Monday, 30 May 2022

யார் இந்த நிலவு- நிறைவு பகுதி.

 யார் இந்த நிலவு- நிறைவு பகுதி. 

"சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்

சுவையெல்லாம் பணிவெல்லாம் கோவையில்தான்

ஏனுங்க என்னங்க ஆமாங்க!

மானுங்க இருக்குங்க வேணுங்களா!

புடுச்சுதுங்க 

மலப்பழமும் இருக்குங்க

எடுத்துக்குங்க தேனுங்க

கையெடுங்க , சாப்பிடுங்க!

திருப்பூர் நெய்யுங்க சுத்தமுங்க!

ஏனுங்க எழுந்தீங்க உட்காருங்க!


ஏபய்யா பாயசம் எடுத்துப்போடு !

அப்பப்பா கோவைக்கு விருந்து வந்தால், 

ஆறுநாள் பசியும் வேண்டும்

வயிறும் வேண்டும்!

தப்பப்பா , கோவைக்கு வரக்கூடாதே

சாப்பாட்டாலே சாகடிப்பார்."

                           - கண்ணதாசன்.


கோவை மக்களின் பேச்சு வழக்கையும், விசாரிப்பையும், விருந்தோம்பலையும், கவிஞர் கண்ணதாசன் , ஓர் முறை மேற் கூறிய கவிதையில் சிலாகித்திருந்தார். கவிஞரின் வாக்குக்கு இணங்க, அன்று கைலாஷ் ராஜன், தன் குடும்பத்தை , ,மகிழ்ச்சியோடும், பெருமையோடும் நட்பு, உறவு, தொழிலாளர் வட்டத்தில், அறிமுகப் படுத்தி, ஆச்சரியம் தந்து, வந்தாரைக் கவனித்து, வயிற்றை நிறைத்து, கனிவோடு அனுப்பிக் கொண்டிருந்தார். கே ஆரின் தொழிலாளர்களுக்கு, சமீபமாகத் தங்கள் முதலாளி வாழ்வில் நடந்த விஷயங்கள் அரசால் புரசலாக்கத் தெரியும், வளாகத்தில் தங்கியிருந்த பெண்கள் மட்டுமே, பைரவியையும் பார்த்திருந்தனர். யூகங்கள் , பேச்சுக்கள் ஓடிக் கொண்டே இருக்க, கே ஆர் குடும்பத்தைப் பார்க்க ஆவலாகவே காத்திருந்தனர். மேடையில் மைக்கோடு ஏறிய கே ஆர், “இந்தக் கே. ஆர் மில்ஸ் ஆரம்பிச்சதிலிருந்து, என்ர கூடத் தோள் கொடுத்து நின்னு வேலை பார்க்கிறவிகளுக்கு வணக்கமுங்க. உங்களோட, உழைப்பும் ஒத்துழைப்பும் இல்லையினா, இந்த மில்ஸ் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்காது, அதுக்காக உங்க எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்” என்றவர், “இன்னைக்கு என்ர வாழ்க்கையில முக்கியமான நாள், என்ர குடும்பத்தை உங்ககிட்ட அறிமுகப் படுத்த வந்திருக்கேனுங்க. என்னடா இத்தனை நாள் , பிரம்மச்சரியா சுத்திகிட்டு திரிஞ்சான், திடுதிப்புன்னு குடும்பம்னு சொல்றானேன்னே , யாரையோ தத்து எடுத்திட்டேனோன்னு கற்பனை எல்லாம் செஞ்சு போடாதீங்க. என்ர அம்மணி தான். என்ர் புள்ளைங்க தான். இத்தனை நாள், என்ர மில்லுல வேலைபார்க்கிற, பசங்க புள்ளைகள் தான் என்னை அன்போட அப்பான்னு கூப்பிட்டு இருந்திங்கல்ல . நீங்க எல்லாரும் என்ர மேல வச்சிருந்த பாசம், அன்பைப் பார்த்த கடவுள் , என்ர வாழ்க்கையில நான் தொலைச்சிட்டேன்னு நினைச்சுகிட்டு இருந்த என்ர மனைவியையும், பிள்ளைகளையும் திருப்பி அனுப்பியிருக்கார். என்னைப் பாபான்னு கூப்பிட இரட்டை புள்ளைங்க “என மனைவி மக்களை அறிமுகப் படுத்தி வைத்தார். “என்ர , வூட்டுக்காரம்மா ராஜ பரம்பரையைச் சேர்ந்தவிக, எனக்கே ஓனரம்மா ”என மனைவியைத் தோளோடு அணைத்து அறிமுகப் படுத்திப் பைரவியைப் பற்றிப் பெருமையாகப் பேசியவர், “உங்களுக்கு, இந்த மில்லில் செஞ்சு கொடுத்திருக்க வசதிகள் எல்லாம் அம்மணியோடது தான். அவிக அப்பாவோட மில்லுல இதெல்லாம் செய்யோனும்னு ஆசை பாட்டாங்க. அவிக வார்த்தையை நான் நிறைவேத்தினேன்” என்றார். மகன், மகளையும் அறிமுகப் படுத்தியவர், ஆதரஸை குறித்து, அவன் லண்டனில் , பாலாஜி ராவிடம் வளர்ந்த முறையை, சிறுவயதிலேயே