யார் இந்த நிலவு -54
மருதாணி, அதன் வண்ணங்களை மட்டும் அன்று அந்த மங்கைகளில் நிரப்பிவிட்டுச் செல்லாமல், மகிழ்ச்சியை நிறைத்து, பல பாடங்களையும் புகட்டி , புதுப் பிரச்சனைகளையும் கிளப்பி விட்டுச் சென்றது.
இதில் ரமாபாய், மெஹந்திக்கு உதவினாரா, மெஹந்தி ரமாபாய்க்கு உதவியதோ, நாம் அறியோம், ஆனால் பன்னீரின் ," மருதாணி நல்லா சிவக்காதவிகளுக்கு, மனசு சங்கடமாகாதுங்களா, எதுக்கு இப்படி ஒரு சாங்கியம்" என்ற கேள்விக்கு,
"இது ஒரு உரைக்கல்னு வச்சுக்குவோம். கணவன், மனைவிக்குள்ள இருக்க, பிணைப்பு, புரிதலைக் காட்டும். ஆழ்ந்த காதல், அன்பு இருக்கவங்களுக்கு, இது ஒரு பெரிய விசயமில்லை. தம்பதியுடைய மெச்சூரிட்டியை காட்டும்" என ரமாபாய் விளக்கம் தரவும்,
" எப்படியோ, எல்லா ஆம்பளைகளுக்கும் அடி வாங்கித் தரப் போறீங்க. நம்ம வேடிக்கை பார்ப்போம்" எனப் பன்னீரும் உற்சாகமானார்.
ஆனால் மெஹந்தி வைக்கவே மதிய நேரத்தைத் தாண்ட, மதிய உணவையும், கணவர், மகன்கள் கையால் அரைகுறையாக வாங்கியவர்கள், மாலையில் தான், கையைக் கழுவினர். மாலை சிற்றுண்டி கூடத்திலேயே, யாருக்கு அதிகம் சிவந்தது என வம்பு வழக்கு ஆரம்பமானது. பைரவியும் , இளம் பெண்களும் மட்டும் இரவு வரை வைத்திருந்தனர்.
பைரவியின் , மாலை நேர துல்ஜா பவானி பூஜையை மனைவி சார்பாக, கைலாஷே செய்தார். நாள் முழுவதும், அமர்ந்து மெஹந்தி போடுவதென்பது, இளம் பெண்களுக்கே அலுப்பான விசயம். பைரவி, கணவருக்காக அந்தச் சிரமத்தையும் பொறுத்துக் கொண்டார்.
அடுத்த நாள் காலையில் தான், மெஹந்தி எப்படிச் சிவந்திருக்கிறது எனப் பார்த்து, பரிசு தருவதாக, ரமாபாய் அறிவித்திருந்தார். அந்த நேரம் தான், மெஹந்தியில் ஒளிந்திருக்கும் , தங்கள் பெயரைக் கண்டு பிடிக்க வேண்டும், என்ற நிபந்தனையிருக்க, பைரவி முதல் யாருமே அவரவர் கையைத் தங்கள் துணையிடம் காட்டவில்லை.
அபிராம், எவ்வளவோ முயன்றும், ஆதிராவும் அதற்கு அனுமதிக்கவில்லை. இன்று ஆலோசனைக் கூட்டத்தில் போஸ்லேக்களின் நிபந்தனையைப் பற்றி, ரஞ்சனும், பாலாஜி ராவும் சொல்லவுமே, அபிராமுக்கு கிலி பிடித்தது. பைரவி வேறு, அவரவர் பாக்கியத்தை ஆயி பவானி, நிச்சயிப்பாள் என்று வாக்குத் தந்திருக்க, ஆதிரா ஏற்கனவே ஒரு வருடம் கழித்து, திருமணம் என்ற நிபந்தனை வைத்ததில், ஒருவருட காலத்தில், எது எப்படியாகுமோ, என்ற பயம் வேறு, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவாவது, ஆதிராவின் கையைப் பார்க்கலாமென்றால், அவள் வேண்டுமென்றே அலையவிட்டாள்.
