்குள் பேச்சு ஓட, ஸ்ரீ சகோதரிகள், ரஞ்சி எல்லோருமாக ஆதர்ஷை கட்டமாட்டோம் எனப் புறக்கணித்தார்கள். இவர்களுக்குள் ஒரு பனிப் போர் ஓடிக் கொண்டிருந்தது. “கழுதைக்குத் தெரியுமா, கற்பூர வாசனை, என்ர பேரனுக்குனு ஒருத்தி, இனிமேலா பொறக்கப் போறா, சரியான நேரத்துக்கு வந்து சேருவா பாரு” எனச் சௌந்தரி, ஆதர்ஷுக்கு கொடி பிடிக்க, ரமாபாய், ராதாபாய் இருவரும் சேர்ந்து ஆதர்ஷின் புகழ் பாடினர். அது முதல், ஆதர்ஷ், மற்றும் அவன் முறைப் பெண்களுக்குள் பனிப் போர் ஆரம்பமானது. முகுந்த் போஸ்லே ,தங்கை மாப்பிள்ளைக்குச் சீர் செய்தவர்,அவர்கள் அடுத்தடுத்த சீர்கள் செய்ய இடம் விட்டு, மாப்பிள்ளை வீடு சீர் பெண் வீட்டுக்கு வரும்போது எதிர்கொள்ளவென ,சோட்டி ஆயியுடன் சேர்ந்து தங்கையைச் சந்திக்க வந்தார். பைரவி, ஹல்தி பூசும் சடங்கு முடிந்து, குளிக்க வரும் போதே, அபரஞ்சி, கொங்கு முறைப்படி மணப்பெண்ணுக்குச் செய்யும் சீர்களையும் , பிறந்த வீட்டினராகச் செய்து திருஷ்டி கழித்துச் சென்றிருந்தார். கௌரி, பைரவியின் , சிகையை உலர்த்திக் கொண்டிருந்தார். மற்றவர்கள், ராஜனுக்குச் செய்யும் சீர் முறைகளைக் காண, மணவறைக்குச் சென்றிருக்க, கௌரி மட்டுமே, நிழலாகத் தன தீதியோடு இருந்தார். பைரவி, கைலாஷின் ஆறடி உயரத்திற்குத் தோதாக அரையடி குறைந்தது தோதாக இருப்பார். இவர்களை ஜோடியாகப் பார்ப்பவர்கள், அவர்கள் பொருத்தத்தை வியக்காமல் இருக்க மாட்டார்கள். ராஜ குடும்பம், எனும் களையும், தோரணையும் அவரிடம் இயல்பாக இருக்கும். எப்போதும் ஓர் கம்பீரமும், மிடுக்கும், ஆயிரம் பெண்கள் இருக்குமிடத்தில் தனியாகத் தெரிவார். கண் மூடி ஷோபாவில் சாய்ந்து, மோடாவில் கால் போட்டபடி , கணவரைக் கண்களுக்குள் நினைவில் நிறைத்தபடி நகைமுகமாகச் சயனித்திருந்தார். “நடுவால, நேரம் கிடைக்கையில் ரெஸ்ட் எடுத்துக்கோ அம்மணி, உனக்கு முடியலையா சொல்லிப் போடு, அந்தச் சாங்கியத்தையே வேண்டாம்னு சொல்லி போடுறேன்”எனச் சற்று முன் வீடியோ காலில் பேசும் போது சொல்லியிருந்தார். இவர் பதில் பேசாமல் சிரிக்கவும், “ஏனுங்க அம்மணி நான் என்ன, கூத்து காட்டிட்டு இருக்கிறேனா, உன்ர நல்லதுக்குத் தானே சொல்றேன், பொறவு நாளைக்கு வந்து கால் வலிக்குது பிடிச்சு விடுறான்னு சொல்லக் கூடாது, நிறைய வேலை இருக்குதாக்கும்”என ரகசியம் பேச, “ராஜ், போனை கட் பண்ணுங்க, அப்படியே வலிச்சாலும் , உங்ககிட்ட எதுவும் சொல்லமாட்டேன், பொறுத்துக்குறேன்” என முகத்தை மூடிக் கொள்ள, “அதென்ன அம்மணி, சிவப்பா தெரியறது, மருதாணி வச்ச கைதானே, இல்லை என்னை நினைச்சு முகமே டாலடிக்குதா”என அவர் காதல் வசனம் பேச, “நாளைக்கும் கொஞ்சம் மிச்சம் வச்சுக்குங்க, பை”எனப் போனை கேட் பண்ணி விட்டார் பைரவி. அதே நினைவில் முகம் சூடேற , சாய்ந்திருந்தவரைப் பார்த்து கௌரி ரகசிய சிரிப்பு சிரிக்க, “கௌரி, எதுக்குச் சிரிக்கிற, ரொம்ப அசடு வழியறனா “எனப் பைரவி கவலையாகக் கேட்க, கௌரி சத்தமாகவே சிரித்து விட்டு, “இல்லை தீதி , இப்போ தான் உங்களைப் பார்க்கச் சந்தோசமா இருக்கு, இருந்தாலும் ஜிஜு, ஜாதூகாரர் தான், பேசியே சிவக்க வச்சிடுறாரே”என அவர் காதில் ரகசியம் சொல்ல, “சுப்கர், பாகல் கைக்கி, அவர் ஒருத்தர் பக்கத்துக்கும் நீயும் ஆரம்பிச்சிட்ட”என்றவர், “அந்த இரண்டு மாசமும் , எவ்வளவோ ஆபத்தும் பயமும் இருந்த போதும், ராஜ் முகத்தைப் பார்க்கவும், அவரோட நேசத்தில், என்னை மறந்துருவேன் கௌரி. இப்படி ஒரு பிரியம் வைக்க யாராலையுமே முடியாது. இத்தனைக்கும் அப்புறம், ஒரு வார்த்தை கேட்காமல் ஏத்துக்கிட்டாரே” எனக் கண் கலங்க. “தீதி, இனி சந்தோசமான தருணங்களை மட்டும் நினைவில் வச்சுக்கங்க. மீதியிருக்க வாழ்க்கையில் , பலமடங்கு உங்க அன்பை கொடுங்க. நீங்க ஜிஜுக்கு எந்த விதத்திலும் குறைஞ்சவங்க இல்லை, அதை மறக்காதீங்க” என எடுத்துச் சொல்ல, பைரவியும் ஆமோதித்து விடியும் பொழுதுக்காகக் காத்திருந்தார். இணைச்சீர் , ‘ஆடையாபரணம் அழகுபெறத் தான்பூண்டு கூறை மடித்து வைத்தார் குணமுள்ள தங்கையரும் பிறந்தவரைச் சுற்றிப் பேழை மூடி சுமந்து இந்திரனார் தங்கை இணையோங்க வந்த பின்பு பின்னே ஒரு தரம் பிறந்தவர்க்கு இணையோங்கி மின்னனையார் முன்னே விநாயகர்க்கு இணையோங்கி’ என்பது மங்கல வாழ்த்து. சீர் மண்டபத்தில், கைலாஷ் ராஜன் அமர்ந்திருக்க, இணைசீர் செய்யவென, அவரது இளைய தங்கை கவிதா, மணப்பெண்ணுக்கு இணையாக அண்ணன் எடுத்துக் கொடுத்த, பிறந்த வீட்டுச் சீர் புடவை, நகையணிந்து, தான் அண்ணனுக்கும், அண்ணிக்கும் செய்யும் முறையாக, மூங்கில் பேழையில், கூறைப்புடவை, வெற்றிலை பாக்கு, மஞ்சள், தேங்காய், பழம், கண்ணாடி, சீப்பு ஆகிய மங்கலப் பொருட்களை வைத்துத் தலையில் சுமந்து, மற்றொரு கையில் சோம்பு நீர் பிடித்து, பெரியவர்கள் முறை சொல்லச் சொல்ல , அண்ணனைச் சுற்றி வந்து, அவர் வலது புறத்தில் இறக்கி வைத்தாள். இந்தச் சீர் செய்வதென்பது, ஒவ்வொரு உடன் பிறந்தவள் உரிமையாக, கௌரவமாக, பெருமையாகச் செய்வார்கள். மூத்தவள் சங்கீதா அந்த உரிமையை விட்டுக் கொடுத்து, தங்கள் இல்லாவிட்டால், கஸ்தூரி செய்து விடுவார் என, யோசித்து, தன தங்கையை அங்கே நிறுத்திச் சென்றிருந்தாள் . இல்லாவிடில் கவிதாவுக்கும் அண்ணனுக்குச் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்காது. கூறை புடவையில், கவிதா, அண்ணனுக்குச் சீராகப் பொன் முடிந்து வைத்திருந்தாள். ராஜனும், தங்கை செய்யும் சீரை பெருமையாகவே ஏற்றவர், “ கண்ணு,உன்ர அண்ணி ரொம்ப நல்லவ கண்ணு, நானே வேண்டானாலும், சங்கீதாலையுமே , கூடிய சீக்கிரம் ஒன்னு சேர்த்து போடுவா. வாழ்க்கையில நெம்பக் கஷ்டபட்டுடா, நீ செய்யிற சாங்கியத்தை மனசாரச் செய்யி, நான் உன்ரகிட்ட வேற எதையுமே கேட்கலை.” என உணர்ச்சி வயப்பட்டவராகச் சொல்ல, “அண்ணா, நானும் மனசாரத் தானுங்கன்னா செய்யிறேன், நீங்க சந்தோசமா இருந்தா தானுங்களே, நாங்களும் நிம்மதியா இருக்க முடியும். உண்மையிலே சொல்றேனுங்கன்னா, ஒத்தையில இருக்கீங்களேன்னு அத்தனை மனசு வருந்தியிருக்கோமுங்க. மறுஜென்மம் எடுத்து அண்ணி வந்திருக்காங்க, நீங்க நல்லா வாழனோமுங்க” எனக் கை எடுத்து அவள் கும்பிட, ராஜனும் அவள் கையைப் பற்றிக் கொண்டு கலங்கினார். நாயகமும், சௌந்தரியும் மறு புறம் திரும்பி கண்ணீரைத் துடைக்க, பன்னீர் ராமசாமி, ரஞ்சி, சுப்பிரமணி எனப் பெரியவர்கள் தேற்றினார். அருமை பெரியவர், மணமகளுக்கான கூறை புடவையைக் கொசுவமாக மடித்து ராஜனின் கக்கத்தில் ஒரு நுனியைச் சொருகி, மறு நுனியை கவிதாவைக் கையில் கொடுத்து, சாங்கியம் செய்தார்.

