யார் இந்த நிலவு-55
கே ஆர் மில்லில், எங்கு என்ன விசயம் நடந்தாலும், உடனடியாகக் கே ஆரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விடும். அது போன்ற கட்டமைப்பை, விதிமுறை, கண்டிப்பால் மட்டுமின்றி, அதற்கான தீர்வாகத் தவறு செய்தவருக்குத் தண்டனை, பாதிக்கப்பட்டவருக்கு நியாயம், அனுசரணை, கவனிப்பு , உதவி எனச் சகலவிதத்திலும் தொழிலாளர்களை ஒரு கட்டுக்குள் வைத்திருந்தார் கைலாஷ் ராஜன்.
இன்றும், ரஞ்சனியை, ஆதர்ஷ் அழைத்துச் சென்ற விசயம் அவர் கவனத்துக்கு வந்தது. டிடேக்டிவ் ஏஜெண்ட் ரஞ்சனும் உடன் சென்றது தெரியவர, கைலாஷ் ரஞ்சனுக்குப் போன் அடித்துவிட்டார். முதலில் மேலோட்டமாக, " விஜயன் சார் பொண்ணு, கையைச் சுட்டுகிட்டாங்க சார். ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தோம்" என மட்டும் சொன்னவரை,
" விசயம், அவ்வளவு தானுங்களா" எனக் கொக்கிப் போட, தன்னுடைய அனுமானாம் மட்டுமே என்று சில விசயங்களைச் சொன்னார். அதைக் கேட்டுக் கொண்டவர், மனைவி, மகளை, ஒரு வேலை இருப்பதை முடித்து வருவதாகச் சொல்லி ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு தானும் மருத்துவமனைக்குச் சென்றார்.
விஜயனும், கஸ்தூரியும் பெரியவர்களை அழைத்துக் கொண்டு, தங்கள் வீட்டுக்குக் கிளம்பியிருந்தனர். பாலநாயகம், அங்கேயே தங்கச் சொல்லி வலியுறுத்திய போதும் கூட, ராமசாமி " நாளைக்குச் சாங்கியமெல்லாம் இருக்குதில்ல, அப்போ தங்கிக்கிறோம். நீ உன்ர சம்பந்திகளைப் பாரு" என, நாயகத்தின் ஆட்சேபனையை மீறிக் கிளம்பியிருந்தனர். விஜயன் வீட்டுக்கு வந்தும், மகனும் மகளும் வந்து சேராததில் போனடித்துக் கேட்க, அபிராம் உண்மையைச் சொல்லி விட்டான். விஜயனும், கஸ்தூரியும் பெரியவர்களிடம் விசயத்தைச் சொல்லாமல் மருத்துவமனைக்குக் கிளம்பினர்.
கே ஆரை மருத்துவமனையில் பார்க்கவுமே, அபிராம், ஆதர்ஷ் முழிக்க," ரஞ்சி எந்த ரூம்ல இருக்கிறா" என அறிந்தவர், அவர்கள் பேச்சைக் காதில் வாங்காமல், தானே மருமகள் வாயிலாகவே கேட்க விரைந்தவர், அவளறைக்கு வெளியே மற்ற இருவரையும் நிறுத்திவிட்டுத் தான் மட்டும் உள்ளே சென்றார்.
' இருக்கிற பிரச்சினையில் இது வேற சேருது' என ஆதர்ஷ் மனதில் புலம்ப, அபிராம், " மாமன் , ரஞ்சிக்கிட்ட அத்தனையும் போட்டு வாங்கிருவார்" எனத் தகவல் சொன்னான்.
ஆதர்ஷ்," ஆயி, பாபா கல்யாணமாவது கலவரமில்லாம முடியட்டும்னு பார்த்தேன்.கஷ்டம் தான் , நடக்கிறது நடக்கட்டும்" என்றவனிடம், ' இவனுக்கு, தன் தங்கை மீது ஏதாவது ஃபீலிங்க்ஸ் இருக்கிறதா ' என்று அபிராம் ஊன்றிப் பார்க்க, பழக்கப்பட்ட போஸ்லே வாரிசாக மாறியிருந்தான் ஆதர்ஷ்.
