Sunday, 29 May 2022

யார் இந்த நிலவு- 59 part-2 .

 யார் இந்த நிலவு- 59 part-2 . 


"நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்

அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய

தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்

நம்பிக்கை உண்டே நமக்கு."


பிரம்ம முகூர்த்தம் எனச் சொல்லப் படும் அதிகாலை நான்கு மணி முதலான, ஆறுமணி வரையிலான வேளையில், கணபதியையும், அவர்கள் குலதெய்வத்தையும், அவர்கள் இணையக் காரணமான ஆயி துல்ஜா பவானியையும் , வேண்டி திருமணச் சடங்குகளை ஆரம்பித்தனர். வயது, மூப்பு இதனைப் பொருட்படுத்தாமல், வசந்த மாளிகைக்காரர்கள் மட்டுமின்றி, இளைஞர் கூட்டமும் தயாராகி வந்தது, அதுவும் பெண் பிள்ளைகள், இரண்டு மணிநேர கோழி தூக்கம் தூங்கி, குளித்தார்களோ இல்லையோ, அழகுற அரிதாரம் பூசி வந்து விட்டனர். இன்று பைரவி அடர் சிவப்பு வண்ணத்தில் சேலை உடுத்துவார், அதனால் அவரை எடுத்துக் காட்டும் விதமாக , மற்றவர் வெளிர் சிவப்புப் பட்டில் தயாராகினர், பெரியவர்களுக்குப் பச்சை பட்டில் வளம் வந்தனர். சிவ-பார்வதி திருமணத்தை, புராணங்கள் வெகுவாக வர்ணிக்கும், சடாமுடி தரித்த சிவனாரை , மணமகனாக அலங்கரிக்க, பெருமாளே முன் வருவார், அதே போல், இங்கும் கைலாஷுக்கு, உற்ற நண்பனாக, சிறுபிராயம் முதல், அவர் இன்ப துன்பங்களில் பங்கேற்ற, விஜயன், நண்பனுக்குத் திருமணம் எனவும், இருபது வருட இடைவெளி குறைந்தது போல், சுறுசுறுப்பாகச் சுற்றித் திரிந்து, பெரிய மனித பந்தாக்களையெல்லாம் விட்டு, மாப்பிள்ளை தோழனாக, கைலாஷ் ராஜனுக்குப் பட்டு வேஷ்டியைக் கட்டி விடுவதிலிருந்து சகல உதவிகளையும் செய்ய, மணவறைக்கு அழைத்துச் செல்லும் நேரம் சரியாக முகுந்த் போஸ்லே, கவிதாவின் கணவனும் வந்து விட்டனர். ஆதர்ஷ், பழக்கமில்லாத வேட்டியைக் கட்டிக் கொண்டு வழியில் கவனமாக வந்தவன், “பாபா , கிளம்பலாமா” எனவும், அப்பாவும், மகனையும் மாற்றி, மாற்றிப் பார்த்தனர். “மாப்பிள்ளை, உன்ர அப்பனை சின்னதில பார்த்த மாதிரி இருக்க”என விஜயன் , ஆதர்ஷ் முதுகில் தட்டி சிலாகித்தார். “என்ர மகன், என்னாட்டம் தானடா இருப்பான், உன்ர ஜெராக்ஸ் வாறான் பார்”எனக் காட்ட, இன்று அபிராமும், ஆதர்ஷ் போலவே ஜரிகை கரையிட்ட வேஷ்டியும் , வெளிர் சிவப்பு நிற சட்டையோடும் வந்தான். “என்ர கல்யாணத்துக்கு, நீங்க எல்லாரும் மாப்பிளையாட்டமா ரெடியாகி வந்துருக்கீங்க” எனக் கைலாஷ் குறை பட, “ அவிகளுக்குத் தான் மாப்பிளையாகுற வயசு ” என மகன் தயாராகி விட்டானா எனப் பார்க்க வந்த நாயகம் லொள்ளு பேசி “கிளம்பலாங்களா”எனப் பொதுவாகக் கேட்டார். “உன்ர அப்புச்சிக்கு லொள்ளை பார்த்தியா”எனக் கைலாஷ் அபிராமிடம் கேட்க, “உங்களைய விடக் கம்மி தானுங்க மாமா”என்றவன் , அவர் அடுத்துப் பேசும் முன், "கூப்புட்டிங்களா அப்புச்சி" என முன்னால் சென்றுவிட, "என்ர பாடத்தை, எனக்கே திருப்பிப் படிக்கிற, பார்த்துக்கறேன் போ" எனச் சிரித்தார். முகுந்த் போஸ்லே, முத்தும், பவளமும் பதிக்கப் பட்ட, தலைப்பாகையை ராஜனுக்கு வைத்து விட, பட்டு வேஷ்டி சட்டைக்கே அது பொருந்திப் போனது. ஆதர்ஷ், அபிராம் , விஜயன், சரவணன், முகுந்த் மற்றும் ஆடவர் படை சூழ, கைலாஷ் ராஜன் , தென்னங்கீற்று, மாவிலை, பலவித மலர்கள், வண்ண வண்ண துணிகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப் பட்ட மனப் பந்தலுக்குச் சென்றார். தாய் மாமன் மாலையிட, அசல் ராஜனாகவே கம்பீரமாக அமர்ந்திருந்தார். புற்றுமண்ணில், அடிக் கரும்பு ,மூங்கில், அரசிலைகள், முக்கவர் பந்தற்கால், என இவர்கள் மனை சிறக்க ஊன்றியிருந்தனர். இரண்டு கரைகப் பானைகள், நீர் நெல் தாங்கியிருக்க, நவதானிய முளைப்பாரியும், நிறைநாழியும், தேங்காய், வெற்றிலை பாக்குத் தாம்பூலம், அரிசியில் வீற்றிருந்த மஞ்சள் பிள்ளையாரும், கைலாஷ்-பாரு திருமணம் சிறப்பாக நடந்தேறக் காத்திருந்தன. குத்து விளக்குகள் சுடர் விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்க, கைலாஷின் கண்கள், தன பாருவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தன. தாய்மாமன்,மணமகளை அழைத்து வரும் மரபு இருக்க, ரமாபாயின் தாய் வழி உறவான, பாலாஜி ராவ், ராதாபாய் தம்பதி அந்த முறையில் பைரவியை அழைத்து வர, கவிதா, கஸ்தூரி , மண மாலையைப் பைரவிக்குப் போட்டு ,நாத்தி முறைக்கு உடன் வந்தனர். ஆதிரா, ஆராதனா, ரஞ்சி, ஸ்ரீ சகோதரிகளோடு, விண்ணிலிருந்து தரை இறங்கிய தேவதையாக, முகுந்த் ராய் போஸ்லேவின் மகள் ஆருஷி ராய் போஸ்லேவும், தன புவாஜியின் கையை ஒரு புறம் பற்றி அழைத்து வந்தாள் சற்று நேரம் முன்பே தந்தையோடு வந்திருந்தவள், பிறந்தது முதல் அத்தையம்மாவோடு பழகியது போல் உரிமையாக ஒட்டிக் கொண்டாள். ஆராதனா ,அவளை ஆராதிக்காத குறையாகப் புகழ, ரஞ்சனி, ஸ்ரீ சகோதரிகள் மட்டுமின்றி , ஆதிராவே தங்கையை முறைக்க, ஆருஷி அவளையும் நொடியில் நட்பாக்கிக் கொண்டாள். பைரவி, சிவப்பு வண்ண, ஒன்பது கஜ, காஞ்சிபுரம் பட்டுச் சேலையை, மராத்திய முறைப்படி, நவ்வாரி சேலைக் கட்டாக , பின் கொசுவம் வைத்துக் கட்டியிருந்தார். கழுத்தை ஒட்டிய பிளவுஸ். கொண்டையிட்டு, மல்லிகையை அதில் சூடியிருந்தனர். மூக்கில் வைர மூக்குத்தியும், சலங்கை பில்லாக்கும் ஒளி, ஒலி எழுப்ப, மிதமான ஒப்பனையில், கணவரின் அன்பில் மிளிர்ந்தது முகம், அரைச் சந்திர வடிவ சாந்துப் பொட்டு , நெற்றியில், முத்து மாலையை இரண்டு வரிசையாக மராத்திய முறைப்படி நெற்றிப் பட்டம் போல் , அணிவித்திருந்தனர். காதோரத்தில் கொஞ்சம் தொங்கியது. அடுக்கடுக்காய் வைக்கப்பட்ட மடிப்புகள் கொண்டு சேலையையை எழில் கொஞ்சக் கட்டி விட்டிருந்தனர். வலது பக்கத்தில் மற்றொரு பட்டு சால்வை போர்த்தப் பட்டு, கழுத்தில் வரிசையாக, போஸ்லே குடும்பப் பாரம்பரிய நகைகள் அணிந்து, இடுப்பில் அதற்குத் தோதான ஒட்டியாணம் கனத்த சலங்கை கொண்ட கொலுசுகள் ஜதி சொல்ல, பைரவி பாய் போஸ்லே, மணமகளுக்கே உரிய நாணமும், ராணிக்கே உரிய மிடுக்கும் கொண்டவராக, நாற்பதைக் கடந்த வயதிலும்,தங்கச் சிலை போல் வர, “இந்த அம்மணிக்காக , ராஜன் காத்திருந்தது சரியே “எனக் கூட்டத்தில் பேசிக் கொண்டனர். மனையில் அமர்ந்தபடி ராஜன், பைரவியையே பார்த்திருக்க, சுற்றி இருக்கும் விழிகள் யாவும் தன்னையே நோக்குவதை உணர்ந்த பைரவி, பெருமூச்செடுத்துத் தன்னைச் சமாளிக்கும் முன் நெற்றியில் வியர்வை துளிகள், அவரின் பதட்டத்தையும் சங்கடத்தையும் உணர்ந்த ஆதர்ஷ், சட்டென , தன் ஆயின் முன் வந்து அவர் கரங்களைப் பற்றி அழைத்து வர, மகனின் கைகளை இறுக்கப் பற்றினார் பைரவி. “ஆயி, சில், பாபா உங்களையே கண்ணெடுக்காம பார்த்துட்டு இருக்கார், டென்ஷன் ஆனீங்க , பாதிச் சாஸ்திரத்தை ஸ்கிப் பண்ணிடுவார்”என அவன் ரகசியமாய்ச் சொல்ல, “அவருக்கு மேல, நீ டென்ஷனாகாத பாபா” என்றவரின் மறு பக்கம், ஆதர்சின் கண் அசைவில், ஆதிரா வந்து தன் ஆயியைப் பற்றிக் கொண்டு, “ஆயி, பாபா, பாவம், ஒரு லுக் விடுங்களேன், உங்களையே பார்த்துட்டு இருக்கார்”எனக் கேலி பேச, “சுப்கர்,ரஜ்ஜுமா ‘எனச் சிணுங்கி, மகளைக் கண்டித்து, மகனின் கரம் பற்றி மேடையைச் சுற்றி வந்து, ராஜனின் வலது புறம் அமர்ந்தார் பைரவி. ராஜன், தயாராக இருந்தவர், “பார்த்து அம்மணி, மனையில் உட்கார்ந்துருவேயில்ல, இல்லையின்னா சேர் போட சொல்லட்டுமா, சத்தியா “ எனக் குரல் கொடுக்க, ஒரப் பார்வையால் கணவரை முறைத்தபடி, பைரவி, மகனும், மகளுமாக உதவி செய்ய , சபையோருக்கு வணக்கம் கூறிச் சுலபமாக உட்கார்ந்து விட்டார்.
“அடேய், தங்கச்சிமா, உன்னை விடப் பிட்டா தான் இருக்கிறாங்க , நீ அடங்குடா “என விஜயன், ராஜனைக் கேலி பேச, “அட, உன்ர தங்கச்சி முடியாத இருந்தா இல்ல, கீழ உட்கார்ந்து பழக்கமில்லையில அதனால கேட்டேன், அது சரி, நான் என்ன பிட் இல்லாத போயிட்டேன்”என மணமேடையிலேயே நண்பனோடு மல்லு கட்ட, “நீ, நல்லா ராஜாவை, இளமையோட தான் இருக்க, சண்டை கட்டாத , சாங்கியத்தைச் செய், நேரமாகுது”என நாயகம் மகனை அதட்ட, மற்றவர் சிரித்தனர். அதில் ரோசம் கொண்ட ராஜன்,