அவனிடமிருக்கும் திறமையை, குறித்தும் பேசியவர், ஆதிராவையும் அறிமுகப் படுத்தி வைத்தார். அதன் பிறகு, தன் நண்பனை விஜயனைக் குறிப்பிட்டு விட்டு, அபிராமை பற்றிப் பேசினார். தொழிலாளர்கள் , தங்களுக்குள் பேசி, சலசலக்க , அவர்கள் ஆர்வத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டவர், “அடுத்து, அதுக்குத் தான் வர்றேனுங்க, என்ர மகள் ஆதிராவை , என் நண்பன் மகன், என் மாப்பிள்ளை அபிராமுக்கு கொடுத்து, மருமகனான ஆக்கிக்கப் போறேனுங்க. எங்கப்பா காலத்திலிருந்து, ராமசாமி மாமா, விஜயன், அபிராம்னு நட்பா இருந்தது, மூணாவது தலைமுறையில், எங்க நட்பு, உறவா மாறுது” என அபிராமை மகள் பக்கத்தில் நிறுத்தி, ஜோடி சேர்த்துக் கண் குளிர பார்த்துக் கொண்டார்.
அதன் பிறகு, கைலாஷ், பைரவியைச் சேர்த்து நிற்கவைத்து மாலை அணிவித்து, கேக் வெட்டி விழாவைக் கொண்டாட, விழாவுக்கு வந்தவர்கள் வரிசையாக வந்து வாழ்த்து தெரிவித்தனர். பொதுவாக, தொழிலாளர்கள் அனைவருக்குமான விழா எடுத்த , முதல் நாள் இரவே, பாலாஜி ராவின் யோசனைப் படி கே ஆரின் மேல் தட்டு, நட்பு வட்டம், மில்ஸ் ஓனர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு என நட்சத்திர ஹோட்டலில் விருந்துக்கு அழைத்து, அவர்களுக்கும் தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். அதில் ராத்தோட்ஸ் மில்ஸ் சார்பாக, ரகுவீர் சிங் ராத்தோட்டின் சித்தப்பா அமரேந்தர் சிங் ராத்தோட் வந்திருந்தார். இவர்கள் மூலமாகத் தான், கே ஆர் ஜெயந்துக்கு மில் ஓனர்கள் சங்கத்தில், கே ஆர் செக் வைத்திருந்தார். கைலாஷ் ராஜன், தொழில் தொடங்கிய காலத்தில், இவர்கள் மூலமாக, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்பை பெற்றார். அதனைச் சொல்லி, மனைவி மக்களுக்கு, கே ஆர் அறிமுகப்படுத்த, " உங்க மாமனார் காலத்திலிருந்தே , எங்களுக்குப் பழக்கம்" என அமரேந்தர் விசயத்தைப் போட்டு உடைக்க, புன்னகை முகமாக நின்றிருந்த பைரவியிடம்,
" அப்பவே புடிச்சே, என்னைக் கிறுக்கனா வச்சிருக்கீங்க இல்லைங்க அம்மணி" என மனைவியிடம் குறைபட்டவர், "என்ர சம்சாரம் உயிரோட இருக்கிறது, உங்களுக்கும் தெரியுமாக்கும்" என நண்பரிடம் கேட்டார். " பஹன்ஷா இருக்கிறது தெரியாது கைலாஷ் ஷா . ஆனால் சோட்டி ராணிஷா,(ரமாபாய்) கேட்டுக்கிட்டாங்க. நீங்களும் எங்களுக்குப் பழக்கமானவர், உங்களோட உழைப்பையும் பார்த்தமே. " என்றவர் , பைரவியிடம், "ஆரம்பக் காலத்தில் இரண்டு பையரை அறிமுகப்படுத்தினதோடு சரி, பஹன்ஷா,மற்றது எல்லாம் கே ஆரோட சாமர்த்தியம் தான்" என அமரேந்தர் , கேஆரை சிலாகித்துப் பேசினார். " பிஸ்னஸ் பார்ட்டியில பார்க்கையில எல்லாம் பீபீ மில்ஸ் காரவிகளை, கே ஆர் ஏன் முறைச்சுகிட்டே இருந்தார்னு இப்ப தானுங்களே தெரியுது" என ஒரு உள்ளூர் மில் ஓனர் சொன்னார். “ கே ஆர் மில்லே, டாப்ல இருக்குதுங்க, அவிக மில்லும் சேர்ந்தா, இவிக தான் நம்பர்-1 “ “கே ஆர் மகனை பார்த்திங்கிலிங்க, உலகம் பூரா சுத்துவாப்லையாட்டத்துக்கு. மகளைக் கடிக் கொடுத்து, மருமகனையும் வளைச்சு போட்டாருங்க , இனி இரண்டு பேரையும் , தயாராகிடுவார் “ எனப் பேசிக் கொண்டனர், விழா முடிந்த அடுத்த நாள், ரமாபாய் தன இருப்பிடத்துக்குக் கிளம்பினார். ராதா பாய், பாலாஜி ராவ், ஆராதனா ஆகியோர் கே ஆர் மாளிகையில் விடைபெற வந்தனர். அவர்களோடு வந்த படை பரிவாரங்கள் முன்னதாகவே கிளம்பியிருந்தனர்.

