யார் இந்த நிலவு-53
திருமணத்தில், மஞ்சள், சிவப்பு வண்ணங்களை மங்களகரமாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அதுவும் பச்சையம் நிறைந்த இலைகள், அரைபட்டவுடன், நம்மில் அதன் சாயத்தைச் சிவப்பில் பூசிச் செல்வதையும், அந்த மணமகளின் புகுந்த வீட்டோடான பாசத்தையும் ஒப்பிட்டுக் கணக்கிடுகிறார்கள், பச்சை இலைகளாக இருக்கும் மருதாணியை மணமகளுக்கு இட்டு, அது சிவப்பதையும், அதே போல் மணமகளை வெற்றிலை தாம்பூலம் போட சொல்லி, அது சிவக்கும் பாங்கையும் வைத்தும் புகுந்த வீட்டில் அவர்கள் அன்யோன்யம் அனுசரிப்பதை , வடக்கு, தெற்கு என இரண்டு பிராந்தியங்களில் கணக்கிடுவர். இதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் உண்டா, நாம் அறியோம். ஆனால் சிவந்த கன்னங்கள் மட்டுமின்றி, கைகளும், அதரமும் கூட அழகு தானே.
இதோ, கே ஆர் மில்லிலும், அவர்களது மணவிழா, அவர்கள் குடும்பத்தார் மட்டுமின்றி, அங்கு வேலை செய்யும் பெண்களுமே திருவிழாவாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
மணமகளுக்கு மருதாணி வைக்கும் வைபவமான, மெஹந்தி ரஸம். ஆங்காங்கே, அமரும் மேடை போல் அமைத்து, குசன்களையும் போட்டிருந்தனர். மெஹந்தி வைப்பதற்கெனவே அழகுக்கலை நிபுணர்களை வரவழைத்து இருந்தனர்.
மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் , உறவினர்கள் வந்த வண்ணமிருந்தனர். எல்லாருமே, " ராஜாவோட பொண்டாட்டியா. ராச பரம்பரையாமாம். பையன், ஒன்னு, புள்ளை ஒன்னு இருக்குதாம். இவ்வளவு நாள் எங்கிருந்தாங்கலாம், என ஆளாளுக்கு, கதையளந்து கொண்டிருக்க, சிலர் கஸ்தூரி, சங்கீதா, கவிதா இவர்களை இழுத்துப் பிடித்து வைத்து விவரம் கேட்டனர். சௌந்தரிக்குமே அவர்களைச் சமாளிப்பது பெரிய வேலையாகத் தான் இருந்தது. அபரஞ்சி, சாரதாவும், சௌந்தரி சம்பந்திகளை அவ்வப்போது பேசி மருமகள்கள் பக்கமே அவர்கள் கவனத்தைத் திருப்பி விட்டனர்
மற்றொரு பக்கம், ரமாபாயோடு வந்த கூட்டத்தவர், டோல் வாசித்து, பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி மெஹந்தியை சிறப்பிக்க வந்திருந்தனர்.
ரமாபாய், பைரவி இருக்குமிடம் வந்தவர், மகளின் கைவளையல்களை மட்டும் கழட்டச் சொல்லிப் பத்திரப்படுத்தி விட்டு, அதன் மதிப்பை ஈடு செய்ய மற்றொரு நவரத்தின ஆரத்தை மாட்டி விட்டார். ரதாபாய் , கழட்டிய வளையல்களைப் பத்திரப்படுத்தி , பாலாஜிராவிடம் கொடுத்தார். அதன் மதிப்பில் இன்னும் ஒரு மில்லை விலைக்கு வாங்கலாம், அதனால் அவை அவர்கள் பொறுப்பில் தான் இருந்தது.
" ஆயி, சகுன் மெஹந்தியா, உள்ளங்கையில் மட்டும் வச்சா பத்தாதா. வளையல் எல்லாம் எதுக்குக் கழட்டுறீங்க" எனக் குறைபட,
" சுப்கர், உன் விவாகத்தை எப்படியெல்லாம் நடத்தனும்னு ஆசைப் பட்டேன். அப்போ நடக்கலை, இத்தனை வருஷம் கழிச்சு வாய்ப்புக் கிடைச்சிருக்கு. அதை விடுறதா இல்லை. அதுவும் போக, தாமாத்ஜி வீட்டு ஆட்கள் முன்னாடி, நாம யாருன்னு காட்டனும்" என்றவர், கௌரியிடம், " உன் தீதி சாப்பிட்டாளா" என வினவவும்,
" ஆச்சு. தீதி சாப்பிடலைனா, ஜீஜு விட்டுருவாரா என்ன." என்றவர் ரமாபாயிடம் தூரத்தில் வரும் கைலாஷை கண்காட்ட, கையில் பெரிய கண்ணாடி குவளையில் மாதுளம்பழ சாற்றை நிறைத்து, இவர்களை நோக்கித் தான் வந்து கொண்டிருந்தார்.