சௌந்தரி சீர் செய்த மகளுக்கு, தட்டில் புடவை நகை, என வைத்து மகனிடம் நீட்ட, அதனை வாங்கி ராஜன் தங்கைக்குப் பரிசளித்தவர், அதே போல், சகீதா மக்கள் சிரிக்கும், கஸ்தூரிக்கும் வைத்துக் கொடுத்தார், “எனக்கு எதுக்குங்க அண்ணன் , நீங்க செய்யாத சீரூங்களா,வருஷம் முழுசும் வாங்கிகிட்டுத் தானுங்களே இருக்கேன்”எனக் கஸ்தூரி சொல்ல, “இது என்ர கல்யாண சீரு வேண்டாம்னு சொல்லாத கண்ணு.” எனக் கஸ்தூரிக்கும் பரிசளித்தார். அடுத்து, மங்களனுக்கு வாழ்த்து பாட, அனுமதி வழங்குவது போல், அரிசி பரப்பி அதன் மேல் வைத்திருந்த மஞ்சள் பிள்ளையாரை வணங்கி, அரிசியைத் தொட்டு மணமகன் மூலமாக, வாழ்த்து பாட அனுமதி வழங்கினர். தாயுடன் சோறு உன்னால், என்ற சடங்காக, ராஜன் அம்மாவுக்குத் தயிர் சோறை ஊட்டி, தானும் வாங்கிக் கொண்டார், இந்தச் சடங்கில் அவரது, மகன் மக்களும் கலந்து கொள்ள, அதற்கும் லொள்ளு பேசியபடி சீர் களை கட்டியது. நாழியரிசிக் கூடை, என மணமகளுக்கான கூறை புடவை, நகை, மங்கலப் பொருட்கள் ஆகியவற்றைத் தட்டுகளில் நிரப்பி, மங்கலன் வாழ்த்து பாட அதற்கெனச் சீர் செய்து கொண்ட பெண்களின் கைகளில் கொடுத்து, கைலாஷ் ராஜனின் குடும்பமே , பைரவி இருக்கும் அரங்கம் நோக்கிச் சென்றனர். சௌந்தரி தங்கள் பக்க காட்ட, ராஜா குடும்பத்துக்கு இணையாக, மகன் மருமகளுக்கு வாங்கி வைத்திருந்த நகைகளை, தான் பரம்பரையாக அணிந்த சங்கிலியை, பட்டுச் சீலைகள், தேங்காய் பழம் எனச் சீர் தட்டுகளை நிறைத்து, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு பெண் வீட்டில் கொண்டு சேர்க்க, போஸ்லே குடும்பம், ரமாபாய் , முகுந்த் போஸ்லே, ராதாபாய் , பாலாஜி ராவ் என ஒரு பட்டாளமே எதிர் சேவையாக அவர்களை வரவேற்றுச் சீர்களைப் பெற்றுக் கொண்டனர். கௌரி, பைரவியை எளிமையாகச் சிங்காரித்து வைத்திருக்க, கைலாஷ் சார்பாக, தன மகன், மகள் , மாமன், மாமி, தாய் பிள்ளையாகப் பழகிய வசந்த விலாசத்துக் காரர்கள், நாத்தனார் அவர் குடும்பம் என வந்து மணமகளுக்கான சீர் செய்ய, பைரவிக்கு உணர்வு பெருகிய நிலை, மகனும், மகளும் ஆளுக்கு ஒரு புறம் தங்கள் ஆயியை அணைத்துக் கொண்டனர். காணொளியில் பார்த்த ராஜனும் கண் கலங்க, நண்பன் நிலை அறிந்து உடனிருந்த விஜயன் அவரைத் தேற்றினார். “என்ர ஊட்டுக்கு மகாராணியா, என்ர மகன் வாழ்க்கையை நிறைக்க வா அம்மணி. இந்த நாளை பார்க்கத் தான் , என்ர கண் தவிச்சிருந்தது” எனச் சௌந்தரி மருமகளைக் கட்டிக் கொள்ள, “நானும் இந்த நாளுக்காகத் தான் தவமிருந்தேன் அத்தை” என ஆனந்தக் கண்ணீர் வடித்தார். திருமண நிகழ்வு இன்னும் மீதி இருக்கு, அதனை மற்றொரு அத்தியாயமாகத் தருகிறேன். நிலவு பௌர்ணமியை நோக்கி.

Wednesday, 25 May 2022

யார் இந்த நிலவு-58

 யார் இந்த நிலவு-58

ஆயி துல்ஜா பவானி, பைரவிபாயின் முழுமுதல் கடவுள். கைலாஷ் ராஜன் தான் அவரது வாழ்க்கைத் துணை எனத் தன் சன்னதியிலேயே, அவருக்கு உணர்த்தி வரமாக அவரையே மணாளனாகத் தந்தவரும் கூட, இத்தனை வருடப் பிரிவு போதும் கூட அம்பிகையைக் குறை சொல்லாமல், தன விதியை தான் நொந்து கொள்வார். உலகின் தலை சிறந்த ஜோடிகள் என வணங்கப் பெற்ற கடவுள் அவதாரங்களும், புகழப் பெற்ற காதல் ஜோடிகளும் வாழ்க்கையெனும் உரைகல்லில் தோய்ந்த பின் தான், அந்தப் பெயரைப் பெற்றனர். அதே வரிசையில் நம் கைலாஷ், பாருவையும் சேர்த்துக் கொள்ளலாம். அத்தனை சோதனைகள் பிரிவுக்கும் பின்னும் இன்னும் மாறாத காதலோடு இருக்கிறார்களே.

இதோ மாலை நேர ஆயி பவானி ஆராத்தியை முடித்து விட்டு, கலாச்சாரச் சங்கமமாக நடக்கும் அவர்களின் வித்தியாசமான மணவிழாவுக்கெனச் சடங்குகள், சாங்கியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சற்று முன் தான், சௌந்தரியின் விருப்பத்தின் பேரில் ,அவர்கள் மரபுப் படி, அவர்கள் இணத்துப் பெரியவர்களை வைத்து பந்தற்கால் ஊன்றுதல் , பிறைமண் எடுத்தல், பேய்க்கரும்பு நட்டல், எனும் மூன்று முறைகளையும் செய்து முடித்திருந்தனர்.

திருமணம் நடக்கும் மேடையை, முற்காலத்தில், குலதெய்வ கோவிலுக்குச் சென்று, புற்று மண் எடுத்து வந்து மங்கலன் மூலம் கல் நீக்கி சதுர வடிவ மேடையை, அருமைக்காரப் பெரியவர் சொற்படி அமைப்பார்களாம், இதைப் பிறைமண் எடுத்தல் என்றும், அதில் பந்தற்கால் ஊன்றும் போது, ஆல் ,அரசு, பால் மரங்களில் ஏதேனும் ஒன்றியிலிருந்து மூன்று கிளையுள்ள முக்கவர் குச்சியை வெட்டி, அதைச் சீவி, மஞ்சள் தடவி அரச இல்லை சேர்த்து வைத்திருப்பர், அதில் தான், நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து, அதில் கட்டி விடுவார். 

அதே போல், அடிக்கக் கரும்பைச் சேர்த்து நடும் பழக்கமும் முன்னாளிலிருந்துள்ளது. அதனைக் கொங்கு மலைகளில் அதியமான் மூலம், முதன் முதலாகப் பயிராக்கப் பட்டதாகவும், அதற்குக் கவுரவம் தந்தே அடிக் கரும்பை நடுவார்களாம். கரும்பும், கணுவிலிருந்தே வளரும் வான் பயிர், வாழை மரம் போலவே இதற்கும் சிறப்பு உண்டு. அதற்குப் பதிலாகத் தான் இந்தக் காலத்தில் வட்ட கருப்பட்டியை பயன் படுத்துகிறார்களோ என விஜயன் துணை மாப்பிள்ளையாக அமர்ந்து சந்தேகமும் கேட்டுக் கொண்டிருந்தார்.

"ஒவ்வொரு சாங்கியத்துக்கும் பின்னாடி பெரிய காரணம் இருக்குதுங்க" என அந்தப் பெரியவரும், படைகாலம் வைத்தல் என , திருமணத்தை வெற்றிலைபாக்குடன் நிச்சயித்த காலத்திலிருந்தே, திருமணத்துக்குத் தேவைப்படும் பொருட்கள், அதனைச் செய்து தரும் இனத்தவருக்குத் தாங்கள் செய்யும் மரியாதையம், சீரையும் விளக்கி சொல்ல, ராஜனும் கேட்டுக் கொண்டார்.