“ஏனுங்கப்பா, நீங்க சொல்றது வஞ்சப் புகழ்ச்சிங்களா. நான் நிஜமாவே பிட்டா தான் இருக்கேனுங்க, அதென்ன, நான் கிழவனாகிட்டேன்னு எல்லாரும் சிரிக்கிறீங்களா “என விடாமல் வம்பிழுக்க, “நீ தான் பேசாம இருவேண்டா”என நாயகத்தின் நண்பர்கள் அவரை அமைதிப் படுத்த, சௌந்தரி ராஜனிடம், “சாங்கியத்தைச் செய் கண்ணு”என நயந்து பேசினார். “அது தானுங்க தாய்மாதா, காலகாலத்தில இவருள்ள, என்ர பாருவை தேடிக் கட்டி வச்சிருக்கோணும், இப்ப வந்து, இத்தனை பேச்சு பேசுறாருங்க ” எனச் சண்டை கட்ட, "என்னது" என நாயகம் குரல் கொடுத்தார்.

“தாம்தஜி, அது எங்க தப்பு தான், நாங்க ஒத்துக்குறோம், நீங்க சடங்கை செய்ங்க”என ரமாபாயும் மருமகனைத் தாஜா செய்ய, “மருமகள், இருக்கிறதை தெரியாதுங்க, தங்கச்சிமா, அமுக்கனியாட்டமா , இவன் சொல்லாத இருந்து போட்டு, என்னைக் குத்தம் சொல்லாரானுங்க”என நாயகம் மறுபடியும் , ரமாபாயிடம் ஆரம்பிக்க, “அப்புச்சி, மாமன் தெரியாத சொல்லிப் போட்டாரு விடுங்க”என அபிராம் நாயகத்தைச் சமாதானப் படுத்தினான்.


“நான் என்றா மாப்பிள்ளை தெரியாத சொன்னேன், எல்லாம் தெரிஞ்சு தான் சொன்னேன்”என ராஜன் மறுபடியும் ஆரம்பிக்க, “பார்த்தியா”என நாயகமும், ராஜனும் ஒன்றாக ஆரம்பிக்க,சீர் முறை செய்ய வந்த அருமைக்காரர், சௌந்தரி, பேரன் பேத்திகள் நண்பர்கள் என யாராலும் இருவரையும் அடக்க முடியவில்லை.

பைரவி, பொறுத்துப் பொறுத்து பார்த்தவர், “ராஜ்”என அவர் கைகளைப் பற்றிக் கொண்டு, நாயகத்தைப் பார்த்து, “மாமா, என்னாலா தான் எல்லாமே, எனக்காக ரெண்டு பெரும் வீட்டுக் கொடுங்க” என ஒரு வார்த்தை சொல்ல,

“உனக்காகச் சரின்னு போறேன் அம்மணி”என நாயகமும், ராஜன் மறுபேச்சே இல்லாமல் , "நீ சொன்ன சரிதான் அம்மணி" என , அமைதியாக ,“செய்யறதெல்லாம் செஞ்சு போட்டு , குழந்தை புள்ளையாட்டம் இருக்கிறதை பாரு ‘என விஜயன் நண்பன கேலி பேச, புகைப்படக் கருவிகளும், இளைய தலைமுறையும், இவர்கள் நாடகத்தை மகிழ்வோடு தங்கள் அலைபேசிக்குள் சுருட்டிக் கொண்டனர்.

