யார் இந்த நிலவு - 56
பைரவி பாய், இத்தனை காலம் எதற்காகக் கவலைப் பட்டு கணவரைப் பிரிந்து இருந்தாரோ, அந்தச் சுமை எல்லாம் இறக்கி வைத்து விட்டு, இரவில் நல்ல தூக்கம் தூங்கி, கணவரின் அன்பை முழுமையாகப் பெற்றவராக, மனம் நிறைந்த பூரிப்போடு, அக அழகு, முகத்திலும் ஜொலிக்க, எழுந்திருந்தார். உண்மையில் என்று மில்லாத ஒரு தனிச் சோபை வந்திருந்தது.
காலையில் கண் விழிக்கும் போதே, வலது உள்ளங்கையில் கட்டுப் போடப்பட்டிருந்த கைலாஷின் கரம் பைரவி மீது தான் கிடந்தது . கண் விழித்தவுடன் அதைப் பார்த்தவருக்கு, கண்கள் பனித்தது . பூபோல் தூக்கி, காயத்தை ஆராய்ந்து, அதிகம் ஒன்றுமில்லை என ஆசுவாசம் கொண்டு, தன் இதழை அதில் பதிக்க, வாகாகத் திரும்பி ,அதே கையால் மனைவியின் கன்னத்தைப் பற்றிக் கொண்டார் ராஜன். சுற்றுப் புறம் நினைவில் வர," ராஜ், பசங்க இருக்காங்க. கையை எடுங்க" என ரகசியம் பேசி சுற்றும் முற்றும் பார்க்க, "பார்த்தா, பார்க்கட்டும் அம்மணி" என அவரும் கிசுகிசுத்தபடி , மனைவியின் வெட்கத்தோடு ஒளிர்ந்த முகத்தை ஆசையாய் பார்க்க, பைரவி தான், " ஷரம் நஹி ஆயி" என்ற வழக்கமான வசனத்தோடு, தவிப்பாய் மகன் மகளைத் தேடினார்.
இருள் பிரியா அதிகாலை வேளை, இரவு விளக்கு மினுக்கிக் கொண்டு, தூரத்திலிருந்து வந்த சொற்ப வெளிச்சத்தில் மனைவியை ரசித்துக் கொண்டிருந்தவர், அவர் வாயைப் பொற்றி மகளை மட்டும் காட்டினார்.
ஆதிரா மெஹந்தி வைத்ததையும் மறந்தவளாக ரஜாய் மெத்தைக்குள், தலை முதல் கால் வரை புதைத்து நல்ல தூக்கத்திலிருக்க, ஆதர்ஷ் அறையில் இல்லை, என்பதையும் அவர் நகைப்போடே உணர்த்த, ஆசுவாசமடைந்த பைரவி, தானும் ஒரு விரலால் கணவரின் முக வடிவை அளந்து ," ஐ லவ்யூ ராஜ்" என ரகசியமாய் மொழிந்து ரசிக்கலானார்.
அதிலேயே சிலிர்த்த ராஜன், " அம்மணி, கல்யாண வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்குமாட்டத்துக்கு. தினத்திக்கும் இதைய சொல்லிட்டு தான், எந்திரிக்கிற" எனப் பருவ இளைஞன் போல் அவர் கண்டிசன் போட, மகிழ்ச்சி பொங்க, அதற்கும் சம்மதமாய்க் கண்களை மூடித் திறந்தவர், நொடியில் மகளைத் திரும்பிப் பார்த்து விட்டு, கள்ளத்தனமாய், கணவர் கன்னத்தில் அவசர இதழொற்றலையும் தந்து அவரை அதிர விட,
அதிர்ச்சியில் கைலாஷ், " அம்மணி, நீயா இது" என இமைக்க மறந்தார். பைரவி வெட்கம் தாழாமல், அவரை விடுத்து வேகமாகக் கீழே இறங்கியவர், " இதையும் கூட, டெய்லி ரொடீன்ல சேர்த்துக்குங்க" என மொழிந்து விட்டு ஓட, " தேவியின் கருணைக்கு நன்றிங்க " என்றவர் தன்னை மறந்து, இரண்டு கைகளையும், தலைக்குப் பின்னால் கோர்த்து, மனைவி சென்ற வழியைப் பார்த்திருந்தவருக்கு, கைக்காயம் சுரீரென வலி தந்து, முந்தைய நாள் உரையாடலை நினைவு படுத்தியது.
கண்ணீர் பளபளக்க," இத்தனை சந்தோஷத்தையும் ,உனக்குள்றையே புதைச்சு வச்சிருந்தியே பாரு. இனிமே நீ கைலாஷோட பாரு தான், நிறைவான வாழ்க்கையை உனக்குத் திருப்பித் தருவேன்" எனத் தனக்குள் சங்கல்பம் செய்தவர், நேற்றைய பேச்சை அசை போட்டார்.
நேற்று இரவு பைரவி, இருபத்தியிரண்டு வருடத்துக்கு முன்பான நிகழ்வை, தான் அனுபவித்த வேதனையை, நடந்த நிகழ்வைச் சொல்லிக் கொண்டிருந்தார். ராஜன் கோவை சென்ற பிறகு , அவர் வீட்டுக்கு , ஜெயந்தை வைத்துக் கொண்டு போன் செய்ததை ,அது வரை தான் ,அவர்கள் சொன்ன விஷயத்தை நம்பாததைச் சொன்ன பைரவி தயங்கியபடியே மீதி உரையாடலையும் பகிர்ந்தார், அடுத்து வருவது தான் தங்கள் பிரிவுக்கான காரணமோ என ராஜனும் கவனமாகக் கேட்டார். பைரவி சொன்னதை வைத்து, தன தங்கைகளுடன் தான் பேசியிருக்கிறார் என்பதை உறுதி செய்தார்.
