யார் இந்த நிலவு-59-பார்ட்-1
அபிராம், ஆதிராவை கண்ட நாள் முதலாய் யாரிந்த நிலவு எனத் தேடி, பெங்களூரின் வீதிகளில் சுற்றி, அவளுக்காகத் தவித்திருந்தவன், ஒரு நாள் தவிப்பென்றாலும் அது சொல்லில் வடிக்க இயலாதது. அதன் பின் தங்களிடத்திலேயே அவள் அடைக்கலமாய் வர, ஆவலுடன், அவளைக் காண வந்தவனை, அவளோடு பழகாதே என மாமனே தடை போட, மனம் நொந்தான். சத்தியாகிரகம் செய்து மாமன் மனதை மாற்றியவனுக்கு, அந்த நிலவு அவன் மாமன் மகளெனத் தெரிந்த வேளையில் உலகை வென்ற மகிழ்ச்சி. அவளிடம் தன் மனதைப் பகிர்ந்து, அவள் மனதிலும் தான் தானென அறிந்த கணம், அவளை மனதில் அள்ளிக் கொண்டான். வரிசையாய் மற்றவர் பிரச்சனைகள் இவர்களை வளம் வந்தது. காதல் விஷயம் பெரியவர்கள் ஒப்புதல் பெற்ற பின்னும் இன்னும் அரேங்கேறாமல் காத்து நின்றது. அபிராமுக்கு, தான் ஆதிராவை விரும்பும் அளவு , அவள் தன்னை நேசிக்கவில்லையோ என்ற குறை, மனதோரத்தில் எப்போதுமிருந்தது.
ஆனால் , முன் மாலையில் போலிஷ், அவனைக் கைது செய்து விடுமோ, எனப் பயந்து , அந்த ஆபீசரிடமும், போஸ்லே குடும்பத்தின் முன்னும், தன மனதைத் திறந்து , அவனுக்காக வாதாடிய நொடி முதல், அவன் தயக்கமெல்லாம் தீர்ந்து, அவளை அள்ளி அணைக்கத் தக்க சமயம் பார்த்திருந்தான். வரிசையாகச் சடங்குகள் நடந்தேற, ஆதிரா மும்முரமாகவே திரிந்தாள்.
இரவு உணவுக்கென, சாப்பிட்டு கூடத்துக்குத் தோழிகளோடு வந்தவளை, சமயம் பார்த்து, ஓர் திரை மறைவுக்குக் கடத்தி சென்றான் அபிராம்.
“ராம், என்ன செய்றீங்க, அடுத்தடுத்து, ரிதுல்ஸ் இருக்கு, நான் சீக்கிரம் போகணும்” என அவள் பேசிக் கொண்டே போக, கதவை அடைத்து, சட்டென அவளைத் தழுவிக் கொண்டவன், “ஐ லவ் யூ டி, ஆரா பேபி” என என்றும் காட்டாத தீவிரத்தை அணைப்பில் காட்டி, அவளைத் தன்னோடே இறுக்கிக் கொள்ள, முதலில் திகைத்த ஆதிரா, அவன் உணர்வை மதித்து, “ திடிர்னு இன்னைக்கு என்ன வந்துச்சாம், நேத்து நயிட் கூட வேண்டா வெறுப்பா பேசினீங்க” எனச் சலுகையாய் அவள் குறை பட்டாள்.செவி அருகில் கேட்ட அவள் குரலிலிருந்த சோகம், அவன் இதயம் வரை சென்று ஊடுருவியது.
“அது அப்படித்தான், என்ர காதலி, முறைப் பொண்ணு, மாமன் மகளுக்கிட்ட, எனக்கு உரிமை இல்லையாகும். ஆசையோ கோபமோ உன்ரகிட்ட காட்டாத , யார் கிட்டக் காட்டுவேனாம் ” என அணைப்பை விடாது, அவளோடு இழைந்து, அவள் கழுத்து வளைவில் முகம் பதித்திருந்தவன் , அவள் காதில் மொழிய, அவன் மீசை தொட்ட இடங்கள், குறுகுறுத்து ,சிலிர்ப்பை தந்து அவள் உணர்வையும் தூண்டின. ஆனாலும், சட்டென உணர்ச்சி வசப்படுபவனை, எல்லை மீறும் அவன் உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்க நினைத்தவளாக, “ஹோ ஜி,அப்படியா, மஸ்த், படியா மஸ்த், நானும் காட்டுறேன்” அவன் காதை நறுக்கெனக் கடிக்க,
“அடியே மறை கழண்டவாள நீயி, என்ர மாமன் , எத்தனை ரொமேன்டிக்கான ஆளு, அவர் மகளா இருந்து போட்டு, ரசனை கெட்டவளா இருக்கியே பாவி, வலிக்குதுடி” எனக் காதை தேய்த்துக் கொண்டே அவன் உணர்வுகள் வடிந்தவனாகப் புலம்ப, “அப்ப உங்க மாமாவையே கட்டிக்குங்க, நான் போறேன்” என அவள் கதவைத் திறக்கப் போக, அவளை இழுத்து மீண்டும் சிறை வைத்தவன், “ராச குடும்பமே, விவகாரம் தான், யாரையிடா கிறுக்காக்கலாம்னு பார்க்கிறது” என அவள் முகம் நோக்கி அவன் குற்றம் சொல்ல, அவள் முறைக்கவும், “எவ்வளவு, ஆசையா வந்தேன் மூடையே மாத்துறியே பேபி ” என வருந்தினான்.
