Sunday, 22 May 2022

யார் இந்த நிலவு- 57

யார் இந்த நிலவு- 57 

" தீயினாற் சுட்டப் புண் உள் ஆறும்

ஆறாதே நாவினார் சுட்ட வடு"

" ஒரு சொல் வெல்லும்,ஒரு சொல் கொல்லும்" ஆகவே வார்த்தை பிரயோகம் மட்டும் எப்போதும் கவனத்தோடு இருக்க வேண்டும்.

" வாய் புளித்ததோ, மாங்காய் புளிச்சதோன்னு பேசாதே" எனச் சரியாகத் தெரியாத விசயத்தைப் பற்றிப் பேசக் கூடாது என்பர். ஆனால் இந்த விசயங்கள் யாவும், உறவுகளிடம் உரிமை போராட்டம் என வந்து, உறவை தக்க வைத்துக் கொள்ளுதல் என்ற நோக்கமே பெரிதாக இருக்கும் போது , அறிவை உணர்வுகள் மறைத்து விடுகின்றன.

இங்கு, சங்கீதாவும், பிறந்தது முதல், தன் அண்ணன் தங்களுக்குரியவர் என வைத்த பாசம், வேறு யாராவது அண்ணியாக வந்தால் அண்ணன் விலகிப் போவார் என்று பயந்தே, பிறந்தது முதல் பழகிய தோழியான ராஜியை அண்ணியாக்கி, தானும் அவர்கள் வீட்டுக்கு மருமகளாகி , வாழ்க்கையைச் சந்தோஷமாக்கிக் கொள்ளலாம் எனக் கணக்கிட்டிருந்தாள். அன்று அது நிறைவேறாமல் போகவே, அதற்கான காரணமாக முகம் அறியாத, அண்ணனை மயக்கிய மோகினியாக அவள் உருவகப்படுத்தி வைத்திருந்த பைரவி மீது அவ்வளவு வெறுப்பு இருந்தது.

ஆரம்பத்தில், ராஜியின் முடிவுக்குப் பின், தங்கள் கனவுகள் தகர்ந்து போக, ராஜனும் வீட்டை விட்டு வெளியேறினார். சிலகாலம் கழித்துப் பைரவி இறந்து விட்டதாகச் செய்தி வர, ராஜியின் வாழ்க்கையில் குறுக்கே வந்தததற்கு விதி கொடுத்த தண்டனையாகவே நினைத்தாள்.

மீண்டும் ராஜன், தொழில் ஆரம்பித்துத் தங்கைகள் கல்யாணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்த, அண்ணனோடு பிணக்குகள் மறைந்தன. ஆனாலும் அவர் ஒத்தையாய் நின்றதில் வருத்தம் தான். ஓரிரு முறை ராஜனை வற்புறுத்திய போதும், உண்மை தெரிந்த காரணத்தால் தங்கைகள் இருவருமே அண்ணன் மீது பாசத்தை வைத்தனரே தவிர அவரது வாழ்க்கைத் துணையாக ராஜியைத் தவிர யாரையும் யோசிக்க மனம் வரவில்லை.

கைலாஷின் தொழில் முன்னேற்றம், அசுர வளர்ச்சி கண்டு அவர் விருட்சமாக நிற்க, உரிமையோடு அவரின் சொத்தையும் ஆண்டனர். தங்கைகளின் தொழிலில் , அவர்களது பெயரிலேயே கைலாஷ், தன் சம்பாத்தியத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து வந்தார்.

திடீரென அண்ணன் வாழ்வில், அவரின் மனைவி, பிள்ளைகள், சொத்துக்கு வாரிசு என வரவும், முதலுக்கே மோசம் என்றே வந்தனர். பைரவியைப் பற்றி அறியவும், வேறு வழியின்றிச் சகித்து நின்றனர்.

விஜயன் குடும்பத்தோடு, எப்போதுமே அவர்களுக்கு ஓர் விலகல் தன்மை இருந்தது. அது விஜயன் கஸ்தூரியை மணந்ததிலும், ராஜனோடு சேர்ந்தே திரிந்ததிலும் ஏற்பட்ட அசூயை. ஆனால் காலப் போக்கில், ராஜனே, விஜயனைத் தள்ளி வைக்க, இவர்களும் நல்லதாகிப் போனது எனத் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்வதில் மும்மரமாக இருந்தனர். காலங்கள் கடக்க, இனி அண்ணன் சம்பாத்தியம் எப்படியும் தங்களைத் தான் சேரும் என மனக்கணக்கில் இருந்தவர்களுக்கு , பைரவி வந்ததும், ஆதிரா, அபிராம் பழக்கமும் கண்ணை உருத்தியது.

முதலில் எரிச்சலோடே வந்த சங்கீதா, கணவனின் போதனையில், ஆதர்ஷையாவது தங்கள் மருமகனாக்கிக் கொள்ள வேண்டும் என அமைதியாகச் செல்ல, அதற்கும் போட்டியாக விஜயன் மகள் ரஞ்சி வந்து சேர்ந்தாள். வழக்கம் போலத் தன் நாக்கின் கூர்மையால் அவளையும் தங்கள் பாதையிலிருந்து அப்புறப்படுத்த நினைத்தே சொல்லம்புகளை வீசினாள்.

ஆனால் ஒவ்வொரு முறையும், சங்கீதாவுக்கே சாதகமாக அமையுமா என்ன, விதி தன் விளையாட்டை ஆரம்பிக்க, சனி சங்கீதாவின் நாக்கில் குடியேறியது.

எல்லாம், ராணியம்மா ரமாபாயின் சூழ்ச்சி, ஆதர்ஷ் ஆதிரா இந்தக் குடும்பத்து வாரிசுங்களே இல்லை , எனக் கொடும் வார்த்தைகளாய் பைரவியின் நடத்தையையும் கலங்கப்படுத்தும் , கூற்றை உதிர்க்க கைலாஷ் ராஜன், ரௌத்திர ரூபத்துக்கு மாறினார்.

கைலாஷ் " இத்தனை விசயம் தெறிச்சு வச்சிருக்கையில்ல, அப்போ, அவிக யார் பிள்ளைகள், அதையும் நீயே சொல்லு" எனக் கோபத்தை அடக்கி கைக்கட்டி நின்று கேட்ட நிலையிலேயே, அடுத்து நடக்க இருக்கும் ரசாபாசத்தைத் தவிர்ப்பதற்காக, விஜயன் ஒரு புறமும், பைரவி ஒரு புறமுமாக நின்று அந்தப் பேச்சைத் தட்டி விட முயன்றனர்.

" அக்கா, பேசாத இரு" எனக் கவிதாவும் வந்து சங்கீதாவை அடக்கினாள். ஆனால், மறுப்பு வர வர எகிறிய சங்கீதா, " நீங்க இங்கிட்டு வரவுமே, அவிக அக்கா புருஷன், அவிகளைத் தூக்கிட்டு போயிட்டாரு அண்ணேன். ஒரு வேளை அவிக வாரிசுங்களோ என்னமோ" என வார்த்தையை விட,

" ஏய், என் மகளைப் பத்தி பேசினா, நீ நல்லா இருக்க மாட்ட" என ரமாபாய் ஆக்ரோஷமாய் எழ, ஆதர்ஷ் நானிமாவை பிடித்துக் கொண்டான்.