“சாங்கியத்தை ஆரம்பிக்கலங்களா “எனப் பெரியவர் வினையமாகக் கேட்க, “பெரியவிக, ஆரம்பிங்க”என ராஜன் பதறிக் கொண்டு சொல்ல, கணபதி துதியோடு, குலப் பெருமை, குலதெய்வம், கூட்டம் என வரிசையாகச் சொல்லி, சடங்குகளை ஆரம்பித்தார்.

மணமக்கள் , பெற்றோருக்குப் பாத பூஜை செய்ய வேண்டும் எனச் சொல்ல, “சாங்க்கியத்துக்கு , பாதத்தைத் தொட்டுக்கட்டும், அடுத்த முறையைச் செய்ங்க”என நாயகம், இத்தனை வயதில் இது மகனுக்குச் சங்கடம் என அதனைக் கடத்த பார்க்க,


“அப்பா, அம்மாவோட சேர்ந்து வந்து நில்லுங்க, உங்க மனசை நோகடிச்சதுக்கெல்லாம், பிராயச்சித்தம் தேடிக்கிறேனுங்க, இத்தனை நாள் பாவம், புண்ணியமெல்லாம் பார்க்கலையிங்க , குடும்பஸ்தன் ஆகிறேன், அப்படி இருக்க முடியதில்லைங்க, என்ர அம்மணி வேற இதிலை எல்லாம் ரொம்பச் செண்டிமெண்ட் பார்ப்பாளுங்க, வந்து நில்லுங்க” என அதிகாரமாகவே அழைக்க, முறைத்த நாயகத்தை,

“வாங்கப்பா, உங்க ஆசீர்வாதம் எனக்கு ரொம்ப முக்கியம்”என நயந்து அழைக்கவும், உணர்ச்சி வயப் பட்டவராக வந்து நின்றார். ராஜன் குனிந்து தாய், தந்தையை நிறுத்தி நீர் ஊற்றி , கழுவித் துடைத்து, சந்தானம்.குங்குமம் வைத்து வணங்கி எழவும், நாயகம் உணர்ச்சி பெருக்கில் உடைந்து போனார். மகனின் தலையில் கை வைத்து, “மனைவி , மக்களோட, நூறாயிசுக்கு நல்லா இரு” எனக் கரகரத்த குரலோடு சொல்ல, ராமசாமி, பன்னீர் நண்பனை பின்னிருந்தது தோளில் தட்டிக் கொடுக்க, நாயகம் சமாளித்தார்.

ஆதர்ஷ், தன பாபாவுக்கு, அவர் பெற்றவருக்குப் பாத பூஜை செய்வதில் உதவினான். ராஜன், சௌந்தரிக்குப் பாத பூஜை செய்யும் போது , நாயகத்தைப் போல் சமாளிக்கவெல்லாம் இல்லாமல், கண்ணீர் பெறுக, மகனை உச்சி முகர்ந்து ஆசீர்வதித்தார்.