ஒரு கையில் கட்டும், மறு கையில் ட்ரிப்ஸும் ஏறிக் கொண்டிருக்க, வாடிய கொடியாக அழுது, வீங்கிய முகத்தோடு மருமகளைப் பார்க்கவுமே, ராஜனுக்குத் தாங்கவில்லை. " என்ன ஆச்சு கண்ணு" என அவளது புண்பட்ட கையைப் பூபோல் தூக்கி ஆராய, கண்ணைத் திறந்து பார்த்த ரஞ்சி, " மாமா" என ஆரம்பித்தவள், மடைதிறந்த வெள்ளமாக, அவரது தங்கைகள் , தங்கை மகள்கள் சொன்ன குற்றச்சாட்டு, குத்தல் பேச்சு மெஹந்தி வரை அத்தனையும் கண்ணீரோடு, அம்மாவிடம் சொல்லும் பிள்ளை போல்,
" நான் அப்படி நினைப்பேனுங்களா, நீங்களே சொல்லுங்க மாமா. நீங்க அவரை அப்பானு கூப்பிட வைக்கவே எத்தனை நாடகமாட வேண்டியது இருந்தது, அவிக ராச வம்சம், நம்மளை விட வசதின்னா, அவிகளோட போகட்டும். நமக்கு என்னங்க மாமா, ஒண்ணுமா இல்லைங்க " எனக் கேள்வியும் பதிலுமாக , ஆதர்ஷ் ராஜன் மகன் என்பதே மறந்தது போல், தன்னைப் போல் சொல்லி அழுதவள்,
அவர்கள் எடுத்த போட்டோவை பற்றிச் சொல்லி , " எனக்கு அவமானமா இருக்குதுங்க மாமா." எனக் குலுங்கி அழவும், அதே பெட்டில் அமர்ந்து, அவள் கண்ணீரைத் துடைத்தவர் " அழுவாத கண்ணு. நீ முதவே என்ரகிட்ட வந்து சொல்லியிருக்க வேண்டியது தானே" எனத் தேற்ற, " அம்மா தான் வேண்டாம்னு சொல்லிட்டாங்கங்க" என அந்தக் கதையையும் சொல்ல, ராஜனுக்குத் தங்கைகள் மீது ,' அடுத்ததை ஆரம்பிச்சிட்டாளுங்களா' எனக் கோபம் வந்தது. அதை முகத்தில் காட்டாதவர்,
" அவிக சொன்னதுக்கு, நீ எதுக்குக் கண்ணு கையைச் சுட்டுக்கிட்ட. இப்ப வேதனை யாருக்கு " எனக் கடிந்தவர், பொசுங்கிய உள்ளங்கையைத் தவிர விரல்களில் சிவந்திருந்த மெஹந்தியை பார்த்து, ' அவனும் கிறுக்குபய மகன் தானாட்டத்துக்கு. ' உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவர், மருமகளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக" கே ஆர், மருமகள்னா, பேசினவிகளுக்குப் பாடம் கத்துக் கொடுக்கோணும், இல்லையினா, அப்படித்தான்னு, அவிக சொன்னதை நிஜமாக்கனும். அதைய விட்டுப் போட்டு, கையைப் புண்ணாக்கிறதா. உன்ர அம்மா பார்த்துச்சுனா, துடிச்சு போகுமில்ல" எனவும், சுதாரித்தவள்," பாடமே கத்து கொடுப்போமுங்க மாமா. நாம யாருன்னு காட்டுவோம்" என அவளும் பதில் தர, விஜயனும் கஸ்தூரியும் வந்து சேர்ந்தனர்.
ராஜனின் வாக்கைக் கஸ்தூரி மெய்ப்பித்துக் கத்தி மாதரி ஆழ " அட ஒண்ணுமில்லை, விடு கண்ணு" எனத் தங்கையைத் தேற்றியவர், சிலையாய் நின்ற விஜயனை அசைத்து, மனைவியைத் தேற்றச் சொல்ல, அதை விடப் பெரிய விசயமாய் அவரைத் தாக்கியது, மகளின் எண்ணப் போக்கு தான்.
ரஞ்சனி மாமனிடம், சகலத்தையும் கொட்டியவள், அப்பாவிடம் சொல்லத் தயங்கினாள். அபிராம் உள்ளே வந்தவன், அம்மாவைச் சமாதானம் செய்ய, கைலாஷ் காரிடாருக்கு மகனைப் பார்க்கச் சென்றார்.
" ஆதர்ஷ்" என்ற அவரது அழைப்பில் " பாபா" என அருகில் வந்தவன், " ரஞ்சி, என்ன செஞ்சிருக்காள்னு புரியுதா கண்ணு" என அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி கேட்க, " அத்தைங்க ஏதோ சொல்லவும், ப்ரவோக் ஆயிடுக்கா பாபா. இதைப் பெரிசு பண்ணாதீங்க. அது தான் அவளுக்கும் நல்லது" என அவர் முகம் பார்க்காமலே சொன்னான்.