முகுந்த் போஸ்லே, சோட்டி ஆயியிடம் , ஆதர்ஷ், ஆருஷி திருமணத்தைப் பற்றிப் பேச, "இனி, அதைப் பத்தி தாமாஜிகிட்ட பேசிக்க. ஆனால் கொஞ்ச நாள் கழிச்சு, பேசு. ஆதர்ஷுக்கும் கல்யாண வயசு வரட்டும். எனக்கும், உன் மகளை , பையு மகனுக்குச் செய்யிறதில இஷ்டம் தான். ஆனால் இனிமேல் என் முடிவு எதுவும் இல்லை." என முடித்து விட,

பைரவி, "பாவு, பசங்க விஷயத்தில் நம்ம குடும்பம் தான் முடிவு எடுத்துருக்கோம். ஒரு வார்த்தை, என்னைக் குத்தம் சொல்லாமல் ராஜ் ஏத்துக்கிட்டார். அவர் முடிவு தான் என் முடிவும்" என்றார். முகுந்த் போஸ்லேவும், ஆனந்த் போஸ்லே போல் எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவெடுக்காமல் , பொறுமையாக யோசித்து மகளோடு சோலாப்பூர் கிளம்பினார். கைலாஷ், பாருவின் அறையில், ஆதர்ஷ் ஷோபாவில் அமர்ந்திருக்க, ஆதிரா ஒரு புறம், அவன் தோளில் சாய்ந்து கொண்டு, “பாவு, அது தான் எல்லாம் சரியாகிடுச்சுல்ல, இப்போ எதுக்கு ஊருக்கு போறீங்க. நான் ஒருவருடம், நம்ம ஹாப்பிப் பேம்லியா சேர்ந்து இருப்போம்னு கேட்டேன், அந்த ஆசையைக் கூட நிறைவேத்த மாட்டிங்களா” எனச் சலுகையாகக் குற்றம் சஷ்டி, இங்கேயே இருக்கச் சொல்லி பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தாள். “ ஆது , ஆயி பாபாவோட தான் ஒண்ணா சேர்ந்திருக்கோம். இன்னும் ஒரு மாசத்தில், நீங்களுமே சோலாப்பூர் வரவேண்டியது இருக்கும். ஆயி கையெழுத்துப் போட வேண்டியது, நிறையப் பார்மாலிட்டி இருக்கு. நான் முன்னாடி போய், முடுச்சு வைக்கிறேன். நீ ஆயி, பாபாவோட வா”என உடன் பிறப்பைச் சமாதானம் செய்து கொண்டிருக்க, “பாபா, அங்க போனாலும், நேர, நேரத்துக்கு, நீ என்ன செய்யிற, எங்க இருக்க, சாப்பிட்டியானு எனக்கு மெசேஜ் பண்ணிடனும். மூணு தடவை பேசணும், ஒரு வீடியோ கால். “எனப் பைரவி அடுக்கிக் கொண்டே போக, “பாவு, உங்க லொகேஷன் ஆன் பண்ணி வைங்க, ஆயி சொல்ற சாப்பாடு தான் சாப்பிடணும், லேசா தும்மினாலும், ஆயி பக்குவத்தில், கசாயம் உங்களுக்கு வந்துரும்”எனத் தன சோகம் விடுத்து ஆதிரா கேலி செய்ய, பைரவி மகளை முறைத்தார்.

“ரஜ்ஜுமா , இப்படித் தான் உன்ர ஆயி உன்னை வளர்த்தாளா கண்ணு” எனக் கைலாஷ் கேட்கவும், “பாவுங்கிறதால, இதோட நிறுத்திக்கிறாங்க, எனக்கு இன்னும் ஸ்ரிக்ட் ரூல்ஸ் உண்டு. காலேஜ்ஜிலிருந்து வீட்டுக்கு, ஒரே ரோட்டில வரக் கூடாது, யார் வீட்டுக்கும் போகக் கூடாது. இன்னும் நிறைய இருக்கு பாபா “என அவள் சலுகை சொல்ல, தற்போது தந்தையைப் பற்றிக் கொண்டவள்,

“நீங்க, ஆயியை விட்டுட்டுப் பிஸ்னஸ் ட்ரிப் போனீங்கன்னா, உங்களுக்கும் இந்த ரூல்ஸ் எல்லாம் உண்டு”என அப்பாவையும் சேர்த்து ஆதிரா பயமுறுத்தினாள், “உன்ர ஆயிக்கிட்டே இருந்து, ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது, எதையும் மறைக்கவும் முடியாதுன்னு சொல்லு கண்ணு” என முழிக்க,ஆதர்ஷ் சிரித்தான். பைரவி , மூவரையும் முறைத்தவர், “இவ்வளவு கஷ்டமா இருந்தா, நான் யாரையும், எதுவுமே சொல்லலை. உங்க இஷ்டத்துக்கு இருங்க.ஆயி வந்திருப்பாங்க கீழ போகலாம் “ என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு எழவும், “ஆயி”எனக் கையைப் பிடித்துத் தன அருகில் அமர்த்திக் கொண்ட ஆதர்ஷ்,

