Monday, 2 May 2022

யார் இந்த நிலவு-52

யார் இந்த நிலவு-52 

“ ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை

மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக் காத்தாளை

ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே”

எனப் பைரவி, மனமுருகிப் பாடி நிற்க, மில் தொழிலாளிகளில் சில பெண்கள், அந்தப் பூஜையில் கலந்து கொள்ளவென, பய பக்தியோடு வந்திருந்தனர். அதற்குள், சேர்மன் அப்பாவின், மனைவி, ராணி அம்மாளை பற்றி, அவரின் ஒளி பொருந்திய முகம், அப்பாவின் கம்பீரத்துக்கு ஏற்ற மிடுக்கு, அவர் தன கணவர் மேல் வைத்திருக்கும் அன்பு, என மில்லுக்குள் கதை பரவ ஆரம்பித்திருந்தது.

அவர்கள். பூஜையில் கலந்து கொள்ள அனுமதி வேண்டி நிற்க, அலுவலகத்தில் வேலை பார்க்கும், சங்கீதாவின் பொறுப்பில், சிறு, சிறு குழுவாகப் பைரவியிடம் அனுப்பச் சொல்லி , கைலாஷ் அனுமதி தந்தார்.

கைலாஷ் சொன்னது போலவே, காலையில் வீட்டுக்குச் சென்று திரும்பி பூஜைக்கும் வந்துவிட்டார். பைரவியும் இன்று பச்சை பட்டுடுத்தி, அதற்குத் தோதாக, மரதம் மற்றும் மாணிக்கக் கற்கள் கொண்ட பரம்பரை நகைகளைப் போட்டு, நெற்றியில் காயத்தை மறைக்க, சந்தனம், மஞ்சள் கலந்து பட்டையாகப் பூசி , பிறை திலகமும், வகிட்டில் நிறைந்த குங்குமத்தோடும், துல்ஜா பவானியின் அம்சமாகவே நின்றார்.

" ஏனுங்க அம்மணி, நீங்க கல்யாணப் பெண்ணாங்களா, இல்லை சாமியாடியா. என்னைத் தூரத்தில் நிறுத்த, இது ஒரு வழியாக்கும்" என வாய் கேலி பேசினாலும், பைரவிக்கு ,கைலாஷின் கண்களில் ஒளி குறைந்தது போல் தோன்றியது.

" உன்ர குடும்பத்தைச் சமாளிக்க, என்ர தங்கச்சிமா, இப்படி இருந்தா தான் சரியா வரும்" என விஜயன், மனைவி மக்களோடு வந்து சேர்ந்து, துல்ஜா பவானி ஆரத்தியை எடுத்துக் கொண்டனர்.

பைரவி, வழக்கம் போல், கைலாஸிடம் குங்குமம் வைத்துக் கொள்ள அழைத்தார், பண்டிதர், மந்திரம் சொல்லி அம்மன் பாதத்திலிருந்து குங்குமம் அள்ளி , தட்டில் வைத்துக் கைலாஷிடம் நீட்ட, அதனை வாங்கிக் கொண்டவர், காலில் விழ வந்த மனைவியைத் தடுத்து, நெற்றி காயத்தில் படாமல் வகிட்டில் வைத்து விட்டு, அவர் கண்ணில் படாமல் ஊதியும் விட்டார்.

விஜயன், குடும்பத்தோடு நின்று வேடிக்கை பார்த்தவர், “ உன்ர அண்ணன் , நேத்திக்கு தங்கச்சிமா முகத்தைப் பார்க்க, செஞ்ச அழும்பு என்ன, இன்னைக்கு ரையிட் ராயலா வைக்கிறான் பார். எல்லாம் அவன் நோக்கத்துக்குத் தான் நடக்குது’ என மனைவியிடம் மகிழ்ச்சி போங்க சொல்லவும், “கண்ணு வைக்காதீங்க, அவைகளே, இத்தனை வருஷம் கழிச்சு, இப்போ தான் சேர்ந்திருக்காங்க”எனக் கஸ்தூரி கணவரைப் பேச அவர்களுக்குள் வாக்குவாதம் நீண்டது.

அதற்குள் ஆபிராம் ஒரு சுற்று வந்து ஆதிராவை தேட, ரஞ்சியின் கண்கள் ஆதர்ஷை காண ஏங்கின. பைரவி, இன்றும் கஸ்தூரிக்குத் தாம்பூலம் வைத்துக் கொடுத்த பைரவி, மற்ற பெண்களுக்கும் வரிசையாக வைத்துக் கொடுக்க, அவர்கள் கைலாஷோடு , பைரவியைச் சேர்த்து தம்பதி சமேதராய் நிறுத்தி , வணங்கி ஆசிர்வாதம் வாங்கிச் சென்றனர்.