" ஆயி, உங்க தாமாத்ஜி தொல்லை தாங்க முடியலை. இப்ப தான் சாப்பிட்டேன். ஒரு ரொட்டியை வேண்டாம்னு சொன்னேன். ஜூஸோட வர்றாங்க. உலகத்திலையே மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டு, கௌரி விரதமிருக்க ஆள் நானா தான் இருப்பேன்" எனப் புலம்ப, ரமாபாயும், கௌரியும் சிரித்துக் கொண்டனர்.
அவர்களை நெருங்கிய ராஜன், " அம்மணி, நீ சரியா சாப்பிடலையில்ல, இதைய மட்டும் குடிச்சிடு" என நீட்ட. " ராஜ், ப்ளீஸ், என் வயித்தில இடமே இல்லை. " எனச் சிணுங்க.
" நீ என்ன சின்னப் புள்ளையா அம்மணி. அடம்பிடிக்காத குடிச்சு போடு. மருதாணி வைக்க, நெம்ப நேரம் உட்காரனுமாம்ல, உன்ர தங்கச்சி சொன்னாங்க. " என விளக்கம் தரவும், ரமாபாய் புன்னகை மாறாமல் பார்த்திருந்தவர்.
" நானும், அதை தான் தாமாத்ஜி, சொல்றேன். உங்க தர்ம பத்தினி, சம்பிரதாயத்துக்கு உள்ளங்கையில் உங்க பேர் மட்டும் எழுதச் சொல்றா" எனக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, மனைவியைச் சலுகையாய் முறைத்தவர்
" ஏன் அம்மணி, இந்த இளிச்சவாயனை கட்டுறதுக்கு, இது போதும்னு நினைச்சிட்டியாக்கும்" எனவும், பைரவி " ராஜ்" என ஆட்சேபித்தவர், ரமாபாயிடம்,
" ஆயி, புதுப் பொண்ணு மாதிரி, இரண்டு கை, இரண்டு கால்லையும், முழுசா போட சொல்லுங்க. இன்னும் எவ்வளவு நகை இருக்கோ எல்லாத்தையும் கொண்டு வந்து போடுங்க, போட்டுக்குறேன்" என்று விட்டு, கணவரைப் பார்த்து, " இப்போ ஒத்துக்குவிங்களா" என வேகமாகக் கேட்கவும்,
" அதைய கொஞ்சம் சந்தோஷமா, சிரிச்சுக்கிட்டு சொல்லுங்க அம்மணி" எனத் தான் சிரித்துக் காட்டவும், ரமாபாய், கௌரியும் அவ்விடம் விட்டு வேறு வேலை இருப்பது போல் நகர்ந்து விட, கைலாஷ், மனைவியின் அருகில் அமர்ந்து, பழச்சாறை குடிக்க வைத்தவரிடம் , " உங்க தங்கச்சி, என்கிட்ட மன்னிப்பு கேட்டா." எனத் தகவல் தர,
" சந்தோஷம், அதுக்காக நெம்ப மகிழ்ந்திராத, அவிக உறமுறையெல்லாம் வந்திருக்காங்க, ப்ளேட்டை மாத்தினாலும் மாத்துவா, எதாவது பேசினாலும், மனசில எடுத்துக்காத. " என எச்சரித்தவர் " எங்கிங்க அம்மணி பசங்களைக் காணோம். இந்த ராஸ்கோலு தேடிப் போனான் அவனையும் காணோமே" என யோசனையாகக் கேட்கவும்.
" நீங்க தான், உங்கள் பிள்ளைகளை எழுப்பாதேன்னு சொல்லிட்டிங்க. இப்ப தான் போச்சுங்க, கிளம்பி வரனுமே" என்ற போது, பழச்சாற்றை அவர் முடித்திருக்க. திருப்தியாகச் சென்றார்.
கெஸ்ட் ஹவுஸில் நுழைந்த, ரஞ்சனியிடம், எதிரே வந்த ஆராதனா, " ரஞ்சி, ஒரு சின்ன ஹெல்ப், ஆதிரா தீதி ரூம்ல இருக்கா, ஹாப்சேரி மட்டும் பின் பண்ணி விடு. நானிமா கூப்பிட்டாங்க. நான் முன்னாடி போறேன்" என்று விட்டுப் போக, ரஞ்சனி, அபிராமிடம்,
" டேய் அண்ணா, அண்ணி வர லேட்டாகும், அதுக்குள்ள நீ போய்ச் சாப்பிட்டு, எங்களுக்கு டிபனை எடுத்திட்டு வந்திடு. " என அன்பு கட்டளையிட,
" ரஞ்சி, நான் வேணா, ஆரா பேபிக்கு ஹெல் பண்றேன். நீ போய்ச் சாப்பிட்டு வா கண்ணு" எனப் பாசமலராகத் தங்கையிடம் சொல்ல, "ராஜா மாமாவுக்குப் போன் போடட்டுங்களா ப்ரதரு " என வினவவும், " சதிகாரி, போடி" என முணங்கிக் கொண்டே அபிராம் பக்கவாட்டு வழியாக ,காரிடாருக்குச் சென்றான்.
ரஞ்சி, சிரித்தபடி, எதிரே வந்த வேலையாட்களிடம், ஆதிராவின் அறையைக் கேட்டு , அதை நோக்கிச் சென்றாள்.