“நீங்க சொன்ன எல்லாமே செய்யிறேன், ஓகே வா, என்னைப் பத்தி இருபத்திநாலு மணிநேரமும், என் ஆயி நினைப்பிங்க , எனக்கு அதுவே போதும் ஆயி” எனப் பைரவியைக் கட்டிக் கொண்டு அவர் கன்னத்தில் முத்தமிட ,

“நீ இருக்கிறதே, இப்ப தானே பாபா எனக்குத் தெரியுது, ரஜ்ஜுமாவாட்டம், நீ போகாதேன்னு எனக்கு அழத் தெரியலை” எனும் போதே, அவர் கண்ணிலிருந்து ஓர் துளி உருண்டு விழ, “ஆயி” என அவர் துடைத்தவன், “இந்த ஒரு மாசம் தான் ஆயி, அப்புறம், நீங்க எங்க சொல்றிங்களோ, அங்க இருப்பேன்” என அவன், தன அம்மாவைக் கொஞ்ச, அவரும் உச்சி முகர்ந்து, அவன் நெற்றியில் முத்தமிட்டார். அப்பாவும், மகளும் அதே உணர்வுகளோடு பார்த்திருந்த போதும் , “ஆயி, முல்கா , ஓவர் கொஞ்சல்ஸ்ல இறங்காதீங்க” என ஆதிரா முறைத்துப் பார்க்க, “ஓஹோ, என் முல்காவை கண்ணு வைக்காத ரஜ்ஜு, நீயும், உன் பாபாவும், இங்க தானே இருப்பிங்க, நான் உங்களை என்னனே கேட்க மாட்டேன். “ என முகம் திருப்ப, “ஐயோ அம்மணி, நான் எங்க அப்படிச் சொன்னேன், நீ நில்லுன்னா நிப்பேன், உட்கார்ன்னா உட்காருவேன், குட்டிக்கரணம் போட சொன்னாலும் போடுறேனுங்க, இப்படியெல்லாம் சொல்லாதீங்க அம்மணி, இப்போ என்ன செய்யோணும் , உக்கி போடணுமா, சொல்லுங்க , ரஜ்ஜுமா எண்ணிக்கடா” என அவர் காதை பிடித்துக் கொண்டு, உக்கி போட , “ போதும் ராஜ் , பசங்க முன்னாடி உங்க நாடகத்தை ஆரம்பிக்காதீங்க” பட்டெனச் சொல்லி பைரவி சிரிக்க, “ஆமாம் பாபா, ஆயிக்கு மட்டும் தனியா போட்டு காமிங்க” என்றாள். “ஆக மொத்தத்தில், உக்கி போடோணும், எப்படி மாப்பிள்ளையும் இதுக்கெல்லாம் ரெடியா இருக்கானா”என மகளையும் ராஜன் கேலியில் இழுக்க. “ அது தான் பாபா, முதல் குவாலிஃபிகேஷனே “என ஆதர்ஷும் சொல்லிச் சிரிக்க, “போங்க பாவு” எனச் சிணுங்கிய ஆதிரா, அபிரமுடன் திருமணப் பேச்சை நினைத்து முகம் சிவந்தாள். அதே நேரம் அபிராம் , கதவைத் தட்டி விட்டு குரல் கொடுக்க, “ வந்துட்டான் பார்” என்ற கைலாஷ், “உள்ளாற வா மாப்பிள்ளை, உனக்கு நூறாயிசுடா “ என்றார். ஆதர்ஷ், சென்று அபிராமெய் உள்ளே அழைத்து வர, “கிளம்பிட்டியா மச்சி” என்ற படி அவன் வர, “ அவர், உங்கள் தாமாத் , பொண்ணைக் கட்டப் போறார், மரியாதை குடித்துப் பேசுங்க” எனப் பைரவி கணவரைக் கண்டிக்க, “மாப்பிளைங்க, வாங்க மாப்பிளைங்க, உங்களுக்கு நூறாயிஸுங்க”என ராஜன் கேலி பேச, ஆதிரா பாபாவின் பின்னே மறைந்து சிரித்தாள். “ஏனுங்க மாமா, புதுசா மரியாதையெல்லாம், யாரையோ கூப்பிடுற மாதிரி இருக்குதுங்க, நீங்க எப்பவும் பாலையே கூப்பிடுங்க” எனப் பேச்சு, ராமனிடம் இருந்தாலும், பார்வை, ஆதிராவை தொட்டு மீண்டது.கைலாஷ் ,