" நாங்க கிறுக்கு ஆக்ககுறோமா, உங்க தங்கச்சி தான், தனக்கு என்ன வேணும்னே தெரியாத, யாரோ எதோ சொன்னாங்கன்னு , கையைச் சுட்டுகிட்டு, பாவு கூடச் சண்டை போடுறா, நான் எவ்வளவு கவலை பட்டு போன் போட்டேன், நேத்து அப்டி கத்துனீங்க. இப்போ வந்து கட்டிக்கிறீங்க. இப்போ சொல்லுங்க, யாரு, யாரை கிறுக்கு ஆகுறது " என அவன் முகத்துக்கு நேரெதிர் கனல் விழி தெறிக்கப் பேசியவளை , ரசனையோடு பார்த்தவன், "யாரோ கிறுக்கா இருந்துட்டு போறாங்க பேபி, நாம எதுக்குச் சண்டை போடணும் " என அவள் முகத்தில் விழுந்த கற்றை முடியை ஒதுக்கிவிட்டபடி அவன் நெருக்க, " ஆஹா, இப்போ சொல்லுங்க, போலிஷ் அரெஸ்ட் பண்ணும்னு அப்படிப் பயந்திங்களாம். பாவு சொல்லி சொல்லி சிரிக்கிறார்." என அவள் பொரிந்து தள்ள, "உன்னை விட்டுப் போட்டு , ஜெயில்ல போய் உட்கார்ந்து என்ன பேபி செய்யறது. அதுக்குத்தான் " எனக் குழைந்தவன், தொலைந்த உணர்வை மீட்டு , உல்லாசமாய் அவளை நோக்கி முன்னேற, ஆதிரா ,அவன் நெஞ்சில் கையை வைத்து தடுத்து, தங்களுக்குளான இடைவெளியை அதிகப் படுத்தினாள். அதில் கோபமுற்றவன் “ஏன் , அதுக்குள்ள என்னைப் பிடிக்காத போயிடுச்சாக்கும்’ என வார்த்தையை விட,
அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தவள், அவன் கண்களை நேராக நோக்கி, “ நான் கைலாஷ்-பைரவி மகள், ஒருத்தனை மனசில நினைச்சா, நினைச்சது தான். சும்மா அடுத்தவங்க பிரச்சினை எல்லாம் நமக்கு இடையில கொண்டு வரக் கூடாது. அப்படிக் கொண்டு வந்தீங்க” என அவள் மிரட்ட, “என்னடி செய்வ, உங்க அண்ணென்கிட்ட சொல்லுவியா, இல்லை அப்பாகிட்ட சொல்லுவியா”என, தன வசமிருந்த அவள் இடையை நெறிக்க,
“ஓஹ் , மச்சி, நான் மராட்டா வீர பரம்பரையில் வந்தவ, இதுக்கெல்லாம் கண்ணைக் கசக்கிட்டு எங்க வீட்டில போய் நிற்க மாட்டேன், கொரில்லா அட்டாக் தான், அன் எக்ஸ்பெக்ட்ட மூவ் “ என நொடியில் கோப முகத்தை மாற்றி கண் சிமிட்டியவள், அவனை மையலாகப் பார்த்து, ஓர் புன்னகையோடு அவன் அசந்த நேரம், ஆழ்ந்த இதழொற்றலையும் தந்து , அவன் மயங்கி நிற்கையிலேயே அவனை விடுத்து சிட்டாகப் பறந்தாள் .
அபிராமுக்கு நடந்ததை உள்வாங்கவே சில நிமிடம் பிடித்தது. “கொரில்லா அட்டாககா, எனக்கு ஹார்ட் அட்டாக் வரவழைச்சுடுவாலாட்டத்துக்கே , அயோ சாமி ,மாமனை விட நாலு பங்கு இருக்கா. அம்மாடியோவ், இவளை , கல்யாணமும் கட்டாத ,ஒரு வருஷம், பக்கத்திலையே வச்சுக்கிட்டு, அபிக்கண்ணு , உன்ர நிலைமை கஷ்டம் தாண்டா’ எனத் தன்னைப் போல் புலம்பிக் கொண்டவன், இரவு உணவையும் மறந்து ரசகுல்லா சாப்பிட்ட இனிமையோடு மந்திரித்து விட்டவனைப் போல் மணவறையை நோக்கி நடந்தான்.