புற்று மாரியம்மன்வாசம் செய்யுமிடம், அதில் நாற் சதுர மேடை அமைத்துப் பிரம்மத்தானம் -எனப் பிரம்மநை எழுந்தருளச் செய்து , அதில் ஊன்றும் கரும்பை வான் பயிர், மன்மதன் அடையாளம் என விளக்கம் தந்து அருமைக்காரப் பெரியவர், அந்தச் சாங்கியங்களைச் செய்ய, முதலில் கடமையே எனச் செய்ய வந்த ராஜன், “ஓ, அப்படிங்களா விஷயம்”என அதில் ஆர்வாமானார். நாயகமும், அவர் நண்பர்களும் நடுவயதில் மணமகனாக அமர்ந்திருக்கும் ராஜனை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர். நாயகம் மட்டுமின்றி மற்றவர்களுக்கும் ராஜன்- பவானி திருமணம் மனதில் ஓர் நிறைவை தந்தது.

“ ம்க்கும், உன்ர மகன் ,யார் வீட்டுக் கல்யாணமா இருந்தாலும், சாப்பிட கூட நிற்காத , சாங்கியத்துக்குத் தலையைக் காட்டிட்டு வருவான். இப்ப பாரு, பெரியவரைக் கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு இருக்கறதை “ என நாயகம் மகனைக் குறை பேச,

“அடுத்தடுத்து, மகன், மகளுக்குச் செய்யோனுமில்லைங்க , அதுக்காக அக்கறையா கேட்கிறான்னு , பெருமை படுவீங்களா, அதுக்கும் லொள்ளு பேசுறீங்க, உங்களுக்கு என்ர மகனை பேசாட்டி தின்ன சோறு செமிக்கதாக்கும் ” எனச் சௌந்தரி நொடிக்க,

 "உன்ர மகனா, நீ மட்டும் , தனியா அவனைப் பெத்தியாகும், என்ர பங்கும் இருக்குதில்லை "என நாயகம் மீசையைத் தடவ, யாரும் அறியாமல், கணவனின் கைகளில் கிள்ளிய சௌந்தரி, " நல்ல கிரகம் புடிச்ச மனுஷா, சந்தோசத்தில் பேச்சு விளையிதாக்கும், யார் காதிலையாவது விழுகப் போகுது, ராமு அண்ணன் கேட்டாரு, மானத்தை வாங்கிப் போடுவாரு" எனச் சுற்றி முற்றி தேட,

"தங்கச்சிமா , என்ன தேடுறியாம்மா , நான் இங்க தான் இருக்கேன். நான் இவனைப் பார்த்துக்கறேன், நீ சாங்கியத்தைப் பாரு" என ராமசாமி சொல்லவும், நாயகம் அவரை முறைத்தார். 

"சரிங்கண்ணா " என அவசரமாக நகர்ந்தவர், "அண்ணி வாங்க" என அபரஞ்சியை அழைத்து, பெரியவர் சொல்லச் சொல்ல பந்தற்கால் ஊன்றுவதற்காக , கவிதா, ஆதர்ஷ், ஆதிரா, கஸ்தூரி,ராதாபாய் ஆகியோரை அழைத்தார். நான், நீ எனப் போட்டிப் போட்டு, ராஜனோடு பந்தற்கால் ஊன்ற, பாசக்கார பிள்ளைகளாக மற்ற பிள்ளைகளும் இணைந்தனர்.

அடிக்கரும்பை கையில் வைத்திருந்த ராஜனை, “ஏனுங்க மாமா, கரும்பை வேற பிடிச்சிட்டு நிக்கிறிங்களே, பட்டினத்தாராட்டமா சாமியாராகப் போறிங்களா”என அபிராம் கேட்க, “ஆறு உன்ர மாமன், அது உன்ர அத்தை வரும் முன்ன கேட்டிருந்தினாலும், ஆமான்னு சொல்லியிருப்பான், இப்போ கேளு, அதுக்கு வேற ஒரு வியாக்கியானம் சொல்லுவான்” என விஜயன் வம்பிழுத்தார்.

“அட சொன்னாலும், சொல்லலைனாலும் அது தான் நிஜம் . கரும்பு ரொமென்ஸ் கடவுள் மன்மதன் வச்சிருப்பாரமாம். கண்ணால வாழ்க்கை , இனிக்க இருக்கோணுமில்ல, அருமைக்காரே சொன்னாரு. நான் சொன்னது சரிதானுங்களே “எனப் பெரியவரையும், துணைக்கு அழைக்க, “சரிதானுங்க”என அவர் சிரித்து விட்டுச் சௌந்தரியிடம் அடுத்தடுத்த சடங்குகளுக்கு ஆட்கள் யாரெனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“அதுசரி, ஆனாக்க அது மன்மதன் வச்சிருந்தது, கைலாஷ் இல்லை, அவர், இவரு மேல அம்பு உட்டாருன்னு தான் , கைலாச நாதர் எரிச்சே போட்டாரு”என நாயகம் புராணத்தைச் சொல்ல, “ஆம்பளைக்கு, ஆம்பளை எதுக்குடா அம்பு உடோணும் , அந்த அம்மணி கையில கொடுத்துப் போட்டிருந்தா, எல்லாச் சரியா போயிருக்குமில்ல. இந்த மாப்பிள்ளை , இத்தனை வருஷம் கழிச்சும், என்ர மகளைக் கண்டவுடனே தலை குப்புற விழுந்துட்டாரா என்ன’ என ராமாசாமி உடைசல் விட,

“அதையே குப்பாரி கொட்டி சொல்லி போட்டு வா”என நாயகம் கேலி பேச, ஆதர்ஷ் விளக்கம் கேட்டான். “ தண்டோரா போடறது, மைக் வச்சு ஊருக்கு எல்லாம் அறிவிக்கிறாங்கல்ல கண்ணு, அந்தக் காலத்துல குப்பாரி கொட்டுறதுன்னு சொல்லுவாங்க” எனப் பன்னீர் விளக்கம் தந்தார்.

“அப்படினா, பாபா நாளைக்கு , விழா வச்சு எங்களை அறிமுகப் படுத்துறாரே அதுக்கு அந்தப் பேர் வச்சுக்கலாம்” என ஆதர்ஷ் மண விழாவுக்கு ஓர் பெயர் சூட்டினான். இங்கு ராஜனுக்கு அருமைக்காரர், நிறை நாழி நிறைத்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து, நெல் பரப்பி, தூம தீபம் காட்டி , தெய்வங்களை வணங்கி ,கணு இல்லாத விரலி மஞ்சளில் , மஞ்சள் நூலை கட்டி, கணபதியை வணங்கி திருமணம், சீரும் சிறப்புமாய் நடக்க மணமகனுக்குக் கங்கணம் கட்டினார். அதே போல், பைரவியை வந்து மூத்த சுமங்கலி பெண்கள், அதெற்கெனச் சீர் செய்து கொண்டவர்களை வைத்துக் கங்கணம் கட்டினார். சிறுவயது பிள்ளைகளாக இருந்தால், அதிகாரம் செய்யலாம், இது கைலாஷ்-பைரவிக்கு அறுபதாம் கல்யாணம் போல் தான் , அதனால் தேவையான சடங்குகளை மட்டுமே செய்தனர்.

அடுத்தச் சட்டங்களுக்கு முன், பெண்வீட்டாரின், ஹல்தி சடங்குக்காக நேரத்தை ஒதுக்கித் தந்தார் சௌந்தரி. ரமாபாய் அந்தச் சடங்கை முன்னெடுத்து , தன ஆட்களை வைத்து வேலை வாங்கினார். எப்போதும் இந்தச் சடங்குகளைச் சிரத்தையாகக் கடைப்பிடிக்கும் பைரவி, முதல் நாள் முக்காடு தரித்து, கணவருக்கு முகத்தைக் கூடக் கட்ட மறுத்தவர் , இன்று ஹல்தி எனும் மஞ்சள் பூசும் சடங்குக்காக, சாங்கியமெனச் சற்று நேரம் இருவருக்குமிடையில் மெல்லிய திரைப் போட்டதைத் தாங்க இயலாதவராக ஆட்சேபித்தார்.

ரமாபாய், “ ஆஹா, தாமாத்ஜி தான், இதெல்லாம் சொல்லுவார், இப்போ நீயுமா”என மகளைக் கடியவும், “போங்க ஆயி, இத்தனை வருசமா எதுக்கெல்லாம் பயந்தானோ, அது எல்லாத்தையும், ராஜ் ஒவ்வொண்ணா சரி செய்திட்டார், அவரைப் பார்க்காமல், உங்களைப் பார்க்கத் சொல்றிங்களா” எனப் பதின்ம வயது பெண்ணாக மாறி அவர் சண்டையிட, ஆதிரா, ஆராதனா ,ரஞ்சி என இளையவர் கூட்டமே தங்கள் நானிமாவை பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்க “சுத்தம்”என நொடித்துக் கொண்டே, முதலில் மாப்பிள்ளைக்குச் செய்யும் சடங்கை செய்யச் சென்றார்.