" சங்கீ, வார்த்தையைக் கொட்டாத" எனச் சௌந்தரி, முன்னோக்கிச் செல்ல, ஆதர்ஷ் கண்ணசைவில், ஆதிரா தன் ஆத்தாவை வந்து பிடித்துக் கொள்ள, " கண்ணு, அவ பேசறதை மனசில வச்சுக்காத. நீ என்ர பேத்தி தான்" எனப் பேத்தியைக் கட்டிக் கொண்டார் சௌந்தரி.

சங்கீதாவின் வார்த்தையில் கட்டுப்பாட்டை மீறியஷ கைலாஷ் , "யாரைப் பார்த்து என்ன வார்த்தைச் சொல்லிப் போட்ட. என்ர பொண்டாட்டி நெருப்பு. அவளைத் தொட்டா பொசுங்கித் தான் போகோணும், என்ர புள்ளைங்க, அவள் வயித்திலிருந்து புடம் போட்ட தங்கமா வந்தவிக. இவ்வளவு வன்மத்தையும் வச்சுக்கிட்டு தான், என்ர கூட உறவாடியிருக்க, என்ர கண்ணு முன்னாடி நிற்காத, ஓடிடு. இல்லையினா பொறந்தவன்னு பார்க்க மாட்டேன், உயிரோட புதைச்சு போடுவேன். " என வெகுண்டு தங்கையின் குரல் வலையில் கை வைத்துத் தள்ளிக் கொண்டே போக, "ராஜா, கோபத்தைக் கட்டுப்படுத்து" என விஜயன் நண்பனை பின்னால் பிடித்து இழுத்தார்.

பாலநாயகம், " ராஜா, அவளைக் கொன்னு போட்டு, நீ உன்ர கையைக் கறைப் படுத்திக்காத. பெத்த கடனுக்கு, நானே அவளைக் கொன்னுப் போட்டு ஜெயிலுக்குப் போறேன்" என மகனிடம் விரைய, பன்னீர், ராமு இருவரும் , " நீ வேற பேசாத இருடா" என அவரைப் பிடித்துக் கொண்டனர்.

விஜயன் நண்பனை பின்னே இழுக்க முயன்றும் முடியவில்லை. அபிராம் அண்ணன் தங்கைகளுக்கு நடுவில் சமரசம் செய்ய முயன்றான்.

"என்ர பாருவைப் பத்தி பேச கூட உனக்குத் தகுதியில்லை. அவள் நெருப்பு மாதிரி, தாலியைக் கேட்டேன்னு, என்னையவே தள்ளி விட்டு ஓடுனவ" என வரிசையாய் பேசிய படியே, தங்கை குரல் வலையில் வைத்திருந்த தன் பிடியை மேலும் அழுத்தவும் முடியாமல், தளர்த்தவும் இல்லாமல் உணர்வுகளுக்கிடையே, பாசத்தில் தவித்துக் கொண்டிருந்தார் கைலாஷ்.

 "ராஜ், அவளை விடுங்க" எனப் பைரவி, கைலாஷ் கையைச் சங்கீதாவின் கழுத்திலிருந்து எடுக்க முயல, அப்போதும் கூடச் சங்கீதா, அண்ணனின் கையைப் பற்றிய அண்ணியின் கையைத் தான் தட்டி விட்டாள், அபிராம் பைரவியைப் பிடித்துக் கொண்டான்.

" என்ர அண்ணன், என்னைக் கொன்னு கூடப் போடட்டும். நீங்க கையை எடுங்க" எனக் கஷ்டப்பட்டுப் பேசி பைரவி கையைத் தட்டி விட, "சை" எனக் கைலாஷும் சேர்ந்து கையை எடுத்தார்.

கைலாஷ் பட்டெனக் கையை எடுக்கவும், சங்கீதா விழப் போக, கவிதாவும் அவள் கணவனுமாகப் பிடித்துக் கொண்டனர். சங்கீதாவின் கணவன், சந்திர மோகன், முதலில் மனைவியைத் திட்டியவன், இப்போது மச்சினனின் செய்கையில், மனைவியைப் பிடிக்கவும் இல்லாமல் அதிர்ந்து நின்றான். ஏற்கனவே ,அவனது வியாபார முதலீட்டாளர்கள் திடீரென அதனைத் திரும்பப் பெறுவதாக மெயில் அனுப்பி இருந்தார்கள், அதற்குச் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தவனுக்குக் கைலாஷின் செய்கை பெரிய அதிர்ச்சியைத் தந்தது.

மனைவியைப் பிடிப்பதை விட, மச்சினன் கோபத்தைத் தனிப்பதே முதல் வேலையாகப் பட, “மச்சான், உங்க தங்கச்சி, புத்தி பிசகி பேசுறாளுங்க, அவளை மன்னிச்சிடுங்க” எனக் கைலாஷ் கையைப் பிடிக்க, அவனிடமிருந்தும் தன கையை உருவிக் கொண்டவர்,

“அவளா, அவளா புத்தி பிசகி பேசுறா, அவ பேசின பேச்சிலே தான் , என்ர பொண்டாட்டி புத்தி பிசகி , பிள்ளைகளைப் பெத்தது கூடத் தெரியாத அலைஞ்சாலுங்க. இன்னைக்குக் கேட்டாலே கேள்வி, என்ர புள்ளைங்க எனக்குப் பிறந்ததான்னு, அந்த நிலைமை வர்றதுக்குக் காரணமும் அவ தானுங்க.

என்ர பாரு பிச்சியானதுக்கும் காரணம் அவள் தான். என்ர மகள், அப்பன் முகம் தெரியாத, நாடோடியா வளர்தா. என்ர கார்லையே தப்பி விழுந்து அடைக்கலாமா என்ர கிட்ட வந்தா. " எனும் போது , ஆதிரா பாபா வென கையை பிடிக்க, அவளை அணைத்து உச்சி முகர்ந்து , கண் கலங்கி , அம்மாவிடம் விட்டு விட்டு , குரலை செருமிக் கொண்டு பைரவியிடம் வந்து நின்றார். 

" என்ர பொண்டாட்டி, சோட்டி ராஜகுமாரி, பீபீ மில்ஸ் சொந்தக்காரி. கணக்கில்லாத சொத்துக்கு வாரிசு. நான் கே ஆரா இத்தனை பெரிய பணக்காரனா இல்லாதப்பவே, என்னை வெறும் ராஜனா ஏத்துக்கிட்டவ. ஏன் இந்த தொழில் ,சொத்து, சொகம் எல்லாமே அவளோட ரெண்டு வளையலை மூலதனமா வச்சு உருவானது. " என தோளோடு சேர்த்து அணைத்தபடி சொல்ல, பைரவி விடுங்களேன் என்பது போல் கணவரின் கையை அழுத்தினார். 

" இன்னைக்காவது சொல்லுவோம் அம்மணி, " என்றவர், "உரிமையான மருமகளா என்ர வீட்டுக்கு ராணியா வர்றதை விட்டுப் போட்டு, என்ர பெத்தவங்க மனசில இடம் பிடிக்கணுமுன்னு, குன்னூர்ல பெரியவிகளுக்கு வேலைக்காரியா, கேர் டேக்கரா இருந்தா. 