வழக்கமாக நடக்கும் திருமணம் என்றால், இளைஞர் பட்டாளம், மேடையில் செய்யும் சாங்கியங்கள், பெரியவர்களுக்கானது என ஒதுக்கி, தங்கள் நடை உடையில் கவனம் செலுத்தி, செல்பி எடுத்துக் கதைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், இது ஒரு அப்பா, அம்மாவின் திருமணம், குறிப்பிட்ட சில நூறு மக்களுக்கு , நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு, கலாச்சாரச் சங்கமத் திருமணம், எனப் பலவித வித்தியாசங்களை உள்ளடக்கி இருந்த, கைலாஷ்- பாரு திருமணத்தில், பிள்ளைகள் தான் முன்னின்று ஆவலாக நடத்தினர்.
ஆதர்ஷ், ஆதிரா, அபிராம், ரஞ்சி, ஆராதனா, ஶ்ரீ சகோதரிகள், கைலாஷின் மகனாகவே வளர்ந்த ஓட்டுனர் சத்தியன், சங்கீதா என மில் தொழிலாளர்களுமாக மேடையைச் சுற்றியே திரிந்தனர். சத்தியன், கைலாஷின் கண்ணசைவில் காரியம் சாதிக்கும் சேவகனாய், நிழலாகவே தொடர்ந்தான்.
" ஏன்ரா, கல்யாணம், எனக்கா, உனக்கா. என்ர பின்னாடியே திரியிற' எனக் கைலாஷ் கேலி பேச, "நீங்க அம்மாளோட சேர்ந்தா தான், என்ர ரூட் கிளியராகுமுங்க ,அதுக்குத் தான்" என அவன் பதில் சொல்லவும், விஜயனும், " ஆமாம்டா சாமி, இவனைத் தங்கச்சிம்மாட்ட ஒப்படைச்சிட்டா தான், நாம இராத்திரிக்கு நிம்மதியா தூங்கலாம் " என அவரும் நகைப்போடே சொல்ல " அதேய், அசிங்கம் புடிச்ச மாதிரி பேசாத, ஒழுக்கமா பேசுங்கடா. சாங்கியம் செய்யனோமுல்ல" எனக் கைலாஷ் பொறுப்பான மணமகனாகப் பேச, மற்ற இருவரும் ஒரு மார்க்கமாகவே மண்டயயை ஆட்டிக் கொண்டனர்.
மாலையில் ஹல்தி விழாவை மட்டும் முடித்துக் கொண்டவர்கள், சிறிது நேரம் சிரம பரிகாரம், செய்து கொண்டு இரவு உணவுக்குப் பின் மாரத்தான் தொடராகச் சாங்கியங்களை வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தனர். சௌந்தரி, பொதுவாக விடிய விடிய நடக்கும் சாங்கியத்தைச் சொல்ல, “தாய் மாதா, சாங்கியம் சரியா ,செஞ்சிடுவோம், டைம் நான் சொல்றது தானுங்க” எனப் பெரியவர்களின் உடல் நிலையை மனதில் கொண்டு பதினோரு மணிக்குள் முடிக்கத் துரிதப் படுத்தி, பிரம்ம முகூர்த்தத்தில் காலை சடங்குகளை வைத்துக் கொள்ளலாம் என ராஜன் உறுதியாகச் சொல்லி விட்டார்.
நல்ல நேரமும் கூடி வரவே, சாங்கியம் செய்யும் பெரியவரும் ஒத்துக் கொள்ள, ஆக்கை சுற்றிப் போடுதல், எனும் சடங்காக, புளியமரத்து விளாரை, இரண்டாய் பிளந்து, சீர் செய்யும் பெண்மணி ராஜனை நடுவில் நிற்க வைத்துச் சாங்கியம் செய்து, மற்றொரு புளியமரத்து விளாரை மிதிக்கச் சொல்ல, “அதெல்லாம் , மாப்பிள்ளை இருபது வருஷம் முன்னையே புளியம் கொம்பைத் தான் பிடிச்சிருக்காப்ளையாட்டுதுங்க” என, அடுத்து தாய் மாமன் முறை செய்ய வந்து நின்ற சௌந்தரி உடன் பிறந்த மாமன் வினயமாகக் கேட்க, நாயகம் மனைவியை முறைத்தார்.