ஆதிரா, "ஆயி, செம அழகா, எனக்குத் தீதி மாதிரி இருக்கிங்க, பாபா பார்த்தா, பிளாட் ஆகிடுவார். "எனவும், வழக்கம் போல் சாரம் நஹி ஆயி , எனக் கேட்காமல், "நிஜமாவா" எனக் கேட்ட ஆயியை , "பாபா ப்ரோமிஸ்" என்றவள் , "சோ க்யூட் ஆயி"எனக் கட்டிக் கொண்டு , அவர் கன்னத்தில் முத்தமிட,

கௌரி மாஷி ,"முலே, என் தீதியை கண்ணு வைக்காதே " எனச் சொல்லவும், பெரிய மனுஷியாக, கண்மையை எடுத்து, ஆயின் காதுக்குப் பின்னால் திருஷ்டி போட்டு வைத்தவள், "இனி பாபா கண்ணு மட்டும் தான் படும், படியா மஸ்து" என ஆயின் அழகை வர்ணிக்கப் பாபாவிடம் சென்றாள். பைரவி முகம் மலர்ந்த புன்னகையோடு கணவர் வந்து அமர்வார் எனத் திரை தாண்டி பார்த்திருக்க, கௌரி, "என் தீதியின் குடும்பத்துக்கு எப்போதும் இந்த மகிழ்வை தா "என ஆயி பவானியை வேண்டிக் கொண்டார்.

மாப்பிளைக்கு மஞ்சளோடு கலந்த சந்தனத்தைப் பூசி, அவர் மேனியிலிருந்து வலித்த மஞ்சளைக் கொண்டே, மணமகளுக்கு மஞ்சள் தடவ வேண்டும், என்ற விதிமுறையின் கீழ், அபரஞ்சி, சௌந்தரி, சாரதா முதல், அவரது தங்கை கவிதாவும், கஸ்தூரியும் முறையைச் செய்ய, ஒதுங்கி நின்று அதிகாரம் மட்டுமே செய்த, சாசுமாவையும் அழைத்து , வற்புறுத்தி அந்தச் சடங்கை செய்ய வைத்தார் கைலாஷ்.

ஆதிரா, " பாபாவுக்கு நானும் பூசுவேன். உலகத்திலேயே, ஆயி பாபாவுக்கு, சடங்கு செய்யும் முல்கி நான் தான்" எனப் பெருமையாகவே மஞ்சளை எடுத்து, தன் அப்பாவின் கன்னத்தில் பூசவர " கொஞ்சமா பூசு கண்ணு, தாடி வளராத போயிடப் போகுது" என அவர் பதறவும்,

" உங்க கன்னத்தில் இருக்கிறதை எடுத்துத் தான், ஆயிக்கு தடவனும். அதுக்காகவாவது வச்சுக்குங்க பாபா, ஆயி அதுக்காகத் தான் ஆசையா காத்திருக்காங்க" என மகள் சலுகையாகச் சொல்ல, "அப்படியா அம்மணி" எனப் பக்கவாட்டில், மெல்லிய திரைக்கு மறுபுறம் அமர்ந்து, அவரையே மையலோடு பார்த்திருந்த பைரவியைக் கேட்க, அவர் ராஜாவின் பார்வை, ராணியின் பக்கம் திரும்பியது என விழியசைக்காது பார்த்தார்.

பாருவின் பார்வையே, கைலாஷின் மனதைத் துளைத்து, இதயமடைந்து உடலில் ஓர் மின்சாரத்தைப் பாய்ச்சியது. இந்தப் பார்வை, தன் பாரு, முழு மனமகிழ்வோடு, தன்னை அவருக்கு ஒப்புக் கொடுக்கும் காதல் பார்வை.

கைலாஷின் உடல் சிலிர்த்து, உணர்வுகள் மேலேழ, "பாபா, மஸ்து, படியா மஸ்து. ஆயி பார்வைக்கே பீஸாகுறீங்களே" என மகள் சலுகையாய் அவர் காதில் துடைத்துவிடுவது போல் மெல்லக் கேலி பேச, " ஆமாங்கண்ணு, உன்ர ஆயி பார்வையே சரியில்லை. ஊரே கூடியிருக்குது. எதனா வில்லங்கமா செஞ்சுப் போட போறா" என அவர் கலவரமாகச் சொல்ல,

ஆதிரா, " பஹூத் படியா. ஆயி டயலாக்கை நீங்க அடிக்கிறீங்க" எனச் சிரித்து எழ, ஆராதனா, ஶ்ரீநிதி, ஶ்ரீமதி "நாங்களும் , மாமாவுக்குப் பூசுறோம்" என உற்சாகமாக வர, " வாங்கடா கண்ணுங்களா, உங்களுக்கு இல்லாத உரிமையா" என்றவர், அபிராமிடம் ரஞ்சியையும் அழைத்து வரச் சொன்னார்.

வரிசையாக அனைவரும் அள்ளி வழங்கிய அறிவுரையிலும், சங்கீதா அங்கு இல்லாததில் நிம்மதியும் பெற்று, மலர்ந்த முகத்தோடே வந்து, ஒற்றைக் கையால் மாமனின் தோளில் தடவ, அவரும் வாஞ்சையாய் கொஞ்சி மகிழ்ந்தார். ஆதர்ஷ் மகிழ்ச்சியோடுபார்த்து நின்றான்.

ஒற்றைப் படை கணக்கில் ஹல்தி வைக்கவும், ரமாபாய், ஆதிராவை அழைத்து, அவள் பாபாவின், கன்னத்தில், கையில் தடவிய மஞ்சளை வலித்து எடுக்கச் சொன்னார். பைரவி என்ன தான் ஆசையோடு கணவரைப் பார்த்திருந்த போதும், ராதாபாய், கௌரி போல், கைலாஷை முறைச் சொல்லி, கேலி பேசி சிரித்தவர்களைப் பார்க்க, சற்றே பொறாமை எட்டித் தான் பார்த்தது. கடைசிச் சடங்கை, மகள் செய்யவும் கொஞ்சம் ஆசுவாசமடைந்தார். கைலாஷ் மனைவியின் மாற்றங்களைக் காணாமல் கண்டு ரசித்துக் கொண்டு தானிருந்தார்.

ரமாபாய், ஆதர்ஷ், அபிராமை அழைத்து, " தாமாத்ஜியை குளிக்கக் கூட்டிட்டு போங்க” எனச் சொல்ல, சாரதா வேகமாக , “அதுக்குச் சாங்கியம் இருக்குதுங்க, நீங்க இருங்க, நாங்க பார்த்துக்குறோம்” என்றவர் ,”ஏனுங்க அக்கா, மங்கலன் எண்ணெயை வைக்கிறது, செஞ்சோறு கழிப்பெல்லாம், இப்போவே செயறதுங்களா , பொண்ணு வீட்டிலிருந்து மங்கலன் அனுப்பவங்களா”என விவரம் கேட்க, அவர் கணவர், சுப்பிரமணி, “அதெல்லாம், பிரம்மச்சாரிகளுக்குச் செய்யறதாக்கும், பேரன், பேத்தி எடுக்கிற வயசில ராஜாவுக்கு எதுக்கு”என்றவர்,

மனைவியின் காதில் ரகசியமாய், " எண்ணை தடவற சாக்குல, பிள்ளை பெத்துகிற தகுதி இருக்கானு பார்ப்பாங்க" எனச் சொல்ல , “அயே, போங்க மாமா, அப்படிப் பார்த்தா நம்மாளுக்குக் கல்யாணம் கட்டுனாங்க “ என வெள்ளந்தியாய் வாயை விட, சுப்பிரமணிக்கு முகம் சிறுத்து அங்கிருந்து அகன்று விட்டார். அபரஞ்சி தான் வேகமாக வந்து, 

“ அண்ணி, உங்களுக்குக் கொஞ்சமாவது ஏதாவது இருக்குதுங்களா, அண்ணன் பொக்குனு போயிட்டார் பாருங்க” எனக் கடியவும், “நான் அந்த அர்த்தத்தில் சொல்லலீங்க அண்ணி, எங்களுக்கு இந்தச் சாங்கியமெல்லாம் செய்யலைன்னு சொல்ல வந்தேனுங்க “ எனக் கணவரை நோக்கிச் செல்ல, 

ராமசாமி , “நான் ஒத்தையோட நிருதினேன்னா, நீ அதுவுமில்லாமல் நிறுத்திகிட்ட, தங்கச்சி வெள்ளந்தியா பேசுது, இதெல்லாம் பெரிசு படுத்தாதப்பா “ என நண்பரைத் தேற்றிக் கொண்டிருந்தார். சாரதா, "மாமா, அப்படியேனாலும் என்ரகிட்ட தானுங்களே குறை" என வருந்தவும், "பேசாத போ" என அடக்கினார் சுப்பு.

மணவறையில் , பைரவிக்குச் சடங்குகள் ஆரம்பித்து இருந்தனர், ஆதர்ஷ், “பாபா, வேற சடங்கு இல்லையாம், நீங்க குளிச்சிட்டு வந்துடுங்க”என ஆத்தா சொன்ன செய்தியைச் சொல்ல, " உன்ர ஆயி மட்டும், எனக்குச் செய்யிற சாங்கியத்தைப் பார்த்தால்ல, நானும் பார்த்துப் போட்டுத் தான் வருவேன்" எனப் பிடிவாதம் பிடிக்க, இளையவர்கள் சிரித்துக் கொண்டனர்.