" உனக்குப் புரியுதான்னு தான் கண்ணு கேட்டேன். மத்தபடி, என்ர புள்ளைகளுக்கு எது நல்லது, என்ன செய்யோனும்ணு எனக்குத் தெரியும். நான் பார்த்துக்கிறேன். நீ கவலைப் படாத" என்றவர், அவன் நிமிர்ந்து பார்க்கவும், தோளோடு அணைத்துக் கொண்டு , " என்ன தான் ராஜ வம்ச வளர்ப்பா, இருந்தாலும், என்ர இரத்தம் தான கண்ணு உன்ர உடம்பில ஓடுது. இன்னும் காலம் கிடக்கு. அதுக்குள்ற எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்" என மெல்லிய நகைப்புடன் அவர் சொல்லவும்.
" அதே தான் பாபா, எங்களுக்குக் காலமிருக்குது. நீங்களும், ஆயியும் இழந்த காலமெல்லாம் போதும். நீங்க முதல்ல செட்டிலாகுங்க. இன்னொரு பைரவியா, ரஞ்சனி உருவாகாமல் நான் கவனமா இருப்பேன். ஆனால் பைரவிபாயை பதம் பார்த்த நாக்குகள், இன்னும் கூர்மையா ஆகியிருக்கு. நம்ம கவனமா இருக்கனும்" எனத் தகப்பன் சாமியாய், ஆதர்ஷ், தன் தகப்பன் கைலாஷ்க்கே, தன் ஆயி, பாபாவைப் பிரிந்ததின் பின்னனிருக்கும் ஆயுதத்தை நினைவுபடுத்த, லேசாக அதிர்ந்தவர், நேற்று தன் தந்தை நாயகமும் இதைத் தான்,பூடகமாகச் சொன்னார், என உணர்ந்து, மனைவியோடு பேசவேண்டும் என மனதில் சங்கல்பம் கொண்டார்.
விஜயனும், அபிராமும் வெளியே காரிடாருக்கு வரவும், விஜயன் கையைப் பற்றிக் கொண்ட ராஜன், "என்ர கூட நட்பு வச்சதுக்கு, உனக்கும் வேதனை மட்டும் தாண்டா மிஞ்சியிருக்கு." என வருத்தப்பட,
" உன்னை விடவா, உன்ர தங்கசிங்க பேசியிருக்கப் போகுது. ரஞ்சி சின்னபுள்ளைங்கவும், பொக்குனு போயிடுச்சு. சமாளிச்சிக்கலாம் வா" என மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து விட்டு, கிளம்பினர். அப்பாவும், மகனும் விஜயன் வீடுவரை வந்து விட்டு விட்டே கே ஆர் மில்க்கு திரும்பினர்.
ஆதிரா, அபிராமுக்கு , பேசவும் முடியாமல் ,மெஸேஜும் செய்ய மாட்டாமல், மெஹந்தி கையோடு அமர்ந்திருக்க, கௌரி, பைரவியின் மெஹந்தியை களைந்து, கை, கால்களைச் சுத்தப்படுத்தி எலுமிச்சை, சீனி கலவையைத் தடவி விட்டுக் கொண்டிருந்தார். பைரவியின் கைகளிலிருந்த மெஹந்தியின் வண்ணத்தையும், கைலாஷ்- பாருவின் அன்பையும் ஒப்பிட்டு கேலி செய்து கொண்டிருந்தார். ஏனெனில் கைகளில் மட்டுமின்றி, கால்களில் பாதங்களிலும் கூட, பைரவியின் பால் வண்ண மேனியை எடுத்துக் காட்டும் விதமாக, சிவந்திருந்தது மருதாணி.