ஆனால் ராஜன், “சொன்னாலும், சொல்லலைனாலும் அது தானுங்க நிஜம், என்ர பொண்சாதி , ராணியம்மா புளியம் கொம்பு தான்”என அவர் ஒத்துக் கொள்ள, தாய்மாமான் சீருக்குப் பின், தங்கள் முறைப்படி மருமகனுக்குச் சீர் செய்ய நின்ற போஸ்லே குடும்பத்துக்குப் பெருமை பிடிபட வில்லை.
“எங்க பாபாவும், ஆயிக்கு குறைஞ்சவங்க இல்லை. பாபாவோட தைரியத்தைப் பார்த்துத் தானே, நானிமாவே எங்க ஆயியை பாபாக்கு கட்டி கொடுத்திருக்காங்க” என ஆதிரா அப்பாவுக்குக் கொடி பிடிக்கவும், “ அப்படிச் சொல்லுடா, என்ர தங்க மயிலு” எனச் சௌந்தரி பேத்தியைத் திருஷ்டி வலித்துக் கொஞ்சினார்.
“ஏதேது, உன்ர பாபா, பிறந்ததிலிருந்து வளர்த்தியிருந்தான்னா, தலையில தூக்கி வச்சு ஆடுவீங்கலாட்டத்துக்கு”என நாயகமே பேத்தியை வம்பிழுக்க, “அஜ்ஜோ, பாபாவோட பாசத்துக்கு ஏங்கினவங்களுக்குத் தான் அவங்க அருமை தெரியும். எங்க பாபா கோடியில் ஒருத்தர்.” என அவள் உணர்ச்சி மிகுதியில் சொல்ல, “அவருக்குப் பொறாமைடா கண்ணு” என ராஜன், மகளை உச்சிமுகர்ந்து அணைத்துக் கொண்டார்.
தாய் மாமன் முறை சீரை, சௌந்தரியின் உடன் பிறந்தவர்கள் செய்ய, ரமாபாய் மருமகனுக்குச் சீர் செய்ய, ஆதர்ஷ், பாலாஜி ராவ் இருவரையும் அழைத்து வர,
“சம்பந்தியம்மா, மகன் இந்தச் சீர் செய்யிறதில்லைங்க, அவரும் சகலை பாடி, பங்காளி முறை தானுங்களே, மாமன் மச்சான் முறை சீர் எப்படிச் செய்வாங்கங்க “என ஆட்சேபிக்க,
நாயகம் மனைவியை முறைத்து விட்டு, “தங்கச்சிமா, உங்க மருமகனுக்கு நீங்களே முறையைச் செய்ங்கங்க”என அழைக்க, ரமாபாய் தயங்கி, விஜயனை அழைக்கச் சென்ற நேரம்,
“போஸ்லே குடும்பத்து வாரிசு பைரவிபாயோட கணவருக்கு, கணபத்ராய் போஸ்லே தாமாதஜிக்கு ,மாப்பிள்ளை முறை செய்ய, முகுந்த் ராய் போஸ்லே வந்திட்டேன். சோட்டி ஆயி, அனுமதி கொடுங்க. எல்லாத் தவறுகளையும் திருத்த விரும்புறேன்” என ரமாபாயை வணங்கி நிற்க,
பாலாஜி ராவ் , கைலாஷ் என இரண்டு மருமகன்களையும் ரமாபாய் யோசனையாய் பார்க்க, அவர்கள் கண்களாலே சம்மதம் தெரிவிக்க, ரமாபாய் , மச்சினன் மகனைச் சீர் செய்ய அனுமதித்தார்.
ஆதர்ஷ், முகுந்த் போஸ்லேயை வரவேற்க, “இனி , எதிரெதிர் பக்கம் இல்லாமல், ஒரே பக்கம் நிற்போம் தாமாத்ஜி”என வினயமாகச் சொல்லவும், “ நான், போஸ்லே வாரிசு தானே ஒழிய, வம்சம் இல்லை மாமாஜி . என் பாபா பக்கத்தில் தான் நான் நிற்பேன்’என அவனும் பவ்யமாகவே பதில் தந்தான்.
கைலாஷின், தாய் வழி, தந்தை வழி , சமந்தபுரம் உறவு முறைகள், ராஜகுடும்பம் , மருமகனுக்கு என நிறைத்த சீர் வரிசையைப் பார்த்தே பிரமித்தனர். ஆண்களும் இத்தனை வகை, உடைகள், நகைகள் அணியலாம் என்பதே அதனைப் பார்த்துத் தான் தெரிந்து கொண்டனர். வித விதமாய் ராஜா காலத்து ஷேர்வானி , பகடி, நவீனக் காலத்துக் கோட் சூட், பட்டு வேஷ்டி, சட்டை அங்கவஸ்திரம், சால்வைகள், கை செயின், கழுத்துக்கு முத்து மாலை, கோட் பாக்கெட்டில் மாட்டும் சங்கிலி, காதுக்கு வைரக் கடுக்கன், புலிநகம் பதித்த நவரத்தின மாலை, அதற்கெல்லாம் மேலாக, வேலைப்பாடுடைய பரம்பரை கத்தி , இடுப்புப் பட்டை எனச் சீர் தட்டுகளை நிறைக்க, கொங்கு மக்கள், கொங்கணி மக்களின் டாம்பிக்கத்தைப் பார்த்து மலைத்தனர்.