“இருக்கட்டுங்க மாப்பிள்ளைங்க , உங்க அத்தையோட கட்டளைங்க, அதைய என்னால மீற முடியாதுங்க”என வார்த்தைக்கு வார்த்தை "ங்க "போட, பைரவி ஓர் முறைப்படி தந்து விட்டு, அபிராம் , ஆதிராவோடு கீழே இறங்க, ஆதர்ஷ், “நான் முன்னாடி கிளம்பறேன் பாபா, நீங்க பத்து நாளில் அங்க இருக்கிற மாதிரி பார்த்துக்குங்க” என அவர் பாதத்தைத் தொட்டு வணங்க, “இது எதுக்குக் கண்ணு, உன்ர இடம் இங்க தான்” எனத் தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டியவர், மகனை ஆரத் தழுவி கொண்டார். “ உன்ர ஆயியோட உரிமையை மீட்டுக் கொடுத்திட்டா , உன்ர நானிமா, உன்னை என்ரகிட்ட அனுப்பி விடுறேன்னு சொல்லி இருக்காங்க கண்ணு. அதிலிருந்து” என அவர் நிறுத்த , “என் இஷ்டம் தான் பாபா, நான் என்க வேணாலும் போகலாம், வரலாம், என் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம் , சொல்லிட்டீங்க, நானும் பிளான் பண்ணிக்கிறேன்’ என அவன் சிரிக்கவும், “அதுக்கும் பிளானிங்க, உன்னை நெம்ப நல்லவனா வளர்த்துக் கெடுத்து வச்சிருக்காங்க, உன்ர வயசில நான், என் இஷ்டத்துக்கு இருந்தேன் கண்ணு, நீயும் சுயமா முடிவெடு, பிஸ்னெஸ்ஸோ, பொண்ணைக் கட்டுறதோ, நம்ம மனசுக்கு பிடிச்சு செய்யோனும்” என மகனுக்கு ,அவன் வயதில் கிடைக்க வேண்டிய சுதந்திர வாழ்வை வாழ வழிவகைச் செய்தார். சௌந்தரி, நாயகம், பன்னீர், கூடத்தில் கூடியிருக்க, கைலாஷ் குடும்பம், கீழே இறங்கி வந்து சேர, ரமாபாய் மருமகனிடம் வந்தவர், அன்று அவர் தந்த சொத்துப் பத்திரங்களை , திருப்பிக் கொடுத்தார். “ இந்தச் சொத்துக்கள் , இப்போதைக்கு உங்க பேரலையே இருக்கட்டும் தாமாத்ஜி, பைரவிக்குச் சேர வேண்டிய சொத்தையும் வந்து ஏத்துக்குங்க. காலம் வரும் போது, உங்க யோசனைப் படி, யாருக்கானாலும் பிரிச்சு கொடுங்க. நான் இனிமே அதில எல்லாம் தலையிட மாட்டேன். “என ரிஜிஸ்டெரசனுக்காகக் காத்திருக்கும் பத்திரங்களைத் தந்தார். “ என்ர குடும்பத்தை உடைக்கிறதுக்கும், என்ர மகளைப் பிரிகிறதுக்கும் தான், இந்தச் சொத்தை கேட்டிங்களாக்கும்” எனச் சௌந்தரி, சம்பந்தியம்மா மீது பாயா, “சௌந்தரி” என் நாயகம் மனைவியை அதட்டினார். “ அத்தை , அவங்க மனசில இருக்கிறதைக் கேட்கட்டும் மாமா, ஆயி பதில் சொல்லக் கடமை பட்டவங்க தான்”எனப் பைரவி, தன ஆயியைப் பதில் சொல்லக் கேட்டார். “விடு அம்மணி, இத்தனை கஷ்டத்துக்கும் பிறகு , நீ என்ர வீட்டுல பாதுகாப்பா இருக்கோணும்னு நினைச்சிருப்பாங்க, நீக்க எதுவும் சொல்ல வேண்டாம் சாஸுமா” என ராஜனும், மாமியாருக்குச் சப்போர்ட் செய்ய, “என்னைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்பச் சந்தோசம் தாமாத்ஜி, நான் வளர்ந்த சூழ்நிலை வேற, ஆனால் எப்போ இந்தப் போஸ்லே குடும்பத்துக்குள்ள போனேனோ, அப்போதிலிருந்து நிறைய அடி பட்டிருக்கேன், இவளோட படி ஆயி, புவாஜி ,அதுதான் ஜெயேந்த்தோட ஆயி, எல்லார்கிட்டயும் ரொம்பப் போட்டுட்டேன். இவள் பையனா பிறந்திருந்தா , அவ்வளவு கஷ்டம் இருந்திருக்காது என்னமோ, அதுக்கப்புறமும் போராட்டமே வாழ்க்கையா போச்சு. அதே சந்தேகக் குணம், உங்க தங்கையையும் சந்தேகப் பட்டேன் . அதுவும் உறவு உண்மையா ஆகிடுச்சு. உங்க தங்கை மனசில் இருந்ததும் தெரிஞ்சுடுச்சு. இனி பைரவி அவள் நாத்தனாரை சமாளிச்சுக்குவா. அதுக்காகத் தான். “ என்றவர்,