மாஸியும், மகளுமாக, பைரவியைக் கேலி செய்ய, " சுப்கர், ஷரம் நஹி ஆயி" எனத் திட்டியவருக்கு, கௌரியே இவ்வளவு வர்ணிக்கிறாளே, கைலாஷ் என்ன செய்வாறோ , என்ற நினைப்பிலேயே கன்னம் சிவந்தது. அதே நேரம், கைலாஷ்
," மாஸிமா, என்ர பொண்டாட்டி கன்னத்தில் ரோசாப்பூ பூத்திருக்குதுங்களே, அப்படி என்ன சொன்னீங்க" என்ற படி உள்ளே நுழைய, கௌரி நாக்கை கடித்துக் கொண்டு நமட்டு சிரிப்போடு, ஆதிராவுக்குச் சேவை செய்து கொண்டிருந்தவர்," தீதியே சொல்லுவாங்க. " என வெளியேறி விட,
ஆதிரா," பாபா, ஆயி கையில மெஹந்தி எப்படிச் சிவந்திருக்குப் பாருங்க" என விவரம் சொல்ல, கைலாஷ் ஆர்வமாகப் பார்க்க, " இன்னைக்கு இல்லை, நாளைக்குப் பாருங்க" எனக் கையை மூடிக் கொண்டார் பைரவி
ஆதர்ஷ் ஏதோ யோசனையோடே உள்ள வர, " நீ காட்டாட்டி போ அம்மணி. கொஞ்ச நேரம் தான் வச்சிருந்தாலும், என்ர மருமகள் கை, எப்படிச் சிவந்திருக்குது தெரியுங்களா" என அவர் ரஞ்சியைக் குறிப்பிட்டுச் சொல்ல, " ஆமாம், கருஞ்சிவப்பா இருக்கு. பாகல் கைகி. பேவகூப் லட்கி" எனத் திட்டியபடியே வந்து கட்டிலில் அமர,
" யாரைப் பாபா, இப்படித் திட்டுற" பைரவியும் " நாங்க ரஞ்சியைப் பத்தி பேசினோம்" என ஆதிராவும் விளக்கம் தர, " நானும் அவளைத் தான் சொல்றேன்" என்ற ஆதர்ஷ், கைலாஷ் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க, தன் ஆயியிடம் அவள் செய்த கிறுக்குத்தனத்தை மட்டும் கோபமாகச் சொன்னான்.
" அது ஏன் ரஞ்சி அப்படிச் செய்யனும்" எனப் பைரவி கவலையாகவும், " அது தான், ராம் போனையே எடுக்கலையா. " என ஆதிராவும் கவலைப்பட, கைலாஷ் அப்போதும் மௌனம் காத்தார். ஆதர்ஷ் தான், தன் அத்தைகள் பேச்சு தான் அதற்குக் காரணம் என விளக்க,
தன் நெஞ்சில் கை வைத்தவர் , " ஆயி பவானி ரக்ஷா கரோ" என்றவர், " ராஜ், எனக்கு இப்பவே ரஞ்சியைப் பார்க்கனும், கூட்டிட்டுப் போங்க. உங்க தங்கச்சி ரொம்பக் கடுமையா தான் பேசியிருப்பா" எனக் கணவர் கையைப் பிடிக்க,
" உன்னைப் பேசின மாதிரியா அம்மணி. அதுனால தான் என்னை, நம்பாத விட்டுப் போட்டு போனியா" என அவர் நேராகவே கேட்கவும், பைரவி திகைத்துப் பார்க்க, ஆதிரா, தன் ஆயிக்கு மீண்டும் எதுவும் ஆகிவிடுமோ எனப் பயந்தவளாக " பாபா, மறுபடியும் பழசை ஆரம்பிக்காதீங்க." என இறைஞ்சினாள்.
" பேசட்டும் விடு ஆதி, ஆயி பாபாவுக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது. இரண்டு பக்க உறவுகளையும் முழுசா புரிஞ்சுகிட்டாங்கன்னா தான், மீதி வாழ்க்கையை, ஒரே குடும்பமா நாம வாழ முடியும்" என்ற ஆதர்ஷ்.
கலவரமாக முழித்த பைரவியின் தோளைச் சேர்த்து அணைத்து, தைரியம் தந்தவன்," ஆயி, பாபாகிட்ட, மனசைத் திறந்து பேசுங்க ஆயி . நீங்க உறவுகளைக் காப்பாத்துறதா நினைச்சு, நம்ம வாழ்க்கையை விட்டுக் கொடுக்காதீங்க. எனக்கும் சரி, ஆதுவுக்கும் சரி, ஆயி, பாபாவோட சேர்ந்த எங்க குடும்பம் வேணும். நாங்க தலை சாய்க்க ஆயியோட கோதி (மடி)வேணும், பாபாவோட கந்தா( தோள்) வேணும். மனசைத் திறந்து பேசுங்க" எனக் கண் கலங்கவும்,
" எனக்குமே, அந்தச் சுமையை இறக்கித் தான் வைக்கணும் பாபா. ராஜ்கிட்ட சொல்றதா தான் இருக்கேன். இந்தப் பங்சனெல்லாம் முடியவும் சொல்லலாம்னு இருந்தேன்" எனப் பைரவி கணவரையே பார்க்க,
ஆதிரா தன் பாபாவிடம் வந்தவள், "ஆயி மேலயே தப்பிருந்தாலும், எங்களுக்காகப் பொறுத்துக்குங்க பாபா. ஆயி , எது செஞ்சிருந்தாலும் உங்க நன்மைக்காகத் தான் செஞ்சிருப்பாங்க" எனக் கைலாஷின் தோள்களில் சாய்ந்து கொண்டு அவள் கண்ணீர் வடிக்கவும்.