ரமாபாய் சார்பாக வைக்க, அது இல்லாமல், முகுந்த் ராய் போஸ்லேவும் தனிப் பட்ட முறையில் முத்து மாலையைப் பரிசளித்தார். கைலாஷுக்கு , முழு மரியாதையோடு பட்டு சால்வை, நவரத்தின மாலை, கையில் வேலைப்பாடுடைய கத்தி ஆகியவற்றை அவர் தர, அவற்றை அணிந்து நின்ற ராஜன், மெய்யாகவே ராஜனாகத்தான் இருந்தார். பெற்றவரும், உற்றவரும் பார்த்துப் பூரிக்கத் தான் செய்தனர்.
அபிராம், மணவறையில் மாமனுக்குச் சடங்குகள் நடந்து கொண்டிருக்க, இன்னும் கொரில்லா அட்டாக்கிலிருந்து வெளி வராதவனாக, மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆசையோடு ஆதிரா அருகில் வந்து நின்று, “ஆரா பேபி, கொரில்லா அட்டாக் ஆனதில , சாப்பிடாத வந்துட்டேண்டி,பசிக்குது ரசகுல்லா கிடைக்குமா” என ரகசியமாய்க் கேட்க, ஆதிரா, அவன் காலை மிதித்தாள் .
அதை எதிர்பார்த்தே இருந்தவன், சட்டெனக் காலை எடுத்து விட, ஆதிராவின் செருப்பு அதற்கடுத்து நின்ற ஆதர்சின் கால்களைப் பதம் பார்த்தது. “ஆதி, என்ன செய்யிற, பார்த்து நில்லு ” என அவன் கடிந்து கொள்ள, "சாரி பாவு" என மன்னிப்பு கேட்க, அபிராம் , தங்கையோடு சேர்ந்து அர்த்தமாகச் சிரித்தான்.
‘இருங்கடா பக்கிகளா’ என மனதில் கருவியவள், “பாவு, ஆலியா பட்டை காணோம்”என ஆதர்ஷ் காதை கடிக்க, “வருவா பார். பாபா வீட்டு ஆளுங்களுக்குத் தான், என் அருமை தெரியாது. அவள் அப்படி இல்லை” என ஆதிரா அருகில் நின்ற, ரஞ்சனி, ஸ்ரீ சகோதரிகளைப் பார்த்து அவன் சவாலாகவே சொல்ல, “பாவு, ஸச் , ஆருஷி பாபியா வர்றாங்க , ஹாய், ஹாய் மேம் மர்ஜாவான், ஆனால் மாமா மட்டும் தானே வந்திருக்கார்”என ஆராதனா முகுந்தை சுட்டி கேட்க, “பொண்ணுங்க என்னைக்கு மா சீக்கிரம் வந்துருக்கீங்க , மேக்கப் பண்ணி வருவா” என ஆதர்ஷ் மொத்தமாகப் பெண்ணினத்தையே கலாய்க்க,
“ஹோ, ஹோ அவ்வளவு நேரம் மேக்கப் போட வேண்டிய அவசியம், உன் ஆலியா பட் குத்தான், எங்களுக்கு இல்லை”எனச் சங்கீதா மகள், வெளிப்படையாக நொடிக்க, ரஞ்சி அனல் பார்வை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள். அபிராம், ஆதிரா விஷயம் நடந்த அதே நேரம், உணவு கூடத்தில் ஆதர்ஷி வைத்து பெரியவர்களுக்குள் பேச்சு ஓட, ஸ்ரீ சகோதரிகள், ரஞ்சி எல்லோருமாக ஆதர்ஷை கட்டமாட்டோம் எனப் புறக்கணித்தார்கள். இவர்களுக்குள் ஒரு பனிப் போர் ஓடிக் கொண்டிருந்தது.
“கழுதைக்குத் தெரியுமா, கற்பூர வாசனை, என்ர பேரனுக்குனு ஒருத்தி, இனிமேலா பொறக்கப் போறா, சரியான நேரத்துக்கு வந்து சேருவா பாரு” எனச் சௌந்தரி, ஆதர்ஷுக்கு கொடி பிடிக்க, ரமாபாய், ராதாபாய் இருவரும் சேர்ந்து ஆதர்ஷின் புகழ் பாடினர். அது முதல், ஆதர்ஷ், மற்றும் அவன் முறைப் பெண்களுக்குள் பனிப் போர் ஆரம்பமானது.