என்ர மகன் ஆடி பாடி, கவலை இல்லாத திரிய வேண்டிய வயசில, பெரிய மனுஷனாட்டம் குருவித் தலையில் வச்ச தேங்காயாட்டம் பொறுப்பைச் சுமந்துட்டு , மனசில இருக்கிறதை வெளியே சொல்லாத வாழுறான். 

இத்தனைக்கும் மேல இப்படி ஒரு குடும்பம் இருக்கிறதே தெரியாத , பிஸ்னஸ் பிஸ்னெஸ்னு , என்னை, நானே மறக்கிறதுக்கு கிறுக்கனா திரிஞ்சனே, எல்லாத்துக்கும் இவள் பேசினது தான் காரணுமுங்க. 

அவளுக்குப் பேச தெரியாத பேசிட்டா ,மன்னிச்சிடுனு சொல்றிங்க. எல்லாம் தெரிஞ்சு தான் பேசியிருக்கிறாளுங்க, நீங்க சொல்லுங்க, உங்க உடன் பிறந்தவ இப்படிச் செஞ்சிருந்தா மன்னிப்பீங்களா" எனவும், அவன் தலையைக் குனிய கைலாஷ் மேலும் தொடர்ந்தார்.

"அன்னைக்கு மட்டும் என்ர மகன் சரியான நேரத்தில், ஹார்ட் அட்டாக் வந்த என்ர பொண்டாட்டியை காப்பாற்றாத இருந்திருந்தான்னா, அவளும் போய்ச் சேர்ந்திருப்பா. நானும் போய்ச் சேர்ந்திருப்பேன். அது தான உங்களுக்கு வேணும், என்ர சொத்து தான உங்களுக்கு வேணும்” எனத் தங்கைகளை நோக்கி கைலாஷ் உருமவும், 

பெரியவள் அப்போதும் அரங்கத் தனமாகப் பார்த்திருக்க, சின்னவள் கவிதா, “அண்ணா, அப்படியெல்லாம் பேசாதிங்கண்ணா “ எனக் கண்ணீர் வடித்தாள்.

“இனிமே இந்த முதலை கண்ணீரெல்லாம் வேண்டாம் அம்மணி, என்ரகிட்ட வேலைக்கு ஆகாது. எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு. இருபது வருஷத்துக்கு முன்னை, போன்ல நீங்க நடத்தின நாடகத்தை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன், என்ர பொறந்தவளுங்க இத்தனை நல்லவளுங்களா இருக்காளுங்கன்னு பூரிச்சுப் போயிட்டேன் " எனக் கோபத்தை நக்கலாகவே காட்ட, தங்கைகள் இருவருமே பைரவியைப் பார்க்க, அவரின் முகத் தெளிவே அண்ணனுக்கு முழுவதும் தெரிந்து விட்டது, என்பதை உணர்த்தியது.

சௌந்தரி, " என்ன கண்ணு சொல்ற, உனக்குக் கல்யாணமானதா நினைச்சு, பைரவி விலகிடுச்சுனு தான , ராணியம்மா சொன்னாங்க. இவிக என்ன செஞ்சாங்க" என மகன் ,மருமகள் முகத்தைப் பார்த்து கவலையோடு சௌந்தரி கேட்க,

" ராஜ், போதும் விடுங்க. பழசைப் பேசப் பேச எல்லாருக்கும் மனசுக்குச் சங்கடம் தான் . நாங்க உங்ககிட்ட வந்துட்டமே. விடுங்களேன் ப்ளீஸ் " எனப் பைரவி, தன் மாமன், மாமி மனம் புண்படக் கூடாது என யோசிக்க, ரமாபாய் விடுவதாக இல்லை.

" அதெப்படி பையு, முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்காத. உன் நாத்திகள், உன் நடத்தையைச் சந்தேகப்பட்டிருக்கா. உன் பிள்ளைகள் உன்னது இல்லைனு சொல்றா. இதில நான் சதி செஞ்சு ஏமாத்துறேன்னு, குற்றம் வேற சுமத்துறா. நீ வேணும்னா பெருந்தன்மை காட்டிக்கோ. ஆனால் எனக்கு, என் மகள், பேரன் பேத்தி பட்ட கஷ்டத்துக்கு ஒரு ஞாயம் வேணும்" என ரமாபாய்ப் பெரிதாகப் பேச, ஆதர்ஷ், கைலாஷ் இருவருமே அதனை ஒத்துக் கொண்டனர்.

" ஆயி, உண்மை எல்லாப் பக்கத்திலிருந்தும் வெளியே வரட்டும். இந்த ரகசியங்கள், நம்ம வாழ்க்கையைச் சிதைச்சது போதும். இனிமே நானோ என் தங்கை ஆதிராவோ, எங்க ஆயி பாபாவை விட்டுக் கொடுக்கிறதா இல்லை" எனத் தெளிவாகப் பேசிய ஆதர்ஷ். நேற்று பைரவி சொன்ன அவரது வாழ்க்கையின் முக்கியமான தருணத்தை , அத்தைகளோடு நடந்த உரையாடலை அழுத்திச் சொன்னான்.

" எங்க பாபாவை, ஆயி , சந்தன் கட்டிலிருந்து, அவர் அம்மாவுக்காக, குடும்பத்துக்காக அனுப்பி வச்சாங்க. அவர் தங்கைகள், அதாவது என் அத்தைகள் திருமணம் ஆகும் வரை, தன்னைக் கல்யாணம் பண்ணதைக் கூடச் சொல்ல வேண்டாம்னு சொல்லி அனுப்புனாங்க. சமய சந்தர்ப்பத்தால் அதிரடியா கல்யாணம் செய்திருந்தாலும், காதல் கல்யாணம் செய்துகிட்ட அண்ணனுடைய, தங்கைகளுக்கு நம்ம சமுதாயத்தில் அவ்வளவு சீக்கிரம் நல்ல வரன் அமையாதுன்னு, என் பாபாவுடைய குடும்பத்துக்காக யோசிச்சவங்க என் ஆயி" எனப் பைரவியை நெருங்கி நின்று அவரை அணைத்துக் கொண்டவன் ,

"நாங்க, எங்க ஆயி கருப்பையில் வந்துட்டோம்னு தெரிஞ்சிருந்தா, எங்க பாபா, ஆயியை விட்டுக் கிளம்பியே இருந்திருக்க மாட்டாங்க. இன்னைக்கு, நாங்க யார் வாரிசுன்னு வாக்குவாதமும் வந்திருக்காது. ஆனால் இதெல்லாம் நடக்கனும்னு எங்க லிபியில் இருக்கே."என்றவன் , தங்கள் தாய் வழி பிரச்சினை, ஜெயந்தைப் பற்றியும் சொல்லி, நேற்று பைரவி சொன்ன உரையாடல்களையும் சொல்ல, அதைக் கேட்டிருந்த, நெஞ்சங்களும் உருகி, அத்தனை கண்களிலும் கண்ணீர். தங்கள் வாழ்க்கையை, மகனின் வரிகளில் கேட்க, கைலாஷ் பாருவும் உணர்வு ததும்பிய நிலையில் தான் இருந்தனர்.