பைரவி “ஹலோ , நான் பைரவி பேசுறேன், ராஜைக் கொஞ்சம் பேச சொல்லுறீங்களா , முக்கியமான விஷயம்” எனவுமே , அந்தப் பக்கம் அமைதி. பைரவி ஹலோ, ஹலோ எனக் கத்திக் கொண்டே இருக்க, முதலில் பேசிய பெண் இல்லாமல் மற்றொரு பெண் பேசினாள்.
“இங்க, நீங்க கேட்கிற ஆள் யாரும் இல்லைங்க, ராங் நம்பர் போனை வைங்க” என முதலில் போனை துண்டிக்கும் எண்ணத்தோடு பேசியவள், “கொஞ்சம் முன்ன பேசும் போது பிஸியா இருக்கார்னு சொன்னிங்களே” எனப் பைரவி எதிர் கேள்வி கேட்கவும்,
“எங்க அண்ணனோட பர்சனல் உங்ககிட்ட சொல்லணுமுன்னு அவசியமில்லை. அவர் பொண்டாட்டியோட சந்தோசமா இருக்கார், இதோ ஒரு நிமிஷம் எங்க அண்ணி கீழே இறங்கி வந்தாங்க, உடனே கூப்பிட்டு விட்டார், இதெல்லாமா உங்ககிட்ட சொல்ல முடியும்”என அவள் சொல்லவும், பைரவிக்கு நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது.
“ ஜுட் ,பொய், பொய் சொல்றீங்க. என் ராஜ் நேற்று நைட் தான் வந்து இறங்கி இருப்பார், அதுக்குள்ள எப்படிக் கல்யாணம் ஆகியிருக்கும்” எனக் கேள்வி எழுப்பவும், “என்ர அண்ணன் மேல, இத்தனை உரிமை பாராட்டுற நீங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா “என அவள் அதிகாரமாய்க் கேட்கவும், பைரவிக்கு என்னவென்று சொல்வது என ஒரே தவிப்பாக இருந்தது. அவர் தான், தங்கள் திருமணத்தைத் தற்போது சொல்ல வேண்டாம் எனச் சொல்லியிருந்தார், அப்படியிருக்க, தன வார்த்தை அந்தக் குடும்பத்தைப் பாதிக்குமோ என ஒரு நிமிடம் குழம்பி, “பாருன்னு சொல்லுங்க, அவருக்குத் தெரியும்” என்று மட்டும் சொல்ல,
“ஓஹோ, நீங்க யாருன்னு இப்ப புரியுதுங்கோ, அண்ணா சொன்னாருங்களே, ராஜவம்சத்து மோஹினினு , அது நீங்க தானுங்களா, நீங்க வச்ச , வசிய மருந்து மயக்க மருந்தெல்லாம், எங்க வீட்டு வாசப்படியை மிதிக்கவுமே வேலைக்கு ஆகாம போயிடுச்சு, எங்க ராஜியண்ணியைப் பார்க்கவும், என்ர அண்ணேன் அவிக மேல வச்சிருந்த காதலை உணர்த்துக்கிட்டாரு, பெரியவிக கல்யாண ஏற்பாட்டுக்கும் ஒத்துக்கிட்டு, அதிகாலை மருத மலை போய், கல்யாணத்தை முடிச்சிட்டு வந்துட்டோம். இனிமேலாவது என்ர அண்ணனை விடுங்க” எனவும்,
“ஒரேயொரு தடவை, ராஜ் அவர் வாயால சொல்லட்டும், என்கிட்டே கூட வேண்டாம், அவர் கல்யாணம் செஞ்சது உண்மைன்னு தெரிஞ்சா கூடப் போதும், நான் திரும்பக் கூப்பிட மாட்டேன் ”என இவர் மன்றாட,
“அட நீயெல்லாம், ஒரு பொம்பளையா, எங்க அண்ணனையே நினைச்சு வாழ்ந்துட்டு இருக்க, ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுக்க நினைக்கிற. அது தான், நீ ராஜ குடும்பத்து மகாராணி தானே, உன்ர கிட்ட இருக்கக் காசுக்கு, என்ர அண்ணனை விட நல்ல ஆம்பளை கிடைப்பான். உங்க ஊர்ல, வீட்டில இல்லாதா ஆம்பளையா, என்ர அண்ணனை விட்டுப் போடு, அவர் தான் எங்க குடும்பத்துக்கே ஒரே ஆதாரம். “எனப் பைரவியைக் கேவலமாகப் பேச ஆரம்பித்தவள், பேசிக் கொண்டே போக, யாரோ வரும் சத்தத்தில் பைரவி இனி போனே போட கூடாது என முழுவதுமாக , பைரவியின் அத்தியாயத்தை முடிக்கும் நோக்கத்தில்
“ஏனுங்க மச்சி , உங்க மாப்பிள்ளை மாடியில் இருக்காருங்க. மச்சினன் முறைக்கு, என்ற அண்ணனை நல்லா கவனிங்க, அப்பத் தான் அவிக, நாளைக்கு உங்களை நல்லா கவனிப்பாங்க” என மகிழ்ச்சி பொங்கச் சொல்ல, ஒரு ஆண் குரல், “ நல்லாவே கவனிச்சிருவோங்க அம்மணி. ராஜியும் மேல தான் இருக்குறாளுங்களா “என்ற படியே சென்றது.