ரஞ்சனியிடம், வந்த அபிராம், " ரஞ்சிமா, உன்ர மெஹந்தியில என்ன எழுதியிருக்கு" என நூல் விட,
" நெம்பக் கற்பனையெல்லாம் வேண்டாம், என்ர பேரைத் தான் கேபிடல் ஆர் போட சொன்னேன்" எனத் தன் கையை ஊன்றிப் பார்த்தவளுக்கு, அதிர்ச்சி தான் ஏனெனில், R , என்ற எழுத்தின் நேர் கோடு சரிந்து A ஆகியிருந்தது. அதை அவசரமாகப் பார்த்தவள், வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
ஏற்கனவே கைலாஷின் தங்கைகள், அபிராமை வைத்து, ஆதிராவை வளைத்து விட்டதாகக் கஸ்தூரியை, ஜாடை பேசி, அண்ணன் மகனையாவது, தங்கள் மருமகனாக்கிக் கொள்ளவேண்டும், என இவர்கள் காது படவே பேசினர்.
ரஞ்சி, அதைக் கேட்டபோதே, பொங்கி எழுந்து, " ராஜா மாமாகிட்ட சொல்லுவோங்கமா" என்ற போது, "வேண்டாங்கண்ணு, நம்மளால அவிகளுக்குள்ள சண்டை வரக் கூடாது" எனக் கஸ்தூரி தவிர்த்து விட்டார்.
ரஞ்சனி, தன் அம்மா, ஆத்தா, அம்மத்தா ஆகியோர் மெஹந்தி சிவந்தது போதும், அடுத்த வேலை இருக்கிறது, எனக் கை கழுவ, செல்ல அவர்களுக்கு உதவுவது போல், இவளும் தன் கையைக் கழுவினாள். சாரதா தான், ஆட்சேபித்தார். " பரவாயில்லைங்க அம்மத்தா" என்றவள், சுத்தமாகக் கையைக் கழுவ, அப்போதும், மருதாணி, தன் மகிமையை ரஞ்சனியின் கையில், தன் நிறத்தைப் பதிய வைத்தே சென்றிருந்தது.
அதைப் பார்க்கவும், மற்றவர் காணாமல் மறைக்கவே முயன்றாள். ஆனால் விதி அப்படி எல்லாம் அவளை விடுவதாக இல்லை.
சங்கீதா,கவிதா மகள்களின் கையை ஆராய்ந்தவர்களுக்கு, அப்பட்டமான அதிர்ச்சி, எழுத்து மட்டுமின்றி, மெஹந்தி டிசைன்களே, ஆங்காங்கே ஒன்று சேர்ந்திருந்தன. மெஹந்தி போடும் போதும், ஶ்ரீ சகோதரிகள் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தனர், அதில் மெஹந்தி கசங்கியிருந்தது, அம்மாக்கள் மகள்களைத் திட்டவும்,
"உன் அண்ணன் மகனை, ஏற்கனவே ரஞ்சி கரெக்ட் பண்ணிட்டா. எங்களை டார்ச்சர் பண்ணாத. அவனை விட, ஹேண்ட் சம் பாய்ஸ் எல்லாம் எங்களுக்குத் தெரியும்" என அவர்கள் கடந்து விட, ரஞ்சனியைத் தனியாகப் பார்க்கும் போது, சரியான பாடம் புகட்ட வேண்டும், என முடிவெடுத்தனர்.
அதற்கு ஏற்றார் போல், மற்ற இளப்பெண்கள், மெஹந்தியை எடுக்கும் முன், இவள் கை கழுவி வந்த போதும், அதன் வண்ணம் அவளிடம் தங்கியது. தனது பாக்கியமென அதனை வைத்துக் கொள்வதா, சாபமென மறந்து மறைப்பதா, என ஓய்வறையில் அவள் பார்த்து நிற்க, சங்கீதா, மகள்களுக்கு உதவுவதாக வந்தவள், மருகி தவித்து நின்ற, ரஞ்சியின் கையைப் பற்றி, " அதுக்குள்ள எடுத்திட்டியா கண்ணு, எங்க உன்ர டிசைனை காட்டு" என மெஹந்தி டிசைனை பார்த்தவள், அதிலிருந்து A வையும் பார்த்து விட்டு, " இந்த A என்ன அர்த்தம். உனக்கு நிச்சயம் பண்ண மாப்பிள்ளையா என்ன" என வினவ, " இல்லைங்க சித்தி, என்ர பேர், R தான் எழுத சொன்னேனுங்க, அது இப்படி மாறிடுச்சு" எனத் தவிப்போடு சொல்ல, " நாங்க நம்பிட்டோம்" என்றாள் இளைய ஶ்ரீ.