ஆதிரா வெகு நேரம், ஆராதனாவுக்காகக் காத்திருந்தவள், அவள் வராததால், ' பூஜைக்கு நேரமாயிடிச்சு, ஆயி திட்டுவாங்க' என்ற படி , தாவணியை ஷால் போல அள்ளிப் போட்டு, ஒட்டியாணத்தைக் கட்டிக் கொண்டு, தழையத் தழைய இருந்த பாவாடையை இரண்டு புறமும் கைகளால் தூக்கிப் பிடித்துக் கொண்டு பக்கவாட்டு, படி வழியே, இறங்கி வர, தாவணி தரையைக் கூட்டிக் கொண்டு வந்தது.
வளைவில் திரும்பிய அபிராம், தரையிறங்கி வரும் தன் தேவதையைப் பார்த்தான், அடர் பச்சை நிற கையில்லாத சோளி, தரையைக் கூட்டும் அதே வண்ண பாவாடை, கோல்டன் ஷால், அவள் தோளிலிருந்து தொங்கியது. அந்தப் பொன் வண்ண தாவணி, சந்தன நிறத்தவளின், இடையையும், இடைப்பட்ட அவள் அழகையும் மறைக்க முயன்று தோற்றுக் கொண்டிருக்க, அபிராமின் இதயத் துடிப்பும் எக்குத் தப்பாக எகிறியது.
மின்னலென "ஆரா பேபி" எனக் குரல் கொடுத்தபடி அவன் விரைய, அதில் அதிர்ந்தவள், பாவாடையைப் பிடித்த கையை, உயர்த்தி மாராப்பை இறுக்கிப் பிடித்தபடி இறங்க, நான்கு படி இருக்கும் போதே, தன் பாவாடையில் தானே தடுக்கிக் குப்புற விழ, நிலத்துக்கும், நிலவுக்குமிடையே அபிராம் புகுந்தான். அதனால் நிலவு நிலத்தில் அடிபடாமல் தரையிறங்க, தாங்கியவன் தான் நேற்று போல் இன்றும், " ஐயோ, போச்சே" என நிலத்தில் கிடந்தான்.
" ராம், சாரி, சாரி,சாரி" எனப் பிதற்றியவள், "எங்க பேபி வலிக்குது. இங்க பாருங்க" என அவன் கன்னத்தைத் தட்டி, கண்ணை முழிக்கச் செய்ய முயல, ஒரு நொடி வலியில் மூடியிருந்த கண்ணை எரிச்சலாகத் திறந்தவன் , கண் முன்னே, நிலவின் முகமும், அவன் மேல் சாற்றப்பட்ட தங்கக் கவசம் போல் அவளும் கிடக்க, வலி மறந்து, அவள் வளைவுகளைக் கணக்கெடுக்க ஆரம்பித்தான். அவன் முகத்தையே பார்த்திருந்தவள்,அவன் பார்வை மாற்றத்தைக் கண்டு கொண்டு, அதன் வீச்சுத் தாங்காமல், " பர்தமிஷ்" என வசை மொழிந்தபடி, அவனை விடுத்து எழ முயல, இசகுபிசகாகச் சுத்தியிருந்த தாவணி மீண்டும் ஒரு முறை அவர்களை ஓர் பந்தத்துக்குள் கட்டியது.
தடால் என்ற சத்தத்தில், தயாராகிக் கொண்டிருந்த ஆதர்ஷ், அரையாடையாக " ஆது" எனக் குரல் கொடுத்துக் கொண்டே வந்து பார்க்க, அங்கப்பிரதட்சணம் செய்து கொண்டிருந்த, தங்கையையும், மச்சானையும் பார்த்து, தலை குணிந்தடி, " மச்சி, இதெல்லாம் திட்டம் போட்டு செய்வியா" எனக் குரல் கொடுக்க " ஐயோ, பாவு" என்ற ஆதிரா, அவசரமாக எழுகிறேன், என அபிராம் மீதே, கட்டி உருண்டாள்.
" அடியேய், இருடி" என அபிராமும் லோக்க்கல் பாஷையில் இறங்கினான். நேற்று போலவே இன்றும், பாதுகாவலர்கள் நாசூக்காக விலகி நிற்க, அபிராம், ஆதிராவை விடுவித்து, தனியே நிறுத்தி, தானும் எழுந்தவன், அவளை மறைத்து நின்றபடி,
" டேய் மச்சி, ரஞ்சி, உன்ர தங்கச்சியைப் பார்க்க மேல வந்தா அவளை வரச் சொல்லு,ஸஒரு தாவணி கூடக் கட்டத் தெரியாத இருக்கா," எனச் சத்தமாகச் சொன்னவன்,
"விட்டா ஃபீரி ஷோ காட்டுவாலாட்டத்துக்கு " எனக் கடுப்பான குரலில் மெல்லச் சொல்ல, ஆதிராவுக்குக் கோபம் வந்தது, " ஓஹோ, அப்ப இத்னே தேர் தக், தூ ஃப்ரி ஷோ, தேகா ஹை க்யா" எனக் கோபமாக மொழிந்து அவன் நெஞ்சில் அடிக்க, மாடிப்படி வளைவுக்கு அவளைக் கடத்தியவன், "முதல்ல தாவணியை சரியா போடு பேபி" என அவளுக்கு உதவுவதாக, ஆங்காங்கே பிடித்து இழுக்க, " ஹேய், மார் டாலூங்கி" என எகிறினாள் ஆதிரா.