கஸ்தூரி, “அண்ணி, உங்களைச் சாக்கு வச்சு, நாங்களும் மெஹந்தி பங்க்சனெல்லாம் கொண்டாடிக்கிறோமுங்க “ எனப் பேச்சுக் கொடுக்க,

“கொண்டாடுறது மட்டுமில்லை பாபி, நீங்களும் மெஹந்தி வச்சுக்குங்க. இதில் வயசு வித்தியாசமில்லாமல் எல்லாருமே வச்சுக்கலாம்’ என அதன் சிறப்புகளைச் சொல்லிச் செல்ல,அபிராம், ரஞ்சனி ஆதிராவையும் , ஆதர்ஸையும் கேட்க, “இரண்டும், பேருக்கும் நல்ல தூக்கம். ,உங்க மாமா, எழுப்பாதேன்னுட்டார், இப்ப தான் எந்திரிச்சுக் கெஸ்ட்ஹவுஸ் போயிருக்காங்க” எனப் பைரவி தகவல் கொடுக்க, அவர்கள் அங்கே பறந்தனர்.

விஜயன், கைலாஷிடம், “அத்தை, மாமா, உன்ர தங்கச்சி குடும்பத்தைக் காணோம்” எனக் கேள்வி எழுப்ப, “டிபன், வீட்டுக்கு போயிடுச்சு, மெல்ல வாங்கன்னு சொல்லிப் போட்டு வந்தேன், வயசான காலத்தில், இரண்டு போரையும் தேவையில்லாத டென்ஷன் ஆகுறோமோன்னு இருக்கு” என வருந்திய கைலாஷ், காலையில் நடந்ததை நண்பனிடம் பகிர்ந்தார்.

பைரவி, முந்தைய நாளின் தவிப்பு அடங்கி, இரவில் குடும்பமாகக் கழித்த நிறைவில், யாரும் , எதுவும் சொன்னாலும், தான் இசைந்து கொடுக்கக் கூடாது என்ற உறுதியோடு இருந்தார்.

காலையில் பிள்ளைகள் இருவரும் நிம்மதியான உறக்கத்திலிருக்க, வழக்கமான நேரத்தில் விழித்த ஜோடிகள், ஒருவரை ஒருவர் ஆசையாகவே பார்த்துக் கொள்ள, மனைவிக்கு இனிய நாளாக அமையட்டும் என வாழ்த்திய கைலாஷ், சைகையிலேயே வெளியே வர அழைக்க, தன்னைக் கட்டிக் கொண்டு படுத்திருந்த மகளை, அவள் தூக்கம் கலையாமல் விலக்கி விட்டு, அதிகாலை குளிரை ரசிக்க வந்தார்.

முகம் கழுவி, இருவரும் காற்றாட அமர்ந்திருக்க, அவர்களின் 'கட்டா சாய்' வந்து சேர்ந்தது. அதைப் பருகிக் கொண்டே, " பாரு, இந்த நாலு நாள்ல, உன்னை டார்கெட் வச்சு, நாலு பேர், நாலு விதமா பேசுவாங்க அம்மணி. அதையெல்லாம் காதில வாங்காத. நமக்காக, பிள்ளைகளுக்காக, நம்மளை பெத்தவங்களுக்காக, முழுசா ச்தோஷத்தை, அனுபவிப்போம் " எனத் தன் கையை மனைவியிடம் நீட்ட, "கட்டாயம் ராஜ். எனக்கும் அது தான் ஆசை. ஆனால் , எல்லாத்தையும் மீறி உங்களோட உயிர், பாதுகாப்புன்னு வந்தா, என்னை அறியாமல் ரியாக்ட் பண்றேன்" எனப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல,

மனைவியின் கன்னத்தை வலித்துக் கொஞ்சியவர், " பாருவோட, கைலாஷ் கொடுத்து வச்சவன் தானுங்க அம்மணி, இத்தனை லவ் யாருக்குக் கிடைக்கும்" என அவர் நகைக்க, " கிண்டல் பண்ணாதீங்க ராஜ்" எனச் சிணுங்கினார் பைரவி, " நிசமாத்தான் அம்மணி, என்ர பொண்டாட்டி மேலச் சத்தியமா" என்றவர், " நான் வூட்டுக்கு போயிட்டு, குளிச்சு மொழுகி, புது மாப்பிள்ளையாட்டமா, வந்திடுறேன். நீயும் ரெடியாகு அம்மணி" என்றவர் கௌரி வரவும் வரை மனைவியோடு பேசி, அவரைச் சிரிக்க வைத்தும், சிவக்கவும் வைத்தவர், அவர் வரவும்,

" மாஸிமா, என்ர பொண்டாட்டியை தேவதையாட்டமா, அலங்காரம் பண்ணி வைங்க, இதோ வந்திடுறேனுங்க" எனக் கிளம்ப, கௌரி சிரித்துக் கொண்டே தலையாட்டிச் சென்றார். அவர் தலை மறையவும்,