மணமகள் , பாத பூஜைக்கென, ரமாபையை அழைக்க, அவர் ராமசாமி, அபரஞ்சியை அழைத்தார். “தாரை வார்த்துக் கொடுக்கையில், நாங்க கூட நிக்கிறோமுங்க, பவானி, பாதபூஜை உங்களுக்குத் தான் செய்யோனும்,”என அவர்கள் வற்புறுத்தவும், “வாங்க ஆயி, நீங்க இல்லையினா, நானும், என் பிள்ளைகளும் எப்படிப் பிழைச்சிருப்போம்”எனப் பைரவி, உணர்ச்சி பெறுக தன ஆயியை அழைத்தவர், தாம்பாளத்தில் ரமாபாயை நிற்க வைத்து பாத பூஜை செய்ய, கை கூப்பியபடி நின்றவர், “ஆயி பவானி, என் வேண்டுகோளையும் நிறைவேத்திட்டா” என மகளை ஆசிர்வதிக்க, அடுத்து, தாரை வார்த்துக் கொடுக்கும் சடங்கு நடந்தது. அதிலும் வித்தியாசமாக, பைரவியைக் கே ஆர் குடும்பத்தில் ஒப்படைக்கும் முன், ஆதிரா, ஆதர்ஷ், பைரவி கைகளை வரிசையாகப் பிடித்து, ராஜனின் கையில் ஒப்படைத்த, பைரவி பாய், “இருபத்திரண்டு வருஷம், கட்டிக் காத்து, உங்க மனைவி மக்களை உங்க கிட்ட சேர்த்துட்டேன் தாமாத்ஜி. இனி உங்க படு, பார்த்துக்குங்க. இதில ஏதாவது குத்தம் குறை இருந்தாலும், அது என்னைச் சேர்ந்தது. மன்னிச்சுடுங்க” என யாரிடமும், மடங்காத சோட்டி ராணி, மருமகனிடம் சொல்ல, ராஜன் , “உங்களுக்கு, நான் தான் சாஸுமா கடமை பட்டிருக்கேன், என் வாழ்க்கையவே அர்த்தமாக்கி இருக்கீங்க ”என ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு சம்பிரதாயமான, மணமகளை, மணமகனுக்குத் தாரை வார்க்கும் சடங்கை, அருமைக்காரர் சொல்ல , நாயகம், சௌந்தரி, ராமசாமி, அபரஞ்சி ஜோடிகளைச் சம்பந்தியாக நிறுத்தி, ராஜன் கையில் பைரவியைக் கொடுத்தனர். “மகளைக் கொடுத்தோம் “என ராமசாமி, தம்பதி சொல்ல, “மருமகளாகக் கொண்டோம் “என நாயகம் தம்பதி பெற்றுக் கொண்டனர். திருப்பூட்டு, தாலி வைக்கப்பட்டு இருந்த தட்டில் அருமை பெரியவர் சூடம் ஏற்றி, மணமக்களிடம் காட்டி அவர்கள் ஒற்றிக் கொண்ட பிறகு மேடையிலிருந்தபடியே உயர்த்திக் காட்ட, மற்றவர், அவரவர் இடத்தில் இருந்தபடியே ஆசீர்வதிக்க, மணப்பெண்ணாம் பைரவியைக் கிழக்கு முகமாக நிற் வைத்து, ராஜனை எதிர்புறம் நிறுத்தி, மஞ்சள் சரட்டில் கோர்க்கப்பட்ட பொன் தாலியைக் கொடுக்க, ராஜன் தன் முன்னே நின்ற தன்னில் பாதியான, தன மனம் கவர்ந்தவரை , முதல் முறை, தன் பெயர் பொறித்த தங்கச்சங்கிலி, இரண்டாம் முறை கருகுமணி மங்கள் சூத்திரம் என அக்கினி சாட்சியாக மணம் முடித்தவரை, இன்று தம் குல வழக்கப்படி, மஞ்சள் பொன் தாலி கட்டியும் மனைவியாக ஏற்றார். இன்று மீண்டும், சாஸ்திரப் படி, சம்பிரதாயப் படி, கைலாஷின் மனைவியானார் பைரவி. பைரவி, தலை குனிந்து தன் கழுத்தில் தமிழ் நாட்டு மருமகளாய் தாலி தொங்குவதைப் பார்த்து உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் ததும்ப நிற்க, மஞ்சளில் தோய்த்த அரிசியும், உதிரிப் பூக்களும், அவர்கள் மேல் அட்சதையாய் விழ, மனைவியின் நெற்றி வகிட்டில் குங்குமம் நிறைத்தவர், இருபது வருடங்களுக்கும் மேலாக உடலால் பிரிந்து, மனதில் தாங்கியிருந்த மனைவியைச் சுற்றம் மறந்து எதிர் நின்றவரை வாரியணைத்து உச்சி முகர, ஒரு புறம் ஆதிராவும், மறுபுறம் ஆதர்ஷும் வந்து கட்டிக் கொள்ள,, “ என்ர நேசத்துக்குக் கிடைச்ச சொத்து’ என மூவரையும், தன்னுள் அடக்கிக் கொள்ள, இந்த வித்தியாசமான திருமணத்தையும், அவள் பாசம், நேசத்தையும் பார்த்தவர்கள், அவர்களுக்காக நெகிழ்ந்து தான் போனார்கள். அருமைக்காரர், மணமக்களை , செஞ்சாந்து திலகமிட்டு, விரல் கோர்த்து மணவறையைச் சுற்றி, அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வைத்து, குலம் கோதி , சுண்ணாம்பு , மஞ்சள் கலந்த நீரில், வெற்றிலை, அருகம்புல் கிள்ளி போட்டு, பாதம், தோள் , தலையில் ஏற்றி இறக்கி அருகுமணம் செய்வித்தார். மங்கலன்,
அலைகடல் அமிழ்தம் ஆரணம் பெரியவர் திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திடக் கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன் சந்திர சூரியர் தானவர் வானவர் முந்திய தேவர் மூவருங் காத்திட… வாழ்த்து பாட ஆரம்பித்தார். கைலாஷ் ராஜனும், பைரவி பாயுமாக மாலையும் கழுத்துமாய், கைகள் கூப்பியபடி, நாயகம், சௌந்தரி கால்களில் வணங்கி எழ, அர்ச்சதை தூவி, மகனையும், மருமகளையும் வாழ்த்தி மகிழ, அடுத்து ரமாபாயம், அடுத்தடுத்து வசந்த விலாசப் பெரியவர்களும் ஆசிர்வதித்தனர். விஜயன், நண்பனை கட்டிக் கொண்டு தன மகிழ்ச்சியை வெளிப் படுத்த, பைரவி அவருக்குக் கை எடுத்து நன்றி தெரிவிக்க, “இது என்ர கடமைங்க தங்கச்சிமா. “என அடுத்துச் சொல்ல வார்த்தைகளற்றுப் போனார். கைலாஷ், பைரவி பெரியவர்கள் கால்களில் விழுந்து எழுந்தது போக, சத்தியன் தன் அலுவலகத்தில் பணிபுரியும் சங்கீதாவோடு சேர்ந்து விழுந்து தன் திருமணத்துக்கும் அனுமதி வாங்க, சத்தியனைப் பார்த்து “அடேய் , ராசுக்கோல் “ என்றவர், சங்கீதாவிடம் உனக்கும் சம்மதம் தானே எனக் கேட்டு , ஆசீர்வதிக்க, அபிராமும் அதைப் பிடித்துக் கொண்டான். ஒன்றும் சொல்லாமல், ஆதிரா, கையைப் பிடித்து அழைத்து வந்தவன், அவளோடு சேர்ந்து, மாமன், அத்தை கால்களில் விழுந்து, “ மாமா, எங்களை ஆசீர்வாதம் செஞ்சு, என்ர கல்யாணத்தையும் சீக்கிரம் நடத்தி வைங்க’ எனவும், “மாமனை மாதிரியே திருட்டு பய, உன்ர , திருட்டுத்தனம் தெரியும்டா எந்திரி “ என்றவர் மகளையும் உச்சி முகர்ந்து,