" ஓ, மம்மி. நீங்க எங்களுக்காகப் போட்ட ப்ளான், ரஞ்சி எக்சிக்யூட் பண்ணிட்டா. பை த பை, எனக்கு அந்த ஆதர்ஷ் மேல இன்ட்ரஸ்டே இல்லை. சரியான பஞ்சாங்கமா இருக்கான்" என மேல்நாட்டு வழவழப்போடு அவள் பேச, சங்கீதா மகளை முறைத்து அடக்கியவள், ரஞ்சனியையும் ஒரு பிடி பிடித்தாள்.
" என்ர அண்ணன் வூட்டு சொத்து மொத்தமும் உங்க குடும்பமே தான் அனுபவிக்கனுமாக்கும். அது தான் உன்ர அண்ணன், ஆதிராவை மயக்கிப் போட்டானுல்ல, என்ர அண்ணன் மகனை மயக்க, கட்டி புடிச்சு விளையாண்டியாமாம், இப்போ, மாமியாளை மயக்க, இந்த நாடகமாக்கும். இதெல்லாம் உன்ர அப்பன் ஆத்தா, சொல்லித் தர்றாங்களா, இல்லை நீயே விளைஞ்சவளா" என அசிங்கமாகக் கேட்கவும்,
" ராஜா மாமா, தங்கச்சியா போயிட்டிங்களேன்னு பார்க்கிறேன். இல்லையினா, எனக்கும் பேசத் தெரியும். கொஞ்சம் விட்டா பேசிட்டே போறீங்க. இந்தப் புத்தியெல்லாம் உங்களுது. நீங்க தான், உங்க மகளுங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பீங்க" என ரஞ்சியும் கோபமாகவே எகிறவும்.
சங்கீதாவுக்கு முன் அவளது மகள், " ஹேய், ஓவரா சீன் போடாத. இங்க பார் உன் வண்டவாளம்" எனத் தன் மொபைலில் ஒரு போட்டோவைக் காட்டினாள்.
அதில் ரஞ்சனி ஷோபாவில் மல்லாக்க விழுந்திருக்க, ஆதர்ஷ், இடையில் கட்டிய துண்டோடு, வெற்று மேனியாய் ரஞ்சனி மேல் கிடந்தான். அவளது கைகள் ஆதர்ஷ் முதுகில் படர்ந்திருந்தது. அதைப் பார்த்த ரஞ்சிக்குக் கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது. வாயடைத்து, பேச்சற்று அவள் நிற்க, அந்தச் சந்தர்ப்பத்தில் அம்மா, மகள்கள்,அவள் மீது தங்கள் வன்மத்தைக் காட்டினர்.
இன்று காலையில் ஆதிராவை தேடி மாடிக்கு வந்த ரஞ்சி, அவளது அறையில் தேடி விட்டு வெளியே வந்த அதே நேரம் ,தங்கை சத்தம் கேட்டு வெளியே , அரையாடையாகச் சென்றிருந்த ஆதர்ஷ், அபி, ஆதிராவைப் பார்த்து விட்டு, மாடிப் படி ஏறி வந்தான். ஆதர்ஷ் வேகமாகக் கதவை அழுத்தம் கொடுத்துத் திறந்து அறைக்குள் நுழைய , ஏற்கனவே ரஞ்சி உள்ளிருந்து கதவை அதே போல் திறக்க , கதவு திறந்த வேகத்தில் அவள் மீதே மோதி, அவளையும் சேர்த்து அணைத்துக் கொண்டு, எதிரே போடப்பட்டிருந்த ஷோபாவில் அவளோடு விழுந்தான் ஆதர்ஷ்.
இடுப்பில் துண்டோடும், உருண்டு திரண்ட வெற்று மேனியாய், தன்னை அணைத்திருந்தவனை, ரஞ்சி விழி விரித்துப் பார்த்துக் கிடக்க, அவள் கண்ணில் தன்னைத் தொலைத்த ஆதர்ஷ், அனிச்சையாய் அவள் கண்கள் மேல் தன் இதழ் பதிக்க, விரிந்த சிப்பியாய், உள்ளே கருவிழியை முத்து போல் அலைய விட்டுப் பார்த்திருந்தவள், சட்டெனச் சிப்பியை மூடிக் கொண்டாள். அவளது ஒரு கை முதுகிலும், மற்றொரு கை அவன் தோளையும் அதிர்வில் அழுத்தமாக , அவள் நகத்தடம் படுமளவு பற்றியிருந்தது.