பைரவிக்கும் பெண்கள் வரிசையாய் ஹல்தி வைக்க, ரைட் ராயலாகப் பார்த்துக் கொண்டிருந்தவர், ஆதர்ஷை அழைத்து, " ரஜ்ஜும்மா எனக்கு வச்சால்ல, நீயும் போய், உன்ர ஆயிக்கு ஹல்தி வச்சுவிட்டு வா கண்ணு" எனச் சத்தமாகச் சொல்ல, ஆதர்ஷ் புன்னகையோடு தயங்கியே நின்றான். பைரவி, “ஆதர்ஷ் பாபா, உள்ள வா” என அழைத்தவர், “என் பாபா இருந்தா, எனக்கு இந்தச் சடங்கை செஞ்சிருப்பாங்க, அவர் ஸ்தானத்தில் நீ செய்” என அழைக்க, “நிச்சயமா ஆயி, இதை விட எனக்கு என்ன பெருமை வேணும், இந்த நாளுக்காக, நீங்க பாபாவோட சேர்ந்து வாழறதை பார்க்காத தானே காத்திருந்தோம்” என உருகியவன், மஞ்சள் எடுத்து தன் ஆயியின் கன்னத்தில் தடவ, “ ஜீத்தே ரஹோ பாபா, நீ அதிரடியா இறங்கலைனாலும், நான் என் பாத்துகிட்டே , தைரியமா வந்திருக்க மாட்டேன்” எனக் கண் கலங்க, அதைக் கேட்டபடி,

“அது தான் தெரியுமே”என ராஜனும் உள்ளே வர, தன வாயால் மாட்டிக் கொண்டோமே, எனப் பைரவி நாக்கை கடிக்க,

“தாமாத்ஜி , புருசனும், பொண்டாட்டியும் ,ஒரு வார்த்தையும் கேட்கக் கூடாதுன்னு இருக்கீங்க, அப்புறம் எதுக்கு இந்தச் சம்பிரதாயம் எல்லாம் செய்யறது”என ரமாபாய் நடுவில் வந்து கேட்க,

“சாஸுமா, உங்க பொண்ணு பேசினதை கேட்டீங்களா, அதுனால தான் வந்தேன்”என அவர் சமாளித்தாலும், கண்கள் மஞ்சள் பூசிய மனைவியின் எழில் முகத்தைத் தான் ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தது.

பைரவியும், தன் ராஜின் சமாளிப்பை ரசித்துப் பார்த்துக் கொண்டு தானிருந்தார், நேற்றைய இரவில் தங்கள் வாழ்வின் வேதனையான ரகசிய பக்கங்களைச் சொன்னது தான். அது முதல், மந்திரக்காரன் போல் இன்று ஒரு நாளில் பைரவியின் அத்தனை மனக்காயங்களுக்கும் சரியான நடவடிக்கைகள் மூலம் தீர்வு கண்டு கொண்டிருந்தார். முதலில் உடன் பிறந்தவளையே தள்ளி வைத்தவர், மகளைக் கடத்திய மஹந்த் போஸ்லேக்கும் பாடம் கற்பித்து, ஜெயத்தையும் ஓட வைத்துக் கொண்டல்லவா இருக்கிறார்.

மையலோடு கொண்டவரைப் பார்த்திருந்த பைரவி, பிற்பகல் வேளையில், அவரது ஒன்று விட்ட சகோதரர்களான போஸ்லேகள் , தொடுத்த வழக்கு, மற்றும் அதனைக் கைலாஷ் எதிர் கொண்ட விதம் ஆகியவற்றை நினைவு கூர்ந்தார்.

கே ஆரின் அலுவலக அறையில் , தன் மதியூக மந்திரி சின்ன மருமகன் பாலாஜி ராவ், தன் வாரிசு ஆதர்ஷ் சகிதமாய் வந்து சேர, ஏற்கனவே கைலாஷ், விஜயன், பைரவி, அபிராம் அங்கே இருந்தனர். மற்ற பெரியவர்கள் ஓய்வெடுக்கட்டும் என அவர்கள் வரை செய்தி சென்றடையாமல் பார்த்துக் கொண்டனர்.

ஆனந்த் ராய் போஸ்லே, கைலாஷ் ராஜன் அழைப்பின் பேரில், தங்கை கணவரைக் கவுரவிக்க, அவர்களது மணவிழாவில் நல்ல முறையில் கலந்து கொள்வார், என எதிர்பார்த்து, சோட்டி ராணி ரமாபாய் நிறையத் திட்டங்களைத் தீட்டி வைத்திருந்தார். தன் மூத்தார் மகள் பவானிபாயும் வருவாள், சோலாப்பூர் மாளிகை, பீபீ மில்ஸ் ஆகியவற்றை , ஜெயத்தை மட்டும் அகற்றி விட்டு மீண்டும் கைப்பற்றிக் கொள்ளலாம் எனக் கனவு கொண்டிருக்க, மச்சினன் மகன் தொடுத்த வழக்கும், அதில் மருமகனைக் குற்றம் சுமத்தியதும் கண்டு வெகுண்டு தான் போனார்.

" ஆயி, பாவு செஞ்சது கொஞ்சம் கூட நல்லா இல்லை, ராஜ் தான், அவர் மகனை, அப்பவே விட்டுட்டாரே. பிரச்சினை நம்மளோட தான, அவர் மேல எதுக்குக் கம்ப்ளைண்ட் கொடுக்கனும்" எனப் பைரவி பொரிந்து தள்ள, ரமாபாய்,

" எனக்கும் எதுவும் புரியலைடி பையு . உன் புருஷனைத் தான் கேட்கனும். தாமாத்ஜி, நிஜமாவே மஹந்தை வெளியே விட்டிங்களா, இல்லையா சொல்லுங்க. நம்ம கஷ்டடில அவன் இல்லையினா, அப்புறம் இருக்கு ஆனந்தராய்க்கு. நான் யாருன்னு காட்டுறேன்" என ரமாபாய் சூளுரைக்கவும்,

" சாஸுமா, நீங்களும் எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க. கொஞ்சம் நேரம் உட்காருங்க. மச்சானுங்க வருவாங்க, பேசி தீர்த்துக்குவோமுங்க" எனக் கைலாஷ் அசால்ட்டாகச் சொல்லவும்,

" யாரு, யாரை வரச் சொல்லியிருக்கீங்க. அவங்களும், அவங்க மகனுங்களும் செய்த வேலைக்கு, நாம தான் அவன் மேல கம்ப்ளைண்ட் கொடுக்கனும்" என ரமாபாய் வேகமாகப் பேசியதில் அவருக்கு மூச்சு வாங்க, " அமைதியா உட்காருங்க" என மாமியாரை ஒரு புறம் அமர்த்தினார் ராஜன்.

அவரது போன் சிணுங்கியது, எடுத்து காதுக்குக் கொடுத்தார், காவல் துறை மேல் மட்டத்திலிருந்து போன் வந்தது. " பெரிய இடம், ஹை ப்ரொபைல் கேஸ், சொந்தங்காரங்க, உங்களுக்குள்ள பேசி முடிச்சுக்குங்க. நான் பெரிய ஆபீஸரோடவே உங்க இன் லாசை அனுப்பி விடுறேன்" என அந்த முனையில் ஆலோசனை தர, கைலாஷ் சிரித்துக் கொண்டவர்,

" என்ர இடத்துக்கு, அவிக போலீஸ் பந்தோபஸ்து இல்லாதையே வரலாம். இருந்தாலும் என்ர மச்சானுங்களுக்கு, என்ர மேல நம்பிக்கையில்லையாட்டத்துக்கு. ஆபீஸர் யாரு " என வினவ அவர்கள் தந்த பதிலில், " அனுப்பி விடுங்க. அந்தத் தம்பிக்கும் பத்திரிக்கை அனுப்பியிருந்தேன், விருந்தாளியாவே வரட்டும்" எனப் பேசி வைத்தார்.

மற்றவர்கள் விசயமறிய ஆவலாகக் கே ஆரை பார்த்திருக்க, " ஏனுங்க அம்மணி, வீர பரம்பரைனு சொல்லிக்கிறீங்க. பொறகு, தங்கச்சி வீட்டுக்கு வர்றதுக்கு , உன்ர அண்ணன்களுக்கு எதுக்குப் போலீஸ் பாதுகாப்பு. அந்த ஐபிஎஸ் ஆபீஸரை பார்க்கவும், நான் பயந்திருவேணாக்கும்" என லொள்ளு பேச,

" ராஜ், விசயத்தைச் சொல்லிட்டு, இந்தக் கேலி பேச்செல்லாம் வச்சுக்குங்க" எனப் பைரவி வார்த்தைகளில் பதட்டத்தைக் காட்ட, மற்றவர்கள் பொறுமையற்று முகத்தில் காட்ட, கைலாஷ் போஸ்லேக்கள் வருகையைச் சொன்னார்.

" அதுக்குனு, யார் மேல கேஸ் போடுறது." எனப் பைரவி கொதிக்கவும்,

ஆதர்ஷ், " ஆயி, கூல். யார்னாலும் வரட்டும் சமாளிச்சுக்கலாம். அப்படிப் பாபா மேல கை வைக்க விட்டுருவோமா" என, கைலாஷை பொருள் படிந்த பார்வை பார்த்து ஆறுதல் சொன்னான்.

“ ஆமாங்க அத்தை, அப்பாவும், மகனுமா, ரிஸ்க் எடுத்து நம்ம வாழ்க்கையில விளையாடுவாங்க நாம கூலா இருப்போமுங்க.”என அபிராம் எரிச்சலாகப் பதில் தர, விஜயன், “அதெல்லாம் உன்ர மாமன், பேக்கப் பிளான் போட்டிருப்பான், நீ டென்ஷனாகாத “என மகனைத் தேற்றினார் விஜயன்.