" என்ர புள்ளைங்களே, இவ்வளவு யோசிக்கிறீங்களே. அப்படி உங்க ஆயியை விட்டுருவேனா கண்ணுங்களா" என அவரும் உருகி மகளை அணைத்துக் கொள்ள ,
" மனசாலையும் ஆயியை விட்டுறாதீங்க பாபா" என இருவருமாகச் சேர்ந்து சொல்லி விட்டு, ஆயி பாபாவை அருகருகே அமர வைத்து, " இப்படிச் சேர்ந்தே தான் உங்களைப் பார்க்கனும்" என ஆதிரா மெஹந்தி கைகளை நீட்டிக் கொண்டே, இருவரையும் அணைத்துக் கொள்ள,
ரஜ்ஜும்மா, நான் வேணும்னா, உன்ர கையில அடிச்சுச் சத்தியம் பண்ணவா கண்ணு" எனக் கைலாஷ் வம்பிழுக்க, " ஓ, பாபா. நாளைக்கு ராம்கிட்ட காட்டனும். " என அவள் எழுவதற்குச் சிரமப்பட, அவளைத் தூக்கிவிட்டு உதவி செய்த, ஆதர்ஷ்,
" மச்சியை நாளைக்கு வரவழைக்கிறது, உன் சாமர்த்தியம். வா போன்ல பேசலாம்" என ஆதர்ஷ் தங்கையை அழைத்தவன், "ஒரு மணி நேரம் தான் உங்களுக்கு டைம்" எனச் சிரித்து விட்டு, பெற்றவர்களுக்கு அவகாசம் கொடுத்து, சென்றான்.
" என்ர பொண்டாட்டிக்கிட்ட பேசுறதுக்கு நீ டைம் கொடுப்பியாக்கும்" என.ஆட்சேபனையோடு, மகனை அனுப்பினார்.
ஆதர்ஷ், ஆயி பவானி சிலை இருக்கும் இடத்துக்கு முன் தங்கையை அழைத்துச் சென்றவன், ப்ளூ டூத்தை அவள் காதுகளில் மாட்டி விட்டு, போனில் அபிராம் நம்பரை டயல் செய்து, அவன் எடுக்கவும், ரஞ்சி நிலையைப் பற்றிய ஓர் வார்த்தை கேட்டு விட்டு, அவர்கள் பேசத் தனிமை கொடுத்து, ரஞ்சியின் நிலைக்குக் காரணமான அத்தைக்கு ஆப்பு வைக்க, லண்டனுக்குத் தொடர்பு கொண்டு, பேசிக் கொண்டிருந்தான்.
ஆதிரா, " ராம், ரஞ்சி எப்படி இருக்கா. என்ன ஆச்சு" என விவரம் கேட்க, "ஏன் உன்ர இரட்டை, உடன் பிறந்தவன் ஒண்ணும் சொல்லலையாக்கும். அவன் மட்டும் தான், இராச கீரிடத்தை வச்சிட்டு அலைவானா. இல்லை நீயும் அப்படித்தானா. இந்தச் சாதரணக் குடும்பத்தோட, ஏன் பழகினோம்னு நினைக்கிறீங்களாக்கும். " எனக் குதர்க்கமாகவே ஆரம்பிக்கவும், ஆதிரா, " ஏன் ராம், இப்படி எல்லாம் பேசுறீங்க" என அழமாட்டாமல் பேச, அபிராம், ஆதர்ஷின் நடவடிக்கை பற்றி, ரஞ்சனியின் புலம்பல் பற்றி, அவளிடம் குற்றப் பத்திரிகை வாசிக்க, ஆதிரா சமாதானம் சொல்ல ஆரம்பித்தாள் .