சௌந்தரியிடம், “என் மகள் வாழ்க்கை, இனியாவது நல்லா இருக்கனும்னு நினைச்சேனே தவிர, உங்க பொண்ணு பிறந்த வீட்டில் ஒட்ட கூடாதுன்னு நினைக்கலை. அதுவும் போக , உங்க மனசில் அப்படிப் பட்டதுன்னா, அதுக்குக் காரணம் நான் தான், என்னை மனிச்சுக்குங்க. உங்க மருமகள் சுத்த தங்கம் தான் அவள் மேல காட்டிடாதீங்க” என ரமாபாய் கண் கலங்கவும், ‘என்ர மருமகளைப் பத்தி ,நீங்க ஒன்னும் சர்டிபிகேட் கொடுக்க வேணாமுங்க, அது எப்படின்னு எனக்கே தெரியும். “ எனச் சௌந்தரி சொல்லவும், “அந்த நம்பிக்கையில்லா தான் போறேன்”என்றார் ரமாபாய் . “போறேன்னு எதுக்குங்கம்மா சொல்றிங்க, திரும்ப வாரேன்னு சொல்லுங்க, ராஜா , உங்களுக்கும் மகன் தான், அவனுக்கு உங்களையே பார்க்கிற கடமையும் இருக்கு. அங்கத்த பிரச்சனை எல்லாம் முடிச்சுக்கிட்டு வாங்க” என நாயகம் அழைக்க, “ஆமாங்க அம்மணி, இவனுங்க எல்லாரும் ஜோடி, ஜோடியா இருக்கானுங்க, நான் ஒத்தையில கிடப்பேனுங்க, நீங்க வந்தீங்கனா நாம பேசிகிட்டு இருக்கலாமில்லிங்க, வசந்த விலாசத்துக்கு வாங்க “ எனப் பன்னீர் அழைப்பு விடுக்க, ரமாபாய் கலகவென நகைத்தார். “ஏனுங்க தாத்தா, உங்களுக்கு இந்த வயசில கேர்ள், பிரெண்டு வேணுங்களா”என அபிராம் கிணடல் செய்ய, “வயசான காலத்தில் தான் மாப்பிள்ளை, பேச்சுத் துணைக்காவது ஆள் வேணும். “ என்ற கைலாஷ், “சாஸுமா, உங்க சொத்தெல்லாம் நான் பார்த்துக்குறேனுங்க, நீங்க பொட்டியை கட்டிட்டு நேரா இங்க வந்துருங்க, பேச்சுத் துணைக்கு மாமா இருக்காரு, அண்ணன் முறைக்கு என்ர அப்பா இருக்கார், சண்டை கட்டுறதுக்கு என்ற தாய் மாதா இருக்காங்க, உங்களுக்குப் பொழுது நல்லா போகுங்க “ எனக் கைலாஷ் மாமியாருக்கு எடுத்துச் சொல்ல,

“ஏனுங்க மாப்பிள்ளை, இந்த மாமனை விட்டு போட்டீங்க, பன்னீர் பயலை விட நான், நல்லா ஜோக்கா , பேசுவேணுங்க அம்மணி” என ராமசாமி குடும்பம், விஜயன் கஸ்தூரியோடு வந்து சேர, பேச்சு களை கட்டியது. ரமாபாய், விஜயன் கஸ்தூரிக்கும் நன்றி தெரிவித்தார்.ஆதர்ஷும் ரஞ்சனி வருகிறாளா என ஆவலாகப் பார்த்தான்,

நேற்று முன் தினம் ஆருஷியோடு அவன் போட்டோ எடுத்து விட்டு, ஆயி பாபாவை அங்கிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும் தருணத்தில், ரஞ்சி மட்டும் அங்கே நிற்க, எதையோ மறந்த சாக்கில் அவன் திரும்ப வந்தான். ரஞ்சனி, ஆயி பவானியிடம், “அம்மா தாயே, அவர் யாரோட பேசினா எனக்கென்ன, எனக்கு ஏன் மனசுக்குக் கஷ்டமா இருக்கு, அவிக நினைப்பை, என்ர மனசிலிருந்து எடுத்துட்டு”என மீண்டும், அதே கையை அம்மன் விளக்குக்கு நேரே கையைக் காட்டப் போக,