" ராஜ், என் புருஷனுக்குப் பிடிச்சமாதிரி, எப்படி ரெடியாகனும்னு, எனக்கே தெரியும். கௌரிகிட்ட எதுக்குச் சொல்றீங்க" எனப் பைரவி கோவிக்க, சிரித்தே அவர் கோபத்தைச் சமாளித்து, இயல்பாக அணைக்க வந்து விட்டு," கௌரி பூஜை, தொடக்கூடாதில்லைங்க அம்மணி" எனக் கண்கள் குழிய சிரிக்க, "ஆஹா, சம்பிரதாயம் எல்லாம் ரொம்பக் கடைப்பிடிக்கிறவர் தான். எட்டரை மணிக்குப் பூஜை, சீக்கிரம் வாங்க" எனக் கட்டளையிட்டார்.

" சரிங்க, ராணிமா" என்றவர், “பிள்ளைகள், தானா எந்திரிக்கிற வர, எழுப்பாத அம்மணி, அதுங்களாவது நிம்மதியா தூங்கட்டும்.” எனக் கட்டுப்பாட்டை மீண்டும் ஒரு முறை மீறி, தோளோடு அணைத்து, நெற்றியில் முத்தமிட்டே சென்றார்.

பைரவி நகைப்போடே பின்னால் இருந்த அறை நோக்கிச் செல்ல, கௌரி, தன நீதியின் நெற்றி காயத்தை ஆராய்ந்தவர், “தீதி , இந்தக் கட்டுக்குப் பதிலா, நான் மஞ்சள் கலந்து ஒரு லேப் (மருந்து விழுது) ரெடி பண்றேன், அதைப் பூசிக்குங்க. கட்டுப் போடா வேண்டாம்” என யோசனை சொல்ல, “சரி கௌரி “ என்றவர், “ராஜ்க்கு , ஒன்னுனா என்னால தாங்கவே முடியலை கௌரி, என்னை மீறி ஏதாவது செஞ்சுடுறேன், இந்தக் காயத்தைப் பார்த்தே, அவர் முகம் வாடிப் போகுது” என அப்போதும் கணவருக்காக உருகியவரை, 

“அது தான் தீதி , அந்தப் பயம் தான் தீதி , உங்க அன்புக்குச் சாட்சி. ஜிஜுவோடவே வாழ ஆரம்பிச்சுட்டா அது சரியாகிடும்” என எடுத்துச் சொன்னவர், “உங்க நாத்தனார் பேச்சைப் பெரிசா எடுத்துக்காதீங்க, உங்க மேல கே ஆர் சாப் வச்சிருக்க அன்பைப் பார்த்து அவங்களுக்குப் பொறாமை” என எடுத்துச் சொல்லவும், “ஆமாம் கௌரி, இனிமே நான் ஏமாற மாட்டேன்” என உறுதிப்படச் சொல்லிச் சென்றார்.

ராஜன் காலையில், கே ஆர் மாளிகைக்கு, சென்ற சமயம், வழக்கத்துக்கு மாறாக, சௌந்தரி, ஹாலில் உள்ள ஷோபாவில் படுத்திருந்தார். கைலாஷ், வேகமாகத் தாயிடம் விரைந்தவர், அம்மாவின் நெற்றியில், கன்னத்தில் கழுத்தில் தொட்டுப் பார்த்து, அவர் உடல்நிலையைப் பரிசோதிக்க, மகன் தொட்டதில் சௌந்தரி விழித்திருந்தார்.

" பவானி, சும்மா இருக்குதில்ல கண்ணு. அப்புறம் ஒண்ணும் புலம்பலையே" என விசாரிக்கவும்,

" இல்லைங்கமா, சும்மா இருக்கிறாளுங்க, ஆமாம் நீங்க ஏனுங்க இங்க வந்து படுத்திருக்கிறீங்க, உடம்புக்குகீது முடியலையிங்களா" என விசாரிக்க, எழுந்து அமர்ந்து, மகனையும் அருகில் அமர்த்திக் கொண்டவர், "நேரமே முழிப்பு வந்திருச்சு கண்ணு, உன்ர அப்பாவை எழுப்ப வேண்டாமேன்னு, இந்தப் பக்கமா வந்தேன், கண் அசந்திட்டேனாட்டத்துக்கு" என்றவரின் முகத்தில், ஏகப்பட்ட சிந்தனை ரேகைகள் ஓட, இத்தனை வயதில், மகனுக்குக் கல்யாணம் எனத் தேவையில்லாத டென்ஷனைக் கொடுத்து விட்டோமோ, என நினைத்த கைலாஷ்,

" இத்தனை வருஷம் கழிச்சு , மகன், கல்யாண கட்டிக்கிறானேனு டென்ஷன்ல தூக்கம் வரமாட்டேங்கிதாட்டத்துக்கு, உங்க மருமகள் பழகினவதான, அப்புறமென்ன ,இது ஃபார்மாலிட்டிக்கு நடக்கிற கல்யாணம், நீங்க டென்ஷனாகாத இருங்க தாய்மாதா" என அம்மாவின் கைகளைப் பிடித்து உற்சாகப் படுத்தவும்.