"இனியும் கைலாஷ் ராஜன் முட்டாளா, ஏமாந்தவனா இருக்க விரும்பலை. என்ர பாருவை பத்தி பேசறதுக்கு, யாருக்குமே அருகதை கிடையாது. இவளாட்டமே, இங்க வேற யாருக்கும், ஆதர்ஷ், ஆதிரா என்ர பிள்ளைகள் தானான்னு சந்தேகம் இருத்தா, தயவு செய்து கிளம்பி போயிடுங்க. யாருகிட்டையும் டாக்டர் சர்டிவிகேட் காட்டி மெய்ப்பிக்க வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. " என, மன வேதனையோடு, அரங்கில் சிங்கம் போல் கர்ஜித்து அதிகாரமாகவே சொன்னார் கைலாஷ் ராஜன்.

பாலநாயகமும், சௌந்தரியும் மகன் படும் வேதனையைப் பார்த்துச் சகிக்க முடியாதவர்களாக , மகள்களைச் சரியாக வளர்க்க வில்லையே என நொந்தவர்களாக ஓய்ந்து அமர்ந்திருக்க, ராமசாமியும், பன்னீரும் ராஜனை சமாதானப் படுத்த வந்தனர்.

“ராஜா, பைரவி எங்களுக்கும் மகள் தான். எங்க மகளைப் பத்தி எங்களுக்கு நல்லா தெரியும். அதே போல உன்ர பசங்களைப் பார்க்கவுமே, நீ சொல்லாதையே அவிக உன்ர வம்சம்னு தெரியிது. நீ சொன்னியே, எங்களுக்கு வேலைக்காரியா , கேர் டேக்கரா இருந்துச்சுன்னு, நாங்க அப்படியா வச்சிருந்தோம் கேளு”என ராமசாமி வினவவும்,

“அவருக்கு என்னப்பா தெரியும், ஒரு தடவையாவது குன்னூர் வந்திருந்தா தெரியும், கோவிச்சுக்கிட்டு மலை ஏறாத கைலாசனா தான இருந்தார். “ எனப் பைரவி பெரியவர்களுக்கு ஆதரவாகப் பேசவும்,

“நானும் ஒத்துக்குறேன் அம்மணி, மலை ஏறியிருந்தா , உன்ர குட்டு முதவே வெளியே வந்திருக்கும். உங்க எல்லாருக்கும் இளைச்சவன், இந்த ராஜன் தானே” என ஒட்டு மொத்தமாக அனைவர் மீதும் அவர் குற்றம் சாட்ட.

பன்னீர், “மாப்பிள்ளை போனதெல்லாம் போகுது, சங்கீதாலும் உங்க மேல உள்ள பாசத்தில தான் அண்ணன் ஏமாந்திடக் கூடாதேன்னு பேசக் கூடாத பேச்சைப் பேசி போடுச்சு. நீங்க பெரிய மனசுக்காரர், கூடப் பொறந்தவளையும் மன்னிச்சு விடுங்க. உங்க அப்பாவும், அம்மாவும் வயசான காலத்தில தவிச்சு நிக்கிறதை, எங்களால பார்க்க முடியலைங்க” எனக் கைலாஷை சமாதானம் செய்தார்.

கைலாஷ் “எங்களைப் பெத்ததுக்கு , அவிகளும் அனுபவிச்சு தான் மாமா ஆகோணும், இன்னைக்கு எல்லாத்தையும் உடைச்சு பேசிடுவோமுங்க “ என்றவர்,

நாயகத்திடம் வந்து, " அப்பா, நீங்க அன்னைக்குச் சந்தேகமா சொன்னீங்களே, இருபத்திரண்டு வருஷம் முன்னை பருவைப் பிரிஞ்சதுக்குப் பின்ன இவளுங்க கை இருக்கும் போலன்னு. அது நிசந்தானுங்கப்பா. இவளுங்க தான்பா , உங்க மருமகள் பிச்சியா அலைஞ்சதுக்குக் காரணம். இவளுங்க, எங்களைப் பிரிச்சு சிதைக்க நினைச்ச அந்த ஜெயந்த்தோட கூட்டுப்பா " என்றவர், சில காகிதங்களை எடுத்துக் காட்டினார்.

அதில் , சங்கீதாவின் பெயருக்கு இருபத்திரண்டு வருடத்துக்கு முன் ஜெயத்திடமிருந்து வந்த கடிதமும், லட்ச ரூபாய்க்கான செக்கும் இருந்தது. அவள் மணமுடித்துத் தொழில் தொடங்கிய பின் சில தொழில் முதலீடுகளும் ஜெயந்தின் ஆட்கள் பெயரிலிருந்ததையும் சுட்டிக் காட்டினார்.

அதைப் பார்க்கவும், பாலநாயகத்திற்குக் கோபம் பலியாக வந்தது, மகளை நோக்கி வந்தவர், அவளைத் தூக்கி நிறுத்தி, “என்ர குலத்தைக் கெடுக்க வந்த கோடாலியா நீ. நீயெல்லாம் ஒரு பொண்ணா. எவனோ ஒருத்தனுகிட்ட காசை வாங்கிட்டு கூடப் பொறந்தவனுக்குத் துரோகம் பண்ணியிருக்க.

உன்ர அண்ணனுக்கு முதவே கல்யாணம் ஆனதை சொல்லியிருக்கலாம்ல, பன்னீரோட சம்பந்தமே கலந்திருக்க மாட்டேனே, அநியாயமா அவன் மகள் உசிருமில்ல போச்சு" எனக் கோபமாக வினவியும் அவள் ஏதும் பேசவில்லை.

" உன்ர அண்ணன் , பிரம்மச்சாரியா இத்தனை வருஷம் ஒத்தையா கிடந்தானே , அப்ப கூடச் சொல்லத் தோணலை. சம்பாத்தியத்தை எல்லாம் உங்களுக்குச் சீர் செஞ்சானே, அப்ப மட்டும் வாங்கிகிட்டிங்க, அவனுக்கு ஒரு நல்லது நடக்கும்னு நினைப்பு வரலையா” எனச் சௌந்தரியும் தன் பங்குக்குக் கேட்க, சங்கீதா அசைந்தாள் இல்லை. கவிதா தான், நடுநடுவே பேச முயன்று அழுது கொண்டிருந்தாள்.