“ரஞ்சனி”என அதட்டலோடு வந்த ஆதர்ஷ், அவளைப் பிடித்து,அங்கிருந்து இழுத்தான். ‘என்னை விடுங்க”என அவள் அழவும் , “பைத்தியக்காரி மாதிரி செய்யாத, என்னைப் பிடிச்சிருக்கோ, பிடிக்கலையோ, எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா உண்மையைச் சொல்லு. இந்த வயசில், எல்லாருக்கும் ஆசை வரத் தான் செய்யும், அது நடக்குமா, நடக்காதாங்கிறதா காலம் தான் முடிவு செய்யும். உள்ள ஒன்னை வச்சு, வெளியே ஒரு வேஷம் போடாத. இது உனக்கு, எனக்கு மட்டுமில்லை, இரண்டு குடும்பத்துக்கும் நல்லது இல்லை. ஆதுவை, உங்க அண்ணனுக்குக் கல்யாணம் செய்யப் போறோம்,மூணு தலைமுறை நட்பு, உறவாகப் போகுது. உன்னலையோ, என்னலையோ இந்த உறவுக்கு எந்தச் சிக்கலும் வரக் கூடாது. நீ இன்னும் படிப்பையே முடிகலை , முதல்ல அதை முடி, நிறையப் பேரோட பழகு, கேரியர் செட் பண்ணிக்கோ, அதுக்கப்புறமும் என் மேல இஷ்டமிருந்து, எனக்கும் உன் மேல இஷ்டம் வந்தா பார்க்கலாம், கவனி பார்க்கலாம் தான். உறுதி கிடையாது. அதை விட்டுட்டு ஏதாவது கிறுக்குத்தனம் பண்ண, என்ன செய்வேன்னு தெரியாது” என அவன் பேச, பேசச் சற்றே மனம் தெளிந்தவள், “ இவர் பெரிய இவரு, போயா புடலங்கா , ஒரு பொண்ணைப் புடிக்கிதுன்னு சொல்றதுக்கே, ஏகப்பட்ட கண்டிஷன் போடற நீ ஒன்னும், எனக்கு வேண்டாம், எனக்கு என்ர ராஜா மாமாவே, நல்ல பையனா பார்த்துக் காட்டி வைப்பார் “ என முறைத்து விட்டு வெளியே சென்றுவிட, ஆதர்ஷ் சிரித்துக் கொண்டான். ‘என் வளர்ப்பு அப்படி, நான் என்ன செய்ய . ஒரு வேலை, என் பாபாட்ட வளர்ந்திருந்தா, மச்சி மாதிரி வளந்திருப்பேன்’ என மனதில் நினைத்தான். இதோ இன்று, ரஞ்சனி அவனுக்குச் சென்ட் ஆப் கொடுக்க வரவில்லை, தன நினைவே சரி என, தன நானிமாவுடன் சோலாப்பூர் நோக்கிக் கிளம்பி விட்டான். ரமாபாய் கிளம்பும் முன் கௌரியை உடன் அழைக்க, சௌந்தரி , என்ர ஒரு மகளைத் தான், பிரிச்சு போட்டீங்க, இந்த மகளையாவது விட்டுப் போட்டு போங்க” எனக் கௌரியை தன்னோடு நிறுத்திக் கொள்ள, “தாய்மாதா , முறையவே மாத்தறீங்க, என்ர மக்களுக்குச் சித்தியினா, உங்களுக்கு மாஸிமா சின்ன மருமகளாகுது, ஏனுங்க அம்மணி நான் சொன்னது சரிதானுங்களே “எனக் கைலாஷ் மனைவியைக் கேட்க, பைரவி முறைத்தார். கௌரி, “அம்மா, நாம் எப்போ குன்னூர் போகலாம். நான் இங்கிருந்த, என் தீதியவே உங்க மகன் ஆகவிடாமல் பண்ணிடுவாங்க” எனக் கௌரி பதற , “நாம குன்னூர் போகலாம் கண்ணு, அந்தப் பக்கம் இவன் தலை வச்சு கூடப் படுக்க மாட்டான்”என நாயகம் மகனை வம்பிழுக்க, “மாஸிமா , உங்களுக்காகவே வரேனுங்க” என லொள்ளு பேசிய கைலாஷ் ராஜன், ஏகத்துக்கும் மனைவியின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டார். ஆனால் எத்தனை அதிகமாகப் பகலில், மனைவியிடம் வம்பு வளர்கிறாரோ அத்தனை அதிகமாக, இரவில் அவரைச் சமாதானம் செய்ய, தன் திறமையைப் பயன் படுத்துவார். முடிவில், “ ராஜ், உங்க அலம்பலுக்கு அளவே இல்லை”எனச் சலித்துக் கொண்டு கணவரின் மார்பில் சரணடைவார்.

சொன்னதைப் போலவே, ஒரு மாதத்துக்குள் சோலாப்பூர் சென்று, பைரவியின் சொத்துக்களை மீட்டு அவர் கையில் தந்தவர், அதன் ஷேர்களை மட்டும் தற்போது வைத்துக் கொண்டு, நிர்வாகத்தை, போஸ்லேகளிடமே ஒப்படைத்தார். சோலாப்பூர் மாளிகையிலிருந்து ஜெயந்தை ஓட வைக்கும் வேலையை மட்டும் செவ்வனே செய்தார்.

பைரவியின் அக்கா உண்மையான பவானி, தங்கை திருமணத்துக்கெனக் கிளம்பியவர், கணவரின் செய்கையால் கோவை வந்தும் தங்கையைச் சந்திக்காமல், அண்ணனோடு திரும்பினார். ஜெயத்தின் மகள்கள், மருமன்களுக்குமே , மற்றொரு குடும்பம், மஹந்த்தை பேசியது என அவர் மீது வெறுப்பை வரவழைத்து இருந்தது. கே ஆரின் படை, ஜெயந்தை மட்டும் குறி வைத்து, பீமனோடு சேர்த்துத் துரத்திக் கொண்டே இருந்தது. பாலாஜிராவ், ராதாபாய் சத்தாராவிலிருந்தே தங்கள் தொழில்களைக் கவனித்துக் கொண்டனர். சங்கீதாவின் தொழில், ஆதர்சின் தலையீட்டால் முதலில் அடி வாங்கியது. பின்னர், ஆயின் கட்டளையின் பேரில், ஆதர்ஷ் அவர்களைக் கண்டு கொள்ளாமல் விட, அதிலேயே மேலேறி வந்தனர்.