" அடேங்கப்பா, அடிடி பார்ப்போம்" என அபிராம் அவளை வம்பிழுத்தபடி முன்னேற, " நஹி, நோ, வராதே" என எச்சரிக்க, அதிலேயே கிளர்ந்தவன், தானும் மாமனைப் போல் சொல் பேச்சுக் கேட்காதவன் தான் என மாமன் மகளுக்கு நிரூபித்தான்.
அழகு பதுமைகளாக, கொங்கு தமிழ் பெண்களுக்கே உரிய வனப்போடு , ரஞ்சனி, ஸ்ரீமதி,ஸ்ரீநிதி ஆகியோர் ஒரு வரிசையிலும், மறுபுறம், கொங்கணக் கரை தந்த அழகோடு ஆராதனாவும், இரண்டையும் ஒருங்கே பெற்ற முழு நிலவாக, அபிராம் மனம் கவர்ந்த ஆதிராவும் மெஹந்திவாலிகள் முன் கை நீட்டி அமர்ந்திருக்க, நாடு நாயகமாய் , ராணிக்கே உள்ள மிடுக்கோடு, கைலாஷ் ராஜனின் ராணி, பைரவிபாய் போஸ்லே புன்னகை முகமாக அமர்ந்திருந்தார். நாற்பதின் பின் வரிசையில் வயதைத் தொட்டவருக்கு, இது போல் அலங்காரம் செய்து கொள்வதில் சங்கோஜம் இருந்த போதும், பெற்றவள், மற்றும் தன்னைப் பாதியாய் பெற்றவரின் ஆசைக்கு இணங்கி அமர்ந்திருந்தார்.
ராதா பாய், மெஹந்தி வைக்கும் பெண்ணிடம் கலந்து பேசி, வாவரசிகள் வைக்கவேண்டிய சடங்கு மெஹந்தி புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்க, ரமாபாய், சௌந்தரியை முதல் சடங்கைச் செய்ய அழைத்தார். சௌந்தரி, மகனுக்காகச் செய்யும் மங்கள சடங்கு என, முழு மகிழ்ச்சியோடே வந்து, மருமகளைத் திருஷ்டி கழித்து, உச்சி முகர்ந்து முதல் மருதாணியை வைக்க, உறவினர் கூட்டமே வியக்கத் தான் செய்தது.
அடுத்து, அபரஞ்சி, சாரதா எனச் சடங்கைச் செய்து முடிக்க, “ஆயி, நீங்க வைங்க” எனப் பைரவி ரமாபாயை அழைத்தார், “சுப்கர், சுபகடில நான் இங்க நிற்கவே கூடாது, சம்பந்த பக்கம் முறை தெரியாதேன்னு தான் நிக்கிறேன், சுமங்கலிகள் வைக்கட்டும்” என வாக்குவாதம் செய்ய, பைரவி, கண்ணால் தன கணவரைத் தேடினார்.
பாரு, மனதில் நினைத்தாலே கைலாஷ் அங்குப் பிரதட்சிணம் ஆகிவிட மாட்டாரா என்ன, அடுத்த நொடி அங்கு வந்தவர், “சாஸுமா, நீங்க உங்க மகளுக்கு, கட்டாயம் வைக்கிறிங்க” எனப் பிடிவாதம் பிடித்து, அவரின் மறுப்பை எல்லாம் மறுத்து, தானே மெஹந்தி கோனை வாங்கி, மாமியார் கை பிடித்து, மனைவியின் கையில் வைத்தார்.
ரமாபாய் , எப்போதும், தாமாத்ஜி என மருமகனை அழைப்பவர், இன்று உணர்ச்சி மிகுதியில், “ பேட்டாஜி, அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி, உங்க மேல எனக்கு முழு நம்பிக்கை உண்டு. பைரவியைக் குற்றம் குறை பார்க்காமல், பெருந்தன்மையா ஏத்துக்கிறிங்களே, என் மகள் கொடுத்து வச்சவ தான். எந்தக் குறையா இருந்தாலும், நான் பொறுப்பு எடுத்துக்குறேன், அவள் கிட்ட நிறையை மட்டும் பார்க்கிறதுக்கு நன்றி.” என உணர்ச்சி வயப்பட, “சாஸுமா , பாருவோட சேர்ந்தா தான் , கைலாஷுக்கு நிறைவு, இது இந்த அம்மணிக்குப் புரிஞ்சா போதும்” என அவரும் வார்த்தையாட , “பாபா, மஸ்து ,படியா மஸ்து” என ஆதிரா சொல்லவும்,
“பையு, இந்த முல்கி , உன் பாபாவைப் பார்த்தது கூட இல்லை, ஆனால் அவர் வார்த்தையைச் சொல்றாளே, எப்படி” என வியந்தார் ரமாபாய்.