பைரவி , அதிர்ந்து போன் ரிசீவரை கெட்டியாகப் பிடித்து, அதன் ஆதரவில் நிற்பவர் போல நிற்க, “இப்போ நம்புறியா, நீ கேட்டதுக்கு ஆதாரம், என்ர அண்ணனுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, இப்போ பேசினது நான் கட்டிக்கப் போறவரு, பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறோம், ராஜி அண்ணி என்ர அண்ணி மட்டுமில்லை, கொழுந்தியாலும் கூட, இனி இங்க போன் போடுற வேலையை வச்சுக்காத” என மிரட்டியவள், ராஜனுக்கும், ராஜிக்கும் திருமணம் நடந்து விட்ட தோற்றத்தை உருவாக்கினாள் .சரியாக அதே நேரம், ராஜனின் குரல், “சங்கீ, ராஜி இறங்கி வந்தாலே பார்த்தியா” என ஒலித்தது.
பைரவி, “ராஜ்” எனக் கத்தி கூப்பிட, ரிஸீவரை மறைத்த சங்கீ, “கொஞ்ச நேரம் கூட அண்ணியை விட்டுப் பிரிய முடியலீங்களா”எனக் கேலி போல் கேட்க, கைலாஷ் அங்கே முறைத்து விட்டு மேலே ஏற , “அண்ணனுக்கு வெட்கத்தைப் பாருங்க”என அங்கு வந்த சௌந்தரியிடமும் அவள் பேச, மற்றொருபுறம் தன மகனின் வாழ்க்கை சிதைவதை அறியாத சௌந்தரி, ராஜியை பெருமையாகப் பேசி, “ராஜி என்ர மருமகளா , இந்த வீட்டுக்கு வந்துட்டா , அதுவே போதும் கண்ணு ” என்ற உரையாடலும் கேட்க, சௌந்தரியின் வார்த்தையில் அவர் ராஜனின் அம்மா என்று உணர்ந்தவர், ஒரேதாக ஒடிந்து போனார். சங்கீதா, போனில் “என்ர அம்மாவே சொல்லிப் போட்டாங்க , கேட்டுக்கிட்டேயில்ல “ என எள்ளலாகப் பதில் சொல்ல அந்த வார்த்தை கேட்க அங்கே பைரவி நினைவோடு இல்லை.
“ராஜ், ராஜ்க்கு வேற பொண்ணோட கல்யாணம் ஆகிடுச்சு, ராஜ், அதுக்குள்ள என்னை மறந்துட்டீங்களா” எனப் புலம்பியபடியே மயங்கி இருந்தார்.
பைரவியின் கையிலிருந்து போனை பிடுங்கிய ஜெயந்த், “லட்கி பரவாயில்லை , நான் சொன்னதை விடநல்லாவே நடிச்சிட்ட. இனிமே உன் அண்ணன் வாழ்க்கையில் நான் குறுக்க வரமாட்டான். என் வாழ்க்கையிலும் அவன் வராமல் பிடிச்சுவச்சுகோ. இனி என் மாமன் மகள் சின்னவளும் எனக்குத் தான். போஸ்லே குடும்பத்து வாரிசு என் ரத்தமா தான் இருக்கனும்.”என ஆணவச் சிரிப்புச் சிரித்துப் போனை வைத்தான்.
பைரவி , அலைபேசி உரையாடலைச் சொல்லச் சொல்ல கைலாஷ் முகம் ரௌத்திரமாகா மாறியது, அப்போதே எழுந்து வீட்டை நோக்கிச் செல்ல முனைந்தவரைத் தடுத்தார், பைரவி , “ராஜ், வேண்டாம், நான் அத்தைக்கு , உங்க தங்கச்சிகளுக்கு அம்மா ஸ்தானத்தில் இருப்பேன்னு வாக்குக் கொடுத்திருக்கேன். “ என ,அவர் வேகத்துக்குத் தடை போட அரும்பாடு பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டவர், மனைவியின் அருகில் அமர்ந்து,
“என்ர குரலை நீ கேட்டிருக்க, உன்ர குரலை கேட்டிருந்தேன்னா , அப்பவே ஓடி வந்திருப்பேனே பாரு” என அவரைக் கட்டிக் கொண்டு ராஜன் கதறவும் , பைரவியும் சேர்ந்து அந்தத் தருணத்துக்காக வருந்தினார்.
“நம்ம லிபியில் எழுதியிருக்கிறது தான ராஜ்,நடக்கும் “ எனவும், “ஜெயந்த் கிட்ட உன்னைத் தனியா மாட்ட விட்டுட்டேனே “எனச் சுயபச்சாதாபத்தில் ராஜன் உழல, பைரவி மீதி நிகழ்வைத் தொடர்ந்தார்.
“ நான் மயங்கி விழுந்தது அந்த ராட்சசன் சாதகமா பயன்படுத்திட்டான். நான் மயக்கம் தெளியும் போது" என்றவர் அதற்கு மேல் பேசமாட்டாமல் கண்ணை மூடிக் கொண்டு, குலுங்கி அழ, " வேண்டாம் அம்மணி, நீ எதுவும் சொல்ல வேண்டாம்" எனக் கைலாஷ், அவரை அள்ளி தன் நெஞ்சோடு புதைத்துக் கொண்டவர், “இதுக்கு அடுத்ததை அன்னைக்கே நீ தூக்கத்திலே புலம்பும் பொதுக் கேட்டுட்டேன்” எனக் கண்ணீர் வடிக்க, பைரவி புரியாமல் விழித்தார்.