" அம்மா கேட்கிறால்ல பதிலைச் சொல்லு. அடுத்தவன்கிட்ட காசு வாங்கிற அளவுக்கா வளர்த்தோம், நாங்கள் என்ன குறை வச்சோம்" என நாயகம் விடாது கேட்க, மகள்களின் நடத்தையைப் பார்த்து வெறுப்புற்ற சௌந்தரி

“அவளுங்களுக்கிட்ட, எதுக்குங்க கேட்டுக்கிட்ட நிற்கிறீங்க. பொறந்தவனுக்கே துரோகம் செஞ்சவலுங்க. நம்மளுக்கும் குழி தோண்டி வச்சிருப்பாளுங்க. , செத்தாலும் நாம நிம்மதியா சாகக் கூடாதுன்னு சாபம் வாங்கிட்டு வந்திருக்கோம். “ என மனம் நொந்து பேசிய

சௌந்தரி, “அப்பனே முருகா, இதெல்லாம் பார்க்கிறதுக்குத் தான் என்னை உயிரோட வச்சிருக்கியா, இதுகளைப் பெத்த வயிற்றுக்கு, தண்டனையா ஏதாவது நோவை கொடுத்தாவது, என்னைக் கூப்பிட்டுக்கோ” என அழவும் ,

கைலாஷ், “என்ன பேச்சு பேசுறீங்க தாய் மாதா, என்னைப் பெத்து போட்டதுக்கும் இதையே தான் சொல்லுவிங்களா. அப்படியா இருந்தா , அந்த நோவை உங்களுக்குக் கொடுக்க வேண்டாமுங்க, இத்தனை வருசமா என்ர தாய்மாதா மனசை நோகடித்ததுக்காக எனக்குக் கொடுக்கட்டுமுங்க” என அவர் சொல்லவும்,

மகனின் வாயில் அடித்தவர், “அப்படிச் சொல்லாத ராஜா, இனிமே தான் உனக்கு வாழ்க்கையே இருக்கு, இந்த மகராசி , உன்ர புள்ளைங்க கூடக் குடும்பமா சேர்ந்து சந்தோசமா இரு. உனக்குப் பொறந்தவளுங்களுக்குச் செய்யிற பந்தத்திலிருந்து விடுதலை தர்றேன், இவைகளைப் பெத்த பாவத்துக்கு நானும் , உன்ர அப்பாவுமே,அவிகளைப் பார்த்துக்குறோம், இந்தக் கிரகம் எங்களோடவே போகட்டும் ” எனச் சௌந்தரி மகள்களை வசை பாடி மகனை அவரகள் பிரச்சனையிலிருந்து தள்ளி நிறுத்த, அபரஞ்சி, சாரதா இருவரும், சௌந்தரியையும் வார்த்தையை விடாதே எனச் சமாதானப் படுத்தினர்.

பைரவி, “ அது எப்படிங்க அத்தை, உங்களுக்குப் பிறகு உங்க மகள்களுக்கு உங்க ஸ்தானத்தில் இருக்கணும்னு , என்கிட்ட வாக்கு வாங்கிட்டு, இப்போ எங்களையே கழட்டி விடுறீங்களே.உங்க மகனோட வாழும் முன்னை, உங்க மனசில இடம் பிடிக்கணும்னு, எல்லாரும் வேணும்னு தான் அத்தை குன்னூர் வந்தேன், அதுக்கே அர்த்தம் இல்லாத செறிங்களே ” என மாமியாரின் கையைப் பிடிக்கவும்,

“உன்ர அருமை தெரிஞ்சிக்கிற அளவுக்கு , நான் நல்ல பொண்ணுங்களைப் பெத்துக்களைக் கண்ணு. உன்ர அம்மா, என்ர வீடு உனக்குப் பாதுகாப்பு இல்லையின்னு , அன்னைக்குக் கூட்டிட்டு வந்ததுக்கு எனக்கு அத்தனை ரோசம் வந்துச்சு. அதில எத்தனை ஞாயமிருக்குது பாரு. ஒரு அம்மாளா, நானா இருந்தாலும் என்ர மகளை , இப்படிக் கொழுந்தியாளுங்க இருக்க வீட்டில் கட்டிக் கொடுப்பனா, மறுபடியும் அதே காரணத்தை ராணியம்மா சொல்ல மாட்டாங்கன்னு என்ன நிச்சியம். நீ முறையோட, நாளைக்கு என்ர மகனோட மாளிகைக்குள்ள அடி எடுத்து வையி, நான் என்ர மக்களைக் கண்ணுக்கெட்டாத தூரம் தள்ளி வைக்கிறேன்” என மீண்டும் சொல்லவும்,

“அம்மா, இருபத்தி இரண்டு வருஷம் முன்னாடி, ராஜ குடும்பத்துக்கு , உங்க மகனைப் பலி கொடுக்காமல் , தடுத்தோம்ல, அதுக்கு எங்களுக்கு இந்தப் பேச்செல்லாம் கேட்க வேண்டியது தான்” என எப்போதும் வாய் திறக்காத சின்னவள் கவிதாவே சொல்ல, எல்லார் கவனமும் அவளிடம் சென்றது.

“இது என்ன புதுக் கதை” என ராஜன், எரிச்சலாகக் கேட்கவும், “உங்களுக்கு, நம்ம குடும்ப நடப்பு என்னங்க அண்ணா தெரியும். படிப்பு முடியவுமே , அப்பாவோட சண்டை கட்டிக்கிட்டுத் தொழில் பழக்கறோம்னு , வடக்கையும், வெளிநாட்டுக்குமா சுத்துனீங்க. உங்களுக்காக அம்மா, அப்பாகிட்ட எத்தனை திட்டு வாங்கியிருப்பாங்க, நாங்க எத்தனை பேச்சு வாங்கியிருப்போம்னு தெரியுங்களா.” எனக் கலங்கிய விழிகளோடு ஆரம்பித்தவள்,

இடையில் கைலாஷ் பேச வரவும், தடுத்து, “நான், என்ர பக்க நியாயத்தைச் சொல்லிக்கிறேனுங்க அண்ணா பொறகு பேசுங்க” என அண்ணனுக்கே தடை போட்டவள் இருபத்திரண்டு வருடத்துக்கு முன்னான நிகழ்வைச் சொன்னாள்.

“அப்பா, உங்களையிட்டு அம்மாவைப் பேசும் போதெல்லாம், அம்மா, உங்களுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிட்டா சரியா போகும்னு சமாதானம் சொல்லுவாங்கங்க. அப்பா, நாடோடியா திரியிற உன்ர மகனுக்கு யார் பொண்ணு கொடுப்பானு கோவிப்பார். பன்னீர் மாமா மகள் ராஜி அண்ணியை உங்களுக்குக் கேட்கலாம்னு அம்மா சொல்லுவாங்க. ராஜி அண்ணி உங்க வாழ்க்கையில் வந்துட்டா, நீங்க இங்கையே தங்கி இருப்பீங்கன்னு சொல்லுவாங்கங்க, அதைய கேட்டே வளர்ந்த எங்களுக்கும், ராஜி அண்ணி தான், எங்க அண்ணனுக்கு ஏத்தவாங்கன்னு மனசில் பதிஞ்சு போச்சு. ராஜியண்ணிக்கும் உங்க மேல பிரியுமுங்க. பெரியவிகளும் முறைச் சொல்லியே கூப்பிடவும் அவிக மனசுலையும் பதிஞ்சு போச்சு. " எனக் கவிதா சொல்லும் போது, பன்னீர் முகத்தில் தாங்க இயலாத வேதனை, ராமு அவரைத் தோளில் தட்டிக் கொடுக்கவும், தலையை ஆட்டி, ஒரு பெருமூச்சை மட்டும் வெளியிட்டு, கவிதாவின் பேச்சில் கவனம் பதித்தார்.

" அப்போ தான் நீங்க அந்தச் சோலாப்பூர் மில்லுக்கு வேலைக்குப் போனீங்க, முதல் நாலு மாசம் அப்பப்போ பேசினவிக, ஒரு மாசத்துக்கு மேல பேசவே இல்லைங்க, அம்மாவுக்கு அதை நினைச்சே காச்சல் வந்து படுத்து கிடந்தாங்க, வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்கு அலைஞ்ச நேரம்.