முகுந்த் போஸ்லே ,தங்கை மாப்பிள்ளைக்குச் சீர் செய்தவர்,அவர்கள் அடுத்தடுத்த சீர்கள் செய்ய இடம் விட்டு, மாப்பிள்ளை வீடு சீர் பெண் வீட்டுக்கு வரும்போது எதிர்கொள்ளவென ,சோட்டி ஆயியுடன் சேர்ந்து தங்கையைச் சந்திக்க வந்தார். பைரவி, ஹல்தி பூசும் சடங்கு முடிந்து, குளிக்க வரும் போதே, அபரஞ்சி, கொங்கு முறைப்படி மணப்பெண்ணுக்குச் செய்யும் சீர்களையும் , பிறந்த வீட்டினராகச் செய்து திருஷ்டி கழித்துச் சென்றிருந்தார்.
கௌரி, பைரவியின் , சிகையை உலர்த்திக் கொண்டிருந்தார். மற்றவர்கள், ராஜனுக்குச் செய்யும் சீர் முறைகளைக் காண, மணவறைக்குச் சென்றிருக்க, கௌரி மட்டுமே, நிழலாகத் தன தீதியோடு இருந்தார். பைரவி, கைலாஷின் ஆறடி உயரத்திற்குத் தோதாக அரையடி குறைந்தது தோதாக இருப்பார். இவர்களை ஜோடியாகப் பார்ப்பவர்கள், அவர்கள் பொருத்தத்தை வியக்காமல் இருக்க மாட்டார்கள். ராஜ குடும்பம், எனும் களையும், தோரணையும் அவரிடம் இயல்பாக இருக்கும். எப்போதும் ஓர் கம்பீரமும், மிடுக்கும், ஆயிரம் பெண்கள் இருக்குமிடத்தில் தனியாகத் தெரிவார்.
கண் மூடி ஷோபாவில் சாய்ந்து, மோடாவில் கால் போட்டபடி , கணவரைக் கண்களுக்குள் நினைவில் நிறைத்தபடி நகைமுகமாகச் சயனித்திருந்தார். “நடுவால, நேரம் கிடைக்கையில் ரெஸ்ட் எடுத்துக்கோ அம்மணி, உனக்கு முடியலையா சொல்லிப் போடு, அந்தச் சாங்கியத்தையே வேண்டாம்னு சொல்லி போடுறேன்”எனச் சற்று முன் வீடியோ காலில் பேசும் போது சொல்லியிருந்தார். இவர் பதில் பேசாமல் சிரிக்கவும்,
“ஏனுங்க அம்மணி நான் என்ன, கூத்து காட்டிட்டு இருக்கிறேனா, உன்ர நல்லதுக்குத் தானே சொல்றேன், பொறவு நாளைக்கு வந்து கால் வலிக்குது பிடிச்சு விடுறான்னு சொல்லக் கூடாது, நிறைய வேலை இருக்குதாக்கும்”என ரகசியம் பேச, “ராஜ், போனை கட் பண்ணுங்க, அப்படியே வலிச்சாலும் , உங்ககிட்ட எதுவும் சொல்லமாட்டேன், பொறுத்துக்குறேன்” என முகத்தை மூடிக் கொள்ள, “அதென்ன அம்மணி, சிவப்பா தெரியறது, மருதாணி வச்ச கைதானே, இல்லை என்னை நினைச்சு முகமே டாலடிக்குதா”என அவர் காதல் வசனம் பேச, “நாளைக்கும் கொஞ்சம் மிச்சம் வச்சுக்குங்க, பை”எனப் போனை கேட் பண்ணி விட்டார் பைரவி. அதே நினைவில் முகம் சூடேற , சாய்ந்திருந்தவரைப் பார்த்து கௌரி ரகசிய சிரிப்பு சிரிக்க,
“கௌரி, எதுக்குச் சிரிக்கிற, ரொம்ப அசடு வழியறனா “எனப் பைரவி கவலையாகக் கேட்க, கௌரி சத்தமாகவே சிரித்து விட்டு, “இல்லை தீதி , இப்போ தான் உங்களைப் பார்க்கச் சந்தோசமா இருக்கு, இருந்தாலும் ஜிஜு, ஜாதூகாரர் தான், பேசியே சிவக்க வச்சிடுறாரே”என அவர் காதில் ரகசியம் சொல்ல, “சுப்கர், பாகல் கைக்கி, அவர் ஒருத்தர் பக்கத்துக்கும் நீயும் ஆரம்பிச்சிட்ட”என்றவர்,
“அந்த இரண்டு மாசமும் , எவ்வளவோ ஆபத்தும் பயமும் இருந்த போதும், ராஜ் முகத்தைப் பார்க்கவும், அவரோட நேசத்தில், என்னை மறந்துருவேன் கௌரி. இப்படி ஒரு பிரியம் வைக்க யாராலையுமே முடியாது. இத்தனைக்கும் அப்புறம், ஒரு வார்த்தை கேட்காமல் ஏத்துக்கிட்டாரே” எனக் கண் கலங்க.