" ராஜா, உன்ர குடும்பம், உன்னோட வந்து சேர்ந்து, நீ குடும்ஸ்தனாகிறேயே, இது மருத மலை முருகன் கொடுத்த வரம் கண்ணு. என்ர வேண்டுதல் பழிக்குதில்ல, இதில என்ன டென்ஷன், உன்ர மகள், மகன் கல்யாணத்தையும் சேர்த்து நடத்துவனாக்கும். " எனத் தான் கைலாஷ்கே அம்மாவென , தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, மகன் அடுத்தக் கேள்வியில் பாயிண்டைப் பிடித்தார்.

" கல்யாண டென்ஷனில்லைனா, உங்க மருமகளைப் பத்தியும் கவலைப் படாதீங்க. இனி என்னை விட்டுப் போட்டு, எங்கையும் போகமாட்டேன்னு, சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கா. வேறென்ன, என்ர மாமியார் சொத்து எழுதி வைக்கிறதைப் பத்தி சொன்னாங்களே, ஏற்பாடு பண்ணிட்டேனுங்கம்மா."எனவும், சௌந்தரி, பதில் சொல்லாமல் கலக்கமாகவே பார்த்தார்.

" தாய்மாதா, சொத்து என்ர பேரிலிருந்தா என்ன, என்ர புள்ளைங்க பேரிலிருந்தா என்னங்க. உங்கள் மருமகள், நல்ல புள்ளைங்களதானுங்களே , பெத்திருக்கா. என்னைப் பார்த்துக்குங்க, அப்படியே இல்லைனாலும், என்ர பொண்டாட்டியோட வசந்த விலாசத்துக்கு வந்துட்டு போறேன், மகனுக்கு இல்லைனாலும், கேர்டேக்கர் புருசனுக்குச் சோறு போடுவீங்கல்ல " என அவர் கேலியாகவே பேசவும்

" நீ நல்ல பிள்ளைகளைத் தான் கண்ணு பெத்திருக்க.உனக்கென்ன பேருக்கேத்த ராசா தான், உன்ர உடன்பொ " என்ற சௌந்தரி, அடுத்துப் பேசும் முன், " சௌந்தரி" என்ற அழைப்போடு நாயகம் வந்தவர் , “ உன்னை ராத்திரியே மாத்திரை போட்டுட்டு படுன்னு சொன்னனில்ல, என்னை ஏமாத்திட்டு, இங்க வந்து படுத்திருக்கியாக்கும். " எனக் கடிந்து கொண்டே வந்தவர், மகனிடம், " மருமகள், இராத்திரி கம்முனு தூங்கிடுச்சா. மனசைப் போட்டு உலப்பிக்காத இருக்கச் சொல்ல, விஷேசம் முடியற வரைக்கும், பவானியைத் தனியா விடாத" என்ற தகப்பனிடம் தலையை ஆட்டிக் கொண்டவர்,

" ஏனுங்கப்பா, எதுவும் பிரச்சனைங்களா" என இருவரையும் மாற்றி, மாற்றிப் பார்க்க, சௌந்தரி பதிலேதும் சொல்லாமல் நாயகம், மகனைக் கிளப்பும் வழியைத் தான் தேடினார்.

பாலாவுக்கு, நேற்று பைரவியிடம், தன் மகள் சங்கீதா பேசிய முறை சரியில்லை, எனத் தோன்றியது, பன்னீரும், ராமுவுமே அதையே சொல்லி, கவனமாக இருக்கச் சொல்ல, இரவு வீடு வரவும், மகளைக் கூப்பிட்டு நாயகம் கண்டித்தார். அந்தப் பேச்சே தடித்து, சங்கீதா ஒரு ஆர்ப்பாட்டம் செய்ய, கவிதா அம்பாவிடம் மறுப்புத் தெரிவித்துச் சமாதானம் செய்தாள்.