கைலாஷ், " பாரு, நம்ம பெத்த புள்ளைங்களே, நமக்கு அட்வைஸ் பண்ணிட்டு போகுதுங்க பார்" எனத் தங்கள் நிலையைச் சொல்ல,
" எல்லாம், என்னால தான் ராஜ்" எனக் கணவரின் தோளில் சாய்ந்தவர், " நான் சொன்னபிறகு, என்ன தண்டனைனாலும், எனக்குக் கொடுங்க. நம்ம தனியா இருக்கும் போது கோபத்தைக் காட்டுங்க. பசங்க முன்னாடியோ, பெரியவங்க முன்னாடியோ, வேண்டாம்" எனப் பீடிகைப் போட , மனைவியை முறைத்த கைலாஷ்,
" நானு, உன்ரகிட்ட தனியா இருக்கும் போது கோபத்தைக் காட்டுறது. நடக்கிற காரியமா சொல்லுமா. உன் ஒரு பார்வைக்கே நாக்குட்டியாட்டமா, உன்ர பின்னாடி வர்றேன். பிறகு என்ன " என்றவர்,
" சந்தன்கட்லிருந்து நான் வந்த பிறகு, ஜெயந்த் வந்திருக்கான். அதுக்கப்புறம் உன்ர ஆயி, உன்னைக் கூஃபா கர்ல தான் பிச்சியா பார்த்தேன்னு சொல்றாங்க. மாசமா இருந்ததோ, புள்ளைகளைப் பெத்ததோ கூடத் தெரியாதளவுக்கு, தன்நினைவு இல்லாத கிடந்திருக்க. நடுவில் அப்படி என்ன அம்மணி நடந்தது" என மனைவியின் முகத்தைக் கையிலேந்தி, நா தழுதழுக்க ராஜன் கேட்கவும், அவர் மார்பில் சரணடைந்த பைரவி, " இந்த ஒரு தடவை கஷ்டப்பட்டுச் சொல்றேன் ராஜ். மறுபடியும் கேட்டுறாதீங்க" என்ற நிபந்தனையோடு, அன்று நடந்ததைச் சொல்லச் சொல்ல, ராஜனின் கண்களிலும் மடை திறந்த வெள்ளம்.
அவர் மார்பில் சாய்ந்தபடி, “நீங்க என்னை வெறுத்துடுவீங்கற பயத்திலையே நான் வரலை ராஜ்” என்றவர், அவர் கிளம்பிய நாளுக்குச் சந்தன் கட்டுக்குப் பயணித்தார்.
" அன்னைக்கு உங்களை அனுப்ப எனக்கு மனசே இல்லை ராஜ் . ஆனாலும் உங்க அம்மாவுக்கு முடியலை, நீங்களும் உங்க குடும்பத்தைப் பிரிஞ்சு எத்தனை நாள் இருப்பீங்கன்னு தான், அனுப்பி வச்சேன். நீங்க கிளம்பி இரண்டு நாள் எனக்குச் சாப்பிடவே மனசில்லை, ஆயிகிட்டையாவது போயிடலாம்னு போன் போட்டேன். என் நேரம், அன்னைக்குப் போனை எடுத்தது பூவாஜி, ஜெயந்தோட அம்மா.
எனக்குச் சந்தேகம் வந்து நான் ஹலோ கூடச் சொல்லலை. ஆனால், அவங்க எப்படியோ கண்டுபிடிச்சிட்டாங்க போல, எனக்கு அது தெரியாது. உங்க நினைவிலேயே, போன் பக்கத்திலேயே இருந்தேன்.
சென்னையில் இறங்கவும் போன் பேசினீங்க, உங்க கிட்ட பேசிட்டு வைக்கவும் கொஞ்சம் மனசு நிறைஞ்சது. அதுக்கு அப்புறம் பசி, சாப்பிட்ட ஒரு ரொட்டியும் , வயிற்றில் நிற்கலை. சந்தன்கட்ல இருந்த நாட்களில் தான், நமக்கு நேரமும் தெரியாது, காலமும் தெரியாதே, தனி உலகத்தில் இல்லை இருந்தோம். நான் தலை தூக்காமல் கிடைக்கிறதைப் பார்த்து, மருத்துவச்சியைக் கூட்டிட்டு வந்தார் துக்காராம். அந்தம்மா நாடிப் பிடிச்சு பார்த்திட்டு, நான் கர்ப்பமா இருக்கிறதை சொன்னாங்க.
அவ்வளவு சந்தோஷம், ராஜ். கொஞ்சம் முன்ன தெரிஞ்சிருந்தா உங்ககிட்ட போன்ல சொல்லியிருப்பேன் " என்றவரின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வடிய, அவருக்கும் அதே நிலை. மனைவியை இறுக்கப் பற்றிக் கொண்டார்.
"ஒரு பொண்ணோட வாழ்க்கையில் ரொம்பச் சந்தோஷமான தருணம், அவள் தாய்மை அடையறது. அதையும் முதல்ல அவள் புருஷன்கிட்ட சொல்ல ஆசைபடுவா. அந்த நேரமே உங்க கிட்டப் பறந்து வந்திட மாட்டமான்னு இருந்தது.