திடுதிப்புனு ஒரு நாள், நானும் அக்காவும் அம்மாவுக்கு மருந்து வாங்கப் போன சமயம், இரண்டு வடநாட்டு ஆளுங்க எங்களைய, உங்க பேர் சொல்லி மிரட்டி கூட்டிட்டு போனாங்கங்க. அங்க தான் அந்த ஆளு போஸ்லே குடும்ப மருமகன்னு சொல்லி , அவிக கம்பனியில் தான் நீங்க வேலை பார்க்கிறீங்கன்னு சொன்னாருங்க. “ எனக் கவிதா ஜெயந்தை பற்றிச் சொல்ல, பைரவி குடும்பம் கவனமாகக் கேட்டது.

" அந்த ஆளு, உருவமும் உசரமும் , தோரணையும் பார்க்கவே பயந்து தான் வந்ததுங்க. அதையும் விட, என்னையும், அக்காளையும் அவன் பார்த்த பார்வை. உடம்பு கூசிதான் நின்னோமுங்க. நான் அக்கா கையைச் சுரண்டி போகலாம்னு அழுதேனுங்க. அக்கா தான், இருடி, அண்ணன் பேரை சொல்றாண்டி, அவிகளுக்கு என்ன கஷ்டமோ, நம்மளால ஆன உதவியைச் செய்வோம்னு, அந்தாளோட பேசிச்சு" எனச் சொல்லி அவள் அழவும் , கைலாஷுக்கு இன்னும் அந்த ஜெயந்தை என்ன செய்தால் தகுமெனும் வெறி வந்தது.

கைலாஷ், பாரு திருமணம் ஆன பிறகு, ஜெயந்த் கைக்வாட், வெறி கொண்டவனாக, ராஜனைத் தேடி கோவை வரை வந்தவன், தன வேலையைப் பெரியவர்களிடம் காட்டாமல், சங்கீதா, கவிதா என அவர் தங்கைகளை இலக்காக்கி, கடத்தி மிரட்டல் விட, தங்கைகளுக்கு அதிர்ச்சி தான். கவிதா பயந்து அழுது கொண்டிருக்க, சங்கீதா ஜெயந்தோடு பேச்சு வார்த்தையில் இறங்கினாள்.

" அந்த ஆள், உன் அண்ணன், என் முறைப் பொண்ணைத் தூக்கிட்டு போயிட்டான். அவன் மட்டும் என் கையில் கிடைச்சா அவன் சாவு என் கையில் தான்னு , உடைஞ்ச தமிழில் பேசவும், நாங்க பயந்தோம் " என்றவள் சங்கீதா, அண்ணனை மீட்டு, பைரவியை அவனிடம் ஒப்படைக்க ஆன உதவியைச் செய்வதாக வாக்களித்தைச் சொல்ல, ரமாபாய் பல்லைக் கடித்தார்.

" இத்தனை நடந்தும், உங்களுக்குப் பெரியவிககிட்ட சொல்லனுமுன்னு தோனலை, நீங்களே பெரிய மனசங்களாகிட்டிங்களோ" என நாயகம் கோவிக்கவும், அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சங்கீதா,

" உங்க கிட்ட, எதையினு அப்பா சொல்றது. நீங்க தான் அண்… என ஆரம்பித்து விட்டு, உங்க மகன் மேல அத்தனை கோபமா இருந்தீங்களே. " என்றவள், கைலாஷை நோக்கி,

" நீங்க, கோவைக்கு வந்து இறங்கவுமே, அந்த ஆளுக்குத் தகவல் போயிடுச்சு. அதே நேரம், உங்க சம்சாரம் இருக்கிற இடத்தையும் அவன் கண்டுபிடிச்சிட்டான். நான் அங்க போய், போன் போடுவேன், நீ இப்படிப் பேசு, இல்லையினா, உன்ர குடும்பத்தை க்ளோஷ் பண்ணுவேன்னு, மிரட்டி வச்சிருந்தான்.

யாரோ ஒரு பைரவியை நான் எதுக்குக் காப்பாத்தனும். எனக்கு என்ர அண்ணனும், அண்ணியா ராஜியும் சேர்ந்து வாழனும்னு ஆசைப்பட்டேன். அதிலையும் என்ர சுயநலம் இருந்தது. ஒத்துக்குறேன்" எனக் கணவனை ஓர் பார்வை பார்த்தவள், முழுவதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பது போல், தான் பன்னீர் மாமா மகனை விரும்பியதைச் சொன்னாள். அன்று நடந்ததாக ஆதர்ஷ் சொன்ன அத்தனையும் உண்மை என ஒத்துக் கொண்டாள்.

" எல்லாம் செஞ்சும், விதியை யாரால ஜெயிக்க முடிஞ்சது. இவிககிட்ட பேசிட்டுப் போனை வைக்கும் போதே, ராஜியண்ணி அழுதுகிட்டே அவிக வீட்டுக்கு போச்சு. இவிக மறுபடியும் போன் போட்டா, உங்க மகனுக்குத் தெரிஞ்சு போகுமேன்னு, போனை காவல் காத்ததில, ராஜியண்ணியைக் காவல் காக்காமல் விட்டோம். இவரு என்ன பேசினாரோ தெரியலை, அந்த இரவையிலையே , அது தன் வாழ்க்கையை முடிச்சுகிடுச்சு. " எனச் சொல்லி சங்கீதா அழவும், பன்னீர் குலுங்கி அழ, அந்த நாளின் நினைவில் அத்தனை பேர் கண்களிலும், கைலாஷை நேசித்த மற்றொரு பெண்ணுக்காகக் கண்ணீர் உகுத்தனர்.

சங்கீதா கண்ணீரைத் துடைத்தவள், அண்ணன் என அழைக்காமல், அவரை மட்டும் சுட்டிக் காட்டி, " அவருக்கும் அவர் காதல் கிடைக்கலை, இவரைக் காதலிச்சவலும் உசிரை விட்டா. அதைக் காரணம் காட்டி, நான் காதலிச்சவனும் என்னைக் கழட்டி விட்டான். எல்லாருக்கும் கைலாஷ்- பைரவி வாழ்க்கை தான் பெரிசா தெரியுது. மத்தவிகளும், ஒண்ணு ராஜி மாதிரி உசிரை விட்டோ, எங்களை மாதிரி மனசை கொன்னுட்டோ தான் வாழறோம். " என்றவள்,

" ஆனால் , பெரிசா, எதையோ கண்டு பிடிச்ச மாதிரி, உங்க மகன் ஒரு செக்கைக் காட்டினாரே, அதைக் கலெக்சன் போட்டு அந்தக் காசையா அனுபவிச்சேன். என்ர புருஷன் கம்பெனில அவிக ஆளுங்க முதலீடு செஞ்சாங்களாம். அது ஒரு குறை. அது அந்த மனுசனா அலைஞ்சு பிடிச்ச பைனான்ஸ். என்ன ஒண்ணு, தி கிரேட் பிஸ்னஸ் டைக்கூன், கே ஆர் பேரைச் சொல்லி பிடிச்சிருப்பார்" எனத் தன் மனதில் உள்ள பாரத்தையும் அவள் அன்று இறக்கினாள். மற்றவர் இளகி இருக்க, இளம் இரத்தமான ஆதர்ஷ் அப்படி எல்லாம் இளகுவதாக இல்லை.