அவள் சூடியிருந்த ஜாதி மல்லி மணத்தை, அவள் மணத்தோடு தன்னுள், நிறைத்துக் கொண்டவன், படாரெனச் சத்தத்தில் உயிர் பெற்ற சிலையாக, அவள் இடையில் கை கொடுத்து, தூக்கி விட்டு, " யூ லுக் ஸோ ப்யூட்டிபுல் . உன் கண்ணுக்குள்ள நானே கவிழ்ந்துடுவேன் போலருக்கே" எனச் சிரிக்க, அவளும் உயிர்த்து, அவனைத் தள்ளி விட்டு, கதவை நோக்கி ஓடினாள்
" ஹேய், ரஞ்சி" என்றவன் அவளது சோளி பின்புறம் தளர்ந்து இருந்ததைப் பார்த்து, " ஒன் செகெண்ட், அப்படியே ஓடிடாத. பேக் ஹுக் கழண்டு இருக்கு" என அவளுக்கு முதுகு காட்டித் திரும்பி நின்று சொல்ல, அவள் பட்டெனச் சுவர் ஓரம் சாய்ந்து நின்று, தன் முதுகை மறைத்துக் கொண்டாள்.
," நான் அண்ணி ரூம்னு நினைச்சு வந்துட்டேன். நீங்க கொஞ்சம் மெதுவா வந்திருக்கலாம்ல" எனத் தன் தாவணியை, இழுத்துப் போர்த்தியபடி அழமாட்டாமல் கேட்க,
" நீ என் ரூம்ல இருப்பேன்னு , எனக்கென்ன ஜோசியமா தெரியும்" என அவசரமாகப் பனியனை மாட்டியபடி அவளிடம் திரும்பியவன்,
" இப்படிப் போர்த்திட்டு போனேனா, தான் என்னை அசிங்கமா நினைப்பாங்க, திரும்பு, நான் ஹெல் பண்றேன்." என்றான். 'ஆகா, இவன் பண்ண ஹெல்ப் தான் தெரிஞ்சதே' என மனதில் அவன் கண்களில் முத்தமிட்டதை நினைத்தவள், ஒரு நிமிடம் தன்னை உலுக்கி கொண்டு, அவனைச் சுட்டெரிப்பது போல் முறைத்தவள், "என்னை என்னனு நினைச்சிங்க. ராஜா மாமா மகன்கிறதால உங்க கிட்ட நின்னு பேசுறேன். வேற ஒருத்தனா இருந்தா இன்னேரம் கன்னம் பழுத்திருக்குமாக்கும்" என ரோசமாகச் சொல்ல,
"அது தான் தெரியிதே, இங்க பார் உன் நெயில் மார்க்ஸ்" எனத் தன் தோளைத் காட்டவும், விழி உயர்த்திப் பார்த்துவிட்டு, தலை குனிந்து நிற்க,
" ஏய் , பாகல் கைகி, இப்படியே போனா தான், அசிங்கமா பேசுவாங்க. ராஜா மாமா மகன் மேல நம்பிக்கை இருந்தா நில்லு. அவர் இரத்தம் தான் என் உடம்புலையும் ஓடுது" என அவனும் முறைப்பாகவே பதில் தர, யோசனையோடு, பார்க்கக் கூடாது, கண்ணை மூடிக்கொண்டு உதவி செய், எனச் சத்தியமெல்லாம் வாங்கிக் கொண்டு, அவன் உதவியை ஏற்க, அதுவே அவளுக்கு அவஸ்தையைத் தந்தது.
ஒரு வழியாக, அவனைக் காந்தாரிக்கு, எதிர் பாலாக நிறுத்திவிட்டு, தன்னைச் சீர்திருத்திக் கொண்டவள், " நீங்க கண் திறக்கலாம்" என அனுமதி வழங்கி விட்டு, கதவை நோக்கிச் செல்ல,
" ஆதி, இப்போ தான் கீழ இறங்கிப் போனா. இந்தப் பக்கம்" என வழியைச் சொன்னவன் "சத்தமா கூப்பிட்டுகிட்டே போ. " என நமட்டு சிரிப்போடு, கண்ணாடி முன் நின்று தலையைச் சீவியபடிச் சொன்னான்.