ஆனாலும் பெரியவள், அண்ணன் குடும்பம், சொத்து எனத் தேவையில்லாத பேச்சுக்களைப் பேச, நாயகம், " பொறந்த வூட்டுக்கு வந்தமா, முறை செஞ்சமா, வாங்கினமான்னு போயிட்டே இரு. என்ர சொத்தில் பங்கு கேட்க, உனக்கு உரிமையிருக்கு. உன்ர அண்ணன் சம்பாத்தியத்தில் பங்கு கேட்க உனக்கு உரிமையில்லை. " எனப் பேசிவிட,

" உங்க மகன் கல்யாணம்னு, ஏதோ காமெடி பண்றிங்களே, அதுக்குக் கொழுந்தியாள் சாங்கியம் செய்ய மட்டும் நான் வேணுமாக்கும். " என அவள் வார்த்தையை விட,

" உன்ர பொறந்தவன் மேல பாசமிருந்தா வா. இல்லைனா நடையைக் கட்டிக்கிட்டேயிரு. என்ர ராஜாவுக்குச் செய்ய ஆளா இல்லாத போச்சு" என நாயகம் எகிற, அவள் கணவனும், சௌந்தரியும் இருவருக்கு மிடையில் வெள்ளைக் கொடி பிடித்தார்.

" தெரியுமுங்கப்பா, உங்களுக்கு உங்க ப்ரெண்டு , அவிக குடும்பம் தான முக்கியம், கஸ்தூரி யை வச்சே சாங்கியம் செஞ்சுக்குவீங்க. ஆனாலும் ராஜி அண்ணி, ஆத்மா அவிகளை நல்லா வாழ விடாது பார்த்துக்குங்க" என அவள் வார்த்தையை விட, நாயகம் , மருமகன் முன்பே மகளை நோக்கி , கையை ஓங்கி விட்டார், மருமகன் குறுக்கே வரவும், நிறுத்தி வெறுப்பாகத் திரும்பிக் கொள்ள,

சௌந்தரி இடையில் புகுந்தவர், " பொறந்தவனை, இப்படி எல்லாம் பேசாத கண்ணு, அவன் நல்லா இருநாதா தான், உனக்கும் மதிப்பு. ராஜியை மாதிரியே, பவானியும் நல்லவ தான். நீ பழகிப் பார்" எனக் கண்ணீர் வடிக்க,

" மகளை விட, மருமகள் தான் உசத்தினா, இருந்துக்குங்க. நான் நாளைக்குக் கிளம்புறேன்" என அவள் மேலே ஏறிவிட, கவிதா , பெரியவளுக்கும் சேர்த்து மன்னிப்பூக் கேட்டு, அக்காளைச் சமாளிக்க ஓடினாள்.

நாயகமும், சௌந்தரியும் ஓய்ந்து அமர்ந்தவர்கள், தங்கள் மகளை எண்ணி மனம் நொந்தார்கள். பன்னீர் சத்தம் கேட்டு வெளியே வந்தவர், நண்பனைச் சமாதானப்படுத்திப் படுக்க வைத்தார். கைலாஷுக்காக வருந்தியவர்களுக்கு, மனதில் இருபது வருடங்களுக்கு முன்பான பிரிவுக்கும், தங்கள் மகள்களே காரணமாக இருக்குமோ, என்ற நினைவு வலுப் பெற்று, கவலையும் தந்தது.

பாலநாயகம், இது எதையுமே மகன் காதுக்குக் கொண்டு போகக் கூடாது, என்றே, மனைவியைக் கடிந்து,மகனைக் கிளப்பினார்.

ஆனால், கைலாஷ், ஏதோ இருக்கிறது, எனப் புரிந்து கொண்டவர், அதன் விவரத்தைக் கேட்கும் முன், சங்கீதா மகன், மகள், கணவர் சகிதம், தனது பெட்டியோடு கிளம்பித் தயாராக வந்தவள், தான் லண்டன் செல்வதாக அறிவித்தாள்.

அவளின் மகளும், மகனும், மாமனிடம் ஓடி வந்தவர்கள், " மாமா, இந்த ஃபங்சன் எல்லாம் நாங்க ரொம்ப என்ஜாய் பண்றோம். மம்மி லண்டன் போலாம்னு சொல்றா. நீங்க சொல்லுங்க" என வந்து கைலாஷ் கையைப் பிடித்தனர்.

கைலாஷ், " ஏன் கண்ணு, விசேஷத்துக்குத் தான வந்த, பாதியில் கிளம்புற , மாப்பிள்ளைக்கு எதுவும் வேலையிருக்குதா என்ன " எனக் கேட்கவும்.

" நான் எந்த உரிமையோடுங்கண்ணா இருக்கிறது. அப்பா எனக்கு , உங்களுக்குப் பொறந்தவளா சாங்கியம் செய்யக் கூட உரிமை இல்லையின்னு சொல்லிட்டாருங்க. " என , பைரவியைத் தான் சொன்னதையே, தனக்குச் சாதமாகச் சொல்லி, தந்தைக்கு எதிராகத் திருப்பி அவள் நீலிக் கண்ணீர் வடிக்கவும், கைலாஷ், தந்தையைப் பார்த்து, " ஏனுங்கப்பா. இரண்டு வருஷத்துக்கு ஒருக்கா வருதுங்க. அவிக இஷ்டத்துக்கு இருந்திட்டு போகட்டுமே. உரிமை, கிரிமையின்னு, எதுக்குங்க, பெரிய வார்த்தை. " என்றவர்.