" அத்தையம்மா, பர்ஃபார்மென்ஸ் நல்லாத் தான் இருக்கு. ஆனால் இன்னும் உங்க நாக்கு மத்தவங்களைச் சுடுறதை நிறுத்தலையே. உங்களுக்கு, என்ர பாபாவோட சொத்து மேல ஆசையில்லை, இன்னைக்கு ஒரு நாளைக்கு உண்மையைச் சொல்லுங்க" எனக் கடுமையாகப் பேசவும், "ஆதர்ஷ் பாபா" எனப் பைரவி மகனைக் கண்டித்தார்.

சங்கீதா, அவனை நேராகப் பார்த்தவர், " என்ர அண்ணன் சொத்து மேல, எங்களுக்கு உரிமை இருக்குதுன்னு நினைச்சேன் தான், அதில் என்ன தப்பு. ஏன் உன்ர ஆயிக்கு ஐஞ்சு வருஷம் கழிச்சு உண்மை தெரிஞ்சதில்ல, அவருகிட்ட வரவேண்டியது தான. அவிக குற்ற உணர்ச்சி அவிக வரவிடலை. அதைப் பத்தி நான் பேசவும் வரலை. ஆனால் இந்த இருபது வருஷமா, எங்க அண்ணனை, நாங்க தான் பார்த்துக்குறோம். நாள் கிழமை நோம்பினா, கட்டாயப்படுத்தி ஒண்ணு அவரை நாங்க இருக்க இடத்துக்கு வரவழைப்போம். இல்லை நாங்க அவர் இருக்கிற இடத்துக்கு வருவோம். வாரிசு இல்லாத சொத்து, அடுத்த வாரிசு நாங்க தான்னு நினைச்சோம். அதுவும் தான் நடக்கலையே, கரெக்டா வந்துட்டீங்க. உனக்கு ,என்ர மகளைக் கட்டிக் கொடுத்து , எங்க அண்ணனுக்குச் சம்பந்தியாகனும்னு நினைச்சேன். அதுக்கும் தான், தடையா நடுவில் வழக்கம் போல வந்திட்டாரே, எங்க அண்ணனோட உயிர் நண்பன்" என விஜயனை சங்கீதா தாக்கவும்,

" இங்க பாரு, அம்மணி, உன்ர அண்ணன் மகனுக்கு , உன்ர மகளைக் கட்டிக்கொடு, இல்லைனா சும்மா இரு. இதில சும்மா, என்னையும், என்ர குடும்பத்தையும் எதுக்கு இழுக்கிற. அந்தச் சின்னப் புள்ளை மனசில நஞ்சை விதைச்சு, அது கையைச் சுட்டுகிட்டு வந்து நிக்கிது." என விஜயன் வேதனையோடு ஆட்சேபிக்கவும். " குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது." என்ற வார்த்தையில், ராஜன்கிட்ட சம்பந்தம் வச்சு தான், எங்க நட்பை புதிப்பிக்கனும்னு அவசியமில்லை" என விஜயன் முழங்க , சங்கீதா அவரிடமே திருப்பி ,

" மச்சான், எல்லாருக்கும் கண்ணு, காது இருக்குதுங்க. இங்க நடக்கிறதும் எல்லாருக்கும் தெரிஞ்சு தான் இருக்குதுங்க. இப்ப உங்கள் எல்லாருக்கும் பழி போட ஒருத்தி வேணும். அந்த ஆள் நானாவே இருந்திட்டு போறேன். என்ர பொறந்தவனுக்கும், பெத்தவிகளுக்கும் என்னைச் சொந்தம்னு சொல்லிக்க அசிங்கமாம். இருந்துட்டு போறேன். எல்லாரும் நல்லா இருங்க. நானும் என்ர குடும்பமும் விலகிக்கிறோம். " என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, 

சற்று முன் வந்த போன் காலை வெளியே சென்று பேசிவிட்டு வந்த சந்திரமோகன், " நீ செஞ்ச பாவத்துக்கு உன்ர அண்ணன் தண்டனை கொடுத்திட்டாரு. கம்பெனி ஸ்டாக் கடகடன்னு கீழே சரியுது. இனி இங்க உட்கார்ந்து ஒண்ணும் பண்ண முடியாது. மூட்டையைக் கட்டுப் போவோம்" என்றவன்,

ராஜனிடம் வந்து, " என்னை ஆளாக்கினது நீங்க தான். அழிக்கிறது நீங்களா இருக்க வேண்டாம். என்ர பாவம் உங்களைப் பிடிக்க வேண்டாம். இத்தோட நிறுத்திக்கிங்க. உங்க ஷேர் உங்களுக்கு வந்து சேரும்" என்று விட்டு, எல்லாருக்குமாக ஒரு கும்பிடு போட்டு அவன் கிளம்ப, ராஜன் முறைத்தபடியே தான் நின்றார்.

சங்கீதாவும் கணவன் பின்னாடியே நடந்தாள். கவிதா, " அக்கா, நில்லுங்க. நாங்களும் வர்றோம்" என வந்தாள்.

" இல்லை கவி, கெட்ட பெயர் என்னோட போகட்டும். உன்ர மேல, அவிகளுக்குப் பெரிய கோபம் இருக்காது. இத்தனை வருஷம் கழிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிறாரு. தங்கச்சியா இருந்து, நீயாவது முறையைச் செஞ்சிட்டு வா" என, தன் அண்ணனை, அண்ணனென்றே சுட்டிக் காட்டவும் இல்லாமல் பொதுப்படையாகச் சொல்லியே, தங்கைக்கு அறிவுறுத்த, பெற்றவர்களுக்குத் தான் மனம் நொந்தது.

" அண்ணிகிட்ட மன்னிப்பு கேளுங்க அக்கா , அவிக மன்னிச்சிட்டா, அண்ணனும் மன்னிச்சிடுவாரு" எனத் தங்கை அக்காவுக்கு யோசனை சொல்லித் தர,

" அது என்னால முடியாதுடி. நானாவது ஒருத்தி ராஜி மரணத்துக்கு , என்னை ஒப்புக் கொடுத்துக்கிறேன். இனியும் பொய்யா நடிச்சு, என்னால இந்த ராணியம்மாளை அண்ணியா பார்க்க முடியாது" எனத் திரும்பிக் கொள்ள, பைரவி தான் காயப்பட்டுப் போனார்.

" சங்கீதா" என அழைத்து நாத்தனாரிடம் பைரவி பேசப் போக, ," நீ எதுவும் சொல்ல வேண்டாம் அம்மணி, அவள் போகட்டும். நீ நடுவில குட்டையைக் குழப்பாத" கைலாஷ் மனைவியைத் தடுக்க, அவர் முறைத்தார்.