கைலாஷ் வேறு வழியில்லாமல், “உன்ரகிட்ட, தாலியைக் கழட்டிக் கொடுக்கச் சொன்னனே “என வேதனையான முகத்தோடு சொல்லவும், பைரவி அந்தத் தினத்தையும் நினைவில் கொண்டு வந்தவர், “நீங்க கேட்டதில் பழசு நினைவுக்கு வந்திருக்கும்” என , தனது மனம் பாதிக்கப் பட்டத்தின் மற்றொரு காரணத்தையும், ராஜனும் அறியும் வண்ணம், உயிர் துடிக்கத் துடிக்க மீண்டும் நினைவு படுத்திச் சொன்னார் பைரவி.
“நான் கண் திறக்கும் போது ,அவன், என்னை அசிங்கப் படுத்துற மாதிரி அரையாடையோட நின்னான் ராஜ் . அந்தத் தாலியைக் கழட்டி எறிஞ்சிட்டு வாடி, நான் புள்ளை தர்றேன். கணபத்ராய் வம்ச வாரிசு என் இரத்தமா தான் இருக்கனும்னு சொல்லவுமே எனக்கு உல்டி வந்து, அவன் மேலேயே வாந்தி எடுத்திட்டு அங்கிருந்து ஓடினேன். “ என அன்றை நாளின் நினைவில் பைரவி உடல் நடுங்கவும், ராஜன் இறுக்க அனைத்துக் கொண்டார். அதில் கொஞ்சம் நடுக்கம் அடங்க, எங்கோ வெறித்தபடி பைரவி தொடர்ந்தார்.
ஆதர்ஷ் ,ஏதாவது மருத்துவ உதவி தேவைப் படுமோ என வந்து எட்டிப் பார்த்தான். சற்று முன்னே வந்தவன், தன் ஆயியின் பேச்சைக் கேட்டு அடக்க இயலாத துக்கத்தோடு நின்றவன், அப்போது தான் அருகில், வாயைப் போற்றி, தன் அழுகை சத்தம் வெளியே வராமல் நின்ற உடன் பிறந்தவளையும் பார்த்து, ஒருவருக்கு ஒருவர் அணைத்து ஆறுதல் செய்து கொண்டனர். ஆயி பட்ட அவஸ்தையை அன்று அவருள் பிண்டமாய் இருந்து உணர்ந்தவர்கள், இன்று உணர்வோடு பிறிதொரு உயிராகவும் நின்று கேட்ட பொழுதில், அவர்களுக்கும் துடித்தது.
கைலாஷின் கை வளைவில் பைரவி தொடர்ந்தார், “ஆனால் அவன் ஆட்கள் மயக்க மருந்தை என் மூக்கில் வைக்கவுமே மூச்சை அடக்கி, மயங்கின மாதிரி நடிச்சேன். காரில் பின்னாடி போட்டுத் தூக்கிட்டுப் போனான். ஆயி பவானியைக் கும்பிட்டேன், அவன் கார் பஞ்சராகி நின்னது. அவனுங்க அசந்த நேரம் தப்பிச்சிட்டேன்.
அந்த இராத்திரி, கொடூரமான மறக்க முடியாத இராத்திரி. பசி மயக்கம், மசக்கை, அவனோட அசிங்கமான நடத்தை, உங்க வீட்டு பெண்களோட பேச்சு, எல்லாமா சேர்ந்து என்னைப் பலகீனப் படுத்தியிருச்சு. நீங்க கட்டாயக் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு நினைச்சேன்.
மயக்க மருந்து என்ன முயற்சி செய்தும் கொஞ்சம் உள்ள போயிடுச்சு போல, சந்தன் கட் மலை சரிவில் விழுந்து கிடந்தேன். ஆயி பவானியோட கருணை, அன்னைக்கு நான் உயிர் பிழைச்சேன். துக்காராமையும் அடிச்சு போட்டிருந்தாங்க. கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டு பிடிச்சவர், என்னைக் கை தாங்கலா கூட்டிட்டு போய், கூஃபா கர்ல விட்டார்.
அந்த இடத்தைப் பார்க்கவும், உங்க நினைவு ரொம்ப வந்திடுச்சு. என் ராஜ், என்னை எப்படி மறக்கலாம்னு ஒரு தலைக்கனம் வேற. யோசிச்சு யோச்சி பைத்தியமா போயிட்டேன்" என அழுதவர்,
ரமாபாய் சொன்னதைச் சொல்லி, நான் தெளிவடைந்த பிறகு, ரஜ்ஜும்மா என்கூட இருக்கிறது ஆபத்துன்னு உணர்ந்த பிறகு, கௌரி கிட்ட விட்டேன். பெத்த மகளோடவும் வாழ முடியாதது என்ன வாழ்க்கைனு அலைஞ்சு திரியும் போது தான், உங்களை அதே கூஃபால பார்த்தேன்.
நீங்க புலம்பினதை வச்சு நான் செத்திட்டதா, நீங்க நினைக்கிறது தெரிஞ்சது." என நிறுத்தியவரிடம், " அப்பவே, என்கிட்ட வந்திருக்கலாம்ல அம்மணி, அந்தப் பொறுக்கி நாயையும், இந்நேரம் சிதைச்சிருப்பேன்னுல்ல" எனப் பல்லைக் கடிக்க,
"நான் உங்களைச் சந்தேகப் பட்டேன்கிற நினைப்பே, என்னை உங்களை நெருங்க விடலை ராஜ்" என அவர் கண்ணீர் விட, “போதும் அம்மணி, இதுக்கும் மேல நீ எதுவுமே சொல்ல வேணாம். என்ற உடன் பிறந்த பிசாசுங்க செஞ்சதுக்கு நீ என்ன பண்ணுவ.” என மனைவியைத் தேற்றியவர்,
“நான் தான் அம்மணி, உன்ரகிட்ட மன்னிப்பு கேட்கோணும், அந்தன்னைக்கு, சந்தன்கட்ல, உன்னைத் தனியா விட்டுப் போட்டு வராத இருந்திருந்தேன்னா, இது எதுவுமே நடந்திருக்காதே” எனச் சுய பச்சாபத்தில் வெகுண்டவர், தன கோபத்தை மடை மாற்றத் தெரியாமல், அருகிருந்த கண்ணாடி டீ பாய்மேல் தன் கோபத்தைக் காட்ட, கண்ணாடி சிதறியது. “ராஜ்” எனப் பைரவி அதிர்ந்து அவர் கையைப் பிடிக்க, அதற்குள், “ஆயி, பாபா” என ஆதர்சம், ஆதிராவும் ஓடி வந்தனர்.