" ஏன் உங்க தங்கச்சி, ஒளிஞ்சு பிடிச்சு விளையாடுறாங்களாக்கும்" எனத் தன் இயல்பில் மீண்டு துடுக்காக அவள் கேட்கவும். " ஆமாம், உன் அண்ணனோட விளையாடுறா. உன்னை விட மோசம் உங்க அண்ணன் நிலமை . அதுங்க வெட்கப் படாது. நமக்குத் தான் சங்கடமா இருக்கும்" எனச் சேர்த்துச் சொல்ல,
" என்னை விட மோசமா, அப்படி என்னங்க நான் உங்களை மோசம் பண்ணிட்டேன். தெரியாமல் விழுந்தது தான். ஓவரா சீன் போடாதீங்க. நீங்க ராஜ வம்சம்னா, அது உங்களோட. நான் ஒண்ணும் அலையறவ இல்லை, எங்களுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு " எனச் சூடு பட்ட பாப்கார்னாக அவள் பொரியவும், வேகமாக வெளியேறப் போனவளை, கையைப் பிடித்துத் தடுத்தவன்,
" நான் என்ன சொன்னேன்னு, இவ்வளவு கோபப்படுற. அவங்க நிலைமையைத் தான் சொன்னேன். உன்னை என்ன சொன்னேன். பை த பை விஜயன் அங்கிள் பேமலி மேல, எனக்கு எப்மவுமே மரியாதை உண்டு. நீயா எதையாவது கற்பனை பண்ணிக்காத" என அவன் விளக்கம் தர, அதையும் அவள் தப்பாகவே எடுத்துக் கொண்டாள்.
ஏனெனில் நேற்றே, சங்கீதா ஜாடை மாடையாக, இவர்கள் குடும்பத்தைப் பற்றிப் பேசியது மனதிலிருக்க, ராதாபாய் தன் பங்குக்கு உணவு கூடத்தில் ஆதர்ஷ்காகத் தங்கள் வம்சத்தில் பெண் கொடுக்கப் போட்டி இருப்பதையும் சொல்ல, ரஞ்சி வெகுவாகத் தாக்கப்பட்டாள். இவளை யாரும் எதுவும் சொல்லாத போதும், அவள் நெஞ்சே அவளைச் சுட, " ஓஹோ கற்பனையில உங்களோட குடும்பம் நடத்துறதா நினைப்பாக்கும். பெத்தவரே, மகனை , அப்பானு கூப்பிட வைக்கவே ஆயிரம் நாடகம் ஆடவேண்டியிருக்கு. இந்தப் பொழப்பு எனக்கு வேண்டாம் சாமி, என்ர மாமனோடையும், அண்ணனோடையுமே போகட்டும். " எனச் சீச்சி, இந்தப் பழம் புளிக்கும் என்ற பாணியில் அவனிடமும் காட்டிச் செல்ல, ஆதர்ஷ் , அவளது வார்த்தையில் வெகுவாகத் தாக்கப்பட்டான். இதைத் தான், ஆதர்ஷ் பூஜையின் போது சொன்னான்.
இதற்கு நடுவில் இவர்கள் ஒன்றாக விழுந்துக்கிடந்ததை, பார்த்த ஶ்ரீ சகோதரிகள், போட்டோவை எடுத்துக் கொண்டு ஓர் பொறாமையோடே அங்கிருந்து சென்றனர். இதோ அதைத் தக்க சமயத்தில் காட்டி அவளை அவமானப் படுத்தியவர்கள். ஆதர்ஷ் வழியிலிருந்து, மரியாதையாக விலகிவிடு, என மிரட்ட, " எனக்கு ஒண்ணும் அவன் வேண்டாம்" என அழுகையூடே சொன்னவள், அங்கிருந்து யார் கண்ணிலும் படாமல் செல்ல வேண்டும், என்ற எண்ணம் மட்டுமே இருக்க, புயல் வேகத்தில், கே ஆர் மில்ஸ் மெயின் கேட்டை நோக்கிச் சென்றாள்.