“நானாஜி மாதிரி இருந்தும், நீங்க பரம்பரை நகைகளை, ஆயிக்குத் தான் தருவேன்னு சொல்லிட்டீங்கல்ல , இருக்கட்டும் பார்த்துக்கறேன்” என ஆதிரா குறை பட
“ரஜ்ஜும்மா, அவிக சொல்றதும் சரிதான கண்ணு, உன்ர ஆயிதான் ராசகுடும்பம், நீ இந்த ராசாவோட மகள் தான, கைலாஷ் மகளுக்கு எப்படிச் செய்வோமோ அப்படிச் செய்வோம் கண்ணு “ என அவர் சொல்லவும், “பையு , உன் முல்கியை பார்த்தியா , நாம பேசினதை ஒட்டுக்கேட்டு, சரியா அவள் பாபாட்ட போட்டுக் கொடுக்குறா பாருடி” எனக் குற்றப் பத்திரிகை வாசிக்க, பைரவி சிரித்துக் கொண்டார்.
ஆதர்ஷ், சற்று தாமதமாகவே வந்தவன், ஆயி பவானியை வணங்கிவிட்டு, தன் ஆயியின் மெஹந்தியையும் வந்து பார்க்க, பைரவி மகனிடமும் சலுகையாக , அவன் பாபாவும், நானிமாவும் செய்வதைச் சொல்ல, " ஆயி ,என் கண்ணே பட்டிடும் போல அம்சமா இருக்கீங்க. எங்களுக்குத் தீதி மாதிரி தான் இருக்கீங்க. " என அவர் கன்னத்தில் முத்தமிட ,
" நீயும், அவங்களோட சேர்ந்திட்ட, போ பாபா" என்றவர், மகன் சிரிக்கவும் , அது அவன் கண்கள் வரை அடையாததைக் கண்டு காரணம் கேட்க, " நீங்க பாபாவைப் பார்த்திட்டு, யாரை பார்த்திங்கனாலும் அப்படித் தான் இருக்கும். தேவதையா என் ஆயி, அவருக்கிட்ட வர்றாங்களே, அந்தச் சந்தோஷம். " என வம்பிழுக்க, கைலாஷ், " நீயும் சந்தோஷமா இருக்கனும்னா சொல்லு கண்ணு, ஒரு பொண்ணைப் பார்த்திடுவோம்" எனவும், ஒரு நொடி ரஞ்சியை நோக்கி வந்தது அவன் பார்வை. சற்று முன் நடந்ததை நினைவில் கொண்டு வந்தவன், நொடியில் தன்னைச் சமாளித்துக் கையெடுத்துக் கும்பிட்டு ,
"பாபா, இந்தப் பேச்சே வேண்டாம். ஆது சொல்ற மாதிரி, நாம முதல்ல ஹாப்பிப் பேமலியா இருந்துப்போம். பெத்தவர், மகனை, அப்பானு கூப்பிட வைக்கவே ஆயிரம் நாடகம் ஆடவேண்டியிருக்கு. இந்தப் பொழப்பு நம்மோடவே போகட்டும் பாபா “ என ஆதர்ஷ் விளையாட்டு போலவே சொன்ன போதும், அவன் முகத்தில் சனத்தில் தோன்றி மறைந்த வேதனையைப் பெற்றவர்கள் கவனிக்கத் தவறவில்லை.
“அப்படியின்னு யாரு கண்ணு சொன்னது, மருதமலையில உட்கார்ந்திருக்க முருகனே, வளர்ந்த பிறகு தான்,அவிக அப்பன் கைலாஷன்கிட்ட வந்தாரு, முருகேன் அப்பனுக்கே பாடம் சொன்னவர், நீயும் அப்படித்தான் கண்ணு, இதைப் புரியாதவிக சொல்ற வார்த்தையெல்லாம் , மனசில எடுத்துக்காத கண்ணு” எனத் தங்கைகள் தான் எதுவும் சொன்னார்களோ என , மகனைத் தேற்ற, மற்றொரு புறம் அமர்ந்திருந்த மருமகள்களில் ஒருத்தியை அது தாக்கியது.
“ பாபா, நான் சும்மா சொன்னேன், அதை விடுங்க, ஆயி உங்க கையில பாபா பெயரை என்னனு எழுதப் போறீங்க, கே ஆர் னு ,ஷார்ட் பார்மா, இல்லை கே மட்டுமா, அது எந்த மொழியில் இருக்கும். எதுவா இருந்தாலும் , இந்த ஒன் ஹவர்ல எழுதுங்க, நான் அவரைக் கடத்திட்டுப் போறேன், பாபா வந்து கண்டுபிடிக்கட்டும்.” என நீளமாக, அப்பாவிடம் ஆரம்பித்து அம்மவிடம் பேச, கைலாஷ் மனைவியைப் புருவம் உயர்த்தி வினவினார், "கண்டுபிடிங்க" என அவரும் கண்களாலே சவால் விட, " நீ என்ன எழுத சொல்லுவேன்னு தெரியாதாக்கும் , கண்டுபிடிக்கிறேன் பாரு அம்மணி' என இருவரும், விழிவழி பேசிக் கொண்டிருக்க, “தர்ஷு, நீயே துப்பு கொடுத்துடுவ போல இருக்கே, நீ முதல்ல உன் பாபாவை கூட்டிட்டு போ” என ராதாபாய் அப்பாவையும் மகனையும் விரட்ட, அது என்ன சடங்கு என மற்றவரும் அறிந்து, அவரவர் கணவர் பெயரை கைகளில் வரையச் சொன்னார்கள்.