உங்க வாரிசு என் வயிற்றில் வந்த சந்தோஷ செய்தியை உங்ககிட்ட சொல்லி, உங்க சந்தோஷத்தை பார்க்கனும்னு ஆசை. என்னை உங்க கைக்குள்ளையே வச்சிருப்பீங்களே ராஜ், அந்த நிமிஷம், உங்க கைக்குள்ள இருக்கனும்னு ஆசைப் பட்டேன்" எனப் பைரவி, அழுது புலம்பவும், அந்த நாள் இன்று தான் என்பது போல் மனைவியை அணைத்துக் கொண்டவர், தன் பாருவின் நெற்றியில் முத்தமிட்டு , அவர் வயிற்றிலும் கை வைத்து , அன்றைய தினத்தை உணர்வது போல் அழுகையோடு சந்தோஷத்தையும் காட்டினார். அவர் கையைப் பற்றிக் கொண்ட பைரவி, பிரஸவத் தழும்புகளை மட்டும் அவரை உணர வைத்து விட்டு,
" என் பிள்ளைகளை மடி சுமந்ததை அன்னைக்கு உணர்ந்ததோட சரி, ராஜ் , அதுக்கப்புறம் அதை உணரும் நிலைமையில் கூட, நான் இல்லை. மாசமா இருந்ததோ, இரண்டு பிள்ளைகள் பிறந்ததோ, எதுவுமே என் நினைவில் இல்லை. இந்த ரஜ்ஜும்மா, முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பிச்ச பிறகு, அந்தச் சிரிப்பில் உங்களைப் பார்த்து, மீண்டு வந்தேன்னு ஆயி சொல்லித் தான் எனக்குத் தெரியும். நீங்க அனுபவிக்காத என்னுடைய பிரக்னன்ஸியை, நானும் உணர்ந்ததில்லை ராஜ். அங்க மட்டும், ஆயி பவானி இரண்டு பேரையும் ஒரே நிலையில் நிறுத்திட்டா" என்ற மனைவியின் அகப்பையை , அழுத்தி ஆறுதல் தந்தவர், தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டார். “எந்தக் குடும்பத்துக்கும் இந்த நிலைமை வரக் கூடாதும்மா. அந்தளவு நீ உன்னையே மறக்கிற அளவு என்ன நடந்தது" எனவுமே.
" அதைக் கேட்காதீங்க. அதைக் கேட்டா, நீங்க என்னை வெறுத்திடுவீங்க. உங்க வெறுப்பைத் தாங்கிற சக்தி எனக்குக் கிடையாது. உங்க ஒரு பார்வையே, என்னைக் கொன்னு கூறு போட்டிரும் ராஜ். வருஷம், ஆக ஆக, உங்க வெறுப்பைத் தாங்கிற சக்தி எனக்கு வந்திரும். உங்களை வந்து பார்த்திடுவோம்னு என்னை நானே ஏமாற்றிக்கிட்டேன். ஆனால் ஒவ்வொரு வருஷமும் அந்தப் பயம் கூடிச்சே ஒழியக் குறையலை. இந்த மூச்சு நிக்கும் முன்ன உங்கக்கிட்ட ரஜ்ஜும்மாவை ஒப்படைச்சிட்டு, மன்னிப்பு கேட்கனும்னு நினைச்சிருந்தேன்" எனத் தன் காரணத்தைச் சொல்லாமலே பைரவி அழுது புலம்பினார்.
" பாரு, அந்த நாய், பொம்பளை பொறுக்கி, உன்ரகிட்ட என்ன சொன்னான். எதாவது தப்பா நடக்க முயற்சி பண்ணானா, எதுவா இருந்தாலும் சொல்லு அம்மணி, உன்னைத் தனியா விட்டு வந்தது, என்ர குத்தம். உன்ர புத்தி பிசகிறளவு, என்னமா நடந்தது" என அவர் முகத்தைக் கையிலேந்தி கேட்கவும், விழுக்கென நிமிர்ந்தவர், " அவன் என்னை, தொட்டிருந்தான்னா, என் அக்கா விதவையானாலும் பரவாயில்லை னு ஆயி துல்ஜா பவானிக்குக் காவு கொடுத்திருப்பேன் ராஜ்.” எனப் பவானி அம்சமாகவே மாறி பைரவி கர்ஜிக்கவும், கைலாசுக்கு ஓர் நிம்மதி.