“ரஜூம்மா , என்னடா சொல்ற, இவன் ஓகேயா பார், இல்லையினா வேற சாய்ஸ் பார்க்கலாம்”எனக் குண்டை தூக்கிப் போட, “ஏன்னுங்க மாமா, உங்களுக்கு இந்தக் கொலைவெறி, நானே இப்பத்தான் உங்க மகளை , கையில , கால்ல விழுந்து சரி கட்டி வச்சிருக்கேன்”எனக் கதற ,

ஆதிரா ஆயி, பாபாவுக்கு இடையில் தன்னை மறைத்துக் கொண்டு நின்றவள் "உங்க விருப்பம் தான் பாபா " என ஆகி வந்த பதிலை சொல்ல, “என்ர விருப்பமா, இனி அப்படி ஒன்னு இருக்குதா என்ன? என்ர ஹோம் மினிஸ்டர் முடிவு தான், ஏனுங்க அம்மணி, நீங்க சொல்லுங்க” எனப் பைரவியை அபிப்பிராயம் கேட்க,

“விஜயன் பாயிஸாப்க்கு , என் மகளை மருமகளா அனுப்ப எனக்குப் பூரணச் சம்மதம்”என்றார். “அப்ப, மாப்பிள்ளையைப் பார்த்து நீ சரின்னு சொல்லை, அவிக அப்பனுக்கு மருமகளா அனுப்ப தான்சமத்தம் சொல்லியிருக்க, என்ன அம்மணி, “என மனைவியை வம்பிழுத்தவர்,

“மாப்பிள்ளை, என்ரப் பொண்ணைக் கட்டுறது அத்தனை சுலபம் இல்லை, நீ என்ன செய்யிற, அங்க இருக்க , கிழடு கட்டைங்க்கிட்ட எல்லாம், போய்ச் சம்மதம் வாங்கிட்டு வா, பிறகு ,உன்ர அப்பனை, முறைப் படி, என்ர கிட்ட பொண்ணு கேட்கச் சொல்லு, அப்ப நான் பதில் சொல்றேன் ”எனச் செக் வைக்க, மாமனை முறைத்தவன், “ஆரா பேபி வா’என அப்போதே காரியத்தில் இறங்கினான். பெரியவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு இவர்கள் வந்த போது , பன்னீர், ரமாபாயிடம் , “ஏனுங்க ராணியம்மா, இந்த மெஹந்தி நல்லா சிவக்குதான்னு ஒரு போட்டி வச்சீங்களே, அந்த முடிவு சொல்லவே இல்லிங்க,’ என வம்பிழுத்து விட, “பேசாத இருடா பிச்சுப் போடுவேன்”எனச் சுப்பு நண்பரை முறைத்து நின்றார். நேற்று மனைவியோடு போட்ட சண்டை இன்னும் சமாதானம் ஆன பாடு இல்லை.

ரமாபாய் அதை உணர்ந்தவராக, சாரதாவை அழைத்து வந்தவர், “யார் எவ்வளவு நேரம் கையில மெஹந்தி வச்சிருந்தாங்க, அதுக்குள்ள எவ்வளவு சிவந்திருக்குனு ஏற்கனவே பார்த்து வச்சுட்டோம், சாரதா பாபி, தான் அதில வின்னர். பாயிஸாப், பாபி மேல, அவ்வளவு அன்பு வச்சிருக்கார், நாமெல்லாம், வாரிசுகள் வந்த பிறகு, அவங்களுக்காக ஓட ஆரம்பிச்சுடுறோம், ஆனால் இத்தனை வருசமா, ஒருத்தருக்காக ஒருத்தர் வாழறாங்க, பாயிஸாப் அன்பை பாபியோட கை மெஹந்தி காட்டி கொடுத்துடுச்சு” என எடுத்துச் சொல்ல,

சாரதா கண் கலங்கியவராக, “நான் கொஞ்சம் , அப்படி, இப்படிப் பேசி போடுவேன், ஆனால் , என்ர மாமா , என்னைத் தாங்கத்தான் செய்வாருங்க” எனச் சபை முன்னே பெருமை பேச, சுப்புவும் நெகிழ்ந்து தான் போனார்.