பைரவிக்கு மெஹந்தி வைக்க ஆரம்பிக்கவும், மற்ற கன்னிப் பெண்களுக்கும் அடுத்தடுத்துக் கைகளில் மெஹந்தி வைக்க ஆரம்பிக்க, சோலாப்பூரிலிருந்தது வந்த குழுவினர், பொழுதைக் கழிக்க, டோல் வாசித்தபடி , ஆடி பாடினர்.
ரமாபாய், ராதாபாய் ,கைலாஷின் தங்கைகள், கஸ்தூரி, சௌந்தரி, அபரஞ்சி, சாரதா எல்லாருக்கும் தனித் தனியாக மெஹந்தி போடுபவர்களை நியமிக்க, “காலம் போன கடைசியில் எங்களுக்கு எதுக்குங்க’ எனப் பெரியவர்கள் மறுக்க.
“ வயசான என்ன, உங்களைப் பார்த்து ரசிக்க, இன்னும் உங்க கணவன்மார் இருக்காங்கல்ல, தாம்பூலம் வாங்கிற மாதிரி, இதுவும் ஒரு சுபமான சடங்கு தான் , கையில் மட்டும் வச்சுக்குங்க” என வலியுறுத்தி எல்லாருக்கும் போடா வைக்க, மூத்த தலைமுறையைத் தேடி வந்த , நாயகம், ராமு, சுப்பு தான் “கிழவிகளுக்கு எதுக்குங்க அம்மணி“ என ரமாபாயை வினவினர்.
“எங்க ஊரில் ஒரு பழக்கம், மெஹந்தி எவ்வளவு நல்லா சிவந்து நிறம் கொடுக்குதோ, அந்த அளவு, அவங்க புருஷன் , பொண்டாட்டி மேல பாசமா இருப்பாங்கன்னு ” என ஒரு குண்டை தூக்கிப் போட,
“சரியா செவக்கலையினா” என ராமு விவரம் கேட்டார், “நீங்க, அபி தீதி மேல வச்சிருக்க அன்பு பத்தாதுன்னு அர்த்தம்” எனக் கோர்த்து விட, “அதுக்கு என்னங்க அம்மணி செய்யறத்துங்க ’ எனச் சுப்பு விவரம் கேட்க,
“பாபிஜி, கையில வச்சிருக்க மெஹந்தி காயிற நேரம் , அவங்களோட அன்பா பேசிட்டு இருங்க, அவங்க தேவைகளைக் கவனிச்சுக்குங்க மெஹந்தி சிவந்திடும்”என ரமாபாய் ஒரே போடாகப் போடா, “ இருக்குமோ”எனக் கணவன்மார்கள் யோசனையில் ஆழ்ந்தனர்.
“நானிமா, அப்போ நாங்க”என ஆராதனா கேள்வி கேட்க, “உன் முறை பையனைக் கூப்பிட்டுப் பக்கத்தில் உட்கார வச்சுக்கோ” எனக் கேலியாகச் சொல்ல, அவள் உடனே அபிராமை அழைக்க, ஆதிரா முறைத்தாள். " உனக்காகத் தான் தீதி கூப்பிடுறேன்" எனச் சமாளித்தாள்.
"ஸ்ரீமா, நீங்களும், உங்க மாமன் மகன், முறை மாப்பிள்ளை , ஆதர்ஷ் மாப்பிள்ளையைக் கூப்பிட்டு உட்கார வச்சுக்கோங்க" எனச் சங்கீதா கணவன் சந்திர மோகன் எடுத்துக் கொடுக்க, "மாப்பிளைங்க வாங்க" எனக் கவிதாவின் கணவனும், மனைவி அருகில் சென்று உட்கார்ந்து கொண்டு வாங்க பழகலாம் ரேஞ்சில் கூப்பிட, ஆதர்ஷ் அங்கே விழியொட்டியவன், நடுவில் அமர்ந்திருந்த ரஞ்சி அவனை முறைத்ததில் அரண்டவனாக, " எனக்கு மெஹந்தி வாடையே ஆகாது அங்கிள், ஆயிக்கக் தன வந்தேன்" என்றவன், விஜயனும், பாலாஜிராவும் நின்ற இடத்துக்கு விரைந்தான்.
விஜயன் அபிராமையும் , முக்கியமான விஷயம் பேச வேண்டும் என அழைக்க, அபிராம் , “ஆரா பேபி, என்ர பேரை எழுதி வையி, நான் வந்து கண்டுபிடிக்கிறேன்” என்றான்.
“ஆசை, ஆசை. நான் என் பேரைத் தான் எழுதுவேன், நீங்க போங்க” என ஆதிரா அனுப்ப, “ஜீஜு , நான், உங்க பேரை எழுதுக்கிறேன்” என ஆராதனா கேலி பேச, “ஆயி பவானி, யாரை யாருக்குனு , லிபியில் எழுதி வச்சிருக்காளோ ,அது தான் அமையும் .” எனப் பைரவி விளக்கம் தந்தார்.