“ஏன்ரா மாப்பிள்ளை, என்ர மகளுக்காக ஒரு ஜெயிலுக்குக் கூடப் போக மாட்டியா” எனக் கைலாஷ் வம்பிழுக்க, அபிராம் மாமனை ஆட்சேபனையாய் பார்க்க, “ராஜ், சீரியஸா பேசுங்க. பேட்டாஜியையும் இதில எதுக்கு இழுத்து விட்டீங்க” எனப் பைரவி ஆட்சேபித்தார்.

“அவன் தான் அம்மணி, என்னை இதில இழுத்து விட்டான். ரஜ்ஜுமாவை அன்னைக்கு மலைக் கோவிலுக்குக் கூட்டிட்டி போகாத இருந்திருந்தான்னா, இந்தப் பிரச்சனையே இல்லை” என மருமகனைக் குறை சொல்லி, அவன் டென்ஷனை ஏற்றிவிட்டுக் கைலாஷ் வேடிக்கை பார்க்க. “மாமனும் மருமகனுமா, ஜெயிலுக்குப் போயிட்டு வாங்க, அப்பா தான் உங்களுக்குப் புத்தி வரும்” என விஜயன் தன பங்குக்கு வார, “இம்புட்டு தான உங்களுக்கு ஆசை, என்ர ஆரா பேபிம்மாவுக்காக, நான் பழியை ஏத்துக்கிட்டு ஜெயிலுக்குப் போறேன் போங்க” என ஆபிராம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர, “மச்சி கூல்” என ஆதர்ஷ் அவனைச் சமாதானம் செய்தான்.

அரை மணி நேரத்தில், அதி நவீன போலீஸ் வாகனம் முன்னே வர, இரண்டு கார்களில் ஆனந்த், முகுந்த் போஸ்லேக்கள் வந்தனர். கே ஆரின் உத்தரவின் பேரில், எம் டி அறை வரை, மில்ஸ் பாதுகாவலர்கள் அவர்களை அழைத்து வந்தனர்.

அந்த ஐ பி எஸ் ஆபீஸரும், கே ஆரின் வேண்டுகோள் படி , மப்டியில் தான் வந்திருந்தார். ஸ்டைலாக இறங்கி கூலர்ஸை கழட்டியவர், ஒரு சுற்று வட்டப் பார்வையிலேயே, அந்த இடத்தை, மதிப்பிட்டு, " போஸ்லே சாப், வாங்க" என அழைக்க, கைலாஷ் ராஜன், அபிராம், விஜயன் மற்றும் அவரது உதவியாளர்கள் புடை சூழ, முகத்தில் மாறாத புன்னகையோடு முகப்புக்கே வந்துவிட்டார்.

" வாங்க, வாங்க. வாங்கத் தம்பி , தங்கப்பாண்டியன் ஐபிஎஸ், எங்க ஊருக்கு டெபுடேஷன்ல வந்திருக்கீங்கன்னு சொன்னாங்க , விழாவுக்குப் பத்திரிகை அனுப்பி வச்சேன் வந்ததுங்களா." எனக் கே ஆர் வினவவும்,

" எஸ் ஸார். டெபுடேஷன் தான், உங்க பத்திரிக்கையும் வந்தது. ஆனால் நான் பேமலி பங்சன் தவிர மற்ற இடங்களுக்கு ஆன் டூட்டியில மட்டும் தான் வருவேன். நீங்க உங்க ரிலேடிவ்ஸை இன்வைட் பண்ணுங்க. விஷயம் சுமூகமா முடியறது தான், இரண்டு பக்கத்துக்கும் நல்லது" என மிடுக்காகவே நாற்பதைத் தொடும் அந்த அதிகாரி சொல்லவும், ராஜனும் மென்னகையோடு தலையசைத்து,

" என்ர அழைப்பை ஏத்துக்கிட்டு, என்ர மச்சானுங்களையும் , கூப்பிட்டு வந்ததுக்கு ரொம்பச் சந்தோஷமுங்க. நாங்க உறமுறையா வர்றவிககிட்ட பகைமை பாராட்ட மாட்டோம்." என வினயமாகச் சொன்னவர், போஸ்லேக்களை நோக்கி "நீங்க உறமுறையா தான் வருவீங்கன்னு நினைச்சேனுங்க. " எனக் கும்பிட்டபடி நிற்க,

ஆனந்த், முகுந்த் போஸ்லேக்கள் உயர்ரக ஷெர்வானி அணிந்து, மீசையை முறுக்கிக் கொண்டே இறங்கியவர்கள், " நாங்களும், சம்பந்தியா தான் வரனும்னு நினைச்சோம். ஆனால் சூழ்நிலை இப்படிக் கொண்டு வந்து விட்டுடிச்சு. என் மகன் இருக்க இடத்தைச் சொன்னீங்கன்னா, குறைந்த பட்ச தண்டனையோட விசயம் முடியும்" என ஆனந்த் போஸ்லே சொல்ல, இளையவர் முகுந்த் , " பாவு, அவசரப்படாதீங்க." என்றவர், தங்கை கணவரோடு நல்ல விதமாகவே அறிமுகம் ஆனார்.

"பேச வந்துட்டோம், தேவையில்லாத வார்த்தையை விட வேண்டாம். உள்ளே போய்ப் பேசலாம்" எனத் தங்கப் பாண்டியன் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு சொல்ல, கே ஆர் , அதே புன்னகையோடு வழி காட்டியபடி முன்னே நடந்தார்.

அபிராமுக்கு, தன் மாமாவிடம் முகம் திருப்பும் போஸ்லேக்கள் மீதும், உடன் வந்த ஆபீஸர் மீதுமே கோபம் வந்தது. சந்தேக லிஸ்ட்ல வேறு இருக்கிறானே, ஒரு நாள் எனினும் கோர்ட் கேஸ் என அலைய முடியாது, என்ற யோசனையில் அமைதியாக வந்தான்.

ஆலோசனை அறையில், ரமாபாய், பைரவி பாய், ஆதர்ஷை நேருக்கு நேர் சந்தித்த போஸ்லேக்கள் சற்றே ஆடித் தான் போனார்கள். ஆனாலும் பரம்பரை மாறாமல், தங்கள் சிற்றன்னையும், சோட்டி ராணியுமான ரமாபாயின் காலைத் தொட்டு வணங்கியவர்கள், " நமஸ்தே சோட்டி ஆயி. நீங்க தலைமறைவு வாழ்க்கை வாழ்றதை, எங்களுக்காவது தெரியபடுத்தியிருக்கலாம்" என ஆனந்த் போஸ்லே மொழிய,

“நான், உங்க ஆயி கூடப் பிறந்தவளா இருந்திருந்தா தேடியிருப்பிங்க, நான் சாச்சி ராணி தானே “எனக் கூர் அம்புகளைச் செலுத்த, “மறைஞ்சு வாழணும்னு நினைக்கிறவங்களை , எப்படித் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது” என ஆனந்த் பதில் தர,

“என்னைக் கண்டு பிடிக்கவும், இந்தக் கேஸ் போட்டிங்களா என்ன”என ராமாபாய் குதர்க்கமாகவே பதில் கேள்வி எழுப்பினார்.

முகுந்த் போஸ்லே, பைரவிபாயை அணுகி, " கித்தனே பரஸ் ஹோ கயி, சோட்டி" இத்தனை வருடப் பிரிவை , அவர் இறந்து விட்டதாக நினைத்ததை எண்ணி உணர்ச்சி வயப்பட்டுத் தங்கையின் கையைப் பிடிக்க, சம்பிரதாயமாக வணக்கம் மட்டும் சொன்ன பைரவி,

" அதுக்குப் பரிசா தான், என் புருஷன் மேலையே கேஷ் போட்டிருக்கீங்களே பாவு. பவானி தீதி புருஷனெல்லாம் நல்லவனா போயிட்டான். என் ராஜ் தான் உங்களுக்குக் கெட்டவரா போயிட்டாரோ" என மராத்தியிலேயே அவர் சண்டையிட,

" இல்லை பையு, நாங்க மஹந்தை காணோம்னு தான் கேஸ் போட்டோம். அது உங்க வரை கொண்டு வரும்னு நினைக்கலை" எனச் சமாதானம் சொல்ல,

" ஜூட் மத் போலியே பாவு, படே பாவு, ராஜ் பேரில் தெளிவாவே கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காரே" எனப் பாய, கைலாஷ் மனைவியைச் சமாதானப் படுத்தியவர், எல்லாரையுமே அமர வைத்தார்.

ஐபிஎஸ் அதிகாரி, தங்கப்பாண்டியன், இரு தரப்பையுமே அமர வைத்து, "இரண்டு பக்கமுமே பெரிய குடும்பம். ஒரே குடும்பத்தில் இருக்க மாமன் மச்சினன் பிரச்சினை. பையனை, தூக்குறதோ, புள்ளையைத் தூக்கிறதோ, காலம் காலமா நடக்கிறது தான். எங்க ஊர்ல எல்லாம், பஞ்சாயத்திலேயே பேசி முடிச்சிடுவோம். ஆனால் இது இரண்டு வேறு பட்ட குடும்பம், மில்ஸ், மொழி, ஸ்டேட்டுனு பெரிய பிரச்சனையா மாறுது. இதில் பாதிப்படைய போறது, உங்க குடும்பங்கள். உங்க மில்ஸ் ஷேர்ஷும் தான். தயவு செய்து பேசி முடிச்சுக்குங்க. " என்றவர்,

" கே ஆர் ஸார், உங்க ஒத்துழைப்பு எங்களுக்கு ரொம்ப அவசியம். மஹந்த் போஸ்லேயை உங்களோடா தான் கடைசியா பார்த்ததா சொல்றாங்க" எனக் கைலாஷின் பதிலை எதிர் நோக்கி கேள்வியைத் தொடுத்தார்.