பைரவி, தொடர்ந்து சங்கீதாவிடம் பேசி, தன மேலுள்ள வெறுப்பைப் போக்க முயன்றார். கைலாஷ், "அவள் பிடிவாதம் பிடிச்சவ அம்மணி, தான் செஞ்சது தப்புனாலுமே ஒத்துக்க மாட்டா. விடு தன்னாலா வரட்டும்"என மனைவியிடம் வலியுறுத்த, "இந்த விஷயத்தில நீங்க, தலையிடாதீங்க ராஜ். பெரிசா ஒன்னும் இல்லாதா மாதிரி காட்டிக்கிறது. அன்னைக்கு உங்க தங்கச்சி போனப்ப நீங்க கண்ணீர் விடலை "எனக் கேள்வி எழுப்ப, "அது தூசி விழுந்துச்சு அம்மணி" என வெற்றுப் புன்னகை சிந்தினார். பெரியவர்கள்,குன்னூர், கோவை, ரமாபாய் இருப்பிடமான சத்தாராமாளிகை எனக் குழுவாகப் பயணம் மேற்கொண்டு, தங்கள் பொழுதுகளைக் கழித்தனர். ஆதரஸை , சுதந்திர பறவையாகப் பறக்கச் சொல்லி , அவன் பாபா கூட்டை திறந்து விட, அன்னையின் அன்பான கட்டுக்குள் செய்திகளை மட்டும் அனுப்பிக்கொண்டு , வித்தியாசமான அனுபவங்களைத் தேடி உலகைச் சுற்றினான். கைலாஷ் , அந்த வருட, திருமண நாளுக்குச் சோலாப்பூருக்கு மனைவியை அழைத்துச் சென்றவர், துல்ஜாபூர் செல்ல பவானி அம்மனையும் வணங்கினர். அதன் பிறகு, மனைவியின் கண்ணைக் கட்டி அழைத்துச் சென்றார், ஆனால் பைரவி, “ராஜ், பெரிய சஸ்பெண்ஸ் . உங்களைத் தெரியாதா, கண்ணைத் திறந்து விடுங்க,”எனச் சிணுங்கலோடு வர, “பேசாத, படுத்துத் தூங்கு அம்மணி” எனத் தன் நெஞ்சில் மனைவியைச் சாய்த்துக் கொண்டு காரை தானே ஒட்டி வர, பைரவிக்குச் சந்தோசம் தாழவில்லை. பைரவி எதிர்பார்த்தது போலவே, சந்தன் கட்டுக்குத் தான் அழைத்து வந்திருந்தார். துக்கா ராம் உதவியோடு கூபா கர்’ ரையும் மேலும் சில வசதிகளோடு, வண்டுகள் படுத்தாத வண்ணம் தயார் செய்து வைத்திருந்தார். எப்போதும் மதுவோடு வந்து, தன மனைவியைத் தேடுவார். இன்று மனைவியோடு வந்தவர், மலரும் நினைவுகளாய் ஒவ்வொன்றாய் கேட்க, பல வருடங்களாகத் தான் அந்த ஒரு நாளில் கணவரோடு எப்படிப் பொழுதை கழித்தோமெனப் பைரவி சொல்லச் சொல்ல, “கிறுக்கனா இருந்திருக்கேன்னு சொல்லு அம்மணி” எனக் குறை பட்டுக் கொள்ள, “இல்லை ராஜ், என் மேல அவ்வளவு அன்போட இருந்திருக்கீங்க” என அவர் காட்டிய எல்லை இல்லா அன்பைத் திரும்பக் காட்டினார் கைலாஷின் பாரு. அபிராம், ஆதிராவும், கே ஆர் மில்ஸ் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டு , தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். “ ஆரா பேபி, உன்ர அண்ணன் ஊரைச் சுத்த போயிட்டான், ஆனால் அவனோட ரூல் பேசற குணத்தை உன்ர கிட்ட கொடுத்துப் போட்டு போயிட்டனாட்டத்துக்கு. ஒரு முத்தம் கொடுக்க, என்ன ஆட்டம் காட்டுரடி, உனக்காக என்ன என்ன செஞ்சிருக்கேன்” எனப் பட்டியலிட ஆரம்பிக்க, ஆதிரா, “பேசாம வேலையைப் பாருங்க ராம் . உங்களை எனக்குத் தெரியாது, கொஞ்சம் இடம் குடுத்தா அவ்வளவு தான். ஆயி, பாபா, அத்தை, மாமா என் மேல வச்சிருக்க நம்பிக்கையைப் பொய்யாக்காதீங்க. இந்த மெஷின் நமக்கு எப்ப வரும், அதைச் சொல்லுங்க’ என அவள் மில் விவகாரத்தைப் பேச. “ மாமன், என்னைப் பழி வாங்குறார். இத்தனை வயசில, அவர் அத்தையைக் கூட்டிகிட்டுச் செகண்ட் ஹனி மூன் போயிருக்கார், உன்ர அண்ணன் சோலாவா உலகத்தைச் சுத்தி என்ஜாய்ப் பண்றான், எனக்கு என்ர ஆளு, நிச்சியம் பண்ண பொண்ணு, பக்கத்தில இருந்தும், ஒன்னும் வேலைக்கு ஆகரத்தில்ல , மிசின் எப்போ வருமாம், ரொம்பத் தேவை” என அவன் புலம்ப,

ஆதிராவுக்கு அவன் மீது ஆசையும், காதலும் பெருகியது, எப்போதேனும் செய்யும் கொரில்லா அட்டாக் செய்து அவனை அமைதிப் படுத்தினாள். அபிராம் அதிலேயே மயங்கியவனாக , “ஆரா பேபி மஸ்தூடி, படியா மஸ்து ‘என வால் வார்த்தையைப் படித்தான். அவன் தேடிய நிலவு, அவனுக்கு வளர்பிறையாய் அன்பைத் தந்து கொண்டிருந்தது. நிலவு முழுமையடைந்து.

No comments:

Post a Comment