இந்த விஷயத்தைச் செவிமடுத்த,கைலாஷின் தங்கைகள், அண்ணியைத் தங்கள் வழிக்குக் கொண்டு வர, இப்படி ஒரு உபாயமா என யோசித்து, தங்கள் மகள்கள் ,ஸ்ரீ சகோதரிகளுக்கு , ஆதர்ஷ் பெயரின் முதல் எழுத்தான ஆங்கில A வை வரையும் படி மெஹந்திவாலிகளிடம் ரகசியமாகச் சொன்னார்கள்.
ஆதர்ஷுக்கு இருவரில் ஒருவரையாவது மணமுடித்து விட வேண்டும், என நினைத்தனர், அதுவும் சற்று முன், மகள்கள் வந்து ரஞ்சியைப் பற்றிச் சொன்ன விஷயம் அவ்வளவு உவப்பாக இல்லை. ஏற்கனவே, தங்களை விட அண்ணன் கைலாஷ், கஸ்தூரியை , தங்கையென அதிகம் உரிமை பாராட்டுவார். அபிராமை , தன வாரிசு போலவே வளர்த்தார். இப்போது ஆதிராவோடான அவனது இணக்கத்தைப் பார்க்கும் போது, அண்ணன் அதற்குப் பச்சை கோடி காட்டிவிட்டார் என்பது புரிந்தது. மூன்று தலைமுறையாக நாயகம், ராமசாமி குடும்பம் நெருங்கியிருக்க, ரஞ்சனியும், ஆதரஸோடு சேர்ந்தால், தாங்கள் மொத்தமாக அந்நியப் பட்டுப் போவோம் எனக் காயை நகர்த்தினர்.
ரமாபாய், அர்த்தப் புன்னகையோடு, எல்லாரையும் பார்வையிடுவது போல் பன்னீர் அமர்ந்திருந்த இடத்தின் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொள்ள , பாலாஜி ராவ் யோசனைகளைக் கேட்டுச் சென்றார். ரமாபாயையே பார்த்திருந்தவர், “ஏனுங்க அம்மணி, இந்த மருதாணி கதையெல்லாம் நிஜம் தானுங்களா, இல்லை இதுலயும் உங்க ராஜதந்திரம் இருக்குதுங்களா” என வினயமாகவே கேட்டார், ஏனெனில் உறவினர் கூட்டத்தில், இந்த ராணியம்மாவும், தானும் மட்டுமே வேலையில்லாமல் அமர்ந்திருப்பதைப் போல் தோன்றியது.
ரமாபாய் சிரித்துக் கொண்டவர், ‘உங்களுக்கு எப்படித் தோணுதோ, அப்படி வச்சிக்குங்க “ என்றவர்,தம்பதிகளின் செய்கையைக் கவனிக்கச் சொன்னார்.
“நீங்க என்ர மேல, எவ்வளவு பாசம் வச்சுருக்கீங்கன்னு இன்னைக்குப் பார்க்கிறேன்” எனச் சாரதா சவால் விட, சுப்பு முழித்தார்.
“ ரஞ்சி டார்லி, உம்பட மெஹந்தி தான், மத்தவிகளோட நல்லா சிவக்கும், பாருவேன்” என ராமசாமி, மனைவிக்கு உற்சாகமூட்டிக் கொண்டிருக்க, “அப்படியா சொல்றீங்க, எனக்கென்னமோ நம்பிக்கையில்லை , ராணியம்மாட்ட கடலை போடமுன்ன சொல்லியிருந்தா நம்பியிருப்பேனுங்க”எனத் திரும்பிக் கொள்ள, “என்ன அம்மணி, இப்படிச் சொல்லிப் போட்ட” என மனைவியைச் சமாதான படுத்துவதில் முனைந்திருந்தார்.
நாயகம், மருமகள், மகள்கள், பேத்திகள் எல்லாரையும் ஒரு பார்வையிட்டு , தண்ணி, வெண்ணி வேண்டுமா எனக் கேட்டு வந்தவர்,கடைசியாக மனைவியிடம் வந்து அமர்ந்து கொண்டு, “ சௌந்தி , உன்ர மருதாணி தான் மத்தவிகளை விட வேகமா நிறம் கொடுக்குது, இல்லை கண்ணு” என மெஹந்தி போடும் பெண்ணிடமும் கேள்வி எழுப்ப, “ஆமாங்க தாத்தா” என அவளும் தலையை ஆட்ட, “அந்த இடத்தில் ஒரு பானா எழுது கண்ணு” என மெஹந்தி வைக்கும் பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்க,
“இது என்னத்துக்கு, இத்தனை ஆட்டம், எல்லார் மெஹந்தியையும் விட என்ர மருமகள் கையில வைக்கிற மெஹந்தி தான், நல்லா சிவக்குமாக்கும் ,என்ர மகனளவு, எந்த ஆம்பலையும் , அவரவர் பொண்டாட்டியை நேசிக்க முடியாது” எனச் சௌந்தரி ஒரே போடாகப் போட.