" ஒன்றை மாசம் முன்னை, என்ர சம்சாரம் முடியாத இருக்கையில, பீபீ மில்ஸ் விசயமா பேசணோம்னு வந்தாப்ளை. அது தான் நான் அவரைப் பார்த்தது. அப்பலைய புடிச்சேவா காணலை" எனக் கைலாஷ் வினயமாகவே கேட்டார்.

ஆனந்த் போஸ்லே, " நோ, இப்ப பத்து நாளா தான் காணோம். கோவைக்கு ப்ளைட் ல வந்து இறங்கின தகவல் இருக்கு. கடைசியா பழைய மில்ஸ்ல கே ஆரை பார்த்ததா தகவல். இவரும், இவர் ப்ரெண்டோட பையனுமா ஏதோ செய்திருக்காங்க" என ஆனந்த் குற்றம் சாட்ட, கைலாஷ் அமைதியாக இருந்தார்.

" சாட்சி இருக்குதுங்களா" எனப் பாலாஜி ராவ் கேள்வி எழுப்ப, அவர்கள் ஓர் பதில் சொல்ல, ஆளாளுக்குப் பேச, தங்கப்பாண்டியன் பஞ்சாயத்துச் செய்ய எனப் பிரச்சினை தீர்வை எட்டப்படாமலே சென்று கொண்டிருந்தது.

ஆதர்ஷ், " நீங்க சொல்றது தப்பு, உங்க மகன் வேற எங்கையாவது இருந்தார்னா, நாங்க மான நஷ்ட வழக்குப் போடுவோம் " என மிரட்டினான்.

" போதும் பாவு , இத்தனை வருஷமா, அந்த ராட்சசன் மட்டும் தான், என்னைக் குறி வச்சிருக்கான். என் குடும்பத்தை அழிக்கத் துடிக்கிறான்னு நினைச்சிருந்தேன். அவன் அழிக்கட்டும்னு நீங்க வேடிக்கை பார்த்து இருந்திருக்கீங்க. ஆயி உங்களைக் குறை சொல்லும் போது கூட, நான் உங்களை நல்ல விதமா தான் நினைச்சிருந்தேன். என் புருஷன், பிள்ளைகளோட என் பங்கைக் கேட்க வந்துடுவேன்னு, உங்க முல்காவை மறைச்சு வச்சுக்கிட்டு நாடகமாடுறீங்கன்னு நான் சொல்றேன். ராஜ் மேல நீங்க பழி சுமத்தினா, என்னையும் என் மகளையும் கொல்ல திட்டம் போட்டிங்கன்னு நான் கம்ளைண்ட் பண்ணுவேன்" எனப் பைரவி ஆக்ரோஷமாகப் பேசவும்,

" பாரு, இவ்வளவு எமோஷனல் ஆகாத அம்மணி. உன்ர உடம்புக்கு நல்லதில்ல. அவிக சொல்றது எதுக்குமே ஆதாரம் கிடையாது. அதனால தான், ஐ பி எஸ் ஆபீஸரோட வந்து பேரம் பேசுறாங்க. ஸ்ட்ராங் எவிடென்ஸ் இருந்தா, அவிக ஆக்சனே வேற மாதிரி தான் இருக்கும்" எனக் கே ஆர் தங்கப் பாண்டியனையும், போஸ்லேக்களையும் பார்த்துக் கொண்டே சொல்லவும், சற்றே நகைத்த பாண்டியன்,

" ஓகே ஸார். நானும் இவ்வளவு நேரம் பொம்பளை புள்ளை விசயம் வெளியே வரவேண்டாமேன்னு அமைதியா இருந்தேன். வேற வழியில்லை, உங்க மகளை வரச் சொல்லுங்க. நான் விசாரிக்கனும்" எனவும்.

" யார் இடத்தில வந்து யாரை விசாரிக்கிறது. என்ர மகள் மேல எவன் பார்வையும் படக் கூடாது. கேக்கிறதுக்கு ஆள் இல்லைனு, இத்தனை வருஷம் அலைய விட்டுருக்கானுங்க. இனி என்ர மகளுக்கு அப்பன் நானிருக்கேன். என்ர மகள் மேல தப்பான பார்வை பட்டாலும், அது எவனா இருந்தாலும் தேடினாலும் கிடைக்காத இடத்துக்குப் போயிடுவானுங்க" எனக் கைலாஷ் , ருத்திர ஆட்டத்தைக் காட்ட, பாண்டியனைத் தவிர மற்ற எல்லாருக்குமே சற்று அச்சமாகத் தான் இருந்தது.

அப்படியும் விடாக் கொண்டானாகா பேசிய தங்கப் பாண்டியன், "ஸார், நானும் அக்கா தங்கச்சியோட பிறந்தவன் தான். என் தங்கச்சியைத் தூக்கினதுக்காக, சொந்தக்காரப் பையனையே வெளுத்தவங்க தான். பையனோட லட்சணம் என்னன்னு, அவரைப் பெத்தவங்களும் தெரிஞ்சுக்கட்டும். இனிமேலாவது, ஒரு பொண்ணைத் தூக்கினாலே, அவள் தனக்கு அடிமைங்கிற ஆணாதிக்கச் சமூகம் ஒழியட்டும். " என நீளமாகப் பேச, அப்போதும் கே ஆர் அசைந்தாரில்லை.

ஆனால், விசாரணையில் ஓர் திருப்பமாக, இந்த விசயத்தைக் கேள்விப் பட்டு, தன் பாபாவையும், ராமையும் கைது செய்வார்கள் எனப் பயந்து ஆதிரா ஓடி வந்தாள். " கே ஆர் ஸார், அந்தப் பையனை மட்டும் பெத்தவங்ககிட்ட ஒப்படைச்சிடுங்க. உங்க மேல எந்த ஆக்சனும் எடுக்காமல், உங்க பொண்ணு விசயமும் வெளியே வராமல் நான் பார்த்துக்குறேன்" எனத் தங்கப் பாண்டியன் பேரத்தில் இறங்க.

கைலாஷ் நகைத்தவர், " க்ளவர் மூவ் ஆபீஸர். ஆனால் அவன் என்கிட்ட இல்லை" எனக் கூலாகப் பதில் சொல்ல,

ஆனந்த் போஸ்லே, " இன்னும் எதுக்கு ஆபீஸர் வெயிட் பண்றீங்க. அவரை அரஸ்ட் பண்ணுங்க. ஹெட் லைன் நியூஸ் ஆனாலும் பரவாயில்லை" எனச் சொல்லவும்.

" கே ஆரை அரஸ்ட் பண்றது, அவ்வளவு சுலபமில்லை போஸ்லே சார் , ஆனால் அவர் மருமகனை அரஸ்ட் பண்ணலாம். மிஸ்டர். அபிராம் போகலாமா. லவ் பண்ணப் பொண்ணுக்காக, போலீஸ் ஆபீஸ் வரைக்கும் வந்துட்டு வரலாமே" எனத் தங்கப் பாண்டியன் வேண்டு மென்றே கேட்கவும், மற்றவர்கள் " முடிஞ்சா செய்" எனத் தெனாவெட்டாகப் பார்த்திருக்க. " நோ" எனக் கத்திக் கொண்டு வந்த ஆதிரா, அபிராமையும், தன பாபாவையும் மறைத்தபடி நின்று தங்கப் பாண்டியன் சொன்ன அத்தனையும் உண்மை என உளறிக் கொட்டினாள்.

" பாய் சாப், என்னை ஒருத்தன் மயக்க மருந்து கொடுத்து வலுக்கட்டாயமா கடத்திட்டு போய், தாலிகட்டப் பார்த்தான். அவன் நல்லவன், அவன்கிட்ட இருந்து, என்னைக் காப்பாற்றின என் ராம் கெட்டவரோ. நோ. நான் விடமாட்டேன். " என அபிராமை நெருங்க விடாமல் குறுக்கே நிற்க, தங்கப் பாண்டியன் ,' இப்போ என்ன சொல்றீங்க' என்பது போல் கே ஆரைப் பார்த்தார்.

" சுத்தம்" என நகைத்தவர், " ரஜ்ஜும்மா, அப்படியெல்லாம் , என்ர மருமகனைக் கைது பண்ண விடமாட்டேன், இங்க வா" என மகளைக் கை வளைவில் அணைத்துக் கொண்டவர், ஆதர்ஷிடம், " அவிக மகன், எங்கன்னு காட்டு கண்ணு. " என்றார்.பதட்டமாக வந்த தங்கை மகளையே பார்த்திருந்த போஸ்லேக்களுக்கு, அன்று பைரவியும் இப்படித் தான் இருந்திருப்பார் ,என ஒரு நொடி தோன்றினாலும், “மஹந்த், தன் அத்தை மகளை மணக்கத் தானே கேட்டான்” என மற்றொரு நியாயத்தையும் பேசியது.