"அது தான், உங்க மருமகள் , வசந்த விலாசத்திலிருந்து பேசும் போதெல்லாம் சொல்லுவாளே"என ரமாபாய் சொல்லவும், "மகளைத் தான், மருமகன் கிட்ட ஒப்படிச்சுட்டீங்களே, ராணியம்மா எங்களோட வசந்த் விலாசத்துக்கு வந்து தங்குங்க"எனப் பன்னீர் அழைப்பு விடுக்க.

"வரேன் ஜிஜு. இன்னும் போஸ்லே குடும்பப் பஞ்சாயத்து எல்லாம் இருக்கே, அதெல்லாம் முடிச்சிட்டு வர்றேன். நீங்களும் எல்லாரும், எங்க கோட்டை சத்தாராவுக்கு வாங்க. அதுவும் ஒரு அற்புதமான இடம் தான்" என ரமா பாய் அழைப்பு விடுக்க,

"வந்துட்டா போச்சு"என ராமசாமியும், பன்னீரும் கோரஸ் பாட, "என்ர, கல்யாணத்தையும் பேசி முடிச்சு போட்டு போங்க தாத்தா"என அபிராம் மாமன் சொன்னதைச் சொல்ல, "இன்னைக்குத் தான் உன்ர மாமன் சரியா சொல்லியிருக்கன், எல்லாம் என்ர மருமகள் வந்த நேரம்"என நாயகம் மகனின் தரப்பில் நிற்க, "என்ர பேரனுக்கு என்ன குறைச்சலுக்கிறேன் " என ராமசாமி , சம்பந்தி சண்டையை ஆரம்பித்தார். விஜயன், பாலாஜி ராவ், முகுந்த் போஸ்லேவோடு, சோலாப்பூர், ஜெயந்த் பிரச்சனை குறித்து ஆலோசித்தனர். கைலாஷின் உதவியாளர் சம்பத், நாளைய விழாவின் ஏற்பாடுகளை, தங்கள் முதலாளியை தொந்தரவு செய்யாமல் இவர்களுடன் கலந்து ஆலோசித்தார். " இன்னைக்கும் மில்லில் கல்யாண சாப்பாடு தானே" என விஜயன் கேட்க, "ஒரு வாரமா, விருந்து தான் சாப்பிடுறாங்க."எனக் கைலாஷின் தாராளத்தைப் புகழ்ந்தார். கைலாஷ், பாரு ஆயி பவானியை வணங்க அந்த அரங்கத்துக்கு வந்து சேர, பண்டிதர் ஆரத்தி காட்டினார். “பாரு, இந்த அம்மனை நம்ம பிள்ளையார் கோவில் பக்கத்திலேயே பிரதிட்டை பண்ணிடுவோம், பண்டிட்ஜி, அதுக்கான முறைகளைப் பாருங்க”எனக் கைலாஷ் சொல்லவும், ‘அப்படியே ஆகட்டும்” எனப் பண்டிட் மகிழ, "அதெப்படி, நான் மனசில நினைக்கிறதை நீங்க சொல்றிங்க "எனப் பைரவி வியக்க, கைலாஷ் நகைத்தார். கௌரி, இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி, பழச்சாறை கொண்டு வந்து கொடுக்க, இளையவர் பட்டாளம் போட்டோ எடுக்க இவர்களைச் சூழ்ந்து கொண்டது. பைரவி, "சேலையை மாற்றி, உடுத்தி வர கௌரியோடு சென்றார். ரஞ்சனி, மாமாவுக்குக் கம்பெனி கொடுத்து, அமைதியாக அமர்ந்திருக்க, ஆயி பாபாவை தேடி வந்த ஆதர்ஷுடன் , ஆராதனை, ஆருஷி போட்டோ சூட் நடத்திக் கொண்டிருந்தனர். ரஞ்சியின் பார்வை தன்னையறியாமல் , ஆதரசிடம் சென்று மீண்டு வர, கைலாஷ் மருமகளிடம் பேச்சுக் கொடுத்தார். "வேட்டி கட்டவும், பால் டப்பா , உன்ர மாமன் அளவுக்குக் கெத்தா இருக்குல்ல "என மகனையே கேலி பேசவும், "உங்களையே விடவும், ஓவர் கெத்து, ராஜ பரம்பரைக்கிற கர்வம். " என்றவள் ', அவன் போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதை , கமெண்ட் அடிக்க, கைலாஷ், அவள் போக்கிலேயே பேசி, அவளின் மனதை அறிந்தார். ஆனால், இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற கவலையும் பிறந்தது. மகனை அவரே கணிக்க முடியாமல் தான் இருந்தார். பைரவி , அரிமணியில், அதே தாளிக்கக் கட்டுச் சேலையில் புடவையை மாற்றிக் கட்டி இன்னும் மிடுக்காக வந்து சேர்ந்தார். ரஞ்சனி, மாமா அத்தைக்கு வாழ்த்துக் கூறி, அவர்கள் கால்களில் விழுந்து வணங்க, ஆதர்ஷும் அவனோடு ஆருஷியும் சேர்ந்து மூவருமாக இவர்கள் கால்களில் விழுந்தனர். “நல்லா இருங்க”எனப் பவானி ஆசீர்வதிக்க, “இதென்ன கண்ணு, கூட்டமா விழுந்து எந்திரிக்கிறீங்க”என ராஜன் ஆராய்ச்சி பார்வையோடு பார்க்க, ரஞ்சனி சற்று விலகி நிற்க, ஆருஷி, “நமஸ்தே மாதாஜி”எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டவள், “எல்லாரும் ஜோடியா ஆசிர்வாதம் வாங்கினாங்களா , தர்ஸுக்கு, தனக்கு மட்டும் ஜோடியில்லைனு பீல் பண்ணான் , அதனால தான் கூட விழுந்தேன், மத்தபடி என் மனசில ஒன்னும் இல்லை”என அவள் கிலுக்கி சிரிக்க, “நான் பீல் பண்ணேன், நீ பார்த்த, பாபா அவள் பொய் சொல்றா, நீங்க நம்பாதீங்க. அவளுக்கு ப்ராங் பண்றது தான் வேலை, ஸ்கூலையே அவளைப் பிராங் குயின்னு தான் சொல்லுவாங்க. “என ஆதர்ஷ் அவள் இயல்பை எடுத்துச் சொல்ல, “உனக்கு, ஆருசியை ஏற்கனவே பழக்கமா பாபா”என்றார் பைரவி. “புவா, அதை என்கிட்டே கேளுங்க, உங்க முல்கா நீங்க நினைக்கிற மாதிரி நல்லவன் கிடையாது, சரியான ச்சீட்டர். நான் யாருன்னு தெரிஞ்சே பழகிட்டு, தெரியாத மாதிரி ஆக்ட் பண்ணன்’என ஆருஷி , குறை சொல்ல, வாயை பொற்றிய ஆதர்ஷ், “அடிப் பாவி , ஆயி, போய்ச் சொல்றா, நீங்க ராதிமாமை வேணும்னா கேட்டு பாருங்க”என அவன் பஞ்சாயம் வைக்க, அங்கு ரஞ்சியும் அவள் மாமனும் தான் குழம்பிப் போனார்கள். மீதி சாங்கியங்களை செய்ய, ஆதர்ஷ், பாபாவை கே ஆர் மாளிகைக்கு அழைத்து சென்றான்.