" உனக்கு எப்பவுமே, இந்த அண்ணன்கிட்ட எல்லா உரிமையும் இருக்குது கண்ணு. நம்ம அப்பா கோபம், நமக்குப் புதுசா கண்ணு, நம்ம நல்லதுக்குத் தான் சொல்லுவார். இதுக்குக் கோவிச்சிட்டு போனியின்னா, உன்ர அண்ணி , மாமனாரை வுட்டுப் போட்டு, நான் தான் காரணமின்னு, என்னை டார்ச்சர் பண்ணுவா கண்ணு “ எனச் சமாதானாய் படுத்தியவர், “உனக்கு என்ன வேணுமோ அண்ணன் செய்யிறேன், ஹிட்லர் கிட்டக் கேட்காதே“ என ரகசியமும் பேசி, ஒரு நல்ல அண்ணனாகவும், பிஸ்னஸ் மேனாகவும், பிரச்சினையை முடிக்க, நாயகம் மகனை அர்த்தமாகப் பார்க்கவும், “நான் சமாளிச்சுக்கிறேனுங்க அப்பா, நீங்க டென்ஷனில்லாத இருங்க” என நிலைமையைச் சமாளிக்க, சௌந்தரி நிம்மதி பெருமூச்சோடு தன அறையை நோக்கிச் சென்றார்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு, நாயகத்துக்கு மகனிடம் தனித்துப் பேச வேண்டியது இருந்தது. ஏதோ பேச வேண்டும் என , தன அப்பா அங்கே நிற்பதை உணர்ந்த கைலாஷ், அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார். , நாயகம் வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டவர் , மகனுக்கு மட்டும் கேட்கும் படி சில விஷயங்களைச் சொல்ல, கைலாஷுக்கு ஒரு நொடி கண்கள் கலங்க, நொடியில் சமாளித்தவர், “தகவல் தந்தத்துக்கு நன்றிங்கப்பா, இதுக்குப் பதில் உங்க மருமகள் சொன்னாதான் உண்டுங்க, ஆனால் அவள் சொல்ல மாட்டா, நான் பார்த்துகிறேனுங்க” என உணர்ச்சி மிகுதியில் சொல்ல,

“இத்தனை வருஷம், தொழில் செஞ்சது பெரிய சாமர்த்தியமில்லை, குடும்பத்துக்குள்ளையே இருக்கவிகளைச் சமாளிச்சு, நீ சாதிச்சுக் காட்டுறது தான் பெரிசு. தங்கச்சிகளுக்குப் பார்த்ததெல்லாம் போதும், அதுங்க நாளா தான் இருக்குதுங்க. உன்ர குடும்பத்தைப் பாரு. தேவைப் பட்டா, சுயநலமா முடிவெடுக்கவும் தயங்காத ராஜா , இனி உன்ர பொண்டாட்டி புள்ளைங்க தான் முக்கியம்” என்ற தகப்பனின் கையைப் பற்றியவர்,

ஒரு நிமிடம், தன் மகனிடம் அனுபவித்த , தந்தை பாசத்தை, அப்பாவிடமும் உணரும் பொருட்டு, “ அப்பா, இதுவரைக்கும் உங்க மனசை நோகடிக்கிற மாதிரி ஏதாவது பேசியிருந்தாலும், மன்னிச்சிருங்கப்பா” என, கைலாஷ் அவர் காலை தொடவும், நாயகமும் உருகித் தான் போனார், பட்டென மகனின் கையைப் பற்றித் தடுத்தவர்,

“நீ என்றா தப்பு செஞ்ச, எனக்குத் தான் என்ர மகனை புருஞ்சுக்கத் தெரியலை, எங்கிருந்தோ வந்த மருமகள் உனக்காகத் தன வாழ்க்கையவே தியாகம் செய்யிது, உனக்காக நான் என்னத்தைச் செஞ்சேன். மறுக்கா தப்பு நடக்காமல் பார்த்துக்குவோம்” என நா தழுதழுக்க ,