மனைவியைச் சமாதானப் படுத்தியவர், " நீ என்னைச் சந்தேகப் பட்டையின்னு சொன்னாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன், சொல்லுஅம்மணி " எனவும், நொடியில் உணர்ச்சி மாறி வெடித்து அழுத பைரவி,
" சந்தேகம்னு இல்லை ராஜ், நீங்க அந்தப் பொண்ணைக் கல்யாணமே பண்ணியிருந்தாலும், அது தான் ஆயி பவானியோட உத்தரவுன்னு , மெல்ல ஏத்துக்கிட்டு இருந்திருப்பேன். ஆனால் அன்னைக்கு இருந்த நிலைமை, எதையுமே யோசிக்க விடலை. என் குழந்தைக்கு அப்பாவாகப் போற நீங்க, வேற யாருக்கும் சொந்தமா இருக்கக் கூடாதுன்னு, ஒரு பொஸஸிவ்னெஸ்.
அடுத்த நாள், அந்த ராட்சசன், நாம இருந்த இடத்தைத் தேடி வந்துட்டான். உங்களைப் பத்தி அசிங்கமான வார்த்தைகளில் கேட்டான். எனக்குப் பயங்கரக் கோபம், உன்னை மாதிரின்னு நினைச்சியான்னு பதிலுக்குத் திட்டினேன். உனக்குத் தாலி கட்டினவன் ஒழுக்கமானவனான்னு கேட்கவும், ரோஷம் வந்து உங்களுக்குப் போன் போட்டேன்” என நிறுத்தியாவர், தயக்கத்துடனே
"உங்க வீட்டில் யாரோ பொண்ணுங்க தான் எடுத்தாங்க. நான் பேசும் முன்ன அவன் பிடிங்கிட்டான். அதுவும் நல்லது, நான் யாருன்னு அறிமுகப்படுத்திக்க வேண்டாமேன்னு இருந்துட்டேன். தன்னை உங்க நண்பன்னு சொல்லி, அவன் அறிமுகப்படுத்திக்கவும்,
" இருங்க அண்ணனை கூட்டிட்டு வர்றேன்னு அந்தப் பொண்ணு போச்சு. ரிசீவர் கீழ இருந்தது. உங்களோட இன்னொரு தங்கச்சியும், அதுக்கு முன்ன உங்கள்ட பேசின ராஜியும் பேசிக்கிட்டாங்க. அண்ணன் வந்திட்டார், உங்க காரியம் ஆகிடுச்சு, நீங்க இந்த வீட்டு மகாராணியா திருமதி கைலாஷ் ராஜன் ஆகிட்டிங்க. இந்தக் கொழுந்தியாளை, உங்க அண்ணியாக்கிக்க மறந்திடாதீங்கன்னு ஒரு பொண்ணு சொல்லுச்சு,
அதெப்படி மறப்பேன்னு ராஜியும் சொல்லிட்டு இருக்கும் போதே, அண்ணி உங்களை அண்ணன் ரூமுக்கு கூப்பிடுறார்னு முதலில் வந்த பொண்ணு ராஜியை அனுப்பி விட்டு,
அண்ணா, இப்ப பிசி. நீங்கள் யாருன்னு சொல்லுங்க.நாளைக்குப் பேசச் சொல்றேன்னு சொல்லிடுச்சு. ஜெயந்த் என் சந்தேகத்தைத் தீர்க்கிற மாதிரி, ராஜியை பற்றிக் கேட்கவும், அவங்க தான் எங்க அண்ணின்னு சொல்லுச்சு. எனக்கு உலகமே சுத்தி மயக்கம் வந்தது, ஆனாலும் சமாளிச்சுகிட்டுப் போனை வாங்கி நான் பேசினேன்” எனும்போதே, அடுத்து வருவது தான் தங்கள் பிரிவுக்கான காரணமோ என ராஜனும் கவனமாகக் கேட்டார்.
பைரவி , அலைபேசி உரையாடலைச் சொல்லச் சொல்ல கைலாஷ் முகம் ரௌத்திரமாகா மாறியது, அப்போதே எழுந்து வீட்டை நோக்கிச் செல்ல முடிந்தவரை, “ராஜ், வேண்டாம், நான் அத்தைக்கு , உங்க தங்கச்சிகளுக்கு அம்மா ஸ்தானத்தில் இருப்பேன்னு வாக்குக் கொடுத்திருக்கேன். “ என ,அவர் வேகத்துக்குத் தடை போட அரும்பாடு பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டவர், மனைவியிடம், அதன் பின் நடந்ததையும் கேட்டு அறிந்தார்.
கைலாஷின் தங்கைகள் என்ன சொன்னார்கள், அவர் என்ன முடிவெடுப்பார். இவர்கள் திருமணம் நல்ல முறையில் நடந்தேறுமா பொறுத்திருந்து பார்ப்போம்.
நிலவு வளரும்…
இன்னும் ஐந்து அத்தியாயங்களில் நிலவு முடியும்.
No comments:
Post a Comment