கைலாஷ், தங்கைகளிடம் திரும்பி," சின்னவளே, அவள் வேணும்னா , புருஷனோட கிளம்பட்டும். புள்ளைகளை விட்டுப் போட்டுப் போகச் சொல்லு, நீ ஊருக்கு போகையில விட்டுப் போட்டுப் போ" எனவும், " ஆடு பகை, குட்டி உறவா. அதையும் சேர்த்து ஓட்டி விடு" என்றார் நாயகம்.

" அப்பா, அவிக நான் வளர்த்த பிள்ளைங்க. விசேஷத்துக்கு இருக்குமுன்னு ஆசையா கேட்டுச்சுங்க, நீங்க இதில தலையிடாதீங்க" என்று விட, சௌந்தரிக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. சங்கீதா திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டாள். புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது.

கைலாஷ், ஓரிடத்தில் ஓய்ந்து அமர்ந்தவருக்கு , மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நியாயம் செய்துவிட்டோம் என்று நினைப்பு இருந்த போதும், உடன் பிறந்தவள் தளர்ந்து போவதில், மனம் பாரமாகத் தான் இருந்தது. மனைவியின் அழைப்பில் அரும்பாடு பட்டு , ஒரு துளி நீரோடு தன்னைச் சமாளித்துக் கொண்டார்.

சௌந்தரி நேரத்தைப் பார்த்தவர், " இங்க இருக்கவிக கிட்ட ஒரு வேண்டுகோள், நடந்தது நடந்து போச்சு. இனி அதைக் காலம் சரி பண்ணிக்கட்டும். என்ர ராஜா கல்யாணத்தைச் சீரும் சிறப்புமா நடத்தோணும். என்ர மருமகளை வீட்டுக்குள்ள சந்தோசமா அழைக்கோணும். சாப்பிட்டு அதுக்கு, சந்தோசமா ரெடியாகுங்க" எனக் கேட்டுக் கொள்ள, ரமாபாய் சம்பந்தியின் கைகளைப் பிடித்து மன்னிப்பு கேட்டு, நன்றியும் சொன்னார்.

பன்னீர், "தெரிஞ்சோ, தெரியாமலோ, என்ர மகளும் உன்ர வாழ்க்கை கெடுறதுக்கு ஒரு காரணமா இருந்திட்டா, மன்னிச்சுக்கோ பவானிமா" எனப் பைரவியின் கையைப் பிடிக்க, " இந்த வார்த்தையை நான் சொல்லனும்பா. ராஜ் வாழ்க்கையில் நான் வராத இருந்திருந்தா, உங்க மகளைக் கல்யாணம் செய்திருந்திருப்பார். அவங்களும் நல்லா வாழ்ந்திருப்பாங்க" எனக் கண்ணீரோடு பைரவிச் சொல்லவும்.

" அப்படியும் சொல்லிட முடியாதும்மா, ராஜி கூடவே வளர்ந்த பொண்ணு, தங்கச்சி முறை கொண்டாடலைனாலும் அவனுக்கு மனசில அப்படித் தான் தோனியிருக்கோணும். அவள் மேல பெரிய ஆர்வம் வந்திருந்திருக்காது. ஊர் உலகமெல்லாம் சுத்தினவன், உன்ர கிட்ட தான மடங்கியிருக்கான். இத்தனைக்கும் , கடவுள் நம்பிக்கை எல்லாம் பெரிசா கிடையாது. உன்ர குணத்துக்கு எதிர்மறையான ஆளு தான். ஆனாலும் நீ உலகத்தில் இல்லைனு நினைச்சே உனக்காக வாழ்ந்தான் பாரு, அந்த உறுதி, அவன் உன்ர மேல வச்ச நேசம் தான் அம்மணி." என நாயகமே மகனைப் பற்றி மருமகளுக்கு விளக்கவும் கைலாஷே வியந்து தான் போனார்.

" சரியா சொன்னீங்க பாய்சாப். எங்க தாமாத்ஜி மேல என் மகள் வைச்ச நேசம், ஷேர்னியை, மான்குட்டியா மாத்திடுச்சு. இன்னாருக்கு, இன்னார்னா யார் மாற்ற முடியும்" என்றார் ரமாபாய்.

ராமசாமி, " ராணியம்மா மனசில இருக்கச் சந்தேகமெல்லாம் போச்சு இல்லைங்களா . பவானியா, பைரவியா எங்க மகளை, நாளைக்குச் சந்தோஷமா, எங்க மருமகனுக்குத் தாரை வார்த்துக் கொடுங்கலாமில்லைங்க " என ரமாபாயை பார்த்துச் சொல்லவும். "அது என்னால முடியாதுங்க"என்ற ராமா பாயி, மற்றவர் அதிர்ந்து நோக்கவும், "அதையும், நீங்களும் அபி தீதியும் ஆயி, பாபா ஸ்தானத்திலிருந்து, உங்க மகளான பைரவியைத் தாரை வார்த்து கொடுத்திடுங்க" எனச் சொல்லவும், அது சரி எனச் சிரித்து மகிழ்ந்தனர்.

கைலாஷ் ராஜன், மதிய சாப்பாட்டை நேற்று கையில் பட்ட காயத்தால் சாப்பிட சிரம பட, பைரவியே ஊட்டி விட்டார். இருவருக்குமிடையே மௌனமே நிலவியது. அவர் சாப்பிட்டு முடிக்கவும், அபிராம் அவரிடம் வந்தவன், ஒன்றும் பேசாமல் நிற்க, "என்ரா மாப்பிளை "என வினவினார்.

"உங்களையும், என்னையும் மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டுப் போக ஆள் வந்துருக்குதுங்க" என்றான். கைலாஷ் புரியாதவராக, " உனக்கு மாமியார் இந்த இருக்க, எனக்கு மாமியார் கெஸ்ட் ஹவுஸ்ல இருங்காங்க, வேறா யாரு வந்து கூட்டிட்டு போவா " என எரிச்சலாகக் கேட்கவும்,

"மஹந்த் போஸ்லேவை காணோமுன்னு ஹேபியஸ் கார்ப்ஸ் கேஸ் போட்டுருக்காங்க, உங்க பேரையும், என்ர போரையும் சந்தேக லிஸ்ட்ல முதல் ரெண்டு பேரா சேர்த்துருக்காங்க , வங்கா போவோம்" என அவன் அழைக்க ,

"என்ரா விளையாடுறானுங்களா, நாளைக்குக் கல்யாணத்தை வச்சிருக்கோம், என்ர பொண்டாட்டி கழுத்தில் தாலி கட்டாத எங்கையும் வர முடியாதுன்னு சொல்லி போடு' என்றார் கே ஆர். அதைக் கேட்டிருந்த பைரவி தான், "ஆயி, பவானி, இது எப்போ" எனப் பதறினார்.

"அட பதறாத அம்மணி, ஜெயிலுக்குள்ள வச்சுனாலும் சாங்கியத்தைச் செஞ்சு போடுவோம் " என அசராமல் கே ஆர் கமெண்ட் அடிக்க, கேள்வி பட்ட இரண்டு குடும்பங்களும் அதிர்ந்து நின்றனர்.

இதனை எப்படிச் சமாளிப்பார் கைலாஷ் ராஜன். கைலாஷ்-பாரு திருமணம் எங்கு நடக்கும்.

பௌர்ணமியை நோக்கி நிலவு.


No comments:

Post a Comment