”இனிமே தப்பு நடக்கத்துங்கப்பா” எனக் கைலாஷ் தகப்பனைக் கட்டிக் கொண்டார். தகப்பன் மகன், அங்கே பாசத்தைப் பகிர்ந்து கொண்டிருக்க, சௌந்தரி, “ மகனை கடிக்கிறதுக்குத் தான் என்னைத் தாட்டி விட்டிங்களாக்கும்” என்ற படி உள்ளே நுழைந்தார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை, நான் தடுமாறி விழப் போனேன், உன்ர மகன் பிடிச்சான், அவ்வளவு தான்” என்றவர். “மருமகள் காத்திருக்கும், சீக்கிரம் கிளம்பு” என விரட்டி விட்டு நாயகம் கெத்தாக வெளியேற, கைலாஷ், அம்மாவை அனைத்துக் கொண்டவர், “ ஏனுங்க தாய் மாதா, இவர் நம்மூட்டு ஹிட்லர் தாணுங்களா, பாசமா பேசிட்டு போறாருங்க” என வம்பு பேசவும், ”என்ர புருசனுக்கு என்ன, உன்னை விட நல்லா, சிவாஜியாட்டம் வசனமெல்லாம் பேசுவார். அவருக்குப் பிரியமான மருமகளுக்கு, புருஷனாயிட்டேல்ல, அது தான் பாசத்தைக் காட்டிட்டு போறாரா இருக்கும்” எனக் கேலி பேசவும்,

“உலகத்திலேயே, சொந்த மகனுக்கு , இப்படி ஒரு அடையாளம் கொடுத்தது நீங்க தான் “ எனக் கேலி பேசியபடியே தந்தது அறைக்குச் சென்றவர். அடுத்துச் செய்ய வேண்டிய வேலைகளை மனதில் பட்டியலிட்டு, தனது உதவியாளர் சம்பத்துக்குச் சில கட்டளைகளைப் பிறப்பித்தார்.

விஜயனோடு , கைலாஷ் பேசிக் கொண்டு இருக்கும் நேரம், பெரியவர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்.

அபரஞ்சியும், சாரதாவும், பைரவியைப் பார்த்தவர்கள், " பவானி, அந்த அம்மன் ஸ்வரூபம் நீ தான். நாளுக்கு நாள், நீயும் உன் பவானியும் தேஜஸ் கூடிட்டே போறீங்க" எனச் சிலாகித்தனர். ரமாபாய், ராதாபாயோடு வந்தவர், அனைவரையும் வரவேற்று, சௌந்தரியைக் கேட்டார்.

சௌந்தரி, தன் மகள் வீட்டுப் பேத்திகளோடு வந்தவர், துல்ஜா பவானியை வணங்க, பைரவியும் வந்து மாமியாரிடம் ஆசி வாங்கினார். " நெற்றி நிறைஞ்ச குங்கமத்தோட, என்ர மகன் கட்டுற தாலியைக் கட்டிக்கிட்டு என்னைக்கும் மகராசியா இருப்ப, நேத்தாட்டம் மனசை விடக் கூடாது அம்மணி. என்ர ராஜாவுக்கேத்த ராணியா, எத்தனை பேரை வழி நடத்தோணும்" எனக் குங்குமமிட,

" அதெல்லாம் மருமகள், பழைய ஆளா வந்திருச்சு. நீ கிழவி ஓரமா உட்கார். மருமகளே எல்லாத்தையும் பார்த்துக்கும்" என நாயகம், மருமகள் தலையைப் பொறுப்பைச் சுமத்த,

" கட்டாயம் மாமா, ஆனால் அத்தை எதுக்கு ஓரத்தில் உட்காரனும். நடுவிலிருந்து, அதிகாரம் செய்யட்டும், நான் செஞ்சுட்டு போறேன்" என அவரிடமும் ஆசி வாங்கினார்.

கைலாஷ், " உன்ர தங்கச்சி, என்னடா, பொசுக்கு பொசுக்குன எல்லார் கால்லையும் விழுறாளே, இதையெல்லாம் கண்டிச்சு வைக்கோணும்" என மனைவியைப் பார்த்தபடிச் சொல்லவும்

" தங்கச்சிமா, உன்ர கால்ல விழும்போது மட்டும் உனக்கு இனிக்குதாக்கும்" எனக் கேலி பேச, "என்ர கால்லையும் விழுவேண்டாம்னு தான் சொல்றேன், நாளை பின்ன, எல்லார் கால்லையும் என்னையும் சேர்த்தில்ல விழச்சொல்லுவா உன்ர தங்கச்சி" எனவும்," அது தான எலி என்றா அம்மணமா போகுதேன்னு பார்த்தேன்"என அவர் சிரிக்க,

" ஏன்ரா, என்னைப் பார்த்தா, எலியாட்டமா இருக்குது. அதுக்குப் புலின்னு சொல்லு , கொஞ்சம் கவுரதையா இருக்கும் ஒத்துக்குறேன்" என முறைக்கவும், விஜயன் நமட்டு சிரிப்போடு, " வேண்டாம், அப்புறம் நான் அசிங்கமா கேட்டுப் போடுவேன், பொறகு என்னை முறைக்காத" எனவும் சட்டெனப் பாயிண்டைப் பிடித்த, ராஜன், " அடப் போட, எடுத்ததா இருந்தாலும், எடுக்கலையினாலும், ஒண்ணும் வித்தியாசமில்லை. சாமியாரம்மா, என்னைத் தொட விடுறாளோ இல்லையோ, ஆயிசுக்கும் நான் பிரம்மச்சாரி தான்" என ராஜன் பெருமூச்சு விட,