ஆலோசனைக் கூட்டத்தில், கைலாஷ், போஸ்லேக்களை, தான் சமாளித்துக் கொள்வதாகவும், இனிமேலாவது வீட்டின் தலைவனாக, தன்னை முடிவெடுக்க விடும்படி, பாலஜிராவ், ஆதர்ஷிடமும் சொல்லியவர், ரஞ்சனிடம், எதற்கும் தயாராக இருக்கக் கட்டளை பிறப்பித்து மனைவியைப் பார்க்கச் சென்றார்.
ஆதர்ஷ் மட்டும், போஸ்லேக்களின் பலத்தைப் பற்றி ரஞ்சனோடு விவாதித்துக் கொண்டே மீண்டும் ஒரு முறை பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டான்.
மில் வளாகத்திலேயே , பெண்கள் தங்கும் விடுதியின் முகப்பில் ஒரு பிள்ளையார் கோவிலுண்டு. ரஞ்சனி, முதலில் கேட்டை நோக்கிச் சென்றவள், தன்னைச் சமன்படுத்திக் கொள்ள, பிள்ளையாரிடம் சென்று நின்றாள். தூண்டா மணி விளக்கு , ஆங்காங்கே அகல்விளக்கு, பெரிய மாலையணிந்து, மாப்பிள்ளை விநாயகராக அமர்திருந்தார். ரஞ்சனி, நெஞ்சில் கனன்ற நெருப்பை அணைக்க வழி தெரியாமல், தன் கையில் உள்ள மெஹந்தியின் வண்ணத்தை மறைக்கும் உபாயமாக, கையை நேராக விளக்கின் சுடரில் காட்டி நின்றாள்.
ரஞ்சி, பல்லைக் கடித்துக் கொண்டு நின்றது , எவ்வளவு நேரமோ தெரியாது, ஆனால் சுடர் பட்ட ஒவ்வொரு கணமும், உள்ளங்கை பொசுங்கி, மெஹந்தியில் சிவந்த, A , நிறம் மாறிக் கொண்டிருந்தது, ஆனால் ஆதர்ஷ் அவளுள் ஆழமாகப் பதிந்து கொண்டு தான் இருந்தான். கோவில் வழியே காரில் பயணித்த ஆதர்ஷ், ரஞ்சனியைப் பக்கவாட்டில் பார்த்தே அடையாளம் கண்டு கொண்டவன், “எல்லாரும் அங்க இருந்தா, இவள் மட்டும் தனியா தான் இருப்பா . என மனதில் நினைத்தபடி, சாலையில் கடந்தவன், ரிவர் வியூ கண்ணாடி வழியாக, அவள் விளக்கில் தன கையைக் காட்டி நிற்பதைப் பார்த்து, வண்டியை அவசரமாக நிறுத்தி விட்டு அவளிடம் ஓடினான்.
ரஞ்சி, கண்ணீர் வழிய, விநாயகரையே பார்த்திருந்தவளுக்கு, அந்த விளக்கின் சூட்டில் , வேதனையில் லயிக்க ஆரம்பித்திருந்தாள். ஆதர்ஷ், பார்த்த கணமே பதறிவிட்டான். “லூசா நீ” என அவள் கையைப் பிடித்து இழுக்கவும், “விடு என்னை, அந்த எழுத்தை , A யை அடையாளம் தெரியாமல் மறைக்கனும் “ என வீறிட்ட பின் தான், அவளது இடது கையைத் திருப்பிப் பார்த்தான்.
விரல்களில் எல்லாம், செக்க செவேலென மருதாணி சிவந்திருக்க, உள்ளங்கை மட்டும் கிரகணம் பிடித்தது போல் கருப்பாகத் தோல் வழண்டு இருந்தது. “அறிவு இருக்கா உனக்கு" என வாயை குவித்து, காற்றை அதில் ஊதியவன், "வா, டாக்டர்கிட்ட போகலாம்" என அழைக்க,
"நோ, உன்ர கூட மட்டும் வரவே மாட்டேன்" என ஆரம்பித்தவள், அவனின் அத்தைகள் சொன்ன பழிச் சொற்களை, அப்படியே உதிர்த்தவள், "நீ, என்னை விட்டுட்டு போ, நான் இதை அழிச்சிட்டு வரேன்" என மீண்டும் விளக்கை நோக்கி ஓட, ஆதர்ஷ் அதிர்ச்சி வைத்தியமாக, அவளை ஓங்கி அரை விட, அதிலேயே ரஞ்சி மயங்கி சரிந்தாள். அவளைத் தாங்கிக் கொண்டவன், ரஞ்சனை காரை எடுக்கச் சொல்லி, மில்லுக்கு வெளியே இருக்கும் மருத்துவ மனைக்கு அவளை அழைத்துச் சென்றான்.