“தீதி, இனி சந்தோசமான தருணங்களை மட்டும் நினைவில் வச்சுக்கங்க. மீதியிருக்க வாழ்க்கையில் , பலமடங்கு உங்க அன்பை கொடுங்க. நீங்க ஜிஜுக்கு எந்த விதத்திலும் குறைஞ்சவங்க இல்லை, அதை மறக்காதீங்க” என எடுத்துச் சொல்ல, பைரவியும் ஆமோதித்து விடியும் பொழுதுக்காகக் காத்திருந்தார்.
இணைச்சீர் ,
‘ஆடையாபரணம் அழகுபெறத்
தான்பூண்டு கூறை மடித்து வைத்தார்
குணமுள்ள தங்கையரும்
பிறந்தவரைச் சுற்றிப்
பேழை மூடி சுமந்து
இந்திரனார் தங்கை
இணையோங்க வந்த பின்பு
பின்னே ஒரு தரம் பிறந்தவர்க்கு
இணையோங்கி மின்னனையார்
முன்னே விநாயகர்க்கு இணையோங்கி’ என்பது மங்கல வாழ்த்து.
சீர் மண்டபத்தில், கைலாஷ் ராஜன் அமர்ந்திருக்க, இணைசீர் செய்யவென, அவரது இளைய தங்கை கவிதா, மணப்பெண்ணுக்கு இணையாக அண்ணன் எடுத்துக் கொடுத்த, பிறந்த வீட்டுச் சீர் புடவை, நகையணிந்து, தான் அண்ணனுக்கும், அண்ணிக்கும் செய்யும் முறையாக, மூங்கில் பேழையில், கூறைப்புடவை, வெற்றிலை பாக்கு, மஞ்சள், தேங்காய், பழம், கண்ணாடி, சீப்பு ஆகிய மங்கலப் பொருட்களை வைத்துத் தலையில் சுமந்து, மற்றொரு கையில் சோம்பு நீர் பிடித்து, பெரியவர்கள் முறை சொல்லச் சொல்ல , அண்ணனைச் சுற்றி வந்து, அவர் வலது புறத்தில் இறக்கி வைத்தாள்.
இந்தச் சீர் செய்வதென்பது, ஒவ்வொரு உடன் பிறந்தவள் உரிமையாக, கௌரவமாக, பெருமையாகச் செய்வார்கள். மூத்தவள் சங்கீதா அந்த உரிமையை விட்டுக் கொடுத்து, தங்கள் இல்லாவிட்டால், கஸ்தூரி செய்து விடுவார் என, யோசித்து, தன தங்கையை அங்கே நிறுத்திச் சென்றிருந்தாள் . இல்லாவிடில் கவிதாவுக்கும் அண்ணனுக்குச் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்காது.
கூறை புடவையில், கவிதா, அண்ணனுக்குச் சீராகப் பொன் முடிந்து வைத்திருந்தாள். ராஜனும், தங்கை செய்யும் சீரை பெருமையாகவே ஏற்றவர், “ கண்ணு,உன்ர அண்ணி ரொம்ப நல்லவ கண்ணு, நானே வேண்டானாலும், சங்கீதாலையுமே , கூடிய சீக்கிரம் ஒன்னு சேர்த்து போடுவா. வாழ்க்கையில நெம்பக் கஷ்டபட்டுடா, நீ செய்யிற சாங்கியத்தை மனசாரச் செய்யி, நான் உன்ரகிட்ட வேற எதையுமே கேட்கலை.” என உணர்ச்சி வயப்பட்டவராகச் சொல்ல,
“அண்ணா, நானும் மனசாரத் தானுங்கன்னா செய்யிறேன், நீங்க சந்தோசமா இருந்தா தானுங்களே, நாங்களும் நிம்மதியா இருக்க முடியும். உண்மையிலே சொல்றேனுங்கன்னா, ஒத்தையில இருக்கீங்களேன்னு அத்தனை மனசு வருந்தியிருக்கோமுங்க. மறுஜென்மம் எடுத்து அண்ணி வந்திருக்காங்க, நீங்க நல்லா வாழனோமுங்க” எனக் கை எடுத்து அவள் கும்பிட, ராஜனும் அவள் கையைப் பற்றிக் கொண்டு கலங்கினார். நாயகமும், சௌந்தரியும் மறு புறம் திரும்பி கண்ணீரைத் துடைக்க, பன்னீர் ராமசாமி, ரஞ்சி, சுப்பிரமணி எனப் பெரியவர்கள் தேற்றினார். அருமை பெரியவர், மணமகளுக்கான கூறை புடவையைக் கொசுவமாக மடித்து ராஜனின் கக்கத்தில் ஒரு நுனியைச் சொருகி, மறு நுனியை கவிதாவைக் கையில் கொடுத்து, சாங்கியம் செய்தார்.