கையில் ரத்தம் சொட்டிக் கொண்டிருக்க, பைரவியிடம்,” சந்தன்கட்ல உன்னை விட்டுட்டு வந்ததைத் தவிர, வேற எந்தத் தப்பும் செய்யலை அம்மணி. ராஜியை கூப்பிட்டு விட்டது நிஜம் தான், கல்யாண ஏற்பாடும் நிஜம் தான், ஆனால் அடுத்த நாள் முகூர்த்தம் குறிச்சு இருந்தாங்க.” என ஆரம்பிக்க,
“ராஜ், முதல்ல உங்க கையைப் பார்ப்போம்”எனப் பைரவி பதற, கைலாஷ் கேட்கும் நிலையில் இல்லை. தன பக்க நியாயத்தை, நிகழ்வை மனைவிக்கு உரைக்கும் அவசரத்திலிருந்தார். ஆதிராவும், ஆதர்ஷுமாக , பெற்றவர்கள் வாழ்வைக் கேட்டுக் கொண்டே , தங்கள் பாபாவின் கைக்குச் சிகிச்சை செய்தனர்.
“ நான் ராஜிக்கு ,குழந்தை பிள்ளைக்குச் சொல்றதாட்டமா, சொல்லி புரிய வச்சேன். அவளும் முதல்ல, நான் சொல்றதை காதிலையே வாங்காத அடம் பிடிச்சா, பொறவு, எனக்கு ஒரு தாலியை மட்டும் கட்டுங்கன்னு கேட்டா , நான் மறுத்தேன்.” என்றவர், மனைவியைச் சுட்டி,
“ அவிகளுக்கு, உங்க பாருவுக்குப் போன் போட்டு கொடுங்க, நான் பேசுறேன். எனக்குத் தாலி மட்டும் கட்டி , அந்தப் பக்கம் கூட்டிட்டு போங்க, நான் அந்த அக்காளோட அனுசரிச்சுக்கிறேன்னு கேட்டா. எனக்குப் பகீர்னு இருந்தது.”என அவர் நிறுத்த, பைரவி முகத்தில் பன்னீர் அப்பாவின் மக்களுக்காகக் கண்ணீர் வடிந்தது.
‘அப்புறம் எப்படி” என வாக்கியத்தை முடிக்காமல் பைரவி கேட்க. “நான் தான், என்ர மேல வச்ச காதல் உண்மையினா, என்ன சொன்னாலும் செய்வியான்னு வாக்குக் கேட்டேன், சரின்னா. என்னை மறந்திடச் சொன்னேன், என்ற வாழ்க்கையில் குறுக்க வராதேன்னு சொன்னேன். ஒரு பார்வை பார்த்தா, அதுக்குப் பொறவு, “இது தான் உங்க முடிவுன்னா, சரிங்க “ னு பாதி வார்த்தையை முழுங்கினா, அதுக்குப் பிறகு, உன்னைப் பத்தி நிறையச் சொன்னேன்” எனக் கைலாஷ் சொல்லவும், பைரவி ,”உங்களுக்குக் கொஞ்சம் கூட ராஜி மேல கருணையே வரலையா” என ஆட்சேபிக்கவும்,
“ இது நல்லா இருக்குது அம்மணி, நமக்குக் கல்யாணம் ஆனதை அவகிட்ட சொல்லிப் போட்டேன், பொறவு இதைச் சொல்றதுக்கு என்ன. அப்படிச் சொன்னாலாவது, என்னை மறப்பான்னு சொன்னேன், ஆனால் சொன்னதுக்கு எல்லாம் மண்டையை ஆட்டிட்டு, சட்டுனு கிளம்பி ஓடினா , ஏதாவது செஞ்சுக்குவாளோன்னு தான் தேடி வந்தேன், அப்போ தான் சங்கீதாளு உன்ர கிட்ட பேசிட்டு இருந்திருக்கோணும்.” எனத் தன யூகத்தைச் சொன்னவர்,
“ கல்யாண ஏற்பாடு நிறுத்த சொல்லி, என்ர அப்பாகிட்ட சண்டை போட்டேன், வீட்டை விட்டு போறேன்னு மிரட்டினேன். ஹிட்லர் எதுக்கும் மசியலை, சாப்பாட்டுல விஷத்தை கலந்து சாப்பிட்டு போட்டு , குடும்பத்தோட செத்துடுவேன்னு மிரட்டினார், உன்னைப் பற்றிச் சொல்ல வர்ற நேரம் , பன்னீர் மாமா வீட்டிலிருந்து ராஜி தற்கொலை பண்ணிகிட்டாளுன்னு போன்’ என நிறுத்தியவர் கண்களில் ரத்தம் வராத குறையாகக் கண்ணீர் விட்டவர், "அவளும் நல்லா வாழணுமுன்னு தான அம்மணி சொன்னேன், புருஞ்சுக்காத போயிட்டா, நீயே சொல்லு , உன்னை நினைச்ச மனசில அவளை மனைவியா ஏத்திட்டு இருந்திருக்க முடியுமா" எனத் தன் தரப்பை சொல்லவும், பைரவி, அவரை அணைத்துப் பிடித்தபடி அமர்ந்திருக்க, மகனும், மகளுமாகக் காயம் பட்ட கைக்குச் சிகிச்சை செய்து முடித்திருந்தனர்.