" அட கருமம் புடிச்சவனே, மெல்லப் பேசுடா, பசங்க கேட்டுற போறானுங்க. ஒத்தையா திரிஞ்சவனுக்கு, குடும்பம் கிடைக்குதுல்ல, அதைய நினைச்சு சந்தோஷப்படு" என இருபது வருடத்து இடைவெளியையும் மறந்தவர்களாக நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

கைலாஷின் தங்கை கணவர்கள் இருவரும், " மச்சான், உங்க தங்கச்சகங்க பேசினதை மனசில வச்சுக்காதீங்க" என வினயமாகப் பேசி இவர்களோடு இணைந்தனர். காலையில், கைலாஷ், தங்கையை உள்ளே போகச் சொல்லவும், அது தான் சாக்கு என அவள் கணவன் சந்திரமோகன், மனைவியை உள்ளே அழைத்துச் சென்றவன், சொத்தை அடைய, பிளான் ஏ ஒத்து வர வில்லை எனில், பிளான் பி , ஆதர்ஷை தங்கள் மருமகனானக்க முயற்சிக்கச் சொல்லித் தந்தவன், அதற்கான சாத்தியம், பைரவி தான். அவரிடம், தங்கள் மகள் , தான் அவர் வீட்டு மருமகள் என வாக்கு மட்டும் வங்கச் சொல்லித் தந்தான். அதனைச் செயல் படுத்தவே இதோ குடும்பத்தோடு வந்து விட்டனர்.

ராஜன், தங்கை கணவர்கள், தன்னிடம் உருகுவதைப் பார்த்து, நாயகம் எச்சரித்தது நினைவில் வந்து, தங்கைகள் இருக்குமிடத்தை அவசரமாக நோட்டமிட, நாயகம் மகள்கள் , மருமகளிடம் தனியே பேசவிடாமல் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.

ஆனால் சங்கீதா வினையமாக, நேரே பைரவியிடம் சென்றவள், " அண்ணி, நேத்திக்கு அப்படிப் பேசியிருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிக்குங்க அண்ணி" என வருத்தம் தெரிவிக்க, பைரவி உருகித் தான் போனார்.

ஸ்ரீமதி, ஸ்ரீநிதி இருவரும் ஆதிராவை , அழைத்து வருவதாகக் கெஸ்ட் ஹவுசுக்குச் சென்றனர். சங்கீதாவின் மகன், இதிலெல்லாம் கவனம் இல்லாமல், கேமராவும் கையுமாக எல்லா நிகழ்வுகளையும் படம் பிடித்தபடி திரிந்தான்.

தங்கைகளைப் பிசியாக வைத்தால், பைரவியை நெருங்க மாட்டார்கள் எனக் கணக்கிட்டு, அவரகள் மாமியார் வீட்டுச் சொந்தங்களைக் கார் அனுப்பி அழைத்து வர ஏற்பாடு செய்தார். அதே போல், சங்கீதா, கவிதா வீட்டினர் வந்து இறங்க, ஆரம்பம் முதலே, சம்பந்தி கெத்தை, ரமாபாய்க்கு மேலாகக் காட்டினர்.

கைலாஷின் தங்கைகள், கணவர்மார்களை முறைக்க, கைலாஷும், சௌந்தரி பாலநாயகமுமாக , சம்பந்திகளை வரவேற்று உபசரித்துப் பைரவி, ராணியம்மாவையும் அறிமுகப் படுத்த, தாங்களும் ராணியம்மாவுக்குக் குறைந்தவர்கள் இல்லை எனக் காட்ட, மருமகள்களை அதிகாரம் செது கொண்டே இருந்தனர். இதில் பைரவி பக்கம். தங்கைகள் செல்வதைத் தடுத்து வைத்திருந்தார் கைலாஷ்.

மெஹந்தி விழாவில், கையில் இடும் மெஹந்தியில், வருங்காலக் கணவர், பெயரை மறைத்து எழுதி வைப்பர். இதில் வந்திருந்த கண்ணிப் பெண்கள் எல்லாம், A என்ற ஆங்கில எழுத்தையே வரைந்து வைத்திருக்க, அதில் என்னனென்ன கலாட்டா, ஆர்ப்பாட்டம் பிரச்சனை, வந்தது, அடுத்தப் பதிவில்.

நிலவு வளரும்.

No comments:

Post a Comment