கைலாஷ் மச்சினன்களிடம் திரும்பி, " நீங்க நல்லவன்னு கொடி பிடிச்சு, இரண்டு சம்பந்தம் பண்ணிங்கல்ல, அந்த அரக்கன் பார்த்த வேலை தான் இதுவும். உங்க மகனை நான் கஷ்டடி எடுத்து வச்சது நெசந்தான். என்ர மகளைத் தூக்கினான்னு, அவன் மேல கொலை வெறி வந்ததுங்க. ஆனால் நீங்க வளர்த்த விதம், அவிகளைச் சொல்லி என்ன செய்யறதுன்னு விட்டுப் போட்டேன். அன்னைக்கு ரசாபாசமானதில், உங்க மகன் கண்ணுல மண்டபத்தில் தட்டில் வச்சிருந்த குங்குமம் கவிந்திடுச்சு. கண் ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்த்தேனுங்க.

ஆனா பாருங்க. உங்க பெரிய தாமாதஜிக்கு, நீங்க எங்க உங்க சின்னத் தங்கச்சியோடவும் சம்மந்தம் செஞ்சுக்கிட்டு, பெரிய மச்சானைக் கழட்டி விட்டுருவீங்களோன்னு பயம். கையோட வைப்பாட்டி மகனை அனுப்பி விட்டார். பீமான்னு ஒருத்தன்,

நேத்திக்கு, என்ர கிட்டயிருந்து தப்பிச்சு ஓடினவன், உங்க மகனையும் கூட்டிக்கிட்டு போயிட்டானுங்க. அவனும் உங்க ஆளு தான பத்திரமா கொண்டு வந்து சேர்த்திடுவான்னு நினைச்சேன். இன்னும் கொண்டு வந்து சேர்க்கலைங்களா" என வினவியவர், ஆதர்ஷிடம் அவர் சொன்னதற்கான ஆதாரங்களைக் காட்டச் சொன்னார்.

மஹந்துக்கு அளிக்கப்பட்ட சிகைச்சைக்கான நகரின் பெரிய மருத்துவமனையின் அறையில் எடுக்கப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள், சிகிச்சை விவரமும் மருத்துவர் கையொப்பத்தோடு இருந்தது. அதன் பின் பீமன், மஹந்தை யாருக்கும் தெரியாமல் அழைத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தது.

" இதெல்லாம் ஏன் ஸார் முதவே காட்டலை" என ஆபீஸர் கேள்வி எழுப்ப.

" என்ர பொண்டாட்டிச் சொன்ன காரணம் தான், இவிக, அவங்க மகனை மறைச்சு வச்சிட்டு பொய் கேஸ் போடுறாங்கன்னு நினைச்சேன்" என முகத்தைச் சீரியஸாக வைத்துக் கொண்டு சொல்லவும், சுற்றி இருந்தவர்களுக்கு, ' என்னா நடிப்புடா சாமி' என்றே தோன்றியது.

ஆனந்த் போஸ்லே, " தாமாத்ஜி, நான் கேஸ் போட்டது தப்பு தான். மஹந்த் உங்க பொண்ணைத் தூக்கினதும் எனக்குத் தெரியாது. நான் கண்டிச்சு வைக்கிறேன். தயவு செய்து, அவன் எங்கேனு மட்டும் சொல்லிடுங்க" எனக் கெஞ்சவும்.

" நிஜமா , என்னை நம்புங்க. உங்க தங்கச்சி, அண்ணன் மகனை வெளியே விடுங்கன்னு ஒரு வார்த்தை சொன்னாளுங்க, விட்டுப் போட்டேன். உங்க மகனுங்க சோலாப்பூர் ல தானுங்களே இருக்காங்க, ஜெயந்தை கண்காணிக்கச் சொல்லுங்க. நேத்து எனக்குப் போன் போட்டு, போஸ்லேக்களோட நெருங்கப் பார்க்கிறாயா. அது எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்னு மிரட்டினாருங்க. பீமன் எங்க இருக்கானோ, உங்க மகனும், அங்க தான் இருக்கோணும்" எனத் தன் யூகத்தைச் சொல்லி, கைலாஷ் குழப்பி விட, ஆளுக்கு ஒரு போனை பிடித்துச் சோலாப்பூருக்கு தொடர்பு கொண்டனர்.

அதே நேரம் சரியாக உள்ளே நுழைந்த, டிடெக்டிவ் ஏஜெண்ட் ரஞ்சன், தங்கப் பாண்டியனிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, " கே ஆர். ஸார் சொல்றது உண்மை தான் ஸார். எங்க டீம் இன்வஸ்டிகேட் செய்தது. " என ஒரு வீடியோவை ஓட விட்டார்.

போஸ்லே மாளிகையின் வேலையாட்கள் குவாட்டர்ஸில் ஜெயந்தை, பீமன் கைத் தாங்களாக அழைத்து வந்து, மயக்க நிலையிலிருந்த மஹந்தை காட்ட, " இவன் அப்பன், ஹேபியஸ் போட்டிருக்கான். அந்தக் கைலாஷ் மாட்டனும். இவனை மறைச்சு வை. இரண்டு பேரும் அடிச்சிட்டு சாகட்டும்" எனச் சொல்வது பதிவிடப் பட்டிருந்தது.

போஸ்லேக்கள், அதிர்ச்சியோடு பார்த்து, "இது எப்போ " என ரஞ்சனை வினவ, "பத்து நிமிஷம் முன்னாடி. " எனப் பதில் தர, ஆனந்த், முகுந்த் இருவரும் தங்கள் மூத்த மகன்களுக்குப் போனடிக்க, தங்கப்பாண்டியன் சோலாப்பூர் போலீஸுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு மணி நேரம் டென்ஷனாகக் கழிய, ரஞ்சன் சொன்னது போலவே, மஹந்தை சோலாப்பூர் போஸ்லே மாளிகையிலிருந்தே மீட்டனர்.

ஆனந்த், போஸ்லே கே ஆரிடமும், பைரவியிடமும், ரமாபாயிடமும் மன்னிப்பு கேட்டுக் கிளம்ப, முகுந் தங்கை வீட்டு விசேசத்தை முடித்து வருவதாக அங்கேயே தங்கினார்.

தங்கப் பாண்டியன், அங்கிருந்தபடியே, சோலாப்பூர் போலீஸை ஆட்டிப் படைத்து, மஹந்தை மீட்டு, அவன் அண்ணன்களிடம் ஒப்படைக்கச் செய்தவன். அதனை வீடியோ பதிவாக, ஆவணமாக்கி அனுப்பச் சொல்லி விட்டு, ஜெயந்தையும், பீமனையும் விசாரணைக்குக் கைது செய்து, ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்ல ஆணையிட்டு விட்டு, ஆனந்த் போஸ்லேவை, சில ஃபார்மாலிட்டிசை முடிக்க வேண்டும், என வரச் சொன்னார்.

கே ஆரிடம் வந்து, " நீங்க சொன்னதை எல்லாம் ஸ்டேட்மெண்ட் ரெடி பண்ணி, அனுப்புறேன் சார், கையெழுத்துப் போட்டு அனுப்புங்க" என்றவர், விடை பெறும் முன்,

" தி க்ரேட் பிஸ்னஸ் டைக்கூன், கே ஆர் மில்ஸ் ஓனர், உங்களைப் பற்றி இப்படியெல்லாம் கேள்விப் பட்டதை விட, யூ பி எஸ்சி பாஸ் பண்ண வசதியில்லாத பொண்ணுங்க , எங்க வெற்றிக்குக் காரணம், எங்க அப்பா, எங்க சேர்மன் சார், கே ஆர் மில்ஸ் ஓனர், கைலாஷ் ராஜன் கொடுத்த ஆதரவுதான்னு சொன்னது மனசை தொட்டுச்சு சார். ரியலி ஐ இம்ப்ரஸ்டு. ஐ சல்யூட் யு சார். அவர்களுடைய வாழ்த்து தான், இத்தனை வருஷம் கழிச்சு,உங்கள் மனைவி மக்கள் கிடைச்சிருக்காங்க. இனி உங்கள் வாழ்க்கை இனிமையாய் அமையட்டும் . வாழ்த்துக்கள் சார். " எனக் கை நீட்ட, அதே புன்னகை முகத்தோடு,

" ஒரு சின்சியரான போலீஸ் ஆபீசரை சந்திச்சதில எனக்கும் சந்தோஷம்" என வழி அனுப்பினார் கே ஆர்.

முகுந்த் போஸ்லே, தன அண்ணனுடன் சென்று, பார்மாலிட்டிகளை முடித்துக் கொண்டு தான் வருவதாகவும், அண்ணன் உறவு முறையோடு கைலாஷ்-பைரவி உறவு முறையோடு அதில் கலந்து கொள்ள விரும்புவதாகவும் சொல்ல, “உறமுறையா எப்பவேணாலும் வரலாங்க “எனக் கே ஆர் மனம் திறந்து வரவேற்க,

முகுந்த், சோட்டி ஆயியிடம் சென்றவர், “உங்க மனசுக்கு பிடிச்ச டீலிங்கோட வர்றேன் ஆயி, நாளைக்குப் பேசுவோம்” என ஆதர்ஷை பார்த்து அர்த்தத்தோடு புன்னகைக்க, ஆதிரா அண்ணனை விவரம் கேட்டாள்.

“ இவர் தான் பொண்ணு வச்சிருக்கார், லண்டன் ரிட்டர்ன், ஆலியா பட் மாதிரி இருப்பா “எனக் கண் சிமிட்ட, அவள் வாயைப் போற்றி அதிர்ச்சியை வெளிப்படுத்த, அபிராம் அவனை முறைத்தபடி கடந்தான்.

ஆதிரா, ஆதர்ஷ் வாழ்க்கையில், முகுந்த் போஸ்லேயின் வருகை என்ன மாற்றத்திற்கு வித்திடும், பொறுத்திருந்து பார்ப்போம்.