நினைவுலகிலிருந்து, நடப்புலகத்துக்கு வந்தவர், மேலும் வருந்த, பைரவி, “அப்படியாவது, ராஜியை என்கிட்டே பேச வச்சிருக்கலாம்ல ராஜ் , நாங்க ஒத்துப் போயிருந்திருப்போம். அவள் உயிராவது மிஞ்சியிருக்கும்” குறை பட, மூவருமே அவரை அதிசயமாய்ப் பார்த்தனர்.
“ஆயி, சும்மா கதை விடாதீங்க, பாபா அவங்களைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்கன்னு தானே சுயநினைவையே இழந்திருக்கிங்க” என ஆதிரா கேள்வி எழுப்பவும், ‘அப்படிக் கேளுடா ரஜ்ஜும்மா”எனக் கைலாஷ் மகளை ஆதரிக்க,
“நிஜமா தாண்ட ரஜ்ஜூம்மா, இங்க உள்ள சிச்சுவேஷனை சொல்லி உன் பாபா ,கேட்டிருந்தார்னா, நானே ராஜியை கல்யாணம் பண்ண சரின்னு சொல்லியிருப்பேன்” எனப் பைரவி கணவனைப் பார்த்தபடி சொல்லவும்,
“அவள், உயிரோட இல்லாத தைரியத்தில் சொல்றியாக்கும்”எனக் கைலாஷ் முறைக்க, “ ஆயி, பவானி மேல சாத்தியமா இல்லை ராஜ், ராஜி உங்க மேல வச்சிருந்த, அன்புக்கும், காதலுக்கும் அடி பணிஞ்சுருப்பேன்னு சொல்றேன் “ எனப் பைரவி விளக்கம் தர, கைலாஷ் ,”ஏனுங்க அம்மணி , கற்புங்கிறது பொம்பளைக்கு மட்டும் தானாக்கும், எங்களுக்குக் கிடையாது, பிச்சுப் போடுவேன், பேசாத போ” என அவர் முறைத்துத் திரும்பிக் கொள்ள, பைரவி அவரைச் சமாதானம் செய்ய முயன்றார். ஆதிராவின் மனதில் பாபா இன்னும் உயர்ந்து நின்றார்.
“ஆயி, நானும் உங்களோட ஸ்டேட்மெண்டை வன்மையா கண்டிக்கிறேன், அதெப்படி நீங்க பாபாகிட்டே இப்படிச் சொல்லலாம்” என ஆதர்ஷ், சீரியராகக் கேட்க, ஆதிராவும் ஒத்து ஊத்தினாள். குடும்பமே ஒன்னு கூடிடுச்சே எனப் பைரவி பார்த்திருக்க, “ பாபா, சந்தன் கட்டிலிருந்து கிளம்பும் போதே, இன்னொரு பொண்ணை ஷாதி பண்ணிக்குங்கன்னு பர்மிசன் கொடுத்திருக்கணும் ‘என அவன் புன்னகை மாறாமல் சொல்ல, பைரவி மகனை ஓர் அடி வைத்தார்.
“பாவு, உங்களுக்கு அந்த நினைப்பு இருக்கா என்ன “என ஆதிரா அதிர்ச்சியாகக் கேட்கவும், “ஹேய் , நான் ஆயியை வம்பிழுத்தேன், இருந்தாலும் அந்த ராஜியம்மாவும் பாவம் தானே, பாஸ் ஒரு சான்ஸ் கொடுத்திருக்கலாம், ஆயிக்குப் பயந்தே ராமனா இருந்திருப்பர்” என ஆதர்ஷ் விடாமல் ஆயி, பாபாவைக் கேலி பேசி, சூழலை இலகுவாக்கப் பார்த்தான்.
“ எப்படியிருந்தாலும், பெத்தவளா, வளர்த்தவளானு ஓரியாடியிருப்ப, என்ன ஒன்னு அப்பா போஸ்டிங்குக்குப் போட்டிக்கு ஆள் இருந்திருக்காது’ எனக் கைலாஷ் லொள்ளு பேச, மகன் முழிக்க, மனைவி முறைக்க , மகள் சிரித்தாள்.
“ கோபம் வந்தா, யார் காரணமோ அவுங்க மேல காட்டணுமுன்னு மருமகளுக்கு அட்வைஸ் பண்ணீங்க, இப்ப நீங்க என்ன செஞ்சீங்களாம் ” எனக் கைலாஷ் கை கட்டை பார்த்து ஆதர்ஷ் பேச்சை மாற்ற , “என்ர , மருமவளும் என்னையாட்டமா , எமோசனல்னு, இப்போ தானே கண்ணு தெரியுது” என மெச்சி கொண்டார் ராஜன்.