நல்ல நேரம் பார்த்து கே ஆர் மாளிகைக்குள் தன் மருமகளை அழைத்துக் கொண்டார் சௌந்தரி. தமிழ் நாட்டு மருமகளாக நிறைகுட நீரோடு தன் அடியெடுத்து வைத்த பைரவி, பூஜை அறையில் விளக்கேற்றி, அரிசி பருப்பிலும் கை வைத்து, கைலாஷின் மனைவியாய், நாயகம், சௌந்தரியின் உரிமையான மருமகளாய், அந்த வளாகத்துக்கே ராணியாய் தன மக்களோடு குடி புகுந்தார். சௌந்தரி நான்கு பேரையும் நிற்க வைத்து, திருஷ்டி சுற்றி போட்டார். ஒரு புறம் கல்யாண விருந்து ஓடிக் கொண்டிருக்க, மறு புறம் அடுத்த நாள் விழாவுக்கான ஏற்பாடுகள் பெரிய அளவில் நடந்து கொண்டிருந்தன. அன்றைய இரவில் கைலாஷ்-பாரு, சிறியவர், பெரியவர் எனச் சகலரின் கேலிக்கு இடையில், அந்தச் சாம்ராஜ்யத்தின் ராஜனும், ராணியாக அனைவருக்கும் தங்கும் ஜாகையையும் ஒதுக்கி விட்டுத் தங்கள் அறைக்குள் வந்தனர்.

இருவருமே அந்தக் கணத்துக்கு ஏங்கியவர்களாக ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்து கொண்டு பேச்சுகளற்று ஒருவரை ஒருவர் நிறைத்து பூரணமாகி நின்றனர். அந்த அறையின் ம்யூசிக் சிஸ்டம் , ப்ரோக்ராம் செய்யப் பட்டிருந்தது. பின்னனியில், படே அச்சே லக்த்தே ஹை … எனப் பாடல் ஒலிக்க , இருவரும் இனிமையான நினைவுகளில் சிரிக்க, பைரவி, அந்தச் சிரிப்பிலேயே , நாணத்தையும் காட்ட, அதை உணர்ந்த ராஜாவின் பார்வையும் மாறியது.

பாருவுக்கு நினைவே சங்கீதமாக ஒலிக்கும், இன்று நிஜமாய் அவரின் ராஜும் உடனிருக்க, இனிமைக்குக் கேட்கவா வேண்டும். இருபத்திரண்டு வருடப் பிரிவும் அவர்கள் உடலுக்குத் தானே ஒழிய, மனதுக்கும் உணர்வுகளுக்கும் இல்லை. ராஜனின் அதிரடியான செய்கைகளோடும், பாருவின் செல்ல சிணுங்கல்களோடும் நிறைந்தது அவர்களின் இரவு. அடுத்த நாள் முதல், இன்னும் பெரிய பொறுப்புக்களைச் சுமக்க இருக்கிறார் ராஜன், ஆனாலும் மனைவி அருகிலிருக்க, வாழ்வே வண்ண மயமானதாக மனதில் ஓர் உற்சாகம், இளமை திரும்புதே என ஓட காத்திருக்கிறார். அவர் எடுக்கும் முடிவுகள் என்ன. அடுத்த அத்தியாயம், நிறைவுப் பகுதியில் சந்திப்போம்.

No comments:

Post a Comment