மருத்துவமனை அறையில் அவளுக்குச் சிகிச்சை நடக்க, வெளியே இறுக்கமான முகத்தோடு அமர்ந்திருந்தவனின் உள்ளம் கொதிக்கலனாக இருந்தது. தன அத்தைகள் மேல் ஒரு கோபம் எனில், அதனிலும் அதிகமாக ரஞ்சி மேல் வந்தது. அபிராம் , ஆதரிஷிடமிருந்து, யாருக்கும் தெரியாமல் வரச் சொல்லி கட்டளை வரவும், ஓடோடி வந்தான்.
தங்கையின் கையில் கட்டைப் பார்க்கவும், பதறி துடித்து உள்ளே ஓட, அவள் மயக்கத்தில் இருந்தாள் . மருத்துவர்கள் வெளியேறவும், உள்ளே வந்த ஆதர்ஷ், அபிராமிடம், உள்ளது, உள்ளபடி உண்மையைச் சொல்ல, " அவிக சொன்னா, இவ எதுக்குக் கையைச் சுட்டுக்கோணும்" எனக் குழம்பியவனுக்கு, ரஞ்சியின் புலம்பல், அவள் ஆதர்ஷை மனதில் வரித்திருக்கும் உண்மையை உடைத்துச் சொன்னது.
அபிராம் , " இவ, புலம்பரதைப் பார்த்தா, உன்னை வெறுகிற மாதிரி இல்லை , விரும்புற மாதிரி தெரியுதே" என அதிர்ந்து நிற்க, ஆதர்ஷ், ஒரு பெரும்மூச்சோடு, " உன் தங்கச்சி, என்னை விரும்பறதாவே இருந்தாலும் அதை அனுமதிக்காத, தெரிஞ்ச மாதிரியும் காட்டிக்காத. அது அவளுக்கு நல்லதில்லை. போஸ்லே குடும்பப் பெயரும் சொத்தும், புலி வால் பிடிச்ச கதை தான், அதுக்கு என்னை நான் பலி கொடுத்தே தான் ஆகணும். அப்பத்தான் ஆயி, பாபா, ஆதியும், நீயும் நிம்மதியா வாழ முடியும்" எனத் தன குடும்பத்துக்காக ஆதர்ஷ் பேசிக் கொண்டிருக்க, அபிராம் அண்ணனாகவும் யோசிக்க ஆரம்பித்தான்.
அதே நேரம், நேற்று தங்கியிருந்த அதே அரங்கில். கைலாஷ் ராஜன், தன மனைவியிடம், இன்றைய ஆலோசனை கூட்டத்தைப் பற்றிப் பேசியவர், " எது எப்படியானாலும் அம்மணி, என்ர மகன் , கடமைக்காகக் கல்யாணம்னு செய்யிறதை அனுமதிக்க மாட்டேன்" என உறுதியாகச் சொல்ல, "நானும் , அதைத் தான் சொல்லணும்னு நினைச்சேன் ராஜ், ஆதர்ஷ்பாபாக்கு நாம என்ன செஞ்சிருக்கோம், அவன் விரும்புற பொண்ணையாவது கல்யாணம் செய்து வைப்போம்," எனப் பெற்றவர்களும் உறுதி எடுத்தனர்.
இத்தனை வருடம் பிரிந்திருந்த போதும், பெற்றவர் பிள்ளைகளுக்காகவும், பிள்ளைகள் பெற்றவருக்காகவும் தங்கள் வாழ்வை தியாகம் செய்யக் காத்திருக்க, அதனைச் சோதிப்பதற்காகவே போஸ்லே குடும்பம் அடுத்த நாள் வந்திறங்கியது.
நிலவு வளரும்.
(வாசக அன்புள்ளங்களுக்கு,கதை எழுத முடியாத சூழல். முடிந்தவரை முடித்து அடுத்த அத்தியாயத்தைத் தருகிறேன். தங்கள் காத்திருப்புக்கு நன்றி.)
No comments:
Post a Comment