“ராஜ், ரஞ்சிக்கு எதுவும் பாதிப்பு இல்லாமல், உங்க தங்கச்சிகளையும் ரொம்பக் கோவிக்காம , நிலைமையைச் சமாளிங்க. நான் சொன்னதெல்லாம் இறந்தகாலம், இப்போ நிலைமைக்கு ஏத்த மாதிரி, பெரியவங்களையும் மனசில வச்சு முடிவெடுங்க ப்ளீஸ்” எனக் கணவரை உணர்ந்தவராகப் பைரவி கோரிக்கை வைக்கவும், மனைவியை முறைத்தவர், அவர் நயந்து, கண்களால் இறைஞ்சவும், “சரிங்க அம்மணி, ராணியம்மா கட்டளை மறுக்கவா முடியும்” எனச் சம்மதம் சொல்ல,
“ஆயி, நீங்க பாவமா ஒரு பார்வை பார்த்தாலே பாபா தாங்க மாட்டேங்கிறாங்க, இவர்களைப் போய்ப் பயங்கரமா பில்டப் பண்ணி வச்சிருந்தீங்களே” என ஆதிரா மனம் பொறுக்காமல் கேட்கவும், “அது தான் கண்ணு, அன்பு, பாசம்.நேசம் ,காதல் ஏதேதோ சொல்றாங்களே அது. என்ர கிட்ட வருவோம்கிற நினைப்பை விட, என்னைப் பிரிஞ்சிருவோம்கிற நினைப்பே உன்ர ஆயியைத் தள்ளி நிறுத்திடுச்சு”என மனைவியைப் புரிந்தவராகச் சொல்லவும், பைரவிக்கு நிம்மதி பிறந்தது எனில், அவர் மக்களுக்குக் காதலின் ஆழத்தைப் புரிய வைத்தது.
மனதின் பாரங்களை இறக்கி வைத்த , பைரவி அன்று நிம்மதியாக உறங்க, பயந்தபடி,ஆயி, பாபாவுக்குள் சண்டை மூளாததில் ஆதிராவும் கண் அயர்ந்தாள். ஆனால் அப்பாவும் மகனுக்கும் இரவு தூக்கம் தொலைந்தது, அப்பா, அம்மா மனதை அதிகம் துன்பப் படுத்தாமல், தங்கைகளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க, மகனோடு சேர்ந்து திட்டம் தீட்டினார் கைலாஷ் ராஜன்.
இதோ, காலையில் நடப்பதாக இருந்த மஞ்சள் பூசும் ,ஹல்தி சடங்கை, இரவில் தங்கள் சடங்கோடு சேர்த்துச் செய்து கொள்வோம் எனச் செய்தி அனுப்பியவர், தன் குடும்பம், தங்கை குடும்பங்கள், விஜயன் குடும்பம், போஸ்லே குடும்பத்தை மட்டும் காலை உணவுக்குப் பின், அதே அரங்கில் கூட்டினார். விஜயன், ரஞ்சியைக் காரணம் காட்டி வர மறுக்க, ராஜன் பிடிவாதத்துக்கு முன் எதுவும் எடுபட வில்லை.
குடும்பத்தோடு வந்தவர்களில், ரஞ்சியை மட்டும் ஆதிராவோடு தாங்கள் தங்கியிருந்த அறைக்கு அனுப்பி வைத்தார். ஆராதனாவிடம் அவளை ஒப்படைத்து விட்டு, ஆதிரா அரங்குக்கு வந்து விட்டாள் .
மூன்று தலைமுறை, கேஆர் , பைரவிபாயின் வாழ்க்கையில் முக்கியமானவர்கள் கூடியிருந்தனர். பாலநாயகம் சௌந்தரிக்கு அருகிலேயே ரமாபாயை உட்காரச் சொன்னவர், அனைவருக்கும் வணக்கம் சொல்லி, பைரவி,மற்றும் மகன், மகளையும் அணைத்தபடி நின்று, ஓர் உரை நிகழ்த்தினார்.
பிறகு, அபிராம் கையிலிருந்த பாத்திரங்களை வாங்கி, “சாஸுமா, நீங்க என்ர கிட்டக் கேட்ட விஷயம். என்ர சொத்தை, என்ர மகனுக்கும், மகளுக்கும் சமமா பிரிச்சு எழுதியிருக்கேனுங்க, நீங்க பார்த்துட்டீங்கனா நான் கையெழுத்துப் போடவேண்டியது மட்டும் தானுங்க பாக்கி. அப்பா, தாய் மாதா உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லையில்லைங்க “ எனக் கேட்டு நிற்க.
“உன்ர சொத்து, உன்ர பிள்ளைகளுக்குப் பிரிச்சு எழுதி வைக்கிற, இதிலென்ன இருக்கு, இதுக்காகவா சாங்கியத்தையே தள்ளி வச்ச” என நாயகம் மகனைக் கடிந்து கொண்டார். ‘ சத்தமில்லாமல் செய்ய வேண்டிய வேலையை மகன் கூட்டம் கூட்டி , தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்குவதாக அவர் நினைப்பு. மகள்கள் ஏதேனும் ஆட்சேபித்து, விரும்பத் தகாதது நடந்து, உறவு கேட்டுவிடக் கூடாதே எனப் பயம்.