“ எங்க அப்பா, உங்களுக்கு என்ன குறை வச்சாங்களாம், நீங்க தானுங்க அம்மா, அவிக அன்பை புரிஞ்சுக்கத் தெரியாதவிக” எனச் சின்ன மகள் கவிதா, நாயகத்துக்கு ஆதரவுக்கு வர, “அப்படிச் சொல்லு கண்ணு, உன்ர அம்மாளுக்கு அவ மகன் தான் உசத்தி”என மனைவியை முறைத்து நின்றார்.
“பாலா, இப்படி முறைச்சியினா, தங்கச்சி மருதாணி எங்கிருந்து சிவக்கும்” எனப் பன்னீர் இங்கிருந்தே குரல் கொடுக்க, “உன்ர தங்கச்சி , என்னை நல்லவன்னு ஒத்துக்கிட சொல்லு, அப்புறம் மத்த பட்டமெல்லாம் கொடுப்ப” என அங்கிருந்து நகர, “அத்தை”எனப் பைரவி பஞ்சாயத்துக்கு வர, “உன்ர மாமனுக்கு என்ன வேலை, அவருக்கு, உன்ர கையை விட, என்ர கை நல்ல செவந்து, ராஜாவை விட, இவர் உசத்தினு காட்டணும்” எனக் கணவரின் குட்டை போட்டு உடைத்தார். பாலா முறைத்துக் கொண்டு போக,
அவரது மகள்கள் , “ மெஹந்தி சிவகாம இருக்கட்டும், இருக்கு உங்களுக்கு” கணவன்மார்களை மிரட்டிக் கொண்டிருக்க, உறவு முறையில் ஒருவர், இரண்டு மனைவிகளோடு வந்திருந்தவர் பாடு மிகவும் திண்டாட்டமாகிப் போனது.
பெண்கள் கைகளில் மெஹந்தி வைத்துக் கொண்டிருக்க, கைலாஷ் தலைமையில், பாலாஜி ராவ், ஆதர்ஷ், விஜயன், அபிராம் , துப்பறிவாளர் ரஞ்சன் ஆகியோர் முக்கியமான ஆலோசனையிலிருந்தனர்.
ரஞ்சன், “பீமன் ஆட்களை, தமிழ்நாட்டை விட்டே கடத்தியாச்சு. மஹந்த் போஸ்லேவை , புது டீம் ஒன்னு இறங்கி ஊர் பூரா தேடுறாங்க. நாளைக்குக் காலைல போஸ்லேக்கள் வந்து இறங்குறாங்க. ஜெயந்த் கெய்க்வாட் மருமகன்கள் வந்தாங்கன்னா , விஷயம் சீரியஸ் ஆகும். சண்டையா , சமாதானமா நீங்க தான் முடிவெடுக்கணும்” எனக் கைலாஷிடம் கேள்வியை முன் வைக்க, “சமாதானமா, போறதா இருந்தா, அவிக,என்ன டிமெண்ட் வைப்பாங்க” எனக் கைலாஷ் எதிர் கேள்வி கேட்க.
பாலாஜி ராவ், “வேறென்ன,அவங்களுக்குச் சொத்து வெளியே போகக் கூடாது. வெளி ஆட்களும் உள்ள வரக் கூடாது. பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கணும்னு , சம்பந்தம் பேசுவாங்க. “எனச் சொல்லவும், அபிராம் தான், மாமா என்ன சொல்லுவாரோ என அதிர்ந்தான்.
“உங்க அபிப்ராயம்”எனப் பாலாஜி ராவையே கைலாஷ் கேட்டு நிற்க, “ உங்க பிள்ளைகள் வாழ்க்கை சம்பந்தப் பட்டது. நீங்க தான் முடிவெடுக்கணும். இல்லை, சம்பந்தம் வேண்டாமுன்னு முடிவெடுத்திங்கனா, சோலாப்பூர் கிளம்பி வாங்க. நிறையப் பிரச்சனை உங்களை வரவேற்கத் தயாரா இருக்கு” என்றார்.
ஆதர்ஷ் இடையிட்டு , “பாபா, ஆதிராவை , நம்ம பிரச்சினைகளுக்குள்ள கொண்டு போக வேண்டாம் , அவள் விருப்பப்படி அபிராம் கூட நிச்சயம் பண்ணிடுங்க. ஆயி அளவுக்கு அம்சமா இல்லைனாலும், போஸ்லே குடும்பத்து பொண்ணு ஓகே தான். நான் அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன், மூணு வருஷம் கழிச்சுக் கல்யாணத்தை வச்சுக்கலாம்னு பேசி முடிங்க. நீங்களும் ,ஆயியும் ரொம்ப வருஷம் கழிச்சு சேருரிங்க. புதுப் பிரச்சனைகள் வேண்டாம் ” என யோசனை சொல்லவும், கைலாஷ், இவ்வளவு தெளிவாகப் பேசும் மகனையே பார்த்திருந்தார்.
மெஹந்தி , யாருக்கு எப்படிச் சிவந்தது, அது இளம் பெண்களின் தலைவிதியை நிர்ணயிக்குமா, கைலாஷ் என்ன முடிவெடுப்பார், பொறுத்திருந்து பார்ப்போம்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
நிலவு வளரும்.
No comments:
Post a Comment