சௌந்தரி சீர் செய்த மகளுக்கு, தட்டில் புடவை நகை, என வைத்து மகனிடம் நீட்ட, அதனை வாங்கி ராஜன் தங்கைக்குப் பரிசளித்தவர், அதே போல், சகீதா மக்கள் சிரிக்கும், கஸ்தூரிக்கும் வைத்துக் கொடுத்தார், “எனக்கு எதுக்குங்க அண்ணன் , நீங்க செய்யாத சீரூங்களா,வருஷம் முழுசும் வாங்கிகிட்டுத் தானுங்களே இருக்கேன்”எனக் கஸ்தூரி சொல்ல, “இது என்ர கல்யாண சீரு வேண்டாம்னு சொல்லாத கண்ணு.” எனக் கஸ்தூரிக்கும் பரிசளித்தார்.
அடுத்து, மங்களனுக்கு வாழ்த்து பாட, அனுமதி வழங்குவது போல், அரிசி பரப்பி அதன் மேல் வைத்திருந்த மஞ்சள் பிள்ளையாரை வணங்கி, அரிசியைத் தொட்டு மணமகன் மூலமாக, வாழ்த்து பாட அனுமதி வழங்கினர்.
தாயுடன் சோறு உன்னால், என்ற சடங்காக, ராஜன் அம்மாவுக்குத் தயிர் சோறை ஊட்டி, தானும் வாங்கிக் கொண்டார், இந்தச் சடங்கில் அவரது, மகன் மக்களும் கலந்து கொள்ள, அதற்கும் லொள்ளு பேசியபடி சீர் களை கட்டியது.
நாழியரிசிக் கூடை, என மணமகளுக்கான கூறை புடவை, நகை, மங்கலப் பொருட்கள் ஆகியவற்றைத் தட்டுகளில் நிரப்பி, மங்கலன் வாழ்த்து பாட அதற்கெனச் சீர் செய்து கொண்ட பெண்களின் கைகளில் கொடுத்து, கைலாஷ் ராஜனின் குடும்பமே , பைரவி இருக்கும் அரங்கம் நோக்கிச் சென்றனர். சௌந்தரி தங்கள் பக்க காட்ட, ராஜா குடும்பத்துக்கு இணையாக, மகன் மருமகளுக்கு வாங்கி வைத்திருந்த நகைகளை, தான் பரம்பரையாக அணிந்த சங்கிலியை, பட்டுச் சீலைகள், தேங்காய் பழம் எனச் சீர் தட்டுகளை நிறைத்து, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு பெண் வீட்டில் கொண்டு சேர்க்க, போஸ்லே குடும்பம், ரமாபாய் , முகுந்த் போஸ்லே, ராதாபாய் , பாலாஜி ராவ் என ஒரு பட்டாளமே எதிர் சேவையாக அவர்களை வரவேற்றுச் சீர்களைப் பெற்றுக் கொண்டனர்.
கௌரி, பைரவியை எளிமையாகச் சிங்காரித்து வைத்திருக்க, கைலாஷ் சார்பாக, தன மகன், மகள் , மாமன், மாமி, தாய் பிள்ளையாகப் பழகிய வசந்த விலாசத்துக் காரர்கள், நாத்தனார் அவர் குடும்பம் என வந்து மணமகளுக்கான சீர் செய்ய, பைரவிக்கு உணர்வு பெருகிய நிலை, மகனும், மகளும் ஆளுக்கு ஒரு புறம் தங்கள் ஆயியை அணைத்துக் கொண்டனர். காணொளியில் பார்த்த ராஜனும் கண் கலங்க, நண்பன் நிலை அறிந்து உடனிருந்த விஜயன் அவரைத் தேற்றினார்.
“என்ர ஊட்டுக்கு மகாராணியா, என்ர மகன் வாழ்க்கையை நிறைக்க வா அம்மணி. இந்த நாளை பார்க்கத் தான் , என்ர கண் தவிச்சிருந்தது” எனச் சௌந்தரி மருமகளைக் கட்டிக் கொள்ள, “நானும் இந்த நாளுக்காகத் தான் தவமிருந்தேன் அத்தை” என ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
திருமண நிகழ்வு இன்னும் மீதி இருக்கு, அதனை மற்றொரு அத்தியாயமாகத் தருகிறேன்.
நிலவு பௌர்ணமியை நோக்கி.
No comments:
Post a Comment