ரமாபாய் , “தாமாத்ஜி, என் வார்த்தைக்கு மதிப்புக்குக் கொடுத்து, என் பேரன் பேத்திங்க பேரில் சொத்தை எழுதி வைக்கிறதுக்கு நன்றி. எங்க குடும்பத்துச் சொத்தே ஏக போகமா இருக்கும் போது , இந்தச் சொத்து எதுக்குன்னு எல்லார் மனசிலையும் கேள்வி வரும்” என வினயமாகப் பேசவும்,
“ அப்படியெல்லாம் ஒரு கேள்வியும் இல்லை சம்பந்தியம்மா , ராஜா சம்பாதிச்சதை, உரிமையா தான் பிள்ளைகளுக்குக் கொடுத்துட்டான், நீங்க கேட்டதும் நிறைவேறிடுச்சு, பேச்சை வளர்க்க வேண்டாமுங்க” எனப் பாலநாயகம், பேச்சைக் கத்தரிக்க முயல, அவர் நண்பர்களும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
ஆனால் அவ்வளவு எளிதாக முடியும் விஷயமென்றால், கைலாஷ் ராஜன் கல்யாண சடங்கையே தள்ளி வைக்கும் அவசியம் என்ன, அவர் எண்ணத்தைப் பொய்யாகாமல் மூத்த தங்கை சங்கீதா , “சொத்து விசயமுன்னா,பேசாத எப்படிங்க அப்பா தீரும். திடுதிப்புன்னு அண்ணனுக்குப் பொண்டாட்டி, பிள்ளையின்னு வந்து சேருறாங்க.அவிகளுக்கு வேணா பாசம் கண்ணை மறைக்கும், நாம ஆராய வேணாங்களா. ராஜ வம்சம் சொத்தை வாங்கிப் போட்டு, நம்ம குடும்பத்தை நாட்டத்தில் நிறுத்திட்டாங்கன்னா. " எனவும், அவள் கணவன் சந்திரமோகன், 'அட சண்டாளி, ஆதர்ஷை மருமகனாக வழியைப் பார்ப்பாளா, எதையோ பேசுறா ' என மனதில் திட்டியபடி "சங்கீதா, உங்க அண்ணனுக்குத் தெரிஞ்சா போதும், நீ இதையெல்லாம் பேசாத" எனக் கண்டித்தான் .
"அதெப்படிங்க பேசாத இருக்கிறது, என்ர அண்ணனுக்கே , அவிக பொண்டாட்டின்னு சொல்றவிகளை மட்டும் தான் அடையாளம் தெரியுது, அண்ணனுக்கு அவிக கர்ப்பமா இருந்ததே தெரியாது, இத்தனை ஏன், அவிகளுக்கே புள்ளைங்களைப் பெத்தது ஞாபகம் இல்லைகிறங்க. மகளைத் தனியா வச்சு வளர்த்தியிருக்காங்க மகனை ஒருமாசம் முன்னை தான் பார்த்திருக்காங்க , நிஜமாலுமே, இவிக இரண்டு பேரும் .என்ர அண்ணன் பிள்ளைகள் தானா, பிச்சியா கிடந்த பொம்பளை யாருக்கு புள்ளைய பெத்துச்சோ. நல்லா எங்கூட்டு சொத்தையும் ஆட்டையைப் போட வந்துட்டாய்ங்க “ எனச் சங்கீதா வரம்பு மீறிப் பேச. பாலநாயகம், சௌந்தரி இருவரும் பதறி, “ வேண்டாம் பேசாதே”என எச்சரித்துக் கொண்டே இருந்தனர்.
பைரவி கண்ணில் நீர் வறண்டு, அசாத்தியமான புன்னகை மட்டுமே இருந்தது. தான் பேசப் பேச, மற்ற யாருமே,எதிர்வினையாற்றவில்லை எனச் சங்கீதா யோசித்து , அண்ணன் முகத்தைக் காண அதில்,கோபம், வெறுப்பு, அசூயை , எல்லாம் இருந்தது, தங்கை மேல் பாயவும் தயாராகவே இருந்தார். ஆனால் அங்குசத்துக்குக் கட்டுப் பட்ட யானை போல், பைரவி பற்றியிருந்த கை அவரைக் கட்டுக்குள் வைத்திருந்தது. அதைப் பார்த்த சங்கீதா,
“ அப்பா, என்னை அடக்காதீங்கப்பா, இந்தக் கேள்வியெல்லாம் நீங்க கேட்க வேண்டியது, இந்தப் பெரிய ராணியம்மா சூழ்ச்சி. இவிக குடும்பத்தைப் பத்தி உங்களுக்குத் தெரியாது. பிளான் பண்ணி நம்மளை ஏமாத்துறாங்க . இந்த ஆதர்ஷ், ஆதிரா நம்ம வீட்டு வாரிசே இல்லைங்க” என மீண்டும் அவள் பெரியவர்களையும் சேர்த்துக் குழப்பும் விதமாகப் பேசவும்.
கைலாஷ், பொறுமை இழந்தவராக, மனைவி கையை எடுத்து விட்டு, உடன் பிறந்தவள் முன் வந்து நின்று, கைகளைக் கட்டிக் கொண்டு, “இவ்வளவு பேச்சு, பேசிட்ட, இத்தனை தகவல் தெரிஞ்சு வச்சிருக்கையில்ல, இவிக என்ர பிள்ளைங்க இல்லையைனா யார் பிள்ளைங்க, அதையும் சொல்லு” என ரௌத்திரமான முகத்தோடு கைலாஷ் ராஜன், கண்கள் தெறிக்கக் கேள்வி கேட்க,
ரமாபாய் ,ராதாபாய் ,பாலாஜி ராவ் எல்லாருமே கோபமாக அவளிப்ப பார்த்திருக்க, ஆதிரா, ஆதர்ஸக்கு ,அத்தை மீதான பாசம் சீ, சீ என்றானது. பைரவி, 'ராஜ், வேண்டாம் விடுங்க" எனக் குரல் கொடுத்தார்.
அந்தக் கோபத்தைப் பைரவி மீது திருப்பும் எண்ணத்தோடு, ஆதி முதல் அவள் சிந்தையில் பைரவி பற்றி நினைத்திருக்கும் கேவலமான எண்ணத்தைச் சொல்லி விட, கைலாஷின் ருத்ர தாண்டவம் ஆரம்பமானது.
பௌர்ணமியை நோக்கி நிலவு.
No comments:
Post a Comment